Saturday, May 28, 2022
Homeபடைப்புகள்கவிதைகள்சாகிப்கிரான் கவிதைகள்

சாகிப்கிரான் கவிதைகள்

 நிகழ்வது

கைவிடப்பட்ட இரட்டை முடிப்பு
பலூன்கள் தைரியமாக
வாகனங்களைத் தவிர்க்கப் பார்க்கின்றன.
டூவீலர்களுக்கும் சைக்கிள்களுக்கும்
காற்றிற்குப் பேராசைப்படாத
விறைப்புக் குறைந்த ஜோடிகள்
நழுவியபடியே சாதித்தன
கடைசியாக ஒரு டிப்பர் லாரி
பலூன் என்றால்
வெடித்துவிட வேண்டுமா என்ன?
பேரதிசயத்தைக் கடந்தபடி
அந்த நாள் நிகழ்கிறது
நினைவேக்கமாக.

தூ…தூ…

எல்லோரும் அன்பாகக்
கேட்கிறார்கள்தான்
பிறகு குறுகிய சந்துகளின்
அரசாணிகள் அப்படியே
அந்தப் பக்கம் கூட்டிப் போய்விடுங்கள்.
அவசரம் அவசரம் என்று
வட்டமடித்தபடி ஓடும் அவஸ்தையில்
பூமியின் எல்லைக்கே வந்துவிட்டோம்
தட்டையான இந்தத் தெருக்களிலிருந்து
ஆண்ட்ரோமெடா கேலக்ஸிக்கே.
நாலு பில்லியன் ஆண்டுகள்
எங்கே காத்திருப்பது?
எல்லாம் கலைந்து போகட்டும்
ஜீனோ ”போவதற்கு”.

 சாம்ராஜ்யம்

ஜீனோ தன்
எல்லைகளைக் கால்தூக்கி
நாட்டியபடியே செல்கிறான்
சமயத்தில்
ஏசி வெண்ட்டின்
ஈர வட்டத்திலும்
தன் பேரரசை
உறுதிப்படுத்தியபடி
என்னைப் பார்க்கிறான்
புரிதலுக்கு அப்பால்
நிகழும் அதிசயங்களின்
இரகசியத்தை
எல்லோரும் உறங்கும்
இரவுகளில் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது பொறி.

இந்திரன் தோட்டத்து முந்திரி

அறிவியல் அறிஞர்கள்
தத்துவ ஞானிகள்
தொழில் நுட்பக் கலைஞர்கள்
யாருக்கும் ரொமாண்ஸ்
இற்றுப்போய்விட்டது
என்பது எவ்வளவு கபடமானது?

ஓர் இயந்திர பொறியியலாளன்
யுவதிகளின் ஆழ்மனத்தை
எப்படி அளந்துவிடுகிறான்?
வசீகரமான டியூக் பைக்கை
ஒரு யுவனுக்கு வழங்குகிறான்.

ஒரு வேதியியலாளன்
இனச்சேர்க்கையின்
நுண்ணிய மணமொன்றை
வானத்திலேந்தி ஆக்ஸ் ஸ்ப்ரேயாக
வடிவமைத்து காமனாகிறான்.

ஒரு சீரியல் வடிவமைப்பாளன்
காலக்கிரமத்தின் மனோபாவத்தை
நாடகமாக்கி நிரந்தர
சங்கிலிகளை வீட்டிற்குள்
அனுப்பிவிடுகிறான்.

ஒரு சிகையலங்கரிப்பவன்
மணற்கடிகையை லாவகமாகச்
சுழற்றி கடுப்பையும் களிப்பையும்
ஒரு சொடக்கில் ஜுவாலையின்
சடுதியில் கனவுக் கண்ணன்களாகக்
கணிக்கிறான்.

இங்கே
விவாகரத்தைப் பற்றிப் பேசுவது
ஒன்றும் அபத்தமில்லைதான்
விடைகளைக் கொண்டு
புதிர்களைக் கட்டமைக்கும்
கடிகை எப்போதும்
முன்னோக்கிச் செல்வதில்லை
தான்.

பேன்ஸி பனியனும் போஸ்ட் மாடர்ன் ஜட்டியும்

மேலுக்கு, துணிக்கு என்று
இரண்டு சோப்புகள் உண்டு
நேற்றின் குழப்ப எச்சத்தில்
துணிக்குப் போடுவதை மேலுக்கும் மேலுக்குப் போடுவதைத் துணிக்கும் போட்டுவிட்டது அம்மணம்.
என்னை வெயில் கொடியில்
காயப்போட்டுவிட்டு உடுப்புகள்
வெளியே கிளம்புகின்றன.
மாட்டிய க்ளிப்புகளைக் கழற்ற எழாமல்
அவமானத்தில் உலரும்
என்னை ஏறெடுத்தும் பார்க்காமல்
செல்லும் உள் உடுப்புகளின்
பொத்தல் நட்சத்திரங்கள்
வெளிச்சத்தில் உலவுவதை
வேடிக்கை பார்க்கும்
வானத்துக்குக் கீழே
என்னையும் என் உள் உடுப்புகளையும்
அடையாளம் தெரிந்தவர்கள்
அம்மாவும் அவளும்தான்.
அநாதை ஒருவனின்
குளியலறையில் அடிக்கடி
இதுபோன்ற அசம்பாவிதங்கள்
நடந்து கொண்டுதான்
இருக்கின்றன.

பகிர்:
No comments

Sorry, the comment form is closed at this time.

error: Content is protected !!