வெண்ணிற இரவுகள்: நிலவும் முகிலும் பாவண்ணன்

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் புத்தகத்தை புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு புத்தகக் கண்காட்சியில் 1982இல் நான் முதன்முதலாக வாங்கினேன். அத்தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், அடக்கமான பெண், அப்பாவியின் கனவு ஆகிய ஐந்து கதைகள் இடம்பெற்றிருந்தன. முதல் வாசிப்பிலேயே வெண்ணிற இரவுகள் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

நாஸ்தென்காவின் தவிப்பையும் அந்த இளைஞனின் தவிப்பையும் கண்ணுக்கு நேராக பார்ப்பதுபோல இருந்தது. இருவரும் மாறிமாறி தன் கதைகளைச் சொல்லிக் கொள்வதன் வழியாக அவர்களிடையில் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்த நெருக்கம் கரையில் மோதி உடையும் அலையென இறுதிக் கணத்தில் சட்டென கலைந்துபோவதைப் படித்தபோது மனம் துக்கத்தில் அமிழ்ந்துவிட்டது. தன்னிடம் அன்போடு இரண்டு வார்த்தைகள் பேசுகிற ஒரு பெண்ணைச் சந்தித்தால் போதும், அதுவே வாழ்வில் பேரின்பமான கணமென்று நினைத்துக் கொண்டிருக்கிறான், ஓர் இளைஞன். தன் பேச்சாலும் கண்ணியத்தோடு பழகும் இயல்பாலும் தற்செயலாக ஒரு பெண் அவனை நெருங்கி வருகிறாள். அது மேலும் தற்செயலாக காதலாக அரும்பத் தொடங்குகிறது. அரும்பத் தொடங்கிய கணத்திலேயே கருகி உதிர்ந்துவிடுகிறது. ஓர் உச்சக்கணத்தில் அரும்புவதும் உதிர்வதும் அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன. அந்தக் காதலே கனவுபோல தோன்றி மறைந்துவிடுகிறது. அந்த வேதனையைப் படிக்கப்படிக்க நானே எதையோ இழந்ததுபோல உணர்ந்து திகைப்பிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியிருந்தேன்.

அப்போது யாரையும் பார்க்கவோ, யாரிடமும் பேசவோ பிடிக்கவே இல்லை. என்ன உலகம் இது என உலகத்தின் மீதே ஒருவித வெறுப்பு தோன்றியது. அறைக்கதவுகளை மூடிக்கொண்டு நாலைந்து மணி நேரம் அடைபட்டிருந்தேன். பிறகு எனக்கே அது பிடிக்காமல் அறையை விட்டு வெளியேறி கால்போன போக்கில் வெகுதொலைவு நடந்துசென்று திரும்பினேன். அதற்குப் பிறகுதான் மனத்தில் சற்றே அமைதி நிலவத் தொடங்கியது. அவனுக்குக் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்று நினைத்து என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

சில மாதங்கள் கடந்துவிட்டன. ஆயினும் நாஸ்தென்காவின் சித்திரம் மனத்தைவிட்டு அகலவில்லை. எப்போதாவது ஏரிக்கரைக்கு அருகிலோ அல்லது ஊருக்கு வெளியே நீண்டிருக்கும் ஒற்றையடிப் பாதையை ஒட்டி விழுதுவிட்டு தனித்திருக்கும் ஆலமரத்தின் அருகிலோ தனிமையில் நின்றிருக்கும் எந்த இளம்பெண்ணைப் பார்த்தாலும் நாஸ்தென்காவின் நினைவு வந்துவிடும். அந்தப் பெண்ணையும் நாஸ்தென்காவையும் இணைத்து மனத்துக்குள் நானாகவே புதிதுபுதிதாக கதைகளைப் புனைந்து அந்தக் கனவுகளில் தோய்ந்திருப்பேன்.

நாஸ்தென்கா பதினேழு வயது இளம்பெண். பாட்டியின் கண்காணிப்பில் வாழும் அவளுக்கு அந்தப் பிடியிலிருந்து ஒரு விடுதலை தேவையாக இருக்கிறது. காதல் மட்டுமே அவளுக்கு அந்த விடுதலையை அளிக்கும் என்பதை அவள் புரிந்துகொள்கிறாள். காதலிக்கும் வாய்ப்பொன்று அவளைத் தேடி வந்த சமயத்தில் அதை உடனடியாக பற்றிக்கொள்கிறாள். அன்றைய தேதியில் நாஸ்தென்காவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆதரிக்கும் மனநிலையில்   நான் இருந்தேன். ஏறத்தாழ நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் பெரிய மாற்றமெதுவும் உருவாகிவிடவில்லை. அவள்  மீது ஆதரவு மட்டுமல்ல, ஒருவித பரிவுணர்ச்சியும் இப்போது சேர்ந்திருக்கிறது.

அப்போது ஒரு பயிற்சிக்காக சங்க இலக்கியப்பாடல்களைத் தொடர்ச்சியாக படித்துவந்தேன். ஒருமுறை நற்றிணையில் இடம்பெற்றிருக்கும் வெள்ளிவீதியாரின் ஒரு பாடலைப் படித்தேன். இரவு நேரத்தில் நிலவைப் பார்த்து நின்றபடி ஓர் இளம்பெண் தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோன்ற அமைப்பில் எழுதப்பட்ட பாடல் அது.

பால்போல வெளிச்சத்தைப் பொழியும் நிலவு, கடலையே பாலாக மாற்றிப் பொழிந்தபடி இருக்கிறது. ஊரோ திருவிழாக்கொண்டாட்டத்தில் மூழ்கி இன்பத்தில் திளைத்திருக்கிறது. காட்டில் பூத்திருக்கும் பூக்களின் மணம் எங்கெங்கும் வீசிக்கொண்டிருக்கிறது. என் நிலைமைதான் மிகவும் மோசம். வருவேன் என வாக்களித்துவிட்டுச் சென்ற என் காதலன் திரும்பிவரவில்லை. இருக்கவும் முடியாமல், கண்மூடவும் முடியாமல் தவித்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். இந்த உலகம் என்னோடு போரிடுகிறதா, அல்லது என் மனம் இந்த உலகத்தோடு போரிடுகிறதா, ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்தில் நெஞ்சம் வெடித்துவிடும்போல உள்ளது என்று குமுறிக் குமுறித் தேம்புகிறாள். மனிதர்கள் எவரிடமும் முறையிட்டுச் சொல்ல முடியாது என்பதால் அவள் தன் மனக்குறையை நிலவிடம் தெரிவிக்கிறாள். அதுதான் அந்தப் பாடலின் சாரம். மெதுவாக ஒவ்வொரு சொல்லாகப் படித்தால், அந்தப் பெண் இழுத்துவிடும் பெருமூச்சுச் சத்தத்தையும் குமுறி அழும் சத்தத்தையும் கூட நம்மால் கேட்டுவிடமுடியும்.

வழக்கமாக இப்படிப்பட்ட தன்னிரக்கம் நிறைந்த பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் மனக்கலக்கமுற்று சற்றே உறைந்துவிடுவேன். ஐயோ பாவம் என்று தோன்றும். காதல் என்னும் மெல்லுணர்வுக்கு ஆட்பட்டு இப்படி தவித்துத்தவித்து வேதனைப்படுகிறார்களே என நினைத்துக் கொள்வேன். காதல் என்பதே இந்த வேதனைதானோ என்று கூடத் தோன்றும்.

எதிர்பாராத கணமொன்றில் நற்றிணைப்பெண்ணையும் நாஸ்தென்காவையும் இணைத்துப் பார்த்தேன். நற்றிணைப்பெண்தான் தமிழ்நிலத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்று ரஷ்ய தேசத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் ஆற்றங்கரையோரத்தில் இரவு நேரத்தில் இரும்புக் கிராதியைப் பிடித்துக்கொண்டு நின்றபடி நிலவைப் பார்த்தபடி காத்திருக்கிறாளோ என்று தோன்றியது. நற்றிணைப்பெண்ணின் குரலில் ஒலிப்பதுதான் நாஸ்தென்காவின் குரலிலும் ஒலிக்கிறது. அதே வேதனை. அதே ஏக்கம். அதே ஆவல். அன்றிலிருந்து தனிமையில் நிலவொளியில் அரற்றியபடி பெருமூச்சோடு காத்திருக்கும் பெண்ணின் குரலைச் சித்தரிக்கும் ஒவ்வொரு பாடலிலும் நான் நாஸ்தென்காவின்  சாயலையே பார்க்கத் தொடங்கினேன்.

ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு வெண்ணிற இரவுகள் கதையை மீண்டும் படித்தேன். தஸ்தயெவ்ஸ்கி இக்கதைக்கு வெண்ணிற இரவுகள் என்று பெயரை எதற்காகச் சூட்டியிருப்பார் என்றொரு யோசனை அப்போது எழுந்தது. வெண்ணிற இரவுகள் என்னும் ஆங்கிலச்சொல்லுக்கு உறக்கமற்ற இரவுகள் என்பதுதான் நேர்ப்பொருள். நான்கு இரவுகளையும் உறக்கமும் அமைதியுமின்றி கழிக்கும் அந்த இளைஞனையும் நாஸ்தென்காவையும் மனத்தில் வைத்து அப்படி ஒரு பெயரை தஸ்தயெவ்ஸ்கி  தேர்ந்தெடுத்திருப்பாரோ என்று முதலில் தோன்றியது. பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் இரவு நேரம் மிகவும் குறைவாகவே இருக்குமென்றும் கடல்மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருப்பதால் இருண்டிருக்கும் சிறிது நேரத்திலும் வெளிச்சம் கசிந்தபடியே இருக்குமென்றும் படித்த பிறகு வெண்ணிற இரவுகள் வேறொரு பொருளைக் கொடுக்கத் தொடங்கியது. இருள் என்பதே இல்லாத இரவுதான் கதை நிகழும் களம். அல்லும் பகலும் வெளிச்சம் படர்ந்திருக்கும் இரவைப்போல நாஸ்தென்காவின் நெஞ்சில் அல்லும் பகலும் காதல் நினைவே படிந்திருக்கிறது. அவள் மனம் கவர்ந்தவன் பிரிந்து சென்று ஓராண்டு கழிந்துவிட்டது என்றபோதும், அவள் ஆற்றங்கரையில் நின்று அல்லாடும் நான்கு இரவுகளை மட்டுமே கதையில் நாம் படிக்கிறோம். ஒருவேளை இதன் காரணமாகக்கூட தஸ்தயெவ்ஸ்கி அந்தப் பெயரைச் சூட்டியிருக்கலாம் என்று தோன்றியது.

அந்த வாசிப்பில் அந்த இளைஞனும் நாஸ்தென்காவும் சந்திக்கும் தருணத்தை நான் மிகவும் ரசித்தேன். மிகமிக இயல்பாக நிகழும் ஒன்றென அத்தருணத்தை தஸ்தயெவ்ஸ்கி கட்டமைத்திருப்பதாகத் தோன்றியது. மனம்போன போக்கில் எதைஎதையோ நினைத்தபடியும் உள்ளார்ந்த அன்போடு தன்னிடம் இரண்டே இரண்டு வார்த்தை பேசக்கூடிய ஒரு பெண்ணைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்கு இந்த வாழ்நாளில் அமையுமா என்று தன்னையே கேட்டுக்கொண்டபடியும் ஒரு பக்கத்திலிருந்து நடந்துவருகிறான் அந்த இளைஞன். இன்னொரு பக்கத்தில் ஆற்றங்கரையில் சற்றே இருள் செறிவான இடத்தில் தனிமையில் நின்று மன வேதனையால் தன்னையறியாமல் அழுகிறாள் நாஸ்தென்கா. முதலில் அவளை அவன் வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்கிறான். நெருங்கிச் செல்ல அவனுக்குத் துணிவில்லை. வழக்கமான அச்சம் அவனைத் தடுத்து நிறுத்திவிடுகிறது. ஆனால் அழுகைச் சத்தம் காதில் விழுந்த பிறகு அந்த இளைஞனே தன் தயக்கத்தை உதறிவிட்டு அவளை நோக்கிச் செல்கிறான். அவளோ அவன் வருகையை உணர்ந்ததும் அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து வேகவேகமாக நடந்து செல்ல முயற்சி செய்கிறாள்.

அந்த வேகம் அவனிடம் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்துகிறது. தொடர்வதா, வேண்டாமா என அவன் குழம்புகிறான். அவள் தற்கொலை செய்துகொள்வாளோ என ஒருவித அச்சம். தான் நெருங்கிச் செல்வதை அவள் விரும்பவில்லையே என ஒருவித குழப்பம். என்ன செய்வது என முடிவெடுக்கத் தெரியாமல் அவன் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாமல் தயக்கத்துடன் அவள் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நிற்கிறான். அவள் அங்கிருந்து வேகமாகக் கிளம்பிச் சென்று சாலையைக் கடந்து மறுபுறம் சென்ற கணத்தில் அவளை நெருங்கி வம்பிழுக்க வந்துவிடுகிறான் ஒருவன். ஒருவரும் திட்டமிடாமல் நிகழ்ந்துவிட்டது அது. அதைப் பார்த்ததும் அவன் நெஞ்சில் பதிந்திருந்த தயக்கமெல்லாம் உதிர்ந்துவிட, ஒரு நம்பிக்கையுடன் சட்டென அந்த இடத்தை நோக்கி ஓடோடிச் சென்று அந்தப் போக்கிரியின் பிடியிலிருந்து அவளை விடுவித்து அழைத்துச் செல்கிறான். அந்தக் கண நேரத் துணிவின் காரணமாக அவன் மீது அவளுக்கு ஒருவித நம்பிக்கை பிறக்கிறது. அவன் கைகளை வாங்கி உறுதியாகப் பற்றியபடி அங்கிருந்து வெளியேறுகிறாள்.

அந்தத் திருப்பமும் நெருக்கமும் நம்பகத்தன்மையுடன் இருந்தன. அன்றைய இரவு அவர்களுடைய வாழ்வில் மிகமுக்கியமான இரவு. எந்தப் பெண்ணாவது தன்னை நெருங்கி இரண்டு வார்த்தை பேச மாட்டாளா என நினைத்திருந்த அந்த இளைஞனிடம் நாஸ்தென்கா தொடர்ச்சியாக மூன்று இரவுகள் பேசிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாக அந்த முதல் தருணமே வழியமைத்துக் கொடுக்கிறது. இருபத்தாறு வயது வரைக்கும் அடுப்பங்கரைப் பெண்களைத் தவிர, வேறு பெண்களிடம் பேசியறியாத அந்த இளைஞன் கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதுபோல நாஸ்தென்காவிடம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறான். இருவரும் மாறிமாறி தன் நெஞ்சில் இருக்கும் மனச்சுமைகளை இறக்கிவைக்கும் வகையில் பேசிக்கொள்ளும் உரையாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கதையை மறுபடியும் படித்தேன். தெரிந்த கதை என்றாலும் படிக்கப்படிக்க தெரியாத கதையைப் படிப்பதுபோலவே தெரிந்தது. எனது வாசிப்புமுறை மாறியிருந்ததால் உருவான விளைவு அது. ஒவ்வொரு கட்டமாக நிறுத்தி நிறுத்தி வாசித்தேன். முழுக்கதையும் முதல் இரவு, இரண்டாம் இரவு, நாஸ்தென்காவின் கதை, மூன்றாம் இரவு, நான்காம் இரவு, காலை என ஆறு பகுதிகளாக வகுக்கப்பட்டிருந்தது.

முதல் இரவில்தான் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். அவளுடைய வீடு இருக்கும் தெருமுனை வரைக்கும் அவளுக்குத் துணையாக அவன் நடந்துசெல்கிறான். அதுவரை தொடர்பில்லாமல் இருவரும் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான். யாரும் மனம் திறந்து பேசவில்லை. தெருமுனையை அடைந்ததும், அவனிடமிருந்து அவளும் நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றுச் செல்லவே விரும்புகிறாள். அவன்தான் முதலில் ஏதோ ஆவல் உந்த “அவ்வளவுதானா? இனி நாம் சந்திக்கப் போவதில்லையா? இதோடு எல்லாம் முடிந்துவிட வேண்டியதுதானா?” என்று கேட்டு அவளை உரையாடலுக்கு இழுக்கிறான். அவளுக்கும் தன் மனபாரத்தை யாரிடமாவது இறக்கிவைத்தால் நல்லது என தோன்றியிருக்கலாம். அடுத்த நாள் இரவு பத்துமணிக்கு அதே இடத்தில் வந்து காத்திருக்குமாறு சொல்கிறாள். அந்த அழைப்பு அவனை வானத்தில் பறக்கவைக்கிறது. மகிழ்ச்சியில் மிதக்கிறான். அப்போது “நீங்கள் என் மீது காதல் கொள்வதில்லை என்ற நிபந்தனையில் பேரில்தான் வரவேண்டும்” என்று அவள் தெரிவிக்கிறாள். அவனும் தயங்காமல் அவள் விதித்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கிறான்.

அக்கணத்தில் நான் ஒரு முக்கியமான அம்சத்தைக் கவனித்தேன். அவன்தான் மயக்கத்தில் மிதக்கிறான். அந்த மயக்கத்திலும் அவள் எச்சரிக்கையுணர்வோடு இருக்கிறாள். அவளுடைய சொற்களில் அந்த எச்சரிக்கையுணர்வை என்னால் உணரமுடிந்தது.

மறுநாள் பத்துமணிக்குச் செல்லவேண்டிய இடத்தில் எட்டு மணிக்கே சென்று உட்கார்ந்து காத்திருக்கிறான் அந்த இளைஞன். பேசுவதற்கு ஒரு துணை கிடைத்த பரபரப்பில் அவனுக்கு வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. அவளோ பத்துமணிக்குத்தான் அந்த இடத்துக்கு வருகிறாள். வந்ததும் அவனைத்தான் அவள் முதலில் பேசத் தூண்டுகிறாள். முதலில் தன்னைப்பற்றி விரிவாகச் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறாள். உடனே மடைதிறந்ததுபோல அவன் கொட்டத் தொடங்குகிறான். பித்துப் பிடித்தவன் பேசுவதுபோல கட்டற்றுப் பேசுகிறான். ஏதோ ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் பேச்சு தாவித்தாவிச் செல்கிறது. தன்னைப்பற்றிச் சொல்வதாக தெரிவித்துவிட்டு கற்பனையில் உருவான ஓர் இளைஞனைப்பற்றிச் சொல்லத் தொடங்குகிறான்.

