பாரம் – நாச்சியாள் சுகந்தி


லூர்துமேரி வாசலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மதிய நேரம் என்பதால் தெரு அமைதியாக இருந்தது. கறுப்பு நிறத் தெருநாய் ஒன்று வாயில் எதையோ கவ்விக்கொண்டு போனது. தூரத்தில் ’நாலு தேங்கா நூறு ரூவா’ என ஒரு குரல் தேய்ந்து கொண்டே போனது. பக்கத்து வீட்டு  சிவபக்தர் மதிய நேரத்திலும் ’நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க’ என ஸ்மார்ட் டிவியில் திருவாசகத்தை சத்தமாக ஒலிக்கவிட்டிருந்தார். இது எதுவுமே லூர்துமேரி மனதில் பதியவில்லை. ’மகன் வந்ததும் இந்த செய்தியைச் சொன்னால்தான் சாப்பிடவே முடியும்’ என்பதுபோல் பசிக்கும் வயிற்றை அடிக்கடி தண்ணீர் குடித்து தன் மனச்சூட்டைக் குறைத்தாள். வழக்கமாக மதிய சாப்பாட்டுக்கு இரண்டு மணிக்குள் வந்துவிடும் மகன் பீட்டர் கிறிஸ்டோபர், மூன்று மணியாகியும் வராமல் இருப்பது, லூர்து மேரிக்கு பதற்றத்துக்குப் பதில் எரிச்சலைத்தான் தந்தது. ’நாம ஏதாச்சும் சொல்லனுனு நெனைக்கிறப்பத்தான் டைமுக்கு வரமாட்டான்’ என முணுமுணுத்தாள். சுவற்றில் இருக்கும் தேக்குச் சட்டத்தினாலான கடிகாரத்தை பதினாறாவது முறையாகப் பார்த்துவிட்டு மீண்டும் வாசலைப் பார்த்தாள். அப்போதும் பீட்டர் கிறிஸ்டோபர் வரவில்லை.

காலையிலிருந்து இந்த செய்தியை சொல்லவேண்டும் என துடித்துக்கொண்டிருக்கும் லூர்துமேரிக்கு பசியில் அழுகையும் கோபமும் ஒருசேர வந்தது. பசி அதிகமானதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து உடம்பு பதற்றமடைந்து வியர்த்தது. முகத்திலும் கழுத்திலும் வடிந்த வியர்வையை புடவை முந்தானையால் துடைத்தாள். “ம்ம்ம்ம்… இந்த புடவ தான் அவர் கடைசியா வாங்கிக்கொடுத்தது. வீட்டுல இருந்து கார்லயே  மெயின்கார்டுகேட் போய் அங்க சாராதா சில்க்ஸ்ல இந்த புடவையோட சேர்த்து ஐஞ்சு புடவ வாங்கிக்கொடுத்தாரு. மைக்கல்ஸ்ல ஐஸ்கிரிம் வாங்கிக்கொடுத்து, ’இன்னும் சின்னப்புள்ள மாதிரியே வாயெல்லாம் இழுப்பிட்டு சாப்பிடு’ன்னு சொல்லி அவர் கர்சீப்பில வாயத் தொடச்சி விட்டார். யாருக்குத் தெரியும் அவரு இம்புட்டு சீக்கிரமா கர்த்தர்கிட்ட போவாருன்னு” என மனதுக்குள் பேசியபடியே கண்களில் தன்னையறியாமல் வடிந்த நீரை துடைத்தாள். அந்த நேரத்தில் மிகச் சரியாக பீட்டர் கிறிஸ்டோபர் உள்ளே நுழைந்தான். மகன் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்ததும் மீண்டும் ஒருமுறை கண்களைத் துடைத்துக்கொண்டு பீட்டர் கிறிஸ்டோபரை நோக்கி ஓடாத குறையாக நடந்தாள் லூர்துமேரி. 

