நாம் நம்புவதை விட இயற்கையிடம்
வேறொன்று இருக்கிறது
அதனிடம் ஆன்மா இருக்கிறது
அதனிடம் சுதந்திரம் இருக்கிறது
அதனிடம் காதல் இருக்கிறது
அதனிடம் மொழி இருக்கிறது
– ஃப்யொடர் இவானுவெச் சுச்செவ் (Fyodor Ivanovich Tyutchev)
உயிர் ஏணி (ladder of being) என்று வர்ணிக்கப்படும் அரிஸ்டாடிலின் தத்துவத்தில் பூமியின் உயிர் இயக்கத்தில் ‘மனிதன்’தான் அனைத்திற்கும் மேலானவன் என்கிற கருத்துரு (concept) உருவாக்கப்பட்ட காலகட்டத்தில்தான் – ஏறத்தாழ இரண்டாயிரத்து முன்னூற்றைம்பது வருடங்களுக்கு (கி.மு 340) முன்பு – பேரியற்கைக்கு எதிராக தனது வலுவத்தை (power) ஒரு வகை முழுமையான முறைப்படுத்தலுக்குள் கொண்டுவந்தது மனித இனம்.
மனித ‘அறிவு’ இந்த வலுவத்திற்கு உரைகல்லாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் மனிதர்கள் விவசாயத்தை உருவாக்கத் தொடங்கி பனிரெண்டாயிரம் வருடங்கள் ஆகிவிட்டன. மத்தியக் கிழக்கு நாடுகளில் கி.மு. 9500 வருடத்தில் பயன்பாட்டிலிருந்த மனித வேளாண்மைப் படிமங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பத்தாயிரம் வருடங்களின் சீரிய வளர்ச்சியில் தனது உச்சபட்ச வலுவத்தை மனிதன் இயற்கைக்கு எதிராக முன்வைக்கும் அளவிற்கு நம்பிக்கை அடைந்துவிட்டான். அவனிடம் அதற்குத் தேவையான வலுவான கட்டுமானங்களும் தளவாடங்களும் இருந்ததாக நினைத்தான். இவ்வகையில் இயற்கைக்கு எதிரான இந்த வலுவான மனிதச் செயல்பாடுகள் பதினைந்தாம் நூற்றாண்டில் அதன் அசுர பலத்தை எட்டியது. அதை உறுதி செய்யும் வகையில் ஃப்ரான்ஸிஸ் பேகானின் ‘ஏகாதிபத்தியச் சுற்றுச்சூழலியம்’ (imperial ecology) தன்னை உருவாக்கிக் கொண்டது.
பதினான்காம் நூற்றண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டுவரை மேற்குலகின் புத்தொளிக்காலம் மாண்பு மிகுந்த மனிதர்களால் கொண்டாடப்பட்டது. ‘மறுபிறப்பு’ என்று பொதுவாக அறியப்பட்ட இந்த மறுமலர்ச்சி (renaissance) காலகட்டம் உண்மையில் மனிதனின் இயற்கைக்கு எதிரான ருத்ரதாண்டவம் என்றால் மிகையில்லை.
ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தாறில் கிரிகோர் மெண்டல்’லால் உருவாக்கப்பட்ட இருபத்திரெண்டு வகை பட்டாணிகளிலிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து, அக்டோபர் இருபத்தி நாலில் உருவாக்கப்பட்ட அய்க்கிய நாட்டு அவை வரையிலான ஒரு வரலாறில் நமது மனித குலத்தின் ஒட்டுமொத்த சுற்றுசூழலின் எதிர்காலம் வரையறுக்கப்பட்டது எனலாம்.
அவற்றின் ஆழம் எளிமையானது அல்ல; ஏனென்றால் 1970களிலேயே மரபணு பொறியியல் அடிப்படைகளை மனிதன் உருவாக்கிவிட்டான். இன்றைய நிலையில் மனிதனின் தலையெழுத்து என்று அறியப்படும் மனித டிஎன்ஏ-வை (DNA) வாசித்து முடித்துவிட்டான்.
