நகுலனின் இயற்பெயர் டி.கே. துரைசாமி. 1921 ஆகஸ்ட் 21ல் பிறந்தார். மறைவு 2007 மே 17. இந்தக் கட்டுரையில் நகுலனின் கவிதைகள், அவற்றுக்கான பின்புலம் குறித்துப் பார்க்கலாம். சிறுசிறு தொகுப்புகளாக மூன்று, ஐந்து, கோட்ஸ்டாண்ட் கவிதைகள், சுருதி, இரு நீண்ட கவிதைகள் என்று வெளியாகியுள்ளன. காவ்யா பதிப்பகம் இவரது படைப்புகளை வெளியிட்டுள்ளது. எனினும் நகுலனுடைய கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. நகுலன் நூற்றாண்டை முன்னிட்டு ’நகுலன் கவிதைகள்’ இரண்டாம் பதிப்பை காவ்யா வெளியிட்டுள்ளது. நூற்றாண்டு வெளியீட்டுக்கு இன்னும் சற்று சிரத்தையெடுத்து அவர் செய்திருக்கலாம். தாள்கள் தரமில்லாமல் உள்ளன. முதல் பதிப்புக்கு (2001) எழுதிய அதே பதிப்புரையைக் கொடுத்திருக்கிறார். இந்த இருபதாண்டு காலத்தில் புதிதாகக் கவிதைகள் சேர்க்கப்பட்டுள்ளனவா, அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா என்ற விபரங்கள் இல்லை.
மிக அதிகமும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கவிதைகள் நகுலனுடையவை. எந்த ஒரு விசயமும் அதன் புகழின், பேசப்படுவதன் எல்லையை அடைந்ததும் எதிர்மறைக்குத் தாவ ஆரம்பிக்கிறது. இவரது ராமச்சந்திரன் கவிதை இலக்கிய வட்டத்தில் நண்பர்களுக்கிடையில் சிலேடை நகைச்சுவையாகப் பகிரப்படும் அளவுக்குப் பிரபலம். ஒருவேளை மனுஷ்யபுத்திரனுக்குப் பிறகு அதிகளவு புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கவிஞரும் இவராகத்தான் இருப்பார். பாதியிருளும் ஒளியுமாக சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி, புத்தகத்தை விரித்தபடி என நகுலனின் புகைப்படங்கள் கூட மர்மம் நிறைந்தவை.
மரபுக் கவிதை பாரதி மூலம் வெடிப்புற்று வசன கவிதை தோன்றிற்று. அதன்பின் அவரது வசன கவிதைகளை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தன. யாப்பிலக்கணத்தை உதறிவிட்டு மணிக்கொடி இதழில் வசன கவிதைகளை ந. பிச்சமூர்த்தியும், கு.ப.ரா.வும் எழுதத் தொடங்கினர். இவர்களிடம் தாகூரின் தாக்கமிருந்தது. இவர்களிடமிருந்து மாறுபட்ட கருத்துக் கொண்டவராக புதுமைப்பித்தன் விளங்கினார். அவரும் கவிதையின் ஜீவன் அதன் உணர்ச்சி உத்வேகத்தைப் பொறுத்தே அமைகிறது என்ற கருத்துடையவர்தான் என்றாலும், அத்தகைய உத்வேகத்தை வெளிப்படுத்தும் மொழியைக் கண்டடைந்தே கவிதை வெளிப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். உள்ளத்தில் எழுந்த அனுபவத்தை சப்தநயங்களினாலேயே வெளிப்படுத்த முடியும் என்பது அவர் தரப்பு. அச்சு ஊடகம் வளர்ந்தபின் காதால் கேட்டு அனுபவிக்கும் பழக்கம் போய், எழுத்தில் வடிக்கப்பட்டு மௌனமாய் வாசித்து உட்கிரகிக்கும் இரசனை வளரலாயிற்று. புதுமைப்பித்தன் கூற்றுப்படி கவிதைநயம் காதினால் கேட்டு அனுபவிக்க வேண்டியது. இது மரபையும் விட்டுக் கொடுக்காமல் புதுமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே காண்கிறோம். புதுமைப்பித்தன் தனது மொழியாளுமையினால் இதைச் சாதித்தும் காட்டியிருக்கிறார்.
புதுக்கவிதையில் ஒருவேளை ஏகோபித்த கருத்தொற்றுமை துவக்கத்தில் அமைந்திருந்தாலும்கூட பின்னால் அதன்பின் ஏற்பட்டதைப் போல வெவ்வேறு புதுமுயற்சிகள் நடந்திருக்கவும், வெவ்வேறு பாணிகள் வளர்ந்திருக்கவும் கூடும்தான். ஆனால் சப்தநயத்தை முன்னிறுத்திய புதுக்கவிதை பாணிக்கு புதுமைப்பித்தனை ஒரு தொடக்கமாகச் சொல்லலாம். இதன் நீட்சியாகவே நகுலன், ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், வானம்பாடி கவிஞர்கள். ஆனால் புதுமைப்பித்தன் வலியுறுத்திய கவிதைக்கு அடிப்படையான உத்வேகம் கவனத்தில் கொள்ளப்பட்டதா என்பது வேறு விசயம்.
பட்டினத்தார் பாடலொன்றில் ‘செவியாமல் நீ செபித்தால்’ என்ற வரி வருகிறது. அதாவது காதில்விழாதபடிக்கு செபம் இருக்கவேண்டும். அது தியானத்தோடு தொடர்புடையது. ஒரு கவிதையும் இவ்வாறுதான் வாசிக்கப்படவேண்டும். சொற்களில் இயல்பாகவே அவற்றின் புணர்ச்சிவிதிப்படி ஓர் ஒழுங்கமைதியும், இலயமும் (இந்த இலயம் கவிஞருக்குத்தக்க மாறுபடும்) இருக்கிறது. இதற்கு மாறாகச் சொற்களை சப்தநயத்தோடு அமைக்கும்போது அவை வாய்விட்டுப் படிக்க நம்மைத் தூண்டுகின்றன. அதாவது அவை செவியால் கேட்டுணரத்தக்க அனுபவமாக மாற்றக் கோருகின்றன. உதாரணமாக உங்களுக்குப் பிடித்த ஒரு திரைப்படப் பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். அவை வரிவடிவமாக சும்மா வாசித்துக் கடக்க முடியாது. அவற்றை வாய்விட்டுப் படித்தால்தான் அந்த அனுபவம் கிடைக்கும். காரணம் அவை செவியின்பத்துக்காக படைக்கப்பட்டவை. இப்படிச் செய்யும்போது இசையனுபவம் முதன்மை பெறுகிறது. ஓர் இசையைக் கேட்கும்போது நம்மையறியாமல் நமக்குள் அது ஊடுருவி அதற்கேற்ற அசைவுகளை நம்மிடம் தூண்டுகிறது. இது ஒருவகையான அனுபவம். இந்த அனுபவத்தின்போது சிந்தனாப்பூர்வ அனுபவத்துக்கு இடமில்லை. கவிதையின் அர்த்தம், அதில் தொனிக்கும் பன்முகத்தன்மை இவையெல்லாம் நிராதரவாக விடப்படுகின்றன. கவிதையை உணர்வதற்கு இந்த சப்தங்களையெல்லாம் கடந்து வரவேண்டியிருக்கும்.
நகுலன் கவிதைகளிலும் சரி, கதைகளிலும் சரி காலம் உறைந்துபோய் ஒருவித சூனியம் கவிவதைக் காணலாம். சில இடங்களில் மின்னதிர்ச்சி போல வரிகளில் அப்படியொரு துடிப்பு. இத்தனை அமைதியாய் அரவமற்றுக் கிடக்கும் இந்தப் பாழ்வெளியில் எங்கிருந்து வந்தது இப்படியொரு துடிப்பு என்று அது வாசகனை மருளச் செய்வது.
