ஜேன் குடெல்: மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது; சரியான பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பிப்பதற்குப் பல வழிகள் உள்ளன

ஜேன் குடெல் (Jane Goodall) சிம்பன்சி குரங்குகள் குறித்த ஆய்வுகள் மற்றும் அவ்வினத்தின் மிகச்சிறந்த முதன்மை மருத்துவர்களில் ஒருவராவார். கோம்பே ஸ்ட்ரீம் தேசிய பூங்காவில் வசிக்கும் சிம்பன்சி குரங்கு குறித்த ஆய்வில் கடந்த 60 ஆண்டுளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார். உலகின் முக்கியமான குரங்கு இனங்களையும் அவற்றின் உறைவிடங்களையும் பராமரித்துப் பாதுகாக்க வேண்டியது குறித்து கவனயீர்ப்பு செலுத்தி, சிம்பன்சி இனத்துக்காக வாதாடியவர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். தமது வளம் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளுக்காக ஐ.நா. மற்றும் பல்வேறு அரசுகளால் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.

சர்வதேச அளவிலான கொரோனா பெருந்தொற்றுப் பரவல் மற்றும் காலநிலை நெருக்கடிகள் போன்றவை முன்னிறுத்தும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கடுமையான மாற்றங்களை மேற்கொள்ளாவிடில், மனித இனமே அழிவுக்கு ஆளாகக் கூடும் என்று நீங்கள் கடந்த ஜூன் மாதத்திலேயே எச்சரித்திருந்தீர்கள்.

ஆம். நிலைமை கவலைக்கிடமாகத் தான் உள்ளது. வழக்கம்போலவே, இயற்கை வளங்களை வேகவேகமாக உபயோகிப்பதன் காரணமாக வணிகம் நெடுங்காலம் நிலைத்து நிற்கப் போவதில்லை. சில இடங்கள் மீண்டும் துளிர்விடும் முன்பாகவே, நாம் அதைவிட வேகமாக, இயற்கை வளங்களை உபயோகித்து வருகிறோம். இதன் விளைவுகளை நம்மால் பார்க்க முடியும். தட்பவெப்பநிலை மாற்றங்களைச் சற்று கூர்ந்து கவனியுங்கள். இது ஏதோ எதிர்காலத்தில், நெடுநாள் கழித்து நடக்கப்போகிற ஒன்றல்ல; நிகழ்காலத்திலேயே பெரும் சூறாவளி புயல்களையும் வெள்ளத்தையும் தீயையும் நாம் பார்க்கிறோம். எரிமலையைப் போல, இவை வளர்ந்து கொண்டே இருக்கின்றன. உலகளாவிய அளவில் பார்க்கும்போது, இவை மிகுந்த மனச்சோர்வை அளிக்கின்றன.

இந்த சர்வதேச அளவிலான பெருந்தொற்றுப் பரவல், நமது முன்கூட்டிய புலன் உணர்வுகளைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு, நம்மிடையே ஒரு அவசர உணர்வை உண்டாக்கி இருக்கிறது எனக் கருதுகிறீர்களா?

கோவிட், மாற்றத்தை உண்டாக்குகிற வகையில், ஒரு உந்துதலைத் தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இயற்கையோடு மிருகங்களோடும் நாம் முற்றிலும் புதியதொரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதே இந்த சர்வதேச நோய்த்தொற்று நமக்குக் கற்றுத் தந்த முக்கியமான பாடமாகக் கொள்ளலாம். விலங்குகளை அவமதிப்பதன் மூலம், விலங்குவழி நோயாக்கம் (zoonotic diseases) மற்றும் நோய் பரவுதலுக்கான நிலையை உருவாக்கிவிட்டோம். இத்தகைய அவமதிப்பையே, நாம் தொழிற் பண்ணைகள், மனித உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுதல், கானுயிர்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கானுயிர்களை வியாபாரம் செய்தல் போன்றவைகளிலும் செய்துவருகிறோம். புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் நோய்களில், விலங்குகளின் வாயிலாக பரவக்கூடிய நோய்த்தொற்றுக்கள் சுமார் 75 சதவீதம் ஆகும்.

மேற்கொண்டு கூடுதலாக என்ன செய்யலாம்?

