க்ரிட்டோ (அல்லது, நன்னடத்தைப் பற்றி) ப்ளேடோ

சாக்ரடீஸ்: என்ன க்ரிட்டோ இவ்வளவு சீக்கிரம் வந்துள்ளீர்? இது அதிகாலை இல்லையா?

Socrates

க்ரிட்டோ : ஆமாம், சாக்ரடீஸ்.

Crito

சாக்ரடீஸ்: மணி என்ன இருக்கும்?

க்ரிட்டோ: இது விடியற்காலை.

 சாக்ரடீஸ்: காவல்காரர் நீங்கள் சொல்வதைக் கேட்டு உங்களை உள்ளே அனுமதித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

க்ரிட்டோ: இப்போதெல்லாம் அவர் என்னுடன் நட்போடு பழகுகிறார் சாக்ரடீஸ். நான் இங்கு அடிக்கடி வருகிறேன், மற்றும் அவருக்கு  கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டேன்.

 சாக்ரடீஸ்: இப்பதான் வந்தீங்களா? இல்ல, வந்து அதிக நேரம் ஆகிவிட்டதா?

க்ரிட்டோ: நான் முன்பே வந்துவிட்டேன் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: பிறகு அப்போதே என்னை எழுப்பாமல் ஏன் மெளனமாக இருந்தீர்கள்?

க்ரிட்டோ: இல்லை சாக்ரடீஸ். இந்த துக்கமும், தூக்கமின்மையும் இல்லாமல் இருப்பதுதான் என் விருப்பமெல்லாம். இவ்வளவு அமைதியான தூக்கத்தில் ஆழ்ந்திருந்த உங்களை பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. உங்கள் நேரத்தை நீங்கள் இப்படி நிம்மதியுடன்  செலவழிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் நான் உங்களை எழுப்பவில்லை.  நீங்கள் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கைமுறையைப் பற்றி   முன்பு நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. தற்போதைய இன்னல்களை மிக எளிதாகவும், சுலபமாகவும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது, இப்போது மீண்டும் அதைப் பற்றி சிந்திக்கிறேன். 

சாக்ரடீஸ்: நான் இறக்கப் போவதை நினைத்து மனம் கலங்குவது என் வயதிற்கு ஏற்றதல்ல, க்ரிட்டோ.

க்ரிட்டோ: உங்கள் வயதிலுள்ள மற்றவர்களும் இப்படியான இன்னல்களில் மாட்டிக்கொள்வதுண்டு. ஆனால் அவர்களின் வயது, தலைவிதியின் மேல் இருக்கும் அவர்களின் வன்மத்தை தடுப்பதில்லை.

சாக்ரடீஸ்: அது சரி. எதற்காக அதிகாலை வேளையில் இங்கு வந்துளீர்கள்?

க்ரிட்டோ: நான் ஒரு கெட்ட செய்தியை கொண்டு வந்திருக்கிறேன் சாக்ரடீஸ். உங்களுக்கு இல்லை என்றாலும், எனக்கும் மற்றும் உங்கள் எல்லா நண்பர்களுக்கும் இது ஒரு கெட்ட, கடும் வேதனையளிக்கக்கூடிய ஒரு செய்தி. அதிலும் எனக்குப் பொறுக்கமுடியாத வேதனையை கொடுக்கக்கூடிய செய்திகளில் ஒன்றாகவே இது தெரிகிறது.

 சாக்ரடீஸ்: என்ன செய்தி அது? டீலோஸ் தீவிலிருந்து கப்பல் திரும்பி வந்துவிட்டதா? எதன் வருகைக்குப் பின் என் மரணம் நிச்சயமோ, அந்த கப்பல் வந்துவிட்டதா?

க்ரிட்டோ: அது இன்னும் வரவில்லை. ஆனால் சிலர் கொண்டுவந்த செய்தியின்படி, எனக்குத் தெரிந்து கப்பல் இன்றே திரும்பிவிடும். அப்படியென்றால் அது நிச்சயம் இன்றே வந்துவிடும். மற்றும் இது உண்மையென்றால் உங்கள் ஆயுள் நாளையே முடிவுக்கு வரும்.

சாக்ரடீஸ்: எல்லாம் நன்மைக்கே இருக்ககூடும் க்ரிட்டோ. அதுவே கடவுளின் விருப்பமாக இருந்தால், நடப்பது நடக்கட்டும். ஆனால், கப்பல் இன்றே வரும் என்று எனக்குத் தோன்றவில்லை.

க்ரிட்டோ: அதற்கு என்ன ஆதாரம், சாக்ரடீஸ்?

சாக்ரடீஸ்: சொல்கிறேன். கப்பல் திரும்பிய அடுத்த நாள்தான் எனக்கு மரண தண்டனை, இல்லையா?

க்ரிட்டோ: அதிகாரிகள் அப்படித்தான் சொல்கிறார்கள்.

சாக்ரடீஸ்: அப்படியென்றால் எனக்குத் தெரிந்து கப்பல் இன்றல்ல, நாளைதான் திரும்பும். இதற்கு சாட்சியாக சில மணி நேரத்திற்கு முன்பாக இரவில் நான் கண்ட கனவு ஒன்றைத்தான் எடுத்துக்கொள்கிறேன். நீங்கள் என்னை சரியான நேரத்தில்தான் எழுப்பாமல் தூங்கவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

க்ரிட்டோ: உங்களுக்கு வந்த கனவு என்ன, சாக்ரடீஸ்?

சாக்ரடீஸ்: வெள்ளை ஆடை அணிந்த ஒரு அழகான மற்றும் நயமுள்ள பெண் என்னை நோக்கி வருவதாகக் கண்டேன். அவள் என்னிடம் சொன்னாள்: “சாக்ரடீஸ், இன்றிலிருந்து மூன்றாவது நாள், செழுமையான மற்றும் நிலையான உன் வீட்டிற்கே சென்றடைவாய்!”

க்ரிட்டோ: விசித்திரமான ஒரு கனவு, சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: ஆனால் அதன் பொருள் எனக்கு தெளிவாகத் தெரிகிறது, க்ரிட்டோ.

க்ரிட்டோ: மிகத் தெளிவாக இருப்பதுபோல் தெரிகிறது, சாக்ரடீஸ். ஆனால் நான் இப்போது சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நீங்கள் இறந்தால், அது எனக்கு ஒரு சிறு துயரமாக மட்டும் இருக்காது. எங்கு தேடினாலும் கிடைக்காத இது போன்ற ஒரு நண்பரை இழப்பேன் என்பது ஒன்று. இதைத் தவிர, நினைத்திருந்தால் பணத்தை செலவழித்து காப்பாற்றியிருக்கலாம், ஆனாலும் அதைச் செய்ய விருப்பப்படவில்லை என்றுதான் உங்களையும் என்னையும் தெரியாதவர்கள் என்னைப் பற்றி நினைப்பார்கள்.  நட்பை விட பணத்தை பெரிதென்று  மதிப்பதாக நினைக்கப்படும்போது  வரும் மானக்கேட்டை விட பெரிய அவமானம் வேறெதுவும் கிடையாது. நான் விரும்பியும் நீங்கள்தான் சிறையைவிட்டு வர விரும்பவில்லை என்பதை பெரும்பான்மையான மக்கள் நம்பமாட்டார்கள். 

சாக்ரடீஸ்:  க்ரிட்டோ, நாம் எதற்கு பெரும்பான்மையினர் நினைப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? அறிவுள்ள, சிந்திக்கக்கூடிய மக்களிடம் மட்டுமே ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நம்புவார்கள், எது நடக்க வேண்டுமோ அதுவே நடந்தது, என்று.

 க்ரிட்டோ: அப்படி இல்லை சாக்ரடீஸ். பெரும்பான்மையினரின் கருத்துக்களுக்கு ஒருவர் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். உங்களின் தற்போதைய நிலைமை தெளிவுபடுத்துவதே இதைத்தான். பெரும்பான்மையினர் ஒருவன் மீது பொய்ப் பழி சுமத்தி மிக எளிதாகவே அவனுக்கு மிகக் கொடிய தீங்கை ஏற்படுத்த முடியும், என்பதுதான் அது.

 சாக்ரடீஸ்: பெரும்பான்மையினரால் மிகக் கொடிய தீங்கை ஏற்படுத்த முடியுமென்றால், அவர்களால் மிகச் சிறந்த நன்மைகளையும் செய்ய முடியும், இல்லையா? அப்படி இருந்தால் நல்லதுதானே. ஆனால், அவர்களால் இரண்டையுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை. பெரும்பான்மையினரால் ஒருவனை ஞானியாக்கவும் முடியாது, முட்டாளாக்கவும் முடியாது. திட்டமற்ற, தற்செயலான நிகழ்வுகளை மட்டுமே அவர்களால் ஏற்படுத்த முடியும்.

க்ரிட்டோ: இருக்கலாம், ஆனால் ஒன்றைச் சொல்லுங்கள் சாக்ரடீஸ். இங்கிருந்து நீங்கள் தப்பித்தால், நானும் உங்கள் மற்ற நண்பர்களும் காட்டிக்கொடுக்கப்பட்டு பிரச்சனையில் சிக்கிக்கொள்வோம் என்று நினைக்கிறீர்களா? அதாவது, கட்டாயப்படுத்தப்பட்டு எங்கள் சொத்தை இழப்போம் என்றோ, அல்லது ஒரு பெருந்தொகையை அபராதமாக கட்டுவோம் என்றோ, அல்லது வேறு தண்டனையால் அவதிப்படுவோம் என்றோ அஞ்சுகிறீர்களா? அப்படி எதாவது பயம் இருந்தால், அதை மறந்துவிடுங்கள். உங்களை காப்பாற்ற எங்களுடைய இந்த துணிச்சல் நியாயமான ஒன்று. தேவைப்பட்டால் இதை விட அதிக இடர்பாடுகளையும் உங்களுக்காக நாங்கள் சந்திப்போம். அதனால் நான் சொல்வதைக் கேளுங்கள், வேறெதையும் செய்ய வேண்டாம்.

சாக்ரடீஸ்: நீங்கள் சொன்னதெல்லாம் என் மனதில் இருக்கிறது க்ரிட்டோ. அதற்கு மேலும் இருக்கிறது.

க்ரிட்டோ: அந்த பயமே வேண்டாம் சாக்ரடீஸ். உங்களைக் காப்பாற்றி இங்கிருந்து வெளியே கொண்டு செல்ல அதிகளவு பணம் தேவைப்படாது. மேலும் காட்டிக்கொடுக்கக்கூடியவர்களின் விலை மலிவுதான் என்பது தெரியுமா உங்களுக்கு? அவர்களிடம் பேரம் பேச அதிகளவு பணம் தேவைப்படாது. என்னுடைய பணம் இருக்கிறது, அதுவே போதுமானது என்று எனக்குத் தெரியும். என் மேல் கொண்ட அன்பினால் நான் என் பணத்தை செலவழிக்கக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு தெரியாத சிலர் உங்களுக்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். தீப்ஸ்-ஐ சேர்ந்த சிம்மியாஸ் என்ற ஒருவன் இந்த காரணத்துக்காகவே போதுமான அளவு பணத்தைக் கொண்டு வந்திருக்கிறான். அவனைப் போல் பலர் உள்ளார்கள். அதனால் நான் சொல்வதைப் போல, இந்த தேவையில்லாத பயத்தால்  உங்களை காப்பாற்றிக் கொள்ள நீங்கள் தயங்கக் கூடாது. மேலும், நீதிமன்றத்தில் நீங்கள் சொன்னவை, குறிப்பாக, ஏதன்ஸ் நகரை விட்டு நீங்கள் எங்கு செல்வீர்கள் மற்றும் என்ன செய்வீர்கள் என்று கேட்டதெல்லாம், உங்கள் மனதில் ஒரு கவலையாக இருக்கக்கூடாது. நீங்கள் செல்லப்போகும் பல இடங்களில் உங்களை சிறப்பாக  வரவேற்பார்கள்.  மற்றும் தெஸலி நகரத்தில் உங்களை மதித்து போற்றுவதற்கும், பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதற்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். அங்கு உங்களை யாரும் தொல்லை செய்யமாட்டார்கள். 

இதைத் தவிர சாக்ரடீஸ், நீங்கள் செய்வது நியாயம் என்று எனக்கு தோன்றவில்லை – காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றாலும் உயிரை வீணாக விட்டுக்கொடுப்பதையே இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.  மற்றும் உங்களை அழிக்க நினைக்கும் எதிரிகள் விரும்பும் இந்த விதியை, நீங்களே ஆர்வமுடன் துரிதப்படுத்துவது போல் தோன்றுகிறது. மேலும், உங்கள் பிள்ளைகளை நன்கு வளர்த்து படிக்க வைக்காமல் இப்படி விட்டுச் செல்வது, நீங்கள் அவர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் ஆகும். அவர்களுடைய தலைவிதி என்னவாகும் என்று நீங்கள் துளியும் கவலைப்படாமல் இருப்பதுபோல் தெரிகிறது. அனாதைகள் வழக்கமாக எப்படி நடத்தப்படுவார்களோ, அதே  விதியைத்தான் அவர்களும் அநேகமாக அனுபவிப்பார்கள். ஒன்று, குழந்தைகளை பெற்றெடுக்காமலே  இருக்க வேண்டும், அல்லது, கடைசிவரை அவர்களுக்காக உழைத்து அவர்களின் வளர்ச்சிக்காகவும் படிப்புக்காகவும் பாடுபடவேண்டும். இதையெல்லாம் விட்டுவிட்டு நீங்கள் மிகச் சுலபமான பாதையை தேர்ந்தெடுப்பது போலத் தோன்றுகிறது. அறமும், துணிவும் உள்ளவன் தேர்ந்தெடுக்கும் நல்வழியைத்தான் ஒருவன் எப்போதுமே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் வாழ்நாள் முழுவதும் நன்னெறியைப் பற்றி அக்கறை கொண்டு, சிந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இதைச் செய்தே ஆகவேண்டும்.

உங்களையும் மற்றும் உங்கள் நண்பர்களாகிய எங்களையும் பற்றி நினைக்கும்போது வெட்கப்படுகிறேன். உங்களுக்கு நடந்தவையெல்லாம் எங்கள் கோழைத்தனத்தால்தான் நடந்தது என்று நினைக்கப்படுமோ என்ற பயம் இருக்கிறது. உங்கள் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது, வழக்கு நடந்த விதம், மற்றும் உங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த அபத்தமான முடிவு  – இவை அனைத்தும் எங்கள் கோழைத்தனத்தாலும், ஆண்மையற்றத்தனத்தாலும்தான் கைமீறி போய்விட்டன என்று மக்களால் நினைக்கப்படும். நாங்கள் ஏதோ ஒரு சிறிய விதத்தில் பயனுள்ளவர்களாக இருந்திருந்தால்கூட உங்களை காப்பாற்றியிருக்கலாம்  என்றே நினைக்கப்படும்.  இதையெல்லாம் சிந்தித்து, உங்களுக்கு நடக்கப்போவது உங்களுக்கான கேடு மட்டுமல்ல, உங்களுக்கும் எங்களுக்குமான வெட்கக்கேடு என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களையே நீங்கள் கேட்டு பாருங்கள் – இல்லை, ஆலோசனைக்கான நேரமெல்லாம் முடிந்துவிட்டது! இப்போதே நீங்கள் முடிவு எடுத்தாக வேண்டும், இதற்கு மேல் வாய்ப்புக்கள் வராது. தாமதப்படுத்தினால்,  செய்ய வேண்டியதை செய்ய முடியாது. நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள் சாக்ரடீஸ், மறுக்காதீர்கள்.

சாக்ரடீஸ்: அன்பு நண்பரே, உங்களுடைய இந்த ஆர்வத்திற்கு சரியான இலக்கு இருந்தால், அது மதிக்கத்தக்கது. இல்லையென்றால், உங்களுடைய அளவுக்கதிகமான இந்த முனைப்பை கையாள்வது கடினமாகிவிடும். அதனால்தான் நாம் இதை செய்யலாமா கூடாதா என்பதை ஆய்ந்து பார்க்க வேண்டும், இப்போது மட்டுமல்ல எப்போதுமே. நன்கு ஆராய்ந்து வரும் வாதத்தில் எது சிறந்ததோ அதைத் தவிர வேறு எதையும் நான் காதுகொடுத்துக் கேட்கமாட்டேன். இந்த தலைவிதி என்னை வந்தடைந்ததால் மட்டுமே, நான் முன்பு பயன்படுத்திய  வாதங்களை புறந்தள்ள முடியாது. என்னை பொறுத்தவரையில், அது எதுவும் மாறவில்லை.  நான் மதித்த கொள்கைகளும், கருத்துக்களும் முன்புபோல் என் மரியாதைக்கு உகந்ததாகவே இருக்கின்றன. அதனால் அவைகளைவிட சிறந்த கருத்துக்களும், வாதங்களும் உங்களிடம் இப்போது இல்லையென்றால், நான் நீங்கள் சொல்வதை ஏற்கமாட்டேன் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளை பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல, பெரும்பான்மையினர் நம்மை சிறை தண்டனை, மரண தண்டனை, சொத்துப் பறிமுதல் என்று அச்சுறுத்தினாலும், நாம் ஆராயப்படாத எந்த கருத்தையும் ஏற்கக்கூடாது. நம்மிடம் இருக்கும் இந்த விஷயத்தை எப்படி ஆராயவேண்டும் என்பதை சிந்திக்கலாம். முதலில், பெரும்பான்மையினரின் கருத்துக்களைப் பற்றி நீங்கள் சொன்ன வாதத்தை எடுத்துக்கொள்வோம். அதாவது,  ஒரு நிகழ்வில்  சில கருத்துக்களை மட்டுமே கவனத்தில் கொண்டு, பெரும்பாலான மற்ற கருத்துக்களை விட்டுவிடுவது சரியாகுமா? அல்லது, அப்படி நினைப்பது எனக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்பு சரி என்றும், இப்போது அது வெறும் வாதத்திற்காக சொல்லப்பட்ட நாடகப் பேச்சு அல்லது பொருளற்ற சொற்கள்  என்றும் உணர்ந்து விட்டுவிடுவது சரியா? இந்த வாதம் இந்தத் தருணத்தில் வேறு விதமாக தெரிகிறதா, அல்லது அது நிலையான ஒன்றா? நாம் இதை நம்புவதா, கை விடுவதா? – இதையெல்லாம் பற்றி உங்களுடன் சேர்ந்து ஆராய நான் ஆர்வமுடன் இருக்கிறேன், க்ரிட்டோ.   நான் இப்போது சொல்வதைப் போல, சிலரின் கருத்துக்களை மட்டும் பெரிதாக மதித்து மற்ற பெரும்பான்மையினரின்  கருத்துக்களை மதிக்க வேண்டாம் என்றுதான் சான்றோர்  சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள், இந்த கூற்று உங்களுக்கு சரி என்று தோன்றுகிறதா? மற்றும் க்ரிட்டோ, நீங்கள் ஒன்றும் நாளைக்கே இறக்கப்போவதில்லை, அதற்கு சாத்தியக்கூறுகளும் இல்லை; எனவே நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் உங்களை வழி தவறிச் செல்ல வைக்காது. இப்போது சிந்தித்து சொல்லுங்கள்: மக்களின் எல்லா கருத்துக்களையும் மதிப்பதற்கு மாறாக சிலவற்றை மட்டும் மதித்து செயல்படுவதே  சரி என்ற கூற்று ஏற்புடையதா? அது போலவே, மக்கள் எல்லோருடைய கருத்துக்களையும்  மதிப்பதற்கு மாறாக சிலரின் கருத்துக்களை மட்டும் மதித்து செயல்படுவதே  சரி என்ற கூற்று ஏற்புடையதா? என்ன நினைக்கிறீர்கள்? சொல்லப்பட்ட கருத்து உண்மையா, இல்லையா?

க்ரிட்டோ: ஆமாம் சாக்ரடீஸ். உண்மைதான்.

சாக்ரடீஸ்: ஒருவர் நல்ல கருத்துக்களை மட்டும் மதிக்க வேண்டும், கெட்ட கருத்துக்களை அல்ல, சரிதானே?

க்ரிட்டோ: ஆமாம்.

சாக்ரடீஸ்: நல்ல கருத்துக்கள் ஞானமுள்ளவர்களிடம் இருப்பவை, கெட்ட கருத்துக்கள் முட்டாள்களிடம் இருப்பவை, சரியா?

க்ரிட்டோ: நிச்சயம்.

சாக்ரடீஸ்: அப்படியென்றால் சொல்லுங்கள், இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்: உடற்பயிற்சியில் முறையாக ஈடுபடும் ஒரு விளையாட்டு வீரர் எல்லோருடைய தனிப்பட்ட கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மற்றும் கண்டனங்களுக்கும், கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது ஒருவரின் கருத்துக்களை, அதாவது ஒரு மருத்துவரோ அல்லது பயிற்சியாளரோ சொல்வதை மட்டும் கேட்க வேண்டுமா?

 க்ரிட்டோ: தேர்ந்த ஒருவரின் கருத்துக்களை மட்டுமே கேட்க வேண்டும்.

சாக்ரடீஸ்: அப்படியென்றால் அவர் அந்தத் தேர்ந்த ஒருவரின் கண்டனத்தை கண்டு மட்டுமே பயந்து, மற்றும் அந்த ஒருவரின் பாராட்டை மட்டுமே ஏற்று செயல்பட வேண்டும். பெரும்பாலோரின் கருத்துக்களை கண்டுகொள்ள வேண்டாம், இல்லையா?

 க்ரிட்டோ: உறுதியாக.

சாக்ரடீஸ்: அவர் எப்படி உடற்பயிற்சி செய்வது, என்ன சாப்பிடுவது, என்ன குடிப்பது என்பதெல்லாம் அந்த குறிப்பிட்ட ஒருவர் – அதாவது பயிற்சியாளரோ அல்லது அதைப் பற்றி அறிந்தவரோ – சொல்வதுபோல் நடந்துகொள்ள வேண்டும். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு அல்ல, சரிதானே?

க்ரிட்டோ: ஆமாம், அப்படிதான்.

சாக்ரடீஸ்: நல்லது. அந்தத் தேர்ந்த ஒருவரை பின்பற்றாமல், அவர் கருத்தையும், பாராட்டையும் புறக்கணித்து, உடற்பயிற்சி பற்றியெல்லாம் அறிவே இல்லாத பெரும்பான்மையினரை மதித்தால், அந்த விளையாட்டு வீரருக்கு ஏதோ ஒரு விதத்தில் கெடுதல் வரும், இல்லையா?

க்ரிட்டோ: கண்டிப்பாக.

சாக்ரடீஸ்: என்ன கெடுதல் அது? அந்த கேடு எந்த வழியில் வரும்? அந்த வீரரின் எந்த பாகம் பாதிக்கப்படும்?

க்ரிட்டோ: நிச்சயமாக உடலைத்தான் அது சிதைக்கும். அவர் உடலுக்குத்தான் கேடு வரும்.

சாக்ரடீஸ்: சரியாக சொன்னீர்கள். மற்ற விஷயங்களை எடுத்துக் கொள்வோம், எல்லாவற்றையும் இங்குப் பட்டியல்  போட முடியாது என்றாலும். நியாயம் மற்றும் அநியாயம், அழகானவை மற்றும்

வெட்கத்திற்குரியவை நல்லவை மற்றும் கெட்டவை – இவைப் பற்றி சிந்திக்கும்போது  நாம் பெரும்பான்மையினரின் கருத்துக்களுக்கு கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது, இவைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்த ஒருவருக்கு பயந்து அவரின் கருத்துக்களை மட்டுமே மதிக்க வேண்டுமா? தேர்ந்த அந்த ஒருவர் காட்டும் வழியை நாம் பின்பற்றவில்லையென்றால், நியாயச் செயல்களால் மேம்படும் மற்றும் அநியாயச் செயல்களால் அழியும் ஒரு பாகத்தை நாம் கெடுத்து அழிக்கிறோம், என்கிறேன் நான். இதில் உண்மை இருக்கிறதா, இல்லையா?  

க்ரிட்டோ: இதில் கண்டிப்பாக உண்மை இருக்கிறது என்றே நினைக்கிறேன் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: மேலும் சொல்லுங்கள் க்ரிட்டோ. ஆரோக்கியத்தால் மேம்படும் நம் உடல், அறிவார்ந்த சிலரின் கருத்துக்களை பின்பற்றாததால் நோயுற்று கெடும். அப்படி அது சிதைந்தப்பின், நம் வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியானதாக இருக்குமா? அதாவது, உடல் கெட்டு மோசமான நிலையில் இருந்துகொண்டே வாழும் வாழ்க்கை மதிக்கத்தக்க, மென்மையான ஒன்றாக இருக்குமா?

க்ரிட்டோ: இல்லவே இல்லை.

சாக்ரடீஸ்: அதைப் போலவே, நியாயச் செயல்களை செய்வதால் மேம்படும் நம்முடைய ஒரு பாகம், அநியாயச் செயல்களால் கெடும். அப்படி அந்த பாகம் சிதைந்தால் நம் வாழ்க்கை வாழத் தகுதியானதாக இருக்குமா? அல்லது, நியாயம் மற்றும் அநியாயத்தால் பாதிக்கப்படும் அந்த பாகம் உடலைவிட தாழ்வான ஒன்றா?

 க்ரிட்டோ: நிச்சயமாக இல்லை.

சாக்ரடீஸ்: அது மதிப்புமிக்கது, இல்லையா?

க்ரிட்டோ: உடலைவிட மதிப்புடையது.

சாக்ரடீஸ்: அப்படியென்றால் பெரும்பான்மையினர் சொல்வதைப் பற்றி கவலைபடாமல், நியாயம் மற்றும் அநியாயத்தை பற்றி புரிதல் கொண்ட ஒருவர் சொல்வதை மட்டும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இது உண்மையென்றால், முதலில், நியாயம், அழகு, நல்லது மற்றும் இவைகளின் எதிர்த்தன்மைகளை பற்றி சிந்திக்கும்போது நாம் பெரும்பான்மையினரின் கருத்தை கவனிக்க வேண்டும் என்று நீங்கள் நம்பியது தவறு, இல்லையா? ஆனால் இந்த வாதத்தை எதிர்த்து இப்படி ஒருவர் சொல்லலாம்: “ஆனால் பெரும்பான்மை மக்களால் நமக்கு மரணத்தையே விதிக்க முடியும்” என்று.

 க்ரிட்டோ: அது சரிதானே சாக்ரடீஸ். நிச்சயம் ஒருவர் இதை சொல்லலாம்.

சாக்ரடீஸ்: இதுவரை விளக்கிய வாதம் இதற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் அன்பு நண்பரே. இப்போது சிந்தித்து சொல்லுங்கள்: மிக முக்கியமானதாக நாம் கருதவேண்டியது வாழ்வதை அல்ல, நன்றாக வாழ்வதை – இந்த கூற்று நிலையான எப்போதும் மாறாத ஒன்றா, இல்லையா?

க்ரிட்டோ:  நிலையான ஒன்று.

சாக்ரடீஸ்: மற்றும், நன்றாக வாழ்ந்த வாழ்க்கை, அழகாக வாழ்ந்த வாழ்க்கை, மற்றும் நியாயமாக வாழ்ந்த வாழ்க்கை – இவையெல்லாம் ஒன்றே என்பது உண்மைதானா?

க்ரிட்டோ: ஆமாம் சரிதான்.

சாக்ரடீஸ்: இதுவரை பேசியதில் நம் இருவருக்கும் உடன்பாடு இருக்கிறதென்றால், அடுத்து நாம் ஆராயவேண்டியது: “ஏதென்ஸ் மக்கள் என்னை குற்றத்திலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், நான் இங்கிருந்து தப்பிக்க முயற்சிப்பது நியாயமா?”, என்பதை. அது நியாயம்தான் என்று நமக்குத் தெரிந்தால், நாம் அதையே செய்ய முயற்சிப்போம். இல்லையென்றால், இந்த எண்ணத்தை கைவிடுவோம். பணத்தைப் பற்றி, நற்பெயரைப் பற்றி, பிள்ளைகள் வளர்வதைப் பற்றி நீங்கள் எழுப்பிய கேள்விகள், சிந்தனையில்லாமல் அடுத்தவர்களை எளிதாகக் கொல்லவோ, பிழைக்கவிடவோ செய்யும் பெரும்பான்மையினரின் பிரச்சனைகள். நமக்கோ, நம் வாதங்கள் நம்மை எங்கு இழுத்துச் செல்கின்றன என்பதைப் பார்ப்போம். நாம் சிந்திக்க வேண்டிய ஒரே விஷயம்: என்னை வெளியேறச் செய்பவர்களுக்கு பணமும் நன்றியும் கொடுத்து, இங்கிருந்து தப்பித்துச் செல்வது நற்செயல் ஆகுமா? அல்லது, இதையெல்லாம் செய்வது பெருந்தவறா? நாம் நியாயமற்ற செயலயே செய்கிறோம் என்று தோன்றினால், இந்தத் தவறை செய்யாமல் இருக்க வேண்டும். இது தவறுதான் என்றால், இங்கேயே கிடந்து இறப்பேனா அல்லது வேறு பெருந்துன்பத்தை அனுபவிப்பேனா, என்பதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்கக்கூடாது.

க்ரிட்டோ: சரி சாக்ரடீஸ். நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து பார்க்கலாம்.

சாக்ரடீஸ்: இந்த கேள்வியை இருவரும் சேர்ந்து ஆராய்வோம், அன்பு நண்பரே. நான் பேசும்போது மறுப்பு தெரிவிக்க எதாவது இருந்தால், உடனே சொல்லுங்கள், நான் கேட்பேன். மறுப்பதற்கு எதுவும் இல்லையென்றால், ஏதன்ஸ் மக்களை எதிர்த்து நான் வெளியேற வேண்டும் என்று மறுபடியும் பிடிவாதத்துடன் சொல்லாதீர்கள் க்ரிட்டோ. நான்  செயலில் இறங்குவதற்கு முன்பு உங்களை என் கருத்துக்களுக்கு இணங்க வைப்பதை முக்கியமானதாகக் கருதுகிறேன். உங்கள் விருப்பங்களுக்கு எதிராக மட்டுமே நான் எதையும் செய்யமாட்டேன் என்பதை நம்புங்கள். இந்த விசாரணையை நன்றாக தொடங்கியுள்ளோமா என்பதை சிந்தியுங்கள். மற்றும், நான் உங்களை கேட்கும்போது உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதை மட்டுமே பதிலாக சொல்லுங்கள்.

க்ரிட்டோ: முயற்சி செய்கிறேன் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: தெரிந்தே ஒரு தவறை ஒருவர் எப்போதுமே செய்யக்கூடாது,  என்று சொல்வது சரியா? அல்லது, குறிப்பான ஒரு விதத்தில் தவறு செய்வது சரி, ஆனால் வேறு விதங்களில் அப்படி செய்வது சரியல்ல, என்று சொல்லலாமா? நாம் முன்பொருமுறை ஒப்புக்கொண்டது போல, தவறு செய்வது எப்போதுமே நல்லதல்ல மற்றும் பாராட்டுக்குரியதல்ல என்று சொல்லலாமா? அல்லது, கடந்த சில நாட்களில், முன்பு ஒப்புக்கொண்டதெல்லாம் காற்றில் பறந்து போய்விட்டதா? சில தீவிர விவாதங்களில் ஈடுபடும்போது நாம் குழந்தைகளாக மாறுவதை, நம் இந்த வயதில் கவனிக்க தவறிவிட்டோமா? எல்லாவற்றிற்கும் மேலாக, முன்பு உண்மை என்று நினைத்து பேசியவை இப்போதும் உண்மையாகவே இருக்கிறதா? — அதாவது, தவறு செய்வது அல்லது அநியாயச் செயலில் ஈடுபடுவது, எல்லா விதத்திலும் தீங்கையும், அவமானத்தையும் மட்டுமே விளைவிக்கும். பெரும்பான்மையினர் இதை ஏற்றுக்கொண்டாலும், ஏற்கவில்லையென்றாலும், இது உண்மையே. மற்றும், நாம் இப்போது அனுபவிப்பதைவிட மோசமாக அவதிப்பட்டாலும், அல்லது இதைவிட கனிவாக நடத்தப்பட்டாலும்கூட, இந்த உண்மை மாறாதது. இப்படி சொல்லலாமா, இல்லையா?

க்ரிட்டோ: சொல்லலாம் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: எனவே, ஒருவர் எப்போதுமே தவறு செய்யக்கூடாது.

க்ரிட்டோ:  நிச்சயம் கூடாது.

சாக்ரடீஸ்: ஒருவர் எப்போதுமே தவறு செய்யக்கூடாது என்பதால்,  பெரும்பான்மையினர் நம்புவதைப் போல, ஒருவருக்கு தவறு இழைக்கப்பட்டாலும் அவர் கைமாறாக தவறை இழைக்ககூடாது.

க்ரிட்டோ: அப்படிதான் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: இப்போது சொல்லுங்கள் க்ரிட்டோ: ஒருவர் இன்னொருவருக்கு கெடுதல் செய்யலாமா, கூடாதா?

க்ரிட்டோ: எப்போதுமே செய்யக்கூடாது.

சாக்ரடீஸ்: அப்படியென்றால் ஒருவருக்கு கெடுதல் இழைக்கப்பட்டால், பெரும்பான்மையினர் சொல்லவதைப் போல, அவர் கைமாறாக கெடுதல்  இழப்பது சரியாகுமா?

க்ரிட்டோ: அது எப்போதுமே சரியில்லை சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்வது என்பது தவறான செயல்.

க்ரிட்டோ: அது உண்மையே.

சாக்ரடீஸ்: ஒருவர் எப்போதுமே தவறான செயலை கைமாறாக செய்யக்கூடாது, மற்றும் ஒருவருக்கு என்ன நிகழ்ந்திருந்தாலும் அவர் எப்போதுமே அடுத்தவருக்கு கெடுதல் செய்யக்கூடாது. க்ரிட்டோ, இது உங்கள் நம்பிக்கைக்கு எதிராக இருந்தால்,  நீங்கள் இதை ஏற்க வேண்டாம். எனக்குத் தெரியும், இதை ஒரு சிலரே ஏற்பார்கள் என்று. இதை நம்புகிறவர்களுக்கும் மற்றும் நம்பாதவர்களுக்கும் இடையே ஒரு பொதுத்தளம் என்பது கிடையாது. எனவே, ஒரு தரப்பினர் எதிர்த்தரப்பினரின் கருத்துக்களை நிச்சயம் இழிவானதாகக் கருதுவார்கள். ஆகையால், இந்த கருத்து நம் இருவருக்கும் பொதுவான ஒன்றா, மற்றும் இதை நீங்கள் ஏற்கிறீர்களா, என்பதை சிந்தித்துப் பாருங்கள். மற்றும், இந்த கருத்தே நம் கலந்தாய்வுக்கு அடித்தளமாக இருக்கும் – அதாவது, தவறு செய்வது, தவறை கைமாறாகச் செய்வது மற்றும் கேடு இழைக்கப்பட்டிருப்பதால் கேடொன்றை கைமாறாக விளைவிப்பது –  இச்செயல்கள் எப்போதுமே நல்லதல்ல. அல்லது, நீங்கள் இதை மறுத்து, இக்கருத்தை நம் உரையாடலின் அடித்தளமாக ஏற்கவில்லையா? நான் இக்கருத்தை நீண்ட காலமாக நம்பி வருகிறேன், மற்றும் இப்பவும் நம்புகிறேன். ஆனால் உங்களுக்கு மாறுபட்ட பார்வை இருந்தால், இப்போதே சொல்லிவிடுங்கள். மாறாக சொல்லப்பட்ட கருத்தை ஏற்கிறீர்கள் என்றால், நான் அடுத்து ச் சொல்லப்போவதை கேளுங்கள்.

க்ரிட்டோ: நான் இதை ஏற்கிறேன். இக்கருத்தில் நான் உங்களுடன் உடன்படுகிறேன் சாக்ரடீஸ். தொடருங்கள்.

சாக்ரடீஸ்: அப்படியென்றால் சொல்கிறேன், இல்லை, கேள்வியாகவே கேட்கிறேன்: ஒருவர் மற்றொருவருக்கு நியாயமாகப் படும் ஒரு செயலை செய்ய ஒப்புதல் தெரிவித்தப் பின், அதை நிறைவேற்ற வேண்டுமா அல்லது, அதை மீறி அச்செயலை செய்யாமல் ஏமாற்றலாமா?

க்ரிட்டோ: நிறைவேற்ற வேண்டும்.

சாக்ரடீஸ்: இதைத் தொடர்ந்து வருவதை கவனியுங்கள்: ஊர் மக்களின் அனுமதி இல்லாமல் நாம் இங்கிருந்து வெளியேறினால், யாருக்கு கெடுதல் நினைக்கவே கூடாதோ அவர்களுக்கே கேடு இழைக்கிறோமா?

க்ரிட்டோ: இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை, சாக்ரடீஸ். எனக்குத் தெரியாது.

சாக்ரடீஸ்: சரி, நாம் இதை இப்படிப் பார்க்கலாம். நீங்கள் சொல்வதுபோல் இங்கிருந்து நாம் தப்பிக்க திட்டமிட்டால், நம் நகரம் மற்றும் குறிப்பாக நம் ஊர்ச் சட்டங்கள் நம்மை எதிர்த்து இக்கேள்விகளை கேட்பார்கள்: “என்ன செய்ய நினைக்கிறீர்கள் சாக்ரடீஸ்? இச்செயலை செய்ய முற்படுவதன் மூலமாக, உங்களைப் பொறுத்தவரையில், ஊர்ச் சட்டங்களான எங்களை மற்றும் அதன் மூலமாக இந்த முழு நகரத்தையும் அழிக்க நினைகிறீர்கள், இல்லையா? அல்லது, சட்டமன்றங்களின் தீர்ப்புகள் சக்தி இழந்து, தனிப்பட்ட நபர்களால் அவைகள் செல்லாததாக, பயனற்றதாக ஆக்கப்பட்டால், நம் ஊர்  அழிவதற்கு சாத்தியம் இல்லை என்று நினைக்கிறீர்களா?” இது போன்ற வாதங்களுக்கு என்ன பதில் சொல்லலாம் க்ரிட்டோ? நாம் மீற நினைக்கிற சட்டங்களின் சார்பாக, சட்டமன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்ற வேண்டும் என்பதுபோல் பல வாதங்கள் முன்வைக்கப்படலாம். இதற்கு நாம் இப்படி பதில் சொல்லலாமா என்று சிந்தியுங்கள்: “இந்த ஊரே என்னை பழித்துவிட்டது, மற்றும் அது எனக்கு எதிராக எடுத்த முடிவு தவறானது”. இப்படி நாம் சொல்லலாமா என்ன?

க்ரிட்டோ: நிச்சயம் சொல்லலாம் சாக்ரடீஸ். அதுதான் நம் பதில்.

சாக்ரடீஸ்: அப்போது சட்டங்கள் இதைச் சொன்னால் என்ன செய்வது: “அதுவே நமக்குள் இருந்த ஒப்பந்தம் இல்லையா சாக்ரடீஸ்? நாடு எடுக்கும் முடிவுகளை மதிப்பதுதானே அந்த ஒப்பந்தம்?”. இதைக் கேட்டு நாம் ஆச்சிரியம் அடையும்போது,  அவர்கள் மேலும் சொல்வார்கள்: “சாக்ரடீஸ், நாங்கள் சொல்வதைக் கேட்டு ஆச்சிரியம் அடையாமல் பதில் சொல்லுங்கள் – இப்படியான கேள்வி-பதில் கொண்ட உரையாடல்கள் உங்களுக்கு பழக்கமானதுதானே. சொல்லுங்கள், எங்களுக்கு எதிராக மற்றும் இந்த நகரத்துக்கு எதிராக என்ன குற்றச்சாட்டை  வைக்கப்போகிறீர்கள்? எங்களை அழிக்க முயல நினைக்குமளவுக்கு இழுத்துச் சென்ற அந்த குற்றச்சாட்டு எது? முதலில், நாங்கள்தான் உங்களுக்கு பிறப்பை கொடுத்தோம் என்ற தகவல் உங்களுக்கு தெரியாதா? அதாவது, எங்கள் மூலமாகத்தான் உங்கள் அப்பா உங்கள் அம்மாவை திருமணம் செய்து குழந்தை பெற்றார்கள், இல்லையா? சொல்லுங்கள், திருமணத்தை தொடர்பு கொண்ட எங்களுள் சில சட்டங்கள் மீது குறை சொல்ல எதாவது இருக்கிறதா?” அப்படி குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்வேன் நான். “இல்லையென்றால், குழந்தை வளர்ப்பு மற்றும் ஆரம்பக் கல்வியைப் பற்றி அக்கறைக் கொண்ட எங்களுள் சிலர் மீது எதாவது குறை இருக்கிறதா? நீங்கள் கலைகளை படிக்க மற்றும் உடற்பயிற்சி கற்றுகொள்ள உங்கள் அப்பாவை கட்டளையிட்ட எங்களுள் சில சட்டங்கள் செய்தது சரிதான், இல்லையா?” அவர்கள் செய்தது சரிதான் என்று நான் சொல்வேன். “நல்லது”, அவர்கள் தொடர்வார்கள், “மற்றும், இப்படி பிறந்து, வளர்ந்து, கல்வியெல்லாம் பெற்ற பிறகு, நீங்கள் எங்கள் மரபுவழி வந்த பிள்ளை மற்றும் எங்களுக்கான தொண்டன் என்பதை மறுப்பீர்களா? அது உண்மையென்றால், உரிமையை பொருத்தவரையில் நீங்களும், நாங்களும் எப்படி சம நிலையில் இருக்கமுடியும்? நாங்கள் உங்களுக்குச் செய்வதையெல்லாம் நீங்களும் எங்களுக்குச் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது என்ற தவறான நினைப்பு உங்களிடம் இருக்கிறதா? உரிமையைப் பொறுத்தவரையில், நீங்கள் உங்கள் அப்பாவுடன் சமநிலையில் இருந்ததில்லை.  அவர் உங்களுக்கு செய்ததை எதிர்த்துப் பதிலடி கொடுப்பதையோ, அல்லது உங்களைத் திட்டியதற்கு அவரை எதிர்த்து திட்டுவதையோ, அல்லது உங்களை அடித்ததற்கு அவரை திரும்ப அடிப்பதையோ செய்திருக்கமாட்டீர்கள். உங்களுக்கு எஜமான் ஒருவர் இருந்திருந்தால் அவரிடமும் அப்படித்தான் நடந்திருப்பீர்கள். இப்படியிருக்கும்போது உங்கள் நாட்டையும், அதன் சட்டங்களையும் எதிர்த்து பழிக்குபழி வாங்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் எப்படி நினைக்கமுடியும்? அதாவது, நாங்கள் உங்களை அழிக்க முற்பட்டால், மற்றும் அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறதென்று நாங்கள் நினைத்தால், நீங்கள் உங்களால் முடிந்தவரை எங்களைத் திரும்ப அழிக்க நினைக்கலாமா? இதை செய்ய உங்களுக்கு, அதுவும் நன்னெறியைப் பற்றி உண்மையில் அக்கறை கொண்ட உங்களுக்கு, உரிமை இருக்கிறது என்று சொல்வீர்களா?  உங்கள் அம்மா, உங்கள் அப்பா, மற்றும் உங்கள் முன்னோர்களைவிட கௌரவபடுத்த வேண்டியது உங்கள் நாட்டையே என்பதை உங்கள் ஞானம் உங்களுக்கு உணர்த்தவில்லையா?  நாடு என்பது  கடவுள்களிடத்திலும், சான்றோர்களிடத்திலும் போற்றுதலுக்குரிய மற்றும் பெரும் மதிப்பிற்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது, அது உங்களுக்கு தெரியாதா? அதை  வணங்கி, அதற்கு இணங்கி நடக்க வேண்டாமா? உங்கள் அப்பாவின் கோபத்தைவிட உங்கள் நாட்டின் கோபத்தை தணிக்க பெரும் முயற்சியை எடுக்க வேண்டாமா? ஒன்று நாட்டை உங்கள் வாதங்களுக்கு இணங்கி ஏற்கச் செய்ய முயற்சிக்க வேண்டும், இல்லையென்றால் அது இடும் கட்டளைகளை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்ற முடிவு செய்துவிட்டால், சவுக்கடியோ, சிறையோ, அது எதை பொறுத்துக்கொள்ள  உத்தரவிட்டாலும் அதை அமைதியுடன் சகித்துக்கொள்ள வேண்டும். அது உங்களை போரில் அடிப்பட அல்லது கொல்லப்பட இட்டுச் சென்றாலும், நீங்கள் கொடுக்கப்பட்ட கட்டளையை பின்பற்றியே ஆகவேண்டும். அப்படி செய்வதுதான் சரி, மற்றும் ஒருவர் எப்போதுமே கொடுக்கப்பட்ட கடமையைவிட்டு வேறு வழியில் தப்பி செல்லாவோ, அதிலிருந்து பின் வாங்கவோ கூடாது.  மாறாக, போர்க்களத்திலும், சட்ட மன்றங்களிலும், மற்றும் எல்லா இடங்களிலும், ஒருவர் தன் ஊரின் மற்றும் தன் நாட்டின் கட்டளைகளை பின்பற்றியே ஆகவேண்டும். இல்லையென்றால், நியாயம் எது என்பதை காண்பித்து  ஊரை  இணங்கி ஏற்கச் செய்ய வேண்டும். உங்கள் அம்மாவிற்கோ அல்லது அப்பாவிற்கோ எதிராக நிகழ்த்தும் வன்முறை புனிதமற்றது. ஆனால், அதைவிட புனிதமற்ற செயல், உங்கள் நாட்டுக்கு எதிராக நிகழ்த்தும் வன்முறையாகும்.” இதற்கு என்ன பதில் கொடுக்கலாம் க்ரிட்டோ? சட்டங்கள் சொல்வது சரியா, இல்லையா?

க்ரிட்டோ: அவர்கள் சொல்வது உண்மை என்றுதான் நினைக்கிறேன்.

சாக்ரடீஸ்: சட்டங்கள் மேலும் சொல்லலாம்: “சிந்தியுங்கள் சாக்ரடீஸ், நாங்கள் சொல்வதில் உண்மை இருந்தால், நீங்கள் திட்டமிட்டுக் கொண்டிருப்பதை எங்களுக்கு செய்வது நல்லதல்ல. நாங்கள் உங்களுக்கு பிறப்பை கொடுத்து, வளர்த்து, படிக்க வைத்துள்ளோம். உங்களுக்கும் மற்றும் மற்ற குடிமக்களுக்கும் எங்களால் முடிந்த நல்லவைகளை செய்துள்ளோம். வாக்களிக்கும் வயது வந்தபிறகு, நகரத்தில் நடப்பதையும் மற்றும் சட்டங்களான எங்களையும் கவனித்த பிறகு, ஒருவருக்கு எங்களிடத்தில் திருப்தி இல்லையென்றால், அவர் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம். இதை நாங்கள் வெளிப்படையாக அறிவித்திருக்கிறோம். இதை ஒவ்வொரு ஏதன்ஸ் நகர குடிமகனுக்கும் கொடுக்கப்பட்ட வாய்ப்பு.  எங்கள் மீதோ அல்லது இந்த ஊர் மீதோ உங்களுள் ஒருவருக்கு திருப்தி இல்லாமல் வெளியே வேறு குடியிருப்புக்கு சென்று, இருக்கும் சொத்தையும் அங்கேயே எடுத்துச் சென்று வாழ விரும்பினால், சட்டங்களான எங்களுள் ஒருவர்கூட இடையூறுகளையோ அல்லது தடைகளையோ வைக்கமாட்டோம். ஆனால் நாங்கள் எப்படி விசாரணைகளை நடத்துகிறோம், மற்றும் எந்த வழியில் ஊரை நிர்வாகம் செய்கிறோம் என்பதையெல்லாம் பார்த்து இங்கேயே இருக்க நினைப்பவர்கள், எங்கள் கட்டளைகளை மதித்துப் பின்பற்ற ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துவிடுவார்கள். சட்டங்களை மீறுபவர் மூன்று வழிகளில் தவறு செய்கிறார் என்றே சொல்வோம், ஏனென்றால் முதலில் எங்களை மீறுவதன் மூலமாக அவர் தன் பெற்றோரை மீறுகிறார்; அது மட்டுமல்லாமல் தன்னை வளர்த்தவர்களை சிறுமைப்படுத்துகிறார்; மற்றும் அவர் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி எங்களை பின்பற்றாமலும், நாங்கள் தவறியிருந்தால் எங்களை மேம்படுத்த முயலாமலும் இருக்கிறார். ஆனால் நாங்கள்  உத்தரவிடுவதையெல்லாம் மக்கள் செய்தே தீர வேண்டும் என்ற கடினமான கட்டளைகளை இடுவதில்லை. மாறாக நாங்கள் சிலவற்றை முன்மொழிகிறோம், அவ்வளவுதான், மற்றும் இரண்டு வாய்ப்புக்களையும் கொடுக்கிறோம் – ஒன்று, நாங்கள் சொல்வதை பின்பற்றுங்கள், அல்லது, இரண்டு, நாங்கள் சொல்வது தவறு என்று எங்களை ஏற்கச் செய்து, மாற்ற முயலுங்கள். இங்கு நீங்கள் இரண்டையும் செய்யவில்லை. நீங்கள் நினைப்பதை செய்தால், சாக்ரடீஸ், இப்படியான குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள். ஏதன்ஸ் நகர மக்களிடையே நீங்கள்தான் பெரிய குற்றவாளியாக திகழ்வீர்கள்.” மற்றும் இதற்கு நான் “எப்படி?” என்று கேட்டால், அவர்கள் என்னிடம் கடிந்துகொண்டு நான்தான் ஏதன்ஸ் நகரத்திலேயே அவர்களுடன் அந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருந்தவன் என்று சொல்வார்கள். அது சரிதான். அவர்கள் மேலும் சொல்லலாம்: “சாக்ரடீஸ், நாங்களும், இந்த ஊரும், உங்களை அன்போடு இணக்கமாக நடத்தினோம் என்பதற்கு நம்பிக்கையான சாட்சிகள் இருக்கின்றன. இந்த ஊர் உங்களை எல்லை கடந்த இணக்கத்துடன் நடத்தவில்லையென்றால், மற்றவர்களைவிட நீங்கள் இவ்வளவு காலம் இந்த நகரத்தில் குடியிருந்திருக்கமாட்டீர்கள். ஒரு திருவிழாவை பார்க்கக்கூட நீங்கள் இந்த ஊரை விட்டு வெளியே சென்றது கிடையாது. படைத்துறைப் பணியைத் தவிர வேறு எந்த காரணத்திற்கும் இங்கிருந்து வெளியே சென்றது கிடையாது. மற்றவர்களைப் போல் வேறொரு நகரத்திற்கு சென்று தங்கியதே கிடையாது. மற்றொரு நகரத்தைப் பற்றி மற்றும் அதன் சட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பியதே கிடையாது. நாங்களும் இந்த நகரமும் உங்களை எல்லா விதத்திலும் திருப்திபடுத்தியுள்ளோம் என்பதே உண்மை.

“எனவே, ஒரு முடிவாக நீங்கள்தான் எங்களை தேர்வு செய்தீர்கள். மற்றும் நீங்கள்தான் எங்களுக்குக் கீழ் ஒரு குடிமகனாக இருக்க ஒப்புக்கொண்டீர்கள். இந்த ஊரில் நீங்கள் பிள்ளைகளைப் பெற்றதும், இந்த நகரம் உங்களிடம் இணக்கமாக இருந்ததை உறுதிபடுத்துகிறது. இதைத் தவிர, உங்களுக்கு நடந்த வழக்கு விசாரணையின்போது, நீங்கள் விரும்பியிருந்தால் வேறு ஊருக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ  தஞ்சம் போவதை உங்கள் தண்டனையாக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. இப்போது, ஊரின் அனுமதியுடன் செய்திருக்கக்கூடியதை, ஊரின் விருப்பத்திற்கு எதிராக செய்ய நினைக்கிறீர்கள். மேலும், வழக்கு விசாரணையின்போது, உங்களுக்கு மரணத்தை கண்டு கவலையோ, பயமோ இல்லை என்ற தப்பெருமையோடு மரண தண்டனையை தேர்ந்தெடுத்தீர்கள். இப்போது அதை மறந்துவிட்டீர்கள். நீங்கள் திட்டமிடுவதை செய்தால், நீங்கள் சொன்ன அச்சொற்கள் உங்களை அவமானப்பட வைக்கும். மேலும், அது ஒரு இழிவான செயலாகும். ஒரு குடிமகனாக உங்களுக்கு இருக்கும் பொறுப்புக்களுக்கும், எங்களுடன் நீங்கள் போட்ட ஒப்பந்தங்களுக்கும் எதிராக செயல்படுவீர்கள். முதலில், இந்த ஒன்றிற்கு பதில் சொல்லுங்கள்,  அதாவது நாங்கள் சொல்வது உண்மையா என்று: நீங்கள் சொற்களால் மட்டுமல்ல, உங்கள் செயல்களாலும் எங்களுடன் உடன்பட்டு வாழ ஒப்புக்கொண்டீர்கள், இல்லையா?” இதற்கு நாம் என்ன பதில் சொல்லலாம் க்ரிட்டோ? உண்மைதான் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்தானே?

க்ரிட்டோ: ஆமாம் சாக்ரடீஸ், கண்டிப்பாக.

சாக்ரடீஸ்: அவர்கள் மேலும் சொல்லலாம், “நிச்சயமாக, நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ எங்களுடனான ஒப்பந்தங்களையும், பொறுப்புக்களையும் ஏற்கவில்லை. மேலும், அதையெல்லாம் ஏற்க உங்களுக்கு எந்தவித கால அழுத்தமும் இருந்திருக்காது. ஆனாலும், ஏற்ற ஒப்பந்தங்களையும், பொறுப்புக்களையும் இப்போது உடைக்கிறீர்கள். எங்களை பிடிக்கவில்லையென்றால், மற்றும் எங்கள் ஒப்பந்தங்கள் நியாயமற்றது என்று நினைத்திருந்தால், நீங்கள் இங்கிருந்து வெளியேற உங்களுக்கு எழுபது ஆண்டுகள் இருந்தன. நல்லாட்சி நடக்கிறது என்று நீங்கள் அடிக்கடி சொல்லிகொண்டிருக்கும் ஸ்பார்டா-விற்கோ, க்ரீட்-டிற்கோ, அல்லது வெளிநாட்டில் வேறொரு நகரத்திற்கோ போக தேர்வு செய்திருக்கலாம். ஒரு பார்க்க இயலாதவர் அல்லது ஒரு நடக்க முடியாதவர் அல்லது ஒரு மாற்றுத்திறனாளி – இவர்கள் சென்றதைவிட கம்மியான நேரத்தைதான் நீங்கள் ஏதன்ஸ் நகரத்திற்கு வெளியே செலவழித்தீர்கள். இதிலிருந்தே தெரிகிறது, இந்த ஊர் மற்ற நகரவாசிகளைவிட உங்களிடம் ஈடிணையற்ற இணக்கத்துடன் இருந்ததென்று. எந்த ஊரும் சட்டங்கள் இல்லாமல் மக்களுடன் இணக்கமாக இருக்க முடியாது என்பதால், நாங்களும் உங்களை நன்றாகத்தான் நடந்தினோம் என்பதும் உண்மைதான்.  அப்படியென்றால், இப்போது எங்கள் ஒப்பந்தங்களுக்கு ஏற்றவாறு செயல்படுவீர்களா சாக்ரடீஸ்? மற்றவர்களுக்கு ஒரு கோமாளியாக மாறாமல், நாங்கள் சொல்வதை ஏற்பீர்களா?

“எங்கள் ஒப்பந்தங்களை உடைத்து இந்த தவறை செய்து, உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் என்ன நல்லது செய்துவிடப் போகிறீர்கள் என்று சிந்தியுங்கள். நாடு கடத்தல், வாக்குரிமை இழப்பு, மற்றும் சொத்திழப்பு – இதுபோன்ற அபத்துகளில் உங்கள் நண்பர்கள் சிக்குவார்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது. உங்களையே எடுத்துக்கொள்வோம்: தீப்ஸ் அல்லது மெகாரா போன்ற நல்லாட்சி நடக்கும் பக்கத்து நகரங்களுக்கு நீங்கள்  சென்றாலும், அங்குள்ள அரசுகள் உங்களை ஒரு எதிரியைப் போல நடத்தும். அந்த ஊரின் மேல் அக்கறைக் கொண்டவர்கள் உங்களை ஒரு சந்தேகத்துடன், சட்டங்களை அழிக்கக்கூடியவன் இவன், என்றுதான் நினைப்பார்கள். இதைவிட முக்கியமாக, உங்களுக்கு விதிக்கப்பட்டது சரியான தண்டனைதான் என்ற நீதிமன்றத்தின் நம்பிக்கை உறுதிபடுத்தப்படும். ஏனென்றால் சட்டங்களை அழிப்பவர்கள்தான் இளைஞர்களையும், படிக்காதவர்களையும் கெடுப்பவர்கள். ஒருவேளை, நீங்கள் நல்லாட்சியும், அறிவார்ந்தவர்களும் இல்லாத நகரங்களுக்கு செல்வீர்களா? அப்படிச் சென்றால், உங்கள் வாழ்க்கை வாழத் தகுதியானதாக இருக்குமா? அங்குள்ள மக்களோடு எப்படி பழகுவீர்கள்? நீங்கள் பேசுவதையெல்லாம் அவர்களோடு பேச வெட்கமாக இருக்காதா? என்ன பேசுவீர்கள்? இங்கு பேசியதெல்லாம், அதாவது நன்நெறியும், நியாயமும் மற்றும் சட்டபூர்வமான நன்னடதைகளும்தான் மனிதனின் மகத்தான உடைமை, என்றெல்லாம் பேசுவீர்களா? அவர்களுக்கு சாக்ரடீஸ் இழிவான ஒருவராகத்தான் தெரிவார் என்று உங்களுக்கு புரியவில்லையா? அதை இப்போதே புரிந்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லா  இடங்களையும் விட்டுவிட்டு தெஸலி-யில் இருக்கும் க்ரிட்டோ-வின் நண்பர்களிடம் செல்வீர்களா? அங்கு சட்டம் ஒழுங்கற்று, சீர்குலைந்த நிலையில்தான் இருக்கிறது. தப்பித்து செல்பவர்கள் பொதுவாக மாற்று உடையில் இருப்பதைப் போல, நீங்களும் சிறையிலிருந்து எப்படி தப்பித்து வெளியேறினீர்கள் என்று மாறுவேடத்தில் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பீர்களா? சில காலம் மட்டுமே வாழப்போகும் நீங்கள், இன்னும் கூடுதலாக வாழவேண்டும் என்ற பேராசையில்தான் மிக முக்கியமான சட்டங்களை மீறியிருக்கிறீர்கள் என்று ஒருவர்கூட உங்களிடம் சொல்லமாட்டார்களா? சொல்லாமல் இருக்கலாம், நீங்கள் யாரையும் எரிச்சலூட்டாமல் இருந்தால். மாறாக, நீங்கள் அப்படி செய்தால் உங்களைப் பற்றி இன்னும் மோசமான வசைகள் பாடப்படும்.

“அங்கு சென்றால் நீங்கள் மற்ற எல்லோருடைய தயவை பெறவே உங்கள் நேரத்தை வீணடிப்பீர்கள், மற்றும் அவர்களுக்கு கீழ்படிந்தே நடப்பீர்கள். தெஸலி-யில் வேறு என்ன செய்ய முடியும் உங்களால்? ஒரு பெருவிருந்திற்காக தெஸலி-க்கு போயிருப்பதைப் போல அங்கே அறுசுவை விருந்து உண்பீர்கள், இல்லையா? நியாயம் மற்றும் மற்ற நன்னெறிப் பண்புகள் பற்றிய உங்கள் உரையாடல்கள் எங்கே போகும்? நீங்கள் சொல்கிறீர்கள், உங்கள் குழந்தைகளுக்காகவே வாழ விரும்புகிறீர்கள் என்று. அவர்களை நன்கு வளர்த்து படிக்க வைக்கவேண்டும் என்கிறீர்கள், அது எப்படி சாத்தியமாகும்? அவர்களையும் தெஸலி-க்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை வளர்த்து படிக்கவைக்க போகிறீர்களா? அதாவது உங்களுடன் அவர்களையும் அந்நிய நகரத்தில் புகலிடம் போக வைத்து அவர்களை மகிழ்விக்க போகிறீர்களா? இல்லையென்று அவர்களை இங்கேயே வளர்த்துப் படிக்க வைக்க நினைத்தாலும், அவர்களுடன் நீங்கள் இங்கே இருக்கமாட்டீர்கள். இது அவர்களுக்கு நல்லதா? அவர்கள் இங்கேயே இருந்தால், நிச்சயமாக உங்கள் நண்பர்கள் அவர்களை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் தேஸலி-க்கு போனால் உங்கள் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் உங்கள் நண்பர்கள், நீங்கள் மரண தண்டனையை ஏற்று இறந்தால் பார்த்துக்கொள்ள மாட்டார்களா, என்ன? நல்ல நண்பர்களாக இருந்தால், நிச்சயம் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்ப வேண்டும்.

“உங்களை எடுத்து வளர்த்த நாங்கள் சொல்வதைக் கேட்டு நடந்துக்கொள்ளுங்கள் சாக்ரடீஸ். நன்னடத்தையைத் தவிர உங்கள் குழந்தைகளை, உங்கள் வாழ்வை அல்லது மற்ற வேறு எதையுமே பெரிதாக மதிக்க வேண்டாம். இறந்த பிறகு, அதாவது ஹைடீஸ்-க்கு வந்து சேர்ந்த பிறகு,  உங்கள் தற்காப்புக்காக இருக்கப்போவது உங்களின் நற்செயல்கள் மட்டும்தான். இப்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கும் செயலை செய்தால், இங்கேயும் சரி, உங்கள் நண்பர்களிடத்திலும் சரி, பரலோகத்திலும் சரி, அது எந்த விதத்திலும் நல்லதாகவோ, நியாயமானதாகவோ, அல்லது புனிதமானதாகவோ இருக்காது. இப்போதுள்ள நிலையில், நீங்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டு போனால், நீங்கள் இறப்பதற்கான காரணம் சட்டங்களாகிய நாங்கள் அல்ல; மாறாக மக்களுள் சிலர் உங்களுக்குத் தவறாக கெடுதல் இழைத்துவிட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் நீங்கள் சிறையிலிருந்து தப்பிப்பதன் மூலமாக யாரோ செய்த கெடுதலுக்கு பதில் கேடு இழைக்கிறீர்கள்; பழிக்கு பழி வாங்குகிறீர்கள்; எங்களுடன் இருந்த ஒப்பந்தங்களையும், பொறுப்புக்களையும் உடைக்கிறீர்கள்; மற்றும் யாரை அவமதிக்கவே கூடாதோ – அதாவது, உங்களை, உங்கள் நண்பர்களை, உங்கள் நாட்டை, மற்றும் சட்டங்களான எங்களை, அவமதிக்கிறீர்கள். இது வெட்கத்திற்குரிய செயல் என்பதால் நீங்கள் உயிரோடு இருக்கும் வரையில் உங்களிடம் நாங்கள் கோபமாக இருப்போம். மற்றும் எங்களை நீங்கள் அழித்ததனால், நீங்கள் இறந்த பிறகு எங்கள் சகோதரர்களாகிய பரலோகத்தின் சட்டங்கள் உங்களை அன்போடு ஏற்கமாட்டார்கள். எனவே, நாங்கள் சொல்வதை கேளுங்கள். க்ரிட்டோ-வை நம்பி, அவர் சொல்வதை கேட்க வேண்டாம்.”

க்ரிட்டோ, என் அன்பு நண்பரே, இந்த சொற்கள் அனைத்தும் என் காதில் இசையைப் போல ஒலிக்கிறது என்பதை நம்புங்கள். அதன் எதிரொலி என்னுள் அதிர்வுற்று வேறெதையும் கேட்கவிடாமல் செய்கின்றன. சொல்லப்பட்ட வாதங்களின் மேலுள்ள என் நம்பிக்கைக்கு எதிராக பேசினால், அது எந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று தெரியவில்லை. இதைத் தாண்டி, சொல்வதற்கு முக்கியாமான கருத்துக்கள் வேறதாவது இருந்தால் சொல்லுங்கள் க்ரிட்டோ.

க்ரிட்டோ: அப்படி என்னிடம் எதுவும் இல்லை சாக்ரடீஸ்.

சாக்ரடீஸ்: சரி க்ரிட்டோ. இதுவே நமக்காக கடவுளால் வகுக்கப்பட்ட வழியென்றால், அதை அப்படியே செய்து வருவதை ஏற்போம்.

மூலம்: Plato. “Crito”. Translated by GMA Grube. in Five Dialogues. Hackett Publishing Company, 2002.

கட்டுரையை பற்றிய குறிப்பு

மேற்கத்திய மெய்யியலின் தந்தையாக கருதப்படும் கிரேக்க நாட்டுத் தத்துவஞானி சாக்ரடீஸ், தன் சிந்தனைகளை எழுத்து வடிவில் பதிப்பிக்கவில்லை. மாறாக, அவருடைய தத்துவ விசாரணைகள் பேச்சு வழியில், இயல்பான உரையாடல்களின் மூலமாக நடைபெற்றன. அவர் இறந்த பிறகு, அவருடைய மாணவர்களாகிய ப்ளேடோ மற்றும் செனொஃபோன், மற்றும் நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபேன்ஸ் அவரைப் பற்றியும், அவருடைய கருத்துக்களையும் எழுத்தில் பதிவிட்டனர். இந்த மூவரும் தங்கள் எழுத்துக்களில், சாக்ரடீஸ்-ஐயும், அவருடைய கருத்துக்களையும் சித்தரித்த விதம் வெவ்வேறானது எனவே, எது உண்மையான சாக்ரடீஸ், மற்றும் எதெல்லாம் அவருடைய சுயமான கருத்துக்கள் என்பதை தெரிந்துக்கொள்வது மிகக் கடினமானது. இதை அறிஞர்கள் “சாக்ரடீக் சிக்கல்” (“Socratic Problem”) என்று பெயரிட்டுள்ளனர். இதைப் பற்றி ஆய்வு செய்துக்கொண்டிருப்பவர்களில் பலர், ப்ளேடோ-வின் முற்காலத்திய உரையாடல்கள் அனைத்தும் அசலான  சாக்ரடீஸ்-இன் தத்துவச் சிந்தனைகளையே வர்ணிக்கிறது என்று வாதாடி வருகிறார்கள். ப்ளேடோ-வின் முற்காலத்திய உரையாடல்களின் பொதுவான இயல்பு என்னவென்றால், அதில் வரும் சாக்ரடீஸ்-இன் பாத்திரம் நன்னெறி மற்றும் பொதுவாக அறம் சார்ந்த கருத்துக்களைத் தவிர, மீவியற்பியல், அறிதலியல், மற்றும் சமய-மெய்யியலிலுள்ள கேள்விகளையும், கருத்துக்களையும்  ஒருபோதும் பேசமாட்டார். மேலும்  இந்த உரையாடல்களில் வரும் சாக்ரடீஸ்-இடம் முழுமையடைந்த ஒரு அறவியல் கோட்பாடோ, அரசியல்-மெய்யியற்க் கோட்பாடோ இருக்காது. மாறாக, அறம் மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகளை மட்டும் முன்வைத்து, அவைகளுக்கு முழுமையடைந்த பதில்களை அவர் தராமலேயே உரையாடல்கள் முடிவடையும். இப்படியான ப்ளேடோ-வின் முற்காலத்திய உரையாடல்கள் பட்டியலில் இருப்பவை, “பிரதிவாதம்” (“Apology”), “யுதைஃப்ரோ” (“Euthyphro”), “கோர்கியாஸ்” (“Gorgias”), “கார்மிடீஸ்” (“Charmides”), “லாகேஸ்” (“Laches”), “ப்ரோடாகோரஸ்” (“Protagoras”) மற்றும் மேலே தமிழாக்கப்பட்டிருக்கும் “க்ரிட்டோ” (“Crito”).

“க்ரிட்டோ” அல்லது “நன்னடத்தை ” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த உரையாடலில் சாக்ரடீஸ் தன் நண்பரான க்ரிட்டோ-உடன், தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை ஏற்க வேண்டுமா, அல்லது அதற்கு ப்  எதிராக திட்டமிட்டு  சிறையிலிருந்து தப்பிக்க வேண்டுமா, என்பதை பற்றி உரையாடுகிறார். “சாக்ரடீஸ் எதற்காக சிறைக்கு சென்றார்?”, “அவர் மீது போடப்பட்ட வழக்கு என்ன?”, மற்றும் “அந்த வழக்கு விசாரணை எப்படி நடந்தது?” என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக  ப்ளேடோ-வின் மற்றொரு உரையாடலான “பிரதிவாதம்” அமைகிறது. தன் சொந்த குடும்ப விவகாரத்திலும் மற்றும் பொது வாழ்விலும் அவ்வளவு அக்கறை கொள்ளாத சாக்ரடீஸ், நன்னெறி மற்றும் நன்னெறிப் பண்புகளான நியாயம், ஞானம், துணிவு, தன்னடக்கம், போன்றவற்றைப்  பற்றிய தத்துவ விசாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பொது இடங்களில், தங்களையே ஞானிகள் என்று அறிவித்திருந்த ஏதன்ஸ் நகர அறிவுஜீவிகளை தன் தத்துவ விசாரணையில் இழுத்து, அவர்களை கேள்வி-பதில் கொண்ட உரையாடல்கள் மூலமாக அவர்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது என்பதை நிரூபித்து வந்தார். மந்தமான குதிரைக்கு மாட்டு ஈ எப்படியோ, அப்படிதான் ஏதன்ஸ் நகர மக்களுக்கு தான் இருப்பதாக சாக்ரடீஸ் நினைத்தார். அதாவது, நன்னெறியைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாத மக்களை தத்துவக் கேள்விகளால் நச்சரித்து, அவர்களுடைய மூடநம்பிக்கைகளை குழப்பி, அவர்களைச் சுயமாக சிந்திக்க வைத்தார் அவர். வாதங்களில் அறிவாளிகளை தோற்கடித்து, அவர்கள் உண்மையில் அறிவாளி இல்லை என்று காட்டிவந்த வந்த சாக்ரடீஸ்-க்கு இயல்பாகவே ஒரு  ஆர்வமான இளைஞர்க் கூட்டம் உருவாகியது. இதையெல்லாம் கவனித்து வந்த பலர் சாக்ரடீஸ்-ஐ பற்றி தவறான செய்திகளை மற்றும் அவபெயரை ஊர் முழுவதும் பரப்பிவந்தனர். இதைத் தொடர்ந்து, மெலேதஸ், அணிதஸ் மற்றும் லைகான் என்ற மூவர் எழுபது வயதான சாக்ரடீஸ் ஏதன்ஸ் நகர இளைஞர்களை கெடுக்கிறார் என்றும், நகரத்தில் வழிபட்டுவந்த  கடவுள்களை நம்பாமல் சமய அவநம்பிக்கையை பரப்புகிறார் என்றும் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு விசாரணையின்போது நியாமான, தத்துவார்த்த வாதங்களை சாக்ரடீஸ் முன்வைத்தாலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கவே பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர். இதன் பிறகு, மரண தண்டனைக்காக சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்படுகிறார். டீலோஸ் தீவில் வருடந்தோறும் நடக்கும் ஒரு சமயநெறி வழிபாட்டின் காரணமாக, சாக்ரடீஸ்-இன் தண்டனை நிறைவேற்றம் தாமதமாகிறது. இதற்கிடையில் சிறையில் இருக்கும் சாக்ரடீஸ்-ஐ தப்ப வைக்க நினைக்கும் அவரின் நண்பரான க்ரிட்டோ, தன்  திட்டங்களை பற்றி உரையாட சாக்ரடீஸ்-ஐ சந்திக்கிறார். இதுவே “க்ரிட்டோ”-வின் பின்னணி.

“க்ரிட்டோ”-வில் நடக்கும் உரையாடலை இரண்டு பகுதிகளாக  பிரிக்கலாம்: (i) க்ரிட்டோ-வின் வாதங்கள், மற்றும் (ii) சாக்ரடீஸ்-இன் பதில்-வாதங்கள். முதல் பகுதியில் க்ரிட்டோ சாக்ரடீஸ் தப்பிப்பதற்கான முக்கிய காரணங்களை முன்வைக்கிறார்: (i) சாக்ரடீஸ் இறந்தால் அவர் பிள்ளைகளின் வளர்ப்பு மற்றும் படிப்பு பாதிக்கப்படும், (ii) எதிரிகள் விரும்புவதுபோல், சாக்ரடீஸ் தன் ஆயுளை எளிதில் விட்டுகொடுப்பது வெட்கத்திற்குரிய செயல் மற்றும் அவருடைய கோழைத்தனத்தின் வெளிபாடு, (iii) சாக்ரடீஸ் சிறையிலிருந்து தப்பாமல் இருந்தால் அது அவருக்கும், அவர் நண்பர்களுக்கும் பெரும்பாலான மக்களிடத்தில் அவபெயரை உண்டாக்கும். க்ரிட்டோ பேசிய பிறகு வருகிற சாக்ரடீஸ்-இன் பதில்-வாதங்களை இரண்டாக பிரிக்கலாம்: (i) பெரும்பாலோரின் கருத்துக்களுக்கு அக்கறை செலுத்தாமல், அறிவார்ந்த சிலரின் கருத்துக்களை கேட்டுதான் நடக்க வேண்டும். (ii) தன்னை பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய தன் ஊரின் சட்டங்களை மீறி, அழிக்க நினைப்பது அறத்திற்கு புறம்பான செயல். இந்த இரண்டாவது வாதத்தை சாக்ரடீஸ் முன்வைக்கும் விதம் சுவாரசியமானது – சட்டங்களை மனிதர்களாக உருவகப்படுத்தி அவர்களின் வாயிலாகவே அதை வெளிப்படுத்துகிறார். இப்படி செய்வதன் மூலமாக, பொதுவான சட்ட நீதிக்கும், தனி மனித அறத்திற்கும் ஒரு இணைப்பை உருவாக்குகிறார். மேலும், சாக்ரடீஸ்-இன் இரண்டாவது வாதத்தை, நவீன அரசியல்-மெய்யியலில் பிரபலமான சமுதாய ஒப்பந்தக் கோட்பாட்டின் (social contract theory) முதல் வெளிபாடாக கருதலாம். இதன்படி, தனிப்பட்ட மனிதருக்கும், அரசு மற்றும் சட்டங்களுக்கும் உள்ள  உறவு என்பது, கொடுக்கல்-வாங்கல் முறையில் இயங்கும் ஒரு ஒப்பந்தத்தாலானது. ஒருவர் தன் ஊருக்கும், நாட்டுக்கும் சட்டபூர்வமான சில கடமைகளை செய்தால், நாடு அவரை பாதுகாத்து அவர் விருப்பப்படி வாழவிடும் – இதுவே அந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தால்தான் நம் சமூகமே உருவாகி இயங்குகிறது என்கிற இந்த கோட்பாட்டை ப்ளேடோ-வின் பிற்காலத்திய உரையாடலான “குடியரசு”-விலும், பின் வந்த நவீன மெய்யியலாளர்களான  ரூசோ, லாக், ஹாப்ஸ் மற்றும் காண்ட்-இன் எழுத்துக்களிலும் நிறைவான நிலையில் பார்க்கலாம். இங்கே ஒரு சிறிய விமர்சனக் கருத்தாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஊர்ச் சட்டங்களை மீற வேண்டாம் என்று இங்கு வாதாடும் சாக்ரடீஸ், தன் வழக்கு விசாரணையின்போது தன் தத்துவ விசாரங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்காக  ஊர்ச் சட்டங்களையும் மீறத் தயாராக இருப்பதாக பேசுகிறார் (இதை “பிரதிவாதம்” உரையாடலில் பார்க்கலாம்).     

2 COMMENTS

  1. வாழ்த்துக்கள் விவேக்! அருமையான மொழிபெயர்ப்பு. சாக்ரட்டீசின் ஆழமான விவாதத்திறன் மற்றும் அறச்சார்பு எந்தக் காலத்திலும் வியப்புக்குரியது.அதை நினைவூட்டியக் கனலிக்கு நன்றி!

    – சுதா முருகேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.