தஸ்தயேவ்ஸ்கி ஒரு வேடிக்கை மிக்க சுதந்திர ஆன்மா -ரிச்சர்ட்  பேவியர்  மற்றும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கி

மைதியான புரட்சியை உருவாக்கியவர்கள் என்ற  புகழாரத்துடன் பேரிலக்கியங்களைச் சிறப்பாக மொழிபெயர்க்கும் ஒரு சிலரில்  ரிச்சர்ட் பேவியேரும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கியும் ஒருவராகி உள்ளனர். அமெரிக்கரான பேவியேரும் ரஷ்யரான வோலகான்ஸ்கியும் 33 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நீண்ட பயணத்தில் நாமறிந்த ஏராளமான ரஷ்ய பேரிலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அவர்களது முப்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளில் The Brothers Karamazov, Crime and Punishment, Demons, The Idiot, Notes from Underground, War and Peace, Anna Karenina, Hadji Murat, The Death of Ivan Ilyich and Other Stories, The Master and Margarita, Doctor Zhivago, கோகோலின் Collected Tales, Dead Souls, நிகோலாய் லெஸ்கோவின் The Enchanted Wanderer and Other Stories மற்றும் செகாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ஆகியவை அடங்கும்.

1990ல் அவர்களது மொழிபெயர்ப்பில் கரமாஸவ் சகோதரர்கள் வெளியாகும் வரை ஆங்கிலம் கூறும் நல்லுலகம் அவர்களுக்கான தஸ்தயேவ்ஸ்கியை புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் கான்ஸ்டன்ஸ் கார்னெட் இடம் இருந்தே பெற்றது. கார்னெட்டின் துர்கனேவ், செகாவ் மொழிபெயர்ப்புகள் நேர்மையாக இருந்ததாக பாராட்டப்பட்ட போதிலும் டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, கோகோல் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மரபுக்குட்பட்ட அசைநீக்கத்துடன் இருந்ததாக விமர்சனம் செய்யப்பட்டது. அவரது கோகோலின் மொழிபெயர்ப்புகள் “வெறுமையாகவும் தட்டையாகவும் தாங்கமுடியாத அளவிலும்” உள்ளதாக நபகோவ் விமர்சித்துள்ளார். “தஸ்தயேவ்ஸ்கி நடையின் தசைவலிப்பையும் பதற்றம் நிறைந்த நடுக்கத்தையும் உணராதவர்கள் யார்?…. ஆனால் கான்ஸ்டன்ஸ் கார்னெட்டிடம் அது பாதுகாப்பான மென்பிரதியாகிறது: எரிமலையல்ல. பிரித்தானிய முறையில் மென்மையாக வெட்டப்பட்ட புல்வெளி போல…மூலப் பிரதியில் இருந்து முழுமையாக சிதைந்து காணப்படுகிறது” எனக் கடுமையாகச் சாடுகிறார் விமர்சகர் கோர்னி சக்கோவ்ஸ்கி. “தஸ்தயேவ்ஸ்கி மிகவும் தெளிவற்ற கவனக்குறைவான எழுத்தாளர், அவரைத் விளங்கிக் கொள்வது என்பது எவராலும் முடியாது” என்று ஒருமுறை அதற்கு பதிலளித்தார் கார்னெட்.

டால்ஸ்டாயின் ஒரு பக்கம் முழுவதும் நீளும் சொற்றொடர்கள், கூறியது கூறல்கள், தஸ்தயேவ்ஸ்கியின் ஆரவாரமான குரல்கள் எனச் செல்லும் விந்தையான மொழிநடையை அப்படியே மீட்டுக் கொணர்ந்தமைக்காக பேவியர் மற்றும் வோலகான்ஸ்கியின் மொழிபெயர்ப்புகள் விதந்தோதப்பட்டன.

விமர்சகர்களாலும் ஸ்லாவிய அறிஞர்களாலும் அவர்கள் ஒருசேரப் புகழப்பட்டாலும் நேரடியான மொழிபெயர்ப்பு என்றும் மொழிமரபுக்கு ஒவ்வாத சொற்றொடராக்கும் மொழிபெயர்ப்பு என்றும் இணையத்தில் சில கடுமையான விமர்சனக் குரல்களும் எழாமல் இல்லை. இதை சில நேரங்களில் அறிந்துள்ள பேவியர் இதற்காக வருத்தம் தெரிவித்ததும் இல்லை. 2004ம் ஆண்டு இந்த இணையர் மொழிபெயர்த்த அன்னா கரீனினா ஓபரா வின்ஃப்ரே அறிமுகப்படுத்தியதன் காரணமாக 137 ஆண்டுகளான அந்நாவல் திடீரென வணிக ரீதியில் வெற்றி பெற்றது.

கரமாஸவ் சகோதரர்கள், அன்னா கரீனினா ஆகிய மொழிபெயர்ப்புகளுக்காக பேவியர் மற்றும் வோலகான்ஸ்கிக்கு இருமுறை Pen Translation Prize வழங்கப்பட்டுள்ளது. பேவியர் இத்தாலிய, பிரெஞ்சு படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். மேலும் பாரீஸில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத் துறையின் புகழ்பெற்ற பேராசிரியர் ஆவார். நவீன ரஷ்யக் கவிதைகளை மொழிபெயர்க்கும் வோலகான்ஸ்கி யேல் இறையியல் கல்லூரியில் பயின்றதன் காரணமாக பல இறையியல் நூல்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

1998ம் ஆண்டில் இருந்து பாரீஸில் அவர்கள் வசித்து வரும் வீட்டில் இந்த நேர்காணல் நடைபெற்றது. வோலகான்ஸ்கி தனது கருத்துகளை சில நேரங்களில் வெளிப்படையாகக் கூறுவார். பதில்களை நயமாக வெளிப்படுத்துவதை அவர் விரும்புவதில்லை. தனக்கான பாராட்டுகளை அவர் குழப்பமும் மகிழ்ச்சியும் கலந்த மனநிலையிலேயே ஏற்கிறார். பேவியர் ஒரு கப்பல் கேப்டன் போல தாடி வைத்துக் கொண்டு தலை நிறைய சிகையுடன் காணப்பட்டார். அவர் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் கொண்டவர். சொல் விளையாட்டையும் சாதுர்யமான பதில்களையும் ரசிப்பவர். நேர்காணலின் துவக்கத்தில் ஒருவர் பேசும் போது மற்றொருவர் அமைதியாக பேசுபவரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் விரைவிலேயே, ஒருவருக்கொருவர் இடையீடு செய்தும் ஒருவர் வாக்கியத்தை மற்றொருவர் நிறைவு செய்தும் பேசுவதற்குத் தூண்டியும் கேலி செய்தவாறும் இருந்த போதிலும் இருவருக்கும் பொதுவான கருத்துகளையே வெளிப்படுத்தினர். நேர்காணலின் இறுதியில், தொள்ளாயிரம் பக்கம் கொண்ட ரஷ்ய நாவலை வாசித்தது போல ஏராளமான விஷயங்களை ஒரே நேரத்தில் கேட்டது போன்றிருந்ததுடன் ஒரு ஷாம்பெய்ன் போத்தலையும் நாங்கள் திறந்தோம். புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக பேவியர் அதை வாங்கி வந்திருந்தார். ஆனால் அவர்கள் இருவரும் நள்ளிரவிற்கு முன்பே உறங்கிவிட்டனர்.

சுஸான்னா ஹன்னிவெல்.

 

உங்கள் சந்திப்பு எவ்வாறு நிகழ்ந்தது?

