தஸ்தயேவ்ஸ்கி பாவப்பட்டவர்களின் தேவதூதன்-பா.லிங்கம்,

 

 • உண்மை, யேசு இல்லை என்று நிரூபித்தாலும், நான் யேசு பக்கமே நிற்பேன்.
 • யேசு இல்லாத உலகம், பைத்தியக்கார விடுதிக்குச் சமம்.
 • யேசு இல்லாத உலகத்தில் சட்டம் தான் ஆளும், கருணைக்கு இடமில்லை.
 • குழந்தைகள் ஏன் துன்பப்பட வேண்டும்? இப்பிறவியில் குழந்தைகள் துன்பப்பட்டால்தான் பரலோகத்தில் இடம் கிடைக்கும்.
 • இப்படி குழந்தைகள் இப்பிறவியில் துன்பப்பட்டால்தான் பரலோகத்தில் இடம் கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட யேசுவும் பரலோகமும் வேண்டாம்.

      –  தஸ்தயேவ்ஸ்கி

 

தஸ்தயேவ்ஸ்கியை உங்கள் வாழ்வில்  எப்படிக் கண்டடைந்தீர்கள்?

15 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சோஃபியா டால்ஸ்டாயின் நாட்குறிப்பைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் டால்ஸ்டாய் பற்றி நல்ல விஷயங்களோடு அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகளையும் சோஃபியா டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார்.

சோஃபியா டால்ஸ்டாயின் நாட்குறிப்பு முழுவதுமாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. டால்ஸ்டாயின் மனைவியே டால்ஸ்டாய் பற்றி குற்றம் சுமத்தி எழுதியிருக்கும் பகுதியைப் படித்துவிட்டு, நண்பர் சு.வேணுகோபாலிடம்,  ‘டால்ஸ்டாய் காந்திக்கு குருவாக உலக இலக்கிய நாயகனாக எப்படி இருக்க முடியும்’ என்று குறைப்பட்டு பேசினேன்.

நண்பர் சு.வேணுகோபால், ‘சோஃபியா டால்ஸ்டாய் புத்தகத்தை மட்டும் தானே படித்தீர்கள், டால்ஸ்டாயையும் படித்துப் பாருங்கள். பிறகு முடிவுக்கு வாருங்கள்’ என்று சொன்னார்.

பிறகு தான் டால்ஸ்டாயோடு

தஸ்தயேவ்ஸ்கி

ஆன்டன் செகாவ்

பால்சாக் இப்படி

உலக இலக்கியம் குறித்து (க.நா.வுக்கு நன்றி) எனது கவனத்தைத் திருப்பினேன். இன்று தஸ்தயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும், ஆண்டன் செகாவும் பால்சாக்கும் (பட்டியல் முழுமையானதல்ல) எனது ஆசான்களாக ……. வாழ்க்கை குறித்த என் சிந்தனையை விசாலப்படுத்தியிருக்கிறார்கள்.

 

தஸ்தயேவ்ஸ்கியின் முக்கியப் படைப்புகளாக எவற்றையெல்லாம்  குறிப்பிடுவீர்கள்?

தஸ்தயேவ்ஸ்கியின் மகத்தான படைப்புகளை வரிசைப்படுத்தச் சொன்னால் நான் இப்படித்தான் பட்டியலிடுவேன்.

 1. கரமசோவ் சகோதரர்கள் – கவிஞர் புவியரசு
 2. அசடன் – எம்.ஏ.சுசிலா
 3. குற்றமும் தண்டனையும் – எம்.ஏ.சுசிலா

இதில் வெண்ணிற இரவுகள், மரணவீட்டின் குறிப்புகள், சூதாடி இவற்றையெல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. குறுநாவல்களில் குறிப்பிட வேண்டியது Honest Thief (நேர்மையான திருடன்). திருடனில் நேர்மையான திருடன் எப்படியிருக்க முடியும். படித்து முடித்தவுடன் நம்மால் அந்த மனிதனுக்காகக் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.

இதில் என்னை மிகவும் பாதித்த விஷயங்கள் குறித்து மேற்கண்ட புத்தகத்திலிருந்து அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய பங்களிப்பு மிகவும் குறைவு தான். இந்த மேற்கண்ட புத்தகங்களில் தஸ்தயேவ்ஸ்கி எழுதியிருப்பதை விட புதிதாக என்னால் என்ன எழுதிவிட முடியும்? தஸ்தயேவ்ஸ்கியின் பிரம்மாண்டத்தை என்னால் கொண்டு வர முடியவில்லை.

இன்றைய ரஷ்யா முதற்கொண்டு சோசலிச  நாடுகளின் வீழ்ச்சிக்குண்டான காரணங்களை ‘DEMONS’ நாவலில் 1871-ஆம் ஆண்டே தஸ்தயேவ்ஸ்கி எழுதியிருக்கிறார். மார்க்ஸியம், மனிதனின் மனம் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த DEMONS நாவலை நான் படித்திருந்தால் சில மார்க்ஸீயர்களைப் போல் நானும் தஸ்தயேவ்ஸ்கியை ஒரு பிற்போக்குவாதியாகப் பார்த்திருப்பேன். ஆனால் இப்போது 150 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் இந்நாவலைப் படைத்திருக்கிறார் என்று வியக்கிறேன்.

அதனால் தான் 1962-இல் சேகுவேரா ஒரு புதிய சோஸலிச மனிதனை உருவாக்க வேண்டும் என்றார்.

 

இலக்கியம் மனிதனை மேம்படுத்துமா? இந்தக் கருத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப் எப்படி பாரக்கிறீர்கள்?

கரமசோவ் சகோதரர்கள், அசடன், குற்றமும் தண்டனையும் போன்றவற்றை வாசிக்கும் வரை, நல்ல இலக்கியம் என்பது ஒரு மனிதனைக் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தும் அல்லது அவனது சிந்தனையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் என்னை அடியோடு புரட்டிப்போட்டு சிந்தனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு சிறுவயது முதல் ஒழுங்கியல் பார்வை உண்டு. 1970-க்குப் பிறகு கு.ப.ரா, புதுமைப்பித்தன், ஜானகிராமன், அழகிரிசாமி, வண்ணநிலவன், ஆ.மாதவன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், நீல.பத்மநாபன் இவர்களின் படைப்புகளோடு ஒன்றிப்போனபோது ஒவ்வொரு மனிதனும் இரண்டு முகங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என அறிந்து கொண்டேன். தனக்கான எல்லா கீழ்மைகளோடும் கூடிய உண்மையான முகம், இன்னொன்று சமூகத்துக்கான போலித்தனமான முகம்.

பாரதி ஓரிடத்தில் சொல்லுவார், ‘அறிவு சரியானவற்றைச் சொல்லும். மனம் தன் போக்கிலே போகும்’ என்று. எப்போதுமே மனம் ஜெயித்துக்கொண்டே இருக்கும். ஆனால் அறிவு தோற்றுப் போகும். அதனால் தான் பாரதி ‘மோகத்தை கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு’ என்று பாட நேர்ந்ததோ!

 

கரமசோவ் சகோதரர்கள் மூலம் இவான் வைத்த முக்கிய வாதம் கடவுள் இருப்பு. அதில் தங்களின் பார்வை என்ன? கொஞ்சம் விளக்கமாக  கூறிட இயலுமா ?

