ஒரு தற்கொலைக்கு மிகச் சரியான நாள்

ந்த  ஹோட்டலில் இருந்த 97 நியுயார்க் விளம்பரப் பிரதிநிதிகளும் தொலைதூர அழைப்புகளை முற்றுரிமையாக்கிக் கொண்டிருந்த விதத்தால், அறை 507-ல் இருந்த பெண், பிற்பகல் 2.30 வரை அவளது அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும் அந்த நேரத்தை அவள் பயன்படுத்திக் கொண்டாள். பாக்கெட் அளவு கொண்ட மகளிர் இதழில் “செக்ஸ் என்பது சொர்க்கமா அல்லது நரகமா” என்ற கட்டுரையை அவள் படித்தாள். அவளது சீப்பு மற்றும் நகப்பூச்சுத் தூரிகையைக் கழுவினாள். அவளது வெண் மஞ்சள் நிறம் கொண்ட பாவாடையில் இருந்த பிசிறை எடுத்தாள். அவளது ரவிக்கையில் இருந்த பொத்தான்களை நகர்த்தினாள். அவளது மச்சத்தின் மீதிருந்த இரு ரோமங்களை இடுக்கியால் களைந்தாள். இறுதியில் தொலைபேசி இயக்குபவர் அவளை அழைத்த போது, அவள் சாளரத்தின் சுவரில் அமர்ந்து அவளது இடது கைவிரல் நகங்களில் நகப்பூச்சு பூசுவதை ஏறத்தாழ முடித்திருந்தாள்.

ஒலிக்கும் தொலைபேசிக்காக எதையும் தவறவிடாத பெண் அவள். அவளது தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதை அவள் சிறுமியாக இருந்தபோதிருந்தே ஒலிப்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொலைபேசி ஒலித்துக் கொண்டிருக்கையில், அவளது சிறிய நகப்பூச்சுத் தூரிகையால் அவளது சுண்டுவிரல் நகத்தின் மீது நிலவின் வெளிவட்ட வடிவத்தைப் போன்று அழுத்தமாக்கினாள். பிறகு அந்த நகப்பூச்சு பாட்டிலை மூடி வைத்த அவள், எழுந்து நின்று தனது ஈரமான இடதுகையை முன்னும் பின்னும் காற்றில் ஆட்டினாள். தனது உலர்ந்த கையால் சாளரச் சுவரில் நிரம்பிக் கிடந்த சாம்பல் கிண்ணத்தை எடுத்து வந்து, தொலைபேசி நிற்கும் மேசைமீது வைத்தாள். அங்கிருந்த இரட்டைப் படுக்கைகளில் ஒன்றில் அமர்ந்த அவள், ஐந்து அல்லது ஆறாவது முறை ஒலித்தபோது தொலைபேசியை எடுத்தாள்.

அவளது இடது கை விரல்களை கைகளில் இருந்தும் அவள் அணிந்திருந்த ஒரே ஒரு வெண்ணிற மேலாடையில் இருந்தும் நீட்டியவாறு-அவளது மோதிரங்கள் குளியலறையில் இருந்தன- தொலைபேசியில் “ஹலோ” என்றாள்.

“நியுயார்க் அழைப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது, திருமதி. கிளாஸ்” என்றார் தொலைபேசி இயக்குபவர்.

மேசை மீது சாம்பற் கிண்ணத்திற்கு இடமேற்படுத்திக் கொண்டே “நன்றி” என்று சொன்னாள் அப்பெண்.

ஒரு பெண்மணியின் குரல் அதில் வெளிப்பட்டது. “முரியேல்? இது நீ தானா?”

தொலைபேசி ரிசீவரை தனது காதிலிருந்து சிறிது நகர்த்தினாள் அப்பெண். “ஆமா, அம்மா. எப்படி இருக்கிறாய்?” என்றாள்.

“உன்னைப் பற்றி ரொம்பக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஏன் என்னை அழைக்கவில்லை? நன்றாகத்தானே இருக்கிறாய்?”

“நேற்று இரவும் முன்தின இரவும் உன்னை அழைக்க முயற்சி செய்தேன். தொலைபேசி தான்…..”

“நீ நன்றாகத்தானே இருக்கிறாய், முரியேல்?”

அவளது காதுக்கும் ரிசீவருக்கும் இடையேயான கோணத்தை அதிகரித்தாள் அப்பெண். “நல்லா இருக்கேன். ரொம்ப உஷ்ணமா இருக்கு. ஃப்ளோரிடாவில் இன்று தான் மிக அதிக வெப்பமான நாள்…”

“ஏன் நீ என்னை அழைக்கவில்லை? நான் ரொம்பக் கவலைப்பட்டேன்…“

“அம்மா, என் கண்ணே, என்னைத் திட்டாதே. நீ பேசுவது ரொம்ப அழகாகக் கேட்கிறது” என்றாள் அப்பெண். “நான் நேற்று இரவு இருமுறை உன்னை அழைத்தேன். ஒரு முறை…“

“அநேகமாக நீ அழைப்பாய் என்று உன் அப்பாவிடம் நேற்று இரவு சொன்னேன். ஆனா, இல்லை, அவரும் தான்- நீ நன்றாகத் தானே இருக்கிறாய், முரியேல்? என்னிடம் உண்மையைச் சொல்.”

“நான் நல்லா இருக்கேன், தயவு செய்து அப்படிக் கேட்பதை நிறுத்து.”

“எப்போது அங்கே போய்ச் சேர்ந்தாய்?”

“எனக்குத் தெரியாது. புதன்கிழமை அதிகாலை.”

“யார் ஓட்டியது?”

“அவர் தான்” என்றாள் அவள். “பதற்றப்படாதே. அவர் நன்றாக ஓட்டினார். நானே ஆச்சரியப்பட்டேன்.”

