Monday, Aug 8, 2022
Homeபடைப்புகள்கட்டுரைகள்தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்

தாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்

தாயுமானவர் பாடல்களில் இலக்கியத் தன்மையை ஆராயப் புகுதல் ஒரு வியர்த்தமான செய்கையில்லை என்ற அடிப்படையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். எந்த இலக்கிய நூலும் வாசகனின் மனச் சாய்வினால்தான் பரிபூர்ண உருவமுறுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஒரு முறைக்குப் பல முறையாக தாயுமானவர் பாடல்கள் என் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றன. இன்றும் அவைகளைப் படிக்கையில் “எழுத்து”வில் ஸ்ரீ தரும சிவராமூ ஒரு கட்டுரையில் எழுதியது ஞாபகம் வருகிறது. “இதில் வேகம் இருக்கிறது என்று சொல்வதை விட, இதில் வேகம் இருப்பதினால் இது கவிதை” என்று அவர் சொன்னது தாயுமானவர் கவிதைக்கு முற்றிலும் பொருந்தும். அவர் பாடலில் நாம் ஒரு அனாயாசமான வேகத்தைப் பார்க்கலாம். அவர் உவமைகளைக் கையாள்வதைக் காண்பது ஒரு தனி அனுபவம். மேலும் வடமொழிக் கலப்பும், அவரது சொல்லாட்சியும், இலக்கியக் கொள்கையும் (ஆம், இலக்கியக் கொள்கைதான்) வேறு பக்திக் கவிதைகளில் காணப்படும் இயல்புகளை அவர் கவிதையும் தாங்கியிருப்பதையும் நாம் படித்து மகிழ வேண்டியவை.

அவர் தத்துவ தரிசனத்தைப் பற்றி இரண்டாம் பட்சமாகத்தான் நான் எழுத எடுத்துக்கொண்ட போதிலும் அவர் தன் தத்துவக் கொள்கைகளுக்கு எவ்வாறு இலக்கிய ரூபம் கொடுத்திருக்கிறார் என்பதையும், எவ்வெக்கருத்துகளுக்கு முக்கியத்துவும் அளித்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொள்வது ஒரு இலக்கிய அனுபவமாக முடியும்.

தாயுமானவர்

18-ஆம் நூற்றாண்டில் வசித்தார் என்பது ஒரு முடிவு. அகண்ட சச்சிதாநந்தத்தைப் பாடிப்புகழ்ந்த அவர் தன் வாழ்வில் தன் வேலையை நீத்துத் துறவு பூணக் காரணமாக இருந்த அனுபவத்தைப் பற்றிப் பாடல்களில் குறிப்பாகவேனும் கூறாதது அதிசயமில்லை. ஆனால் வாழ்வில் மிகவும் மென்மையாக வாழ்ந்தவர் என்பதும், அத்துவித நிச்சயம் படைத்தவர் என்பதும் சில பாடல்கள் மூலம் தெரிகிறது. இப்பாடல்கள் இலக்கியச் சுவை பொருந்தியதாகவும் இருப்பனவாக நான் கருதுவதால் அவைகளைப் பற்றி இங்கு கூறலாம் என்று நினைக்கிறேன். மென்மையான உள்ளம் படைத்தவர் என்பதைக் கீழ்வரும் பாடல்கள் எவ்வளவு லலிதமாகத் தெரிவிக்கின்றன. “சுகவாரி” என்ற பகுதியில் 5 ஆவது பாடல் இவ்வாறு நமக்குத் தாயுமானவரைப் படம் பிடித்துக்காட்டுகிறது.

“வெந்நீர் பொறாதெனுடல் காலில் முள் தைக்கவும்

வெடுக்கென்று அசைத்தெடுத்தால்

விழியிமைத்து அங்ஙனே தண்ணருளை நாடுவேன்;

வேறொன்றை யொருவர் கொல்லின்

அந்நேரம் ஐயோவென் முகம் வாடி நிற்பதுவும்

ஐய நின்னருள் அறியுமே

ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான்; என்னை

ஆண்ட நீ கைவிடாதே

இந்நேரமென்றிலை உடற்சுமையது1 ஆகவும்:

எடுத்தாலிறக்கவென்றே

எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயமுண்டு2; ஆயினும்

இறைஞ்சு சுகராதி யான3

தொல் நீர்மையாளர்க்கு மானுடம் வகுத்த அருள்

துணையென்று நம்புகின்றேன்,

சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரஞ்சோதியே சுகவாரியே

 • இந்நேரம் உடல் விழுமென்பதில்லை. 2. கடமை 3. தீர்க்க ஆயுளைப் பெற்றவர்)

 

இங்கு மற்றப் பாடல்களில் போல் பொதுப்படையாக இல்லாமல் தாயுமானவர் தனிமனிதராகப் பேசுகிறார் என்று நாம் கொள்வதில் தவறொன்றுமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. “மெத்தப் பயந்தவன் நான்” என்ற ஒரு இனிய அர்த்தத்தைக் கண்ணிகளுள்ளும் ஓரிரண்டு சுட்டிக் காட்டுகின்றன.

“பராபரக் கண்ணி”யில் 52-ஆம் கண்ணி இவ்வாறு நிற்கிறது.

“துச்சன் என வேண்டாம்; இத் தொல்லுலகில் அல்லல் கண்டால்

அச்சம் மிகவுடையேன் ஐயா பராபரமே”

இதைப் போலவே வேறொரு பாடலும் நமது கவனத்தைக் கவருகிறது. இவ்வுடலின் சுகானுபவத்திலேயே சுவர்க்க அனுபூதியைப் பெறுகிறோம் என்பது ஒரு முடிவு. ஆனால் தாயுமானவர் அத்தகைய அனுபவத்தினூடும் அதைத் தாண்டி ஒரு இன்ப அனுபவம் காணக்கிடைக்கிறது, மனம் நாடுகிறது என்று ஒரு பாடலில் இலக்கியப் பொலிவுடன் கூறுகிறார். இப்பாடலில் அவர் தனிமனிதனாக அத்துவித நிச்சயமடைந்த ஒருவராக நமக்குக் காட்சி அளிக்கிறார். இப்பாடல் “சச்சிதாநந்த சிவம்” என்ற பகுதியில் கடைசியாக நிற்கும் 11-வது பாடல். இதுவும் அவர் மென்மை வாழ்வைக் காட்டுகிறது. பாடல் வருமாறு:

கொந்தவிழ் மலர்ச் சோலை நன்னீழல் வைகினும்

குளிர்தீம்புனல் கையள்ளிக்

கொள்ளுகினும், அந்நீரிடைத் திளைத்து ஆடினும்

குளிர் சந்த வாடை, மடவார்

வந்து உலவுகின்றனதென, முன்றிலிடை உலவவே

வசதி பெறு போதும், வெள்ளை

வட்ட மதி பட்டப் பகற்போல நிலவு தர

மகிழ்போதும், வேலையமுதம்1

விந்தைபெற அறுசுவையில் வந்ததென அமுதுண்ணும்

வேளையிலும், மாலை கந்தம்

வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம்

விளையாடி விழிதுயிலினுஞ்,

சந்ததமும் நின்னருளை மறவா வரந்தந்து

தமியேனை ரக்ஷை புரிவாய்

சர்வபரிபூரண அகண்ட தத்துவமான

சச்சிதானந்த சிவமே.

 • சந்தனம்)

இவ்வாறே இன்னுமொரு பாடலில் அவர் அத்துவித நிச்சயம் பூண்டவர் என்ற நிலையிலும் தான் தனிமனிதனாக எவ்வாறு தன் பாடல்களைப் பாடினார் என்று தன் இலக்கியக் கொள்கை என்று நாம் கொள்ளும் வண்ணம் பாடுகிறார். இப்பாடல் “சித்தர் கணத்தில்” 8-ஆவது பாடலாக நிற்கிறது. பாடல் வருமாறு:

கன்னல் அமுதெனவும் முக்கனியெனவும் வாயூறு

கண்டெனவும் அடியெடுத்து

கடவுளர்கள் தந்ததல, அழுதழுது பேய் போற்

கருத்திலெழுகின்ற தெல்லாம்

என்ன1தறி யாமையறி வென்னும் இருபகுதியால்

ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு

இன்னல் பகராது உலகம் ஆரா2மை மேலிட்

டிருத்தலால், இத் தமிழையே

சொன்னவன் யாவன், அவன் முத்தி சித்திகளெலாந்

தோய்ந்த நெறியே படித்தீர்!

