காவிரிக் கரையின் மொழி மரபு

காவிரியில் வெள்ளமும் வரும்; ஆண்டு தவறாமல் புயலும் வரும். இவை இல்லையென்றால் இந்த டெல்டா உருவாகி நிலைத்திருக்காது. புயலோடும் வெள்ளத்தோடும் ஒரு வக்கிரத் தோழமையைப் பரிந்துரைப்பதாக நினைக்கவேண்டாம். காவிரிப் படுகையில் மக்கள் புழங்கும் சொற்களை, புயல், மழை பற்றிய அவர்கள் சொல்லாடலைப் பார்க்கவேண்டும்; கலாச்சார வழக்கங்களையும் பார்க்கவேண்டும். அந்த மக்களின் புரிதலை அவை பிரதிபலிக்கலாம். அல்லது, அவையே அந்தப் புரிதலை அவர்களுக்குப் பயிற்றுவித்திருக்கலாம். வானிலை அறிக்கை அறிவியல் கலாச்சாரம் சார்ந்த புரிதல். காவிரிப் படுகையில் நாம் காண்பது இடம்சார்ந்த புரிதல். அறிவுவெளியில் இப்படியான கலாச்சார பன்மைக்கும் கொஞ்சம் இடம் இருக்காதா?

“காற்றடிக்கப் போகிறது” என்றுதான் புயல் வரவிருப்பதைச் சொல்வார்கள். தன் நீட்சியாக காற்று கொஞ்சம் தடித்தால் அதுவே ‘புயல்’. வராதது இப்போது நூதனமாகவும் பேரிடராகவும் நமக்குக் குறுக்கே வந்துவிட்டதாக அதை நினைக்கமாட்டார்கள். புயலுக்குப் பழகிப்போனவர்கள் அப்படித்தான் தணித்துப் பேசுவார்கள் என்று இதை மொழிநடையாக ஒதுக்கிவிடக்கூடாது. அவர்களுடையது வேற்றுப் புரிதல். தன் அனுபவத்துக்குள் வருகின்ற காற்றை “வருகிறது” என்றுதான் சொல்வார்கள். “கரை கடக்கிறது” என்பதெல்லாம் தான் நிற்கும் இடத்தை அழித்துக்கொண்டு, பூமிக் கோளத்துக்கு வெளியே, அண்ட வெளியின் அந்தரத்தில் நின்று பேசுபவர்களின் படர்க்கைப் பேச்சு. அது காவிரிக் கரையில் பழக்கமில்லை.

இரை எடுப்பதை நிறுத்திவிட்டு கொட்டில் மாடுகள் அவ்வப்போது தலையைத் தூக்கி வெறித்துப் பார்க்கும். காற்று உசும்பாது. அடைமழைக் காலத்தின் வழக்கமான வானமாக இருந்தால் சீராக வீசும் குணவடைக் காற்று இப்போது சட்டென்று நின்றுவிடும். புயல் வடக்கிலிருந்தால் மேலைக் காற்றும், தெற்கிலிருந்தால் கீழைக் காற்றும் விட்டுவிட்டுச் சீறி வீசும். இந்த அடையாளங்களைக் கண்டால் முன்னெச்சரிக்கையாக சுவருக்கு உதார் கொடுப்பதும், போரிலிருந்து காய்ந்த வைக்கோலாகப் பிடுங்கிவந்து மாட்டுக்கொட்டிலில் திணித்துவைப்பதும் அவசரம் அவசரமாக நடக்கும். அடைமழைக்கான சேகரிப்பாக கத்தரி, கொத்தவரை, அவரை வற்றல், அடைமாங்காய், மொச்சை, கொண்டைக்கடலையோடு, விரும்பவர்களுக்கு கருவாடு, உப்புக்கண்டமெல்லாம் பல நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும்படி வைத்திருப்பார்கள். மழைக்காலத்தில் பச்சைக் காய்கறியும், அப்போது பிடித்துவரும் மீனும், கறிக்கடை இறைச்சியும் ருசிக்காது. இப்போது சொல்வதுபோல் “கரையோரம் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்” என்று சொல்லமாட்டர்கள். காவிரிப் படுகையில்ஆற்றங்கரைதான் இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பான இடம். வெள்ளக் காலங்களில் மக்கள் ஆற்றங்கரைக்குக் குடிவந்துவிடுவதுதான் வழக்கம். கரையின் உள்வாயில் இருப்பவர்கள் மட்டுமே கரைக்கு ஏறவேண்டியிருக்கும்.

‘சாலை’ என்ற சொல் இங்கு பேச்சு வழக்கில் புழங்கவில்லை. அதற்கு ஈடாக ’கரை’ என்பது பயன்பட்டது. காவிரிப் படுகையில் பெரும்பாலான சாலைகள் ஆற்றுக் கரைகளிலேயே அமைந்திருக்கும். ஒரு ஆற்றின் கரையிலிருந்து அடுத்த ஆற்றுக்குச் செல்வதென்றால் வயல்களின் வரப்புகளை உடைத்துப் பரப்பிச் சாலை அமைத்திருப்பார்கள். அதுவும் பல இடங்களில் வாய்க்கால் கரை, வாரிக் கரை மேலேயே செல்லும். ஒரு ஆங்கிலத் தொடரை மொழிபெயர்த்துப் பயன்படுத்தலாமென்றால் காவிரிப் படுகையை ’வெள்ளச் சமவெளி’ என்று சொல்லவேண்டும். பழைய தமிழில் ‘புனல் நாடு’ என்று சொல்லியிருக்கிறார்கள். கிராமங்கள் உருவாவதற்கு ஆற்றுக் கரை தோதுவான இடம். கரையைத் தள்ளி உள் கிராமமாக இருந்தால் அவை குளம் வெட்டிய மண்ணைப் பரப்பி மேடுபடுத்திய இடங்களாக இருக்கும். இங்கே சில நகரங்கள்கூட இப்படி உருவானவைதான். அண்மைக் காலம்வரை ஒரு கிராமத்துக்கும் இன்னொன்றுக்கும் வயல் வரப்பே இணைப்புக் கரையாக இருந்தது. எவ்வளவு நீர் வந்தாலும் தாங்கள் இடமாகவோ, வலமாகவோ ஒதுங்கி, நீரை அதன் போக்கில் ஓடவிட்டே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

இந்த சூழலியல் நிலவரத்தில், “வெள்ளம் கிராமங்களைச் சூழ்ந்துகொண்டது” என்று சொல்வதை எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது? சூழ்வது நிகழ்வதற்கு ஒரு மையத்தை அனுமானிக்கவேண்டும். மனிதனை மையமாக வைத்து, நம்மையே நாம் பிரதானப் படுத்தும் சொல்லாடலில்தான் ‘சூழ்ந்தது’ என்பதன் பொருள் கூறுகள் அர்த்தம்பெறும்.  “சூழலியல்”, “சுற்றுச்சூழல்” என்பவற்றின் பொருள்கூறுகள் திரண்டு, நாம் அறியாமலேயே இந்த அர்த்தத்தைத்தான் கொடுக்கும். ‘இயற்கையை’ போற்றவேண்டும் என்றுதான் சொல்வோம். ஆனால், நம் மொழிமரபு அந்த நேசிப்புக்கும் நம்மைத்தான் மையப்படுத்தும்!  ‘இயற்கை’ என்று சொல்லும்போதே நம்மை அதிலிருந்து பிரித்து, மேம்பட்ட இடத்தில் எஜமானனாக வைத்துக்கொள்கிறோம் என்பதை பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

காவிரிப் படுகையில், வெள்ளம் சூழ்ந்துகொண்டது என்பதற்குப் பதிலாக “வெள்ளம் கொண்டுவிட்டது” என்பார்கள். “வெள்ளம் கொள்ளும் வயல்” என்று சொல்வார்கள். வெள்ளம் வந்தால் வாங்கிக்கொள்ளும் இடமாகத்தான் இந்த இடங்கள் அவர்கள் சொல்லாடலில் உருவம் பெற்றிருக்கின்றன. கொள்ளக்கூடியதுதான் வெள்ளம் என்று ஒரு தன்முனைப்பைத் தந்தாலும் அதற்குப் போக்கிரித்தனத்தை ஏற்றிக் காட்டுவதில்லை. இந்த அண்டா மூன்று குடம் தண்ணீர் கொள்ளுமானால் அது தான் செய்யவேண்டியதைத்தானே செய்கிறது?

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகி, மேலும் வலுப்பெற்று இத்தனை கி.மீ. வேகத்தில், இந்த இடத்துக்கும், இந்த இடத்துக்கும் இடையே நள்ளிரவிலிருந்து காலைக்குள் கரை கடக்கும் என்று படித்திருக்கிறோம். இது ஒரு வகைப் புரிதல் கலாச்சாரம். அது துல்லியத்தை நாடும்; பரிணாம வளர்ச்சியைக் காட்டும்; காரண-காரியத்தைக் கூறும். இதற்கு ஒரு மொழி மரபு உண்டு. அந்த இடத்தில் இருக்கும் மனிதனின் அனுபவத்தைத் துடைத்துக் கழுவிய சொற்களாக அந்த மொழி மரபு தேர்ந்துகொள்ளும்.

கதைக் கூறு பிசகாமலிருப்பதற்குத் தேவையான உச்சக் கட்டத்தோடு புயலையும், வெள்ளத்தையும் நாடகமாகச் சித்தரித்துவிடுகிறோம். அதை விறுவிறுப்பு தொய்யாத காட்சித் தொடராக, கையில் ஒலி வாங்கியோடு ஒரு சூத்திரதாரி நடத்திக்காட்டுவார். நடப்பதையும், அதையே நடத்திக் காட்டுவதையும் நாடகத்துக்குள் நாடகமாக நாம் பார்த்துக்கொண்டிருப்போம். நாம் இருக்கும் இடத்திலேயே புயல் வந்திருக்கும். நாம்தான் பாதிக்கப்பட்டவர்கள். ஆனாலும் நாமே பார்வையாளராகத்தான் நம் பாதிப்பைக் காணமுடியும். இதற்கும் ஒரு மொழி மரபும், அது ஊக்குவிக்கும் புரிதலும் உண்டு.

வேதரணியத்துக்கு அருகில் விவசாயம் செய்யும் நண்பர் ஒருவர் புயலும் வராமல், மழையும் வராமல் தங்களை இந்த மழைக் காலம் ஏமாற்றிவிட்டதாகச் சொன்னார். அடுத்த புயுலுக்கும் மழை இல்லையென்றால் இந்தக் கோடை தங்களுக்குக் கடுங்கோடையாகிவிடும் என்றும் அச்சப்பட்டார். இதை ஒரு மாற்றுப் பார்வை என்று வைத்துக்கொள்வது நம் சிந்தனை மரபு. புயலுக்கு இன்னொரு பக்கமும் உண்டு; அதை மழை வளம் என்று காணவேண்டும் என்பதாகச் சொல்வோம். இப்படியான நன்மை, தீமை என்ற இருமுனைச் சிந்தனையின் மையத்திலும் நாமேதான். இதைத் தாண்டிச் செல்லமுடியுமானால் நமக்கு சூழலியல் சிந்தனை வாய்த்ததாகக் கொள்ளலாம். அப்படிச் செய்வது பல நூறு ஆண்டுகளின் மொழி மரபைக் கழித்துக்கொள்வதற்கான முயற்சியாக இருக்கும்.

ஆடிப் பெருக்கு நாளில் காவிரிக்கு வேண்டிக்கொண்டு தங்கள் வீட்டு ஆண்களின் வலது மணிக்கட்டில் ஒரு மஞ்சள் நூலை முடிந்துவிடுவார்கள் பெண்கள். அது விவசாயம் என்ற களத்தில் புகும்போது அவர்களுக்குக் கட்டிவிடும் கங்கணம். விளைந்த வயல் தை மாதம் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அப்போது, மாட்டுப் பொங்கலன்று கோயிலுக்குச் சென்று திரும்பும் தங்கள் வீட்டு ஆண்களை, களம் கண்டு மீள்பவர்களாக ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துக்கொள்வார்கள். ஆடியில் இழைக்கத் துவங்கிய வட்டத்தின் முனைகள் கூடுவதன் கலாச்சார அடையாளம் அது. ஆடிக் கடைசியில், விதை தெளித்த பிறகு எஞ்சிய விதை நெல்லை வறுத்து, உரலில் குத்தி, கார்த்திகைப் பொரிக்கு அவல் தயாரித்துக்கொள்வார்கள். அதற்குப் பிறகு அடுத்த ஆண்டுதான் விதை தேவைப்படும். இழைத்த வட்டம் சுழித்துத் திரும்பும் கலாச்சார அடையாளம் இந்த வழக்கம். ஆடி மாதம் நாள் பார்த்து, வயலின் ஈசானிய மூலையில் விதை தெளித்து விவசாயம் துவங்குவார்கள். தை மாதம் அதற்கு நேர் எதிர்த் திசையான கன்னிமூலையில் கடைசி அறுவடையான ஏடாங்கரிசியை வைத்துக்கொள்வார்கள்.  இப்படி வட்டச் சுழற்சிகளாக இருந்தது விவசாயம். இப்போது அது ஒரே நேர் கோடு. ஒரு பட்டம் முடிவதற்குள் அடுத்த பட்டம் துவங்கிவிடும். அது உற்பத்தி, மேலும் உற்பத்தி என்று நீண்டுகொண்டே இருக்கும். துவங்குவதற்கும், முடிவதற்கும் கலாச்சார அடையாளங்கள் இப்போது இல்லை. உற்பத்தி பெருகிக்கொண்டே இருந்தால் அதையே எல்லாம் இருக்கவேண்டியதுபோல் இருப்பதற்கான அடையாளமாகக் கொள்கிறோம்.

காவிரிப் படுகைக்கே உரிய உம்பளச்சேரி மாட்டு வகையை எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் பாலுக்காக மட்டும் வளர்த்ததில்லை. அது பாலும் அதிகம் தராது. சேற்று உழவுக்குக் காளைக் கன்றுகளைத் தரும் என்பதற்காக வளர்த்த மாடு அது. பால் வளம் பெருகவேண்டுமென்று இப்போது ஜெர்சி பசுக்கள் அறிமுகமாகி, அவை பெருகிவிட்டன. தலையிலிருந்து வால் துவங்கும் தட்டுப் பகுதிவரை நூல் பிடித்ததுபோல் இருக்கும் முதுகோடு, பாரித்த உடம்பு வைத்துக்கொண்டிருக்கும் இந்த மாடுகள்தான் இப்போது தென்படுகின்றன. பசுவைக் காட்ட ஒரு படம் போட்டால் கனத்த மடியும், கறவைக் குவளையுமாக இருக்கும் இந்த வகை மாடுதான் சித்திரமாக வருகிறது. பெருகும் நுகர்வுக்கு ஈடுகொடுக்கும் உற்பத்திப் பெருக்கம் என்ற ஒரே புள்ளிக்கு எல்லாவற்றையும் சுருக்கிவிடும் கலாச்சாரம். மொழி மரபு, சித்திர மரபு, குறியீட்டு மரபு என்று எல்லா கலாச்சார வழக்கங்களும் அந்தச் சுரண்டும் புள்ளிக்கே சுருங்கிவிடுகின்றன. காவிரிப் படுகை மொழி மரபும், ஊரக மொழி மரபுகளும் அறிவுப் புலத்தின் இதர கலாச்சாரங்கள். இந்தப் பன்மையும் வேண்டியதே!


தங்க. ஜெயராமன் – பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், காவிரி வெறும் நீரல்ல உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.