தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி

னவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி மரணித்த சமயத்தில் அத்தை அளித்த மனப்பூர்வமான உதவிகளும் எல்லாம் அப்பாவின் நினைவுக்கு வந்தன. அத்தையின் பிள்ளைகளைப் பற்றிய விவரங்களை அறிவதற்கும் அப்பாவுக்கு ஆவல் அதிகரித்தது. அதோடு மாஸ்கோவுக்கும் டாரோவோவுக்குமாக போய்வந்து கொண்டிருந்த அவர்களின் குழந்தைப்பருவ நினைவுகளைப் பங்கிட்டுக்கொள்வதற்கும் ஆசைப்பட்டார். அதே நேரத்தில் தன் சகோதரி வேறொரு வகையிலான பேச்சுவார்த்தைக்குத்தான் தயாராகி வந்திருக்கிறார் என்னும் சந்தேகம் அப்போது அப்பாவுக்குத் தெரியாமல் இருந்தது.

தஸ்தயேவ்ஸ்கிகள் வெகுகாலமாக அவர்களின் அத்தை குமானின் வாரிசுரிமையைச் சொல்லி போரடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. அவர் காலமானபோது சொத்துக்கள் அனைத்தையும் தன் கணவரின் வாரிசுகளுக்காக ஒதுக்கிவிட்டார். ஆனால், ரியாஸானிலுள்ள ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் டெஸியாட்டின் (ஒரு டெஸியாட்டின் என்றால் ஏறக்குறைய 2.7 ஏக்கர்) பரப்பிலான ஒரு காட்டை தஸ்தயேவ்ஸ்கி என் தந்தையுட்பட தன் சகோதரரின் பிள்ளைகளுக்காக ஒதுக்கியிருந்தார். அவர்களோடு மற்றொரு கசினின் பிள்ளைகளுக்கும் அவற்றில் உரிமையைச் சொல்லி இருந்தார். அதனால், அதற்குப் பின்னால் ஏராளமான பேர்கள் வாரிசுகளாக இருந்தார்கள். அவர்களுக்குள் ஓர் உடன்பாடு ஏற்படவில்லை. எண்ணற்ற தர்க்கங்களுடன் காலம் நகர்ந்தது. இந்த விவாதங்களெல்லாம் மாஸ்கோவில்தான் நடந்துகொண்டிருந்தன. இந்த அத்தையின் உறவினர்களுடன் அப்பாவுக்கு மெல்லிய அறிமுகம் தான் இருந்தது. அதனால்தான் அப்பா அந்த விவாதங்களில் அதிகம் பங்கு பெறவில்லை. அவர்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய பாகம் கிடைப்பதற்காக அப்பா பொறுமையுடன் காத்திருந்தார். அதுவொரு பெரும் சொத்துதான். ஆனால், துர்ப்பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். அது அவ்வளவு எளிதில் முடிவுக்கு வருவதாகவும் இல்லை. புகைவண்டி நிலையங்களெல்லாம் அந்த இடத்திலிருந்து வெகு தூரத்திலிருந்தன. அதனாலேயே நிலத்துக்கு விலையும் குறைவாகவே கிடைக்கும் போலிருந்தது. எப்படியிருந்தாலும் அப்பாவும் அதில் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார். காரணம், குடும்பத்திற்காக விட்டுச்செல்ல அதைத் தவிர அவரின் பக்கத்தில் வேறொன்றும் இல்லாமலிருந்தது. இதற்கும் உரிமை கொண்டாடிதான் அப்போது அவருடைய சகோதரிகள் வந்திருக்கிறார்கள்.

அக்காலத்தில் ரஷ்ய சட்டத்தையொட்டி நிலத்தில் பெண்களுக்கு பதினான்கில் ஒருபகுதி பாகம்தான் பாரம்பரிய உரிமையாக இருந்தது. என் அத்தைகளும் அவர்களின் அத்தையிடமிருந்து வாரிசுரிமையாக விசாலமான பூமிப் பிரதேசங்கள் கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பிலிருந்தார்கள். ஆனால், கிடைக்கப் போவதோ மிகவும் துச்சமானது என்பதை அறிந்தவுடன் அவர்கள் சங்கடப்பட்டார்கள். அப்போது தாய் தந்தையின் சொத்துகளின் மேலுள்ள உரிமையை துச்சமான ஒரு தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு என் தந்தை விட்டுக் கொடுத்தது அவர்களின் நினைவிற்கு வந்தது. அப்போதுபோல் இந்த தடவையும் அவரிடம் கொள்ளையடிக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். தனக்கான பங்கை தன் மூன்று சகோதரிகளுக்கும் விட்டுக்கொடுத்து விடுவார் என்று அவர்கள் எண்ணினார்கள். அவ்வாறு அவர்கள் விரும்பவும் செய்தார்கள். அவர்களின் அத்தை உயிரோடிருந்த காலத்தில் குடும்பத்திலுள்ள மற்றவர்களைவிடக் கூடுதலாக என் தந்தைக்கு அவர் அளித்திருப்பார் என்பதுதான் அவர்கள் அதற்குக் கண்டுபிடித்த நியாயம்.

அப்பாவின் அத்தை அவருக்கு ஒரு தாயாகவே இருந்தார் என்பதும் அந்த அத்தை அப்பாவிடம் மிகவும் பிரியமாக இருந்தார் என்பதும் உண்மைதான். ஆனால், குமானின் என்னும் இந்த மூத்த அத்தையின் சொத்தெல்லாம் அவருடைய கணவரிடமிருந்து கிடைத்ததென்பதையும், அதை அவருக்குப் பிரியப்பட்டவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பதற்கு அதிகாரம் உண்டு என்பதையும் அவர்கள் கணக்கிடவில்லை. இரண்டாவது, அத்தையிடமிருந்து அதுவரையில் கிடைத்ததில் பெருமளவையும் தன் மொத்தக் குடும்பத்திற்காகவே அப்பா செலவிட்டார் என்பதுதான் உண்மை. தன்னுடைய ஒரு நண்பருக்கு ஒரு முறை அப்பா எழுதிய கடிதத்தில், தன் சகோதரன் மிகைலின் ‘எவோஹா’’ என்னும் பத்திரிகையைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் அத்தையிடமிருந்து கிடைத்த 12000 ரூபிளை தாரை வார்த்ததைப் பற்றிச் சொல்லியுள்ளார். அதேபோல், அலெக்ஸாண்ட்ரா என்னும் சகோதரியின் கணவர் நோய்வாய்ப்பட்டபோது செய்த உதவிகளைப் பற்றியும் எழுதியுள்ளார். என் தந்தையின் சகோதரரான மிகைலின் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகச் செலவிட்டதைப் பற்றி விவாதிக்காமல் இருப்பதுதான் நல்லது என்று என் தந்தை நினைத்தார். தங்களின் தந்தை இறந்தது முதல் அவர்களெல்லாம் அப்பாவின் பாதுகாப்பில்தான் இருந்தார்கள். பல ஆண்டுகள் வரை அது தொடர்ந்துகொண்டுமிருந்தது. இருந்தாலும், தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டியது இல்லாமல் இருந்திருந்தால் அப்பா, தன் அத்தையிடமிருந்து கிடைக்க இருந்த சொத்துக்களின் உரிமைகளையெல்லாம் மிக மகிழ்ச்சியுடன் தன் சகோதரிகளுக்கு விட்டுக் கொடுத்திருப்பார் என்பதும் உறுதி.

