மனிதநேய நோக்கத்திலிருந்து பொய் பேசலாம் என்றெண்ணப்பட்ட ஒரு உரிமையைப் பற்றி-இம்மானுவேல் காண்ட், தமிழில்-விவேக் ராதாகிருஷ்ணன்

“1797-ஆம் வருடத்தில் பிரான்ஸ்” (Frankreich im Jahr 1797) என்ற பத்திரிகையில், பகுதி VI, எண் 1-ல், பெஞ்சமின் கான்ஸ்டன்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் எழுதிய “அரசியல் எதிர்வினைகளைப் பற்றி” என்ற தலைப்பை கொண்ட கட்டுரையில், பக்கம் 123-ல், கீழ் வரும் பத்தியை காணலாம்:

kant

“‘உண்மை பேசுவதென்பது ஒரு கடமை’ என்ற அறக்கொள்கையை (moral principle) தனியானதாக மற்றும் நிபந்தனையற்றதாக எடுத்துக்கொண்டால், அது சமூகத்தை சாத்தியமற்றதாகச் செய்துவிடும். இதற்கு சான்று, இம்மானுவேல் காண்ட் என்ற ஒரு ஜெர்மானிய மெய்யியலாளர் இக்கொள்கையிலிருந்து எடுத்துக் காட்டிய  மிகவும் நேரடியான விளைவுகளில் (direct consequences) இருக்கிறது. அவர் இக்கொள்கையை இழுத்துச் செல்லும் தீவிரத்தின் தூரம் மிக நீண்டது. கொலைகாரனால் துரத்தப்பட்ட ஒரு நண்பர் நம் வீட்டில் தஞ்சம் புகுந்த நிலையில், நண்பரைப் பற்றி  கேட்டு வரும் கொலைகாரனிடம் பொய் சொல்வதும் குற்றமே என்று வலியுறுத்துகிறார் அவர்.”

அந்த பிரெஞ்சு மெய்யியலாளர், அதே பத்திரிகையின் பக்கம் 124-ல், இந்த அறக்கொள்கையை தவறெனக் கீழ்வருமாறு விளக்குகிறார்:

“உண்மை பேசுதல் என்பது ஒரு கடமை. கடமை (duty) என்ற கருத்துருவை உரிமை (right) என்ற  கருத்துருவிலிருந்து பிரிக்க முடியாது. ஒருவரின் கடமை, இன்னொருவரின் உரிமையுடன் ஒத்துப்போவதாகவே இருக்கும். எங்கே உரிமைகள் இல்லையோ, அங்கே கடமைகளும் இல்லை. உண்மை பேசுதல் கடமையே; ஆனால் உண்மைக்கு உரிமை இருப்பவருக்கு மட்டுமே அது கடமை. மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கும் உண்மைக்கான உரிமை யாரிடமும் இல்லை.”

இங்கு முன்வைக்கப்பட்ட வாதத்தின் முதல் தவறு இருக்கும் இடம்: “உண்மை பேசுதல் கடமையே; ஆனால் உண்மைக்கு உரிமை இருப்பவருக்கு மட்டுமே அது கடமை”.

முதலில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், “உண்மைக்கு உரிமை இருத்தல்” என்ற சொற்றொடர் அர்த்தமற்ற ஒன்று. மாறாகச் சொல்ல வேண்டியது: தன் சொந்த உண்மைத்தன்மைக்கு (veracitas), அதாவது, தன்னுடைய அகவய (subjective) உண்மைக்கு உரிமை ஒருவரிடம்  இருக்கிறது. புறவயமான (objective) உண்மைக்கு ஒருவரிடம் உரிமை இருப்பதாகச் சொல்வதென்பது, கொடுக்கப்பட்ட கூற்று உண்மையா, பொய்யா என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது என்று  சொல்வது போன்றதாகும்; இது அசாதாரணமான ஒரு தர்க்கத்தை உண்டாக்கும்.