பேவியர்: ரஷ்ய இலக்கியத்தின் பொருட்டே நாங்கள் சந்தித்தோம். சோவியத் ஒன்றியத்தின் எதிர்ப்பாளரும் எழுத்தாளருமான ஆந்த்ரே சின்யாவ்ஸ்கி குறித்து நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அது 1972ல் ஹட்சன் ரிவ்யு இதழில் வெளியானது. சின்யாவ்ஸ்கி சோவியத் கட்டாய உழைப்பு முகாமில் இருந்தபோது கவிஞர் யெவ்ட்சுஷென்கோ, மேடிசன் சதுக்கத்தில் அவரது மொழிபெயர்ப்பாளர்களான ஜான் அப்டைக் மற்றும் ரிச்சர்ட் வில்பர் ஆகியோருடன் கவிதை வாசிப்பில் ஈடுபட்டிருந்தது எனக்கு முரணாகத் தெரிந்தது. கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ஐரீன் கிர்க் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சின்யாவ்ஸ்கி சிறையில் இல்லை என்றும், விடுதலை செய்யப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார் என்றும் அவரும் அவரது குடும்பமும் ஃபிரான்சில் குடியேற தான் உதவி செய்துள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

வோலகான்ஸ்கி: நான் அமெரிக்கா வந்தபோது, சிறிது காலம் இந்தப் பேராசிரியருடன் தான் தங்கியிருந்தேன். அப்போது எனக்கான வரன் பார்த்துக் கொண்டிருந்தார். தாமதம் ஆனாலும் ஒரு வழியாக அதில் வெற்றியடைந்தார்.

யார் தடையாக இருந்தார்கள்?

பேவியர்: சூழ்நிலை தான். ஒருவர் இங்கிருக்கிறார் என்றும் அவரை நான் சந்தித்தே ஆக வேண்டும் என்றும் ஐரீன் என்னை கனெக்டிகட்டிற்கு வரவழைத்தார். எனக்கு வியப்பாக இருந்தது. நான் அப்போது மெய்னேவில் மரப்படகு செய்யும் தொழில் செய்து வந்தேன். அதில் விடுப்பு எடுத்துக் கொண்டு அங்கே சென்றேன். நான் அங்கு சென்றபோது, லாரிஸ்ஸாவின் விசா புதுப்பிக்கப்பட வேண்டி இருந்ததால் அவர் இங்கிலாந்து சென்றுவிட்டதை அறிந்தேன்.

இருவரும் தவற விட்டுவிட்டீர்களா?

பேவியர்: அதற்கு சில வருடங்கள் ஆனது. பிறகு நாங்கள் மன்ஹாட்டனில் சந்தித்துக் கொண்டோம்.

நீங்கள் மேற்கு 107வது வீதியில் தங்கியிருந்தீர்கள்

பேவியர்: ஆம். அற்புதம் நிகழ்ந்தது போல லாரிசாவை நான் அதே வீதியில் உள்ள வீட்டில் கண்டுபிடித்தேன்.

வோலகான்ஸ்கி:  அது வசதியாகப் போய்விட்டது.

பேவியர்: 107வது வீதியில் மட்டும் வசிக்கவில்லை என்றால் நாங்கள் திருமணமே செய்திருக்க முடியாது என்று லாரிஸ்ஸா அடிக்கடி கூறுவார். நான் நியுயார்க் சென்றபின் தச்சுவேலை செய்ய ஆரம்பித்தேன். அந்த வேலையின் மூலம் தான் நான் வாழ்ந்தேன்.

வோலகான்ஸ்கி: ஆம். நாங்கள் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த மொழிபெயர்ப்பாளரான மிர்ரா ஜின்ஸ்பெர்க் என்ற பெண்மணியின் அண்டை வீட்டாராக இருந்தோம். அவர் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர். எங்களுக்கு அவரைப் பிடித்திருந்தது. நாங்கள் கரமாஸவ் சகோதரர்கள் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது அவரிடம் சில பக்கங்களைக் காண்பித்தோம். இதற்கிடையில், ரிச்சர்ட் சில ரஷ்யமொழி குழந்தைகள் கவிதைகளை மொழிபெயர்த்தார். அவர் நாங்கள் அளித்த நாவலின் சில பக்கங்களை வாசித்துவிட்டு உங்களால் மொழிபெயர்க்க முடியாது என்றார். உங்கள் தச்சுவேலையில் ஈடுபாடு காட்டியவாறு குழந்தைகள் கவிதைகளை மொழிபெயர்க்கலாம் என்று சொன்னார். நீங்கள் அந்தக் கவிதைகளை நன்றாக மொழிபெயர்க்கிறீர்கள் என்றார். உங்களிடம் உள்ள மரம் இழைத்த வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அவர் சொன்னது எங்களைத் துணுக்குறச் செய்தது.

உங்களது முதல் விமர்சகர்?

வோலகான்ஸ்கி:  ஆம். தொடக்கத்தில் ரஷ்யாவிலிருந்து வந்திருந்த மற்றொரு பெண்மணியும் எங்களது விமர்சகராக இருந்தார். நாங்கள் கரமாஸவ் சகோதரர்களை மொழிபெயர்ப்பதாகச் சொன்னபோது, ஓ…தஸ்தயேவ்ஸ்கி…அவரது அச்சந்தரும் பயங்கரமான நடையை நீங்கள் சரி செய்யுங்கள் என்றார். இல்லை, அதை அப்படியே மொழிபெயர்க்கப் போகிறோம் என்றேன் நான்.

மொழிபெயர்ப்பதற்கு கரமாஸவ் சகோதரர்களை எப்படித் தேர்வு செய்தீர்கள்?

பேவியர்: ஹார்வர்டில் கோடைகாலப் பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்தபோது அதை நான் வாசித்தேன். விளாதிமிர் மார்கோவ் என்ற அற்புதமான பேராசிரியர் அங்கிருந்தார். அந்தப் பயிற்சி வகுப்பு என்னை மாற்றியது. இந்த நூல்களை நான் விரும்பினேன். நான் கான்ஸ்டன்ஸ் கார்னெட் மொழிபெயர்ப்புகளை வாசித்தேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டபின், டேவிட் மகர்ஷாக்கின் மொழிபெயர்ப்புகளை வாசிக்க முயன்றேன். நான் அதைத் துவங்கயதும் லாரிஸ்ஸா ஆர்வமானார்.

வோலகான்ஸ்கி: என்னிடம் இருந்த தஸ்தயேவ்ஸ்கியின் ரஷ்யப் பதிப்பை வாசிக்க முடிவு செய்தேன். தஸ்தயேவ்ஸ்கி எப்போதும் என்னை ஆட்கொண்டுவிடுவார். பொதுவாக உங்கள் தாய்மொழியில் வாசிக்கும் போது நீங்கள் ஒரு அறிஞராகவோ அல்லது ஆர்வம் கொண்ட தீவிர வாசகராகவோ இல்லாவிட்டால் நீங்கள் அதை சும்மா வாசிப்பீர்கள். கதையையும் கதை மாந்தர்களையும் தொடர்வீர்கள், இந்த முறை இந்த பாத்திரம் அந்தப் பாத்திரத்தை கொலை செய்யாது என நினைப்பீர்கள்! ஆனால் நான் இப்போது அந்த மொழிநடையைக் கவனிக்க ஆரம்பித்தேன். மகர்ஷாக் இதை எவ்வாறு மொழிபெயர்ப்பார் என நினைப்பேன். ஆனால் அவருடையதில் அவ்வாறு இல்லை. நகைச்சுவைகள், வழக்கமற்ற சொல்லாடல்கள் அதில் காணாமல் போயிருந்தன.

அதற்குப் பதிலாக என்ன இருந்தது?

வோலகான்ஸ்கி:  மென்மையான, வழக்கமான சொல்லாடல்கள். அங்கு பொருள் இருந்தது, ஆனால் நடை, தொனி, நகைச்சுவை உணர்வு எல்லாம் போயிருந்தன. எடுத்துக்காட்டாக, திரு. மியுசோவ் என்ற கதாபாத்திரம். அவர் ஒரு இரண்டாம் நிலை கதைமாந்தர் தான், ஆனால் இந்த குறிப்பிட்ட காட்சி அவரது பார்வையில் விரிவதால் அவர் முக்கியமானவர். திரு. மியுசோவ் அப்போது தான் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தார். அவர் ஒரு முற்போக்குவாதியும் பண்பாடு மிக்கவரும் ஆவார். அவரைப் பற்றி விவரிக்கையில் “வெளிநாட்டு பெருநகரத்தார்” என்று கிண்டலாகக் கூறுவார் தஸ்தயேவ்ஸ்கி. ஆங்கிலம் நமக்கு அந்தச் சொற்களைக் கொடுக்கிறது. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல.

மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் என்ன கூறினார்கள்?

வோலகான்ஸ்கி:   “தலைநகரிலும் வெளிநாட்டிலும் இருந்தவர்கள்”. அவர்கள் தகவல் அளிப்பார்கள், குரல்களை அல்ல. இது போன்றுதான் அந்த நாவலில் பெரும்பாலான இடங்களில் இருப்பதை நான் கவனித்தேன். சில நேரங்களில் ஒரே பக்கத்தில் மூன்று அல்லது ஐந்து இடங்களில் இருப்பதைப் பார்த்துள்ளேன்.

பேவியர்: தஸ்தயேவ்ஸ்கியை மொழிபெயர்க்கும் போது, அவர் தனிமையில் தவிக்கும் ஆவேசமான மனிதராக அல்லாமல்  வேடிக்கை மிக்க சுதந்திர ஆன்மா என்பதைக் கண்டறிந்தேன். அவரது நடையில் இதை நீங்கள் காணலாம். தஸ்தயேவ்ஸ்கியின் நடை முற்றிலும் வேறானது. பல்வேறு குரல்களில் அவர் எழுதிச் செல்வார். ஒரு கதைமாந்தர் எவ்வாறு மொழியைக் கையாள்கிறார் என்பதை அந்த மாந்தரின் குரல் வழி வெளிப்படுத்தி அவரது குணநலனைக் காட்டுவார். பெரும்பாலானோர் அவர் சரியாக எழுதவில்லை என்று கூறுவதன் காரணம் இதுதான். உதாரணத்திற்கு, கரமாஸவ் சகோதரர்கள் நாவலின் துவக்கத்தில் உள்ள சிறிய ஆசிரியர் குறிப்பில், இந்த நூலை எப்படி எழுதத் துவங்கினார் என்பதைக் குறிப்பிட்டிருப்பார். அந்த “ஆசிரியர்” தஸ்தயேவ்ஸ்கி கிடையாது- அதை அவர் தெளிவாகக் கூறியுள்ளார்- ஆனால் எல்லோரும் தஸ்தயேவ்ஸ்கி தான் அந்தக் கதையைக் கூறுகிறார் என நினைப்பார்கள். ஆனால் கதைசொல்லி ஒரு எழுத்தாளர் அல்ல. அந்த நாவல் நிகழும் நகரில் அவர் வசிக்க நேர்ந்தவர். கரமாஸவ் சகோதரர்களையும் அவர்களது தந்தையின் கொலையையும் பதிவு செய்ய அவர் விரும்பினார். “இந்தக் கேள்விகளைத் தீர்க்க முடியாமல் தவிப்பதால், எந்தத் தீர்மானமும் இல்லாமல் அவற்றை விட்டுவிடத் தீர்மானித்துள்ளேன்” என்பது போன்ற இருண்மையான விஷயங்களை எழுதும் கதைசொல்லியின் எல்லாவிதமான குரல்களையும் அறிமுகம் செய்வது தான் இந்த முன்னுரையின் மையப் புள்ளி.  ஒரு பக்கத்தில் ஒரே சொல்லை இரு முறை பயன்படுத்தக் கூடாது என ஃப்ளாபெர்ட் கூறியது போல எல்லா மொழிபெயர்ப்பாளர்களும் வேறுபட்ட சொற்களையே பயன்படுத்துகின்றனர்.  “நல்லது. இது தான் எனது அறிமுகத்தின் முடிவுரை. இது மிகையானது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டதால் அது அவ்வாறே இருக்கட்டும்.” என்று இறுதியாகக் கூறுகிறார். இந்த மனிதர் நம்பிக்கைக்கு உரியவரா என்ற ஒற்றைக் கேள்விக்குள் உங்களைத் தள்ளிவிடுவார் தஸ்தயேவ்ஸ்கி. அவர் எதைப் பற்றிப் பேசுகிறார் என்பதை அவர் அறிவாரா? கதைசொல்லியைச் சுற்றி நிகழும் இந்த நிச்சயமற்ற தன்மை மிக முக்கியமானது.

வோலகான்ஸ்கி: நீங்கள் வேறு நூலை வாசிக்கிறீர்கள் என ரிச்சர்ட்டிடம் நான் சொன்னேன்.

பேவியர்: தஸ்தயேவ்ஸ்கியை அணுக முற்றிலும் வேறான ஒன்றுள்ளது, அதை மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கவில்லை. அதற்காக ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

பிறகு என்ன நடந்தது?

வோலகான்ஸ்கி: மொழிபெயர்ப்பாளராக நாங்கள் அறியப்படவில்லை. ரிச்சர்ட் ஒரு கட்டுரையாளராகவும் கவிஞராகவும் ஓரளவு அறியப்பட்டிருந்தார்.

பேவியர்: ஃபிரெஞ்சு தத்துவவியலாளர் ஆலெய்ன் எழுதிய நூல் ஒன்றை நான் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தேன்.

வோலகான்ஸ்கி: எனவே வெவ்வேறு விவரணை மற்றும் வசனங்கள் கொண்ட நான்கு பத்திகளை மொழிபெயர்த்தோம். அவற்றை ஐந்து தஸ்தயேவ்ஸ்கிய அறிஞர்களுக்கு அனுப்பினோம். அனைவரும் ஆக்கப்பூர்வமான பதில்களை அளித்தனர்.

பேவியர்: இந்த மாதிரிகளையும் அறிஞர் கடிதங்களையும் பல்வேறு வெளியீட்டாளர்களுக்கும் அனுப்பினோம். அனைவரும் அதை நிராகரித்தனர்.

அதற்கான காரணம் என்ன?

பேவியர்: ஒரு புதிய மொழிபெயர்ப்பிற்கான தேவை எழவில்லை.

வோலகான்ஸ்கி:  பிறகு ஒரு சிறிய வெளியீட்டாளர் அதை ஏற்றுக் கொண்டார்.

பேவியர்: நார்த் பாய்ண்ட் பிரஸில் உள்ள ஜாக் ஷூமேக்கர் என்பவருக்கு அனுப்பினேன். அவரது உதவியாளர் கலிபோர்னியாவில் இருந்து தொலைபேசியில் பேசினார். அவர்கள் அதை வெளியிட விரும்புவதாகவும் முன்பணமாக ஒரு ஆயிரம் டாலர்கள் கொடுத்தால் போதுமா? என்றார்.  அது மிகச் சொற்பம் என்றேன். சரி பேசிவிட்டு மீண்டும் வருகிறேன் என்றார். பொதுவாக அதன் அர்த்தம் மீண்டும் அவர்கள் உங்களிடம் வரமாட்டார்கள் என்பதுதான். ஆனால் அவர் அடுத்த நாளே அழைத்தார். ஆறாயிரம் டாலர்கள் என்றால் பரவாயில்லையா? என்று கேட்டார். ஆயிரம் என்பதை விட நன்றாக உள்ளது என்றேன். நாங்கள் அனுப்பிய எல்லாவற்றையும் பத்திரிகைகளுக்கு அனுப்பி வெளியிட வைத்தனர். அந்த சிறு வெளியீட்டை உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்டதால் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதில் Wichita Eagle என்ற பத்திரிகை எனக்கு மிகப் பிடித்தமானது. அதில் முழுப் பக்கப் புகைப்படத்துடன் முழுப் பக்க விமர்சனம் வெளியானது. தலைப்பு: “கரமாஸவ் இன்றும் படைப்பாக்கத்திற்கு வழிகோலுகிறார்” அதற்கான படம், பெரிய தாடியும் சுளித்த முகத்துடன் கூடிய டால்ஸ்டாயுடையது!

வோலகான்ஸ்கி:  ஆம். பெரிய புருவத்துடன்…

நீங்கள் தஸ்தயேவ்ஸ்கியின் நான்கு நாவல்களை வரிசையாக மொழிபெயர்த்தீர்கள்The Brothers Karamazov, Crime and Punishment, Notes from Underground, and Demons. கடுமையான விவரணைகள் மற்றும் கொலைகாரர்கள் மத்தியில் ஐந்தாண்டுகள் வாழ்ந்தது எப்படி இருந்தது? உங்களை அது பாதித்ததா?