எல்லாக் கவிதைகளிலும் இல்லையென்றாலும் நீள் கவிதைகள் பெரும்பாலானவற்றில் அவர் auto writing, நகுலன் மொழியில் ‘தன்-எழுத்து’ வகையைப் பின்பற்றியுள்ளார். இந்த எழுத்துவகையைப் பின்பற்றுபவர்கள் தன்னைத்தானே யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டவர்களாக எழுத்துக்களில் ஆக்கிக் கொள்வது இயல்பு. இது எழுதுகிறோம் என்ற உணர்வின்றி தன்னையறியாமல் எழுதிச் செல்லும் பாணி. இந்தவகை எழுத்துமுறை ஆரம்பத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுடன் பேசுவதில் உபயோகிக்கப்பட்டது. துவக்ககட்டத்தில் (20ம் நூற்றாண்டின் துவக்ககாலத்தில்) தன்-எழுத்து வடிவத்தைப் பின்பற்றிய எழுத்தாளர்கள் வேறொரு சக்தியால் பீடிக்கப்பட்டவர்களாக அந்நேரம் தாங்கள் உணர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். ஐரிஷ் கவிஞர் டபிள்யு.பி. யீட்ஸ் தன்-எழுத்து வடிவத்தில் எழுதியுள்ளார். அறிவியல் இதனை நனவிலியிருந்து எழுதப்படுவதாகக் கூறுகிறது.
தன் எழுத்து என்பதற்கும் தடையற்ற மன எழுத்து (Free writing) என்பதற்கும் வேறுபாடுள்ளது. இந்தத் தடையற்ற எழுத்து என்பது திருத்தங்கள் குறித்தோ, சொல்நயம் குறித்தோ கவலையின்றி தோன்றுவதை அப்படியப்படியே எழுதிச் செல்வது.
நகுலன் தன்னையே வெவ்வேறு நபர்களாகப் புதினங்களிலும், கவிதைகளிலும் நடமாட விட்டிருக்கிறார். எஸ். நாயர், நகுலன், நவீனன் இவை அவரது பிற தன்னிலைகள். சச்சிதானந்தம் சுவாமியாக வருபவர் தாயுமானவராக இருக்கக்கூடும். சுசீலா என்றொரு தீராக் காதலி இவரது படைப்புகளில் வரும் மிகப் பிரபலமான பாத்திரம். இந்தக் கூறுகள் எல்லாம் அவரது தன்-எழுத்து வகையை உறுதிப்படுத்துபவை. கவிதைகளில் வரிகள் ஆங்காங்கே சம்பந்தா சம்பந்தமின்றி திகைத்து நிற்பது, முற்றிலும் தொடர்பில்லாத வேறொரு தளத்திலிருந்து அடுத்த வரியைத் தொடங்குவது போன்றவையும் தன்-எழுத்துக்கு நியாயம் செய்யக்கூடியவையானாலும் எனக்கு இதில் கேள்விகள் உள்ளன. நிறைய இடங்கள் இவை தன்-எழுத்தல்ல, மன எழுத்து என்று தோன்றும்படியாக உள்ளன.
உதாரணமாக இவர் சொற்களுக்குத் தரும் முக்கியத்துவம். நகுலன் கவிதைகளில் சொற்கள் பழகிய கூழாங்கற்களைப் போலப் பாந்தமாய் அமர்கின்றன. மனவோட்டத்தில் ஒலிப்புக்கு, சொற்களுக்கு என அலசிச் செல்லாமல் இவற்றை எடுத்துவருவது சாத்தியமில்லை. அதேபோல சொல் விளையாட்டையும் பார்க்கிறோம். தன்னை மறந்து சிந்தனையில் இலயித்திருக்கும்போது, அப்படி அமர்ந்திருப்பவர் ஒருவராகவும் சிந்தனைகளைத் தொடர்வது ஒருவராகவும் உள்ள கற்பிதத்தை இவரது கவிதைகளில் பார்க்கமுடியும். இதைத் தனது இருவேறு தன்னிலைகளாக (alter ego) ஒருவரால் காண முடியும். உதாரணமாக எம்.வி.வி.யின் காதுகள் நாவலில் வரும் குரல்கள் வெவ்வேறு பாத்திரங்களாக இருப்பதை இங்கு நினைவுகூரலாம். தன்-எழுத்து நிகழ்ந்திருக்க நிச்சயம் வாய்ப்புண்டு எனினும் முழுக்கவே அவை மட்டும்தான் என்று சொல்வதற்கில்லை. எழுத்தாளர் ஜெயமோகன் நகுலனுக்கிருந்த மறதிநோய் (அல்ஷைமர்) அவர் கவிதை பாணிக்குக் காரணமாகச் சுட்டிக் காட்டுவதைக் கவனத்தில் கொள்ளலாம். தன்-எழுத்து நடைக்கு மறதிநோய் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. தனது தன்-எழுத்து வகைமை குறித்து நகுலன் கூறியிருப்பது:
“மனம் ஒரு அத்வான வெளியில் இயங்கும் பொழுது பல்வேறு தகவல்கள் வந்து சேர்ந்தபின், அவை ஒருமுகமாக, ஒரு உருவ-அமைதிக்கு ஏற்ப உணர்ச்சி பீறிட ஒரு சமநிலை அடைய அந்தச் சாக்ஷாத் சந்தர்ப்பத்தில் படைப்புத் தொழில் தொடர்கிறது. உணர்ச்சிப் பீரிடல் என்று சொன்னாலும் எல்லாமே ஒரு மங்கலான நிழலக (ஒரு லகிரி நிலை) நம்மைச் சுற்றியுள்ள விவகார உலகின் மேல் பூச்சு விலக ஒரு தனிப்பட்ட நிலை; நம்மைத் தவிர வேறு யாருமில்லை என்ற ஒரு ஏகாந்தநிலை. ஆனால் இதில் ஒருவிதப் பயப்பிராந்தியும் நம்மைக் கௌவிப் பிடிக்காத ஒரு நிலை. இது குடிப்பதனால் வரும்நிலை என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் குடிப்பதனாலும் இந்த நிலை ஏற்பட்டாலும் குடிமயக்கத்தில் சிருஷ்டித் தொழில் காரியப்பூர்வமாக இயங்குவதில்லை. இந்த நிலையில் நான் இருக்கிறேன் என்பதுகூட என் பிரக்ஞையை விட்டு விலகி நிற்க, இதை இன்னொரு விதத்தில் எழுதுவதென்றால் பிரக்ஞையின் அடித்தளத்திலிருந்து வரும் தகவல்களை நான் பிரதி செய்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைத்தான் பிரம்மராஜன், ‘நகுலன் automatic-writingஇல் (எழுத்து தன்னைத்தானே எழுதுகிறது) நம்புவதாக நினைக்க வேண்டியிருக்கிறது’ என்கிறார். இதை என் பாஷையில் சொல்வதென்றால் என் எழுத்து தன் – எழுத்து என்று மாறும் விந்தை.”
நகுலன் கட்டுரைகளை வாசிக்கையில் கவிதை விமர்சனக் கட்டுரைகளைத் தவிர மற்றவை தெளிவாகவும் நன்றாகவும் வந்திருக்கின்றன. கவிதைகளைப் பற்றிப் பேசும்போது துவக்ககால ஒன்றிரண்டு கட்டுரைகளைத் தவிர மற்றவற்றில் திக்கித் திணறி அவருக்கு மட்டுமே புரியக்கூடிய உதிரிச் சொற்களாகச் சிதறிக் கிடக்கின்றன. திரும்ப வாசித்தால் அவருக்கே புரிவது சந்தேகம்தான். நகுலனின் இன்னொரு முக்கியமான குணத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். சங்கப் பாடல் உதாரணம் கொடுக்கும்போது அவர் அதற்கு அர்த்தம் சொல்வதில்லை. வாசகரே அதன் பொருளை அறிந்து உணரவேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இதன் அதீதத் தன்மையாகத்தான் இந்த பொருள்விளங்காக் கட்டுரைகளைக் கருத வேண்டியிருக்கிறது. அதாவது நான் ஒரு விசயத்தைச் சொல்கிறேன். அது என் வரையிலான அனுபவம். மனவோட்டப்படி அப்படியப்படி சொல்லியபடி செல்கிறேன். அது இன்னொருவருக்கு விளக்கும் செயல் அல்ல. அது வாசகர் தேடிப் படித்து அவராக உணர்ந்து கொள்ள வேண்டியது. இந்த மனப்பாங்கை அவரது கவிதைகளிலும், கவிதைகள் குறித்த கட்டுரைகளிலும் பார்க்கிறோம்.
கவிதைகளில் திரும்பத் திரும்ப சொல்லோ வரியோ வருவதற்கான காரணத்தைத் தனது “மூன்று” தொகுப்பு முன்னுரையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அடிக்கடி இக்கவிதைகளில் விட்டு-விட்டுச் சில வரிகள் திரும்பித் திரும்பி வருவது “அசைச் சொற்கள்” போல் உத்வேகம் நழுவாமல் இருப்பதற்கு நானாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு உத்தி”. ஆனாலும் கவிதைகளை வெளியிடுமுன் இவற்றைத் திருத்தவோ, நீக்கவோ செய்திருக்கலாமே என்று தோன்றாமலில்லை. ஆனால் அவ்வாறு செய்தால் பாடலில் பல்லவியைப் போல வரும் இலயத்தைக் குறைப்பதாக ஆகிவிடும். அவர் காற்றடித்துப் பறந்த பலூனில் பறக்க நாமும் அதேபோலத்தான் சென்றாக வேண்டும். அந்த மனநிலை, நினைவுப்பாதையின் போக்கைப் புரிந்துகொள்ள அதுவும் அவசியமென்றே தோன்றுகிறது.
1959ல் எழுத்து இதழில் எழுதிய கவிதைகளிலேயே மந்திர உச்சாடனம் போல சொற்கள், வரிகள் திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கலாம். எதுகை, மோனை, சந்தத்துடன் கவிதையை வாசிக்கும்போதே வாய்விட்டு வாசிக்கத்தூண்டும் தன்மையுடையவையாய் இவை இருக்கின்றன. எழுத்து இதழ்க் கவிதைகளில் குறிப்பிடத்தக்கவையாகக் காத்திருந்தேன் என்ற கவிதையைச் சொல்லலாம். இந்தக் கவிதையிலேயே சூனியம், அகத்தேடலைக் காணமுடிகிறது.
காத்திருந்தேன்
பொற்கோழி கூவப்
பொழுது புலர
பல் விளக்கி
நீராடிக்
கதவடைத்து
வழிநடந்து
விரைவில் உணவருந்தி
வீடு திரும்பி
குளம் போன்ற சூரல் நாற்காலியில்
முடங்கிச் சுருண்டேன்.
கண்ணெதிரே
கானல் கொதிக்கப்
பார்க்கும் தென்னை மரமனைத்தும்
பதுமையெனத் தாங்கி நிற்க,
ஆலின் ஆயிரமாயிரம்
சிறு இலைகள் பதறி மின்ன
வானம் நீலமாக விரிய
நான் தனித்திருந்தேன்.
வீதியில் யாருமில்லை;
வருவது என்றால்
வரும்பொழுது இதுவேயானால்
நீர் வேட்கையால் வாடிப் புலரும்
நாஷனுக்கு நைப்பும் வேண்டுமா?
என்று நானும்
அவன் வருகை நோக்கி
வெளி வாசலில் காத்திருந்து
தெரு வீதியில் கண் பதித்தேன்.
பொழுது சரிய
கதிரும் தளர
என் நீர்வேட்கை மறைய
தெரு வீதியில்
வெள்ளித் திரைச் செய்தி வீசி
ஓர் வர்ணக் கடித வண்டி நீங்கிற்று.
நாளும் ஞாயிறு
எங்கும் விடுதலை
எனவே புறவுலகச்
செய்தி தானுமில்லை.
காரணந்தான்
என்று சொல்லலாம்
தகைத் தன்றி
பின்னறைச் சென்று
முன்னறை வந்து
மீண்டும் சூரல் நாற்காலியில்
முடங்கினேன்.
தெரு வீதியில்
கர்த்தரின் சேனை
கையில் டமாரமும்
நாவில் மந்திரமும்
சப்திக்க
அடிவைத்து அடியெடுத்து
அகன்று செல்லும்.
மீண்டும் வீதியில் யாருமில்லை
வெறும் தனிமை
வெகு தொலைவில்
வேகம் குறைந்துவரும்
டாக்சி என்வீடு வரும் என்று
நம்பிக்கையின்
வேதனை தாங்கி
நான் வாழ மனந்தூண்ட
நான் வறிதே வீற்றிருக்க
வந்த வண்டி
என் வீடு தாண்டிப்போகும்.
கண்ணெதிரே
கதிரவன் ரத்தக் களரியாக
வானக் கடலில் அமிழ
பறவையெல்லாம் மடங்கிச் செல்ல,
நானும் என் சூரல் நாற்காலியில்
மீண்டும் சுருண்டு அமர்ந்தேன்.
கால் அழைத்துப் போக
கையெழுத்துத் தர
வாய் உண்ண
உணவு விடுதியில்
உணவருந்தி மீண்டும்
வெளி வாசலில்
சூரல் நாற்காலியில்
சுருண்டமர்ந்து
தெருவீதியில் கண்பதித்தேன்.
குறித்த நேரமின்றேல்
குறிதப்ப வாரலும் உண்டென
பயம் நிரம்பிய தைரியத்தில்
அவன் வரவு நோக்கி
தெரு வீதியில்
கண் பதித்தேன்.
வெளித் திண்ணையை
அணைத்த நீண்ட தட்டியை
சுருட்டிக் கட்டி
திட்டையருகே சூரல் நாற்காலியை இழுத்து
முன் கிடந்த வெற்றுப் பாதையை
எட்டிப் பார்க்க இரு கண் பசித்த
என் முன்னர்
வேறாக வந்தவர் எவரும் சேறாக
அவர்பேச்சும் மாறி வீச
நான் தனியாக
என்னை மீறிய
என்னினும் வேறாய
நானே ஆய ஒரு நிலை.
அந்நிலையில்
சூரல் நாற்காலி
என்னைத் தாங்கிச் சமைந்து சலனமற்றுக்
காலபீடமாகப் பரவெளியாகப்
படர்ந்து விரியும்.
இரவின் இரண்டாவது சாமம்
இனியும் குறிதப்பி வாரல் உண்டோ?
ஏனில்லை?
மனிதன் பிறப்பதும் இறப்பதும்
குறிதப்பி குறிமாறி
உறுவதன்றோ?
மீண்டும் நம்பிக்கை
உள்ளத்தைப் பிறாண்ட
நானும் சூரல் நாற்காலியுமாக
அவன் வருகை நோக்கிக்
காத்திருந்தோம்.
வெளியே சென்று
விட்ட வழியே போய்
மீண்டும் வந்தேன்.
மீண்டும் அறை அறையாக
உள்ளம் துடிக்க
கண் துழாவத்
தேடினேன்.
வந்தவரைக்
வந்து போன வரைக் காணேன்
வராமலிருந்தவரைக்
யார் வந்திருக்கக் கூடும் என்று
நினைத்தேனோ அவர் வரவில்லை.
இரவு மங்க
கண் மயங்க
தெருவில் நாளினுயிர் கிளைக்க
கண் பதித்துக் காத்திருந்தேன்.
எடுத்த திருவடி
அடி பெயர்த்து
நிலம் பதித்து
வழி நடந்து
வருகை வேண்டி
அன்று முதல்
இன்று வரை
எண்ணத் தொலையாத அலுவல்களும்
தலைபோகிற காரியங்களும் அவை
போக்கில் போக,
உள்ளம் நம்பிக்கையின்
வேதனை நிறைய
இச்சூரல் நாற்காலியில்
எதற்கும் சித்தமாகிக்
கட்டுண்டு காத்து நிற்கின்றேன்.
நகுலன் கவிதையை விசேசமானதாகக் காட்டுவது அதிலிருக்கும் பித்து நிலை. மேலேயுள்ள கவிதையில் வெளியே சென்று / விட்ட வழியே என்று தொடரும் பத்தியைப் பாருங்கள். வெளியே சென்றுவிட்டு ’எதிர்பார்க்கும் நபரை’ வீட்டுக்குள் போய்த் தேடிப் பார்க்கிறார். அதன் மூன்று சாத்தியங்கள்: வந்தவர், வந்துபோனவர், வராமலிருப்பவர். கடவுள் மீது அதீத பக்திகொண்டவரின் பித்துநிலையை இதில் பார்க்கலாம்.