இப்போது, முதல் கேள்வி: ஒருவருக்கு, ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வதை தவிர்க்க முடியாத நிலையில், உண்மையற்றுப் பேசுவதற்கு அதிகாரம் (உரிமை) உள்ளதா? இரண்டாம் கேள்வி: அச்சுறுத்தும் குற்றச்செயலொன்றை தடுப்பதற்கு நேர்மையற்ற முறையில் ஒருவரை பொய் சொல்லக் கட்டாயப்படுத்தினால், அவர் உண்மையற்றுப் பேச கடமைப்பட்டவரா?

பேசுவதை தவிர்க்கமுடியாத நிலையில், பேச்சில் உண்மைத்தன்மையை தக்கவைப்பது, ஒரு மனிதர் மற்ற எல்லாருக்கும் செய்யவேண்டிய முறையான கடமை ஆகும்;* தனக்கோ அல்லது மற்றவருக்கோ மிகப் பெரிய பாதகத்தை விளைவித்தாலும்கூட, அது கடமையே. பொய் பேசுவதால் என்னை அவ்வாறு பேசக் கட்டாயப்படுத்தியவருக்கு தீங்கு ஏற்படாமல் இருக்கலாம்; ஆனால், அப்படி பொய் பேசும்போது நம் கடமையின் மிக முக்கியப் புள்ளியில் நான் தவறு செய்கிறேன் (சட்டப்பூர்வமான தவறு இல்லை என்றாலும்). இதன் மூலமாக, என்னால் முடிந்த வரை, நம் பேச்சுக்களின் (வெளிப்பாடுகளின்) பொதுவான நம்பகத்தன்மையை  கெடுக்கிறேன்; இதனால், பேச்சுக்களின் மூலம் ஒப்பந்தங்களாலான நம் உரிமைகள் பயனற்ற வெற்றாகி, அதன் முக்கியத்துவத்தை இழக்கின்றன; இது மனிதத்துக்கே (humanity) பொதுவாக இழைக்கப்படும் தீங்காகும்.

வேண்டுமென்றே மற்றவரிடம் உண்மையற்றுப் பேசுவது என்பது  பொய் எனப்படும்; இந்த விளக்கத்தில் நீதிமான்கள் வலியுறுத்தும் ‘யாதொன்றும் தீமை இலாத சொலல்’ (mendacium est falsiloquium in praeiudicium alterius) என்பதை தனியாக சேர்க்கத் தேவையில்லை. காரணம், பொய் எப்போதுமே மற்றவருக்கு கேடு விளைவிக்கும்; தனி மனிதனுக்கென்று இல்லாவிட்டாலும் , நம் உரிமையின் ஆதாரத்தையே பயனற்றதாக்குவதன் மூலம் மனிதத்துக்கே பொதுவாக தீங்கு விளைவிக்கும்.