“அவர் ஓட்டினாரா? முரியேல், நீ எனக்கு வாக்குக் கொடுத்திருந்தாய்–“

“அம்மா“ இடைமறித்தாள் அப்பெண். “நான் தான் சொன்னேனே, அவர் நன்றாக ஓட்டினார் என்று. உண்மையைச் சொல்லப் போனால் 50-க்குக் கீழேயே முழுத் தொலைவும் ஓட்டினார். “

“மரங்களோடு விளையாடும் அந்த வேடிக்கைச் செயலில் ஈடுபட்டாரா? “

“அவர் நன்றாக ஓட்டினார் என்று சொன்னேன் அம்மா. வெள்ளைக்கோட்டிற்கு அருகிலேயே செல்லும்படிச் சொன்னேன். அவர் அதைக் கேட்டு அதன்படியே செய்தார். நீ சொல்வது போல, அவர் மரங்களைப் பார்க்கக்கூட முயற்சி செய்யவில்லை. தற்செயலாக அந்தக் காரை அப்பா சரி செய்தாரா?“

“இன்னும் இல்லை. அவர்கள் நானூறு டாலர்கள் கேட்டார்கள், வெறும்–“

“அம்மா, அதற்கு பணம் செலுத்துவதாக ஸீமோர் அப்பாவிடம் சொன்னார். எந்தக் காரணமும் இல்லை–“

“நல்லது. காரிலும் மற்ற இடத்திலும் அவர் எப்படி நடந்து கொண்டார்?“

“நன்றாக“, என்றாள் அவள்.

“உன்னை அந்த மோசமான பேர் சொல்லி அழைக்கிறாரா–“

“இல்லை. இப்போது வேறு புதுப் பெயர் சொல்கிறார்.“

“என்ன?“

“ஓ..என்ன வித்தியாசம், அம்மா?“

“முரியேல், எனக்குத் தெரிய வேண்டும். உன் அப்பா–“

“சரி, சரி. அவர் என்னை 1948-ன் மிஸ்.ஆன்மீகப் பரதேசி என்று அழைக்கிறார்“ எனச் சொல்லிவிட்டு கெக்கெலித்தாள்.

“இது வேடிக்கை அல்ல, முரியேல். இது கொஞ்சம் கூடவேடிக்கை இல்லை. இது மோசமானது. உண்மையில், ரொம்ப வேதனையானது. அது எப்படி என்று நான் சிந்திக்கும்போது–“

“அம்மா“, அவள் இடைமறித்தாள். “என்னைக் கவனி. ஜெர்மனியில் இருந்து அவர் அனுப்பிய அந்தப் புத்தகம் நினைவுள்ளதா? உனக்குத் தெரியுமே- அந்த ஜெர்மனியக் கவிதைகள். அதை நான் என்ன செய்தேன்? நான் என்னுடையதை உலுக்கி-“

“அது உன்னிடம் இருக்கிறது“

“உண்மையாகவா?”என்றாள் அப்பெண்.

“நிச்சயமாக. அதை நான் வைத்திருக்கிறேன். நீ அதை இங்கே விட்டுச் சென்றுவிட்டாய். இங்கே வைக்க இடமின்மையால் அது ஃப்ரெடியின் அறையில் உள்ளது. ஏன்? அவர் கேட்கிறாரா?“

“இல்லை. கார் ஓட்டி வரும் போது அதைப் பற்றிக் கேட்டார். நான் அதை வாசித்தேனா என்று அவர் தெரிந்து கொள்ள விரும்பினார்.“

“அது ஜெர்மன் மொழியில் உள்ளது.“

“ஆமா. ஆனால் அதில் எந்த வித்தியாசமும் இல்லை“, என்று கூறியபடியே கால் மேல் கால் போட்டாள் அப்பெண். “அந்தக் கவிதைகள் இந்த நூற்றாண்டின் ஒரே மகாகவியால் எழுதப்பட்டது என்கிறார் அவர். நான் அதன் மொழிபெயர்ப்பையோ அல்லது வேறு ஏதாகிலுமோ வாங்கியிருக்க வேண்டும் என்றார். அல்லது அந்த மொழியைக் கற்றிருக்க வேண்டும் என்றார்.“

“பயங்கரம், பயங்கரம். இது வேதனையானது. உன் அப்பா நேற்று இரவு சொன்னார்–“

“ஒரு விநாடி அம்மா“, என்றாள் அவள். ஜன்னலோரம் வைத்திருந்த சிகரெட்டை எடுத்து அதில் ஒன்றைப் பற்ற வைத்து தனது படுக்கைக்கு திரும்பி வந்தமர்ந்தாள். “அம்மா?“ என்று புகையை வெளியே ஊதியபடியே சொன்னாள் அப்பெண்.

“முரியேல். நான் சொல்வதைக் கவனி“

“நான் கவனிக்கிறேன்.“

“உன் அப்பா டாக்டர் ஸிவெட்ஸ்கியிடம் பேசினார்.“

“ஓ..?“ என்றாள்.

“அவர் அவருக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். குறைந்தபட்சம், அவர் செய்ததை அவர் கூறினார்- உன் அப்பாவை உனக்குத் தெரியுமே. அந்த மரங்கள். ஜன்னல் வியாபாரம். அவரது பாட்டி இறப்பதற்கான திட்டம் குறித்து அவர் கூறிய பயங்கரமான விஷயங்கள். பெர்முடாவில் இருந்து கொண்டு வந்த அழகான படங்களை அவர் என்ன செய்தார்—எல்லா விஷயங்களையும்.“

“நல்லது“ என்றாள் அவள்.

“நல்லது. முதலில், ராணுவம் அவரை மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்தது சத்தியமாக மிகப் பெரிய குற்றம் என்று கூறினார். அவர் உன் அப்பாவிடம், நிச்சயமாக ஒரு வாய்ப்பு உள்ளது- வெகு நிச்சயமான வாய்ப்பு, சத்தியமாக ஸீமோர் தனது கட்டுப்பாட்டை முழுவதும் இழப்பார் என்று கூறியுள்ளார்.“

“இந்த ஹோட்டலில் ஒரு உளவியல் நிபுணர் உள்ளார்“ என்றாள் அப்பெண்.

