வேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் – கா.சரவணன்

டைபாயிடு காய்ச்சலால் அவதிப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தபின் நான் சந்திக்கும் இலையுதிர் காலம் அது. மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். வெளியே வந்தபோது என்னுடைய தோற்றம் பார்ப்பதற்குப் பலவீனமாகவும் தள்ளாட்டத்துடனும் இருந்தது. வேலை தேடி நான் விண்ணப்பித்திருந்த இரண்டு மூன்று எஜமானிகள் என்னை வேலையில் சேர்த்துக்கொள்ளத் தயங்கினார்கள். அந்த அளவுக்கு இருந்தது எனது தோற்றம். கையில் வைத்திருந்த பணத்தில் பெரும்பகுதி செலவாகி இருந்தது. இரண்டு மாதங்கள் எப்படியோ சமாளித்தபின் வேலை வாய்ப்பு அலுவலகங்களைச் சுற்றிக்கொண்டும், அவ்வப்போது வருகின்ற பார்ப்பதற்குக் கௌரவமாகத் தோன்றும் விளம்பர அழைப்புகளுக்குப் பதில் எழுதிக்கொண்டும் காலம் கடத்திக் கொண்டிருந்தேன். நம்பிக்கை அடியோடு போய்விட்டதைப் போல உணர்வு. கிடைக்காத வேலையைப்பற்றிப் புலம்புவதால் மட்டும் நான் கொழுத்துப் போய்விடப் போகிறேனா என்ன? கண்ணுக்கெட்டிய தூரம் என்னுடைய துரதிர்ஷ்டம் திடீரென்று அதிர்ஷ்டமாக மாறுவதற்கான எந்த ஒரு காரணியும் தென்படவில்லை. ஆஹா… இப்போது மாறிவிட்டதைப்போல இருக்கிறது அல்லது அப்படி மாறிவிட்டது என்று நான்தான் அந்த நேரத்தில் கற்பனை செய்து கொண்டேனா தெரியவில்லை. ஒருநாள் வழியில் யாரோ ஒரு எஜமானிக்குத் தோழியான ராயில்ட்டன் என்பவளைச் சந்திக்க நேர்ந்தது. அவள்தான் என்னை அமெரிக்காவுக்கு முதன் முதலில் கூட்டிக்கொண்டு வந்தவள். என்னை வழிமறித்து குசலம் விசாரித்தாள். நான் நட்புடன் அன்பாகப் பழகும் சிலருள் அவளும் ஒருத்தி. என்னுடைய வெளிறிப்போன தோற்றத்தைப் பார்த்து எனக்கு ஏதும் உடல் நலக்குறைவு இருக்கிறதா என்று விசாரித்தாள். நான் விவரத்தைச் சொன்னவுடன் “அப்படியா… ஹார்ட்லி… உனக்குத் தகுதியான இடம் ஒன்று என்னிடம் இருக்கிறது. நாளைக்கு என்னை வந்து பார். அதைப்பற்றி நாம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டாள்.

அடுத்த நாள் நான் அவளை அழைத்தபோது எனக்காக அவள் பார்த்திருக்கும் எஜமானி வேறு யாருமல்ல; அவளுடைய மருமகள் திருமதி ப்ரைம்டன் தான் அது என்று சொன்னாள். அவள் பார்ப்பதற்கு ஓரளவு இளமையாக இருப்பவள்தான். ஆனால் ஏதோ பெரிய உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று சொன்னாள். நகர வாழ்க்கையின் இழுப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் வருடத்தின் எல்லா நாட்களிலும் ஹட்சன் அருகில் இருக்கும் தன்னுடைய பண்ணை வீட்டில் தனியாகத் தங்கியிருக்கிறாள் என்ற தகவலையும் தெரிவித்தாள்.

“ஆக ஹார்ட்லி…நான் சொல்வதை நன்றாகக் கவனி” –என்னுடைய கெட்ட காலம் எல்லாம் தொலைந்து நல்ல காலம் பிறக்கப்போகிறது என்று எண்ணும்படியான ஓர் உற்சாகத் தொனியில் பேச ஆரம்பித்தாள். “நான் சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் நீ.  நான் உன்னை அனுப்பும் இடம் ஒன்றும் மகிழ்ச்சி பொத்துக்கொண்டு வழியும் இடம் அல்ல. அந்த வீடு ஒரு பெரிய வீடு. சோகம் கப்பிக் கிடக்கும். என்னுடைய மருமகளும் எப்போதும் ஏதோ ஒரு பதட்டத்திலேயே இருப்பவள். வறண்ட மனநிலையில் இருப்பவள். அவளுடைய கணவன் பொதுவாக வீட்டில் தங்க மாட்டான். பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இதுவே ஒரு வருடத்திற்கு முன்பாக இருந்திருந்தால் உன்னைப் போன்ற அழகான துடிப்பான சிறுமியை அந்தக் கிடங்கில் கொண்டு போய் வீச நினைத்திருக்க மாட்டேன். ஆனால் தற்போது நீ இருக்கும் நிலைமையில் இது தேவலாம் என்று தோன்றுகிறது. என்ன நான் சொல்வது உண்மைதானே. அமைதியான இடம். சுத்தமான காற்று. வயிறு நிறைய உணவு. கொஞ்சமான வேலை நேரம். இதுதானே உனக்கு இப்போது வேண்டியது.” என்னைப் பார்க்கும்போது நான் ஏதோ ஒன்றுமில்லாத பராரியைப் போலத் தெரிந்தேனோ என்னவோ. “இதைச் சொல்வதால் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளாதே. அந்த இடம் உற்சாகம் இல்லாத இடம்தான். இருந்தாலும் நீ அங்கே மகிழ்ச்சி இல்லாதவளாய் இருக்க மாட்டாய்” என்று சொன்னாள். “என்னுடைய மருமகள் இருக்கிறாளே! அவள் ஒரு தேவதை மாதிரி. சென்ற வசந்த காலத்தில் இறந்து போன அவளுடைய வேலைக்காரி அவளுடன் இருபது வருடங்களாக இருந்தவள். இவள் நடந்து சென்ற நிலத்தைக் கூட வணங்கும் அளவுக்கு விசுவாசமாக இருந்தவள். எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்ளும் எஜமானி அவள். இதெல்லாம் உனக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும்?. எங்கு எஜமானி அன்பானவளாக இருக்கிறாளோ அங்கே அவளுடைய வேலையாட்களும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். அதனால் அங்கிருக்கும் மற்ற வேலையாட்களுடன் நீயும் சுலபமாக ஒன்றாகக் கலந்து பழகி விடுவாய். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உன்னைப் போல ஒரு பெண்ணைத்தான் நான் என்னுடைய மருமகளுக்குத் தேடிக் கொண்டிருந்தேன்- அமைதியானவளாக, நாகரீகம் தெரிந்தவளாக, வேலைக்குத் தேவையான படிப்பைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகப் படித்தவளாக. உனக்குச் சத்தமாக வாசிக்கத் தெரியும் என்று நம்புகிறேன். அது ரொம்ப நல்ல விஷயம். பிறர் வாசிக்கக் கேட்பது என்னுடைய மருமகளுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தோழியைப் போன்று அமைகின்ற ஒரு வேலைக்காரியைத்தான் அவளும் விரும்புகிறாள். அவளுடைய பழைய வேலைக்காரியை அவள் எந்த அளவுக்கு இழந்து நிற்கிறாள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது ஒரு தனிமை வாழ்வு….அதிருக்கட்டும். நீ என்ன முடிவு செய்துவிட்டாயா?”

“நான் என்ன சொல்லப் போகிறேன். தனிமை குறித்து நான் என்றும் பயந்தது இல்லை”

“நல்லது…அப்படியென்றால் நீ கிளம்பு. நான்தான் உன்னை அனுப்பினேன் என்று சொன்னால் என் மருமகள் உன்னை ஏற்றுக்கொள்வாள். நானும் உடனே அவளுக்குத் தந்தி ஒன்று அனுப்பி விடுகிறேன். நீ இன்று மாலை ரயிலைப் பிடித்தால் போய்விடலாம். தற்சமயம் அவளைப் பார்த்துக்கொள்ள எவருமில்லை. நீ நேரம் தாழ்த்துவதை நானும் விரும்பவில்லை”

நான் கிளம்புவதற்குத் தயாரானபோது எனக்குள் ஏதோ ஒரு பொறி தட்டி என்னைப் பின்னே இழுத்தது. இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து “அவருடைய கணவனைப் பற்றி ஏதோ சொன்னீர்களே” என்று இழுத்தேன்.

“அதான் சொன்னேனே. அந்த ஆள் எப்போதும் வெளியேதான் இருப்பான். என்று சொன்ன ராயில்ட்டன் திடீரென்று இதையும் சேர்த்துக் கொண்டாள். “அந்த ஆள் இருக்கும்போது நீ அவன் கண்ணில் படக்கூடாது. தூரமாக இருக்க வேண்டும்”.

அன்று மதிய ரயிலைப்பிடித்து D—ரயில் நிலையத்துக்குச் சுமார் நான்கு மணிக்கு வந்து சேர்ந்தேன். யாரோ ஒரு மாப்பிள்ளை நாய்-வண்டியில் உட்கார்ந்திருந்தான். சீரான வேகத்தில் எங்கள் வண்டி போய்க் கொண்டிருந்தது. அது அக்டோபர் மாதத்தின் ஒரு மந்தமான நாள். தலைக்கு மேல் இப்பவோ அப்பவோ என்பது போல மழை பொழிவதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. ப்ரைம்டன் இருக்கும் வனப்பகுதிக்குள் நாங்கள் நுழைந்த போது சூரிய வெளிச்சம் சுத்தமாக இல்லாமல் போயிருந்தது. காட்டுக்குள் ஓரிரு மைல் தூரத்திற்கு வண்டி நெளிந்தும் வளைந்தும் சென்று கொண்டிருந்தது. உயரமாகக் கறுப்பாக வளர்ந்திருந்த புதர்கள் பரவிக்கிடந்த செம்மண் பரப்பப்பட்ட மைதானம் ஒன்றில் வந்து வண்டி நின்றது. ஜன்னல்களிலிருந்து எந்த வெளிச்சக் கற்றையும் வரவில்லை. நிஜமாகவே அந்த வீடு பார்ப்பதற்கு ஒரு வித இருண்மையுடன்தான் காணப்பட்டது. 

என்னுடன் வந்த மாப்பிள்ளையிடம் நான் எந்தக் கேள்விகளையும் கேட்கவில்லை. என்னுடைய முதலாளியைப்பற்றி மற்ற வேலைக்காரர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளப் பிரியப்படும் ரகத்தைச் சேர்ந்தவள் அல்ல நான்.  காத்திருந்து நானே தெரிந்து கொள்ள விரும்பினேன்.  மேலோட்டமாகப் பார்த்த மாத்திரத்தில் நான் சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறேன் என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அங்கிருந்த எல்லா பொருட்களும் ஒரு நேர்த்தியுடன் அமைக்கப்பட்டு இருந்தன. அழகிய முகத்தோற்றம் கொண்ட சமையல்காரி ஒருத்தி பின் கதவு வழியாக வந்து என்னைச் சந்தித்தாள். இன்னொரு வேலைக்காரியை அழைத்து “எஜமானி ப்ரைம்டனை பார்க்க வந்திருக்கிறாள்” என்று சொல்லிவிட்டு என்னுடைய அறை எதுவெனக் காட்டும்படி அவளிடம் சொன்னாள். பின்னர் என்னைப் பார்த்து “எஜமானியைப் பின்னர் சந்தித்துக் கொள்ளலாம்” என்றாள்.                       

எஜமானி ப்ரைம்டனை இத்தனை பார்வையாளர்கள் பார்ப்பதற்காக வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் அந்த வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. அந்த வேலைக்காரியைத் தொடர்ந்து மாடிப்படி ஏறினேன். மாடியில் லேசாகத் திறந்திருந்த கதவினூடே பார்த்தேன். அந்த வீட்டின் பெரும்பகுதி தேவையான சாமான்களுடன் கருமை நிற சட்டங்களுடனும் பழைய கால ஓவியங்களுடனும் ஒழுங்குபடுத்தப்பட்டுக் காட்சி தந்தது. மாடிப்படிகளின் வழியாக இன்னும் கொஞ்சம் ஏறிப்போனால் வேலையாட்களின் இருப்பிடம் வந்தது. அந்த இடம் ஏறக்குறைய இருட்டில் இருப்பது போலத் தெரிந்தது. கைவிளக்கு கொண்டுவர மறந்ததற்கு வேலைக்காரி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். “கவலைப்படாதே. உன்னுடைய அறையில் தீப்பெட்டி இருக்கிறது” என்று சொன்னாள். “நீ கவனமாக நடந்தால் எந்தப் பிரச்சினையும் வராது. இந்த வராண்டாவின் முடிவில் படிக்கட்டு வரும். கவனம். உன்னுடைய அறை அதைத் தாண்டித்தான் இருக்கிறது” என்றாள்.

அவள் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த வராண்டாவின் பாதி தூரத்தில் பெண்ணொருத்தி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன்.  நாங்கள் கடந்து சென்றபோது அவள் விலுக்கென்று தனது தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள். வேலைக்காரி அவளைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வெளிறிப்போன முகத்துடன் ஒல்லியான தோற்றத்துடன் கரிய நிறத்தில் மேலங்கி ஒன்றையும் சமையலுடை ஒன்றையும் அணிந்து இருந்தாள் அவள். வீட்டைச் சுத்தம் செய்யும் பெண்ணாக இருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன். அவள் எதுவும் பேசாமல் நகர்ந்தது ஏதோ முரணாகத் தோன்றியது. செல்லும்போது என்னை நோக்கி ஆழ்ந்த பார்வை ஒன்றை வீசிவிட்டு நகர்ந்தாள். வராண்டாவின் முடிவிலிருந்த சதுர வடிவிலான ஹால் ஒன்றில் என்னுடைய அறை அமைந்திருந்தது. என்னுடைய அறைக்கதவுக்கு எதிரே இருந்த அறையின் கதவு பாதி திறந்த நிலையிலிருந்தது. அதைப்பார்த்த வேலைக்காரி சற்று நிதானித்தாள்.  

“இந்த ப்ளைண்டர் எப்ப பார்த்தாலும் கதவைத் திறந்து வைத்துவிட்டுச் சென்று தொலைக்கிறாள்” என்று சலிப்பாகச் சொல்லிக்கொண்டே கதவை மூடினாள்.

“யாரந்த ப்ளைண்டர்? வீட்டைச் சுத்தம் செய்பவளா?”

“வீட்டைச் சுத்தம் செய்பவர் என்று இங்கே யாருமில்லை. ப்ளைண்டர் இங்கிருக்கும் சமையல்காரி.”

“இந்த அறை அவளுடையதா?”