நல்ல நோக்கத்திலிருந்து பேசிய பொய்கூட தற்செயலாக (casus) உரிமையியல் சட்டத்தின்படி (civil laws) தண்டனைக்குரியதாகலாம்.  அவ்வாறு தற்செயலாக தண்டனைக்குரியதாகாமல் தப்பிக்கும் ஒரு பொய் வேறு சில புறச் சட்டங்களால் (external laws) கண்டிக்கப்படலாம். எடுத்துக்காட்டிற்கு,  நீங்கள் ஒரு பொய்யை சொல்லி கொலை செய்வதிலிருந்து ஒருவனை தடுத்த பிறகு, அவன் அதிகரித்த கொலைவெறியோடு தற்போது இருந்தால், பின்வரும் எல்லா விளைவுகளுக்கும் சட்டப்படி நீங்களே பொறுப்பாவீர்கள். ஆனால், விட்டுக்கொடுக்காமல் உண்மை பேசுவதை நீங்கள் கடைப்பிடித்தால், எப்படிப்பட்ட எதிர்பாராத விளைவுகள்  பின்தொடர்ந்தாலும், பொதுநீதி உங்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. திரு. கான்ஸ்டன்ட் கூறிய அந்த கற்பனைக் காட்சியை எடுத்துக்கொள்வோம். கொலைகாரன், அவன் எதிரியை (அதாவது, உங்கள் நண்பரை), உங்கள் வீட்டில் தேடி விசாரிக்கும்போது, நீங்கள் உண்மையை கடைப்பிடித்து “ஆம்” என்று பதிலளிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போது உங்களுக்கே தெரியாமல் உங்கள் நண்பர் உங்கள் வீட்டை விட்டுத் தப்பி ஓடிவிடுகிறார் என்றால், அவர் கொலைகாரனைப் பார்க்கமாட்டார் மற்றும் கொலையும் நடக்காது – இதற்கு சாத்தியம் இருக்கிறது. மாறாக, கொலைகாரன் கேட்பதற்கு, உங்கள் நண்பர் (அதாவது, அவன் எதிரி) வீட்டில் இல்லை என்று பொய் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போது உங்கள் நண்பர் வீட்டைவிட்டுத் தப்பிவிடுகிறார் என்றால் (இது உங்களுக்கு தெரியாது), அவர் கொலைகாரனிடம் எதிர்ப்பட்டு கொல்லப்படுவார் – இதற்கும் சாத்தியம் இருக்கிறது. இப்படி நடக்கும் பட்சத்தில், நீங்களே அக்கொலைக்கு ஒரு வகையில் காரணமாகி, நியாயமான முறையில் பழிக்கப்படுவீர்கள். ஒருவேளை உங்களுக்கு தெரிந்த உண்மையை மட்டும் சொல்லியிருந்தால், கொலைகாரன் நண்பரை வீட்டில் தேடும்போது பக்கத்து வீட்டுக்காரர்களால் பிடிபட்டிருக்கலாம் – கொலையும் நடக்காமல் போயிருக்கும். எனவே, யார் பொய் பேசினாலும்,  அவருடைய நோக்கம் எந்தளவுக்கு நன்மையானதாக இருப்பினும், அதனால் எழும் விளைவுகளுக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்; எதிர்பாராத விளைவுகளாக இருந்தாலும், அவை எதிர்மறையானதாக இருந்தால், உரிமையியல் நீதிமன்றத்தால் (civil court) இடப்பட்ட அபராதத்தை அவர் செலுத்த வேண்டும். உண்மைத்தன்மையைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு கடமை; ஒப்பந்தங்களாலான நம் எல்லாக் கடமைகளுக்கும் இக்கடமையே அடிப்படை என்று கருதவேண்டும்; இதற்கு மிகக் குறைந்தபட்ச விதிவிலக்கை அனுமதித்தால்கூட, நம் ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருக்கும் சட்டம் உறுதியற்றதாகிவிடும்.

ஆகையால், எல்லாப் பேச்சுக்களிலும் உண்மையாக (நேர்மையாக) இருத்தல் என்பது, காரணத்திறன் (reason) நமக்கு நிபந்தனையற்று  பரிந்துரைக்கும் ஒரு புனிதமான கட்டளை; அதை நம்முடைய எந்த சௌகரியங்களுக்காகவும் கட்டுப்படுத்தக் கூடாது.

