ஜூலை 4ம் நாள் அடிமையாக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தினம்?

ஜூலை 4ம் நாள் நியூயார்க் நகரம் ரோசெஸ்டரில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் உரையாற்றுவதற்கு அடிமைமுறையை ஒழிக்கப் போராடுபவரும், அரசியல்வாதியுமான ஃபெரட்ரிக் டக்ளஸை ரோசெஸ்டர் லேடி அடிமைமுறை ஒழிப்பு அமைப்பு அழைத்தது.

ஆனால் அவர் அந்த அழைப்பை மறுத்து, அதற்குப் பதிலாக ஜூலை 5ம் நாள் பேசுவதாக ஏற்றுக்கொண்டார்.

வாஷிங்டன் அரசியல்வாதிகள், அடிமைமுறை ஒழிக்கப் போராடும் வெள்ளையர்கள், ஜனாதிபதி மில்லர்ட் பில்மோர் ஆகியோர் முன்னிலையில் டக்ளஸ் பேசியவை வரலாற்றின் முன்னுதாரண பேச்சாகத் திகழ்கிறது. அதிகாரத்திற்கு எதிராக உண்மையை உரக்கப் பேசுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இவரின் பேச்சு இன்னும் வரலாற்றின் முன் பக்கங்களில் எடுத்துக்காட்டப்படுகின்றன. அமெரிக்காவின் பாசாங்குத்தனத்தை எவ்வித தயக்கமின்றி டக்ளஸ் விமர்சனம் செய்தது இன்றளவும் அப்பேச்சின் உண்மைத்தன்மையை நிரூபிக்கிறது.

நாடு முழுவதும், வரலாற்று வகுப்புகளில் இந்த உரை கற்பிக்கப்பட்டாலும், பெரும்பாலான வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் இவர் பேசியவற்றின் சுருக்கத்தை மட்டுமே வெளியிட்டுள்ளன.

ஒரு மணிநேரத்திற்கு மேலாக நீடித்த இவரின் முழுப் பேச்சும், ஒரு வரலாற்றுப் பாடமாகவும், அரசியல் சாசனமாகவும், மதம் மீதான வரையறையாகவும் இருக்கின்றன. ஆகவேதான் இதன் முழு வடிவத்தையும் வாசித்து அறிந்துகொள்ள வேண்டி விரும்புகிறோம். அக்காரணத்தாலேயே அவர் பேச்சின் முழு வடிவத்தையும் இங்கே தருகிறோம்.

 

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, நண்பர்களே, மக்களே,

எனக்கு முன்பு இங்குப் பேசியவர் எவ்வித அச்ச உணர்வும் இல்லாமல் சிறப்பாகப் பேசியுள்ளார். என்னைவிட வலுவான நரம்புகளைக் கொண்டுள்ளார் என்று நம்புகிறேன். இந்த நாளில் என் மீதே அதிக அவநம்பிக்கையுடனும் அதிக நடுக்கத்துடனும் ஒரு அவைக்கு முன்பு ஒரு பேச்சாளராக நான் தோன்றுவேன் என்று இதுவரை நான் என்னிப்பார்த்ததில்லை.

இந்தத் தாள்களும் அட்டைகளும், ஜூலை 4ம் நாள் நான் உரையை வழங்க உள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளது. இது ஆச்சரியமாகவும் வழக்கத்தில் இல்லாததாகவும் இருக்கிறது. ஆனால் நிச்சயமாக இந்த அழகிய மண்டபத்தில் பேசுவதற்கும் பலர் என் பேச்சைக் கேட்க வருகைதந்து என்னை அங்கீகரித்ததற்கும் நான் பெருமைப்படுகிறேன். ஆனால் அவர்களின் பழகிய முகங்களோ, சீரான இந்தக் கொரின்தியன் அவையோ என்னை நடுக்கத்திலிருந்து விடுவிக்கவில்லை.

உண்மையில், நான் அடிமையாக இருந்து வேலை செய்தபோது தப்பித்த தோட்டம் இந்த அவையிலிருந்து கணிசமான தூரத்தில்தான் இருக்கிறது. அங்கிருந்து தப்பித்த பிறகு நான் சந்தித்த நெருக்கடிகள் அடிமையாக இருந்த போது நான் சந்தித்தவை விட அதிகம். ஒருவித நன்றியுணர்வுடனும், ஆச்சரியத்துடனும் தான் இன்று உங்கள் முன்னால் நான் நின்றுகொண்டிருக்கிறேன். நான் எதைப்பற்றி உரையாற்றவிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாமல் இல்லை. பெரிதாக எவ்வித தயாரிப்பையோ, இடத்திற்கு ஏற்றவாறு குரலை உயர்த்தியோ நான் பேசப் போவதில்லை. எனக்குக் கிடைத்த குறைந்த அனுபவத்துடனும், முழுமையற்ற கல்வியுடனும் என்னுடைய கருத்துகளைத் தடையில்லாமலும் தெளிவில்லாமலும் பேச முடியாது என்றே கருதுகிறேன். என்மீதான உங்களின் நம்பிக்கையும் தாராள மனப்பான்மையையும் கொண்டு என்னுடைய பேச்சைத் துவக்குகின்றேன்.

நீங்கள் விடுதலை அடைந்ததாலும். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் நீங்கள் அரசியல் சுதந்திரம் பெற்றதாலும் ஜூலை 4ம் நாள் உங்களுக்குக் கொண்டாட்டத்திற்குரிய நாளாக இருக்கிறது. எவ்வாறு கடவுளின் மக்களான இஸ்ரேலியர்கள் எகிப்து மன்னன் பாரோவிடம் இருந்து சுதந்திரம் அடைந்தானோ அது போன்றதொரு சுதந்திரத்தை நீங்கள் பெற்ற நாள் இது. நீங்கள் கடந்த காலத்தை அசைபோட இந்த நாள் தூண்டுகிறது. நீங்கள் பெற்ற சுதந்திரம், அதன் வெளிப்பாடு, சுதந்திரம் பெற்ற அந்த நாளில் ஏற்பட்ட அதிசயங்கள் ஆகியவற்றை எண்ணி எண்ணி உங்கள் மனம் மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் தேசத்தின் வயதை மேலும் ஒரு ஆண்டு முன்னேறியுள்ளதற்காகவும், இப்போது அமெரிக்க குடியரசு நாடு 76 வயதை அடைந்துள்ளதற்காகவும் சேர்ந்தே இந்தக் கொண்டாட்டம் என்று எடுத்துக்கொள்கிறேன். மக்களே! உங்கள் நாடு மிக இளமையான துடிப்புமிக்க நாடாக இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். மனிதனைப் பொறுத்தவரை 76 வயதென்பது நன்றாக வாழ்ந்து அனுபவித்த வயது. ஆனால் ஒரு நாட்டின் காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த வயது மிக மிக சிறிது. மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கென்று விதிக்கப்பட்ட வயது 70 தான். ஆனால் நாடுகளின் வயதோ ஆயிரக்கணக்கில் இருக்கும். இதன்படி பார்த்தோமானால், நீங்கள் உங்கள் தேசியக்கட்டுமானத்தின் மிக மிக ஆரம்பப் பகுதியில்தான் இருக்கிறீர்கள். இன்னும் தவழும் குழந்தைப்பருவத்தினராகத்தான் இந்த தேசம் இருக்கிறது. இதற்காக உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன் என மீண்டும் கூறிக்கொள்கிறேன். சிந்தனையில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அடிவானத்திற்கு மேலே இருக்கும் இருண்ட மேகங்களுக்கடியில் இருந்து மேலெழுந்து வர அந்த நம்பிக்கை மேலும் மேலும் வலுவடைய வேண்டிய தேவை உள்ளது. பேரழிவுக் காலங்களில் தோன்றும் தீப்பிழம்புகளைப் போன்று சீர்திருத்தவாதியின் கண்கள் அனல் தெறிக்கின்றன. ஆனால் அமெரிக்கா பிறந்ததிலிருந்து இன்றளவும் ஈர்க்கக்கூடிய அளவில் இளமையாக இருக்கிறாளே என நினைக்கும்போது அந்த சீர்திருத்தவாதி இதயம் உருகிவிடுகிறார். அவள் அடையும் இலக்கிற்கு ஞானம், சத்தியம் மற்றும் நீதி ஆகியவை தரும் உயர் படிப்பினைகள் அவளுக்கு வழிகாட்டியாக அமையும் என அவர் நம்பாமல் இருக்கக்கூடும். ஒரு நாட்டின் வயது அதிகமாக அதிகமாக அந்நாட்டின் தேச பக்தர்களின் இதயம் சோகம் நிரம்பியதாகவும் சீர்திருத்தவாதியின் கண்கள் அனல் தெறிப்பதாகவும் இருக்கக்கூடும். அந்நாட்டின் எதிர்காலம் இருளில் மூடியிருக்கலாம். அந்நாட்டின் மேல் நம்பிக்கை வைத்துள்ள தீர்க்கதரிசிகளுக்கு இது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அமெரிக்கா அப்படியில்லை. இத்தகைய காரணங்களால் அமெரிக்காவின் இளமை என்னை ஆறுதல் படுத்துகிறது. பெரும் நீரோடைகள் அதன் பாதையை எளிதாக அடைந்துவிடவில்லை. காலங்காலமாக ஆழமாகத் தோண்டி தனக்கான வழியை ஏற்படுத்திக்கொண்டது. இவை சில சமயம் அமைதியாகவும் நிலைத்த கம்பீரத்தன்மையுடனும் நிலத்தை உயரமாக்குகிறது, இப்பூமியை புத்துணர்ச்சிமிக்கதாகவும், தனது ரகசியமான மூலக்கூறுகளின் உதவியுடன் உரமிக்கதாகவும் வளமைமிக்கதாகவும் ஏற்படுத்துகிறது. ஆனால் சில சமயங்களில் தனது கோபமான அலைகளால் நம் உழைப்பால் பல வருடங்களாகத் திரட்டிச் சேர்க்கப்பட்ட செல்வத்தைத் தூக்கி வீசிவிடக்கூடும். ஆனால் பொறுமையாக மீண்டும் தனது பழைய வழித்தடத்திற்கே திரும்பிச்சென்று எப்போதும்போல அமைதியாக ஓடும். ஆனால் ஏரியோ வறண்டு கூட போகுமே தவிர தன் எல்லையைவிட்டுத் தாண்டாது. அவ்வாறு வறண்டுவிட்டால், வெறும் காய்ந்துபோன கிளைகளையும், பெரும்பாறைகளையும், ஆழமான குழியிலிருந்து சுழன்றடிக்கும் காற்றும் என வீழ்ந்துபோன ஒளிமிக்க நாட்களின் சோகக் கதையாக மாறிவிடும். நீர்நிலைகள் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறுதான் அங்கிருக்கும் ஒரு நாடும் இருக்கும்.

என் சக மக்களே, பல கூட்டமைப்புகள் செய்வது போல இந்த நாளின் வரலாற்றை ஆழ்ந்தும், விரித்தும் நான் கூறவேண்டுமென்று இல்லை. 76 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டின் மக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மக்கள். நீங்கள் இப்போது பயன்படுத்தும் ”சுதந்திர மக்கள் ”(நீங்கள் பெருமைப்படுகின்ற ஒரு பட்டம்) எனும் பதம் அப்போது பயன்படுத்தப்பட்டதில்லை. நீங்கள் பிரிட்டிஷ் மன்னராட்சியின் கீழ் இருந்தீர்கள். உங்கள் தந்தையர்கள் ஆங்கில அரசாங்கம் தான் இம்மண்ணின் அரசாங்கம் என்று கருதினார்கள். இங்கிலாந்து தான் அவர்களின் சொந்த நாடு என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது. இந்த அரசாங்கம் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து கணிசமான தூரத்தில் இருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள். அமெரிக்கா எனும் சிறுபிள்ளையை வழிநடத்தும் தகப்பன் ஸ்தானத்தில் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் தனது காலனிய குழந்தைகள் மீது சில கட்டுப்பாடுகள், சுமைகள், வரம்புகளை தன் முதிர்ந்த அனுபவத்தைக் கொண்டு விதித்தது. இத்தகைய செயல்பாடு சரியானதும் பொருத்தமானதும் என்றும்கூட கருதப்பட்டது. உங்கள் தந்தையர்களுக்கு இந்த நாளின் முக்கியத்துவம் பற்றிய ஒரு நாகரிக யோசனைகூட இருந்ததில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் எண்ணம் மாறியது. அவர்கள் எண்ணியதற்கு மாறாகவே அனைத்தும் நடந்தன. இதுபோன்ற முறைகேடான அரசாங்கத்தின் சட்டங்களும் அதன் தன்மைகளும், தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான நியாயமான காரணங்கள் மற்றும் அதற்கான அறிவு சிந்தனைகள் ஆகியவை பிரிட்டிஷ் நாட்டிற்கு ஒன்றாகவும் அமெரிக்காவிற்கு ஒன்றாகவும் இருப்பதைக் கண்டனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமற்றது, அநியாயமானது, அடக்குமுறையைக் கொண்டது என்று எதிர்த்து குரல் கொடுக்குமளவிற்கு இப்போது அவர்களின் கோபம் கிளர்ந்துவிட்டது. அக்கிளர்ச்சி ஒட்டுமொத்தமாக அவர்களை இவ்வாறு பேச வைத்தது. இந்த அடக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அமைதியாக முடிந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர். சக மக்களே நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் தந்தையர்களின் கருத்துடன் நான் முழுவதும் ஒத்துப்போகிறேன் என்று நான் சொல்ல வேண்டுமென்பதில்லை. 1776ம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஏற்பட்ட பொழுது நான் வாழ்ந்திருந்தால் எந்த சாரரின் பக்கம் நின்றிருப்பேன் என்று ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் இப்போது யாருக்கும் எவ்வித லாபமும் இல்லை. இப்போது மிக எளிதாக அமெரிக்கா செய்தது சரி என்றும் இங்கிலாந்து செய்தது தவறு என்றும் சொல்லிவிடலாம். அனைவருமே இதைச் சொல்லலாம். அமெரிக்க காலனிகள் மீது இங்கிலாந்து அரசாங்கம் செலுத்திய கொடுங்கோன்மைக்கு அடங்காமல் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் ஓடோடிச் சென்றிருக்கும் என்று இப்போது யார் வேண்டுமானாலும் சொல்லலாம். உன்னதமான துணிச்சலைக் காட்டிலும் கோழைத்தனம் குறைவானதில்லை. ஆனால் இங்கிலாந்திற்கு எதிராகவும் நம் காலனிகளுக்கு ஆதரவு தந்து பக்கபலமாக நிற்க வேண்டிய ஒரு காலம் இருந்தது. தீங்கை ஏற்படுத்தும் சதிகாரர்கள், போராளிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் ஆபத்தானவர்கள் ஆகியவர்களின் தீர்ப்பு நாள் குறிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் சரிக்கு எதிராகத் தவறு, பலவீனத்திற்கு எதிராக பலம், ஒடுக்கப்படுபவருக்கு எதிராக ஒடுக்குபவர். இந்த கடைசி பதத்தில், இங்குதான் நன்மை இருக்கிறது. இந்த ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் நாகரிகமற்றதாகவே கருதப்படுகிறது. சுதந்திரம் பெற்றதற்கான காரணி உங்கள் தந்தையர்கள் செய்த செயல்கள் மீதும் அவர்களின் பெருமைமீதும் ஏற்றப்படலாம். ஆனால் இவற்றோடு மட்டும் சார்ந்ததல்ல இதற்கும் மேல் இருக்கிறது.

உள்நாட்டு அரசாங்கம் தங்களைக் கடுமையாகவும் அநியாயமாகவும் நடத்துவதை அவர்களே உணர்ந்திருக்கிறார்கள். நேர்மை, ஆன்மசக்தி, மன்னிப்பு கோரும் குணங்கள் போன்றவற்றைக் கொண்ட உங்கள் தந்தையர்கள் இத்தகைய அநியாயங்களை எதிர்த்து அரசாங்கத்திற்கு மனுசெய்து மறுபரிசீலனைக்குக் கோரினார்கள். அரசாங்கத்தின் மேல் இருந்த நம்பிக்கை விசுவாசம் ஆகிய காரணங்களால் இத்தகைய வழிமுறையைப் பின்பற்றினார்கள். இது உண்மையில் முற்றிலும் தனித்துவமிக்கது. ஆனால் இத்தகைய செயல்பாடு எவ்வித எதிர்வினையையும் ஆற்றவில்லை. வேறுபாட்டுடன் தங்களை நடத்துகிறார்கள் என்று அவர்களே இப்போது உணர்ந்தார்கள். இருந்தாலும், விடாமுயற்சியுடன் முயற்சி செய்தார்கள். தங்கள் முயற்சிகளிலிருந்து பின்வாங்குபவர்கள் இல்லை அவர்கள்.

