தனது 101வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருக்கும் உயிரி அண்டக் கோட்பாட்டின் (Gaia Theory) தந்தை, கோவிட்-19, தீவிரமான வானிலை, உறையும் வெள்ளெலிகள் பற்றி உரையாடுகிறார்.
இந்த புவியில் வாழ்வென்பது சூழலோடும் ஒன்றோடொன்று வினைபுரிவதும் தன்னைத்தானே சரிசெய்து கொள்ளக்கூடிய உயிரினங்களின் சமூகமே என்ற புரட்சிகர கருத்துருவாக்கமான உயிரி அண்டக் கோட்பாட்டின் (Gaia Theory) தந்தை என நன்கு அறியப்படுபவர் ஜேம்ஸ் லவ்லாக் (James Lovelock). சுதந்திர அறிவியலாளரான இவர் கல்விப்புல அமைப்புகளைப் புறந்தள்ளுபவர், சுயம்பு, பேரழிவின் தீர்க்கதரிசி, சூழியல் தத்துவ அறிஞர், கன்டால்ஃப் (ஹாபிட், தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நாவல்களில் வரும் மாயத் தந்திரம் செய்யும் கதாபாத்திரம்) என்றும் பலவாறாக விவரிக்கப்படுபவர். ஜூலை 2020-இல் அவர் 101 வயதை அடைந்தாலும், அறிவின் வெளிப்பாட்டில் சிறிதும் சுணக்கம் அடையாதவராக இருக்கிறார். நோவசீன் (Novacene) அவருடைய சமீபத்திய நூல்.
2020-இல் இவ்வுலகம் பேரிடர்களைச் சந்திக்கும் எனவும் தீவிர வானிலை மாற்றங்கள் இயல்பானவையாக மாறும் எனவும் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் நீங்கள் முன்னறிவித்தீர்கள். இவ்வாண்டின் முன் பாதி உலகளாவிய பெருந்தொற்று, ஆர்க்டிக் பகுதியில் முதன்முறையாக 100 டிகிரி பாரன்ஹீட் (செல்சியஸில் சுமார் 37 டிகிரி) வெப்பமடைந்தது, ஆஸ்திரேலியா மற்றும் சைபீரியப் பகுதிகளில் மிகப் பெரிய காட்டுத் தீ, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு ஆகியவற்றைச் சந்தித்தது. ஒரு அறிவியலாளராக உங்கள் கருத்து மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறீர்களா அல்லது கடவுள் அருள் போன்ற வார்த்தை நிரூபணம் ஆனதற்காக ஒரு மனிதராக ஏமாற்றம் அடைகிறீர்களா?
இது உண்மையில் மிகவும் வெளிப்படையானது, ஆனால் இவற்றை எல்லாம் எப்படி சரியாக அறிந்து கொண்டீர்கள் என்பதை நீண்ட காலத்திற்குப் பின்னும் உங்களால் அறிய முடியாது, ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் ஆச்சரியங்கள் நிகழலாம். அதுவுமின்றி, உண்மையில் நான் விஞ்ஞானியும் அல்லன்; நான் ஒரு கண்டுபிடிப்பாளன் அல்லது மெக்கானிக். அது வேறு விஷயம். உயிரி அண்டக் கோட்பாடு என்பது உண்மையில் விரிவாக எழுதப்பட்ட ஒரு பொறியியல் தான். நான் சொல்வது என்னவென்றால், விண்வெளியில் சுழலும் இந்தப் பந்து அழகிய நிலையான விண்மீனால் ஒளிமயமாக்கப்படுகிறது. இதுவரை, உயிரினங்கள் வாழத் தகுந்ததாக இந்தப் புவியமைப்பு பூமியில் அனைத்தையும் சரியாகவே வைத்துள்ளது என்பதே உயிரி அண்டக் கோட்பாட்டின் சாராம்சம். இது ஒரு பொறியியல் பணி. அது சரியாகவே செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயிர்க்கோளமும் நானும் எங்கள் வாழ்வின் இறுதி 1% பகுதியில் இருக்கிறோம் என்றே சொல்வேன்.