இதன் முழு சாரமே கடவுள் இருப்பு குறித்து தஸ்தயேவ்ஸ்கிக்கு ஏற்பட்ட மனப்போராட்டம்தான். யேசு இருக்கிறாரா இல்லையா என்பது தான் அது. ‘யேசு இல்லையென்றாலும் நான் யேசு பக்கம் நிற்பேன். எனக்கு யேசு வேண்டும். யேசு இருந்தால் தான் மனிதன் பாவங்கள் செய்வதற்குப் பயப்படுவான். இல்லை என்றால் சட்டம் தான் மனிதனை வழிநடத்தும். அப்படியான சூழலில் மனிதம் என்று ஒன்று இல்லாமல் போய்விடும். யேசு இல்லாத உலகம், ஒரு பைத்தியக்கார விடுதியாக மாறிவிடும்’ என்கிறார்.

மனித சமுதாயத்தின் மேலுள்ள அன்பே தஸ்தயேவ்ஸ்கியை தெய்வ நம்பிக்கைக்கு இட்டுச் சென்றது. தெய்வம் இல்லாத உலகம் மனிதனுக்கு வெறுமையைத் தான் கொடுக்கும்.

யேசு என்கிற மஹாசக்தி இல்லை என்பதற்கு கரமசோவ் சகோதரர்களில் வரும் இவான், அசடனில் வரும் இப்போலிட் எடுத்து வைக்கும் வாதங்கள் – குறிப்பாக இவானின் வாதங்கள் உலக இலக்கியங்களின் உச்சம் என்கிறார்கள். இதோடு கரமசோவ் சகோதரர்களில் 13 வயது கோல்யா 21 வயது அல்யோஷாவிடம் சோஸலிஸம் பற்றிய வாதம் செய்வது நமக்கு வியப்பைத் தருகிறது

இனி இவானின் வாதம்

இவான் மூலம் தஸ்தயேவ்ஸ்கி யேசு இல்லை என்ற வாதத்தைக் கீழ்க்கண்ட அத்தியாயங்களில் வைக்கிறார்.

 1. சகோதரர்கள் நெருக்கம் கொள்கிறார்கள்
 2. சிந்தனைப் புரட்சி
 3. மாபெரும் விசாரணை அதிகாரி
 4. இவானின் பேய்க்கனவும் சாத்தானும்
 5. வயதுக்கு மீறிய அறிவு – கோல்யா?
 6. இல்யூஷாவின் சவச் சடங்கு

இரங்கல் உரை (அல்யோஷா கனவு காணும் அன்புமயமான குழந்தைகள் பற்றிய அத்தியாயம்) அதுமட்டுமல்ல, இல்யூஷாவின் மரணம் அந்த குடும்பத்தாரிடமும், அவன் நண்பர்களிடமும் ஏற்படும் பாதிப்பை வியப்பூட்டும்படி தாஸ்தயேவ்ஸ்கி எழுதியிருக்கிறார்.

இவான் கடவுள் என்ற ஒருவர் இல்லை என்பதற்கு வைக்கும் வாதங்களைப் பார்ப்போம்.

யேசு மனித அவதாரமாக வருகிறார். மரித்துப் போன குழந்தையை உயிர்ப்பிக்கிறார். அப்போது விசாரணை அதிகாரி 90 வயதுக்காரர், யேசுவை இருண்ட குறுகிய நிலவறைக்குள் வைத்துப் பூட்டி விடுகின்றார். மறுபடியும் நடு இரவில் விசாரணை அதிகாரி யேசுவிடம் வாதிடுகிறார் “நீ உன்னுடைய சகல அதிகாரங்களையும் போப்பாண்டவர் வசம் ஒப்படைத்துவிட்டாய். இப்போது அவர் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். உன்னைப் பொறுத்தவரை நீ ஒதுங்கி இருப்பதே நல்லது. மனிதன் ஒரு கலகக்காரனாகவே படைக்கப்பட்டு இருக்கிறான்.

கலகக்காரனால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும். மனிதர்களிடமிருந்து மனிதன் ஒரு கலகக்காரனாகவே அவர்களுடைய மனசாட்சியை நிரந்தரமாகக் கைப்பற்றக் கூடிய ஆற்றல் மூன்று அம்சங்களுக்குத் தான் உண்டு.

அவை ‘அற்புதங்கள், மர்மம், அதிகாரம்’ இந்த மூன்றையும் நீ செய்ய மாட்டாய். சாத்தான் உன்னை தேவாலயத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்று “கீழ்நோக்கி எட்டிக் குதி!  பிதா உன்னைக் காப்பாற்றுவார்” என்கிறான். நீ குதிக்கச் சம்மதிக்கவில்லை. அப்படி நீ குதிக்கச் சம்மதித்திருந்தால் இது தெய்வத்திற்கே வைத்த பரீட்சையாய் ஆகிவிடுமே. தெய்வத்தின் மீது நீ வைத்திருந்த விசுவாசம் அந்த வினாடியே நட்டப்பட்டுப் போயிருக்கும். மனிதனுக்கு அற்புதங்கள் வேண்டும். நீ அற்புதம் செய்தால் தான் உன்னை அவன் நம்புவான். நாத்திகன் கூட அற்புதங்களை விரும்புகிறவன் தான்.

சிலுவையிலிருந்து நீ இறங்கி வா, அப்போது தான் நாங்கள் உன்னை நம்புவோம் என்று மக்கள் கூச்சலிட்ட போதும் நீ இறங்கி வரவில்லை. காரணம் அற்புதம் செய்து மனிதரை உன்பால் ஏற்க நீ விரும்பவில்லை. அதே போல் அதிகாரம் கொண்டு மனிதரை அடிமைப்படுத்துவதும் உமக்குப் பிடிக்காது.

……இப்படியாக விசாரணை அதிகாரி யேசுவிடம் தர்க்கம் செய்ததை இவான் அல்யோஷாவிடம் பகிர்ந்து கொள்கிறான். தொடர்ந்து படிப்பதற்கு முன் அல்யோஷா பற்றி – தெய்வ நம்பிக்கையுடையவன். ஃபாதர் ஜொசீமாவின் வார்ப்பு.

இன்னொரு சம்பவத்தையும் இவான் அல்யோஷாவிடம் பகிர்ந்து கொள்ளுகிறான்.

ஓய்வு பெற்ற ராணுவத் தளபதி. ஏழைகள் மீது அதிகாரத்தை உபயோகிக்க வந்த ஆள், தமது 2000 பண்ணை அடிமைகளுடன் பண்ணை வீட்டில் வசித்து வந்தார். ஒரு நாள் ஒரு அடிமையின் 8 வயது பையன் எசமானனின் ப்ரியமான நாயின் மீது கல்லெறிய நாயின் காலில் பட்டு காயமுண்டாகிவிட்டது. உடனே பையனைப் பிடித்து மறுநாள் அவன் பெற்றோர்கள் முன்னிலையில் ஓடு ஓடு என்று விரட்டி, அவனைப் பிடிக்க வேட்டை நாய்களை விரட்டினார் அந்தத் தளபதி. நாய்கள்

வெறியோடு அவனை விரட்டின. பெற்ற தாயின் கண் முன்னால் அவன் நாய்களால் குதறப்பட்டான், நார் நாராகக் கிழிக்கப்பட்டான்.

இவான் இந்நிகழ்ச்சியை அல்யோஷாவிடம் விவரித்துவிட்டு ‘அந்த மனிதனை என்ன செய்யலாம்? நீதி, நேர்மை, நியாயமுள்ள நமது மனம் நிறைவடையும்படியாக அவனைச் சுட்டுத் தள்ள வேண்டும் தானே? நீ என்ன நினைக்கிறாய் தம்பி?’ என்று கேட்கிறான்.