சொல்லுமென அவர், “நீங்கள் சொன்ன அவையிற் சிறிது

தோய்ந்த குண சாந்தனெ”னவே

மின்னல் பெற3வே சொல்ல அச்சொல் கேட்டு அடிமை மனம்

விகசிப்பது எந்த நாளோ

வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற

வித்தகச் சித்தர் கணமே,

 • எனது, 2. பேரன்பு, 3. பிரகாசம் உண்டாகப் புகழ)

இந்தப் பாடல் மிகவும் அடித்தளமான ஒரு பாடல் என நான் நினைக்கிறேன். இதில் இலக்கியம் எழுவதே தனி மனிதனின் த்வைத அறிவினாலும் தனித்துவத்தினாலும் என்பதுமன்றி, அத்தன்மை பற்றிதானும் இலக்கியம் எவ்வாறு வாழ்வில் முதல் ஸ்தானத்தைப் பெற முடியாது என்பதையும் இலக்கியம் எவ்வாறு உண்மையை எடுத்துக்காட்ட உதித்ததில்லை என்பதையும் கூறிவிட்டு, (சரித்திர உண்மையைப் போல இலக்கிய உண்மையும் ஒரு குறுகிய உண்மைதான்!) மிகவும் கெட்டிக்காரத்தனமாக என்று நாம் நினைக்கும்வாறு தன் பாடல்தானும் விளக்கம் பெறுவது அடியார் போற்றுவதால் என்று அடிகள் கூறுவதும் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. நான் கோடிட்டு அடையாளப்படுத்தியிருக்கும் வரிகள் ஒரு இலக்கிய – சிருஷ்டி உண்மையை, இலக்கிய – சிருஷ்டியில் என்றும் நிலவும் ஒரு நியதியை, எடுத்துக் காண்பிக்கிறது என்றும் நினைக்கிறேன். இங்கும் தாயுமானவர் தன்னை எவ்வாறு வேறு பக்திப் பாடல்களைப் பாடியவர்களிலிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார் என்பதையும் காண்கிறோம்.

மேலும் தாயுமானவர் இயற்கையாகவே ஒரு மென்மையான நகையாடும் தன்மை உடையவர் என்பதை நாம் “பரிபூரணானந்தம்” என்ற பகுதியில் 10-ஆவது பாடலிலிருந்தும், “சித்தர்கணத்தில்” 10-ஆவது பாடலிலிருந்தும் தெரிந்துகொள்கிறோம். இவையும் அவர் தனிமனிதன் என்ற நிலையைத் தெரிவிக்கின்றன என்று கருதுகிறேன்.

உவமைகள்

தாயுமானவரின் இத்தகைய ஒரு இலக்கிய உருவத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் பாடல்களைப் படித்த எனக்கு அவர் பல இடங்களில் உவமைகளை ஒரு தனிப்பண்புடன் ஆண்டிருப்பதாகத் தோன்றியது. உவமை, விஷயத்தை விளக்குகிறது என்பது மாத்திரமின்றி, தன் வகையில் வாசகன் மனதில் மின்னலிட்டுக் கொண்டிருப்பதினால்தான் இலக்கியச் சிறப்பு பெறுகிறது. மேலும் சில இடங்களில் இப்பண்பை மீறித் தன் அழகிலேயே வாசகனை ஆழ்த்தி விடுவதும் உண்டு. சில இடங்களில் கவிஞன் நாம் வழங்கும் உவமைகளை மாற்றியும் அமைக்கிறான். கீழே தாயுமானவர் தரும் உவமைகளின் ஒரு பட்டியலைத் தருகிறேன். உவமைகளின் வகையைப் பிரித்துத் தரத்தை அனுபவிக்கும் ரஸனையை வாசகருக்கே விட்டுவிடுகிறேன்:

 1. மனம்

“மாதர் சிற்றின்பமோ

என்னில் மகாமேருவரக்கிச்

சுமையெடுமி னென்றுதான் சும்மாடுமா யெமைச்

சுமைகளுமாக்கி நாளுந்

துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தியாவையுஞ்

சூறையிட்டு”ச் செல்லும்

சுமை – சும்மாடு – சுமையாள் என்று ஒரு தொடரில் இயங்கும் இவ்வுவமை நூதனமும் இன்பமும் பயப்பது.

 1. “ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம்”
 2. “நிறை குடந்தான் நீர் கொளுமோ”
 3. தாயன்றிச் சூலுமுண்டோ
 4. பொய்த்துயில் கொள்வான்றனை எழுப்ப வசமோ?
 5. வைத்த சுவரலம்பின் மண் போமோ?
 6. வான் காணவேண்டின் மலையேறலொக்கும்
 7. ஏகதேசம் பூரணத்துக் குண்டோதான்?
 8. வாயாற் கிணறு கெட்டவாறே போல் வாய் பேசிப் பேயானார்க் கின்பமுண்டோ பேசாய் பராபரமே
 9. தோற்பாவை நாலாட் சுமை யாகும்
 10. வாலற்ற பட்டமென
 11. கான்ற சோறென்ன இந்தக் காசினி வாழ்வு
 12. காலால் வழிதேடுங்காலத்தே கண்முளைத்தாற்போல
 13. எச்சிலென்று பூவையிழந்தோர்க்குனைப் போற்றப் பச்சிலையும் கிள்ளப்படுமோ பராபரமே
 14. பச்சை கண்ட நாட்டிற் பறக்குமுனைப் போற் பறந்தேன்
 15. உண்டவர்க்கன்றி உட்பசியோயுமோ

கண்டவர்க்கன்றி காதலடங்குமோ

 1. நாவழுத்துஞ் சொல்மலரோ நாளுதிக்கும் பொன்மலரோ
 2. உடல், தீபம் வைத்த கர்ப்பூரம் போல் வயங்கும்
 3. உன்னுமனங் கற்பூர உண்டை போல கரைய
 4. துருத்திக்குள் மதுவென்னவே துள்ளித் துடித்து என்ன பேறுபெற்றேன்
 5. நித்திரையிற் செத்த பிணம்
 6. உலக வியப்பனைத்தும் ஏட்டுக்கடங்காச் சொப்பனம் போல் எந்தாய் இருந்தது.

 

வடமொழிக் கலப்பும் சொல்லாட்சியும்

உவமைகளுக்குப் பின் நடைவிசேஷமாகக் கருதக்கூடிய வடமொழிக் கலப்பையும் சொல்லாட்சியையும் நோக்கலாம். கலைஞனைப் பற்றியவரையில் இலக்கியத்தையே முழுமுதற்பொருளாகக் கருதுபவனுக்கு மதம், இனம், மொழி முதலிய எல்லாத் தடைகளுமே இலக்கியம் என்ற மகத்தான உண்மையின் முன் தகர்ந்து விடுகின்றன என்றுதான் சொல்லவேண்டும். வடமொழியும் தென்மொழியும் ஒன்று சேர்கையில் சில இலக்கிய அழகை நாம் காண்கிறோம். முதலில் சந்த இன்பம் அருமையாக விளைகிறது. முதல் 13 அதிகாரங்களில் முடிவில் நிற்கும் கடைசி வரிகள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன. அவைகளில் இரண்டினை எடுத்துக்காட்டாகக் கீழே தருகிறேன்.

 1. மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூல

மரபில் வருமௌன குருவே.

 

 1. சுத்த நிர்க்குணமான பரதெய்வமே பரஞ்

சோதியே சுகவாரியே.

பாடலில் சில இடங்களில் வடமொழிப் புணர்ச்சியால் “மனுவாதி வேந்தர், இருக்காதி மறைமுனைவர்” என்ற தொடர்களைக் காண்கிறோம். மேலும் “கருணாகரக் கடவுள்” என்ற அதிகாரத்தில் வடமொழியில் வழங்கும் எதிர்மறையை விளக்கும் முதனிலையைச் சேர்த்து இயங்கும் வார்த்தைகளை உபயோகித்து ஒரு பாடல் முழுவதையுமே என்று சொல்லும் வண்ணம் எழுதிக் காட்டியிருக்கிறார். நகரமும் அகரமும் இதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. ஸ்தோத்திரப் பாடல்களில் வடமொழி வாக்குகள் ஒரு உச்சாடன அழகைக் கொடுக்கின்றன; “பூரணி, புராதனி சுமங்கலை சுதந்தரி” என்று தொடங்கும் பாடல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பல இடங்களில் கச்சிதமாகவும் சிக்கனமாகவும் சக்தி கூட்டவும் வடமொழிச் சொல் சேர்க்கையினால் ஒரு நடை விசேஷத்தைத் தாயுமானவர் வகுத்துக் கொண்டிருக்கிறார். நினைவிலிருந்து எழும் சில உதாரணங்களைக் கொடுக்கிறேன். சங்கற்ப சித்தர், பிரபஞ்சவிலாசம் மானத மார்க்கம், இச்சா சுதந்தரம், இதய சம்மதம், பாப ரூபதேகம், குணக்கேடர், பக்குவ விசேஷர், ஆறுமோ தாபகோபம், பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி, ஆனந்த ரூபமயில், பராபரம், சங்கர சங்கர சம்பு – சிவ சங்கர சங்கர சங்கர சம்பு.