“யார்? அவர் பெயர் என்ன?“

“எனக்குத் தெரியாது. ரெய்ஸர் அல்லது ஏதோ ஒன்று. அவர் நல்ல மருத்துவராக இருக்க வேண்டும்.“

“அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை.“

“நல்லது. எப்படியும் அவர் நல்ல மருத்துவராக இருக்க வேண்டும்.“

“முரியேல், தயவு செய்து அடம் பிடிக்காதே. நாங்கள் உன்னைப் பற்றி ரொம்பக் கவலைப்படுகிறோம். உண்மையில், நேற்று இரவு உன் அப்பா உன்னை வீட்டுக்கு வருமாறு தந்தி கொடுக்க விரும்பினார்–“

“நான் இப்போதைக்கு வீட்டிற்கு வருதாக இல்லை, அம்மா. அமைதியாக இரு,“

“முரியேல், சத்தியமாகச் சொல்கிறேன். ஸீமோர் தனது கட்டுப்பாட்டை முழுவதும் இழக்கலாம் என டாக்டர் ஸிவெட்ஸ்கி–“

“நான் இப்போது தான் இங்கே வந்துள்ளேன் அம்மா. இத்தனை ஆண்டுகளில் இதுதான் எனக்கு முதல் சுற்றுலா. நான் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு வீட்டிற்கு வருவதாய் இல்லை“ என்றாள் அப்பெண். “என்னால் இப்போது பயணம் செய்ய இயலாது. எனக்கு வியர்க்குருவாக உள்ளது. என்னால் நகரவே முடியாது.”

”உனக்கு நிறையக் கொப்புளமாக உள்ளதா? நான் உன் பையில் வைத்த வெண்கலப் புட்டியில் இருந்ததை பயன்படுத்தினாயா? நான் வைத்தேனே–”

”நான் உபயோகித்தேன். இருந்தாலும் எப்படியோ வியர்க்குரு வந்துவிட்டது.”

”ரொம்ப கொடுமை. எங்கெல்லாம் கொப்புளமாகஉள்ளது?”

”எல்லா இடத்திலும் அம்மா”

”ரொம்பக் கொடுமை”

”நான் வாழ்வேன்”

”சொல். அந்த உளவியலாளரிடம் பேசினாயா? ”

”நல்லது, கொஞ்சமா” என்றாள் அவள்.

”அவர் என்ன சொன்னார்? நீ அவரிடம் பேசும்போது ஸீமோர் எங்கிருந்தார்?”

“அறையில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் இங்கிருந்த இரு நாட்களும் பியானோ வாசித்தார்.”

“நல்லது, அவர் என்ன சொன்னார்?“

“ஓ..பெரிதாக ஒன்றுமில்லை. அவர்தான் என்னிடம் முதலில் பேசினார். நேற்றிரவு பிங்கோ விளையாட்டின்போது அவருக்கு அருகில் நான் அமர்ந்திருந்தேன். பக்கத்து அறையில் பியானோ வாசிப்பது என் கணவர்தானே என்று அவர் கேட்டார். நான் ஆம் என்றேன். ஸீமோர்க்கு உடல்நிலை அல்லது ஏதாவது சரியில்லையா என்று கேட்டார். நான்—“

“அவர் ஏன் அப்படிக் கேட்டார்?“

“எனக்குத் தெரியலை அம்மா. அவர் ரொம்ப வெளிறிப்போய் இருந்தார் அதனால் தான் என நினைக்கிறேன்“ என்றாள் அவள். “விளையாட்டிற்குப் பிறகு அவரும் அவர் மனைவியும் தங்களுடன் குடிக்க வர விருப்பமா என்று கேட்டனர். அதனால் சென்றேன். அவரது மனைவி மோசமானவள். பான்விட் ஜன்னலில் இருந்த அந்த மோசமான இரவு உணவு உடையை நாம் பார்த்தோமே அது உனக்கு நினைவிருக்கிறதா? அது மாதிரி குட்டி, குட்டியா ஒன்று உனக்கு வேண்டும் என–“

“பச்சை?“

“அவள் அதை அணிந்திருந்தாள். இடுப்புச் சதை தெரிந்தது. ஸீமோர் மேடிசன் அவென்யுவில் உள்ள மகளிருக்கான தொப்பிகளை விற்கும் அந்தக் கடையின் சூஸன் கிளாஸ்க்கு உறவா எனக் கேட்டுக் கொண்டே இருந்தாள்.“

“டாக்டர் என்ன சொன்னார்?“

“ஓ…நல்லது…பெரிதாக ஒன்றும் இல்லை. ஏனென்றால் நாங்கள் மது விடுதியில் இருந்தோம். அங்கே ஒரே சத்தமாக இருந்தது“

“பாட்டியின் நாற்காலியை வைத்து ஸீமோர் செய்ய முயற்சித்ததை அவரிடம் கூறினாயா?“

“இல்லை அம்மா. அந்த விவரங்களுக்குள் எல்லாம் நான் செல்லவில்லை“ என்றாள். “அவரிடம் பேசுவதற்கு எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அவர் எப்போதும் மதுக் கூடத்திலேயே இருக்கிறார்.“

“ஸீமோர் மறுபடியும் அந்த வேடிக்கையான விஷயங்களையோ அல்லது வேறு ஏதாவதோ செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினாரா? உன்னை ஏதாவது செய்வது பற்றி!“

“சரியாச் சொல்லலை”, என்றாள் அவள். “அவருக்கு மேலதிகத் தகவல் வேண்டியதாயிருந்தது அம்மா. அவர்கள் உன் குழந்தைப் பருவம் மற்றும் அது போன்ற பல விஷயங்கள் பற்றி அறிய விரும்புவார்கள். நான் தான் சொன்னேனே. எங்களால் பேசவே முடியவில்லை. அங்கே ஒரே சத்தமாக இருந்தது.”

”நல்லது. உன்னுடைய நீலகோட் எப்படி இருக்கிறது?”

”எல்லாம் நல்லா இருக்கு. நான் அதிலிருந்து கொஞ்சம் பஞ்சை வெளியே எடுத்துட்டேன்.”

”இந்த வருஷம் உடைகள் எல்லாம் எப்படி இருக்கிறது?”

”கொடுமை. ஆனா எல்லாம் வித்தியாசமானவை. எல்லாவற்றிலும் கை வேலைப்பாடுகள் உள்ளன” என்றாள் அப்பெண்.

”உன்னோட அறை எப்படி உள்ளது?”

”நல்லா இருக்கு. போருக்கு முன்பு நாங்கள் பயன்படுத்திய அறையைப் பெற முடியவில்லை” என்றாள். ”இந்த வருடம் மக்கள் மோசமானவர்களாக இருக்கிறார்கள். சாப்பிடும் இடத்தில் எங்களுக்கு அருகே அமர்ந்திருப்பவர்களை நீ பார்க்க வேண்டும். பக்கத்து டேபிளில் இருப்பவர்கள் சரக்கு வண்டியில் பயணம் செய்து வந்தவர்கள் போலிருப்பார்கள்.”

