கலையின் மெய்ம்மையைக் கண்டுணர்ந்த மகத்தான படைப்பாளி :தாஸ்தயேவ்ஸ்கி -உதயசங்கர்

“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதையைப் போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடிக்க வாழ்நாள் முழுவதும் செலவழித்தாலும் வீணல்ல. இந்த விடுகதையைப் பின்தொடர்ந்து நான் செல்கிறேன். அதற்கு நான் ஒரு மனிதனாக இருக்க விரும்புவதே காரணம்….”

(தாஸ்தயேவ்ஸ்கி 1844–ல் தன் சகோதரர் மிகையீலுக்கு எழுதிய கடிதத்தில்)

ன் இளமைக் காலத்தின் தாஸ்தயேவ்ஸ்கி வெண்ணிற இரவுகளின் வழியே தான் அறிமுகமானார். ராதுகா பதிப்பகம் வெளியிட்ட அந்தத் தொகுப்பிலுள்ள மற்ற கதைகளைப் புரிந்துகொள்கிற பக்குவம் அல்லது முதிர்ச்சி அப்போது இல்லை. கட்டற்ற காதலின் காட்டாற்றுச் சுழலில் சிக்கிக்கொண்டிருந்த பருவமாதலால் வெண்ணிற இரவுகளின் நாஸ்தென்கா எனக்கு மட்டுமல்ல, அப்போது கோவில்பட்டியில் இலக்கியம் வாசித்துக் கொண்டிருந்த எல்லாருக்குமே கனவுநாயகியாகத் திகழ்ந்தாள். எத்தனை முறை அந்தக் கதையை வாசித்திருப்போமென்று தெரியாது. நாஸ்தென்கா கரம்பற்றி சிட்டாய் ஓடிப்போகிற காதலனாக இல்லாமல் அந்தக் கதையில் வருகிற கனவுலகவாசியாகவே ஏன் எங்களைப் பாவித்தோம் என்று இன்றுவரை புரியவில்லை. நாஸ்தென்கா இறுதியில் தன்னுடைய காதலனுடனே போய் விடுகிறாள். நீண்ட துயர் மிக்க தனிமையிலும், துளைத்தெடுக்கும் பனியிரவிலும் அனாதரவாக விடப்பட்ட கனவுலகவாசி எதையும் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். அவனும் நாஸ்தென்கா என்ற அந்தச் சின்னஞ்சிறு அப்பாவிப்பெண்ணும் சில கணங்களேனும் காதலித்தார்களே, அந்தக் காதலின் கதகதப்பை துரதிருஷ்டசாலியான உலகத்தின் எல்லாத்தெருக்களிலும் கனவுலகவாசி தேடிக்கொண்டிருக்கிறான் என்று புலம்பினோம். கனவுலகவாசி நாஸ்தென்காவிடம் பேசுகிற உரையாடலை மனப்பாடமாய் ஒப்பித்துக் கொண்டிருந்தோம். அந்த மொழியில், அந்த நடையில் காதல் கதைகளெழுத முயற்சிகளும் செய்தோம். ஒவ்வொருவரும் கனவுப்பூச்சி என்றோ, கனவுக்கூடு என்றோ, கனவுச்சிலந்தி என்றோ கதைகளை எழுதிப்பார்த்ததை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. கனவுலகவாசியைப் போலவே தனிமையும் கழிவிரக்கமும் மிகுந்த எனக்கு தாஸ்தயேவ்ஸ்கி என்னுடைய மிக நெருங்கிய நண்பராக மாறினார். இப்போதும் அந்த இளமைக்கால உணர்வை நினைக்கும்போது மனதில் ஒரு இன்பம் சுரப்பதை உணரமுடிகிறது.

அந்த இலக்கியமேதையின் அற்புதமான படைப்புகள் குறித்தும் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்தும் தெரிந்து கொண்டபோது அடைந்த பிரமிப்பும் உத்வேகமும் ஒருபோதும் குறையவில்லை. சோவியத்தின் ராதுகா பதிப்பகத்தின் வழியாகவே தமிழுக்கு வந்த வெண்ணிற இரவுகளைத் தவிர தாஸ்தயேவ்ஸ்கியின் வேறு நூல்களெதுவும் மொழிபெயர்க்கப்பட்டு வந்ததாக நினைவிலில்லை. ஆனால் எழுத்தாளர் கோணங்கியின் கல்குதிரை இதழ் எட்டாவது இதழ் 1991 தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழாக வெளிவந்தபோது தமிழிலக்கியத்துக்குள் தாஸ்தயேவ்ஸ்கியை மறுஅறிமுகம் செய்தது. அந்த இதழிலேயே கரமசோவ் சகோதரர்கள் நாவல் வெளியீடு பற்றிய குறிப்பும் வெளியானது. ஒரு எழுத்தாளனின் டைரிக்குறிப்புகளின் ஒரு அத்தியாயத்தை எழுத்தாளர் ஜோதிவிநாயகம் மொழிபெயர்த்திருந்தார். அவருடைய மரண வீட்டின் குறிப்புகள் நாவலின் ஒரு பகுதியை வி.சா. வெங்கடேசன் மொழிபெயர்த்திருந்தார். 1880–ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதியன்று புஷ்கின் சிலை திறப்பு விழாவில் தாஸ்தயேவ்ஸ்கி ஆற்றிய உரையை அரபிந்த கோஷ் மொழிபெயர்த்திருக்கிறார். தாஸ்தயேவ்ஸ்கியைக் கதாநாயகனாகக் கொண்ட மொழிபெயர்ப்புச் சிறுகதையும் வெளியாகியிருக்கிறது. தாஸ்தயேவ்ஸ்கிக்கு தேவதச்சனின் கடிதம், முத்துமோகன், சி.மோகன், எஸ்.வி.ஆர். போன்ற ஆளுமைகளின் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் தமிழிலக்கியத்துக்கு கல்குதிரை மூலமாகவே மறுபிரவேசம் செய்தார் தாஸ்தயேவ்ஸ்கி என்று சொல்லலாம்.