‘ஆமாம் அது சரிதான்’ என்கிறான் அல்யோஷா. இவான் தொடருகிறான் ‘நான் குழந்தைகளைப் பற்றி மட்டும் பேசினேன். நமது பூமியின் மேற்பாகம் முதல் பாதாளம் வரை நிறைந்திருக்கும் மனித ராசியின் கண்ணீரைப் பற்றி நான் பேசவில்லை. இந்த உலகம் இந்த மாதிரியாக ஏன் படைக்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. எல்லாம் காரண காரிய முறைப்படி தான் நிகழ்கின்றன என்றால், யாரையும், எதற்கும் குற்றம் சாட்டமுடியாது என்றால், அதனால் எனக்கென்ன நன்மை விளையப் போகிறது? நான் பழிக்குப் பழி வாங்கவே விரும்புகிறேன் மனித குலம் கடைசியாக மகிழ்ச்சியும், சமாதானமும் கொண்டு வாழ்ந்திருக்க, ஒரு மாளிகை கட்டித் தர உன்னைக் கேட்டால், அதை உருவாக்குவதற்காக ஒரே ஒரு உயிரைத் துன்புறுத்த வேண்டி வரும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்வாய்? அதற்கு சம்மதம் தருவாயா?’ என்று இவான் அல்யோஷாவிடம் கேட்கிறான். ‘இல்லை அதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்கிறான் அல்யோஷா.

இவானின் முக்கிய வாதம்

நாம் காணாத சொர்க்கத்திற்கு இப்பூமியில் சகல துன்பங்களையும் சகித்துக் கொள்ள வேண்டுமா? ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் துன்பப்படுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

யேசு வேண்டாம் என்பதல்ல இவானின் வாதம். இம்மனித குலம் படும் துன்பங்களைப் பார்க்கும் போது யேசு இருக்கிறார் என்பதற்கு எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை என்பது தான் இவானின் வாதம்.

இவான் கடவுள் இல்லை என்பதை விட கடவுள் இருக்கிறார் என்பதற்கு மனிதர்களின் குறிப்பாகக் குழந்தைகளின் துன்பங்களைச் சொல்லிக்கொண்டே போகும் போது நமக்குக் கடவுள் மீது நம்பிக்கை அற்றுப் போகிறது. தெய்வம் படைத்த உலகம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. யேசுவுக்கு சமமாக நாம் மனிதர்களை நேசிக்க முடியவில்லை. யேசு தெய்வமாக இருக்கிறார்.

நாம் தெய்வம் இல்லையே! இந்தக் குழந்தைகள் என்ன செய்துவிட்டார்கள்? அவர்களுக்கு ஏன் இந்தத் துன்பம்? பெற்றோர் செய்த பாவத்திற்குக் குழந்தைகள் ஏன் துன்பப்பட வேண்டும்? அது அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும். இப்படிப்பட்ட பரலோகமும், அப்படிப்பட்ட கடவுளும் வேண்டாம் என்பது தான் இவானின் வாதம். இதன் மூலம் தெய்வத்தின் இருத்தல் பற்றி சந்தேகத்திற்கிடமான எல்லா வாதங்களையும் இவான் எழுப்புகிறான்.

இவானின் அண்ணன் திமீத்ரியைப் பார்ப்போம்:-

திமித்ரி தன் தந்தையைக் கொலை செய்தது சம்பந்தமாக விசாரணை வளையத்திற்குள் இருக்கும் போது ஓர் இரவு கனவு காண்கிறான். கனவில் அவன் புல்வெளியில் வண்டியில் போய்க் கொண்டிருக்கிறான். அவர்கள் பாதையில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. அந்த ஊரில் பாதி வீடுகள் எரிந்து சாம்பலாகப் போய் விட்டிருந்தன.

சாலையின் இரண்டு பக்கமும் பெண்கள். அவர்கள் உடல் மெலிந்து காணப்பட்டார்கள். எலும்பும், தோலுமாக ஒரு பெண் கைக்குழந்தையுடன் காணப்பட்டாள். பசியால் அந்தக் குழந்தை எலும்புக் கூடாய் காட்சியளித்தது.

‘ஏன் அவர்கள் அழுகிறார்கள்?’ என்று வண்டியோட்டியிடம் கேட்டான் திமித்ரி. ‘அந்தக் கொளந்த’ என்கிறான் வண்டியோட்டி. ‘ஏன் அந்தக் குழந்தை எலும்பும், தோலுமாய் இருக்கிறது?’ என்று திமித்ரி கேட்டதற்கு அவர்கள் ஏழைங்க அய்யா’ என்கிறான் வண்டியோட்டி.

அந்தக் குழந்தைகள் ஏன் வேதனைப்பட வேண்டும்? இவர்கள் வாழும் பூமி ஏன் கட்டாந்தரையாய் இருக்கிறது? அந்தக் காட்சிகள் சொல்ல முடியாத வேதனையை அவன் இதயத்தில் ஏற்படுத்தின.

இந்த மனிதர்கள், குழந்தைகள் படும் துன்பத்தைக் கனவில் பார்த்துத் தான் திமித்ரி பிராயச்சித்தமாக, தான் செய்யாத கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டு சைபீரியாவுக்குப் போக நேர்ந்தது.

 

உலக உளவியல் மேதைகளில், மன நோய் மருத்துவர்களால் அதிகம் சான்று காட்டப்பட்டவர் – தஸ்தயேவ்ஸ்கி

 இதை விளக்க முடியுமா?

(உலக உளவியல் மேதைகளாலும், மனநோய் மருத்துவர்களாலும் அதிகமாக சான்று காட்டப்பட்ட ஒரே எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி தான். இவரது கற்பனைப் பாத்திரங்களின் மனநிலைகளும், செயல்பாடுகளும் உண்மையான மனிதரின் ‘நோய் – வரலாற்றுப் பதிவுகள்’ என்றே அவர்கள் எடுத்தாள்கின்றனர்)

‘பேய் பிடித்தல்’ என்பது ஒருவகை மனநோய் என்று அறிவியல் சொல்கிறது என்றாலும் மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் பெருவாரியான மக்களால் அதை ஏற்கமுடியவில்லை. பேய் ஓட்ட மந்திரவாதிகளைத் தேடித்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலை, தஸ்தயேவ்ஸ்கி ஒரு பாத்திரத்தின் வாயிலாகச் சொல்லாமல், தமது கருத்தாகவே குறிப்பிடும் ஒரு பகுதி இது :

“இம்மாதிரி பைத்தியக்காரப் பெண்களை கிராமங்களிலும் மடாலயங்களிலும் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பிரார்த்தனை மண்டபத்திற்கு இழுத்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் நாயைப் போல் குரைக்கவும், ஊளையிடவும் செய்வார்கள். அந்தக் குரல் ஆலயமெங்கும் கேட்கும். பூசை நடத்தி, பீடத்தின் முன்னால் கொண்டு சென்றால், சட்டென அடங்கிவிடுவார்கள். ஆசுவாசம் பெற்றுவிடுவார்கள். என் சிறுவயதில் அப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டு வியப்படைந்திருக்கிறேன்.

இதைப் பற்றி கிராமத்தில் இருந்தவர்களும் நகரத்து ஆசிரியர்களும் சொன்ன காரணம் வேறு. வேலை செய்வதிலிருந்து தப்பிக்கவே அந்த ஏழைப் பெண்கள் அப்படிச் செய்வதாகச் சொன்னார்கள். உறுதியான கண்டிப்புடன் இருப்பது தான் அதைக் குணப்படுத்துவதற்கான வழி என்று சொன்னார்கள். அதை நிரூபிக்க, பல உதாரணக் கதைகளும் சொன்னார்கள்.

