1) மிதிபடும் காலம்
I.
என் அளவுக் காலணிகள் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்றுதான் இவ்வளவு நாட்களாக நம்பியிருந்தேன்
நேற்று சுய்ப்ரேன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது
அதைத் தற்செயலாகப் பார்த்தேன்
அத்தனைப் பொருத்தமாக என் கால்களை அணைத்தது
ஓ! என் அன்புக் காலணியே! நீ கிடைத்ததில் பேரின்பம்
உன்னை அப்படியே தூக்கி வந்து வீட்டில் வைக்கிறேன்
கண்கொட்ட நாளும் கவனிக்கிறேன்
வெயிலடிக்கையில் உன்மேல் நீரூற்றுகிறேன்
மழை பொழியும்போது குடை பிடித்துக்கொண்டு உன்னருகே நிற்கிறேன்
கருமுகில்கள் திரண்டு காற்று வீசும்போது
உனக்குப் படுநெருக்கமாக உன் இணையை
அருகிலேயே கழட்டிவைக்கிறேன்.
II.
ஒருநாள் காலணியிடம் கேட்டேன்
காலங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய் ?
காலணி சொன்னது
எங்களுக்கு எல்லாமே
மிதிபடுகிற காலம்தானே!
III.
நான்தான் உன்னை
வீட்டின் வெளியே நிறுத்தி வைத்தேன்
நான்தான் உன்னை
சேற்றில் மூழ்கச் செய்தேன்
நான்தான் உன்னை
சாய்க்கடையைத் தாண்டச் செய்தேன்
நான்தான் உன்னை
கடற்கரை மணலில் கழட்டிவிட்டேன்
நான்தான் உன்னை
உலக அழுக்குகளை மிதிக்கச் செய்தேன்
நானேதான் ஒருநாள்
உன்னைத் தூக்கி வீசவும் செய்வேன்.
IV.
காலணிகளின் வீடு கால்கள்தான்
கால்களோடு இருக்கும்போது
அவை வீட்டிலிருக்கின்றன
கால்களில் இல்லாத நேரம்
வீட்டை விட்டு வெளியே இருக்கின்றன
நாம் வீட்டிற்குள் நுழைவதும்
காலணிக்குள் கால்களை நுழைப்பதும் ஒன்றுதான்.
- கு.அ.தமிழ்மொழி
மிக அருமை தோழர். பாராட்டுகள்
தமிழ் மொழியின் காலணிக் குறித்து
….
காலணிகளின் வீடு
கால்களாகி விடுவதில் கம்பீரம் பெறுகிறது
காலணிகள்…
முகில்கள் திரளும் போது
இணையோடு துணைக்கு இருக்க விடுவது பாராட்டும் படியாக இருக்கிறது…
~கா.அமீர்ஜான்