2000–க்குப் பின்னரே அசடன், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள், ஒரு எழுத்தாளனின் நாட்குறிப்பு போன்றவை வெளியாகின. இன்னமும் மொழிபெயர்க்கப்படாத ஏராளமான படைப்புகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கும்போது மலையாளத்தில் தாஸ்தயேவ்ஸ்கி நூல்களைப் பதிப்பிப்பதற்கென்றே ஒரு பதிப்பகம் இயங்கி வருகிறது என்ற தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது. 1980–ஆம் ஆண்டிலேயே ஜி.என்.பணிக்கர் தாஸ்தயேவ்ஸ்கி – வாழ்வும் கலையும் என்ற விரிவான ஆய்வு நூலை எழுதி அதுவும் பல பதிப்புகளைக் கண்டது. மலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரன் தாஸ்தயேவ்ஸ்கியின் கதை என்ற புனைவையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, தாஸ்தயேவ்ஸ்கியின் துணைவியார் அன்னாவின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புனைவாக பெரும்படவம் ஸ்ரீதரன் என்ற நாவலாசிரியர் 1993–ஆம் ஆண்டு எழுதிய நாவல் “ஒரு சங்கீர்த்தனம் போல” இப்போது எழுபத்தைந்து பதிப்புகளைக் கடந்திருக்கிறது என்பது சாதாரணமாகக் கடந்து போகிற விஷயமல்ல. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நூல் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது. இப்படி தாஸ்தயேவ்ஸ்கியின் புகழ் அண்டை மாநிலத்தில் ஓங்கியிருந்த நாட்களில் இங்கே அத்தி பூத்தமாதிரியே தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றிய உரையாடல் இருந்ததென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.

பிளவுண்ட மனிதமனதின் இருகூர் முனைகளின் அல்லது பலகூர் முனைகளின் நடனத்தில் தாஸ்தயேவ்ஸ்கி எப்போதும் சாத்தான்களுடன் சேர்ந்தே நடனமாடினார். சாத்தான்களே அவரை பெரிதும் வசீகரிப்பவர்களாக இருந்தார்கள். மனிதனுடைய குற்றச்செயல்களில் அவனுடைய உளவியல் எப்படிச் செயல்படுகிறது என்பதை அவனுடைய மனதுக்குள் நெருக்கமாக இருந்து அவதானித்து எழுதினாரென்று சொல்லலாம். அவருடைய பாலிய காலத்தில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளான செய்தி அவரை மிகுந்த துயருக்காளாக்கியது. அந்தச் சம்பவத்தைச் சுற்றியே அவர் மனம் அலைபாய்ந்தது. அதுவே ஒரு காலகட்டத்தில் அவரே அந்தக் குற்றத்தைச் செய்த குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றத்திற்கான தண்டனையை அனுபவிப்பதன் மூலமே குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலையடைய முடியுமென்று அவர் நம்பினார். குற்ற மனநிலையையும், குற்றம் செய்தபிறகு நிகழும் மனதின் போராட்டங்களையும், துயரத்தையும் அணுஅணுவாகச் சித்தரித்தார்.

ருஷ்யாவின் கொடூரக் குற்றவாளிகளையெல்லாம் அவர் அவருடைய சைபீரியா கடுங்காவல் தண்டனையின்போது சந்தித்திருந்தார். குற்றங்களைச் செய்த குற்றவாளிகளில் சிலர் மனம் வருந்தியதையும், பலர் அந்தக் குற்றச்செயல் பற்றிய எந்த உணர்வுமின்றி இருந்ததையும் கண்டார். அவர்களிடமிருந்து கேட்ட வாழ்க்கைச் சம்பவங்கள் பாலியத்திலிருந்தே தனியனாகவும், உள்ளொடுங்கியவராகவும் இருந்த தாஸ்தயேவ்ஸ்கியின் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அவருடைய இலக்கிய வாழ்வின் துவக்கத்துக்கு பாலியகால அனுபவங்கள் ஒரு காரணமாக இருந்தன.

1821-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் தேதி மிகைல் ஆண்டிரியேவிச் தாஸ்தயேவ்ஸ்கி – மரியா பியோதரோவ்னா தாஸ்தயேவ்ஸ்கயா (மரியா நெச்சயேவா) தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பியோதர் மிகைலோவிச் தாஸ்தயேவ்ஸ்கி பிறந்தார். மூன்று வயதுவரை அவருடைய வளர்ப்புத்தாதி யானாவிடம் புராண, இதிகாசக் கதைகளையும் வீரதீரக் கதைகளையும் கேட்டு வளர்ந்தார். அவருடைய நான்காம் வயதில் அம்மா பைபிளை வாசிக்கப் பழக்கப்படுத்தினார். அந்த வயதில் அவர் வாசித்த பைபிளின் தாக்கம் அவருடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அப்பாவின் கண்டிப்பினால் மற்ற குழந்தைகளைப்போல் வெளியில் சென்று விளையாடவோ, பொழுதுபோக்கவோ முடியாமல் தனிமையில் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்ததும், அவருடைய அண்ணன் மிகையீலும் புத்தக வாசிப்பாளராக இருந்ததும் கூட காரணம். பைபிள் வாசிப்பினால் ஒரு காலகட்டத்தில் பாதிரியாராகப் போய்விடவும் சித்தம் கொண்டிருந்தார். அவருடைய பனிரெண்டாம் வயதில் வால்டர் ஸ்காட்டின் அத்தனை நூல்களையும் வாசித்து முடித்து விட்டார். அதுமட்டுமல்ல தனிமையைக் கொல்லவும், வாசிப்பின் மீது ஏற்பட்ட தணியாத ஆர்வத்தாலும் புஷ்கின், ஷில்லர், கதே, ஹியூகோ போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசிக்கத் தொடங்கியிருந்தார். அப்பாவின் சிடுமூஞ்சித்தனமும், முன்கோபமும், நிரந்தரக்குடியும் சேர்ந்து அவரை யாரும் அண்டவிடாதபடி செய்திருந்தது.

அவருடைய அப்பாவும் அவரைப் பற்றி, தனக்குள் ஒடுங்கியவன், கனவுலகவாசி என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவிடமிருந்து மென்மையான கூருணர்வு கொண்ட இலக்கிய இதயத்தையும், அப்பாவிடமிருந்து வாழ்நாளெல்லாம் வருத்திய வலிப்பு நோயையும் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார் தாஸ்தயேவ்ஸ்கி. அப்பாவின் பிடிவாதத்தினாலேயே அவர் பொறியியல் படிக்க பீட்டர்ஸ்பர்க் சென்றார். கல்லூரியில் சேருவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு தான் அவருடைய ஒரே ஆறுதலான அவருடைய அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவருடைய அண்ணனுக்கு அங்கே இடம் கிடைக்காமல் வேறு ஊரில் சேரவேண்டியதாயிற்று. அதனால் தாஸ்தயேவ்ஸ்கி தனிமையுடனும், வறுமையுடனும் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தார்.