“ஐயோ…இல்லை” என்று குறுக்கிட்டவளாய், “இது யாருடைய அறையும் இல்லை. காலியாகத்தான் இருக்கிறது. அதாவது இந்தக் கதவைத் திறந்து வைத்துப் போகவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்ல வந்தேன். எஜமானியம்மா ப்ரைம்டன் இந்த அறையை எப்போதும் பூட்டிவைக்குமாறு சொல்லியுள்ளார்” என்றாள்.

அவள் என்னுடைய அறையைத் திறந்தாள். அழகாக நேர்த்தியாகத் தேவையான சாமான்கள் பொருத்தப்பட்டுச் சுவர்களில் ஒன்றிரண்டு ஓவியங்களுடன் அந்த அறை காட்சியளித்தது. மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிய பின் வேலையாட்களுக்கு ஆறு மணிக்குத் தேநீர் கிடைக்கும் என்றும் அதன் பிறகு எஜமானியம்மா ப்ரைம்டனை சந்திக்கலாம் என்றும் சொல்லிவிட்டு வேலைக்காரி விடை பெற்றுக்கொண்டாள்.

ஹாலில் கூடியிருந்த வேலையாட்களைப் பார்த்தபோது மென்மையான குணம் கொண்டவர்களாகத்தான் தெரிந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து எனக்கு ஒன்று புரிந்தது. ராயில்ட்டன் சொன்னது போல எஜமானியம்மா ப்ரைம்டன் மிகவும் இரக்க சிந்தனை கொண்டவள்தான். வெளுத்த முகத்துடன் கருப்பு அங்கி அணிந்துகொண்டு நின்ற அந்தப் பெண்ணை என் கண்கள் தேடிக்கொண்டிருந்ததால் அங்கிருந்த வேலையாட்கள் பேசிக் கொண்டதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அந்தப்பெண் அங்கே வரவில்லை. ஒருவேளை தனியாகச் சாப்பிடுகிறாளோ என்று எண்ணினேன். அவள் வீட்டைச் சுத்தம் செய்பவள் இல்லை என்றால் அவள் யாராக இருக்கக்கூடும்? குழம்பிக்கொண்டு நின்றேன். திடீரென்று இப்படித் தோன்றியது. ஒருவேளை அவள் பயிற்சி பெற்ற ஒரு செவிலிப்பெண்ணாக இருப்பாளோ என்று. அவள் அப்படி இருக்கும் பட்சம் கண்டிப்பாக அவளுக்கான உணவு அவளுடைய அறையில்தான் பரிமாறப்படும். ப்ரைம்டன் நிஜமாகவே அந்த அளவு பலவீனமானவளாக இருக்கும் பட்சம் ஒரு செவிலியைத் துணைக்கு வைத்துக் கொள்வதில் நியாயம் இருக்கத்தானே செய்யும். இப்படி நினைப்பதே எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இந்த மாதிரியான செவிலிகளைச் சமாளிப்பது சிரமமான விஷயம் இல்லையா. இது எனக்குத் தெரிந்திருந்தால் அந்த வேலையைச் செய்ய நான் வந்திருக்கவே மாட்டேன். ஆனால் என்ன செய்வது. வந்துவிட்டேனே. இதைப்பற்றி முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வதால் என்ன பயன் வந்து விடப்போகிறது? கேள்விகள் கேட்கும் இடத்தில் நான் இல்லை என்ற நிதர்சனம் புரிந்த பின் இனி நடக்கப்போவது என்ன என்பதைப் பார்க்கக் காத்திருக்கத் தொடங்கினேன்.

எல்லோரும் தேநீர் அருந்தி முடித்த பின்னர் வேலைக்காரி அங்கு நின்றுகொண்டிருந்த ஏவலாளியை நோக்கிக் கேட்டாள்: “ரான்ஃபோர்டு அங்கிருந்து சென்று விட்டாரா?”. அவன் ஆமாம் என்று சொன்னதும் என்னைப்பார்த்து ப்ரைம்டனைப் பார்க்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றாள்.

ப்ரைம்டன் தனது படுக்கையில் படுத்திருந்தாள். அவளிருந்த இடம் கனப்பு அடுப்பு இருக்குமிடத்துக்கு அருகிலிருந்தது. அருகில் குடுவை ஒன்று போர்த்தியதைப் போன்ற விளக்கு ஒன்று ஒளிர்ந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் மென்மையான பெண்ணாகத் தெரிந்தாள். அவள் சிரித்த சிரிப்பு ஒன்று போதும். அவளுக்காக நான் செய்ய முடியாதது என்று எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணத் தோன்றியது. சத்தம் அதிகம் வராத இனிமையான குரலில் எனது பெயர், வயது பற்றிய தகவல்களைக் கேட்டுக்கொண்டாள். எனக்குத் தேவையான எல்லாம் கிடைத்ததா என்றும் இப்படி தூரமாக வந்து தனியாக இருப்பதில் பயம் இல்லையா என்றும் கேட்டு வைத்தாள்.

“உங்களுடன் இருக்கும்போது எனக்கென்ன பயம் மேடம்?” என்றேன். நான் பேசிய வார்த்தைகள் எனக்கே ஆச்சரியமாக இருந்தன. காரணம் நான் ஒன்றும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடிய ரகத்தைச் சேர்ந்தவள் இல்லை. ஏதோ என் மனதில் சத்தமாக முட்டிமோதிக் கொண்டிருந்த வார்த்தைகள் என்னை அறியாமல் வெளியே வந்து விழுந்திருக்க வேண்டும்.

நான் சொன்னது அவளை மகிழ்வித்திருக்க வேண்டும். இதே மன நிலையில் இங்கே நான் எப்போதும் இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகச் சொன்னாள். அவளுடைய கழிவறையைப் பற்றிச் சில விஷயங்கள் சொன்னாள். அவளுடைய பொருட்கள் எங்கு வைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை மறுநாள் காலை வேலைக்காரி அக்னஸ் சொல்வாள் என்றும் தெரிவித்தாள்.

“இன்று இரவு எனக்குக் களைப்பாக இருக்கிறது. மாடியிலேயே நான் சாப்பிட்டு விடுகிறேன். அக்னஸ் என்னுடைய சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வரட்டும். அந்தச் சமயம் உன்னுடைய சாமான்களைப் பிரிப்பதற்கும் தங்கும் இடத்தைத் தயார் செய்துகொள்ளவும் உனக்கு நேரம் கிடைக்கும். பிறகு வந்து நீ என்னுடைய உடைகளைக் கலையலாம்.” என்று சொன்னாள்.

“மிகவும் நல்லது மேடம். நீங்கள் மணியடித்து என்னை அழைப்பீர்கள் என்று நினைக்கிறேன்.” என்றேன் நான்.

அதைக் கேட்டதும் அவள் முகம் ஏனோ மாறியது.

“இல்லை. அக்னஸ் உன்னைக் கூட்டிக்கொண்டு வருவாள்.” என்று படக்கென்று சொல்லிவிட்டு தன்னுடைய புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள்.

என்ன இது விந்தையாக இருக்கிறது?- எப்போதெல்லாம் எஜமானிக்குத் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் எஜமானியின் வேலைக்காரியை இன்னொரு வேலைக்காரி அழைத்துக் கொண்டு வர வேண்டும். அந்த வீட்டில் மணி எதுவும் இல்லையோ என்று யோசித்தேன். ஆனால் அந்தச் சந்தேகம் அடுத்த நாளே தீர்ந்தது. ஒவ்வொரு அறையிலும் மணி இருந்தது. எஜமானியின் அறையிலிருந்து என்னுடைய அறைக்குப் பிரத்தியேகமான மணி ஒன்று இருந்தது. அப்படி இருக்க எஜமானி ப்ரைம்டன் என்னை அழைக்க விரும்பும் போதெல்லாம் அக்னஸை கூப்பிடுவதும், அவள் வேலையாட்கள் இருக்கும் இடத்தை எல்லாம் மொத்தமாகக் கடந்து வந்து என்னை அழைத்துச் செல்ல மெனக்கெடுவதும் எதற்கு என்று நினைக்கும்போது விந்தையாக இருந்தது.  

ஆனால் அது மட்டும்தான் அந்த வீட்டில் விந்தையான விஷயம் என்று நினைத்துவிட வேண்டாம். எஜமானி ப்ரைம்டனுக்கு செவிலிப்பெண் என்று யாருமே கிடையாது என்பது மறுநாளே எனக்குத் தெரிந்து விட்டது. முந்தைய நாளின் மதியப் பொழுதில் வராண்டாவில் நான் பார்த்த பெண் யார் என்று அக்னஸிடம் கேட்டேன். அவள் அப்படி யாரையும் பார்க்கவில்லை என்று சொன்னாள்.  நான் ஏதோ கனவு கண்டு உளறிக் கொண்டிருக்கிறேன் என்று அவள் நினைப்பது எனக்குப் புரிந்தது. சரியாகச் சொல்வதென்றால் அது ஒரு அந்தி சாயும் நேரம். அப்போதுதான் நாங்கள் வராண்டாவைக் கடந்து கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான் கைவிளக்கு கொண்டு வராதது குறித்து வேலைக்காரி மன்னிப்புக் கேட்டாள். அந்தப் பெண்ணை நான் நன்றாகப் பார்த்தது நினைவிலிருக்கிறது. இன்னொரு தடவை அவளை நான் சந்திக்க நேரிட்டால் கண்டிப்பாக அவளை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவள் அனேகமாகச் சமையல்காரியின் தோழியாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அல்லது அங்கிருக்கும் எத்தனையோ வேலைக்காரிகளில் ஒருத்தியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.  ஒருவேளை நகரத்திலிருந்து வந்து அங்கே ஒரு இரவு தங்கிவிட்டுச் செல்வதற்காக வந்திருக்கலாம். அதை இந்த வேலைக்காரர்கள் ஏதோ ரகசியம் என்று என்னிடமிருந்து மறைக்கிறார்கள் என்று நினைத்தேன். தங்கள் வீட்டில் இரவு நேரத்தில் வந்து தங்கி விட்டுச் செல்லும் நண்பர்களைப் பற்றி யாரிடமும் பிரஸ்தாபிக்காமல் கறாராக வாய்மூடி இருப்பது சில வேலைக்காரிகளுக்கு வழக்கம்தான். எது எப்படியோ இதற்கு மேல் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாது என்று எனக்குள் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.

அடுத்த ஓரிரு நாட்களில் இன்னொரு விந்தையான சம்பவம் நடந்தது. ஒருநாள் மதியம் நான் ப்ளைண்டரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவள் எல்லோரிடமும் சகஜமாக நட்பு பாராட்டிப் பேசும் பழக்கம் உடையவள். அந்த வீட்டில் மற்ற எல்லோரைக் காட்டிலும் அதிக நாட்கள் வேலை பார்த்துக் கொண்டிருப்பவளும் அவள்தான். நான் அங்கே மகிழ்ச்சியாக இருக்கிறேனா எனக்குத் தேவையான எல்லாம் கிடைத்து விட்டனவா என்றெல்லாம் என்னிடம் வினவிக் கொண்டிருந்தாள். தங்குமிடம் பற்றியும் எஜமானி பற்றியும் குறை சொல்ல ஒன்றுமில்லை என்று சொன்னேன். இவ்வளவு பெரிய வீட்டில் எஜமானியின் வேலைக்காரிக்கென்று தையல் மிஷினோடு கூடிய அறை எதுவுமே கண்ணில் படாமல் இருப்பது பெருத்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது என்று அவளிடம் சொன்னேன்.

“ஏன்? அங்கேதான் ஒரு தையல் மிஷின் இருக்கிறதே! நீ தங்கி இருக்கிறாயே. அந்த அறைதான் பழைய தையல் மிஷின் அறை” என்று பதில் அளித்தாள் அவள்.

“ஓ…இதற்கு முன்னால் இருந்த எஜமானியின் வேலைக்காரி எங்கே தூங்குவாள்?”

இதைக் கேட்டதும் குழம்பிப்போனவளைப் போல விழித்தாள். கடந்த வருடம் எல்லா வேலையாட்களின் இருப்பிடங்களை மாற்றிவிட்டார்கள் என்றும் அவளுக்கு எதுவும் சரியாக நினைவில் இல்லை என்றும் சொல்லி மழுப்பிவிட்டாள்.

அவள் சொன்னது என்னுடைய குழப்பத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அவள் சொன்னதைச் சரியாகக் கேட்காதது போல இருந்து விட்டேன்.

“இருக்கட்டும். என்னுடைய அறைக்கு எதிரில் ஓர் அறை காலியாகக் கிடக்கிறது. அதை வேண்டுமானால் நான் தையல் அறையாகப் பயன்படுத்திக் கொள்ளட்டுமா?”

இதைக் கேட்டதும் அவள் முகம் பேயறைந்தது போல ஆனது. அதைப் பார்த்த எனக்கு இன்னும் குழப்பம் அதிகமானது. எனது கைகளை அவளது கைகளுக்குள் வைத்து மெதுவாக அழுத்தினாள்.  “தயவு செய்து அதைமட்டும் செய்யாதே தங்கமே” – நடுங்கிக்கொண்டே சொன்னாள் அவள். “உண்மையைச் சொல்வதென்றால் அந்த அறை எம்மா சாக்சனின் அறை. அவள் செத்துப் போன நாளிலிருந்து என்னுடைய எஜமானி அந்த அறையைப் பூட்டியே வைத்திருக்கிறாள்”.  

“யாரந்த எம்மா சாக்சன்? “

“அவள்தான் எஜமானி ப்ரைம்டனின் முன்னாள் வேலைக்காரி”

“நெடுங்காலமாய் எஜமானியோடு இருந்தவள் இவள்தானா?” என்று சொல்லிக் கொண்டே ராயில்ட்டன் அவளைப் பற்றிச் சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

ப்ளைண்டர் தலையை ஆட்டி ஆமோதித்தாள்.

“எந்த மாதிரியான பெண் அவள்?”

“இதுவரை வாழ்ந்தவர்களில் அவளை விடச் சிறந்தவள் என்று யாரையும் சொல்ல முடியாது. என்னுடைய எஜமானி அவளைத் தன்னுடைய சொந்த சகோதரியைப்போலப் பாவித்தாள்.” என்றாள் ப்ளைண்டர்.

“இருக்கட்டும். நான் கேட்க வந்தது வேறு. அவள் எப்படித் தோற்றமளிப்பாள்?”

ப்ளைண்டர் உடனே எழுந்துவிட்டாள். என்னைப் பார்த்து முறைத்தாள். “இதையெல்லாம் விளக்குவதற்கு எனக்குச் சாமர்த்தியம் போதாது. பணியாரம் வெந்து விட்டது என்று நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சமையல்கட்டுக்குள் ஓடிப்போய் கதவைச் சடாரென்று பூட்டிக்கொண்டாள்.

2

ப்ரைம்டன் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருப்பேன். அதற்கு அப்புறம்தான் அந்த வீட்டு முதலாளியைச் சந்திக்கும் சமயம் வாய்த்தது.  ஒருநாள் மதியம் அந்த ஆள் வரப் போவதாகச் செய்தி வந்தது. செய்தி வந்தவுடன் மொத்த வீடும் மாறிப்போனது. அங்குள்ள எவருக்கும் அவனைச் சுத்தமாகப் பிடிக்காது என்பது ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.  அன்றிரவு உணவு வேளையின் போது ப்ளைண்டர் என்றைக்கும் இல்லாத மாதிரி வினோதமாக நடந்துகொண்டாள். சமையல்கட்டில் இருக்கும் உதவியாளை அவள் மாற்றிய விதம் அது வரைக்கும் யாரும் கண்டிராத ஒன்று. எப்போதும் இறுகிய முகத்துடன் குறைவாகப் பேசும் பழக்கமுள்ள பரிசாரகன் வாஸ் கூட ஏதோ இழவு விழுந்த வீட்டுக்குப் போவதைப் போல தன்னுடைய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அவன் பைபிளை மிக ஈடுபாட்டுடன் படிக்கும் மனிதன். அழகாக அச்சிடப்பட்ட பைபிளின் பலவித பதிப்புகள் அவன் கைவசம் இருக்கும். ஆனால் அன்றைய தினம் பேசுவதற்கு அவன் பயன்படுத்திய வார்த்தைகள் மிகப் பயங்கரமானதாக இருந்தன. அதைக் காது கொடுத்துக் கேட்கமுடியாமல் நான் சாப்பாட்டு மேசையை விட்டு எழ முயற்சி செய்த போது ‘கவலைப்படாதே. இதெல்லாம் இறைவனின் வார்த்தைகள்’ என்று சொல்வான். எப்பொழுதெல்லாம் வீட்டு முதலாளி வருகிறானோ அப்பொழுதெல்லாம் வாஸ் இறைத்தூதரின் வார்த்தைகளுக்குள் தஞ்சம் அடைந்து விடுவான்.

சுமார் ஏழுமணி வாக்கில் எஜமானியின் அறைக்கு வருமாறு அக்னஸ் என்னை அழைத்தாள். அங்குச் சென்ற போதுதான் ப்ரைம்டனின் கணவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். கனப்பு அடுப்புக்கு மேல் அவன் நின்று கொண்டிருந்தான். காளைமாட்டைப் போலிருந்தது அவனுடைய கழுத்து. முகம் சிவந்துபோயும், எரிச்சலைக் கக்கிக் கொண்டிருக்கும் கண்களுடனும் அவன் தோற்றம் தந்தான். இவனை முதன் முதலில் பார்க்கும் இளம் யுவதிகள் இவ்வளவு அழகாக இருக்கிறானே என்று நினைப்பது சாத்தியம்தான்; அதே சமயம் இந்தக் கருமம் பிடித்தவனைப் போய் அழகானவனாக நினைத்தோமே நம் புத்தியைச் செருப்பால்தான் அடிக்க வேண்டும் என்று பின்னால் நொந்து கொள்வதும் சாத்தியம்தான்.

நான் உள்ளே நுழைந்தபோது அவன் கீழே குதித்தான். என்னை நோக்கி ஆழமான பார்வை ஒன்றை வீசினான். ஒரு நொடிப்பொழுதுதான். அவனுடைய பார்வைக்கு என்ன அர்த்தம் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. நான் முன்பு வேலை பார்த்த இடங்களில் கிடைத்த அனுபவங்களினால் இந்த மாதிரியான பார்வைக்கு என்ன அர்த்தம் என்பதை என்னால் உறுதியாக ஊகிக்க முடியும். பிறகு அவன் தன்னுடைய முதுகை என்னை நோக்கித் திருப்பிக்கொண்டு தனது மனைவியிடம் பேசுவதைத் தொடர்ந்தான். அதற்கும் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாமல் இல்லை. அவன் நினைப்பது போலச் சுலபமாகக் கிடைக்கும் பிடிசோறு அல்ல நான். டைபாயிடு காய்ச்சல் எனக்குச் சில வாழ்வியல் பாடங்களை நல்ல விதத்தில் கற்றுக் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறது. இந்த மாதிரி கோணங்கிகளை எவ்வளவு தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அந்தப் பாடங்களில் ஒன்று.

“இவள்தான் என்னுடைய புதிய பணிப்பெண். பெயர் ஹாட்லி”- தன்னுடைய வழக்கமான கனிந்த குரலில் என்னை அறிமுகப்படுத்தினாள் திருமதி ப்ரைம்டன். அவன் தலையை மட்டும் ஆட்டி விட்டுப் பேசுவதைத் தொடர்ந்தான்.

எஜமானியை மதிய உணவுக்குத் தயார் செய்ய உடையணிய வேண்டி இருந்ததால் ஓரிரு நிமிடங்களில் அவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.  அவள் முகம் எந்த அளவு வெளிறிப்போய் உடல் சில்லிட்டுப் போயிருப்பதை அவளுக்காகக் காத்திருந்த நேரத்தில் தொட்டுப் பார்க்கும்போது புரிந்து கொண்டேன்.

அடுத்த நாள் காலை எஜமானியின் கணவன் விடைபெற்றுக்கொண்டான். அவன் வண்டியைக் கிளப்பிக்கொண்டு வெளியே சென்ற போது மொத்த வீடும் பெரிய நிம்மதிப் பெருமூச்சு விட்டது. கோட்டு ஒன்றையும் (அது குளிர்காலம் என்பதால்) தொப்பி ஒன்றையும் அணிந்துகொண்டு என்னுடைய எஜமானியம்மா தோட்டத்தில் நடப்பதற்காக வெளியே வந்தாள். திரும்பி வரும்போது முகம் ரோஜாப் பூவைப் போலச் சிவந்திருந்தது. அந்தச் சிவப்பு சாயல் மறையும் முன்னர் அவளைப் பார்க்கும்போது இள வயதில் இவள் எவ்வளவு அழகான பெண்ணாக இருந்திருக்க வேண்டுமென்று ஒரு கணம் தோன்றியது. இளவயதில் என்றால் ஏதோ முன்னொரு காலத்தில் என்று அர்த்தம் இல்லை.  சமீபம்தான்.

மைதானத்தில் எஜமானியம்மா ரான்ஃபோர்டை சந்தித்தாள். சிரித்துக் கொண்டும், எதையோ பேசிக் கொண்டும் இருவரும் சேர்ந்தே திரும்பி வந்தார்கள். வீட்டில் மொட்டை மாடியில் அவர்கள் பேசிக் கொண்டு நடந்த இடம் என்னுடைய அறை சன்னலுக்குக் கீழேதான் இருந்தது. ரான்ஃபோர்டின் பெயரை அடிக்கடி நான் கேட்டிருந்தாலும் அப்போதுதான் நான் அவரை முதன் முதலாகப் பார்க்கிறேன். அவர் எங்கள் வீட்டிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மைல்கள் தள்ளி கிராமத்தின் எல்லையில் குடியிருப்பவர் என்று சொன்னார்கள். குளிர்காலத்தைக் கிராமப்புறத்தில் செலவழிக்க விரும்பி இங்கே வருவதால் அந்தச் சீசனில் எங்கள் எஜமானியம்மாவுக்கு இருக்கும் ஒரே துணை அவர்தான். ஒல்லியான உயரமான உருவம்; முப்பது வயதிருக்கும். அவர் சிரிப்பதைப் பார்க்கும் வரை அவர் எப்போதும் துக்கத்தில் ஆழ்ந்த மனிதராக இருப்பார் என்றுதான் எண்ணி இருந்தேன்.  அவருடைய சிரிப்பில் ஒரு அபூர்வம் பொதிந்துதான் இருந்தது- வசந்தத்தின் முதல் நாள் தாங்கி வரும் கதகதப்பைப் போல. என்னுடைய எஜமானியம்மாவைப் போலப் புத்தகங்கள் வாசிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர் என்று கேள்விப்பட்டேன். ஒருவரிடமிருந்து இன்னொருவர் அடிக்கடி புத்தகங்கள் இரவல் வாங்கிக் கொள்வார்களாம். சிலசமயம் (வாஸ் சொன்னதுதான்) இருண்டு கிடந்த நூலகத்தில் ப்ரைம்டன் இருக்கும்போது அவர் அவளுக்கு மணிக்கணக்கில் புத்தகங்கள் வாசிப்பாராம். அங்கிருந்த வேலையாட்களுக்கும் அவர் பிடித்தமானவராக இருந்தார். இப்படிச் சொல்வது கூட அவரைப்பற்றிய ஒரு நல்லபிப்ராயம் பொருட்டுதான். முதலாளியின் சந்தேகம் அவர் மீது இருக்கிறது என்று சொல்வதற்காக அல்ல. எங்கள் எல்லோரிடமும் பிரியமாகப் பேசும் குணம் கொண்டவர். முதலாளி இல்லாத நேரங்களில் எஜமானியம்மா ப்ரைம்டனோடு உரையாடுவதற்கு இவரைப்போன்ற நல்ல ஆண்மகன் இருக்கிறாரே என்று நாங்கள் எல்லோரும் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தோம். முதலாளியோடும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இருவேறு துருவங்களைப் போல இருந்த இரு ஆண்களுக்கு மத்தியில் எப்படி அந்த விதமான சிக்கல் இல்லாத சினேகம் இருந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களது உண்மையான குணாதிசயம் அவர்களுடைய உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே மறைத்துக்கொள்வதில் எந்த அளவுக்கு உதவுகிறது என்பதைப் பின்னர் புரிந்து கொண்டேன்.

முதலாளி ப்ரைம்டனைப் பொறுத்தவரை அவன் வருவதும் போவதும் எப்போது என்று அவனுக்குத்தான் வெளிச்சம். ஓரிரு நாட்களுக்கு மேல் தங்க மாட்டான். எதைப் பார்த்தாலும் குறைசொல்லிப் புலம்பிக்கொண்டே இருக்கும் ரகம். எல்லாம் மந்தமாக இருக்கிறது எனவும் தனிமை ஒரு கொடுமை எனவும் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பான். அவனுடைய உடல் எவ்வளவு ஏற்றுக் கொள்ளுமோ அதைத் தாண்டி குடித்துக்கொண்டே இருப்பான். (இது நான் சமீபத்தில் கண்டறிந்த உண்மைதான்). எஜமானியம்மா சாப்பிட்டு மேசையை விட்டு எழுந்தவுடன் அவன் இரவின் பாதியைத் துறைமுகத்தில் கையில் ஒரு மது பாட்டிலுடன் கழிப்பான். ஒருநாள் எஜமானியம்மா வழக்கத்துக்கு மாறாக அறையை விட்டு கொஞ்சம் தாமதமாக வெளியே வந்த நேரம். அவன் படியேறிக்கொண்டு வருவதைப் பார்த்தேன். அவனை அந்த லட்சணத்தில் பார்த்த மாத்திரத்திலேயே இப்படிப்பட்ட ஆண்களையும் சகித்துக்கொண்டும் வாயை மூடிக்கொண்டும் காலந்தள்ள சில பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறதே என்று நொந்து கொண்டேன். 

அவனைப் பற்றி வேலையாட்கள் சொன்னது என்னவோ கொஞ்சம்தான். அவர்கள் சொல்லாமல் விட்டதிலிருந்து இவர்கள் இருவரும் எந்த அளவுக்குப் பொருத்தமே இல்லாத தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். முதலாளி ஒரு காட்டான்; இரைந்து பேசும் குணமுள்ளவன்; சுகவாசி. ஆனால் எஜமானியம்மா அமைதியே உருவானவள். தனிமை விரும்பி; சொல்லப்போனால் ஆறிப்போன பலகாரம் என்று கூடச் சொல்லலாம். அதற்காக அவனிடம் என்றுமே இனிமையாகப் பேசியதில்லை என்று முடிவு செய்யக்கூடாது. அவளுடைய இனிமையான நடத்தை எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் எனக்கென்னவென்று தற்குறியைப்போலத் திரியும் முதலாளியுடன் அவள் கொஞ்சம் விலகியும் குறைவாகவும்தான் பேசினாள்.

வீட்டு நிலவரத்தில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. பல வாரங்கள் அமைதியாகக் கடந்தன. எஜமானியம்மாவும் கனிவுடன் நடந்து கொண்டாள். வேலைப்பளுவும் குறைவாகவே இருந்தது. மற்ற வேலையாட்களுடன் என்னுடைய உறவும் சுமுகமாகவே சென்று கொண்டிருந்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால் என்னளவில் புகார் என்று சொல்ல ஒன்றுமே இல்லை. இருந்தாலும் ஏதோ ஒன்று என் மனதை அழுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.  அது எதனால் என்பதை என்னால் கோடிட்டுக் காட்ட இயலவில்லை. அது என்னுடைய தனிமையினால் அல்ல என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். கொஞ்ச காலத்தில் அதுவே எனக்குப் பழக்கமாகி விட்டது. காய்ச்சலின் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக வெளியே வர முடியாத அந்த நேரத்தில் அங்கிருந்த அமைதிக்கும் தூய காற்றுக்கும் நான் நன்றி சொல்லத்தான் வேண்டும். என்னதான் சாக்குச் சொல்லிக் கொண்டாலும் என்னுடைய மனது அமைதியிழந்து தவித்தது. எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என்னுடைய எஜமானிக்குத் தெரியும். அதனால் தினமும் காலையில் கொஞ்சம் நடக்கச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டே இருந்தாள். அவ்வப்போது எனக்கென்றே சிறு சிறு வேலைகளைக் கண்டுபிடிப்பாள். பக்கத்துக் கிராமத்திலிருந்து ரிப்பன்களை வாங்கி வரச் சொல்வாள். இல்லை என்றால் ஏதாவது கடிதத்தைத் தபாலில் சேர்க்கும்படி சொல்வாள். அல்லது ஏதாவது ஒரு புத்தகத்தை ரான்ஃபோர்டிடம் கொண்டு போய் சேர்ப்பிக்குமாறு சொல்வாள். வீட்டை விட்டு வெளியே வந்தவுடனே உற்சாகம் என்னைத் தொற்றிக் கொள்ளும். ஈரப்பதம் மணக்கும் காட்டின் ஊடே வெறுங்காலுடன் நடக்கப் போவதை எண்ணி மனம் குதூகலிக்கும். வீட்டின் தோற்றம் கண் முன்னால் வந்தால் கிணற்றுக்குள் வீசப்பட்ட கல்லைப் போல மனம் குன்றிப்போய் ஒடுங்கி விடும். அது ஒன்றும் பேயடைந்த பழைய பங்களா அல்ல. இருந்தும் ஏதோ ஒரு பிரமை என்னை அழுத்துவது போலத் தோன்றும். வீட்டுக்குள் நுழையாவிட்டாலும் பெரிய சோகம் ஒன்று என்னை அழுந்திப்பிடிப்பது போலத் தோன்றும்.

ப்ரைம்டன் குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வது மிகவும் அரிதான விஷயம். மிகவும் அரிதான சமயங்களில் தெற்குப் பக்கமாக இருக்கின்ற மொட்டை மாடியில் ஒரு மணி நேரம் மதிய நேரம் நடப்பாள். ரான்ஃபோர்டைத் தவிர வேறு யாரும் வீட்டுக்கு வருவதில்லை. மருத்துவரைத் தவிர. வாரம் ஒருமுறை D—நகரிலிருந்து அவளை அழைத்துக்கொண்டு போய்த் திரும்புவார். ஓரிரண்டுமுறை எஜமானியம்மாவை எங்கே கூட்டிக்கொண்டு போய்த் திரும்பவேண்டும் என்பதை என்னிடம் சொல்லி அனுப்பி வைப்பார். எஜமானியம்மாவுக்கு என்ன வியாதி இருந்தது என்பதை அவர் சொல்லாவிட்டாலும் மெழுகு போல அவள் மொழுமொழுப்பாக தோற்றம் அளித்ததைப் பார்த்தே அவளுக்கு இதயத்தில் ஏதோ பாதிப்பு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அந்த சீசன் முழுமை பெறாத ஒரு அழகுடன் தெரிந்தது. ஜனவரியில் நீண்ட காலமாக மழை பெய்தது. என்னை மிகவும் படுத்தி எடுத்த காலம் அது. வெளியே என்னால் தலை காட்ட முடியவில்லை. தையல் மிஷினில் நாள் முழுக்க உட்கார்ந்து இருக்க வேண்டியதாகி விட்டது. வீட்டுத் தாழ்வாரத்தில் சொட்டிக் கொண்டிருக்கும் நீர்த்திவலைகளின் சப்தத்தைக் கேட்டுக்கொண்டே காலம்கழிக்க வேண்டியிருந்தது. சன்னமாகக் கேட்க்கும் அந்த நீர்த்திவலையின் சத்தம் கூட எனக்குக் கலக்கத்தை உண்டு பண்ணக்கூடியதாக இருந்தது. எது எப்படியோ வராண்டாவுக்கு அந்தப்பக்கம் இருக்கும் அந்தப் பூட்டப்பட்ட அறை என்னுடைய மனதில் பெரிய கனத்தை இறக்கி வைத்துக்கொண்டிருந்தது. ஓரிரண்டு தடவை, மழை பெய்துகொண்டிருக்கும் நீண்ட இரவுகளில் அந்த அறையிலிருந்து ஏதோ சத்தம் வருவதைப் போலத் தோன்றும். அதெல்லாம் மடத்தனமான பிரமைகளோ என்று தோன்றும். பகல் நேரம் வந்தால் அந்தப் பிரமைகள் எல்லாம் என்னை விட்டு நீங்கி விடும். ஒருநாள் காலை எஜமானி ப்ரைம்டன் சந்தைக்குச் சென்று ஏதாவது வீட்டுச் சாமான்கள் வாங்கிவரலாம் என்று எனக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் தந்தாள். நான் எப்படி உற்சாகமிழந்து நடைப் பிணமாகத் திரிந்திருக்கிறேன் என்பது அவள் அப்படிச் சொல்லும்வரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கரைபுரண்ட உற்சாகம் ததும்பத் துள்ளிக்கொண்டு கிளம்பினேன். மக்களடர்ந்த தெருக்களையும் அழகான கடைகளையும் பார்த்தபின் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மதியவேளை நெருங்கியபோது அங்கிருந்த சத்தமும் சந்தடிகளும் என்னைச் சீக்கிரம் அயர்ச்சியடைய வைத்து விட்டன. வீட்டிலிருந்த அமைதியை இப்போது மனம் விரும்பத் தொடங்கியது. மரங்களுக்கு இடையே எப்படி மகிழ்ச்சியாக வண்டியை ஓட்டிச்செல்ல வேண்டும் என்று கற்பனை செய்தேன். வழியில் எனக்குப் பழக்கமான ஒருத்தியைச் சந்தித்தேன். ரொம்ப காலத்திற்கு முன்பு அவளும் நானும் ஒன்றாக வேலை பார்த்தோம். அதன் பிறகு நாங்கள் இருவரும் பல வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அந்த இடைவெளியில் நான் எங்கெல்லாம் வேலை பார்த்தேன் என்பதை அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். தற்சமயம் நான் எங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதைச் சொன்னதும் அவளுடைய கண்களில் ஒரு அச்சம் பரவியது. முகத்தில் சோகம் படிந்தது.

“என்ன சொல்றே? ஹட்சனில், எஜமானி ப்ரைம்டன் இத்தனை வருடங்கள்   இருக்கிறாளா? அன்பானவளே! மூன்று மாதத்திற்கு மேல் உன்னால் அங்கே தங்க முடியாது.”

“அப்படியா? கிராமப்புறத்தில் தங்குவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. அவள் சொன்னவிதம் என்னை ஒருவிதத்தில் காயப்படுத்தி இருந்தது. “காய்ச்சல் வந்த நாளிலிருந்து எனக்கு அமைதியான சூழல் பிடித்திருக்கிறது.”

அவள் தலையை மறுதலித்தவாறு ஆட்டினாள். “நான் சொல்வது கிராமப்புறத்தில் இருப்பதைப் பற்றி அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடந்த ஆறு மாதங்களில் இதுவரை நாலு வேலைக்காரிகள் மாறிவிட்டார்கள் என்பதுதான் அது. கடைசியாக அங்கே வேலை பார்த்தவள் கூட எனக்குத் தெரிந்தவள்தான். அந்த வீட்டில் யாராலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று அவளும் சொன்னாள்.”

“அதற்கு என்ன காரணம் என்று ஏதாவது சொன்னாளா?”

“இல்லை… அவள் எந்தக் காரணமும் சொல்லவில்லை. என்னைப் பார்த்து ஒருமுறை இப்படிச் சொன்னாள். ‘இங்கே பாரு அன்ஸி… உனக்குத் தெரிந்த பெண் யாராவது அந்த வீட்டுக்குப்போய் வேலை பார்க்கலாம் என்று நினைத்தால் கொண்டுசென்ற பெட்டிகளை அவிழ்ப்பது கூட அவசியமில்லாத வேலை என்று அவளிடம் கறாராகச் சொல்லி விடு”

“அந்தப் பெண் குறைந்த வயதானவளா? அழகாக இருப்பாளா?” எஜமானியின் கணவனை நினைத்து இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

“அப்படி ஒன்றும் பிரமாதம் என்று சொல்லிவிட முடியாது. கல்லூரி செல்லும் சுற்றித்திரியும் வயதில் உள்ள பையன்களின் அம்மாக்கள் விரும்பக்கூடிய அழகுள்ளவள் என்று வைத்துக்கொள்ளலாம்.”

அவளிடம் பேசிக் கொண்டிருப்பது நேரத்தை வீணாக்குவது அல்லாமல் வேறொன்றும் இல்லை என்பது நன்றாகப் புரிந்தாலும் அவள் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தன. மாலையில் ப்ரைம்டனுக்கு நான் செல்லும்வரை அவள் சொன்ன வார்த்தைகள் என் தலைக்குள் முட்டி மோதி என் மனதை ஏகத்துக்கும் சோர்வடையச் செய்திருந்தன. அந்த வீட்டில் ஏதோ ஒன்று இருந்தது. அந்த அளவில் உறுதியாக இருந்தேன். ஆனால் அது என்னவென்றுதான் தெரியவில்லை.

தேநீர் அருந்தச் சென்றபோது எஜமானியின் கணவன் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவன் வந்திருக்கிறான் என்பதற்குச் சாட்சியாக அங்கே ஏதோ சலசலப்பு இருந்தது. திருமதி ப்ளைண்டருக்கு கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. டீ கோப்பையைக்கூட அவளால் ஒழுங்காகப் பிடிக்க முடியவில்லை.  வாஸ் படுபயங்கரமாகப் பயமுறுத்தும் வகையில் இருக்கும் பைபிள் மேற்கோள்களை உளற ஆரம்பித்திருந்தான். என்னிடம் யாரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. எனது அறையை நோக்கிப் படியேற ஆரம்பித்தேன். ப்ளைண்டர் என்னைப் பின்பற்றி நடந்து வந்தாள்.

“தங்கமே! ரொம்ப நல்லதாகப் போயிற்று. நல்ல வேளை நீ எங்களிடம் திரும்பி வந்துவிட்டாய். மிகவும் நன்றி” என்று என் கையைப்பிடித்துக்கொண்டு சொன்னாள்.

அவள் சொன்னது என்னுடைய பொறியில் எதையோ நிமிண்டிவிட்டுச் சென்றது. “ஏன் அப்படிச் சொல்கிறாய்? அப்படியென்றால் நான் போனால் அது நல்லதுக்குத்தான் என்று நினைத்தாயா?” என்று கேட்டேன்.

“ஐயோ… அப்படிச் சொல்லவில்லை. அதாவது….” அவள் குழம்பினாள். “என்ன சொல்ல வந்தேன் என்றால் எஜமானியம்மாவை அரை நாள் கூட தனியாக விட்டுவிட்டுச் செல்வதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. அந்த அர்த்தத்தில் சொன்னேன்.” என்னுடைய கைகளை எடுத்துக்கொண்டு பிசைந்தபடி பேசினாள். “ மிஸ் ஹார்ட்லி… நீ ஒரு கிறித்தவப் பெண்மணி. உன்னுடைய எஜமானிக்கு விசுவாசியாக இரு” என்று சொல்லிவிட்டு சடுதியில் ஓடி மறைந்தாள். அவள் சொன்னவிதம் ஓடி மறைந்த விதம் என்னைப் பயமுறுத்தியது.

கொஞ்ச நேரம் கழித்து எஜமானியம்மாவைப் பார்க்க வரும்படி அக்னஸ் கூப்பிட்டாள். எஜமானியின் குரல் அறையிலிருந்து கேட்டது. நான் அவளுடைய அறையைச் சுற்றிக்கொண்டு அவளைப் பார்ப்பதற்காகச் சென்றேன். அப்போதுதான் நான் உள்ளே செல்வதற்கு முன்பாக அவள் தனது மதிய உணவு உடையைக் களைய நேரம் இருக்கும் என்று நினைத்தேன். அந்த உடை மாற்றும் அறை மிகப்பெரியது என்று சொல்ல வேண்டும். போர்டிக்கோவின் மேலாக ஒரு ஜன்னலுடன் தோட்டத்தைப் பார்த்தவாறு அமைந்த அறை அது. முதலாளி இருந்த கட்டடம் தூரமாக இருந்தது. நான் உள்ளே நுழைந்தபோது படுக்கையறைக்கு இட்டுச் செல்லும் அறையின் கதவு லேசாகத் திறந்திருந்தது. முதலாளி ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தான். “அதாவது உன்னிடம் பேசுவதற்கு அவனைத் தவிர வேறு எவனுக்குமே தகுதியில்லை. அப்படித்தானே” என்று இரைந்து கொண்டிருந்தான்.

“இந்தக் குளிர்காலத்தில் என்னைப் பார்க்க அதிகம் பேர் வருவதில்லை” என்று எஜமானி ப்ரைம்டன் அமைதியாகப் பதில் சொன்னாள்.

“நான் இருக்கேண்டி…” அவளை நோக்கிப் பாய்ந்துகொண்டு கத்தினான் அவன்.

“நீங்கள் எப்போதாவதுதானே வருகிறீர்கள்” என்றாள் அவள். “நல்லது. இது யாருடைய தவறு. இந்த இடத்தை ஒரு குடும்பச்சிறையைப் போல நீதானே ஆக்கியுள்ளாய்?”

அவர்களுடைய உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்க, நான் எஜமானியின் கவனத்தைத் திருப்ப வேண்டி குளியல் அறை பொருட்களை லேசாக உருட்டினேன். சத்தம் கேட்டதும் அவள் எழுந்து என்னை உள்ளே வரும்படி சொன்னாள்.

அவர்கள் இருவரும் தனியாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அந்த நாள் இரவு அமைதியான இரவாக இருக்கப் போவதில்லை என்பதை வாஸ் நடந்து கொண்டிருந்த விதத்தை வைத்தே என்னால் ஊகிக்க முடிந்தது. தீர்க்கதரிசிகளின் வாக்குகள் என்று எதையோ கர்ணகடூரமாய் சொன்னான். சமையல்காரியிடம் எதையோ சொன்னான். அவளும் கீழே போய் குளிர்சாதனப் பெட்டியில் சில்லிட்டுப் போன இறைச்சியை வைக்கப் போகிறேன் என்று நழுவாமல் இருந்தாள். எனக்கும் உள்ளூர நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. எஜமானியைப் படுக்கையில் இருத்திவிட்டு கீழே போய் ப்ளைன்டரை சீட்டாட மேல் மாடிக்கு அழைக்கலாமா என்று கொஞ்சம் சபலம் தட்டியது. ஆனால் அவளுடைய அறைக்கதவு மூடிய சத்தம் கேட்டதும் மனதை மாற்றிக்கொண்டு என்னுடைய அறைக்குத் திரும்பினேன். மழை மறுபடியும் பெய்யத் தொடங்கியது. துளி துளியாக… என்னுடைய மூளைக்குள் விழுவதைப்போல  உணர்ந்தேன். அதன் சத்தத்தை உன்னிப்பாகக் கவனித்தபடி விழித்துக்கொண்டு கிடந்தேன். டவுனில் சந்தித்த பெண் சொன்னதை மனதுக்குள் அசைபோட்டுக்கொண்டு இருந்தேன். என்னை அனேகத்துக்கும் குழப்பிய விஷயம் ஒன்றே ஒன்றுதான்…வேலையை விட்டுவிட்டு ஓடிப்போன அனைவருமே வேலைக்காரிகள். அந்த உண்மைதான் என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம் கழித்துத் தூங்கிப்போய் விட்டேன். திடீரென்று பலத்த சத்தம் ஒன்று என்னை எழுப்பியது. என்னுடைய மணியும் அடித்தது. என்ன நடக்கிறது என்பது புரியாமல் பேயறைந்த மாதிரி எழுந்து உட்கார்ந்தேன். இதுவரைக்கும் கேட்டறியாத சத்தம் ஒன்று கிணி கிணி என்று அந்த இருளை ஊடுருவிச் சென்றது. தீப்பெட்டி எங்கிருக்கிறது என்பதைக் கூட அறிய முடியாமல் என் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. கடைசியில் ஒரு வழியாக விளக்கைப் போட்டு, படுக்கையிலிருந்து வெளியே தவ்விக் குதித்தேன். நான் ஏதாவது கனவு கண்டு கொண்டிருக்கிறேனோ என்று எனக்கே சந்தேகம் வரத் தொடங்கியது. ஆனால் சுவரோடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருந்த மணியைப் பார்த்த போது சந்தேகம் தீர்ந்தது. மணிக்கூண்டின் சிறிய சுத்தியல் இன்னும் லேசாக ஆடிக்கொண்டு இருந்தது.

திகிலுடன் நான் என்னுடைய ஆடைகளை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டு நின்றிருந்த சமயம் இன்னொரு முறை சத்தம் கேட்டது. இந்த முறை சத்தம் வந்தது என்னுடைய அறைக்கு முன்னால் பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து. மெதுவாகத் திறந்தும் மூடிக்கொண்டும் அதன் கதவு ஆடிக் கொண்டிருந்தது. அந்த சத்தம் எனக்குத் தெளிவாகக் கேட்டது. அசைவற்றுப் போய் திகிலுடன் என்னை உறைய வைக்கும் அளவுக்கு அந்த சத்தம் தெளிவாகக் கேட்டது. பிறகு வராண்டாவிலிருந்து கீழ் நோக்கி தட தடவென்று வீட்டின் மையப்பகுதியை நோக்கி ஓடும் சத்தம். தரையில் விரிப்பு போடப்பட்டு இருந்ததால் சத்தம் சன்னமாகவே கேட்டது. அது ஒரு பெண்ணின் காலடிச் சத்தம் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதை நினைத்துப் பார்க்கும்போதே உடல் குப்பென்று வியர்த்தது. ஓரிரு நிமிடங்கள் மூச்சு நின்று விட்டதைப் போலிருந்தது. பிறகுதான் மனம் ஒரு நிலைக்கு வந்து நின்றது.

ஆலிஸ் ஹார்ட்லிகொஞ்ச நேரம் முன்பு ஒருத்தி அந்த அறையிலிருந்து வெளியேறி வராண்டாவில் ஓடினாள். உனக்குச் சற்று முன்புதான். கசப்பான உண்மை என்றாலும் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். உன்னுடைய எஜமானி உன்னை அழைத்திருக்கிறாள். அவளுக்குப் பதில் சொல்ல வேண்டுமானால் சற்று முன்பு உனக்கு முன்னால் ஓடிய பெண் எந்த வழியில் ஓடினாளோ அந்த வழியில் ஓடித்தான் நீ எஜமானிக்குப் பதில் சொல்ல முடியும். சரியா?” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஒருவழியாகச் சாதித்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் அந்த மாதிரி வேகமாக நடந்திருக்கவே மாட்டேன். வேகமாக நடந்தாலும் வராந்தாவில் மற்றொரு முனையைக் கடந்து எஜமானியின் அறைக்குச் சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். போகும் வழியில் நான் எதையும் பார்க்க வில்லை: எந்தச் சத்தத்தையும் கேட்கவும் இல்லை. எங்குப் பார்த்தாலும் ஒரே இருட்டாக இருந்தது. சுடுகாடு மாதிரியான அமைதி. எஜமானியின் அறையை அடைந்தபோது அந்த அமைதி இன்னும் பயங்கரமாக இருந்தது. ஒருவேளை நான்தான் கனவு ஏதாவது காண்கிறேனோ என்று சந்தேகம் கூடத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அந்தச் சந்தேகம் வந்தவுடன் திரும்பிப் போய் விடலாமா என்று அரை மனதுடன் நினைத்தேன். பின்னர் திடீரென்று பழைய பீதி தொற்றிக் கொண்டது; கதவைப் பலமாகத் தட்டினேன்.

அறையிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. மறுபடியும் கதவை இன்னும் பலமாகத் தட்டினேன். கதவைத் திறந்தது யார் என்பதைப் பார்த்தவுடன் என்னுடைய ஆச்சரியம் இன்னும் பன்மடங்கானது. முதலாளி கதவைத் திறந்துகொண்டு நின்றான். என்னைப் பார்த்ததும் திரும்பிப் போக எத்தனித்தான். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவனுடைய முகம் சிவப்பாகவும் கர்ண கடூரமாகவும் தெரிந்தது.

“நீயா? கடவுளின் பெயரால் கேட்கிறேன். உன்னை மாதிரி இன்னும் எத்தனை பேர் இங்கு இருந்து தொலைக்கிறீர்கள். சொல்லித் தொலை.” அவனுடைய குரல் வினோதமாக ஒலித்தது.

அதைக் கேட்டதும் காலுக்குக் கீழே தரை நழுவுவது போல இருந்தது. ஏதோ குடிபோதையில் உளறுகிறான் என்று நினைத்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எவ்வளவு குழப்பமில்லாமல் பதில் சொல்லமுடியுமோ அந்த அளவுக்கு நிதானமாகப் பதில் சொன்னேன். “நான் உள்ளே போகலாமா சார்? எஜமானியம்மா என்னை அழைத்திருந்தார்கள்?’ என்றேன்.

“ம்ம்ம்… போலாமே… எனக்கென்ன வந்தது? நீ தாராளமாக உள்ளே போகலாம்” என்று சொல்லிவிட்டு என்னைத் தள்ளிக்கொண்டு வெளியேறினான். வராந்தாவில் நடந்தவாறு அவனுடைய படுக்கையறையை நோக்கி நடந்தான். அவன் போவதையே நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அவன் தள்ளாடாமல் நிதானமாக நடந்து சென்ற விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது.

எஜமானியம்மா பலவீனமாகப் படுக்கையில் கிடந்தாள். இருந்தும் பலவீனத்தைக் காட்டிக் கொள்ளாமல் என்னைக் கண்டதும் வலிந்து ஒரு புன்னகை செய்தாள். என்னை நோக்கி சில துளிகள் மருந்தை விடும்படி கையை ஆட்டி சமிக்ஞை செய்து சொன்னாள். அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகப் படுத்துக் கிடந்தாள்.  மூச்சு வேகமாக வந்து போய்க்கொண்டு இருந்தது. கண்கள் மூடியிருந்தன. திடீரென்று தனது கைகளால் துழாவியபடி “எம்மா” என்று யாரையோ கூப்பிட்டு முனகினாள்.

“நான் ஹார்ட்லி மேடம்” “உங்களுக்கு ஏதாவது வேணுமா” என்று கேட்டேன்.

அவள் தனது கண்களை அகலமாகத் திறந்து பார்த்தாள். அவள் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது.

“நான் ஏதோ கனவு கண்டேன். நீ போகலாம் ஹார்ட்லி… உன்னுடைய உதவிக்கு மிகவும் நன்றி” நான் இப்போது நன்றாகத்தான் இருக்கிறேன். நீயே பாரு” என்று சொல்லி விட்டு அவளுடைய முகத்தை என்னிடமிருந்து அந்தப்பக்கம் திருப்பிக் கொண்டாள்.

3

அன்றிரவு எனக்குத் தூக்கமே இல்லை. சீக்கிரமே விடியாதா என்றிருந்த எனக்கு அடுத்த நாள் விடியலைப் பார்த்ததும் நன்றி கூற வேண்டும் போல இருந்தது.

கொஞ்சம் நேரம் கழித்து எஜமானியைப் பார்க்க வரச்சொல்லி அக்னஸ் என்னைக் கூப்பிட்டாள். மறுபடியும் படுத்துவிட்டாளோ என்று கவலை தொற்றிக் கொண்டது. காரணம் ஒன்பது மணிக்கு முன்னால் அவள் என்னைப் போக விட மாட்டாள். அவளைப் பார்க்கச் சென்றபோது படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தாள். ஏதோ ஆழமான சிந்தனை வயப்பட்டவளாய் முகம் வெளுத்துப் போய் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

என்னைப் பார்த்தவுடன் “ஹார்ட்லி…” என்று அவசரமாகக் கூப்பிட்டாள். “உடனே உடைகளை அணிந்துகொண்டு கிராமத்திற்குச் சென்று எனக்கு சில பொருள்களை வாங்கி வர முடியுமா?” என்று கேட்டாள். “எனக்கு இந்த மருந்தைக் கலந்துகொண்டு வர வேண்டும்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் சிறிது தயங்குவது தெரிந்தது. முகம் சிவந்தது. “மிஸ்டர் ப்ரைம்டன் வருவதற்குள் நீ திரும்பிவிட வேண்டும்” என்று சொன்னாள்.

“கண்டிப்பாக மேடம்” என்றேன்.

“அப்புறம்…கொஞ்சம் நில்லு…”- ஏதோ நினைவு வந்தவளாகப் போக நினைத்தவளை நிறுத்தினாள். “மருந்து கலக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது உனக்குக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். அந்த நேரத்தில் ஓடிப்போய் மிஸ்டர் ரான்ஃபோர்டிடம் இந்த காகிதத்தைக் கொடுத்து விட வேண்டும்” என்று சொன்னாள்.

சொல்லப்போனால் அந்தக் கிராமம் இரண்டு மைல் தூரம் இருக்கும். முதலாளிக்குத் தெரியாமல் அந்த மருந்தைத் தயாரித்துக் கொண்டு வரும்படி எஜமானியம்மா சொன்னது எனக்குப் புதிராக இருந்தது. அவள் அப்படிச் சொன்னதையும் நேற்று முன்தினம் இரவு நடந்த விவகாரத்தையும் என் மனம் இணைத்துப் பார்த்தது. நான் பார்த்தது, பயந்தது எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் ஒருவேளை வாழ்க்கையில் விரக்தியடைந்து இந்தப் பெண் லூசுத்தனமாக வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டி எதையாவது செய்யத் துணிந்து விட்டாளோ என்ற சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. இந்த எண்ணம் எனக்குள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு பண்ணியவுடன் அந்த கிராமத்திற்கு நான் நடந்து செல்லவில்லை. ஓட்டமாகச் சென்றேன். மருந்துக் கடைக்காரன் முன்பு மூச்சிறைக்க நின்றேன். அருகிலிருந்த சேரில் அமர்ந்து மூச்சு வாங்கினேன். அவன் நல்லவனாக இருப்பான் போலிருக்கிறது. அப்போதுதான் கடையை அடைக்கக் கதவை மூடிக் கொண்டிருந்தான். மூச்சிறைத்தபடி வந்து நின்ற என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். அவன் பார்த்தவிதம் எனக்குக் கொஞ்சம் நிதானத்தைத் தந்தது.

“மிஸ்டர் லிம்மல்…” ஒன்றும் நடக்காததைப் போலப் பேச முயன்றேன். “இதைக் கொஞ்சம் பார்க்க முடியுமா? இந்த மருந்து ஒன்றும் ஆபத்தான ஒன்று இல்லையே” என்று கேட்டேன்.

கண்ணாடியைப் போட்டுக்கொண்டு அந்தத் துண்டு சீட்டைப் பார்த்தான் அந்த மருந்துக் கடைக்காரன்.

“ஏன்? என்னாச்சு? இது டாக்டர் வாட்சனோட மருந்து சீட்டுதான். இதில் என்ன பிரச்சினை உனக்கு?” என்று கேட்டான்.

“நல்லது. இந்த மருந்தைச் சாப்பிடுவது ஆபத்தானதா?”

“ஆபத்தா? நீ என்ன சொல்ல வர்றே?”

அவன் என்னைக் கேள்வி கேட்டது முட்டாள்தனமாகத் தோன்றியது. அவனை அப்படியே உலுக்கி எடுத்தால் என்ன என்று நினைத்துக் கொண்டேன்.

“அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா யாராவது இந்த மருந்தை அளவுக்கதிகமாகச் சாப்பிட்டால் தவறுதலாக என்று வைத்துக் கொள்வோம்-“ சொல்லிக்கொண்டிருக்கும்போதே என்னுடைய இருதயம் தொண்டைக் குழிக்குள் எட்டிப்பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

“அடக்கடவுளே! கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இது வேறு ஒன்றுமில்லை. இது வெறும் எலுமிச்சை நீர்தான். ஒரு பாட்டில் முழுக்க நிறைத்துச் சிறு குழந்தைக்குக் கூடத் தரலாம். தவறில்லை”

அதைக் கேட்டதும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ரான்ஃபோர்டை பார்க்க ஓடினேன். போகும் வழியில் இன்னொரு விஷயம் மண்டையில் குடைய ஆரம்பித்தது. மருந்து சம்பந்தப்பட்ட விஷயம் உப்பு சப்பு இல்லாத விஷயம் என்று வைத்துக் கொண்டால் எஜமானியம்மா சொல்லியிருக்கும் இன்னொரு வேலை அதாவது ரான்ஃபோர்டை சந்திக்கும் விஷயம்தான் உண்மையான ரகசியமா?’ இப்படி நினைத்தாலே முந்தையதை விட இது எனக்குப் பயங்கரமாகவும் அதிக பயத்தையும் தந்தது. ‘முதலாளியும் இந்த ஆளும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்படி எதையாவது சந்தேகித்து எஜமானியம்மாவின் நிம்மதியில் என் தலையைக் கொடுத்து குட்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும்.’ என்னுடைய சந்தேகத்தை நினைத்து எனக்கே அருவருப்பாக இருந்தது. முந்தைய இரவில் நடந்த சம்பவங்கள்தான் என்னை ஏகத்துக்கும் குழப்பி விட்டிருக்கின்றன என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன். மிஸ்டர் ரான்ஃபோர்டிடம் துண்டு சீட்டைத் தந்துவிட்டு எஜமானியைப் பார்க்க ஓடினேன். ஏற்கனவே திட்டமிட்டபடி பக்கவாட்டிலிருந்த கதவு வழியாக யாரும் பார்க்காதவாறு உள்ளே நுழைந்தேன்.  

ஒரு மணி நேரம் கழித்து எஜமானியம்மாவுக்குக் காலை உணவை எடுத்துச் சென்ற போது ஹாலில் முதலாளி ப்ரைம்டன் என்னை நிறுத்தினான்.

“அதிகாலைப் பொழுதில் நீ என்ன பண்ணிக் கொண்டு இருந்தாய்” கடுமையான முகத்துடன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

“அதிகாலையிலா? நானா” என்ன சார் சொல்றீங்க” உள்ளுக்குள் நடுங்கியவாறு உளறினேன்.

“இங்கே வா…” அவனுடைய நெற்றியில் கோபம் வரும்போது வெடித்துக் கிளம்பும் சிவப்பு நிறப் புள்ளி ஒன்று இப்போது தென்பட்டது. “ஒரு மணி நேரத்துக்கு முன்பு வீட்டிலிருந்து கிளம்பி மரங்களூடே நீ ஓடிச் சென்றதை நான் பார்க்கவில்லை என்று நினைத்தாயா”  

அடிப்படையில் நான் எப்போதும் உண்மையைப் பேசும் குணம் கொண்டவள்தான். இருந்தாலும் அந்தச் சமயம் ஏதோ தயார்நிலையில் இருந்ததைப் போலப் பொய் ஒன்று என்வாயிலிருந்து வந்து வெளியே விழுந்தது. “இல்லைங்க சார்… நீங்கள் பார்த்திருக்க முடியாது” அவனுடைய முதுகைப் பார்த்துக்கொண்டே சொன்னேன்.

அவன் தனது தோள்பட்டையை ஒருமுறை குலுக்கிக்கொண்டான். வறட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான். “நேற்று இரவு நான் நன்றாகக் குடித்துவிட்டுத் தூங்கிவிட்டேன் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அப்படித்தானே” என்று திடீரென்று உறுமியவாறு கேட்டான்.

“இல்லை சார்…. இல்லவே இல்லை” என்று மறுத்தேன். இந்த முறை கொஞ்சம் உண்மை கலந்த குரலுடன்.

தோளை மீண்டும் ஒருமுறை குலுக்கிக் கொண்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான். “இந்த வேலைக்கார பயலுகள் என்னைப் பத்தி என்னதான் நினைக்கிறாங்க தெரியல” என்று அவன் முனகிக்கொண்டு போவது எனக்குக் கேட்டது.

மதிய நேரம் நான் என்னுடைய தையல் வேலையில் மொத்தமாக மூழ்கிய பின்புதான் சென்ற இரவின் நிகழ்வுகள் என்னை எந்த அளவு நடுக்கம் கொள்ள வைத்திருந்தன என்பது தெரிய வந்தது. பூட்டியிருந்த அந்த அறையைக் கடக்கும்போது என்னால் நடுங்காமல் இருக்க முடியவில்லை. அந்த அறையிலிருந்து ஒருவர் வெளியே வந்தது; வராண்டாவில் எனக்கு முன்பாக நடந்துபோனது அனைத்தும் எனக்கு மிக நன்றாகத் தெரியும். ப்ளைம்டருடனும் வாஸுடனும் இதைப் பற்றிப் பேச நினைத்தேன். அங்கு ஏதோ பூடகமாக நடக்கிறது என்பது அவர்கள் இருவருக்கு மட்டும்தான் தெரிந்திருக்கிறது. ஆனால் அதே சமயம் அவர்களிடம் நான் ஏதாவது கேட்டால் மறுபேச்சு இல்லாமல் அவர்கள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்றுதான் மறுத்துப் பேசுவார்கள் என்ற தயக்கமும் கூடவே இருந்தது. அதன்பின்னர் கண்ணை மட்டும் திறந்து வைத்துக்கொண்டு வாயைப் பொத்திக்கொண்டு இருப்பது எப்படி என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். பூட்டியிருந்த அந்த அறைக்கு முன்னால் இன்னொரு இரவைக் கழிக்க வேண்டுமே என்ற எண்ணமே என்னை நொறுக்கிப் போட்டது. எல்லா மூட்டை முடிச்சுகளையும் கட்டிக்கொண்டு முதல் ரயிலைப் பிடித்து இந்த இடத்தை விட்டுக் கிளம்பி விட்டால் எனக்கு விடுதலை கிடைக்கும் என்று நினைத்தேன்.  ஆனால் இவ்வளவு கனிவாகப் பேசி என் மீது அன்பு காட்டும் எஜமானியம்மாவை விட்டுப் பிரிய என் மனம் இடம் கொடுக்கவில்லை. ஒன்றுமே நடவாதது போல நான் தையலில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

ஒரு பத்து நிமிடம் தையல் மிஷினில் வேலை செய்திருப்பேன். மிஷினில் திடீரென்று ஏதோ கோளாறு ஏற்பட்டது. அந்த வீட்டிலிருந்த உருப்படியான பொருள் அது ஒன்றுதான். நல்ல மெஷின். இப்போது அதுவும் கோளாறாகி விட்டது. எம்மா சாக்சன் இறந்த நாளிலிருந்து அதை யாருமே பயன்படுத்தவில்லை என்று ப்ளைண்டர் சொன்னாள். மெஷினின் ட்ராயரில் எதையோ தேடிக் கொண்டிருந்ததால் மெஷினில் என்ன கோளாறு என்பதை நான் பார்க்கவில்லை. ட்ராயரைத் திறந்தபோது புகைப்படம் ஒன்று கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு கண்களில் ஆச்சரியம் கொப்பளிக்க அதைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்தேன். அது ஒரு பெண்ணின் புகைப்படம். அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். அந்தக்கண்களில் ஏதோ ஒரு கெஞ்சல் தெரிந்தது. அந்தக் கெஞ்சலுடன் அந்தக் கண்கள் என்னைப் பார்த்தது நினைவிருக்கிறது. வராண்டாவில் பார்த்த அந்தப் பெண்ணின் கண்கள் அல்லவா இது. இப்போதுதான் அதை நினைத்துப் பார்த்தேன்.

வியர்த்து வழிந்தபடி எழுந்தேன். அறையை விட்டு வெளியே ஓடினேன். இருதயம் வெளியே வந்து என் தலைக்கு மேலே அமர்ந்து குட்டுவது போல உணர்ந்தேன். அந்தக் கண்களிலிருந்து நான் வெளியே போய் விடக்கூடாது என்பதைப் போன்ற எண்ணம் வருவதை உணர்ந்தேன். நேரே ப்ளைண்டரைப் பார்க்கப் போனேன். அவள் அப்போதுதான் மதியத் தூக்கத்திலிருந்தாள். நான் ஓடி வருவதைப் பார்த்தவுடன் குதித்து எழுவதைப்போல எழுந்து உட்கார்ந்தாள்.

“ப்ளைண்டர்… இங்கே பாரு… யார் இது?” அவளை நோக்கி புகைப்படத்தை நீட்டியவாறு கேட்டேன்.

அவள் கண்களைச் கசக்கிக்கொண்டு உற்றுப் பார்த்தாள்.

“ஏன்? இது எம்மா சாக்சன்.  இந்த போட்டோ உனக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் அவளைக் கடுமையாகப் பார்த்தேன். “ப்ளைண்டர்! இந்த முகத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்” என்றேன்.

ப்ளைண்டர் நிதானமாக எழுந்தாள். நிலைக்கண்ணாடியை நோக்கி நடந்தாள். “இங்கே பாரு தங்கமே! நான் நல்லா தூங்கியிருப்பேன். எனக்கு முன்னால் இருப்பதெல்லாம் ஒரே ஒரு வேலைதான். நீயும் கூட சேர்ந்து ஓடு. அன்பே ஹார்ட்லி! இப்போது மணி நான்கு அடித்துவிடும். அடுத்த நிமிடம் நான் கீழே ஓட வேண்டும்.  எஜமானிக்கு பதவிசாய் பன்றிக்கறியை இன்று இரவு உணவுக்குத் தயார் செய்ய வேண்டும்” என்று ஒய்யாரமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

4

மேலோட்டமாகப் பார்த்தால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஒன்றுமே நடக்காததைப் போலத்தான் இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம் முதலாளி வழக்கமாக வெளியே கிளம்பிவிடுவான். ஆனால் இந்த முறை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான். அதோடு ரான்ஃபோர்டும் எஜமானியைப் பார்க்க வரவில்லை. இதைப் பற்றி முதலாளி ஒருநாள் மதியம் உணவுவேளைக்கு சற்று முன்பாக எஜமானியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“எங்கே அந்த ரான்ஃபோர்டு? ஒரு வாரமாக இந்த வீட்டுப்பக்கம் ஆளையே காணோம். நான் இங்கே இருக்கிறேன் என்று இந்தப்பக்கம் தலை காட்டாமல் இருக்கிறானோ?” என்று கேட்டான்.

எஜமானி மிகவும் தாழ்ந்த குரலில் பேசினாள். அவள் என்ன சொன்னாள் என்பதை என்னால் கேட்க முடியவில்லை.

“நல்லது. இரண்டு பேர் இருந்தால் சவுகரியம். மூன்று பேர் இருந்தால் அது இரைச்சல். ரான்ஃபோர்டுக்கு நான் ஏதும் தடையாக இருக்கிறேனோ? இன்னும் ஓரிரு தினங்களில் வழக்கம் போல நான் இங்கிருந்து கிளம்பிப்போய் விட வேண்டும். அப்போதுதான் ரான்ஃபோர்டு இங்கே வந்து தலையைக் காட்டுவான்.” தான் சொன்ன ஜோக்கைக் கேட்டு அவனே சிரித்துக் கொண்டான்.

அடுத்த நாளே சொல்லி வைத்தாற்போல ரான்ஃபோர்டு கூப்பிட்டான். நூலகத்தில் அவர்கள் மூவரும் டீ குடித்துக்கொண்டு சந்தோஷமாக இருந்ததாகவும் முதலாளி ரான்ஃபோர்டை வழியனுப்ப வீட்டு வாசல் கதவு வரை வந்ததாகவும் காவலாளி சொன்னான்.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது என்று சொன்னேன் அல்லவா! வீட்டில் எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள். ஆனால் நான்? அந்த ஒருநாள் இரவில் மணி அடித்ததே! அந்த நாளிலிருந்து நிம்மதியைத் தொலைத்தவள் இன்னும் அதைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு நாள் இரவும் பயத்தால் தூக்கம் வராமல் விழித்துக்கொண்டு மறுபடியும் அந்த மணி எப்போது அடிக்கும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன். மூடிய நிலையிலிருக்கும் அந்த அறை எந்தக் கணத்தில் திருட்டுத்தனமாகத் திறக்கும் என்று விழித்துக் கிடக்கிறேன். ஆனால் மறுபடியும் மணி அடிக்கவே இல்லை. வராண்டாவுக்கு அந்தப் பக்கமிருந்து எனக்கு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. சொல்லப்போனால் அங்கு நிலவிய அமானுஷ்ய நிசப்தம் அவ்வப்போது நான் கேட்ட வினோதமான சத்தங்களைக் காட்டிலும் பயங்கரமானதாக இருந்தது. நான் கவனிப்பதையும் உன்னித்து எதையோ கேட்டுக்கொண்டு இருப்பதையும் யாரோ அந்த பூட்டிய கதவுக்குப் பின்னாலிருந்து நடமாடிய வண்ணம் கவனிக்கிறார்கள் என்று உணர்ந்தேன். சத்தமாகக் கத்த வேண்டும் போலிருந்தது- டேய் அங்கே இருப்பது யார்? வெளியே வந்து என்னை நேருக்கு நேராகச் சந்தித்துப்பார். இருட்டுக்குள் மறைந்துகொண்டு என்னை உளவு பார்க்காதே என்று கத்தத் தோன்றியது.

நினைத்ததைப் போலவே செய்யவும் துணிந்தேன். இவ்வளவு நடந்த பின்பும் நான் ஏன் எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை என்று உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கலாம். ஒரு தடவை ஏறக்குறைய அந்த மாதிரி கத்துவதற்குத் தயாராகி விட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் ஏதோவொன்று என்னைப் பிடித்து இழுத்து நிறுத்தியது. என்னை அதிகமாக நம்பியிருக்கும் என்னுடைய எஜமானி மீதிருந்த பரிவா அல்லது வந்த இடத்தில் வாயை மூடிக்கொண்டு எந்தப் புதுக் குழப்பத்தை உண்டு பண்ணக்கூடாது என்ற விருப்பமின்மையா அல்லது எனக்கே பெயர் சொல்லமுடியாத ஏதேனும் உணர்வா தெரியவில்லை. மயக்க உணர்வில் இருப்பதைப்போல எதையோ நினைத்துக் கிடந்தேன். எல்லா இரவுகளையும் நான் பயத்துடன் கழித்தாலும் பகல் பொழுது கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.

ஒரே ஒரு காரணத்துக்காக என் எஜமானியின் தோற்றம் எனக்குப் பிடிக்காமல் போனது. அந்தக் குறிப்பிட்ட இரவிலிருந்து அவள் போக்கே சரியில்லை. நான் எப்படி இருந்தேனோ அதே மாதிரிதான் அவளும் தோன்றினாள். முதலாளி வீட்டை விட்டுச் சென்ற பின்னர் அவளுடைய முகம் பிரகாசமாகிவிடும் என்று நினைத்தேன். மனம் ஓரளவு நிதானமடைந்தாலும் அவளுடைய உற்சாகம் பழைய மாதிரி இல்லை. உடலில் வலுவும் குறைந்து விட்டதைப் போலத் தெரிந்தது. அவள் என்னை மிகவும் சார்ந்திருக்கத் தொடங்கி விட்டது எனக்குத் தெரிந்தது. நான் அவளுடன் எப்போதும் கூடவே இருக்க வேண்டும் என்று விரும்பினாள். இதை ஒருமுறை அக்னஸ் கூடச் சொன்னாள். எம்மா சாக்சன் இறந்த பிறகு எஜமானியம்மா அதிகமாக நேசிக்கும் ஒருத்தி நீதான் என்று அவள் சொல்லி இருக்கிறாள். எஜமானியைப் பொறுத்தவரை நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லையென்றாலும் இந்த செய்தி அவள் மீதிருக்கும் அன்பை இன்னும் அதிகமாக்கியது.  

முதலாளி சென்ற பின்னர் ரான்ஃபோர்டு வீட்டுக்கு வருவது அதிகமானது. முன்பு போல அடிக்கடி வராவிட்டாலும் அவ்வப்போது தலையைக் காட்டிக்கொண்டு இருந்தார் அவர். அவரை நான் மைதானத்திலோ கிராமத்திலோ ஓரிரு முறைகள் சந்தித்து இருக்கிறேன். அவரிடமும் ஏதோ ஒரு மாற்றம் இருக்கிறது என்பதை என்னால் கண்டும் காணாமலும் இருக்க இயலவில்லை. மறுபடியும் அது என்னுடைய குழம்பிப்போன மனதின் கற்பனைகளே தவிர வேறொன்றுமில்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

வாரங்கள் கடந்தன. முதலாளி ஒரு மாத காலமாக இந்தப் பக்கம் வரவே இல்லை. மேற்கிந்திய தீவுப்பக்கம் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டதாகக் கேள்விப்பட்டேன். கண்காணாத தூரம்தான் என்றாலும் கடவுளை ஏமாற்ற முடியாது என்று வாஸ் சொன்னான். புறாவின் இறக்கைகளோடு பூமியின் நடுப்பகுதி வரை பறந்து செல்ல முடிந்தாலும் கடவுள் உனக்கு என்ன தீர்மானித்திருக்கிறானோ அதிலிருந்து தப்ப முடியாது என்றான். இந்த ஊரை விட்டு அவன் எவ்வளவு காலம் விலகி இருக்கிறானோ அத்தனை காலமும் அவனுக்கு இறைவனின் ஆசி இருக்கும் என்று அக்னஸ் சொன்னாள். அதைக்கேட்டதும் எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ப்ளைண்டருக்கு இது அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் என்பதை அவள் முகம் எடுத்துக் காட்டியது. கரடிகள் நம் அனைவரையும் தின்னட்டும் என்று திருவாய் மலர்ந்தான் வாஸ்.

மேற்கிந்தியப் பயணம் என்பது மிக நீண்ட கால இடைவெளியை எங்களுக்குத் தரும் என்ற எண்ணம் எங்களுக்கு ஆசுவாசமாக இருந்தது. வாஸின் தொங்கிப்போன முகத்தைப் பார்க்க நேரிட்டாலும் அன்றைய இரவு உணவு வேளையின் போது நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தோம். அதற்குக் காரணம் நான் இயல்பான உற்சாக நிலைக்குத் திரும்பி விட்டேனா அல்லது எஜமானி இப்போது பார்ப்பதற்கு நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாள் என்பதா என்று சரியாகத் தெரியவில்லை. காலையில் நடைப்பயிற்சி செய்யக் கிளம்பினாள். மதிய நேரம் தன்னுடைய அறையில் படுத்துக் கொள்கிறாள். நானும் அவளுக்குப் புத்தகம் வாசிக்கிறேன். என்னுடைய வேலை முடிந்த பிறகு என்னுடைய அறைக்குப் போகிறேன். உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். கடந்த வாரங்களில் முதல் முறையாகப் பூட்டியிருந்த அந்த அறையைக் கடக்கும்போது எதைப்பற்றியும் நினைக்காமல் கடந்துபோக முடிந்தது. என்னுடைய வேலையில் மூழ்கும் போது வெளியே பார்த்தேன். பனி தக்கை தக்கையாக வீழ்ந்து கொண்டிருந்தது. நிரந்தரமாகப் பொழியும் மழையை விட இந்த பனிப் பொழிவு பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. மொட்டையாக இருந்த தோட்டங்கள் எல்லாம் இந்த பனிப்பொழிவில் எப்படி வெள்ளையாடை உடுத்தியது போல அழகாகத் துலங்கும் என்று என் மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்தேன். உள்ளுக்குள்ளும் வெளியேயும்  புழுங்கிச் சாகும் உணர்வுகளையும் கூட இந்தப்பனி மூடிவிடும் என்று தோன்றியது.

அந்தக் கற்பனை என் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும்போது காலடியோசை கேட்டது. அக்னஸாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு தலையைத் தூக்கினேன்.

“என்ன அக்னஸ்?” வெளியே விழ காத்திருந்த வார்த்தைகள் தொண்டைக்குள்ளேயே உறைந்து நின்றன. அங்கே…கதவுக்கருகில் எம்மா சாக்சன் நின்று கொண்டிருந்தாள்.

அவள் அங்கே எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தாள் என்பது எனக்குத் தெரியாது. என்னால் மேற்கொண்டு அசைய இயலவில்லை; என்னுடைய கண்களை அவள் மீதிருந்து எடுக்க முடியவில்லை என்பது மட்டும்தான் நினைவிருக்கிறது. அதற்குப்பிறகு என்னை ஒட்டு மொத்தமாகப் பீதி பற்றிக் கொண்டது. இந்த முறை வெறும் பயம் என்று சொல்லி விலக முடியாது. அதை விட ஏதோ ஒன்று ஆழமாக, அதே சமயம் அமைதியாக உள்ளுக்குள் இறங்கியது. என்னை மிக மிக நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளுடைய முகம் சுரத்தே இல்லாத வழிபாடு போல இருந்தது. இவளுக்கு நான் ஏதேனும் உதவ வேண்டி இருக்குமோ? திடீரென்று அவள் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு வராந்தாவில் நடந்து போனாள். இந்த முறை அவளைப் பின்தொடர்வதில் பயம் ஏற்படவில்லை. அவளுக்குத் தேவையான ஒன்று ஏதோ என்னிடம் இருக்கிறது என்று எண்ணினேன். உடனே எழுந்து அங்கிருந்து ஓடினேன். அவள் வாராண்டாவில் மறுமுனையில் நின்றுகொண்டிருந்தாள். என் எஜமானியின் அறையை நோக்கி அவள் திரும்பக்கூடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படிச் செய்யாமல் பின்புறத்தை நோக்கிச் செல்லும் இன்னொரு கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். படிக்கட்டு வழியாக அவளை நான் பின் தொடர்ந்தேன். குறுக்கு வழியைத் தாண்டி பின்புறக் கதவை அடைந்தேன். அந்த சமயம் சமையலறையும் ஹாலும் காலியாகக் கிடந்தன. காவலாளியைத் தவிர அனைத்து வேலையாட்களும் அன்று வேலைக்கு வரவில்லை. காவலாளி மட்டும் அடுப்பங்கரையில் எடுபிடிக்காக இருந்தான். கதவுக்குப் பக்கத்தில் அவள் மீண்டும் ஒருமுறை கண நேரம் நின்றாள். ஏற்கனவே பார்த்த அதே பார்வையுடன். பிறகு கதவின் தாழ்ப்பாளை நகர்த்திக்கொண்டு வெளியே சென்றாள். ஒரு நிமிடம் எனக்குத் தயக்கமாக இருந்தது. இவள் என்னை எங்கே கூட்டிச் செல்கிறாள்? அவள் சென்ற பின்னர் கதவு மெதுவாகத் தன்னை மூடிக்கொண்டது. அதை லேசாகத் திறந்து அவள் போய்விட்டாளா நிற்கிறாளா என்று வெளியே எட்டிப்பார்த்தேன்.  கொஞ்ச தூரத்தில் வீட்டுக்கு முன்னாலிருந்த வெற்று மைதானத்தைத் தாண்டி மரங்களினூடே செல்லும் பாதையொன்றில் அவசரமாக அவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள். பனிப்பொழிவின் ஊடே பார்க்கும்போது அவளுடைய உருவம் கருமையாகவும் தனித்ததாகவும் தெரிந்தது. ஒரு கணம் என்னுடைய இதயம் நின்று விட்டதைப்போல உணர்ந்தேன். திரும்பிப் போகலாமா என்று யோசித்தேன். ஆனால் இதுவரை என்னை அவள் இழுத்துக்கொண்டு வந்திருக்கிறாள். இனி விடலாகாது என்று நினைத்துக்கொண்டு ப்ளைண்டரின் ஒரு பழைய சால்வையை உடல் மீது போர்த்தியவாறு அவளைத் தொடர்ந்து ஓடினேன்.   

கானகத்தின் ஊடே தெரிந்த பாதையொன்றில் இப்போது எம்மா சாக்சன் நடந்து கொண்டிருந்தாள். அவளுடைய நடை மிகவும் நிதானத்துடன் இருந்தது. வெளிக்கதவைத் தாண்டி பிரதான சாலையைக் கடக்கும் வரை அவள் போகும் அதே வேகத்தில் நானும் அவளைப் பின்தொடர்ந்தேன்.  அதன் பிறகு வெட்ட வெளியாகத் தெரிந்த வயல்களுக்குள் இறங்கி நடந்தாள். அவள் சென்ற திசை கிராமத்தை நோக்கி இருந்தது. தரை ஏறக்குறைய வெண்மை நிறத்தை அடையும் தறுவாயில் எனக்கு முன்னால் மொட்டையாக நின்று கொண்டிருந்த மலை முகட்டின் சரிவில் அவள் ஏறத்தொடங்கினாள்.  அவள் நடந்து சென்றபோது அவளுக்குப் பின்னால் எந்தக் காலடித்தடங்களும் இல்லாமல் இருப்பதை நான் கவனித்தேன். அதைப் பார்த்ததும் என்னுடைய இதயம் மறுபடியும் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது. முழங்கால் கூட வியர்வையில் நனைந்தது. வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதைக் காட்டிலும் கொடுமையான அனுபவமாக அது இருந்தது. அவள் அங்கு நடந்து செல்வதே அந்தக் கிராமப்புறம் முழுவதையும் சுடுகாடு போன்ற தனிமையான இடம் போல ஆக்கி இருந்தது. எங்கள் இருவரைத் தவிர அங்கே வேறு யாரும் இல்லை. இந்தப் பரந்த உலகில் உதவி செய்வார் என்று எவருமில்லை.

ஒருமுறை திரும்பிப்போக நான் எத்தனித்தபோது அவள் என்னை நோக்கித் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வை என்னைக் கயிற்றால் கட்டி இழுப்பதைப்போல இழுத்தது. அதன் பிறகு ஒரு நாய்க்குட்டியைப் போல அவளை நான் பின் தொடர்ந்தேன். கிராமத்தை அடைந்தோம். தெருக்களின் வழியே அவள் என்னை நடத்திச் சென்றாள்- தேவாலயத்தைத் தாண்டி, கருமான் பட்டறையைத் தாண்டி, இறுதியாக ரான்ஃபோர்டு இருக்கும் வீட்டைப் பார்த்து இருந்த சந்தின் வழியாக என்னைக் கூட்டிச் சென்றாள். ரான்ஃபோர்டின் வீடு பிரதான சாலையை ஒட்டியவாறு இருந்தது. அது ஒரு எளிமையான பழங்கால டிசைனில் கட்டப்பட்ட வீடு. இரு சுவர்களுக்கிடையே கதவை நோக்கிய பாதையொன்றும் அங்கே இருந்தது. நாங்கள் சென்ற சந்து ஆளரவமற்று இருந்தது. அந்தச் சந்தில் நான் நுழைந்த நேரத்தில் எம்மா சாக்சன் வீட்டுக்கதவின் அருகிலிருந்த ஆயா மரத்தின் கீழே நின்றுகொண்டிருந்தாள். இப்போது இன்னொரு பயம் என்னைத் தொற்றிக் கொண்டது. எங்கள் பயணத்தில் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டோம் என்பதை நான் புரிந்துகொண்டேன். இப்போது நான் எதையாவது செய்தாக வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பி இதுவரை அவளை நான் பின் தொடர்ந்து வரக்காரணம் என்னிடமிருந்து அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான். நான் வேறு இவளை ஏதோ பேயறைந்ததைபோல பின் தொடர்ந்து வந்திருக்கிறேன். ரான்ஃபோர்டின் வீட்டு வாசலின் முன்பாக அவள் நிற்கும்வரை அந்த மயக்க நிலை இருக்கத்தான் செய்தது. இப்போதுதான் என்னுடைய மூளை தன்னுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்தது. பனிப்பொழிவுக்கு மத்தியில் நான் அவளைவிட்டுக் கொஞ்ச தூரத்தில் நின்றேன். என்னை நெரிக்கிற அளவுக்கு என்னுடைய இதயத்துடிப்பு என்னைப் பயமுறுத்தியது. கால்கள் தரையோடு உறைந்த நிலையில் நின்றன. ஆயாமரத்தின் கீழே அவள் நின்றவாறு என்னைக் கவனித்தாள்.

எந்த ஒரு காரணமுமில்லாமல் அவள் என்னை அங்கே கூட்டி வந்திருக்க மாட்டாள் என்பது மட்டும் எனக்கு மிக உறுதியாகத் தெரிந்தது. அதாவது நான் சொல்ல வேண்டிய அல்லது செய்ய வேண்டிய ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. ஆனால் அது என்னவாக இருக்கும் என்பதைத்தான் என்னால் ஊகிக்க முடியவில்லை. என்னுடைய எஜமானிக்கோ ரான்ஃபோர்டுக்கோ கனவில் கூட என்னால் கெடுதல் நினைக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலைமையைப் பார்த்தால் ஏதோ ஒரு காரணம், பயங்கரமான ஒன்று அவர்கள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது உறுதியாகப் புரிந்தது. அது என்னவென்று இவளுக்குக் கண்டிப்பாகத் தெரியும். அவளுக்கு விருப்பமிருந்தால் அதை அவள் எனக்குச் சொல்ல முடியும். ஒருவேளை நான் அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கேட்டால் அதை என்னிடம் சொல்லக்கூடும்.

அவளிடம் போய் பேசுவதை நினைத்தாலே எனக்குத் தலை சுற்றுவதைப் போல இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளை நோக்கி இன்னும் சில அடிகள் என்னை நகர்த்தினேன்.  நான் அப்படி நகர்ந்த போது வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ரான்ஃபோர்டு வெளியே வருவது தெரிந்தது. அன்று காலை என்னுடைய எஜமானி எப்படித் தோன்றினாளோ அதே மாதிரி அவர் அழகான மனிதனாகவும் மகிழ்ச்சி நிரம்பிய மனிதனாகவும் தெரிந்தார். அவரைப் பார்த்த பிறகுதான் என்னுடைய நரம்புகளில் ரத்த ஓட்டம் பாய்வதைப்போல உணர்ந்தேன்.

“என்னாச்சு ஹார்ட்லி? ஏதேனும் விசேஷமா? இந்த சந்தின் வழியாக நீ வந்து கொண்டிருப்பதைச் சற்று முன்தான் பார்த்தேன். இந்தப் பனியில் சரியான வழியில் வருகிறாயா இல்லையா என்பதைப் பார்க்கவே நானும் வந்தேன்” அப்படிச் சொல்லிவிட்டு என்னைக் கூர்ந்து பார்த்தார். “நீ எதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

அவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நான் ஆயா மரத்தை நோக்கினேன். என்னைத் தொடர்ந்து அவரும் பார்த்தார். ஆனால் அங்கே யாரும் நின்ற தடயம் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் சந்து காலியாக இருந்தது.

ஓர் ஆயாசம் என்னை வியாபித்துக் கொண்டது. அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள். அவளுக்கு என்ன தேவையாக இருந்திருக்கும் என்பது தெரியாமலே போய்விட்டது. அவளுடைய கடைசிப் பார்வை என்னுடைய எலும்பு மஜ்ஜைக்குள் ஊடுருவியதைப் போன்று இருந்தது. இருந்தும் அந்தத் தேவை என்னவென்று எனக்கு அது சொல்லவில்லை. அவள் தனியாக நின்றுகொண்டு என்னைப் பார்த்தபோது எனக்குத் தோன்றிய பரிதவிப்பைக் காட்டிலும் அதிகமான பரிதவிப்புடன் இப்போது நின்று கொண்டிருந்தேன். என்னவென்று என்னால் அனுமானிக்க இயலாத ரகசியத்தின் மொத்த கனத்தையும் நான் மட்டுமே சுமக்க வேண்டும் என்பதைப்போல அவள் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டாள். பனிப்பொழிவு என்னைச் சுற்றி சுற்றி அடிப்பது போல இருந்தது. தரை என்னுடைய கால்களிலிருந்து விலகி ஓடுவது போல இருந்தது.

பிராந்தியின் ஓரிரு துளிகளும் ரான்ஃபோர்டின் வீட்டிலிருந்த கனப்படுப்பின் கதகதப்பும் என்னை நனவுலகிற்குக் கொண்டு வந்தன. என்னைப் ப்ரைம்டனில் இருக்கும் வீட்டிற்குக் கூட்டிச் செல்லுமாறு நச்சரிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே இருள் கவிழத் தொடங்கியிருந்தது. எஜமானியம்மா என்னைத் தேடுவாள் என்ற கவலை வர ஆரம்பித்தது. சும்மா நடப்பதற்காக நான் வெளியே வந்தேன் என்றும் இந்த வீட்டைக் கடக்கும்போது திடீரென்று தலைச்சுற்றல் ஏற்பட்டு நின்றதாகவும் ரான்ஃபோர்டிடம் விளக்கினேன். அதில் கொஞ்சம் உண்மையும் கலந்துதானிருந்தது. இதுவரைக்கும் நான் இப்படிப்பட்ட புளுகுமூட்டை என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டேன். இதைச் சொன்னபோதுதான் நான் எப்பேற்பட்ட புளுகுமூட்டை என்பது புரிந்தது.