வோலகான்ஸ்கி:  இல்லை. அது தொழில்முறை சார்ந்த ஒரு விஷயம்.

பேவியர்: ஆம். அது என்னை நிச்சயம் பாதித்தது என நினைக்கிறேன்.

வோலகான்ஸ்கி: நான் அதை கவனித்தது இல்லை.

பேவியர்: என் தசை துடிப்பதை நீ பார்க்கவில்லையா?

வோலகான்ஸ்கி:  எங்களுக்கு இரு சிறு குழந்தைகள் இருந்தனர். பார்வையற்ற எனது தாய் எங்களுடன் இருந்தார். எனக்கான எதார்த்த வாழ்வு அங்கிருந்தது.

பேவியர்: நான் அந்த நூலில் அந்தக் குரல்களுடன் வாழ்ந்தேன். நீங்கள் அதில் நுழையவில்லை என்றால் உங்களால் அதை மொழிபெயர்க்க இயலாது. ஆனால் அதில் ஒரு பற்றின்மையும் உண்டு. அதிலிருந்து விலகி, இதை ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவது என்று சிந்திக்க வேண்டும். மொழிபெயர்ப்பு என்பது விதிமுறைக்குட்பட்டோ  இயந்திரத்தனமாகவோ செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. நீங்கள் சரியானதைச் செய்கிறீர்களா என்பதை முடிவு செய்ய ஒரே வழி அது உங்களுக்கு என்ன விதமான உணர்வுகளைத் தருகிறது என்பதை அறிவதுதான். அதற்காக ஏராளமான அடையாளப்படுத்துதல் தேவைப்படுகிறது. கதைமாந்தர்களுடன் அல்லாமல் அதில் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்ற புத்தகக் கலையுடன். அப்படிச் செய்தால் தான் உங்களால் சரியான சொற்களைத் தேர்வு செய்ய முடியும். அதை வரையறுப்பது கடினம். எழுத்தாளர்களுக்கு இந்த உணர்வு உண்டு.

நீங்கள் மொழிபெயர்க்க ஆரம்பித்த பின் குறைவாகவே கவிதை எழுதினீர்கள்

பேவியர்: ஆம். திருமணமான பின், கவிதை எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

வோலகான்ஸ்கி:  ஆமா, நான் ஊக்கமளிக்கவில்லை.

பேவியர்: கவிஞர்கள் எப்போதும் ஏக்கத்தைப் பற்றி எழுதுவார்கள். தாந்தே பூமியில் பீட்ரிஸை அடைய முடியவில்லை என்பதால் சொர்க்கத்தில் அவளை எதிர்பார்த்தார்.

நீங்கள் கணித மொழியியலில் பட்டம் பெற்றுள்ளீர்கள். அதைப் பற்றிக் கூறுங்கள்

வோலகான்ஸ்கி:  நான் கிரேக்கம் மற்றும் லத்தீன் மொழி பயில விரும்பினேன். ஆனால் எனது பெற்றோர்கள் அதை எதிர்த்தார்கள். கணித மொழியியல் என்பது கணினி அறிவியலின் ஒரு தொடக்கம்- மொழியில் கணிதம் பயன்படுத்துதல், ஒரு நிரலாக்கம்.

அது ஒருவகையில் மொழிபெயர்த்தல்

வோலகான்ஸ்கி: ஆம் அது ஒரு மொழி.

அது ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்களுக்கு உதவியதா?

வோலகான்ஸ்கி: இல்லை. ஆனால் நான் இயந்திர உதவியுடன் மொழிபெயர்த்தல் குறித்து பல்கலைக்கழகத்தில் எனது ஆய்வேட்டை சமர்ப்பித்தேன். இயந்திர மொழிபெயர்த்தலுக்கு ஜெர்மன் மொழியில் உள்ள சொற்றொடர் அமைப்பியல் முறையைத் தேர்வு செய்யுமாறு எனது பேராசிரியர் கூறினார். அது டிஜிட்டல் யுகத்திற்கு முன்பான ஒரு விஷயம். நடைமுறையில் அது சாத்தியப்பட வாய்ப்பில்லாமல் இருந்த காலகட்டம். ஆனால் இயந்திர மொழிபெயர்ப்பு என்பது சாத்தியமில்லாதது என்பதை நான் பின்னர் புரிந்து கொண்டேன். நான் தலை நரைத்து கல்லறையில் வீழும் வரை இந்தத் தொடரியல் அமைப்பையும் அதற்கிடையிலான தொடர்புகளையும் என்னால் உருவாக்க முடிந்தாலும் நான் உணரும் அதன் சுவை, ரசனை, சந்தம், மணம், இசை ஆகியவற்றை ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது. உண்மையில் ஓர் உலகக் கண்ணோட்டம் கொண்டிருப்பது போன்றது.

பேவியர்: இயந்திரங்கள் உலகக் கண்ணோட்டம் கொண்டவையல்ல.

வோலகான்ஸ்கி: ஆனால் நான் எப்படியோ அந்தப் பட்டத்தை பெற்றுவிட்டேன். அதை வைத்து நான் எதுவும் செய்யவில்லை.

நீங்கள் ஒரு கடல் உயிரியல் நிறுவனத்தில் பணியாற்றச் சென்றீர்கள்.

வோலகான்ஸ்கி: சோவியத் ஒன்றியத்தில் பல்கலைக்கழகப் பட்டத்திற்குப் பின் சில நிறுவனங்களில் பணியாற்ற நீங்கள் அனுப்பப்படுவீர்கள். என்னை அவர்கள் கப்பல் மற்றும் விமானம் கட்டும் ராணுவ நிறுவனத்தில் பணியாற்ற அனுப்பினர். எனது வகுப்புத் தோழர்கள் சென்றனர். ஆனால் நான் மறுத்தேன். நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை என்றாலும் ஏதோ ஒன்று என்னைப் போகாதே என்று தடுத்தது. எனவே நான் கடல் உயிரியல் நிறுவனத்தில் சேர்ந்தேன். அவர்களுக்கு ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்க ஆள் தேவைப்பட்டது.

உங்களது முதல் மொழிபெயர்ப்புப் பணி எதைப் பற்றியது?

வோலகான்ஸ்கி: பசிபிக் சல்மோன் மீன்களின் மரபியல். நான் விளாடிவோஸ்டாக், ஷாக்லைன் தீவு, கம்சட்கா பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். உலகின் மிக அழகான இடங்களைப் பார்த்துள்ளேன்.

நீங்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து தஸ்தயேவ்ஸ்கியை மொழிபெயர்த்தீர்கள்?

வோலகான்ஸ்கி: இங்குள்ள இந்தச் சிறிய விளக்கையும், பலகையையும் பாருங்கள். அங்கு அமர்ந்து தான் நான் முதல் பிரதியை பென்சிலால் எழுதுவேன். பிரதிக்கு மிக நெருக்கமாக அமையும் விதத்தில் எழுதுவேன். சில சமயம் சாத்தியப்படும். சில நேரம் சாத்தியமாகாது. பக்கத்தின் ஓரங்களில் நான் பார்க்கும் அனைத்தையும் குறித்து வைப்பேன். உதாரணமாக, இது ரஷ்ய பழமொழி என்றோ இது தேய்வழக்குச் சொல் என்றோ எழுதுவேன். உதாரணமாக, “ரத்தத்தின் கடைசி சொட்டு உள்ளவரை ஒன்றைக் காத்தல்” என்பது ரஷ்ய வழக்குச் சொல். ஆனால் தஸ்தயேவ்ஸ்கி அதை “கடைசி சொட்டு வரை” என்று சொல்வார். அதே சொல் மீண்டும் வருகிறதா அல்லது அதைப் போன்ற சொல்லா அல்லது அதற்கு இணையான சொல்லா என்று குறிப்பிடுவேன்.

பேவியர்: அல்லது விவிலிய மேற்கோள்கள்.

அதை நீங்களே உணர்ந்து கொள்வீர்களா அல்லது ரஷ்ய பிரதியில் குறிப்பிடப்பட்டிருக்குமா?

