மாமேதை தஸ்தயெவ்ஸ்கியின் இலக்கியப் பங்களிப்பு

1821 இல் மாஸ்கோ புறநகரில் பிறந்த தஸ்தயெவ்ஸ்கியின் தந்தை மருத்துவராக இருந்தவர். வசதியான குடும்பம், ஆஸ்பத்திரி வளாகத்திலேயே அமைந்த வீடு. சிறுவயதிலிருந்தே பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் நோவுகளையும் பார்த்து வளர்ந்தவர். ஜார் மன்னர் ஆட்சியிலிருந்த பெரும்பான்மையினரைப் போல் தஸ்தயெவ்ஸ்கியின் பெற்றோரும் மிகக் கண்டிப்பான கிறிஸ்தவர்களாக இருந்தனர். தஸ்தயெவ்ஸ்கியும் ஒரு கிறிஸ்தவராகவே வளர்க்கப்பட்டார். 12 வயதில் மாஸ்கோ பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்து பீட்டர்ஸ்பர்கிலும் படிப்பைத் தொடர்ந்த அவருக்குக் கூடப் படித்த பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களோடு ஒத்து இருப்பது முடியாததாகவே இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே அவரது தந்தை தன் குடியானவர்களாலேயே கொல்லப்பட்டார். பட்டப் படிப்புக்குப் பிறகு பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய தஸ்தயெவ்ஸ்கி சூதாட்டத்திற்கு அடிமையானார். இந்தப் பழக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் இருந்து வந்தது. இருபதுகளிள் இறுதியில் புரட்சிகர சிந்தனையாளர்களுடன் நட்புடன் இருந்த அவர் அதில் மும்முரமாக ஈடுபடாவிட்டாலும் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு 4 வருட கட்டாய உடலுழைப்புக்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து திரும்பியவுடன் தன் எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் நாவல்கள் – 9, குறுநாவல்கள் – 6, சிறுகதைகள் – 16, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், குறிப்புகள் என உலகம் இன்றுவரை வியக்கும் வண்ணம் எழுதிக் குவித்தார்.

தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துலகப் பயணம் (11.11.1821- 9.2.1881) இருவேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிறைவாசத்திற்கு முன்பு எழுதப்பட்ட குறு/சிறு நாவல்கள் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்கியத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தன. கோகோலின் (Gogol) எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்ட இளம் தஸ்தயெவ்ஸ்கியின் கதைகளில் அதன் தாக்கம் சற்று தூக்கலாகவே தெரிந்தது. 1845இல் தன் 25ஆம் வயதில் எழுதிய POOR FOLKS என்னும் ரஷ்யாவின் முதல் சமூக நாவல் அதற்கு  ஒரு சிறந்த உதாரணமாகும்.

சைபீரிய சிறை வாசத்திற்குப் பிற்பட்ட நாவல்களில் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் மீதான அனுதாபமும் இகழ்ச்சியும் மிகக் கவனமாகவும், கூர்மையாகவும் கையாளப் பட்டுள்ளன. இருத்தலியலின் (Existentialism) தந்தை என அறியப்பட்ட சோரன் கியர்க்ககார்டின் (Soren Kierkegaard) எய்தர் / ஆர் (Either/Or) என்னும் புத்தகம் 1943-இல் வெளியிடப்பட்டு ஐரோப்பாவை உலுக்க ஆரம்பித்த நேரம் தஸ்தயெவ்ஸ்கியின் NOTES FROM THE UNDERGROUND வெளிவந்தது. அவரவர் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிப்பது அவரவர் கடமை என்று எழுதிச்சென்ற தஸ்தயெவ்ஸ்கி கவனிக்கப்பட்டார். அதன் பிறகு இன்று வரை தொடர்ச்சியாக உலக அரங்கில் அதிகம் பேசப்படும் எழுத்தாளராகவும் உள்ளார். 200 வருடங்களை முடித்துள்ள அவரது எழுத்துக்கள் மேன்மேலும் புதுப்புது திறனாய்வுகள் உருவாக வழி செய்தபடி இருக்கின்றன.

தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்களில் மிக முக்கியமானவையாக அறியப்படுபவை:

1.INSULTED AND HUMILIATED (1861),

2.NOTES FROM THE UNDERGROUND (1864),

3.CRIME AND PUNISHMENT (1866),

4.THE IDIOT (1869),

5.THE POSSESSED (1872),

6.BROTHERS KARAMAZOV (1880).

