திரை (இந்தி) – இஸ்மத் சுக்தாய் ,தமிழில்- அனுராதா கிருஷ்ணா சாமி


வெள்ளை நிற படுக்கை விரிப்பு விரித்திருந்த அந்த கட்டிலில், நாரைகளை விடவும் அதிகமான வெள்ளை முடிகள் கொண்டவள் போலவும், அசிங்கமான ஒரு பளிங்கு மூட்டையைப் போலவும் பாட்டி கிடந்தாள். மையிட்ட தடம் மட்டும் மீதிருந்த அவளது ஒளியிழந்த கண்களில் வெண்மை படர்ந்திருந்தது. கனத்த திரைச்சீலைகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் ஜன்னல்களைப் போல அவை காட்சியளித்தன. கண்களைக் கூச வைக்கிற, சன்னமான வெள்ளி துகள்களால் சூழப்பட்டது போன்ற புனிதமான ஒளி வீசுகிற கன்னி தேவதையைப்போல அவளது முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இந்த 80 வயது கன்னி, எந்த ஆணின் கையும் படாதவள்.

பதின்மூன்று வயதில் இடுப்புக்கு கீழே விழுகிற கூந்தலும், பட்டுப்போன்ற மிருதுவான ஒளிரும் சருமமும் கொண்டவளாக, ஒரு பூங்கொத்தை போல அவள் இருந்தாள். காலம் அவளது இளமையை களவாடி இருந்தது. எச்சங்கள் மட்டுமே இப்போது மிஞ்சியிருந்தன. அவளுடைய அழகுக்காக அவளை யாரேனும் கடத்திக்கொண்டு போய் விடுவார்களோ என்று அவளுடைய பெற்றோர் இரவும் பகலும் தூக்கம் இன்றி தவித்தனர். சுற்றுவட்டாரத்தில் அவளுடைய அழகு மிகவும் பிரசித்தம். உண்மையிலேயே அவள் இந்த உலகில் பிறந்தவளாகத் தோன்றவில்லை. வானில் இருந்து நேராக கீழே இறங்கிய தேவதை போலவே இருந்தாள்.

பதினான்கு வயதில், என் அம்மாவின் மாமாவுடன் அவளது திருமணம் நிச்சயம் ஆகியது. மற்ற எல்லாவகையிலும் பொருத்தமாகவும் நேர்த்தியான தோற்றம் கொண்டவராக இருந்தபோதும், மாமா அட்டைக்கறுப்பு. இவளோ சிவப்பு. கத்தியைப் போல கீழே இறங்கும் கூர்மையான மூக்கு. இமைகளால் மறைக்கப்பட்ட, எப்போதும் விழிப்புடன் இருக்கும் விழிகள். முத்து வரிசை போன்ற பற்கள். ஆனாலும் தனது மைக்கறுப்பு நிறம் குறித்து மாமாவுக்கு தேவைக்கு அதிகமாகவே எரிச்சலும் தாழ்வு மனப்பான்மையும் இருந்தது.

 

திருமண நிச்சய நிகழ்வுகளில் எல்லோரும் அவரை கேலி செய்து கொண்டிருந்தனர்

“நீங்க வேணா பாருங்க, மாப்பிள கைபட்டதும் மணமகள் அழுக்காகிவிடப் போகிறாள்”

“சந்திரனை கிரகணம் பிடித்த மாதிரி”

காலு மாமா அப்போது பிடிவாதமும் முதிர்ச்சியற்ற புத்தியும் கொண்ட பதினேழு வயதுப்பையன். மனைவியாக வரப்போகிறவளின் அழகு குறித்த பேச்சுகளை எல்லாம் கேட்டு பயந்து போயிருந்த மாமா, இரவோடிரவாக ஜோத்பூரில் இருந்த தன் தாய் வழிப் பாட்டனார் வீட்டுக்கு ஓடிப் போய்விட்டார். அங்கு தன் நண்பர்களிடம் தனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று தயங்கித் தயங்கி சொல்லிப் பார்த்திருக்கிறார். மறுத்து எதுவும் பேச விடமுடியாது, அக்காலத்தில். நேராக அடிஉதையில் தான் இறங்குவார்கள். எந்த சூழ்நிலையிலும், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தி விட முடியாது. அது அந்த குடும்பத்தின் மீது காலகாலத்துக்கும் அறியாத களங்கத்தை சுமத்தி விடும்.

