தினகரன் கவிதைகள்

சற்று முன்பே பார்த்துவிட்டேன்

 

உடம்பு முடியாமல் கிடக்கிற

அவனுடைய வீட்டிற்குப்

போகிற வழியில்

உதிர்ந்து என் மீது விழுந்தது

பழுத்து,

பச்சைக் காணாது போய்

நடுநரம்பில் கடமைக்கென

ஒட்டி இணைந்திருக்கும்

கிளை நரம்புகளைக்

கொண்டதொரு இலை.

அதை உதறிவிட்டு

நடந்து நடந்து

இந்தக்

கதவைத் தட்டினேன்

இருமியபடி

சட்டை அணியாமல்

கதவைத் திறந்த அவனை

சற்று முன்புதான்

எங்கோ

உதறிவிட்டது

போல இருந்தது

 

 கருணையில்லாத அரசாங்கம்

 

பேய்மழை பொழியும்போது

முன்னறிவிப்பு ஏதுமின்றி

மின்சாரத்தை நிறுத்துகிறது

அரசாங்கம்

 

சாராய பாட்டிலில்

செய்து வைத்திருந்த மண்ணெண்ணெய்

விளக்கை ஏற்றுகிறாள் அம்மா.

 

விளக்கு வெளிச்சம்

சுவரில்

கிறுக்குவதை,

பாதித் தூக்கத்தில் எழுந்துவிட்ட

கார்த்திகா கண்டுவிட்டாள்

( தன் நிழல் பார்த்து ஆச்சரியப் படுபவர்கள் எல்லோரும்

குழந்தைகளே! )

 

சட்டென

தன் கைவிரலை நீட்டி முழக்கி

நிழல்படியும் சுவரில்

குட்டிப் பறவையொன்றை

( கருப்புக் கொக்கு)

வரைகிறாள்

பேய்மழைக்குப் பயந்து

அது அறைக்குள்ளேயே

வட்டமடிக்கிறது

அதற்கு வேறு வழியில்லை.

அவளின்

அதிசயக் கனவைப் போல

அறைக்குள்

அலைகிறது கொக்கு

 

திடீரென

பேய்மழை நின்றதும்

மின்சாரத்தை வழங்குகிற

அரசாங்கத்திற்கு

சிறு பெண்ணின்

கனவைக் கலைப்பது குறித்து

எந்தக் கவலையும் இல்லை

மேலும்

அதற்குப்

பறவைகளைக் கொல்வது குறித்த

குற்றவுணர்வு

இருப்பதாகவும் தெரியவில்லை.

 

 

 தெரிந்த ஒன்றைத் தேடுவது

 

இந்த இரவில்

எனக்குத் தேவையான ஒன்று

இந்தப் பாடலில் தான் இருக்கிறது

என்பது

எனக்குத் தெரியும்

 

ஆனால்

அது

கேட்டதும் சட்டென்று

அகப்படுவதாக இல்லை

 

அதைக்

கொஞ்சம் தேட வேண்டியுள்ளது

அதற்காகக்

கொஞ்சம் அழ வேண்டியுள்ளது

அதையே

திரும்பத் திரும்ப கேட்க வேண்டியுள்ளது

 

மேலும்

அதைக் கண்டறிய

வேறு வழியே இல்லாமல்

அதிலேயே தொலைந்து

போக வேண்டியுள்ளது.