வோலகான்ஸ்கி: பெரும்பாலானவற்றை நானே உணர்ந்து கொள்வேன். அதில் வேறு ஏதோவொன்று இருக்கிறது என்பதை உணர்வேன். ஆனால் எங்களிடம் சில சிறப்பான ரஷ்ய ஆய்வடங்கல் கொண்ட பதிப்புகள் உள்ளன. அவை உதவும்.

பேவியர்: லாரிஸ்ஸா கையெழுத்துப் பிரதியை உருவாக்குவார். பழைய மெய்ப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. நாங்கள் பழைய மெய்ப்புகளை எடுத்துப் பார்ப்போம். அப்போது புதிய மொழிபெயர்ப்புகள் உருவாகும்.

நீங்கள் அதைக் கைகளாலேயே செய்வீர்கள்?

பேவியர்: ஆம். லாரிஸ்ஸா எழுதுவார். நான் அதை வாசிப்பேன். பழைய மொழிபெயர்ப்புகள் என்னிடம் உள்ளன. அதையும் வாசிப்பேன்.

ரஷ்ய இலக்கியங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்று நீங்கள் கூறியதாக ஒரு வதந்தி உண்டு. உங்கள் ரஷ்ய புலமை எப்படி?

பேவியர்: என்னால் ரஷ்ய மொழியில் பேச இயலாது. என்னால் புரிந்து கொள்ள முடியும். நான் மொழிபெயர்க்கும் போது அந்தப் பிரதியை கவனமாகப் பார்ப்பேன். லாரிஸ்ஸாவின் மொழிபெயர்ப்புப் பிரதியை மட்டுமே சார்ந்திருக்க மாட்டேன். இதனால் சில நேரங்களில் அவர் சினமடைவார். அதை எங்கிருந்து பெற்றீர்கள்? அநேகமாக நீங்கள் அதை அகராதியில் பார்த்திருக்கக் கூடும் என்பார்.

வோலகான்ஸ்கி: ரிச்சர்டுக்கு ரஷ்யப் புலமையை விட உள்ளுணர்வு மற்றும் இலக்கிய நடையில் அதிக ஞானம் உண்டு.

உங்களது முதல் வரைவு ரிச்சர்டுக்குச் செல்லும் போது அது எப்படி இருக்கும்? அது எவ்வாறு வெளியாக வேண்டுமோ அப்படியா?

வோலகான்ஸ்கி: எவ்வளவு மோசமாக என்றா கேட்கிறீர்கள்? எவ்வளவு மோசமானது ரிச்சர்டு, நீங்களே கூறுங்கள்…

பேவியர்: எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாகச் செய்திருப்பார். எனவே நான் ஏதாவது செய்தாக வேண்டும்.

வோலகான்ஸ்கி: என்னால் இலக்கியத் தரமாக அதை எழுத முடியும் என்றாலும் நான் வேண்டுமென்றே தான் அவ்வாறு செய்வேன். ஏனெனில் அது மொழிபெயர்ப்பின் பல்வேறு சாத்தியங்களை நீக்கிவிடும். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாத்தியக்கூறுகளை ரிச்சர்டுக்கு அளிப்பேன். பல்வேறு சொற்களுக்கான சரியான மொழிபெயர்ப்பை நான் எப்படித் தேர்வு செய்வது? அந்த முடிவுகளை என்னால் எடுக்க முடியாது. ஏனென்றால் அது அதற்கு முந்தைய சொற்கள், தொடர்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இருக்கக் கூடும். அந்தத் தேர்வுகளை ரிச்சர்டால் மட்டுமே செய்ய முடியும்.

ரிச்சர்ட் உங்கள் மொழிபெயர்ப்பில் மாற்றம் செய்தால் நீங்கள் வேதனையடைவீர்களா?

வோலகான்ஸ்கி: இல்லை. ஒருபோதும் நான் எழுத்தாளராக விரும்பியதில்லை.

பேவியர்: சில நேரங்களில் நான் மாற்றிய சொற்றொடர்களை மீண்டும் பழைய படியே வைக்கச் சொல்வேன்.

அதாவது சில நேரங்களில் உங்களுக்குள் உள்ள கவிஞனை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டுமா?

பேவியர்: அதே தான். இந்த இணை வேலை எங்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருந்தது. நான் புதிய சொற்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினால் அவள் என்னை பின்னுக்குக் கொண்டு வந்து நிறுத்துவாள். ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்போம்.

வோலகான்ஸ்கி: ரிச்சர்டின் மொழிபெயர்ப்பை மூலப் பிரதியை வைத்துக் கொண்டு உன்னிப்பாக வாசிப்பேன். அவர் என்ன கேட்டார் என்ன எழுதியிருக்கிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்வேன். பிறகு நாங்கள் ஒன்றாக அமர்ந்து குறிப்புதவி நூல்கள், அகராதிகள் உதவியுடன் சொல் சொல்லாக தொடர் தொடராக மொழிபெயர்ப்போம்.

பேவியர்: சில நேரங்களில் ஒரு சொல்லுக்காக நாங்கள் ஒரு மணிநேரம் செலவிடுவோம். பிறகு நான் அந்த வரைவுகளை எடுத்து இறுதி வடிவம் கொடுப்பேன்.

வோலகான்ஸ்கி: பிறகு ரிச்சர்ட் அதை ஆங்கிலத்தில் சத்தமாக வாசிக்க நான் ரஷ்ய மூலத்தில் அதைப் பின்தொடர்வேன். நாங்கள் சிற்சில மாற்றங்களை உருவாக்குவோம். பின்னர் பதிப்பாளருக்கு அனுப்புவோம்.

நீங்கள் எவ்வளவு வேகமாக மொழிபெயர்ப்பீர்கள்?

பேவியர்: ஒரு நாளில் என்னால் ஐந்து பக்கங்கள் தஸ்தயேவ்ஸ்கியையும், ஒன்பது அல்லது பத்துப் பக்கங்கள் டால்ஸ்டாயையும் மொழிபெயர்க்க முடியும். ஆனால் கோகோலை இரண்டு அல்லது மூன்று பக்கங்கள் மட்டுமே இயலும்.

ரிச்சர்ட், நீங்கள் ஃப்ரெஞ்சு மற்றும் இத்தாலிய படைப்புகளை மொழிபெயர்த்துள்ளீர்கள். நீங்களாகவே அதை மொழிபெயர்ப்பது ரஷ்ய மொழிபெயர்ப்பில் இருந்து எவ்வாறு வேறுபட்டது?

பேவியர்: அது மிக எளிதான விஷயம்.

தஸ்தயேவ்ஸ்கியிடமிருந்து கோகோலிடம் சென்றது கொஞ்சம் ஆசுவாசமாக இருந்ததா?

பேவியர்: இல்லை, அது மிகக் கடினமாக இருந்தது. கோகோலின் படைப்பு மிகக் கட்டுப்பாடற்றது. அவர் நடை சொற்பொழிவுத் தன்மை கொண்டது என நினைக்கிறார்கள். அதனால் எங்களுடைய மொழிபெயர்ப்பு மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று என்று கூறுவர். ஆனால் அவர் என்ன எழுதினாரோ அதையே நாங்கள் மொழிபெயர்த்தோம். அவர் அவ்வாறு சொற்பொழிவுத் தன்மை கொண்ட படைப்பாளி அல்லர். எல்லாவிதமான அசாதாரண நிகழ்வுகளையும் அவர் தட்டையான குரலில் எழுதிச் செல்கிறார். அவர் கூறியது எல்லாம் எதிர்பாராதவையே. அது நகையுணர்வு கொண்டது. தஸ்தயேவ்ஸ்கியும் வேடிக்கையானவர்தான், ஆனால் வேறு வகையில்.

உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?

பேவியர்: கருத்து வேறுபாடே கிடையாது.