இந்த ஆறு நாவல்களுமே மிகக் கனமான, துக்கவியலை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நாவல்களில் மானுட வாழ்க்கைக்கான ஆறு ஆழமான, தர்க்கத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய கருத்துக்களாக

1. ஆன்ம விசாரணைக்கான களத்தைக் கண்டறிதல்.

2. துன்பத்தின் மதிப்பு (அ) நமக்கே நம்மைத்தெரிவதில்லை

3. நல்லவர்களும் கெட்ட செயல்களைச் செய்யலாம்

4. வாழ்க்கையின் புற/அக அழகை ஆராதித்தல்

5. நன்மை, தீமைக்கு இடையேயான போட்டி

6. இலட்சியத்திற்கான வரம்பு ஆகியவை முன் வைக்கப்பட்டுள்ளன.

முதல் நாவல்களுக்கே உரிய பயிற்சியின்மையும் முதிர்ச்சியின்மையும் INSULTED AND HUMILIATED-இல் ஒருங்கே இருந்தாலும் அதில் வியக்கவைக்கும் கருப்பொருளும் உள்ளது. தஸ்தயெவ்ஸ்கியின் ஏனைய உலகப் புகழ்பெற்ற நாவல்களின் சாயலையும் இதில் காணமுடியும். இந்நாவலில் மக்களைப் பற்றிய புரிதல்கள், அவர்கள் வேலைத்திறன், மானுடத்தின் கரைகாண இயலாத விழைவுகள், பாவங்கள், நல்லிணக்கம், மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி மற்றும் பல உணர்வுகளும், செயல்களும் நம் வாழ்க்கையைத் தொட்டும், மாற்றியமைத்தும் செல்வதை நாவலாசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

உலகையும் வாழ்வையும் பற்றிய ஒரு ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் முடிவற்ற புலம்பல் NOTES FROM THE UNDERGROUND. இந்நாவல் தஸ்தயெவ்ஸ்கியின் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த தத்துவ விசாரணையின் களமாகும். நம்முடைய பழக்கமான, நடைமுறையிலுள்ள, “இது இருந்திருந்தால் துயரங்கள் குறைந்திருக்கும்” என்னும் புலம்பலை முன்னிறுத்துகிறது. இந்த வாதம் தஸ்தயெவ்ஸ்கி சொல்வது போல் “ஒரு மாயையே”. உலகை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் எவையுமே முழுமையுறாதவையே. அவற்றால் துயரங்களை முழுமையாகத் துடைக்க இயலாது. மாறாக, அவற்றால் துன்பம் தருபனவற்றை சற்றே மாற்ற மட்டுமே முடியும். தஸ்தயெவ்ஸ்கி சொல்வதைப் போல்,

“வாழ்க்கை, வலி குறித்த கண்ணோட்டத்தை சதா மாற்றக் கூடியதாக இருக்குமே அன்றி துயரத்தை ஒரேயடியாகத் துடைத்து எறியக்கூடியது அல்ல”

ஏதேனும் ஒன்று எப்போதும் நம்மை துன்புறுத்திக்கொண்டுதான் இருக்கும். எவ்வாறு பெரும்பான்மை மனிதர்கள் தேவையற்ற உயர்வு மனப்பான்மையுடன இருக்கிறார்கள் என்பதை இந்நாவல் விவரிக்கிறது. வளர்ச்சியை அர்த்தமற்றது என்று கூறாத தஸ்தயெவ்ஸ்கி கணிக்க இயலாத மனித மனத்தின் சிக்கலுக்கு (complexity) முன் எந்த வளர்ச்சியும் முழுமையானதாக இராது என்கிறார். சமத்துவ உலகம், சாத்தியமல்ல என்னும் வாதத்தை நிலை நாட்டுகிறார்.

ஒரு பாவப்பட்ட படிப்பாளியான ரோடின் ரஸ்கோல்னிகோவை நாம் சந்திப்பது CRIME AND PUNISHMENT என்னும் நாவலில். ஆரம்பத்தில் அறியப்படாத ஒருவனாக இருப்பினும், அதிகாரம் மற்றும் இரக்கமின்மையின் மறுவடிவம் என தன்னை நினைத்துக் கொள்ளும் அவன் பணம் தேடும் வெறியில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு கிழவியையும் அதைப் பார்த்துவிட்ட அவளது தங்கையையும் கொலை செய்கிறான். ஆனால், வெகு சீக்கிரத்திலேயே தன்னால் உருவகப்படுத்தப்பட்ட பகுத்தறிவுவாதியாக இருக்க முடியாத குற்ற உணர்வாலும், தான் செய்த காரியத்தின் பயங்கரத்தாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி, காவலரிடம் சரணடைந்து தகுந்த தண்டனையைப் பெறவும் சித்தமாகிறான். ரஸ்கோல்னிகோவ் செய்ததை நம்மில் பலர் செய்யமாட்டோம் என்றாலும் அவனிடமிருக்கும் வெறியை நம்மில் பலர் உணரத்தான் செய்கிறோம். நமக்கு நாம் யார் என்பது சரிவரத் தெரிவதில்லை. இந்த உண்மையை – நம்மை நாமே இனங்காண வேண்டும் என்பதை- வெளிப்பார்வைக்குத் தீவிர குற்றவாளியாகவும், அந்தரங்கத்தில் அறத்திற்கு முன் நிராயுதபாணியாகவும் நிற்கும் ரஸ்கோல்னிகோவ் என்னும் மனிதன் மூலமாக தஸ்தயெவ்ஸ்கியின் மேதமை குறிப்பாய் உணர்த்துகிறது. நல்லவர்கள் என நாம் நினைப்பவர் கெடுதல்களைச் செய்வதைப் பார்ப்பதும் இதில் அடங்கும்.

தஸ்தயெவ்ஸ்கியின் அடுத்த முழு நீள நாவல் IDIOT சொல்லிச் செல்வது வாழ்க்கையில் புற மற்றும் அக அழகு ஆராதிக்கப்பட வேண்டும் என்பதை. மிஷ்கினின் (தஸ்தயெவ்ஸ்கியின் பிரதிபலிப்பு) மரணத்திற்கு மிக அருகாமைப் பொழுதில் துவங்கும் இந்நாவல் அந்த நேரம்- அதாவது மரணத்திற்கு சரியாக மூன்று நிமிடங்களுக்கு முன்னால் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதாக உள்ளது. முன் பார்த்தும் உணராது இருந்தவை அவரைப் பரவசப்படுத்துகின்றன. (உ.ம்) ஒளிக்கற்றை. மிகவும் எளிமையான மிஷ்கினின் (சிறந்த அழகான மனிதன்) அக அழகு தஸ்தயெவ்ஸ்கியின் எண்ணச் சிதறல்களின் கோர்வையில் நேர்த்தியாகப் பின்னப்பட்டு நஸ்டாஸியாவின் புற அழகின் மறுபக்கமாக ஒளிர்கிறது, மிஷ்கின் நாவலாசிரியரின் முகம். மூன்று நிமிடத்தில் வாழ்க்கையின் அழகை முழுமையாக ஆராதிக்கும் அவன் கடைசி நிமிட மன்னிப்பினால் சுடப்படாது சைபீரியாவிற்கு அனுப்பப்படுகிறான். மற்றவர் கண்ணுக்கு அசடனைப் போல் தோற்றமளிக்கும் அவன் நமக்கு விட்டுச் செல்லும் குறிப்போ வாழ்க்கை தற்காலிகமானது என்னும்போது அக்குறுகிய காலத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொன்றும் சரியான கோணத்தில் பார்க்கப்பட்டு ஆராதிக்கப்பட வேண்டியது என்பதே.