இது தொடர்பாக, திரு. கான்ஸ்டன்ட் அவர்கள், கண்டிப்பான அறக்கொள்கைகள் (strict moral principles) பற்றி சிந்தனையார்ந்த மற்றும் மிகச் சரியான ஒரு கருத்தையும் முன்வைத்திருக்கிறார்.  விதிவிலக்கற்ற அக்கொள்கைகள், செயல்பாட்டிற்கு பொருத்தமற்ற கருத்துகளுக்குள் தொலைந்துபோவதாகக் குறை கூறி, எனவே, அவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். “1797-ஆம் வருடத்தில் பிரான்ஸ்” பத்திரிகையில், அவர் எழுதிய கட்டுரையில், பக்கம் 123-ல், அவர் சொல்கிறார்: “எங்கெல்லாம் ஒரு கொள்கை செயல்பாட்டிற்கு பொருத்தமற்றதாகத் தெரிகிறதோ, அதன் பொருத்தமற்ற நிலைக்கு காரணம் அதன் செயல்பாட்டிற்கு வழிவகுக்கும் மற்றொரு இடைநிலைக் கொள்கையை (intermediary principle) பற்றிய நம் அறியாமைதான்”. (பக்கம் 121-ல்) சமத்துவம் என்ற கோட்பாடே நம் சமூகச் சங்கிலி உண்டாவதற்கு முதல் இணைப்பு என்று கூறி, மேலும் தொடர்கிறார் (பக்கம் 122-ல்) : “தன் பங்களிப்பால் உருவான சட்டங்களுக்கு மட்டுமே  எந்தவொரு மனிதனும் கடமைப்பட்டிருக்க முடியும். இந்த ஒரு கொள்கையை, மிக நெருக்கமாக பின்னிழைக்கப்பட்ட சமூகத்தில், நேரடியாக செயல்படுத்த முடியும், மற்றும் இக்கொள்கையை பொதுவானதாக்க வேறொரு இடைநிலைக் கொள்கை தேவையில்லை. ஆனால், ஒரு பெரிய சமூகத்தில், இக்கொள்கையுடன் வேறொரு கொள்கையையும் சேர்க்க வேண்டியிருக்கும். அந்த இடைநிலைக் கொள்கை என்னவென்றால்: தனி மனிதர்கள், சட்டங்கள் உருவாவதற்கு  தாமாகவோ அல்லது பிரதிநிதிகள் மூலமாகவோ பங்களிக்கலாம், என்பதே.  முதல் கொள்கையை, இந்த இடைநிலைக் கொள்கையுடன் சேர்க்காமல், நம் பெரும் சமூகத்தில் செயல்படுத்த விரும்பினால், அது நம் சமூகத்திற்கு தவிர்க்கமுடியாத அழிவை ஏற்படுத்தும். இந்த நிலை, கொள்கைகளை இயற்றுபவரின் அறியாமையை அல்லது  தகுதியின்மையை காட்டுகிறதே தவிர, செயல்படுத்த எடுத்துக்கொண்ட கொள்கைக்கு எதிரான ஒரு நிரூபணமல்ல”. அவர் (பக்கம் 125-ல்) நிறைவாகக் கூறுகிறார்: “எனவே, உண்மையெனப் புரிந்துகொள்ளப்பட்ட  ஒரு கொள்கை  எப்போதுமே நிராகரிக்கப்படக்கூடாது, அதில் ஆபத்து இருப்பது போலத் தோன்றினாலும்”. (ஆனால், இவரேதான் உண்மைத்தன்மை என்ற நிபந்தனையற்ற கொள்கையை சமூகத்திற்கு வரும் ஆபத்தின் காரணமாக நிராகரிக்கிறார். இதற்கு காரணம், அவரால் இந்த ஆபத்தை தடுக்க இடைநிலைக் கொள்கையொன்றை கண்டுபிடிக்க முடியவில்லை; மேலும், இடையில் சேர்ப்பதற்கான ஒரு கொள்கை இங்கு இல்லை என்பதுதான் உண்மை.)

இந்த பிரெஞ்சு மெய்யியலாளர், தவிர்க்கமுடியாத உண்மையை பேசிய பின் ஒருவருக்கு கெடுதல் (nocet) ஏற்படுவதை, மற்றவருக்கு தீங்கை (laedit) நேரடியாக இழைக்கும் செயலுடன் குழப்பிக்கொள்கிறார். உண்மை பேசியதால் வீட்டில் ஒளிந்துகொண்டிருந்த நண்பருக்கு ஏற்பட்ட கேடு (நேரடியாக இழைத்த தீங்கல்ல) என்பது ஒரு தற்செயலான விபத்து (casus) மட்டுமே;  அது சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயலல்ல (சட்டப்படி). என்  சுயநலனுக்காக மற்றவர் பொய் பேச வேண்டும் என்ற  ஒரு உரிமையிலிருந்து வரும் கோரிக்கை  எந்த சட்டத்தன்மையுடனும் (lawfulness) முரண்படும். தவிர்க்கமுடியாத பேச்சுக்களில்  உண்மைத்தன்மை என்பது ஒவ்வொருவருக்குமான உரிமை மட்டுமல்ல; அதை கடைப்பிடிப்பது எல்லோருக்கும் ஒரு மிகக் கண்டிப்பான கடமை, அவருக்கோ அல்லது மற்றவருக்கோ அதால் கேடு ஏற்பட்டாலும்.  எனவே, சரியாகச் சொல்வதென்றால், உண்மை பேசியதால் ஒருவர் பாதிக்கப்பட்ட இன்னொருவருக்கு கெடுதல் செய்யவில்லை; மாறாக, தற்செயல்தான் இந்த கெடுதலை உண்டாக்குகிறது. (பேசியே ஆகவேண்டிய தருணத்தில்) உண்மைத்தன்மை என்பது ஒரு நிபந்தனையற்ற கடமை என்பதால், அவருக்கு  வேறு செயலை தேர்ந்தெடுக்க சுதந்திரம் இல்லை. ஆகையால், நான் கான்ஸ்டன்ட் கூறும் இந்த கொள்கையை ஏற்கமாட்டேன் (பக்கம் 124): “உண்மை பேசுதல் கடமையே, ஆனால் உண்மைக்கு உரிமை இருப்பவருக்கு மட்டுமே அது கடமை”; முதலில், இந்த கொள்கை தெளிவாக வடிவமைக்கப்படவில்லை – அதாவது, உண்மை என்பது உடைமை அல்ல, அதன் உரிமையை ஒருவருக்கு வழங்கி மற்றொருவருக்கு மறுப்பதற்கு. இரண்டாவது, முக்கியமாக, (இங்கு விவாதிக்கப்படுகிற ஒரே கருப்பொருளான) உண்மைத்தன்மை என்ற கடமை,  இக்கடமைக்கு ஆளாக வேண்டிய நபர்கள் மற்றும் இக்கடமைப் பொறுப்பிலிருந்து விடுபட்டவர்கள் என்ற பிரிவை ஏற்படுத்தாது; மாறாக, இது, எல்லா தருணங்களிலும் செயல்படுத்த வேண்டிய ஒரு நிபந்தனையற்றக் கடமை (unconditional duty) ஆகும்.

(நம் அனுபவங்களிலிருந்து சாரத்தைப் பிரிக்கும்) உரிமையின் மீவியர்பியலிலிருந்து (metaphysics of right), (இம்மீவியர்பியல் கருப்பொருட்களை அனுபவம் தரும் நிகழ்வுகளுக்கு பொருத்திப் பயன்படுத்தும்) அரசியலின் அடிப்படைக் கொள்கைக்கு (principle of politics) முன்னேறுவது ஒரு மெய்யியலாளருக்கு அவசியமானது; அதுவும், இந்த அரசியலின் அடிப்படைக் கொள்கையின்  மூலமாக அரசியலின் ஒரு சிக்கலுக்கு, உரிமையின் உலகளாவிய கொள்கையின் (universal principle of right) மூலமாக தீர்வளிக்க வேண்டும். இதையெல்லாம் அவர் செய்வதற்கு: 1. முதலில், அவர் வழங்கவேண்டியது ஒரு அடிகோளை (axiom);  அதாவது, புற உரிமையின் (external right) விளக்கத்திலிருந்து எழும் உறுதிப்பாட்டுடன் கூடிய ஒரு நிச்சயமான கூற்றை அவர் வழங்க வேண்டும் (புற உரிமை என்பது, ஒரு உலகளாவிய சட்டத்திற்கு (universal law) ஏற்ப ஒவ்வொருவருடைய சுதந்திரமும் மற்றவர் அனைவரின் சுதந்திரத்துடன் ஒத்து இருப்பது). 2. இரண்டாவதாக, அவர் வழங்க வேண்டியது, புறப் பொதுச் சட்டத்தின் (external public law) ஒரு எடுகோளை (postulate); (புறப் பொதுச் சட்டம் என்பது, சமத்துவத்தின் கொள்கையின்படி (principle of equality) எல்லோருடைய செயல்திறனும் (will) ஒன்றிணைக்கப்பட்டிருப்பது; இது இல்லையென்றால், யாருக்கும் சுதந்திரம் என்பதே இருக்காது.) 3. மூன்றாவதாக, எவ்வளவு பெரிய ஒரு சமூகமாக இருந்தாலும், அதில் சுதந்திரத்தின் மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப ஒரு ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதற்கு சிக்கல்கள் இருக்கின்றன (குறிப்பாக பிரதிநிதித்துவச் சமூகமைப்பின் (representative system) வழியாக இதை செய்வதற்கு). இந்த ஒற்றுமையை நிறுவுவதே அரசியலின் அடிப்படைக் கொள்கை (principle of politics) ஆகும்; இந்த அரசியல் அமைப்பினை நிறுவுவதற்கு, மனிதர்களைப் பற்றிய  அனுபவ அறிவிலிருந்து எடுக்கப்படும் சட்டங்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட சட்டங்கள் மட்டும்தான் நீதியை நிலைநாட்டும் செயல்முறையை கணக்கில் கொள்வதோடு, அதை சரியான வழியில் செயல்படுத்தவும் செய்யும். உரிமையை எப்போதுமே அரசியலுக்கு ஏற்றவாறு சரிசெய்து பொருத்தக்கூடாது; மாறாக அரசியலைத்தான் எப்போதுமே உரிமைக்கு ஏற்றவாறு சரிசெய்து பொருத்த வேண்டும்.

