கூதல்மாரி நுண்துளி தூங்கா நிலம் -லீனா மணிமேகலை

1.

பொழியும்

பொழியும் போதே உறையும்

இறுகும்

இறுக இறுக கனக்கும்

உடையும்

உடைந்து கீறி வாளென அறுக்கும்

மிதக்கும்

மிதந்து மேகதாதாகி புகையும்

உறிஞ்சும்

உறிஞ்சிய நிறங்களை வெண்மையாக்கித் துப்பும்

நகர்த்தும்

நகர்த்திய நட்சத்திரங்களிடையே கூதலை நிரப்பும்

நிறையும்

நிறைந்து நிலத்தைப் பாலையாக்கித் தகிக்கும்

அதன் பெயர் பனியென்கிறார்கள்

அதன் பெயர் நாம்

 

2

இந்த அதிகாலையில் என் கிண்ணத்தைக்

குனிந்து பார்க்கிறேன்

அதன் வெறுமை

நடுக்கடலென கனக்கின்றது

திசைகள் குழைந்த அதன் விளிம்புகள்

திரும்பித் தர முடியாத அன்பென விம்முகிறது

என் ஒரு துளி கண்ணீர்

அதன் வளைவுகளில் விழுந்து உருள்கிறது

ஆழ்ந்த சதுப்பிலிருந்து எழும் நிலவென

ஒரு கைச் சோறு கிண்ணத்தில் எழுகிறது

என் இதயத்தின் மென்தசை விண்டு திரளும் ஓசை

அந்த உணவின் சுவையை

உனக்கு எப்படிப் புரிய வைப்பது

சரணடைவதில் என்ன விடுதலையெனக் கேட்கிறாய்

வேனில் வருமா என பனி கேட்குமா?

 

3

கைப்பேசி அழைப்பு நாளெல்லாம் ஒலித்தபடி இருக்கிறது

நீ வரவில்லை

மஞ்சள் டாக்சியில், க்ரே ஹவுண்ட் ரயில் நிலையங்களில், சன்னல் இருக்கைப் பயணியின் கண்களில் சதா மாறும் பிம்பங்களில், தூர குத்திட்டிருக்கும் பார்வையில், பெய்யும் பனியின் இலயத்தில், இலைகளற்று தனித்த மரக்கிளைகளின் உரசலில், சிந்திய காஃபி துளிகளின் உறைதலில்,

வெடித்த உதட்டுப் பள்ளங்களில், நடுங்கும் விரல்களின் குளிரில், அணிய முகங்களில்லாமல் உலர் காற்றில் சுழலும் முகக் கவசங்களில்,

கைப்பேசி அழைப்பு ஓயாமல் ஒலித்தபடி இருக்கிறது

நீ வரவில்லை

 

நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும்

இந்தக் கவிதையின் மீது

கைப்பேசி அழைப்பு சதா ஒலித்தபடி இருக்கிறது

நீ வரவில்லை

 

360 அசினிபான் சாலையின்

பனிப்பாளங்களின் இடுக்குகளில்

தன் வெப்பகாலத்துக்கான இரையென

இந்தக் கவிதையைப்

புதைத்துக் கொண்டிருக்கும்

சாம்பல் நிற அணிலின்  மீது

கைப்பேசி அழைப்பு நீள ஒலித்தபடி இருக்கிறது

நீ வரவில்லை

 

(செந்திலுக்கு)