நண்பகல்
ஒரு நாள் உங்களுக்கென்று ஒரு வீடு இருக்கும் அடுத்த நாளே அது இல்லாமலும் போகலாம், ஆனால் நான் வீடற்றவனாக ஆனதற்கான தனிப்பட்ட காரணங்களை உங்களிடம் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் அது என்னுடைய இரகசியக் கதை, பசி பெருத்த வெள்ளைக்காரர்களிடமிருந்து இரகசியங்களைக் காப்பதற்கு இந்தியர்கள்[1] பெரும்பாடு பட வேண்டியதிருக்கிறது.
அமெரிக்கப் பூர்வகுடியான ஸ்போகேன்[2] இனத்தைச் சேர்ந்தவன் நான், உட்பிரிவில் ஸேலீஷ்[3] குழு. வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் என்ற இடத்திலிருந்து சுமார் ஐம்பது மைல் விட்டத்திற்குள்தான் என்னுடைய மக்கள் குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். நான் ஸ்போகேனில்தான் வளர்ந்தேன், பிறகு கல்லூரியில் சேர்வதற்காக இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னால் சியாட்டல் நகருக்கு வந்தேன். இரண்டு பருவங்களிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வெளியேறினேன், கூலி வேலைகளும் சிலநேரங்களில் அடிமட்ட எடுபிடி வேலைகளும் கூடச் செய்தேன், இரண்டோ மூன்றோ திருமணங்கள் செய்துகொண்டேன், இரண்டோ மூன்றோ குழந்தைகளுக்குத் தகப்பனானேன், அதன் பிறகு பைத்தியக்காரனாகிவிட்டேன். பைத்தியம் என்று நான் சொல்வது என் புத்தி கோளாறு என்ற நேரடியான மருத்துவ அர்த்தத்தில் அல்ல, நிச்சயமாக. ஆனால் அதே நேரத்தில் சமூகத்திற்கு எதிரான குழப்ப மனநிலை கொண்டவன் என்பதும் பொருத்தமாக இருக்காது. அது என்னை ஒரு தொடர் கொலைகாரனாகவோ அல்லது அது போல ஏதோவொருவனாகச் சித்தரித்துவிடும். நான் இன்னொரு மனித உயிரைத் துன்புறுத்தியதில்லை, குறைந்தபட்சம் உடல்ரீதியாகக் கண்டிப்பாக இல்லை. நான் என்னுடைய இளமைக் காலங்களில் சில இதயங்களைக் காயப்படுத்தியிருக்கிறேன், ஆனால் அதை நாம் எல்லோருமே செய்திருப்போம் அதனால் அந்த விஷயத்திலும் நான் தனிச்சிறப்புடையவன் அல்ல. அதையும் நான் சலிப்பூட்டும் விதமாகத்தான் செய்திருக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு பெண்ணுடன் மட்டுமே சுற்றியிருக்கிறேன் அல்லது குடும்பம் நடத்தியிருக்கிறேன். ஒரே இரவில் அவர்களின் இதயங்களைத் துண்டுதுண்டாக உடைத்ததில்லை. மிக நிதானமாகவும் கவனமாகவும்தான் நான் அவற்றை நொறுக்குவேன். வீட்டை விட்டு வெளியேறும் வேகத்திலும் நான் உலக சாதனையெல்லாம் படைத்ததில்லை. சிறுகச் சிறுகதான் மறைந்துபோவேன். நான் எப்போதுமே மறைந்து கொண்டிருப்பவனாகத்தான் இருக்கிறேன்.
தற்போது நான் ஆறு வருடங்களாக வீடற்றவனாக இருக்கிறேன். ‘சிறந்த நடைபாதை வாசி’ என ஒரு விருது கொடுக்கப்படுமானால் அதற்கு முழு தகுதியுடையவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அனேகமாக வீடற்றவனாக இருப்பது மட்டும்தான் நான் சிறப்பாகச் செய்யும் ஒரே செயல். ருசியான இலவச சாப்பாடு எங்கெங்கு கிடைக்கும் என்பது எனக்கு மட்டும்தான் நன்றாகத் தெரியும். உணவகங்களிலும் தெருவோரக் கடைகளிலும் அவர்களின் கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதிக்கும் கடை நிர்வாகிகளை நண்பர்களாக்கிக் கொண்டேன். நான் இங்கே பொதுக்கழிப்பறைகளைச் சொல்லவில்லை. கடை ஊழியர்களுக்கான கழிப்பறைகள்… சமையற்கட்டுக்கோ சரக்கறைக்கோ அல்லது குளிரூட்டியின் பின்னாலிருக்கும் கடை ஊழியர்களுக்கான சுத்தமான கழிப்பறைகளைத்தான் குறிப்பிடுகிறேன். இதைப் பற்றி பெருமையடித்துக்கொள்வது சற்று வித்தியாசமாகத்தான் தோன்றும் என்று எனக்குத் தெரியும், ஆனால் எனக்கு அது மிக முக்கியமானது. வேறொருவரின் சுத்தமான கழிப்பறையில் மூத்திரம் பெய்யுமளவிற்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பது அது. ஒருவேளை, ஒரு சுத்தமான கழிப்பறையின் மதிப்பு உங்களுக்குப் புரியாமலிருக்கலாம் ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும்.
இவை எதன் மீதும் உங்களுக்கு ஆர்வமில்லாமல் போகலாம். சியாட்டலின் எல்லா இடங்களிலும் வீடற்ற பூர்வகுடிகள் இருக்கிறார்கள். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள், சலிப்பூட்டக்கூடியவர்கள். எங்களைக் கடந்து போகும்போது கோபமாகவோ வெறுப்புடனோ அல்லது இத்தனை பெருமைகள் கொண்ட ஒரு காட்டுமிரண்டியின் மோசமான தலைவிதியை நொந்து சோகத்திலோ கோபத்திலோ ஒரு பார்வையை வீசியபடி சென்றுவிடுவீர்கள். ஆனால் எங்களுக்கும் கனவுகளும் குடும்பங்களும் உண்டு.
சமவெளிப் பூர்வகுடியைச் சேர்ந்த ஒருவன் எனக்கு நண்பன். அவனுடைய மகன் கிழக்கிலிருந்து வரும் மிகப் பிரபலமான செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியன். ஆமாம், இது அவன் விடும் கதைதான். பூர்வகுடிகளான நாங்கள் மிகச் சிறந்த கதை சொல்லிகள், பொய்யர்கள், புராணங்களை உருவாக்குபவர்கள். அதனால் சமவெளி பூர்வகுடியான அந்த நாடோடி அன்றாடங்காணும் சராசரி இந்தியர்களில் ஒருவனாக இருக்கக்கூடும். எனக்கு அவன் மீது ஒருவிதமான சந்தேகம் உண்டு. காரணம், அவன் தன்னை சமவெளியைச் சேர்ந்த இந்தியன் என்று மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்கிறான். அது ஒரு பொதுவான சொல், எந்த குறிப்பிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதேயில்லை. அவன் குறிப்பாக யார் என்பதை ஏன் என்னிடம் சொல்வதில்லை என்று நான் அவனிடம் கேட்டபோது அவன் சொன்னான், “நாம் உண்மையில் யார் என்பது நம்மில் யாருக்காவது தெரியுமா?” அடடா, அருமை. ரொம்ப நல்லது. ஒரு தொல்குடித் தத்துவவாதி. நான் சொன்னேன், “ஏ… இவ்வளவு வசதியா தத்துவமெலாம் பேசனும்னா அதுக்கு முதல்ல சொந்தமா ஒரு வீடாவது இருக்கணும்.” அவன் சிரித்தான், நடுவிரலைக் காட்டிவிட்டு அங்கிருந்து நடந்து விலகினான்.
நான் என்னுடைய வழக்கமான குழாமுடன்தான் தெருக்களை வலம் வருவேன் – எனது அணித் தோழர்கள், எனது பாதுகாவலர்கள், எனது போர்ப்படை வீரர்கள். ரோஸ் ஆஃப் ஷேரான்[4], ஜூனியர் மற்றும் நான். வேறு யாருக்கும் நாங்கள் ஒரு பொருட்டில்லை என்றாலும் எங்களுக்குள் நாங்கள் மிக முக்கியமானவர்கள். ரோஸ் ஆஃப் ஷேரான் மிகப் பெரிய பெண்மணி. அவளின் செயல்பாடுகள் உண்டாக்கும் ஒட்டுமொத்த விளைவுகளையும் நீங்கள் கணக்கில் கொள்வீர்கள் என்றால் அவள் கிட்டத்தட்ட ஏழு அடி இருப்பாளோ என்று தோன்றும். வெறும் உடல் அளவை மட்டும் கணக்கில் கொண்டால் ஐந்தடி இருக்கலாம். விஷ்ராம் வகையைச் சார்ந்த யகாமா இந்தியன்[5] அவள். ஜூனியர் கோல்வில்[6] இனத்தைச் சேர்ந்தவன். கோல்வில் நூற்று தொன்னூற்று ஒன்பது வெவ்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கியது, அதனால் அவன் அதில் யாராகவும் இருக்கக்கூடும். அவன் பார்ப்பதற்கு நன்றாக இருப்பான், ‘பூமியை அசுத்தம் செய்யாதீர்கள்’ என்பது போன்ற பொதுச்சேவை விளம்பரத்திலிருந்து இறங்கி வந்தவன் போல. சிறிய நிலவுகள் சதா சுற்றி வரும் சில கிரகங்கள் இருக்குமே, அது போல மிகப் பெரிய கன்ன எலும்புகள் உண்டு அவனுக்கு. அவன் என்னைப் பொறாமை கொள்ளச் செய்வான்… பெரும் பொறாமை. என்னையும் ஜூனியரையும் அடுத்தடுத்து நிறுத்தி வைத்தால், கொலம்பஸின் வருகைக்கு முந்தைய இந்தியன் அவன், கொலம்பஸின் வருகைக்குப் பிந்தைய இந்தியன் நான் என்று தோன்றும். காலனியம் எங்கள் தோல்களின் மீது இழைத்த கொடூரமான தீங்கிற்கு வாழும் சாட்சி நான். ஆனால் வரலாறும் அதன் செயல்பாடுகளும் சிலசமயங்களில் என்னை எவ்வளவு அச்சத்திற்கு ஆளாக்குகிறது என்பதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்தப்போவதில்லை. நான் உறுதியான மனிதன், வெள்ளையர்களைக் கையாள்வதற்கு மௌனம்தான் சிறந்த வழிமுறை என்பதை அறிந்தவன்.
இந்த மொத்தக் கதையும் உண்மையில் தொடங்கியது மதிய உணவின் போதுதான். ரோஸ் ஆஃப் ஷேரானும் ஜூனியரும் நானும் ஸ்பைக் ப்ளேஸ் மார்க்கெட்டில் கைகளை நீட்டிக் காத்திருந்தோம். இரண்டு மணி நேர நீட்டல் வாங்கலுக்குப் பிறகு ஐந்து டாலர்களைச் சம்பாதித்தோம் – உலகின் மிக அழகான செவன் இளெவனில்[7] வெறியூட்டப்பட்ட ‘வீரம்’ ஒரு பாட்டில் வாங்குவதற்குப் போதுமான பணம். ‘குடி’யரசின் வெற்றி வீரர்களைப் போன்ற தோரணையுடன் நாங்கள் அக்கடையை நோக்கி நடை போட்டோம். நான் அவ்விடத்தில் இதுவரை கவனித்திராத அடகுக்கடையைக் கடந்து சென்றோம். விசித்திரம்தான்… இந்தியர்களாகிய எங்களின் உடலுக்குள்ளேயே அடகுக்கடைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு கருவியைப் பொருத்தித்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் அனைத்தையும்விட மிக விசித்திரமானது என்னவென்றால், பழைய பொவ்வாவ்[8] நடன ரெகாலியா[9] ஒன்று ஜன்னலில் தொங்கிக்கொண்டிருப்பதை நான் கண்டதுதான்.
“அது என் பாட்டியின் அங்கி,” நான் ரோஸ் ஆஃப் ஷேரானிடமும் ஜூனியரிடமும் சொன்னேன்.
“அதெப்படி உனக்கு அவ்வளவு நிச்சயமா தெரியும்?” ஜூனியர் கேட்டான்.
எனக்கு நிச்சயமாகத் தெரியாதுதான், நான் அந்த நடன அங்கியை நேரில் கண்டது கிடையாது. அதை அணிந்துகொண்டு என் பாட்டி நடனமாடும் புகைப்படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அதை யாரோ என் பாட்டியிடமிருந்து திருடிச் சென்றுவிட்டனர். ஆனால் என் ஞாபகத்தில் உள்ளதைப் போன்றே இது இருந்தது. என் குடும்பம் எங்களின் பொவ்வாவ் அங்கிகளில் கோர்க்கும் அதே வண்ண இறகுகளும் மணிகளும் இதிலிருந்தன.
“அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரே வழிதான் இருக்கு,” என்று நான் சொன்னேன்.
அதனால் ரோஸ் ஆஃப் ஷேரானும் ஜூனியரும் நானும் அந்த அடகுக்கடைக்குள் நுழைந்து விற்பனை மேசையின் பின்னால் இருந்த வெள்ளைக்காரனிடம் விசாரிக்கச் சென்றோம்.