அம்மா வேகமாக நடந்து வருவதைப் பார்த்த பீட்டர் கிறிஸ்டோபர் ஹாலுக்குள் நுழையாமல் வராண்டாவிலேயே பதற்றத்தோடு நின்றான். அவனருகில் வந்த லூர்துமேரி, மகன் கைகளைப் பிடித்து வாசலுக்கும் வராண்டாவுக்கும் இடையில் நின்றாள். அவள் பார்வை முழுதும் மருமகள் ஷீபா இருக்கும் படுக்கையறையை நோக்கியே இருந்தது. இந்த விஷயத்தை பேசும்போது மருமகள் வந்துவிடக் கூடாது என்கிற பயம் அவள் உடல்முழுதும் பூச்சி ஊர்வதுபோல ஊர்ந்துகொண்டிருந்தது. ’இந்த இடத்தில் நின்றால்தால் அவள் பெட்ரூமில் இருந்து வந்தாலும் கண்ணில் படாது’ என முடிவுசெய்த லூர்துமேரி மகனைப் பார்த்து கண்களை விரித்து, “டேய் பீட்டரு உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ’அவங்க’ திருவெறும்புர்ல கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வேலைக்கு போறாங்களாம். அங்க பொருளெல்லாம் வெயிட் போட்டு பாக்கெட் போடுற வேலையாம். நம்ம வீட்டுல வேல செய்யிறாளே கற்பகம், அவ அம்மா இன்னிக்கு வீடு தேடிவந்து என்கிட்ட சொல்லிட்டு போறா. அந்த பொம்பளயும் அங்கதான் வேல பாக்குதாம். இதக் கேட்டதுல இருந்து எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. ஆனா நாம என்ன செய்ய முடியும் சொல்லு? அவங்க தலையெழுத்து… யார் தலையெழுத்த யார் மாத்த முடியும்? அறுவது வயசுல வேல செஞ்சு உயிரக்  காப்பாத்திக்கனும்னு ’அவங்க’ இருக்கு. அதுக்கு நாம என்ன செய்ய முடியும் பீட்டரு. ஆனா விஷயத்தக் கேக்கும்போது மனசுக்கு ரொம்ப  கஷ்டமா இருந்துச்சு. நாம என்ன பண்ண முடியும்? கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ளயா வச்சிக்க முடியும்? அப்படி பண்ணினா ஊர் ஒலகம் நம்மள காறித்துப்பாது. சரி.. சரி.. யார்கிட்டயாவது பொலம்பனும்னு தோணுச்சி. எனக்கு ஒன்னவிட்டா வேற யார் இருக்கா பொலம்ப… அதான்” என கடகடவென சொல்லிவிட்டு மகனின் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் சமையலறை நோக்கி நகர்ந்தாள் லூர்துமேரி

அம்மாவும் மகனும் ரகசியமாகப் பேசுவதை பார்த்தும் பார்க்காதது போல ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்பது போல் பாவனை செய்தாள் ஷீபா. ஹாலுக்குள் நுழைந்த பீட்டருக்கு ஷீபா அங்கு இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் ஷீபாவைப் பார்த்துச் சிரித்தான். அவனை மிகவும் நக்கலாகப் பார்த்த ஷீபா, “பீட்டர் ரொம்ப வழியுது. தொடச்சிக்கோங்க” என்றாள். 

“ஷீபா ஒண்ணப் பத்தி எதுவும் பேசல, நாங்க” என்று சொல்லி வாய் மூடுவதற்குள், “அதுதான் எனக்கும் தெரியுமே. ஊருக்கே தெரிஞ்ச ரகசியம், எனக்கு மட்டும் தெரியாமயா போயிடும். என்ன ’அந்தம்மா’ திருவெறும்பூர்ல டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வேலைக்குப் போறாங்க. அதான மகனும், அம்மாவும் பேசின ரகசியம்” என்று சொல்ல பீட்டரின் முகம் தர்மசங்கடத்தில் நெளிந்தது. 

