ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் ‘இயற்கையின் மீள்வருகை’

2000-ஆம் ஆண்டில் வெளியாகிய முன்னோடி நூலான ஜான் பெல்லமி ஃபாஸ்டரின் மார்க்சின் சூழலியல்* (Marx’s Ecology), மார்க்சியம் தனது தொடக்க காலம் முதலே சூழலியல் பிரச்சனைகளுடன் அக்கறைக் கொண்டிருந்ததை எடுத்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு வெளியாகியிருக்கும் இயற்கையின் மீள்வருகை: சோசலிசமும் சூழலியலும் (The Return of Nature: Socialism and Ecology) எனும் நூல் மார்க்ஸ் மற்றும் டார்வினின் இறப்பிலிருந்து 1960 வரையிலான காலப்பகுதியில் சுற்றுச்சூழல் பற்றிய இயக்கவியல் சிந்தனையின் தொடர்கண்ணியை ஆராய்வதன் மூலம் அச்சிந்தனைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

இது எங்கெல்ஸ், “இடது டார்வினியரான” ரே லான்கெஸ்டர் மற்றும் கற்பனாவாத மார்க்சியர் வில்லியம் மோரிஸ் ஆகியோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளையும் மிக விரிந்த அளவிலான ஆய்வுத் தரவுகளையும் மேற்கோள்காட்டி சோசலிசம் மற்றும் சூழலியலின் இணைப்பரிணாமத்தைப் பற்றி நிகழ்த்தப்பெற்றுள்ள ஒரு கவனமிக்க ஆய்வாகும்.

19-ஆம் நூற்றாண்டு அறிவியலின் பெரும்பகுதி இயற்கையின் மீதான மனிதர்களின் ஆதிக்கத்தைக் கொண்டாடியது. மனிதகுலத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான பிரிவினையானது தவிர்க்கமுடியாததோ, நிரந்தரமானதோ அல்ல; மாறாக தனது பொருளியல் அமைப்பிற்கான அடிப்படையாகப் புவியைக் கொள்ளையிடுவதைக் கொண்டுள்ள தனிச்சொத்துரிமையின் நேரடி விளைவுதான் இது என்பதை எங்கெல்ஸ் விளக்கினார். மாறாக, மனிதச் சமூகமோ இயற்கையின் ஒரு பகுதியும் அதிலிருந்து தோன்றியதும் அதேநேரத்தில் இயற்கையின் மீது வினையாற்றக் கூடியதாகவும் இருக்கின்றது.

மனிதகுலம் தனது சொந்த விதிகளை உருவாக்கி அதனடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் போதிலும் அது இன்னமும் இயற்பியலின் இயற்கை விதிகளுக்குட்பட்டதுதான். தொடர்ந்து மாறுவதையும், முரண்படுவதையும் இயல்பாகக் கொண்டிருக்கிற உலக இருப்பின் நிலைகளை இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறைக்கு உட்படுத்தும்போது இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையில் முழுமையான எத்தகைய ஒரு எதிர்நிலையும் அங்கு நிலவுவதில்லை.

எங்கெல்ஸ் தனது டூரிங்க்கு மறுப்பு எனும் நூலில் இவ்வாறு எழுதினார்:

“இயற்கைதான் இயக்கவியலுக்கான நிரூபணம் நவீன விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அது இந்த நிரூபணத்திற்கு அன்றாடம் மேலும் மேலும் கூடுதலான விவரப் பொருட்களை வழங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.”**

டார்வினியப் பரிணாமக் கோட்பாடு இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். நீரின் கொதிநிலை, உறைநிலைப் புள்ளிகள் போன்றவற்றின் மூலம் இயற்பியலின் மாறிலிகள் எனச் சொல்லப்படுபவை ஓர் அளவு மாற்றமானது பண்புமாற்றமாக உருவாகிறது என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டுவதைக் கொண்டு அவர் மேலும் வாதிட்டார். கார்பன் அணுக்களின் சங்கிலித் தொடரை நீட்டியோ அல்லது சுருக்கியோ ஹைட்ரோகார்பன்களைத் தனித்த சேர்மங்களாக மாற்றும் செயல்முறை இதற்கு மற்றொரு சான்றாகும்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸைப் பொறுத்தவரை இயற்கையின் அந்நியமாதல் மற்றும் உழைப்பின் அந்நியமாதலைப் போன்றே இயற்கையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும், வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தன்னளவில் பிணைப்புக் கொண்டுள்ளவையாகும்.