மேலே திரு. கான்ஸ்டன்ட் சொன்னதில் குறிப்பிடத்தக்க இன்னொன்று: “உண்மையெனப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு கூற்று (இதில் நான் சேர்த்தது, இது முன்னறிவாக (a priori), எனவே, உறுதிப்பாட்டுடன் (apodictic) புரிந்துகொள்ளப்பட்ட கூற்று என்பதை) எப்போதுமே நிராகரிக்கப்படக்கூடாது, அதில் ஆபத்து இருப்பது போலத் தோன்றினாலும்”. இங்கே ஆபத்தானதை தற்செயலாக நடந்த தீங்கு என்று புரிந்துகொள்ளாமல், ஒருவருக்கு கெடுதல் செய்வதால் வரும் ஆபத்து என்றே புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு கேடு, முற்றிலும் நிபந்தனையற்ற (மற்றும்  நம் பேச்சுகளிலுள்ள நேர்மையின் தலைசிறந்த நிபந்தனையான) உண்மைத்தன்மையை பரிசீலனைகளுக்கு உட்படுத்தி நிபந்தனைக்குரிய ஒரு கடமையாக ஆக்குவதனால் வருவது. மேலும், பொய் பேசுவதன் மூலமாக நான் யாருக்கும் கெடுதல் விளைவிக்கவில்லை என்றாலும், தவிர்க்கமுடியாத அவசியமான பேச்சுகளுக்கான உரிமையின் அடிப்படைக் கொள்கையை (principle of right) மீறுகிறேன் (அதாவது, உரிமையின் அடிப்படைக் கொள்கையின் உட்பொருளில் (materially) இல்லையென்றாலும், அதன் அமைப்பில்  (formally) நான் தவறுகிறேன்). இது, ஒருவருக்கு  நேரடியாக அநீதி இழைப்பதைவிட மிக மோசமான ஒரு செயல். இப்படிப்பட்ட ஒரு செயல், அதற்கான செயற்கொள்கையென ஒன்று இருக்கிறது என்று எப்போதுமே கருதாது.   

பேசப்போவதில் உண்மைத்தன்மைக்கான நோக்கம் இருக்கிறதா என்று ஒருவரை கேட்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் தன்னையே சந்தேகித்துவிட்டார்கள் என்று கோபிக்காமல் இருந்தாலும், உண்மையற்று பேசுவதைப் பற்றி அவர் சிந்தித்தால்கூட, அவர் பொய்சொல்லி ஆகிவிடுவார் (அதற்கு சாத்தியக்கூறு இருப்பதால்).  இதற்கு காரணம், அவர் உண்மை பேசுவதை ஒரு கடமையாகக் கருதாமல் இருப்பதே ஆகும்; அவர், இயல்பாகவே விதிவிலக்குகளை அனுமதிக்காத இந்த விதியிலிருந்து விதிவிலக்குகளை தனக்காக ஓதிக்கிக்கொண்டு ஒரு அகமுரண்பாட்டை (self-contradiction)  உண்டாக்குவார்.

உரிமையின் எல்லா செயற்கொள்கைகளும் (practical principles of right) கண்டிப்பான உண்மைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்; இடைநிலைக் கொள்கைகள் என்று இங்கு அழைக்கப்பட்டவை, அவைகளின் நடைமுறைச் செயல்பாட்டிற்கான தீர்மானங்களைக் கொண்டிருக்க வேண்டும் (அரசியலின் விதிமுறைகளுக்கு ஏற்ப); இந்த இடைநிலைக் கொள்கைகள் எப்போதும்  உரிமையின் கொள்கைகளிலிருந்து விதிவிலக்குகளைக் கொண்டிருக்கக் கூடாது. கொள்கைகள் என்பதால் இவை கொண்டிருக்கும் உலகலாவிய தன்மையை (universality) விதிவிலக்குகள் அழித்துவிடும்.

* “உண்மையற்ற தன்மை ஒருவர் தனக்கே செய்ய வேண்டிய ஒரு கடமையின் மீறல்” என்று இக்கொள்கையை நான் கூர்மைப்படுத்த விரும்பவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொள்கை அறநெறியை (ethics) சேர்ந்தது; ஆனால், இங்கு நாம் ஆராய்ந்து கொண்டிருப்பது உரிமையின் கடமையை (duty of right). “நல்லொழுக்கத்தின் கோட்பாடு” (Doctrine of Virtue) இந்த மீறலை மதிப்பற்றதாக, மற்றும் வரும் அவதூற்றை ஒரு பொய்சொல்லி தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டதாகக் கருதும்.

மூலம்: Kant, Immanuel. “Über ein vermeintes Recht aus Menschenliebe zu Lügen”. Translated by Mary Gregor as “On a Supposed Right to Lie from Philanthropy” in Practical Philosophy. Cambridge: Cambridge University Press, 1996.

கட்டுரையைப் பற்றிய சிறுகுறிப்பு

இம்மானுவேல் காண்ட், தன் அறவியல் கோட்பாட்டில், மனிதர்களாகிய நாம் பொய் பேசுவது எப்போதுமே தவறு என்பதை தொடர்ந்து வாதிடுகிறார். உண்மை பேசுவது நம் நிபந்தனையற்ற கடமை என்றும், பொய் பேசுவதன் மூலமாக நம் உள்ளார்ந்த சுதந்திரத்தையும், மனிதனுக்கே உரிய கண்ணியத்தையும்  கெடுக்கிறோம் என்று தன் எழுத்துகளில் திட்டவட்டமாகக் கூறுகிறார்.1797-ல் வெளியான “அறத்தின் மீவியற்பியல்” (Metaphysics of Morals) என்ற தன் புத்தகத்தில், “நல்லொழுக்கத்தின் கோட்பாடு” (Doctrine of Virtue) என்ற பகுதியில், பேச்சில் உண்மைத்தன்மையின் முக்கியத்துவத்தை ஒரு கற்பனைக் காட்சியின் மூலமாக விளக்குகிறார் காண்ட்: ஒரு வீட்டுக்காரர், தன் வீட்டில் வேலை செய்பவரிடம், இன்று கதவை  யார் தட்டினாலும் திறக்காமல் “ஐயா வீட்டில் இல்லை!” என்று பொய் சொல்ல கட்டளையிடுகிறார். எதிர்பார்த்ததை போலவே வீட்டுக்கதவு பலமுறை தட்டப்படுகிறது. இட்ட கட்டளையைப் பின்பற்ற, வேலை செய்பவர் கதவு தட்டுபவரிடம் பொய் சொல்லி, வேறு பேச்சு ஏதும் கொடுக்காமல் தட்டிக்கழிக்கிறார். பின், வேலை செய்பவருக்கே தெரியாமல் வீட்டுக்காரர் பின்பக்கமாக வெளியேறி ஒரு கடுங்குற்றச் செயலை செய்கிறார். எல்லாம் முடிந்த  பின்னர், கதவு தட்டப்பட்டதே அந்த வீட்டுக்காரன் குற்றச் செயலை செய்வதிலிருந்து தடுத்து, அவனை கைது செய்யத்தான் என்று வேலை செய்பவர் உணர்கிறார். தன் அறக் கடமையை மீறி பொய் பேசியதால்தான் அந்த குற்றச்செயல் நடந்தது என்று அவர் மனசாட்சியே அவரை குற்றத்திற்கு பொறுப்பேற்க உந்தும் என்று கூறுகிறார் காண்ட்.  

