நானொரு அமெச்சூர் திரைப்பட இயக்குநர் – ஜிம் ஜார்முர்ஷ் நேர்காணல்!

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிவரும்

அமெரிக்க இயக்குநரான ஜிம் ஜார்முர்ஷ் வெகுஜனப் பார்வை அனுபவத்தைக் கட்டமைக்கும்

கமர்ஷியல் படங்களுக்கும் கலை திரைப்படங்களும் இடையில் மெல்லியதொரு இணைப்பை

உருவாக்கக்கூடியவராக இருக்கிறார். Dead Man, Night on Earth, Coffee and Cigarettes, Patterson

என அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் சுயாதீனத் திரைப்பட உலகின் முன்னோடியாக

அவரை அடையாளப்படுத்தும் குறிப்பிடத் தகுந்த பரிசோதனை முயற்சிகளாகவே இருக்கின்றன.

ஒரே இரவில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் கார் ஓட்டுநர்களுக்கு நேரும்

அனுபவங்களைத் தொகுப்பதன் மூலம் மனித மனவுலகங்களின் வெவ்வேறு உணர்வுச் சுழல்களை

Night on Earthல் காட்சிப்படுத்தியிருப்பார். இவரது திரைப்படங்களின் ஒரு பொது குணமாக

நிதானமும் அவசரமற்ற போக்கும் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. அது சாமுராய் வகை

திரைப்படமாக இருந்தாலும் சரி அமானுஷ்ய கதையாடல்களாக இருந்தாலும் சரி, ஒருபோதும்

அவருடைய கதாபாத்திரங்கள் புற உலக நிர்ப்பந்தங்களால் பெரியளவில் தொந்தரவுக்கு

உள்ளாவதில்லை. இந்த உலகமே ஒருகாலத்தில் அழிவுற்று இயற்கை மீண்டும் தனது

ராஜ்ஜியத்தை இந்த நிலத்தின் மீது கட்டமைக்கும் என்பது அவருடைய பிரபல கூற்றுகளில்

ஒன்று. ஜிம் ஜார்முர்ஷின் தனிப்பட்ட இயல்பும்கூட இதுவேதான். கையடக்கக் கேமராக்களிலும்,

ஒரே இடத்தில் நிகழும் சம்பவங்களின் கோர்வையாகவும், கவிதையின் வரிகளைப்போலக்

காட்சிகளை அடுக்குவதிலும் தேர்ந்தவரான ஜிம் ஜார்முர்ஷ் இசைக் கலைஞராகவும் தமது

திறன்களை வெளிப்படுத்தியிருக்கிறார். பல இசைக் குழுக்களைப் பற்றி ஆவணப்படங்களையும்

இயக்கியிருக்கிறார். சமீப காலங்களில் சுயதீனத் திரைப்பட உருவாக்கத்தின் போக்கு எவ்வாறு

உள்ளது, நகரங்களின் மீதான தனது காதல், அவரது இசையமைப்பு குறித்து அனுபவப் பகிர்வு

என வெவ்வேறு சூழல்களில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சமீபகால நேர்காணல்களிலிருந்து

தேர்வுசெய்யப்பட்ட கேள்விகளின் தமிழாக்கமே மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

மிஸ்டர். ஜார்முர்ஷ், நியூயார்க் நகரத்தில் 40 ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களை ஒரு நியூயார்க்கைச் சேர்ந்தவராகக் கருதுகிறீர்களா?

நான் அங்குப் பல ஆண்டுகளாக வாழ்ந்திருக்கிறேன். எனினும், நான் நியூயார்க்கைச் சேர்ந்தவன் அல்ல. மிச்சிகன் எல்லையிலுள்ள ஒஹியோ, அக்ரோன்தான் நான் பிறந்த இடம். யாரேனுமொருவர் என்னை நியூயார்க்கர் என்று அடையாளப்படுத்தும் போதெல்லாம் அச்சவுணர்வே எனக்குள் எழுகிறது. நான் பெர்லினிலும் வாழ்ந்திருக்கிறேன். டோக்கியோவையும் நான் நேசிக்கிறேன். விநோதமானதும் அழகானதுமான நிலப்பரப்பு அது. வசந்தகாலத்தில் பாரீஸில் இருப்பதை விரும்புகிறேன். ரோம் எனக்கு விருப்பமான நகரம்.

நகரங்களை நான் நேசிக்கின்றேன். எனது காதலிகளே நகரங்கள்தானோ என்னவோ.

 

நகரங்கள் உங்கள் காதலிகளா?

ஆமாம். எனக்கு மிக அற்புதமான சில காதலிகள் இருந்தனர், இப்போதும் உள்ளனர். ஆனால் எனக்குக் குடும்பமோ நண்பர்களோ இல்லையென்றால், இந்த உலகத்திடமிருந்து வெகு தூரம் விலகிச் செல்ல விரும்புகிறேன். மொரோக்கோவில் உள்ள டேஞ்சியருக்குச் செல்வேன். மதுவகைகளிலோ கஞ்சா போதையிலோ ஆழ்ந்திருக்கும் கலாச்சாரத்தில் இருக்க நான் விரும்புவதில்லை. டேஞ்சியர் நகரம் கொண்டாட்ட மனநிலையுடைய இசையையும் கலாச்சாரத்தையும் உடையதாக இருக்கிறது. அந்த நகரத்தில் இருப்பது ஒரு அலாதியான அனுபவம். எங்கேனும் தொலைந்து போவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டால் டேஞ்சியரில்தான் தொலைந்து போவேன். ஆனால், இந்த வருடத்தின் இறுதியில் மெக்சிக்கோ நகரத்துக்குச் செல்லவிருக்கிறேன். இதற்கு முன்னர் நான் அங்கு சென்றதில்லை. அங்கிருக்கும் எனது நண்பர்கள் தொடர்ச்சியாக, “மெக்சிகோவுக்குச் சென்றால் பின்னர் திரும்பி வேறெங்கும் செல்ல மாட்டோம், அந்தளவிற்கு அந்த நகரம் உன்னை வசீகரித்துவிடும் என அஞ்சுகிறாயா?” எனக் கேட்கிறார்கள் (சிரிக்கிறார்). அங்குச் செல்வதற்கு ஆர்வமாகவே இருக்கிறேன்.