ஆனால், பிற்காலத்தில் நான் கேள்விப்பட்ட நிபுணர்கள் கருத்து வேறாக இருந்தது. அந்தப் பெண்கள் பாசாங்கு செய்யவில்லை, நடிக்கவில்லை அதுவொரு கொடிய நோய் தான். ரஷ்யாவில் பரவலாகக் காணப்படும் நோய் தான் இது. ஏழை விவசாயப் பெண்கள் மீது சுமத்தப்படும் கடுமையான வேலைப்பளு தான் அதற்குக் காரணம். சகிக்க முடியாத, தாங்க முடியாத இடுப்பொடியும் வேலை, போதிய ஆகாரமின்மை, மருத்துவ வசதி இன்மை துன்பகரமான வாழ்க்கை, அவமதிப்பு, கொடுமை, எல்லாம் தான் அந்த நோய்க்குக் காரணம் என்பதை நான் அறிந்தேன்”

“…பலவீனமான மனம் படைத்த அந்த நோயாளிகள் தெய்வ சன்னிதியில் நிற்கும் போது, அவர்களுடைய புலன் பொறிகள் எல்லாம் அடங்கித் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இதைத்தான் பிடித்த பேய் ஓடிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்தப் பெண்ணின் நம்பிக்கை காரணமாகவே அவள் முழுக்குணம் அடைகிறாள்…”

இப்படியொரு காட்சி ஜொசீமா மனிதர்களை ஆசிர்வதிக்கும் போது ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட மனமாறுதலை, பெண்ணின் நம்பிக்கை காரணமாகவே அவள் குணம் அடைகிறாளே அன்றி இது தெய்வச் செயல் அல்ல என்கிறார் தாஸ்தயேவ்ஸ்கி.

அல்யோஷாவின் ஞானகுரு ஜொசீமா காலமாகி விடுகிறார். ஊரார் அனைவரும் ஏதாவது அற்புதம் நிகழும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர் உடலிலிருந்து நறுமணம் வீசும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி எதுவுமே நடப்பதில்லை!

இறந்துகிடக்கும் அவரது சவப்பெட்டியிலிருந்து பிணவாடை வர ஆரம்பிக்கிறது! ஆசிரமவாசிகள் அதை மறைக்கப் பார்க்கிறார்கள்.

அல்யோஷா சற்று நேரம் அங்கே நின்றான். பிறகு சட்டென வெட்டுண்ட புல்லிதழ் போலத் தரையில் சாய்ந்தான். அல்யோஷா ஏமாற்றமடைகிறான்.

 

உலக இலக்கியத்தில் குழந்தைகளைப் பற்றி அதிகம் எழுதியவர் தஸ்தயேவ்ஸ்கி – விளக்க முடியுமா?

கோல்யா 13 வயது சிறுவன். அல்யோஷாவிற்கு வயது 21. 18-ஆம் நூற்றாண்டில் இளைய தலைமுறையிடம் தோன்றிய நாத்திக வாதம், பெண் விடுதலை மற்றும் சோஸலிசம் குறித்து சிந்தனை அரும்பிய காலம். கோல்யா ரதிகின் என்கிற சோஸலிசம் பேசுகிறவன் மூலமாக ஓரளவு புதிய சிந்தனைகளை அறிந்திருக்கிறான். தன் எண்ணங்களை அல்யோஷாவிடம் பகிர்ந்து கொள்வதைப் பார்ப்போம்.

கோல்யா – அல்யோஷாவிடம்:-

“நீங்கள் அபூர்வமான மனிதர் என்ற நிலையில் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நீங்கள் ஒரு சித்தர் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அதன் காரணமாக உங்களிடத்தில் எந்த மாற்றமும் எனக்குத் தெரியவில்லை ஆனால், எதார்த்த உலகம் உங்களைக் குணப்படுத்திவிடும்! உங்களைப் போலுள்ளவர்கள் நிலைமை அதுதான்!”

“சித்தரா? நீ என்ன சொல்கிறாய்? எதை எது குணப்படுத்தும்?” என்று சற்றே வியப்புடன் கேட்டான் அல்யோஷா.

“கடவுள் சமாச்சாரங்களிலிருந்து எதார்த்த உலகம் உங்களைக் குணப்படுத்தும் என்றேன்”

“உனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா?”

“கடவுள் மீது எனக்கு வெறுப்பெல்லாம் இல்லை. ஆனால், கடவுள் ஒரு கற்பனைதான்.. ஆனால், ஓர் ஒழுங்குமுறை நிலவுவதற்காகக் கடவுள் தேவைப்படுகிறது. ஒரு வேளை கடவுளே இல்லையென்றாலும் கூட ஒன்றைக் கண்டுபிடித்துக் கொள்வது நல்லது தான்!” என்று கோல்யா சொல்லி வந்த போது அவன் முகம் சிவந்து விட்டது. தன் மேதைமையைக் காட்டிக் கொள்ளப் பேசுவதாக அல்யோஷா நினைத்துவிடுவாரோ என்று அவன் சங்கடப்பட்டான் “என் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதாக நினைத்து விடாதீர்கள்” என்று சொல்லி நிறுத்தினான் கோல்யா. அவனுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது.

என்றாலும் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. மறுபடியும் பேச ஆரம்பித்தான்! “இந்த மாதிரியான விவாதங்களில் ஈடுபட என்னால் முடியாது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். கடவுளை நம்புகிறோமோ இல்லையோ மனித குலத்தை நேசித்தால் போதும் அல்லவா! வால்டேர் கடவுளை நம்பவில்லை தான். ஆனால் மனித நேயம் கொண்டவராக இருந்தார் இல்லையா?” (‘ஓ. மறுபடியும் நான் அதிகப் பிரசங்கியாகி விட்டேனோ” என்று நினைத்துக் கொண்டான் கோல்யா)

“இல்லை, வால்டேர் கடவுள் நம்பிக்கை கொண்டவர் தான்! ஆனால் அவர் கடவுளையும் கொஞ்சமாகத் தான் நம்பினார். மனித குலத்தையும் கொஞ்சமாகத் தான் நேசித்தார்” என்று அமைதியாகவும், இயல்பாகவும் சொன்னான் அல்யோஷா. சம வயதுடையவருடன் பேசுவது போன்ற தொனி அவன் குரலில் காணப்பட்டது. வால்டேரைப் பற்றி அல்யோஷா சொன்னது கோல்யாவுக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.

“நீ வால்டேரைப் படித்திருக்கிறாயா” என்று கேட்டான் அல்யோஷா

“படித்தேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு ரஷ்ய மொழி பெயர்ப்பைப் படித்தேன். படுமோசமான மொழியாக்கம்” (‘அய்யோ! மறுபடியும் நான் அத்துமீறுகிறேனோ’ என்று நினைத்தான் அவன்.)

“உனக்கு அது விளங்கியதா”

“ஆமாம்… எல்லாமே விளங்கியது… ஏன்? அது எனக்கு விளங்காதா என்ன? அது ஒரு தத்துவார்த்த நாவல்தான். ஒரு கருத்தை நிலைநாட்டுவதற்காக அவர் அந்த நாவலை எழுதியிருக்கிறார். அங்கங்கே காமக் காட்சிகளும் அதில் உண்டு,” என்று சொல்லி வந்தவன் திடீரென, “நான் ஒரு சோசலிசவாதியக்கும்! திருத்த முடியாத, மாறாத சோசலிஸ்ட்” என்றான் கோல்யா.

