துப்பறியும் கதை-ச.வின்சென்ட்

துப்பறியும் கதை ஓர் இலக்கிய வகை. அது குற்றக் கதையின் (crime fiction) ஒரு பிரிவு. ஒரு குற்றம் அறிமுகப்படுத்தப்படும். அது விசாரிக்கப்படும். குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். துப்புதுலக்குவது ஒரு தனித் துப்பறிவாளராக இருப்பார். அல்லது காவல்துறையாக இருக்கும். தனித் துப்பறிவாளர் சாகச வீரராக அல்லது அபூர்வ சிந்தனை ஆற்றல் உள்ளவராக இருப்பார். தடயங்களைக்கொண்டு அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பார். அவரோடு சேர்ந்து வாசகரும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வார். பெரும்பாலும் குற்றம் ஒரு கொலையாக இருக்கும். துப்பறியும் கதையை இலக்கியமாகக் கொள்ளலாமா என்ற வினா எழுவதால், என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா அதனை ஓர் எடுத்துரைப்பு வகை (narrative genre) என்றும் பொதுமக்களுக்கான இலக்கியம்(popular literature) என்றும் கூறுகிறது.

குற்றம் செய்வது காலங்காலமாக இருந்துவரும் ஒன்று. திருவிவிலியத்தின் தொடக்கத்திலேயே கொலை நடக்கிறது. காயின் தனது சகோதரன் ஆபேலைக் கொன்றுவிடுகிறான். ஆனால் அந்தக் கொலையில் மர்மம் எதுவுமில்லை. கிரேக்க இலக்கியத்திலும், ஆயிரத்தோரு இரவுகளிலும் மர்மத்துடன் கூடிய கொலைகள் நடந்தன என்று எடுத்துக்காட்டி அப்போதே துப்பறியும் கதை தோன்றிவிட்டது என்பார்கள். எனினும் 1800களில்தான் துப்பறியும் கதை என்ற ஒரு கதை வகை தோன்றிற்று என்று சொல்லலாம். தொழிற்புரட்சிக்குப் பிறகு நகரங்கள் தோன்ற, குற்றங்களும் தோன்றின. காவல்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1869 இல் லண்டனிலும் 1845 இல் நியூயார்க்கிலும் முதன்முதல் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. குற்றங்களின் எண்ணிக்கை பெருகியபோது துப்பறியும் கதை தோன்றுவதற்கான சூழல் உருவானது.

முதல் துப்பறியும் கதை எட்கர் ஆலன் போவால் எழுதப்பட்டு 1841இல் வெளியிடப்பட்டது. போவைப்பற்றியும் துப்பறியும் கதையின் கூறுகள் பற்றியும் என்னுடைய எட்கர் ஆலன் போ: ஓர் ஆய்வு அறிமுகம் (பன்முக மேடை வெளியீடு) என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன். அந்நூலில் தான்  தனித்துப்பறிவாளர் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார். மிசியர் சி. அகுஸ்தெ துபே என்று அவர் பெயர் ஃப்ரெஞ்ச் மொழியில் உச்சரிக்கப்படுகிறது. எட்கர் ஆலன் போவைத் தொடர்ந்து வில்கி கோலின்ஸ் பிரிட்டனில் தி  மூன்ஸ்டோன் நாவலை எழுதினார். அதில் சார்ஜண்ட் கஃப் துப்பறிவாளர். 1887இல் ஆர்தர் கோனன் டாய்ல் வந்தார். ஷெர்லாக் ஹோம்ஸ் அதன் துப்பறிவாளர். ஆசிரியரை விட அவருடைய ஷெர்லாக் ஹோம்சும் அவரது நண்பர் டாக்டர் வாட்சனும்தான் வாசகர்களுக்கு அதிகம் தெரிந்தவர்கள். தமிழிலும் இந்த நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சந்தியா பதிப்பகம் நான்கு நாவல்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.

1920 முதல் 1939 வரையிலுள்ள காலகட்டத்தைத் துப்பறியும் கதையின் பொற்காலம் என்று அழைப்பார்கள். அக்காலகட்டத்தின் அரசிதான் அகதா கிறிஸ்டி. அறுபத்தாறு நாவல்களையும் பதினான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். அவர் படைத்த துப்பறிவாளர்கள் ஹெர்கூல் பைரோவும், மிஸ் மார்ப்பிளும் இந்தக் காலத்துத் துப்பறியும் நாவல்களில் துப்புகளைச் சேகரித்து புதிர்களைத் தீர்ப்பது போலத் துப்பறிவாளர் மர்மத்திற்குத் தீர்வு காண்பார். அவரோடு சேர்ந்து வாசகரும் துப்புத் துலக்குவார். இவை மர்ம நாவல்கள். இந்த நாவல்களில் அறைக்குள்ளேயே நிகழும், கொலையைத் தவிர மற்றவையெல்லாம் மென்மையான அறிவுப்பூர்வ விசாரணைகள் (cozy mysteries). இதனை அமெரிக்க எழுத்தாளர்கள் மாற்றி அமைத்தார்கள். உண்மைநிலைகளின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்று வாசகர்களும் எதிர்பார்த்தார்கள். ஊழல் காவல்துறை, குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் உள்ள hardboiled குற்றக் கதைகள் வந்தன. வன்முறை முதலிடம் பெற்றது. இவ்வகை துப்பறியும் நாவலாசிரியர்களில் ரெய்மண்ட் சாண்ட்லர் குறிப்பிடத்தக்கவர். பெரும்பாலான கதைகளில் நீதிமன்றங்களுக்குக் கொலைவழக்கு போகாது. ஆனால் எர்ல் ஸ்டேன்லி கார்டனரின் நாவல்களில் பெர்ரி மேசன் துப்பறியவும் செய்வார்; நீதிமன்றங்களில் வழக்காடவும் செய்வார். இப்போதெல்லாம் துப்பறியும் அல்லது குற்றக்கதையில் பல வடிவங்களும் வகைகளும் வந்துவிட்டன. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் கதை மாந்தர்கள்கொண்ட மர்ம, திகில் கதைகளும் வந்துவிட்டன. பழமையான மரபுகளும் தொடர்கின்றன. அகதா கிறிஸ்டியின் பைரோ உயிர்பெற்று நான்கு நாவல்களில் துப்புத் துலக்குகிறார்.

தமிழிலும் துப்பறியும்கதை நீண்ட வரலாற்றைக் கொண்டது. இங்கேதான் கொலைகள் பகிரங்கமாக நடக்கின்றனவே; துப்புத் துலக்குவதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். எனினும் வடுவூர் கே. துரைசாமி, தேவன் போன்றோர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே துப்பறியும் புனைவுகளை எழுதத் தொடங்கிவிட்டார்கள். வடுவூராரின் திகம்பர சாமியார் 1950 இல் திரைப்படமாக வந்தது. தேவனின் மூக்கு நீண்ட அப்பாவி சாம்பு ஒரு வித்தியாசமான துப்பறிவாளர். அதன்பிறகு சிறார்களையும் இளைஞர்களையும் ஏன் பெரியவர்களையும்கூடக் கவர்ந்தவர் தமிழ்வாணனின் சங்கர்லால். விக்கிப்பீடியாவில் தமிழ்வாணனின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது. சுஜாதாவின் கணேஷ் – வசந்த் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் கொடிகட்டிப் பறந்தார்கள். பையில் வைத்துப் போகும் அளவில் கதைப்புத்தகங்கள் வரத் தொடங்கின. அவற்றில் மர்ம திகில் புதினங்களுக்குத்தான் அதிக வரவேற்பு. நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரின் நாவல்கள் எல்லாருடைய கைகளிலும் இருக்கும்; இவற்றை பல்ப் ஃபிக்சன் (pulp fiction) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இதைக் காகிதக் கூழ் புனைவு என்று விக்கிப்பீடியா வேடிக்கையாக மொழிபெயர்த்திருக்கிறது. சரி, இப்போது தமிழில் துப்பறியும் கதைகள் வருகின்றனவா? தொலைக்காட்சித் தொடர்களில் திகில்/ மர்மம் கலந்த கதைகள் அவற்றின் இடத்தை எடுத்துக் கொண்டனவா? இந்திரா சௌந்திரராஜனின் மர்ம தேசங்கள் ஆட்கொண்டுவிட்டனவா? அல்லது துப்பறியும் கதைகள் எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் நமது தகுதிக்கு ஏற்றவை இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டதா? துப்பறியும் கதையை ஓர் இலக்கிய வகையாகத் தமிழ் அறிவுலகம் ஏற்கவில்லையா?