காண்ட் கூறிய இந்த கற்பனைக் காட்சியை, ‘நண்பனைத் தேடி வரும் கொலைகாரன்’ என்று வேறொன்றாக மாற்றி, காண்ட்டின் நிலைப்பாட்டை, தன் “Des Réactions Politiques” என்ற கட்டுரையில் விமர்சிக்கிறார் பென்ஜமின் கான்ஸ்டன்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர். அவர் குறிப்பாக முன்வைக்கும் கருத்து, காண்ட் சொல்வதைப் போல் உண்மைத்தன்மையை தீவிரமாகக் கடைப்பிடித்தால், மனித சமூகமே சாத்தியமற்றதாக ஆகிவிடும் என்பது. தீவிர உண்மைத்தன்மைக்கு பதிலாக, மற்றவருக்கு கெடுதல் ஏற்படாமல் இருக்கும்வரை பொய் பேசலாம் என்ற வாதத்தை முன்வைக்கிறார். மேலும் கேடு விளைவிக்காத வரையில் பொய் பேசுவது நம் உரிமை என்றும் கான்ஸ்டன்ட் கூறுகிறார்.

கான்ஸ்டன்ட்டின் விமர்சனத்திற்கு, Berliner Blätter என்ற மாத இதழில் வெளிவந்த  “Über ein Vermeintes Recht aus Menschenliebe zu Lügen” என்ற மேலே தமிழாக்கப்பட்ட கட்டுரையில் பதிலளிக்கிறார் காண்ட். பொய் பேசுவது எப்போதுமே அறத்தின் மீறல் என்று கூறுவதோடு, அது எப்போதுமே நம் உரிமை ஆகாது என்று அவர் வாதிடுகிறார். உண்மைத்தன்மையற்றுப் பேசுவது சட்டப்பூர்வமான குற்றமாக எல்லா நேரமும் ஆவதில்லை என்றாலும், அது நம் அடிப்படை உரிமையின் மீறலாகவே எப்போதும் இருக்கும் என்று கூறுகிறார். உண்மைத்தன்மைக்கு நம் அனைவருக்குமே உரிமை இருக்கிறது என்றும், அதனால் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசுவது அதன் மீறல் ஆகும் என்றும் விளக்குகிறார். குறிப்பாக, நம் எல்லா உரிமைகளும் பேச்சினாலான ஒப்பந்தங்கள் என்பதால், பேச்சில் பொய்யை அனுமதிப்பது உரிமைகளின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குகிறது என்கிறார். எனவே, முள்ளை முள்ளால் எடுக்கலாம் என்று நினைத்துப் பொய் சொல்லி ஒரு குற்றச்செயலை தடுப்பதென்பது, தனிப்பட்ட நபருக்கு நன்மை செய்வதுபோலத் தோன்றினாலும், உண்மையில் மனிதத்தின் அடிப்படைக்கு எதிராக பொதுவான  தீங்கை நாம் இழைக்கிறோம் என்கிறார் காண்ட்.

பொய்யே பேசக்கூடாது என்கிறாரே காண்ட், அப்படியென்றால் தேடப்பட்ட அந்த நண்பர் யூதராக இருந்து தேடி வந்த கொலைகாரன்  நாஜி ஆதரவாளராக இருந்தால், அங்கு உண்மை பேசுவது மனித குலத்தையே பாவத்தில் தள்ளும் அறத்தின் மிகப் பெரிய மீறல் ஆகாதா? காண்ட்டிற்கு எதிரான  கான்ஸ்டன்ட்டின் நிலைப்பாடும் அவருக்கு பிரெஞ்சுப் புரட்சியில் ஏற்பட்ட சொந்த அனுபவங்களால் எழுந்தது என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பல விமர்சனங்கள் தீவிர உண்மைத்தன்மையை (radical honesty) நியாயப்படுத்தும் காண்ட்டிற்கு எதிராக தொடர்ந்து வந்துள்ளன. இந்த விமர்சனங்களுக்கு காண்ட்டின் மெய்யியற்க் கோட்பாட்டை நன்கு கற்றறிந்த அறிஞர்கள் பலரால் பல விதமாக  பதிலளிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.