வானவியல், மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உருவாகிவரும் கண்டுபிடிப்புகளால் மனித அறிவின் வேகம் அளப்பறியதாய் இருக்கிறது. அவற்றினால் உருவாகும் சூழலியல் விளைவுகள் ரகளையானவை என்றாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு எவ்விதத்திலும் பாதுகாப்பற்றவை.
‘இயற்கை உலகம் மனிதனுக்காகவே உருவாகியுள்ளது, அதைக் கட்டுப்படுத்தி சுரண்டுவது மனிதனின் உரிமை…’ என்ற பேகனின் கருத்து இதுவரையிலும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி உலகளாவிய பயன்பாட்டில் இருந்து வருகிறது. பூமி தன்னைத் தானே சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றுவதுபோல மனிதன் தன்னைத் தானே சுரண்டியும், தனது சூழலைச் சுரண்டியும் வாழ்கிறான். பூமி தற்கொலை செய்துகொள்ள நினைத்தது அதன் விருப்பத்தில் உயிரியக்கப் பரிணாமத்தில் மனிதன் பிறந்தான் என்று ஒரு எதிர்மறைச் சிந்தனை மனதில் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிசெய்ய பல்வேறு முனைப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றைப் பார்க்கும்போது ஒரு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பதை மனம் நம்புகிறது.
ஏனென்றால் பூமியில் நுண்ணுயிரிகள், திமிங்கலம் உள்ளான கடல்வாழிகள், அனைத்து தாவர இனங்கள், விலங்கினங்கள் மற்றும் மனித இனம் வரையிலான அனைத்து உயிரினங்களும் அடைப்படையில் சூழலைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றன. அவற்றின் அமைப்பே உயிர் வாழ்வதற்கும் இனவிருத்தி செய்வதில் வெற்றி பெறும் போக்கிற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. உயிரினங்களின் வளர்ச்சிப்போக்கு என்பது இலை ஒன்று வெளிச்சத்தை நோக்கி நீள்வது போல எளிமையானது, அதே நேரத்தில் மிகவும் வலிமையான செயல்பாடும்கூட. ஏனென்றால் அது உயிர் வாழ்வது பற்றிய நிலை. ஆனால் அடிப்படையான இயற்கையின் மீதான மனித ஆதிக்கம் என்பது மற்ற உயிரினங்களை அதன் சூழலில் தகவமைத்துக் கொள்வதற்கான அறிவை மழுங்கச் செய்கிறது.
மனிதக் குழந்தைகள் முதலான அனைத்து உயிரிங்களும் புதிதாக பிறக்கும்போது முற்றும் புதுவகையிலான வகையில் மனரீதியாக குழப்பம் அடைகின்றன. உயிரினங்களின் வாழ்வதற்கு அவற்றின் உடல் அசைவுகள் அவசியத் தேவை. போலவே அவற்றின் போக்குவரத்திற்கு அவைகள் வாழும் சூழலின் உதவி தேவை. உயிரினங்கள் தனது அடிப்படைத் தேவையான உணவைப் பெற அவற்றின் சூழலுக்கு ஒரு குறிப்பிட்ட வகையான ஒழுங்கமைவு அவசியம். இந்த ஒழுங்கமைவுதான் இப்போது அதிவேகமாக சீரழிந்து வருகிறது.
இந்தப் பூமியில் மனிதர்களாகிய நாம் மட்டுமே அதற்கு முழுக் காரணமாக இருக்கிறோம். இவ்வகையான சீர்கேட்டினை மனிதன் உளவியல் அடிப்படையில் புரிந்துகொள்வதும் அதே போல பேரழிவு தட்பவெட்பக் காலநிலை மாற்றம் (catastrophic climate change) உருவாக்கும் விளைவுகளை உளவியல் அடிப்படையில் புரிந்துகொள்வதும் சமகாலகட்டத்தின் மிக அவசியத் தேவை. அதற்காக நாம் சூழலியத்தின் அடிப்படை உளவியல் தத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சிறிய அறிமுகத்தை இந்தக் கட்டுரை முயல்கிறது.