இவ்விருமொழிக் கலப்பிலிருந்து நகர்ந்து சொல்லாட்சியைப் பற்றி நோக்குகையில் தாயுமானவர் தன் உபதேச மொழிகளை ஒரு “சங்கேத” ரூபத்தில் அளித்திருப்பது அவைகள் நம் மனதில் அழியாமல் இருப்பதற்கு உதவுகின்றன. என் மனதில் மிதந்து வருபவைகளைக் கீழே கொடுக்கிறேன். “என்று நீ அன்று நான்”, “அதுவானால் அதுவாவார்”, “கற்றதெல்லாம் மூடம், கற்றதெல்லாம் மூடம்”, “நிராசையின்றேல் தெய்வமுண்டோ”, “ஏதுக்கும் சும்மாயிரு மனமே”, “சிரத்தையென்னும் வாளுதவி”, “இங்கற்றபடி அங்கும்”.

இத்தகைய சொல்லாட்சியிலிருந்து மற்றுமொரு முக்கியமாகப் பக்திச் சுவைப் பாடல்களில் காணப்படும் ஒரு விசேஷத்தை இங்கு குறிப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். கவிதையில் கற்பனையின் உச்சநிலையில் சில இடங்களில் வார்த்தைகள் நலினமடைந்து கிழிகின்றன என்றும், இத்தகைய தன்மையை நாம் கேலிச்சுவை மிகுந்த பாடல்களிலும் காணலாம் என்று ஒரு கட்டுரையில் சி.எம்.ஃபௌரா என்ற ஆங்கில ஆசிரியர் கூறுகிறார். இந்த ஒரு நிலையை தாயுமானவர் பாடல்களில் பல இடங்களில் காண்கிறோம். உணர்ச்சியின் உச்ச வெறியில் வார்த்தைகள் கிழிந்து பரிகச உணர்வில் சென்று தோய்கின்றன. இதற்குப் பொருத்தமாகப் பல தொடர்களை எடுத்துக் காட்டலாம்.

 1. அண்டமுமாய் பிண்டமுமாய் அளவிலாத

ஆருயிர்க்கோருயிராய் அமர்ந்தாயானால்

கண்டவரார் கேட்டவரார் உன்னால் உன்னைக்

காண்பதல்லால் என்னறிவால் காணப்போமோ

 

 1. எண்ணாத தெண்ணிய நெஞ்சே துயரொழி என்னிரண்டு

கண்ணே யுறங்குக என்னாணை முக்கட்கருணைப்பிரான்

தண்ணார் கருணை மவுனத்தினால் முத்திசாதிக்கலாம்

நண்ணாத தோன்றில்லை – எல்லா நலமும் நமக்குளவே

 

 1. அப்பனென்றும் அன்னையென்றும் ஆரியனென்றும் உனையே

செப்புவதும் உன்னிலையின் சீர்தான் பராபரமே

 

 1. கண்டவிடமெல்லாம் கடவுள் மயம் என்றிருந்து

கொண்ட நெஞ்சர் நேய நெஞ்சிற் கொண்டிருப்பதெந்நாளோ

 

 1. எட்டத் தொலையாத எந்தை பிரான் சந்நிதியில்

பட்டப் பகல் விளக்காய்ப் பண்புறுவது எந்நாளோ

 

 1. வன்னெஞ்சோ இரங்காத மரநெஞ்சோ இருப்பு நெஞ்சோ வைரமான

கன்னெஞ்சோ அலது மண்ணாங் கட்டி நெஞ்சோ

எனது நெஞ்சங் கருதிற்றானே.

ஆதிய நாதியுமாகி – எனக் கானந்த மாயறிவாய் நின்றி

லங்குஞ் சோதி மவுனி யாய்த் தோன்றி – அவன்

சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி.