ரமணர் மனவெறிப்பு குறித்துப் பேசியுள்ளார். எதையோ வெறித்தபடி எண்ணங்கள் எங்கெங்கோ அலைய பலநேரம் நாம் அமர்ந்திருக்கக்கூடும். ஆனால் மனவெறிப்பு என்பது சில கணங்கள் நீடிக்கக்கூடிய எண்ணங்கள் ஏதுமில்லாத வெறிப்பு. இத்தகைய வெறிப்பு நகுலன் கவிதைகளில் வெளிப்படுவதைக் காணமுடியும். என்னதான் மனம் என்பது நினைவுகளின் தொகுப்பு என்று சொன்னாலும், நிகழ் கணத்தில் அது ஒரு புள்ளியிலேயே நிற்கிறது. இந்தப் புள்ளியிலிருந்து நழுவி நழுவிச் செல்லும் வரிகள் அவருடையவை. திரும்பத் திரும்ப நீருக்குள் மூழ்கிக் கொள்வதுபோல. நினைவுகள் எல்லாம் இருந்தும் என்னிடம் ஒன்றுமில்லையே, இங்கு ஏதுமில்லையே என்று கைவிரித்து நிற்பவை.
கையெழுத்து
சுசீலாவின் கைவிரல்கள்
பார்த்த பரவசம்
அறையில் மீண்ட பிறகும்
அதன் பாதிப்பு;
ஐந்து விரல்களையும் இணைத்து
விரித்த வெற்றிலை போன்ற
என் கை கண்டு வெறிக்கின்றேன்,
ஒரு கணம்
கபிலரின் கை நினைவு;
மறு கணம்
“எவ்வளவு பாபகிருத்தியங்கள்,
துஷ்பிரயோகங்கள்,
மனமறிந்த பொய்கள்”
இவ்வளவும் ஒரு கைப்பரப்பில்
அரசு செலுத்துகின்றன.
என்ற நினைவில் மனம் புரட்டுகிறது.
அப்படி எழுதத் தெரியாதவனுமில்லை
எல்லாம் எதற்காக?
பாஸ்டர்நாக் கவிதை ஞாபகம் வந்தது.
“உனக்கு உரியவை அனைத்தையும் கொடுப்பது –
இதுதான் படைப்பு”
அப்படி இல்லாமல்,
காது செவிடாகக் கூக்குரலிட்டு ஆக்கிரமிப்பது
அது இல்லை.
எவ்வளவு கேவலம்
எழுதுவதற்கு ஒன்றும் இல்லாமல் எழுதிக்குவிப்பது,
அதன் பொருட்டு அனைவரும் பாராட்டுவது என்பது
அகஸ்மாத்தாகத் திரும்பிப் பார்த்தபொழுது என் நாய்
(எனக்கும் ஒரு நாய் இருக்கிறது) அதன் வாலைத்
துரிதமாக ஆட்டியது.
எனக்கு என்னிடமிருந்து எப்படித் தப்புவது என்று
தெரியவில்லை.
அடுத்த கணம் ஒரு பிரமை.
என் கையில் தொழுநோய் பிடித்துவிட்டது போல்.
இந்தக் கையை வைத்துக் கொண்டு நான்
எவ்வாறு சுசீலாவை அணுக முடியும்?
இரு நீண்ட கவிதைகள் தொகுப்பில் மழை : மரம் : காற்று என்ற கவிதைத் தொடரும் ஒன்று. இதில் மொத்தம் பத்து பகுதிகள் உள்ளன. மொத்தம் எட்டு நாட்களில் (1975ல்) எழுதியிருக்கிறார். தினசரி வீட்டுத் திண்ணையில் சூரல் நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கவனிக்கிறார். கவனிப்பதைக் கவனிக்கிறார். அப்புறம் எண்ண ஓட்டத்தைக் கவனிக்கிறார். அவ்வப்படி எழுதுகிறார். இதிலுள்ள எல்லாக் கவிதைகளிலும் பொழுதும் இடமும் குறிப்பிடப்பட்டு (‘இப்பொழுது பிற்பகல் சரியாக மணி: 4.30. நான் வெளித்திண்ணையில் சற்றே சாய்வான நாற்காலியில் சாய்ந்திருக்கிறேன்’) துவங்குகிறது. வெறுமனே உட்கார்ந்து நினைவோடையைக் கிளறி வைப்பது கவிதையாகுமா? ஆகாதுதான். ஆனால் நெஞ்சோடு கிளத்திய இந்த வரிகளில் நாமும் மௌனித்து தனிமையுணர்வை அடைகிறோம். (பொதுவாகவே நகுலன் புனைவாக்கங்களில் காணப்படும் குணாதிசயம் இது)
இந்தத் தொடரில் ஓரிடத்தில் இப்படி வருகிறது:
தெருவில் துருப்பிடித்த தந்திக்
கம்பம் ஒரு ஈர மினுமினுப்பில்
துப்புரவாகத் தெரிகிறது
அதன் பீங்கான் குமிழிகள்
மென்மையாகவும் வெண்மையாகவும்
சாவதானமாகத் தோற்றமளிக்கின்றன
நகுலன் நினைவுப்பாதை நாவலில் ஓரிடத்தில் வரும். ‘நீ காட்சிகளை அப்படியே தத்ரூபமாக எழுத்தில் கொண்டுவந்து விடுகிறாய். நான் தொட்டவுடன் சாம்பலாய் அவை உதிர்கின்றன.’ மேலேயுள்ள பத்தியில் இதற்கு மாறான ஒன்றைப் பார்க்கிறோம். மின்கம்பி உச்சிகளில் இருக்கும் சைனா களிமண்ணால் ஆன குமிழிகளைப் பார்த்திருப்போம். அவை சாவதானமாகத் தோற்றமளிக்கின்றன என்று சொல்லும்போது அதைவிடக் கச்சிதமான வரி உள்ளதா என்று ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக எந்தப் பொருளையும் பாருங்கள், புத்தகம், வாளி, போணி, நாற்காலி…இவையெல்லாம் ஓரங்கள் சற்று கூர்மையாக இருக்கும். முனை மழுங்கியவை ஏதோ பலகாலம் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தைத் தரும். உதாரணமாகக் கூழாங்கல். முந்தைய பத்தியில் மனவெறிப்பு குறித்துச் சொல்லியிருந்ததற்கு ஓர் உதாரணம்:
காற்று மரங்கள் ஊடு
விர்ரென்று
ஊளையிட்டுச் சென்றது
உள்ளத்தில் ஒலிக்கிறது
காற்று சற்று ஓய்ந்துவிட்டு
மறுபடியும் சலிக்கிறது.
மழை இன்னும் வரவில்லை
என்னுடன் ஒருவருமில்லை
நான் கூட இல்லை; எவ்வளவு சுகம்
’நான் கூட இல்லை’ என்பதை வேறு சில இடங்களில் அவர் உபயோகித்திருந்தாலும் இந்தவரியை என்னென்னவோ போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. இங்கே இந்தவரி அகந்தையற்ற நிலையை, சூழலோடு ஒன்றிப்போய் இருக்கும் நிலையை, ஏகாந்த நிலையைக் குறிக்கிறது.
பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலில் கதாநாயகனான பாண்டி சொல்வதாய் ஒரு வரி வருகிறது. ‘இங்கே தோண்டத் தோண்ட ஊற்று பீறிடுகிறதே. அப்புறம் ஏன் இந்தக் கவிஞர்கள் கட்டாந்தரையைப் போய் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்?’ ஆனால் அகத்துள் செல்லச்செல்ல சொற்களுக்குப் பற்றாக்குறையாகி விடுகிறது. புறம் சார்ந்து எழுதக்கூடிய கவிஞர்களுக்கு சொற்கள் எளிதில் கிட்டிவிடும். தன்னுள் இறங்குதல் இருட்டறைக்குள் நுழைந்து செல்வதுபோல. அங்கு சொற்களைத் தேடமுடியாது. அவை மங்கலடைந்து இன்னது என்று புரிபடாத நிலைக்குச் செல்கின்றன. சொற்களில் வெளிப்படுத்தும் உத்வேகம் கொண்டவருக்கு இது வேதனையான அனுபவம்.
எறும்பும்
கழுகும்
எனது இலைகளும்
பறவைகளுமாக
நான்
கனவு காண்பேன்
விறகு வெட்டி!