சூழலியல் தத்துவம் (ecosophy)
இதைப் புரிந்துகொள்ள சூழலியத்திலிருந்து சூழலியல் தத்துவத்திற்கான (From ecology to ecosophy) ஒரு வலசையை நாம் உருவாக்கலாம். அதற்குமுன் சூழலியல் தத்துவம் என்கிற கருத்துரு என்றால் என்ன என்கிற ‘இரண்டு மார்க்’ கேள்விக்கு ஒரு எளிய பதிலைப் பார்க்கலாம்: சூழலியல் நல்லிணக்கம் அல்லது சமநிலையைப் பேணுவதற்கான முன்னெடுப்பைப் புரிந்துகொள்ளும் ஒரு நிகழ்வே அது. எனவே நாம் ஏன் சூழலியல் தத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வியையும் சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
ஃப்ரான்ஸின் பின்னை-அமைப்பியல் தத்துவவாதியான ஃபெலிக்ஸ் கட்டாரி (Félix Guattari) மற்றும் நார்வேனிய தத்துவவாதியான அர்ன நெஸ் (Arne Næss) ஆகிய இருவரும் தம்மளவில் இவ்வகைக் கருத்துருவை உருவாக்கிய முன்னோடிகள் எனலாம்.
நமது உலகம் மிகக் குழப்பமானதொரு பேரிடர் நிலையில் இருப்பதாக நம்மில் பெரும்பாலானோர் உணர்கிறோம் அல்லவா? பல நேரங்களில் நமது நடைமுறை வாழ்க்கை நமக்கு ஒருவகை வெறுமையை உண்டாக்குகிறது. உலக வெப்பநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சீர்கேடு அபாயங்கள் பற்றிய எண்ணிலடங்காத் தகவல்கள் நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கின்றன. அனைத்து நிகழ்வுகளும் நமக்கிடையே நடப்பவை.
இந்த நிகழ்வுகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம். ஏனென்றால் நமக்கு அவை பெரும் மன உளைச்சலைத் தருகின்றன. மனிதர்களின் அவசிய உணர்வான மகிழ்ச்சியை எவ்வகையில் இழந்துகொண்டு வருகிறோம்? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டுக் கொள்வது மிக அவசியம் அல்லவா? எனவே இவ்வகையான கேள்விகளுக்கு விடை தேடுவதும் அதன் அடிப்படையில் ஒரு முடிவான மகிழ்ச்சியை எட்டும் வழியை வகுக்கவும் சூழலியத்தை நாம் தத்துவ மற்றும் உளவியல் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பணம் என்கிற காகிதத்திற்கும் அதன் மதிப்பிற்கும் உள்ள உறவு போலத்தான் வாழ்க்கை என்கிற காகிதத்திற்கு அதன் மதிப்பிற்குறிய விஷயமாக சூழலியமும் இருக்கிறது. சூழலியத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள நான் அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து, தொகுத்து, விவரிக்க முயன்றுள்ளேன்.
1
முதலாவதாக மொத்த சூழலியப் பிரச்சனைப்பாடுகளையும் ஓர் எளிய புரிதலுக்ககாக மேல்நிலை சூழலியம் (Shallow Ecology) மற்றும் ஆழ்நிலை சூழலியம் (Deep Ecology) என இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம் என்று சூழலியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமிப்பந்தின் சூழலியம் தொடர்பாக மனித அறிவு என்பது மிக குறுகலானது; உண்மையில் இயற்கைச் சூழலிய நிகழ்வுகளின் விளைவுகள் குறித்து நமது அறிவைவிட அறியாமையே அதிகம் உள்ளது. எனவே நமக்கு இருக்கும் அறிவிலிருந்து சூழலியத்தைப் புரிந்துகொள்ள இந்த வகைமை நமக்கு மிக அவசியமாகிறது.
சூழல் மாசுக்கேட்டையும், இயற்கைவளம் குறைதலையும் பற்றிய புரிதலை மேல்நிலை சூழலியமாக எடுத்துக் கொள்ளலாம்.