தஸ்தயேவ்ஸ்கி தம்முடைய நார்மன் ஆத்மாவை மறந்திருந்தார். சிறிதளவாவது நார்மன் இரத்தம் கலக்காத எந்தவொரு நாடும் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ இருக்க முடியாது. நார்மன்களிடம் காணப்படும் உள்ளார்ந்த நம்பிக்கையையும் அவர்களிடமுள்ள அதிசயத்தக்கக் கூர்மையான நுண்ணறிவுத் தன்மையையும் அவருடைய நூல்களில் கொண்டுவந்திருந்தார். இதுதான் ஐரோப்பியர்களை ஈர்த்தது. அதே நேரத்தில் அவரிடமிருந்த மிருதுத் தன்மையுள்ள உன்னதமான மனமும் ஆவேசமும் உள்ள ஸ்லாவு[1] ஆத்மாவை அந்தப் பகுதியினரும் விரும்பினார்கள். மாஸ்கோகாரரான பாட்டனிடமிருந்து ஒரு மங்கோலியன் பாரம்பரியமும் அப்பாவிடம் இருந்தது. அதுவே அவருக்கு மிகவும் பலவீனத்தையும் அளித்தது. அதனாலோ என்னவோ கிழக்கத்தியர், குறிப்பாக ஜூதர் அவரை விரும்பாமல் இருந்தார்கள்.

வீட்டிலுள்ளவர்களெல்லாம் ஒன்றிணைந்து உணவருந்திய ஓர் இரவு விருந்து ஜனவரி இருபத்தைந்தாம் தேதி நடந்தது. சில கேலி கிண்டல்களும் தஸ்தயேவ்ஸ்கி இளமையில் செய்த விளையாட்டுகளைப் பற்றிய நினைவுகளும் எல்லாம் சேர்ந்துதான் அது தொடங்கியது. ஆனால், அத்தையோ காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து அதைக் கடந்துசெல்லத் துடித்துக்கொண்டிருந்தார். அதற்குமேலும் அவர் பொறுமையில்லாமல் குமானின் அத்தையிடமிருந்து கிடைக்க இருக்கின்ற எஸ்டேட்டைப் பற்றியும் அது தஸ்தயேவ்ஸ்கி குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக நஞ்சாக்கியதைப் பற்றியும் பேசத் தொடங்கினார். அப்பா கொஞ்சம் முரண்டுபிடித்தார். அம்மா அத்தையிடம் அவரின் பிள்ளைகளைப்பற்றிப் பேசி விஷயத்தை மாற்ற முயன்றார். அது பயன்படவில்லை. தஸ்தயேவ்ஸ்கி மீண்டும் ஒருமுறை தம்முடைய பொருளாதாரக் கஷ்டங்களைப் பற்றிச் சொன்னார். ஒரு தந்தை என்னும் நிலையிலுள்ள கடமைகளைப் பற்றிச் சொன்னார். அப்பாவை, அவரின் கடினத்தன்மையை – சகோதரிகளிடம் காட்டும் கடினத்தன்மையை அவர் குற்றம் சுமத்தினார். பின்பு அழத் தொடங்கினார். அப்பாவுக்குப் பொறுமை போய்விட்டது. அதனால், மேலும் அப்பேச்சைத் தொடர்வதற்கு அவர் சம்மதிக்கவில்லை. உணவைப் பாதியிலேயே உதறிவிட்டு அவர் எழுந்துவிட்டார். அம்மா, அப்போது அழுதுகொண்டிருந்த அத்தையை அமைதிப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். உடனே வீட்டுக்குப் போகவேண்டுமென்று அத்தை அடம் பிடித்தார். அப்பா தன் அறையில் தஞ்சமடைந்தார். தான் எழுதும் மேசை முன்னால் அமர்ந்தார். அசாதாரணமான ஒரு சோர்வு தன்னைப் பாதிப்பதாக அப்பாவுக்குத் தோன்றியது. இந்த இரவு விருந்தைப் பற்றியும் அது அளிக்கப்போகும் உல்லாசத்தைப் பற்றியும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார் அப்பா. ஆனால், ஒரு துண்டு பூமியானது அந்த அந்திவேளையைக் குழப்பமாக்கிவிட்டது. திடீரென்று உள்ளங்கை வியர்ப்பதாக அவரால் உணரமுடிந்தது. அவர் தன் உதட்டைத் துடைத்தார். உள்ளங்கையில் இரத்தத்துளிகள் தெரிந்தன. மீசையிலும் இரத்தம் படிந்திருந்தது. அது அவரைப் பயமுறுத்தியது. அதற்கு முன்பு இதுபோல் அவருக்கு இரத்தக் கசிவு ஏற்பட்டதில்லை. அம்மா ஓடிவந்து பார்த்துவிட்டு உடனே டாக்டரை வரவழைக்க ஏற்பாடு செய்தார். அதற்கிடையே எங்களை அப்பாவின் அறைக்கு அழைத்தார் அம்மா. நகைச்சுவை சொல்ல முயன்றார். அப்போது வந்த ஒரு நகைச்சுவை மாத இதழைக் கொண்டுவந்து அப்பாவிடம் கொடுத்தார். அப்பா ஒருவழியாக சுயநிலையை மீண்டும் பெற்றார். அதிலுள்ள படங்களைப் பார்த்துவிட்டுச் சிரித்தார். நாங்களும் சிரித்தோம். வாயிலிருந்து இரத்தம் வருவது நின்றிருந்தது. அவர் கைகளையும் முகத்தையும் கழுவினார். அப்பா சிரிப்பதையும் பலவித சைகைகள் காட்டுவதையும் பார்த்த எங்களுக்கு எதனால் அப்பாவுக்கு உடல் நலமில்லாமலாயிற்று என்றும், நாங்கள் அவரை மகிழ்ச்சியுண்டாக்க வேண்டுமென்று அம்மா சொன்னது ஏனென்றும் புரியவில்லை. சிறிதுநேரம் சென்றதும் டாக்டர் வந்து சேர்ந்தார். இரத்தக் கசிவு நுரையீரலிலிருந்துதான் வருகிறது என்னும் முடிவுக்கு வந்தார். அப்பாவிடம் இரண்டு நாட்கள் நன்கு ஓய்வெடுங்கள் என்று அறிவுரை கூறினார். அந்த இரண்டு நாட்களிலும் எந்தளவுக்கு அமைதியாக இருக்கிறாரோ அந்தளவுக்கு நல்லது என்றும் உபதேசித்தார். அப்பா தம்முடைய டர்க்கிஷ் சோபாவில் அனுசரணையுடன் படுத்தார். அதன்பின் அவர் அதிலிருந்து எழுந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