அங்கிருந்து ஒரு நாடகத்தைப் பற்றியதாக பேச்சு மாறுகிறது. பிறகு ஒரு கவிதையைப் பற்றியும் பேசுகிறான். அப்படியே ஒரு சுற்று சுற்றிய பிறகு நிகழ்காலத்துக்கு வருகிறது அவன் பேச்சு. ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றதுபோலத் தோன்றினாலும் அவனுடைய பேச்சு அவளை ஈர்த்துவிடுகிறது. தொடர்ச்சியாகக் கேட்டபடியே அவனுடன் நடந்து வருகிறாள். முதல் சந்திப்பிலேயே இவ்வளவு பேச முடியுமா என ஒருவர் எண்ணி வியந்துபோகும் அளவுக்கு அவன் நீளமாக உரையாடுகிறான். ஒரு பெரிய அணைக்கட்டு உடைந்து பெருக்கெடுத்தோடும் நீர்போல சொற்கள் அவன் நெஞ்சிலிருந்து பீறிட்டுப் பாய்கின்றன. ஏழு முத்திரையிட்டு கெட்டியாக மூடப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக ஜாடிக்குள் அடைக்கப்பட்டிருந்த பின் ஏழு முத்திரைகளும் உடைக்கப்பட்டு வெளியே வந்த சாலமன் ஆவிபோல தன்னைத்தானே உணர்வதாக அவனே சொல்லிக்கொள்கிறான். தான் விசித்திரமான விதத்தில் நடந்துகொள்வதை அவனே உணர்கிறான். ஆனால் அந்த உணர்வை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. பரவசமும் மயக்கமும் அவனை அந்தத் திசையில் வழிநடத்திச் செல்கின்றன. அந்த உரையாடலே அவனைப்பற்றிய ஒரு கணிப்பை உருவாக்கிக்கொள்ள அவளுக்குப் போதுமானதாக இருக்கிறது. அவன் நம்பிக்கைக்கு உரியவன் என்பதை அவள் மனம் நுட்பமாக மதிப்பிட்டு நிறைவடைகிறது. அது மட்டுமில்லாமல் காதல் என்னும் பேச்சுக்கே இடமில்லாதபடி அவன் தடையில்லாமல் உரையாடுவதும் அவளுக்குப் பிடித்திருக்கிறது. அதற்குப் பிறகே அவள் தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறாள்.  தான் காதலித்து ஓராண்டாகக் காத்திருக்கும் கதை.

தஸ்தயெவ்ஸ்கி கதையை வகுத்திருக்கும் விதத்தை எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை. கட்டற்றுப் பேசுகிற ஓர் இளைஞனைப்பற்றிய கதையை மிகவும் கட்டுப்பாட்டோடு பிரித்துச் சொல்லிக்கொண்டு செல்லும் விதம் என்னை மிகவும் ஈர்த்தது.

மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே கதையை மறுபடியும் படித்தேன். ஒவ்வொரு காட்சியும் மேடையில் நடிக்கப்படும் நாடகக்காட்சி போல உணர்ச்சிமயமானதாக இருந்தது. தஸ்தயெவ்ஸ்கி ஒவ்வொரு கணத்தையும் கண்முன்னால் நிகழ்த்திக் காட்டுவதை உணர்ந்தேன். சிறுகதை என்பதே தொடக்கத்தையும் முடிவையும் திட்டமிட்டு, மிகவும் திறமையாகவும் கச்சிதமாகவும் நிகழ்த்திக் காட்டும் கலைதானோ என்று தோன்றியது. கதையின் ஆறு காட்சிகளையும் தனித்தனியாகப் படிக்கத் தொடங்கினேன். சிற்சில நாட்களில் ஏதேனும் ஒரு காட்சியை மட்டும் பிரித்து அதைப் படித்துவிட்டு, அதைப்பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருந்தேன்.

நாஸ்தென்கா
நாஸ்தென்கா

நாஸ்தென்கா தன் கதையை விவரிக்கும் பகுதியில் தன் காதலனைப்பற்றிய சித்திரத்தை அளிக்கிறாள். அவனுடைய விவேகம், பொறுமை, புத்திசாலித்தனம், அமைதியான பண்பு, நேரத்தை வீணாக்கக்கூடாது என அவளுக்கு அவன் வழங்கும் அறிவுரை, அவளுக்காக அவன் கொண்டுவந்து கொடுக்கும் பிரெஞ்சுமொழிப் புத்தகங்கள் என அவள் வழியாகவே அவனைப்பற்றிய கோட்டோவியம் உருவாகித் திரண்டு வருகிறது. அவன் அந்த வீட்டைவிட்டு வெளியேறப் போகிறான் என்பதை உணர்ந்த பிறகே அவள் அவனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அவனை ஒரு மீட்பராகவே அவள் நினைத்துவிடுகிறாள். ஒரு பெட்டியோடு அவன் அறைக்குச் சென்று தன்னையும் அழைத்துச் செல்லும்படி கேட்கும் அளவுக்கு அவன் மீது அவளுக்கு நம்பிக்கையும் காதலும் இருக்கின்றன. அவள் விரும்பியபடி அவளை அவன் அப்படியே அழைத்துச் சென்றிருக்கலாம். தன் மனத்திலும் அவள்மீது காதலுண்டு என்றும் அக்கணத்தில் தெரிவிக்கிறான் அவன். ஆயினும் அவள் எடுத்திருக்கும் முடிவுக்கு ஊக்கமளிக்காமல் தன்னுடைய எதார்த்த நிலையைப் புரியவைக்க அவன் முயற்சி செய்கிறான். தன்னை இந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்ள ஒரு சரியான வழியைக் கண்டறிந்த பிறகு அவளை அழைத்துச் செல்வதாக வாக்களிக்கிறான். உத்தேசமாக ஓராண்டு காலத்துக்குள் தன் முயற்சியில் தன்னால் வெற்றிகாண முடியும் என்றும் தெரிவிக்கிறான். ஓராண்டுக்குப் பிறகு அவளைச் சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டுப் பிரிந்து செல்கிறான்.

