நகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)

 ப்பொழுதெல்லாம் எழுதுவதில் அயர்ச்சியும் சிரமமும் அதிகமாக இருக்கிறது. சில நேரங்கள் மொழிபெயர்ப்புகளும்,  கவிதை வாசிப்பும், அவ்வாசிப்பின் அனுபவங்களும் என் புறச்சூழலைச் சமாளிக்கச் சரியாகிவிடுகிறது.  பதற்ற நிலை ஒவ்வொரு வடிவில்,  இருப்பைக் குலைப்பதில் சரியாகத் தன் கடமையை என்னுள் செய்வதால்,  எழுதலாம் என நினைத்தால் கூட மன அழுத்தம் இன்னும் கூடி விடுகிறது. ஒருவேளை அது என் எழுத்தின் மீதான அவநம்பிக்கையாகக் கூட இருக்கலாம், யாருக்குத் தெரியும்?  இதனை நகுலனைப் பற்றி எழுதிக் கடக்கலாம் என எண்ணுகிறேன். நகுலன் – என்னிடம் உரையாட வரும் நண்பர்களுள் கடந்த ஒரு வருடமாக  சேர்ந்துள்ளார். இது ஒரு வகையில் மகிழ்ச்சித் தரும் செய்தியானாலும், அவரின் உரையாடல்கள் சில  சமயங்களில் இறுக்கமானதாகவும், வேறு சில இடங்களில் தரிசனத்தை நோக்கி மாறுவதாகப் பலமுறை உணர்ந்ததுண்டு. சில தெளிவான தரிசனங்கள், பல அபத்தங்கள்.  இதனை மறந்துவிட்டேன்,

நான் இங்கே உரையாடல் என்று கூறுவது நகுலனின் படைப்புகள் மூலம் என்னிடம் மட்டுமே உரையாடும் ஒரு இரகசிய கொடுக்கல் வாங்கல்.  என் கல்லூரி விடுதி பகுதியில், பழைய துருப்பிடித்த சைக்கிளுடன் கன்னம் ஒடுங்கிய, உடல் மெலிந்த கட்டையான கண்ணாடி அணிந்த ஒரு முதியவரைப் பார்த்துள்ளேன், பார்ப்பதற்கு அவர் நகுலனின் சாயலில் இருப்பார். அதனால் ஒவ்வொரு முறை அவரைக் கண்டால் புன்னகைப்பேன். அவரிடமிருந்து ஒரு அலட்சியப்பார்வையைத் தவிர வேறு ஒன்றையும் பதிலாக  நான் கண்டதில்லை. ஒருவேளை அவரே நகுலனாக இருக்கலாம், அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை ஏனெனில் நகுலனிடம் இம்மாதிரியான அலட்சியப் பார்வைகள் வராது என்பதால் அவர் நகுலன் இல்லை என உறுதி செய்துக்கொள்வேன். உரையாடல்களின் மூலம் என்னை அறிந்த அவர் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. இவரைப்போல பல நகுலனின் அவதாரங்களை நகுலனின் சாயலில் உள்ள முதியவர்களைச் சென்னை முழுவதும் நான் கண்டிருக்கிறேன். இவர்களுள் ஒற்றுமை என்னவென்றால் அனைவரும் ஒரே மாதிரியான அலட்சியம் கலந்த புன்னகையை கொண்டிருப்பது தான். பி.கு. இதில் ஒருவர் கூட நகுலனில்லை.

நகுலனின் படைப்புகளுடனும் பல  நகுலன்களை நகரத்தில் அவ்வப்போது காணும்போதும் நகுலனைப் பற்றி என்னுள்  நிகழ்த்திய உரையாடல்களில் கிடைத்த அனுபவத்தை இங்கே எழுதுகிறேன்.