வைரஸ்களும், தன்னைத் தானே சரி செய்துகொள்தல் என்ற உயிரி அண்டக் கோட்பாட்டின் ஒரு பகுதிதானா?
நிச்சயமாக, இது ஊற்றும் உறிஞ்சியும் போன்றது தான். பல்கிப் பெருகும் வைரஸ்களே ஊற்று. அதிலிருந்து விடுபட நாம் எடுக்கும் முயற்சிகள் எதுவானாலும் தற்போதைய சூழலில் பலன் தருவதாக இல்லாததாக இருந்தாலும்கூட அதுவே உறிஞ்சி ஆகும். டார்வின் கூறியதைப் போல இது எல்லாம் பரிணாமத்தின் பகுதியே. உணவுச் சங்கிலி இல்லாமல் புதிய உயிரினங்கள் செழித்தோங்குவதை உங்களால் காண இயலாது. ஒரு வகையில் நாம் இப்போது மாறி வருவதைத்தான் இது உணர்த்துகிறது. நாம் தான் உணவு. உலகில் மக்கள்தொகை அபரிமிதமாகப் பெருகி வருவதைத் தடுத்து சரி செய்ய வைரஸ்கள் தோன்றுவதற்கான நிகழ்வாய்ப்பு அதிகம் என்பதை உங்களை ஒரு முன் மாதிரியாக வைத்து என்னால் விளக்கிவிட முடியும். இந்தக் கோளில் அளவில்லா எண்ணிக்கையில் பல்கிப் பெருகிட அனுமதிக்கப்படும் அளவிற்கு நாம் விரும்பத்தக்க உயிரினங்கள் அல்ல. மால்தூஸ் மிகச் சரியானவர். அவர் காலத்தில், மக்கள்தொகை மிகக் குறைவாகவும் குறை அடர்த்தி பரவலாக்கமும் கொண்டிருந்தபோது, கோவிட் உருவாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை.
பொதுமுடக்கம் இந்த நோய் முன் கணிப்பை எந்தளவு பாதிக்கும்?
இந்த வைரஸ்க்குப் பிறகு, கவனிக்கப்படக் கூடிய பெரிய மாற்றங்கள் ஏற்படுமா என ஐயமுறுகிறேன். இதற்கு முன் தங்களால் செய்ய இயலாத விஷயங்கள் அனைத்தையும் தற்போது செய்ய முடியும் என மக்கள் கண்டறிவார்கள் என நினைக்கிறேன். உடல் பருமனடைதல் சரியானது அல்ல என அவர்கள் உணரலாம்; மத்திய வயதிலும் வயதான பின்பும் ஏற்படும் உடல் உபாதைகள் எல்லாம் தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்பட்டவை என உணரலாம். எனக்கு எப்போதும் சுவாரஸ்யமாக இருப்பது என்னவென்றால், இரண்டாம் உலகப் போரின் துவக்கத்தில் இருந்ததைவிட போரின் இறுதியில் நாடுகளின் சுகாதாரம் பெரியளவில் நன்றாக இருந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் எப்படி நிரூபணம் செய்கின்றன என்பது தான்.
உங்கள் பணியின் ஆரம்ப கட்டத்தில், இது சார்ந்து சில ஆராய்ச்சிகளை நீங்கள் மேற்கொண்டீர்கள்…
பல்கலைக்கழகப் படிப்பிற்குப் பின் எனது முதல் ஆய்வுப் பணியானது, இன்ஃப்ளுயன்சா வைரஸைக் கண்டுபிடித்த சர் கிறிஸ்டோபர் ஆண்ட்ரூஸ் தலைமையிலான மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலில் தான் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது நிலவறைத் தங்குமிடங்களில் இருமல் மற்றும் தும்முவதால் வெளியேறும் திவலைகளை அளவீடு செய்வதுதான் என் பணி. முதல் உலகப் போரின் போது பயங்கரமான இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவியது. அந்த நிலவறைகளில் மக்கள் நெருக்கமாக தங்கியதால் அந்த வைரஸ் மீண்டும் எழுமோ என எண்ணி உயிரச்சம் கொண்டு நடுங்கினார்கள்.