ஓராண்டு முடிந்துவிட்டது. அவன் அந்த நகரத்துக்கு வந்துவிட்டான் என்பதையும் அவள் எப்படியோ அறிந்துகொள்கிறாள். தன்னை வந்து சந்திக்காமல் தவிர்ப்பது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. அந்தக் கேள்விதான் அவளைத் தவிக்கவைக்கிறது. ஒருவேளை தன் காதலை அவன் மதிக்கவில்லையோ என நினைத்து துயர்கொள்கிறாள். தன் காத்திருப்பெல்லாம் பொருளற்றதாகி வீணாகிவிடுமோ என அச்சத்தில் சோர்வடைகிறாள். எல்லாம் திரண்டுவரும் நேரத்தில் தன்னிடம் காதலைத் தெரிவிக்கும் விதமாக இன்னொருவன் நெருங்கிவர இடமளித்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வோடுதான் புதிய இளைஞனோடு உரையாடத் தொடங்குகிறாள். ஒருபக்கம் உறுதியான நம்பிக்கை. இன்னொரு பக்கம் அவநம்பிக்கை. இரு எல்லைகளையும் தொட்டுத்தொட்டு ஊசலாடுகிறது அவள் மனம்.

அவள் அவநம்பிக்கையில் நலிவதை அவனால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவளுக்கு தெம்பூட்டும் வகையில் பேசவேண்டும் என்று அவன் முடிவெடுக்கிறான். சட்டென மிகவும் இயல்பான வகையில் அந்தக் காதலனுக்கு ஒரு கடிதமெழுதிக் கொடுக்குமாறும் அக்கடிதத்தை தானே  கொண்டுசென்று அந்த முகவரியில் சேர்த்துவிடுவதாகவும் ஓர் ஆலோசனையை முன்வைக்கிறான். உண்மையில் அவளே அந்த யோசனையில்தான் இருக்கிறாள். முன்தயாரிப்பாக கடிதமும் எழுதி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள். ஆனால் ஓர் ஆணின் கோணத்தில் அது சரியா, பிழையா என்பதை மட்டும் அவளால் சரியாக உய்த்துணர முடியவில்லை. தற்செயலாக அந்த ஆலோசனையையே அவனே முன்வைத்ததும் அவள் மனம் மகிழ்ச்சியில் ததும்புகிறது. தன் முடிவு இயற்கையானதே என்ற மகிழ்ச்சியில் திளைக்கிறாள் அவள். ஏற்கனவே எழுதிவைத்திருந்த கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுக்கிறாள். அவனும் அதை வாங்கிக்கொண்டு சென்று அந்தக் காதலன் தங்கியிருந்த வீட்டில் சேர்த்துவிட்டு வந்துவிடுகிறான்.

அடுத்த நாள் அந்தக் காதலன் வரவில்லை. அவன் வரவுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோகிறாள். நான்காவது இரவும் வரவில்லை. அவள் முற்றிலுமாக மனம் உடைந்துபோகிறாள். அந்த முக்கியமான இரவின் நிகழ்ச்சிகளை மிகவும் கூர்மையான மொழியில் சித்தரித்திருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.

காத்திருந்து காத்திருந்து நாஸ்தென்காவின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்கத் தொடங்குகிறது. அதுவரை காதலன் வந்துவிடுவான் என நம்பிக்கைச்சொல்லைச் சொல்லிக் கொண்டிருந்த அவனும் அந்தச் சொல்லைச் சொல்ல இயலாத மனநிலைக்குச் சென்றுவிடுகிறான். இக்கணம் தயங்கினால் இனி ஒருபோதும் சொல்வதற்கான கணம் வாய்க்க வாய்ப்பில்லாமல் போய்விடும் என்ற பதற்றத்தில் தன் காதலைத் தெரிவிக்க விழையும் சொல் தொண்டை வரைக்கும் வந்துவந்து மறைகிறது. தன் மீது அவள் கொண்ட நம்பிக்கை சிதைந்துவிடக் கூடாது என்பதில் அவன் ஆழ்மனம் கவனமாகவே இருக்கிறது.

முடிவில்லாத காத்திருப்பு நீண்டு செல்லச்செல்ல, கெடுவாய்ப்பாக அவள் நம்பிக்கை மங்கத் தொடங்குகிறது. என்ன சொல்கிறோம் என்கிற பிரக்ஞையே இன்றி ”இனி அவர் மீது எனக்குக் காதலும் இல்லை. ஒன்றும் இல்லை. அவரை நான் மறந்துவிடுவேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள். ஒரு வேகத்தில் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “நீங்களாக இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று கேட்கிறாள். அக்கணத்தில் அதுவரை அவன் தனக்குத்தானே விதித்துக்கொண்டிருந்த எல்லாத் தடைகளும் உடைந்துவிடுகின்றன. அக்கணமே மனம் திறந்து தன் காதலைத் தெரிவிக்கிறான் அவன். அவன் சொற்களின் உண்மையும் ஆழமும் நெஞ்சைத் தொட்டதுமே அவள் ஆழ்மனம் விழிப்படைந்துவிடுகிறது. இருவருமே குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அக்கணமே பிரிந்து செல்ல விழைகிறார்கள். ஆயினும் அவர்களால் அப்படிச் செய்ய இயலவில்லை. அழுது கண்ணீர் விடுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்கிறார்கள். மீண்டும் அங்கேயே நின்று எதைஎதையோ பேசுகிறார்கள். மீண்டும் ஒருவருக்கொருவர் காதலைத் தெரிவித்து செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இருவரும் அணைத்துக்கொள்கிறார்கள். அவள் அவனை தன் வீட்டுக்கே வருமாறு அழைப்பு விடுக்கிறாள்.