புயலில் கப்பல் அடித்துக்கொண்டு சென்றுவிடாமல், எப்படி ஒரு சிறிய நங்கூரம் வலிமையுடன் பிடித்துக் கொண்டிருக்குமோ அவ்வாறுதான் உங்கள் தந்தையர்கள் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான காரணமும் வலுவாக இருந்தது. அரசாங்கத்தின் மீதும், அரசியல்வாதிகள் மீதும் புகாரளிக்கப்பட்டுத் தொடரப்பட்ட வழக்குகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் வந்தது. புகழ்ச்சியும், பெருமையும் கொண்ட பிரிட்டிஷ் அரசியல்வாதி அதன் நீதிக்குக் கட்டுப்பட்டவன் ஆவான். அந்த நீதிக்கு ஆதரவாக அவனுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றமே ஆதரவு தரும். ஆனால் சரியான நீதி கிடைக்கிறதா என்பது தான் இங்கே கேள்விக்குறி. இஸ்ரேலியர்களை விடுவித்த பாரோ மன்னன், அவர்கள் செங்கடல் வழியே செல்வதை அறிந்து அவர்களைக் கொல்வதற்காகத், தனது படை வீரர்களுடன் செங்கடல் நோக்கிச் சென்றான். இறைவன் இஸ்ரேலியர்களை தப்பிக்க வைத்து, அவர்கள் கரை அடைந்ததும், பாரோ மன்னன் கரைக்கு வராதவாறு செங்கடலின் நீரை இறைவன் அடைத்துவிட்டார். அந்தக் காலத்திலிருந்தே எவை நீதி எவை அநீதி என்று தெரியாத அளவிற்குக் கொடுங்கோலர்கள் குருட்டுத்தனத்துடன் இருந்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் முட்டாள்தனமானது என்று இப்போது நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஏன் இங்கிலாந்தே ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனால் இத்தகைய நிகழ்ச்சியை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இன்றைய ஆட்சியாளருக்கு இல்லை.

அறிவுஜீவிகளை அடக்குமுறை பித்துநிலைக்குத் தள்ளிவிடும். உங்கள் முன்னோர்கள் அறிவுஜீவிகள். அவர்களுக்கு மட்டும் பித்து பிடிக்கவில்லை என்றால், அத்தகைய நடத்தையில் அவர்கள் முற்றிலும் தங்கள் பொறுமையை இழந்திருப்பார்கள். இத்தகைய மோசமான அடக்குமுறைக்குத் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டிக்கொண்டனர், காலனிகளில் ஏற்படும் அடக்குமுறைகளை அவர்களின் முழு வலிமையால் முழுமையாகவோ , சிறிது சிறிதாகவோ கூட குறைக்க முடியவில்லை. ஆனால் இத்தகைய அடக்குமுறைகளுக்கு துணிச்சல்காரனிடம் எப்போதும் ஒரு தீர்வு இருக்கும். இதோ இங்கே இப்போது இருக்கிறதே, காலனிகளை ஒட்டுமொத்தமாகப் பிரித்துவிடும் உத்தி பிரிட்டிஷ் அரசிடமிருந்து உதித்தது. இத்தனை காலத்திற்குப் பிறகு இதைக் கேட்கும் நமக்கே இவ்வளவு பதட்டமாக இருக்கிறதென்றால் அப்போது அது இன்னும் எத்தகைய எதிர்வினையைப் பெற்றிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் உத்தி. இது அறிவிக்கப்பட்ட அந்த நாளில் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வு, சுட்டிக்காட்டப்பட்ட சாத்தியங்கள் அனைத்தும் அதிர்ச்சியும், பதட்டத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

பிரிவினையைத் தூண்டுபவர்கள் தூண்டிக்கொண்டுதான் இருப்பார்கள் அத்தகையவர்கள் அப்போதும் இருந்தார்கள், இனிமேலும் மேலெழுந்து வருவார்கள். இப்புவியில் அவர்களுக்கான இடம் என்பது சிறிதே (அதனால் எவ்வளவு பெரிய அசாதாரண வெற்றி பெற்றாலும் அல்லது ஒரு தவறு சரிசெய்யப்பட்டாலும் அதை அவர்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்) அதை அவர்கள் நட்சத்திரம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்று சொல்லுமளவிற்குத் துல்லியத்தை எதிர்பார்ப்பவர்கள். அவர்கள் மாற்றம் என்பதையே வெறுப்பவர்கள். ஆனால் தங்கம், வெள்ளி செம்பு ஆகியவை மாறிதான் ஆகவேண்டும். இத்தகைய மாற்றத்தால் அவை எப்போதும் தமக்குச் சாதகமான அளவில் வலிமையுடன் மாறுகிறது.

மாற்றத்தை விரும்பாத இத்தகையவர்களை அந்தக் காலத்தில் தோரிக்கள் என்றழைக்கப்பட்டனர். அந்தப் பெயர் கிட்டத்தட்ட “அதிக நவீனமானது“ என்று பொருள்படுகிறது. பட்டப்பெயர் போன்று தோன்றும் இதை நாம் நம்முடைய ஆவணங்களில் பழைய அரசியல்வாதிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று அறியலாம்.

இத்தகைய திட்டத்திற்கு எதிரான அவர்களின் அப்போதைய எதிர்ப்பு என்பது முக்கியத்துவமும் சக்திவாய்ந்ததாகவும் ஆகும். ஆனால் அவர்களின் பயங்கரவாதத்திற்கும், அதற்கு எதிரான பயமுறுத்தும் குரல்களுக்கும் இடையே ஆபத்தான மற்றும் புரட்சிகர யோசனையான பிரிவினையும் செயலில் வந்தது. அதற்கேற்றவாறு நாடும் ஒத்திசைந்தது.

1776ம் ஆண்டு ஜூலை 2ம் நாள் பழைய அமெரிக்க காங்கிரஸ் சட்ட அவை பயணத்தை விரும்புபவர்களும், இந்நிலத்தைப் போற்றுபவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாகும்படி தேசிய பாதுகாப்புக் குழுவினரின் திட்டத்தின் படி ஒரு  மோசமான திட்டத்தை முன் வைத்தார்கள். ஒரு தீர்மானத்தின் வடிவில் அது இயற்றப்பட்டது. எங்கள் நாட்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை நாங்கள் எதிர்க்கும்போது அதன் வெளிப்படைத்தன்மையை இதற்குச் சமமாக இருக்கவே விரும்புகிறோம். இதை நான் உங்கள் முன் படித்தால் என்னுடைய கதையைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும் உங்களை ஆசுவாசப்படுத்தியதாகவும் இருக்கும். வாசிக்கிறேன்.  ”தீர்க்கப்பட்டது, இந்த ஐக்கிய காலனிகள் சுதந்திரமாக விடுவிக்கப்படுகின்றன. இவை இனி சுதந்திர நாடுகள். இனி அனைவரும் பிரிட்டிஷ் அரசின் விசுவாசத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இந்த காலனிகளுக்கும் பிரிட்டிஷ் நாட்டிற்குமான அனைத்து அரசியல் தொடர்புகளும் விலக்கிக்கொள்ளப்படுகின்றன.

மக்களே உங்கள் முன்னோர்கள் அந்த உடன்படிக்கை மூலம் சிறப்பானவற்றை மேற்கொண்டார்கள். அவர்கள் வெற்றிபெற்றார்கள். அவ்வெற்றியின் பலனை இன்று நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சுதந்திரம் பெற்றீர்கள். உங்களுக்காகச் சுதந்திரம் பெற்றார்கள். ஆகவே உங்களுக்கு மிகப் பொருத்தமான இந்த நாளை நீங்கள் கொண்டாடலாம். உங்கள் நாட்டு வரலாற்றின் முதல் நிகழ்வு ஜூலை 4ம் நாள். இந்த நாள் வளர்ச்சியடையாத உங்கள் தேச முன்னேற்றத்திற்கான நீண்ட சங்கிலியில் ஒரு சிறு திருகாணி போன்றது தான்.

நாட்டின் மீதான பெருமையும், பக்தியும், எவ்விதத்திலும் நாட்டின் மீதிருக்கும் நன்றிக்குக் குறைவானதில்லை. இந்த நன்றிமிக்க குணம்தான் உங்களை இந்த நாளை மறக்கவிடாமல், கொண்டாடுவதற்குத் தூண்டுகிறது. நீங்கள் பெற்ற சுதந்திரம் என்பது உங்கள் நாட்டின் திட்டமிடப்படாத எதிர்காலத்தின் ஒரு பெரிய சங்கிலியில், சிறு திருகாணிதான் என்று முன்பே தெரிவித்திருந்தேன். உள்ளபடியே அதைநான் உணர்ந்துதான் கூறினேன். அந்த உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை உண்மைகளைக் கடைப்பிடிப்பதன் வழியே அதைக் காப்பாற்றலாம். அந்த அடிப்படை உண்மையின் வழியே நில்லுங்கள். அனைத்து நேரங்களிலும், இடங்களிலும், உங்கள் எதிரிகளிடமும் எந்த நிலையிலும், எதன் பொருட்டும் அந்த உடன்படிக்கைக்குத் தக்கவாறு உண்மையாக நடந்துகொள்ளுங்கள்.

உங்கள் நாடு எனும் கப்பலில் நீங்கள் ஏறி நின்று பார்க்கும்போது அங்கு அச்சுறுத்தும் திரளான கருமைநிற மேகங்களை உங்களால் பார்க்க முடியும், தூரத்திலிருக்கும் மலைகளுக்கு அந்தப் பக்கம் இருக்கும் வலிமையான பாறைகள் இருக்கின்றன. திருகாணி கழன்றுவிட்டால் சங்கிலி உடைந்துவிடும். பிறகு அது அவ்வளவுதான் மீண்டும் சேர்க்க முடியாது. இந்த நாளில் கெட்டியாக நில்லுங்கள். இந்த நாளுக்குரிய அடிப்படையில் உண்மையில் உறுதியுடன் இருங்கள். நள்ளிரவில் புயலில் சிக்கிய கப்பலை வலிமையுடன் நின்று போராடிக் காப்பாற்றும் கப்பல் ஓட்டி போல் உறுதியுடன் நில்லுங்கள்.

ஒரு நாடாக உருவாவது என்பது மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் நிகழ்ச்சிதான். பொதுவான புரிதல்களுக்கு அப்பால் இந்த குடியரசின் வருகையை ஒரு சிறப்பு கவர்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக அமைகிறது.

அந்தக் காலகட்டத்தை பின்நோக்கி நான் பார்க்கையில், அந்தநாள் மிகவும் சாதாரணமானதாக, ஒழுக்கம் மிகுந்ததாக, அமைதியான முறையில் இருந்திருக்கிறது.

அந்தக் காலத்தில் இந்நாடு மூன்று கோடி மக்களைக் கொண்டிருந்தது. தொடர் போர்களால் நாடே ஏழ்மை நிலையிலிருந்தது. மக்கள் தொகையும் மிகவும் குறைவு அவர்களும் சிதறி இருந்தனர். நாடு காட்டுப் பகுதி நிறைந்ததாக எளிதில் அணுக முடியாததாக இருந்தது. எவ்வழியிலும் ஒற்றுமையும் ஒன்று சேர்தலும் இப்போது போல் அப்போது நிகழவில்லை. நீராவி இன்ஜினும் மின்சாரமும் அப்போது எவ்விதத்திலும் மக்களை ஒழுங்குபடுத்தவோ கட்டுப்படுத்தவோ இல்லை. போட்டோமெக்லிருந்து டெலாவேர் வரை பயணம் செய்வதற்கே நாட்கணக்கில் ஆகும். இதுபோன்ற மற்றும் பல அசாதாரண சூழ்நிலைகளில் உங்கள் முன்னோர்கள் தனியுரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடி அதில் வெற்றியும் பெற்றனர்.

சக மக்களே இந்தக் குடியரசை ஏற்படுத்தியதற்குக் காரணமாக அமையும் முன்னோர்களை ஒருவித கட்டாயத்தின் பேரில் நான் வணங்குகிறேன். சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்கள் மிகத் துணிச்சலானவர்கள். அவர்கள் சிறந்தவர்களும் கூட. அவர்கள் வாழ்ந்த சிறப்புமிக்க காலகட்டத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்த்தவர்கள். வளர்ந்து வரும் ஒரு நாடு அத்தகைய காலகட்டத்தில் இவ்வளவு சிறப்புமிக்க மனிதர்களை உருவாக்கியது அசாதாரணமிக்கதுதான். ஆனால் நான் இருக்கும் இடத்திலிருந்து என் பார்வையில் அவர்களின் இடம் என்பது அவ்வளவு சிறப்புமிக்கது என்று கூறுவதற்கில்லை. ஆனால் அவர்கள் ஆற்றிய செயலைப் பற்றி எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் அரசாங்கத்தில் மிக அறிவாற்றல் மிக்கவர்களாக இருந்தார்கள்.  அவர்களின் நாட்டுப் பற்று, அவர்கள் செய்த நல்லவை, அடிப்படை உண்மைக்காக அவர்கள் போராடியது என எதுவும் அவர்களைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இக்காரணங்களால் அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையிலும் வணங்கவும் உங்களுடன் இங்கு நான் ஒன்றிணைகிறேன்.

இந்த நாட்டை அவர்களின் தனிப்பட்ட நலன்களைவிட அதிகமாக நேசித்துள்ளனர். இது மனித குலத்தின் தனிச்சிறப்புமிக்க செயல் இல்லை எனினும், நாம் அனைவரும் இது ஒரு அரிதான செயலாகவே கருதுகிறோம். அதைச் செயல்படுத்தும்போது அவர்கள் மீது நமக்கு மரியாதை ஏற்படுகிறது. தன் நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்பவனை இன்னொரு மனிதன் வெறுப்பது என்பது மனித சுபாவத்திற்கே எதிரானதாகும். உங்கள் மூதாதையர்கள் தங்கள் உயிரையும், நலனையும் தன் நாட்டின் மரியாதைக்காகத் தியாகம் செய்தனர். தனியுரிமை மீதான அவர்களின் பற்றுறுதி காரணமாக மற்ற அனைத்திலிருந்தும் தங்கள் ஆர்வத்தை இழந்தனர்.

அவர்கள் அகிம்சையை விரும்புபவர்கள். ஆகவே அடிமைத்தனத்திற்கு எதிரான புரட்சியை அகிம்சைவழியில் நடத்தவே விரும்பினர். அவர்கள் அமைதியானவர்கள்தான் ஆனால் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதில் அவர் பின்வாங்கவில்லை. அவர்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டனர். ஆனால் அதன் எல்லை எதுவரை எனவும் அறிந்திருந்தனர். அவர்களுக்கு ஒழுங்கு நடைமுறை மேல் நம்பிக்கை இருந்தது. ஆனால் அடிமைமுறையிலான ஒழுங்கின் மேல் நம்பிக்கை வைக்கவில்லை. சரியில்லாதவை என அவர்கள் கருதிய எதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடிமை, அடக்குமுறைக்கு எதிராக நீதி, தனியுரிமை, மனிதநேயம் மட்டுமே தங்களின் இறுதி இலக்காகக் கொண்டு போராடினார்கள். அத்தகைய மனிதர்களின் நினைவைப் போற்றுவதில் நீங்கள் பெருமைப்படலாம். அவர்களுடைய காலத்திலும், அவர்களின் தலைமுறையிலும் அவர்கள் சிறப்புமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். இன்றைய சீரழிந்த காலகட்டத்திற்கு எதிராக அவர்களின் வலிமையான மனிதத்தன்மை சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது.

அவர்களின் இயக்கங்கள் எவ்வளவு துல்லியமிக்கதாகவும் சரியாகவும் இருக்கின்றன எனப் பாருங்கள். அவை  1 மணிநேரம் செய்யும் அரசாங்க வேலை போலல்லாமல் அவர்களின் அரசியல் ராஜதந்திரம் அந்தக் கணத்திற்கும் மீறி எதிர்காலத்தை வலுவானதாக மாற்றுமளவிற்குப் பரந்து விரிந்திருந்தது. காலத்திற்கும் அழியாத நித்திய உண்மைகளைக் கைக்கொண்டு, தங்கள் எதிர்ப்பை வழிநடத்துமளவிற்குச் சிறப்புமிக்க  முன்னுதாரணமாக இருந்தனர். அவர்களைப் பின்பற்றுங்கள்!