என் நிழலை வெட்டு;
எனக்கு
நானே ஒரு மலடியாகப் போகும்
நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அவஸ்தையிலிருந்து
என்னை விடுவி!!
ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நகுலன் எப்போதும் அங்கேயேதான் இருந்திருக்கிறார். மனவெளி. உள்ளும் புறமுமாகச் சென்றுவரவும், யதார்த்தத்தோடு அக உலகைக் கலக்கும் ஒரு நடையையும் கண்டடைந்தபின், அவர் நோக்கம்போல சொற்களை உருட்டி விளையாடத் தொடங்குகிறார். ஒலி – அதிலிருந்து சொல் – அதிலிருந்து அர்த்தம் – அதை உடைத்துச் சிதறி அதன் தெறிப்பின் மினுக்கத்தில் இரசித்துக் கிடப்பது. இந்தவகையான பல இடங்களை அவரது கவிதைகளில் காணமுடியும். ஒரு கட்டுரையில் கவிஞனின் வாக்குமூலம் என்று பின்வருமாறு சொல்கிறார்:
“வாழ்க்கையின் அர்த்தமின்மையும் அபத்தமும் என்னை எப்போதுமே பலமாகத் தாக்கி வருகிறது. இதில் அடுத்தாற்போல் என்ன செய்வதென்றே புலப்படவில்லை. இந்தக் குழப்பம் இப்போதும் எனக்குத் தீர்ந்த பாடில்லை. இந்த நிலை என் மனசில் முழுசாக வியாபகம் கொண்டிருக்கிறது. இதில் எனக்குச் செய்ய ஒன்றுமில்லை. கையாலாகவில்லை. இந்தச் செயலற்ற நிலையின் கேவலம் என்னைத் தொடர்ந்து ஹிம்ஸிக்கிறது”
எல்லாரும் பயப்படுகிறார்கள்
நான்
இந்த வெளித் திண்ணையில்
இந்தச் சற்றே சாய்வான
நாற்காலியில்
இருந்து கொண்டு
என் முன் இருக்கும்
புல்வெளியைப் பார்த்துக்
கொண்டிருக்கிறேன்
பறவைகள்
சப்திக்கின்றன
இவர்
ஒரு தட்டில்
அரிசியைத்
தனது சிதறின
சித்தத்தைப்போல்
சிமெண்ட்
தளத்தில் இரைக்கிறார்
ஆனாலும்
ரகு
இதற்கெல்லாம்
நாம் பயப்படவேண்டிய
அவசியமில்லை
நாம் ஒன்றையும்
அடையாளங் கண்டு
கொள்ளவும்
அவசியமில்லை
நிமித்த மாத்திரம் பவ
என் முன் வெயில் நிதானமாக
அடித்துக் கொண்டிருக்கிறது.
நகுலன் கட்டுரைகளில் நாம் வேறொரு நபரைப் பார்க்கிறோம். புனைவில் குகைக்குள் போய் ஒளிந்துகொள்ளும் அவரது குரல் அங்கு இருப்பதில்லை. பொதுவாகக் கவிஞர்களின் கவிதை தாண்டிய எழுத்து எப்போதும் வாசிக்க ஆர்வமூட்டுவது. அவர்களது கவிதையை அணுக அவை படிக்கற்களாகவும் இருக்கக்கூடும். ’மூன்று’ தொகுப்பின் முன்னுரையில் சப்தநயத்துக்கு தான் முக்கியத்துவம் அளிப்பதன் காரணம் குறித்து விளக்குகிறார்: 1) சில சொற்கள் எனக்கு உத்வேகம் நழுவாமல் இருக்க உதவி புரிந்தது. 2) அப்பட்டமான ஓசை மூலம் கூடப் பல மனநிலைகளை எழுப்ப முடியும். 3) கவிதை எழுப்பும் பரவச நிலையை வார்த்தைகளிலிருந்து பிரிக்க முடியாதென்பதால். 4) தேய்ந்துபோன இலக்கிய மரபில் வந்த வார்த்தைகள் கூட சங்கேதங்கள் என்ற அடிப்படையில் அடியோடு அழிந்துவிடவில்லை. 5) எதற்கு அனுபவச் செறிவினால், வெளியீட்டு இறுக்கத்தினால் புரியாத்தன்மையோடு எழுதவேண்டும்? என் அனுபவத்தில் எந்த உயர்ந்த கவிதையிலும் உச்சகட்டம் என்பதில் ஓர் அபூர்வ எளிமை, ஆழம், தெளிவு இருக்கின்றன.
நகுலன் – விக்ரமாதித்யன் இருவருக்கும் சில ஒற்றுமைகளுண்டு. இருவரும் மொழி, ஒலிநயத்துக்கு முக்கியத்துவம் தருபவர்கள். நகுலனின் அத்வைதக் குரலை எட்டிப்பிடிக்க முயல்வதுபோல் விக்ரமாதித்யன் கவிதைகள் தோன்றும். நகுலன் கவிதைகளோ விக்கியின் கவிதைகளை எட்ட முயல்வதுபோல் தோன்றும். அவர் உள்ளே, இவர் வெளியே. நடுவில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கதவு.
ஒரு தாம்பாளத்தில் பின்னங்கரண்டியால் ஒரு தட்டு தட்ட அது அதிர்ந்தொலித்து ரீங்காரம் நீண்டு அடங்கும். அதைத் தொடர்ந்து மறைந்து, திரும்பத் தட்டி மனக்குரல்களை நகுலன் எழுப்புகிறார். மேலே அவர் தரும் ஐந்து காரணங்கள் மீதான எனது பார்வை. 1) உத்வேகத்துக்கு அனுபவமும், அதிலிருந்து இயல்பாகக் கிளைக்கும் உணர்வுநிலையும்தான் ஆதாரம். சொற்களை வலிய ஏற்றுவித்து உத்வேகத்தைத் தருவிப்பது என்பது சாத்தியம் என்றாலும், அது இயல்பான படைப்பூக்கமல்ல. பிரமிள் கூற்றுப்படி, மொழி என்பது கவிதை எனும் மின்னாற்றலைக் கடத்தும் செம்புக்கம்பி மட்டுமே. அந்த ஆற்றலைக் கடத்துவதற்கான உத்வேகமும் அது வரிகளில் வெளிப்படுவதும்தான் கவிதைக்கான அடிப்படை. 2) ஓரிடத்தில் நகுலன் கவிதை நிசப்தத்திலிருந்து ஓசைக்குச் சென்று திரும்ப நிசப்தத்துக்கே சென்றுவிடும் என்று குறிப்பிடுகிறார். அவரது கவிதைகளைப் பொறுத்தவரை இது பொருந்தும். அதாவது மனதில் கவிதைக்கான ‘உத்வேகம்’ அல்லது ‘படைப்பூக்கம்’ இல்லை. ஆனால் எழுதும் ஆர்வம் வருகிறது. தாம்பாளத்தைத் தட்டுவதுபோல, மனதைத் தட்டி ஒலியெழுப்புகிறார். அந்த ஒலியை, சொல்லை அதிர்வுகளாகப் பரவும் நினைவுகளையும், ஒட்டுச் சொற்களையும், சொற்சிதறல்களையும் தொடர்ந்து கவிதையைக் கண்டடைகிறார். 3) இதை ஏற்க இயலாது. தியானத்துக்குள் நுழைகையில் தர்க்கம் என்னும் செருப்பை வெளியே கழட்டிவிட்டு உள்நுழைய வேண்டும் என்பார்கள். அதுபோல ஒரு கவிதையனுபவம் வாசித்தவுடன் நமக்குள் சொற்களாய் நிற்பதில்லை. அந்த அனுபவமாய்ப் படர்கிறது. எழுதும்போதும் அப்படியே. ஒரு மிட்டாயை வாயிலிட்டு சுவைக்கும்போது சுவையைத் தான் உணர்கிறோமே தவிர, மிட்டாய் என்ன நிறம், என்ன வடிவம் என்பது அல்ல சுவை. சொற்கள் மூலம்தான் அனுபவம் என்றாலும், அது கவிஞனின் அனுபவம்->சொற்கள்->வாசக அனுபவம் என்றுதான் இயங்குகிறது. அனுபவத்திலிருந்து அனுபவமே பெறப்படுகிறது/கடத்தப்படுகிறது. கடத்தியாக மட்டுமே சொற்கள் உள்ளன. 4) இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. எந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்பது உணர்வுகதியையும், அகத்திலோடும் மொழியையும் பொறுத்தது. 5) எளிமையாக எழுதவேண்டும் என்ற முன்முடிவோடு எப்படி ஒரு கவிதையைத் தொடங்கமுடியும்? அதை நகுலனின் வார்த்தையில் சொல்வதென்றால் ‘அனுபவ புனர்சிருஷ்டி’ தான் தீர்மானிக்க வேண்டும். (வேண்டுமென்றே புரியாமல் என்னவோ இருக்கிறது என்று பாவ்லா காட்டும் கவிஞர்களைப் பற்றி நாம் கணக்கில் கொள்ளவில்லை)
தனது கட்டுரையில் ஓரிடத்தில், “என் போன்றவருக்குப் படைப்பு பற்றி அடிப்படையான விஷயம் உருவம். உருவப் பிரக்ஞை வேலை செய்து கொண்டிருக்க, அனுபவத்தின் அடிப்படையில் உற்பவித்து, ஒரு நிறைவேற இயலாத, பூர்ணத்தன்மையைச் சாதிக்க முயல்வதுதான் படைப்பு போலும். உருவத்தை அவனவன் வகுத்துக் கொள்கிறான். அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து தொடங்கிய ஒரு விஷயம் உருவமும் வாழ்க்கை அனுபவமும் குறைந்த பக்ஷமாகக் கூட இயங்காத இடத்தில் கலைப் படைப்பு – சாத்தியமில்லை.” இதேபோன்ற கருத்தை அவர் பல கட்டுரைகளில் வலியுறுத்துகிறார். 1) உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிரிக்க முடியாது. 2) உருவம்தான் உள்ளடக்கத்தை மேம்படச் செய்கிறது.