“உங்களுக்கு என்ன வேணும்?” அவன் கேட்டான்.
“அதோ அங்க ஜன்னலில் தொங்கும் பொவ்வாவ் ரெகாலியா என் பாட்டிக்குச் சொந்தமானது,” நான் சொன்னேன். “ஐம்பது வருடங்களுக்கு முன்னாடி என் பாட்டியிடமிருந்து யாரோ திருடிவிட்டார்கள். அப்போதிலிருந்து என் குடும்பம் அதைத் தேடி வருகிறது.”
அந்த அடகுக்கடைக்காரன் நான் ஒரு பொய்யன் என்பதைப் போல என்னைப் பார்த்தான். எனக்கு அது ஏன் எனப் புரிகிறது. அடகுக்கடைகள் எப்போதும் பொய்யர்களால் நிரம்பியிருக்கும்.
“நான் பொய் சொல்லலை,” என்று சொன்னேன். “இதோ, என் நண்பர்கள்கிட்ட கேளுங்க. அவங்க சொல்லுவாங்க.”
“எனக்குத் தெரிந்ததிலேயே மிகவும் நேர்மையான இந்தியன் இவன் தான்,” ரோஸ் ஆஃப் ஷேரான் சொன்னாள்.
“சரி, நேர்மையான இந்தியனே…” கடைக்காரன் சொன்னான். “சந்தேகத்தின் பலனை உனக்கே கொடுக்கிறேன். இது உன் பாட்டியின் அங்கிதான்னு உன்னால நிரூபிக்கமுடியுமா?”
கடவுள் மட்டுமே பரிபூர்வமானவர் என்பதால், அவர்கள் இந்த அங்கியைத் துல்லிய அழகுடன் செய்வதில்லை. இந்திய மக்கள் தங்களின் பொவ்வாவ் அங்கியை சில குறைகளுடன்தான் தயாரிப்பார்கள். எங்கள் குடும்பம் எப்போதும் ஒரு மஞ்சள் குண்டு மணியை அங்கியில் எங்காவது ஓரிடத்தில் கோர்த்துவிடுவர். ஆனால் எப்போதும் அதை ஒளித்துத் தைத்துவிடுவார்கள், அதைக் கண்டுபிடிக்க ஒருவர் உண்மையிலேயே சிரமப்பட வேண்டியிருக்கும்.
“இது என்னுடைய பாட்டிக்குச் சொந்தமானது என்றால் அதில் ஒரு மஞ்சள் மணி எங்கோ ஒளிந்து இருக்கும்.”
“அப்படியா? சரி… எடுத்துப் பார்க்கலாம்” அடகுக்காரன் சொன்னான்.
அவன் ஜன்னல் மீதிருந்து அம்மேலங்கியை எடுத்து கண்ணாடி மேசையின் மீது பரப்பினான். நாங்கள் மஞ்சள் மணியைத் தேடினோம். மேலாடையின் கை இடுக்கில் அது ஒளித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம்.
“இதோ, இங்கிருக்கிறது” அடகுக்காரன் சொன்னான். அவன் ஆச்சரியமடைந்ததைப் போலத் தெரியவில்லை. “நீ சொன்னது சரிதான். இது உன் பாட்டியின் ரெகாலியாதான்.”
“இது காணாமல் போய் ஐம்பது வருடங்களாகுது,” ஜூனியர் சொன்னான்.
“ஏய்… ஜூனியர்,” நான் அவனைத் தடுத்தேன். “இது என்னுடைய குடும்பக் கதை. இதை நான்தான் சொல்வேன்.”
“சரி,சரி… என்னை மன்னிச்சிடு. நீயே சொல்,” ஜூனியர் சொன்னான்.
“இது காணாமல் போய் ஐம்பது வருடங்களாகுது,” நான் சொன்னேன்.
“அது அவன் குடும்பச் சோகக் கதை,” ரோஸ் ஆஃப் ஷேரான் சொன்னாள். “சரி இந்த ரெகாலியாவை அவனுக்கே திருப்பி குடுத்துடுவீங்களா?”
“அப்படி செய்யறதுதானே சரியானதா இருக்கும்,” அடகுக்காரன் சொன்னான். “ஆனா, சரியான செயல்களை மட்டுமே செய்யற அளவுக்கு நான் வசதியானவன் இல்லை. நான் இதுக்காக ஆயிரம் டாலர் செலவழிச்சிருக்கேன். ஆயிரம் டாலரை என்னால சும்மா அப்படியே தூக்கிக் கொடுத்திட முடியாது.”
“நாங்க போலீஸிடம் போவோம். இது திருட்டுப் பொருள்னு அவங்ககிட்ட சொல்லுவோம்,” ரோஸ் ஆஃப் ஷேரான் சொன்னாள்.
“ஏய்…” நான் அவளை இடைமறித்தேன். “யாரையும் இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது.”
வட்டிக்காரன் பெருமூச்சு விடுத்தான். மற்ற சாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான்.
“சரிதான். நீங்க போலிஸிடம் போய் முறையிட முடியும்தான். ஆனா, நீங்க சொல்ற ஒரு வார்த்தையைக் கூட அவங்க நம்புவாங்கன்னு எனக்குத் தோணலை.”
அவன் சற்று சோகமாகத்தான் இதைச் சொன்னான். ஏதோ அவன் எங்களின் இயலாமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதை நினைத்து வருந்துபவன் போல.
“உன் பெயர் என்ன?” அடகுக்காரன் என்னிடம் கேட்டான்.
“ஜாக்ஸன்,” நான் சொன்னேன்.
“உன் அப்பா பெயர்?
“அதுவும் அதேதான்.”
“விளையாடாதே…”
“உன்மையாதான் சொல்றேன். என்னுடைய அம்மாவும் அப்பாவும் எனக்கு ஜாக்ஸன் ஜாக்ஸன் என்றுதான் பெயர் வெச்சாங்க. என் குடும்பத்திலேயே என்னைச் செல்லமாக ஜாக்ஸன் ஸ்கொயர் என்றுதான் கூப்பிடுவாங்க. என் குடும்பத்தில் கொஞ்சம் குசும்பு அதிகம்.”
“சரி, ஜாக்ஸன் ஜாக்ஸன்,” அவன் சொன்னான். “உங்கிட்ட ஆயிரம் டாலர் இருக்காது. இருக்கா என்ன?”
“எங்களிடம் மொத்தமாக ஐந்து டாலர் இருக்கு,” நான் சொன்னேன்.
“ரொம்பக் கஷ்டம்,” என்று சொல்லிவிட்டு வேறென்ன சாத்தியங்கள் இருக்கிறதெனத் தீவிரமாகச் சிந்தித்தான். “உங்கிட்ட ஆயிரம் டாலர் இருந்தால் நான் இதை உனக்கே வித்துடறேன். சரி போய்த் தொலையட்டும், உனக்காக இதை நான் தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது டாலருக்கே கொடுக்கிறேன். எனக்கு ஒரு டாலர் நஷ்டம். ஆனால் அப்படிச் செய்யறதுதான் நியாயம். இதுல ஒரு டாலர் இழப்பது சரியானதுதான்.”
“எங்களிடம் மொத்தமாக ஐந்து டாலர் இருக்கு,” நான் மீண்டும் சொன்னேன்.
“ரொம்பக் கஷ்டம்,” என்று மீண்டும் சொல்லிவிட்டு மேலும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினான். “சரி இப்படிச் செய்தால் என்ன? நீ தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது டாலர் சேகரிப்பதற்கு உனக்கு இருபத்தி நாலு மணி நேரம் தர்றேன். நாளைக்கு மதியம் இதே நேரம் நீ திரும்பவும் பணத்தோட வா, நான் இதை மீண்டும் உனக்கே குடுத்திடறேன். இது ஓகேவா?”
“ஓக்கேன்னுதான் நினைக்கிறேன்,” நான் சொன்னேன்.
“அப்போ சரி. ஒப்பந்தம் முடிவானது. இதை நானே தொடங்கி வைக்கிறேன். இந்தா இருபது டாலர்.”
அவன் தனது பையைத் திறந்து மொரமொரப்பான இருபது டாலர் நோட்டை வெளியே எடுத்து என்னிடம் கொடுத்தான். ரோஸ் ஆஃப் ஷேரானும் ஜூனியரும் நானும் அங்கிருந்து வெளியேறி பட்டப்பகலில் தொள்ளாயிரத்து எழுபத்து நாலு டாலர்களைத் தேடி நடக்கத் தொடங்கினோம்.
பகல் 1 மணி
ரோஸ் ஆஃப் ஷேரானும் ஜுனியரும் நானும் இருபது டாலர் நோட்டையும் சில்லறையாகத் தேற்றியிருந்த ஐந்து டாலரையும் கொண்டு செவன் லெவனில் ‘கற்பனை’ மூன்று பாட்டில்கள் வாங்கிக் கொண்டோம். அவ்வளவு பணத்தையும் ஒரே நாளில் சேர்க்கும் வழியை நாங்கள் கண்டுபிடித்தாக வேண்டும். அலாஸ்கா சாலையில் பாலத்தின் அடியில் நாங்கள் சூழ்ந்தமர்ந்து தீவிரமாகச் சிந்தித்தபடி அந்த பாட்டில்களை காலி செய்தோம் – ஒன்று, இரண்டு, மூன்று….
பகல் 2 மணி
நான் விழித்துப் பார்த்தபோது ரோஸ் ஆஃப் ஷேரானை காணவில்லை. அவள் டோப்பனீஷ்க்குத்[10] திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அந்த ரிசர்வேஷனில்[11] தனது சகோதரியுடன் வசித்து வருவதாகவும் பின்பொரு நாள் அறிந்துகொண்டேன்.
என்னருகே ஜூனியர் தன்னுடைய வாந்தியிலேயே அல்லது வேறெவருடைய வாந்தியிலோ புதைந்து மயங்கிக் கிடந்தான். அதிகம் யோசித்ததால் என் தலை வலிக்கத் தொடங்கியது, அதனால் அவனை அங்கேயே விட்டுவிட்டு நான் கடல் நீரை நோக்கி நடந்து சென்றேன். கடல் நீரின் வாசனையை நான் அதிகம் நேசிப்பவன். உப்பின் மணம் ஞாபகங்களைப் போன்றது.
நான் கப்பல்துறை மேடை ஏறியதும் மூன்று அலூட்[12] உறவினர்களைக் காண நேர்ந்தது. அவர்கள் ஒரு நீண்ட மர இருக்கையில் அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்து அழுதுகொண்டிருந்தனர். சியாட்டலில் தெருவில் வாழும் பெரும்பாலான இந்தியர்கள் அலாஸ்காவிலிருந்து வந்தவர்கள்தான். அவர்கள் அத்தனை பேரும், ஒருவர் பின் ஒருவராக, அலாஸ்காவின் நகரங்கள் ஏதேனும் ஒன்றிலிருந்து பெரிய மீன் பிடி படகுகள் ஏறி மீன் பிடித்தபடி மிதந்து வருவர். தெற்கு சியாட்டலை நெருங்கியதும் பை நிறையப் பணத்துடன் படகிலிருந்து குதித்து மிகவும் புனிதமானதும் பழமையானதுமான இந்திய மதுவிடுதிகள் ஒன்றில் அளவுக்கு அதிகமாக ஆட்டம் போட்டு அத்தனை பணத்தையும் இழந்து ஓட்டாண்டியாகி, பிறகு அன்றிலிருந்து தன்னுடைய படகிற்கும் உறைந்த வடமுனைக்கும் திரும்பிச் செல்லும் வழியைத் தேடிக்கொண்டிருப்பவர்கள்.
இந்த அலூட் உறவினர்கள் சால்மன் மீனைப் போல நாற்றமடிப்பதாக எனக்குத் தோன்றியது. அவர்களுடைய படகு திரும்ப வரும் வரை அந்த மரப் பலகையின் மீதே அமர்ந்திருக்கப் போவதாக என்னிடம் கூறினார்கள்.
“உங்க படகு கிளம்பிப் போய் எவ்வளவு நேரம் ஆகுது?” நான் கேட்டேன்.
“பதினோரு வருடங்கள்,” மூத்த அலூட் கூறினார்.
நானும் அவர்களுக்காகச் சிறிது நேரம் அழுதேன்.
“ஹே… எனக்குக் கடனா கொடுக்க உங்ககிட்ட ஏதாவது பணம் இருக்கா?” அவர்களிடம் கேட்டேன்.
அவர்களிடம் இல்லை.
பகல் 3 மணி
நான் ஜூனியரிடம் திரும்ப நடந்து சென்றேன். அவன் அப்போதும் குளிரில் அசைவற்றுக் கிடந்தான். அவன் மூச்சு விடுகிறானா என்பதை அறிய குனிந்து என் முகத்தை அவன் வாயருகே கொண்டு சென்றேன். உயிருடன்தான் இருந்தான், நான் அவனின் நீல நிற ஜீன்ஸ் பாக்கெட்டுகளைத் துழாவி அறை துண்டு சிகரெட்டைக் கண்டெடுத்தேன். என் பாட்டியின் நினைவுகளில் மூழ்கியபடி அதை முற்றிலுமாக இழுத்து முடித்தேன்.
அவள் பெயர் ஏக்னஸ், எனக்கு பதினான்கு வயதாகியிருந்தபோது அவள் மார்பக புற்றுநோயால் இறந்து போனாள். ரிசர்வேஷனில் இருந்த யுரேனியம் சுரங்கத்தினால்தான் ஏக்னஸிற்கு புற்றுக் கட்டிகள் உண்டானது என்று என் அப்பா நினைத்தார். ஆனால் பொவ்வாவ் முடித்து ஒரு இரவில் வீடு திரும்பும்போது இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதால்தான் அவருக்கு இந்த கட்டி வந்தது என்று என் அம்மா நம்பினார். மூன்று விலா எலும்புகள் உடைந்து போயின, அவை ஒருபோதும் முழுவதுமாக குணமாகவேயில்லை என்று என் அம்மா கூறுவார். முழுவதுமாக குணமாகவில்லையெனில் கட்டிகள் முளைத்துவிடும்.
ஜூனியரின் அருகில் அமர்ந்து புகையையும் உப்பையும் வாந்தியையும் முகர்ந்தபடி யோசித்துக்கொண்டிருந்தேன், பொவ்வாவ் மேலங்கி அவளிடமிருந்து திருடப்பட்ட பிறகுதான் என் பாட்டிக்குப் புற்று உருவாகியிருக்குமோ என்று. ஒருவேளை இந்தப் புற்று அவளின் உடைந்த இதயத்தில் தொடங்கி அவள் மார்புகளுக்குள் கசிந்திருக்கலாம். இது முட்டாள்தனமானதுதான் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவளின் ரெகாலியாவை நான் திரும்பவும் மீட்டுவிட்டால் என் பாட்டியை உயிருடன் மீட்டு விடலாமோ என்று எனக்குத் தோன்றியது.
எனக்குப் பணம் வேண்டும், நிறையப் பணம். நான் ஜூனியரை அங்கேயே விட்டுவிட்டு ‘மாற்றம் நிச்சயம்’ என்ற சமூக நல அலுவலகத்தை நோக்கி நடந்தேன்.
மாலை 4 மணி
‘மாற்றம் நிச்சயம்’ பன்முகம் கொண்ட ஒரு தொண்டு நிறுவனம். அது செய்தித்தாள்கள் வெளியிடுவது, ஏழைகளையும் வீடற்றவர்களையும் மேம்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளையும் திட்டங்களையும் ஆதரிப்பது, வறுமையை ஒழிப்பதற்காக மக்களை ஒன்றிணைப்பது போன்ற செயல்களைச் செய்கிறது. வறுமையையும் சாலையோர வாழ்க்கையும் இல்லாமலாக்குவதற்காக கற்றலை மேம்படுத்துவது, திட்டங்களை உருவாக்குவது, பல தரப்பினரோடு ஒப்பந்தங்களைப் போடுவதுதான் ‘மாற்றம் நிச்சயம்’ நிறுவனத்தின் குறிக்கோள். எங்கள் சமூகத்தின் ஏழை மக்களுக்காகக் குரல் எழுப்புவதற்காகவே இது உருவாக்கப்பட்டுள்ளது.
நான் சிலசமயங்களில் அவர்களின் செய்தித்தாளைத் தெருக்களில் விற்பேன் என்பதால் மாற்றம் நிச்சயத்தின் குறிக்கோள் வாசகத்தை மனப்பாடமாக அறிந்து வைத்திருந்தேன். ஆனால் அச்செய்தித்தாள்களை விற்பதற்குப் போதையின்றி நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி நிதானமாக இருப்பது என்னால் எப்போதுமே முடியாத ஒன்று. செய்தித்தாளை எவர் வேண்டுமானாலும் விற்கலாம். ஒரு பிரதியை முப்பது செண்ட்டிற்கு வாங்கி ஒரு டாலருக்கு விற்கலாம், லாபத்தை நாமே வைத்துக்கொள்ளலாம்.
“எனக்கு ஆயிரத்து நானூற்று முப்பது பேப்பர்கள் வேண்டும்,” நான் பெரிய முதலாளியிடம் கேட்டேன்.
“என்ன ஒரு விசித்திரமான கணக்கு,” அவர் சொன்னார். “இவ்வளவு பேப்பர் வேணுமா?”
“எனக்கு வேணும்.”
பெரிய முதலாளி கால்குலேட்டரை எடுத்து கணக்குப் போட்டார். “இத்தனை வேணும்னா உனக்கு நானூற்று இருபத்து ஒன்பது டாலர்கள் செலவு ஆகும்,” அவர் சொன்னார்.
“எங்கிட்ட அவ்ளோ பணமிருந்தா நான் பேப்பர் விற்க வேண்டிய தேவையே இருக்காது.”
“என்ன பிரச்சினை உனக்கு ‘ஜாக்ஸன்-டூ-தி-ஸ்கொயர்?” அவர் கேட்டார். என்னை இப்படி அழைப்பது இவர் மட்டும்தான். வேடிக்கையான மனிதர், இரக்கமுள்ளவர்.
என் பாட்டியின் பொவ்வாவ் மேலங்கியைப் பற்றியும் அதைத் திரும்ப மீட்டுவதற்கு எனக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதையும் நான் அவரிடம் சொன்னேன்.
“நாம இதை போலீஸிடம் முறையிடலாமே,” அவர் சொன்னார்.
“அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை,” என்று சொன்னேன். “இப்போது இது ஒரு தேடல். இதை நானேதான் திரும்ப வென்றெடுக்கணும்.”
“புரியுது,” அவர் சொன்னார். “உண்மையைச் சொல்லனும்னா, உன் திட்டம் வேலைக்கு ஆகும்னு எனக்கு தோணினா நானே உனக்கு அத்தனை பேப்பர்களையும் கொடுப்பேன். ஆனா இதுவரையில் ஒருத்தன் ஒரே நாள்ல விற்ற பேப்பர்களின் எண்ணிக்கை வெறும் முன்னூற்றி இரண்டுதான்.”
“அப்படின்னா எனக்கு மொத்தமா இருநூறு டாலர்தான் கிடைக்கும்.”
பெரிய முதலாளி தன்னுடைய கால்குலேட்டரை மீண்டும் உபயோகித்தார். “இருநூற்று பதினொரு டாலர்களும் நாற்பது செண்ட்டுகளும்,” அவர் சொன்னார்.
“எனக்கு அது போதாது,” நான் சொன்னேன்.
“அப்புறம்… இதுவரையில் ஒரே நாளில் ஒருவன் அதிகபட்சமாகச் சம்பாதித்த பணம் ஐநூற்றி இருபத்தி ஐந்து தான். அதற்குக் காரணம் கூட எவனோ ஒருத்தன் ஒரு பழைய நீல நிற ஐந்நூறு டாலர் நோட்டை தெரியாம கொடுத்துட்டு போய்ட்டான். இல்லைன்னா ஒரு நாளின் சராசரி வருமானமே முப்பது டாலர்தான்.”
“இது உதவாது.”
“உதவாது.”
“உங்களால எனக்கு கொஞ்சம் பணம் கடனா கொடுக்க முடியுமா?”
“என்னால முடியாது,” அவர் சொன்னார். “உனக்குக் கடன் கொடுத்தா இங்கிருக்கிற எல்லோருக்குமே கொடுக்க வேண்டியிருக்கும்.”
“உங்களால எனக்கு வேறெப்படியாவது உதவமுடியுமா?”
“உனக்கு நான் ஐம்பது பேப்பர்கள் இலவசமா கொடுக்கிறேன். ஆனால் நீ இதை வெளியே சொல்லவே கூடாது.”
“சரி,” என்று சொன்னேன்.
அவர் செய்தித்தாள்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி என்னிடம் தந்தார். அதை என் மார்பின் மீது வைத்துப் பிடித்துக்கொண்டேன். அவர் என்னைக் கட்டியணைத்தார். நான் செய்தித்தாள்களைத் தூக்கிக்கொண்டு கடலை நோக்கி நடந்தேன்.
மாலை 5 மணி
மீண்டும் கப்பல்துறைக்கு வந்து பெயின்ப்ரிட்ஜ் தீவிற்கான முனையத்தில் நின்று போக்குவரத்து படகுகளில் ஏற வரும் வேலைக்குச் செல்லும் பயணிகளுக்குச் செய்தித்தாள்களை விற்க முயன்றேன்.
ஒரு மணி நேரத்தில் ஐந்தை விற்றேன், மிச்ச நாற்பத்து ஐந்தையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு மெக்டோனால்ட்ஸை நோக்கி நடந்தேன். நான்கு ச்சீஸ்பர்கர்களை தலா ஒரு டாலர் என்ற விலைக்கு வாங்கி அவற்றைப் பொறுமையாகச் சாப்பிட்டேன்.
சாப்பிட்ட பிறகு, வெளியே வந்து நடைபாதையோரம் வாந்தி எடுத்தேன். சாப்பிட்ட உடனே என் அத்தனை உணவையும் இப்படி இழப்பதை நான் மிக வெறுத்தேன். வெந்துபோன வயிறுடைய குடிகார இந்தியனான நான் உயிருடன் இருப்பதற்கு போதுமான உணவை என்னுள் கட்டாயம் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறவன்.
மாலை 6 மணி
கையில் ஒரு டாலர்தான் மிச்சம் இருந்தது. நான் மீண்டும் ஜூனியரிடம் நடந்து சென்றேன். அப்போதும் அவன் மூர்ச்சையற்றுதான் கிடந்தான். குனிந்து அவன் மார்பின் அருகே தலை வைத்து இதயத் துடிப்பைக் கேட்டேன். அவன் உயிருடன் இருந்தான். அவனுடைய ஷூவையும் சாக்ஸையும் கழட்டிப் பார்த்தேன். அவனது இடதுபுற சாக்ஸிலிருந்து ஒரு டாலரையும், வலதுபுற சாக்ஸிலிருந்து ஐம்பது செண்ட்டுகளையும் கண்டுபிடித்தேன்.
கையில் இரண்டு டாலர்களும் ஐம்பது செண்ட்டுகளையும் வைத்துக்கொண்டு ஜூனியரின் அருகில் அமர்ந்து நான் பாட்டியும் அவளுடைய கதைகளைப் பற்றியுமான ஞாபகங்களில் மூழ்கினேன்.
எனக்கு பதிமூன்று வயதாகியிருந்தபோது என்னுடைய பாட்டி இரண்டாம் உலகப் போரைப் பற்றிய கதையொன்றை என்னிடம் சொன்னாள். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள இராணுவ மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து கொண்டிருந்தாள். இரண்டு ஆண்டுகள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க வீரர்களுக்கு மருத்துவம் பார்த்து ஆற்றுப்படுத்தியிருக்கிறாள்.
ஒரு நாள் காயம்பட்ட மாவோரி[13] வீரனுக்கு சிகிச்சையளித்தாள். பீரங்கி தாக்குதலில் தன் கால்களை இழந்திருந்தான் அவன். அவன் மிகக் கறுத்த தோலுடையவன். அவன் தலை முடி கருத்து சுருண்டிருந்தது. அவனுடைய கண்கள் கறுப்பாக வெம்மையாக இருந்தது. அவன் முகம் முழுவதுமாக மறையுமளவிற்கு அழுந்த பச்சை குத்தப்பட்டிருந்தது.
“நீங்கள் மாவோரியா?” என் பாட்டியிடம் கேட்டான் அவன்.
“இல்லை. நான் ஸ்போகேன் குடியைச் சேர்ந்தவள். அமெரிக்காவிலிருந்து வருகிறேன்,” என்று சொன்னாள்.
“ஒஹ்ஹ்… சரி,” தொடர்ந்து சொன்னான், “உங்கள் இனத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சந்திக்கும் முதல் அமெரிக்க இந்தியன் நீங்கள்தான்.”
“நிறைய அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்காவிற்காகப் பல இடங்களில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய ஒரு சகோதரன் ஜெர்மனியில் நடந்துவரும் சண்டையில் இருக்கிறான், மற்றொரு சகோதரனை நான் ஓக்கினாவில் இழந்துவிட்டேன்.”
“பாவம். நானும் ஓக்கினாவில் இருந்தேன். மிகக் கொடூரமான சண்டை.”
“உங்களுடைய கால்களைப் பார்க்க வருத்தமாகயிருக்கிறது,” என் பாட்டி சொன்னாள்.
“வேடிக்கையாக இருக்கிறது, இல்லையா?” அவன் சொன்னான்.
“என்ன வேடிக்கை?”
“வெள்ளைக்காரர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காக பூர்வகுடிகள் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பது.”
“நான் இதை இப்படி யோசித்ததே இல்லை.”
“ஆமாம்… சில நேரங்களில் நான் அப்படிதான் யோசிப்பதுண்டு. மற்ற நேரங்களில் நான் என்ன யோசிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்திருக்கிறார்களோ அப்படியே நானும் யோசிப்பேன். பிறகு, குழம்பிவிடுவேன்.”
அவள் அவனுக்கு அபின் கொடுத்தாள்.
“உனக்குச் சொர்கத்தின் மீது நம்பிக்கை உண்டா?” அவன் கேட்டான்.