அக்கணத்தில் அந்தக் காதலன் அங்கே வந்து சேர்கிறான். அவ்விருவரையும் பார்த்தபடி கடந்து செல்கிறான். “நாஸ்தென்கா, நீயா?” என்று கேட்கும் அவன் குரல் ஒலிக்கிறது. அதைக் கேட்டதுமே அவள் சட்டென இவனுடைய பிடியிலிருந்து விலகி அவனை நோக்கிப் பறந்தோடிச் சென்றுவிடுகிறாள். சில கணங்கள் அவன் அரவணைப்பில் திளைத்திருந்த பிறகே அவளுக்கு இவனைப்பற்றிய நினைவு வருகிறது. ஒரு கணம் மீண்டும் இவனை நோக்கி வந்து ஒரு முத்தமளித்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்று அந்த இளைஞனுடன் கைகோர்த்தபடி நடந்து சென்றுவிடுகிறாள். ஒற்றைக் கணத்தில் எல்லாமே நிகழ்ந்துவிடுகின்றன. எதிர்பாராத ஒரு கணத்தில் கிடைத்தற்கரிய புதையலைப்போல அவனுக்கு ஒரு பெண்ணின் காதல் கிடைக்கிறது. அக்கணத்தின் சுவையை முற்றிலுமாக உணர்வதற்கு முன்பேயே அந்தப் புதையல் அவனுடைய கையைவிட்டுச் சென்றுவிடுகிறது. ஒரு மெல்லிய குளிர்க்காற்று உடலைத் தீண்டிச் செல்வதுபோல அந்தக் காதல் அவனைத் தீண்டிவிட்டுச் செல்கிறது.

அடுத்த நாள் முதல் அவன் தன் பயணத்தைத் தொடர இரு வழிகள் இருப்பதை உணர்கிறான். அவளை முற்றிலுமாக மறந்துவிட்டு வழக்கமான வாழ்க்கையை வாழ்வது முதல் வழி. அவள் வழியாக ஒரு கணப்பொழுது மட்டுமே நீடித்த ஆனந்தமான நிலையை எண்ணி எண்ணி வாழ்க்கையை வாழ்ந்து கழிக்கலாம் என்பது இரண்டாவது வழி. அவன் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். கனவும் உணர்ச்சிகளும் நிறைந்த தன் இயல்புக்கு அதுவே ஏற்ற வழி என அவன் முடிவு செய்துகொள்கிறான்.

தஸ்தயெவ்ஸ்கி  தான் அப்படி முடித்துவைக்கிறார். அந்த முடிவு தர்க்கப்படி சரியானதாக இருந்தாலும் என் மனம் அதை ஏற்கவில்லை. காதலில் ஒருவன் வெல்வதும் ஒருவன் தோற்பதும் ஏன் நிகழ்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். வெண்ணிற இரவுகள் கதையைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் எழுந்து என் மனத்தைக் குடைந்தபடி இருக்கும் கேள்வி அது. அன்றைய வாசிப்பு அக்கேள்வியை மீண்டும் கூர்மைகொள்ளச் செய்துவிட்டது. எவ்வளவு ஆழ்ந்து யோசித்த போதும் என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பதில் என் புரிதலுக்கு அப்பாற்பட்டதுபோலும் என நினைத்துக்கொண்டேன்.

மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே கதையை மறுபடியும் படித்தேன். காதல்வசப்படுகிறவர்களின் முதல் சொல், முதல் உணர்வு, முதல் செயல் என்னவாக இருக்கிறது என வெவ்வேறு படைப்புகளை முன்வைத்துத் தொகுத்துப் பார்க்கும் ஆவலில் அப்போது பல புத்தகங்களைப் படித்தேன். அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் வெண்ணிற இரவுகள் பக்கம் வந்தேன். அப்போதுதான் கனவுவாசியான அந்த இளைஞனும் நாஸ்தென்காவும் தழுவிக்கொண்ட நிலையில் உரையாடும் பகுதியைக் கவனித்தேன்.  அப்போதுதான் அந்த உரையாடலைக் கவனித்தேன். என்னைப்போன்றவர்கள் நெஞ்சில் எழ சாத்தியமுள்ள கேள்வியை தஸ்தயெவ்ஸ்கியின் நெஞ்சிலும் எழுந்து வாட்டியிருக்கும் என நினைக்கிறேன். போகிற போக்கில் ஓர் உரையாடல் வழியாக பொருத்தமான ஒரு பதிலை உணர்த்தியிருப்பதைக் கவனித்தேன். ஒருவேளை, கனவுவாசியான அந்த இளைஞனே எதிர்காலத்தில் அந்த இரவில் நடந்தவற்றையெல்லாம் தொகுத்து அசைபோட்டுப் பார்த்தானெனில் அவனே கூட அந்த விடையைக் கண்டடைந்துவிடக் கூடும் என்று தோன்றியது. உறுதியாக அவன் கண்டடைந்துவிட்டிருப்பான் என்று நம்பவே என் மனம் விழைந்தது.