மறுநாள் காலையில் அப்பா உற்சாகத்துடன்தான் கண்களைத் திறந்தார். டாக்டர் அறிவுறுத்தி இருந்ததால் அவர் மெத்தையிலேயே படுத்திருந்தார். தினந்தோறும் அவரைப் பார்க்க வரும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலர் உண்டு. அதேபோல் அன்றும் அவர்களுடன் நட்பு உரையாடல் நடந்தது. 1881-ல் நடந்த ரைட்டேர்ஸ் ஜர்னலைப் பற்றித்தான் அன்றைய விவாதம். அது பிரசுரிக்கக்கூடியதாக இருந்தது. அப்பாவுக்கு அதில் தனிப்பட்ட ஆர்வமும் உண்டாகி இருந்தது. அப்பா தன் நோயைப் பற்றி அந்தளவுக்குத் துயரப்படவில்லை என்பதை அறிந்ததும் நண்பர்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. அன்று மாலையில் மீண்டும் இரத்தக்கசிவு ஏற்பட்டது. இப்படி நடப்பதற்கு வாய்ப்புண்டு என்று அம்மாவிடம் டாக்டரும் சொல்லியிருந்தார். அதனால், அம்மாவும் அதை அந்த அளவுக்குத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. பயப்படவும் இல்லை. ஆனால், மறுநாளும் அதேபோல் இருந்ததும் அம்மா மிகவும் துயரங்கொள்ளத் தொடங்கினார். அப்பா எழுந்திருக்க முடியாத நிலையாயிற்று. தஸ்தயேவ்ஸ்கிக்கு செய்திப் பத்திரிகைகளிடம் ஆர்வம் இல்லாமலிருந்தது. அவர் சோபாவிலேயே கண்களை மூடியபடி படுத்திருந்தார். எப்போதும் உற்சாகமிகுந்தவராகவும் உயிர்த்துடிப்புள்ளவராகவும் மட்டுமே அவரை நாங்கள் பார்த்திருக்கிறோம். அன்றாடப் பணிகளிலோ, எழுத்துப் பணிகளிலோ எந்தவொரு மாறுபாடும் அவரிடம் வந்ததை அதுவரையில் நாங்கள் கண்டதில்லை. அன்று அவரைப் பார்ப்பதற்காக வந்த நண்பர்களும் அந்த நிலையைக் கண்டு பயந்தார்கள். அதுவரையில் உபதேசம் அளித்துக் கொண்டிருந்த டாக்டர் ப்ரெட்ஸெலினை இனிமேல் நம்பாமல் இருப்பதுதான் நல்லதென்று அவர் அம்மாவிடம் தன் எண்ணத்தைச் சொன்னார். அம்மா வேறொரு டாக்டருக்கு – ஒரு நிபுணருக்கு – ஆளை அனுப்பினார். அவரால் அன்று மாலைதான் வரமுடிந்தது. இந்த சோர்வெல்லாம் அந்த இரண்டு இரத்தப் போக்கால்தான் என்றும் சில நாட்களில் எல்லாம் பழையபடி ஆகிவிடும் என்றும் அவர் சொன்னார். ஆனால், டாக்டர் ப்ரெட்ஸைல் எண்ணியதுபோல் சாதாரண விஷயங்கள் இல்லை என்னும் உண்மையை அவர் அம்மாவிடம் மறைக்கவில்லை. “இன்றிரவே முடிவு தெரியும்”” என்றும் அவர் கூறினார்.

சிறிதும் ஓய்வு கிடைக்காமலிருந்த ஓர் இரவுக்குப் பின் அப்பா காலையில் கண்களைத் திறந்தார். அப்பா இன்னும் சில மணித்துளிகளில் இல்லாமல் போய்விடுவார் என்று அம்மாவுக்குப் புரிந்துவிட்டது. அப்பாவும் அதைப் புரிந்துகொண்டார். தன் வாழ்க்கையில் எப்போதெல்லாம் நெருக்கடி கட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வருகிறதோ அப்போதெல்லாம் அவர் சுவிசேஷ புத்தகத்தைத் திறப்பார். இப்போதும் அவர் அதைத்தான் செய்தார். சிறை வாழ்க்கை முதல் தன்னுடனேயே இருக்கும் பைபிளைக் கொண்டுவரச் சொல்லி அதைத் திறந்து முதலில் காணும் வாக்கியங்களை வாசிக்கும்படி அம்மாவிடம் அவர் வேண்டிக் கொண்டார். கண்ணீரை அடக்கிக் கொண்டு அம்மா வாசிக்கத் தொடங்கினார்.

அதைக் கேட்டு, அப்பா ஒரு நிமிஷம் யோசித்தார். பின்பு, தன் மனைவியிடம், “கேட்டாயா? ‘என்னைத் தடுக்காதே’ என்றுதான் யேசு சொல்கிறார். என் நேரம் நெருங்கிவிட்டது. நான் இனி இறந்துவிடுவேன்”” என்றார்.

அப்பா ஒரு பாதிரியாரை வரவழைக்குமாறு கேட்டுக்கொண்டார். இறுதி ஹோலிமாஸ் உண்டாயிற்று. பாவம் ஏற்று வாங்கப்பட்டது. பாதிரியார் போனதும் எங்களை உள்ளே அழைத்தார். எங்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு அம்மாவிடம், ஊதாரி மகனின் கதையைப் படிக்கச் சொன்னார். அம்மா அக்கதையை வாசிக்கும்போது கண்களை மூடியவாறு கேட்டுக்கொண்டிருந்தார் அப்பா.

“இப்போது கேட்டதை எப்போதும் மறக்காதீர்கள், பிள்ளைகளே. தெய்வத்தை நம்புங்கள். எப்போதும் அவனின் பொறுமையில் அவநம்பிக்கைப் படாதீர்கள். எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்தான். ஆனால், தான் படைத்தவற்றிடமெல்லாம் அவனுக்கான நேசத்தை ஒப்பிட்டால் என்னுடைய நேசம் ஒன்றுமேயில்லை. வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லும்போது ஏதாவது திருப்தியில்லாமையால் குற்றச் செயல்களில் ஈடுபட வேண்டிய நிலை வந்தாலும் தெய்வ நிராசை கூடாது. தெய்வத்தை உதாசீனப்படுத்தக்கூடாது. நீங்கள் அவனுடைய பிள்ளைகள். என் முன்னால் இருப்பதுபோல் அவன் முன்னாலும் பணிவாக இருங்கள். அவனுடைய கருணை கிடைப்பதற்காக வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதலைப் பார்த்து அவன் மகிழ்வான். அந்த ஊதாரி மகனின் பச்சாதாபத்தில் அவனுடைய தந்தை ஆனந்தித்தது போல்…

மிகவும் சோர்வுற்ற குரலில்தான் அப்பா இவ்வளவையும் சொன்னார். அதன்பின் எங்களைக் கட்டியணைத்தார். ஆசீர்வதித்தார். நாங்கள் அழுதுகொண்டே அறையிலிருந்து வெளியேறினோம்.

அதற்குள் நண்பர்களும் உறவினர்களும் வரவேற்பறையில் நிறைந்து விட்டார்கள். தஸ்தயேவ்ஸ்கி ஆபத்தான முறையில் நோயுற்றிருக்கிறார் என்னும் செய்தி நகரமெங்கும் பரவிவிட்டிருந்தது. அப்பா அவர்களெல்லாம் உள்ளே வருவதற்கு அனுமதித்தார். ஒருவருக்குப் பின் ஒருவராக அவர்களெல்லாம் அப்பாவைச் சந்தித்தார்கள். அவர்களிடமெல்லாம் அப்பா ஒன்றிரண்டு வார்த்தைகளை அன்போடு பேசினார். நாளாக நாளாக அவருடைய ஆரோக்கியமும் நலிவடையத் தொடங்கியது. மீண்டும் இரத்தக் கசிவு உண்டாயிற்று. அவருக்கு உணர்வு இழக்கத் தொடங்கியது. அறையின் கதவு திறக்கப்பட்டது. நண்பர்களும் உறவினர்களும் அவரோடு சேர்ந்து நின்றார்கள். அவர்கள் என்னவெல்லாமோ பேசத் தொடங்கினார்கள். சிலர் அழத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவரின் வேதனையை அதிகரிக்கச் செய்யாமலிருக்கவும் முயன்று கொண்டிருந்தார்கள். அம்மா மட்டும் தேம்பிக்கொண்டே இருந்தார்.

அப்பா படுத்திருந்த சோபாவுக்கு அருகிலேயே அம்மா மண்டியிட்டு அமர்ந்திருந்தார். மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் தொண்டையிலிருந்து விசித்திரமான ஒரு குரல் வந்துகொண்டிருந்தது – வாயில் தண்ணீர் ஊற்றி கார்க்கில் பண்ணும்போது எழக்கூடிய களகள சப்தம் போல. அப்பாவின் மார்பு மிக வேகமாக உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்தது. இடையில் மிகவும் மெல்லிய குரலில் ஏதோ பேசினார். ஆனால், என்ன சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை. அதேபோல் சிறிதுநேரம் சென்றது. பின்பு நிதானமாக மூச்சு குறையத் தொடங்கியது. வார்த்தைகளும் மந்திரம் சொல்வதுபோல யாருக்கும் கேட்காத விதத்தில் மிகவும் தாழ்ந்த குரலில் இருந்தன. பின்பு மௌனமாகிவிட்டார்.

அதன்பின் பல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இடையே மரணப் படுக்கைக்கு அருகில் நானும் அமர்ந்திருந்தேன். ஆனால், அப்பாவின் மரணத்தைப் போல ஒளிபொருந்தியது ஒன்றுமில்லை. அது முற்றிலும் ஒரு கிறிஸ்துவனின் மரணமாக இருந்தது. வேதனையோ அச்சமோ இல்லாத மரணம். தஸ்தயேவ்ஸ்கிக்கு சோர்வு மட்டும்தான் உண்டாகியிருந்தது. இறுதி நிமிடம் வரையில் அவருக்கு நினைவு இருந்துகொண்டுதான் இருந்தது. பயமில்லாமல் தன் மரணம் நெருங்குவதை அவர் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். தன் திறமைகளைத் தான் குழிதோண்டிப் புதைக்கவில்லை என்பதை அவர் அறிந்தே இருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் தெய்வத்தின் நம்பிக்கையான சேவகன் என்பதையும் அவர் அறிந்தே இருந்தார். சொர்க்கத்தைச் சேர்ந்த பிதாவின் முன்னால் ஆஜராவதற்கு அவர் தயாராகவே இருந்தார். இந்த வாழ்க்கையில் தான் பொறுத்துக் கொண்டதற்கெல்லாம் பதிலாகக் கர்த்தா மற்றொரு மகத்தான கர்மம் செய்வதற்கான செய்தியைப் பிரதிபலனாக அளிப்பார் என்று அவர் எதிர்பார்த்திருந்தார்.

ஓர் இரவு முழுவதும் அழுது சிவந்த கண்களுடன் நான் அப்பாவின் அறைக்குள் சென்றபோது அவருடைய உடல் மேசைமேல் படுக்க வைக்கப் பட்டிருந்தது. கைகள் மார்பின்மேல் பிணைத்து வைக்கப்பட்டிருந்தன. மற்ற பல குழந்தைகளையும் போல் இறந்தவர்களைக் காண்பது என்னுள்ளும் பயத்தை உண்டாக்கியிருந்தது. அதனால், நான் பிணங்களின் அருகில் போகாமலேயே இருப்பேன். ஆனால் அப்பாவிடம் எனக்குப் பயமில்லை. அப்பா உறங்கிக்கொண்டு இருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றியது. அழகான எதையோ பார்த்ததாலான புன்னகைதான் அதுவென்று நினைத்தேன். ஒரு பெயிண்டர் அப்பாவின் அருகில் நின்று இறுதி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட தஸ்தயேவ்ஸ்கியை பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்.