மொழிபெயர்ப்பு என்பது மிகவும் உணர்வுபூர்வமானது

பேவியர்: ஆம். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன என்று வாசகர்கள் அறியும் போது அப்படி ஆகும். ரஷ்யப் பிரதியை எடுத்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அவ்வளவுதான் என்று ஆரம்ப நிலை வாசகர்கள் நினைப்பர். ஒரு பிரதிக்கு இரண்டு மொழிபெயர்ப்புகள் வர வேண்டிய தேவை என்ன? இது ஏற்கெனவே மொழிபெயர்க்கப்படவில்லையா என்று இன்னும் சிலர் எங்களிடம் கேட்பார்கள். ஒரு பிரதியை மொழிபெயர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன என்று அறியும் சிலர் எந்த மொழிபெயர்ப்பை வாசிப்பது என்று மிகவும் குழப்பம் அடைவார்கள். அந்தத் தேர்வுதான் மிகவும் உணர்வுபூர்வமானது.

வோலகான்ஸ்கி: அது தொகுத்தல் போன்றது தான். உங்களுக்கு ஒரு பிரதி தொகுப்பதற்காக வழங்கப்படுகிறது. உடனே ஏற்படும் உணர்வு என்னவென்றால் நான் அதை வேறுவிதமாக எழுத வேண்டும் என்பதுதான். அதே தான் மொழிபெயர்ப்பு விமர்சனத்திலும் நிகழ்கிறது. என்னிடம் விமர்சனத்திற்காக அவ்வாறு ஒரு பிரதி வழங்கப்படும்போது, அமைதியாக இரு, இது வேறு ஒருவரின் நடை, மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறிக் கொள்வேன்.

எப்போதும் முதல் மொழிபெயர்ப்பை நீங்கள் வாசிக்கும் போது அவ்வாறு நிகழும். உதாரணத்திற்கு, மார்சல் ப்ரூஸ்டின் படைப்புகளை நல்ல ரஷ்ய மொழிபெயர்ப்பில் நான் வாசித்துள்ளேன். என்னைப் பொருத்தவரை அது ப்ரூஸ்ட். அதை நான் ஃபிரெஞ்சு மொழியில் வாசிக்க நினைத்ததில்லை.  பிறகு எழுபதுகளில் மேலும் ஒரு மொழிபெயர்ப்பு வெளியானது. முதல் மொழிபெயர்ப்பை விரும்புவர்கள், இரண்டாவதை விரும்புவோர் என உலகமே இரண்டாக பிளவுண்டது. நான் முதல் மொழிபெயர்ப்பை விரும்பினேன். ஆனால் அந்த இரண்டாவது மொழிபெயர்ப்பில் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் என நினைத்தேன். மூலப் பிரதியில் உள்ள ஏதேனும் ஒன்றை அவர் வெளிப்படுத்த நினைத்திருக்கலாம். அதனால் தான் வெளியீட்டாளர்கள் ஒரு நூலை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் “இறுதியான மொழிபெயர்ப்பு” என்ற சொற்றொடரை நான் விரும்புவதில்லை. அவர்கள் அவ்வாறு சொல்லக் கூடாது. அது சங்கடமாக இருக்கிறது. எப்போதும் சொல்வதற்கு வேறு ஏதாவது இருக்கும். ஆனால் எனது அனுபவத்தின்படி, நீங்கள் வாசிக்கும் முதல் மொழிபெயர்ப்பே உங்களுக்கு உவப்பானதாக இருக்கும் என்றே கூறுவேன். இரண்டாவது மொழிபெயர்ப்பை வெளியிடுவது என்பது மிகவும் கடினம் என்பதால் எங்களுடைய மொழிபெயர்ப்பு மிகவும் வரவேற்பைப் பெற்றது எங்களுக்கு அதிசயமாக இருந்தது.

பேவியர்: மௌடே அல்லது கார்னெட்டின் மொழிபெயர்ப்பையே விரும்புகிறேன் என வாசகர்கள் சொல்வதை நான் புரிந்து கொள்கிறேன்.

கேட்க வேண்டும் என நினைத்தேன். கான்ஸ்டன்ஸ் கார்னெட் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

வோலகான்ஸ்கி: அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர் தான். தஸ்தயேவ்ஸ்கியின் சில பக்கங்களை அவர் தவிர்த்துள்ளார் என்பதை தற்செயலாக நாங்கள் கண்டறிந்தோம். மற்றபடி அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர் தான்.

பேவியர்: ஏராளமான மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும் போது அவருடையது மூலப் பிரதிக்கு மிக நெருக்கமாக உள்ளது. அவர் ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். நாங்கள் நிறைய மொழிபெயர்த்துள்ளதாக வாசகர்கள் எங்களைப் பற்றிச் சொல்வார்கள். நாங்கள் 30 நூல்களே மொழிபெயர்த்துள்ளோம். ஆனால் அவர் 70 நூல்கள் மொழிபெயர்த்துள்ளார். செகாவ் மட்டுமே 17 தொகுதிகள் கொண்டது.  தஸ்தயேவ்ஸ்கியின் அனைத்துப் படைப்புகள், டால்ஸ்டாய் மற்றும் துர்கனேவின் பெரும்பாலான படைப்புகள் அதில் அடங்கும்.

நீங்கள் மொழிபெயர்க்கும் போது எந்தளவு மற்ற மொழிபெயர்ப்புகளை அணுகுவீர்கள்?

பேவியர்: குறைந்தது ஒரு நூல். நான் செய்வது சரியா எனப் பார்ப்பதற்காக ஒன்றை திறந்து வைத்திருப்பேன்.

சில ரஷ்ய மொழி பத்திகள் புரிந்து கொள்ள மிகக் கடினமாக இருக்கும். அது போன்ற சூழலிலும் நீங்கள் மற்ற மொழிபெயர்ப்புகளை பார்ப்பீர்களா?

வோலகான்ஸ்கி: பாஸ்டர்நாக் அப்படிப்பட்டவர் தான். அவரது கவித்துவ உச்சமானது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதைக் கூட உங்களால் அறிய முடியாத அளவில் இருக்கும். சில வேண்டுமென்றே அவ்வாறு எழுதப்பட்டது, மற்றவை கடவுளுக்குத் தான் தெரியும். வழக்கமாக நாங்கள் அதே அளவிலான கடினத்தன்மையை மொழிபெயர்ப்பிலும் கொண்டு வருவோம். இது தான் எங்களை விமர்சனம் செய்பவர்களுக்கான தீனியாக மாறுகிறது. ஆனால் ஏதேனும் எளிமையாக இருந்தும் எனக்குப் புரியவில்லை என்றால் மற்ற மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பேன். அல்லது வேறு ஒருவரைக் கேட்பேன். ஆனால் அது உதவாது, ஏனென்றால் அவர்களுக்கும் அது புரியாது.

செகாவை மொழிபெயர்ப்பது கடினம் என்று ஒரு முறை கூறினீர்களே

வோலகான்ஸ்கி: அதைப் பற்றிக் கூறுகிறேன். விஷயம் என்னவென்றால் சிக்கல், செழுமை, சுவாரஸ்யம், கடினம் எல்லாம் கலந்தவர் தஸ்தயேவ்ஸ்கி. உங்களுக்கு ஒரு தடை வரும். அந்தத் தடையை மொழிபெயர்ப்பீர்கள். என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் செகாவ் வழவழப்பான சாலை போன்று எளிதானவர். இயல்பானவர். அதே நேரம் இயல்பற்றவர். அவரது எழுத்தில் மிகுதி என்று எதுவுமில்லை. நீங்கள் பரந்த சமவெளியில் செல்லும் போது உங்களுக்கான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். அது கடினமானது.

பேவியர்: அந்த சொற்கள் எளிமையாகத் தெரிந்தாலும் அதை மொழிபெயர்க்கும் போது அதற்கடியில் மாபெரும் வாழ்வு ஒன்று இருப்பது தெரியும். அதைப் பிடிக்கத்தான் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஒல்கா செடகோவா என்றொரு புகழ்பெற்ற ரஷ்ய கவிஞர், மொழிபெயர்ப்பாளர் இருந்தார். மொழிபெயர்ப்பு என்பது தனித் தனிச் சொற்களும் அனைத்துச் சொற்களும் சேர்ந்தது தான் என்பார். அது உண்மைதான். ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை பரிசீலிக்க வேண்டும். நீங்கள் ஒரு சொல்லைப் படித்து அதைப் பற்றி சிந்திக்கும் அதே நேரத்தில் அதை முழுமையான கண்ணோட்டத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது சிதறிப் போய்விடும். அதில் உயிரோட்டம் இருக்காது. அதை உங்களால் வரையறுக்கவும் முடியாது. ஆனால் அது இன்றியமையாதது. விமர்சனத்தில் விமர்சகர்கள் எதையாவது மேற்கோள் காட்ட வேண்டும். ஆனால் ஒல்கா கூறும் “முழுமை” என்பதை மேற்கோள் காட்ட முடியாது. அதனால் அவர்கள் வேறு எதையாவது எடுத்துக் கொண்டு இது தவறு என்று கூறுவார்கள். அல்லது வேறு ஒன்றுடன் ஒப்பிட்டுக் கூறுவார்கள். ஆனால் அனைத்திலும் அவர்கள் முழுமையான ஒன்றைத் தவறவிட்டிருப்பார்கள். அது தான் அதை வேறுபடுத்திக் காட்டும்.