இந்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தான் நீங்கள் எலக்ட்ரான் பற்றுகை கண்டுணறியை (Electron Capture Detector) உருவாக்கியதாகப் படித்தேன்…
நாங்கள், உறையும் வெள்ளெலி முறையை உருவாக்கினோம். பனிக் கட்டிகள் போன்ற அவற்றை நீங்கள் மேசை மீது டமார் என வீச முடியும். பிறகு அதை நாங்கள் அப்போதைய முதல் மைக்ரோவேவ் ஓவனில் வைத்து மீண்டும் இயல்பு நிலைக்கு வரச் செய்தோம். அவை வாழ்வதற்கும் மற்ற உயிரினங்கள் வாழ முடியாமைக்கும், வெள்ளெலிகளின் கொழுப்பு தண்ணீரைவிட குறைவான உறைநிலை கொண்டுள்ளதுதான் காரணம் என்ற கருத்தை அது மாற்றியது. என்னுடன் பணிபுரிந்தவரும் வாயு நிறப்பிரிகையைக் கண்டறிந்தவருமான ஆர்ச்சர் மார்ட்டினிடம் இதைப் பற்றி பகுத்தாய்ந்து கூறுமாறு கேட்டுக் கொண்டேன். ஆய்வு மாதிரியின் அளவைப் பார்த்ததும், “எனக்காக மிக நுண்ணுணர்வுக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தால் தான் ஆராய முடியும்” என்றார். அதற்கு அடுத்த இரண்டு வாரங்களில் நான் இரண்டு கண்டுணறிகளுடன் (Detector) வந்தேன். அவற்றுள் ஒன்று உலகெங்கும் பயன்பாட்டுக்கு வந்த வாயு நிரலியல் (Gas Chromatography) கருவியுடன் இணைந்த கண்டுணறி. இக்கருவியால் இங்கிலாந்து அரசின் வருவாய்த்துறைக்கு ஏராளமான வருவாய் கிடைத்தது. மற்றொன்று எலக்ட்ரான் பற்றுகை கண்டுணறி (Electron Capture Detector). இது மீவளிமண்டலத்தில் (Stratosphere) பரவியுள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வாயுக்களையும் காற்று, மண் மற்றும் நீரில் கலந்துள்ள பாலிகுளோரினேட் பைபினைல் (PCB) போன்ற மாசுபடுத்திகளைக் கண்டறியும் கருவியாகவும் பின்னாளில் பயன்பட்டது. இதன் காரணமாகத்தான் நிலவு மற்றும் செவ்வாய் தரையிறக்கத்தில் தங்களுக்கு உதவிடுமாறு பிரிட்டனிலேயே முதல் நபராக என்னிடம் நாசா கேட்டுக் கொண்டது என நினைக்கிறேன். எனது கருவி சில கிராம்களே எடை கொண்டதும் மற்ற கருவிகளைவிட அதிக உணர்திறன் கொண்டதும் மட்டுமின்றி மின்சாரமே தேவையில்லாத ஒன்றாகவும் இருந்தது. “நல்லது. இது தான் எங்களுக்குத் தேவை. அமெரிக்காவிற்கு வாருங்கள்” என்றனர். அதனால் நான் சென்றேன்.
பிரபஞ்சத்தின் உண்மையைக் கலீலியோவின் தொலைநோக்கி வெளிப்படுத்தியது போல உங்களது வடிவமைப்பான எலக்ட்ரான் பற்றுகை கண்டுணறி இந்தக் கோளில் உள்ள உயிரினங்களின் உண்மையை வெளிக் கொணர்ந்தது என பிரெஞ்சுத் தத்துவ அறிஞர் புரூனோ லட்டூர் என்னிடம் கூறினார். உங்கள் கருவி இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று உணர்ந்தீர்களா?
