ஜாக் கெருவாக் (Jack Kerouac) தன்னுடைய படைப்பாற்றலுக்குப் பயன்படுத்திய எழுதும் முறை மற்றும் முப்பது சூத்திரங்களைப் பற்றி முன்பு கூறியதை நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். திரைப்பட நடிகர் டான் ஆலனுக்காக (Don Allen) எப்படி எழுதுவது என்பதைச் சுருக்கமாகத் தருமாறு அவரிடம் கேட்டபோது அவர் `நவீன உரைநடைக்கான கருத்தும் கலைநுணுக்கத் திறமும்’ என்கிற பெயரில் இன்றியமையாத பட்டியல் ஒன்றை எழுதினார். அவையெல்லாம் உரைநடை எழுத்தாளர்களுக்கான ஒரு வரி கோஷமாகவோ, நன்மதி கூறலாகவோ இருக்கும். அது `இன்றியமையாத பட்டியல்’ எனப் பெயரிடப்பட்டு ஜாக்கின் `Heaven and Other Poems” என்கிற நூலில் வெளியிடப்பட்டிருந்தது.
1,உங்கள் மகிழ்ச்சிக்காக எழுதப்பட்ட கிறுக்கல்களைக் கொண்ட ரகசியக் கையேடுகளும் கட்டுப்பாடின்றி தட்டச்சு செய்யப்பட்ட பக்கங்களும்.
சந்தைக்காக எழுதுவதை விட உங்களுக்காகவும் உங்களுடைய கடவுள்களுக்காகவும் எழுதுவதாகும். இது அவருடைய Visions of Codyயும் மற்ற நூல்களும் நிராகரிக்கப்பட்டபிறகு எழுதப்பட்டதாக இருக்குமென நான் நினைக்கிறேன். On the Road நிராகரிக்கப்பட்டது Cody நிராகரிக்கப்பட்டது. பிறகு அவர் 1950 ஆம் ஆண்டுக்கும் 1957 ஆம் ஆண்டுக்குமிடையில் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதினார் அப்போது On the Road வெளியானது. முதலில் வெளியான அவரது நாவல் Town and the City ஆகும். இது ஒரு குடும்பம், சகோதரர்கள், சகோதரிகள், சிறிய நகரத்திலிருந்து பெரிய நகரத்துக்கு அவர்கள் புலம் பெயர்வது அதன் பின் குடும்பத்தில் ஏற்படும் பிரிவு, பாரம்பரியமான குடும்பத்தில் நகரமயமாக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் ஆகியவை பற்றி எழுதப்பட்ட ஒரு சம்பிரதாயமான நாவல் ஆகும்.
2,அனைத்துக்கும் இணங்கிப் போதல், ஒளிவுமறைவு இல்லாமலிருத்தல், கூர்ந்து கவனித்தல்
அவர் அவருடைய இடத்தில் அமரும்போது தன்னுடைய மனதுக்கு இணங்கிப் போவதாக ஆக்கிக் கொண்டார். அவருடைய நினைத்துப் பார்க்கும் ஆற்றல் கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவதாக இருந்தது. அடிப்படையில், The Subterraneans or The Dharma Bums அல்லது உயர்நிலைப் பள்ளிக் காதல் அல்லது Doctor Sax போன்ற பதின்ம வயதினரின் கதாநாயகன் ஆகியவற்றில் அவருக்கு எழுதுவதற்குச் சுவராசியமாக இருப்பது எதுவென்பதைக் கண்டறிந்த பின் அவர் எதையெல்லாம் உள்ளடக்க வேண்டுமென நினைக்கிறாரோ அது பற்றிய முக்கிய அம்சங்களைத் தனது மனதில் அல்லது காகிதத்தில் வரையறுத்துக் கொள்வார். அதன்பின் ஜாஸ் கலைஞனைப் போல அந்தக் குறிப்புகளையெல்லாம் மேம்படுத்திக் கொள்வார். அவர் அனைத்துக்கும் இணங்கிப் போனார், அனைத்தையும் நினைத்துப் பார்த்துக்கொண்டார் அதன்பின் எழுத ஆரம்பித்த அவர் மனதிலுள்ளதை எழுதினார். உணர்வுநிலையிலிருந்து அதிகமாக எழுதாமல் அதாவது முறைமையற்று எழுதாமல் ஒரு பொருண்மையில் அது தொடர்பானவை குறித்த அனைத்திலும் கவனம் செலுத்தினார்.
3,வீட்டிற்கு வெளியில் ஒரு போதும் மது அருந்தாதீர்கள்.
அவரிடமிருந்த பிரச்சினையோடு தொடர்புடையதாக இது இருந்தது.
