சுற்றுவட்டாரத்திலும் வெகு தொலைவிலும்கூட ஒக்யொகுல் சிறிய பனிப்பாறை அல்ல. ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்கவிக்-இன் சுற்றுப்புறங்களில் இருந்தும், சுற்றுச் சாலையின் நீண்ட பகுதிகளில் இருந்தும் உங்களால் காண அதைக் காணமுடியும்; அல்லது உங்கள் கவனத்தைப் பெறும். பூமியின் மையத்துக்குச் செல்லும் சுரங்கப்பாதையை ஜூல்ஸ் வெர்ன் கண்டுபிடித்த இடமும், எரிமலைக்கான மிகச் சரியான கூம்பையும் பெற்று ஒக்யொகுலின் அருகில் அமைந்திருக்கும் ஸ்வைனஃபெஸ்யொகுலின் அழகையோ, “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொலைக்காட்சித் தொடரின் பின்னணியில் இடம்பெற்ற ஸ்வைனஃபெஸ்யொகுலின் அசாதாரண நீலத்தன்மையை ஒக்யொகுல் கொண்டிருக்கவில்லை. ஐஸ்லாந்து முழுவதும் அதன் நிலப்பரப்பில் 11 சதவீதத்துக்குப் பரவியிருக்கும் 300 அல்லது அதற்கு மேற்பட்ட பனிப்பாறைகளுக்கு மத்தியில் இது எளிதில் புறக்கணிக்கப்படும். அது பள்ளத்தாக்கின் மேல்புறம் தாழ்வாக அமைந்து வெற்றிடமாக இருப்பதற்கு உதவுவதோடு, கேடய எரிமலையின் தட்டையான உச்சியின் குறுக்காக வெள்ளைத் திரைச்சீலைப் போல் அமைந்திருப்பதால் ‘ஒகே’ என அழைக்கப்பட்டது. இதிலிருந்து அதன் முழு பெயரைப் பெற்றுக் கொண்டது. ஒக்யொகுல் – ‘நுகத்தடி பனிப்பாறை’ (the yoke glacier). அது சுருக்கமாக “ஒகே” என வழங்கப்படலாயிற்று.
மனிதன் ஒருவன் குதிரையில் ஐஸ்லாந்தைக் கடந்து செல்லும்போதுதான், ஐஸ்லாந்திய சாகச எழுத்தாளர்கள் ஓகே-வை ஒரே ஒருமுறை கவனித்தனர். அப்போது ஆகாயம் ‘சித்திரக்குள்ளர்களின் தலைகவசம்’ (the dwarf’s helmet) என்றும், பூமி ‘ஓடினின் மனைவி’ (Odin’s bride) என்றும் அதன் பின்புறம் கிடந்த பெண் சடலத்துடன் ஒப்பிடப்பட்டது. ஓக்யொகுல் மலையில் கச்சிதமாகத் தொடங்கிய பனிப்பொழிவு, அதன் மார்பகங்களுக்கு வெண்மையைக் கொடுத்தது. அவள் எப்படி அங்கு வந்து படுத்துக்கொண்டாள் என்பது மர்மம்தான்; கதை அதோடு மறைந்துவிட்டது. இந்த மலை வித்தியாசமான பெயர் மற்றும் தோற்றத்தோடு இருந்தாலும் ’ஓகே’ என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம் ஐஸ்லாந்தினருக்குச் சிரிப்பை உண்டாக்கும்.
பனிப்பாறை சுமையான ஒன்றாகவோ, இறந்த எரிமலை நுகத்தடியைக் கொண்டிருப்பதாலோ இந்த விசித்திரமான பெயர் ‘சுமை’ (burden) என்ற பொருளையும் வழங்கியது. இந்த நிலையில், சுமை வளரவே, அதன் எடையும் ஆழமும் நூற்றாண்டுகளாக ஒவ்வொரு கால பனிப்பொழிவிலும் அதிகரித்துவந்தது.
நோர்ஸ் பிரபஞ்சவியலில் உலகின் தொடக்கத்தில் இருந்த உறைந்த நதிகளைப் போல், சுமார் 40 அல்லது 50 மீட்டர் ஆழத்தில், நுண்நோக்கி மூலம் காணமுடிகின்ற அடர்த்தியான மர வளையங்களைப் போல் அதன் பனி பரவியிருந்தது, பிறகு அது உயிர்ப்புள்ள, இயக்கமுள்ள ஒரு நதியானது. அது ஆண்டுக்கு அரை மீட்டர் என்ற அளவில், பாறைகளைச் சுமந்துகொண்டு மலையை நோக்கி மெதுவாகத் தவழத் தொடங்கியது. அது கிளைகளைப் பரப்பியது. ஓகே’வின் முகப்பு கூர்மையாக செதுக்கும் அளவிற்குப் பெரிதாகவே இல்லையென்றாலும், ஐஸ்லாந்தின் ஒவ்வொரு இயற்கையான நிலங்களும் பெரியளவிலான கதையும் வரலாற்று அம்சமும் கொண்டுள்ளன. இதுவும் வரலாற்றுச் சாட்சியமாக உள்ளது.
சமயங்களில் இது அச்சமூட்டக்கூடிய ஒரு துணையாகவே இருந்தது. வெப்பமான வானிலையின்போது ஆழமாக நீர் உருகியது, பால்வெண்மைகூடிய தேய்ந்த பாறைகள் மேலும் தேய்ந்தன, வயல்வெளிகளில் வெள்ளம் சூழ்ந்தது. கடுமை குளிர்காலத்துக்குப் பின் புல்வெளிகளையும் விழுங்கிக் கொண்டது. நீலம் தோய்ந்த பனிப்பாறையின் கீழ் நூறு அடிக்கு விரிசல் ஏற்பட்டதால் நடந்து செல்வதும் சிரமமானது. என்றபோதிலும், இந்த மலை வழக்கமான நண்பனாகவே இருந்தது. ஒரு மாலைப் பொழுதில் மேற்கு திசையில் மின்னிய சிவப்பு விளக்கு நல்ல வானிலைக்கான சமிக்ஞையாக இருந்தது. அதேபோல், இந்தப் பனிப்பாறை வித்தியாசமான வாசனையுடன் வசந்த காலம் வந்ததென்று மக்களுக்குத் தெரிவிக்கும். சிலர் கடினமான பாறைகளின் மீது மோதிக்கொள்ளும்போது, இந்த மலை பேசுவது போல் குரலைக் கற்பனை செய்து கொண்டனர்.
இது தண்ணீரைக் கட்டுப்படுத்தி உள்ளூர் நீரோடைகளுக்கும், உள்ளூர் மக்களின் பயன்பாட்டுக்கும் அளிக்கிறது. இந்த நீர் மிகக் குளிர்ச்சியாகவும், தூய்மையாகவும், பழமையாகவும் இருந்தது. ஐஸ்லாந்துகாரர்கள் ஓகே’வை கவனிக்காமல் போகலாம். ஆனால் இந்த மலையின் நீரைத் திருப்தியோடு பருகியவர்கள், அதன் சுவையை நினைவில் கொள்வார்கள்.
இந்த மலையில் சூழ்ந்திருக்கும் பனியின் பரப்பளவு 1,600 ஏக்கர் அல்லது 6.2 சதுர மைல் என்று 1890-ஆம் ஆண்டு புவியியலாளர்கள் மதிப்பீடு செய்தனர். (1901-ஆம் ஆண்டின் வரைபடம் ஒன்றில் இன்னும் தொலைவாக 3,800 ஏக்கர் பரவி இருந்ததாக உள்ளது.) அது 20-ஆம் நூற்றாண்டில் நிதானமாகவும் அமைதியாகவும் குறைந்தது. அதேபோல் 1945-இல் 500 ஏக்கர் மட்டுமே உள்ளடக்கியது, 1978-இல் 300 ஏக்கரும், 2012-இல் 70 எனவும் சுருங்கியது. அடுத்த ஆண்டு வானிலை ஆய்வு மையத்தின் பனிப்பாறை நிபுணரான ஓடூர் சிகுரோஸன், அவரது “நல்ல நண்பரை”க் காணவந்தார். ஆனால் ஓகே தன்னைத் தக்கவைத்துக் கொள்வதைவிட வேகமாக உருகிக் கொண்டிருப்பதை வெளிப்படையாக கண்டுபிடித்தார். இது நீண்ட காலம் இருப்பது கடினம் எனவும், இந்தப் பனிக்கட்டிகள் மிகவும் மெல்லியதாகிவிட்டன என்றும் தெரிவித்தார். இந்த மலை இறந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் சிகுரோஸன் “இது மனிதர்களால் ஏற்பட்ட அதீத கோடை வெப்பமே இதற்குக் காரணம்” என்று பதிவுசெய்தார்.
ஐஸ்லாந்தில் உள்ளவர்கள் அல்லது வேறெங்கும் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இதைக் கவனித்ததைப் போல் தெரியவில்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் பனிச்சருக்கு வாகன ஓட்டிகளையும் ஓகே சோர்வடையச் செய்ததில்லை. ஓகே மேலும் பனிச் சகதியாகவும் திட்டுத்திட்டாக தேங்கிய ஏரியாகவும் சுருங்கிய போதும் அதற்கான கூக்குரல்கள் எழவில்லை. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ரைஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த டோமினிக் போயர், சைமன் ஹோவ் என்ற இரண்டு மானுடவியலாளர்கள் 2018-ஆம் ஆண்டு இயக்கிய “நாட் ஓகே” என்னும் ஆவணப்படத்தில் இதுகுறித்து சமிக்ஞை விடுத்தனர். ஓகே நினைவுக் கூடலின்போது எழுத்தாளர்கள், அரசியலர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளும், வெண்மையும் நீலமும் கொண்டு பளபளக்கும் பனிப்பாறை, இந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து இல்லாமல் போனது என்றனர்.
ஐஸ்லாந்து பிரதமர் உட்பட மொத்தம் 100 பேர், நிலவின் கறுப்பு மற்றும் பழுப்பு நிறத்தை ஒத்த நிலப்பரப்பில் இரண்டு மணிநேரம் கடினமாக பாதையில் கை, கால்களைப் பயன்படுத்தி ஏறினர். அது கோடையின் பிற்பகுதி என்றபோதிலும் குளிர் அங்கியும் குல்லாவும் அணிந்திருந்தனர். அவர்களுக்குச் சற்று உறைப்பனி காற்றும் தேவைப்பட்டது. அப்போது ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர்,
ஓகே, சுமை நிறைந்த பனிப்பாறையே
அறியாத மனிதர்களின் மூலம் நேர்ந்த, மோசமான
செயல்பாடுளால், இந்த துர்சம்பவம் நிகழ்ந்தது.
லாபமும் தார்மீகமும் எப்படி ஒன்றாக கைக்கொள்ள முடியும்?
என்ற கவிதையை வாசித்தார். மேலும் பள்ளிக் குழந்தைகள் அங்கிருந்த வட்டப் பாறையில் வெண்கலத் தகடைப் பதித்தனர். இது “எதிர்காலத்துக்கான கடிதம்” என்று ஓகே’வின் மரணத்தைப் பதிவு செய்தது. இதேபோல் அடுத்த 200 ஆண்டுகளில் ஐஸ்லாந்தின் மற்ற பனிப்பாறைகளும் ஓகே’வைப் பின்பற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது: “என்ன நடக்கவிருக்கிறது, செய்ய வேண்டியது என்னவென்று தெரியும். அதேபோல் நாங்கள் செய்தது என்னவென்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டது. “415ppm CO2” என்ற மே மாதம் பதிவுசெய்யப்பட்ட வளிமண்டலத்தின் கரியமில வாயுவின் அளவு அதன் இறுதியில் இருந்தது. இது மனிதர்களின் செயல்பாட்டுக்கு ஒரு நினைவுச் சின்னமாக நின்றது.
இந்த மலையில் இருந்து கீழே இறங்கிய பலரும் உடைந்து சிதறிய பனிப்பாறைத் துண்டுகளை இறுக்கமாக பற்றிக் கொண்டனர். பின் ஓக்யொகுல் பனிக்கட்டியை இறுதியாக ஒருமுறை நம்பிக்கையோடு சுவைத்தனர். ஆனால் அது குளிர்காலத்தின் பனிச் சக்கைகளாக இருந்ததோடு வேகமாகவும் மறைந்தது.
தி எகானமிஸ்ட் காலநிலைச் சிறப்பிதழில் வெளியான அஞ்சலிக் கட்டுரை.
தமிழில்: ச.ச.சிவசங்கர்