தாயின் மரணத்தைத் தொடர்ந்து அவர் மிகவும் நேசித்த ருஷ்யாவின் மகாகவியான புஷ்கினின் திடீர் மறைவும் அவரைச் சோர்வடையச் செய்தது. கல்லூரியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குப் பின் கிராமத்திலிருந்த தந்தையார் குடியானவர்களால் அடித்துக் கொல்லப்பட்டாரென்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் மிகக்கடுமையான வலிப்பு நோய் அவரைத் தாக்கியது. பின்னர் அவருடைய அப்பாவுக்கு வந்த வலிப்பு நோயினால் ஏற்பட்ட ரத்தநாள வெடிப்பே மரணத்துக்குக் காரணமென்று தெரிந்தாலும் தாஸ்தயேவ்ஸ்கியின் ஆழ்மனதில் அப்பாவின் மரணம் அடித்துக் கொல்லப்பட்டே நிகழ்ந்திருக்கவேண்டுமென்று நம்பியது. அந்தச் சம்பவம் அவருடைய வாழ்நாளெல்லாம் துரத்திக் கொண்டேயிருந்தது. அதுவே கரமசோவ் சகோதரர்கள் நாவலுக்கான அடித்தளமாகவும் ஆனது.

தாய் தந்தையின் மறைவுக்குப் பின் மேலும் வறுமை நிலைக்கும், தனிமையின் பல்சக்கரத்துக்குள்ளும் நசுக்கப்பட்டார். முடிகிற இடத்திலெல்லாம் கடன் வாங்கினார். ஆனாலும் அத்தகைய சூழலிலும் அவருடைய மனம் முழுவதுமே இலக்கியம் ஆட்கொண்டிருந்தது. குளிர்ந்து இருண்ட அறையில் கடனாகக் கிடைத்த ரொட்டியையும் பாலையும் மட்டுமே உணவாகக் கொண்டார். எப்போது வேண்டுமானாலும் அணைந்து விடலாமென்று துடித்துக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவருடைய உற்ற தோழர்களாக புஷ்கினும், ஷில்லரும், விக்டர் ஹியூகோவும், கோகோலும் இருந்தார்கள். இடையில் கிடைத்த வேலையையும் தன்னுடைய இலக்கிய தாகத்தினால் ராஜினாமா செய்து விட்டார்.

அவருடைய முதல் நாவலான ‘பாவப்பட்டவர்களை’ எழுதி முடித்தபிறகு அதை எப்படி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தாஸ்தயேவ்ஸ்கி, தன்னுடைய முதல் நாவல் வெளியான விதம் குறித்து முப்பதாண்டுகளுக்குப் பிறகு விரிவாக ஒரு எழுத்தாளனின் நாட்குறிப்பில் எழுதுகிறார்.

“1845-ஆம் ஆண்டு மே மாதம் குளிர்காலத்தின் துவக்கத்தில் தான் என்னுடைய முதல் நாவலான பாவப்பட்டவர்களை எழுதத் தொடங்கினேன். அதற்கு முன்பு நான் எதுவுமே எழுதியிருக்கவில்லை. எழுதி முடித்தபோது அதை என்ன செய்ய வேண்டுமென்றோ, யாருக்குச் சமர்ப்பிக்கவேண்டுமென்றோ எனக்குத் தெரியாது. கிரிகரோவிச்சைத் தவிர இலக்கியத்துடன் தொடர்புடைய ஒரு நண்பனும் எனக்குக் கிடையாது. ஆனால் அவரும் அன்றுவரை ஒரு சிறு கட்டுரையைத் தவிர வேறொன்றும் எழுதியிருக்கவில்லை. நெக்ரோசவ்வின் அறையில் அவர் வசித்து வந்தார். கிரிகரோவிச்சும் கோடைக்காலத் துவக்கத்தில் அவருடைய ஊருக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அவர் என்னைப் பார்த்தபோது, உங்களுடைய கையெழுத்துப் பிரதியைத் தாருங்கள். அடுத்த வருடம் கதையும் கட்டுரைகளும் கொண்ட ஒரு நூலை வெளியிட நெக்ரோசவ் திட்டமிட்டிருக்கிறார். உங்களுடைய நாவலை நான் அவரிடம் கொடுக்கிறேன்….”

நெக்ரோசவ்வை ஒரே ஒரு நிமிடமே சந்தித்து தன்னுடைய நாவலைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் தாஸ்தயேவ்ஸ்கி. தாஸ்தயேவ்ஸ்கியிடம் இருந்த இயல்பான தாழ்வுணர்ச்சி காரணமாக அவருக்கு நம்பிக்கையே இல்லாமல் தானிருந்தார். ஆனால் நெக்ரோசவ் அலட்சியமாக வாசிக்கத் தொடங்கிய பாவப்பட்டவர்கள் அவரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அருள் வந்தவரைப் போல ஒரே மூச்சில் படித்துவிட்டு உடனே தாஸ்தயேவ்ஸ்கியைச் சந்திக்க அந்த நள்ளிரவில் அறைக்கதவைத் தட்டினார்.

“அற்புதம்!” என்ற ஒருவார்த்தையின் பின்னால் தான் தாஸ்தயேவ்ஸ்கியின் எதிர்கால இலக்கிய வாழ்வு நீண்டிருந்தது. பின்னர் அக்காலத்தின் சிறந்த விமரிசகரான பிலின்ஸ்கியிடம் கொடுக்கப்பட்ட அந்த நாவலை வாசித்தவர் தாஸ்தயேவ்ஸ்கியிடம் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியமானவை.

“ஒரு கலைஞன் என்ற முறையில் முற்பிறவி ஞாபகங்களுடன் நீங்கள் இதை எழுதியிருக்கலாம். இதன் மூலம் நீங்கள் எங்களுக்குச் சுட்டிக்காட்டும் கொடூரமான உண்மைகளைப் பற்றி நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? இருபத்தைந்து வயது இளைஞனான நீங்கள் இதை உணரச் சாத்தியமில்லை. பிரச்சாரம் செய்பவர்களும், திறனாய்வு செய்பவர்களுமான நாங்கள் விமரிசிக்க மட்டுமே செய்கிறோம். வார்த்தைகளின் உதவியோடு விளக்க முயல்கிறோம். ஆனால் கலைஞனான நீங்கள் ஒரு பார்வை மூலம், ஒரு வரி மூலம், ஒரு கற்பனை மூலம், இதன் உயிரோட்டத்தைத் தெளிவாகக் காட்டுகிறீர்கள். யோசிக்கும் திறன் குறைந்தவர்களால் கூட அனைத்தையும் கணநேரத்தில் கிரகிக்க முடிவதும் இதன் மூலமாகத்தான். இதுதான் கலையின் ரகசியம். இதுதான் கலையின் மெய்ம்மை. இதுவே தான் மெய்ம்மைக்குக் கலைஞனின் பங்களிப்பு. ஒரு கலைஞனான உங்களுக்கு மெய்ம்மை புலப்படுகிறது. வெளிப்படுகிறது. ஒரு கொடையாக அது உங்களை வந்தடைகிறது. உங்களுடைய விலைமதிப்பற்ற இந்தக் கொடையை நீங்கள் பாதுகாப்பாய் வைத்திருங்கள். அதற்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மகத்தான கலைஞனாவீர்கள்.”