 

அக்ரோனில் நீங்கள் வளர்ந்தபோது சினிமா எந்தவிதமான பாதிப்பை உங்களில் நிகழ்த்தியது?

ஒஹியோவில் Attack of the Giant Crab Monsters போன்ற திரைப்படங்களைப் பார்த்தேன். சிறுவயதில் அவற்றை நான் விரும்பவே செய்தேன். ஆனால், எனது 20 வயதில் பாரீஸில் வசிக்க நேர்ந்தபோதுதான் திரைப்படங்களின் மீதான எனது நேசிப்பில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நான் அங்கு எக்ஸ்சேஞ்ச் மாணவனாக 9 மாதங்கள் இருந்தேன். ஆனால் என்னுடைய எந்தப் பாடத்தையும் என்னால் நிறைவு செய்யமுடியவில்லை. ஏனெனில் கிட்டத்தட்ட அனைத்து தினங்களிலுமே பாரீஸின் திரையரங்குகளில் எனது நேரத்தைச் செலவிட்டேன்! இந்தியாவில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், ஜப்பானில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், ஹாலிவுட் திரைப்படங்கள் எனத் தொடர்ச்சியாகப் பார்த்தபடியே திரையிடல்களுக்கு இடையிலான நேரங்களில் கூட தியேட்டரிலேயே எனது நேரத்தைச் செலவிட்டேன். இப்படியான திரைப்படங்களெல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்கிற விவரம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எட்வர்டு டிமிட்ரிக்ஸ், ஓஸு, மிஸோகுச்சி, பிரேசிலியன் புதிய அலை.. ஆஹா! சினிமாவில் இவ்வளவு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை நான் அறிந்திருக்கவில்லை. எனது மனம் திரைப்பிரதிகளைத் தேடி அலைபாயத் துவங்கியது. இன்று வரையிலும் அதன் மீதான போதை தெளியவே இல்லை.

 

நவீன சினிமாவும் ஒஸுவிடனுடைய டோக்கியோ ஸ்டோரியைப் போலக் கவித்துவத்துடன் உருவாக்கப்படலாம் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

அதி அற்புதமான பல கவித்துவத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்! நான் பார்க்கக்கூடிய திரைப்பட வகை என்பதில் பல தேசத்துப் படங்களும் வெவ்வேறு ஜானர்களில் இயக்கப்படும் படங்களும் அடங்கும். ஆனால், நான் மைய நீரோட்ட திரைப்பட விரும்பி அல்ல. ஹாலிவுட் ஸ்டூடியோக்களிடம் உள்ள சிக்கலென்னவென்றால், அவர்கள் பெரும் கோழைகள்.

 

எப்படி அவ்வாறு சொல்கிறீர்கள்?

தங்களால் ஜன எண்ணிக்கையைக் கருத்தில்கொள்ள முடியாத எது குறித்தும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இது எவ்வாறெனில், “இது படிப்பதற்கு The Graduate போல இருக்கிறது, ஆனால் இது Love Storyயைப் போல இருந்திருக்க வேண்டும்” என்று சொல்வதைப் போன்றது. ஏன் அது அசலானதாக இருக்கக்கூடாது? ஏன் அவர்கள் இந்தளவுக்குப் பயப்படுகிறார்கள்? எந்தவிதமான புதிய முறையியலும் தோன்றாத வரையில் ஹாலிவுட் தனது கல்லறையைத் தானே தோண்டிக் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். ஸ்டூடியோ அமைப்பிலிருந்து ஏதேனும் புதிய முறையியல் தோன்றினால் அதுவும் அதிசயத்தக்கதுதான். ஏனெனில் எப்படி விநியோகம் செய்வது என்று யோசிக்க முடியாத எது குறித்தும் அவர்கள் அஞ்சுகிறார்கள். கலைப்பூர்வமாக செய்ய முயற்சிக்கும் எது குறித்தும் அவர்கள் பயப்படுகிறார்கள். இது வணிகம் என்பதால், ஒருவேளை அவர்கள் அப்படிதான் இருக்க வேண்டுமோ என்னமோ. அது குறித்து எனக்கு மிக, மிக, மிக ஆழமான சந்தேகங்கள் இருக்கின்றன.

 

ஆனால் அமேசான் ஸ்டூடியோஸ்? அவைதான் உங்களுடைய கடைசி இரண்டு திரைப்படங்களை விநியோகித்தன, அதுவும் வணிகம்தானே?

உண்மை, அனைத்தும் வணிகம்தான். என்னுடைய பிரெஞ்சு விநியோகிஸ்தரும் வணிகர்தான், ஆனால் அவரொரு திரைப்படக் காதலரும் கூட. அவரிடத்தில் ஸிகா வெர்தோவைக் குறிப்பிட்டுப் பேசினால், நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்பதை அவரால் உறுதியாகவே புரிந்துகொள்ள முடியும். ஹாலிவுட்டில் யாரிடமாவது ஸிகா வெர்தோவைப் பற்றிப் பேசினால், “யார் அவள்? ரஷ்ய மாடலா?” எனக் கேட்பார்கள். அவர்களுக்குத் திரைப்படங்கள் என்றால் என்னவென்றே தெரியாது. சாம் ஃபுல்லர் ஒருமுறை, “லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் இவர்கள் உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள், இன்று எப்படி திரைப்படம் எடுக்க வேண்டுமென நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள்” என என்னிடம் தெரிவித்தார். இது என்ன மாதிரியான விஷயம்? ஆனால் அமேசான் ஸ்டூடியோவுடனான எனது உறவு நல்ல விதமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.

 

நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது உங்களிடம் தயக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

துவக்கத்தில் தியேட்டரில்தான் திரையிடப்பட வேண்டுமென நினைத்தேன். வேற சில நிறுவனங்கள் நேரடியாகவே இணையவழி திரையிடல் என்பதை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி இணையத்தில் அதிகளவில் தேடப்படும் ஒரு திரைப்படத்தை உருவாக்க நான் விரும்பவில்லை. இதனால் எங்களுக்குள் முடிவற்ற நீண்ட விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றபடியே இருந்தன. அமேசான் பெரியளவில் விரிவடைந்துள்ளது. பல பல மாற்றங்கள் நிகழ்வதால் எங்கள் வணிகரீதியிலான உறவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாறியுள்ளது. நான் வழமையாகச் செய்யக்கூடிய விஷயங்களில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் என்னிடம் முழுமையான கலைரீதியிலான கட்டுப்பாடு இருந்தது.

 

கலை பார்வையை உணருவது இப்போது கடினமாகி உள்ளதா?

ம்ம்ம். படத்துக்கான நிதி வழங்குநரைக் கண்டடைவது மிக மிகச் சிரமமானதாகவே இருக்கிறது. ஒரு நியாயமான ‘டீலை’ செய்து முடிப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. எனக்குச் சிறிய அளவில் பிசினஸ் இருக்கிறது. நானொரு சுயாதீன திரைப்பட இயக்குநர். அதோடு அனைத்து விஷயங்களிலும் தலையிடக்கூடியவன். கடந்த காலங்களில் கொஞ்சம் பணத்தை என்னால் சேமிக்க முடிந்தது. எனினும், இப்போது எனது திரைப்படங்களுக்கு நானே தயாரிப்பாளராகவும் இருப்பதால் அந்தப் பணம் மெல்ல கரைந்துகொண்டே வருகிறது. இதற்காக யாரும் பொருளுதவி செய்ய முன்வரப் போவதில்லை.

 

அதனால்தான் சில திரைப்பட இயக்குநர்களுக்கு நீங்கள் உதவி செய்கிறீர்களா? உங்கள் பெயரை அவர்களுடன் திரைப்படத்துடன் இணைத்து வெளியிடுவதன் மூலம் முடிந்த அளவிலான ஆதரவைத் தரலாம் எனக் கருதுகிறீர்களா?

என்னைப் பொறுத்தவரையில், அவர்கள் ஆர்வமூட்டக்கூடிய திரைப்படத்தை உருவாக்கியிருந்தால், எனது பெயர் அவர்களுக்காக ஆதரவைக் கொடுக்கும் என்றால், நான் சந்தோஷமடையவே செய்வேன். ஆனால் எப்போதும் அவர்களிடம், “உங்கள் திரைப்படத்துக்கு ஆலோசனை கேட்டு என்னிடம் வராதீர்கள். நான் உங்களுக்கு குறிப்புகளை வழங்கப் போவதோ உங்கள் படத்தொகுப்பாக்கப் பணியில் ஈடுபடப்போவதோ இல்லை. உங்கள் திரைப்படத்துக்கு எனது பெயர் தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்திக்கொள்ள மனமுவந்து உங்களுக்கு அனுமதி தருகிறேன்” என்பேன். சில திரைப்படங்களுக்கு நான் இவ்வாறு செய்துள்ளேன். தங்களுடைய திரைப்படத்தை இயக்குவதற்கு ஒரு உந்துதலாக மட்டுமே நானிருக்க வேண்டுமே தவிர, எனது ஆலோசனைகளை வறட்டுத்தனமாக அவர்களுடைய படைப்பாக்க முயற்சியில் புகுத்தி எரிச்சலடையச் செய்யக்கூடாது. அதே சமயத்தில், பொருளாதார ரீதியில் இது எனக்கு ரொம்பவே கடினமானதுதான். ஏனெனில், எனது சொந்த திரைப்படங்களுக்கே என்னால் நிதியுதவியைப் பெற முடிவதில்லை. ஆனால், இப்படி இளம் இயக்குநர்களுடன் ஏதோவொரு வகையில் பயணிப்பது மகிழ்ச்சியானதொரு உணர்வாகவே இருக்கிறது.

 

ஒரு திரைப்பட உருவாக்கப் பணி, இசைக்குழுவொன்றில் இணைந்து செயல்படுவது உட்பட ஒரே நேரத்தில் ஏராளமான பணிகளில் ஈடுபடுகிறீர்கள். எப்போதும் பிசியாகவே இருப்பதில் தீவிர விழைவுகொண்ட மனிதர்களில் ஒருவராக நீங்கள்?