4,வாழ்க்கையை நேசியுங்கள்
பெரும்பாலான மக்கள் இதைச் செய்வதில்லை. உங்களுடைய சொந்த வாழ்க்கையைப் புனிதமாகக் கருதினால் அனைத்தும் கலையாற்றலுடன் இருக்கும் என்றார்.
5,நீங்கள் உணரக்கூடிய ஒன்று அதுவாக அதனுடைய வடிவத்தைக் கண்டுகொள்ளும்.
உங்களுக்கு ஆரம்பமும், நடுப்பகுதியும், முடிவும் தெரியுமென்றால் நீங்கள் அதற்கான வடிவத்தை வைத்திருக்க வேண்டுமென்பது தேவையில்லை. கெருவாக்கை எப்படி டீன் மொரியார்டி அல்லது கோடி அல்லது பரோஸ் அல்லது அவர் அறிந்த வேறெந்த பாத்திரமாவது ஆக்கிரமித்திருந்தது போல உங்களையும் ஆக்கிரமித்திருந்தால் நீங்கள் அது குறித்து ஆழ்ந்து சிந்தித்து எப்படி முடியென்பது தெரியாமல் எழுத ஆரம்பியுங்கள். அந்தப் படைப்பு அதற்கான வடிவத்தைக் கண்டு கொள்ளும்.
6,அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் கிறுக்குத்தனமான மனம்
பேராசிரியத்தனம் கொண்டதாக இருக்காது, நியூயார்க் டைம்ஸோடு தொடர்புடைய நாவலாசிரியர்கள் போல நீங்கள் இருக்கப் போவதில்லை. உங்களுடைய தனிப்பட்ட மனதின் நுணுக்கங்களை முழுவதும் பயன்படுத்திய பிறகு, நான் என்னுடைய குழந்தைப்பருவக் கற்பனைகளையும், என்னுடைய முதல் அன்பையும், ஆப்ரிக்காவில் என்னுடய முதல் விடுமுறையும் நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்வேன். தனிப்பட்ட விபரங்களை உபயோகியுங்கள், ஒத்திசைவுடன் இருங்கள், மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள். ஒவ்வொருவருக்கும் ரகசிய வாழ்க்கையும், அவமானங்களும் வெற்றிகளும், பதின்மபருவத்துக் கற்பனைகளும், ஈர்ப்புகளும் இருந்திருக்கும். ஒருவர் தன்னுடைய விவேகத்தின் சாரத்தை வெளிப்படுத்தினால் மற்றவர்களும் அதோடு தொடர்புப்படுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். இது விட்மனில், Huckleberry Finnல், ஷெர்வுட் ஆண்டர்சனில் இருக்கிறது. எட்கர் ஆலன் போவின் `The Tell-Tale Heart” or “The Cask of Amontillado” ஆகியவற்றில் இருக்கிறது. போ போல அமெரிக்காவில் யாருக்கும் தெளிவான மனம் இல்லை. கெருவாக்கிடம் போ-வின் மிகப் பெரிய தாக்குதல் இருந்தது.
7,நீங்கள் ஊத விரும்பும் அளவுக்கு ஊதுங்கள்.
தன்னுடைய மிகச் சிறந்த கருத்தோட்டப் பதிவுகளில் அவர் இதைச் செய்ததுண்டு.
8,உங்கள் மனதின் அடியிலிருந்து நீங்கள் விரும்புவதை எழுதுங்கள்.
9,தனிப்பட்ட நபர்களின் பேசப்படாத பார்வைகள்
10,கவிதைக்கு நேரமில்லை ஆனால் சரியாக என்ன இருக்கிறது.
இது அருமையான ஒன்று. உங்கள் உள் மனதிலிருந்து நீங்கள் உண்மையிலேயே எதைப் பார்க்கிறீர்கள், எதை நினைக்கிறீர்கள் என்பதாகும்.
11,தொலைநோக்கால் இதயத்தில் ஏற்படும் நடுக்கங்கள்
அவர் பென்சிட்ரைன், அம்ஃபெட்டமைன் (அம்ஃபெட்டமைன் சல்ஃபேட் கொண்ட மருந்தின் பெயர் பென்சிட்ரைன். இது பல வியாதிகளுக்கு 1930 லிருந்து 1970கள் வரை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது) பற்றி எழுதி வந்ததால் ஏற்பட்ட நடுக்கமாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
12,உங்களுக்கு முன்னால் இருக்கும் பொருளைப் பற்றிக் கனவு காண்பது
பழைய தேநீர் கோப்பை அல்லது திரைப்பட அரங்கு வரைபடங்களில் கெருவாக் செய்தது போல நீங்கள் பார்ப்பதில் கவனமாக இருப்பதோடு அதை எழுதுங்கள்.
13,இலக்கிய, இலக்கண, தொடர்பியல் தடைகளை அகற்றுங்கள்.
பழையதை முடிக்க வேண்டுமே என்பது பற்றிக் கவலைப்படாமல் புதியதை நீங்கள் ஆரம்பிக்கலாம்.
14,ப்ரூஸ்ட் (ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்) போலப் பழைய நினைவுகளைக் கொண்டிருங்கள்.
அடிக்கடி கஞ்சா புகைப்பவர் போல, இந்த அதிநவீனமாகவும் நகைச்சுவையுடனும் சுய உணர்வோடு கதை சொல்வது எனக்கு விருப்பமான ஒன்றாகும்
15,உலகத்தின் உண்மைக் கதையைக் கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த சிந்தனை மூலம் சொல்வது.
16,சுவராசியத்தின் மையம் என்பது கண்ணுக்குள் கண் ஆகும்.
மனக்கண் என்பது உள்ளிருக்கிறது என்பது என் ஊகமாகும்.
17,நீங்களே ஆச்சரியப்படும்படி நினைவிலிருந்து எழுதுங்கள்.
நீங்களே உங்களை ஆச்சரியப்படுத்திக் கொள்ளுங்கள்.
18,மிகக் குறைவான வார்த்தைகளைக் கொண்டு பொருளை வெளிப்படுத்தும் விதமாக மொழி எனும் கடலில் நீந்துங்கள்.
`மிகக் குறைவான வார்த்தைகளைக் கொண்டு” என்பதன் மூலம் கெருவாக், `அர்த்தம் நிறைந்த சுருக்கமான கூற்று அல்லது தொலைநோக்கு அல்லது அறிந்து கொள்ளுதல் அல்லது நினைவுகூரல் தருணம் போன்ற மிகத் தீவிரமானதிலிருந்து நீங்கள் தொடங்க வேண்டும். மனதில் தெளிவாக நினைவிலிருப்பதிலிருந்து ஆரம்பிக்கலாம். விருப்பத்திலிருந்து ஆரம்பித்து என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் எழுதுங்கள். வாக்கியங்களில் அனைத்து விபரங்களையும் தெரிவியுங்கள்.
19,இழப்பை எப்போதும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை பற்றி கெருவாக் உணர்ந்தவரை அது ஒரு பொன் துகள் போன்றது. நாம் எல்லாம் மாயை அல்லது போலித் தோற்றம் அதாவது அனைத்தும் நூறாண்டுகளில் போய்விடும் என்கிற பொருளில் அனைவரும் மாயையாக இருந்தோம். நாமெல்லாம் போலித் தோற்றங்களின் தொகுப்பு. நமது சிந்தனைகள் உட்பட அனைத்தும் இழக்கப்பட்டுவிடும்.
20,வாழ்க்கையின் புனிதமான அமைப்பின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
அவருடைய எழுத்து என்பது ஒரு வகையான பிரார்த்தனை அல்லது உணர்ச்சிப்பூர்வமான விசுவாசம், பக்தி அல்லது புனிதமான செயல், நிகழ்வுகளை நினைவுகூரல், அவருடைய கண்களின் வாயிலாகச் சாசுவதத்தை / நிலைத்திருக்கும் தன்மையைப் பார்க்கிறார்.
21,மனதில் ஏற்கனவே சிதையாமல் இருக்கும் மேலோட்டமான திட்டத்தை ஆற்றொழுக்காய் சொல்லப் போராடுதல்.
உங்கள் மனதில் இருக்கும் அனைத்தையும் உங்களால் எழுதிவிட முடியாது, உங்கள் பேனா எதை விரைவாக எடுத்துக் கொள்கிறதோ அதையும் வெள்ளப் பெருக்கென மனதில் இருக்கும் சிந்தனைகளில் உங்கள் மனது எதை நினைவுக்குக் கொண்டு வருகிறதோ அதையும் தான் எழுத முடியும். இயல்பாகவே வரும் சிந்தனைகளை அது எதுவாக இருந்தாலும், எந்த வரிசையிலிருந்தாலும் சில வார்த்தைகளிலாவது அதைக் கூடியமட்டும் விரைவாக எழுதுங்கள்.
22,நீங்கள் நிறுத்தும்போது வார்த்தைகளை நினைக்காமல் மொத்தக் காட்சியையும் கற்பனை செய்து பாருங்கள்.