பிலின்ஸ்கியின் வாக்குப்படியே தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய எல்லாப்படைப்புகளிலும் கலையின் மெய்ம்மையை சுடரெனத் துலங்கச் செய்துகொண்டேயிருந்தார். அந்தச் சுடரின் பிரகாசத்தில் உலகமே இன்றுவரை துலங்கிக் கொண்டிருக்கிறது.

புகழ்பெற்ற ருஷ்யச் சொலவடையான ‘ருஷ்யாவின் படைப்பாளிகள் அனைவரும் கோகோலின் மேல்கோட்டிலிருந்து பிறந்தவர்கள்தான்’ என்ற வாக்கியத்தைச் சொன்னவர் தாஸ்தயேவ்ஸ்கிதான். ஏனெனில் கோகோலின் மேல்கோட்டுக்கும் தாஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவலான பாவப்பட்டவர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன.

1845–ஆம் ஆண்டு ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் வெளிவருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தாஸ்தயேவ்ஸ்கியின் முதல் படைப்பாக ‘பால்சாக்கின் யூஜினி கிராண்டெட்’ என்ற நாவல் 1843-ல் வெளிவந்தது. மேலும், சில நூல்களை மொழிபெயர்த்திருந்தாலும் அவை புகழடையவில்லை.

1848–ஆம் ஆண்டு பிப்ரவரி 21–ஆம் தேதி காரல்மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான அதே காலத்தில் பிரான்ஸில் புரட்சி வெடித்தது. இந்த உலக நிகழ்வுகள் ருஷ்ய இளைஞர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. உலகம் முழுவதுமே பழமையான நிலப்பிரபுத்துவத்தின் அந்திமகாலம் தொடங்கியிருந்தது. கிழக்கில் உதிக்கும் சூரியனைப் போல, நவீனத்துவம் மெல்ல தன் புத்தொளியை முகிழ்க்கத் தொடங்கியிருந்தது. தாஸ்தயேவ்ஸ்கியும் அவர் காலத்தின் புதிய சிந்தனைகளை உள்வாங்கியே தன்னுடைய படைப்புகளை உருவாக்கினார். அதனால்தான் தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான போராட்டமும், தனி மனிதனுக்குள்ளே இருக்கும் பின்ன மனோபாவம் உருவாக்கும் மனப்போராட்டமும் தான் தாஸ்தயேவ்ஸ்கியின் துவக்கக்காலப் படைப்புகளிலிருந்தே மைய இழையாக ஓடிக் கொண்டேயிருக்கின்றன.

நாத்திகரான பெலின்ஸ்கியின் சோசலிஷ கருத்துகளால் ஈர்க்கப்பட்ட தாஸ்தயேவ்ஸ்கி பல்வேறு சோசலிசக் குழாம்களுடன் தொடர்பிலிருந்தார். அதனாலேயே அவர் 1849–ஆம் ஆண்டு ராஜதுரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நாடகத்தின் காட்சியைப் போலக் கடைசி நிமிடத்தில் மரணதண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு சைபீரியச் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கே தான் மனிதவாழ்வின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கவும் அனுபவிக்கவும் நேர்கிறது. மனப்பிறழ்வு, வன்மம், பழியுணர்வு, இருமைத்தன்மை, ஆகியவற்றின் புதிர்ப்பாதைகளின் முட்புதர்களுக்குள் சிக்கி அவற்றிலிருந்து விடுதலை பெறும் வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவர் சிறையிலிருக்கும்போது பரிசாகக் கிடைத்த பைபிளை அவர் மீண்டும் மீண்டும் வாசித்தார். வாழ்க்கை எப்படி இருக்கிறதென்றும் வாழ்க்கை எப்படி இருக்கவேண்டுமென்றும் அவர் சித்தரிப்பதற்கும், கிறித்துவ சோசலிசக்கருத்துகளின் பால் அவர் ஈர்க்கப்பட்டதற்கும் பைபிள் வாசிப்பு ஒரு காரணமாகவும் ஆகியது. ஆறு வருடத் தண்டனைக் காலம் வாழ்வின் மீதான பெரும் மோகத்தை உருவாக்கி விட்டது. சிறையிலிருக்கும்போது அவருடைய சகோதரர் மிகையிலுக்கு எழுதிய கடிதத்தில்,

“சகோதரா எனக்கு ஒரு பதட்டமுமில்லை.. நான் தளர்ச்சியடையவுமில்லை.. வாழ்க்கை எங்கேயிருந்தாலும் நமக்குள்ளேயே தான் இருக்கிறது. வாழ்க்கை வெறும் புறக்காரணங்களினால் இல்லை.. என்னுடன் வேறு மனிதர்களும் இருக்கிறார்கள்.. மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும், எந்தவொரு துர்ப்பாக்கிய நிலையிலும் தளர்ந்து போகாமலிருப்பதும் தான் வாழ்க்கை..

வாழ்க்கை ஒரு கொடையாகும்.. வாழ்க்கை ஒரு வரமாகும்.. ஒவ்வொரு நிமிடமும் மனமகிழ்ச்சியின் ஒரு யுகமாக இருந்தது… புதியதொரு வடிவத்தில் நான் மறுஜென்மம் அடைந்தேன்.. சகோதரா.. ஆசை ஒருபோதும் கைவிடாதென்றும் எனது இதயத்தையும் சிந்தனையையும் என்றும் களங்கப்படுத்தாமல் சுத்தமானதாக நான் காப்பேன் என்றும் நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன்..”

என்று எழுதியிருந்தார். அது மட்டுமல்ல, 1848–ல் வெளியான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1872–ல்தான் ருஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதுவரை ருஷ்யாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் கூட அதற்குப் பின்னரே பரவலான கவனத்தைப் பெற்றது. அதேபோல மார்க்ஸின் ‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தின் மொழிபெயர்ப்பும் 1872-ல்தான் வெளியானது. அதாவது தாஸ்தயேவ்ஸ்கியின் ‘சாத்தான்கள்’ (THE DEVILS) நாவல் வெளியான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு. புரட்சியை உள்ளடக்கமாகக் கொண்ட சாத்தான்களில் வருகிற புரட்சிகரக் கதாபாத்திரங்கள் முற்றிலும் தாஸ்தயேவ்ஸ்கியின் கற்பனைப் பாத்திரங்களே. மார்க்ஸைப் போலவே தாஸ்தயேவ்ஸ்கியும் முதலாளித்துவத்தை முற்றிலும் காலாவதியானதாகவே நினைத்தார். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை அவரும் மார்க்ஸைப் போலவே கணித்தார். ஆனால் இருவருக்கும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வரும் சமூகம் பற்றிய கருத்துகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. அவருடைய கருத்தில் புறவயமான யதார்த்தத்தின் மாற்றம் மட்டுமல்ல, அகவயமான மாற்றம் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திலும் தோழமையுணர்வை ஏற்படுத்துமென்று நம்பினார். அதையே சாத்தான்களில் பிரதிபலித்தார்.