வோலகான்ஸ்கி: இப்போதெல்லாம் எல்லோரும் மொழிபெயர்ப்பு நிபுணர்கள் ஆகிவிட்டார்கள். அன்னியமயமாக்கல், உள்ளூர் மயமாக்கல், வழக்கப்படுத்துதல் என்பது போன்றவை விவாதிக்கப்படுகின்றன. இந்த சொற்களெல்லாம் பெரிதாக உதவாது. கடைசியில், மனதில் நிற்கிறதா என்பதே கேள்வி. அதை எப்படி நீங்கள் வரையறை செய்வீர்கள்? என்று கேட்கும் செடகோவா, உள்ளுணர்வுதான் ஒரே வழி என்பார். அது உண்மையும் கூட. ஒரு மொழிபெயர்ப்பு வெற்றியடைவதையும் மற்றொன்று வரவேற்கப்படாததையும் ஏன் என்று கூறுவது கடினம். அது ஒரு மொழிப்புலமை சார்ந்த விஷயம் அல்ல. மொழி அறிஞர்கள் நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் அல்ல என்பதை நாம் அறிவோம். அதற்கு குறிப்பிடத் தகுந்த காரணம் எதுவும் கூற முடியாது. உங்களது வாசிப்பும் நுண்ணுணர்வுமே அதற்குத் தேவை.

 நீங்கள் பென் மொழிபெயர்ப்பு விருதைப் பெற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அன்னா கரீனினா நாவலை பரிந்துரை செய்ததன் மூலம் ஓபரா வின்ஃப்ரே உங்களை உலகப் புகழடைய வைத்துவிட்டார்

பேவியர்: எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பர்கண்டியில் நாங்கள் வசித்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்களுடைய அமெரிக்க தொகுப்பாசிரியர் தான் பேசினார். ஓபரா வின்ஃப்ரே என்ற பெயர் உங்களுக்கு எதை நினைவூட்டுகிறது? என்று கேட்டார்.  அவர் ஒரு மேற்கத்திய நாட்டுப்புற இசைப் பாடகர் என்று நினைக்கிறேன் என்றேன். அதைக் கேட்டு அவர் குபீரெனச் சிரித்தார்.

வோலகான்ஸ்கி: ஏனென்றால் நாங்கள் எண்பதுகளின் இறுதியில் நியுயார்க்கை விட்டு வெளியேறிவிட்டோம். எங்களிடம் தொலைக்காட்சிப் பெட்டியும் இல்லை.

பேவியர்: அதனால் என்ன நடந்தது என்றேன். 90000 பிரதிகளை விற்பனைக்காக அனுப்பியுள்ளோம் என்றார் அவர்.

வோலகான்ஸ்கி: அந்த எண்ணை நானும் கேட்டேன். அவர்கள் ஏதோ சிறந்த விற்பனை கொண்ட நூலைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நினைத்தேன். என்ன 90000 பிரதி விற்றது? என்று மற்றொரு அறையில் இருந்து நான் சத்தமாகக் கேட்டேன். அன்னா கரீனினா என்றார் ரிச்சர்ட். நான் அது ஏதோ நகைச்சுவை என்று நினைத்தேன்.

அது உங்கள் வாழ்வை எப்படி மாற்றியது?

வோலகான்ஸ்கி: பணத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்று என் அம்மா எப்போதும் கூறுவார்.

பேவியர்: என் தாயும் தான்.

தஸ்தயேவ்ஸ்கியா டால்ஸ்டாயா? நீங்கள் விரும்புவது யாரை?

வோலகான்ஸ்கி: நான் எப்போதும் தஸ்தயேவ்ஸ்கியையே விரும்புகிறேன். எனது இளமைக்காலத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் உலகம், அதன் நாயகர்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தார்கள். ஆனால் இப்போது மாறிவிட்டேன். நான் ஒப்புமை செய்வதை நிறுத்திவிட்டேன். அவர்கள் இருவரும் வெவ்வேறான எழுத்தாளர்கள். ஒரு எழுத்தாளராக டால்ஸ்டாய் மீது பெரும் மதிப்பு உண்டு. டால்ஸ்டாயின் பிரதியுடன் பணியாற்றுவது என்பது பாதுகாப்பான கரங்களில் இருப்பது போன்றது.

அப்படி என்றால்

வோலகான்ஸ்கி: எனக்குத் தெரியவில்லை. ரிச்சர்ட் உதவி செய்யுங்கள்.

பேவியர்: டால்ஸ்டாயில் முழுமையான, திடமான உலகம் ஒன்றிருக்கும்.

வோலகான்ஸ்கி: மரணம் இருக்கும். துயரம் இருக்கும். ஆனால் ஒரு நிலைத்தன்மை இருக்கும். நீங்கள் அதனோடு இருப்பீர்கள்.

பேவியர்: வீட்டில் இருப்பதைப் போல.

வோலகான்ஸ்கி: நீங்கள் அதனுள் நுழையலாம், வாழலாம். அவர் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றாலும் கூட. தஸ்தயேவ்ஸ்கியைப் போல நவீனத்துவத்திற்குள் நம்பமுடியாத பாய்ச்சலை அவர் நிகழ்த்துவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை என்ற போதிலும் அதில் வரும் மாந்தர்கள், பிரச்சினைகள், அவர்தம் வாழ்வு, உறவுகள் அனைத்தையும் நம்முடையதுடனும் நாம் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அவர்களை உங்களது நண்பர்கள், அண்டை வீட்டார், அத்தை என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் டால்ஸ்டாய் நன்றாக எழுதினார், தஸ்தயேவ்ஸ்கி நன்றாக எழுதவில்லை என்றொரு விசித்திரமான கருத்து நிலவுகிறது.

பேவியர்: டால்ஸ்டாய் சிறந்த ரஷ்ய உரைநடையில் எழுதினார் என்பார்கள்.

வோலகான்ஸ்கி: ஆம். அவர் சிறந்த உரைநடையில் எழுதினார். ஆனால் அதன் அர்த்தம் அதுவல்ல. ரஷ்ய மொழியின் வளங்கள் குறித்து மிக நன்றாக அறிந்திருந்தார் டால்ஸ்டாய். சொல்லாட்சித் திறம் வாய்ந்த மொழி. அவர் முரண் தொடரணி, இணை வாக்கிய அமைப்பு, திரும்பச் சொல்லுதல் போன்ற மொழியாளுமை கொண்டவர். அவர் நீண்ட நீண்ட சொற்றொடர்கள் எழதினார். ஒரு பத்தியில் கிட்டியின் பார்வையில் அன்னாவைப் பற்றி எழுதுவார். ஒரு காட்சியில் அன்னாவைப் பற்றி விவரிக்க ஒருபொருட்பன்மொழி கொண்ட ‘அழகான’ என்ற சொல்லை ஏழு முறை எழுதியிருப்பார். ஆனால் நாம் அதைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த ரஷ்ய மொழிச் சொல்லின் வேர்ச்சொல் ஸ்லாவிய மொழியில் உள்ளது. அதற்கு ஆன்மிகத் தளத்தில் மயக்குதல், வசியப்படுத்தல் என்ற பொருள் உண்டு.