தாங்கள் எதிர்கொள்ளும் கடுமையான செயலை எண்ணி பாராட்டிக்கொள்ளுதல், அத்தகைய போராட்டத்திற்கான காரணத்தை உறுதியாக நம்புதல், தற்சமயம் இவ்வுலகில் நடைபெறும் சுரண்டலுக்கு எதிரான அழைப்பு, தாங்கள் எடுத்துக்கொண்ட செயலின் மீதான உறுதியை பொறுப்புணர்வை விண்ணகத்தவரிடம் முறையீடு செய்தல், தங்களுக்கு எதிராக தாங்கள் ஏற்றுக்கொள்ளவிருக்கிற பொறுப்பைப் புத்திசாலித்தனத்துடன் அளவிடுதல், இந்தக் குடியரசை ஏற்படுத்திய உங்கள் முன்னோர்கள் சிறப்புமிக்க தேசபக்தியின் காரணமாகவும், உயர் தத்துவங்கள் மற்றும் சுதந்திரம் பெறுவதற்காக நீதிமீதிருந்த குறைந்தளவு நம்பிக்கையின் காரணமாகவும் இந்த நாட்டின் கட்டுமானத்திற்கு ஒரு அஸ்திவாரத்தை அமைத்தனர். அவை இதோ உங்கள் முன் எழுந்துள்ளது. மேலும் எழுப்பப்படும்.

இந்த அடிப்படைச் செயல்பாடுகளுக்கிடையே இது ஒரு ஆண்டு விழா. எங்கள் கண்கள் உற்சாகமான, மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்களின் ஆர்ப்பாட்டமான கூச்சல்களைப் பார்த்தும் கேட்டும் வருகின்றன. காற்றில் பதாகைகள் உயர்ந்து பறக்கின்றன. இந்த நாளில் வர்த்தகத்திற்கான ஆர்வமும் குறைந்துவிட்டது. இந்த நாளில் செல்வத்திற்கே செல்வத்தின் மீதான பற்றை இழந்துவிட்டது போலும்! காதுகள் அடைக்கும் அளவிற்கு மேள சத்தங்களும் அதனுடன் இணைந்து ஆயிரக்கணக்கான சர்ச்சுகளின் மணி ஒலியும் இணைந்து இந்த நாளை அமெரிக்கக் குடிமக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நாளின் நினைவைப் போற்றும் வகையில் பாடல்கள் பாடப்படுகின்றன, வேண்டுதல்களும், பிரசங்கங்களும் செய்யப்படுகின்றன. சிறப்புமிக்க பன்முகத்தன்மைகொண்ட இத்தேசத்தின் படைவீரர்களின் விரைவான அணிவகுப்பு இந்தப் பரந்த கண்டத்தின் அனைத்து மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றால் எதிரொலிக்கப்படுகின்றன. வெளிப்படையாகக் கூறவேண்டுமெனில், உலகளவில் தேசிய ஆண்டுவிழாவின் கொண்டாட்டத்தின் மேலான ஆர்வமும் கிளர்ச்சியும் அதிகரித்துத்தான் உள்ளது எனலாம்.

நண்பர்களே, நாட்டு மக்களே, இந்த ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கான காரணத்தை மேலும் நான் கூறித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. என்னைவிட அதிக புரிதல் உங்களுக்கு இருக்கும். அந்த நாளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஆர்வத்தினாலும், இங்குள்ள மற்ற பேச்சாளர்களை விட அதில் எனக்கு அதிக ஆர்வம் இருப்பதாலும் அதைச் சார்ந்து அதிகம் பேசுமாறு என்னை நீங்கள் வற்புறுத்தலாம். பிரிட்டிஷ் அரசு காலனிகளைப் பிரிப்பதற்கான காரணிகளைத் தெரிவித்தபோது அதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இவை பற்றிய வரலாறு உங்களுக்குப் பள்ளிகளிலும், சாதாரணமாக வீதிகளில் நடந்துசெல்லும் போது பேச்சுவாக்கிலும், உங்கள் அரசியல் மேடைகளில் இடியென முழக்கமிட்டும், உங்கள் இல்லங்களில் பேசப்பட்டும் என்னைவிட மிக விரிவாக உங்களுக்குத் தெரியும். உங்கள் தேசியளவிலான கவிதைகளுக்கும் சொற்பொழிவுகளுக்கும் அடிப்படையாக அமைந்தவை இவைதான்.

சக அமெரிக்க மக்களாக தங்கள் பக்க நியாயத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் அமெரிக்கர்கள் தெரிந்துவைத்துள்ளனர் என்பதையும் நான் நினைவில் கொள்கிறேன். அமெரிக்காவின் கௌரவத்திற்காகவும், வளத்திற்காகவும் செய்யப்படும் எத்தகைய செயல்களும் மலிவான செயலாக இருக்கிறது. இதைச் சிலர் தேசியப் பண்பாக அல்லது ஒருவேளை தேசிய பலவீனமாகவும் எடுத்துக்கொள்பவர்கள் உண்டு. நான் அமெரிக்கர்களை அவதூறு செய்கிறேன் என்று அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்ளவேண்டாம். அமெரிக்கர்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் அவர்களிடமே பத்திரமாக இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

ஆகையால் உங்கள் முன்னோர்கள் ஆற்றிய பெருஞ்செயல்களைத் தொடர்ந்து செய்வதற்கு அவர்களின் வழிவந்தவர்கள் என பறைசாற்றிக்கொள்ளும் சிறப்பு மிக்கவர்களே தொடர்வதற்கு நான் வழிவிடுகிறேன். அதனால் என் மீதான குற்றச்சாட்டும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறதல்லவா?

நிகழ்காலம்

இங்கு இன்று என்னுடைய வேலை என்பது நிகழ்காலத்துடனானது மட்டும்தான். கடவுளும் அவரின் காரணங்களும் எப்பொழுதும் கேட்பதற்குத் தடைசெய்யப்பட்டுதான் உள்ளன.

”எதிர்காலக் கனவில் மூழ்காதே,

கடந்தகாலம் புதைக்கப்பட்டுவிட்டது,

செயல்படு, இப்போதே செயல்படு,

உன்னுள் அன்பைப் பொழிந்து

வெளியில் இறைவனைப் பார்”

 

கடந்தகாலத்தினால் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் நன்மை ஏற்படுத்த முடிகிறது என்றால்தான் நாம் கடந்தகாலத்தைப் பற்றி யோசிக்க முடியும். கடந்தகாலத்தில் சாதித்த பெருஞ் செயல்பாடுகளின் வரலாற்றிலிருந்து நிகழ்காலத்திற்கான ஊக்கத்தை நாம் பெற வேண்டும். ஆனால் இந்தக் காலம் மிகவும் குறைவான முக்கியமான காலகட்டம் ஆகும். உங்கள் முன்னோர்கள் அவர்களின் கடமையைச் செய்து வாழ்ந்து இறந்துவிட்டனர். அதைவிட மிகச் சிறப்பாகவே அவர்கள் வாழ்ந்த கட்டத்தில் செயலாற்றியுள்ளனர். இப்போது நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் இறப்பீர்கள், உங்களுக்கான கடமையை நீங்கள் செய்தாக வேண்டும். உங்கள் உழைப்பில் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், உங்கள் தந்தையின் உழைப்பில் நீங்கள் உரிமைகோரி மகிழ்ச்சியடைய முடியாது. உங்களின் சோம்பேறித்தனத்திற்காக உங்கள் தந்தையர்கள் ஈட்டிய வருமானத்தை வீணாக்க உங்களுக்கு உரிமையில்லை. ஆண்கள் தங்கள் தந்தையின் ஞானத்தையும் நற்பண்புகளையும் அரிதாகவே போற்றுகிறார்கள். ஆனால் அவர்களின் சில முட்டாள்தனங்களையோ தவறுகளையோ மன்னித்துவிடுகிறார்கள் என்று சிட்டி ஸ்மித் தெரிவிக்கிறார். இந்த உண்மை மறுக்க முடியாதது என்றே கருதுகிறேன். இதற்கு வரலாற்றில் ஆதிகாலத்திலிருந்து தற்காலம் வரையில் நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு யாக்கோபின் குழந்தைகளை உற்சாகமூட்டுவதற்காக, அவரின் மீது நம்பிக்கையும் பக்தியும் இருக்கும்போது “ஆபிரகாம் நமக்குத் தந்தையாக இருக்கிறார்” என்று ஆபிரகாமின் மகத்தான மனிதரின் நிழலின் கீழ் தங்களைத்தாங்களே முடக்கிக்கொண்டனர். அதே நேரத்தில் அவரை அவ்வளவு சிறப்புமிக்கவராக ஆக்கிய படைப்புகளை அவர்கள் நிராகரித்துவிட்டனர். இத்தகைய போக்கு இன்று நாடு முழுவதும் தொடர்கிறது என்று உங்களுக்கு நான் நினைவூட்டலாமா? தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டியவர்கள், நீதிமான்களின் கல்லறைகளை அலங்கரித்தவர்கள் யூதர்கள் மட்டுமல்ல என்று நான் உங்களுக்குச் சொல்லலாமா? வாஷிங்டன் தனது அடிமைகளை விடுவிக்கும்வரை இறக்க முடியாமல் அவதிப்பட்டார். ஆயினும் அவரது நினைவுச்சின்னம் விலைமதிக்க முடியாத மனித ரத்தத்தின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளது. அடிமைகளை விற்ற இறந்துபோன தரகர்களின் உடலும் ஆன்மாவும் ”இதோ வாஷிங்டன் எங்கள் தந்தையர்களுக்காக” என்று கூச்சலிட்டனர். எவ்வளவு வெட்கக்கேடான செயல் இது. அத்தகைய செயல் தொடர்ந்தால் இது அவ்வாறுதான் இருக்கும். ஆம் அது இன்னும் அவ்வாறுதான்!

 

”ஒரு மனிதன் செய்யும் தீமை

அவனை இறுதி வரை பின்தொடரும்

நல்லவையோ

அவன் எலும்புகள் வரை சென்று நன்று செய்யும்

எனக்கோ அல்லது

என்னை பிரதிநிதிப்படுத்துபவர்களுக்கோ

உங்கள் தேசத்தின் சுதந்திரத்தினால்

என்ன பயன்?“

 

குடிமக்களே என்னை மன்னியுங்கள். உங்களை நோக்கி நான் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்க எனக்கு அனுமதி தாருங்கள். இன்று இங்கு பேச என்னை ஏன் அழைத்தார்கள்? நானோ அல்லது என்னைப் போன்றவர்களோ உங்களுக்குக் கிடைத்த தேசிய சுதந்திரத்தை வைத்து என்ன செய்வது? எங்களுக்கு அதனால் என்ன? சுதந்திர பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான அரசியல் சுதந்திரமும், நியாயமான நீதியும் எங்களுக்கும் கிடைக்குமா? இந்தச் சுதந்திரம் எங்களுக்குக் கிடைக்கப்போவதற்காக என்னுடைய பணிவை இந்த தேசத்திற்கு முன்பு காட்டுவதற்காக இங்கு அழைக்கப்பட்டேனா? அல்லது உங்கள் சுதந்திரத்தின் விளைவாக நாங்கள் பெறும் ஆசீர்வாதங்களுக்கான நன்மைகளை ஒப்புக்கொண்டு உங்கள் அனைவரின் முன்பும் நன்றி தெரிவிக்க நான் அழைக்கப்பட்டுள்ளேனா?

இந்தக் கேள்விகளுக்கான உண்மையான, உறுதியான பதிலை இறைவன் உங்களிடமிருந்தும் எங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறார். உறுதியான பதில் கிடைத்துவிட்டால் என்னுடைய வேலை எளிதாகிவிடும். என் சுமையும் குறைந்தது என மகிழ்ச்சியடைவேன். இந்தக் கேள்விகளால் தேசத்தின் மீதான அனுதாபம் அவர்களைச் சமநிலைக்குக் கொண்டுவர உதவும். இந்த விலைமதிப்பற்ற பலனை நன்றியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கோரும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கும் அடிமைகள் யாரேனும் இங்கு உள்ளார்களா என்ன? அவர்களின் மூட்டுகளிலிருந்து அடிமைச்சங்கிலிகள் உடையும்போது ஒரு நாட்டின் சுதந்திர விழாவில் மகிழ்ச்சியாக அல்லேலூயா என்று குரலிடாத அளவிற்கு இங்கு அலட்சியமாகவும் சுயநலமாகவும் இருப்பவர்கள் யார்? நான் அத்தகையவன் இல்லை. இத்தகைய வழக்கில் எவ்வாறு கால் இல்லாத மான் துள்ளிக் குதித்து விளையாடுமோ அவ்வாறு வாய்பேச முடியாதவர்கள் கூட பேசுவதை நிறுத்தாமல் பேசலாம்.

ஆனால் இங்கு அது ஒரு பொருட்டல்ல. நம்மிடையேயான இடைவெளியை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். வெளிறிப்போன புகழ்பெற்ற இந்த ஆண்டுவிழாவில் நான் சேர்க்கப்படவில்லை. உங்களுடைய உயர் சுதந்திரம், உங்களுக்கும் எங்களுக்குமிடையே இருக்கும் அளவிட முடியாத தூரத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது. இன்று உங்களுக்குக் கிடைத்துள்ள ஆசீர்வாதம் எங்களுடன் பகிரப்படவில்லை. நீதி, சுதந்திரம், செழிப்பு ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உங்கள் முன்னோர்களால் இங்கு விட்டுச்செல்லப்பட்டது. அவை உங்களுக்குள் பகிர்ந்துகொள்ளப்பட்டதே தவிர எங்களுடன் பகிரப்படவில்லை. உங்களுக்கு வாழ்வையும் ஆரோக்கியத்தையும் தருகின்ற சூரிய ஒளி எங்களுக்கு நோயையும் இறப்பையும்தான் தருகிறது. இந்த ஜூலை 4ம் நாள் உங்களுடைய நாள். என்னுடையதோ எங்களுடையதோ இல்லை. இந்த நாளில் நீங்கள் மகிழ்ச்சியடையலாம் ஆனால் நான் துக்கத்தை அனுசரித்தாக வேண்டும். அடிமைத்தளையால் கட்டப்பட்டுள்ள ஒரு மனிதனை சுதந்திரத்தின் பிரகாச ஒளியைக் கொண்டுள்ள கோவிலுக்குள் இழுத்துச்சென்று மகிழ்ச்சியான தேசிய கீதத்தைப் பாடுமாறு கூறுவது மனிதத்தன்மையற்ற கேலியும் அவதூறான முரண்பாடும் ஆகும். மக்களே, என்னைப் பார்த்துச் சிரிப்பதற்காகவா இன்று என்னை இங்கு பேச அழைத்தீர்கள்? அவ்வாறெனில் இது உங்களின் நடத்தையையே பிரதிபலிக்கிறது. விண்ணில் இருக்கும் இறைவன் இந்த நாட்டின் குற்றங்களை விண்ணுக்கு அடையவிடாமல், நாட்டையே இடிபாடுகளுக்குள் புதைத்துவிடுவதற்காக தன் மூச்சுக்காற்றால் அக்குற்றங்களைக் கீழே தள்ளிவிட்டுவிட்டார்,. அத்தகைய நாட்டை ஒரு தனி நபர் முன்னுதாரணமாக எடுப்பது ஆபத்தில் சென்று முடியும் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன். வெறுந்தோலும் துயரமும் கொண்ட மக்களின் பெருமூச்சை இன்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.