சுதந்திரம், அன்பு ஆகியவற்றை மனித வாழ்க்கையின் முதுகெலும்பாக நினைத்தார் தாஸ்தயேவ்ஸ்கி. மனிதனிடம் இருப்பதில் மிகவும் விலைமதிக்கமுடியாத பொருள் அவனுடைய சுதந்திரம் தான், ஆனால் அதுவே அவனுக்குத் தாங்க முடியாத ஒரு சுமையாக மாறுகிறது. அன்பின் மேல் கட்டி எழுப்பப்படும் வாழ்க்கையே முழுமையான மனிதத்தன்மையுடையதாக இருக்கும். தெய்வம் இல்லாத உலகம் சுவையில்லாதது. மனிதன் சுதந்திரமானவனாகவும், அன்புமயமானவனாகவும், கிறித்துவின் மீது நம்பிக்கை கொண்டவனாகவும் இருக்கவேண்டும். ஏறத்தாழ இவையே தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கை குறித்த பார்வையாக இருந்ததெனலாம்.

1881-ல் புஷ்கின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அவரை ருஷ்யாவின் தீர்க்கதரிசியாக்கியது. அந்த உரையில் அவர் குறிப்பிட்ட பல விஷயங்கள் ருஷ்யாவில் பின்னர் நடந்தேறியது.

“மனித சமூகத்தின் உன்னதமான லட்சியங்களைத் தற்காலிகமான சலுகைகளுக்காகப் பலிகொடுக்கும் காலம் நெருங்குகிறது. மனிதநேயமும், உண்மைக்கும் நீதிக்குமான தேடல் இல்லாமல் போகும். அதற்குப் பதிலாகத் தனிப்பட்ட முறையில் பணக்காரராவதற்கான மிருகத்தனமான பேராசை மனிதனைக் கீழ்மைப்படுத்தவும் செய்யும்.”

இன்றும் பொருந்துகிற தீர்க்கதரிசனமல்லவா!

தாஸ்தயேவ்ஸ்கியின் காலத்திலேயே அவரை ‘உளவியல் நிபுணர்’ என்று விமரிசகர்கள் சொல்லியிருந்தார்கள். அவர்களைப்பார்த்து,

“அவர்கள் என்னை ‘உளவியல் நிபுணர்’ என்று அழைக்கின்றனர். அது உண்மையல்ல. நான் ஒரு யதார்த்தவாதி. அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் மனித மனதின் எல்லா ஆழங்களையும் நான் சித்தரித்திருக்கிறேன்..”

என்று சொன்னார். அதற்குக் காரணமும் இருந்தது. மற்ற ருஷ்யப் படைப்பாளிகளைப் போலல்லாமல் தாஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய படைப்புகளில் கதாபாத்திரங்களின் உருவத்தோற்ற வர்ணனையை விட அவர்களது மன உணர்வுகளை விவரிக்கவே முயல்கிறார். மன உணர்வு அனுபவங்களுக்கிடையில் தாஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் வாழ்கிறார்கள். உணர்ச்சிப்பெருக்கின் நெருக்கடிகளுக்கு இடையில் தான் துயரம் நிறைந்த ஒரு சூழலின் பின்புலத்தில் வாழ்வின் மெய்ம்மையை அவர் உணர்த்துகிறார். அதனால் தானோ என்னவோ அவருடைய படைப்புகளில் புறவயமான யதார்த்தச் சித்தரிப்புகளோ இயற்கைக்காட்சிகளின் சித்தரிப்புகளோ அவ்வளவாக முக்கியத்துவம் பெறுவதில்லை.

ஒருவகையில் மூன்றாம் தர துப்பறியும் நாவலுக்கான விஷயங்களையே கருப்பொருளாக்குகிறார் தாஸ்தயேவ்ஸ்கி. ஆனால் அவற்றை தன் மேதமையினால் உன்னதமான துன்பியல் நாவலாக்கி விடுகிறார். கதாபாத்திரங்களின் அக உலகத்தை ஆராய்வதையே தன் படைப்பின் நோக்கமாகக் கொண்டிருந்ததால் அவருடைய படைப்புகளில் ஒன்றுக்கொன்று நேரெதிரான பலகுரல்கள் ஒலிக்கின்றன. அதுவே அவரைத் தனித்துவமிக்க எழுத்தாளராகவும் மாற்றியது.

தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் உலவிய சிறந்த கதாபாத்திரங்களில் பலர் சமூகத்தின் விளிம்புநிலையிலுள்ள சிறிய பணியாளர்கள், வேலையின்றிச் சுற்றித்திரிபவர்கள், மனப்பிறழ்வு கொண்டவர்கள், கிரிமினல் குற்றவாளிகள், மனதளவில் ஊனமுற்றவர்கள், இவர்களையே தன்னுடைய படைப்புகளில் முக்கியக் கதாபாத்திரங்களாக உலவவிட்டார். அவரது குடும்பத்திலேயே பலர் மனநோயாளிகளாக இருந்தார்களென்றும், பல குற்றச்செயல்களும் நடந்திருக்கின்றன என்றும் அவருடைய மகள் குறிப்பிடுகிறார். இதனாலேயே அன்றாட வாழ்வில் எல்லோரும் கவனிக்காமல் சாதாரணமாகக் கடந்து போகும் கதாபாத்திரங்கள் கூட ஒரு பயங்கரமான அசாதாரணத்துவத்தைப் பெறுகிறார்கள்.

அவர் காலத்தின் உளவியல் அறிஞரான கோரஸின் புத்தகத்தை வாசித்திருந்தார். ‘கனவுகளின் குறியீடு’ என்ற பிரஷ்ய நாட்டுப் பேராசிரியர் ஸ்கூபர்ட்டின் நூலையும் வாசித்திருந்தார். ஆனால் அப்போதெல்லாம் ‘உளவியல்’ என்ற அறிவியல் துறை உருவாகவில்லை. தாஸ்தயேவ்ஸ்கி இறந்து ஐம்பதாண்டுகள் கழிந்த பின்னரே சிக்மண்ட் ஃபிராய்டு வருகிறார். ஃபிராய்டு தன்னுடைய உளவியல் ஆய்வுகளுக்கு அடிப்படையாக சோபாக்ளிசின் ஈடிபஸையும், ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டையும், தாஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களையுமே குறிப்பிடுகிறார்.