உழைப்பாளர்களை தங்கள் உழைப்பிலிருந்தும், தங்களிலிருந்தும் மேலும் இயற்கை உலகு, மற்றும் ஒரு பரந்த சூழலியல் முழுமைக்குள் தங்களுக்குரியவற்றிலிருந்தும் முதலாளிய உற்பத்திமுறையும் உழைப்புப் பிரிவினையும் ஆழமாகத் துண்டாடியுள்ளன என்பதை விவாதித்தன் மூலம் அந்நியாமாதல் பற்றிய கருத்தாக்கத்தை வில்லியம் மோரிஸ் விரிவுபடுத்தினார். ஒரு கற்பனாவாத சோசலிஸ்டாக அவர், முதலாளித்துவத்தால் நசுக்கப்பட்டவையான, உழைப்பாளரின் இன்பம், சுதந்திரம் மற்றும் அவரின் அன்றாட அவசிய உழைப்பில் தனித்தன்மை ஆகியவையே கலை என எழுதுகின்றார்.

Image result for The Return of Nature: Socialism and Ecologyஉழைக்கும் வர்க்கத்தின் மீது சுமத்தப்பட்ட இரக்கமற்ற நிலைமைகளை ஆவணப்படுத்தும் ஃபாஸ்டர் எங்கெல்ஸின் 1845 இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை எனும் நூலுடன் தொடங்குகின்றார். தொழில்துறை நகரங்களில் தொழிலாளர் வர்க்கம் அழுக்கான, தூய்மையற்ற இடங்களில் வாழ்ந்து வேலைசெய்த சூழ்நிலையானது சுகாதார, மருத்துவ வசதி குறைபாட்டுடனும், நீர் மற்றும் காற்று மாசுபாட்டுனும், சத்துக்குறைபாடு, கலப்பட உணவு மிகுந்த உச்சப்பட்சமாக மரணத்தையோ, கடுமையான காயங்களையோ ஏற்படுத்தக்கூடிய நிலையான அச்சுறுத்தல் நிறைந்திருந்தாக இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தினரின் முன்கூட்டிய மரணத்திற்கான காரணமாக அவர்களது சுற்றுச்சூழலும் வாழ்க்கைச் சூழலுமே உள்ளது என்பதை எடுத்துக் கூறிய எங்கெல்ஸ் இதனை முதலாளிகளின் கைகளால் நடத்தப்படும் “சமூகப் படுகொலை” என அழைத்தார்.

செல்வந்தர்களுக்காகக் குறிக்கோளற்ற பண்டங்களை உற்பத்தி செய்தல், சமூகரீதியில் தேவையற்று பயன்படுத்தப்பட்ட உழைப்பு, தொழிலாளர்களின் துயரார்ந்த மற்றும் வீணடிக்கப்பட்ட வாழ்வுகள், அர்த்தமற்ற அதிகாரத்துவம், சுற்றுச்சூழல் அழிப்பு ஆகியவற்றின் மூலம் முதலாளித்துவத்தின் இயல்பான வீணழிவுத்தனத்தைப் பற்றி மோரிஸ் எழுதுகின்றார்.

பேராசை வெறிகொண்டு காடுகளை அழித்தல், மண்ணின் வளங்களை மலடாக்குதல், கடலின் மீதான கொள்ளை மற்றும் தொழிற்துறை முதலாளியம் வெளியேற்றும் கழிவுகளாலும், புகையாலும் ஆறுகளும், காற்றும் மாசுபடுதல் ஆகியவற்றை விமரிசப்பவர்களுள் ஒருவராக மோரிஸ் இருந்தார்.