“எந்த சொர்கம்?” பாட்டி கேட்டாள்.
“என் கால்கள் எனக்காகக் காத்திருக்குமே அந்த சொர்கத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்.”
இருவரும் சிரித்தனர்.
“ஆனால் கண்டிப்பாக என்னுடைய கால்கள் நான் சொர்கத்தை அடைந்ததும் அங்கிருந்து ஓடிவிடும். நான் எப்படித்தான் அவற்றைப் பிடிப்பேன்?”
“நீங்கள் உங்கள் கைகளை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்,” என் பாட்டி சொன்னாள். “அப்போதுதான் உங்களால் அதைக் கால்களாக்கி ஓட முடியும்.”
அவர்கள் இருவரும் மீண்டும் சிரித்தனர்.
ஜூனியரின் அருகில் அமர்ந்து என் பாட்டியின் கதையை நினைத்து நானும் சிரித்தேன். அவன் இன்னமும் மூச்சு விடுகிறானா என்பதை அறிய என்னுடைய கையை அவன் வாய்க்கு அருகில் வைத்து சோதித்தேன். ஜுனியர் உயிருடன்தான் இருந்தான். இரண்டு டாலர் ஐம்பது செண்ட்டுகளை எடுத்துக் கொண்டு பயனீர் சதுக்கத்தில் உள்ள கொரிய மளிகைக் கடைக்குச் சென்றேன்.
7 மணி
கொரிய மளிகைக் கடையில், ஐம்பது செண்ட்டுகளுக்கு ஒரு சுருட்டும் இரண்டு டாலர்கள் கொடுத்து இரண்டு சுரண்டல் லாட்டரிச் சீட்டுகளையும் வாங்கினேன். ஒரு சீட்டுக்கு அதிகபட்ச பரிசுத் தொகை ஐந்நூறு டாலர். நான் இரண்டிலும் வென்றால் ரெகாலியாவைத் திரும்பப் பெறுமளவிற்குக் கையில் பணம் சேர்ந்துவிடும்.
கஜானாவில் இருக்கும் இளம் கொரியப் பெண் மேரியை நான் விரும்பினேன். கடை முதலாளியின் மகள் அவள், நாள் முழுதும் ஏதாவது பாடிக் கொண்டே இருப்பாள்.
அவளிடம் பணம் கொடுக்கும்போது நான் சொன்னேன், “ஐ லவ் யூ.”
“பார்க்கும் போதெல்லாம் என்னை லவ் பண்றதா சொல்ற நீ,” அவள் சொன்னாள்.
“ஆமா… ஏன்னா எல்லா நேரமும் நான் உன்னை லவ் பண்ணிட்டே இருக்கேன்.”
“நீ ஒரு உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்.
“நான் காதலில் கசிந்துருகும் ஒரு முதியவன்.”
“ஆமா ஆமா என்னைவிட ரொம்ப வயதானவன்.”
“உன்னைவிட நான் ரொம்ப வயதானவன்னு எனக்கும் தெரியும். ஆனால் கனவு காணலாம்தானே.”
“ஓக்கே,” என்று சொன்னாள். “உன் கனவில் வர்றதுக்கு நான் சம்மதிக்கிறேன், ஆனால் உன் கனவில் கூட நான் வெறும் கைகளை மட்டும்தான் பிடிப்பேன். முத்தமும் செக்ஸும் கிடையாது. உன் கனவில் கூட கிடையாது.”
“ஓக்கே,” என்று பதில் சொன்னேன். “செக்ஸ் இல்லை. காதல் மட்டும்.”
“அன்பே ஜாக்ஸன் ஜாக்ஸன், சென்று வா. மறுபடியும் பார்க்கலாம்.”
நான் கடையை விட்டு வெளியேறி அருகிலிருந்த பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்து சுருட்டை முழுவதுமாக இழுத்து முடித்தேன்.
சுருட்டை முழுக்க இழுத்து பத்து நிமிடங்கள் கழித்து என்னுடைய முதல் லாட்டரிச் சீட்டை சுரண்டிப் பார்த்தேன், எந்தப் பரிசும் விழவில்லை. இப்போது எனக்கு ஐந்நூறு டாலர்கள் வெல்லும் சாத்தியம் மட்டுமே இருந்தது, எனக்குத் தேவையானதில் பாதிப் பணம்தான் அது.
முதல் சீட்டில் தோல்வியடைந்த பத்தாவது நிமிடத்தில் அடுத்த சீட்டை சுரண்டி அதில் பரிசை வென்றேன் – சிறு ஆறுதலாக மேலும் கொஞ்சம் பணம் வெல்வதற்கான மற்றுமொரு வாய்ப்பு மட்டும்.
நான் மேரியிடம் திரும்பச் சென்றேன்.
“ஜாக்ஸன் ஜாக்ஸன்,” அவள் வரவேற்றாள். “என் இதயத்தை வெல்வதற்காக இவ்வளவு சீக்கிரம் திரும்ப வந்துட்டியா?”
“எனக்கு ஒரு இலவச சீட்டு விழுந்திருக்கு.”
“ஆ… எல்லா ஆண்களைப் போலத்தான் நீயும்… என்னைவிடப் பணத்தையும் அதிகாரத்தையும்தான் அதிகம் விரும்புகிறாய்.”
“அது உண்மைதான்,” நான் சொன்னேன். “ஸாரி, ஆனா அதுதான் உண்மை.”
என்னிடம் அவள் மற்றொரு சுரண்டல் சீட்டை கொடுத்தாள், அதை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். என் லாட்டரிச் சீட்டுகளைத் தனிமையில் சுரண்டிப் பார்ப்பதுதான் என் வழக்கம். நான் நம்பிக்கையுடனும் கூடவே சற்று சோகத்துடனும் மூன்றாவது சீட்டை உரசி உண்மையிலேயே பணத்தை வென்றுவிட்டேன் இம்முறை. அதை எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றேன் மேரியிடம்.
“எனக்கு நூறு டாலர்கள் விழுந்திருக்கு,” நான் சொன்னேன்.
என்னுடைய சீட்டைப் பார்த்துவிட்டுச் சிரித்தாள்.
“அதிர்ஷ்டம்தான்,” என்று சொல்லிவிட்டு ஐந்து இருபது டாலர் தாள்களை என்னிடம் தந்தாள். அவள் பணத்தை என்னிடம் தந்தபோது எங்கள் விரல் நுனிகள் தொட்டுக்கொண்டன, மின் அதிர்வுகளை உணர்ந்தேன்.
“நன்றி,” அவளிடம் அதிலிருந்து ஒரு நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
“நான் அதை வாங்கக்கூடாது,” அவள் சொன்னாள். “அது உன்னுடைய பணம்.”
“இல்லை இல்லை… இது எங்க வழக்கம். பூர்வகுடிகளின் ஒரு பழக்கம். ஏதாவது பரிசை ஜெயித்தால் அதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.”
“நான் உன் குடும்பம் இல்லை.”
“நீயும் என் குடும்பம்தான்…”
அவள் புன்னகைத்து பணத்தை வாங்கிக்கொண்டாள். கையில் எண்பது டாலர்களுடன் எனதருமை மேரியிடம் விடை பெற்று இரவின் குளிர்ந்த காற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.
8 மணி:
இம்மகிழ்ச்சியான செய்தியை ஜூனியருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவனிடம் மீண்டும் திரும்பச் சென்றபோது அவனை அங்குக் காணவில்லை. அவன் ஓரேகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லாண்டு நகரத்திற்குச் சென்றதாகவும் அங்கு ஹில்டன் ஹோட்டலின் பின்னால் குளிரில் உறைந்து இறந்துவிட்டதாகவும் பின்னர் தெரிந்துகொண்டேன்.
9 மணி:
இந்தியர்களின் கைகளில் பொதுவாகக் காணக்கிடைக்காத வகையில் நான் எண்பது டாலர்களுடன் நகரின் தென் மூலையில் உள்ள ‘ஃபிக் ஹார்ட்டிற்கு’ சென்றேன். அமெரிக்க இந்தியருக்கான பிரத்தியேகமான மது விடுதிதான் ‘ஃபிக் ஹார்ட்’. அத்தனை இந்தியர்களும் எதற்காக எப்படி ஒரே மதுவிடுதிக்குச் சென்று குவிந்து அதை அதிகாரப்பூர்வ இந்திய மதுவிடுதியாக மாற்றுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இருபத்தி மூன்று வருடங்களாக ‘ஃபிக் ஹார்ட்’தான் இந்தியர்களின் மதுவிடுதி. இது இங்கிருந்து வெகு தொலைவில் அரோரா அவென்யுவில் தான் முதலில் இருந்தது. ஒரு கிறுக்குப் பிடித்த இந்தியன் அதை தீ வைத்து அழித்துவிட்டான். பின்னர், அவ்விடுதியின் உரிமையாளர்கள் ஸாஃப்கோ ஃபீல்டின் தெற்கில் ஒரு புது இடத்தில் இம்மதுவிடுதியை மீண்டும் நிறுவினர்.
நான் ஃபிக் ஹார்ட்டிற்குள் நுழைந்தேன், அப்போது பதினைந்து இந்தியர்கள் அங்கிருந்தனர் – எட்டு ஆண்கள் ஏழு பெண்கள். எனக்கு அவர்களில் ஒருவரையும் தெரியாது ஆனால் இந்தியர்கள் சொந்த பந்தங்களோடு இருக்க விரும்புபவர்கள். அதனால் நாங்கள் அனைவரையும் உறவினர்களைப் போல பாவித்துத்தான் பழகுவோம்.
“விஸ்கி ஷாட்ஸ் எவ்வளவு?” கொழுத்த வெள்ளை பார்ட்டெண்டரிடம் கேட்டேன்.
“உனக்குக் கெட்டது வேணுமா இல்ல ரொம்ப கெட்டது வேணுமா?”
“உங்கிட்ட இருக்கிறதிலேயே ரொம்பக் கெட்டதைக் கொடு”
“ஒரு ஷாட்டுக்கு ஒரு டாலர்.”
நான் மேஜையின் மீது என்னுடைய எண்பது டாலர்களை வைத்தேன்.
“சரி…,” நான் சொன்னேன். “எனக்கும் இங்கிருக்கும் என்னுடைய அத்தனை மாமன் மச்சான்களுக்கும் சேர்த்து எண்பது ஷாட் கொடு. அப்படினா ஒருத்தருக்கு எத்தனை ஷாட்ஸ் வரும்?”
எனக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் கத்தினாள், “உன்னையும் சேர்த்து ஒவ்வொருத்தருக்கும் அஞ்சு ஷாட்…”
நான் அவளைப் பார்ப்பதற்காகத் திரும்பினேன். வெளிறிய, கொழுகொழுவென்றிருந்த ஒரு இந்தியப் பெண், உயரமான மிக மெலிந்த ஒரு இந்தியனுடன் அமர்ந்திருந்தாள்.
“அப்போ சரி, கணக்குப் புலியே,” என்று அவளிடம் சொல்லிவிட்டு, பிறகு முழு கடைக்கும் கேட்கும்படி கத்தினேன், “எல்லாருக்கும் அஞ்சு அஞ்சு ஷாட்.”
மற்ற எல்லோரும் மது மேஜையை நோக்கி விரைந்தனர், ஆனால் நான் கணிதப் புலிக்கும் அவளின் ஒல்லிக்குச்சி நண்பனுக்கும் அருகில் சென்று அமர்ந்துகொண்டேன். நாங்கள் சிறிது நேரம் கழித்துத்தான் எங்களின் விஸ்கி மடக்குகளை விழுங்கினோம்.
“நீ எந்த இனம்?” நான் கேட்டேன்.
“நான் டுவாமிஷ்[14],” அவள் சொன்னாள். “அவன் க்ரோ[15].”
“மோண்டானாவிலிருந்து ரொம்ப தொலைவு வந்திருக்கீங்களே,” நான் அவனிடம் சொன்னேன்.
“நான்தான் காகம் ஆச்சே. இங்க பறந்து வந்துட்டேன்.” அவன் சொன்னான்.
“உங்கள் பெயர்கள் என்ன?”
“நான் ஐரீன் மியூஸ், இவன் ஹனிபாய்” என்று அவள் சொன்னாள்.
அவன் என்னுடைய கைகளை அழுத்தமாகக் குலுக்கினான். ஆனால் ஏதோ நான் அவன் கைகளை முத்தமிட வேண்டும் என்பதைப் போலக் கையை நீட்டினான். நானும் அப்படியே செய்தேன். அவன் இளித்து பின் வெட்கி சிவந்தான், ஒரு கரு நிற காகம் எவ்வளவு வெட்கத்தால் சிவக்க முடியுமோ அந்த அளவு மட்டும்.
“இரட்டை ஆத்மாக்கள் குடியிருக்கும் ஒரு சிலரைப் போன்றவனா நீ?” நான் அவனிடம் கேட்டேன்.
“எனக்குப் பெண்களைப் பிடிக்கும். ஆண்களையும்.” அவன் சொன்னான்.
“சிலசமயங்களில் ஒருவரையும் ஒரே நேரத்தில்,” ஐரீன் சொன்னாள்.
நாங்கள் சிரித்தோம்.
“ஓ…” நான் ஹனிபாயிடம் சொன்னேன். “அப்படின்னா உனக்குள்ளே எட்டோ ஒன்பதோ ஆன்மாக்கள் உலவிக்கொண்டிருக்கும் இல்லையா?”
அவன் சொன்னான், “அன்பே, நான் யாராக இருக்க வேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாயோ நான் அவராகவே இருப்பேன்.”
“ஆஹா…. ஹனிபாய் காதலில் விழுகிறான்,” ஐரீன் சொன்னாள்.
“இதுக்கும் காதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை,” அவன் சொன்னான்.
நாங்கள் மீண்டும் சிரித்தோம்.
“வாவ், எனக்குப் பெருமையா இருக்கு ஹனிபாய். ஆனால் எனக்கு உங்கூட சேர்ந்துக்க விருப்பமில்லை.”
“இல்லை என்பதே இல்லை,” அவன் சொன்னான்.
“நீ கவனமா இருக்கிறது நல்லது,” ஐரீன் சொன்னாள். “ஹனிபாய்க்கு எல்லாவிதமான மாய மந்திரங்களும் தெரியும்.”
“ஹனிபாய், நீ என்னைக் கவர்ந்து மயக்க எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம், ஆனால் என் இதயம் மேரி என்ற பெண்ணுக்கு மட்டுமே சொந்தம்.”
“அவள் கன்னி மேரியா?” ஹனிபாய் கேட்டான்.
நாங்கள் சத்தம் போட்டுச் சிரித்தோம்.
எங்களின் கணக்கு தீரும் வரை விஸ்கி மடக்குகளை வாங்கி குடித்தோம். ஆனால், நான் என்னுடைய பணத்தைத் தாராளமாக மற்றவர்களுக்காகச் செலவு செய்ததால் அங்கிருந்தவர்கள் எனக்கு மேலும் மேலும் மது வாங்கி ஊற்றினர். ஹனிபாய் கூட அவனுடைய கிரெடிட் கார்டை வெளியே எடுத்து நீட்டினான். நான் அந்த பிளாஸ்டிக் படகில் குடித்து மிதந்து பயணித்தேன்.
ஒரு டஜன் குப்பிகளைக் குடித்து முடித்ததும், ஐரீனை என்னுடன் வந்து நடனமாடும்படி அழைத்தேன். அவள் மறுத்தாள். ஆனால் ஹனிபாய் பாட்டுப் பெட்டியின் அருகில் சென்று அதில் சில்லறைகளைப் போட்டுப் பாடலை மாற்றினான். வில்லி நெல்சனின்[16] “இந்த இரவை கடந்துவிட எனக்கு உதவி செய்வாயா?” என்ற பாடலை ஒலிக்க விட்டான். நானும் ஐரீனும் மேஜையில் அமர்ந்து மேலும் மேலும் மது அருந்தி உரக்கச் சிரித்தபடி இருக்கையில், ஹனிபாய் வில்லியுடன் இணைந்து பாடியபடியே மென்மையாக நடனமிட்டு எங்களைச் சுற்றி வந்தான்.
“வளைய வளைய வந்து பாடி என்னை மயக்க முயல்கிறாயா?” நான் அவனிடம் கேட்டேன்.
அவன் பாடி ஆடியபடியே இருந்தான்.
“அவன் உன் மேலே ஏதோ மந்திரத்தை ஏவப் போறான்,” ஐரீன் சொன்னாள்.
நான் மதுவைச் சற்று சிந்தும்படி எம்பிக் குனிந்து ஐரீனை அழுத்தமாக முத்தமிட்டேன். அவள் திருப்பி என்னை முத்தமிட்டாள்.
10 மணி:
பெண்கள் கழிப்பறைக்குள் என்னைத் தள்ளி பின்னால் கதவை ஓங்கிச் சாத்தினாள் ஐரீன், என் காற்சட்டைக்குள் தன் கையை நுழைத்தாள். அவள் குள்ளமாக இருந்தாள், சாய்ந்துதான் நான் அவளை முத்தமிட முடிந்தது. என் கை செல்லக் கூடிய இடங்களிலெல்லாம் நான் அவளைப் பிடித்துக் கசக்கினேன், கொழுகொழுவென்றிருந்தாள். அவள் உடலின் ஒவ்வொரு பாகமும் வெம்மையாக ஒரு பெரிய மென்மையான மார்பகம் போல இருந்தது.
நள்ளிரவு:
மதுபோதையில் கிட்டத்தட்ட குருடாகிப் போன நிலையில், அம்மதுக்கடையில் நான் தனியாளாக நின்றுகொண்டிருந்தேன். ஒரு நிமிடம் முன்னர்தான் நான் ஐரீனுடன் கழிவறையில் இருந்தேன் என்று உறுதியாக நம்பினேன்.
“இன்னொரு ஷாட்!” பார்ட்டெண்டரை நோக்கிக் கத்தினேன்.
“உங்கிட்ட இப்ப பணமே இல்லை!” அவன் குரலை உயர்த்தினான்.
“யாராவது எனக்கு வாங்கி கொடுங்க!” என்று சத்தம் போட்டேன்.
“யாருகிட்டேயும் பணம் இல்லை.”
“ஐரீனும் ஹனிபாயும் எங்கே?”
“அவங்க எப்பவோ போய்ட்டாங்க!”
2 மணி:
“கடை மூடும் நேரமாச்சு!” ஒரு நீண்ட கடுமையான குடி நாளுக்குப் பிறகும் இன்னமும் கடினமாகக் குடித்துக்கொண்டிருக்கும் நான்கைந்து இந்தியர்களை நோக்கி பார்ட்டெண்டர் கூவினான். இந்தியக் குடிகாரர்கள் குடிப்பதில் ஒருவகை அதிவேக ஓட்டக்காரர்களாக இருப்பார்கள் அல்லது மராத்தான் போல நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
“ஐரீனும் ஹனிபாயும் எங்கே?” நான் கேட்டேன்.
“அவங்க போய் பல மணி நேரமாச்சு.” பார்ட்டெண்டர் சொன்னான்.
“எங்க போனாங்க?”
“நான் உங்கிட்ட நூறு முறை சொல்லிட்டேன். எனக்குத் தெரியாது.”
“இப்ப நான் என்ன செய்யுறது?”
“கடை சாத்தற நேரமாச்சு. நீ எங்க போவியோ எனக்கு அதைப் பத்தி கவலை கிடையாது, ஆனா இங்க இருக்கக்கூடாது.”
“நீ ஒரு நன்றி கெட்ட தேவுடியா மவன். நான் உங்கிட்ட எவ்வளவு நல்லவனா நடந்துகிட்டேன்…”
“நீ இப்ப இங்கிருந்து கிளம்பலைனா உன்னை எத்தி தூக்கி வெளியே போடுவேன்.”
“வா…, எனக்கும் சண்டை போடத் தெரியும்.”
அவன் என்னருகில் வந்தான். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.
4 மணி:
நான் கருமையிலிருந்து வெளிப்பட்டு ஒரு பெரிய கிடங்கின் பின்னால் நடந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் எங்கிருந்தேன் என்று தெரியவில்லை. என் முகம் வலித்தது. என் மூக்கை தொட்டுப் பார்த்து அது உடைந்து போயிருக்கலாம் என்று முடிவு செய்தேன். சோர்ந்து போயிருந்தேன், குளிரில் நடுங்கினேன். ஒரு பாரவண்டியின் மேலிருந்த பிளாஸ்டிக் தார்ப்பாயை இழுத்து அன்புக் காதலனைப் போல இறுகப் போர்த்தி அங்கேயே தூசியில் படுத்துத் தூங்கினேன்.
6 மணி:
என் விலா எலும்பில் யாரோ எட்டி உதைத்தார்கள். நான் கண்களைத் திறந்து தலை தூக்கிப் பார்த்தபோது ஒரு வெள்ளைக்கார போலீஸ் நின்றிருந்தார்.
“ஜாக்ஸனா இது?” போலீஸ் கேட்டார்.
“ஆஃபீஸர் வில்லியம்ஸ்,” அவர் பெயரைச் சொன்னேன். நல்ல போலீஸ்காரர், இனிப்பான உணவுகளுக்கு அடிமையானவர். இத்தனை வருடங்களில் எனக்கு நூறு சாக்லேட்டுகளையாவது கொடுத்திருப்பார். நான் சர்க்கரை வியாதிக்காரன் என்பது அவருக்குத் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.
“இங்க என்ன எழவு பண்ணிகிட்டு இருக்க?” அவர் கேட்டார்.
“எனக்குக் குளிராயிருந்தது, தூக்கமா வந்தது. அதான் அப்படியே இங்க படுத்துகிட்டேன்.”
“நீ சரியான முட்டாக் கூ…, நீ ரயில்வே தண்டவாளம் மேல மயங்கி விழுந்து கிடக்குற.”
நான் எழுந்து அமர்ந்து சுற்றிப் பார்த்தேன். ரயில்வே தண்டவாளத்தில்தான் படுத்துக் கிடந்தேன். துறைமுகத் தொழிலாளிகள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் இந்நேரம் ரயில் தண்டவாளத்தில் நசுங்கிய பீட்ஸாவாக மாறியிருக்கக்கூடும், மிளகு தூவி அரைத்த இறைச்சியும் சற்றதிகமாகத் தூவிய ச்சீஸுடனும். மிகுந்த களைப்பிலும் பயத்திலும் பக்கவாட்டில் சாய்ந்து விஸ்கியை வாந்தியாக வெளியேற்றினேன்.
“என்ன பிரச்சினை உனக்கு?” ஆஃபீஸர் வில்லியம்ஸ் கேட்டார். “நீ இந்தளவுக்கு முட்டாள்தனமா நடந்துகிட்டது இல்லையே.”
“என்னுடைய பாட்டி…. இறந்துவிட்டாள்” என்று சொன்னேன்.
“ஓ… ஐயாம் ஸாரி. எப்போ இறந்தாங்க?”
“ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து இரண்டில்.”
“அதுக்கு நீ இப்போ தற்கொலை செய்துக்கப் போறியா?”
“அவள் இறந்ததிலிருந்து நான் என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னுகிட்டுதான் இருக்கேன்.”
அவர் தலையைக் குலுக்கினார். எனக்காக அவர் வருந்தினார். நான் சொன்னேனே, அவர் உண்மையிலேயே நல்ல போலீஸ்.
“யாரோ உன்னை அடிச்சு துவைச்சிருக்காங்க. யாருன்னு நினைவிருக்கா?” அவர் கேட்டார்.
“மிஸ்டர்.க்ரீஃப். அவரும் நானும் குத்துச் சண்டை போட்டி வெச்சுகிட்டோம்.”
“அவர் உன்னை ரொம்ப சுலபமா ஒரே ரவுண்டுல ஜெயிச்சுட்டார் போலிருக்கு.”
“அவர்தான் எப்பவும் ஜெயிப்பாரு.”
“எழுந்து வா. இங்கிருந்து போவோம்,” அவர் சொன்னார்.
நான் எழுந்து நிற்க உதவினார். அவருடைய போலீஸ் வண்டிக்கு என்னைத் தாங்கியபடி கூட்டிச் சென்றார். என்னை பின் சீட்டில் இருத்தினார். “வண்டியில் நீ வாந்தி எடுத்தா அதை நீதான் சுத்தம் பண்ணனும் தெரிஞ்சுக்கோ.”
“நியாயமான பேச்சு.”
அவர் காரைச் சுற்றி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்துகொண்டார். “குடிபோதை மறுவாழ்வு இடத்திற்குக் கூட்டிப் போறேன்.”
“ஐயோ அங்க வேண்டாமே… மோசமான இடம். முழுக்க குடிகார இந்தியர்களா இருப்பாங்க.”
இருவரும் சேர்ந்து சிரித்தோம். அவர் அங்கிருந்து வண்டியை ஓட்டிச் சென்றார்.
“உங்க ஆட்களால மட்டும் இது எப்படி முடியுதுன்னு தெரியலை,” அவர் சொன்னார்.
“எந்த ஆட்கள்?”
“நீங்கதான்… இந்தியர்கள். உங்களால மட்டும் எப்படி இந்தளவு சிரிக்க முடியுது? ரயில் தண்டவாளத்திலிருந்து உன்னைத் தூக்கிக் கொண்டு வந்து இப்பதான் போட்டேன், ஆனா நீ ஜோக்கடிச்சு சிரிக்கிற. ஏன்டா இப்படி இருக்க?”
“நான் இதுவரை பழகியதிலேயே இரண்டு இன மக்கள்தான் வேடிக்கையானவர்கள், அமெரிக்க இந்தியர்களும் யூதர்களும். அதனால இனப் படுகொலைகளின் உள்ளார்ந்த அபத்த நகைச்சுவையை ஏதோ ஒரு வகையில இது குறிக்குதுன்னு எனக்கு தோணுது.”
சத்தமாகச் சிரித்தோம்.
“பார்த்தியா ஜாக்ஸன். நீ உண்மையிலேயே ஒரு புத்திசாலி. நீ ஏன் இப்படி தெருவில கிடக்குற?”
“எனக்கு ஒரு ஆயிரம் டாலர்கள் கொடுங்க நான் சொல்றேன்.”