பீட்டர்ஸ்பர்க்கில் தன்னந்தனியனாக வறுமையுடன் போராடிக்கொண்டு வாழ்ந்த நாட்களில் அவர் நவீனத்துவத்தின் அத்தனை போலியான பகட்டுகளிலும் இருண்ட சந்து பொந்துகளையும் அறிந்திருந்தார். அதனால்தான் தாஸ்தயேவ்ஸ்கி ருஷ்யாவின் மற்றெந்த இலக்கியவாதிகளை விடவும் நகர்ப்புற நவீன மனிதனின் பிரச்சனைகளைச் சிக்கலான வாழ்வின் பின்னங்களை அதிகமாக எழுதிய தனித்துவமிக்கவராகவும், உலகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். மனித மனதின் ஆன்மீக நெருக்கடிகளின் இருட்குகையினுள் ஒளிபாய்ச்சிய கலைஞன் தாஸ்தயேவ்ஸ்கி. மனதின் அடுக்குகளை விரிக்க விரிக்க அது ஒரு மாயாஜாலம் போல இருளும் ஒளியுமாகக் காட்சி தருகிறதே, அந்த ஒளியையும், இருளையும் அப்படியே காட்சிப்படுத்தியவர். இன்னும் சொல்லப்போனால் இருளின் மீது அதிகமான குவிமையத்தைச் செலுத்தியவர் எனலாம்.

யாருக்காக ஒருவன் சாகவும் தயாராக இருக்கிறானோ அவனையே அவன் கொல்வதும், நேசிப்பவர்களை வெறுக்கவும், வெறுப்பவர்களை நேசிக்கவும், மர்மமும் விந்தையுமிக்க வாழ்வின் கணநேரத் தூண்டுதலினால் தான் சற்றும் நினைத்திராத காரியங்களைச் செய்ய நேர்வதும் அல்லது திட்டமிட்ட காரியங்களைக் கைவிட நேர்வதுமான மனதின் விசித்திரங்களை விவரித்தார். ஒரே நேரத்தில் பேரன்பும், குரோதமும், பெருங்கருணையும், குரூரமும், பாவங்களைச் செய்யத் தூண்டுதல்களும், பாவமன்னிப்பைக் கோரும் உருகுதல்களுமென்று புதிராக விளங்கும், எல்லாரும் காணப் பயந்த அகமனதின் கருநிழலை ஆராய்வதிலேயே தன் வாழ்நாளையே செலவழித்தார். ஒளிவிழுந்து பிரகாசமாகத் தரிசனம் தந்து கொண்டிருந்த கடவுளின் அவருடைய நகலாக இருளுக்குள் தக்க சந்தரப்பங்களுக்காய் காத்துக் கொண்டிருந்த சாத்தான் அவர் கண்களுக்கு மட்டுமே தெரிந்தார். ஒளியில் தெரிந்த கடவுளைத் தொழுதேற்றி வணங்கி எல்லாரும் தங்களுடைய பாவமன்னிப்புகளையும், லட்சியங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முனைந்தபோது தாஸ்தயேவ்ஸ்கி பாவங்களைப் பற்றி பாவங்களின் மூலத்தைப் பற்றி, பாவங்களைச் செய்யும் மனதைப் பற்றி, அந்த மனதின் செயல்பாடுகளைப் பற்றி, பாவம் செய்வதற்கான சமூகச்சூழல் பற்றி, பாவங்களைச் செய்தவர்களைப் பற்றி ஆய்வு செய்வதில் தன்னை அர்ப்பணித்தார். பொய்யான ஒளியை விட மெய்யான இருள் அவரை வசீகரித்தது. மனிதன் ஒரே நேரத்தில் கடவுளாகவும் சாத்தானாகவும் இருக்கிற விந்தையைப் புரிந்து கொள்ளவே அவர் இறுதிவரை முயன்றார். அதற்காகவே அவர் தன்னைச் சாத்தான்களின் வசம் ஒப்படைத்திருந்தார். தன் படைப்பூக்கத்தின் இறுதித்துளி வரை பிழிந்து தன் படைப்புகளின் வழியே வாசகர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ருஷ்ய நாட்டின் இருண்ட தெருக்களில் வசித்த விளிம்புநிலை மனிதர்களையும் குற்றங்களின் வலை அடர்ந்த இருட்பொந்துகளையும் அவர் எழுதியபோது ருஷ்ய இலக்கியம் அவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடியது. ‘இருளுக்குள் ஒளிபாய்ச்சிய அற்புதக் கலைஞன்’ என்றும் ‘இருண்ட வாழ்வின் ஷேக்ஸ்பியர்’ என்றும் தாஸ்தயேவ்ஸ்கி போற்றப்பட்டார்.

கொடுஞ்சிறைத்தண்டனை முடிந்து பீட்டர்ஸ்பர்க்குக்குத் திரும்பி வந்த தாஸ்தயேவ்ஸ்கியை இளைய தலைமுறை, ஒரு முன்னாள் புரட்சிகர அரசியல் கைதி என்ற அளவில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். ஆனால் சிறைத்தண்டனைக்காலத்தில் தீவிரவாதச் செயல்பாடுகளோடு உடன்படமுடியாதவராக அவர் மனம் மாறியிருந்தார். அதுமட்டுமில்லை, ருஷ்யாவின் நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் தன்னிடம் இருக்கின்றன என்ற உறுதியான எண்ணம் அவரிடமிருந்தது. தூய ருஷ்ய தேசியத்தை முன்வைத்தார். அவருடைய பிற்கால நாவல்களில் ருஷ்ய மக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்களென்றும், அவர்களிடம் ஒரு ஆன்மீக சக்தி ஒளிந்திருப்பதாகவும், அவர்களால் மட்டுமே ருஷ்யாவைக் காக்கவும் மேற்கத்திய நாடுகளுக்கும் ருஷ்யாவுக்குமிடையில் ஒற்றுமையை உருவாக்கவும் முடியும் என்று தாஸ்தயேவ்ஸ்கி நம்பினார். ருஷ்ய சமூகத்தில் கண்ட அத்தனைப் பிற்போக்குத்தனங்களையும் கடுமையாக விமரிசித்தார். பெண்விடுதலை, விவசாயிகளின் கல்வி, சமூக நலன் ஆகியவற்றைப் பற்றி இடைவிடாமல் குரலெழுப்பினார் தாஸ்தயேவ்ஸ்கி.