அந்தச் சமயத்தில் எனக்கு எந்த எண்ணமும் இல்லை. லட்டூர் சொல்வது அனைத்தும் சரிதான் என்றாலும் நான் அவ்வாறு அதைப் பார்க்கவில்லை. ஏனென்றால் கலீலியோவின் கண்டுபிடிப்பு நேரடித்தன்மை கொண்டது. நிலவும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதை தொலைநோக்கி வழியாக நீங்கள் பார்த்தால் உங்களால் இந்த முழு அமைப்பைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வரமுடியும். பூமியில், அயர்லாந்தில் உள்ள எனது குடிலுக்குச் சென்று லேமினேரியா சக்கரினா என்ற கடற்பாசி வகை வெளியிடும் அயோடைடு சேர்க்கைகளை அளவீடு செய்தால் – அது பூமி எவ்வாறு தன்னைத் தானே சுற்றி வருகிறது என்று முடிவு செய்வதைப் போன்று அவ்வளவு எளிதாக ஒரு முடிவுக்கு வரஇயலாது. அது பல படிகளைக் கொண்டது. உயிர் சங்கிலியின் ஒரு கண்ணி என்பதற்கான சிறு ஆதாரம் மட்டுமே. இந்தச் சிறு ஆதாரத்தில் இருந்து வளர்த்தெடுக்கப்படும் போது நீங்கள் ஒரு உயிரி அண்டக் கோட்பாட்டைப் பெறுவீர்கள்.
உங்கள் கருத்துருவாக்கம் ஒரு பாய்ச்சல் போன்றது என்பதால் உங்கள் சிந்தனையை ஏற்றுக் கொள்வதில் அமைப்புகளுக்குள் பெரும் போராட்டம் ஏற்பட்டது என்கிறார் லட்டூர். அரிஸ்டாட்டிலில் இருந்து கலீலியோவிற்குப் பெயர்ந்தது எவ்வளவு பெரிய மாற்றமோ அதே போன்று கலீலியோவிலிருந்து கையே (Gaia) கோட்பாட்டிற்கு மாறியதும் பெரிய விஷயம் என்று அவர் நம்புகிறார். முடிவில்லா பிரபஞ்சத்தில் ஆய்வுப் பயணத்தை கலீலியோ தொடங்கி வைத்த நிலையில், ஒரு மூடிய நிலையற்ற அமைப்பை நாம் நிலைநிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் வெளிப்படுத்தினீர்கள். இதை மக்கள் அங்கீகரிக்க விரும்புகிறார்கள் என நினைக்கிறீர்களா?
என்னால் இயலுமானால் கலீலியோ எவ்வாறு உணர்ந்தார் என்பதைப் புரிந்துகொள்ள நான் அவரிடம் பேச விரும்புகிறேன். தனிமையானவர்களான நாங்கள் ஏராளமான எதிர்ப்பைச் சந்தித்தவர்கள். மக்களைவிட திருச்சபையுடன் தான் கலீலியோவுக்குப் பிரச்சினைகள் அதிகம் என நினைக்கிறேன். அது அவர்களின் சமயக் கொள்கைக்கு முரணாக இருந்ததால் வெறுத்தார்கள். முந்தைய திருச்சபைகளை போன்று பல்கலைக்கழகங்கள் ஆபத்தான நிலையில் உள்ளனவோ என நான் நினைத்திருந்தேன். அவர்களுக்குள் டஜன் கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. நீங்கள் அவற்றில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர் என்றால் அவர்கள் பெருமையடைவார்கள்: நீங்கள் வேதியியலாளர் என்றால் உயிரியல் பற்றி எதுவும் தெரியாது என்பதைப் போல. அதனால் தான் சாதாரண பல்கலைக்கழக அறிவியல் உண்மையில் உதவிகரமாக இருப்பதில்லை. ஏனென்றால் கடற்பாசியை ஆய்வு செய்யும் துறையின் பார்வை மெத்தில் அயோடைடை ஆய்வு செய்யும் துறையின் பார்வையிலிருந்து வேறுபடுகிறது. தற்போது பல்கலைக்கழகங்கள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளன. அவற்றின் சிந்தனைகளில் ஒருமித்த தன்மை உள்ளது. உயிரி அண்டக் கோட்பாட்டிற்கு எவ்வளவு மறுப்பு உள்ளது என்பது வியப்பளிக்கிறது. தங்களுக்குப் பாதகமான செய்திகளை எதிர்க்கும் நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்காக எந்த அளவிற்கு இக் கோட்பாட்டை மூடி மறைக்கிறார்கள் எனவும் நான் வியக்கிறேன்.