“The Book Review” என்ற ஏடு டில்லியிலிருந்து வருகிறது. 2021 டிசம்பர் இதழை அது துப்பறியும் கதைக்கான சிறப்பிதழாக வெளியிட்டது. உலக நாடுகள் பலவற்றிலும் இன்னும் துப்பறியும் நாவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை அதில் வந்துள்ள கட்டுரைகள் காட்டுகின்றன.  மருத்துவக் கொலைகள், போதைப்பொருள் தொடர்பானவை, கோபம், பொறாமை, வஞ்சம் தீர்த்தல் ஆகியவற்றினால் ஏற்படும் கொலைகள் என்று கதைத்தளங்கள் அமைந்தாலும், அவற்றைக் காவல்துறையினர், பெண் துப்பறிவாளர்கள், ஆண்கள் என்று பலரும் துப்புத் துலக்குகிறார்கள். அமெரிக்காவில் இரு பொருளாதார வல்லுநர்கள் மார்ஷல் ஜெவான்ஸ் என்ற புனைபெயரில் பொருளாதாரம் தொடர்பான குற்றங்களைக் கதைக் கருவாகக்கொண்டு நாவல்கள் எழுதுகிறார்கள். நார்வே ஸ்வீடனிலும் துப்பறியும் கதைகள் துடிப்பாகவே இருக்கின்றன. நியூசிலாந்தில் நளினி சிங் என்ற இந்தியர் துப்பறியும் நாவல்கள் எழுதுகிறார். நமது நாட்டிலும் உருது மொழியிலும், இந்தியிலும், வங்காளத்திலும், மலையாளத்திலும் துப்பறியும் நாவல்கள் எழுதப்பட்டு விரும்பிப் படிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுக் கட்டுரைகளின் மத்தியில் தமிழில் வரும் துப்பறியும் நாவல்கள்பற்றிக் குறிப்புக் கிடைக்குமா என்று தேடினேன். ராகம் தானம் பல்லவி என்ற தலைப்பில் கல்பனா ஸ்வாமிநாதன் என்று ஒருவர் ஆங்கிலத்தில் துப்பறியும் நாவல் எழுதியுள்ளார். கதையின் பின்புலம் தமிழ்நாட்டு மரபுகள் என்று தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர் கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கர்நாடக இசை கதைச் சிக்கலில் முக்கியப்பங்கு  வகிக்கிறது. பெயர்கள் – செந்தில், ராமச்சந்திரன் – தமிழ்ப்பெயர்கள். இருந்தாலும் அது தமிழ் நாவல் இல்லை.