போலவே, 1. இயற்கையை மனித மைய நோக்கிலிருந்து அனைத்து உயிர்களுக்கிடையேயான உறவு நிலைக் காட்சியாக உணர வைப்பது, 2. பல்லுயிர் அடிப்படையில் அவற்றிற்கு இடையேயான உள்ளிணக்க அமைப்பைப் புரிந்துகொள்வது, 3. உயிர் சங்கிலித் தொடர்நிலையை அதன் முழு அர்த்தத்தோடு புரிந்துகொண்டு அதன் சமநிலையைப் பேணுவது, 4. சூழலியச் செயல்பாட்டார்களுக்கான அதிகபட்ச மதிப்பளிப்பது மற்றும் அவர்களின் தேவையைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவது, 5. இயற்கை உயிர் உருவாக்கம் மற்றும் அவற்றின் வாழிடங்களுக்கு இடையேயான உள்ளிணக்கம் பற்றிய துல்லியமான அறிவைப் பெறுவது, 6. மனிதன் தன்னிலிருந்தும் இயற்கையிலிருந்தும் அந்நியமாதலைத் தடுத்து தரமான மகிழ்ச்சிகரமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவது போன்ற சூழலியத்தில் ஆழமான பிரச்சனைப்பாடுகளைப் பற்றிய புரிதலாக ’ஆழ்நிலைச் சூழலியத்தை’ எடுத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் ஆழ்நிலைச் சூழலியம் என்பது மனிதர்களுக்கும் மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் பூயின் இயற்கைச் சூழலுக்கும் இடையேயான சமநிலையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கும் செயல்பாடு பற்றிய அறிவியல் எனலாம்.
2
இரண்டாவதாக, சூழலியத்தை மனித உளவியல் அடிப்படையில் புரிந்துகொள்ளுதல் (Understanding the basics of ecology through psychology) தொடர்பானதாகும். மனிதர்களாகிய நாம் இந்தப் பூமியில், உண்மையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதலில் தொடங்குகிறது இது.
சூழலியத்தை ஒரு அறிவியல் பிரிவாக உருவாக்குவதும் பிரச்சனைகளின் தன்மை பற்றிய தரவுகளின் அடிப்படையில் அதற்கான தீர்வுகளை உருவாக்குவதும் முதல் தொடக்கமாகவும் ஒட்டுமொத்த நோக்கமாகவும் இருக்க வேண்டும்.
காலநிலை மாற்றம் மற்றும் கனிமவளம் தொடர்பான பிரச்சினைகள் மூலம் உருவாகும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு நமது எதிர்வினைகள் பற்றிய விழிப்புணர்விற்கான சிறந்த பாடத்திட்டங்களை உளவியல் ரீதியாக உருவாக்குவதும் அதீத நுகர்வின் உளவியலைப் பண்பாடு மற்றும் உயிரியக்க வளர்சிதை மாற்றங்களின் ஊடான விளைவுகள் பற்றிய சிந்தனையை உருவாக்குவதும் இதில் அடங்கும்.
கூடவே மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய சிந்தனைகளை, அதாவது இயற்கை பற்றிய கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்வதும் அறிவியல்பூர்வமான விவாதங்களை உருவாக்குவதும் முக்கியமாக உலக வழக்கில் இருக்கும் சூழலியம் தொடர்பான ‘பிரதான சமூக சித்திரம்’ (Dominant Social Paradigm) எப்படி மற்றமைகளை பாதிக்கிறது என்கிற அடிப்படையில் வரைவாக்கம் செய்வதும் முக்கியமானதாகும்.