நாங்கள் பாபிலோன் நதிக்கரையில் அமர்ந்திருந்தோம். ஆம் நாங்கள் ஜியோனை நினைத்து அழுதுகொண்டிருந்தோம். நதிக்கரையின் மத்தியிலிருந்த வில்லோ மரத்தில் எங்கள் இசைக்கருவிகளைத் தொங்கவிட்டோம். எங்களைச் சிறைபிடித்துச் சென்றவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள். எங்களைப் பாழடையச் செய்தவர்கள் எங்களுடன் இணைந்து மகிழ்ச்சியடையத் தொடங்கினார்கள். எங்களுக்காக சியோன் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டார்கள். எங்களுக்குச் சம்மதம் இல்லாத வெளி நிலத்தில் எங்களால் எப்படி யோகாவின் பாடலைப் பாட முடியும். “ஓ ஜெருசலேம்! நான் உன்னை மறந்துவிட்டால் என்னுடைய இந்த வலதுகை அவருடைய புத்திசாலித்தனத்தை மறக்கட்டும். நான் உன்னை நினைக்கவில்லை என்றால் என்னுடைய நாக்கு என் மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்ளட்டும்!“

 

இந்நாட்டின் மக்களே, உங்கள் தேசத்தின் கூச்சல்களுக்கிடையே பல்லாயிரக்கணக்கான மக்களின் துயரத்தை நான் கேட்கிறேன். நேற்று அவர்களின் அடிமை சங்கிலிகள் பலமாகவும் பொறுத்துக்கொள்ள முடியாததாகவும் இருந்தன. இன்றோ இந்தச் சுதந்திர ஆண்டுவிழாவின் கொண்டாட்டம் அவர்களின் காதுகளை அடைந்து இன்னும் பொறுத்துக்கொள்ள முடியாதவாறு ஆக்குகிறது. இன்று அந்தக் குழந்தைகளின் ரத்தக்களரியான சோகத்தை நான் மறந்துவிட்டால் என்னுடைய வலது கை அவர்களின் புத்திசாலித்தனத்தை மறக்கட்டும், என்னுடைய நாக்கு என் மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்ளட்டும்! அவர்களை மறந்துவிட்டு, அவர்களின் தவறுகளை எளிதாகக் கடந்துசென்றுவிட்டு ஒரு பிரபலமான தலைப்பில் நான் உரையாற்றினால் அது தேசத்திற்கு எதிரான குற்றமாகும். இறைவன் முன்பும் உலகத்தின் முன்பும் நான் ஒரு குற்றவாளியாக நிற்பேன். இந்நாட்டு மக்களே நான் பேசப்போகும் தலைப்பு அமெரிக்க அடிமைத்தனம். இந்த நாளை, இந்த நாளின் பிரபலத்தன்மையை அடிமைக்கண்ணோட்டத்திலிருந்து நான் பார்க்கிறேன். அந்தப் பார்வையில் ஒரு அமெரிக்க சேவகனாக என்னைக் கருதிக்கொண்டு, அவரின் தவறுகளுக்காக என்னை நான் குற்றஞ்சாட்டிக்கொள்கிறேன். இந்த நாட்டின் நடத்தையும் போக்கும் ஜூலை 4ம் தேதியைவிட மோசமானதாக என்றும் இருந்ததில்லை என்று உளப்பூர்வமாக அறிவிப்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. கடந்த காலத்தைப் பார்த்தாலோ இப்போது நிகழ்காலத்தில் நடப்பதைப் பார்த்தாலோ இந்த நாட்டின் நடத்தை ஒரேயளவில் மோசமாகவும் அருவருப்பூட்டுவதுமாக இருக்கிறது. அமெரிக்காவின் நடத்தை கடந்தகாலத்தில் தவறாகத்தான் இருந்தது நிகழ்காலத்திலும் தவறாகத்தான் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்திலும் தவறுதலாக நடந்துகொள்வதில் தன்னை பிணைத்துக்கொள்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் இறைவனின் பக்கத்திலும், ஒடுக்கப்பட்டவர்களின் பக்கத்திலும், அடிமையாக்கப்பட்டு நசுக்கப்படுபவர்கள் பக்கத்திலும் நிற்கிறேன்.  நியாயமான கோவத்தில் இருக்கும் மக்களின் பெயரால், அடிமைத்தளையிலிருந்து விடுதலையின் பெயரால், கண்டுகொள்ளாமலும், மீறப்பட்டதுமான இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் புனித பைபிளின் பெயரால், பெரும் பாவமும், அமெரிக்காவின் வெட்கக்கேடுமான அடிமைத்தனத்தைத் தொடரும் காரணிகளை நான் கண்டிக்கிறேன். நான் அமைதியாகவும் மறந்துவிடுபவனாகவும் இருக்கமாட்டேன். ஆம் நான் கடுமையான மொழியைத்தான் பயன்படுத்துகிறேன். நான் கடுமையாகத்தான் பேசுகிறேன். ஆனால், முன் தீர்மானத்துடன் பிணைக்கப்படாத ஒருவரின் நீதியோ அல்லது தன் இதயப்பூர்வமாக அடிமை முதலாளியாக இல்லாத ஒருவரோ நீங்கள் செய்வது சரியென்றும் நியாயமானது என்றும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

 

ஆனால் இங்கு யாரோ ஒருவர், இத்தகைய சூழ்நிலையில் அடிமைமுறையை ஒழிப்பவர்கள் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயத்தைப் பொதுமக்கள் மத்தியில் உங்களால் ஏற்படுத்த முடியவில்லையே என்று சொன்னதை நான் கேட்டேன். நீங்கள் அதிகமாக வாதிட்டுக் குறைவாகப் பேசுவதனாலும், அதிகமாக வற்புறுத்திவிட்டுக் குறைவாகக் கண்டிப்பதாலும் நீங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் எங்கு தெளிவாக அனைத்தும் தெரிகிறதோ அங்கு வாதாடுவதனால் ஏற்படும் பயன் என்ன? எந்த நம்பிக்கையில் நீங்கள் என்னுடன் வாதாடுவீர்கள். அடிமைத்தனத்திற்கு எதிரான நம்பிக்கையில் உங்களால் என்னுடன் வாதாட முடியுமா? இதுபற்றிதான் இந்த மக்களுக்கு மேலதிகமான ஒளி தேவைப்படுகிறது. அடிமையாக இருப்பவன் ஒரு மனிதன் என்று நான் நிரூபிக்க வேண்டும் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்க வேண்டுமா? அந்த எண்ணம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அடிமை என்பவனும் மனிதன் தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. அடிமை உரிமையாளர்கள் தங்கள் அரசாங்கங்களுக்கான சட்டங்களை இயற்றும்போது அடிமைகள் மனிதர்கள்தான் என அங்கீகரித்துள்ளனர். அடிமையின் காரணமாக கீழ்படியாமல் இருக்கும்போது அவர்கள் அடிமைகளைத் தண்டிக்கும்போது அடிமை முதலாளிகள் அவர்கள் மனிதர்கள்தான் என ஒப்புக்கொள்கிறார்கள். வர்ஜீனியா மாநிலத்தில் மட்டும் 72 குற்றங்கள் உள்ளன. இதே கறுப்பினத்தவரால் செய்யப்பட்டிருந்தால் (அவர் அப்பாவியாக இருந்தாலும்) அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதே குற்றங்களைச் செய்த வெள்ளையர்களுக்கு இதேபோன்று மரணதண்டனைதான் விதிக்கப்படுமா என்ன? இதில் என்ன தெரிகிறது? இந்தச் செயல் அடிமைத்தனம் என்பது தார்மீகமானது, புத்திசாலித்தனமானது பொறுப்புமிக்கது என்று தெரிகிறதல்லவா? அடிமை என்பது மனிதாபிமானமிக்க செயல்களில் ஒன்று என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தெற்கில் உள்ள சட்டப்புத்தகங்கள் அடிமைகள் படிக்கவோ எழுதவோ தடைசெய்துள்ளது. அதை மீறும்பட்சத்தில் கடுமையான அபராதமும் தண்டனைகளையும் வழங்குவதற்கேற்ப சட்டப்புத்தகங்கள் கட்டளைகளால் நிரம்பியுள்ளன. விலங்குகள் தங்கள் வயல்களில் வருவதற்கு அனுமதியில்லை என்பது போன்ற சட்டங்களை விலங்கினங்களுக்கு நீங்கள் காண்பிக்கும்பட்சத்தில் அடிமை என்பது மனித குலத்திற்குத் தேவையா இல்லையா என்பது பற்றிய விவாதத்தில் நான் பங்குகொள்ள ஒப்புக்கொள்கிறேன். உங்கள் வீதிகளில் நடமாடும் நாய்கள், வானத்தில் பறக்கும் பறவைகள், உங்கள் குன்றுகளில் ஏறும் மாடுகள், நதிகளில் நீந்தும் மீன்கள், ஊர்ந்து செல்லும் ஊர்வனங்கள் ஆகிய விலங்குகளுக்கும் அடிமைகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் அந்த இடத்தில் அடிமை ஒரு மனிதன்தான் என்று உங்களுடன் நான் வாதாடுவோன்.

 

தற்காலத்தில் நீக்ரோ இனத்தவர்களும் மனிதகுலத்திற்கு இணையானவர்களாக வாழ்ந்தார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. நாங்கள் விவசாயம் செய்கிறோம், நாங்கள் அனைத்துவித தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துகிறோம், வீடுகள், பாலங்கள், கப்பல்கள் கட்டுகிறோம், பித்தளை, இரும்பு, தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் வேலை செய்கிறோம். நாங்கள் வாசிக்கிறோம், எழுதுகிறோம், அனைத்தையும் புரிந்துகொள்கிறோம், நாங்கள் கிளர்க்குகளாக, செயலாளர்களாக வேலை செய்கிறோம். எங்களுக்குள்ளேயே வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கின்றனர். மற்ற பொதுமக்கள் ஈடுபடும் அனைத்து வகையான பொது நிறுவனங்களில் நாங்களும் ஈடுபட்டுள்ளோம். கலிபோர்னியாவில் தங்கம் தோண்டுதல், பசிபிக் கடலிலிருந்து திமிங்கலங்களை வேட்டையாடுதல், மலைப் பகுதிகளில் மாடு மேய்த்தல், ஆகியவற்றுடன் ஒரு குடும்பத்தில் கணவனாக, மனைவியாக, குழந்தைகளாக வாழ்கிறோம், பயணிக்கிறோம், நடிக்கிறோம், சிந்திக்கிறோம் திட்டமிடுகிறோம். அதற்கெல்லாம் மேலே, கிறிஸ்துவ தெய்வத்தை வணங்குகிறோம். கல்லறைக்கப்பால் ஒரு வாழ்க்கையையும் அழிவின்மையையும் கண்டறிவதாக நம்புகிறோம். ஆனால் அங்கு நாங்கள் மனிதர்கள்தானா என்று நிரூபிக்கும்படி கேட்கப்படுகிறோம்!

மனிதன் சுதந்திரம் அடைவதற்கான தகுதி படைத்தவனா என்று நீங்கள் என்னுடன் வாதாட விரும்புகிறீர்களா? உண்மையிலேயே தன் உடல் மீதான உரிமை அவனுக்கு இருக்கிறதா? அதைப்பற்றி நீங்கள் முன்பே அறிவித்துவிட்டீர்கள். அடிமைத்தனத்தினால் ஏற்படும் தீமைகளை நான் விவாதிக்க வேண்டுமா? இதுதான் குடியரசுக்கட்சியினருக்கான கேள்வியா? இவை தர்க்கம் மற்றும் காரணிகள் சட்டத்தால் தீர்க்கப்படவேண்டுமா? ஏனெனில் இது புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமான அடிப்படை நீதியால் சூழப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் முன்னிலையில் இன்று நான் எவ்வாறு பார்க்கப்படுகிறேன். ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே அடிப்படை தனியுரிமையும் சுதந்திரமும் உண்டு என்பதை ஒரு சொற்பொழிவில் ஒரு பகுதியாக அதிலிருந்து துணைப்பகுதியாக என்னுடைய பேச்சைப் பிரித்து பிரித்துப் பேசுகிறேன். இதைப்பற்றி ஒப்பிட்டும், அதன் சாதக பாதகங்களை எடுத்தும் பேசுகிறேன். இவ்வாறு செய்வது என்பது என்னை நானே முட்டாளாக்கிக்கொள்வது மற்றும் உங்களின் புரிதலை அவமதிப்பதற்கு உங்களை வழிவகுக்கிறேன். அடிமைத்தனம் என்பது தவறில்லை என்று தெரியாமலிருக்குமளவிற்கு இங்கே எந்த மனிதனும் சொர்கத்திலிருந்து வரவில்லை.

 

மனிதர்களைச் சித்திரவதை செய்வது, அவர்களின் சுதந்திரத்தைப் பறிப்பது, ஊதியம் இல்லாமல் வேலை வாங்குவது, அவர்களின் சக சொந்தங்களுடன் தொடர்புகொள்ள முடியாமல், அவர்களை அறியாமையில் வைத்திருப்பது ஆகியவற்றைப் பற்றி நான் விவாதிக்கவா? குச்சிகளால் அடிப்பது, அவர்களின் சதையைப் பிய்த்து வீசுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை இரும்பில் கட்டி தொங்கவிடுவது, நாய்களை விட்டு வேட்டையாடுவது, ஏலத்தில் விற்பது, குடும்பத்தைப் பிரிப்பது, பற்களைப் பிடுங்குவது, அவர்களின் சதையை எரியூட்டுவது, எஜமானருக்கு அடிபணியாததால் பட்டினி போடுவது ஆகிய மனிதாபிமானமற்ற இரத்தம் தோய்ந்த மாசுபட்ட இந்த முறை தவறு என்று வாதிடவா? இல்லை நான் செய்யமாட்டேன். இதுபோன்ற விவாதங்களில் கலந்துகொண்டு நேரத்தையும் அறிவையும் வீணாக்குவதைவிட எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன.

அப்படியானால் வாதிடுவதற்கு என்ன இருக்கிறது? அடிமைத்தனம் தெய்வீகமானது இல்லையா? அதை இறைவன் தோற்றுவிக்கவில்லையா? நம் தெய்வீக பிதாக்கள் தவறு செய்துவிட்டார்களா? அத்தகைய எண்ணமே அவதூறானது. அவை மனிதத்தன்மையற்றவை. அத்தகைய எண்ணம் தெய்வீகமாக இருக்க முடியாது. அத்தகைய முன்மொழிவை யார் நியாயப்படுத்துவார்கள்? அவ்வாறு நியாயப்படுத்துபவர்களால் அதை வாதாட முடியும். ஆனால் என்னளவில் அத்தகைய வாதத்திற்கான நேரம் கடந்துவிட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் அனல் பறக்கும் விவாதமே தேவை, ஒத்துக்கொள்ளக்கூடிய விவாதம் தேவையில்லை. அது தேவைதான். ஆஹா! எனக்கு மட்டும் திறமையிருந்திருந்தால் தேசத்தின் காதுகளை எட்டியிருப்பேன். ஆம் எனக்குத் திறமையிருக்கிறது இதோ இன்று அதைச் செய்தேன். அனல் பறக்கும் கடுமையான விமர்சனம், வெடிக்கும் அளவிற்கான விமர்சனம் கூசிகுறுகி அவமானத்தால் இறந்துவிடுவது போன்ற கடுமையான மொழியை, தீவிரமான எதிர்ப்பை இன்று பயன்படுத்தினேன். மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவதற்கு அல்ல. ஒரு அனல் இங்கு தேவை. அவை ஒளியலான இதமான மழையாக இல்லை இங்கு நமக்கு இடிமுழக்கம் தேவை. சூறாவளி தேவை, வலிமையான காற்றும் நிலநடுக்கமும் தேவை. தேசத்தின் மனசாட்சி தூண்டப்பட வேண்டும், தேசத்தின் தனித்தன்மை திடுக்கிட வேண்டும், தேசத்தின் போலித்தனம் அம்பலப்படுத்தப்பட வேண்டும், கடவுளுக்கும் மனிதனுக்கும் எதிரான அதன் குற்றங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க அடிமைகளுக்கு ஜூலை 4ம் நாள் என்பது என்ன? இதோ நான் பதிலளிக்கிறேன் – ஒரு ஆண்டின் மற்ற எல்லா நாட்களை விட நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கும் கடுமையான அநீதியும் கொடுமையும் ஏற்படுத்திய நாள் இது. அவர்களைப் பொறுத்தவரை உங்களின் இந்தக் கொண்டாட்டம் ஒரு போலியானது. உங்கள் பெருமைமிகு சுதந்திரம் ஒரு புனிதமற்ற உரிமை. உங்கள் தேசத்தின் சிறப்புகள் வெற்று பெருமைகள், உங்கள் மகிழ்ச்சியின் குரல்கள் வெறுமையும் இதயமற்றவையும் ஆகும். கொடுங்கோலர்கள் மீதான உங்கள் கண்டனம் பித்தளையின் முரட்டுத்தனத்தைப் போன்றது. சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய உங்கள் முழக்கங்கள் வெற்று வசனங்கள். உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் பாடல்கள், உங்கள் சொற்பொழிவுகள் மற்றும் நன்றியுரைகள், நீங்கள் பணிவுடன் நடத்தும் அனைத்துவித மத அணிவகுப்புகளும் தேசத்தை அவமானப்படுத்தும் குற்றங்களான அக்கிரமங்கள், மோசடி, வஞ்சம் மற்றும் பாசாங்குத்தனம் போன்றவற்றை மறைப்பதற்கான ஒரு மெல்லிய போர்வைதான். இந்த சூழ்நிலையில் உலகத்தில் இந்த அளவிற்குக் குற்றவுணர்ச்சியும் ரத்தத்தை உறைய வைக்கும் நடைமுறையையும் கொண்ட நாடும் மக்களும் வேறெங்கும் இல்லை.

நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், எங்கு விரும்புகிறீர்களோ அங்குத் தேடுங்கள், பழைய உலகின் அனைத்து மன்னராட்சி மற்றும் கொடுங்கோலாட்சியிலும் சென்று பாருங்கள், தென்அமெரிக்கா முழுவதும் பயணம் செய்யுங்கள், ஒவ்வொரு துஷ்பிரயோகத்தையும் கண்டடையுங்கள். இறுதியாக அனைத்தையும் கண்டடைந்த பிறகு, நீங்கள் கண்டடைந்த உண்மைகளை இந்த நாட்டின் அன்றாடம் நடந்துவரும் நடைமுறைகளுக்குப் பக்கத்தில் வைத்து ஒப்பிடவும். பிறகு நீங்களும், காட்டுமிராண்டித்தனமும் வெட்கமேயில்லாத பாசாங்குத்தனத்துடனும் அமெரிக்கா எந்தவித மனசாட்சியுடனில்லாமலும், வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு ஆட்சி செய்கிறது என்று என்னுடன் சேர்ந்து சொல்வீர்கள்.

 

உள்நாட்டு அடிமை வணிகம்

செய்தித்தாள்கள் மூலம் எங்களுக்குத் தெரியவரும் அமெரிக்க அடிமை வியாபாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், எப்போதும்விட இப்போது இந்த வியாபாரம் அமோகமாக இருக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பென்டன் ஒரு ஆண் அடிமையின் விலை இவ்வளவு அதிகமாக என்றும் இருந்ததில்லை என்று நம்மிடமே தெரிவிக்கிறார். அடிமை முறை தவறானதோ ஆபத்தானதோ இல்லை எனும் உண்மையைப் பறைசாற்றுவதற்காக இதைத் தெரிவிக்கிறார் என்றே நான் கருதுகிறேன். இந்த வர்த்தகம் அமெரிக்க நிறுவனங்களின் தனிச்சிறப்புமிக்க வர்த்தகங்களுள் ஒன்றாகும். இந்த நாட்டின் பாதி பெருநகரங்களிலும் கிராமங்களிலும் இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தக் கொடூரமான போட்டியில் இடைத்தரகர் மூலம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பணம் வீணாகிறது. பல மாநிலங்களில் இந்த வர்த்தகம்தான் முக்கிய நிதி ஆதாரமாக இருக்கிறது. இவை (வெளிநாட்டு அடிமை வியாபாரம்) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக உள்நாட்டு அடிமை வியாபாரம் என்று அழைக்கப்படுகிறது. இது ஏன் இவ்வாறு அழைக்கப்படுகிறது என்று சிந்தித்துப்பார்த்தால், வெளிநாட்டு அடிமை வியாபாரத்தில் நடக்கும் சித்திரவதைகளைத் திசைதிருப்புவதற்கே உள்நாட்டு அடிமை வியாபாரம் என்று பெயர் மாற்றிக்கூறப்படுகிறது என்று கருதுகிறேன்.  வெளிநாட்டு அடிமை வணிகம் திருட்டுத்தனமானது என்று நீண்ட காலமாக அரசாங்கத்தால் கண்டனம் செய்யப்பட்டது. நாட்டின் உயர் மனிதர்களிடமிருந்து அனல் தெறிக்கும் வார்த்தைகளால் இந்த வர்த்தகம் கொடூரப் போட்டியாலான வர்த்தகம் எனக் கூறி பலர் பின்வாங்கிவிட்டனர். அத்தகைய வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர பெரும் பொருட்செலவில் ஆப்பிரிக்காவின் கடற்கரைகளில் படைப்பிரிவை நியமித்தது. கடவுளின் சட்டங்களையும் மனிதனின் சட்டங்களையும் மீறும் மிகவும் மனிதாபிமானமற்ற இந்த வெளிநாட்டு வர்த்தகத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் பாதுகாப்பானது. அத்தகைய வர்த்தகத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க இறையியலாளர்கள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சில இறையியலாளர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் குடியேறவும் ஒப்புக்கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வெளிநாட்டு அடிமை வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது அமெரிக்கர்கள் அருவருப்பைக் காட்டுகிறார்கள். அவர்களே உள்நாட்டு அடிமை வர்த்தகத்தில் ஈடுபட்டால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. மேலும் அவர்களின் வணிகம் புகழ்பெற்றதாகவும் கருதப்படுகிறது.

அமெரிக்க அரசாலும், மதத்தாலும் ஆதரிக்கப்படும் இத்தகைய உள்நாட்டு அடிமை வர்த்தகத்தின் உண்மையான செயல்பாட்டைப் பாருங்கள். இந்த அடிமைச் சந்தைக்காக ஆண்களும் பெண்களும் பன்றிகள் போல் வளர்க்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். உங்களுக்கு பன்றி மேய்ப்பவனைத் தெரியும். ஆனால் மனிதனை மேய்ப்பவனைத் தெரியுமா? உங்களுக்கு அவனை நான் காண்பிக்கிறேன். அவர்கள் நம்முடன் தென் மாநிலங்கள் முழுவதும் வசிக்கிறார்கள். அவர்கள் நாட்டைச் சுற்றி தேசத்தின் நெடுஞ்சாலைகள் முழுவதும் மனிதர்களாக நிரப்புகிறார்கள். மனித கசாப்பு கடைக்காரன் கையில் துப்பாக்கி, சவுக்கு, கத்தியுடன் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளை பெட்டோமாக்கிலிருந்து நியூ ஓர்லியான்ஸில் இருக்கும் அடிமைச் சந்தை வரை மேய்த்துக்கொண்டு செல்வான். வாங்குபவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த ஏழை குழுக்கள் தனித்தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ விற்கப்படுவார்கள். இவர்கள்தான் பருத்தி வயல்களுக்கும், கொடிய சர்க்கரை ஆலைகளுக்கும் உணவாகப் போகிறவர்கள். இவர்கள் மனிதாபிமானமற்றவனின் தலைமையில் சோகமாக அணிவகுத்து முன்னே செல்கிறார்கள். சிறைபிடிக்கச் செல்லும் போது அவரின் காட்டுமிராண்டித்தனமான இதயத்தை நொறுக்கும் கர்ஜனையையும் சப்தத்தையும் கேளுங்கள்! அங்கே ஒரு நரைபடிந்த முதியவரை நான் காண்கிறேன். மேலும் கொழுத்தும் வெயிலில் மெலிந்த தோலுடன் நிர்வாணமாக நடந்து செல்லும் இளந்தாயைப் பாருங்கள், அவளின் அழுகை அவள் கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தையின் மீது விழுகிறது. அதோ அங்கே 13 வயதான பெண்ணும் அழுகிறாள். அவளை தன் தாயிடமிருந்து பிரித்ததற்காக அவள் அழுகிறாள். அந்தக் குழு மெதுவாக நகர்ந்து செல்கிறது. வெப்பம் மற்றும் சோகத்தினால் தங்கள் வலிமையை அவர்கள் பெரும்பாலும் இழந்துவிட்டனர். திடீரென்று ஒரு துப்பாக்கி சுடுவது போன்றொரு பெருத்த சப்தத்தை நீங்கள் கேட்கிறீர்கள். ஒன்றுக்கொன்றாகச் சங்கிலிகள் உரசிக்கொள்கின்றன. உங்கள் ஆத்மாவை உலுக்கும் வகையில் ஒரு அலறல் சத்தத்துடன் உங்கள் காதுகள் வரவேற்கப்படுகின்றன. நீங்கள் கேட்ட அந்த ஒலி அடிமை மீதுபட்ட சவுக்கின் அடி. நீங்கள் கேட்ட அந்த அலறல் சத்தம், நீங்கள் குழந்தையுடன் பார்த்த அந்த தாயின் அலறல் சத்தம். அவள் மீது சங்கிலியும், குழந்தையையும் தூக்கிக் கொண்டு நடந்ததால் அவளின் வேகம் குறைந்தது. அதனால் ஏற்பட்ட சவுக்கடியும், சவுக்கடியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துடனும் அவள் முன்னேறிச் செல்கிறாள். நியூ ஆர்லியான்ஸ்க்குச் சென்று அங்கு அடிமை சந்தையில் நடைபெறும் ஏலத்தில் பங்குகொள்ளப் போகிறாள். குதிரைகளைச் சோதிப்பது போல் மனிதர்களைச் சோதிப்பதைப் பாருங்கள். அமெரிக்காவின் அடிமை வியாபாரிகளால் இரக்கமின்றி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் நிலையைப் பாருங்கள். மேய்க்கப்பட்டுக் கொண்டுவந்த இந்தக்குழு விற்கப்பட்டு நிரந்தரமாகப் பிரிக்கப்படுவதைப் பாருங்கள். இந்தச் சிதறிய கூட்டத்திலிருந்து எழும் ஆழ்ந்த சோகமான அழுகுரல்களை எப்போதும் மறக்காதீர்கள். அமெரிக்க குடிமக்களே இப்போது சொல்லுங்கள், சூரியனின் கீழே எந்த நாட்டில் இத்தகைய திகிலும், அதிர்ச்சியும் தரக்கூடிய காட்சியைப் பார்க்க முடியும். இப்போது வரை இங்கு பார்க்கப்பட்டது, ஐக்கிய அமெரிக்க நாடு ஆட்சி செய்யும் பகுதிகளில், தற்போது அமெரிக்க அடிமை வர்த்தகம் எவ்வாறு இருக்கிறதோ அதில் ஒரு பகுதியை மட்டும்தான் நான் இப்போது உங்களுக்குத் தெரிவித்தது.

இத்தகைய காட்சிகளுக்கு மத்தியில்தான் நான் பிறந்தேன். என்னைப் பொறுத்தவரை அமெரிக்க அடிமை வர்த்தகம் ஒரு திகிலூட்டும் உண்மை சம்பவம். அடிமைத்தனத்தின் கோரத்தாண்டவம் என் ஆத்மாவைத் துளைத்தது. நான் பால்டிமோரில் இருக்கும் ஃபில்பாட் தெருவின் ஃபெல்ஸ் பாயிண்ட்டில்தான் வசித்தேன். அங்கே கப்பல் ஒதுங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கப்பல்துறை மேடையிலிருந்து அடிமை மனிதர்களை ஏற்றுவதற்காகவும், அவர்களை சதைச் சரக்குகளாக நடத்தும் கப்பல்கள் செசபீக்கிலிருந்து சாதகமான அலை வீசுவதற்காகக் காத்திருப்பதைப் பலமுறைக் கண்டுள்ளேன். அந்தச் சமயத்தில் ஆஸ்டீன் வோல்போல்க் (Austin Voldfolk) தலைமையின் பிராட் தெருவில் மிகப்பெரிய அடிமைச் சந்தை நடத்தப்பட்டு வந்தது. கப்பலின் வருகையை செய்தித்தாள்களிலும், துண்டுப் பிரசுரங்களில் “நீக்ரோக்களை விற்று வருமானம் பெறுங்கள்“ என்ற தலைப்பில் அச்சிட்டு அந்தத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க அவரின் முகவர்கள் மேரிலாண்டிலிருக்கும் அனைத்து நகரங்களுக்கும் மாவட்டங்களுக்கும் சென்றனர். இவர்கள் பொதுவாக நன்கு வளர்ந்தவர்கள், பழக்கவழக்கங்களில் மிகவும் கவர்ச்சிகரமானவர்கள் எப்போதும், குடிக்கவும், மற்றவர்களை உபசரிக்கவும், சூதாடவும் தயாராக இருப்பவர்கள். சூதாட்டத்தின் ஒரு சிறு திருப்புமுனை பல அடிமைகளின் தலையெழுத்தை மாற்றவல்லது. மேலும், குடிபோதையில் பேரம் பேசி அம்மாக்களின் மடியிலிருந்து குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்படுவார்கள்

பாதிக்கப்பட்டவர்களை டஜன் கணக்கில் சேர்த்து, அவர்களை பால்டிமோர் கிடங்கிற்குக் கூட்டிச்சென்று  தேவையான எண்ணிக்கை சேர்ந்ததும் வேறொரு இடத்திற்குக் கூட்டிச்செல்லவோ நியூ ஓர்லென்ஸ்க்கு கூட்டிச்செல்லவோ கப்பல் தயாராக இருக்கும். இரவின் ஆழ்இருளில் அடிமைச் சிறையிலிருந்து கப்பலுக்குக் கூட்டிச்செல்லப்படுகிறார்கள், அடிமைமுறைக்கு எதிராகப் போராட்டம் ஆரம்பித்ததும் இந்த வழக்கத்தில் சிறு எச்சரிக்கைத்தனத்துடன் செயல்படுகிறார்கள்.

நள்ளிரவின் ஆழ்ந்த அமைதியான இருளில், எங்கள் வீட்டிற்கு வெளியே பலமான காலடிச் சத்தங்கள், சங்கிலியால் பிணைக்கப்பட்ட கும்பல்களின் பரிதாபமான அலறல்களின் சத்தங்களால் நான் பயந்துகொண்டு அடிக்கடி எழுந்துவிடுவேன். என்னுடைய குழந்தைத்தனமான இதயத்தில் இந்த வலி அதிதீவிரமாக இருந்தது. என்னுடைய எஜமானியிடம் காலையில் என்னுடைய கவலைகளைத் தெரிவிப்பதன் மூலம் சற்று ஆறுதலடைவேன். இதைக் கேட்டதும், இந்த அடிமைமுறை பழக்கம் மிகத் தவறானது எனத் தெரிவித்தாள். அந்தச் சங்கிலிகளின் சலசலப்பையும், இதயத்தின் வலியையும் கூட கேட்பதை வெறுத்தாள். என்னுடைய கவலையில் பங்குகொள்ளும் ஒரு மனிதரைக் கண்டடைந்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

என் சக குடிமக்களே, இந்த கொலைகார வர்த்தகம் இந்த பெருமைமிகு குடியரசில் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. என் ஆத்மாவின் தனிமையில், தெற்கின் நெடுஞ்சாலைகளில் மாசடைந்த மேகங்கள் எழுவதை நான் காண்கிறேன், ரத்தம் சிந்தும் காலடிகளைக் காண்கிறேன், அடிமைச் சந்தைக்குச் செல்லும் வழியில் பாதிக்கப்பட்டவர்களைக் குதிரைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் போல விற்கப்பட்டு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவதையும், பிணைக்கப்பட்ட மனிதகுலத்தின் இரக்கமிக்க அழுகையையும் நான் கேட்கிறேன். அடிமைகளை விற்கும், வாங்கும் ஆண்களின் காமத்தையும், இன்பத்தையும், இச்சையையும் திருப்திப்படுத்த மென்மையான உறவுகள் இரக்கமின்றி உடைக்கப்படுவதைப் பார்க்கும்போது என்னுடைய ஆன்மா நோய்வாய்ப்படுகிறது.

 

உங்கள் முன்னோர்கள் விரும்பிய நாடு இதுவா?

இதற்காகவா சுதந்திரம் பெற கடினமாக உழைத்தார்கள்?

அவர்கள் வாழ்ந்த பூமியா இது?

அவர்கள் தூங்கும் கல்லறைகள் இவையா?

 

ஆனால் உங்களிடம் தெரிவிக்க இன்னும் மனிதாபிமானமற்ற, அவமானகரமான, அவதூறான விஷயங்கள் பல உள்ளன.

அமெரிக்க காங்கிரஸ் சட்டமியற்றி இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் கொடூரமான மற்றும் கிளர்ச்சி வடிவில் அடிமைமுறை தேசியமயமாகிவிட்டது. அந்தச் சட்டத்தின் மூலம் மேசன் & டிக்சன் கோடு (Mason & Dixon’s line – வரலாற்றுப்பூர்வமாக ஐக்கிய அமெரிக்க நாட்டை வடக்கு மற்றும் தெற்காகப் பிரிக்கும் எல்லைக் கோடு) அழிக்கப்பட்டது. நியூயார்க் வர்ஜீனியாவாக மாறியது. ஆனால், ஆண், பெண் மற்றும் குழந்தைகளை வேட்டையாடி அடிமையாக வைத்திருக்கும் அதிகாரம் இனி வெறும் மாநில அரசின் நிறுவனமாக இல்லாமல், இப்போது முழு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் நிறுவனமாக மாறியது. அமெரிக்க நாட்டின் தேசிய கீதமும் அமெரிக்க கிறிஸ்துவமும் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் இந்த இரக்கமற்ற அடிமைமுறையும் பரவுகிறது. இவை இருந்தால் மனிதன் புனிதமானவனல்ல என்பதும் தெளிவு. அவன் அம்பு எய்துபவனுக்கு வெறும் இலக்கு மட்டும்தான். அந்த வகையில், மனித இனம் முழுவதுக்கும் ஒழுங்கீனமும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தனிநபரின் சுதந்திரமும் ஆபத்தில் உள்ளது. உங்களின் பரந்துவிரிந்த குடியரசு நிலம் மனிதர்களை வேட்டையாடும் மைதானம் ஆகும். இந்தச் சமூகத்தின் திருடர்கள், கொள்ளையர்கள், எதிரிகள் ஆகியோர் குற்றம் செய்துவிட்டனர் என்று வருந்தத்தேவையில்லை. மொத்த சமூகமே இங்கு குற்றச்சமூகமாகத்தான் இருக்கிறது. இதில் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் வேறு அனைத்து குடிமக்களும் இந்த நரக விளையாட்டில் வந்து இணையுமாறு உத்தரவிடுகிறார். உங்கள் ஜனாதிபதி, உங்கள் மாநில செயலாளர், உங்கள் பிரபுக்களும் மதவாதிகளும் நீங்கள் சுதந்திரமாக இருக்கவும், உங்கள் நாடும் இறைவனும் புகழ்பெற அடிமை முறையை ஒரு கடமையாகப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறார்கள். கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் வேட்டையாடப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு மனைவிகளும் குழந்தைகளும் உள்ளனர். தங்களின் அன்றாட உணவிற்கு இவர்களை நம்பியே உள்ளனர். இவை எதையும் பொருட்படுத்தவேயில்லை. இந்தக் குடியரசில் திருமண உரிமை மற்ற உரிமைகள் ஏன் இறைவனுக்கான உரிமையைவிட வேட்டையாடிக்கு இரையின் மேல் இருக்கும் உரிமைதான் முக்கியமானது. ஆனால் கறுப்பின மக்களுக்கோ சட்டமும் இல்லை, நீதியும் இல்லை, மனிதாபிமானமும் காட்டுவது இல்லை, மதமும் இல்லை. பாதிக்கப்பட்டவரை மீண்டும் அடிமைமுறைக்கு அனுப்புவதன் மூலம் அமெரிக்க நீதிபதி 10 டாலர்கள் பெறுவார். அவ்வாறு செய்யத்தவறினால் 5 டாலர்கள் பெறுவார். மிகவும் பக்தியுள்ள புத்திசாலி கறுப்பின மக்களை இரக்கமற்ற அடிமைத்தனத்தின் வாயிலுக்குக் கொண்டு செல்ல இந்தக் கொடூர கறுப்புச் சட்டத்தின் கீழ் எந்தவொரு இரண்டு வில்லன்களின் சபதங்களும் போதுமானவை. நீதிமன்றத்தில் அடிமை வாதாடுவதற்கென்று எதுவுமில்லை, அடிமையால் சொந்த சாட்சியங்களைக்கூட அங்கு கொண்டுவர முடியாது. அமெரிக்க சட்டத்துறை அமைச்சர் ஒருபக்க நியாயத்தை மட்டுமே சட்டப்பூர்வமாகக் கேட்க அனுமதிக்கப்பட்டவர். அதுவும் ஒடுக்குபவர் பக்கத்தின் நியாயத்தை மட்டுமே அவர் கேட்பார். இந்த மோசமான உண்மை என்றென்றும் உரக்கச் சொல்லப்படவேண்டும். இதைக் கேட்டு இந்த உலகம் உலுக்கி எழட்டும். கொடுங்கோலர்களைக் கொல்லும், அரசர்களை வெறுக்கும், மக்களை நேசிக்கும், குடியரசு, கிறிஸ்துவத்தை நேசிக்கும் அமெரிக்காவில், ஒரு மனிதனின் சுதந்திரத்தை நிர்வகிக்கும் நீதிபதிகளால் நிறைந்த நீதித்துறையில் வெளிப்படையான லஞ்சத்தின் கீழ் சேவை செய்கிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனக் குற்றஞ்சாட்டியவர்களை மட்டுமே விசாரியுங்கள்.

சட்டத்தின் அப்பட்டமான மீறல், சட்டங்களை நிர்வகிப்பதில் வெறுக்கத்தக்க வகையில் புறக்கணித்தல், பாதுகாப்பற்றவர்களைச் சிக்க வைப்பதற்கான தந்திரமான அமைப்புகள் என ஒரு கொடூர உள்நோக்கத்தில் இந்த அடிமைச் சட்டம் வரலாற்றில் ஒரு கொடூரச் சட்டமாகத் தனித்து நிற்கும். எந்த அடிப்படையும் இல்லாத இத்தகைய ஒரு சட்டத்தை சட்டப் புத்தகத்தில் உலகில் வேறெந்த நாடாவது இடம்பெறச்செய்துள்ளதா என எனக்குச் சந்தேகமாக உள்ளது. இந்த அவையில் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தாலோ, நான் கூறியதை தங்களால் மறுத்துக்கூற முடியும் எனக் கருதுபவர்கள் இருந்தாலோ அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அவர்களுடன் வாதாட நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன்.

 

மத உரிமை

இந்தச் சட்டம் கிறிஸ்துவ சுதந்திரத்தின் மிகக் கடுமையான மீறல்களில் ஒன்றாகும் என்றே நான் கருதுகிறேன். நம் நாட்டின் திருச்சபைகள் மற்றும் போதகர்கள் முட்டாள்தனமான குருடர்களாக இல்லாவிட்டால், அல்லது மோசமானவகையில் அலட்சியத்துடன் நடக்காவிட்டால் அவர்களும் என்னுடைய கருத்தையே ஆதரிப்பார்கள்.

சிவில் மற்றும் மத உரிமைக்காகவும், தங்களின் மனசாட்சியின்படி இறைவனை வணங்கும் உரிமைக்காகவும் இந்த நேரத்தில் இறைவனுக்கு அவர்கள் நன்றி செலுத்தும் இந்தத் தருணத்தில், இந்தத் தீய உலகில் மதத்தைப் பயனற்றதாக மாற்றக்கூடிய மதத்தின் மைய அர்த்தத்தையே மீறக்கூடிய சட்டத்தைப் பற்றி முற்றிலும் அமைதி காக்கிறார்கள். இந்தச் சட்டம் சுக்கு மிளகு சீரகம் பற்றிப் பேசுகிறதா என்ன? தேவாலயத்தில் பிரார்த்தனை பாடல்களைப் பாட அனுமதிக்க மறுப்பது, ஏதேனும் ஒரு விழாவின் பகுதியாக இருக்க அனுமதிக்காதது, எந்த விழாவில் கலந்துகொள்ள அனுமதியளிக்காதது என ஆயிரக்கணக்கான தேவாலய சமய உரை மேடையிலிருந்து நம் குரல்களை இடிமுழக்கங்கள் போல் கேட்கச் செய்ய வேண்டும். தேவாலயத்திலிருந்து ஒட்டுமொத்தமாக ஒரு போராட்டக்குரல் எழும், ரத்துசெய், ரத்துசெய், உடனடியாக ரத்துசெய் என. இந்த முழக்கத்தைத் தனது பேனரில் பொறிக்காமல் ஒரு அரசியல்வாதியால் வாக்கு சேகரிக்க முடியுமா என யூகிக்கவே கடினமாக இருக்கிறது. மேலும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மத உரிமைக்கான வரலாற்றில் இவை மற்றொரு ஸ்காட்லாந்தாக உலக வரலாற்றில் உதாரணமாக இருக்கும். கடுமையான வகையில் இருக்கும் பழைய ஏற்பாடு இருளில் மறைந்துவிடும். ஒவ்வொரு தேவாலயத்தின் கதவிலும் ஜான் நாக்ஸைக் காணலாம். குருமார்கள் சமய உரையாற்றும் ஒவ்வொரு மேடையிலும் ஜான் நாக்ஸ் கேட்டுக்கொண்டிருக்கிறார். (John Knox – ஸ்காட்டிஷ் சீர்திருத்தவாதிகளில் மிக முக்கியமானவரும் முன்னோடியுமாவார். ஸ்காட்டிஷ் தேவாலயத்தின் ஒழுங்கு நடைமுறைகளை அமைத்தவர். ஸ்காட்லாந்து, நாம் இன்று ஏற்றுக்கொள்ளும் குடியரசு வடிவத்திலான அரசாங்கத்தை வடிவமைத்தவர்). பில்மோரில் அழகான ஆபத்தான ராணி மேரியை விட நாக்ஸ் அதிக முக்கியத்துவமானவர். நம் நாட்டு தேவாலயங்கள் (சில விதிவிலக்குகளுடன்) தப்பி ஓடும் அடிமைச் சட்டத்தை மதச் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு போர் அறைகூவலாகக் கருதவில்லை. அதாவது திருச்சபை பொறுத்தவரை மதம் என்பது வெற்று வழிபாட்டுச் சடங்காகவும், விழாவாகவும் மட்டுமே கருதுகிறது. கருணை, நீதி, அன்பு, இரக்கம் ஆகிய முக்கிய நேர்மறை குறிக்கோள்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் மதம் சார்ந்து இருப்பதாகத் திருச்சபை கருதவில்லை. மேலும் கருணையைவிடத் தியாகமே முக்கியமானது என்றும், சங்கீதத்தைவிட முறையான பயிற்சியே உயர்ந்தது என்றும், உண்மையான நீதியைவிடப் புனிதமான கூட்டங்களே சிறந்தவை என்றும் கருதுகின்றன. வீடற்றவர்களுக்குத் தங்க இடம் கொடுப்பதை மறுப்பது, பசித்தவர்களுக்கு உணவு கொடுக்க மறுப்பது, நிர்வாணமாக இருப்பவருக்கு ஆடையை மறுப்பது போன்ற இத்தகைய நல்ல செயல்களைத் தடைசெய்யும் சட்டங்களை ஆதரிப்பவர்களை வணங்கச் சொல்வது மனிதக்குலத்திற்கான ஆசீர்வாதம் அல்ல, சாபம். பைபிளில் இத்தகையவர்களை இவ்வாறு குறிப்பிடுகிறது, “மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே! உங்களுக்குத் துக்கம் உண்டாகட்டும், நீங்கள் புதினாவிலும், வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்துவதில் கவனம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பிக்கப்பட்டுள்ள சிறப்புமிக்க நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள். இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டும்.“

 

திருச்சபையின் பொறுப்புணர்வு

இந்த நாட்டின் திருச்சபை அடிமைகளுக்கு அநீதியாக இருப்பது மட்டுமல்லாமல் ஒரு பக்கச்சார்புடன் ஒடுக்குபவர்களின் பக்கத்தில் மட்டுமே நிற்கிறது. அமெரிக்க அடிமைத்தனத்தின் அரணாகவும், அடிமை வேட்டையாடுபவர்களின் பாதுகாவலராகவும் இந்நாட்டின் திருச்சபை தன்னை உருமாற்றிக்கொண்டது. இதில் அதிக நபர்கள் தங்களைத் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள், திருச்சபையின் ஒளியாக நிற்பவர்கள் வெட்கமேயில்லாமல் மதத்தின் பெயராலும் பைபிளின் பெயராலும் அடிமைமுறைக்கு அனுமதி வழங்கியுள்ளனர். மனிதன் சரியான அடிமையாக இருக்கலாம் எனவும், முதலாளி அடிமை உறவு கடவுளால் நியமிக்கப்பட்டது எனவும் கற்பிக்கிறார்கள். மேலும் அடிமைமுறையிலிருந்து தப்பித்த அடிமைகளை மீண்டும் அவர்களின் முதலாளிக்கே அனுப்பிவைத்துவிடுவது என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சீடர்கள் அனைவரின் கடமை எனவும் கருதுகிறார்கள். மேலும் இத்தகைய பயங்கரமான தெய்வ நிந்தனையைக் கிறிஸ்துவத்திற்காக உலகம் முழுவதும் திணிக்கப்படுகின்றன.

 

என் பங்கிற்கு நானும் கூறுகிறேன். துரோகம் வரவேற்கத்தக்கது, நாத்திகத்திற்கு வரவேற்கிறோம், எதுவும் வரவேற்கத்தக்கது. கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நற்செய்திக்கும் முன்னுரிமை தருகிறோம். அவர்கள் புகழ்பெற்ற மதத்தின் பெயரையே இயந்திரத்தனமிக்க கொடூரமாகவும் மிருகத்தனமாகவும் மாற்றி தாமஸ் பைனி, வால்டேர் மற்றும் போலிங்ப்ரூக் ஆகிய அனைவரும் சேர்ந்து எழுதிய பகுத்தறிவு எழுத்துக்களால் உந்தப்பட்டு நாத்திகர்களாக மாறியவர்களை விட, மதத்தின் பெயரால் இவ்வாறு திருச்சபைகள் பேசி அக்காலகட்டத்தை விட அதிகமாக இக்காலகட்டத்தில் அதிக மக்கள் நாத்திகர்களாக மாற உதவுகிறார்கள். இந்த மத போதகர்கள் மதத்தை கடமையற்றதாகவும் இரக்க குணமற்றதாகவும் மாற்றி, ஒருவிதமான ஆழ் மயக்கநிலைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். இவர்கள் ஆனந்தமிக்க கடவுளின் அன்பை மதத்திலிருந்து பறித்துவிட்டு, மதத்தின் பெரும்பகுதியை பரந்துபட்ட வெறுப்பும் திகிலும் கொண்ட வடிவத்தில் மாற்றிவிட்டார்கள். இது ஒடுக்குபவர்கள், கொடுங்கோலர்கள், மனித திருடர்கள், குண்டர்கள் ஆகியோரின் மதம். இது மேலிருந்து வரும் தூய்மையான மற்றும் மாசற்ற மதம் அல்ல, முதலில் தூய்மையானதாகவும் பிறகு அமைதியைப் போதிப்பதாகவும், தயாளகுணமிக்கதாகவும், கருணைமிக்கதாகவும், சிறந்த பண்புகள் கொண்டதாகவும் பாசாங்குதனம் இல்லாமல், பாரபட்சம் பார்க்காமல் இந்த மதம் இருந்தது. ஒரு மதம் ஏழைகளை விடப் பணக்காரர்களுக்கே அதிக ஆதரவு தருகிறது, கீழ்ப்படிதலைப் பெருமையாகக் கருதுகிறது. மனிதகுலத்தை கொடுங்கோலர்கள் அடிமைகள் என இரண்டாகப் பிரிக்கிறது. மனிதர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒடுக்குபவர்களிடம் மேலும் அவர்களை ஒடுக்கக் கூறுகிறது. அனைத்து கொள்ளையர்களும், மனிதகுலத்தை அடிமையாக்குபவர்களும் சமமாகக் கொண்டாடும் ஒரு மதம் எதுவென்றால் இதுதான். இந்த மதம் கடவுளை மனிதர்களுக்கு மரியாதை செலுத்துவதாக மாற்றிவிட்டது. ஒரு இனத்தின் முன்னோர்களை இது மறுக்கிறது. மேலும், மனிதர்களின் சகோதரத்துவத்தின் பெரு உண்மையை இந்த மதம் தகர்த்துவிட்டது. இவை அனைத்தும் புகழ்பெற்ற தேவாலயத்திற்கும் எங்கள் நிலத்திலும் நாட்டிலும் இருக்கும், ஈர்க்கப்பட்ட ஞானத்தின் அதிகாரத்தில், இந்த மதம் திருச்சபை மற்றும் வழிபாடு ஆகியவை கடவுளின் பார்வைக்கு அருவருப்பானதாகத் தெரிகிறது என்று அறிவிக்கிறோம். அமெரிக்க திருச்சபையின் நிலையை ஈசயாவின் மொழியில் சிறப்பாகச் சொல்லிவிட முடியும், “வீண் கலைப்பைக் கொண்டு வரும் விஷயங்களை அருகில் கொண்டுவர வேண்டாம், தூபத்தை நான் வெறுக்கிறேன், அமாவாசை மற்றும் விடுமுறை தினக் கூட்டங்கள் வேறு கூடும். அதிலிருந்து என்னால் தப்பிக்க முடியாது. இந்தப் புனிதமான கூட்டங்கள்கூட ஒரு விதத்தில் பாவம் தான். உங்கள் அமாவாசை விழாக்களும் நீங்கள் கண்டுபிடித்த விழாக்களையும் நான் வெறுக்கிறேன். இவையெல்லாம் எனக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துபவை, இவற்றைச் சுமந்து நான் சோர்வடைகிறேன். உங்கள் கைகளை விரித்தால் என் கண்களை மூடி மறைந்துவிடுவேன். ஆம்! நீங்கள் அதிகமாக ஜெபித்தால் நான் கவனிக்கமாட்டேன்.

”உங்கள் கைகள் முழுவதும் ரத்தத்தால் தோய்ந்துள்ளது, தீயதைச் செய்வதை நிறுத்தி, நல்லவை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், தீர்ப்புநாளுக்காகக் காத்திருங்கள், ஒடுக்கப்பட்டவர்களை மீட்கவும், அனாதைகளுக்குப் பாதுகாப்பாக இருங்கள், விதவைகளுக்குப் பரிந்துபேசுங்கள்”

அடிமைத்தனம் தொடர்பான அமெரிக்க திருச்சபையின் முடிவைப் பார்த்தாலே தெரிகிறது அது ஒரு குற்றவாளி அமைப்பென்று அதனூடாக அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான அதன் திறனைப் பொறுத்தவரை மிகவும் பாவப்பட்ட மோசமான நிலையில்தான் உள்ளது. அதன் பாவத்தின் குற்றவுணர்ச்சி என்பது அடிமைத்தனத்தை ஒழிக்காமல் புறக்கணித்தது மற்றொன்று அதை ஆதரித்தது. ஆனால் இந்த நடைமுறையில் உண்மையான நிலையைக் கவனிக்கும் யாரும் பொதுப்படையான அறிவை ஏற்றுக்கொள்வார்கள் என ஆல்பர்ட் பார்னஸ் தெரிவிக்கிறார். திருச்சபைக்கு அதிகாரம் மட்டுமில்லை என்றால் அடிமைத்தனத்தை ஒரு மணிநேரத்திற்குக்கூட தக்கவைக்கும் சக்தி அதற்கு இருக்காது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

 

மத வெளியீட்டு நிறுவனங்கள், மன்றங்கள், ஞாயிறு பள்ளிகள், மாநாடுகள், பெரிய பெரிய திருச்சபைகள், மிஷனரிகள், பைபிள் மற்றும் சுவிஷேச துண்டுப்பிரசுர சங்கங்கள் அடிமைகளை வைத்திருக்கவும், அடிமைத்தனத்திற்கு எதிராகவும் தங்கள் பெரும் பலத்தைச் செலுத்தி போராட்டம் செய்ய வேண்டும். குற்றமும் இரத்தமும் தோய்ந்த இந்த மொத்த அமைப்பும் காற்றில் மறைந்துவிட வேண்டும். இவர்கள் இந்தக் கடமையில் பங்குகொள்ளவில்லை என்றால், அவர்கள் ஒரு மோசமான பொறுப்புணர்விற்கு ஆளாகத் தங்கள் மனதைத் திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

நாங்கள் அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடியபோது திருச்சபையிடமும் போதகர்களிடமும் அமைதியாக நடக்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டது. எப்படி எங்களால் அவ்வாறு நடக்க முடியும் என்றுதான் நாங்கள் கேட்டோம். அடிமைகளை மீட்பதற்கான எங்கள் போராட்டத்திற்கு எதிராகத் திருச்சபையும் தேசிய போதகர்களும் எங்களுக்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். நாங்கள் வலிமையாகப் போராட வேண்டும் அல்லது தப்பியோட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர்களின் போராட்டம் கொண்டுவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களை அழிப்பதற்கான தீ வடக்கு மாகாண திருச்சபையிலிருந்து பரவியதா என்று நான் அறிய விரும்புகிறேன். ஒடுக்குபவர்களின் சாம்பியன்களாக இருக்கும், அமெரிக்க தியாலஜியில் திடீரெனத் தோன்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களின் பயபக்திக்காகவும் உண்மையான கற்றலுக்காகவும் போற்றப்படுகிறார்கள். The LORDS of Buffalo, SPRINGS of New York, LATHROPS of Auburn, COXES and SPENCERS of Brooklyn, GANNETS and SHARPS of Boston, DEWEYS of Washington மற்றும் இந்த நாட்டின் பிற சிறப்புமிக்க மதக்குழுக்கள் தங்களைப் போதகர்கள் என்று கூறிக்கொள்வதற்கான எந்த உரிமையும் இல்லை. ஹீப்ரூக்களின் உதாரணத்திற்கு எதிராக அப்போலஸ்தர்களின் கண்டனத்திற்கு எதிராக, கடவுளின் சட்டத்திற்கு முன்பாக மனிதனின் சட்டத்தை மதிக்க வேண்டும் என அவர்கள் எங்களுக்குத் தவறாகக் கற்பிக்கின்றனர்.

 

இத்தகைய அவதூறுகளால் என்னுடைய ஆன்மா சோர்வடைகிறது. இத்தகையவர்களை யேசு கிறிஸ்து வழி நிலையாக இருப்பவர்கள் என்றும் பிரதிநிதிகள் என்றும் எவ்வாறு ஆதரிப்பது எனும் மர்மத்தில் ஊடுருவிச் செல்ல மற்றவர்களுக்கு விட்டுவிடுகிறேன். நான் அமெரிக்க திருச்சபையைப் பற்றிப் பேசும்போது நம் நிலத்தின் பெரிய மத அமைப்புகளையே நான் தனித்துக் குறிப்பிடுகிறேன் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. அதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்த வடக்கு மாகாணம் முழுவதிலும் ஆங்காங்கே உன்னத மனிதர்களைக் காணலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் Henry Ward Beecher of Brooklyn மற்றும் Samuel J. May. மேலும் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர்கள் இந்த மேடையில் ஒளிபொருந்தி அமர்ந்திருக்கின்றனர். இவர்களுக்குச் சிலவற்றைக் கூற நான் விரும்புகிறேன். உயர்ந்த மத நம்பிக்கையுடனும் வைராக்கியத்துடனும் எங்கள் பக்க நியாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இவர்களின் கடமையாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்வது அடிமைகளை அவர்களது அடிமைச் சங்கிலியிருந்து விடுவித்த பெரும் பணியில் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

 

இங்கிலாந்தில் மதமும் அமெரிக்காவில் மதமும்

அடிமைமுறை ஒழிப்பு இயக்கத்தை அமெரிக்க திருச்சபை அணுகுவதற்கும், இதேபோன்ற ஒரு இயக்கத்தை இங்கிலாந்து திருச்சபை அணுகியதற்கும் உள்ள வேறுபாட்டை ஒருவர் பார்த்தால் ஸ்தம்பித்து நின்றுவிடுவார். அந்நாட்டு திருச்சபை மனிதகுலத்தின் நிலைமையைச் சீர்செய்யவும் மேம்படுத்தவும் வெளிப்படையாக முன்வந்தது, மேற்கிந்திய அடிமைகளின் காயங்களுக்குப் பொறுப்பேற்று அவர்களின் தனியுரிமையையும் சுதந்திரத்தையும் மீட்டுக்கொடுத்தது. இரட்சிக்கப்படுவது என்பது அந்த நாட்டைப் பொறுத்தவரை மிக உயர்ந்த மதம் சார்ந்த கேள்வியாகும். ஷார்ப், கிளார்க்சன், வில்பர்போர்ஸ், புயர்செல்ஸ் மற்றும் நிப்ஸ் ஆகியோரின் பக்திக்கும் தயாள குணத்திற்கும் புகழ்பெற்றவர்கள். திருச்சபை அடிமைமுறை ஒழிப்பு இயக்கத்தை முற்றிலுமாக ஒடுக்கவேண்டுமென விரும்புகிறது. ஆனால் அது திருச்சபைக்கு எதிரான இயக்கமல்ல. அடிமைமுறை ஒழிப்பு இயக்கத்திற்கு விரோதமாக இல்லாமல், திருச்சபை ஆதரவு தந்தாலே அடிமைமுறை ஒழிப்பு இயக்கம் திருச்சபையை எதிர்ப்பதிலிருந்து விலகிவிடும். அமெரிக்கர்களே உங்கள் குடியரசு அரசியல், குடியரசு மதத்தைவிடக் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. இரண்டும் வெவ்வேறு வகையில் கொடூரத்தை ஏற்படுத்துவதுதான். சுதந்திரத்தின் மீதான அன்பு, உங்களின் தூய கிறிஸ்துவம் போன்றவற்றில் பெருமை கொள்கிறீர்கள். ஆனால் நாட்டின் மொத்த அரசியல் அதிகாரமும் (இரண்டு அரசியல் கட்சி பங்கிட்டுள்ளன) இந்நாட்டின் 30 லட்ச மக்களுக்கும் உள்நாட்டு அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்தவும் ஆதரவு தரவும் உறுதியளித்துள்ளது. ரஷ்யாவிலும் ஆஸ்திரியாவிலும் கொடுங்கோலர்கள் முடிசூட்டிக்கொள்ளும்போது பெருமைப்பட்டீர்கள். அதேசமயம் வர்ஜீனியா மற்றும் கலிபோர்னியா கொடுங்கோலர்களும் கைப்பாவையாகவும் காப்பாளராகவும் இருந்துகொண்டே உங்கள் ஜனநாயக அமைப்பிலும் பெருமையடைந்துகொள்கிறீர்கள். ஒடுக்கப்பட்டவர்களை வெளிநாடுகளிலிருந்து அழைத்துவந்து அவர்களுக்கு விருந்து தருகின்றீர்கள், கௌரவிக்கிறீர்கள், உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறீர்கள், அவர்களை வாழ்த்தவும் பாதுகாக்கவும் அவர்களுக்குத் தண்ணீர் போல பணத்தைச் செலவு செய்கிறீர்கள். ஆனால் உங்கள் சொந்த நாட்டில் இருக்கும் அடிமைகளை வேட்டையாடுவீர்கள், கைது செய்வீர்கள், சுடுவீர்கள் மற்றும் கொல்வீர்கள். உங்கள் வளர்ச்சியிலும் அனைவருக்குமான கல்வியிலும் நீங்கள் பெருமையடைகிறீர்கள். அதேநேரத்தில், ஒரு நாட்டின் தன்மையையே கெடுக்கும் மோசமான பயங்கரமான அமைப்பையும் பேணுகிறீர்கள். பேராசைக்காகத் தொடங்கப்பட்ட, பெருமைக்கு ஆதரிக்கப்பட்டு, கொடுமையாகத் தொடர்கிறது. ஹங்கேரியின் வீழ்ச்சிக்குக் கண்ணீர் சிந்தினீர்கள். உங்கள் படைப்பிரிவினர்கள் ஹங்கேரிக்குச் சென்று அந்நாட்டு மக்களைத் துன்பத்திலிருந்து மீட்கும் வரை அந்நாடு செய்த தவறுகளின் சோகக் கதையை உங்கள் கவிதைகளிலும், அரசியல்வாதிகளின் சொற்பொழிவுகளிலும் பேசுபொருளாகப் பயன்படுத்தினீர்கள். ஆனால் அமெரிக்க அடிமைமுறை தொடர்பாக நீங்கள் செய்த ஆயிரம் தவறுகளைப் பற்றி எதுவும் பேசாமல் கள்ளமௌனம் காப்பீர்கள். இந்தத் தவறை அம்பலப்படுத்தி தேசிய விவாதத்தளத்திற்கு எடுத்துவந்தால் அவர்களை இந்த தேசத்தின் எதிரியாகச் சித்தரிப்பீர்கள். பிரான்ஸ் அல்லது அயர்லாந்து சுதந்திரம் பற்றி அனல்பறக்கப் பேசுவீர்கள் ஆனால் உங்கள் அமெரிக்க நாட்டில் அடிமைகளின் சுதந்திரம் பற்றிப் பேசுவதென்றால் பனிப்பாறை போல குளிர்ந்தவராக இருக்கிறீர்கள். உழைப்பின் கண்ணியம் குறித்து நீங்கள் காததூரம் பேசுகிறீர்கள் ஆனால் உழைப்புக்கே அவமானம் தரும் வகையில் அதனைக் களங்கப்படுத்தும் வகையில் ஒரு அமைப்பை நிரந்தமாக்கி வைத்துள்ளீர்கள். தேநீர் வரியான 3 பென்ஸ்களைக் கட்டுவதிலிருந்து விலக்குபெற நீங்கள் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் முன்பு திறந்த மார்புடன் எதிர்நின்று வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால் உங்கள் நாட்டில் வாழும் கறுப்பினத் தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதிக்கும் கடைசி பென்னி இன்றளவும் சுரண்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. உலகிலுள்ள அனைத்து தேசத்தையும் ஒரே மனிதனின் ரத்தத்திலிருந்து தான் இறைவன் படைத்தான் எனும் கருத்தாக்கத்தை நீங்கள் நம்புகிறீர்கள். மேலும் அனைத்து மனிதர்களும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திக்கொள்ளவேண்டுமென்றும் கட்டளையிடுகிறீர்கள். அதேநேரத்தில் உங்கள் தோலின் நிறத்தில் இல்லாத மனிதர்கள் மீது வெறுப்பைக் காட்டுகிறீர்கள். அனைத்து மனிதர்களும் சமம் என்றும், அனைவருக்கும் மாற்ற முடியாத உரிமைகளான வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சியில் திளைத்தல் போன்றவற்றைப் படைத்தவன் வழங்கியுள்ளான் என்றும் இந்த உண்மை வெள்ளிடைமலை போல் தெரிவது என்றும் நீங்கள் உலகுக்கு பிரகடனப்படுத்துகிறீர்கள் உலகத்தவர்களும் இதைப் புரிந்துகொண்டதாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் உங்கள் நாட்டின் ஏழாவது பகுதியிலிருக்கும் குடிமக்களை அடிமைகளாக நடத்துகிறீர்கள். “கலகத்திற்கு எதிராக உங்கள் முன்னோர்கள் போராடிய காலத்தைவிட இப்போது மோசமாக உள்ளது“ என்று உங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த தாமஸ் ஜெபர்சனே கருத்து தெரிவித்துள்ளார்.

 

சக குடிமக்களே! உங்கள் தேசத்தின் போதாமைகளை மேலும் விவரித்துக்கூற நான் விரும்பவில்லை. இந்த நாட்டின் அடிமைமுறை தொடர்ந்து இருப்பது உங்கள் குடியரசிற்கு வெட்கக்கேடானது என முத்திரை குத்துகிறது. உங்கள் மனிதாபிமானம் வெறும் பாசாங்குத்தனம் எனக் காட்டுகிறது. உங்கள் கிறிஸ்துவம் பொய்யானது என வெளிப்படுகிறது. இந்த அடிமைமுறை வெளிநாடுகளில் உங்கள் தார்மீக அதிகாரத்தை ஒழிக்கிறது. வீடுகளிலேயே உங்கள் அரசியல்வாதிகளை மோசமாக்கிவிடுகிறது. மதத்தின் அஸ்திவாரத்தையும் உங்கள் பெயரையும் அது கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த பூமியை அவமானப்படுத்தும் ஒரு உதாரணக் குறியீடுச் சொல் அடிமைமுறை. உங்கள் அரசாங்கத்திலிருக்கும் அருவருக்கத்தக்க சக்திதான் இது. உங்கள் மொத்த ஐக்கிய நாட்டிற்கே தொந்தரவாகவும், ஆபத்தாகவும் வரக்கூடிய ஒரே சக்தி அதுதான். அது உங்கள் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது கல்விக்கு எதிரியாக இருப்பது. வெறும் ஆணவப் புகழ்ச்சியையே இந்த அடிமைமுறை வளர்க்கிறது. மேலும் இது தீமையை ஊக்குவிக்கிறது, குற்றத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இவை அனைத்தையும் ஆதரித்துக்கொண்டிருக்கும் பூமிக்கு இது ஒரு சாபம்தான். ஆனால் நீங்கள் இன்னும் அதன் மேலே நம்பிக்கைவைத்துக்கொண்டு ஒரு பற்றுறுதியுடன் இருக்கிறீர்கள். நான் உங்களை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன் உங்கள் தேசத்தின் மார்பில் ஒரு மோசமான விலங்கு ஊர்ந்துகொண்டு வருகிறது. உங்களின் இளமை துடிப்புமிக்க குடியரசில் அந்த நஞ்சுமிக்க விலங்கு கழுத்தை நெறிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது. இறைவன் மீதான அன்பில், அதைக் கிழித்து எரியுங்கள். மறைந்திருக்கும் அசுரனிடமிருந்து பறந்து சென்றுவிடுங்கள். 2 கோடி மக்களின் பாரம் ஒழியட்டும். என்றென்றைக்குமாக அது அழியட்டும்.

 

அரசியலமைப்புச் சட்டம்

இந்த குடியரசின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய, இந்நாட்டை உருவாக்கிய முன்னோர்கள் வடிவமைத்த அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் அடிமைகளை வைத்துக்கொள்வதை அங்கீகரித்தும் உத்தரவாதம் அளிக்கப்பட்டும் இருப்பதைத்தான் இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் குறிப்பாக நான் விமர்சிக்கிறேன். இப்போது நான் சொன்னதற்கு மாறாக விமர்சிக்கிறேன் உங்கள் தந்தையர்கள் மிகவும் தாழ்ந்துசென்று இவ்வாறு கூறினார்கள் – எங்களைக் கேலி செய்யும் வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசினார்கள் – காதுகளில் வாக்குறுதியைப் பரிமாறிவிட்டு, அவற்றை மனதிலேயே நொறுக்கிவிடுங்கள் என்று கூறினார்கள்.

நான் முன்பு உரைத்ததுபோன்று அவர்கள் நேர்மை மிக்கவர்களாக இல்லாமல், மனிதக்குலத்தின் வழக்கத்திலேயே மிக மோசமான ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாத முடிவுதான். அதிலிருந்து தப்பிக்க முடியாதுதான். ஆனால் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை விமர்சிப்பவர்களிடமிருந்து நான் வேறுபடுகிறேன். இது அவர்களின் நினைவிலிருந்து பேசப்பட்ட பொய்கள் என்றாவது நான் என்னளவில் நம்புகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தைக் கேள்விக்குட்படுத்தி விவாதிக்கும் அளவிற்கு இப்போது நேரமில்லை. அதை விவாதிக்கும் அளவிற்கு எனக்குத் தகுதியும் இல்லை. Lysander Spooner, Esq., by William Goodell, by Samuel E. Sewall, Esq., ஆகியோரும் மிக முக்கியமாக  Gerritt Smith, Esq என்பவரும் அரசியலமைப்பு பற்றி மிக விரிவாக ஆழ்ந்து விவாதித்துவிட்டனர். அடிமை முறையை எந்த வகையிலும் ஒருமணி நேரத்திற்காகவாவது அரசியலமைப்புச் சட்டம் ஆதரிக்கும் எனும் குற்றச்சாட்டை அதிலிருந்து நீக்கிவிட்டனர் என்றே நான் கருதுகிறேன்.

சக குடிமக்களே! அரசியலமைப்புச் சட்டத்தின் அடிமை ஆதரவு நிலைக்கு வடக்கிலிருக்கும் மக்கள் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொடுத்துவிட்டனர் என்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த சட்டத்தில் இந்த அடிமைமுறையைத் தொடர்வதற்கான உத்திரவாதமோ, உரிமமோ என எதுவுமில்லை என்றே நான் நம்புகிறேன். ஆனால் அதை புரிந்துகொள்ளத்தக்க வகையில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் புகழ்மிக்க சுதந்திரத்திற்கான ஆவணம் ஆகும். அதன் முகப்பைப் படியுங்கள். அதன் நோக்கங்களைக் கவனியுங்கள். அந்த முகப்புப் பக்கத்தில் அடிமைமுறை பற்றி ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா? அது நம்மிடம் இருக்கிறதா? அது நுழைவாயிலில் இருக்கிறதா? அல்லது அரசியலமைப்புச் சட்டம் எனும் கோயிலில் இருக்கிறதா? இரண்டிலும் இல்லை. தற்போது இந்தக் கேள்விக்கான பதிலை விவாதிக்க நான் விரும்பவில்லை. நான் ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் அடிமை முறையை ஆதரிக்கும் ஆவணமாக இந்தச் சட்டத்தை இயற்றினார்கள் எனில், ஏன் இதில் அடிமைமுறை, அடிமைகளை வைத்திருத்தல், அடிமை போன்ற சொற்கள் எங்கும் இடம்பெறவில்லை. அரசியலமைப்புச்சட்டத்தில் ரோசெஸ்டர் நகரம் பற்றி அரசியலமைப்புச்சட்டத்தின் நிலைப்பாடு என்ன? சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கிறதா? இப்படி ஒரு நிலமே குறிப்பிடப்படாமல் புதிதாக உருவாக்கப்பட்டதற்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறதா? ஆம் அனைத்து சட்ட ஆவணங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், சட்டங்களைப் புரிந்துகொள்ளவும் விளக்குவதற்கும் சில விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் அனைவருக்கும் நன்கு தெரிந்த சாதாரணமான விதிகள்தான். உங்களுக்கு எனக்கு எனப் பொதுஅறிவுடன் அனைவரும் எளிதாகப் புரிந்துகொண்டு பொருத்திப்பார்க்கலாம். இதற்கு சட்டக்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் ஒவ்வொரு கருத்தை உருவாக்கவும் அதைப் பரப்புவதற்கும், அந்தக் கருத்தை நிலைநிறுத்த மதிக்கத்தக்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவதற்கும் உள்ள உரிமையை நான் மதிக்கிறேன். இந்த உரிமை மட்டும் இல்லையெனில், அமெரிக்க குடிமகன் பிரெஞ்சு குடிமகன் போன்று பாதுகாப்பற்று இருப்பதாக எண்ணிக்கொள்வான். அரசியலமைப்பு சட்டத்தில் எந்த அமெரிக்க மனமும் இதயமும் விழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் இருக்க முடியாது என முன்னாள் துணை குடியரசுத்தலைவர் டல்லஸ் (Dallas) கருத்துத்தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் தன்னளவில் அது பயன்படுத்தும் வார்த்தைகளின் தெளிவானது, புரிந்துக்கொள்ளகூடியது மேலும் இது சொந்தநாட்டு மக்களே எந்தவித நுட்பங்களுமில்லாமல் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என டெல்லஸ் தெரிவிக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் அடிப்படைச் சட்டம் என சட்டமன்ற உறுப்பினர் பெர்ரியன் (Berrien) தெரிவிக்கிறார். நம் சுதந்திர சாசனத்தை ஒவ்வொரு குடிமகனும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களான பிரீஸ் (Breese), லேவிஸ் சேஸ் (Lewis Cass) என பெயர் குறிப்பிடத்தக்க மற்ற பல புகழ்பெற்ற வழக்குரைஞர்களும் அரசியலமைப்புச் சட்டத்தை விளக்கியுள்ளனர். எனவே ஒரு தனிப்பட்ட குடிமகன் அனுமானிக்கும் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இப்போது அரசியலமைப்பை அதன் தெளிவான வார்த்தைகளில் உள்ளபடியே வாசிக்க எடுத்துக்கொள்வோம். அதில் அடிமைச் சார்பு சட்டங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிப்பதை நான் மறுத்து அதிலிருந்து மீறுகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில், அடிமைத்தனம் நீடித்திருப்பதற்கு முற்றிலும் எதிரான கொள்கைகளையும் குறிக்கோள்களையும் கொண்டிருப்பதையும் காண்கிறேன்.

 

பார்வையாளர்களை மிக நீண்ட நேரம் காக்கவைத்துவிட்டேன் எனத் தெரிகிறது. வருங்காலத்தில் இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு முழுமையான நியாயமான கலந்துரையாடலுக்கான ஒரு நல்ல வாய்ப்பாக நான் இதைப் பயன்படுத்திக்கொள்வேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

இறுதியாக ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள என்னை அனுமதியுங்கள், இந்த நாட்டைப் பற்றி நான் எடுத்துவைத்துள்ள கருத்துகள் இன்று இருள் நிறைந்திருந்தாலும், இந்த நாட்டின் மீதான நம்பிக்கையை நான் இழந்துவிடவில்லை. செயலில் ஒரு தீவிரம் தெரிகிறது, அந்த தீவிரம் அடிமைமுறையை ஒழிக்க விடாமல் போராடும் என்பதில் நான் நம்பிக்கைகொள்கிறேன். கடவுளின் கைகள் எப்போதும் பின்வாங்குவதில்லை மற்றும் அடிமைமுறை ஒழிக்கப்படும் என்பதும் காலத்தின் கட்டாயம். ஆகவே நான் எங்கே இதை ஆரம்பித்தேனோ நம்பிக்கையுடன் அங்கேயே விட்டுச் செல்கிறேன். சுதந்திரப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளிலிருந்தும், அறிவுப்பூர்வமான அமெரிக்க அமைப்பிலிருந்தும் ஒருவித ஊக்கத்தை நான் பெறுகிறேன்.  மேலும் இந்த சகாப்தத்தின் மாறிவரும் வெளிப்படையான பழக்கவழக்கங்களினாலும் என்னுடைய ஆத்மா உத்வேகம் அடைந்துள்ளது. அதே சமயத்தில் பல காலங்களுக்கு முன்பு நாடுகளின் உறவு எப்படி இருந்ததோ அப்படித்தான் இப்போதும் தொடரவேண்டும் என்பதில்லை. இப்போது எந்த நாடும் உலகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது மேலும் எந்தவித தொந்தரவும் இல்லாமல் தங்கள் மூதாதையர்கள் வழிகாட்டியவாறு தொடர்ந்து அதிலேயே பயணித்துக்கொண்டும் இருக்க முடியாது. இதைச் செய்வதற்கான சரியான காலம் இது. கடந்த காலங்களில் ஒருவர் தன்னுடைய தீமையான குணத்தை யாருக்கும் தெரியாமல், சமூகத்தில் தண்டனை பெறாமல் மறைத்துப் பின்பற்றிவர முடிந்தது. அப்போது ஞானம் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. அனைவருக்கும் சமமாகக் கல்வி அளிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட மேல்தட்டு நபர்களால் மட்டுமே கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றனர். மக்களும் தொடர்ந்து ஆன்மீக இருளில் வாழ்ந்து வந்தனர். ஆனால் இப்போது மனித விவகாரங்கள் மாறிவிட்டன. நான்கு சுவருக்குள் மட்டுமே இருந்த நகரங்களும் அரசுகளும் இப்போது காலாவதியாகிவிட்டன. வணிகத்தின் கரங்கள் வலிமையான நகரங்களின் கதவுகளைச் சிதைத்துவிட்டது. புத்திசாலித்தனமும் ஞானமும் பூமியின் இருண்ட மூலை வரை பரவுகிறது. இது கடல் மற்றும் பூமி ஆகியவற்றிற்கு கீழேயும், மேலேயும் வழியை ஏற்படுத்துகிறது. காற்று, நீராவி, மின்னல் ஆகியவை அதனுடைய உரிமம் பெற்ற முகவர்களாக இருக்கின்றன. கடல்கள் இப்போது நாட்டைப் பிரிப்பதில்லை, இரு நாடுகளையும் ஒன்றாக இணைக்கிறது. இப்போது பாஸ்டனிலிருந்து லண்டன் வரை விடுமுறைக் காலத்தில் உல்லாசப் பயணம் மேற்கொள்ளலாம். இப்போது தூரம் என்பதே அழிக்கப்பட்டுவிட்டது. அட்லாண்டிக் வளைவிலிருந்து வெளிப்படுத்தப்படுகிற ஒரு எண்ணம் மற்றொரு பக்கத்தில் தெளிவாகக் கேட்கிறது. மிகத்தூரத்திலும் அற்புதமாகவும் இருக்கும் பசிபிக் பெருங்கடல் இப்போது நம் காலடியில் உருண்டு ஓடுகிறது. காலங்காலமான தொடர்ந்து வந்த பிரபஞ்ச மர்மம் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டது. எல்லாம் வல்ல இறைவனின் கட்டளையான அங்கே ஒளி உண்டாகட்டும் என்பதற்கு இனி அதிகாரமில்லாமல் ஆகிவிட்டது. இப்போது நம் உணர்வுகள், விளையாட்டு அல்லது பேராசையிலிருந்து, அதன் மீதான துஷ்பிரயோகத்திலிருந்தோ கோபத்திலிருந்தோ எதிலிருந்தும் இப்போது நம்மால் தப்ப முடியாது. சீனாவில் இயற்கைக்கு மாறாக இரும்பு ஷூவால் மேல்தட்டு பெண்களின் கால்கள் கட்டப்படுவதையும். அங்கு கால் கட்டிக்கொள்ளுதல் என்பது உயர்நிலைப் பண்பாகக் கருதப்படுவதையும் அது பெண்களுக்கு மிகப்பெரும் தீங்கை விளைவிக்கிறது என்பதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இதே முந்தைய காலமாக இருந்தால் இது வெளியுலகத்திற்குத் தெரியாமல் போகக்கூடும். ஆப்பிரிக்கா தன் இருளிலிருந்து எழுந்து நெய்யப்படாத ஆடையை அணிய வேண்டும். எத்தியோப்பியா தன் கைகளை இறைவனை எட்டும் தொலைவுக்கு உயர்த்த வேண்டும். வில்லியம் லாய்ட் கேரிசன் மீது எனக்கிருக்கும் ஈர்க்கத்தக்க விருப்பத்துடன் நானும் இங்கிருக்கும் அனைத்து இதயங்களும் என்னுடன் இணைந்து இந்தக் கவிதையைச் சொல்லட்டும்:

 

அடிமைகளின் சங்கிலிகள்

உடைபடும்போது

உலகம் முழுவதும்

கொண்டாட அந்த ஆண்டை

விரைவில் கொண்டுவா இறைவா

ஒடுக்கப்பட்டவர்கள் முட்டியிடுவதிலிருந்து

நம்மைத் தவறாக நடத்துவதிலிருந்து

சர்வாதிகாரத்தின் கருவை ஒழிக்கட்டும்

இனி நாங்கள் விலங்குகள் இல்லை

சுதந்திரம் நம்மை ஆளும்

அந்த ஆண்டு வரும்,

மனிதனிடமிருந்து பிடுங்கப்பட்ட உரிமைகள்

மீட்கப்பட்டு மீண்டும்

அவர்களுக்கே

திருப்பிக் கொடுக்கப்படும்

 

மனித ரத்தங்கள் ஆறாக ஓடுவதை

நிறுத்தும்

அந்த நாளை

விரைவில் கொண்டுவா இறைவா

மனித சகோதரத்துவத்தின் கோரிக்கைகள்

அனைத்து காலங்களிலும்

புரிந்து கொள்ளப்படட்டும்

பிறகு நன்மைக்கும் தீமைக்கும் திரும்பட்டும்

பழிக்குப் பழி எனும் எண்ணம் இல்லை

அனைத்துப் போராட்டங்களும்

முடிவுக்கு வரும்

அனைத்து எதிரிகளும் நம்பிக்கையுள்ள

நண்பர்களாகிவிடுவார்கள்

அந்த நாள் வரும்

 

அத்தகைய அழகான நேரத்தை

விரைவில் கொண்டுவா இறைவா

சர்வாதிகாரத்தனம் இல்லாமல்

ஒவ்வொருவரிடமிருந்தும் பயம் அகலும் வகையில்

மனிதகுலம் அதன் உச்சத்தைத் தொடும் வகையில்

அரசன் போன்று அதிகாரத்தைப் பயன்படுத்துவோம்

பிறப்பால் அனைவரும் சமம்!

அத்தகைய காலம் வரும்,

ஒவ்வொருவருக்கும்

அனைவருக்கும்

அவன் சிறையிலிருக்கும்

அதிகாரத்தின் நிலை

முன்செல்லும்….

 

தேர்ந்தெடுத்த

பதிவியில் இருக்கும்போது

அதனால் எவ்வளவு

நன்மை தீமை ஏற்பட்டாலும்

அந்த ஆண்டு, நாள், காலம்

வரும்வரை

காத்திருப்பேன்

தலையில்

இதயத்தில்

கைகளில்

அந்தத் தளையை உடைக்க,

அடிமைச் சங்கிலியைத் தூக்கி எறிய

நான் முயல்வேன்

வேட்டையாடி

கொள்ளையிட்ட இரை

விடுவிக்கப்படும்

அவர்கள்

சொர்க்கத்தை அனுபவிக்கட்டும்!

ஃபெரட்ரிக் டக்ளஸ் ஜூலை 5ம் நாள் உரை.

தமிழில் :ரா.பாலசுந்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.