உள்ளடக்கம் குறித்து நாம் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை. உள்ளடக்கம், உருவம் இவை இரண்டுக்கும் பின்னிருக்கும் படைப்பூக்கமே படைப்பை அளவிடச் சரியான கருவி. உருவம் என்பது வடிவத்தைக் குறிப்பது. சொற்தேர்வு, சந்தம், வரிகளின் அமைப்பு, சப்தநயம் போன்றவை. இதையே பிரதானமான ஒன்றாகச் சொல்கிறார். அரிஸ்டாட்டிலிய சிந்தனைப்படி எந்த தர்க்கத்தையும் அதன் உள்ளடக்கத்தை வைத்துப் பார்ப்பதைவிட அதன் வடிவத்தை வைத்து உய்த்தறியலாம். உள்ளடக்கத்தை மட்டும் பார்ப்பது ஒருவகை அபத்தம் என்றால் வடிவத்தை முதன்மைப்படுத்துவது இன்னொருவகை அபத்தம். நண்பருடன் விவாதிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பேசும்போது பேசும் கருத்தைப் பொறுத்து வார்த்தைகள் கோர்வையாகத் தானாகவே வந்து விழுகின்றன. இவை நினைவின் சேகரத்திலிருந்து தடையின்றி நடக்கும் ஒரு செயல். இதில் கவனம் செலுத்த வேண்டிய தேவையே இல்லை. முதல் கவனம் நம்மிடம் சொல்வதற்கு உந்துதல் (விவாதத்தைப் பொறுத்தவரை கருத்து) உள்ளதா என்பதுதான். எந்தளவு உந்துதல் வலுவானதாக இருக்கிறதோ, அந்தளவு வெளிப்பாடும் சிறப்பாக அமைய ‘வாய்ப்புள்ளது’. வடிவம் சிறப்பாக இருப்பதனால் கருத்து/படைப்பூக்கம்/உந்துதல் சிறந்ததாகிவிடாது. நகுலன் படைப்புக்கு அடித்தளமாக அனுபவத்தின் அடிப்படை உள்ளதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பாக உருவத்தைக் கொண்டுவந்து நிறுத்துவதுதான் இங்கே விவாதத்துக்குரியது.
’மூன்று’ கவிதைத் தொகுப்பு இராமாயணத்திலிருந்து சில பாத்திரங்களின் குரல்களாக எழுதப்பட்டுள்ளது. சில வரிகள் வாசிப்பதற்கு நகைச்சுவையாக உள்ளன (திரை வீழ்ந்தாலும்/திரைகள் ஓய்வதில்லை). இந்த மூன்று நீண்ட கவிதையை வாசிக்கும்போது இதைப் பாடலாசிரியர் வாலிகூட எழுதிவிடுவாரே என்றுதான் தோன்றுகிறது.
’மூன்று’க்குப் பின் ’ஐந்து’ என்றொரு தொகுதியை சொந்தச் செலவில் கொண்டு வருகிறார். குட்டி கிருஷ்ணன் என்பவருக்கும் அவருக்கும் நடந்த சம்பாஷனையாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“அந்த மஞ்சள் – வெள்ளைப் பூனை என்ற ஆங்கில நாவலை எழுதி முடித்துவிட்டீர்களா?”
“நீ ஒன்று பிரசித்தி பெற்ற பிரசுரகர்த்தாக்கள் என்னிடம் கோபப்படுகிறார்கள். என் புஸ்தகம் விலை போகவில்லை என்று. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு எழுதத்தான் தெரியும். நான் சொல்வது தவறாக இருக்கலாம். ஒரு வியாபாரி என்றால் எந்தச் சரக்கையும் விற்பதற்குள்ள சாமர்த்தியம் வேண்டும்”
நகுலன் எழுதியதில் வாய்விட்டு நான் சிரித்தேன் என்றால் இந்த ஓரிடத்தில்தான்.
’ஐந்து’ தொகுப்பின் முன்னுரையிலும் ஒலிப்பு மீது அவருக்கிருக்கும் பிடிமானத்தைச் சொல்கிறார். படைப்புக்கு உத்வேகமே பிரதானம் என்பதை அவர் மறுக்கவில்லை. ஆனால் அதை ஒலிப்பின் மூலம் தூண்ட முடிவதாகக் குறிப்பிடுகிறார். நகுலனுக்கு திருக்குறள் மீது ஆழமான பிடிப்பு உண்டு. சொற்களைச் சிலநேரங்களில் தாராளமாக வாரியிறைக்கும்போது குறளை ஒப்பிட்டுப் பார்க்கிறார். புதுக்கவிதையின் நடையில் ஏன் குறளின் தாக்கம் இல்லை என்றொரு கேள்வியையும் முன்வைக்கிறார். திருக்குறளை நீதிநூலாக மட்டும் பார்க்கும் போக்கு இன்னும் தொடரத்தான் செய்கிறது. இங்கு ஹைக்கூ முயற்சிக்கப்பட்ட அளவு குறள் வடிவம் முயற்சிக்கப்படவில்லை.
‘ஐந்து’ தொகுப்பில் குகன், விராதன், சவரி, சடாயு, வீடணன் ஆகியோரின் கூற்றாக நீள்கவிதைகள் எழுதியிருக்கிறார். இது குறித்துச் சொல்ல பெரிதாய் ஒன்றுமில்லை. வீடணன் தனிமொழிக்கு முன்பாக மட்டும் கவிதையாக இல்லாமல் உரைநடை வடிவத்தைத் தனியாகக் கொடுத்திருக்கிறார். சில வரிகள் மிளிர்கின்றன. அவற்றை மட்டும் பார்க்கலாம்.
“சொல்கிறார்கள்: என் கதைகளில் காணும் நசுங்கின பித்தளைச் செம்பு, சாக்கடைத் தண்ணி, அழுக்கு வேஷ்டியெல்லாம் வெறும் தகவலர்கள் என்று. இல்லை. நவீனா இல்லை. பார்ப்பது என்பதும் படைப்புத் தொழில் பாற்பட்டது தான். பார்வை என்பதே ஞானம்தான். மனிதனுடைய கண் வெறும் ஒரு காமிரா இல்லை.”
“நம்பிக்கை தளராமல் பதற்றமடையாமல் என்னுடன் இருப்பது மீண்டும்வர, எழுதுவது என்பதுகூட என்னுடன் இருப்பதற்கு நான் காத்திருப்பது என்பதுதான் என்பதை நான் கண்டுகொண்டேன்.”