சூழலியத்தின் பிரச்சினைப்பாடுகளை சமூக உளாவியல் ஊடாக சமூக மற்றும் தனிமனித நியமங்கள் (norms) எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது பற்றிய புரிதல் உருவாக்கப்பட வேண்டும். போலவே பல்வேறு வகையான அடையாள அரசியல்களையும் முக்கியமாக, தனிமனித நியமங்கள் எவ்வாறு சூழலிய அறத்தை கொண்டுள்ளது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் உளவியலின் முக்கியப் பிரிவுகளான நடத்தை உளவியல் (Behavioral Psychology), நரம்பியல் உளவியல் (Neuropsychology), கற்றல் உளவியல் (Cognitive Psychology) போன்றவற்றின் குறைந்தபட்ச புரிதல்களை உருவாக்குவதன் மூலம் சமூக இயக்கத்தில் சூழலிய மேம்பாட்டுக்கான தற்செயல் நிகழ்வுக் கட்டுப்பாட்டு மேலாண்மைத் (Contingency Management) திட்டங்களை உருவாக்குதல், நச்சு மற்று கழிவுபொருட்கள் மேலாண்மை (toxic and waste management), தகவல் பரிமாற்ற முறைமைகள் (Information Processing), உலகப் பொது சுகாதாரம் மற்றும் குழந்தை வளர்ப்புச் சூழல் திட்டங்கள், மேலும் முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்களின் மன அழுத்தம் (Stress) தொடர்பான சிக்கல்களைக் களைதல் போன்றவற்றின் ஒட்டுமொத்த திட்டமுறைகள் மூலம் ஒருங்கிணைந்த நிலையான மற்றும் நேர்மறையான சூழலியத்தை உருவாக்க ஒரு முழுமையான அணுகுமுறை சிந்தனையை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உளவியல் ஊடேயான சூழலியல் தத்துவத்தைப் புரிந்துகொள்ள நாம் மேற்சொன்னவற்றைப் பரிசீலிக்கலாம்.
3
மூன்றாவதாகச் சூழலிய வகைமைகள் (types of ecology) தொடர்பான புரிதல்கள் ஆகும். ஃபெலிக்ஸ் கட்டாரியின் புகழ்பெற்ற கட்டுரையான மூன்று சூழலியம் (The Three Ecologies) இதன் சாரத்தை நமக்கு தெளிவாக விளக்குன்றது. அவர் சூழலியத்தை மூன்று பெரும் வகைமைகளாகப் பிரிக்கின்றார்.
அவை, 1. சமூக சூழலியம் (Social ecology), 2. உளவியல் சூழலியம் (Mental ecology), 3. சுற்றுப்புறச் சூழலியம் (Environmental ecology) என்பன ஆகும். இவ்வகைமைகளின் பெயர்களே நமக்கு பிரச்சனைகளைத் தெளிவாக்குகின்றன அல்லவா?
மனிதன் மட்டுமே இருக்கும் ஒரு சூழலை, அதாவது மனிதன் தான் உருவாக்கிய உலகத்தில் அதை இயக்கும் மனித சக்தியின் சூழலை இது குறிக்கிறது. இது மனிதானால் உருவாக்கப்பட்ட செயற்கைச் சூழலென புரிந்துகொள்கிறேன். இது மனித இனத்தைச் சூழலியத்தின் மையமாக்குகிறது. மனித சக்தியைப் பிரதானப்படுத்தி பூமியின் மொத்த சூழலையும் கட்டுக்குள் வைக்க முயல்கிறது. தொடர்ந்து தனது அறிவினை அதற்காகச் செலவழிக்கிறது. பிராந்தியம் சார்ந்த காலநிலைக் கணிப்புகளை உருவாக்கி அது சார்ந்த பண்பாட்டை உருவாக்க முயல்கிறது.
அதே சமயம் இரண்டாம் வகையான உளவியல் சூழலியமானது இயங்கிக் கொண்டிருக்கும் மொத்தச் சூழலையும் புரிந்துகொண்டு கற்றுக் கொள்ளும் செயல்முறையில் தன்னை இருத்திக் கொள்கிறது. இது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினையை விவாதிக்கிறது. என்னவென்றால் எது சரி அல்லது எது தவறு என்பதைப் பற்றிய பிரச்சனை அது. சூழலுக்கேற்ற அறமா அல்லது மனித அறத்திற்கேற்ற சூழலா என்பதில் அது தடுமாற்றம் அடைகிறது. பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் இது வலுவானதை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது. சரியா தவறா என்கிற விவாதம் வெறும் உரையாடல்கள் மட்டுமே தேங்கிவிடும் சூழலை இது நிலையாக்கி குழம்பிக் கிடக்கிறது.
இந்த இரண்டுக்குமான சூழலியத்தில் மூன்றாவதாக இருக்கும் சுற்றுப்புறச் சூழலியம் என்பதானது தன்னளவில் நிதர்சனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. உன்மையில் இதன் ஒரு பகுதியாக இருக்கும் மனிதகுலம் தன்னை அந்நியமாக்கி சுற்றுப்புறச் சூழலுக்கு எதிராகத் தம்மை நிறுத்தி மொத்த சூழ்நிலைச் செயல்பாட்டையும் அது தீர்மானமாக வரையறுக்கிறது. இம்மூன்று வகையான சூழலும் தனக்குள்ளே இயங்கிக் கொண்டும் ஒன்றுக்கொன்று ஆதிக்கம் செலுத்தியும் ஒட்டுமொத்தமாக ஒரு கலவையான சூழலை உருவாக்குகிறது. இதனைத் தனித்தனியே அறிவியல் மற்றும் உளவியல் அடிப்படையில் விவாதங்கள் மேற்கொண்டு சரியான வளர்ச்சிப் பாதையில் மனிதகுலம் செல்ல வழி உருவாக்குவது அவசியம்.
4
நான்காவதாக சரியான மிகவும் பாதுகாப்பான மற்றும் அழிவற்ற சுகாதாரச் சுற்றுச்சூழலை உருவாக்க நாம் என்னசெய்ய வேண்டும் என்பதற்கான ஒருமுக செயல்பாடு பற்றிய புரிதலை உருவாக்குவது பற்றியதாகும்.
மிகவும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மனிதனால் உருவாக்கப்பட்ட பொறி-மையவாத (Techno-centrism) சூழலியத்திலிருந்து இயற்கைச் சூழல்மையவாதம் (Eco-centrism) நோக்கிய நகர்வுதான் அது. பெருநிறுவனப்பெருக்கம், பெருநுகர்வுப்பண்பாடு, உலகமயமாக்கம், நிறுவனப்படுத்தப்படும் விவசாயம் போன்றவற்றிலிருந்து விடுபட்டு படிப்படியாகக் கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதாரச்சூழல் மற்றும் தற்சார்புச் சமூகக்கூட்டமைப்பை உருவாக்குதல், குழந்தைகள் கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு மாற்றமடைவது ஒட்டுமொத்த நோக்கமாகும்.
மேலும் கட்டுரையின் முடிவாக, நமது தமிழின் சுற்றுச்சூழல் அறிவு மிகச்சிறப்பான மற்றும் மிகப் பழைமையான ஒன்று என்பதில் ஐயமில்லை. தனிப்பட்ட முறையில் அதன் ஆய்வில் எனக்கு இன்னும் சரியான திறப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் தற்சாற்பு சமூகத்தின் மிகப் பழைய ஒரு பழங்குடிப் பண்பாடுக்கான ஒரு மாதிரி (model) நம்மிடம் இருந்தது, இப்போது இல்லை. மானிடவியல், வரலாறு, தொல்லியல், இலக்கியம் மற்றும் பொருளியல் உள்ளிட்ட பல்வேறு கூறுகளின் அடிப்படையிலான அறிவுப்புல ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது ஆய்வுகளை முன்வைத்தால், தமிழின் மிகப் பழைமயான கூட்டுறவு நட்பின் அடிப்படையில் ஒருவகையான உள்ளிணைப்பு வகைமையில் ஒன்றுகூடி ஒருவேளை மேற்கின் ஆய்வறிஞர்களின் ஒட்டுமொத்த அறிவின் அடிப்படைகள் எவ்வாறனவை என்பதை மனிதர்களின் எதிர்காலம் அறியும். சிதறுண்ட தமிழ் ஆளுமைகளின் வெற்று அடையாள அரசியல் ஒருநாள் அரசியல் சார்பற்ற ‘டீம் தமிழ்’ என மாறும்போது இதன் சாத்தியம் தென்படும்; தமிழ் மீண்டு வந்து ஆளும்!
உதவிய நூல்கள்:
- Ecology, Community, and Lifestyle: Outline of an Ecosophy, Arne Næss, Cambridge University Press, 1989.
- The Ecology Book, foreword by Tony Juniper.
- The Psychology of Environmental Problems, Susan M. Koger and Deborah Du Nann Winter
- The Three Ecologies – Félix Guattari
ஆதிரன் – கவிஞர், விமர்சகர்