நகுலன் கதைகளில் இருப்பதும் இல்லாமல் இருப்பதும்

குலனின் சிறுகதைகள் பரிதாபகரமான தோல்விகள் மட்டுமே. காவ்யா பதிப்பகம் அவற்றை ஒற்றைத் தொகுப்பாக வெளியிட்ட பிறகுகூட அவற்றைப் பற்றி ஓர் எளிய அபிப்பிராயம் கூடத் தமிழில் வரவில்லை. நகுலனால் புறஉலகச் சித்தரிப்பை அளிக்கவே முடியவில்லை. எந்த ஒரு வாழ்க்கைத் தருணத்தையும் குறைந்தபட்ச நம்பக தன்மையுடன் உருவாக்கவும் முடியவில்லை. ஆகவே கதை போன்று சொல்லப்பட்ட சில சுய அனுபவ குறிப்புகள் – மிகச் சாதாரணமான சோனி அனுபவங்கள் அவை – மட்டுமாக இக்கதைகள் நின்று விடுகின்றன.

  • எழுத்தாளர் ஜெயமோகன், இலக்கிய முன்னோடிகள் (பக்: 325)

 

மேலே சொல்லப்பட்டுள்ள கருத்து பலருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். வெகு சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து நகுலன் தன் கவிதைகளின் மூலமாகவும் நாவல்களின் மூலமாகவுமே அடையாளப் படுத்தப்படுகிறார். அவரின் ஒரு சில சிறுகதைகள் மட்டுமே எப்போதாவது எங்காவது முன்மொழியப்படுகிறது. அவர் தொடர்ந்து “ராமச்சந்திரன்…” கவிதை மற்றும் மேலும் ஒரு சில கவிதைகளின் மூலம் சிலாகிக்கப்பட்டு, நகுலன் என்றால் இதுதான் என்ற மதிப்பீடுகளால் உருவாக்கப்பட்டுள்ளார்.

உண்மையில் நகுலன் என்பவரையும் அவர் எழுத்துக்களையும் எவ்வாறு நாம் புரிந்துகொள்வது. அதற்கு மிகச் சுலபமான வழி அவரது சிறுகதைகள் தான். அவர் தன் சிறுகதைகளில் தான் தன் வாழ்க்கைக் குறிப்புகளையும் தன் பின்புலத்தையும் தன் மனவோட்டம் எவ்வாறு செயல்படும் என்பதையும் தன் வாசகர்களுக்குக் குறிப்புகளாகக் கொடுத்துள்ளார். நகுலன் சிறுகதை என்பது அவர் கவிதைகளையும் நாவல்களையும் புரிந்துகொள்ள ஒரு கையேடாக உதவலாம்.

“கடிதத்தில் ஒரு நாவல்” என்ற கதை நகுலனைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய முக்கியமான ஒரு கதை. இது கடித வடிவில் எழுதப்பட்ட ஒரு நாவலின் முதல் அத்தியாயம் என்ற ரீதியில் நவீனன் சுசீலாவிற்கு எழுதிய ஒரு கடிதமாக எழுதப்பட்டுள்ளது. இக்கதையில் ஓர் இடத்தில் “சுசீலா, உண்மையாகவே சொல்கிறேன். தமிழ் பெருங்கணக்கில் கூட முதல் எழுத்தான அகரம் என்பது என் சொந்த அகராதியில் “அருவம்” என்றுதான் கணக்கிடப்படுகிறது”. இதுதான் நகுலன் அவர்களின் கதைகளில் ஒட்டுமொத்த ஊடுபொருளாக இருப்பது. அவர் தன் வாழ்க்கையையே ஓர் அரூபமாகத்தான் பார்த்திருக்கிறார். அவர் கதைகளில் அதுதான் வார்த்தைகளாக வெளிப்படுகிறது. ஒரு அரூப ஓவியத்தில் வெளிப்படையான ஒரு தருணத்தையும் புறவுலக சித்தரிப்பையும் வெளிப்படுத்த முடியாது. ஆனால், நன்றாக உற்று கவனித்தால் அதில் ஒரு தருணமல்ல, ஓராயிரம் தருணங்கள் ஒளிந்துகொண்டிருக்கும். அது ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு காட்சியாகவும் சித்தரிப்பாகவும் ரூபமாகவும் கதையாகவும் கதைமாந்தராகவும் வெளிப்படும். அதிகாரமிக்க ஒற்றைப் பார்வைகொண்ட கட்டுக்கோப்பான வாழ்வியலுக்கு அடங்கிப்போன கண்களுக்கு எப்போதும் கட்டுப்பாடில்லாத அரூபங்கள் காட்சிப்படுவதேயில்லை.