நான் அவரது படைப்புகளை உரையாடல்கள் என எண்ணி வாசிக்க ஆரம்பித்தால் ஏற்கனவே அவர் தன் ஒவ்வொரு படைப்பினுள் ஏராளமான உரையாடல்களை தனக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். நம் அன்றாட அனுபவிக்கும் அல்லது காணும் சிறு சிறு அசைவுகளின் கணத்தினையும், ஆழத்தையும் எளிதாகப் பேசிக் கடக்கிறார். சில இடங்களில் இவ்வாறு இருந்தால் தன் படைப்புகளில் முழுதும் தனது மனப் பதிவையும் அதனைத் தொடர்ந்து எழுந்த உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களையும் வார்த்தைகளுக்குள் கடத்துவதில் அசாத்தியம் கொண்டவராக மெல்ல புரிய ஆரம்பித்தது. அவரது உணர்வுகள் வார்த்தைகள் வடிவில் வாசிக்க எளிமையாக இருந்தாலும் உள்ளடக்க ரீதியாக மிகவும் கணமாகவும் அர்த்தமும் ஆழமும் வாய்ந்ததாகவும் பொறித் தட்டியது. இதனை மேற்கோள்காட்டி  விளக்குவதில் பயன் ஒன்றும் இருக்காது என எண்ணுகிறேன் ஏனெனில் கணத்தின் முக்கியத்துவம் அறிந்தவர் அவர்.  ஒவ்வொரு பத்திக்குள்ளும் ஒரு அனுபவம் ஒளித்து வைத்துள்ளார். அவ்வனுபவத்தை என்னால் உணர முடிந்தததேத் தவிர அதனை வார்த்தைகளால் விளக்குவதில் என்னுள் தோல்வி அடைகிறேன்.

நொடிகள் நிகழ்த்தும் மாயாஜாலங்களை எவ்வாறு புரிந்து கொள்வது?, ஹிம் இம்மாயாஜாலங்களை புரிந்துகொண்டு அவ்வனுபவத்தை மொழியின் வழியே கடத்திச் சேமித்து வைப்பதில் தமிழில் ஒரு சில கவிஞர்கள் இருக்கிறார்கள்,  அவர்கள் அனைவரும் நகுலன் வழி வந்தவர்களே. நகுலன் தனது படைப்புகளை பெரும்பாலும் தன் மனதின் வாகனமாகவே பயன்படுத்தியுள்ளார் எனத் தோன்றுகிறது. இப்படைப்புகள் நெருக்கமாகவும், இறுக்கமாகவும் கிறங்கடிக்கும் போதையூட்டும் வஸ்து போலவே செயல்படுகிறது. நாம் பார்க்கவே முடியாத கடவுளை அல்லது  அது போன்ற பரம்பொருளை எளிதில் தன்னிலிருந்து படைப்பாக்கித் தன் எழுத்தில் வைத்துள்ளார். அவ்வியக்கி நம் யாருக்கும் கிடைக்காது. அவரின் கவிதைகள் அனைத்தும் பார்க்கப்போனால் எளிய வடிவமும், வெறும் வார்த்தை ஜாலங்களாகத் தோன்றும், ஆனால் அது தரும் தாக்கமோ முடிவிலியை நோக்கியது. இவ்வம்சமே பலரை நகுலனை நெருங்கவிடாமல், அவரின் படைப்புகளைப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக உணர்த்துகிறது.

நகுலன் அனைவருக்குமானவரல்ல. அவரிடம் ஒரு சிறப்புண்டு தனக்கான வாசகர்களை அவரே எங்கிருந்தோ  இன்னும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த முறை நகுலனிடம் பேசும்போது அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டியைக் கையில் கொடுத்தார். கொடுத்தவுடம் உற்சாகமடைந்த நான் அதனை நான் கண்டிப்பாக வெளியிடுகிறேன் என்று கூறினேன் இதனைக் கேட்டவுடன் சிரித்தவர் பலர் என்னிடம் இவ்வாறு கூறி இருக்கின்றனர் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்றார்.  பகடியிலும் நகுலன் வல்லவர். பகடிகள்  பிரதியின் உரையாடல்களுக்கு இடையே அழுத்தமாகவும் நுண்ணியதாகவும் வருவதை