உயிரி அண்டக் கோட்பாட்டை நன்கு புரிந்துகொண்டால், நலவாழ்வு, பிறருக்காக வாழ்தல், எதிர்கால சந்ததியினருக்காக வாழ்தல் ஆகிய எண்ணங்களைப் பூர்த்தி செய்த மதங்களைப் போன்ற சமயக் கொள்கைக்கு அடிப்படையாக அமையுமா?
ஒரு வகையில் நீங்கள் சொல்வது சரி என நினைக்கிறேன். உயிரி அண்டக் கோட்பாட்டை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் யாரும் இல்லை, என்னையும் சேர்த்துச் சொல்கிறேன். ஆனால் மதம் மற்றும் கடவுளைப் புரிந்துகொள்வதைவிட அது எளிதானது. அதை நீங்கள் கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும். இக் கோட்பாட்டை வைத்துக் கொண்டு உலகில் எல்லாவற்றையும் அளவீடு செய்ய இயலும்.
நீங்கள் மத உணர்வாளரா?
இல்லை நான் ஒரு குவேக்கர்*. பிரபஞ்சத்தின் ஏதோவொரு மூலையில் வயதான கனவான் போல கடவுள் இருப்பார் என்பதைவிட நம்முள்ளே இருக்கும் ஒரு சிறிய குரல்தான் கடவுள் என்கிற கருத்து எனக்குப் போதிக்கப்பட்டுள்ளது. அந்த உட்குரலில் இருந்து தான் உள்ளுணர்வு வருகிறது. கண்டுபிடிப்பாளர்களுக்கு அது மிகச் சிறந்த பரிசாகும்.
காலநிலையை நிலைநிறுத்த மனித இனம் ஏதாவது ஒன்றை உருவாக்கும் என நம்புகிறீர்களா?
உருவாக்குதல் நல்லது அல்லது தவிர்க்க இயலாத அழிவுதான் வரும். ஆனால் அதற்கு நேர்மாறாக நாம் புதைபடிவ எரிபொருள்களை எரித்துக் கொண்டிருக்கிறோம். அணுமின் சக்தி மலிவாகவும் நன்மை அளிப்பதாகவும் இருப்பதாலும் தற்போது தோரியம் அடிப்படை எரிபொருளாகக் கிடைப்பதாலும் நான் அதற்கு எப்போதுமே ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால் பலர் அதை வெறுக்கிறார்கள். சூரியமைய வட்டப்பாதையில் சூரிய ஒளித் தடுப்புகளை அமைப்பதன் மூலம் பூமியில் விழும் ஒளியைச் சிறிதளவு சிதறடிக்க முடியும் என்ற எட்வர்டு டெல்லரின் ஆலோசனையை விரும்புகிறேன். அது அங்கிருக்கிறது என உங்களால் கவனிக்க முடியாது. அது நிறைவேற்றப்பட்டால் – நாசாவால் நிச்சயம் அது போன்ற ஒரு திட்டத்தை நிறைவேற்ற முடியும். அப்போது நமது பூமியைக் காப்பாற்ற முடியும். வளிமண்டல அடுக்கில் கந்தகத்தை தூவுதல் என்பது போன்ற புவிப் பொறியியல் திட்டங்களைவிட கடினமான, வழக்கத்திற்கு மாறான திட்ட முன்மொழிவாக இது இருக்கக் கூடும். ஆனால் இதையே நான் விரும்புகிறேன். ஏதேனும் தவறு ஏற்படும் நிலையில் அது தானாகவே உடைந்துவிழும் தன்மை கொண்டதாக இதை உருவாக்க முடியும். மொத்தத்தில், உயிரி அண்டக் கோட்பாட்டை நிறைய புரிந்துகொள்ளும் முன்னர் ஏதேனும் புதிய திட்டங்களைத் துவக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான காற்று மற்றும் சூரிய ஒளியைச் சரியாகப் பயன்படுத்தினால் மனித இனத்தின் எரிசக்தி பிரச்னைக்குத் தீர்வாக இருக்கலாம் என்பதைப் போலத்தான் இது தோற்றமளிக்கிறது.