இதேகதையில் இன்னொரு முக்கியமான ஒன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. அது நகுலனின் ‘சுசீலா’. சுசீலா என்ற பெயரை தான் எங்கிருந்து பெற்றார் என இக்கதையில் தான் வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். மௌனியின் ஒரு கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் சுசீலாவென்றும் அந்த பெயர் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால்  தான் பயன்படுத்திக்கொண்டோம் என்றும் சொல்கிறார். அதே நேரத்தில் மௌனியின் கதைகளின் மீது தனக்கு இருந்த ஈர்ப்பை பற்றியும் தெரிவிக்கிறார். இந்த இடத்திலிருந்து நகுலனின் சிறுகதைகள் மீதிருக்கும் நம் பார்வை முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு நகர்கிறது. மீண்டும் ஒருமுறை அவர் கதைகளை முதலிலிருந்து வாசிக்கும் போது அதில் பல இடங்களில் மௌனியின் தாக்கத்தை நம்மால் உணரமுடியும்.

நகுலன் கிட்டத்தட்ட மௌனியை போன்றதொரு கதை சொல்லும் உத்தியைப் பயன்படுத்தினாலும், முற்றிலும் அதில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கினார். அவர் மௌனியை போன்று புறவுலகச் சித்தரிப்புகளுக்கு தன் வார்த்தைகளில் இடம் தரவில்லை. நகுலன் கதைகள் முழுக்க அகவுலகில் தன் வலைகளை பின்னிக்கொண்டிருந்தன. அவர் ஒருமையிலும் பன்மையிலும் தன் பார்வையிலும் பிறர் பார்வையிலும் என முழுக்க தன் கதைகளை தன் அனுபவங்களை மட்டுமே எழுதினார். அவர் கதைகளில் இருப்பது அவர் மட்டுமே. சில கதைகளில் ஒருவராகவும் சில கதைகளில் இருவராகவும் கூட வருகிறார்.

உண்மையில் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் இலக்கணமும் கோட்பாடும் உருவாக்கப்பட்டு அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் அப்படிப் பின்பற்றப்பட்டு எழுதப்படுவது தான் ஏற்றுக்கொள்ளத்தக்கப் படைப்பு என்றும் கூறுவது வியப்பளிக்கிறது. கலைஞனின் மனம் இலக்கணத்திற்கும் கோட்பாட்டிற்கும் அப்பாற்பட்டது என ஒரு வாசகன் புரிந்துகொள்ளாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால், அதை ஒரு சகக்கலைஞன் உணராமல் நிராகரிக்கும் இடத்தில் தான் கலையின் வீழ்ச்சி தொடங்குவதாகத் தோன்றுகிறது.

நகுலன் தன் கதைகளில் போகிற போக்கில் என்னென்னமோ சொல்கிறார். அதில் ஒரு தொடர்ச்சியில்லை, கதையாகவில்லை என்ற குற்றச்சாட்டையும் பார்க்க முடிகிறது.  நகுலனின் கதைகளில் முழுக்க ஒரு ஒளித்துவைக்கும் தன்மையைக் காண முடிகிறது. அவர் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார். அவ்வுரையாடலுக்கு இடையில் சம்பந்தமேயில்லாமல் சில காட்சிகளை வைக்கிறார். மீண்டும் உரையாடலைத் தொடர்கிறார். ஒருகட்டத்தில் உரையாடலையும் கதையையும் முடித்துவிடுகிறார். ஆனால், உண்மையில் உரையாடலுக்கு இடையில் வரும் காட்சிகளில் தான் அந்தக் கதையின் சூட்சமம் ஒளிந்திருக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணம் “சாதனை” என்ற கதை.

நகுலனின் மனம் ஒரு அரூபக் கோளம் என்பதற்கு இன்னொரு சிறந்த உதாரணம் “என் பெயர் வைத்தியநாதன்” என்ற கதை. “ஒரு ராத்தல் இறைச்சி” மனித மனதின் யதார்த்த சித்தரிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்திய, அவர் கதைகளில் ஒரு கதையாக முழுமைபெற்ற ஒன்றாகக் கருத முடியும். தன் அகராதியின் அகரத்திற்கு அரூபத்தை கோரும் நகுலனின் உச்சமாக முழுக்க நகுலனின் ஆழ்மன தெறிப்புகளாக வெளிப்பட்டிருக்கும் ஒரு படைப்பாக “அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி” என்ற குறுநாவல் அமைந்துள்ளது. அதில் வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் காட்சிகளாகவும் உணர்ச்சிகளாகவும் தொடர்ந்து ஓடும் ஒரு ரயில்வண்டியின் தாளகதிக்கேற்ப நம்மை இழுத்துகொண்டு ஓடுகிறது. இதில் தொடக்கமுமோ முடிவோ இல்லை. அது எப்போதும் தேவையும் இல்லை. ஆனால், நிச்சயம் இதில் ஒரு அனுபவம் இருக்கிறது. அது வெளிப்படும் விதத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