”நல்லது. எல்லாம்சரி. உன்னோட பாலே நடனம் எப்படி உள்ளது?”

”ரொம்ப நீளம். நான் உன்னிடம் சொன்னேன் அல்லவா, மிக நீளம் என்று.”

”முரியேல், நான் உன்னிடம் ஒன்றை மட்டும் மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்-நீ நன்றாக இருக்கிறாயா?”

”ஆமாம் அம்மா”என்றாள் அப்பெண். ”தொண்ணூறாவது தடவையாக கேட்கிறாய்.”

”நீ வீட்டுக்கு வர விரும்பவில்லையா?”

”இல்லம்மா”

”நீ வேற இடத்திற்கு தனியே சென்று இதைப் பற்றி சிந்திப்பதாக இருந்தால் அதற்கு வேண்டிய செலவுகளைச் செய்வதாக உன் அப்பா நேற்றிரவு கூறிக் கொண்டிருந்தார். நீ ஒரு சொகுசுக் கப்பல் பயணம் கூட செய்யலாம். நாங்கள் இருவரும் சிந்தித்தோம்–”

”வேண்டாம். நன்றி.” என்று கூறிவிட்டு கால்களை நேராக வைத்தாள். ”அம்மா, இந்த தொலைபேசி அழைப்பு ரொம்ப செலவு ஆகப் போகுது–”

”போர்க் காலத்தில் அந்தப் பையனுக்காக நீ எப்படிக் காத்திருந்தாய் என்பதை நான் நினைக்கும் போது-”

”அம்மா, நாம் தொலைபேசியை வைப்பது நல்லது, ஸீமோர் எந்த நேரமும் வரலாம்” என்றாள் அவள்.

”அவர் எங்கே?”

”கடற்கரையில்”

”கடற்கரையிலா? தனியாகவா? கடற்கரையில் ஒழுங்காக நடந்து கொள்கிறாரா?”

”அம்மா, நீ அவர் ஒரு வெறி பிடித்த பைத்தியம் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறாய்–”

”நான் அந்த மாதிரி சொல்லவில்லை, முரியேல்”

”நல்லது. நீ பேசியது அதைப் போல இருந்தது. அவர் அங்கே சும்மா படுத்துதான் கிடக்கிறார்.  அவர் குளியல் அங்கியை அவிழ்க்கமாட்டார்.”

”அவருடைய குளியலங்கியை அவிழ்க்கமாட்டாரா? ஏன்?”

”எனக்குத் தெரியாது. அவர் மிகவும் வெளிறிப் போயிருப்பதால் என நினைக்கிறேன்.”

“அடக் கடவுளே, அவருக்கு சூரிய ஒளி தேவை. நீ அழைத்துப் போக முடியாதா?”

“உனக்கு ஸீமோரைத் தெரியும்தானே” என்று கூறியபடியே தனது கால்மேல் கால் போட்டு அமர்ந்தாள். “ஏராளமான முட்டாள்கள் அவரது உடலில் குத்தியுள்ள பச்சையைப் பார்க்க அவர் விரும்பவில்லை எனக் கூறுவார்”.

“அவர் பச்சை எதுவும் குத்தவில்லை!.ரா ணுவத்தில் பச்சை குத்தினாரா?“

“இல்லை அம்மா, இல்லை.“ என்றவள் எழுந்து நின்றாள். “நாளைக்கு நான் உன்னை அழைக்கிறேன்”.

“முரியேல், நான் சொல்வதைக் கவனி”.

“சொல் அம்மா“ என்ற அப்பெண், தனது முழு எடையையும் தனது வலது காலில் இருக்குமாறு நின்றாள்.

“அவர் ஏதாவது வேடிக்கையாக செய்தாலோ அல்லது கூறினாலோ என்னை அழை- நான் என்ன சொல்கிறேன் எனப் புரிகிறதா? “

“அம்மா, ஸீமோரைக் கண்டு நான் பயப்படவில்லை”.

“முரியேல், நீஎ னக்குச் சத்தியம் செய்து கொடு”.

“சரி, சத்தியம், அம்மா. அப்பாவிடம் என் அன்பைத் தெரிவி” என்ற அவள் தொலைபேசியை வைத்தாள்.

“ஸீமோர் கிளாஸ்”** என்றாள் தனது தாயுடன் விடுதியில் தங்கியுள்ள ஸிபில் கார்பென்டர்.

“கண்ணே, அப்படிச் சொல்வதை நிறுத்து. அது அம்மாவை கிறுக்குப் பிடிக்க வைக்கிறது. தயவு செய்து நிறுத்து“.

திருமதி. கார்பென்டர் ஸிபிலின் தோளில் இருந்து மென்மையான சிறகு போன்ற அவளது இடுப்பின் பின்புறம்வரை வெயில் கருக்காமலிருக்க எண்ணெய்யை தடவினாள். ஸிபில் கடலைப் பார்த்தபடி ஒரு மென்பந்தின் மீது அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த மஞ்சள் கேனரி பறவையைப் போன்ற நீச்சல் உடையின் ஒரு பகுதியானது உண்மையில் அடுத்த ஒன்பது அல்லது பத்தாண்டுகள் வரை அவளுக்குத் தேவைப்படப் போவதில்லை.

“அது சாதாரண பட்டுக் கைக்குட்டை தான்- அருகே சென்று பார்த்தால் தெரியும்.”என்றாள் திருமதி. கார்பென்டரின் பின்னால் அமர்ந்திருந்த பெண். “அதை எப்படிக் கட்டினாள் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது மிக அருமையாக இருக்கிறது.”

“கேட்கவும் அருமையாக இருக்கிறது” திருமதி. கார்பென்டர் ஒப்புக் கொண்டாள். “ஸிபில், அப்படியே இரு”.

“ஸீ – மோர் – கிளாஸ்?” என்றாள் ஸிபில்.

திருமதி. கார்பென்டர் பெருமூச்சுவிட்டாள். “சரி” என்று கூறிய அவள், எண்ணெய் பாட்டிலை மூடினாள். “போய் விளையாடு கண்ணே. அம்மா விடுதிக்குச் சென்று திருமதி. ஹப்பிள் உடன் மார்ட்டினி அருந்திவிட்டு, உனக்கு ஆலிவ் கொண்டு வருகிறேன்.”