இப்போது ஒரு குழப்பத்தைத் தீர்க்கவேண்டிய கட்டாயம். துப்பறியும் நாவலும் மர்மப் புனைவும் ஒன்றா? ஆங்கிலத்தில் thriller என்று சொல்லப்படும் புதிர்கள் நிறைந்த கிளர்ச்சியூட்டும் வகையில் துப்பறியும் கதையும் ஒன்று என்று சொல்வார்கள். திரில்லர் புனைவில் ஒற்று வேலை, பயங்கர நிகழ்வுகள் கொண்ட ’காதிக்’ மர்மங்கள் முதலியனவும் அடங்கும். ஆனால் துப்பறியும் புனைவு தனித்தன்மை வாய்ந்தது. ஒரு குற்றம் நடக்கிறது. அது தொடர்பான மர்மமான சிக்கல் இருக்கிறது. மர்மமான நிகழ்வு அல்லது தொடர் நிகழ்வுகள் நடக்கும் துல்லியமான சூழலைப் பகுத்தறிதலின் வாயிலாகக் கண்டுபிடிப்பது. இதுதான் துப்பறியும் கதை ஆகும். மர்மக் கதைகளும் துப்பறியும் கதைதானே என்று சொல்லலாம். ஆனால் வேறுகூறுகளைக் கொண்டவை. குற்றப் புனைவின் ஒரு வகை (crime fiction) துப்பறியும் கதை என்று முதலில் சொன்னோம். குற்றப்புனைவுகளில் குற்றவாளிகளும் அவர்கள் செய்த குற்றங்களும் முதலிடம் பெறும். குற்றவாளிகளின் உலகம் அவற்றின் பின்புலம்.

மர்ம நாவல்களில் கதையின் உட்கரு மர்மம். அது தீர்க்கப்படலாம்; தீர்க்கப்படாமல் போகலாம். துப்பறிவாளருக்கும் துப்புத் துலக்குவதற்கும் அங்கு வேலை இருக்காது. உச்சக்கட்டத்தில் தவறு திருத்தப்படும்; உண்மை வெளிப்படும். அறிவுப்பூர்வப் பகுப்பாய்வு நடைபெற வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் துப்பறியும் புனைவில் குற்றம் நிகழும், மர்மம் இருக்கும். ஆனால் முதன்மையான கவனம் அறிவுப்பூர்மானது. துப்பறிவாளரின் வேலை துப்புகளையும் தடயங்களையும் தேடிச் சலித்து குற்றத்திற்குத் தொடர்பானவற்றை வகைப்படுத்தி உண்மையைக் கண்டுபிடித்தல் ஆகும். கதை நடக்கும்போதே வாசகரும் தனது தர்க்க அறிவைப் பயன்படுத்தி மர்மத்தை விடுவிக்க முயற்சி செய்வார். வாசகரின் முடிவும் கதையின் முடிவும் வேறாக இருக்கலாம். ஆனால் தீர்வைத் தேடுதலே ஓர் அறிவுபூர்வப் பயிற்சி, இன்பம் தருவது.

இனி ஒரு துப்பறியும் புனைவின் கூறுகள் எவை என்றும், துப்பறியும் புனைவை ஓர் இலக்கிய வகையாக ஏன் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் பார்க்கலாம்.

1. ஒரு தீர்க்க முடியாத குற்றம் நடக்கும் சூழலை வரையறுத்து

அதனை விரிவாகச் சொல்லுவது.

2. துப்பறிவாளரை அறிமுகப்படுத்துவது, குற்றம், துப்புகள் அல்லது

தடயங்கள், விசாரணை, தீர்வை அறிவித்தல், அதற்கான விளக்கம்,

முடிவு.

3. பாத்திரங்கள், அவர்களுக்கு இடையேயுள்ள தொடர்புகள், கொலை

செய்யப்பட்டவர் அல்லது குற்றத்துக்கு உட்பட்டவர், குற்றவாளி,

துப்பறிபவர், புதிரைத் தீர்க்க முடியாதவர்கள்.

4. இடம் (பூட்டப்பட்ட அறை, கிராம வீடு, தனியாக இருக்கும்

மாளிகை)

5. புதிரை அவிழ்ப்பதற்கான வழிகள், சிக்கல், முரண் பகுப்பாய்வு,

முடிச்சுகள், குழப்பத்தின் இடைவெளி, தீர்க்கும் வழி

தோன்றுதல், தீர்வு, விளக்கம்.

பெரிய இலக்கியப் படைப்பாளிகளும் துப்பறியும் கதை எழுதியிருக்கிறார்கள். இங்கிலாந்தின் முதல் துப்பறியும் கதைகளை எழுதியவர்களுள் ஒருவர் ஜி. கே. செஸ்டர்டன். அவர் சிறந்த கட்டுரையாளர், தத்துவஞானி, கலை இலக்கியத் திறனாய்வாளர். அவருடைய ஃபாதர் பிரவுன் கதைகள் இன்றும் வாசிக்கப்படும் துப்பறியும் நாவல்கள். கிரஹாம் கிரீன் The Power and the Glory முதலான பல புகழ்மிக்க நாவல்கள் எழுதியவர். அவரும் துப்பறியும் கதைகள் எழுதியுள்ளார். ஒற்றர்களைப் பற்றிய கதைகளை சாமர்செட் மாம் எழுதியுள்ளார். அமெரிக்காவில் ஃபாக்னரின் திகில் கதைகள் சிறப்பானவை. உலகப் புகழ் மிக்க எழுத்தாளர் போர்ஹேசும் மூன்று துப்பறியும் கதைகள் எழுதியுள்ளார். Death and the Compass இல் குற்றவாளி வேண்டுமென்றே தவறான தடயங்களை விட்டுச்சென்று துப்பறிவாளரைக் குழப்புவார். துப்பறியும் கதையாடலை தலைகீழாக மாற்றும் கதை. நான் இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

பல திறனாய்வாளர்களும் படைப்பாளிகளும் துப்பறியும் புதினங்களின் விசிறிகள். சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், டி.எஸ். எலியட் ஒரு துப்பறியும் கதை எப்படி இருக்கவேண்டும் என்று விதிகளையே கொடுத்துள்ளார்:

  1. கதை அதிகப்படியான நம்பமுடியாத மாறுவேடங்களைச் சார்ந்திருக்கக் கூடாது.
  2. குற்றவாளியின் குணமும் நோக்கங்களும் இயற்கையாக இருக்கவேண்டும். நாமே புதிரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாம் உணரவேண்டும்  இயற்கைக்கு மாறான குணமுடைய குற்றவாளி இருந்தால் பகுத்தறிவுக்கு எரிச்சலூட்டும்.
  3. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுநிலை, மர்மமான கண்டுபிடிப்புகளைச் சார்ந்திருக்கக் கூடாது.
  4. வினோதமான இடங்களில் புதைபட்டிருக்கும் புதையல்கள், குறிகள், சடங்குகளைப் பயன்படுத்தும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கக்கூடாது.
  5. துப்பறிவாளர் உயர்ந்த அறிவுக்கூர்மை உள்ளவராக இருக்கவேண்டும்; ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்டவராக  இருக்கக்கூடாது. ஓரளவு அவருடைய முடிவுகளை நாமும் முழுவதுமாக அல்லாமல், பின்பற்றிச் செல்லக்கூடிய வகையில் இருக்கவேண்டும்,.

 துப்பறியும் கதைகள் பல இலக்கியத் திறனாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாடு பின் – உண்மை (post-truth) என்பது. 2016இல் தான் இச்சொற்றொடர் முதன் முதலில் ஆக்ஸ்போர்டு அகராதியில் விளக்கப்பட்டது. புறவயம் சார்ந்த உண்மைகளை விட உணர்ச்சியைத் தூண்டக்கூடிய தனிப்பட்டவர் நம்பிக்கை சார்ந்தவைதான் பொதுமக்களின் கருத்தை ஏற்படுத்துகின்றன என்பது இந்தக் கோட்பாடு. இலக்கியத் திறனாய்வில் இதைப் பயன்படுத்தும்போது உண்மையிலிருந்து புனைவைப் பிரித்துப் பார்க்கமுடியாத நிலையைக் குறிப்பிடுகிறார்கள். புனைவு வேண்டுமென்றே சொல்லும் பொய் இல்லை. இதனை ஹனா ஆரென்ட் என்பவர் முன்வைக்கிறார். இதனை உண்மைநிலையை நீக்குதல் (defactualization) என்று அவர் அழைக்கிறார். பின் – உண்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆஸ்த்திரிய நாவலாசிரியர் ஏவா ராஸ்மேனின் நாவலை ஒரு திறனாய்வாளர் ஆய்வுசெய்கிறார்.

துப்பறியும் புனைவுகள் இரண்டு நூற்றாண்டுகளாக இவ்வளவு செல்வாக்குடன் இருப்பதற்கு என்ன காரணம் என்பதைப் பலரும் பலகோணங்களில் ஆராய்ந்திருக்கிறார்கள். குழந்தைப்பருவத்தில் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் (curiosity) இருக்கும். துப்பறியும் கதைகளைப் படிக்கும்போது அந்த உணர்ச்சிக்கு வாசகர் திரும்பப் போகிறார். பாதிக்கப்பட்டவரைப் பெற்றோராகவும், குற்றவாளி அல்லது துப்பறிவாளராகத் தன்னையே கற்பனை செய்து கொள்கிறார் கற்பனை செய்துகொள்கிறார். இவ்வாறு தனது குழந்தைப்பருவத்தில் தனது கையாலாகாதத்தனம் என்ற குற்ற உணர்வுக்கு மாற்றுத் தேடுகிறார். இவ்வாறு உளவியலின் அடிப்படையில் துப்பறியும் கதையின் செல்வாக்கிற்குக் காரணம் சொல்லலாம். W. H. ஆடன் என்ற கவிஞர் ஆர்தர் மன்னன் புனித கிண்ணத்தைத்  தேடுவதன் மாயத் தன்மைக்குத் துப்பறியும் கதையை ஒப்பிடுவார். மேலும் சமுதாய நிலையின் பிரதிபலிப்பாகவும் இருப்பது துப்பறியும் கதையின் கவர்ச்சிக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள்.

குற்றப் புனைவுகளுக்கு எப்போதும் விசிறிகள் இருப்பார்கள். இளவயதினர் இவற்றை விரும்பி வாசிக்கிறார்கள். ஆங்கிலத்தில் வயதுகளுக்குத் தகுந்தவாறு துப்பறியும் கதைகள் வகைப்படுத்தித் தரப்படுகின்றன. தமிழில் நண்பர் மதுரை சரவணன் சிறுவர்களுக்கான துப்பறியும் நாவல்கள் எழுதுகிறார். துப்பறியும் கதையில் துப்புத் துலக்கக் காரண-விளைவுகள் பயன்படுவதால் இக்கதைகளை வாசிப்பது நுண்ணறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். எனவே இளையோர் துப்பறியும் கதைகளை வாசிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்.

McChesney, Anitha. “Detective Fiction in a Post-Truth World: Eva Rossmann’s Patrioten.”  Classical and Modern Languages and Literatures, 9(1): 2020. 

“Detective Fiction.” Britannica.

The Book Review. Vol XLV Number 12 Dec 2021.

”துப்பறியும் கதை.”. தமிழ் விக்கிப்பீடியா 

வின்சென்ட் .ச.  எட்கர் ஆலன் போ: ஓர் ஆய்வு அறிமுகம். தேனி: பன்முகமேடை, 2016.

_________________”போர்ஹெசைப் புரிந்துகொள்வோம்.” திறனாய்வுக் கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளும். மதுரை: பிறழ் 2019.

Previous articleவேலைக்காரியின் மணியோசை-எதித் வார்ட்டன்,தமிழில் – கா.சரவணன்
Next articleதொட்டால் தொடராது – லதா ரகுநாதன்
ச. வின்சென்ட்
பேராசிரியர் முனைவர் ச.வின்சென்ட் ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறைத் தலைவர். எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும், காஃப்காவின் உருமாற்றம். தீர்ப்பு, தாஸ்தாய்வ்ஸ்கியின் வெகுளி, சூஃபி ஞானி அத்தார் கவிதைகள் ஆகியவை.. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு பத்து நூல்கள் வரையில் மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: பிராதமுதலியார் சரித்திரம், ஒப்பியல் சமய நோக்கில் திருவருட்பா. திறனாய்வுக் கோட்பாட்டாளர்களும் கோட்பாடுகளும் இவருடைய திறனாய்வு நூல்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.