நான் அப்படியானவன் அல்ல. பொதுவாக, ஒரு நேரத்தில் ஒரு வேலையில் ஈடுபடுவது மட்டுமே என்னுடைய இயல்பாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால், கடந்த 10 வருடங்களில் என்னுள் அபரிமிதமான பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, நான் பல வேலைகளில் ஒரே நேரத்தில் ஈடுபடத் துவங்கியிருக்கிறேன். என்னில் எதுவோ மாறியிருக்கிறது, அது என்னவென்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஒருவேளை வாழ்க்கை மிக வேகமாகக் கடந்துகொண்டிருக்கிறது என்கின்ற புரிதலை நான் அடைந்திருக்கலாம். குறிப்பிட்ட ஒரு திட்டம் சார்ந்த தீவிரப் பிணைப்பு ஏற்படாதபோது வெவ்வேறு வேலைகளைச் செய்ய தலைப்படுகிறேன். திட்டமொன்று மனதில் உருதிரளும்போது வேறு பணிகளைப் பற்றிச் சிந்திப்பது அச்சுறுத்துவதாக இருக்கும். எனது திரைப்படங்களுக்கு நானும் சேர்ந்து பணம் செலவழிக்க வேண்டிய கொடுமையான காலகட்டத்தில் சிக்குண்டிருக்கிறேன். இது அற்புதமானதாக இருப்பதில்லை. அதேபோல நிறைவுசெய்துவிட்ட பின் அந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் செயலாக்கத்திலும் எனக்கு விருப்பமில்லை. அடுத்தடுத்து புதிய விஷயங்களைக் கண்டறிந்து, என்னுடைய கற்பனையை ஈர்க்கக்கூடிய வேலைகளில் இயங்கவே விரும்புகிறேன். நேரத்தை வீணடிக்க நான் விரும்புவதில்லை.

 

உங்கள் திரைப்படங்களில் பல இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். ஆனால் நீங்களும் தனியே இசை உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? சிறுவயதிலேயே இசையமைக்கக்கூடிய விருப்பமும் ஆற்றலும் உங்களிடம் இருந்ததா?

இல்லை. சிறுவனாக இருந்தபோது டிரான்போனை வாசிக்கக் கற்றுக்கொள்ள முயன்றிருக்கிறேன் என்றாலும், என்னால் முழுமையாக அதைக் கற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் வீட்டில் ஒரு சிறிய பியானோ சில காலத்திற்கு இருந்தது. அதைச் சுற்றி விளையாடிக்கொண்டிருப்பேன் என்றாலும், அதன் வழியே இசைக் கற்கும் யோசனை எதுவும் அப்போது தோன்றவில்லை. என்னுடைய 20வது வயதில் இசையமைக்கத் துவங்கிய சமயத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் இசையமைக்கத் துவங்கியிருந்தனர். 70களின் பிற்பகுதியில் குறிப்பிட்ட ஒரு காலத்தில் கிழக்குப்புற கிராமத்தில், “இங்குள்ள எல்லோருமே இசைக்குழுவினர்தான்” என்று சொல்லுமளவுக்கு இசையமைப்பதில் பேரார்வம் எல்லோரிடத்திலும் நிரம்பியிருந்தது. இது உண்மைதான். இந்தக் காலகட்டத்தில் நானும் ஏராளமாக இசை அமைத்திருக்கிறேன். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பிறகு அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு இசை அமைக்கும் எண்ணமே எனக்கு எழவில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு 10, 12 வருடங்களுக்கு முன்னால் மீண்டும் இசைத் தயாரிப்புகளில் ஈடுபட வேண்டுமென்கிற எண்ணம் எனக்குள் முளைவிட்டது. அதிலிருந்து ஏராளமான இசையமைப்பாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறேன். இதுவொரு நல்ல மாற்றமாகவே கருதுகிறேன். திரைப்பட உருவாக்கத்திலும், படப்பிடிப்பு நாட்களிலும், உங்களுடன் இணைந்து பணிசெய்யும் அற்புதமான மனிதர்களுக்கு மத்தியில் இருக்கும்போது, ஏராளமான மனிதர்களை ஏற்றிச்செல்லும் ஒரு தனிப்பட்ட கப்பலில் பயணிப்பது போன்ற உணர்வு மனதில் எழுகிறது. அதுவே இசையமைப்பில் ஈடுபடும்போது வெகு சொற்ப மனிதர்களுடன் நீரின் மீது வரிசை வரிசையாகச் செல்லும் சிறிய படகொன்றில் நீங்களும் துடுப்பு அசைப்பதாக உணர்வளிக்கிறது. இது மிகவும் எளிமையானது.

 

ஏன் இசையமைப்பை மீறி திரைப்பட உருவாக்கம் உங்களை அதிகம் இழுக்கும் விசையாக உள்ளது?

திரைப்படங்களை உருவாக்குதல் என்பது என்னை வெகு ஆழமாக உள்ளிழுத்துச் செல்லக்கூடிய, என்னை முழுமையாகத் தழுவி நிற்கும் ஒரு செயலாக மாறிவிட்டது. பல தசாப்தங்களாக எனது முழுமையான ஆற்றலை அதில் நான் செலவழித்திருக்கிறேன். அதே சமயத்தில் எழுத்து பணிகளிலும், புகைப்படக் கலையிலும் இன்னொரு பக்கம் தொடர்ச்சியாக இயங்கியே வந்திருக்கிறேன். இப்போது என் பணித் திட்டத்தில் பலபல விஷயங்கள் திரண்டு நீள்கின்றன. இசைத் தயாரிப்புகள், சிறியளவில் கலைச் செயல்பாடு, எழுத்துப் பணிகள் என எனது நாட்கள் சுவாரஸ்யமாகவே நகருகின்றன.

 

திரைப்படக் கலையை நான் ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்றால், இக்கலையில் அனைத்துமே உள்ளடங்கி இருக்கின்றன. அனைத்துமே! இசை, புகைப்படக் கலை, காட்சிக் கட்டமைப்பு, நடிப்பு, எழுத்து, பாணி மற்றும் வடிவம். கிட்டத்தட்ட மனிதனுடைய அனைத்து வெளிப்பாட்டுப் பாணிகளுடனும் அது தொடர்புடையதாக இருக்கிறது. கட்டமைத்தலும்கூட ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருக்கவே செய்கிறது. திரைப்பட இயக்குநர்களுக்குப் பல்வேறுபட்ட ஆர்வங்கள் இருக்க வேண்டியது மிக முக்கியமானது. ஆர்வமூட்டும் இயக்குநர்கள் அனைவருமே தேவைக்கேற்ப ஒருவகையிலான டிலேட்டான்ட்களாகவே (குறிப்பிட்ட ஒன்றின் மீது மிகத் தீவிரமான புரிதலோ அல்லது அதை மிகுதி ஒழுங்குடன் அணுகாமலோ அதன் மீது ஆர்வத்துடன் இருப்பது) இருப்பார்கள். என்னை நானொரு டிலேட்டான்ட்டாகவே உணர்கிறேன். எதிர்மறையான அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. எனக்கு ஏராளமான விஷயங்களின் மீது ஆர்வமிருக்கிறது. ஒருவகையில் அவற்றைச் செய்ய முயலவே செய்கிறேன். ஆனால், நான் எதுவொன்றிலும் மாஸ்டர் அல்ல.

 

மக்கள் உங்களை முதன்மையாகத் திரைப்படப் படைப்பாளியாக கருதுவதால், இசையமையாளராக உங்களைக் கருதுவதில் சிக்கல் ஏற்படுவதாக நினைக்கிறீர்களா?

ஆமாம். ஏனெனில், பிறர் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் கையாளுகிறீர்கள். இது ரொம்பவும் வரையறுக்கப்பட்டது. வெகுஜனம் மூடுண்ட மனநிலையைக் கொண்டவர்களாக இருக்கலாம். உதாரணத்திற்கு, ஜானி டெப் முதலில் ஒரு இசைக் கலைஞர் என்பதையும், அதன்பிறகே நடிகர் என்பதையும் அறிவதில் அவர்களுக்கு ஆச்சரியமே உருவாகும். அவர் இசையமைப்பதைப் பார்க்கும்போது, “ஓஹ், ஒரு நடிகர் இசையமைக்கிறார்” என்றே சொல்வார்கள். ஆனால், உண்மையில், அவர் நடிக்கும்போது, ஒரு இசைக் கலைஞர் நடிக்கிறார் என்றே சொல்லப்பட வேண்டும். என்னுடைய மனதைக் குறுகியதாக வைத்துக்கொண்டு, மக்களால் ஒன்றை மட்டுமே செய்ய முடியும் என்கிற முன்முடிவுகளை அண்டவிடாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும்.

 

காட்சிவடிவக் கலையிலோ திரைப்படங்களிலோ வேலை செய்வதை விடவும் இசையமைப்பது உங்கள் மூளையின் வேறொரு பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வதாகக் கருதுகிறீர்களா?

ஆமாம். அது உடனடியானது. அதற்கென தனியான மொழியைக் கொண்டிருப்பது. உரையாடுவதற்கும் தொடர்புகொள்வதற்குமான முழுமையான உடனடி வடிவத்தைப்போல அது எனக்குத் தோன்றுகிறது. நான் இசையைப் படிக்கவில்லை என்பதால், ஏற்கெனவே ஒரு இறுக்கமான வடிவத்தில் எழுதி நிறைவு செய்யப்பட்ட செவ்வியல் இசைத் துணுக்குகளில் குறுக்கீடுகளை நிகழ்த்துவதில்லை. எனினும், அதிலும்கூட குறிப்பிட்ட ஒரு இசைத் துணுக்கை இசைப்பதென்பது ஒவ்வொரு வயலினிஸ்ட்டுக்கும் மாறுபடவே செய்யும்.

தங்களுடைய வெளிப்பாட்டிலும் திறனில் அவர்களுடைய ஒரு பகுதி இயைந்துகொள்கிறது. இசைக் கலைஞர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறேன். 20 வருடங்களுக்கு முன்னால், ஒரு திரைப்படத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்து முடித்ததும் டாம் வெயிட்ஸ் போன்ற ஒரு நபருடன் சில தினங்களைச் செலவிடுவேன். தனது பியானோவின் அருகில் அமர்ந்து அற்புதமான இசையை அமைத்து காற்றின் மீது அதனை மேவிவிடுவார். சில கணங்களுக்கு அது உயிர்ப்பித்திருக்கும், அதன்பிறகு மறைந்துவிடும். வாவ்! இது அற்புதமானது என்பதாக அவ்வுணர்வு இருக்கும். அது அந்தக் கணத்தில் நிகழும் ஒரு அதிசயம்.

அதே சமயத்தில், ஒரு படத்துக்காக மாதக்கணக்கில் ஊழியம் பார்த்துக்கொண்டும் இருப்பேன். அந்தப் படத்தின் பணிகளை நிறைவு செய்ததும், அதற்கான விளம்பரப்படுத்துதல் வேலைகளில் ஈடுபடுவேன். இப்போது அந்தப் படத்தைத் துவங்கியபோது இருந்த நபரிலிருந்து வெகு தூரம் விலகி வந்திருப்பேன். ”இந்தப் படம் எதைப் பற்றியது? என்ன சொல்ல வருகிறது?” என்றெல்லாம் கேட்பார்கள். எனக்குத் துளியும் அதைப் பற்றித் தெரியாது. ஞாபகம் இருக்காது. ஏற்கெனவே புதிதான ஒன்றைப் பற்றி நான் சிந்திக்கத் துவங்கியிருப்பேன். இசையைப் பொறுத்தவரை அது முற்றிலும் மாயாஜாலமானது. தங்களால் பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாத மொழியின் பாடல்களைக் கூட மக்கள் பாடகர்களுடன் சேர்ந்து பாடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஹிப் ஹாப் போன்ற வடிவங்களை மக்கள் பாட முயலும்போது அது எனக்கு வேடிக்கையாகவே இருக்கிறது. குறிப்பாக, ரோம் மக்கள் எரிக் பி. மற்றும் ரக்கிமின் பாடல்களை உடன் சேர்ந்து பாடுவதைப் பார்த்தபோது அது எனக்கு வேlடிக்கையாகவே இருந்தது. தாம் என்ன சொல்லச் சொல்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியுமா? இன்னொரு வகையில் பார்க்கும்போது, அதை அவர்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, இசையிலிருந்து கிளர்ந்துவரும் உணர்வை மிக ஆழமாக அவர்கள் பெறுகிறார்கள். வார்த்தைகளின் அர்த்தம் துலங்கவில்லை எனும்போது, உணர்வு அவர்களிடம் உரையாடத் துவங்கிவிடுகிறது. இசையால் இவ்வதிசயத்தைச் செய்ய முடியும்.

 

உங்களுடைய சமீபகால கால திரைப்படங்களுக்கு நீங்களே இசையமைத்துள்ளீர்கள். உங்கள் திரைப்படத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு இது உங்களுக்கு உதவியிருக்கக்கூடும். சரியா?

ம்ம்ம். இது தற்செயலாக நிகழ்ந்ததுதான். The Limits of Control எனும் திரைப்படத்தின் உருவாக்கத்தில் இருந்தபோது, அதில் அருங்காட்சியகத்துக்கு ஒருவர் செல்வதும், அங்குள்ள ஓவியங்களைப் பார்ப்பதும், பின் அங்கிருந்து கிளம்பிச் செல்வதுமான காட்சிக்கு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த இசை பொருந்தவில்லை என்று எனக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் நான் அமைத்திருந்த சில இசைத் துணுக்குகளும் என்னிடம் இருந்தன. Blue Orchid எனும் பாடலை ரீமிக்ஸ் செய்யும்படி ஜாக் வொய்ட் என்னிடம் தெரிவித்திருந்தார். மேலும், எனது படத்தொகுப்பாளரும், “இந்தக் குறிப்பிட்ட காட்சிகளுக்கு நீங்களே ஏன் இசையமைக்கக்கூடாது?” எனக் கேட்டார். எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. அதனால் முயன்று பார்த்தோம். விளைவு சாதகமாகவே வந்திருந்தது. பல அதியற்புதமான இசைக் கலைஞர்களை எனக்குத் தெரியும் என்பதாலும், RZA, நீய்ல் யங் மற்றும் டாம் வெயிட்ஸ் போன்றோருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன் என்பதாலும் இது கேட்பதற்கு அச்சுறுத்துவதாகத்தான் இருக்கும் என எனக்குத் தெரியும். துவக்கத்தில், “இவ்வளவு அற்புதமான கலைஞர்களை அறிந்திருந்தும் நானே ஏன் இசையமைக்க வேண்டுமென நினைக்கிறேன்?” எனும் எண்ணமே எனக்குள் எழுந்தது. ஆனால் சூழலின் காரணமாக, அது அத்தகைய திரைப்படங்களுக்கு அவசியமானதாக அமைந்துவிட்டது. இப்போது நாங்கள் அதைத் தொடருகிறோம்.

 

திரைப்பட உலகைத் தொந்தரவு செய்யாமல், இதுபோன்ற வெவ்வேறு படைப்புத் திட்டங்களைக் கொண்டிருப்பது அற்புதமானதுதான்.

ஆமாம். உண்மையாகவே! அது ரொம்பவே விநோதமாக மாறிக்கொண்டிருக்கிறது, அதாவது திரையுலகம். குறிப்பாக, திரைப்பட உருவாக்கத்திற்கான நிதியுதவி பெறும் விஷயத்தில். முன்காலங்களில் இருந்ததை விட இப்போது முற்றிலுமாக வேறுபட்டிருக்கிறது. எனது திரைப்படங்களை உருவாக்குவதில் பல பெரிய மனிதர்களுடைய உதவிகள் இருக்கின்றன, அவர்களை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், படங்களை உருவாக்க உதவுகிறார்கள் என்பதற்காகவே வினியோகஸ்தர்களின் முன்னால் முழங்காலிட்டு நன்றி தெரிவிக்க வேண்டுமோ என்கிற எண்ணமும் எழாமலில்லை. இது எப்படியான உணர்வென்றால், ஒரு நிமிடம் பொறுங்கள்… நானே தான் இந்தத் திரைக்கதையை எழுதியிருக்கிறேன், இந்த நடிகர்களை ஒருங்கிணைத்திருக்கிறேன். அதற்காக எனக்குச் சம்பளம் எதுவுமே வழங்கப்படாதா? படத்துக்கு நிதியுதவி செய்வதையே பெருந்தன்மை மிக்க செயலாகக் கருதி முழங்காலிட்டு நன்றி தெரிவிக்க வேண்டுமா? இது அவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லையென்றாலும், விஷயங்கள் மாறிவிட்டன. நான் நண்பர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினேன். நிறைவுசெய்யப்பட்ட அப்படத்தை விநியோகஸ்தரிடம் காட்டியபோது, அதன் பட்ஜெட்டைப் பார்த்துவிட்டு, “நீங்கள்தான் இதன் இயக்குநர், உங்களுக்குமா நான் பணம் தர வேண்டும்?” என்றார். உங்களுடைய நான்காண்டு காலம் அந்த ஆவணப்படத்திற்காகச் செலவழிக்கப்பட்டிருந்தாலும், கேட்கப்படும் தொகை மிகச் சொற்பமானதுதான் என்றாலும், “அடடா, அப்படியா?” என்பதாகவே அவர்களுடைய எதிர்வினை இருக்கிறது. ஆமாம். இதுபோன்ற முட்டாள்தனத்திடமிருந்து சிறிது விலகி இருப்பது நல்லதுதான்.

டென்னிஸ் ஹோப்பர் ஒருமுறை ஒரு நேர்காணலில், “ஒரு திரைப்படத்தை உருவாக்குவதென்பது மிக மிக சிரமமிக்கதொரு பணி, ஒரு நல்ல படத்தை உருவாக்குவது எவ்வளவு கடினமானதோ, அதே அளவு மோசமான படத்தை உருவாக்குவதும் கடினமானதுதான், இது ரொம்பவே சிரமமானது” என்பதுபோல ஏதோ தெரிவித்தார். இது முற்றிலுமாக ஏற்கக்கூடியதே. திரைப்படத்தை உருவாக்குவதென்பது கடினமானதுதான். அது எளிய விஷயமே இல்லை. உங்களுடைய ஆற்றலை எல்லாம் அது உறிஞ்சிவிடும். நீங்கள் வலிமையானவராக உங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். “உடல்ரீதியாக நீங்கள் தடகள விளையாட்டாளரைப்போல இருக்க வேண்டும்” என வெர்னர் ஹெர்சாக் அவ்வப்போது குறிப்பிடுவதுண்டு. இதுவும் உண்மையானதே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை இருக்கும். ஆனால் திரைப்படம் உருவாக்குதல் என்பதற்கு ஏராளமான ஆற்றலும், கவனமும், கூர்நோக்கும் இருக்க வேண்டும். இது எளிதான காரியமல்ல, ஆனால் என் விஷயத்தில் எனக்கு இக்கலை முழு நிறைவைத் தருகிறது. ஏனெனில் இதில் பிற அனைத்துக் கலை வடிவங்களும் சங்கமித்துள்ளன. இது உற்சாகமூட்டக்கூடிய ஒரு வடிவமாகும். நானிதை மிக ஆழமாக நேசிக்கிறேன். திரைப்படங்களின் கன்றுக்குட்டி நான். சிறுவயது முதலே திரைப்படங்களை நான் வெறிபிடித்தவனைப்போல உட்கிரகித்து வருகிறேன். இசையையும் புத்தகங்களையும் வேறு பல விஷயங்களையும் வெறிபிடித்தவனைப்போலத்தான் உட்கிரகித்து வருகிறேன். எனினும், திரைப்படங்களின் மீதான எனது நேசிப்பு மிகத் தீவிரமானது. இறுதியில் அதற்குத்தானே மீண்டும் மீண்டும் வந்து சேருகிறேன்!

 

பல கலைஞர்கள் ஒரேயொரு கலை வடிவத்தில் ஈடுபடுவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் பல வடிவங்களிலான படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் ஆரோக்கியமானதாகவே தெரிகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க அது நமக்கு உதவுகிறது.

அது உண்மைதான் என்றே நினைக்கிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான குணவியல்புகளைக் கொண்டவர்கள், தமக்கேற்ற இயங்கு முறையை ஒவ்வொருவரும் கண்டடைய வேண்டும். ஆனால், இவ்வாறு பல படைப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் நல்லதென்றே கருதுகிறேன். நானொரு தொழில்முறை திரைப்படக் கலைஞன் அல்ல. என்னை ஒரு அமெச்சூர் திரைப்படக் கலைஞன் என்று சொல்வதில் நான் விடாப்பிடியாக இருக்கிறேன். ஏனெனில் அமெச்சூர் என்பதன் மூலப் பொருள், “ஒன்றின் மீதான காதல்”, தொழில்முறை என்பதன் அர்த்தம், “நான் இதைப் பணத்திற்காகச் செய்கிறேன்” என்பதாகும். நான் இந்தக் கலை வடிவத்தைக் காதலிப்பதால் நானொரு அமெச்சூர் திரைப்பட இயக்குநர்தான். ”கலைஞன்” என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ள நான் விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக, என்னைக் கவருகின்ற அல்லது என் மீது பாதிப்புகளை நிகழ்த்துகின்ற பல விஷயங்களை உள்ளிழுத்து என்னை செறிவுபடுத்திக்கொண்டு என்னில் எது உருவாகிறதோ அதன்மூலம் ஒரு வெளிப்பாட்டு வடிவத்தை அடைவதே எனது இயல்பாகும். நான் அவ்வகையிலான மனிதன்தான். இதே போன்ற உணர்வு பலருக்கும் உண்டு என்பதை நான் அறிவேன். டேவிட் லிஞ்ச்சையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவர் இசையமைக்கிறார், ஓவியம் வரைகிறார். பிற ஏராளமான வேலைகளில் ஈடுபடுகிறார். வெவ்வேறு வெளிப்பாட்டு கலை வடிவங்களில் ஈடுபடக்கூடிய நிறைய திரைப்பட இயக்குநர்கள் உள்ளார்கள். சிலருக்குப் பல வகையிலான வெளிப்பாட்டு வடிவங்களும் சிலருக்கு ஒரேயொரு வெளிப்பாட்டு வடிவமும் போதுமானதாக இருக்கிறது. அவர் ஒற்றைச் செல் உயிரி – படைப்பாளியைப் போன்றவர்கள். செய்வதற்கு அவர்களுக்கு ஒரேயொரு வேலை மட்டுமே இருக்கும். நானதை மதிக்கிறேன். நானும் சில காலம் அப்படித்தான் திரைப்பட உருவாக்கத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்தேன். பிறகுதான் எனது எல்லை இவ்வளவு குறுகியது அல்ல என்கிற புரிதல் எனக்கு உண்டானது.

 

வயது ஏற ஏற விஷயங்களை விரைவாகச் செய்வதற்கான ஒரு உந்துதலும் பரபரப்பும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் அதை உண்மையாகவே உணருகிறேன். அதைப் பற்றி ஆய்வுசெய்து பார்க்கவில்லை என்றாலும், வயது ஏற ஏற காலம் மிக விரைவாக உங்களிடமிருந்து பிடி நழுவிச் செல்வதை நம்மால் உணர முடியும். செய்து முடிக்க வேண்டும் என நான் நினைக்கும் ஏராளமான விஷயங்கள் இன்னமும் மீதமுள்ளன. நான் முயல விரும்பும் விஷயங்கள். இரண்டு புத்தகப் பணிகளும் உள்ளன. அதைப் பற்றி விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருக்க விரும்பவில்லை என்றாலும், இரண்டு புத்தகங்களுக்கான பணிகள் உள்ளன. 1970களிலிருந்து கவிதைகளும் எழுதி வருகிறேன். பெரிதாக எவரிடமும் அதை நான் பகிர்ந்ததில்லை என்றாலும், அவற்றில் பிரசுரிக்க வேண்டும் என நான் நினைக்கும் கணிசமான எண்ணிக்கையிலான கவிதைகளும் இருக்கின்றன. எனக்கு உறுதியாய் தெரியவில்லை. செய்தித்தாள்களிலிருந்து கத்தரித்த படங்களை வைத்தும் ஒரு கொலாஜ் உருவாக்கியிருக்கிறேன். அதில் கிட்டத்தட்ட 300 படங்கள் இருக்கின்றன. அவற்றையும் எங்கேனும் காட்சிப்படுத்த விரும்புகிறேன். அவற்றில் சிலவற்றை முன்பே பிறரிடம் காண்பித்திருக்கிறேன். எனினும், இன்னும் அதிகளவில் அதைப் பிறரிடம் காட்ட விரும்புகிறேன். ஆக, இத்தகைய பணிகளையும் சில இசைப் படைப்புகளிலும் ஈடுபட வேண்டியிருக்கிறது. நான் மிகக் கடினமாக உழைத்து கேட்ஸ்கில்ஸில் சிறிய படைப்பாக்க ஆய்வகத்தை அமைத்திருக்கிறேன். இப்போது எனது வீட்டில் படைப்புச் செயல்பாடுகளுக்கென தனியே சில பகுதிகளை என்னால் ஒதுக்க முடிந்திருக்கிறது. ஒன்று கலை/இசை போன்றவற்றுக்கானது, மற்றொன்று ஒருவகையில் வாசிப்பறையைப் போன்றது. தனியாகவோ பிறருடன் சேர்ந்தோ எனது கலை செயல் புரிய, எழுத, வாசிக்க, திரைப்படங்களை உருவாக்க, இசை அமைக்க இவ்வறைகளை நான் பயன்படுத்துவேன். “நீ திடமாகவே இருக்கிறாய், இன்னும் நீண்ட தூரம் ஓட வேண்டியிருக்கிறது” என்பதே என்னுடைய உணர்வாக இருக்கிறது. இசையமைக்கவும் வேறு பல செயல்கள் புரியவும் இது ஏற்ற நேரம் என்று மனதில் உணருகிறேன். இது அற்புதமான உணர்வு. இது குறித்த மிகுதியான மகிழ்ச்சி எனக்குள் உருவாகியிருக்கிறது. காத்திருக்காதே. நேரத்தை வீணடிக்காதே. செயலில் ஈடுபடு.

 

நானொரு அமெச்சூர் திரைப்பட இயக்குநர்ஜிம் ஜார்முர்ஷ் நேர்காணல்!

 தமிழில்: ராம் முரளி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.