குற்றவியல் நீதியமைப்பில் தடயவியலின் முக்கிய பங்களிப்பு-றின்னோஸா

வழக்கு 01. கிரிஸ்டல் பெஸ்லானோவிட்ச் கொலை வழக்கு (Krystal Beslanowitch)

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கிறிஸ்டல் பெஸ்லானோவிச் எனும் ஒரு பதினேழு வயதுப் பெண், தலையில் ஓங்கி அடிக்கப்பட்டு மண்டை ஓடு நசுக்கிக் கொல்லப்பட்டாள். அவரது உடல் டிசம்பர் 15, 1995-இல் ப்ரோவோ ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் முட்டுச் சந்துக்குள் மட்டுமே இட்டுச்சென்றது. கொலையாளியை நெருங்கக் கூட போலீஸால் முடியவில்லை. 2013-இல் புதிய தடயவியல் தொழில்நுட்பங்கள் கொலையாளியை அடையாளம் காட்டியது. கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பளிங்குப் பாறைகளில் M-Vac தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தடயவியல் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். கொலை நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட DNA தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் முடிவுகள் அச்சமயம் அந்த பகுதியில் பேருந்து ஓட்டுனரராக இருந்த ஜோசப் மைக்கேல் சிம்ப்சன் என்பவனின் டி.என்.ஏவுடன் பொருந்திப் போனது. அதே ஆண்டு செப்டம்பரில் புளோரிடாவில் வைத்து சிம்சன் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டான்.

வழக்கு 02 – லிண்ட்பெர்க் கொலை வழக்கு (Charles Lindbergh Jr.)

மார்ச் 1, 1932 இல், அமெரிக்காவின் ஒரு பிரபல விமானியின் இருபது மாதக் குழந்தை சார்லஸ் லிண்ட்பெர்க் ஜூனியர் கடத்தப்பட்டான். $50,000 கப்பம் செலுத்தப்பட்டாலும், குழந்தை திரும்பப் பெறப்படவில்லை. மே மாதம் அவரது வீட்டிலிருந்து சில மைல் தொலைவில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. எந்த ஆதாரமும் போலீஸ் கைக்கு சிக்கவில்லை. சில வருடங்கள் கழித்து புதிதாக வந்த ஒரு அதிகாரி அந்தக் கேஸை தூசு தட்டி எடுத்து விசாரித்தபோது சில ஆதாரங்கள் சிக்கின. அவற்றை தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது வந்த முடிவுகள், புருனோ ஹாப்ட்மேன் என்பவனின் பட்டறைக்குள் இட்டுச் சென்றது. ஆனாலும் குற்றத்தை முற்றாக மறுத்த புருனோ ஹாப்ட்மேனின் கையெழுத்து தடயவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அதே போல ஹாப்ட்மேனின் மாடியில் உள்ள ஒரு மரத்துண்டும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவை கடத்தல்காரன், குழந்தையின் படுக்கையறை ஜன்னலை அடையப் பயன்படுத்திய ஏணியில் பயன்படுத்திய மரத்துடன் பொருந்திப் போனது. ஹாப்ட்மேன் 1946 இல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான்.  

வழக்கு 03 The Green River கொலைகள்

80களின் ஆரம்பங்களில் வாஷிங்டன் மாநிலத்தில் கிரீன் ரிவர் ஆற்றின் குறுக்கே சுமார் ஐம்பத்தியெட்டு கொலைகள் அரங்கேறின. இதில் கொலை செய்யப்பட்ட அனைவரும் விலை மாதுகள். போலீசுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. கேரி ரிட்வே என்பவன் மீது சந்தேகம் இருந்து அவன் டி.என்.ஏ மாதிரிகளை 1987 இல் சேகரித்தாலும் அப்போது இருந்த தொழில்நுட்பப் பற்றாக்குறையால் அவன் தான் கொலையாளி என்று போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. 2001ஆம் ஆண்டு கேரி ரிட்வேயின் டி.என்.ஏ புதிய தடயவியல் நுட்பங்களோடு மீண்டும் ஆராயப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிக்கு ஐம்பத்தியெட்டு வருட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட மூன்றும் பலவருடங்கள் தீர்க்கப்படாமல் கிடப்பில் கிடந்து, பின்னர் தடயவியல் மூலம் தீர்க்கப்பட்ட பிரபலமான மூன்று வழக்குகள். இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. உலகெங்கிலும் சிக்கலான, தீர்க்க முடியா பல வழக்குகளை தடயவியல் அறிக்கைகள் தீர்த்து வைத்திருக்கின்றன. “உண்மையின் அறிவியல்” (science of truth) என்று குறிப்பிடப்படும் தடயவியல் அறிவியல், பரந்த அளவிலான அறிவியல் நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை உள்ளடக்கி, முக்கியமான ஆதாரங்களை வெளிக்கொணரவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும், குழப்பமான கேள்விகளுக்குப் பதில்களை வழங்கவும், பல விடை தெரியா மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

பொதுவாக நாம் பார்க்கும் திகில் திரைப்படங்களில் காவல்துறை அதிகாரிகள் கைரேகைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காண்பர். க்ரைம் நாவல்களிலும், செய்திகளிலும் தடயவியல் அறிக்கை என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். கொலைக் குற்றங்களுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகளின் ஊழல் முதல், சமூக வலைத்தளங்களில் நடக்கும் ஆன்லைன் மோசடி வரை அக்கு வேறு ஆணி வேறாக அலசி சலித்து, குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பதில் தடயவியல் மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

உண்மையில் தடயவியல் என்றால் என்ன? ஒரு குற்றத்தைக் கண்டுபிடிப்பதிலும் நிரூபிப்பதிலும் அதன் முக்கியத்துவம் என்ன?

தடயவியல் என்றால் என்ன?  

Forensic Science

தடயவியல் என்பது சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் அறிவியலின் ஒரு பிரிவு. சொல்லப்போனால் குற்றவியல் நீதி அமைப்பின் ஒரு முக்கிய அங்கமே இதுவெனலாம். குற்றவியல் நீதி அமைப்புக்குத் தேவையான மிக முக்கியமான  சாட்சியங்களைத் தடயவியல் வழங்குகிறது. நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத போதும் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் தடயவியல் அறிக்கைகள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில், டிஜிட்டல் தடயவியல் ஒரு தவிர்க்க முடியாத துறையாகவே உருவெடுத்துள்ளது. கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களின் பெருக்கத்துடன் குற்றங்களும் அளவில்லாமல் பெருகிக் கிடக்கின்றன. இவ்வாறான சைபர் குற்றங்களின் போது,

ஏராளமான டிஜிட்டல் ஆதாரங்களை பிரித்தெடுத்து பகுப்பாய்வு செய்யவும், நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கவும், தகவல் தொடர்பு பதிவுகளை ஆய்வு செய்வதற்கும், என சைபர் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் தடயவியல் தவிர்க்க முடியாத ஒரு துறையாக மாறிவிட்டது. இது வரை திரை மறைவில் நடந்து வந்த தரவு மீறல்கள், அறிவுசார் திருட்டு, சொத்து திருட்டு, ஆன்லைன் மோசடி போன்ற பல சைபர் குற்றவாளிகளை எல்லாம் கையும் களவுமாகப் பிடித்து கம்பியெண்ண வைத்துக்கிறது தடயவியல்.

தடயவியல் நிபுணர்கள் குற்றக் காட்சிகளை ஆய்வு செய்து, அறிவியல் ஆதாரங்களைக் கண்டுபிடித்து, நீதிமன்றங்களில் முன்வைக்கின்றனர். இது ஒரு வழக்கின் போக்கையே முற்றாகத் திசை திருப்பும் சக்தி கொண்ட பிரம்மாஸ்திரம் போன்றது. ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்றோ அல்லது குற்றவாளி அல்ல என்றோ நிரூபிப்பதில் தடயவியல் பிரதான பங்கு வகிக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து வகை தரவுகளையும் உள்ளடக்கி, குற்றவியல், சிவில், ஒழுங்குமுறை மற்றும் சமூகச் சூழல்களில் நீதியை நிர்வகிக்க தடயவியல் உதவுகிறது. இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், உயிரியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல துறைகள் சான்று பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகின்றன. குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் குருதி, மயிர், நகம், கைவிரல் அடையாளம், எச்சில் எனப் பல்வேறு விடயங்களைச் சேகரித்து, தடயங்களை எடுத்து, அவற்றைச் சோதனைச் சாலையில் ஆராய்ந்து, நீதி மன்றத்தில் சாட்சியங்களாக மாற்றப்படுகிறது.

தடயவியலின் ஆரம்பத் தடம்

தடயவியல் அறிவியலின் ஆரம்பகால பயன்பாடு பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய சமூகங்களுக்கும் முந்தையது என்கிறது வரலாறு. பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்கள் மருத்துவத்துறையில், குறிப்பாக மருந்தியல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருந்தன. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எச்சில், நகம் மற்றும் உடல் உறுப்புகள் போன்றவை தடயங்களாகப் பெறப்பட்டு ஆராயப்பட்டன.

கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரோமானிய சொற்பொழிவாளரும் சட்டவியலாளருமான குயின்டிலியன் (Quintilian) குற்றம் சாட்டப்பட்ட ஒரு நிரபராதியை விடுவிக்க அடிப்படை தடயவியலைப் பயன்படுத்தினார். ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய பண்டைய சீனாவில் ஒரு விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு மிக அருகிலுள்ள வயல்களில் வேலை செய்யும் சந்தேகத்துக்கிடமான மூன்று விவசாயிகளைக் கிராமத்துச் சட்டத்தரணி ஒருவர் விசாரணை செய்யும்போது, அதில் ஒருவனது அரிவாளைச் சுற்றி ஈக்கள் மொய்க்கத் தொடங்கின. சுத்தமாகக் கழுவப்பட்டாலும், அரிவாளில் இரத்தத்தின் தடயங்களை அந்தப் பூச்சிகள் நுகர்ந்துவந்து மொய்த்தன என்றும் அதுவே தடயமாகப் பயன்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன. 

கிமு200 இல், ஒப்பந்தங்களில் கையெழுத்திட பாபிலோனியர்கள் கைரேகைகளைப் பயன்படுத்தினர். சீனாவில், கின் வம்சத்திலும் (Qin Dynasty) இந்தமுறை பயன்படுத்தப்பட்டது. 1248 ஆம் ஆண்டில், சாங் சி எழுதிய (Xi Yuan Lu) வாஷிங் அவே ஆஃப் ராங்ஸ் (Washing Away of Wrongs) எனும் நூலில், சீன நீதிமன்றங்களில் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்கான விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  அந்த நூலில் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவம் மற்றும் தடயவியலைப் பயன்படுத்துவதற்கான முறைகளைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். தடயவியல் மூலம் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் வழிகளைக் கூறிய ஆரம்பகால புத்தகங்களில் இது முக்கியமானது. மரணத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தை ஆராய்ந்து, விபத்து மரணத்தை, கொலையிலிருந்து வேறுபடுத்துவது எப்படி என்பதையும் இப் புத்தகம் விளக்கியது.  

தடயவியலில் முக்கியத் தடம் பதித்த பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகள்

தடயவியல் அறிவியல் பதினாறாம் மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் தான் அதீத முன்னேற்றத்தைக் கண்டது. 1600களில் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகம் (University of Leipzig) தடயவியல் மருத்துவத்தில் அதிகாரப்பூர்வமாகப் பட்டப் படிப்பைத் தொடங்கியது. அதே நூற்றாண்டின் பிற்பகுதியில், இத்தாலிய மருத்துவர் மார்செல்லோ மால்பிகி (Marcello Malpighi) மனிதக் கைரேகை வடிவங்களின் தனித்துவத்தை முதலில் கண்டறிந்தார். Father of Toxicology என்று அழைக்கப்படும் ஸ்பானிய வேதியியலாளர் மாத்தியூ ஓர்ஃபிலா (Mathieu Orfila) 1800களின் முற்பகுதியில் தடயவியல் அறிவியல் துறையின் முதல் விரிவான பாடப்புத்தகங்களில் ஒன்றை வெளியிட்டார். சுவிட்சர்லாந்தின் மருத்துவர் ஃபிரெட்ரிக் மீஷர் 1869 ஆம் ஆண்டில் நியூக்ளிக் அமிலத்தைத் தனிமைப்படுத்தி டி.என்.ஏவைக் கண்டுபிடித்தபோது நவீன தடய அறிவியல் அதன் புதிய பரிணாமத்தை எட்டியது.

ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டில் ஒருவரின் மர்மமான இறப்புக்கான காரணம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் வழக்கம், முதலில் மருத்துவப் பயிற்சியாளர்களால் தொடங்கப்பட்டது. ஆம்ப்ரோஸ் பாரே (Ambroise Paré) எனும் ஒரு பிரெஞ்சு இராணுவ அறுவை சிகிச்சை நிபுணர் முதன் முதலில் வன்முறையால் உண்டாகும் மரணம், மனித உள் உறுப்புகளில் ஏற்படுத்தும் விளைவை முறையாக ஆய்வு செய்தார். இத்தாலிய அறுவைசிகிச்சை நிபுணர்களான ஃபார்டுனாடோ ஃபிடெலிஸ் (Fortunato Fidelis) மற்றும் பாவ்லோ சாச்சியா (Paolo Zacchia) ஆகியோர் நவீன நோயியலின் (pathology) அடித்தளத்தை ஆராய்ந்தனர். பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அறிவியலில் ஏற்பட்ட ஜெட் வேக முன்னேற்றங்கள் தடயவியல் அறிவியலிலும் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அறிவியலின் பயன்பாடு அதிகரித்ததன் மூலம் தடயவியல் அடுத்தகட்டத்தை அடைந்தது.

நவீன தடய அறிவியல் தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்களுடன், தடயவியல் அறிவியல் துறையும் அதன் திறன்களை மேம்படுத்தும் அதிநவீன கருவிகள் மற்றும் நுட்பங்களை உள்ளடக்கி தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னேறிக்கொண்டே போகிறது. விழித்திரை ஸ்கேனிங்கிலிருந்து (retinal scanning), தடயச் சான்று வேதியியல் (Trace evidence chemistry) வரை, தற்போதுள்ள தடயவியல் தொழில்நுட்பங்கள் குற்றங்களைத் தீர்க்க உதவுவதில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.  டி.என்.ஏ பினோடைப்பிங், கைரேகை பகுப்பாய்விற்கான உயிரி உணர்வி (Bio sensor), இம்யூனோக்ரோமடோகிராபி, Forensic Palynology, எண்ணிமம் (Digital) வாகன தடயவியல், சமூக வலைப்பின்னல் தடயவியல் எனப் பல பிரிவுகள் வந்து விட்டன.

கார்பன் டாட் பொடிகள்

பல குற்றங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கு மிகப் பிரதானமாகப் பயன்படுவது கைரேகைகள். இருப்பினும் பல சமயங்களில் துல்லியமாகக் கைரேகை அடையாளங்களைப் பெறுவதில் பல சிக்கல்கள் இருந்து வந்தன. கைரேகை என்பது ஒரு தனிநபருக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான ஆதாரம். ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட கைரேகைகள் இருந்தாலும், அவற்றைப் பொருத்துவது தடயவியலில் பல வருடங்கள் அனுபவமுள்ள நிபுணர்களுக்குக் கூட பல நேரங்களில் கொஞ்சம் கடினமான விடயம் தான். ஏனெனில் தனிநபர்களிடையே கைரேகைகள் தனித்தனியாக இருந்தாலும், அவற்றின் வடிவங்கள் மிகவும் சிக்கலானதாகவும் மாறக்கூடியதாகவும் இருப்பதால், ஒரு பொருத்தத்தை அடையாளம் காண நன்கு பயிற்சியும் அனுபவமும் தேவைப்படுகிறது. தற்போது அதற்குத் தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஒளிரும் கார்பன் டாட் பவுடர் எனும் ஒன்றை (fluorescent carbon dot powder) உருவாக்கியுள்ளனர். புற ஊதா ஒளியின் கீழ் ஒளிரும் இவை, கைரேகைகள் படிந்த இடங்களில் போடப்படும் போது, சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும். இது கைரேகைகள் பகுப்பாய்வு செய்வதற்கு மிகவும் எளிதாகிறது. அதே போலக் கணினி தொழில்நுட்பமும் இந்த செயல்முறையை தற்போது மிகவும் எளிதாக்கி உள்ளது.

அடுத்த தலைமுறை வரிசைமுறை – Next-Generation Sequencing (NGS)

அடுத்த தலைமுறை வரிசைமுறை எனப்படும் இந்த உயர்-செயல்திறன் டிஎன்ஏ வரிசைமுறை நுட்பம், தடயவியல் மரபியலில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் பல டிஎன்ஏ குறிப்பான்களை ஒரே நேரத்தில் பகுப்பாய்வு செய்ய உதவுவதோடு மேம்பட்ட உணர்திறன், துல்லியம் மற்றும் வேகத்தையும் வழங்குகிறது. இது மனித டிஎன்ஏவின் சிக்கலான கலவைகளின் பகுப்பாய்விற்கு உதவுவதோடு சிதைக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளிலிருந்து தேவைப்படும் முக்கிய தகவல்களைப் பிரித்தெடுக்க NGS தொழில்நுட்பம் உதவுகிறது. இதனால் சந்தேக நபர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை அடையாளம் காண்பதற்கான சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI)

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) பல தசாப்தங்களாகப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றாலும் தடயவியல் அறிவியலுக்கு ஒப்பீட்டளவில் புதியது. குற்றவியல் வழக்கின் அனைத்து தடயவியல் கூறுகளிலும் சமீபத்திய முன்னேற்றங்களின் விளைவாக AI, டிஜிட்டல் தடயவியல் துறையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது. குற்றச் சம்பவத்தைப் பகுப்பாய்வு செய்யவும், கைரேகைத் தரவை ஒப்பிட்டுப் பார்க்கவும், புகைப்பட ஒப்பீடுகளிலிருந்து முடிவுகளை எடுக்கவும் எனப் பலவற்றிற்கும் இது அதிகளவில் இன்று பயன்படுத்தப்படுகிறது.

நானோ தொழில்நுட்பம்

அணு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பமும் நவீன தடய அறிவியலில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்து வருகின்றன. சட்டவிரோத போதைப்பொருட்கள், வெடிபொருட்கள் மற்றும் உயிரியல் ஆயுதங்கள் (Biological weapon) போன்றவற்றைக் கண்டுபிடிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் தடயவியலில் தற்போது நானோ உணரி (Nano sensors) பயன்படுத்தப்படுகின்றன.

புரோட்டீம்கள் (Proteomes)

புரோட்டியோம்கள் என்பது ஒரு உயிரினத்தால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களின் முழுமையான தொகுப்பாகும். விஞ்ஞானிகள் இரத்தம், எலும்புகள் மற்றும் பிற உயிரியல் பொருட்களில் புரோட்டீம்களைக் கண்டறிந்து அவற்றைப் பகுப்பாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஒரு சந்தேக நபரையோ அல்லது பாதிக்கப்பட்டவரையோ கண்டறிய இதுவரை காலமும் டிஎன்ஏவையே பெரிதும் நம்பி வந்தனர். இருப்பினும், புரதங்களைக் கண்டறிந்து அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புரோட்டியோம்களை ஒரு அத்தியாவசிய தடய அறிவியல் கருவியாகத் தற்போது மாற்றியுள்ளன.

மானுடவியல் – Anthropological

தடயவியலில் பயன்படுத்தப்படும் மானுடவியல் ஆய்வுகள் ஒரு நபரின் எலும்புகளை வைத்து அவரது இனம், பாலினம், வயது மற்றும் உயரத்தை வெளிப்படுத்தி விடுகிறது. தடயவியல் விஞ்ஞானிகள் எலும்புகளின் எக்ஸ்-கதிர்களை எடுத்து, அவற்றைக் காணாமல் போன நபரின் எக்ஸ்-கதிர்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காட்டுகின்றனர்

ஃபோல்ட்ஸ்கோப் (Foldscope)

ஃபோல்ட்ஸ்கோப் என்பது ஒரு சிறிய, இலகுவில் அகற்றக் கூடிய விலை குறைந்த, மலிவான காகித நுண்ணோக்கி ஆகும். அதன் பெயர்வுத்திறன் காரணமாக, இரத்தம், முடி மற்றும் மண் உள்ளிட்ட தடயவியல் மாதிரிகள் குறித்த இடத்திலேயே ஃபோல்ட்ஸ்கோப்பைப் பயன்படுத்தி பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும். ஃபோல்ட்ஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆரம்பநிலை மட்டுமே என்றாலும், அவை விசாரணையின் ஆரம்பக்கட்ட சட்ட அமலாக்கத்திற்கும், குற்றவாளியை நெருங்கவும் உதவலாம்.

டிஜிட்டல் தடயவியல்

நீதிமன்றத்தால் பயன்படுத்தக்கூடிய கணினி ஆதாரங்களைப் பாதுகாத்தல், அடையாளம் காணுதல், பிரித்தெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றின் செயல்முறையாக வரையறுக்கப்படுகிறது டிஜிட்டல் தடயவியல். சுருங்கச் சொன்னால், கணினி, தொலைப்பேசி, இணையம் போன்ற டிஜிட்டல் மீடியாவிலிருந்து ஆதாரங்களைக் கண்டறியும் அறிவியல் இது. குற்றவியல் மற்றும் தனிப்பட்ட விசாரணைகளில் டிஜிட்டல் தடயவியல் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு சாதன தடயவியல் சோதனை மின்னணு சாதனங்களை ஆய்வு செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் தகவல் தொடர்பு மற்றும் நகர்வுகள் பற்றி புட்டுப் புட்டு வைக்கிறது.

குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் குற்றத்தை நேரில்கண்ட சாட்சிகள் முக்கிய இடம் வகித்தாலும், பல்வேறு காரணங்களால் சாட்சிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக மாறுகின்றன. அவ்வாறான சமயங்களில் சட்டத்துக்கு கை கொடுப்பது தடயவியல் மட்டுமே. உலகெங்கிலும் லட்சக்கணக்கான கொலை வழக்குகள் தீர்க்கப்படாமல் கிடக்கின்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், கடத்தப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் என வருடக்கணக்கில் பல லட்சம் வழக்குகள் நீதிக்காகக் காத்திருக்கின்றன. அது போக, வேகமாகச் செல்லும் சமூக வலைத்தளங்களில் நிகழும் குற்றங்கள், மோசடி ஏமாற்று வழக்கு எனப் பல அப்பாவிகள் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது போன்ற திசை தெரியாமல் தத்தளிக்கும் மக்களுக்கான கலங்கரை விளக்கமாக நிற்கிறது தடயவியல்.

பல தசாப்தங்களாக நீதி கிடைக்காமல் புதையுண்டு கிடந்த பழமையான வழக்குகள் கூட தூசு தட்டப்படுகின்றன. செய்யாத குற்றத்துக்குத் தண்டிக்கப்பட்ட பல நிரபராதிகளின் கையில் உள்ள விலங்கை உடைக்கவும், இருளுக்குள் மறைந்திருக்கும் குற்றவாளிகளின் கைகளில் அதே விலங்கை மாட்டவும் என நீதியை நிலைநாட்டுவதில் தடயவியல் தவிர்க்க முடியாத ஒன்று.

சட்டத்தின் ஓட்டை வழியே புகுந்து தப்பிக்கப் பார்க்கும் பெருச்சாளிகளின் வழிகள் அடைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தடயவியலின் முன்னேற்றத்தால் நம்பிக்கையின் ஒளியைக் காணத்தொடங்கியுள்ளனர். குற்றவியல் நீதியமைப்பில் தடயவியல் இன்று ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.