கோட்ஸ்டாண்ட் கவிதைகள், சுருதி இந்த இரண்டு தொகுப்புகளில்தான் நகுலனின் தனிமுத்திரையைக் காண்கிறோம். இதற்கு முந்தையவற்றில் முழுக்கவே நகுலனின் தனித்தன்மை வெளிப்பட்டிருந்தாலும் நவீன கவிதையில் அவரது தனிமுத்திரை இங்குதான் வெளிப்படுகிறது. இந்தத் தொகுப்பின் முதல் கவிதை:
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
இந்தக் கவிதையில் நகுலனிடம் விக்ரமாதித்யனைப் பார்க்கிறோம். ஒருவித முரண்நகையாக, சித்தர் பாடல் தன்மையுடன் மிக எளிய வரிகளில் அமைந்த கவிதை. எதுகையும் மோனையும் பாந்தமாய் அமர்ந்திருக்கிறது. இதன் உட்கருத்து மிகச் சாதாரணமானது. எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் இந்த வரிகளை வாசிக்கும்போது நம்முள் ஒரு வெற்றிடத்தை உணர்கிறோம். ‘தான்’ என்ற சொல் இக்கவிதையில் வைக்கும் அழுத்தம் பிற சொற்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்துகிறது. இதன் உட்கருத்தை வேறு வடிவில் எப்படி முயன்றாலும் இதுபோன்ற அழகை அது தந்துவிடாது என்பதும் உண்மை. மேலேயுள்ள கவிதை வடிவத்தில் திருக்குறளின் தாக்கம் இருப்பதாகச் சொல்லலாம்.
இந்தக் கவிதையை விளக்க வேண்டியதில்லை. நகுலனின் எந்தக் கவிதையையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. மிக நேரடியாக வாசிப்பவரைத் தாக்கக்கூடிய வரிகள். இதன் தத்துவார்த்த பின்புலம் குறித்து பொதியவெற்பன் அவர்களின் நல்லதொரு பதிவு இது: https://www.facebook.com/pothi.pothi.395/posts/1047381529443255
இன்னும் மூன்று வருஷங்கள் என்ற நீள்கவிதையின் முதல் சில வரிகள்:
இன்னும் மூன்று வருஷங்கள்
என்று சொன்னார்கள்;
இதைப் போல
எவ்வளவோ மூன்று வருஷங்களை
அவை
போகிற போக்கிலே விட்டிருக்கின்றான்
திரும்பிப் பார்க்கையில்
காலம் ஒரு இடமாகக் காக்ஷி
அளிக்கிறது
திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சியளிக்கிறது என்று சொல்லும்போது மீண்டும் நகுலன் நினைவுப்பாதையில் வரும் அந்த வரி நினைவுக்கு வருகிறது. நீ வரிகளில் காட்சியைத் தத்ரூபமாகக் கொண்டுவந்து விடுகிறாய். நான் தொட்டால் அவை சாம்பலாய் உதிர்ந்துவிடுகின்றன. இந்தக் கவிதையில் காற்றை அள்ளிப்பிடித்துக் காட்டிவிடுகிறார். பௌதீகவியலாளர் கார்லோ ரோவலி காலம் என்பது ஒரு பொய் நம்பிக்கை என்கிறார். நடந்தவை உள்ளே கிடந்து அலைக்கழிக்கின்றனவே, இதுவரை சேகரமானவை வரிசையாகவோ வரிசை குலைந்தோ மங்கலாய்த் தெரிகிறதே அது என்ன. அது ஓர் இடம். சிலநேரம் இவர் சொற்கள் மூலம் அர்த்தங்களைப் பஸ்பமாக்க முயல்கிறாரோ என்று தோன்றுகிறது. (சொற்களிலிருந்து நிசப்தத்துக்குத் திரும்புதல் என்றுதானே அவரும் சொல்கிறார்).
மூச்சு நின்று விட்டால்
பேச்சும்
அடங்கும்
இந்த ரீதியில் ஆங்காங்கே சில துணுக்குகள் எழுதி வைத்திருக்கிறார். இவற்றுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. ராமச்சந்திரன் என்ற கவிதை பலமுறை பலரால் பேசப்பட்ட இவரது குறிப்பிடத்தக்க கவிதை. நகுலன் அக உலகும் புறவுலகும் காட்டும் முரணை ஸ்டேஷன் என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். கடைசிவரியை வாசிக்கும்போது, கவிதை மீள் வாசிப்பைக் கோரி வேறொரு பரிமாணத்தை அளிக்கிறது. அந்நியமாதலை அற்புதமாக இந்தக் கவிதை வெளிப்படுத்துகிறது.
ஸ்டேஷன்
ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது
நகுலன் கவிதைகளில் உச்சமாக கோட் ஸ்டாண்ட் கவிதைகளைச் (மொத்தம் 10 கவிதைகள்) சொல்லலாம். இவை தொடர்ச்சியாக அமைந்தவை. உடலிலிருந்து அந்நியப்பட்டு பிசாசுபோலத் திரிவதை கவிதை படம்பிடிக்கிறது. கோட் ஸ்டாண்டில் உடலையும் சேர்த்துக் கழட்டிப் போட்டுவிட்டு நடமாடுகிறார். உடலில்லாமல் இப்போது நிழலையும் பார்க்கமுடியவில்லை. தன்னுடைய நிழலைக் கண்டுபிடிப்பது எப்படி? நான் இங்குதான் நடமாடுகிறேன். ஆனால் நிழலைக் காணோம். ஆழ்மனதை அறிந்துகொள்வதற்கான தேடலாக இதைப் பார்க்கமுடியும். இதில் நான்காவது கவிதை இப்படித் தொடங்குகிறது:
வேறொரு நண்பனைப் பார்க்கச்
சென்றான்
இப்பொழுதெல்லாம் இது ஒரு
பழக்கமாகிவிட்டது
போன இடத்தில் அவன்
வெளியே போய்விட்டான்
என்றார்கள்
“என்னைப் போலவா?” என்று
கேட்கச் சென்றவன்
… … … …
எத்தனை முயன்றும் இந்தத் தலையை, இந்த உள்ளத்தை அல்லது இந்த உடலைத்தாண்டி வெளியேற முடிவதில்லை. நகுலன் மிக எளிதாகச் செல்கிறார். அவரால் அப்படி சிந்திக்கவும் எழுதவும் முடிகிறது. சில எழுத்தாளர்கள் கதையில்லாத கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பல நகரங்கள், பல தேசங்கள் சுற்றித் திரிந்தாலும் அவர்கள் கதைகளில் கதை இருப்பதில்லை. அதேபோல் நகுலன் தன் மனவெளியை விட்டு வெளிவர மறுக்கிறார். அவரது வரிகள் சிலசமயங்களில் கடும் மனச்சோர்வை அளிப்பவையாக, அதன் எல்லையைத் தொடப்போகும்போது மின்சாரம் பாய்ந்ததுபோல் வரிகள் கிடுகிடுக்கின்றன. இந்தக் களமும், இந்த எழுத்துக்களும் வேறெவராலும் தொடமுடியாதபடி நிற்கின்றன. தமிழில் தன்-எழுத்து வகைக்கு நகுலன் மட்டுமே முன்னுதாரணமாய் இருக்கிறார்.
இதில் எட்டாவது கவிதையில் எண்பது வயதாகும் அம்மா, இப்போது அருகில் சென்றாலும் முகத்தையும் கழுத்தையும் தடவி அவன் உருக்கண்டு உவகையடைகிறாள். உள்ளே ஒரு குரல், ‘அவள் எந்தச் சுவரில் எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்?’. ஆனால் அவளைப்போல தன் உடலைத் தானே தடவிப்பார்க்க வேண்டும் போலுள்ளது. உடலோ கோட்-ஸ்டாண்டில் கிடக்கிறது.
பத்தாவது கவிதை:
அந்த அறையில் அவன்
இல்லை
கோட் ஸ்டாண்ட் இருந்தது
அங்கு நால்வர் இருந்தனர்
அவர்கள்
புதுக்கவிதையைப் பற்றி
அ நாவலைப் பற்றி
அதைப் பற்றி
இதைப் பற்றி
புதிய முயற்சிகள் பற்றி
இப்படியாக இப்படியாக
என்னெவெல்லாமோ
எதைப் பற்றியெல்லாமோ
எப்படியெல்லாமோ
பேசிக் கொண்டிருந்தார்கள்
கோட்-ஸ்டாண்ட்
அவர்களைப் பார்த்துக்
கொண்டிருந்தது.