“மணமகளிடம் அப்படி என்னவாம் குறை? அவள் மிக அழகாக இருக்கிறாள் என்பது மட்டும்தானே? உலகமே அழகின் பின்னால் ஓடுகிறது, நீ என்னடாவென்றால் அழகோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாயே! என்ன ஒரு குரூரமான வேடிக்கை இது!”

“அவள் திமிர் பிடித்தவள்!”

“எப்படி தெரிந்தது?”

இதற்கு எந்த வலுவான சாட்சியமும் இல்லாதபோதிலும் அழகு எப்பொழுதும் திமிர் நிறைந்ததாகவே கருதப்படுகிறது. எவருடைய திமிரையும் பொறுத்துக் கொள்வது என்பது காலு மாமாவால் முடியாத காரியம். மூக்கின்மேல் எப்போதும் கோபம் உட்கார்ந்து கொண்டிருக்கும்.

 

உன்னை திருமணம் செய்து கொண்ட பின் அவள் உன் மனைவி ஆகிவிடுவாள்; நீ சொன்னால் அவள் பகலை இரவென்றும் இரவைப் பகலென்றும் ஒத்துக்கொள்வாள்; எங்கே உட்கார வைக்கிறாயோ அங்கேயே உட்கார்ந்து இருப்பாள், எழுப்பினால் எழுந்து நிற்பாள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாயிற்று.

இரண்டு மூன்று செருப்படிகளுக்குப் பிறகு காலு மாமாவை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து திருமணமும் செய்து வைத்தாயிற்று.

திருமணத்தில் பாட்டு பாடுவதற்கென அழைக்கப்பட்டவர்கள் கறுப்பு மணமகனையும் சிவப்பு மணமகளையும் பற்றிப் பாடினார்கள். காலு மாமாவை இது மிகவும் பாதித்தது. இது போதாதென்று, வந்திருந்தவர்களில் ஒருவர் குதர்க்கமான கவிதை ஒன்றை வேறு பாடி விட்டார். அவ்வளவுதான். கேட்கணுமா, மாமா கொந்தளித்துப் போனார். ஆனால் அவரது கொந்தளிப்பை யாருமே பொருட்படுத்தவில்லை. வேடிக்கை என்றே நினைத்து மேலும் மேலும் அவரை சீண்டிக்கொண்டேயிருந்தனர்.

மணமகன், உரையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட வாளைப் போல, நிராயுதபாணியாக மணமகளின் அறையை அடைந்த போது, பளபளக்கும் செக்கச்சிவந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமகளை பார்த்ததும் அவருக்கு வேர்வை ஒழுக ஆரம்பித்தது. அவளது பட்டு போன்ற வெண்ணிற கரங்களை பார்த்ததும் ரத்தம் தலைக்கேறியது. தன்னுடைய கறுப்பை இந்த வெண்ணிறத்தில் கலந்து எப்படியாவது எல்லா வித்தியாசங்களையும் ஒரேயடியாக ஒழித்துவிட முடியாதா என்றுகூட யோசித்தார்.

நடுங்கும் கரங்களால் மணமகளின் முகத்திரையை விலக்க முயன்ற போது மணமகள் குனிந்து கொண்டாள்

“சரி, நீயாகவே உன் முகத்திரையை விலக்கிக் கொள்”

மணமகள் தன் தலையை இன்னும் கொஞ்சம் தாழ்த்திக் கொண்டாள்

“முகத்திரையை அகற்று” காலு மாமா அதிகாரமாக அதட்டினர்.

மணமகள் இப்போது பந்து போல சுருண்டு கொண்டாள்.

 

“அவ்வளவு திமிரா உனக்கு?”. மணமகன் செருப்பை கழற்றி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு தோட்டத்து பக்கம் திறக்கிற ஜன்னல் வழியாக வெளியே குதித்து நேராக ஸ்டேஷன் வந்தடைந்தார். அங்கிருந்து ஜோத்பூர்.

அப்போதெல்லாம் விவாகரத்து என்பது வழக்கத்தில் கிடையாது. ஒரு முறை திருமணம் நடந்து விட்டால், திருமண பந்தத்தை விட்டு அவ்வளவு சுலபமாக வெளியேறிவிட முடியாது. மாமா ஏழு வருடங்கள் வீட்டை விட்டு வெளியே இருந்தார். ஆனால் தன் தாயாருக்கு மாதந்தவறாமல் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். அவரது மணப்பெண் கோரி பீ, பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையே பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டி ருந்தாள். குடும்பத்துப் பெண்களுக்கு மணமகள் கைபடாதவள் என்பது தெரிந்திருந்தது. இந்த விஷயம் வீட்டு ஆண்களையும் எட்டியது. காலு மாமாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

“அவள் திமிர் பிடித்தவள்!” மாமா அறிவித்தார்

“உனக்கு எப்படி தெரியும்?”

“நான் அவளிடம் முகத்திரையை அகற்ற சொன்னதை அவள் மதிக்கவில்லை”

“முட்டாளே, மணமகள் தன் முகத்திரையை தானாகவே விலக்க மாட்டாள் என்பது உனக்குத் தெரியாதா? நீயாகவே ஏன் திரையை விலக்கவில்லை?”

“முடியாது. நான் சபதம் செய்து விட்டேன் .தன் முகத்திரையைத் தானே விலக்கிக்கொள்ள முடியாதெனில் அவள் நரகத்துக்குப் போகட்டும்.”

“மணமகளைத் தானாகவே தன் முகத்திரையை விலக்கச் சொல்லிக் கேட்டது உன் வடிகட்டின முட்டாள்தனம். நீ ஆண்மையற்றவன்! மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றுக்கான முயற்சிகளையும் மணமகள் தானாகவே எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாயா என்ன! எத்தகைய பைத்தியக்காரத்தனமான எண்ணம் இது!

 

“மணமகன் கையால் கூட தொட முடியாதபடி எங்கள் குழந்தை அப்படி என்ன குற்றம் செய்து விட்டாள்? இப்படிப்பட்ட ஒரு அநியாயத்தை இதுவரை யாரேனும் பார்த்ததுண்டா கேட்டதுண்டா” என்று கோரி பீயின் பெற்றோர் தங்கள் ஒரே மகளின் துக்கத்தில் கரைய ஆரம்பித்தனர்.

காலு மாமா தன் ஆண்மையை நிரூபிக்க விபச்சார விடுதிகளிலும் வயது பையன்களுடன் ஊர் சுற்றுவதிலும் நேரத்தைச் செலவழித்தார். சேவல் சண்டை, புறாச்சண்டை போன்ற எதையும் விட்டுவைக்கவில்லை. கோரி பீ திரைக்குப்பின் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தாள்.

பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், ஏழு வருடங்களுக்குப் பின் காலு மாமா வீடு திரும்பினார். இந்த வாய்ப்பை வாராது வந்த அதிர்ஷ்டமாக கருதி மறுபடியும் அவரை மனைவியுடன் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் காலு மாமா தன் தாயாரின் மீது சபதம் செய்துவிட்டதாகவும் முகத்திரையை விலக மாட்டேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

“பார் மகளே, இந்த பிரச்சனை உன் வாழ்நாள் முழுவதையும் பாதிக்கக் கூடும். வெட்கம் மானம் எல்லாவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, நீயாகவே உன் முகத்திரையை விலக்கிக் கொள். இதில் வெட்கப்பட எதுவும் இல்லை. அவன் உன் கணவன் தானே. இதுதான் கடவுளின் சித்தம். .அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவது உன் கடமையுமாகும் .அவன் உன் கணவன் . அவனுடைய ஆணையை ஏற்றுக் கொள்வதிலேயே உன் நலனும் அடங்கியிருக்கிறது” என்று எல்லோரும் கோரி பீக்கு புத்திமதி சொன்னார்கள்.

மறுபடியும் ஒருமுறை மணமகள் அலங்கரிக்கப்பட்டாள். மணவறை அலங்கரிக்கப்பட்டது. பிரியாணியும் இனிப்பு வகைகளும் சமைக்கப்பட்டன. மணமகன் மணவறைக்குள் தள்ளப்பட்டான். இப்போது கோரி பீ காண்போர் மயங்கும் இருபத்தொரு வயது அழகி. உடல் முழுவதும் இளமையும் பெண்மையும் முழுப்பொலிவுடன் பூரித்துப் கொண்டிருந்தன. கனத்த இமைகளுக்கும் பின்னால் நீரோட்டம் மிக்க கண்கள். தீர்க்கமான மூச்சு. இக்கணத்தைப் பற்றிய கனவிலேயே ஏழு வருடங்களாக காத்திருந்தாள் கோரி பீ. ஒத்த வயதுடைய பெண்கள் பற்பல ரகசியங்களை பற்றி ஏற்கனவே கூறியிருந்ததால் இதயம் வேகமாகப் துடித்துக் கொண்டிருந்தது. மருதாணியால் அலங்கரிக்கப்பட்ட மணமகளின் கைகளையும் கால்களை பார்த்ததுமே மாமாவின் உணர்ச்சிகள் அடங்க மறுத்தன. அவர் எதிரில் அவரது மணப்பெண் அமர்ந்திருந்தாள். பதினான்கு வயது மொட்டல்ல, முழுவதுமாக மலர்ந்த நிறைந்த பூச்செண்டு. இச்சை அவரை உருக்க ஆரம்பித்தது. இன்று நிச்சயம் ஏதேனும் அதிசயம் நிகழக்கூடும். அனுபவமிக்க அவரது உடல் வேட்டைப்புலி தன் இரைக்காக காத்திருப்பது போல முறுக்கேறிக் கிடந்தது. அவர் இதுவரை மணமகளின் முகத்தை ஒரு முறை கூட பார்த்திராவிடினும், இந்த முகம் பிற பெண்களுடன் இருக்கும் போது கூட அவரை சித்திரவதை செய்து கொண்டிருந்தது.

“உன் முகத்திரையை விலக்கு”

எதிர்ப்புறம் சிறு அசைவு கூட இல்லை.

“முகத்திரையை தயவு செய்து அகற்றி விடு” தழுதழுத்த கண்ணீர் மல்கும் குரலில் காலு மாமா வேண்டினார்.

மௌனம் தொடர்ந்தது. மணமகளின் சுண்டு விரல் கூட அசையவில்லை.

“நான் சொல்வதைக் கேட்காவிட்டால் இனி ஒருபோதும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன்”

மணமகள் சிறிது கூட சலனமில்லை.

காலு மாமா படுக்கையறையிலிருந்த ஜன்னலை தன் முஷ்டியால் குத்தித் திறந்தார். தோட்டத்துப் பக்கம் குதித்தார்.

அந்த இரவுக்குப் பிறகு அவர் அவளிடம் திரும்பவே இல்லை.

கை படாத கோரி பீ முப்பது ஆண்டுகள் அவருக்காக காத்திருந்தாள். ஒருவர் பின் ஒருவராக குடும்பத்துப் பெரியவர்கள் எல்லோரும் போய் சேர்ந்தார்கள். வயதான ஒரு சித்தியுடன் அவள் பதேபூர் சிக்ரியில் வாழ்ந்து வரும்போது தன் மணமகன் திரும்பி வருவது குறித்து அவளுக்கு சேதி வந்தது.

 

காலு மாமா, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி விட்டு பல்வேறு வியாதிகளை வரவழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். கோரி பீயை வீடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போதுதான் தான் நிம்மதியாக இறக்க முடியும் என்றும் அவர் நம்பினார்.

செய்தி கிடைத்ததும் கோரி பீ அருகிலிருந்த தூணில் சாய்ந்து சிலைபோல வெகுநேரம் அசைவின்றி நின்று கொண்டிருந்தாள். பின்னர் பெட்டியைத் திறந்து நட்சத்திரங்கள் பதித்த தன் திருமண உடையை வெளியே எடுத்தாள். பாதி வெளுத்திருந்த தன் முடிகளில் நறுமண எண்ணெயை பூசிக் கொண்டாள். முகத்திரையை பிடித்தபடி மெதுவாக நோயாளியின் தலைமாட்டின் அருகே சென்று நின்றாள்.

“முகத்திரையை அகற்று” மாமாவின் தழுதழுத்த குரல் கேவலுடன் கெஞ்சியது.

கோரி பீ யின் நடுங்கும் கரங்கள் முகத்திரைக்கு அருகே சென்று பின் சடாரென கீழே விழுந்தன.

கால் மாமாவின் மூச்சு நின்றிருந்தது.

கோரி பீ அங்கேயே அமைதியாக உட்கார்ந்து கொண்டு கட்டிலின் கால்களில் அடித்து தன் வளையல்களை உடைத்து போட்டாள். முகத்திரையை அகற்றி விட்டு, விதவைகளின் அடையாளமான வெள்ளை துப்பட்டாவால் தன் தலையை மறைத்துக் கொண்டாள்.

 

 

அனுராதா கிருஷ்ணா சாமி.