ஸிபில் உடனே எழுந்து கடற்கரைக்கு ஓடிச் சென்று அங்கே இருந்த மீனவர் குடியிருப்பு நோக்கி நடக்கத் துவங்கினாள். நீரில் ஊறிய மணல் கோட்டையில் தடுமாறி ஒருகால் மூழ்கும் போது நின்றாள். அவள் விடுதியின் விருந்தினர்களுக்கான முன்பதிவு செய்யப்பட்ட பகுதியிலிருந்து விலகி வந்திருந்தாள்.

அவள் கால் மைல் தூரம் நடந்து சென்றபோது கடற்கரையின் மென் மணல் பகுதியை வந்தடைந்தாள். அங்கே ஓர் இளைஞன் படுத்திருப்பதைப் பார்த்தவுடன் சற்று நின்றாள்.

“தண்ணீருக்குள் செல்லப் போகிறாயா, ஸீமோர் கிளாஸ்?” என்றாள்.

அந்த இளைஞன் தனது உடையைச் சுற்றியிருந்த கயிற்றை வலது கையால் பிடித்தான். தனது கண்களில் போட்டிருந்த துண்டு விலகும்படி அவன் திரும்பிப் படுத்து, கண்களைச் சுருக்கி ஸிபிலைப் பார்த்தான்.

“ஹே, ஹாய், ஸிபில்.”

“நீ தண்ணீருக்குள் செல்லப் போகிறாயா?”

“நான் உனக்காகக் காத்திருந்தேன். இப்போது என்ன?” என்றான் இளைஞன்.

“என்ன?”என்றாள் ஸிபில்.

“இப்போ என்ன விஷயம்?”

“என் அப்பா நாளை விமானத்தில் வருகிறார்” என்று கூறிய ஸிபில் மணலை உதைத்தாள்.

“முகத்தில் வேண்டாம், பேபி”, என்றான் அந்த இளைஞன். ஸிபிலின் கணுக்காலில் ஒரு கையை வைத்த அவன், “நல்லது, உன் அப்பா இங்கு வர வேண்டிய நேரம் தான். நான் அவரை ஒவ்வொரு மணிநேரமும் எதிர் பார்த்திருக்கிறேன்.”

“அந்தப் பெண்மணி எங்கே?” என்றாள் ஸிபில்.

“பெண்மணி?” அந்த இளைஞன் தன் தலைமுடியில் ஒட்டியிருந்த மணற்துகளை உதறினான். “அதைச் சொல்வது கடினம் ஸிபில். ஆயிரக்கணக்கான இடங்களில் ஏதாவது ஒன்றில் அவள் இருக்கலாம். முடியலங்காரக்கடையில் இருக்கலாம். அவளது கூந்தலை இளஞ்சிவப்பு வண்ணமாக்கிக் கொண்டிருக்கலாம். அல்லது அவளது அறையில் ஏழைக் குழந்தைகளுக்கு பொம்மைகள் செய்து கொண்டிருக்கலாம்.” குப்புறப்படுத்த அவன் தனது கைகளை முஷ்டியாக மடக்கி ஒன்றின் மீது ஒன்று வைத்து அதன் மேல்புறம் தனது தாடையை வைத்தான். “என்னிடம் வேறு ஏதாவது கேள், ஸிபில்” என்றான். “நீ அணிந்திருப்பது ஒரு அழகான குளியலாடை. நான் விரும்புவது ஒன்று உண்டெனில் அது நீல வண்ணக் குளியலாடை தான்.”

ஸிபில் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, துருத்திக் கொண்டிருக்கும் தனது வயிற்றைக் குனிந்து பார்த்தாள். “இது மஞ்சள் நிறம்” என்றாள். “இது மஞ்சள் நிறம்.”

“அப்படியா? கொஞ்சம் அருகே வா.” ஸிபில் ஓரடி முன்னால் வந்தாள். “நீ மிகச் சரியாகச் சொன்னாய். நான் ஒரு முட்டாள்.”

“நீ தண்ணீருக்குள் செல்லப் போகிறாயா?” என்றாள் ஸிபில்.

“நான் அதைப் பற்றித் தீவிரமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது பற்றி நிறைய சிந்திக்கிறேன். அதை அறிந்தால் நீ மகிழ்ச்சியடைவாய் ஸிபில்.”

அந்த இளைஞன் சில வேளை தன் தலைக்கு வைத்துப் படுக்கும் ரப்பர் மிதவையை ஸிபில் ஆர்வத்துடன் முறுக்கினாள். “இதற்கு காற்றுத் தேவை” என்றாள்.

“நீ சொல்வது சரி. நான் கொடுக்க நினைப்பதைவிட இதற்கு அதிகக் காற்றுத் தேவை.” தனது கைகளை எடுத்துவிட்டு தாடையை மணலில் வைத்துக் கொண்டான். “ஸிபில், நீ நன்றாக இருக்கிறாய். உன்னைப் பார்ப்பது மகிழ்வாக உள்ளது. உன்னைப் பற்றிச் சொல்” என்றான். அவள் முன்னே சென்று அவளது இரு கணுக்கால்களையும் தனது கைகளால் பிடித்துக் கொண்டான். “நான் மகரம். உன்னுடையது என்ன?” என்றான்.

“பியானோ இருக்கையில் உன்னோடு தன்னையும் அமர வைத்ததாக ஷரோன் லிப்ஸூட்ஸ் சொன்னாள்” என்றாள் ஸிபில்.

“ஷரோன் லிப்ஸூட்ஸ் அதைச் சொன்னாளா?”

ஸிபில் தீவிரமாகத் தலையசைத்தாள்.

அவளது கணுக்கால்களை விட்டுவிட்டு தனது கைகளை பின்னிழுத்து முகத்தை வலது கையின் மீது வைத்துக் கொண்டான்.  “நல்லது, இதெல்லாம் எப்படி நடந்தது என உனக்குத் தெரியுமா, ஸிபில். நான் அங்கே அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். உன்னை எங்கேயும் காணவில்லை. அப்புறம் ஷரோன் லிப்ஸூட்ஸ் அங்கு வந்து என்னருகே அமர்ந்தாள். அவளை என்னால் தள்ளிவிட முடியவில்லை. என்னால் முடியுமா?”

“ஆம்”

“ஓ..இல்லை…இல்லை. என்னால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனால் நான் என்ன செய்தேன் என்று வேண்டுமானால் சொல்வேன்” என்றான் அந்த இளைஞன்.

“என்ன?”

“அவளை நீதான் என்று பாவித்துக் கொண்டேன்.”

ஸிபில் உடனே தலைகுனிந்து மணலைத் தோண்டத் தொடங்கினாள். “நாம் தண்ணீருக்குள் போகலாம்” என்றாள்.

“சரி. என்னால் இது முடியும்”

“அடுத்த முறை அவளைத் தள்ளிவிடு” என்றாள் ஸிபில். “யாரைத் தள்ள?”

“ஷரோன் லிப்ஸூட்ஸ்”

“ஓ..ஷரோன் லிப்ஸூட்ஸ்” என்றான் அந்த இளைஞன். “அந்தப் பெயர் எப்படி வருகிறது. விருப்பங்களையும் நினைவுகளையும் கலந்தபடி.” அவன் திடீரென எழுந்து நின்றான். கடலை நோக்கினான். “ஸிபில், நாம் என்ன செய்யலாம் என்று இப்போது சொல்கிறேன். நம்மால் ஒரு பனானா ஃபிஷ்ஷை** பிடிக்க இயலுமா என்று பார்ப்போம்” என்றான்.

“என்ன?”

“பனானா ஃபிஷ்” என்று கூறிய அவன், தனது குளியலங்கியின் கயிற்றை அவிழ்த்தான். அவனது தோள்கள் குறுகலாகவும் வெண்மையாகவும் இருந்தன. அவனது உள்ளாடை அடர் நீலத்தில் இருந்தது. அவன் குளியலங்கியை முதலில் நீளமாகவும் பின்னர் மூன்று பகுதியாகவும் மடித்தான். தனது கண்கள் மேல் வைத்திருந்த துண்டை எடுத்து மணலில் விரித்து, சுருட்டிய அங்கியை அதன்மீது வைத்தான். கீழே குனிந்து, மிதவையை எடுத்து வலது அக்குளில் பத்திரப்படுத்தினான். பிறகு தனது இடக்கையால் ஸிபிலின் கையைப் பிடித்தான்.

அந்த இருவரும் கடலுக்குள் இறங்குதற்காக நடக்கத் தொடங்கினர்.

“உனது வாழ்வில் சில பனானா ஃபிஷ்களையே நீ பார்த்திருப்பாய் என நினைக்கிறேன்” என்றான் அந்த இளைஞன்.

ஸிபில் தலையை அசைத்தாள்.

“நீ பார்த்ததில்லையா? எங்கே நீ வசிக்கிறாய்?”

“எனக்குத் தெரியாது” என்றாள் ஸிபில்.

“உனக்கு நிச்சயமாகத் தெரியும். உனக்குத் தெரியும். ஷரோன் லிப்ஸூட்ஸ்க்கு, தான் எங்கு வாழ்கிறோம் என்று தெரியும். அவளுக்கு மூன்றரை வயதுதான்.”

ஸிபில் நடப்பதை நிறுத்திவிட்டு அவனிடமிருந்து தனது கையை வெடுக்கென இழுத்தாள். அவள் ஒரு சாதாரணக் கிளிஞ்சலை எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தாள். பிறகு அதைக் கீழே எறிந்தாள். “விர்லிவுட், கனெக்டிகட்” என்று கூறிவிட்டு வயிற்றைத் தள்ளியவாறு நடக்கத் தொடங்கினாள்.

“விர்லிவுட், கனெக்டிகட்” என்றான் அந்த இளைஞன். “அந்த இடம் விர்லிவுட், கனெக்டிகட் பக்கத்தில் இருக்கிறதா?”

ஸிபில் அவனை நோக்கினாள். “அங்கே தான் நான் வசிக்கிறேன்” என்று பொறுமையிழந்தபடி கூறினாள். “நான், விர்லிவுட், கனெக்டிகட்டில் வசிக்கிறேன்.” அவனுக்கு முன்பு சில தப்படிகள் ஓடிய அவள், தனது இடது காலை இடது கையால் பிடித்தபடி இரண்டு மூன்று முறை நொண்டியடித்தாள்.

“அது எல்லாவற்றையும் எவ்வளவு தெளிவாக்குகிறது என்பது உனக்குத் தெரியாது” என்றான் இளைஞன்.

காலை விடுவித்துக் கொண்ட ஸிபில், “நீ, ‘லிட்டில் பிளாக் சாம்போ’ படித்தாயா?” என்றாள்.

“நீ அதைப் பற்றிக் கேட்பது ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது” என்றான். “நேற்று இரவு தான் அதைப் படித்து முடித்தேன்.” அவன் கீழே குனிந்து ஸிபிலின் கையைப் பிடித்தான். “அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று அவளைக் கேட்டான்.

“மரங்களைச் சுற்றி அந்தப் புலிகள் ஓடினவா?”

“அவை நிற்கப் போவதில்லை என நினைத்தேன். நான் ஒருபோதும் நிறையப் புலிகளைக் கண்டதில்லை.”

“அங்கே ஆறு புலிகள் மட்டுமே இருந்தன” என்றாள் ஸிபில்.

“ஆறு புலிகள் மட்டுமா? அவ்வளவு தான் என்று சொல்வாயா நீ?”என்றான் அந்த இளைஞன்.

“உனக்கு மெழுகெண்ணெய் பிடிக்குமா?” என்றாள் ஸிபில்.

“என்ன பிடிக்குமா?” என்றான் இளைஞன். “மெழுகெண்ணெய்”

“ரொம்பப் பிடிக்கும். உனக்குப் பிடிக்காதா?”

ஸிபில் தலையசைத்தாள். “உனக்கு ஆலிவ் பிடிக்குமா?” என்று கேட்டாள்.

“ஆலிவ்—ஆம். ஆலிவும் மெழுகும். அவை இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை.”

“உனக்கு ஷரோன் லிப்ஸூட்ஸைப் பிடிக்குமா?” என்று கேட்டாள் ஸிபில்.