“சோசலிஸ்டா? சோசலிஸ்ட் ஆக உனக்கு எப்போது நேரம் கிடைத்தது பதின்மூன்று வயதுதானே ஆகிறது? இல்லையா?” கோல்யா ஒடுங்கிப் போனான். மீண்டும் கோல்யா தொடருகிறான்.

“நீங்கள் ஒரு விசுவாசி. கிறிஸ்தவ விசுவாசம் சமய பணக்காரர்களுக்குத் தான் பயனுள்ளதாக இருக்கிறது. பிரபுக்களுக்கு ஏற்ற விசுவாசம் அது. ஏழைகளை அடிமைகளாக வைத்திருப்பதற்குத்தான் அது வழிவகை செய்கிறது.இல்லையா?”

“ஆ! இது வேறு யாரோ சொன்னது”

“நான் எதையும் படித்து ஒப்புவிக்கத் தேவையே இல்லை. நானே சுயமாகச் சிந்தித்துத்தான் பேசுகிறேன். நான் இயேசுவுக்கு எதிரானவன் அல்ல. அவர் அன்பே வடிவான மனித நேயர். அவர் இன்று, நம் காலத்தில் வாழ்ந்திருந்தால் அவர் நேராகப் போய்ப் புரட்சி இயக்கத்தில் தான் சேர்ந்திருப்பார். அதில் முக்கியமான பங்கும் வகித்திருப்பார். ஆமாம், நிச்சயமாக அப்படித்தான் நிகழ்ந்திருக்கும்!”

‘இந்த மாதிரியான கருத்துக்கள் எல்லாம் உனக்கு எங்கிருந்து கிடைச்சது? பைத்தியக்காரத்தனமான ஆட்களோடு உனக்கு சகவாசம் என்றே தெரிகிறது,” என்றான் அல்யோஷா.

இல்லூஷாவின் மரணம்:

கரமசோவ் சகோதரர்களில் வரும் இல்லூஷா மரணமடைவதற்கு முன்பு தன் தந்தையிடம்,

“தந்தையே எனது சவக்குழியை மூடும் போது அதற்கருகில் ஒரு ரொட்டித் துண்டை வைக்க மறந்து போகாதீர்கள். அந்த ரொட்டித் துண்டை தின்ன குருவிகள் வரும். குருவிகள் எழுப்பும் ஒலியைக் கேட்டு நான் மகிழ்வேன். அப்போது நான் அங்கே தனிமையில் இருக்க மாட்டேன்.

இல்லூஷா தன் தந்தையிடம் வேண்டுதல் எவ்வளவு கல்நெஞ்சையும் கரைய வைத்து விடும். தாஸ்தயேவ்ஸ்கி ஒரு சிறுவனின் மரணத்தைக் கூட எப்படிப் பார்த்திருக்கிறார் பாருங்கள்.

 

அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் இந்த இரண்டு நாவல்களைப் பற்றித் தான்  அதிகம் பேசுகிறீர்கள், ஏன்?

‘அசடன்’நாவல் உருவாக்கம் குறித்து, தனது சகோதரியின் மகள் இவானோவிற்கு தஸ்தயேவ்ஸ்கி எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அசடன் நாவல் வெளிவந்த போது அந்த நாவலும் கூட அவளுக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

இந்நாவலின் (அசடன்) கருத்து எனக்கு மிகவும் பழைய கருத்து. ஆனால் அது சிக்கலானதால் நீண்டகாலமாக நான் தொடவில்லை. இப்போது அதனைத் தொட்டிருக்கிறேன் என்றால் மிகவும் மோசமான நிலையில் என்னைக் காண்பதாலேயே. நாவலின் பிரதான கருத்தாக்கம் நேர்மையான நல்லவனைப் படைப்பதே! உலகத்தில் வேறெதுவும் அவ்வளவு சிரமமானதல்ல. குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில், நேர்மையான நல்லவனைப் படைக்க முயன்ற எல்லா எழுத்தாளர்களும் (நமது ரஷ்ய எழுத்தாளர்கள்) மட்டுமல்லாது, ஐரோப்பிய எழுத்தாளர்களும் எல்லா தடவைகளிலும் தோற்றுப் போயினர். அது ஒரு வரம் பெற்ற காரியம். நல்லது என்பது ஒரு லட்சியம். நம்முடையதும், பண்பாடடைந்த ஐரோப்பாவினுடையதுமான அந்த இலட்சியம் இன்னும் ஈடேறவில்லை. உலகமெங்கிலும் ஒரே ஒரு ஒரு நேர்மையான மனிதன் தான் இருக்கிறான். கிறிஸ்து! கிறிஸ்துவ இலக்கியத்தில் உள்ள நல்ல வகைமாதிரிகளில் மிகவும் பூரணமானது டான் க்விக்ஸோட்.ஆனால் அவன் அசட்டுத்தனமாக இருப்பதினாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது. இதன் காரணமாக வெற்றி பெறுகிறது (அந்தப் படைப்பு). தனது மதிப்பை உணராத நல்லவன், முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு உண்டாகிறது. அதன் காரணமாக வாசகனிடம் இரக்கம் பிறக்கிறது. இந்த கருணை எழுவதே நகைச்சுவையின் இரகசியம். விக்டர் ஹியூகோவின் (லெஸ் மிஸரபிள்) ‘துயருற்றவர்கள்’ நாவலில் ஜீன் பால் ஜீனும் சக்திமிக்க முயற்சியே. அவனது துரதிருஷ்டத்தின் அளவாலும், சமூகம் அவன்பால் காட்டும் அநீதியாலும் அவன் இரக்கத்தை உண்டு பண்ணுகிறான். எனது நாவலில் இந்த மாதிரி எதுவுமில்லை. ஒன்றுமில்லை.எங்கே அது முழுத் தோல்வியாகி விடுமோ என்று மிகவும் அஞ்சுகிறேன்.

அசடன் நாவலில் மிஷ்கின் மூலம் தஸ்தயேவ்ஸ்கி தன்னை இனம் காண முயன்றிருக்கிறார். மிஷ்கினை நவீன யேசுவாகப் படைக்க விரும்பியிருக்கிறார். நாவலைப் படித்து முடித்த பிறகு நமக்கு மிஷ்கின் மீது எந்த அனுதாபமும் அல்லது ஈர்ப்பும் ஏற்படுவதில்லை நாவல் முழுவதும் அவன் நடவடிக்கைகள் மிகவும் அசட்டுத்தனமாகத்தான் இருக்கிறது. ஏன், சில சமயம் நாம் எரிச்சலடைகிறோம். கரமசோவ் சகோதரர்களில் வரும் அல்யோஷா மிஷ்கினை விட உயர்ந்த பாத்திரப் படைப்பு.

அதனால் தான் ஜி.என்.பணிக்கர் கூட “தஸ்தயேவ்ஸ்கியின் கலையும் வாழ்வும்” புத்தகத்தில் மிஷ்கினை ‘தோல்வியுற்ற யேசு கிறிஸ்து’ என்று குறிப்பிடுகிறார்.