நாம் இயற்கை உலகத்துடன் நிலையான மற்றும் நீடிப்புத் திறன்வாய்ந்த உறவை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை நோக்கி நகரவேண்டும். உலக நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை உபயோகிப்பதை விடுத்து, சுத்தமான மற்றும் பசுமை சக்தியை சகாய விலையில் கிடைக்கச் செய்வதன் மூலம் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். நகர்புறங்களில் மரங்களை நடுவது மிகப்பெரிய பலனளிக்கும் —— வெப்பநிலையைக் குறைக்கும், காற்றைச் சுத்தப்படுத்தும், வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்தும், உள மற்றும் உடல் நலத்தை மேம்படுத்தும். கிடைக்கப் பெறும் பலன்களில் இவை ஒரு சில மட்டுமே. நாம் கழிவுப்பொருட்களை உண்டாக்குவதையும் வெகுவாகக் குறைக்க வேண்டும். நான் போர்க் காலத்தில் வளர்ந்தவள். அப்போது உணவுத் தட்டுப்பாடு இருந்ததனால், எவருமே உணவை வீணாக்கவில்லை. பழங்குடி மக்களைப் போல, நாம் நமது உணவின் மதிப்பை அறிய வேண்டும்.

அரசியல்வாதிகளும் பொது மக்களும் இச்சவால்கள் குறித்து போதிய கவனம் செலுத்துகிறார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா?

அழிவு விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிற காரணத்தால், அது குறித்த விழிப்புணர்வும் உச்சபட்சமாக உள்ளது. ஆனால் சவால்களைக் குறித்து அதிக கவனம் செலுத்துவதென்பது அதிகம் பயனளிக்காது. ஆம், ஊடகங்கள் நாம் ஏற்படுத்துகிற எதிர்மறை தாக்கங்களை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். அதே சமயம், உலகெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிற மிக அருமையான, ஆச்சரியமளிக்கக் கூடிய மறுசீரமைப்பு முன்னெடுப்புகளுக்கும் இடமளிக்க வேண்டும். அவை மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க ஆர்வம் கொள்வார்கள். நீங்கள் நம்பிக்கையை இழக்கும்பட்சத்தில், நீங்கள் கவலை கொள்ள எதுவுமில்லை.

நம்பிக்கை அளிக்கும் வழிமுறைகளை நாம் எங்கு காண முடியும்?

மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள், காற்று மற்றும் சூரிய எரிசக்திக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஓடைகளைச் சுத்தம் செய்வதிலும், குப்பைக் கூளங்களை அகற்றுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழில்களை நடத்த வேண்டிய வழிமுறைகளை, பயனாளிகள் சீரமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல்லுயிர்கள் மீண்டும் திரும்புவதற்கான அருமையான திட்டங்களைக் கட்டமைத்து சிறப்பாக நடத்திவரும் பல ஆற்றல்மிக்க மனிதர்களை நான் எப்போதும் சந்திக்கிறேன். சரியான பாதையை நோக்கி நகர பலவழிகள் உள்ளன.

ஆனால் இது தனி மனித நடத்தையை மாற்றியமைப்பது மட்டுமல்ல. உலக பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதன் பின்னணியில் வேறு ஏதேனும் ஆழமான காரணங்கள் உள்ளனவா?

வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்கள் மட்டுமே நிறைந்த, தொடர்ந்து பெருகிவரும் மக்கள்தொகை கொண்ட இந்த பூமியில் தடையற்ற பொருளாதார விரிவாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிற வேடிக்கையான கருத்தாக்கத்தின் விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். வருங்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலைக் காப்பாற்றி வைப்பதற்கு பதிலாக, குறுகிய கால நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. உலகின் தற்போதைய மக்கள்தொகை 7 பில்லியனுக்கும் (1 பில்லியன் = 100 கோடி) மேலாக இருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2050இல் இது 10 பில்லியனை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது. நாம், இப்போது போலவே தொடர்ந்து நடந்து கொண்டால், எதிர்காலத்தில் என்ன நடக்கும்? உண்மையில், முக்கிய பிரச்சினை பெருகும் மக்கள்தொகை அல்ல. நான் அப்படிச் சொல்லாத போதிலும் ஜார்ஜ் மான்பியோ (George Monbiot) நான் அப்படிச் சொன்னதாகக் கூறுகிறார். நான் எப்போதுமே அவர் குறித்து உயர்ந்த மதிப்பீடுகளை வைத்திருக்கின்ற நிலையில், இது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மக்கள்தொகை பெருக்கம் என்பது மூன்று முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. நமது பேராசை நிறைந்த வாழ்க்கைமுறை மற்றும் பொறுப்பற்ற முறையில் நாம் நமது புதைபடிவ எரிபொருட்களை உபயோகிப்பதுவும் மற்ற இரு முக்கிய காரணங்களாகும். இறைச்சிக்கான தேவை அதிகரித்தல், வறுமை போன்றவைகளும் முக்கியமான காரணங்களே. இதைத் தவிர, நாம் கண்டிப்பாக ஊழலையும் எதிர்கொள்ள வேண்டும்.