காலை தினசரிகள் அப்பாவின் மரணத்தை உலகறியச் செய்திருந்தன. நண்பர்களெல்லாம் இறுதிச் சடங்கிற்கு முன்பு பிரார்த்தனைகளுக்குக் கூடுவதற்கான அவசரத்தில் இருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளின் மாணவர்களின் வரிசை வந்துசேர்ந்தது. அவர்களின் பள்ளியைச் சேர்ந்த ஒரு பாதிரியாரும் அவர்களுடன் இருந்தார். அவர் பிரார்த்தனைகள் சொன்னார். பிள்ளைகள் அதைப் பின்தொடர்ந்து சொன்னார்கள். அவர்களின் கன்னங்கள் நனைந்திருந்தன. அன்பிற்குகந்த எழுத்தாளரின் சலனமற்ற முகத்தை நோக்கி அவர்கள் தேம்பிக் கொண்டிருந்தார்கள். அம்மா அந்த நிழல்களின் ஊடே வீங்கிய கண்களுடன் நடந்தார். அதற்கிடையே ஒரு அரசாங்க அதிகாரி வந்தார். அலெக்ஸாண்டர் இரண்டாம் சக்கரவர்த்தியின் பிரதிநிதிதான் அவர். அம்மாவுக்கு அரசாங்க ஓய்வூதியம் அனுமதித்துள்ளார்கள் என்றும் குழந்தைகளின் கல்வியை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கத்தான் அவர் வந்திருந்தார். அதைக் கேட்டதும் தன்னையறியாமல் அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பதற்காக அம்மா அப்பாவுக்கு அருகே சென்றார்.

‘அந்த நிமிடம் வரையில் என் கணவர் என்னை விட்டுப் பிரிந்துபோய்விட்டார் என்று நான் நம்பவில்லை’ என்பதைப் பின்னாளில் அம்மா என்னிடம் சொன்னார்.

தஸ்தயேவ்ஸ்கி மரணம் சமயத்தில்தான் என் தாய்மாமனான ஜியானும் தற்செயலாக பீட்டர்ஸ்பர்க்கிற்கு வந்துசேர்ந்தார். இறுதிச் சடங்கிற்குத் தொடர்புடைய எல்லா காரியங்களுக்கும் அவர் மேற்பார்வை பார்த்தார். தஸ்தயேவ்ஸ்கியை எங்கே அடக்கம் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று சகோதரியிடம் கேட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு நெக்ரஸோவ் என்னும் கவிஞரின் இறுதியடக்கச் சடங்கில் பங்குபெற்றபோது அப்பா சொன்னது அப்போது அம்மாவின் நினைவுக்கு வந்தது. நோவோதெவிச்சி கல்லறையில்தான் அச்சடங்கு நடந்தது. கவியின் குழிமாடத்தில் மண் அள்ளிப்போடுவதற்கு முன்பு அப்பா ஒரு சொற்பொழிவு செய்தார். அது முடித்து வீட்டுக்கு வந்ததும் அவர் மிகவும் துயரத்திலிருந்தார்.

“இனிமேலும் அதிகம் காலம் கடத்தாமல் நானும் நெக்ரஸோவின் அருகே போய்விடுவேன்” என்று அப்பா அம்மாவிடம் சொன்னார். “என்னையும் அதே கல்லறையில்தான் அடக்கம் செய்யணும். ரஷ்ய எழுத்தாளர்களெல்லாம் இறுதியில் உறங்கும் ‘வோல்கா’ கல்லறையில் உறங்க எனக்கு விருப்பமில்லை. அவர்களெல்லாம் என்மேல் வெறுப்பாக இருந்தவர்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் என்னை வருத்தமுறச் செய்துகொண்டே இருந்தார்கள். அவர்கள் என்னோடு ஒருபோதும் நல்லமுறையில் நடந்துகொண்டதே இல்லை. அதனால் எனக்கு நெக்ரஸோவ் அருகில்தான் இறுதி உறக்கம் வேண்டும். அவர் எப்போதும் என்னுடன் நட்புறவாகவே நடந்துகொண்டார். எனக்கும் சில திறமைகள் உண்டென்று முதன்முதலாகச் சொன்னவரும் அவர்தான். நான் சைபீரியாவில் இருந்தபோதும் என்னை மறக்காமல் இருந்தவர் அவர் மட்டும்தான்”.

அப்பா மிகவும் துயரத்தில் உள்ளார் என்பதைப் புரிந்துகொண்ட அம்மா அவரின் கவனத்தை வேறு திசையில் திருப்ப முயன்றார். அதற்காகக் கேலியும் கிண்டலும் செய்து பொழுதுபோக்கத் தொடங்கினார். அம்மா அதில் சாதாரணமாகவே வெற்றியும் பெறுவார்.

“இதென்ன, இப்படியொரு எண்ணம்!” என்று அப்பாவைக் கேலி செய்தார் அம்மா. “நோவோதெவிச்சி ஏகாந்தமான இடம்; அது விரும்பக்கூடிய இடமுமில்லை. அதைவிட நல்லது, நான் உங்களை அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கியின் சாமியார்கள் ஆசிரமத்தில் அடக்கம் செஞ்சுடறேன்…”

“சாதாரணமாகவே, அங்கே ஜெனரல் அதிகார மட்டத்தில் உள்ளவர்களை மட்டும்தான் அடக்கம் செய்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன்” என்று அப்பாவும் அதே நகைச்சுவையில் பதில் சொன்னார்.

“ஏன், நீங்களும் இலக்கியத்தில் ஒரு ஜெனரல்தானே? உங்களுக்கும் அவர்களுக்கு அருகில் இறுதி உறக்கத்திற்கான உரிமை உண்டு. அதனால் எப்படிப்பட்டதொரு கம்பீரமான இறுதிச்சடங்கு உங்களுக்குக் கிடைக்கும் தெரியுமா? அந்த சடங்குக்குத் தலைமை வகிக்க ஆர்ச் பிஷப்பே வருவார். மெட்ரோபாலிட்டனிலுள்ள இசைக்குழுவும் இருப்பார்கள். சவ ஊர்வலத்துக்குப் பின்னால் பெரும் மக்கள் கூட்டமும் தொடரும். சாமியார்கள் ஆசிரமத்துக்கு அருகில் சென்றதும் அங்குள்ள சீடர்கள் எல்லோரும் வெளியே வந்து உங்களுக்கு இறுதிச் சடங்கெல்லாம் செய்வார்கள்.”

“ஜார் மன்னருக்கு மட்டும்தானே அப்படி அவர்கள் செய்வார்கள்” என்று அம்மாவின் வேதவாக்கில் மனம் மகிழ்ந்த அப்பா பதிலளித்தார்.

“உங்களிடமும் அவர்கள் அதே மரியாதையை அனுசரிப்பார்கள். இதுவரையில் பீட்டர்ஸ்பர்க்கே காணாத வகையில் உங்களுக்கு சவ அடக்கச் சடங்கு நடக்கும்.”

அதைக் கேட்டதும் அப்பா சிரித்தார். நெக்ரஸோவின் சவ அடக்க நிகழ்வைக் குறித்து அறிந்துகொள்ள வந்த நண்பர்களிடம் இந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டார். அம்மா அன்று நடத்திய இந்த விசித்திரமான உரையாடலைப் பிற்காலத்தில் பலரும் நினைவூட்டினார்கள். சொல்லியும் உள்ளார்கள்.

இந்த விவாதம் நினைவுக்கு வந்ததால் அம்மா ஜியான் மாமனிடம், அவர்களின் மைத்துனனான எம்.போள்ஸ்வாட்கோவ்ஸ்கியையும் அழைத்துக்கொண்டு நோவோதெவிச்சி கான்வென்டுக்கு சென்று, நெக்ரோஸோவின் அருகில் அப்பாவை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டார். அப்போது வீட்டிலிருந்த பணத்தையெல்லாம் எடுத்துக் கொடுத்து அதை குழிமாடத்திற்கும் மற்ற செலவுகளுக்கும் முன்பணமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஒப்படைத்தார். புறப்படுவதற்கு நின்ற மாமன் எங்களை நோக்கினார். குழந்தைகளாகிய எங்களின் முகமெல்லாம் எந்தளவுக்கு துயரத்தால் வெளுத்துப்போய் உள்ளதென்றும் தெரிந்துகொண்டார். அம்மாவிடம் எங்களையும் கான்வென்ட் வரை அழைத்துச்செல்ல அனுமதிக்க வேண்டுமென்று வேண்டினார்.

“அவர்களும் வெளியே வரட்டும். அது அவர்களுக்கு ஒரு நிம்மதியைக் கொடுக்கும்” என்று எங்களை அவர் இரக்கத்துடன் நோக்கிச் சொன்னார்.

நாங்கள் மகிழ்ச்சியுடன் ஆடை மாற்றி சாரட்டில் ஏறினோம். சுத்தமான காற்றும் வெளியே பனி சூழ்ந்த வெயிலும் எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலை அளித்தன. நாங்கள் குழந்தைத்தனத்தை அப்போது அனுபவித்ததால் எங்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்பு என்னவென்பதையே மறந்தோம். நோவோதெவிச்சி கான்வென்ட் நகரத்திற்கு வெளியிலிருந்தது. நார்வே ஆர்ச்சுக்கு அருகில். நான் அன்றுதான் ஒரு கான்வென்டுக்குள் நுழைந்தேன். அதனுள்ளே உள்ள நிசப்த தன்மை நிறைந்த நடைபாதைகளின் வழியாக ஆர்வத்துடன் நான் நடந்தேன். அங்கே நிழல்கள்போல் கன்னியாஸ்திரீகள் நழுவிக் கொண்டிருந்தார்கள். எங்களை அவர்கள் வரவேற்பறைக்கு அனுப்பிவைத்தார்கள். கான்வென்ட் சுப்பீரியர், கருப்பு ஆடை அணிந்த மிகச் சிறுவயது பெண் உள்ளே வந்தார். இறுக்கமும் அகங்காரமும் நிறைந்த முகம் என்பதுபோல் எனக்குத் தோன்றியது. ஸ்வாட்கோவ்ஸ்கி நாங்கள் வந்த விஷயத்தை அறிவித்தார். நெக்ரஸோவ் என்னும் கவிஞரின் அருகில்தான் தன் இறுதி உறக்கம் இருக்க வேண்டுமென்று புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி விரும்பினார் என்பதை அறிவித்தார். இங்கே ஒரு சவக்குழியின் விலை அதிகம் என்பது தெரியும் என்றும், ஆனாலும் எங்களுக்கு அதை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் குறைத்து அளிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார். இந்தக் குழந்தைகளின் தந்தை மிச்சப்படுத்தி வைத்திருந்ததை எல்லாம் அதற்காக எடுத்துக்கொண்டு வந்திருப்பதாகவும் அறிவித்தார். சுப்பீரியரின் முகம் கொஞ்சம் வக்கரித்தது.

“கன்னியாஸ்திரீகள் ஆகிய நாங்கள் இந்த உலகவாசிகளல்ல” என்று தணிவாகக் கூறிவிட்டு,. “இந்த உலகத்தில் புகழ்பெற்றவர்கள் என எங்களைப் பொருத்தமட்டில் யாருமில்லை. இங்கேயுள்ள கல்லறையில் சவ அடக்கம் செய்வதற்கென ஒரு நிச்சயிக்கப்பட்ட தொகையுண்டு. அதில் யாருக்காகவும் மாற்றம் கொண்டுவர முடியாது” என்பதையும் உறுதியாகக் கூறினார்

இவ்வளவையும் சொன்ன இந்த யேசுவின் பரிசுத்த சிஷ்யை பெரிய தொகை ஒன்றைச் சொன்னார். என் தாயால் அளிக்கமுடியாத வகையிலான பெரும் தொகை அது. தன் சகோதரிக்காக மாமன் பலமுறை அவரிடம் யாசித்தார். அத்தொகையைப் பல தவணைகளாக ஓராண்டிற்குள் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்பது வரையில் அந்தக் கெஞ்சல் இருந்தது. முழுத் தொகையும் அளிக்காமல் குழி தோண்ட அனுமதிக்க முடியாது என்பது அதற்கு அந்த கன்னியாஸ்திரீயின் வெளிப்பாடாக இருந்தது. சாமியார் வேஷம் போட்டுள்ள அந்த கொள்ளை வட்டிக்காரிக்கு முன்னாலிருந்து இறுதியில் மாமன் எழுந்து வெளியே வர வேண்டியதாகிவிட்டது.

நாங்கள் தார்மீகக் கோபத்துடன் திரும்பிவந்தோம். எங்களின் தூது வெற்றிபெறவில்லை என்று அம்மாவிடம் வந்து அறிவித்தோம்.

“இது முற்றிலும் துர்ப்பாக்கியமானதுதான்” என்று கூறிய அம்மா, துயரத்தில் ஆழ்ந்தார். “அவர் தேர்ந்தெடுத்த இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. சரி, இனி ஓஹ்தாவிலுள்ள அலெக்ஸிக்கு அருகிலேயே நடக்கட்டும். அந்த இடம் அவருக்குச் சிறிதும் விருப்பமில்லாததுதான்” என்றார் அம்மா.