ஜூலை 27, 2020ல் நீங்கள் 101 வயதை அடைகிறீர்கள். உங்கள் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள்?
கடந்த ஆண்டு நடத்திய கேளிக்கை விருந்தினைப் போலவோ அல்லது மனமுடைந்து இருக்கவோ போவதில்லை. ஆனால் நாங்கள் கொண்டாடுவோம். வானிலை நன்றாக இருந்தால் காலாற ஒரு நடை செல்வோம். நானும் எனது மனைவி சாண்டியும் மலைப் பகுதி அல்லது கடற்கரையோரம் தினமும் 2 – 3 கி.மீ. நடை பயில்வோம். பொதுமுடக்கக் காலத்தில் அதை அனுபவித்த அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் ஏனென்றால் குறைவான மக்கள் நடமாட்டமும் வாகன நிறுத்துமிடங்கள் கார்களின்றியும் இருந்தன. மேலும் எனது அடுத்த நூலை எழுதுவதில் நான் தீவிரமாக உள்ளேன். அது பரிணாமம் பற்றியது, குறிப்பாக மனித இனத்தின் பரிணாமம். மனித இனம் வேகமாக பரிணாமம் அடைந்து வருகிறது. நாம் ஒரு பழங்குடி விலங்கில் இருந்து நகர விலங்காக மாறியுள்ளோம். பெரும்பாலான பூச்சிகளைப் பாருங்கள், அவை ஏற்கெனவே அந்தப் பாதையில் நுழையத் தொடங்கிவிட்டன. அதைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது.
*குவேக்கர் (Quaker): கி.பி.1650ல் ஜியார்ஜ் ஃபாக்ஸ் என்பவரால் அமைதிக் கொள்கையை பின்பற்றித் தொடங்கப்பட்ட நண்பர்களின் சமயக் குழு (Religious Society of Friends) அல்லது நண்பர்களின் திருச்சபை (Friends Church) எனப்படுவது ஒரு கிறித்தவ இயக்கம். மதத்தில் நம்பிக்கை உடைய எல்லாருக்கும் சமயகுருமார் ஆகும் தகுதி உண்டு என்னும் கொள்கையைக் கொண்ட ஓர் இயக்கம் இது. இச்சமய இயக்கத்தின் உறுப்பினர்கள் “நண்பர்கள்” (Friends) அல்லது “குவேக்கர்கள்” (Quakers) என்று அழைக்கப்படுகின்றனர்.
18 ஜூலை 2020 அன்று தி கார்டியன் இதழில், James Lovelock: ‘The biosphere and I are both in the last 1% of our lives’ என்ற தலைப்பில் வெளியான நேர்காணல்; நேர்கண்டவர் ஜோனாதன் வாட்ஸ்.
தமிழில் க.ரகுநாதன்