மிஷ்கினுக்கு தான் காதலிக்கும் நஸ்தாஸியா, அக்லேயா இருவர் மீதும் பெரிய ஈடுபாடு இல்லை. மிஷ்கினுக்கு நேர் எதிரான பாத்திரப் படைப்பு. ரோகஸின். முரட்டுக் குணம் கொண்டவன், அப்படிப்பட்டவன் நஸ்தாஸியா மீது காதல் கொண்டு அவளுக்காக எவ்வளவு இழப்புகளைச் சந்திக்கிறான். அது மட்டுமல்ல, ரோகஸினோடு வாழும் போது மிஷ்கினை நினைத்து அவன் மீது காதல் கொண்டு நஸ்தாஸியா அலைகிறாள். எல்லாம் ரோகோஸின் கண் முன்னால் நடைபெறுகிறது. எல்லாவற்றையும் அறிந்து ரோகஸின் நஸ்தாஸியாவோடு வாழ்கிறான். மனம் நோகும்படி அவளைப் பேசியதாகவோ, நடந்து கொண்டதாகவோ நாவலில் எங்கும் குறிப்பிடப் படவில்லை. எதிர்மறையான குணம் கொண்ட ரோகஸினுக்கு நாஸ்தாஸியா மீது ஏற்படும் காதல், எழுத்தில் கொண்டு வரமுடியாது. நாவலில் காட்டப்படும் பல்வேறு சம்பவங்கள் நஸ்டாஸியா மீது ரோகஸினுக்கு ஏற்படும் காதலை உணர்த்துகின்றன. நஸ்டாஸியாவால் அவமானப் படுத்தப்படும் போது கூட ஒரு மௌனப் புன்னகை மூலம் எதிர் கொள்கிறான். அதனால் தான் தனக்கு முழுக்க, சொந்தமில்லாத நஸ்தாஸியா உயிரோடு இருக்கக்கூடாது என்று அவளைக் கொலை செய்து விடுகிறான். புத்தி பேதலித்து போலீசாரால் கைது செய்யப்படுகிறான்.

என்னைக் கேட்டால் ரோகஸினுக்கு அடுத்து உயிர்ப்புள்ள பாத்திரம் நஸ்தாஸியாதான். அவள் அறிமுகமே நாவலில் ஆர்ப்பாட்டமாகத்தான் இருக்கும் பெண்களே பார்த்துப் பொறாமைப்படும் அழகு. தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையில் வரும் ரஸ்கோல்னிகோவ், சோனியா, கரமசோவ் சகோதரர்களில் வரும் இவான், அல்யோஷா, ஜொசீமா இவர்களின் பாத்திரத்திற்கு நிகரானது, அசடனின் வரும் ரோகஸின், நஸ்தாஸியா அக்லேயா பாத்திரப் படைப்பு. ஏனோ இந்த ரோகஸின், நஸ்தாஸியாவை விட மிஷ்கின் பாத்திரம் நிறையப் பேசப்பட்டிருக்கிறது.

 

அன்னா கரினீனாவுக்கு நிகரான நஸ்தாஸியா பிலிப்போனா பற்றி அதிகம் பேசுகிறீர்கள், ஏன்?

அசடனில் இரண்டு காட்சிகள் என்னை மிகவும் பாதித்தன:

 1. நஸ்தாஸியா யேசுவை ஒரு குழந்தையோடு கற்பனை செய்து பார்ப்பது
 2. நஸ்தாஸியா மிஸ்கினை இரவு 10 மணிக்கு ஒரு பூங்காவில் சந்திக்கும் காட்சி.

நான் எழுத்தாளர் வேணுகோபாலிடம் தஸ்தயேவ்ஸ்கி பற்றி ஒரு குறும்படம் எடுத்தால் இந்த இரண்டு காட்சிகளையும் இணைத்தால் அது ஒரு காதல் காவியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று சொன்னேன்

 

காட்சி -1

ரோகஸினுடன் வாழும் நஸ்டாஸியா தன்னால் மிஷ்கினை திருமணம் செய்து கொள்ளமுடியாது. அதனால் மிஷ்கினை அக்லேயா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறாள். இது சம்பந்தமாக அக்லேயாவுக்கு நஸ்தாஸியா 3 கடிதம் எழுதுகிறாள். பிறகு அக்லேயாவை சந்தித்து இது சம்பந்தமாகவும் பேசுகிறாள்.

இனி,

நேற்று உன்னைச் சந்தித்த பிறகு (அக்லேயாவை) திரும்பிய நான் என் மனத்திற்குள் ஒரு ஓவியத்தைக் கற்பனை செய்து பார்த்தேன். பொதுவாக இயேசுவை வரையும் ஓவியர்கள், வேதாகம கதைகளில் அவர் வருவதைப் போன்ற தோற்றத்தில் வரைவது வழக்கம். நான் அவரை மட்டுமே தனியாக வரைவேன். அவரது சீடர்களும்தான் சற்று நேரம் அவரிடமிருந்து விலகியிருக்கட்டும். அவருக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தையை மட்டும் நான் விட்டு வைப்பேன். அந்தக் குழந்தை அவரது பக்கத்திலிருந்தபடி விளையாடிக் கொண்டோ, தன்னுடைய மழலை மொழியில் ஏதாவது பேசிக் கொண்டோ இருக்கும். இயேசு முதலில் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தார். ஆனால் இப்போது அவர் ஏதோ ஒரு ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார். அவரது கை அவரையறியாமலேயே அந்த குழந்தையின் சிறிய வெண்மையான தலையின் மேல் இருக்கிறது. தூரத்திலுள்ள தொடுவானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் அவர். இந்த உலகத்தைப் போலவே எல்லையற்ற சிந்தனை அவரது கண்களில் உறைந்திருக்கிறது. அவரது முகம் வருத்தமாகக் காணப்படுகிறது. அந்தக் குழந்தை அமைதியாக இயேசுவின் முழங்கால்களில் கையை ஊன்றிக் கொண்டு, தனது சின்னக் கரத்தைக் கன்னத்தில் தாங்கிக் கொண்டபடி தலையை உயர்த்தி, அவரையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது சில வேளைகளில் சிறு குழந்தைகள் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கியிருப்பதைப் போல இந்தக் குழந்தையும் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறது. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. இது தான் எனது ஓவியம்.

தன் பாத்திரப் படைப்பு மூலம் எவ்வளவு அற்புதமான ஜீவனுள்ள யேசுவை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார் தாஸ்தயேவ்ஸ்கி

காட்சி -2

நஸ்டாஸியா ரோகஸினோடு வாழ்ந்தாலும் அவளால் மிஷ்கினை மறக்க முடியவில்லை. ஒரு நாள் இரவு 10.00 மணிக்கு வழக்கமாக மிஷ்கின் உலவும் பூங்காவில் மிஷ்கினை சந்திக்கிறாள்.

இனி

பூங்காவைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்த அந்தச் சாலை வழியாக வீட்டை நோக்கி நடந்தான். மிஷ்கின் நேற்று கண்ட கனவுகளின் போது, அவன் இரண்டு முறை விழித்துக் கொண்டபோதும் அவன் முன்பு தென்பட்ட அந்த உருவம்… அந்த மாயத் தோற்றம்… இப்போது மறுபடியும் அவனுக்கு முன்பு தோன்றியது. அவனுடைய வருகைக்காகவே காத்திருந்தவளைப் போல, திடீரென்று அந்த பூமியிலிருந்து வெளிப்பட்டு அவன் முன்னால் வந்து நின்றாள். நஸ்டாஸியா. அவன் கனவில் கண்டிருந்த அதே பெண் ஒரு கணம் திடுக்கிட்ட அவன் அமைதியாக அப்படியே அசைவற்று நின்றான் அவள் அவனது கையைப் பற்றி அழுத்தமாக இறுக்கிக் கொண்டாள் “இல்லை… இது மாயத் தோற்றம் இல்லை!”

அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்த பிறகு, முதல் தடவையாக இப்போது அவனுக்கு முன்பாக நேருக்குநேராக நின்று கொண்டிருந்தாள் அவள், அவனிடம் எதோ பேசிக் கொண்டிருந்தாள் அவள். ஆனால் அவனோ திகைப்புடன், அமைதியாக அவளைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான் அவனுடைய இதயமும் கூட வேதனைகளால் நிரம்பி வழிந்து தளும்பிக் கொண்டிருந்தது. அவளுடனான அந்தச் சந்திப்பை அவனாலும் கூட இனி ஒருபோதும் மறக்கவே முடியாது. அவன் மீண்டும் அதை நினைவுகூரும் தருணங்களிலெல்லாம் இதே போன்ற வேதனையுடன் மட்டுமே அவனால் அதை நினைவுபடுத்திக் கொள்ள முடியும்.

அவள் பைத்தியம் பிடித்தவளைப் போல, அந்த இடத்திலேயே, வீதிக்கு நடுவிலேயே, அவன் முன்பு மண்டியிட்டுச் சரிந்தாள். அவன் நடுக்கத்தோடு சற்றுப் பின்வாங்கிக் கொண்டான். நேற்று கனவில் கண்டதைப் போலவே, அவனது கையைப் பற்றி அவள் முத்தமிட முனைந்த போது, அவளது நீள விழிகளில், கண் இரப்பைகளில் கண்ணீர்த் துளிகள் மின்னிக் கொண்டிருந்தன.

“எழுந்திரு…ம் எழுந்திரு” என்று அவளைப் பற்றித் தூக்கியபடி பயத்தோடு கிசுகிசுத்தான் அவன், ‘எழுந்திரு.. ம்.. தயவு செய்து உடனே எழுந்திரு”

“நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? மகிழ்வாக இருக்கிறீர்கள் தானே?” என்று கேட்டாள் அவள். “ஒரே ஒரு வார்த்தை மட்டும் என்னிடம் சொல்லி விடுங்கள், போதும், இப்போது.. இன்றைக்கு… இந்தக் கணத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா…அவளைப் பார்க்கப் போனீர்களா? அவள் என்ன சொன்னாள்?”

அவள் எழுந்திருக்கவுமில்லை, அவன் சொன்னதைக் காதில் கேட்கவுமில்லை. அவள் வேகமாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தாள். எவராலோ அவள் விரட்டப்படுவதைப் போல, அவசர அவசரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் “நீங்கள் என்னிடம் சொன்னதைப் போல நான் நாளை சென்றுவிடுவேன். நான் இங்கே இருக்க மாட்டேன். நான் உங்களைப் பார்க்கும் கடைசி முறை இது தான். ஆமாம். உறுதியாகவே சொல்கிறேன், இது தான் கடைசி தடவை.”

“உன்னை நிதானப்படுத்திக் கொள், எழுந்திரு. எழுந்திரு!” என்று செய்வதறியாமல் வேதனையோடு கூறினான் மிஷ்கின். அவனது கரங்களை அழுத்திப் பற்றிக்கொண்டு பேராசை கொண்டவளாக அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

“சரி. நான் விடைபெற்றுக் கொள்கிறேன். குட்பை” என்று கடைசியாகச் சொல்லிவிட்டு மண்டியிட்டு எழுந்துகொண்ட அவள் வேகமாகக் கிட்டத்தட்ட ஓடுவதைப் போல அவனை விட்டு அகன்று சென்றாள். திடீரென்று அவளருகே தோன்றிய ரோகோஸின் அவளைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு செல்வதைக் கண்டான் மிஷ்கின்.

முழு நாவலைப் படித்தால் தான் நஸ்தாஸியா, மிஷ்கினை எவ்வளவு தூரம் காதலித்தாள் என்பதும், இந்தக் காதலை அறிந்தும் நஸ்தாஸியா மீது மோகம் கொண்டு அலையும் ரோகஸின் பாத்திரப்  படைப்பின் உன்னதமும் நமக்குப் புரியும்.

கரமசோவ் சகோதரர்கள் இவான் – நிகராக அசடன் நாவல் இப்போலிட் பற்றி அதிகம் பேசுகிறீர்கள், ஏன்?

மிஷ்கினுடன் – இப்போலிட் வாதம்

18 வயது நிரம்பிய, தளபதியின் வைப்பாட்டிக்கு பிறந்தவன். சிறுவயது முதலே நோயாளியாகவே வாழ சபிக்கப்பட்டவன் இப்போலிட்.

இனி இப்போலிட் மிஷ்கினுடனும், நண்பர்களுடனும் யேசு பற்றிப் பகிர்ந்துகொண்ட வாதம்.

மரித்துப் போன குழந்தைகளை உயிர்ப்பித்தவர்க்கு, தன்னைச் சிலுவையில் அறையப் போவது பற்றி எப்படித் தெரியாமல் போனது? சிலுவையைச் சுமந்துகொண்டு அவ்வளவு சாட்டை அடிகளைத் தாங்கியும், சிலுவையில் அறைந்து தொங்கும் போது எப்படி அவர் முகம் ஒரு ஜொலிப்போடு இருக்க முடியும்?

பொதுவாக இயேசுவை வரையும் ஓவியர்கள், சிலுவையிலிருக்கும் நிலையிலும், அதிலிருந்து அகற்றப்பட்ட பிறகும், அவரது முகம் அதீதமான அழகுடனும், பொலிவுடனும் இருப்பதாக வரைவதே வழக்கம். ஆனால் ரோகோஸின் வீட்டிலிருந்த படத்தில் அந்த எழிலின் சாயலே கொஞ்சமும் இல்லை. சிலுவையில் அறையப்பட்டு இறந்து போவதற்கு முன்பாக, அளவற்ற வேதனைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு மனிதனின் பிணத்தைப் போலத்தான் எல்லா வகையிலும் இருந்தது அது. சிலுவையைத் தனது முதுகில் சுமந்துகொண்டு அதன் பாரம் தாங்க முடியாமல் விழுந்த போது, உடன் வந்த காவலர்களாலும் மக்களாலும் அடி, உதை, சித்திரவதைகளுக்கு ஆளாகி வேதனைகளைத் தாங்கிக் கொண்டிருக்கும், வேதனையை வெளிப்படுத்தும் முகம் அந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கூட அந்தத் துன்பம் தரும் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போலவே அந்த முகத்தோற்றம் இருந்தது (அந்த உணர்வை மிக அருமையாக வெளிப் படுத்தியிருந்தார் ஓவியர்) அந்த ஓவியத்தில் ஒரு மனிதனின் கடுமையான வேதனைகளும், துன்பங்களும் சிறிதும் விட்டு வைக்கப்படவில்லை. இது தான் இயற்கையின் நியதி. யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்த பிறகு, ஒரு மனிதப் பிணம். அதன் முகம் இப்படித்தான் இருக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தது அந்த ஓவியம். இயேசு அனுபவித்த துன்பங்கள் வெறும் குறியீடுகள் மட்டுமல்ல, அவை உண்மையானவை தான் என்று தொடக்கக் காலத்தைச் சேர்ந்த, முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் எடுத்துச் சொல்லி வந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். அதனால் இயற்கையின் பொது விதிப்படி அவரது உடலும் கூட சிலுவையிலிருந்த போது எல்லா துன்பங்களுக்கும் முழுமையாக உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த அளவுக்குக் கொடிய சித்திரவதைகளை அனுபவித்து விட்டு பிணமாகக் கிடக்கும் ஒரு மனிதனின் முகத்தைப் பார்க்கும் போது வினோதமான ஆர்வம் கலந்த ஒரு கேள்வி பிறக்காமல் இருக்கவே முடியாது என்பதை, அது சற்று விபரீதமானது என்ற போதும் இங்கே சொல்லித் தான் ஆக வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில், ஒரு சவத்தை (நிச்சயமாக அது அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்) அவரது சீடர்களும், அவரது கொள்கையை முன்னெடுத்துச் செல்லவிருக்கும் அப்போஸ்தலர்களும், அவர் சிலுவையைச் சுமந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்து, அவருடன் கூடவே நின்ற பெண்களும், அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை வழிபட்டுக் கொண்டிருப்பவர்களும் பார்க்கும் போது இந்த அளவுக்குச் சித்திரவதை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் இந்தத் தியாகியினால் மீண்டும் உயிர்த்தெழ முடியும் என்பதை அவர்களால் எப்படி நம்ப முடியும்? இப்படி ஒரு கேள்வி உடனடியாகத் தன்னிச்சையாகவே எழுந்து விடுகிறது. இறப்பு என்பது இத்தனை குரூரமானதாகவும், இயற்கையின் விதிகள் இந்த அளவுக்கு வலிமை வாய்ந்தவையாகவும் இருக்கும் போது அவற்றை வெற்றி கொள்வது எப்படிச் சாத்தியமாகும்? இயற்கையையே தன் வசப்படுத்தியிருந்தவரும், தன் வாழ்நாளில் ‘தலிதா! எழுந்திரு’ என்று மரித்துப் போன ஒரு சிறு பெண்ணை உயிரோடு எழுப்பியவரும், ‘லாசரஸ் எழுந்துவா!’ என்று இறந்து போன நண்பனான ஒரு மனிதனை உயிர்ப்பித்தவருமான அவராலேயே – அந்தக் கடவுளையொத்தவராலேயே மேற்கூறியவற்றை வெற்றி கொள்வது சாத்தியமாகவில்லையே?