உலகளாவிய இலக்கியப்போக்குகளிலும் முன்னோடியாக இருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி. ஒரு கதாபாத்திரம் தன்னுடைய நனவு மனதுக்கும் நனவிலி மனதுக்குமிடையிலிருக்கும் மெல்லிய திரைக்கு முன்னால் உள்ளும் புறமுமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் நனவோடை உத்தி என்ற போக்கில் தாஸ்தயேவ்ஸ்கி 1862-லிலேயே தன்னுடைய ‘ஒரு அருவெறுப்பான விவகாரம்’ என்ற கதையில் மிக அழகாகக் கையாண்டிருந்தார். ஆனால் அதற்கு வெகுகாலத்துக்குப் பின்னரே மேற்கத்திய நாடுகளில் ஜேம்ஸ் ஜாய்ஸின் மூலம் அந்த உத்தி பிரபலமாகப் பேசப்பட்டது. குறைந்த பக்கங்களே கொண்ட ‘நிழலுலகக் குறிப்புகள்’ நாவல் ஒரு மகத்தான கலைப்படைப்பின் அத்தனை அம்சங்களைக் கொண்ட நாவலாகத் திகழ்கிறது. இரட்டை மனோபாவம் கொண்ட கதாநாயகன் தன்னையும் மற்றவர்களையும் நடுநிலைமையுடன் ஆராயவும் விவரிக்கவும் செய்கிறான். ஆசை, அறிவில் வேர்கொண்ட உண்மையை எதிர்க்கிறது. உண்மையோ யதார்த்தமான ஆசையை எதிர்க்கிறது. இவையிரண்டுக்குமிடையில் தத்தளிக்கும் தான் வெறுமனே ஒரு பூச்சியென யதார்த்தம் உணரச்செய்கிறது. ஒரு இடத்தில் நிழலுலக மனிதன் சொல்கிறான்,

“கனவான்களே, நான் வருந்துவதாக, பரிதாபப்படுவதாக, உங்களிடம் மன்னிப்புக் கேட்பதாக நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அப்படித்தான் நினைப்பீர்கள் என்றும் எனக்குத்தெரியும். ஆனால் ஒன்று சொல்கிறேன். உங்களது அபிப்பிராயம் எனக்குத் தேவையில்லை. நீங்கள் கவனித்தாலும் இல்லையென்றாலும் நான் சொல்கிறேன். ஒரு பூச்சியாக மாறக்கூட என்னால் இயலவில்லை. மனம் திறந்து சொல்கிறேன். ஒரு பூச்சியாக மாற நான் பலமுறை ஆசைப்பட்டதுண்டு. ஆனால் ஒருபோதும் அவ்வாறு மாற என்னால் இயலவில்லை.”

நவீனத்துவ இருத்தலியலின் இந்தக் குரலையே நாம் 1915–ல் வெளியான காஃப்காவின் உருமாற்றத்தில் பார்க்கிறோம்.

ஒரே காலத்தில் ஒரு நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மேதைகள் தோன்றுவதென்பது வரலாற்றில் முன்னும் பின்னும் நடக்காத அபூர்வமான விஷயம். அப்படித்தான் தாஸ்தயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும், துர்கனேவும், செகாவும் கார்க்கியும், லெர்மன் தேவும், குப்ரின்னும் தோன்றியிருந்தார்கள். அதில் குறிப்பாக டால்ஸ்டாயும், தாஸ்தயேவ்ஸ்கியுமே அதிகமாகப் பேசப்பட்ட எழுத்தாளர்களாக இருந்தார்கள். இருவரின் படைப்புகளும் இரண்டு துருவங்களாக இருந்தாலும், இரண்டு பேரும் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். டால்ஸ்டாய், ஹோமரைப் போல பெரிய விசாலமான கேன்வாஸில் தன் நாவல்களை எழுதினாரென்றால், தாஸ்தயேவ்ஸ்கியோ ஷேக்ஸ்பியரைப்போல சிறிய திரையில் அழுத்தமான கருப்புவெள்ளைச் சித்திரங்களை வரைந்தார். தாஸ்தயேவ்ஸ்கி அன்னா கரினீனாவைக் கொண்டாடினார். டால்ஸ்டாய் மரணவீட்டின் குறிப்புகளைக் கொண்டாடினார்.

தாஸ்தயேவ்ஸ்கி மறைந்தபோது டால்ஸ்டாய் அவரைப் பற்றி,

“ஒருபோதும் அந்த மனிதனைப் பார்த்ததில்லை. அவருடன் நேரடியாக எந்தவொரு விதத்திலும் நான் தொடர்பு கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் இறந்தபோது அவர் எனக்கு மிகவும் விலைமதிக்க முடியாதவராகவும், பிரியத்துக்குரியவராகவும் இருந்தாரென திடீரென உணர்ந்து கொண்டேன்…”

என்று எழுதியிருந்தார். அதுமட்டுமல்ல, அஸ்தபோவ் ரயில்நிலையத்தில் டால்ஸ்டாய் இறக்கும் தறுவாயில் அவரிடம் இரண்டு புத்தகங்கள் இருந்தன. ஒன்று ‘கரமசோவ் சகோதரர்கள்’, மற்றொன்று பிரான்சைச் சேர்ந்த மொண்டெயினின் ‘கிறித்துவ உபன்யாசங்கள்’.

மேற்கத்திய எழுத்தாளர்களான ஹெர்மன் ஹெஸ்ஸேயும், நட் ஹாம்சனும், மனிதனைப் பற்றி இவ்வளவு விரிவாக இதுவரை யாரும் ஆய்வு செய்யவில்லை என்று போற்றினார்கள். அறிவியலாளர் ஐன்ஸ்டீன் ஆன்மீக இருத்தலின் மர்மங்களை விவரித்தவர் என்று பாராட்டினார். தத்துவவியலாளர் நீட்ஷே, நான் கொஞ்சமாவது உளவியல் குறித்து கற்றுக் கொண்டேனென்றால் அது தாஸ்தயேவ்ஸ்கியிடமிருந்து தான் என்றார். தாஸ்தயேவ்ஸ்கி என்னுடைய ரத்த உறவென்று காஃப்கா சொல்லியிருந்தார். நாவலில் பன்முகக்குரலைப் படைப்பது என்ற புதிய வகைமையை உருவாக்கியவர் தாஸ்தயேவ்ஸ்கி என்று எழுத்தாளர் மிகையீல் பக்தீன் மதிப்பிட்டார்.