உணரமுடியும். அதிலும் குறிப்பாக இலக்கியவாதிகளைப் பகடி செய்வதில் கைத்தேர்ந்தவர். அவ்வாறு ஒரு நாவலே எழுதியுள்ளார். அப்பகடிக்கான விளக்கத்தையும் தெளிவாக அந்நாவலின் முன்னுரையில் மிகவும் மரியாதையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி புத்தகத்தைக் கொடுத்தவுடன் என் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட நகுலன் என்னிடம் எனக்காகப் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது எனக்கூறி ஒரு தாளில் அவர் கைப்பட எழுதிய 10 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் போன்ற கடிதத்தை கொடுத்தார். அதனை வாங்கிப் படித்த நான் இதே கேள்விகளை அவரின் வாக்குமூலம் நாவலில் படித்ததாகவும், மேலும் அது ராஜசேகரன் தன்னைக் கருணைக் கொலை செய்வதற்காக அரசாங்கத்திடமிருந்து வந்த கேள்விகள் என அவர் எழுதி இருப்பதாகவும் கூறினேன். மேலும் அது எப்படி எனக்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டது என நீங்கள் கூறலாம் என்று கேட்டபொழுது அவர், “அக்கேள்விகளுக்கான முக்கியத்துவம் உனக்கானது ஆகையால் இது உனக்காக எழுதப்பட்டதே என்று கருதிக்கொண்டு  இக்கேள்விகளுக்கான விடையை  உனது  வாழ்க்கையின் மூன்று வெவ்வேறு கட்டங்களில் எழுதி பார்” என்றும், “மூன்று முறை எழுதி விட்டு நீ என்னைச் சந்திக்கலாம், அல்லது நீ எழுதி முடித்தவுடன் நானே உன்னைத் தேடி வருவேன். அதுவரை நாம் இருவரும் சந்திக்கவோ பேசவோ வேண்டாம்” எனக்கூறிவிட்டு விடைபெற்றார். இந்நிகழ்வை நான் இத்துணைக்காலம் ரகசியமாகவே வைத்திருந்தேன். நகுலனைப் பற்றி எழுத வாய்ப்புக் கிடைத்த இங்கு ஏற்கனவே நான் எழுதிவைத்த அக்கேள்விகளுக்கான முதற்கட்ட  விடைகளை இணைத்துள்ளேன். இதனை எப்படியும் நகுலனும் படிப்பார் என நம்புகிறேன், படித்துவிட்டு அவர் என்மேல் கோபப்படவோ வெறுப்படையவோ கூடும் (ரகசியத்தை உடைத்தமைக்காக). என்னைப்போலவே உங்களுக்கும் நகுலனைக் காணவோ பேசவோ முடிந்தால் இது போல உங்களுக்கும் பிரத்தியேகமாக ஏதாவது ஒரு ரகசியம் வைத்திருப்பார்.   அவரைச் சந்திக்க அல்லது பேசச் செல்லும் பொழுது இதுபோன்ற ரகசியங்கள் கண்டிப்பாக இருக்கும் நண்பர்களே.

கேள்விகள் இதோ:

*பின் குறிப்பு: எனது முதற்கட்ட பதில்களை இங்கே எழுதியுள்ளேன்

(இதனை வாசிக்கும் வாசகர் நகுலனாக இருந்தால் அவருக்குப் பின் குறிப்பு).

உங்களுக்கு எப்பொழுதாவது பைத்தியம் பிடித்துவிடும் போல் தோன்றியிருக்கிறதா? இந்த மனநிலை அடிக்கடி வருவதை தடுக்க நீங்கள் முயற்சி எடுத்துக் கொண்டதுண்டா?

ப: முயற்சி எடுத்துள்ளேன், அச்சமயத்தில் கடப்பாரையை எடுத்து மண்டையில் நங்கென்று அடித்துக் கொள்ள முயன்று பயத்தால் அம்முயற்சி பல முறை  கைவிடப்பட்டுள்ளது.

உங்களுக்கு இதுகாறும் வந்த நோய்கள்:

ப: சிறு வயதில் மூக்கில் சதை வளர்ந்து அறுவை சிகிச்சை, ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, வருடத்திற்கு மூன்று முறை அதாவது காலண்டுகள் இடைவேளையில் ஜுரம் வருவது வாடிக்கை, தலையில் நீர் கோர்த்து உள்ளது, தூசி மாசு என்றால் ஒவ்வாமை மற்றும் ஓராண்டிற்கு முன்பு கொரோனா காய்ச்சல்,

உங்களுக்கு எப்பொழுதாவது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதுண்டா? முதலில் இந்த ஆசை தோன்றிய பிறகு மீண்டும் உங்களுக்கு இந்த ஆசை வந்ததுண்டா?

ப: பலமுறை வந்திருக்கிறது   மீண்டும் மீண்டும் வரும் ஏன் நாளை கூட வரலாம் அல்லது இப்பதில்களை எழுதி முடித்தவுடன் கூட வரலாம்.

நீங்கள் உங்களுடனேயே பேசிக் கொண்டதுண்டா?

ப: சரியாகச் சொல்லவேண்டும் என்றால் ஒரு நாளுக்கு ஒரு லட்சத்தி முப்பதாயிரம் தடவை என்னுள் பேசிக்கொண்டிருக்கிறேன் (இக்கணக்கு தோராயமானது). இவ்விவரம் ஒரு திபெத்திய ஞானியைச் சந்தித்தபோது அவர் என்னிடம் கூறியது.

உங்களுக்கு கெட்டவர்களை கண்டால் பயமும் நல்லவர்களை கண்டால் கோபம் வருகிறதா?