எஜமானியம்மாவை மதிய உணவுக்குத் தயார் செய்யும்போது எனக்கு என்னவாயிற்று, ஏன் இப்படி வெளுத்த முகத்துடன் நோய்வாய்ப்பட்டதைப் போல் இருக்கிறாய் என்று அவள் கேட்டாள். கொஞ்சம் தலைவலி என்று சமாளித்தேன். அன்று மாலை நான் அவளுக்குத் தேவைப்பட மாட்டேன் என்பதால் என்னைச் சீக்கிரம் தூங்கும்படி அறிவுறுத்தினாள்.

என்னால் அங்கே அதிக நேரம் இருக்க முடியாது என்பதும் உண்மை. என்னுடைய அறையில் என்னுடைய இரவைத் தனிமையில் கழிக்க எனக்கும் விருப்பமில்லைதான். கீழே ஹாலில் போய் அமர்ந்து தூக்கம் வரும்வரை தலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தேன். சுமார் ஒன்பது மணியளவில் மேல் மாடியை நோக்கி ஊர்ந்து சென்றேன். என்ன நடந்தாலும் நடக்கட்டும். கவலைப்படும் நிலையில் நான் இல்லை. ஆனால் நடந்ததென்னவோ என் தலை தலையணை ஒன்றில் போய் மோதிக்கொண்டதுதான். வீட்டில் உள்ள அனைவரும் தூங்கச் சென்று விட்டார்கள். முதலாளி இல்லாவிட்டால் எல்லோரும் சீக்கிரமே தூங்கச் சென்றுவிடுவார்கள். பத்து மணிக்கு ப்ளைண்டரின் அறைக்கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து வாஸின் அறைக்கதவு மூடியது.

அந்த இரவு என்றுமில்லாத அளவு எல்லாம் அசைவற்று நிற்பதைப் போலத் தோன்றியது. மண்ணும் காற்றும் பனியோடு கலந்து பிசுபிசுப்பான மாதிரி இருந்தது. படுக்கையில் சாய்ந்தவுடன் ஆசுவாசமாக அமைதியாகப் படுத்துக் கிடந்தேன். நன்றாக இருட்டிய பின்னர் வீட்டுக்குள்ளே இருந்து வரும் வினோதமான சத்தங்களைக் கேட்பதற்கு ஆயத்தமாக இருந்தேன். கீழே இருக்கும் கதவு ஒருமுறை திறந்து மூடும் சத்தம் கேட்டதைப்போல உணர்ந்தேன். அனேகமாக அது தோட்டத்துக்குள் இட்டுச் செல்லும் கண்ணாடிக் கதவாகத்தான் இருக்கும். எழுந்து ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தேன். இரவு நிலவொளியில் அடர்ந்து தெரிந்தது. வெளியே தெரிந்த பனியின் தீற்றல்களைத் தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெளிவாகப் புலனாகவில்லை.

மறுபடியும் படுக்கையில் போய் விழுந்தேன். அப்படியே தூங்கிப்போனேன். திடீரென்று என்னுடைய மணி கர்ணகடூரமாக ஒலிப்பதைக் கேட்டுத் துடித்துப்போய் எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய மூளை எதையோ எச்சரிக்கை செய்தது. உடைகளை அள்ளிக்கொண்டு படுக்கையிலிருந்து கீழே குதித்தேன். “அது இன்று நடக்கப்போகிறது” என்று எனக்குள்ளேயே பேசிக்கொண்டேன். எது நடக்கப்போகிறது என்றுதான் தெரியவில்லை. என்னுடைய கைகள் ஏதோ பசைக்குள் மாட்டிக்கொண்டதைப் போல இருந்தது. என்னுடைய உடைகளை நான் அணியவே கூடாது என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வழியாகக் கதவைத் திறந்துகொண்டு வராண்டா வழியே லேசாக எட்டிப் பார்த்தேன். கையிலிருந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சம் காட்டிய தூரம் வரை வித்தியாசமாக எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை. எனக்குள் அவசரம் மிகுந்தது. மூச்சு எசகு பிசகாக நின்றுவிடுவதைப் போல வெளிவந்தது. பிரதான ஹாலுக்குச் செல்லும் கதவைத் தள்ளித் திறந்தேன். திறந்ததுதான் எனக்குத் தெரியும். என் இருதயம் அடிப்பதை நிறுத்திவிட்டதோ என்று நினைக்கும்படி அதிர்ச்சியில் உறைந்து போனேன். படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் எம்மா சாக்சன் நின்று கொண்டிருந்தாள். இருட்டுக்குள் பயத்தை உண்டுபண்ணும்படி அவள் இறங்கி நடந்து கொண்டிருந்தாள்.

அதிர்ச்சியில் ஒரு கணம் அசையாமல் நின்றேன். கதவிலிருந்து என்னுடைய கைகள் நழுவின. கதவை மூடுவதற்குக் கையை வீசிய அந்த இடைவெளியில் எம்மா சாக்சனின் உருவம் மறைந்து போயிருந்தது. அந்த நேரத்தில்தான் கீழே இருந்து இன்னொரு சத்தம் வந்தது. வீட்டுக்கதவின் தாழ்ப்பாளை யாரும் அறியாமல் திருட்டுத்தனமாகத் திறந்தால் எப்படிச் சத்தம் வருமோ அந்த மாதிரியான சத்தம். எஜமானியம்மாவின் அறையை நோக்கி ஓடினேன். அவளுடைய அறைக்கதவைப் பலமாகத் தட்டினேன்.

எந்தப் பதிலும் இல்லை. நான் மீண்டும் தட்டினேன். இந்த முறை உள்ளே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது. தாழ்ப்பாள் விலகியது. எஜமானி என் முன்னால் நின்றாள். அவள் இன்னும் தனது இரவு உடையை இன்னும் களையாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னைப் பார்த்ததும் கண்கள் விரிய ஆச்சரியத்துடன் என்னை நோக்கினாள்.

“இதெல்லாம் என்ன ஹார்ட்லி?” என்று முணுமுணுத்தாள். “உனக்கு ஏதேனும் உடல் நலக்குறைவா? இந்த நேரத்தில் நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.

“எனக்கு ஒன்றுமில்லை மேடம். என்னுடைய மணி அடித்தது” என்றேன் நான்.

இதைக் கேட்டதும் அவள் முகம் வெளிறிவிட்டது. மயக்கம் போட்டு விழுந்துவிடுவாள் போலிருந்தது.

“நீ தவறாகப் புரிந்து கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்” என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னாள். “நான் மணியை அடிக்கவில்லை. நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய்” என்றாள். அவள் அந்த மாதிரியான தொனியில் பேசி நான் இதுவரை கேட்டதே இல்லை. “சரி. போய் படு” என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்தினாள்.

ஆனாலும் அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே கீழே ஹாலில் இருந்து மீண்டும் சத்தம் கேட்டது. இந்தமுறை ஒரு மனிதனின் காலடிச் சத்தம். உண்மை என் மீது விழுந்து பிறாண்டுவது போல இருந்தது.

“மேடம்” என்று அவளைத் தள்ளிக்கொண்டு அழைத்தேன். “வேறு யாரோ இந்த வீட்டில் இருக்கிறார்கள்”

“யார் அது?”

“வந்திருப்பது மிஸ்டர் ப்ரைம்டன் என்று நினைக்கிறேன். அவருடைய காலடிச் சத்தம்தான் கீழே கேட்கிறது”

அதைக் கேட்டதும் அவளுடைய முகத்தில்  திகில் நடனமாடியது. மேற்கொண்டு எதையும் அவளால் பேச இயலவில்லை. திடீரென்று என் காலில் மயக்கம் போட்டு விழுந்தாள். நான் குனிந்து அவளைத் தூக்க முயற்சி செய்தேன். அவள் மூச்சிறைத்த விதத்தைப் பார்த்து இது சாதாரண மயக்கம் இல்லை என்று புரிந்து கொண்டேன். அவளுடைய தலையை நான் தூக்கிய நேரம் கீழே ஹாலிலும் மாடிப் படிக்கட்டுகளிலும் தட தட வென்று காலடிச் சத்தம் கேட்டது. கதவு படாரென்று திறந்தது. பயணத்தின் போது அணிந்திருந்த உடையைக் கூட களையாமல் மிஸ்டர் ப்ரைம்டன் அங்கே நின்று கொண்டிருந்தான். பனியின் துகள்கள் அவன் உடையிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. எஜமானியின் அருகில் நான் மண்டியிட்டு இருப்பதைப் பார்த்து ஒருமுறை பின்வாங்கினான்.

“இதெல்லாம் என்ன கருமம் புடிச்ச மாதிரி?” என்று இரைந்தான். அவனுடைய நிறம் கொஞ்சம் மங்கிப் போயிருந்தது. நெற்றியில் அந்த சிவப்பு நிறப்புள்ளி வெடிக்கத் தொடங்கியிருந்தது.

“எஜமானி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள்”.

அதைக் கேட்டதும் கிண்டல் தொனியுடன் பலமாகச் சிரித்தான். அவனை லேசாகத் தள்ளிவிட்டேன். “இவளுக்கு இப்படி நடிக்க இதைவிட வேறு சிறந்த நேரம் கிடைக்காதது பெரிய துரதிர்ஷ்டம்தான். இந்த நேரத்தில் இவளை நான் தொந்தரவு செய்திருக்கக் கூடாது. இருந்தாலும்….”

அவனுடைய அருவருப்பான சொற்களைக் கேட்டுக்கொண்டே நான் எழுந்தேன்.

“சார்… உங்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்” என்று கத்தினேன்.

“ஆஹ்… என் நண்பனைச் சந்திக்கப் போகிறேன். என்று சொல்லிவிட்டு உடை மாற்றும் அறைக்குள் போக எத்தனித்தான்.

அந்தச் சமயம் பார்த்து எனக்கு மனம் பேதலித்த மாதிரி ஆகிவிட்டது. என்ன நினைத்தேனோ எதைப்பார்த்துப் பயந்தேனோ தெரியாது. துள்ளி எழுந்து அவனுடைய சட்டைக் காலரைப் பற்றிக்கொண்டு உலுக்கினேன்.          

“சார்… சார்… கொஞ்சம் கருணை பண்ணி உங்கள் மனைவியைக் கொஞ்சம் பாருங்கள்.” என்று கெஞ்சினேன்.

அவன் வெறி கொண்டவன் மாதிரி தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டினான்.

“என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது” என்று சொல்லிவிட்டு உடை மாற்றும் அறையின் கதவைப் பிடித்துக் கொண்டான்.

அந்த நேரம் உள்ளேயிருந்து சிறு சத்தம் கேட்டது. மிகவும் சன்னமாகக் கேட்டாலும் அவனால் அதைத் தெளிவாகக் கேட்க முடிந்தது. கதவைப் பலமாகத் தள்ளித் திறந்தான். அப்படித் திறக்கும்போது அதிர்ச்சியில் அவனும் பின் வாங்கி நின்றான். வாசலில் எம்மா சாக்சன் நின்று கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் ஒரே இருட்டாக இருந்தாலும் என்னால் அவளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவனாலும் அப்படிப் பார்க்க முடிந்தது. அவளிடமிருந்து தனது முகத்தை மறைக்க முயலுபவனைப் போலக் கைகளை முகத்துக்கு நேராகக் கொண்டு வந்தான். மறுபடியும் நான் அவளைப் பார்க்க நினைத்தபோது அவள் அங்கே இல்லை.

பிரமை பிடித்தவனைப்போல நின்றான். உடம்பிலிருந்த பலம் அனைத்தும் வற்றிப்போனதைப் போலிருந்தது அவனுக்கு. அவன் அப்படியே சமைந்து நின்ற சமயத்தில் எஜமானி திடீரென்று துள்ளி எழுந்தாள். கண்களை ஒரு முறை திறந்து என் மீது பார்வையை நிறுத்தினாள். பின்னர் மறுபடியும் பொத்தென்று கீழே விழுந்தாள். அவள் மீது சாவு நடனமாடிவிட்டுச் சென்றதைப் பார்த்தேன்.

பனிப்புயலுக்கு நடுவே மூன்றாவது நாள் அவளை அடக்கம் செய்தோம். தேவாலயத்தில் ஒரு சிலரே இருந்தனர். பருவ நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர்களால் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாமல் போயிருக்கக்கூடும். நெருங்கிய நண்பர்கள் அதிகம் இல்லாமல் வாழ்ந்தவள் என்று எஜமானியைப் பற்றி நினைத்துக்கொண்டேன். கடைசியாக வந்தவர்களில் ரான்ஃபோர்டும் ஒருவர்.  அவளை வெளியே தூக்கிக்கொண்டு வருவதற்குச் சற்று முன்தான் அவர்கள் எல்லோரும் வந்தார்கள்.  அவர் கருப்பு அங்கி அணிந்திருந்தார். அந்தக் குடும்பத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் அவர். இப்படி முகம் வெளுத்துப்போய் ஒருவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. என்னைக் கடந்து சென்ற போது அவர் தோளில் சுமந்து சென்ற சவப்பெட்டியின் கம்பில் தலைசாய்த்தவாறு சென்றதைக் கவனித்தேன். அதை முதலாளியும் கவனித்திருப்பான் என்று கற்பனை செய்துகொண்டேன். அவன் நெற்றியில் புடைத்திருந்த சிவப்பு நிறப் புள்ளி என்னை அப்படி நினைக்கச் செய்தது. பிண ஊர்வலம் ஓயும்வரை தேவாலயத்தைத் தாண்டி நின்று கொண்டிருந்த ரான்ஃபோர்டை அவன் முறைத்துப் பார்த்துக்கொண்டே நின்றான்.  ஊர்வலத்துக்கு வந்தவர்கள் அங்கு நடக்கும் வழிபாட்டில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.  

எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் இடுகாட்டை விட்டுக் கிளம்பினோம். ரான்ஃபோர்டையும் காணவில்லை. என்னுடைய எஜமானியின் உடல் பூமிக்கு அடியே புதைக்கப்பட்ட மறு நிமிடம் முதலாளி வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோச்சு வண்டியில் தாவி அமர்ந்தான். எவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றான். “ஸ்டேசனுக்கு போ” என்று அவன் இரைந்து சொன்னது எனக்குக் கேட்டது. எல்லா வேலையாட்களும் தனியாக வீட்டை நோக்கிக் கிளம்பினோம்.

   எதித் வார்ட்டன்

தமிழில்: சரவணன். கா

*எதித் வார்ட்டன் (1862-1937) திகில் மற்றும் பேய்க்கதைகளை உலக அளவில் பிரபலப்படுத்தி அவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்த அமெரிக்க எழுத்தாளர். புலிட்ச்சர் விருது பெற்றவர்.

இது அவருடைய “Ghost stories of Edith Wharton” என்ற கதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள “The Lady’s Maid’s Bell என்ற கதையின் மொழிபெயர்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.