“ஆமா,ஆமா..பிடிக்கும்”என்றான் இளைஞன். “எனக்கு அவளிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், விடுதியின் முன்வாயிலில் உள்ள நாய்க் குட்டிகளை அவள் இம்சை செய்வதில்லை. உதாரணத்திற்கு, அந்த கனடா பெண்மணியிடம் இருந்த குட்டி நாய். அநேகமாக நீ இதை நம்பமாட்டாய். ஆனால் சில பெண் குழந்தைகள் பலூன் குச்சிகளால் அந்தக் குட்டி நாயைக் குத்துவார்கள்.  ஷரோன் செய்யமாட்டாள். அவள் ஒரு போதும் பரிவு இல்லாமல் இருந்ததில்லை. அதனால் தான் அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

ஸிபில் அமைதியாக இருந்தாள்.

“எனக்கு சாக்லேட் சுவைக்கப் பிடிக்கும்” என்றாள் இறுதியாக.

“யாருக்குத் தான் பிடிக்காது?” என்ற இளைஞன் தனது பாதங்களை நனைத்தான். “வாவ்…” குளிராக உள்ளது. அந்த இளைஞன் ரப்பர் மிதவையைப் பின்புறமாகத் திருப்பிப் போட்டான். “வேண்டாம், ஒரு விநாடி பொறு, ஸிபில். நாம் இங்கிருந்து செல்வோம், பொறு.”

ஸிபிலின் இடுப்பு மூழ்கும் வரை அவர்கள் நீருக்குள் நடந்து சென்றனர். பிறகு அந்த இளைஞன் ஸிபிலைத்  தூக்கி ரப்பர் மிதவையில் குப்புறப் படுக்க வைத்தான்.

“குளியல் தொப்பி மாதிரி எப்போதாவது அணிந்திருக்கிறாயா?” என்றான்.

“விட்டு விடாதே…பிடித்துக் கொள்…” என்றாள் ஸிபில்.

“மிஸ்.கார்பென்டர், எனக்குத் தெரியும், சும்மாயிரு…” என்றான் இளைஞன். “உன் கண்களை மட்டும் திறந்து ஏதவாது பனானா ஃபிஷ் கிடைக்கிறதா எனப்பார். இது பனானா ஃபிஷ்க்கான மிகச் சரியானநாள்.”

“எனக்கு எதுவும் தெரியவில்லை” என்றாள் ஸிபில்.

“அது புரிந்து கொள்ளக் கூடியதுதான். அதன் பழக்கங்கள் மிக விசித்திரமானவை.” அவன் தொடர்ந்து மிதவையைத் தள்ளிக் கொண்டிருந்தான். நீர் மட்டம் அவன் மார்பு வரைகூட இல்லை. “அவை மிக அவலமான வாழ்வை வாழ்கின்றன” என்றான். “அவை என்ன செய்யும் என்று உனக்குத் தெரியுமா ஸிபில்?”

அவள் தலையை ஆட்டினாள்.

“நல்லது. அதிகமான வாழைப் பழங்கள் உள்ள இடத்தில் உள்ள ஓட்டைக்குள் அவை நீந்திச் செல்கின்றன. அவ்வாறு நீந்தும்போது அவை மிகச் சாதாரண மீன்கள் போலவே இருக்கும். ஆனால் உள்ளே சென்றுவிட்டால் அவை பன்றிகளைப் போல நடந்து கொள்ளத் துவங்கும். எனக்குத் தெரிந்து, சில பனானா ஃபிஷ்கள் ஓட்டைக்குள் நீந்திச் சென்று எழுபத்தியெட்டு வாழைப் பழங்களை தின்றிருக்கின்றன.” அவன் மிதவையை அதன் நுனியில் தள்ளிக் கொண்டு சென்றான். “இயற்கையாகவே, அதிகம் தின்றதால் மிகப் பருத்துப்போன அந்த மீன்கள் அந்த ஓட்டை வழியாக வெளியேற முடிவதில்லை. கதவில் பொருந்த முடியாது போகிறது.”

“ரொம்ப தூரம் வேண்டாம்” என்றாள் ஸிபில். “அவற்றுக்கு என்ன நிகழும்?”

“யாருக்கு என்ன நிகழும்?”

“பனானா ஃபிஷ்களுக்கு”

“ஓ…அதிகமான வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு ஓட்டையில் இருந்து வெளியேற முடியாத அந்த மீன்கள் பற்றிக் கேட்கிறாயா?”

“ஆம்.” என்றாள் ஸிபில்.

“நல்லது, அதை உனக்குச் சொல்ல விருப்பமில்லை ஸிபில். அவை இறந்துவிடும்.”

“ஏன்?” என்று  கேட்டாள் ஸிபில்.

“அவற்றுக்கு வாழைப்பழக் காய்ச்சல் கண்டுவிடும். அது ஒரு பயங்கரமான நோய்.”

“இங்கே ஒரு அலை வருது” என்று நடுங்கியபடியே கூறினாள் ஸிபில்.

“நாம் அதைக் கண்டு கொள்ள வேண்டாம். அதை அடக்கி விடுவோம்.” என்றான் அந்த இளைஞன். அவன் ஸிபிலின் கணுக்கால்களைப் பிடித்து அழுத்தி முன்னே தள்ளினான். மிதவை அலையின் மேலே ஏறிவிழுந்தது. ஸிபிலின் பொன்னிறக் கூந்தல் நனைந்தாலும் அவளது கூச்சல் ஆனந்தம் கலந்ததாக இருந்தது.

மிதவை அமைதியடைந்ததும் தனது கண்களின் மீது நனைந்து கிடந்த கற்றையான கூந்தலை ஒதுக்கிவிட்டு, “நான் ஒன்றைப் பார்த்தேன்” என்றாள்.

“என்ன பார்த்தாய், அன்பே?”

“பனானா ஃபிஷ்.”

“அடக் கடவுளே, அதன் வாயில் ஏதாவது வாழைப்பழம் இருந்ததா?”

“ஆமாம், ஆறு” என்றாள் ஸிபில்.

உடனே அந்த இளைஞன் மிதவையில் நீட்டியிருந்த ஸிபிலின் நனைந்த காலைப் பிடித்து இழுத்து அதன் வளைவில் முத்தமிட்டான்.

காலுக்குச் சொந்தக்காரி திரும்பிப் பார்த்து, “ஏய்..” என்றாள்.