அழிவில்லாத எந்த சக்திக்குக் கீழ்ப்பட்டவர்களாக எல்லோரும் இருக்கிறார்களோ அப்படிப்பட்ட இருண்மையான சக்தியை, துடுக்குத்தனமான பகுத்தறிவால் இனம் பிரித்துக் காண முடியாத ஒரு சக்தியை, அதன் இருப்பை அந்த ஓவியம் மிக இயல்பாக வெளிப்படுத்தி விட்டிருக்கிறது இறந்த மனிதனைச் சுற்றியுள்ள மக்களெல்லாம் (அவர்களில் ஒருவர் கூட அந்தப் படத்தில் காட்டப்படவில்லை) அன்று மாலை மிகக் கடுமையான துன்பத்தையும் மன உளைச்சலையும் திகைப்பையும் அனுபவித்திருக்க வேண்டும். அந்த சம்பவம் அவர்களின் எல்லா நம்பிக்கைகளையும், அதுவரை அவர்கள் கொண்டிருந்த பெரும்பாலான முடிவுகளையும் கூட நொறுக்கிப் போட்டிருக்க வேண்டும். மிகுந்த நடுக்கத்தோடு அவர்களெல்லாம் கலைந்து சென்றாலும், அந்த வேளையிலும் கூட, என்றுமே மாற்றிக் கொள்ள முடியாதபடி வலிமையான ஒரு எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருக்க வேண்டும். தங்களுக்கெல்லாம் குருவாக இருக்கும் அவர் தனக்கு ஏற்படப் போகும் இத்தகைய சிலுவை மரணத்தை முன்கூட்டியே அறிந்திருப்பாரானால் சிலுவையை எடுத்துக் கொண்டு போய் அந்த மாதிரி கோரமாக மரித்திருக்க முடியுமா? அந்தப் படத்தைப் பார்க்கும் எவருக்குமே அந்தக் கேள்வி அனிச்சையாக எழுதுவது இயற்கை தான்.

மிஷ்கினைச் சுற்றியே இந்த கதை பின்னப்பட்டிருந்தாலும், மிஷ்கினை ஒரு நவீன யேசுவாக தஸ்தயேவ்ஸ்கி படைக்க முயன்றும், நாவலைப் படித்து முடிக்கும் போது ஜி.என்.பணிக்கர் எழுதியது போல் “அசடன்” அதாவது மிஷ்கின் “தோல்வியடைந்த கிறிஸ்து தான்”

இதற்கு மாறாக ரோகஸின் நஸ்தாஸியா மீது கொண்டிக்கும் தீராக் காதல் நஸ்தாஸியாவின் பேரழிவிலும், முடிவில் நஸ்தாஸியா மரணத்தின் துயரத்திலும் ஒரு துன்பவியல் காவியமாக இருக்கிறது. அக்லேயாவின் சுயேச்சையான குணம், 18 வயது நிரம்பிய இப்போலிட்டின் நாத்திக வாதம் எனது பார்வையில் கரமசோவ் சகோதரர்களுக்கு அடுத்து தஸ்தயேவ்ஸ்கியின் இரண்டாவது சிறந்த படைப்பாக இருக்கிறது.

தஸ்தயேவ்ஸ்கியை சந்திக்க நேரிட்டால் என்ன கேட்பீர்கள்?

கடவுள் மறுப்பு வாதங்களை எதிர்கொள்ள முடியாத தஸ்தயேவ்ஸ்கி கடவுள் மறுப்பாளர்களின் முடிவுகளை துன்பமயமாக முடித்திருக்கிறார். ‘இவர்களை ஏன் தண்டித்தீர்கள் தந்தையே?’ என்று கேட்பேன்.

கரமசோவ் சகோதரர்கள்

இவான்                     –           மனப்பிறழ்வுக்கு ஆளாகிறான்

திமித்ரி                      –           தான் செய்யாத குற்றத்துக்காக சைபீரிய

சிறைக்குப் போகிறான்.

 • அசடன்

இப்போலிட்            –           ஒரு தளபதியின் வைப்பாட்டிக்குப் பிறந்தவன்

சிறுவயது முதல் நோயாளி, 18 வயதில் மரணம்.

 • குற்றமும் தண்டையும்

ரஸ்கோல்னிகோவ் –          சைபீரிய சிறைக்கு அனுப்பப்படுகிறான்

இதற்கு நேர் எதிரிடையாக கடவுள் வேண்டும் என்பதற்கு ஞானி ஜொசீமாவின் வாழ்க்கை, அவருடைய பிரசங்கம், மக்கள் அவர் மீது அன்பு கொண்டு அவரிடம் ஆசி பெற்று எல்லாவிதத் துன்பங்களிலிருந்து விடுதலையாவது.. எதுவுமே இவான் மற்றும் இப்போலிட் வைக்கும் கடவுள் மறுப்புக்கு எதிராய் ஜொசீமாவின் பாத்திரம் கடவுள் இருப்புக்கு வலு சேர்க்கவில்லை.

 

இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ள மேற்கோள்கள், கீழ்க்கண்ட புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

 1. கரமசோவ் சகோதரர்கள் – புவியரசு (NCBH வெளியீடு)
 2. அசடன் – எம்.ஏ. சுசீலா, பாரதி புக் ஹவுஸ், மதுரை
 3. குற்றமும், தண்டனையும் – எம்.ஏ. சுசீலா, பாரதி புக் ஹவுஸ், மதுரை
 4. தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வும் கலையும் – மலையாள மூலம் ஜீ.என்.பணிக்கர், தமிழில் உத்திரகுமாரன், வ.உ.சி. நூலகம், சென்னை.

 

தலைப்புக்கு

(நன்றி அ.வெண்ணிலா)

 

   நேர்கண்டவர் :க.விக்னேஸ்வரன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.