இது மிகவும் முக்கியமான விஷயமாகும். இது உண்மையான நடைமுறை தொழில் நுணுக்க அறிவுரையாகும். நீங்கள் உங்களுடைய நினைவாற்றலை அகக்காட்சியாக உருவாக்கி அல்லது மறு உருவாக்கம் செய்து பாருங்கள் அதன்பின் அதிலிருந்து வார்த்தைகள் எளிதாக வரும். நீங்கள் நினைவுகூரக்கூடிய அகக்காட்சி, உண்மையான, காணக்கூடிய, மனதுக்குத் தெளிவான நிகழ்வு ஆகியவற்றின் சுவட்டை இழந்துவிட்டால் நீங்கள் அடிப்படையிலான பழைய சொல் வரியோடு மறுதொடர்பு செய்ய முயல்வதற்குப் பதிலாகச் சொற்களை மற்ற சொற்களுடன் இணைக்கக்கூடிய வேறு முக்கியமாக அக்காட்சியோடு தொடர்புப்படுத்த வேண்டும். வழக்கமாக, நீங்கள் சிந்திக்கும் போது சுவட்டை இழந்துவிட்டால் அல்லது நீங்கள் உங்களுடைய பொருண்மையை இழந்துவிட்டால் எழுதுவதை நிறுத்திவிடுவீர்கள். உங்களுடைய பொருண்மையை மீட்டெடுக்க நீங்கள் மீண்டும் மூலக் காட்சிக்குச் செல்வீர்கள்.
23,ஒவ்வொரு நாளும் காலை நேரத்தைக் கண்காணித்துக் கொள்ளுங்கள்.
வேறு சொற்களில் சொல்வதென்றால், ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்வு குறித்து உணர்வுநிலையுடன் இருங்கள். கெருவாக் ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன், இன்றைக்கு வியாழக்கிழமை, உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து அவருடைய தினசரி நடவடிக்கைகளைக் கண்காணித்தார். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை நேசிக்க வேண்டுமென அவர் உணர்ந்திருந்தார்.
24,உங்களுடைய அனுபவம், மொழி, ஞானம் குறித்த அச்சமோ, வெட்கமோ தேவையில்லை.
உங்களுடைய சொந்த அனுபவங்கள், அல்லது மொழி, அல்லது ஞானம் குறித்து வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தால் அது பற்றி எழுதுங்கள், அல்லது மூட்டுவீக்க நோயாளியாக இருந்தால் அது பற்றி எழுதுங்கள். ஆகையால், வெட்கப்படுவதற்குப் பதிலாகப் பயப்படுவது என்பது புனிதமான செயலாகும். நீங்கள் தவறே செய்திருந்தாலும் நீங்கள் அடிப்படையிலேயே தவறு செய்திருக்கிறீர்கள் அல்லது நீங்களொரு முட்டாள் என்கிற வழக்கமான மனோபாவத்துக்கு முற்றிலும் தலைகீழானதாகும்.
25,உலகம் வாசிப்பதற்காக எழுதுங்கள் அதில் உங்களுடைய ஒத்த கருத்துகளைப் பாருங்கள்.
அவர் எழுதுகையில் திருப்தியளிக்கும் வெளியுலகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.
26,புத்தகத் திரைப்படம் என்பது சொற்களினால் ஆன திரைப்படம், அமெரிக்காவின் காட்சி வடிவம்.
நீங்கள் உங்கள் குழந்தைப்பருவத்தை நினைவு கூர்ந்து அமெரிக்காவின் அடிப்படையான வடிவமான புத்தகத் திரைப்படத்தை, சொற்களால் ஆன திரைப்படத்தைப் பார்க்க முயலுங்கள். கெருவாக் அவருடைய புனைவுகளையும், நாவல்களையும் திரைப்படத்தில் வரும் காட்சிகளாக தன்னுடைய கண் என்கிற கேமாராவில் பார்த்தார்.
27,பாழான மனிதத்தன்மையற்ற தனிமையைப் புகழ்தல்
இது முடிவில் மரணத்தைத் தவிர வேறெதையும் நாம் பெறப் போவதில்லை என்று சொல்வது போன்றதாகும். ஜாக் அவருடைய கதாபாத்திரத்தின் தனிப்பட்ட உணர்வு நிலையிலும், விழிப்புணர்விலும் விருப்பம் கொண்டிருந்தார்.
28,தறிகெட்டும், ஒழுங்கற்றும், சுத்தமானதும், அடிமனத்திலிருந்து வருவதும், கிறுக்குத்தனமாக இருப்பதும் நல்லது.
29,நீங்கள் எப்போதுமே கூர்மதி கொண்டவர்தான்.
வேறு சொற்களில் சொல்ல வேண்டுமெனில், உங்களுடைய மனதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள்.
30,உலகியல் பற்றுடைய திரைப்படங்களின் எழுத்தாளர்-இயக்குநரை விண்ணுலகே ஆதரித்து ஆசிர்வதிக்கிறது.
திரைப்படத்துக்குப் பணம் செலுத்தும் தேவ தூதராவார்.
நவீன உரைநடைக்கான கெருவாக்கின் கருத்தும்
கலைநுணுக்கத் திறமும்
ஆலன் கின்ஸ்பர்க்.
தமிழில்:சித்தார்த்தன் சுந்தரம்.
(The best mind of my generation.
A literary history of beats
Allen Ginsberg
என்கிற தொகுப்பிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரை.)