சிக்கலான சூழலியல் அமைப்பின் மீதான மனிதர்களின் தலையீடானது இயற்கையின் உயிர்பொருளாக்கச் செயல்பாட்டுச் சமநிலையைக் குலைப்பதுடன் முன்னறிந்திராத விளைவுகளுக்கு காரணமாகிவிடும் என சிலர் எச்சரித்தனர். மக்கள்தொகைப் பெருக்கத்தை குறைகூறும் மால்தூசிய அணுகுமுறையை நிராகரித்த இத்தகைய சோசலிஸ்டுகள் மனிதகுலம் முழுமையையும் குற்றம்சாட்டாமல் விரிவாதிக்கத்திற்கும், இலாபத்திற்குமான முதலாளித்துவ வேட்கையே இதற்குக் காரணமென நேரடியாகக் குற்றம்சாட்டினர்.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனிதகுலம் ஒரு சூழலியல் கத்திமுனையில் நடந்துக் கொண்டுருப்பதாக லான்கெஸ்டர் குறிப்பிட்டார். ஆனால் நாம் முழுமையான பேரழிவை நோக்கியப் பாதையில் நீண்டகாலமாகவே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். குறுகியகால லாபத்திற்கான வேட்கை மேலாண்மைச் செய்யும் ஒரு சமூகத்தில் முதலாளித்துவ விரிவாதிக்கம், சில நபர்களில் கையில் குவியும் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவை அபாயகரமான விளைவுகளையே ஏற்படுத்தும். லாபத்திற்கான தேவைகளுக்கும் சமூகம் முழுமைக்குமான உண்மையான தேவைகளுக்குமிடையே ஒரு சமனிலையைப் பேணுவதற்கு முதலாளித்துவம் திறனற்று இருக்கின்றது, அதனால் அதைச் செய்யவும் முடியாது.

வளிமண்டல வெப்பமயமாதல், வேளாண் வாணிபாத்தாலும், நெருப்பாலும் அழிக்கப்படும் புவியின் வனப்பகுதிகள், பெரிய அளவில் இயற்கை வாழ்விடங்களிலும் உயிர்பன்மையச் சூழல்களிலும் ஏற்பட்டிருக்கும் இழப்பு, மீகத் தீவிரமான வானிலைமாற்ற நிகழ்வுகள் மற்றும் நுண்ஞெகிழிப் பொருட்களுடன் நீராதார அமைப்புகளில் ஏற்படும் மாசு என இந்த உண்மைகள் அனைத்தையும் பலப்பத்தாண்டுகளாகவே முதலாளித்துவ நிறுவன அமைப்புகள் ஆத்திரங்கொண்டு அடக்கியோ அல்லது நிராகரித்தோதான் வந்துள்ளன. பெருந்தொற்று, பொருளாதார மந்தம், பெரியளவிலான வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை, ஏகாதிப்பத்தியங்களுக்கு இடையேயான போட்டி, காலநிலைப் பேரழிவு மற்றும் நமது ஒரே நம்பிக்கையான தொழிலாளி வர்க்கத்தின் பெருந்திரள் நடவடிக்கைக்கான உள்ளார்ந்த ஆற்றல் போன்ற பல்வேறு நெருக்கடிகளினால் வேதனைப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும் இன்றைய உலக முதலாளித்துவம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது,

இயற்கையின் மீள்வருகை நூல் ஒரு நூற்றாண்டுகால இயக்கவியல் சூழலியல் ஆய்வு புலமைத்துவத்தை எடுத்துரைப்பதுடன் சோசலிசக் கருத்துக்களின் தோற்றத்திலிருந்து சூழலியல் சிந்தனையின் ஆழமான போக்கு குறித்த நமது புரிதலை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையையும் வழங்குகின்றது. வருந்ததக்கவகையில், இந்த நூல் நடவடிக்கைக்கான எந்தவகையான வழிகாட்டலையும் வழங்கவில்லை. இருப்பினும், ஃபாஸ்டர் நமது உடனடி கடமையை இவ்வாறு கோடிட்டு காட்டுகின்றார்:

“பூவுலகின் சூழலியலை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும், முதலாளித்துவத்தின் தன்னளவிலான வழிபாட்டையும், வர்க்கச் சார்பிலான பேராசையின் ஒருங்கிணைக்கப்பட்ட அதிகாரத்தையும் நாம் இன்றைக்கு தூக்கியெறிந்தாக வேண்டும்.”


அயர்லாந்து சோஷலிஸ்ட் கட்சி இணையதளத்தில் வெளியான விமர்சனம்.

*Marx’s Ecology நூல் மு. வசந்தகுமார் பொழிபெயர்ப்பில் மார்க்சும் சூழலியலும் எனும் தலைப்பில் விடியல் பதிப்பக வெளியீடாக 2012-ஆம் ஆண்டு வந்துள்ளது.

**இந்த மேற்கோளின் தமிழாக்கமானது அலைகள் பதிப்பகம் வெளியீட்டுள்ள டூரிங்க்கு மறுப்பு நூலில் இருந்து எடுக்கப்பெற்றிருக்கின்றது.

தமிழில் க. அன்பரசு

2 COMMENTS

  1. நல்ல மொழிபெயர்ப்பு. அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  2. நல்ல மொழிப்பெயர்ப்பு . மொழிபெயர்பாளருக்கு வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.