கனவுவாசியின் அணைப்பில் இருக்கும் நிலையிலேயே நாஸ்தென்கா வாழ்வின் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கனவு காண்கிறாள். அதை ஒவ்வொன்றாக அவனிடம் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறாள். முதலில் இப்போது குடியிருக்கும் பகுதியிலிருந்து வெளியேறி தன் வீட்டுக்கே வந்துவிடும்படி அழைப்பு விடுக்கிறாள். அக்கம்பக்க வீடுகளில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து பணத்தட்டுப்பாட்டைச்   சமாளிக்கும் வகையில் தன்னால் பணமீட்ட முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறாள். மாலைப் பொழுதுகளில் இருவருமாகச் சேர்ந்து நாடகம் பார்த்து மகிழ்ச்சியோடு பொழுதுபோக்கவும்  அவன்  ஒரு திட்டத்தை முன்வைக்கிறான். இப்படி இருவரும் போதை கொண்டவர்களைப்போல பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்போதுதான் அவன் வானத்தைப் பார்க்கிறான். வானத்தின் தூய நீலவண்ணம் மனத்தைக் கொள்ளைகொள்கிறது. வெளிச்சத்தைப் பொழிந்தபடி நிலவு தவழ்ந்து செல்கிறது. அப்போது காகிதப்படகு நகர்ந்துசெல்வதுபோல மஞ்சள் மேகமொன்று நிலவை நோக்கி மெல்ல மெல்ல மிதந்து செல்கிறது. அந்த வேகம் அவனுடைய ஆர்வத்தைத் தூண்டுகிறது.  மெல்லமெல்ல மேகம் அந்த நிலவைத் தொட்டுவிடுகிறது. தன் அணைப்புக்குள் முழுவதுமாக வைத்துக்கொள்கிறது. எல்லாமே சில கணங்கள்தான். மேகம் நகர்ந்துவிட நிலவு விலகிவிடுகிறது. சிறிது நேரத்தில் அதற்கு அருகிலேயே இருந்த மற்றொரு மேகம் அந்த நிலவை நோக்கி மிதந்துவரத் தொடங்குகிறது. நாஸ்தென்காவிடம் அந்த மேகத்தையும் நிலவையும் காட்டுவதற்கு  அவன் மனம் விழைகிறது. “வானத்தைப் பார் நாஸ்தென்கா” என்று அழைக்கிறான். ஆனால் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. அக்கணத்தில்தான் ’நாஸ்தென்கா’ என்று அழைக்கும் காதலனின் குரலைக் கேட்டுவிட்டு, அவனை நோக்கி ஓடுகிறாள்.

முடிவை நோக்கிச் செல்லும் வாசிப்பின் வேகத்தில் இதற்கு முந்தைய வாசிப்புகளில் இந்தக் காட்சியை நான் ஊன்றிக் கவனிக்கவில்லை. நல்வாய்ப்பாக,  அன்று அதுதான் என்  பார்வையில் முதலாவதாகத் தென்பட்டது. தஸ்தயெவ்ஸ்கியின் சிக்கனமாக சித்தரிப்பு பல ஆண்டுகளாக பதில் கிட்டாத கேள்விக்கு ஒரு பதிலை உணர்த்திவிட்டது.

காதலில் ஒருவன் வெல்வதும் ஒருவன் தோற்பதும் ஏன் நிகழ்கிறது என நான் நினைத்ததே பெரும்பேதைமை என்பதை நான் அன்று புரிந்துகொண்டேன்.

காதல் என்பது ஒரு நிலை. ஓர் உணர்வு. இயற்கையின் ஆடல். வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டது அது. ஆட்படுவதும் திளைப்பதும் மட்டுமே அந்த நிலையில் நிகழ்கின்றன. வானத்தைக் களமாகக் கொண்டு நிலவும் முகிலும் நிகழ்த்தும் ஆடல் அதைத்தான் உணர்த்துகிறது.

அந்த ஆடலை நேருறக் கண்டு உணர்ந்ததாலேயே தனக்குக் கிடைத்த கண நேர ஆனந்தமே தன் வாழ்க்கைக்குப் போதுமென கனவுவாசியான அந்த இளைஞன் நிறைவடைகிறான். அவன் வழியாக அதைத்தான் தஸ்தயேவ்ஸ்கி உணர்த்த முயற்சி செய்கிறார். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் கண்டறிந்து சொன்ன விடையை தாமதமாகவாவது புரிந்துகொள்ள ஒரு தருணம் அமைந்ததை நான் பெற்ற பேறாகவே நினைத்துக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.