- நன்றி
ஒட்டகத்தின் கால் கொண்டு நடக்கிறேன்
என் பாதை எங்கும்
மணல் மணலாய் எழுத்துக்கள்
எழுத்துக்களைக் கொண்டு இவ்வளவு பெரிய பாலைவனத்தை உருவாக்கிய என் முன்னோர்களுக்கு நன்றி
எழுத்தின் மேல் நடக்கும் ஒட்டகமாக
என்னைப் பெற்றெடுத்த என் தாய்தந்தைக்கு நன்றி
எல்லாப் பிறவியிலும் என் குளம்புகளை
குறுகுறுக்கச் செய்யும்
இம் மணல் துகள்களுக்கும் நன்றி.!
- பச்சை நிழல்
வினாடி என்பது அழகான சித்தலிங்கப்பூ
அது இமைக்கடியில் மலரும்போது
எத்தனை மகிழ்ச்சி
நாளென்பது அழகான சக்திநெறிப் பழம்
சூரியகாந்த சுடரொளியில்
அதன் தோல் எத்தனை பளபளப்பு
மாதமென்பது அழகான மால்மருக வேர்
அது இருகப் பிடித்திருக்கும்
அடிமண்ணில் எத்தனை வாசனை
வருடம் என்பது அழகான
அங்கயற்கண் விதை
அதனுள்ளிருந்து வெளிவரும்
உயிரின் பச்சைநிழல் எத்தனை அழகு
சித்தலிங்கப்பூ தொடுத்து மாலை சூட்டி
சக்திநெறிப் பழமெடுத்து ஊட்டிவிட்டு
மால்மருக வேரால் உனக்கு தூபம் செய்வேன்
மாகாளி
பச்சை நிழல் செழிக்கட்டும் எம் வயலெங்கும்.
-கார்த்திக் திலகன்
இரண்டு கவிதைகளும்..
வித்தியாசமான கரு.. கோணம்.. சொற்கோவை..
கவிஞர் கார்த்திக் திலகன் அவர்களுக்கு வாழ்த்துகள்
கார்த்திக் திலகன் இரு கவியும் சிறப்பு இயற்கையின் செழிப்புதான் வாழ்வின் செழிப்பு….