இஸ்மத் சுக்தாய் குறிப்பு

இஸ்மத் சுக்தாய் உருது இலக்கிய பெண் ஆளுமை. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் 1915-ஆம் ஆண்டு பிறந்தவர். தனக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்திலிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்து, பெற்றோர்களின் தடையையும் மீறி கல்வி கற்றார். பட்டப்படிப்பும் ஆசிரியர் பயிற்சி படிப்பையும் முடித்தார்.

இவரது முதல் சிறுகதை லிஹாப் மூலம் 1941-இல் உருது இலக்கியத்தில் அறிமுகமானார். ஒரு சிறுமியின் பார்வையில் தனிமையில் வாடும் நவாபின் மனைவிக்கும் அவரது பணி பெண்ணுக்கும் இடையிலான ஓரின உறவு பற்றிய கதை அது. ஆபாசமான கதை என இதை எதிர்த்து லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இரண்டு ஆண்டுகள் இழுத்தடித்த பின் தள்ளுபடி செய்யப்பட்டது

மற்ற எழுத்தாளர்கள் தொடத் தயங்கிய பாலியல் தொடர்பான சிக்கல்களையும் பெண்களின் பாலியல் தேர்வுகளையும் இஸ்மத் தன் படைப்புகளில் அழுத்தமாக பதிவுசெய்தார்.

பத்மஸ்ரீ விருது, குடியரசுத் தலைவர் விருது போன்ற பல விருதுகளை பெற்ற சுக்தாய் 1991-இல் தனது எழுபத்திமாறாம் வயதில் மும்பையில் காலமானார்.

 

1 COMMENT

  1. நல்ல சிறுகதை. எல்லா கால கட்டத்திலும் ஆணாதிக்க சமூகம் பெண்களை புரிந்து கொள்ளாமல் அதிகாரப் போக்குடன் இருப்பதை இஸ்மத் கூறியிருக்கிறார். காலு தன்னுடைய தாழ்ச்சி மனப்பான்மையால் கோரி பீயை புரிந்து கொள்ளாமல் அதிகாரம் செய்கிறார். ஆனால் கோரி பீ ஒரு போதும் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ள வில்லை. ஏன் ஆண் -பெண் உறவு சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாமல் கசந்து போய் இருக்கிறது? கோரி பீ காலு மாமா என்றேனும் வருவார் தன்னை புரிந்து கொண்டு வருவார் என முப்பத்தாண்டுகளாக காத்திருக்கிறாள். அவளின் அன்பின் நேர்மையை காலு ஏன் புரிந்து கொள்ளாமல் ஊ தாரி த்தனமாக வாழ்க்கையை வீணாக்கி நோயுண்டு இறந்து போக வேண்டும்?. கோரி பீ அந்த கால கட்டத்து சம்பிரதாயங்களை அனுசரித்து அந்த கட்டுப் பாடுகளை மீறாமல் இருக்கிறாள். ஆனால் காலு மாமா மட்டும் சுதந்திரமாக சுற்றி அலை கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கேடு கெட்ட சமூகம் ஏன் பெண்களை கட்டுபாடுகளுக்குள் மட்டுமே வைத்திருக்க வேண்டும். கோரி பீ காலுவை புரிந்து கொண்டு திரையை விலக்கிஇருக்கலாம். அன்பை விட முக்கியம் வேறெதுவும் இல்லை தானே? காலு மாமா கூட கோரி பீ யின் உணர்வுகளை புரிந்து கொண்டு தன் கோபத்தை அகங்காரத்தை விட்டிருக்கலாம். ஆனால் அந்த காலகட்ட சமூகம் பாம்பாட்டி பாம்பை மகுடி ஊதி மயக்குவதை போல ஆண்களையும் பெண்களையும் மடத்தனமான கருத்துக்களை கொண்ட அமைப்பிற்குள் சிக்க வைக்கவே முயல்கிறது. அன்பின் பொருட்டு யார் யாருக்காக மாறுகிறார்கள் என்பதுதான் முக்கியம். கோரி பீ காலு மாமா விற்காக மாறிஇருக்கலாம். காலு மாமா கோரி பீ ற்க் காக விட்டு க் கொடுத்திருக்கலாம். கேடுகெட்ட சமூகம் கேவலமான கட்டுக் கோப்புகளை கூறி இருவரையும் சிதைத்து விட்டது. ஆனால் அந்த மரபை அவர்கள் உடைத்து அன்பாக வாழ்ந்து காட்டிஇருந்தால் நல்ல மாற்றமாக இருக்கும். திரை என்பது மறைக்க மட்டும் தான் . யாரையும் அடைத்து வைக்கும் சிறை அல்ல. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.