“உங்கம்மாகிட்ட சொல்றவங்க எங்கிட்ட சொல்லமாட்டாங்களா? இந்த வீட்டுக்குள்ள தான நானும் இருக்கேன். பாவம்… அந்தம்மா ஒரு ஏமாளி. ’அந்தம்மாவும்’ ஒரு பீட்டர் அல்போன்ஸையோ, ஜெனிபர் கிளாராவையோ பெத்திருந்தா ’அந்தம்மா’ ஏன் வயசான காலத்துல டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு வேலைக்குப் போகப் போறாங்க. உனக்கு ஒரு உண்மை தெரியுமா? அவங்க ரெண்டுமுறை திருவெறும்பூர் கவர்மெண்ட் ஹெல்த் சென்டர்லதான் அபார்ஷன் பண்ணினாங்களாம். அப்ப அங்க பொன்மணி ஆன்ட்டி டாக்டர். எங்கம்மா நர்ஸ். நீ வேணா பொன்மணி ஆன்ட்டி கிட்ட  கேட்டுப்பாரு. உங்கப்பாவும், அம்மாவும் என்ன சர்ச்சுல பார்த்து எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்ட அன்னிக்குத்தான் இதெல்லாம் எங்க அப்பாகிட்ட எங்க அம்மா சொன்னாங்க. நானும் அப்ப அங்க இருந்தேன். இப்படி ஒரு குடும்பத்துக்கு எப்படி பொண்ணு கொடுக்குறதுன்னு எங்கம்மா ரொம்ப தயங்குனாங்க. எங்க அப்பாதான், பீட்டர் ரொம்ப நல்ல பையன்னு சொல்லி எந்தலையில உன்னக் கட்டினாரு” என்று சொன்னது பீட்டருக்கு அவமானமாக இருந்தது. அப்பாவின் அந்தரங்க விஷயங்கள் தன் மனைவிக்கு தெரிந்துவிட்டதே என்கிற அவமானம் பீட்டரை தின்றது.  

அவன் மனதுக்குள், “இதையெல்லாம் மனசுல வச்சிகிட்டுத்தான் இவ நம்மள அப்பப்ப குத்திக்காட்டுனாளோ?” என நினைத்தபோது அவனுக்கு பற்றியெறியும் வனாந்திரத்துக்குள் நிற்பதுபோல இருந்தது. அப்பா செய்த காரியத்துக்கு இவள் முன்னாடி நான் குற்றவாளியாகி சிலுவையில் தொங்கவேண்டியுள்ளதே என்பதுபோல் நிற்பதா, சுவற்றில் சாய்வதா என யோசித்துக் கொண்டிருந்தபோது ஷீபா எறிகணைகளை தொடர்ந்தாள். “உங்கம்மாவுக்கு வீட்டுக்கு கட்டுறதுக்குக் கூட ஐந்நூறு ரூபாவுக்கும் குறைவில்லாத விலையில சேல. காலையில பத்துமணியில இருந்து நைட்டு பத்துமணி வரைக்கும் ஸ்மார்ட் டிவில சீரியல், ராஜஸ்தான்ல இருந்த வந்த மார்பிள் தரை, பத்து சென்ட்ல வீடு, ஏசி கார்…. பாவம் ’அந்தம்மா’, ஓட்டுவீடு, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல தினக்கூலிக்கு வேல. எல்லாம் தலையெழுத்தா? என்ன சொல்றதுன்னே தெரியல” என இத்தனை நாள் மாமியார் மீது இருந்த கோபத்தையெல்லாம் நெருப்பு வார்த்தைகளாக்கி அவற்றை பீட்டரின் மேல் ஈவுஇரக்கம் இல்லாமல் எறிந்துவிட்டுப் போனாள். 

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது என தெரியாமல் நின்றபடியே சுவற்றில் மாட்டியிருந்த அப்பாவின் போட்டோவைப் பார்த்தான் பீட்டர். தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடியுடன் சிரித்துக்கொண்டிருந்தார். எல்.ஈ.டி பல்ப் மாலை மினுங்கிக்கொண்டிருந்தது. 

மனதுக்குள் குழப்பமும் எரிச்சலும் கோபமுமாக இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் ஹாலில் இருந்த சோஃபாவில் படுத்தவன் தன்னையறியாமல் உறங்கினான். 

அவன் முழித்துப் பார்த்தபோது மணி ஐந்தரையாகியிருந்தது. எழுந்தவன், குளித்துவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான். 