 

தத்துவ தரிசனம்

தாயுமானவர் வேதாந்தத்தையும் சித்தாந்தத்தையும் இணைத்தார் என்று கூறப்படுகிறது. சங்கரர் கூறும் வேதாந்தத்தின் முக்கியக் கருத்துக்களான பிரமம் வெறும் நிர்க்குணப் பொருள் என்பதும், காரணக் காரியத் தொடர்பு என்பது தானும் தர்க்கரீதியாக உணர்த்த முடியாதென்றும், பிரமத்திற்கும் மாயைக்கும் உள்ள தொடர்பை விளக்க முடியாதென்றும், தனது தர்க்கவன்மையினாலே தர்க்க அறிவு தொலைந்தாலன்றி பிரம்மத்துடன் ஒன்றுபட இயலாதென்றும் இன்ன பிறவற்றிற்கும் ஒரு சேர ஒரே விதமான முக்கியத்துவம், கொடுக்கப்படவில்லை. முதல் பாடலில் கடவுளை ஒரு அடிப்படைச் சக்தியாக உருவகித்தாலும், சங்கரர் கடவுளைச் சத்சித் ஆனந்தமாக வணங்குவதும் அவரை அல்லது பொருத்தமாகக் கூறுவதென்றால் பிரம்மத்தை இரண்டாம் நிலையில் காண்பதாகத்தான் முடியும் என்று கூறுவதும் நினைவில் வருகிறது. சித்தாந்தத்தில் உலகை மனிதனை உய்விக்கக் கடவுள் படைத்த களமாகக் கருதும் பாவனையும் விசேடமாக வற்புறுத்தப்படவில்லை. ஆனால் அதன் மையக் கருத்துக்களாகிய இறைவன் அருளும், குருவணக்கமும், கர்ம பலனும் பல இடங்களில் நன்கு விளக்கப்படுகின்றன. ஒரு விதத்தில் சொல்லப் போனால் சித்தாந்தம் தாயுமானவர் பாடலுக்கு ஒரு வேகத்தைக் கொடுத்தால், வேதாந்தம் அதற்கு ஒரு நிதானத்தைக் கொடுக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்தபடியாக அடிகள் எவ்வாறு தத்துவக் கருத்துக்களை இலக்கிய ரூபத்தில் “மொழிபெயர்த்திருக்கிறார்” என்று பார்க்கலாம். (நடுவில் “ஆனந்தக் களிப்பில்” அவர் கவிதா வெறி உச்சநிலையில் கொந்தளிக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறேன்) காலமும் இடமும் த்வைத அடிப்படையைத் தாங்கியிருப்பதால் மாயையின் பாற்பட்டவை என்பது வேதாந்தக் கருத்து. அடிகள் காலதத்துவத்தை மீற வேண்டிய அவசியத்தைப் பல இடங்களில் பிரம்மத்தின் தகுதியாக “கங்குல் பகலற நின்ற எல்லை” என்று பேசுகிறார். பிரம்மத்தினிடம் ஐக்கியமுற்றவர் நீதி – நிலையைத் தாண்டியவர் என்பது ஒரு முடிவு. “பரிபூரணானந்தம்” என்ற தொகுதியில் மூன்றாவது பாடலில் குணசீலர் எல்லாம் சமயங்களில் குணக்கேடு உறுவது என்று சொல்லும் ஆன்மாவின் மாயையும் பிரம்மத்தின் மாயைத் தொடர்பின் பாற்பட்டது என்பதை அழகாக விளக்குகிறது. அடிகளுடைய இலக்கியக் கருத்தைத் தெரிவிக்கும் பாடலிலும் கடவுளர்கள் தனக்கு உதவவில்லை, என்று கூறினும், பாடலின் இரண்டாம் பகுதியில் “இத்தமிழையே சொன்னவன்” தானும் அவன் என்று கூறுவதும் நோக்கத் தக்கது. பல இடங்களில் ஞானம் அனுபூதியால் வருவது என்றும், தத்துப் பேயைத் தலையிலடிக்க வேண்டும், கன்னி அறிவாளோ காம சுகம் என்றும் சொல்லப்படுகிறது. அகண்டாகாரமான சர்வ வியாபியைத் த்வைத நிலையில் நாம் அறிய முற்படுவது யானையைத் தேடக் குடத்திற்குள் கைவிட்டதை ஒக்கும் என்பதும், கண்ணை மூடினால் கடவுள் காட்டுவார் என்பதும், உன்னால் உன்னைக் காண்பதல்லால் வேறு வகையில் முடியாது என்பதும், மனமற்ற பூரணத் தொட்டிற்குள் முடக்குவன் யான் என்பதும் தத்துவக் கருத்துக்களை இலக்கிய சமத்காரத்துடன் சொல்லுகிறார் என்று சொல்லவேண்டும்.

அவர் பாடல்களில் பல இடங்களில் மனித மனதைப் பற்றி நுணுக்கமான சிந்தனைகளைத் தூவி வைத்திருக்கிறார். பாரதி “ஞானரதத்திலும்” சில தனிப்பாடல்களிலும் தாயுமானவர் காட்டும் மன இயல்புகளை இலக்கிய பூர்வமாக உபயோகித்திருக்கிறார். வாசனை, மாயை, சஞ்சலம், கடவுட் தொடர்பு என்ற வார்த்தைகள் மூலம் அவர் மனிதன் மனதை விவரிக்கிறார். பிரம்மத்திற்கும் மாயைக்கும் இடையில் கடந்து மனிதன் இயங்குகிறான் என்று அவர் கூறு கருத்துக்களைத் தற்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும் சில மேல்நாட்டு மனோதத்துவக் கருத்துக்களுடன் தாரதம்மியப்படுத்திப் பார்த்தால், நாம் நமது பண்பாட்டின் அடித்தளத்தை நன்கு புரிந்துகொள்ள ஏதுவாகும். அவர் பல இடங்களில் பிரம்மத்திற்கும் ஆன்மாவிற்கும் நடுவில், “நான்” முளைத்து நிற்கிறது என்று சொல்கிறார். மனதைப் பற்றி ஓரிரு பாடல்களை அவர் நிலையைத் தெளிவிக்கக் கீழே கொடுக்கிறேன்.

வாதனைப் பழக்கத்தினால் மனம்; அந்த மனத்தால்

ஓத வந்திடும் உரை; உரைப்படி தொழிலுளவாம்;

ஏதம் அம்மனம்; மாயை என்றிடிற் கண்டவெல்லாம்

ஆதரம் செய்யாப் பொய்; அதற்கு ஐயமுண்டாமோ

(ஏதம் – வாதனையாற் சிக்கியுள்ள; ஆதாரம் செயா – விரும்பத்தகாத)

 

நானென்று ஒருமுதல் உண்டென்ற நான் தலை நாணவென்னுள்

தானென் றொருமுதல்பூரணமாகத் தலைப்பட்டொப்பில்

ஆனந்தந் தந்தென் அறிவையெல்லாம் உண்ட வச நல்கி

மோனந் தனை விளைத்தால் இனியாது மொழிகுவதே.

 

இந்த இரண்டாவது பாடல் அத்துவித நிச்சயமும் இலக்கியப் பொலிவும் மிகப் பெற்றுள்ளது. “நான்” என்பதைத் தடுத்துத் “தான்” என்று அகங்காரத்தை வெல்லும் பிரம்மத்தையும் “தான்” என்று முனைப்பைக் காட்டும் எடுத்துச் சொல்லும், ஒரு இடைச்சொல்லையே உபயோகிப்பது மிகவும் நன்றாக அமைந்திருக்கிறது. மனிதன் என்ன தான் முயன்றாலும் பிரம்மத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது என்பதை இப்பாடல் நன்றாகக் காட்டுகிறது. இந்த அழகிய பாடலுடன் என் கட்டுரையை முடிக்கிறேன்.

சொல்லின்பமும் கருத்துவேகமும் ஆழமும் இலக்கிய இன்பமும் மிக விளங்கிக் காட்சி தரும் தாயுமானவர் பாடல்கள். அவர் கூறும் சில செஞ்சொற் சேர்க்கைகள் நாம் வாழ்க்கையில் வழி நடக்கப் பயன்படும் என்பதால் அவருடைய பாடல் ஒரு சிறந்த இலக்கிய வாழ்க்கைத் துணைநூலாக விளங்குகிறது என்பது என் துணிபு. அவர் பாடல்களை வேதாந்த – சித்தாந்த ஞானமும் இலக்கிய ஆற்றலும் பெற்றவர். ஆராய்ந்து எழுதினால் அது ஒரு சிறந்த இலக்கிய முயற்சியாகும்.

நன்றி

எழுத்து

பகிர்:
No comments

leave a comment

error: Content is protected !!