மாமன் ஓஹ்தாவுக்குப் போய் அங்குள்ள சாமியாரிடம் பேசி , அங்கே ஒரு குழிமாடம் வாங்குவதற்கும் சவ அடக்கச் சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்ய முயன்றார்.

அன்று மாலையில் ஒரு சாமியார் அம்மாவைப் பார்த்துப் பேச ஆசைப்படுகிறார் என்னும் செய்தி வந்தது. அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கியின் சாமியார் மடத்திலிருந்துதான் அவர் வந்திருந்தார்.

நெவ்ஸ்கி, தாஸ்தயேவ்ஸ்கியின் பெரும் ஆராதகராக இருந்தார். அந்த ஆஸ்ரமத்திலுள்ள சாமியார்கள் பெரும்புகழ் பெற்ற இந்த எழுத்தாளரின் பூதவுடலை தங்களுடைய ஆசிரம வளாகத்தில் அடக்கம் செய்வதற்கு ஆசைப்பட்டார்கள். சவ அடக்கம் செய்யும் செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதியளித்தார்கள். அவர்களின் மிகப்பெரிய சர்ச் வளாகத்தில் முழு மரியாதையுடனும் ஆர்ப்பாட்டத்துடனும் அதைச் செய்யலாம் என்றும் அறிவித்தார்கள்.

அம்மா இந்த யோசனையை மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அவர்கள் சென்றதும் அம்மாவுக்குச் சட்டென்று அப்பாவிடம் முன்பு ஒருமுறை, “நான் உங்களை அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி அருகில் அடக்கம் செய்வேன்” என்று கூறியது நினைவுக்கு வந்தது.

மறுநாள் வெள்ளிக்கிழமை தஸ்தயேவ்ஸ்கியின் வாசகர் பட்டாளமே திரண்டிருந்தது. அவர்களில் பல்வேறு வர்க்கத்தினரும் இருந்தார்கள். எழுத்தாளர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், பிரபுக்கள், ஜெனரல்கள், பாதிரியார்கள், பணக்காரப் பெண்கள், ஏழைப் பெண்கள்… எனப் பலரும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அவரைப் படுக்க வைத்திருந்த அறையில் வெப்பம் அதிகரித்தது. இறுதிச் சடங்கிற்கு முன்பான பிரார்த்தனைக் கிடையே மெழுகுவர்த்திகளெல்லாம் அணைந்துவிட்டன. மிகக் கம்பீரமான மலர்வளையங்கள் உடலை அலங்கரித்தன. அதில் பல வண்ணங்களிலான ரிப்பன்களும் இதயத்தைத் தொடும்படியான வாக்கிய வரிகளும் இருந்தன. அவையெல்லாம் பல்வேறு வழிபாட்டுத் தளங்களிலிருந்தும், சமூகங்களிலிருந்தும், கல்வி நிலையங்களிலிருந்தும் அர்ப்பணித்தவை. அவற்றையெல்லாம் எங்கே ஒதுக்கிவைக்கவேண்டும் என்பது கூட எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. தஸ்தயேவ்ஸ்கியின் நெருங்கிய நண்பர்கள் சமர்ப்பித்த சிறிய மலர்வளையங்களையும் பூக்களையும் சவ மஞ்சத்தின் அருகிலேயே கொண்டுசென்று வைத்தோம். அவருடைய ரசிகர்கள் அவரின் கைகளில் முத்தமிட்டார்கள். பலரும் அங்குள்ள பூக்களிலிருந்து ஓர் இதழோ ஓர் இலையோ எடுத்துச்செல்ல அழுதுகொண்டே வேண்டினார்கள். அவருடைய நினைவாக அதைப் பாதுகாக்கத்தான் அப்படி நடந்துகொண்டார்கள். உதவுவதற்காக வந்திருந்த எங்களின் (குழந்தைகளின்) நண்பர்களுடன் நானும் தம்பியும் ஏராளமானவர்களுக்குப் பூக்களை விநியோகித்தோம். அன்றைய தினம் முழுவதும் அப்பணி நடந்தது.

மறுநாள் சனிக்கிழமையாக இருந்ததால் எங்கள் வீடு இருந்த தெருவில் ஏராளமான மக்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஜன்னல் வழியாக வெளியே நோக்கியபோது மனிதக் கடலைத் தவிர வேறொன்றையும் காணமுடிய வில்லை. அலைகள் நகர்வது போல மக்களின் தலைகள் நகர்ந்து கொண்டிருந்தன. அவற்றிற்கும் மேலாக மலர்வளையங்களும், மற்றவையும் அசைந்துகொண்டே இருந்தன. தஸ்தயேவ்ஸ்கியின் பூதவுடலை சாமியார்கள் ஆசிரமத்துக்குக் கொண்டுசெல்வதற்கான வண்டி தயாராக நின்றுகொண்டிருந்தது. ஆனால் சவப்பெட்டியை அதில் வைக்க அவரின் ரசிகர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களே சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டார்கள். வண்டியில் ஏற்றாமல் தங்கள் தோள்களிலேயே சுமந்துகொண்டு நடந்தார்கள். சுமப்பவர்கள் மாறிமாறி வந்தார்கள். ஆசாரத்தையொட்டி விதவையும் பிள்ளைகளும் அதற்குப் பின்னே நடந்தார்கள். அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி சாமியார் ஆசிரமத்துக்கான தூரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. நடந்து நடந்து பிள்ளைகளாகிய நாங்கள் சோர்ந்துவிட்டோம். சில நண்பர்கள் எங்களைத் தூக்கி வண்டியில் வைத்தார்கள்.

“உங்களின் தந்தைக்கு ரஷ்யா அளிக்கும் ஒளிமயமான இந்த இறுதி யாத்திரையை மறந்துவிடாதீர்கள்” என்று அவர்களில் சிலர் எங்களிடம் சொன்னார்கள்.

இறுதி ஊர்வலம் சாமியார் ஆசிரமத்தை அடைந்தபோது பாதிரியார்களெல்லாம் வெளியே வந்தார்கள். அவர்கள் அப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஜார் சக்கரவர்த்தியின் இறுதிச்சடங்கைத் தவிர வேறு யாருக்கும் அவர்கள் இப்படி எல்லோரும் ஒன்றிணைந்து வெளியே வந்து இறுதி அஞ்சலி செலுத்தியதில்லை. இப்போது இதோ புகழ்பெற்ற ஒரு எழுத்தாளனை அவர்கள் அதுபோல் கௌரவிக்கிறார்கள். என் தாயின் வாக்கு இதோ இன்னுமொரு தடவை உண்மையாகிறது.