காரை மெயின் கார்டு கேட் ஜோசப் காலேஜ் அருகில் நிறுத்திவிட்டு, கடைத்தெருவுக்குள் நுழைந்தான். “இந்த பஜாரில் ஏன் எப்போதும் இத்தனை கூட்டம்… மக்கள் தினம் தினம் எதைத்தான் இங்கு வந்து வாங்குவார்கள் என யோசித்தவன், நம் மக்களுக்கு இப்போது பார்க்கும் பொருள்மீது எல்லாம் ஆசை வந்துவிட்டது. வீட்டுக்கு தேவையோ இல்லையோ, பார்ப்பதையெல்லாம் வாங்கிக் குவித்துவிடுகிறார்கள். இதில் பெரியவங்க, சின்னவங்கன்னு எந்த வேறுபாடும் இல்ல. பொருளா வாங்குறாங்க, ஹோட்டல் ஹோட்டலா சாப்புடுறாங்க. அப்புறம் ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலையுறாங்க” என்று சம்பந்தமில்லாமல் யோசித்துக்கொண்டே சாரதாஸ் வாசலுக்கு வந்தான்.

சாரதாஸில் எப்போதும் போல் அன்றும் கூட்டம் அலைமோதியது. இவன் நேராக புடவை செக்‌ஷனுக்கு போனான். அங்கு கூட்டமில்லாமல் இருந்த கவுண்டரில் போய், “சுங்குடி காட்டன் சேலை காட்டுங்க” என்றான்.

அந்த கவுண்டரில் இருந்த பெண், அலமாரியில் இருந்த அத்துணை புடவைகளையும் அவனுக்கு முன்பாக அடுக்கினாள். அவன் ஒவ்வொன்றாகப் பார்த்து நான்கு புடவைகளை எடுத்தான். அந்த பெண் “போதுமா சார்?” என்றாள்.

இவன் போதும் என்பது போல தலையாட்டினான். அந்த ஏசியிலும் இவனுக்கு ஏனோ வியர்த்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ‘அந்தம்மா’வையும் அப்பாவையும் முதன்முதலாக திருவெறும்பூர் சாந்தி தியேட்டர் அருகே பார்த்தது நினைவுக்கு வந்தது. அப்போது அந்தம்மா நீலக்கலரில் வெள்ளைப்புள்ளிகள் போட்டிருந்த சேலையைக் கட்டியிருந்தார். அது மதுரை சுங்குடிச் சேலைதான். கழுத்தில் இரட்டை வடம் செயினும் கையில் கல்பதித்த வளையல்களும் போட்டிருந்தார். அப்போது பீட்டருடன் கூட வந்த அவன் தங்கை பியூலா, “அண்ணா, அங்க பாரு! நம்ம அப்பா!” என கத்தாத குறையாகச் சொன்னாள். உடனே, “அண்ணா அப்பா கூட போறது யாரு?” என பியூலா கேட்க, கொஞ்சம்கூட யோசிக்காமல், “அது வந்து… அவங்க நம்ம கடையில வேலை செய்யறவங்க” என்றான். அப்படி பொய் சொன்னதுக்காக அந்த வாரம் சர்ச்சில் அழுதழுது கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டான். கடவுள் யாரை மன்னித்தார் என தெரியவில்லை. 

பீட்டர் பதினொன்றாவது படிக்கும்போது, அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ‘அந்தம்மா’ குறித்து வாக்குவாதம் வந்தபோது, “அவங்க என்ன மாதிரியில்ல… படிச்சிருக்காங்க. உங்க கடை கணக்குவழக்கெல்லாம் பார்த்துத் தருவாங்க. நீங்க செய்யிற வேலைக்கெல்லாம் ஐடியா தருவாங்க. ஆனா நான் அப்படியா… படிக்காதவ. கல்லணையில எங்க வீட்டுல மாட்டப் பாத்துக்கிட்டு, சோறாக்கி சட்டிப்பான கழுவிட்டு இருந்தேன். இங்கயும் அதத்தான் பண்றேன். என்ன மாடு கன்னு இல்ல” என்று சொல்லி அழுதது, பீட்டருக்கு நினைவுக்கு வந்தது. 

சாரதாஸிலிருந்து பீட்டர் வெளியே வந்தபோது, “பீட்டர் பீட்டர்” என கத்திக்கொண்டே பின்னால் ஒருவன் ஓடிவந்தான். பீட்டரின் அருகில் வந்து உரிமையுடன் அவன் தோள்மீது கை போட்டு, “ஏய் என்ன மாப்பிள… பார்த்துட்டு பாக்காத மாதிரி போற?” என்றான்.  

“ஏய் சுபாஷ் நெஜமா உன்ன பாக்கலடா” என்றான் சிரித்துக்கொண்டே. “சரி வீட்டுக்குத்தான போற… வா நான் உன்ன டிராப் பண்றேன்” என்று சொன்னவன், சுபாஷை தன்னுடன் அழைத்து வந்து காரில் ஏறினான்.

“என்ன பீட்டர் நீனு, உங்கப்பா எறந்ததுக்கு அப்புறம் ஆளே மாறிட்டடா.  இப்பவெல்லாம் ஃபிரண்டஸையெல்லாம் பாக்க திருவெறும்பூர் வர்றது இல்ல. மொத்தமா காட்டூர் ஆளாவே மாறிட்டியா” என்றான். அப்போது கார், காந்தி மார்க்கெட்டை தாண்டுவதற்கு திணறிக் கொண்டிருந்தது. வழியெங்கும் சரக்கு இறக்க வந்த லாரிகளும், பேருந்துகளும், கார்களுமாக மொத்த சாலையும் மூச்சடைத்து நின்றது.

“இந்த ரோட்ட எப்பத்தான் சரி பண்ணுவாங்களோ, நாம கொழந்தையா இருக்குறதுல இருந்து இந்த ரோடு இப்படித்தான் டிராபிக்கா இருக்கு இல்ல… சரி.. நீனு ஏண்டா இப்பவெல்லாம் டென்னிஸ் விளையாடுறதுக்கு கூட வர்றதில்ல. நீனு என்ன, என்ன மாதிரி, வேலைக்கு போனாத்தான் சம்பளம்ங்கிற நெலமையிலா இருக்குற. உங்கப்பா எந்தக்கட்சி ஆட்சியில இருந்தாலும், எல்லாரையும் கரெக்ட் பண்ணி  பி.டயிள்.யூ. ஆபீஸ்ல  எல்லா காண்ட்ராக்டையும் வாங்கி ஒனக்கு சொத்து சேர்த்து வச்சிட்டாரு. ஒன் தங்கச்சியையும் சூப்பரா நல்ல எடத்துல கட்டிக்கொடுத்துட்டாரு. அப்பறமும் ஏண்டா வேல வேலன்னு சுத்துற?” என்றான்.

பீட்டருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் கார் கூட்டத்தில் திணறித்திணறி பால் பண்ணையைத் தொட்டிருந்தது. பீட்டர், சுபாஷின் கேள்விகளுக்கெல்லாம் சிரிப்பையே பதிலாகக் கொடுத்துக் கொண்டிருந்தான். அரியமங்கலம் தாண்டியதும் கார் வேகம் எடுத்து காட்டூரை நெருங்கியது. காட்டூரில் அம்மன் நகரில் மெயின் ரோட்டிலேயே பீட்டரின் வீடு. இருபது வருடங்களுக்கு முன்பு பீட்டரின் அப்பா ஜேம்ஸ், பதிமூன்று சென்டில் இடம் வாங்கி, அதில் பத்து சென்டில் பல லட்சங்களைக் கொட்டி வீடு கட்டினார். இன்று அந்த வீடு பல கோடிகளுக்கு போகும். வீடு முழுவதும் மார்பிள் கற்கள் பதிக்கப் பட்டிருந்தது. கேட்டிலிருந்து வீட்டு வாசல்படி வரை, கூழாங்கற்களை ஜேம்ஸ் பதித்திருந்தார். அந்த வீட்டை பார்த்துப் பார்த்து மிக ரசனையாக கட்டியிருந்தார். வீட்டைச் சுற்றி தோட்டம். அதில் தென்னை மரம், மாமரம், கொய்யா மரம் என சின்ன பழத்தோட்டத்தை உருவாக்கியிருந்தார். வீட்டுக்கு பின்புறம் முருங்கை மரம், வாழை, மூலிகை பயிர்கள் என உருவாக்கியிருந்தார். ஜேம்ஸ் இருந்தவரைக்கும் மரங்களுக்கும் செடிகளுக்கும் அவர்தான் காலையில் தண்ணீர் விடுவார். வீட்டின் முகப்புச் சுவரை மார்பிள் கற்களாலேயே அலங்காரமாகக் கட்டியிருந்ததால் அந்த வீட்டுக்கு மார்பிள் வீடு என்பதே பெயரானது. ஷீபாவின் அப்பா, இந்த மார்பிள் வீட்டையும் கணக்குப் போட்டுத்தான் பீட்டருக்கு தன் பெண்ணைக் கட்டிக்கொடுத்தார். 

பீட்டரின் கார், அம்மன் நகருக்கு போகாமல் நேராகச் சென்றது. வேகமாகச் செல்லும் பீட்டரைப் பார்த்த சுபாஷ், ’என்ன இவன் வீட்ட்டுக்கு போகாம வேற எங்கயோ போறானே’ என்கிற பதற்றத்திலும் குழப்பத்திலும் “என்ன பீட்டர் வீட்டு வழிய மறந்துட்டியா, இல்ல… உங்க பழைய வீட்டுக்கு திருவெறும்பூருக்கு போறியா?” என கிண்டலாகக் கேட்டு சிரித்தான். 

அவன் கிண்டலாகக் கேட்கிறான் என தெரிந்தும் “ஆமாம் சுபாஷ், பழைய வீட்டுக்குத்தான்” என்றவன் திருவெறும்பூர் மெயின் ரோட்டிலிருந்து நவல்பட்டு போகும் சாலையில் காரை இறக்கினான். வண்டி மெதுவாகப் போனது. பீட்டருக்கு பழைய வீடு நெருங்க நெருங்க பதற்றமாகவும் மனதில் பாரத்தை யாரோ தூக்கி வைத்தது போல் இருந்தது. உடம்பே சட்டென கனமானது போல உணர்ந்தான். வயிறு லேசாக நடுங்குவது போல அவனுக்குத் தோன்றியது. 

காரை பழைய ஓட்டு வீடு முன்பு நிறுத்தினான். காரிலிருந்து இறங்கி  நடந்தான். அந்த வீட்டின் வாசல் கதவு திறந்திருந்தது. திண்ணையில் ஒரு அட்டைப்பெட்டி இருந்தது. வாசலுக்கு நேரே சுவற்றில் அவன் அப்பாவின் போட்டோ மாட்டப்பட்டு இருந்தது. அதில் அவன் அப்பா முன்பற்கள் கொஞ்சம் தெரிய சிரித்திருந்தார். அது அவர் கண்ணாடி போடாத இளமை காலத்தில் எடுத்தது. அவர் சட்டைப் பாக்கெட்டில் ஹீரோ பேனா சொருகியிருந்தது. தலையில் அடர்த்தியான சுருட்டை முடி இருந்தது. அந்த போட்டோவை மீண்டும் உற்றுப் பார்த்தான். அப்பா இன்னும் பெரிதாகச் சிரிப்பது போல அவனுக்குத் தோன்றியது.

வாசல் கதவைத் தட்டினான். வீட்டுக்குள் இருந்து ஒரு அம்மா வந்தார். கவலையில் மூழ்கி மூழ்கி சோகத்தை பவுடராக பூசியிருந்த முகமாக இருந்தது. அந்த முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ரத்தமும் இல்லை. சோகையும், சோகமும் ஒருசேர ‘அந்தம்மா’ முகத்தில் ஒருசேர குடியிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. 

பீட்டரைப் பார்த்ததும் அவர் கண்கள் மட்டும் சிரித்தன. “வாப்பா பீட்டர்” என்று அழைத்த வார்த்தைகளில் இருந்த அமைதியில் ஏதோ ஒரு பூரணத்துவமும், மகிழ்ச்சியும் இருந்ததை பீட்டர் உணர்ந்தான். அது அவனது நடுக்கத்தை லேசாகக் குறைத்தது.

ஆனால், பீட்டருக்கு ’அந்தம்மா’விடம் என்ன பேசுவது என தெரியவில்லை. திண்ணையில் மெதுவாக பட்டும் படாமலும் உட்கார்ந்தான். 

அவன் உட்கார்ந்த இடத்தை சுட்டிக்காட்டி, ”உன்னைய இங்க வச்சுத்தான் குளிப்பாட்டுவாங்களாம்…, நீ குழந்தையா இருந்தப்போ” என்றார் ’அந்தம்மா’.

பீட்டர் அப்போதும் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமைதியாக இருந்தான்.

நீ இந்த வீட்டுலதான் பிறந்த, பியூலா கூட இதே வீட்டுலதான் பிறந்தா, நீ நாலாவது படிக்கும்போது…  நியாபகம் இருக்கா… அப்பா இதையெல்ல்லாம் அடிக்கடி சொல்லுவார், பீட்டர் இங்கதான் முதன்முதலா குப்புற விழுந்தான், இங்கதான் எழுந்து நடந்தான்னு உன்னப் பத்தியே சொல்லுவாரு. உனக்கு ஒரு வயசு இருக்கும்போது நீ இப்ப உக்கார்ந்திருக்க திண்ணையில இருந்து கீழ விழுந்து உன் மண்டை  ஒடஞ்சி ரத்தமா கொட்டுச்சாம். அத சொல்லுறப்பவெல்லாம் அப்பா அப்படியே பதறிப்போயிடுவாரு. அப்பவெல்லாம் நீ எதுக்காகவும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்பா சொல்லுவாரு” என ’அந்தம்மா’ பேசப்பேச, அந்த பேச்சு அவர் முகத்தில் ஒரு ஒளிய படரச் செய்வதைப் போல் பீட்டருக்கு தோன்றியது. 

பீட்டர் ‘அந்தம்மா’வை இப்போது உற்றுப் பார்த்தான். ஒடுங்கிய தேகம், கழுத்தில், காதில், கையில் ஒன்றும் இல்லாமல் இருந்ததால் இன்னும் ஒடுங்கிப் போனவராகத் தெரிந்தார். 

பீட்டருக்கு மதியம் ஷீபா சொன்னது சட்டென நினைவுக்கு வந்தது. “’அந்தம்மா’ ஒரு ஏமாளி… ஒரு பீட்டர் அல்போன்ஸை பெத்திருந்தா…” பீட்டர் தலையை உலுக்கிக் கொண்டான். குறைந்திருந்த பதற்றம் மீண்டும் மண்டைக்குள்ளும் உடம்புக்குள்ளும் ஏறியது. 

உடனே அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து, ’அந்தம்மா’விடம் கையில் இருந்த பையைக் கொடுத்தான். அவர் வாங்குவதா… வேண்டாமா எனத் தயங்கினார். 

பீட்டர் எழுந்து போய், அவர் கைகளில் திணித்தான். ‘அந்தம்மா’வுக்கு சட்டென கண்கள் கலங்கினாலும் பீட்டருக்குத் தெரியக்கூடாது என தொண்டையைச் செறுமினார். 

பீட்டருக்கு அடுத்து என்ன, என்ன சொல்வது, அல்லது செய்வது என்று தெரியாமல் வாசலிலிருந்து இறங்கி காரை நோக்கி நடந்தான். இரண்டு அடியெடுத்து வைத்தவன் மீண்டும் வாசலுக்கு வந்தான். அங்கு ‘அந்தம்மா’ கையில் பையுடன் நின்று இருந்தார். அவர் முகத்தில் ஒரு சந்தோஷமும், பரவசமும் பரவி அவரை அழகாக்கியிருந்தது. மனத்தின் நிம்மதிதான் மனிதனின் அழகு. 

முதன்முறையாக ’அந்தம்மா’வைப் பார்த்து மிக உறுதியான குரலில், ”நாளையிலிருந்து நம்ம ஹார்டுவேர் கடைக்கு வந்திருங்க… கடச் சாவி இனி உங்ககிட்டயே இருக்கட்டும்” என்றவன் அந்தம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தான். 

அப்போது அவனை அழுத்திக் கொண்டிருந்த பெரும்பாரத்தை இறக்கிவைத்த நிம்மதி அவன் உடல் முழுதும் வியாபித்தது.    


நாச்சியாள் சுகந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.