பேவியர்: தஸ்தயேவ்ஸ்கிக்கும் டால்ஸ்டாய்க்கும் ஒரு வேறுபாடு உள்ளது. தஸ்தயேவ்ஸ்கியில் கதைசொல்லி ஒரு கதாபாத்திரமாக இருப்பார். டால்ஸ்டாயில் டால்ஸ்டாயே கதைசொல்லியாக இருப்பார். அவரது உணர்வுகள், வெறுப்புகள் இருக்கும்.

நீங்கள் மொழிபெயர்ப்புக் கலையைக் கற்றுக் கொடுத்தீர்கள். அதை எப்படி கற்பிப்பீர்கள்?

பேவியர்: நான் எனது மாணவர்களுக்கு பத்தி எதையும் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னதில்லை. அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு நூலை எடுத்து அதில் சில பத்திகளை மொழிபெயர்க்கச் சொல்வேன். பின்னர் அதைப் பற்றி வகுப்பில் விவாதிப்போம். மொழிபெயர்ப்பு என்பது மிகப் பரந்த விஷயம். அதற்கான விதிகளோ கொள்கைகளோ எதுவும் இல்லை. மொழிபெயர்ப்பாளர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதைப் பொருத்து அமைகிறது.

ரஷ்யாவுக்குச் சென்றதில்லை என்றும் அங்கு செல்ல ஆர்வம் இல்லை என்றும் கூறியிருந்தீர்கள். அது உண்மையா?

பேவியர்: அது முட்டாள்தனமானது. நான் சொன்னதை அப்படியே வெளியிட்டுவிட்டனர். ரஷ்ய நூலை மொழிபெயர்ப்பதும் அதற்காக நீங்கள் ரஷ்யா சென்றிருக்க வேண்டும் என்பதும் வெவ்வேறு விஷயங்கள். நான் ஸ்பெயினுக்கும் கூடத்தான் சென்றதில்லை. ஆனால் ஏராளமான ஸ்பானிய நூல்களை மொழிபெயர்த்துள்ளேன்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் அபாரமான வளமையைப் பற்றிக் கூறுங்கள்

பேவியர்: பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ரஷ்யா அதன் கலாச்சார முதிர்ச்சியை அடைந்துவிட்டது. ரஷ்யாவிற்கு மத்திய காலத்திய தாந்தே அல்லது சாசரோ, இத்தாலியர்களின் மறுமலர்ச்சியோ, பிரிட்டீசின் எலிசபெத் காலகட்டம் போன்றோ எதுவுமில்லை. எந்த மொழியில் எழுதுவது என்று கூட அவர்களுக்கு உறுதிப்பாடு எதுவுமில்லை. 1799ல் பிறந்த புஷ்கின் தான் ரஷ்ய இலக்கிய மொழியை பெரும்பாலும் வளர்த்தெடுத்தார். பிற கலாச்சாரத்தில் நூற்றாண்டுகளாக செய்து வந்ததை ரஷ்யர்கள் அப்போதுதான் முதன்முறையாகச் செய்தார்கள்.

ரஷ்ய ஆன்மா என்ற கருத்தாக்கத்தைப் பற்றி உங்கள் கருத்து

வோலகான்ஸ்கி: ரஷ்ய ஆன்மா என்பது ஒரு வெற்றுப் புனைவு. சிலர் நம்புவர், சிலர் நம்பமாட்டார். புதிரான ரஷ்ய ஆன்மா என்ற சொற்களுக்கு எந்தப் பொருளும் இல்லை. அது ஒரு வழக்காறு. நமது உடலில் ஆன்மா எங்குள்ளது என்பதே நமக்குத் தெரியாது. அவ்வளவு ஏன், ஒரு நாட்டின் ஆன்மா எங்குள்ளது என்பதும் தெரியாது. அந்தக் கருத்து தேசியவாதிகளைக் கவர்வதற்காக சொல்லப்பட்டது என நினைக்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளராக நாங்கள் இந்தக் கருத்துக்களுடன் வாழ்வதில்லை. நாங்கள் சொற்களுடன் வாழ்கிறோம்.

ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்கள் உன்னதமான நோக்கமே ஆங்கில மொழியின் வளமைக்கு உதவுவது தான் என்று கூறியிருந்தீர்கள். அதைப் பற்றி விளக்க முடியுமா?

பேவியர்: அமெரிக்கப் புனைவுகள் மிகவும் மென்மையாகவும் தன்னலம் மிக்கதாகவும் மாறிவிட்டதாக உணர்ந்தேன். அதிலிருந்து அது வெளியேற வேண்டும் என நினைத்தேன். மொழிபெயர்ப்பை விரும்புவதற்கு மற்றொரு முக்கியமான காரணம், ஆங்கிலத்தில் சாதாரணமாக செய்ய முடியாத பல விஷயங்களைச் செய்ய அது  வாய்ப்பளிக்கிறது என்பதால் தான். மொழிபெயர்ப்பின் மிக முக்கியமான பகுதி இது என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பின் மற்றொரு நல்விளைவு என்னவெனில், மொழிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல் தான். சில நேரங்களில் எங்கள் மொழிபெயர்ப்பை “இது ரஷ்யனிஸம்” என்று விமர்சனம் செய்வார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நாம் சிறிது ரஷ்யனிஸம் பெறுவோம். தன்மாற்றம் போன்ற விஷயங்களைப் பயன்படுத்துவோம். அவற்றை எல்லாம் ஏன் தவிர்க்க வேண்டும்? ஒரு சமகால எழுத்தாளராக நீங்கள் இதைச் செய்ய முடியாது தான். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளராக என்னால் அதைச் செய்ய முடியும். இரு மொழிகளுக்கிடையே உள்ள இந்த சுதந்திரமான உலாவலை நான் விரும்புகிறேன். இது தான் எனக்கு முக்கியமானது- எனது மொழியை அதாவது ஆங்கிலத்தை அது வளப்படுத்த வேண்டும். எங்களது செயல்பாட்டின் ஆக்கப்பூர்வமான விளைவு இது தான் என்று நினைக்கிறேன்.

நாம் மொழிபெயர்க்கும் போது நமது மொழியை இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று லிடியா டேவிஸ் கூறியுள்ளாரே?

வோலகான்ஸ்கிஅரிதாக மொழிபெயர்க்கப்படும் சொற்களின் வேர்ச்சொல்லை அறிவதில் எனக்கு அலாதியான பிரியம் உண்டு. நான் சொற்களை நேசிக்கிறேன். எனது அகராதிகளை விரும்புகிறேன். நான் செய்யும் வேலையை நான் விரும்புகிறேன். இதனால் எனக்கு ஒரு இலக்கு இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.  இது வரை அளிக்கப்படாத ஒன்றை நாம் அளிக்கிறோம் என்ற எண்ணத்தை சிந்தையில் வைத்துப் போற்றுகிறேன். சில எழுத்தாளர்களின் படைப்புகள் மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக லெஸ்கோவ், தஸ்தயேவ்ஸ்கி படைப்புகளை மொழிபெயர்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உணர்வு எங்களுக்கு இருக்கும் வரை மற்றவர்கள் எங்கள் மொழிபெயர்ப்பைப் பற்றி என்ன கூறினாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை.

கடைசியாக, ராபர்ட் ஃபிரிட்ஜ்ஜெரால்டிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி. மொழிபெயர்ப்பால் கிடைக்கும் தனித்துவம் மிக்க மனநிறைவு என்ன?

பேவியர்: எழுபதுகளில் Translation Review இதழில் கிரிகோரி ரபாஸ்ஸா ஒரு நேர்காணலில் கூறிய பதிலையே சற்று மாற்றிக் கூறுகிறேன். மொழிகளுக்கிடையில் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் வாழ்பவன் மொழிபெயர்ப்பாளன் மட்டும் தான். நீங்கள் முன்னும் பின்னும் ஒருவராகவும் மற்றொருவராகவும் நிற்காமல் மாறிக் கொண்டே இருப்பீர்கள். வேறு எவரும் இப்படி இடைவெளி இன்றி ஒரே நிலையில் இருப்பதில்லை.

The Paris Review 2015 கோடை கால இதழில் வெளியான நேர்காணலின் தமிழாக்கம்.

நேர்காணல்: சுஸான்னா ஹன்னிவெல்

தமிழில்.ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.