“நீ உன் வாழ்க்கையை உண்மையிலேயே சரி செய்வதற்கு தேவைப்படும்ன்னா நிச்சயம் ஆயிரம் டாலர் உனக்குத் தருவேன்.”
அவர் அதை தன் மனதிலிருந்து உணர்வுப்பூர்வமாகச் சொன்னார். நான் அறிந்ததிலேயே இரண்டாவது சிறந்த போலீஸ் இவர்தான்.
“நீங்கள் ஒரு நல்ல போலீஸ்காரன்,” நான் சொன்னேன்.
“போதும் ஜாக்ஸன். என் நெஞ்சை ரொம்ப நக்க வேண்டாம்.”
“இல்லை உண்மையாகத்தான் சொல்றேன். நீங்க என்னுடைய தாத்தாவை ஞாபகப்படுத்துறீங்க.”
“ஆமா… உங்க ஆட்கள் இந்த மாதிரி ஏதாவது எங்கிட்ட எப்பவுமே சொல்றதுதான் இது.”
“இல்லை… இல்லை… என்னுடைய தாத்தா பழங்குடிகளின் போலீஸாக இருந்தவர். அவரும் ஒரு நல்ல போலீஸ்காரன். யாரையும் கைது செய்ததில்லை. மாறாக அவங்களை நல்லா பார்த்துகிட்டாரு. உங்களை மாதிரி.”
“நான் இதுவரை நூறு திருட்டுப் பசங்களையாவது கைது செய்திருப்பேன், ஜாக்ஸன். ஒன்றிரண்டு பேரை ஓடவிட்டு பின்னாலேயே சுட்டிருக்கேன்.”
“அது ஒரு விஷயமில்லை. நீங்க கொலைகாரனில்லை.”
“ஆமா நான் அவங்களை கொன்றதில்லை. ஆனால் அவங்க புட்டத்தை சுட்டிருக்கேன். நான் ஒரு குண்டி வீரன்.”
நாங்கள் நகரத்தின் ஊடாகச் சென்றோம். நடைபாதை மக்களுக்கான காப்பகங்களும் இரவு விடுதிகளும் அங்கே தங்கியிருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டிருந்தது. இன்னமும் தூக்கக் கலக்கத்திலிருந்த ஆண்களும் பெண்களும் தெருவோரம் நின்று சாம்பல் நிற வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். பிணங்கள் எழுந்து நடமாடிய இரவுக்குப் பிறகான விடியலைப் போல இருந்தது அது.
“நீங்க எப்பவாவது பயந்திருக்கீங்களா? ஆஃபீஸர் வில்லியம்ஸை கேட்டேன்.
“என்ன கேக்குற?”
“இல்லை… நீங்க ஒரு போலீஸாச்சே. பயமாயில்லையா?”
சிறிது நேரம் அதைப் பற்றிச் சிந்தித்தார். பிறகு அதை தனக்குள்ளே ஆழமாக ஆராய்ந்தார். அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம் இது.
“பயத்தைப் பற்றி நான் அதிகமாக யோசிக்காம இருக்க முயற்சி பண்றேன்னு நினைக்கிறேன்,” அவர் சொன்னார். “பயத்தைப் பற்றி நினைத்தாலே பயப்படத் தொடங்கிவிடுகிறோம். பெரும்பாலான நேரங்கள்ல இது ரொம்ப போரடிக்கும் வேலைதான். சும்மா வண்டியோட்டிக்கொண்டு இருண்ட தெருமுனைகளை கண்காணிச்சுக்கிட்டு… இப்படியே… அங்கே எதுவுமே இருக்காது. ஆனா திடீரென விஷயம் சூடு பிடிச்சிடும். யாரையாவது துரத்தி ஓட வேண்டியிருக்கும், சண்டை போட வேண்டியிருக்கும், இருட்டடிச்ச வீட்டைச் சுத்தி வரும்போது ஒரு மூலையில கிறுக்கிப் பிடிச்சவன் எவனாவது ஒளிஞ்சிருப்பான்… அட ஆமா… கொஞ்சம் பயம்தான்.”
“போலீஸ் டியூட்டில இருக்கும்போதுதான் என்னோட தாத்தா கொல்லப்பட்டார்,” நான் சொன்னேன்.
“ஓ… ஸாரி. என்ன ஆச்சு?”
என்னுடைய கதையை அவர் உற்றுக் கவனிப்பார் என்று எனக்குத் தெரியும்.
“அவர் ரிசர்வேஷனில்தான் வேலை பார்த்தார். எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். பாதுகாப்பான இடம். அப்பாச்சி[17] போலவோ கிறுக்குப் பிடித்த சியோக்ஸ்[18] போலவோ போரிடும் மறவர் பழங்குடி இனம் அல்ல நாங்கள். கடந்த நூறு வருடங்கள்ல வெறும் மூன்றே கொலைகள்தான் நடந்திருக்கு.”
“அப்போ பாதுகாப்பான இடம்தான்.”
“ஆமாம், எங்கள் ஸ்போகேன் இன மக்கள் அடங்கிப் போகிறவர்கள். வார்த்தைகளில்தான் வீரத்தைக் காட்டுவோம். யாரைவேணாலும் கெட்ட வார்த்தையில திட்டுவோம். ஆனா சுட மாட்டோம். கத்தியாலும் குத்த மாட்டோம். அவ்வளவு அதிகமா கிடையாதுனு கண்டிப்பா சொல்லலாம்.”
“உன் தாத்தாவுக்கு என்ன ஆச்சு?”
“ஒருத்தன் அவன் காதலியோட தன் வீட்டில் சண்டை போட்டுகிட்டு இருந்தான்.”
“ஆ… குடும்பத் தகராறுகள். இருப்பதிலேயே மோசமானது அதுதான்.”
“ஆமா… ஆனா அந்த ஆளு என் தாத்தாவோட அண்ணன். என்னோட பெரிய தாத்தா.”
“ஆஹா… போச்சு.”
“ ஆமா, கொடூரம். என் தாத்தா சும்மா அந்த வீட்டுப் பக்கமா போனார். ஆயிரம் முறையாவது அங்க போயிருப்பார். அவருடைய அண்ணனும் காதலியும் குடி போதையில ஒருத்தரையொருத்தர் அடிச்சுகிட்டு இருந்தாங்க. இதுக்கு முன்னாடி ஒரு நூறு முறையாவது செய்ததைப் போல இப்பவும் அவங்க நடுவுல போய் தடுக்கப் பார்த்தார். அந்த காதலி ஏதோ தடுக்கித் தடுமாறி கீழே விழுந்துட்டா போல. தலையில அடிபட்டு அழத் தொடங்கிட்டா. என் தாத்தா மண்டியிட்டுக் குனிந்து என்ன ஆச்சுன்னு பார்த்தார். என்ன காரணத்தாலோ திடீரென என் பெரிய தாத்தா என் தாத்தாவின் துப்பாக்கியை உறையிலிருந்து வெளியே எடுத்து அவரை சுட்டுட்டார்.”
“அடக் கொடுமையே… ஐயம் ஸாரி.”
“பெரிய தாத்தாவாலேயும் ஏன் இப்படி பண்ணினார்னு விளங்கிக்க முடியலை. அப்ப ஜெயிலுக்கு போனவர்தான். நீளமான கடிதங்களைத்தான் எப்பவும் எழுதுவார். பொடி கையெழுத்துல ஐம்பது பக்கம் வர்ற மாதிரி. அந்தக் கடிதங்கள் மூலமா தான் ஏன் அப்படி பண்ணேங்கிறதைதான் புரிஞ்சுக்க முயற்சி செய்தார். எழுதி எழுதி எழுதி அதைக் கண்டுபிடிக்கப் பார்த்தார். அவரால முடியலை. அது இப்பவும் பெரிய மர்மம்தான்.”
“உன் தாத்தாவை உனக்கு ஞாபகம் இருக்கா?”
“கொஞ்சம். அவருடைய இறுதி சடங்கு நினைவிருக்கு. என் பாட்டி அவர் உடலைப் புதைக்கவே விடலை. மயானத்திலிருந்து பாட்டியை அப்பா வெளியே இழுத்துப் போக வேண்டியிருந்தது.”
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.”
“எனக்கும்தான்.”
ஒரு மறுவாழ்வு இல்லத்தின் வெளியே நின்றோம்.
“வந்துட்டோம்.” ஆஃபீஸர் வில்லியம்ஸ் சொன்னார்.
“என்னால அங்க போக முடியாது,” நான் சொன்னேன்.
“நீ போய்தான் ஆகனும்.”
“வேண்டாம், ப்ளீஸ். என்னை இங்க இருபத்தி நாலு மணிநேரம் வெச்சிருப்பாங்க. அதுக்குள்ள நேரம் கடந்து போயிரும்.”
“நேரமா? எதுக்கு?”
நான் என்னுடைய பாட்டியின் ரெகாலியாவைப் பற்றியும் அதைத் திரும்ப மீட்டுவதற்கான காலக் கெடு பற்றியும் கூறினேன்.
“அது திருடப்பட்டிருந்தா நீ புகார் பதிவு பண்ணனும்,” அவர் சொன்னார். “நானே அதை விசாரிக்கிறேன். அது உண்மையிலேயே உன்னுடைய பாட்டிக்குச் சொந்தமானதா இருந்தா, சட்டப்படியே நான் உனக்கு அதை மீட்டுக் கொடுக்கிறேன்.”
“வேண்டாம். அது நியாயமில்லை. அடகுக்கடைக்காரனுக்கு அது திருட்டுப் பொருள்னு தெரியாது. அதுவுமில்லாம நான் இப்போ ஒரு குறிக்கோளை அடையும் பயணத்தில் இருக்கேன். நான் ஒரு ஹீரோவாகப் போறேன். ஒரு வீரனைப் போல அதை வென்று மீட்டு வரப்போறேன்.”
“பெரிய லட்சியவாத மயிரு…”
“இருக்கட்டும். ஆனால் எனக்கு அதன் மேல அக்கறை இருக்கு. நான் எதைப் பற்றியாவது பொருட்படுத்தி வெகு காலமாகுது.”
ஆஃபீஸர் வில்லியம்ஸ் அவருடைய இருக்கையில் இருந்தபடி என்னைத் திரும்பிப் பார்த்து முறைத்தார். என்னைப் பார்வையால் எடை போட்டார்.
“நான் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன்,” அவர் சொன்னார். “எங்கிட்ட அதிகமில்லை. வெறும் முப்பது டாலர்தான். சம்பள நாள் வரை கொஞ்சம் முடைதான். ரெகாலியாவை திரும்ப வாங்க இது போதுமானதில்லை. ஆனா இது உதவலாம்.”
“நான் வாங்கிக்கறேன்.”
“நான் இதைக் கொடுக்கிறதுக்குக் காரணம் உன் நம்பிக்கை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னை நம்புறேன். எதுக்கு நம்புறேன்னே தெரியலை, ஆனா இந்த முப்பது டாலரை நீ ஆயிரம் டாலரா மாத்திடுவேன்னு நான் நம்புறேன்.”
“எனக்கு அற்புதங்கள் மேலே நம்பிக்கை இருக்கு.”
“என்னோட காசு கொண்டு போய் நீ முழுக்க குடிக்கப் போறேங்கிறது என்னோட நம்பிக்கை.”
“அப்புறம் இதை எதுக்கு கொடுக்குறீங்க?”
“நம்பிக்கையற்ற போலீஸ்னு ஒருத்தன் கிடையவே கிடையாது”
“நிச்சயம் இருக்காங்க.”
“சரி… ஆனா நான் அப்படிப்பட்ட போலீஸ் இல்லை.”
அவர் காரைத் திறந்து என்னை வெளியே விட்டார். இரண்டு ஐந்து டாலர் நோட்டுகளும் ஒரு இருபது டாலர் நோட்டையும் என் கையில் திணித்து கை குலுக்கினார்.
“பத்திரமா இரு, ஜாக்ஸன்,” அவர் சொன்னார். “ரயில் தண்டவாளங்களிலிருந்து தள்ளியே இரு.”
“முயற்சி பண்றேன்.”
அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். நான் பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் கடல் நீரின் அருகே சென்றேன்.
8 மணி:
கப்பல்துறை மேடையில் மர பெஞ்சில் அந்த மூன்று அலூட்களும் இன்னமும் காத்துக்கொண்டிருந்தார்கள்.
“உங்களுடைய கப்பல் கண்ணில் பட்டதா?” அவர்களிடம் கேட்டேன் நான்.
மூத்த அலூட் சொன்னார், “நிறையக் கப்பல்கள் வந்து போவதைப் பார்த்தோம். ஆனால் எங்களோடைதை இன்னும் காணலை.”
நான் அவர்களோடு பெஞ்சில் அமர்ந்துகொண்டேன். நீண்ட நேரம் நாங்கள் அமைதியாக அங்கே அமர்ந்திருந்தோம். நாங்கள் இன்னும் சிறிதுநேரம் அப்படியே அமர்ந்திருந்தால் புதையுண்டு கல்லாக மாறிவிடுவோமோ என்று அஞ்சத் தொடங்கினேன்.
என் பாட்டியைப் பற்றிச் சிந்தித்தேன். அந்த ரெகாலியாவை அணிந்துகொண்டு அவள் நடனமிட்டதை நான் பார்த்ததில்லை. வேறு எதைவிடவும் அவள் பொவ்வாவில் நடனமிட்டதை நான் பார்த்திருக்கவேண்டும் என்றுதான் அதிகம் பிரியப்பட்டேன்.
“உங்களுக்குப் பாடல்கள் ஏதாவது தெரியுமா?” நான் அவர்களிடம் கேட்டேன்.
“எனக்கு ஹாங்க் வில்லியம்ஸின்[19] அத்தனை பாடல்களும் தெரியும்.” மூத்த அலூட் சொன்னார்.
“அமெரிக்க இந்தியப் பழங்குடி பாடல்கள் ஏதாவது?”
“ஹாங்க் வில்லியம்ஸ் இந்தியன்தான்.”
“பக்திப் பாடல்கள் ஏதாவது?”
“ஹாங்க் வில்லியம்ஸ் பக்தன்தான்.”
“சடங்குகளின் போது பாடுவாங்களே அந்த வகையான பாடல்களைப் பற்றிக் கேட்கிறேன். நம் மதங்கள் சார்ந்த பாடல்கள். ஊரில் நம்முடைய வீடுகளில் வேண்டுதல்களின்போது பாடுவர்களே அந்தப் பாடல்கள்.
“நீ என்ன வேண்டப் போகிறாய்? எதை எதிர்பார்க்கிறாய்?”
“என்னுடைய பாட்டி இப்போ உயிருடன் இருந்திருக்கனும்னு விரும்புறேன்.”
“எனக்குத் தெரிந்த ஒவ்வொரு பாட்டும் இதைப் பற்றியதுதான்.”
“நல்லது. உங்களால எத்தனை முடியுமே அத்தனை பாடல்களையும் எனக்காகப் பாடுங்கள்.”
அலூட்கள் அவர்களின் விசித்திரமான அழகிய பாடல்களைப் பாடத் தொடங்கினர். என்னுடைய பாட்டியைப் பற்றியும் அவர்களுடைய பாட்டிகளைப் பற்றியும் பாடினார்கள். அவர்கள் குளிரிலும் பனியிலும் தனிமையுற்றிருந்தார்கள். நான் அத்தனையிலும் தனிமையுற்றவனாக இருந்தேன்.
10 மணி:
அலூட்கள் தங்களின் கடைசிப் பாடலை பாடி முடித்ததும் நாங்கள் மீண்டும் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தோம். அமைதியாக இருப்பதில் வல்லவர்கள் இந்தியர்கள்.
“அதுதான் கடைசிப் பாட்டா?” நான் கேட்டேன்.
“நாங்கள் வெளியே பாடக் கூடிய அத்தனை பாடல்களையும் பாடிவிட்டோம். மற்ற பாடல்களெல்லாம் எங்கள் இனக் குழுவினருக்காக மட்டும்தான்.
நான் அதைப் புரிந்துகொண்டேன். இந்தியர்கள் நாங்கள் எங்களின் ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டும். இந்த அலூட் மக்கள் மிக இரகசியமானவர்கள், தங்களை இந்தியர்களாகக் கூடக் காட்டிக்கொள்வதில்லை.
“உங்களுக்குப் பசிக்குதா?” நான் அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர், பேச்சின்றி ஏதோ ஒரு தகவலைப் பரிமாறிக்கொண்டனர்.
“சாப்பிடலாமே,” மூத்த அல்யூட் சொன்னார்.
11 மணி:
சர்வதேச கடைகள் இருக்கும் பகுதியிலுள்ள மலிவான உணவகமான தி பிக் கிட்சனுக்கு நானும் அலூட்களும் சென்றோம். கையில் பணம் வாய்க்கப்பெற்ற வீடற்ற இந்தியர்களுக்கு அவர்கள் உணவு பரிமாறுவார்கள் என்பதை நான் அறிவேன்.
“நாலு பேரா?” நாங்கள் உள்ளே நுழைந்ததும் பணிப்பெண் ஒருத்தி எங்களிடம் கேட்டாள்.
“ஆமா, நல்ல பசியில் இருக்கோம்,” மூத்த அலூட் கூறினார்.
சமையலறைக்கு அருகில் இருந்த இருக்கைகளுக்கு எங்களை அழைத்துச் சென்றாள் அவள். சமைக்கப்பெறும் உணவின் வாசனையை என்னால் முகர முடிந்தது. என் வயிறு சப்தமிட்டது.
“உங்களுக்கு தனித்தனியா பில் போடனுமா?” பணிப்பெண் கேட்டாள்.
“இல்லை. எல்லோருக்கும் நான்தான் காசு கொடுக்கப்போறேன்,” நான் சொன்னேன்.
“ஓ… நீங்கள்தான் அந்தத் தாராளப் பிரபு, இல்லையா?” பணிப்பெண் சொன்னாள்.
“அப்படிச் செய்யாதே,” நான் சொன்னேன்.
“எப்படிச் செய்யக்கூடாது?”
“இப்படிப் பொடி வெச்சு கேள்வி கேட்பது. எனக்குப் பயம் வந்திடும்.”
அவள் குழப்பமாக என்னைப் பார்த்தாள், பின்பு சிரித்தாள்.
“சரிங்க புரொஃபஸர்,” அவள் சொன்னாள். “இனிமேல் உங்களிடம் நேரான கேள்விகள் மட்டும்தான் கேட்பேன்.”
“நன்றி.”
“சாப்பிட உங்க எல்லோருக்கும் என்ன வேண்டும்?”
“யாரும் யாரிடமும் கேட்கக்கூடிய சிறந்த கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். என்ன இருக்கு?” நான் கேட்டேன்.
“உங்ககிட்ட எவ்வளவு பணம் இருக்கு?”
“மறுபடியும் ஒரு நல்ல கேள்வி. என்னால மொத்தமா இருபத்தஞ்சு டாலர் செலவு செய்ய முடியும். அதில் உன் டிப்ஸ் போக என்னென்ன உணவு கொண்டு வர முடியுமோ அத்தனையும் கொண்டு வா.”
அவளுக்குக் கணக்கு தெரியும்.
“சரி… நாலு ஸ்பெஷல் மீல்ஸ், நாலு காஃபி அப்புறம் பில் தொகையில பதினைந்து சதவீதம் என்னோட டிப்ஸ்.”
நானும் அலூட்களும் அமைதியாகக் காத்திருந்தோம். சீக்கிரமே அப்பணிப்பெண் திரும்ப வந்து எங்களுக்கு நாலு காஃபி வைத்துவிட்டுச் சென்றாள். அவள் நான்கு தட்டுகளில் எங்கள் உணவைக் கொண்டு வரும்வரை நாங்கள் காஃபியை அருந்திக்கொண்டிருந்தோம். முட்டைகள், ஃபிரட் டோஸ்டுகள், பேக்கன்கள், வறுத்த உருளைக்கிழங்குகள். இவ்வளவு குறைந்த காசில் இத்தனை உணவு வாங்க முடியும் என்பது அதிசயம்தான்.
நன்றியுடன் நாங்கள் விருந்துண்டோம்.
நண்பகல்
அலூட்களிடமிருந்து விடை பெற்று அடகுக் கடையை நோக்கி நடந்தேன். அந்த அலூட்கள் கப்பல் துறை எண் 47 அருகே உப்புக் கடல் நீரில் இறங்கி மாயமாக மறைந்துவிட்டதாக பின்பொருநாள் கேட்டறிந்துகொண்டேன். சில இந்தியர்கள் கடல் நீரின் மீது அலூட்கள் வடக்கை நோக்கி நடந்து சென்றதாகச் சத்தியம் செய்தனர். மற்ற இந்தியர்கள் அவர்கள் மூழ்கிப் போனதைக் கண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது.
நான் அந்த அடகுக் கடையைத் தேடிப்பார்த்தேன், கண்டுபிடிக்க முடியவில்லை. நான் முன்பு கண்ட இடத்தில் அது இப்போது இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நான் அடகுக்கடையைத் தேடி இருபதோ முப்பதோ தெருக்களில் சுற்றித் திரிந்தேன், மூலை முடுக்குகளிலும் குறுக்குச் சந்துகளிலும் நுழைந்து பார்த்தேன். தொலைப்பேசி புத்தகத்தில் தேடினேன், என்னைக் கடந்து நடந்து செல்பவர்களிடம் இக்கடையைப் பற்றி ஏதேனும் அவர்கள் காதில் விழுந்ததா என்று கேட்டேன். ஆனால் அந்த அடகுக்கடை ஒரு பேய்க் கப்பல் ஏறி மிதந்து சென்றுவிட்டதைப் போலிருந்தது. யாருக்கும் தெரியவில்லை. எனக்கு அழுகை வந்தது. அடகுக்கடையைக் கண்டுபிடிக்கவில்லையென்றால் நான் இறந்தே விடுவேன் என்று எண்ணிக்கொண்டே, என் முயற்சியைக் கைவிடலாமென முடிவெடுத்து கடைசித் தெருமுனையில் திரும்பியபோது அதைப் பார்த்துவிட்டேன். சத்தியமாகச் சொல்கிறேன் சில நிமிடங்களுக்கு முன்னால் அவ்விடத்தில் அது இல்லை.
நான் கடையின் உள்ளே சென்று கடைக்காரரிடம் வணக்கம் சொன்னேன். முன்பைவிட இப்போது சற்று இளமையாகத் தெரிந்தார்.
“ஓ… நீயா?” அவர் கேட்டார்.
“ஆமாம், நானேதான்,” என்று சொன்னேன்.
“ஜாக்ஸன் ஜாக்ஸன்.”
“அதான் என்னோட பேரு.”
“எங்க உன்னோட நண்பர்கள்?”
“அவர்கள் பயணம் போய்விட்டார்கள். இந்தியர்கள்தான் எல்லா இடத்திலும் இருக்கிறார்களே.”
“பணம் கொண்டு வந்தியா?”
“எவ்வளவு பணம் கொடுக்கனும்னு சொன்னீங்க?” விலை குறைந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் கேட்டேன்.
“தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்பது டாலர்கள்.”
இப்பவும் அதே விலைதான். ஆமாம் அதே விலைதான் இருக்கும். ஏன் மாறப்போகிறது.
“எங்கிட்ட அவ்வளவு இல்லை,” நான் சொன்னேன்.
“எவ்வளவு இருக்கு?”
“ஐந்து டாலர்கள்.”
கசங்கிய லிங்கனின் முகத்தை விற்பனை மேசை மீது வைத்தேன். அடகுக்காரர் அதைப் பரிசோதித்தார்.
“நான் நேற்று உனக்குக் கொடுத்த அதே ஐந்து டாலரா?”
“இல்லை, இது வேற.”
அதற்கான சாத்தியக் கூறுகளை அவர் சிறிது நேரம் ஆராய்ந்து பார்த்தார்.
“இந்த பணத்துக்காக நீ கடினமாக உழைத்தாயோ?” அவர் கேட்டார்.
“ஆமாம்” என்று சொன்னேன்.
அவர் கண்களை மூடி அதற்கான சாத்தியங்களை மேலும் கடினமாக ஆராய்ந்து பார்த்தார். பின்னால் அறைக்குள் சென்று என் பாட்டியின் ரெகாலியாவுடன் திரும்ப வந்தார்.
“எடுத்துக்கோ,” என்று சொல்லி அதை என் கையில் கொடுத்தார்.
“என்னிடம் பணமில்லை.”
“உன் பணம் எனக்குத் தேவையில்லை.”
“ஆனால் நான் வெற்றி பெற ஆசைப்பட்டேன்.”
“இது உன்னோட வெற்றிதான். இப்போ என் மனசு மாறுவதுக்கு முன்னால இதை எடுத்துகிட்டு கிளம்பு.”
இந்த உலகத்தில் எத்தனை நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? எண்ணிக்கையில் அடங்காது.
நான் என் பாட்டியின் ரெகாலியாவை எடுத்துக்கொண்டு வெளியேறி நடந்து சென்றேன். அந்த தனித்த மஞ்சள் குண்டுமணி என்னில் ஒரு பகுதிதான் என்பது எனக்குத் தெரியும். மஞ்சள் மணியின் ஒரு பகுதி நான் என்பதும் எனக்குத் தெரியும். வெளியே, என் பாட்டியின் ரெகாலியாவிற்குள் என்னைச் சுற்றிக்கொண்டு அவளை என் மூச்சாக உள்ளிழுத்துக்கொண்டேன். நான் நடைபாதையிலிருந்து விலகி சந்தியில் போய் நின்றேன். பாதசாரிகள் நின்றனர். கார்கள் நின்றது. அவர்கள் எல்லோரும் நான் என் பாட்டியுடன் நடனமாடுவதைப் பார்த்தனர். நடனமிட்ட என் பாட்டி, நான்தான
[1] இந்தியர்கள் – அமெரிக்க பூர்வகுடிகளை எவ்வாறு அழைப்பது என்பது இன்றளவும் சர்ச்சைக்குரிய ஒன்று. பல நூறாண்டுகளாக ‘இந்தியர்கள்’ என்றோ அல்லது ‘அமெரிக்க இந்தியர்கள்’ என்றோதான் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். இளம் தலைமுறையினர் ‘இந்தியர்கள்’ என்று அழைக்கப்படுவதை விரும்பவில்லை. தங்களை ‘பூர்வகுடிகள்’, ‘அமெரிக்கத் தொல்குடி’ என்று மட்டுமே அழைக்கப்படவேண்டுமென்று வற்புறுத்தி வருகின்றனர். ஐரோப்பியரும் இந்திய நாட்டினரும் கூட அவர்களை ‘செவ்விந்தியர்கள்’ என்று அழைப்பது நிறவெறியைக் காட்டும் வசைச் சொல்லாகக் கருதப்படுகிறது. உரையாடல்களின் உண்மைத்தன்மையையும் அன்யோன்யத்தையும் தக்கவைக்கும் பொருட்டு ஆசிரியர் ‘இந்தியர்கள்’ என்றே பயன்படுத்தியிருக்கிறார். இக்கதையில் வரும் அத்தனை இடங்களிலும் ‘இந்தியர்கள்’ என்பது அமெரிக்க பூர்வகுடிகளையே குறிக்கிறது.