****

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமைதான் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பொதுவாக அமைதியாகக் கிடக்கும் அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி சாமியார்கள் ஆசிரமம் அன்று காலையிலேயே மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. அவர்கள் அந்த ஆசிரமத்தையே தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நேவா நதிக்கரையில்தான் இந்த ஆசிரமம் இருந்தது. அதுவே ஒரு நகரம் என்று சொல்லும்படியாக இருந்தது. ஏராளமான தேவாலயங்களும் மூன்று கல்லறைகளும் பூந்தோட்டங்களும் பள்ளிக்கூடங்களும் ரோமன் கத்தோலிக்கக் குருமார்களின் பயிற்சிக் கூடமும் பாதிரியார்களுக்கென அக்காதெமியுமெல்லாம் உள்ள ஒரு சிறிய நகரம். ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து சாமியார்கள் பிரமித்தார்கள். மக்கள் பூந்தோட்டங்களிலும் செமித்தேரியிலுமெல்லாம் அப்போது நிறைந்துவிட்டிருந்தார்கள். இரும்பு கைப்பிடிகளிலும் கட்டிடங்களுக்கு மேலும் ஏறி இடம்பிடிக்கத் தொடங்கியிருந்தார்கள். பாதிரியார்கள் போலீஸ் உதவியை நாடினார்கள்.

போலீஸ் வந்தவுடனே ஆசிரமத்துக்கான வாயிலையெல்லாம் அடைத்தார்கள். ஒன்பது மணிக்கு நாங்கள் பிரதான வாயிலை அடைந்தோம். அது அடைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். அம்மா வண்டியிலிருந்து இறங்கினார். விதவையின் முக முக்காடிட்டிருந்தார் அம்மா. எங்களைக் கைப்பிடித்து தன்னுடனே இறக்கினார். ஒரு போலீஸ் அதிகாரி எங்களைத் தடுத்தார்.

“யாரையும் உள்ளே விடமுடியாது” என்று அடம்பிடித்தார் அவர். அதைக் கேட்டதும் அம்மா ஆச்சரியம் அடைந்தார். “நான் தஸ்தயேவ்ஸ்கியின் விதவை மனைவிதான். சடங்குகள் தொடங்க அவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று அறிவித்தார்.

“தஸ்தயேவ்ஸ்கியின் விதவை மனைவி என்று சொல்லி இங்கு வருவது நீங்கள் இப்போது ஆறாவது ஆள். உள்ளே செல்ல முயலவேண்டாம். இதுக்கு மேலும் பொய்கள் சொல்ல வேண்டாம். நான் யாரையும் உள்ளே விடமாட்டேன்.”

அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். அப்போது எங்களைத் தேடி சில நண்பர்கள் அந்த இடத்துக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் வாயிற்கதவைத் திறந்து எங்களை உள்ளே விட்டார்கள். தேவாலயமே நிறைந்து வழிந்தது. ஒரு வழியாக எங்களுக்கு ஒதுக்கி வைத்திருந்த இடத்தை அடைந்தோம். சடங்குகள் ஆரம்பித்தன. சடங்குகளுக்கு ஆர்ச் பிஷப்தான் தலைமை வகித்தார். இரங்கல் உரையையும் அவரேதான் செய்தார். அவரே கூட்டு இசைக்கும் தலைமை ஏற்றார். செமித்தேரியை அடைந்ததும் எழுத்தாளர்களின் முறையாயிற்று. திறந்து வைத்திருந்த சவப்பெட்டிக்கு முன்னால் நின்று அவர்களின் இரங்கல் கூட்டம் நடந்தது. ஆசாரத்தையொட்டிய உரைகள். அவை வெகுநேரம் நீண்டன. அவையும் முடிந்தபின் அம்மா பேச்சு. ஏறக்குறைய முழுமையடைந்ததுபோல் இருந்தது. பீட்டர்ஸ்பர்க்கில் அதற்கு முன்பு இதுபோல் ஒரு சவ அடக்க சடங்கு உண்டானதே இல்லையாம்.

இந்த பிரார்த்தனைகள் நடக்கும்போது சவப்பெட்டியைத் திறந்து வைப்பது என்பது ரஷ்யாவில் ஒரு நடைமுறைதான். அந்தச் சடங்குகள் முடியும்போது உறவினர்களும் நண்பர்களும் சவப்பெட்டிக்கு அருகில் சென்று இறுதி முத்தத்தை அளிப்பார்கள். ஆனால், தஸ்தயேவ்ஸ்கியின் சவப்பெட்டி மூடிக்கிடந்தது. சவ அடக்க நாளன்று என் மாமனான எம்.பெபேதோநோஸேவ் காலையிலேயே சாமியார் ஆசிரமத்துக்கு வந்தவர் சவப்பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது தஸ்தயேவ்ஸ்கியின் முகம் முழுவதும் மாறியிருந்துள்ளது. இந்தத் தோற்றம் அவருடைய விதவை மனைவியையும் பிள்ளைகளையும் இம்சைப் படுத்தலாம் என்று கருதிய மாமனும் சாமியார்களும் சேர்ந்து சவப்பெட்டியின் மூடியை அடைத்துவைக்க முடிவு செய்துள்ளார்கள். அதனால், அம்மா அதற்குப் பின் அவருக்கு மன்னிப்பே அளிக்கவில்லை.

“அவருக்கு என்ன வேறுபாடு உண்டாகியிருக்கும்?” என்று கேட்டு அம்மா கோபித்தார். “அவருடைய முகம் எப்படி மாறியிருந்தாலும் அவர் என்னோட கணவர்தான். என்னுடைய இறுதி முத்தமில்லாமலேயே அவரை இங்கே மறைத்துவிட்டீர்களே…”

அப்படியொரு காட்சியிலிருந்து என்னை விலக்கியதற்கு அவர்மேல் நன்றியுணர்வுதான் எனக்குத் தோன்றியது. அப்பா அமைதியாக உறங்குகிறார் என்பதுதான் என்னுடைய இறுதிப்பார்வை. அதை அப்படியே நிலைநிறுத்திக் கொள்வதில்தான் எனக்கு விருப்பம்.

****

[1]ஸ்லாவு – ஐரோப்பியாவிலுள்ள ஒரு மக்களின் இனம்

மலையாளம் வழி தமிழாக்கம் –குறிஞ்சிவேலன்

(நன்றி : மாத்ருபூமி வார இதழ்

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழ்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.