நமது மரபுசார்ந்த வளம் பேணும் வழிமுறைகளை, நாம் எந்த அளவுக்கு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

நாம் வறுமையை கட்டாயம் ஒழித்தேயாக வேண்டும். மக்கள் தொடர்ந்து வறுமையில் உழல்வார்களேயானால், தங்களையும் தமது குடும்பங்களையும் காப்பாற்றிக் கொள்ள, அவர்கள் சுற்றுச்சூழலுக்கு கண்டிப்பாக கேடு விளைவிப்பார்கள். 1990இல் நான் கோம்பே தேசிய பூங்காவிற்கு (தான்சானியா) உயரே பறந்து சென்றபோது அங்கு ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு உண்மையிலேயே பெரும் அதிர்ச்சி அடைந்தேன். 1960களில் அது பூமத்திய ரேகையை ஒட்டிய பெரும் காடுகளில் ஒரு பகுதியாக இருந்தது‌. மரங்களடர்ந்த, நிலத்தால் சூழப்பட்ட, சிறிய தீவாக இருந்தது. மரங்கள் இப்போது பெருமளவில் வெட்டப்பட்டு அது வெட்டவெளியாக மாறியுள்ளது. அப்போதுதான், மக்கள் தமது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் வாழ வழிசெய்தாலொழிய, நாம் குரங்கினங்களையும் காடுகளையும் காப்பாற்ற முடியாது என்று எனக்குத் தோன்றியது. எனவே, பெண்களுக்கு ஊக்கத்தொகை அளித்தல் மற்றும் சிறு கடன் வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தல் போன்ற பல வழிகளில் நாம் உதவி அளித்தது பலனளித்தது‌. இன்று கோம்பே தேசியப் பூங்காவுக்கு உயரே நீங்கள் பறப்பீர்களேயானால், மரங்கள் அற்ற குன்றுகளை நீங்கள் காணமாட்டீர்கள். பெண்களின் கல்வியறிவு வளர வளர, குடும்ப உறப்பினர்களின் எண்ணிக்கையும் சுருங்கியது‌. பெண்கள், தங்கள் குழந்தைகள் கல்வியறிவு பெறுவதை விரும்புகிறார்கள். அவர்கள் வெறுமனே உயிர்களை உருவாக்க இயந்திரங்களாக மட்டுமே இருக்க விரும்புவதில்லை.

ஊரடங்கு, மக்களின் இயற்கையுடனான உறவை எவ்வாறு பாதித்துள்ளது?

சில இடங்களில் மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பில் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், அது, மக்கள் சொந்தத் தோட்டம் படைத்தவர்களாகவோ அல்லது பூங்காக்கள் மற்றும் பசுமையான, நடக்க முடிகிற வகையில் அமைந்த இடங்களுக்கு அருகில் வசிப்பவர்களாகவோ இருப்பதைப் பொருத்தது. ஏழை மக்கள், பெருமளவில், தங்களது செயற்கை குடியிருப்புகளிலேயே முடங்கிக் கிடக்க நேரிட்டது.

இந்த ஊரடங்கு உங்களை எப்படி பாதித்துள்ளது?

நான் என் நண்பர்களையும் மனிதர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் போனதில் வருத்தப்படுகிறேன். ஆனால் நான் இதற்கு என்னைப் பழகிக் கொண்டுவிட்டேன். நான் வருடத்தில் 300 நாட்கள் பயணம் செய்பவளாகவும், மனிதர்களை நேருக்குநேர் சந்தித்துக் கொண்டும் இருந்தேன். ஊரடங்கின் காரணமாக நான் இப்போது எல்லாவற்றையும் இணைய வழியாகவே செய்கிறேன். பல்வேறு நாட்டைச் சேர்ந்த, கோடிக்கணக்கான மக்களை என்னால் தொடர்புகொள்ள முடிந்தது. எனவே, கருப்பு மேகங்களுக்குப் பின்னால் கண்டிப்பாக வெள்ளிக் கீற்றுகளும் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வெள்ளிக்கீற்றுகளைத்தான் நான் எல்லா இடத்திலும் தேட முயற்சிக்கிறேன். நாம் ஒருக்காலும் நம்பிக்கை இழக்கலாகாது.


3 ஜனவரி 2021 அன்று Jane Goodall: ‘Change is happening. There are many ways to start moving in the right way’ என்ற தலைப்பில் தி கார்டியன் நாளிதழில் வெளியான நேர்காணல்; நேர்கண்டவர் ஜோனாதன் வாட்ஸ்.

தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி – மொழிபெயர்ப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.