“நாம் இப்போது போய்க் கொண்டிருக்கிறோம். உனக்குப் போதுமா?”

“வேண்டாம்!”

“மன்னித்துக் கொள்” என்று கூறிவிட்டு, ஸிபில் கீழே இறங்கும் வரை மிதவையைக் கரையை நோக்கித் தள்ளிச் சென்றான். பிறகு அதைத் தன் கைகளில் எடுத்துச் சென்றான்.

“குட்பை” என்று கூறிவிட்டு வருத்தம் ஏதும் இல்லாமல் விடுதியை நோக்கி ஓடினாள் ஸிபில்.

அந்த இளைஞன் தனது குளியலங்கியை அணிந்து கயிற்றால் இறுகிக் கட்டிக் கொண்டு துவாலையை அதன் பாக்கெட்டில் திணித்தான். நனைந்து கிடந்த தனது மிதவையை எடுத்து அக்குளில் வைத்துக் கொண்டான். பிறகு மென்மையான சுடுமணலில் விடுதியை நோக்கி மெதுவாக நடந்தான்.

குளித்துவிட்டு வருபவர்களுக்காக விடுதி நிர்வாகம் ஏற்படுத்தி இருந்த தனிப் பாதை வழியில் மூக்கில் பூசுதைலம் போட்டிருந்த ஒரு பெண் அந்த இளைஞனுடன் லிஃப்டில் ஏறினாள்.

லிஃப்ட் மேலே செல்லும்போது, “நீங்கள் என் பாதங்களை நோக்குவதைப் பார்க்கிறேன்” என்றான்.

“மன்னிக்கவும், என்ன சொன்னீங்க?” என்றான் அப்பெண்.

“நீங்கள் என் பாதங்களை நோக்குவதை நான் பார்த்தேன் என்று சொன்னேன்.”

“மன்னிக்கவும். நான் தரையைத் தான் பார்த்தேன்” என்று கூறிவிட்டு லிஃப்டின் கதவைப் பார்த்து திரும்பினாள் அப்பெண்.

“என் பாதங்களைப் பார்க்க வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், ஆனா பதுங்கிப் பார்க்காதீங்க” என்றான் இளைஞன்.

லிஃப்டை இயக்கும் பணிப் பெண்ணிடம், “தயவு செய்து என்னை செல்ல விடுங்கள்” என்றாள் அப்பெண்.

லிஃப்ட் நின்றதும் அந்தப் பெண் திரும்பிப் பார்க்காமல் இறங்கிச் சென்றாள்.

“எனக்கு இரண்டு சாதாரண கால்கள்தான் உள்ளன. ஏன் அவற்றை ஒவ்வொருவரும் உற்று நோக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை” என்றான் அந்த இளைஞன். “ஐந்தாவது மாடியில் நிறுத்துங்கள்” என்று கூறிவிட்டு தனது பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்தான்.

அவன் லிஃப்டில் இருந்து இறங்கி, வரவேற்பறையில் நடந்து சென்று, அறை 507-க்குள் சென்றான். அந்த அறையில் கன்றின் தோலாலான புதிய துணிப்பெட்டி மற்றும் நகப்பூச்சு நீக்கும் திரவம் ஆகியவற்றின் நெடி வீசியது.

அங்கிருந்த  இரட்டைப் படுக்கை ஒன்றில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை நொடிப் பொழுது அவன் பார்த்தான். பிறகு துணிப்பெட்டி ஒன்றின் அருகே சென்று, அதைத் திறந்து, அடுக்கி வைக்கப்பட்ட துணிகளுக்கு கீழே இருந்த 7.65 தானியங்கி ஆர்ட்ஜீஸ் துப்பாக்கியை எடுத்தான். பிறகு தோட்டாக் கூண்டை வெளியே எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் அதில் செருகினான். துப்பாக்கி காடியை இழுத்து விட்டான். பின்னர் எழுந்து சென்று இரட்டைப் படுக்கையில் காலியாக இருந்த ஒன்றில் அமர்ந்து, அந்தப் பெண்ணை நோக்கி, துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்து, தனது வலது நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொண்டான்.

* Seymour Glass என்ற பெயரைத்தான் விளையாட்டுத்தனமாக See more glass? என்று கேட்கிறாள் அச்சிறுமி.- (மொ-ர்)        

** Banana Fish என்ற சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல் தெரியவில்லை. அப்படி ஒரு மீன் இருப்பதாகவும் தெரியவில்லை.  இது ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது எதைக் குறிக்கிறது என்பது வாசகர்களின் புரிதலுக்கே விடப்படுகிறது. அதனால் ஆங்கிலச் சொல்லே எடுத்தாளப்பட்டுள்ளது.- (மொ-ர்)

 

ஜே.டி.சாலிங்ஜர்

தமிழில்: க. ரகுநாதன்


ஜெரோம் டேவிட் சாலிஞ்சர் (1919-2010): 1951ல் வெளியான The Catcher in the Rye நாவலின்
மூலம் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர்.
பள்ளிப் பருவத்தில் இருந்தே சிறுகதைகளை எழுதியுள்ளார். விமர்சன ரீதியாக புகழ் பெற்ற A
Perfect Day for Bananafish என்ற அவரது சிறுகதை 1948ல் நியூயார்க்கர் இதழில் வெளியானது.
The Cathcer in the Rye பதின்ம வயதினரின் தனிமை, வலி ஆகியவற்றை மையமாகக் கொண்ட
நாவல். A Perfect Day for Bananafish சிறுகதையும் இதே தளத்தில் அமைந்த கதை தான். 1946ல்
Harper’s Magazine இதழுக்கு அளித்த குறிப்பு ஒன்றில் “நான் எப்போதும் மிக இளவயதினர்
பற்றியே எழுதுகிறேன்” என்று சொல்வதில் இருந்தே அவருடைய எழுத்தின் வகைமை பற்றி
அறியலாம். Nine Stories (1953), Franny and Zooey (1961), Raise High the Roof Beam,
Carpenters and Seymour: An Introduction (1963) ஆகிய படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
வாழ்வின் இறுதி வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். புகழை விரும்பாதவர். 1961
செப்டம்பரில் Time இதழ் சாலிஞ்சரை அட்டைப் படத்தில் வெளியிட்டு பெருமைப்படுத்தியது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.