இந்தத் தொகுப்பில்தான் பின்வரும் கவிதையும் உள்ளது:
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது?
எல்லாம்
நான் இல்லாத இடம் சூனியமா? இல்லை. அங்கு எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. எது யாருமில்லாத பிரதேசம்? நகுலன் கவிதைகளில் தியான அனுபவங்களை, அதற்கான மனோநிலைகளைப் பார்க்கிறோம். எனவே இயல்பாகவே, ஜென் கவிதைகளின் தொனியும், சித்தர் பாடல் தன்மையும் வெளிப்படுகின்றன.
நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை
மேலும் இந்தத் தொகுப்பின் கடைசியில் ஒருவரிக் கவிதைகள், இருவரிக் கவிதைகள் உள்ளன. இவையும் சரி மேலேயுள்ள மூன்று நான்கு வரிகளுள்ள கவிதைகளும் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கமாகவே படுகிறது. இந்தக் கவிதைகளில் எந்தச் சொல்லையும் நீக்கமுடியாது. அத்தனை எளிமையும், சுருக்கமுமாக கச்சிதமாக வடிவெடுத்துள்ளன.
சுருதி தொகுப்பிலும் வடிவத்தைப் பொறுத்தவரை கோட்-ஸ்டாண்ட் கவிதைகளைப் போல இருந்தாலும் இவை கச்சிதமாகக் கூடி வரவில்லை. அவரிடம் வழக்கமாகக் காணும் தீப்பற்ற வைக்க முயன்று வெறும் புகையாகக் காற்றில் அடித்துச் செல்வதுபோல கவிதை ஒன்றுமற்ற சூனியத்தைக் கண்டு விலகியோடுகிறது. இத்தொகுப்பில் மிகச்சிறந்த கவிதையாக `சுருதி` என்ற தலைப்பிட்ட கவிதையைச் சொல்லலாம். இதுவும் இன்றளவும் பலராலும் குறிப்பிடப்படும் ஒன்று. மரணம் சுகமானதாய் இருக்கமுடியுமா? எந்த மரணம் சுகமானது? மனம் இறப்பது ஒருவகை மரணம். நிறையக் குடித்து மனதை மூழ்கடிக்கலாம். இருந்திருந்தே மனதை மரணிக்க வைக்கலாம். வாழ்ந்தும் மரணிக்க வைக்கலாம். பேசுபவன் இருக்கும்வரை மனம் இருக்கும். பேசுபவனையும், சொற்களையும் கொல்லமுடியவில்லை. அப்படியென்றால், அர்த்தத்தைக் கொன்றுவிடு.
சுருதி
ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
நிசப்தத்திலிருந்து ஓசைக்கும் அங்கிருந்து கவிதை முடிந்தபின் நிசப்தத்துக்குத் திரும்புவது என்ற அவருடைய பார்வையுடன் முரண்படுகிறேன். நிச்சயம் கவிதை எழுதுமுன் நிசப்தம் இல்லை. இருந்திருந்தால் எழுதவேண்டியதில்லை. இல்லை, படைப்பதற்கான மன ஓர்மை ஒருவித நிசப்தமே; சொற்களுக்காகக் காத்திருக்கும் அந்த கணங்களில் மனம் ஒன்றாய்க் குவிந்து நிற்குமிடம் நிசப்தமே என்றால், கவிதை எழுதப்பட்டபின் அதேயிடத்துக்கு நாம் திரும்புவதில்லை. சுமை இறங்குவதுபோல் ஒரு கனம் குறைந்து நாம் இலகுவாகிவிடுகிறோம். ஓர் ‘அனுபவம்’ நேர்ந்திருக்கிறது. இது அத்தனை எளிய சூத்திரமல்ல.
கவிதைகள் மீதான நகுலனின் பார்வை ஆச்சரியமானது. ஒருவகையில் இங்கேயும் கவிஞர் விக்கிரமாதித்யனுக்கும் இவருக்கும் ஒரே கருத்து இருப்பதாகத் தோன்றுகிறது. மொழியே முதல். அதுதான் அர்த்தத்தைத் தருகிறது. கவிதையில் அதைத்தான் கவனிக்க வேண்டும் என்கிறார்கள். எந்தக் கவிஞரையும் நகுலன் நிராகரிக்கவில்லை. (ஆச்சரியகரமாய் ந.பிச்சமூர்த்தி கவிதைத் தொகுப்பில் ஏழு கவிதைகள்தான் தேறுகின்றன என்றிருக்கிறார்). ஞானக்கூத்தனைக் கொண்டாடுகிறார். கலாப்ரியாவை, பிரம்மராஜனை தனது அபிமானக் கவிஞர்களாகக் குறிப்பிடுகிறார். சொற்களைப் பயன்படுத்தும் விதத்தின் மீது கொண்ட ஆர்வமும், பிரேமையுமே அவரது இரசனைக்கு மூலமாக இருந்திருக்கின்றன. கவிதை விமர்சனம் என்பது இரசனை, அலசல் இவையிரண்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். நகுலன் ஓர் இரசனாப்பூர்வ விமர்சகர். ஆனால் அவரது கவிதை குறித்தான கட்டுரைகள் ஆரம்பகட்டத்தில் எழுதிய ஒன்றிரண்டைத் தவிர மற்றவை வாசித்துப் பொருள்கொள்ளும் தன்மையுடையவை அல்ல. இரசனை விமர்சனத்தின் அடிப்படை நுகர்தல். அனுபவத்துக்கும் நுகர்வுக்கும் வேறுபாடு உள்ளது. அனுபவத்தில் அனுபவிப்பவன் பாதிக்கப்படுகிறான். நுகர்வில் அப்படியல்ல. நுகர்பவன் எப்போதும் தன்னைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான். தனக்கு இன்பமூட்டும் வஸ்துவாகவே படைப்பை அணுகுகிறான். ஓரிடத்தில் நகுலன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
”எந்தப் படைப்பும் நமக்கு அது கட்டமைப்பின் சிறப்பினால், நடை உயர்வினால் கவிஞனின் பிரத்யேகப் பார்வையால், நமக்கு ஒரு கலை இன்பத்தைத் தருகிறது.” (1982)
”கவிதை அர்த்தத்திலிருந்து விடுபட்டது; கவிஞன் தன் அனுபவத்திலிருந்து சிருஷ்டிப்பதுவே கவிதை” (1998) என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். இது அவரது கவிதைகள் முழுவதும் அகவுலகை மையம் கொண்டிருப்பதை விளக்குகிறது.
நகுலனின் நில் போ வா என்ற கவிதை நகுலனைத்தவிர வேறு யாருக்கும் பிடிபடாத ஒன்று. இந்தக் கவிதை குறித்து தனியாக ஒரு கட்டுரையே எழுதி விளக்கியிருக்கிறார். அதில்,
“நான் எதை எழுதினாலும் என்ன எழுதுகிறோம் என்ற பேதமின்றித்தான் எழுதுகிறேன். எழுதி முடித்தபின்தான் என்ன எழுதினேன் என்று எனக்கே தெரிகிறது. குறளில் பழக்கம் உள்ளவர்களுக்கு ’கற்றபின் அதற்குத் தக நிற்க’ என்ற வரியில் கடைசி வார்த்தையிலிருந்து “நில்” என்றும், ’வா போ’ என்பது ’மயன்’ -போவென்று அழைத்து/வாவென்று வெருட்டி” என்ற வரியிலிருந்தும் வந்தது.”
சொற்களைப் பிரதானமாகக் கொண்டு கவிதை சமைக்கையில் இப்படியான அபத்தங்கள் நிகழத்தான் செய்யும். ஆயினும் தனது தீவிரத்தன்மையினால், சொற்கள் அகவுலகின், தனிமையின் எதிரொலிப்புகளாக சூனியத்தை நோக்கிய நகர்தல்களாக அமைந்திருப்பதாலும், அவரது தன்-எழுத்து, மன-எழுத்து நடைகளினாலும் நகுலன் கவிதைகள் தமிழ்க் கவிதைகளில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளன.