சுஜய் ரகு கவிதைகள்

1

பித்தானவள் தொடர்ந்து

தேடிக்கொண்டே இருந்தாள்

ஒரு பஸ் நிறுத்தத்திற்கு முன்னால்

கிடந்ததாக எல்லோரும்

சொன்னார்கள்

அதைக் கேட்டு

அவள் வெடித்துச் சிரித்தாள்

மீண்டும் மீண்டும்

தொடர்ந்து சிரித்தாள்

சொன்னவர்கள் ஒருசேரத் திரும்பிப் பார்த்தார்கள்

ஒன்றுமேயில்லை

அங்கும் அதே வெடித்த சிரிப்பு

 

2

“ஊரே காலியாகிவிட்டது ..”

எறும்புகளின் தலைவன் சொன்னான்

தலைவி

சிவந்த கொடுக்கு கொண்டு

அவனை உற்றுப் பார்த்தது

வசந்த வானத்தின் நீலம்

அவன் கண்களில் பாரித்திருந்தது

தலைவி துணுக்குற்றாள்

சந்தேகம் போக்க

ஒரு உளவாளி வைத்திருந்தாள்

தேடலில்

அவ்வெறும்பும் அதன் கூட்டமும்

எல்லை தாண்டிவிட்டன

தலைவி காத்திருந்தாள்

 

3

சிறு மீன்

பெரு மீன்

ஞாயிற்றில் இருவகை

மீன்களை வாங்கியிருந்தான்

சட்டியில்

சிறிய மீன்களும்

தோசைக் கல்லில்

பெரிய மீன்களும் துள்ளின

கொதிநிலை நீச்சலில்

நெகிழ்ந்துடைந்து சிவந்தன

மீன்கள்

வீதி வாழ் குடும்பம்

அவற்றை எடுத்தும் அள்ளியும்

மீண்டும் விட்டது

மீன்கள் நீந்தா ஆற்றில்

 

4

கோர்ட் வளாக மரத்தில்

வாரியணைக்கும் நிழற் காற்று

ஒரு குழந்தை

கைசூப்பியடி உறங்கியது

அவனை அவளும்

அவளை அவனும்

தீர்ப்பில் வெளியேற்றினர்

கூட்டம் கலைந்தது

ஒரு பலவீனமான

சூரைக் காற்று திறந்திருந்த

வாசல்களில் சுழன்றோடியது

பின்னொரு குழந்தை அழுதது

பெருங்குரலெடுத்து

 

5

மலைச் சரிவில்

பாழடைந்த வீடொன்று

கலைந்து  கிடந்தது

வாசலெங்கும்

வாழ்ந்து

நெடுநாளாகிவிட்டச் சுவடுகள்

யாரோ

என்றோ கைவிட்டு வெளியேற

மூர்ச்சையாகித்

தாழ்கொள்ளா கதவுகள்

இன்றைக்கும் திறந்தே கிடக்கின்றன

நாள்தோறும்

சரிவிலிருந்து மேலேறி

விரிசலடைந்த

வைராக்கியத்தின் அச்சுவர்களைத்

தழுவிக் கடக்கிறது

மலைக்காற்று

 

6

ஒரு மட்டக் குதிரை வாழ்கிறது

கட்டுண்ட கயிற்றின்

நீளத்திற்கு

மைனாக்கள் அதைச்

சூழ்ந்துகொண்டு சூரியனை

மேய்கின்றன

பொன்னிறமாய் மின்னுகின்றது

மேய்ச்சல் காடு

சரிவில் இறங்கி நிமிர்ந்து பார்த்த

மட்டக்குதிரையின்

கண்களில்

இந்த நாளின் நிராதரவான

சிற்றொளி

 

7

குழந்தைமையின் ஒரு காகித ஓவியம்

காற்றில் திக்கற்றோடி

சக்கரங்களில் மிதிபட்டுச் சிதைந்து

கிழிந்து

மீண்டும் திரும்பி வந்திருக்கின்றது

வக்கற்றோர் குடிகொண்ட

முதுபெரும் மரம் ஒன்றிற்கு

சட்டென்றொரு வளையற்கை

எடுத்து அடுப்பிலிட்டுத்

தீமூட்ட

பற்றிக்கொண்டெரிந்தது காகிதம்

என்றைக்கோ தொடங்கிய

ஓவியத்தின் அந்த அழுகை

முறிதெரிந்து

ஒரு முடிவுக்கு வந்தது

இன்றைக்கு

 

8

எ.டி.எம் வாசலில்

வழக்கம்போல ஒருவன்

காத்திருந்தான்

காத்திருந்த ஒருவன் வெறுங்கையோடு

வெளியேறினான்

வழியெல்லாம் அவன் கண்டான்

கார்மேகம் இருளைப் பிசைந்து

பிறை நிலவுக்கு ஊட்டிவிடுகின்றதை

மீண்டும் வந்தான்

எப்பொழுதும்

அவனுக்கு முன்னும் பின்னும்

ஒரு வரிசை இருக்கிறது

இன்மை வகுத்த

ஒழுங்குபட்ட வரிசை

நாளுமவன் அங்குதான் நிற்கிறான்

பாவம் நிலவுக்குத்தான்

சோறு கிடைப்பதில்லை

அந்தந்த நாளில்

 

9

நாள்பட்ட காத்திருப்பில்

இன்றைக்கு விற்றுப்போனது

அந்த இரண்டு

கொஞ்சும் கிளிகள்

கடைக்குள் விரக்தியாய்

சுழன்றது

கொஞ்சல் மறந்த

மின்விசிறிக் காற்று

அடம்பிடித்து வாங்கிய குழந்தை

கிளிகளிடம் கொஞ்சிக் கொஞ்சிப்

பேசினாள்

கொஞ்சல் விற்றுப்போனதெல்லாம்

கொஞ்சல்களிடம்தான்

ஒவ்வொருமுறையும்

இழுத்துச் சார்த்துகையில்

கொஞ்சல் குரல் பிறழ்ந்து கத்துகிறது

கல்லாப் பெட்டிக்குள்

 

10

இந்த நாளின் கடலலைகள்

அவளிடம் என்ன பேசியிருக்கும் ?

நின்றாள்

நடந்தாள்

கிழிந்த படகுச் சுவரோரமாய்

மறைந்தழுதாள்

மணலில் எதையோ

கிறுக்கிக் கிறுக்கி அழித்தாள்

யார் தந்த துயரோ

எழுத்தானது

யாருடைய அன்போ

அழிபட்டது

பின்பொரு முடிவோடுதான் அலையோடு போனாள்

அவை பேசினதென்ன..?

பிணங்கிப் போவதைப்போல

முதுகைக் காட்டிக்கொண்டு

போகிறாள்

அலை நுரைப்பெடுத்து

அவள் பின்னால் ஓடுகின்றது.