நகுலனின் கதைகளில் மிகமுக்கியான ஒரு கதையாக நான் கருதுவது “கத்திரி”. 1970ல் வெளிவந்த இந்தக் கதையை அவர் எப்போது எழுதினார் எனத் தெரியவில்லை. ஆனால், அக்காலத்தில் இதைப் போன்ற ஒரு கதையை எழுத மிகத் துணிவு வேண்டும். சுயசாதியின் மீது, அதுவும் அச்சாதி சமூகத்தில் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் போது இப்படி ஒரு கதையை எழுதியதற்காகவே அவரைப் பாராட்டலாம். இதுபோல் பல கதைகளில் அவர் தன் சாதி குறித்து எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காகக்கூட அவர் தொடர்ந்து ஒதுக்கப்பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது (தனிப்பட்ட வாழ்விலும், இலக்கிய உலகிலும்). சரி இதுபோன்று யாரும் செய்யவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். இது நகுலனைப் பற்றிய கட்டுரை என்பதால் அவரைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன். மேலும் என்னுடைய அவதானிப்பில் இக்கதையில் முக்கியமான இரண்டு தருணங்களையும் வெற்றிபெற்ற இரண்டு திரைப்படங்களில் எடுத்தாளப்பட்டுள்ளதோ என்று எனக்குத் தோன்றுகிறது. ஒன்று “சிவப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தில் வரும் சிறுவயது கமலின் வாழ்க்கை, இரண்டு வறுமையின் நிறம் சிவப்பு” திரைப்படத்தின் இறுதியில் உயர்வகுப்பு என்று சொல்லப்படும் ஒரு சாதி பின்னணி கொண்ட கமல் முடிவெட்டுவது.

எவ்வகையிலும் நிராகரிக்க முடியாத பல பரிச்சார்த்த முயற்சிகளை நகுலன் தன் கதைகளில் செய்துள்ளார். தான் சார்ந்திருக்கும் கலையில் பரிச்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும் கலைஞர்கள் எப்போதும் முக்கியமானவர்கள். அவர்கள் மூலமாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் கலை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. மரபைப் பின்பற்றிப் போவது ஒரு வழிமுறையென்றால் மரபை மீறுவது ஒரு கலை. மரபை மீறி காலத்தால் நீக்கமற நின்றவர்கள் எத்தனையோ பேரை உதாரணத்திற்குச் சொல்ல முடியும். அவர்களில் முக்கியமான ஒருவர் நகுலன்.

அதேநேரம், நகுலன் சறுக்கிய இடமாக நான் கருதுவது, அவரின் “குருடன் மீட்ட தனம்” என்ற கதையில். அக்கதை ஒரு வெகுஜன இதழில் வெளிவந்துள்ளது. அதற்கே ஒரு பாணியில் நகுலன் தன்னை சமரசப்படுத்திக் கொண்டு எழுதியிருக்கிறார். நன்றாக எழுதக்கூடிய பலரை தன்னுள் இழுத்து காணாமலாக்கியுள்ளன வெகுஜன இதழ்கள். நல்ல வேளை, நகுலன் அதில் சிக்காமல் வெளியேறியுள்ளார்.

“சாதனை” கதை தொடங்கி, “கடிதத்தில் ஒரு நாவல்” வரை அவர் வாசகர்களுக்கு எந்த கதையையும் சொல்ல நினைக்கவில்லை. அவர் தன்னுடைய சில அனுபவங்களைத்தான் நமக்கு கடத்த முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் தனக்கென ஒரு பாணியை கையாண்டுள்ளார். அது ஏற்றுக்கொள்ளப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் காலத்தின் முடிவே. அவரது நூறாவது ஆண்டிலும் அவர் நினைவுக்கூறப்படுவதையும், வாசிக்கப்படுவதையும், பேசப்படுவதையும் வைத்து காலத்தின் தீர்ப்பை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

காவ்யா பதிப்பகம் நகுலன் கதைகள் என்று அவர் கதைகளைத் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. முன்னுரையில் நகுலன் தன் கதைகளை மொத்தமாக ஒரு பதிப்பாளரிடம் கொடுத்ததாகவும், அவர் அதைத் தொலைத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். பதிப்புரையில் இத்தொகுதியில் இரண்டு குறுநாவலும் இருபத்திமூன்று சிறுகதைகளும் தேடி கண்டெடுத்து தொகுத்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் 5 குறுநாவல்களும் 31 சிறுகதைகளும் 2 மொழிபெயர்ப்பு கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. மேம்படுத்தப்பட்ட பதிப்புக்கு உரை எதுவும் எழுதப்படவில்லை. ஆகையால் இதை நகுலனின் முழுமையான தொகுப்பாகக் கருதமுடியாத சூழல்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.