ஆனால் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைக் குறித்து துர்கனேவ் வேறுவிதமான பார்வையைக் கொண்டிருந்தார். இறந்தவர்களையும், மனப்பிறழ்வு அடைந்தவர்களையும், ஏழைகளையும், குற்றவாளிகளையும் காட்டி பிழைப்பு நடத்துகிறவரென்று தூற்றினார். அதுமட்டுமல்ல 1880–ஆண்டில் தான் துர்கனேவை பல பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சந்தித்தார். புஷ்கின் சிலை திறப்பு விழாவிலும் கூட துர்கனேவ் தாஸ்தயேவ்ஸ்கியை முக்கியமற்றவராக ஒதுக்கித்தள்ள முயன்றார். ஆனாலும் அன்று தாஸ்தயேவ்ஸ்கி ஆற்றிய உரையைக் கேட்ட ருஷ்ய மக்கள் மட்டுமல்ல, துர்கனேவும் ஆரத்தழுவி ருஷ்யாவின் தீர்க்கதரிசியென்று கொண்டாடினார்கள். தாஸ்தயேவ்ஸ்கியின் மரணவீட்டின் குறிப்புகளைத் தவிர வேறெந்த படைப்பையும் துர்கனேவ் பாராட்டியதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். இவான் புனின், விளாடிமீர் நபக்கோவ் போன்றவர்கள் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை ‘அதீத உளவியல் சார்ந்ததாகவும், தத்துவ விசாரணைகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன, கலாபூர்வமானதாக இல்லை’ என்ற குற்றச்சாட்டையும் வைத்தனர். துயரங்களை மட்டுமே சித்தரிப்பதாகவும், ஒழுங்கமைக்கப்படாத கதைக்களத்தைக் கொண்டிருப்பதாகவும் சிலர் விமரிசனம் செய்தனர்.

ருஷ்யப்புரட்சிக்கு முன்பும் பின்பும் தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் குறித்த விவாதங்கள் முன்னும் பின்னும் முரணாகவே இருந்தன. அரசியல் களத்திலும் மாமேதை லெனினுக்கு, தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயமெதுவுமில்லை. டால்ஸ்டாயைப் பற்றிப் பல கட்டுரைகளிலும் புகழ்ந்து போற்றிய லெனின் தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி மௌனமாகவே இருந்தார். லெனின் பிளக்கானவுடன் சேர்ந்து தாஸ்தயேவ்ஸ்கிக்கு எதிராக ஒரு கள்ளமௌனத்தைக் கடைப்பிடித்தாரென்று கூடச் சொல்லலாம். மேக்சிம் கார்க்கி அபூர்வமான சில தருணங்களில் மட்டுமே தாஸ்தயேவ்ஸ்கியை ஒரு உன்னதமான படைப்பாளியென்று குறிப்பிட்டிருக்கிறார். சோசலிச யதார்த்தவாத ஆதரவாளரான கார்க்கிக்கு தாஸ்தயேவ்ஸ்கியின் கற்பனாவாத கிறித்துவ சோசலிசம் உவப்பானதாக இல்லையென்பதோடு அது பிற்போக்குத்தனமானதென்று பல சந்தர்ப்பங்களில் கடும் விமரிசனமும் செய்திருக்கிறார். ஸ்டாலினிடம் எடுக்கப்பட்ட நேர்காணலொன்றில், தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த ஸ்டாலின், மனித ஆன்மாவின் சிக்கல்களை தாஸ்தயேவ்ஸ்கியைப் போல வேறு யாரும் தெளிவாக்கவில்லையென்றும், ஆனால் மகத்தான படைப்பாளியாக இருந்த அவர் மகத்தான பிற்போக்குவாதியாகவும் இருந்தாரென்றும் அவர் இளைஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவாரென்பதாலேயே அவருடைய நூல்களை நாங்கள் வெளியிடாமல் இருந்தோம், ஆனாலும் அவர் மகத்தான படைப்பாளியென்பதில் ஐயமில்லை என்றும் கூறினார்.

1945–ல் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்புவரை பிற்போக்கான படைப்பாளியாக இருந்த தாஸ்தயேவ்ஸ்கி இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதும் ருஷ்யாவின் மகத்தான படைப்பாளியாக மாறிவிட்டார். போருக்குத் தேவையான ருஷ்ய தேசியத்தையும் ருஷ்ய மக்களின் மேன்மையையும் தன்னுடைய படைப்புகளில் உள்ளார்ந்த தொனியாகவும், முழக்கமாகவும் படைத்திருந்த தாஸ்தயேவ்ஸ்கி மிகவும் தேவைப்பட்டார். அதுமட்டுமல்ல, ஜெர்மானியர்களைப் பற்றி அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்த பல குற்றச்சாட்டுகள் ஜெர்மானியர்களுக்கு எதிராகப் பயன்படுத்த உதவியாக இருந்தது. ருஷ்ய மக்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று தாஸ்தயேவ்ஸ்கியை முன்வைத்து மக்களை ஆவேசங்கொள்ளச் செய்தனர்.

1946-முதல் கலாச்சார அதிகாரியான ஷடோவினின் செல்வாக்கு பெருகியது. மீண்டும் தாஸ்தயேவ்ஸ்கி மறைக்கப்படுகிறார். 1956–க்குப் பிறகே சோவியத் யூனியனில் அவரைப் பற்றி மீண்டும் பேசவும் படைப்புகளைப் பிரசுரிக்கவும் தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகளில் தாஸ்தயேவ்ஸ்கி, ‘உலக இலக்கியவெளியின் மகத்தான படைப்பாளி’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டார். 1881–ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதி அவர் காலமானபோது ருஷ்யாவே அந்த மகத்தான படைப்பாளிக்காக, ருஷ்ய ஆன்மாவின் தீர்க்கதரிசிக்காக, மனப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தியது. ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் அவருடைய மகத்தான படைப்புகளின் வீச்சை உணர்த்தியது.

அன்புக்கும் குரூரத்துக்கும், நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும், குற்றத்துக்கும் தண்டனைக்குமிடையில் சிக்கித் துயருறும் மனசாட்சியுள்ள நவீன மனிதனுக்குத் தாஸ்தயேவ்ஸ்கி எப்போதும் உற்ற துணையாக இருப்பாரென்று தோன்றுகிறது. அன்பையும் சுதந்திரத்தையும் மானுடம் முழுவதும் விதைக்க வேண்டுமென்று விரும்பிய அந்த மகத்தான படைப்பாளியின் படைப்புகள் என்றென்றும் மனிதகுலத்துக்கு ஒளிவிளக்காக இருக்கும்.

தாஸ்தயேவ்ஸ்கியே! மகத்தான மனிதனே! மகத்தான படைப்பாளியே! உன்னை வணங்குகிறேன்.

 

துணை நூல்கள்:

  1. கல்குதிரை தாஸ்தயேவ்ஸ்கி சிறப்பிதழ் – 1993
  2. தாஸ்தயேவ்ஸ்கி – வாழ்வும் கலையும் – ஜி.என்.பணிக்கர் தமிழில் – உத்திரகுமாரன்
  3. முன்னொரு காலத்தில் – உதயசங்கர்
  4. ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு – தாஸ்தயேவ்ஸ்கி – தமிழில்- சா.தேவதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.