[2] ஸ்போகேன், Spokane : அமெரிக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 574 அமெரிக்க பூர்வகுடி இனங்களில் ஒன்று. பல்லாயிரம் வருடங்களாக தற்போதைய வாஷிங்டன் மாநிலத்தில் மூன்று மில்லியன் ஏக்கர் பரப்பளவில் வாழ்ந்து வந்த இனம். 1881ல் அமெரிக்க அரசுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தற்போது இரண்டு ஏக்கர் நிலத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இவ்வினத்தின் தற்போதைய மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டாயிரம் இருக்கலாம் என 2000ல் வெளியான கணக்கெடுப்பு காட்டுகிறது
[3] ஸேலீஷ், Salish – ஸ்போகேன் இனத்தினரில் ஸேலீஷ் மொழி பேசுபவர்கள் தனிக்குழு. ஸ்போகேன் மொழி ஸேலீஷ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.
[4] ரோஸ் ஆஃப் ஷேரான் – Rose of Sharon: பல்வேறு பூச்செடி இனங்களுக்கான பொதுப்பெயர். செம்பருத்திப் பூவும் இதில் அடங்கும். பைபிளில் அழகின் குறியீடாக இந்தப் பூ வகை குறிக்கப்பெறுகிறது.
[5] யகாமா இந்தியன் – வாஷிங்டனில் யகாமா நதியின் ஓரம் ஒதுக்கப்பட்ட தனிப்பகுதியில் வாழும் தொல்குடி. இதன் மக்கட்தொகை தற்போது பத்தாயிரத்திற்கும் மேல். தற்போது அனேகமாக மறைந்துவிட்ட விஷ்ராம் என்ற மூத்தகுடியின் ஒரு பிரிவு யகாமா இந்தியர்கள்.
[6] கோல்வில் – வாஷிங்டனின் கோல்வில் நதிக்கரையில் வாழ்ந்த தொல்குடி. தற்போது கோல்வில் மக்களையும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு இனத்தவர்கள் தனிப்பகுதியில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
[7] செவன் இளெவன் – அமெரிக்கா முழுவதும் பரவி இயங்கி வரும் இருபத்தி நான்கு மணி நேரப் பல்பொருள் அங்காடி.
[8] பொவ்வாவ் – பல்வேறு அமெரிக்கப் பழங்குடி இனத்தவர்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் பெரும் கலாச்சார விழா. அவரவர் இனங்களின் பிரத்தியேக ஆடை அலங்காரங்களுடன் இசைத்து நடனமாடி தங்கள் கலாச்சாரங்களைக் கொண்டாடும் ஒரு திருவிழா.
[9] ரெகாலியா, Regalia – பொவ்வாவ் விழாக்களில் அமெரிக்கப் பழங்குடியினர் அணியும் மேல் அங்கி. ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கேயுரிய வகையில் வடிவமைத்து விதவிதமான ஆபரணங்களைத் தைத்து உருவாக்கப்படும் அங்கி. கிரீடம் முதல் கால் வரை பரவும் ஒற்றை மேல் அங்கி. குறிப்பாக பொவ்வாவ் விழாக்களில் இதை அணிந்து நடனமாடுவது வழக்கம்.
[10] டோப்பனீஷ், Toppenish – யகாமா பழங்குடியினரின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு நகரம்.
[11] ரிசர்வேஷன், Reservation – அமெரிக்கப் பூர்வகுடிகளுக்கென ஒதுக்கப்பட்ட அத்தனை இடங்களையும் குறிக்கும் பொதுவான சொல். இவ்விடங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வராது. 1824ல் மத்திய அரசின் கீழ் உருவாக்கப்பட்ட பூர்வகுடிகளின் விவகாரத் துறையின் கண்காணிப்பில் இப்பகுதிகள் உள்ளன. அமெரிக்கா முழுதும் மொத்தம் 326 ரிசர்வேஷன்கள் இருக்கின்றன. கூட்டாக அதன் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 27 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள்.
[12] அலூட், Aleut – அலாஸ்காவின் வட விளிம்பிற்கும் ரஷ்யாவின் தொடக்க முனைக்கும் இடையில் உள்ள தீவுகளைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பியர்களின் முதல் தொடர்புக்குப் பிறகான காலங்களில் அதிக வதைகளுக்கும் அழிவுகளுக்கும் உள்ளான இனக் குழுக்களில் ஒன்று அலூட். இவர்களில் பலர் பிரிந்து ரஷ்யாவிற்கும் அமெரிக்க நகரங்களுக்கும் புலம் பெயர்ந்தனர்.
[13] மாவோரி, Maori – பாலினீசிய தீவுகளிலிருந்து 1320 களில் படகுகளில் நியூஸிலாந்து தீவில் குடியமர்ந்தவர்கள். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியரின் வருகை வரை தனித்த கலாச்சாரத்தை உருவாக்கிப் பேணுபவர்கள். மேற்கு கலாச்சார கலப்பிற்கு இன்று பெருமளவு தன்னை ஒப்புக்கொடுத்தாலும் தங்களின் தொல்குடி அடையாளங்களை இழக்காமல் பாதுகாக்கின்றனர். இவர்களின் பிரபலமான ‘haka’ நடனம் பல்வேறு சர்வதேச அரங்குகளில் மேடையேற்றப்படுகிறது.
[14] டுவாமிஷ், Duwamish – பனி யுகத்தின் முடிவிலிருந்து தற்போது சியாட்டல் நகர் இருக்கும் பகுதியிலேயே வாழும் இனத்தைச் சேர்ந்தவர்கள். 1855ல் இவர்களுக்கான ரிசர்வேஷன் தனியாக உருவாக்கப்பட்டது.
[15] க்ரோ, Crow people – தெற்கு மாண்டானா மாநிலத்தின் சமவெளிகளில் வாழும் பூர்வகுடி மக்கள். இவ்வினத்தின் இயற்பெயர் Absaroka, நீண்ட அலகுடைய பறவையின் பிள்ளைகள் என்பது அதன் அர்த்தம். ‘People of the Crow’ என்று பிரெஞ்சில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு பின் அதுவே நிலைத்துவிட்டது.
[16] வில்லி நெல்சன், Willie Nelson – பிரபலமான அமெரிக்க இசைக் கலைஞர், நடிகர்.
[17] அப்பாச்சி, Apache – பிரபலமான அமெரிக்க பூர்வகுடி இனம். அதிக மக்கள் தொகை கொண்டது. இவர்களின் வேட்டை முறையும் போர் குணங்களைப் பற்றியும் பல தொன்மக் கதைகள் உண்டு.
[18] சியோக்ஸ், Sioux – டக்கோட்டா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தொல்குடி. அப்பாச்சி இனத்தவருக்கு இணையான மக்கட் தொகை கொண்ட இனம். அமெரிக்கர்களுக்கெதிரான இவர்களின் நாற்பதாண்டுக் கால போர் தோல்வியில் முடிந்ததும் இவர்களுக்கான ரிசர்வேஷன் நிலத்தில் குறுக்கப்பட்டார்கள். இவர்களின் போர் கதைகள் இன்றும் வாய்மொழியாகச் சொல்லப்படுகிறது.
[19] ஹாங்க் வில்லியம்ஸ், Hank Williams – பிரபலமான அமெரிக்க இசைக் கலைஞர், பாடகர். மிகக் குறுகிய காலமே இசைத் துறையில் ஈடுபட்டார் எனினும் எல்விஸ் பிரஸ்லி போன்ற பல்வேறு புகழ்பெற்ற பாடகர்களின் ஆதர்சமாகத் திகழ்ந்தார்.
ஷெர்மன் அலெக்ஸி
தமிழில் – நரேன்
ஷெர்மன் அலெக்ஸி, Sherman Alexie : அமெரிக்கப் பூர்வகுடியைச் சேர்ந்த சிறந்த பத்து படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படுபவர். இவரின் சிறுகதைகள், கவிதைகள் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றன. இதுவரை நான்கு நாவல்கள் எழுதியிருக்கிறார். திரைத்துறையிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். 2018ல் அவர் மீது பாலியல் புகார்கள் எழுந்தபோது அவருக்குக் கிடைக்கவிருந்த விருதுகள் நிறுத்தப்பட்டன. அக்குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்த அலெக்ஸி பொதுவான ஒரு மன்னிப்பைக் கோரி தன் தரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஸ்போகேன் இனத்தில் அவர்களுக்கான ரிசர்வேஷன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். உயர் கல்விக்காக அங்கிருந்து வெளியேறி சியாட்டலில் குடியேறினார். ரிசர்வேஷனில் பிறந்து குழந்தைப் பருவத்தை அங்கேயே கழித்து பின்பு படிப்பிற்காகவோ பணத்திற்காகவோ அமெரிக்கப் பெருநகரங்களில் குடிபுகும் பூர்வகுடிகளுக்கு ஏற்படும் கலாச்சார சிக்கல்களை அலெக்ஸியும் அடைந்தார். அச்சிக்கல்களை தன் கதைகளின் மூலம் ஒரே நிலத்தின் மேல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இருவேறு உலகங்களின் முரண்களாகத் தொடர்ந்து நிறுவுகிறார்.
ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பேசும் வழமையான குரல் அல்ல இவருடையது. அழுத்தமான சுயபகடியின் மேல்தான் பூர்வகுடிகளின் இயலாமையையும் சுயவதைகளையும் விவரிக்கிறார். இவரின் கதைகளில் பூர்வகுடிகள் குடிகாரர்களாகவும் சோம்பேறிகளாகவும் தொடர்ந்து முன்வைக்கப்படுவதால் பல சமூகப் போராளிகளின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் அது பூர்வகுடிகளின் கையறு நிலையையே காட்டுகிறது என்றும் நிலத்தைப் பிரித்துக் கொடுத்து எங்களை அச்சத்திற்குரிய, மர்மங்கள் நிறைந்த காட்டுமிராண்டிகள் போன்றதொரு பிம்பத்தால் மொத்த அமெரிக்காவும் மூடிவிட்டது என்று சுட்டுகிறார். வெள்ளைக்காரர்கள் தங்கள் மேல் நிகழ்த்திய அழிவுகளைத் தொடர்ந்து பேசி வரும் அதே வேளையில் பூர்வகுடிகளின் தன்முனைப்பற்ற போக்குகளையும் விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். கொத்து கொத்தாக தன் இன மக்களையோ, தங்கள் கலாச்சாரத்தையோ, மொழியையோ, நிலத்தையோ இழப்பதைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்வதில்லை. மாறாக உணவகத்தில் பணிப்பெண் தனக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பதைப் பற்றி நாளெல்லாம் வருந்துபவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்.
பின்வரும் இச்சிறுகதை 2005ம் ஆண்டின் சிறந்த அமெரிக்கக் கதைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. தன்னுடைய வழக்கமான பகடி மொழியில் விளையாட்டைப் போல இக்கதையை அலெக்ஸி கதை நாயகனின் பார்வையில் விவரிக்கிறார். வீடில்லாதவன் என்ற பதம் ஒருவனின் அகநிலையின் குறியீடாகக் கதையின் போக்கில் வளர்ந்து வருகிறது. அதுவும் தன் நிலங்களையும் அடையாளங்களையும் இழந்த ஒருவன் தன் முன்னோர் நிலத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டிருக்கும் தற்போது அந்நியமாகிவிட்ட அந்நிலத்தில் வானம் பார்த்து வாழ்கிறான். அமெரிக்கப் பூர்வகுடிகளைத் தனித்த வீரனாக சமகால அமெரிக்க இலக்கியங்களும் திரைப்படங்களும் தொடர்ந்து சித்தரித்து வருகிறது. உண்மையில் அது அவர்களின் கூட்டு வாழ்க்கைக்கு எதிரான பிம்பமும்கூட. ஆனால் அந்த கற்பனையை ஏற்றுக்கொண்டு படைகளற்ற ஒரு ஒற்றைப் போர் வீரனைப் போல நாயகன் வென்று மீட்க விழைவது எது என்பது மண்ணில் புதையுண்டுபோன ஆயிரமாண்டு மர்மம்.