ப: கெட்டவர்களைக் கண்டால் பெரும்பாலும் பயம் வரும் சில நேரங்களில் தமிழ் சினிமா கதாநாயகனாக என்னை நினைத்துக் கொள்வதுண்டு. மேலும் நல்லவர்களை கண்டாலே எனக்கு கோபத்துடன் சேர்ந்து பொறாமையும் அவர்கள் மேல் பரிதாபமும் வெறுப்பும் அதிகமாக வருகிறது.

நயவஞ்சகமாக உங்களை ஏமாற்றுபவர்களை அப்பட்டமான அயோக்கியர்களை விட நல்லவர்கள் என்று நினைக்கிறீர்களா?

ப: அவர்களைக் கண்டு அதிக கோபம் ஏற்பட்டாலும் அவர்கள் அதிபுத்திசாலிகள் என நொந்து கொள்வேன்.

உலகில் நல்லவர்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா? 

ப: இன்னும் முழுவதாக வரவில்லை.

நீங்கள் எதைப் பற்றியும் சொந்தமாக சிந்திக்கும் பழக்கத்தை கொண்டு இருக்கிறீர்களா?

ப: கொஞ்சம் இருக்கிறது.

உங்களையே உங்கள் குறைகளையும் நிறைகளையும் விரிவாக ஆழமாகவும் நுணுக்கமாகவும் அறிந்துகொள்ளும் முயற்சியை நீங்கள் செய்ததுண்டா? செய்திருக்கிறீர்கள் என்றால் இது எத்தனை காலமாக நடந்து கொண்டிருக்கிறது?

ப: சுமார் ஒரு மூன்று நான்கு வருடங்களாக செய்து வருகிறேன் என்று நம்புகிறேன்.

எங்கும் இருக்கும்

             நீ

எங்கும் இல்லாத என்னை

நீ

ஏன் இன்னும்

தேடிக் கொண்டிருக்கின்றாய்?

இந்தப் பாடலின் பொருள் என்ன?

ப: இப்பாடலுக்கான விடையை ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் கேட்டுள்ளேன், அவர் ஒரு வாரத்தில் விரிவாக்க கட்டுரையாக எழுதித் தருவதாகக் கூறியுள்ளார். மேலும் எனது தரப்பில் நானும் இதற்கான விடையைத் தேடி அலைகிறேன் ஆனால் இதற்கு விடை கிடைக்காது எனத் தெரியும்.

போனஸ் கேள்விகள்:

அவன் தன்னை ஒரு அம்பாக கருதிக் கொண்டான் அப்படியானால் நீ என்ன?

ப: நானும் தங்களைப் போலவே ஒரு நாய்.

கேள்வி முக்யமா விடை முக்யமா?

ப: இரண்டுமே வீண் (நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)

உங்களுக்குத் தெரிந்த எந்த ஒருவரையும் ஒருவித உத்தேசமுமின்றி அவர் வீடு தேடிச் சென்று எப்பொழுதாவது அவரை நீங்கள்  பார்ப்பதுண்டா?

ப: அப்படி ஒரு வீட்டிற்கு நான் சென்றால் கண்டிப்பாக செருப்படி விழும்.

மேலும் நான் பதில் தேடிக்கொண்டிருக்கும் கேள்விகளாக இருப்பதை இங்கே இணைத்துள்ளேன். அதாவது இக்கேள்விகள் போனஸ் கேள்விகளாக எனக்கு இணைக்கப்பட்டது.

  1. நினைவுக்கும் மறதிக்கும் தொடர்பு என்ன?
  2. ஒரு தினத்தில் நீங்கள் பகல் அல்லது இரவு தான் முக்கியம் என்று நினைக்கிறீர்கள். இரவு தான் என்றால் ஏன்?
  3. மௌனம் மூன்று வகையானது. மனம் வாக்கு காயம் என்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் ஆழ்ந்து முக்கியமாக இந்த வரிசைப் பற்றி சிந்தித்ததுண்டா?
  4. உடலுக்கும் பிரச்னைக்கும் என்ன தொடர்பு?
  5. சிந்தனைக்கும் உணர்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்ன?
  6. எழுதுவது (கலாபூர்வமாக) என்பதே எல்லாவற்றையுமே உட்படுத்திக் கொள்வது என்கிறார்கள். அத்வைத அடிப்படையில் யார்-நீ, நீ – யார் என்பதற்கும் என்ன வித்தியாசம்?

 

– நகுலன் உங்களை நோக்கியும் வரலாம், சில கேள்விகளுடன்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.