19ஆம் நூற்றாண்டு ரஷ்யாவைக் களமாகக் கொண்ட டார்க் காமெடி (Dark Comedy) என வகைப்படுத்தப்பட்ட POSSESSED என்னும் நாவல் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளிலேயே புரிந்து கொள்ள மிகவும் கடினமானதாக அறியப்பட்ட ஒன்றாகும். இந்நாவலின் முதல் பாகம் முகமறியா ஒருவர் தமக்குத்தாமே பேசிக் கொள்வது போலவும்; தீவிரமான சிந்தனைகளுக்கு நடுவே நகைச்சுவையான விஷயங்களை உள்ளடக்கியதாகவும்; வயதான ஸ்டீபன் பொகோவென்ஸ்கிக்கும் அவரின் பணக்காரப் புரவலர் வர்வரா பெட்ரோவ்னா ஸ்டாவ்ரோஜினாவுக்குமான, ஆர்வத்தைக் கிளறக்கூடிய அற்பத்தனமும், நகைச்சுவையும் நிறைந்த உறவை மையமாகக் கொண்டதாகவும் இருக்கிறது.. இரண்டாவது பாகத்தில் இருவேறு தலைமுறையைச் சேர்ந்தவர்களின் (ஸ்டீபன் – வர்வராவின் குழந்தைகளும், அவர்களின் முந்தைய திருமணத்தில் பிறந்தவர்களும்) நன்மை தீமைக்கிடையே நடைபெறும் அன்றாடப் போராட்டமே கதைக்கருவாகும். நாம் எல்லோருமே – நன்மையோ, தீமையோ – ஏதேனும் ஒன்றால் பீடிக்கப்பட்டவர்களாய் உள்ளோம் என்று வரையறுக்கும் இந்நாவலில் கிறிஸ்தவப் பின்னணி சற்று தூக்கலாகவே உள்ளது.

 BROTHERS KARAMAZOV இல் பகிரப்படும் உண்மை இலட்சிய வாதத்திற்கு எல்லைகள் உண்டு என்பதே. அப்பெரிய நாவலின் இடையே ஒரு அத்தியாயமான (பிற்பாடு சிறுகதையாக வெளிவந்த) ‘The Grand Inquisitor’, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் (second coming), அது ஸ்பெயின் தேசத்தில் நிகழ்ந்ததையும், அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையும் கூறுகிறது. கத்தோலிக்கத்தின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது நிகழ்ந்ததாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிறையில் அவரை சந்திக்கும் சர்வ வல்லமை பொருந்திய விசாரணை அதிகாரி உலகின் ஸ்திரத்தன்மைக்கு கிறிஸ்து மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும், சிறந்த லட்சியவாதியான அவர், மிகத்தூய்மையானவரும் சரியானவருமாக இருப்பதால் மானுட இனம் அவர் கட்டமைக்கும் இலட்சியக் கோட்டைக்குள் அடங்குவது கடினம் என்றும் கூறுகிறார். மூன்று கரமசோவ் சகோதரர்களும் (மித்யா, அல்யோஷா, ஐவன்) அரசியல், மதம் மற்றும் அன்றாட வாழ்வின் இலட்சிய பிம்பங்கள். நம் வாழ்க்கையின் விளக்கம் போன்ற இந்நாவல் இலட்சியங்கள் தேவைதான் என்றாலும் , இலட்சியங்களுக்கு வரம்பு உண்டு என்பதை வலியுறுத்துகிறது.

திறனாய்வாளர்கள் வரிசையில் அசையாத இடத்தைப் பெற்றிருக்கும் ரஷ்யத் தத்துவவியலரான மிகேய்ல் பக்தின் (Mikhail Bakhtin) 1929இல் வெளிவந்த தன்னுடைய ‘தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளின் பிரச்சினைகள்/கவிதையியல் (“Problems of Doestoevsky’s creation “ renamed as Problems of Doestoeveky’s Poetics in 1961edition) என்னும் திறனாய்வில் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துகளின் தனித்துவம் குறித்து சிலாக்கியமாகப் பேசுகிறார். தஸ்தயெவ்ஸ்கியின் புது விதமான பாலிஃபோனிக் (Polyphonic) என வகைப்படுத்தக்கூடிய நாவல்களில் – சுதந்திரமான, சமமான, குரல்கள் கொண்ட கதாபாத்திரங்கள் – தன்னளவில் முழுமையானவையாகவும் கதாசிரியரின் தத்துவக் கோட்பாட்டைப் பல விதங்களில் பிரதிபலிப்பனவாகவும் இருக்கின்றன எனக் கூறிய பக்தின், தஸ்தயெவ்ஸ்கி வாசகர்களுக்கு அவரின் மற்றொரு பரிமாணத்தைப் புரிய வைத்தார். தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களை முழுமையாக உள்வாங்க வேண்டுமென்றால் எல்லாக் கதாபாத்திரங்களையும் அவரவர் நிறைகுறையுடன் ஏற்க வேண்டியது அவசியம். ஏனெனில் வாழ்க்கையின் அர்த்தம் அவரவரக்கு அவரவர் பங்களிப்பின் மூலமே என்பதே தஸ்தயெவ்ஸ்கியின் கோட்பாடு.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.