கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’

இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது,

அணுக்களால் அல்ல.

– ம்யூரியல் ரூகெய்சர் (‘இருளின் வேகம்’ கவிதையிலிருந்து).

 

I

யாரெல்லாம் பெண்குறிக் காம்பினை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்கள்

யாரெல்லாம் ஆண்குறியை வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் யோனியை வெறுக்கிறார்கள்

யாரெல்லாம் யோனியை  வெறுக்கிறார்களோ அவர்களெல்லாம் குழந்தையின் வாழ்வினை வெறுக்கிறார்கள்.

 

உயிர்த்தெழுதல் இசை,       மௌனம்,       உலாவல் .

 

II

மேற்கொண்டு பேசாமல்

முழு உடலாலும் கேட்டுக் கொண்டு

ஒவ்வொரு துளி ரத்தத்துடனும்

மௌனத்தால் கைப்பற்றப்பட்டு

 

ஆனால் இந்த மௌனமே பேச்சாகிவிட்டது

இருளின் வேகத்துடன்.

 

III

போரின் போது உறைவு, ஏரி.

அசையாத தளிர்கள்.

தண்ணீரின் மீதான மினுமினுப்புகள்.

முகங்கள், குரல்கள்.        நீ தொலைவில் இருக்கிறாய்.

ஒரு நடுங்கும் மரம்.

 

நான் தான் அந்த நடுங்கிக் கொண்டேயிருக்கும் மரம்.

 

IV

பனி வடிந்த பின்

பெருமழை முடிந்த பின்

வானம் தெளிவாக இருக்கிறது

நகரத்தின் ஓலங்கள் இந்த நாளில் கூடியிருக்கின்றன

எனக்கு நினைவிருக்கிறது இந்தக் கட்டிடங்கள் சுவர்களுக்கு இடையே

இடைவெளிகளுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன, வெளி வாழ உபயோகப்படவென விடப்பட்டிருக்கிறது

நான் கருத்தில் கொள்கிறேன் இந்த அறை ஒரு வெளி

இந்த மது அருந்தும் கண்ணாடிக் கோப்பை ஒரு வெளி

அதன் கண்ணாடி எல்லை

என்னை உனக்கு மது அளிக்கவும் மது அருந்தவும் வெளியைத் தருகிறது

உன் கை, என் கை வெளி என்றிருக்க

அவை கொண்டிருக்கின்றன வானங்களையும் விண்மீன் கூட்டங்களையும்

உன் முகம்

காற்றின் எல்லைகளைச் சுமந்தபடி

எனக்குத் தெரியும் நான் வெளி

என் வார்த்தைகள் காற்று.

 

V

இடையே        இடையே

ஆண் : செயல்        துல்லியம்

பெண் : வளைவில்        புலன்கள் அவை தம் புதிர் பாதையில்

பலவீனமான சுற்றுப்பாதைகள், பசுமையான முயற்சிகள்,           நட்சத்திரங்களின் விளையாட்டுகள்

உடலின் வடிவம் தன் ஆதாரத்தைப் பேசியபடி

 

VI

நான் உண்மையைக் குறுக்கே பார்க்கிறேன்

பாதிப்பிற்குள்ளாகக்கூடிய        ஈடுபாட்டுடன்        நிர்வாணமாக

நிகழ்காலத்தில் நான் அக்கறை கொள்ளும் அனைத்தின் மீதும் அர்ப்பணிப்புடன்

உலகம் அதன் வரலாற்றினை இந்தத் தருணத்திற்கு வழி வகுக்கிறது.

 

VII

வாழ்க்கை எனும் அறிவிப்பாளர்.

நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்

ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள நிறைய வழிகள் உள்ளன.

முறை தவறிப் பிறந்த தாயாகிய

நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்

பிறக்க நிறைய வழிகள் உள்ளன.

அவையாவும் முன்னே வருகின்றன

தமக்கே உரிய நயத்துடன்.

 

VIII

பூமியின் முனைகள் இணைகின்றன இன்றிரவு

எரியும் நட்சத்திரங்களுடன் கூடிய அவற்றின் சந்திப்பில்.

இந்த மகன்கள், இந்த மகன்கள்

எரிந்து விழுகிறார்கள் ஆசியாவில்.

 

IX

காலம் அதற்குள் வருகிறது.

அதைச் சொல்லுங்கள்.        அதைச் சொல்லுங்கள்.

இந்த உலகம் கதைகளால் செய்யப்பட்டிருக்கிறது,

அணுக்களால் அல்ல.

 

X

படுத்தபடி

தகிப்புடன் என் அருகில்

உன் பின்புறம் அழகாக மேல் நோக்கி-

உன் சிந்தனை முகம்-

காமத்தின் உடல் அணுகும்

அதன் அனைத்து வண்ணங்களிலும் ஒளிகளிலும்-

உன் காம முகம்

வண்ணம் தீட்டப்பட்டு ஒளியூட்டப்பட்டு-

வண்ணம் தீட்டப்படாத உடலும்-முகமும்

ஆனால் இப்போது முழுவதும்,

வண்ணங்கள்       ஒளிகள்       உலகம் சிந்தித்தபடி அணுகியபடி.

 

XI

நதி பாய்ந்து கடக்கிறது நகரத்தை.

நீர் கீழே செல்கிறது நாளையை நோக்கி

தன் குழந்தைகளை உருவாக்கியபடியே        நான் அவர்களின் பிறக்காத குரல்களைக் கேட்கிறேன்.

எனது மௌனத்தின் சொற்களஞ்சியத்தை நான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

 

XII

என் கனவின் ஆஜானுபாகுவான இளமையான ஆண்மகன்

போராடுகிறான் தன் தொண்டையிலிருக்கும் உயிருள்ள பறவையை வெளியேற்ற.

நான் தான் அவன் நான் தானே?        கனவில்?

நான் தான் அந்தப் பறவை நான் தானே?        நான் தான் தொண்டை.

 

வளைந்த அலகு கொண்ட ஒரு பறவை.

அது எதையும் அறுக்கும், அந்தத் தொண்டை-பறவை.

மெதுவாக உருவப்பட்டு.         அந்த வளைந்த கத்திகள்,  பெரிதல்ல.

பறவை வெளிப்படுகிறது        ஈரத்துடன்        பிறந்து

பாடத் தொடங்குகிறது.

 

XIII

என் இரவு விழித்திருக்கிறது

பரந்த கடினமான அணிகலனை வெறித்தபடி

வழியின் குறுக்கே இருக்கும் செம்புக் கூரை

கவிஞரை நினைத்தபடி

எனினும் இந்த இருளில் இன்னும் பிறக்காமல்

யாரிருப்பார் இந்த மணி நேரங்களின் தொண்டையாக .

இல்லை.        அந்த மணி நேரங்களின்.

யார் பேசுவார் இந்த நாட்களில்,

நான் இல்லாவிடில்,

நீ இல்லாவிடில்?

கதைகளால் செய்யப்பட்ட உலகம்: ம்யூரியல் ரூகெய்சரின் ‘இருளின் வேகம்’

தமிழில்: நந்தாகுமாரன்


* இருளின் வேகம் (The Speed of Darkness) – 1968இல் வெளியான  கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதை. வாசிக்கச் சவாலான இக்கவிதை மொழிச் சிக்கலும் கடினமான கட்டமைப்பும் கொண்டதாக இருக்கிறது. 1964இல், ரூகெய்சருக்குப் பக்கவாதம் வந்தது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1968இல், ‘இருளின் வேகம்’ என்ற இந்தக் கவிதையை ரூகெய்சர் வெளியிட்டார்.

 

“பல ஆண்டுகளாக, இந்த கவிதை பல வழிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுவான விளக்கம் என்னவென்றால், இக்கவிதை ஒரு பெண் ஒரு கவிஞராகத் தனது குரலைக் கண்டுபிடிப்பதைப் பற்றியது என்பது. கவிதையை மதிக்காத உலகில் ஒருவர் எப்படி கவிதை எழுதுகிறார் என்பதைப் பற்றியும் இது பேசுகிறது. நாம் புறக்கணிக்க விரும்பும் நம் சுயத்தின் பகுதிகளைக் கவிதை வெளிப்படுத்துகிறது என ரூகெய்சர் நம்பினார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கவிஞர், தகவல்தொடர்பு முறிவு என்பதைக் கவிதையுடன் சம்பந்தப்பட்ட தன் திண்டாடும் குரலைக் கண்டுபிடிப்பதற்கான போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கிறார், என்ற ஒரு கண்ணோட்டத்திலும் இந்தப் பிரதியை அணுகலாம். பக்கவாதத்தின் பாதிப்பு ஒரு படைப்பாளியை எப்படி வெளிப்பட வைக்கிறது என்பதையே கவிதையின் கருப்பொருளாகக் கொண்டு அது எப்படி மௌனம், பேச்சு, தகவல் தொடர்பு, என்பனவற்றைத் தன் துண்டுபட்ட, தந்தி வாக்கியங்களால் ஆன வரி வடிவங்கள் மூலம் ஆராய்ந்து பார்க்கிறது எனவும் இக்கவிதை குறித்துச் சொல்லலாம். மேலும் ரூகெய்சர் இதை முழுவதுமாக ஒரு தனிக் கவிதையாகப் பார்க்காமல் ஒரு கவிதைத் தொடராக (அதன் பகுப்புகள் அதையே குறிக்கின்றன) கருதக் கோரினார். இடைக்கால ஃபிரெஞ்சு பாடல் வடிவமான ‘ச்சேன்சோன்’ (Chanson) போல,  முரண்பாடாக அமைக்கப்பட்ட சரணங்கள் எப்படி ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து தனித்து இருந்தாலும் அருகருகே இருப்பதனாலேயே ஒரு அணுக்கமான தொடர்பினைக் கொண்டிருப்பதைப் போல, இக்கவிதை அமைந்திருப்பதைக் காணலாம். கவிதையில் தென்படும் இந்த முறிந்த சொற்றொடர்கள் மற்றும் அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகள் எல்லாம் ஏதும் ஆழமானதொரு முக்கியத்துவம் கொண்டுள்ளனவா எனவும் அணுகிப் பார்க்கலாம். ஏனெனில் மௌனம் என்பது ரூகெய்சரின் கவிதைகளில் எப்போதும் ஊடாடும் ஒரு சங்கதி. தன் கவிதைகளில் பிரக்ஞையுடன் தான் வடிவமைக்கும் இடைவெளிகளைப் பதிப்பாளர்கள் கவனித்து அச்சில் கொணரத் தவறுகிறார்கள் என ரூகெய்சர் விசனப்பட்டார். கவிதையின் வார்த்தைகளின் இடையே தென்படும் அதீத இடவெளி என்பது மௌனம் என்பதைப் பன்மையில் குறிப்பிடும் யுக்தியாகத் தான் கையாள்வதாக ரூகெய்சர் சொன்னார். அறிதிறன் (cognition) என்பதை தம் கவிதைகளில் அவர் உபயோகித்தார். இக்கவிதையைப் பற்றி ஒற்றை வரியில் இப்படியும் சொல்லலாம் – ‘இருளில் தேடியலைந்து தன் வடிவத்தை, திக்கல் திணறல் மற்றும் மௌனங்களால் கண்டடைய முற்படும் பிரதி” – ஏடம் மிட்ஸ் (Adam Mitts).


ம்யூரியல் ரூகெய்சர் (Muriel Rukeyser) [வாழ்நாள்: டிசம்பர் 15, 1913 – ஃபெப்ருவரி 12, 1980. பிறப்பிடம்: நியூ யார்க் நகரம், நியூ யார்க் மாநிலம், அமெரிக்கா.] – அமெரிக்கக் கவிஞரும் அரசியல் ஆர்வலருமான இவர், சமத்துவம், பெண்ணியம், சமூக நீதி மற்றும் யூத மதம் குறித்த தன் கவிதைகள் மூலம் பிரசித்தி பெற்றார். 1935ஆம் ஆண்டில் வெளியான அவர் முதல் கவிதைத் தொகுதியான ‘பறத்தல் கோட்பாடு’ (Theory of Flight) மூலம் அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. இக்கவிதைத் தொகுதி, அவர் மேற்கொண்ட விமானப் பயிற்சி வகுப்புகளினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ரூகெய்சர், நவீனத்துவப் போக்கின் துண்டான உலகத்தை, மீட்க முடியாத உடைவாகப் பார்க்காமல், அதை சமூக மற்றும் உணர்வு ரீதியான பழுது பார்ப்பின் தேவையாகக் கண்டார். தனது வாழ்வின் பெரும்பகுதியினை, பல்கலைக்கழக வகுப்புகளில் கற்பிப்பதிலும் பயிற்சிப்  பட்டறைகள் நடத்துவதிலும் அவர் ஈடுபட்டபோதும்,  ஒருபோதும் தொழில்முறைக் கல்வியாளராக அவர் மாறவில்லை. இவரின் ‘கவிதை வாழ்வு’ (The Life of Poetry) என்ற விமர்சன நூல், இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் படைப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில், ரூகெய்சர், கவிதை என்பது ஜனநாயகத்திற்கும், மனித வாழ்விற்கும், புரிதலுக்கும் அத்தியாவசியமானது என நிறுவுகிறார். விஞ்ஞானமும் கவிதையும் எதிர்கள் அல்ல இணைகள் என்றார் ரூகெய்சர். ரூகெய்சர், 1945இல் ஓவியர் க்ளின் காலின்ஸை மணந்தார். ஆறு வாரங்களே நீடித்த அந்தத் திருமண உறவை பன்னிரண்டு வாரங்களுக்குப் பிறகு முறித்துக் கொண்டார். செப்டம்பர் 25, 1947இல், இவர் வில்லியம் லாரி ரூகெய்சர் என்ற மகனைப் பெற்றெடுத்தார். தன் மகனின் தந்தை யார் என அவர் பொதுவெளியில் சொல்லவேயில்லை. ரூகெய்சர், இருபால் ஆதரவாளராக இருந்தார். இவர், 18 கவிதைத் தொகுதிகளும், 1 நாவலும் (காட்டுமிராண்டிக் கடற்கரை – ‘Savage Coast,’எனும் சுயசரிதப் புதினம்), 3 நாடகங்களும், 5 சிறார் புத்தகங்களும், 1 விமர்சன நூலும், 3 வாழ்க்கை வரலாறு நூல்களும், 6 மொழிபெயர்ப்பு நூல்களும், 1 குறும்படமும் எழுதினார். அவரது மிகவும் காத்திரமான படைப்புகளில் ஒன்று, ‘இறந்தவர்களின் புத்தகம்’ (The Book of the Dead – 1938) என்ற கவிதைத் தொகுப்பு. இது பருந்துக் கூடு சம்பவம் (Hawk’s Nest incident) எனப்படும்,  நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் சிலிகோசிஸ் என்ற நுரையீரல் பாதிப்பால் ( silicosis) இறந்த தொழில்துறை பேரழிவுச் சம்பவத்தின் விவரங்களை ஆவணப்படுத்தியது. அவரது பல கவிதைகள் ஒரு தாய் மற்றும் மகள் என்ற அவரது பாத்திரத்தை மையமாகக் கொண்டு, பாலியல், படைப்பாற்றல், கவிதை செயல்முறை மற்றும் நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றை ஆராய்ந்தன; மேலும் அவை புராணம் மற்றும் கனவுகளிலிருந்து பெறப்பட்ட குறியீட்டு வலைப்பின்னல்களை அடிக்கடிப் பயன்படுத்தின. ரூகெய்சரை அவரின் சமகால விமர்சகர்கள், “உணர்ச்சிவசப்பட்ட,” “ஆதிகால”, “கூச்சலான” படைப்புகள் எழுதுபவர் எனச் சொல்லி நிராகரிக்கவே முயன்றனர். ரூகெய்சர் தனது நுட்பத்தின் முரட்டுத்தனம், சோதனைத்திறன் மற்றும் ஒரு பெண்ணிடமிருந்து தனித்துவமானதாகத் தோன்றிய சக்திவாய்ந்த சொற்களுக்காகப் பாராட்டும் பெற்றார். வேறுபட்ட ஆனால் காணப்படாத ஒரு எதிர்பார்க்கப்படுகிற எதிர்கால உலகின் வாசகர்களுக்காகவும் தான் எழுதுவதாக ரூகெய்சர் சொன்னார்.

பொறுப்புத் துறப்பு: இது இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றின் தமிழாக்கம். லாப நோக்கம் இல்லாமல், கவிஞரின் படைப்பினையும் அது சார்ந்த கருத்துகளையும் தமிழ் வெளியில் பரவலாக்கும் நல்ல நோக்கத்துடன் வெளியிடப்படுகிறது. ஏதும் காப்புரிமைப் பிரச்சனை இருப்பின் தெரிவித்தால் இது நீக்கப்படும்.

 

உபயோகப்பட்ட வலைப்பக்கங்கள்:

https://www.poetryfoundation.org/poems/56287/the-speed-of-darkness

https://murielrukeyser.emuenglish.org/2015/10/17/adam-mitts-the-vocabulary-of-silence-voice-and-disability-in-the-speed-of-darkness/

https://en.wikipedia.org/wiki/Muriel_Rukeyser

https://www.theparisreview.org/blog/2018/05/30/muriel-rukeyser-mother-of-everyone/

Previous articleநானொரு அமெச்சூர் திரைப்பட இயக்குநர் – ஜிம் ஜார்முர்ஷ் நேர்காணல்!
Next articleவினோதக் கனவு
Avatar
கோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி ‘மைனஸ் ஒன்’, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012-இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபிப்ரவரி 2019-இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020-இல் வெளியானது. இவர் தற்போது, 'ரோம் செல்லும் சாலை' எனும் பயணப் புனைவுப் புதினம் ஒன்றினை எழுதி வருகிறார்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments