சமையலறையில் இன்னொரு கோப்பையை நிரப்பிக்கொண்டு வெளிமுற்றத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த படுக்கையறை சாதனைங்களைப் பார்த்தான். மெத்தை தனியாகவும் அதன் பட்டாபட்டி உறை தனியாகவும் ஒப்பனை மேசை மீதிருந்த இரண்டு தலையணைகளுக்குப் பக்கத்தில் இருந்தன. இவற்றைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் அவர்களுடைய படுக்கையறையில் இருந்ததைப் போலவே இங்கும் இருந்தன – படுக்கையில் அவன் படுக்கும் பகுதிக்குப் பக்கத்தில் நிலையடுக்கும் படிக்கும் விளக்கும், அவள் படுக்கும் பகுதிக்குப் பக்கத்தில் நிலையடுக்கும் படிக்கும் விளக்கும். அவனுக்கான பகுதி, அவளுக்கான பகுதி. விஸ்கியை அருந்திக்கொண்டே அதைப்பற்றி யோசித்தான். கட்டிலிலிருந்து சில அடிகள் தள்ளி ஒப்பனை மேசை நின்றது. அதன் இழுப்பறைகளில் இருந்தவற்றையெல்லாம் எடுத்து அன்று காலையிலேயே அட்டைப்பெட்டிகளில் போட்டு மூடிவிட்டிருந்தான். அந்த அட்டைப்பெட்டிகள் வீட்டுக்குள் வசிப்பறையில் இருந்தன. ஒப்பனை மேசைக்குப் பக்கத்தில் ஒரு ‘போர்டபிள் ஹீட்டர்’ இருந்தது. கட்டிலையொட்டி அலங்காரத் தலையணையோடு ஒரு பிரம்பு நாற்காலி போடப்பட்டிருந்தது. வண்டிப்பாதையின் ஒரு பகுதியை மஞ்சள் அலுமினிய சமையல் பாத்திரங்கள் நிறைத்திருந்தன. பரிசாக வந்திருந்த ஒரு மிகப்பெரிய மஞ்சள் மஸ்லின்துணி மேசையை மூடி பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்தது. மேஜைமீது தொட்டியில் பெரணிச் செடியும், பரிசாக வந்த வெள்ளிக்கலம் ஒன்றும் இருந்தன. மர அலமாரியுடன் பொருத்தப்பட்ட ஒரு பெரிய கான்ஸோல் – மாடல் தொலைக்காட்சிப் பெட்டி காபி மேஜைமீது வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சில அடிகள் தள்ளி ஒரு சோபாவும், ஒரு நாற்காலியும், ஒரு நிலை விளக்கும். அவன் வீட்டிலிருந்து எக்ஸ்டென்ஷன் ஒயரை இழுத்துவந்து எல்லா சாதனங்களுக்கும் இணைத்திருந்ததால் எல்லாமே வேலைசெய்யும் நிலையில் இருந்தன. கார் ஷெட்டின் கதவையொட்டி போட்டிருந்த குள்ளமான மேஜையின் மீது ஒரு சுவர்க் கடிகாரம், இரண்டு சட்டமிட்ட படங்களோடு இன்னும் சில சாமான்களும் இருந்தன. வண்டிப்பாதையில் இருந்த அட்டைப்பெட்டியில் கிண்ணங்களும் கோப்பைகளும் தட்டுகளும் செய்தித்தாள்களில் சுற்றி வைக்கப்பட்டிருந்தன. உள் அலமாரிகளில் இருந்த எல்லாவற்றையும் அவன் அன்று காலையிலேயே ஒழித்துக் கட்டியிருந்தான். வசிப்பறையில் வைத்திருந்த மூன்று அட்டைப்பெட்டி சாமான்களைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் வீட்டுக்கு வெளியே இருந்தன. அவ்வப்போது கார்கள் தயங்கி வேகத்தைக் குறைக்க, வண்டிக்குள்ளிருப்பவர்கள் இங்கே வீட்டுக்கு வெளியே முற்றத்தில் வைக்கப்பட்டிருப்பவறை வியப்புடன் நோக்குவார்கள். ஆனால் ஒருவரும் நிற்கவில்லை. அவனே கூட வண்டியை நிறுத்திப் பார்த்திருக்க மாட்டான் என்று நினைத்துக்கொண்டான்.
“கடவுளே, இது என்ன முற்றவெளி விற்பனையா?” என்றாள் அந்தப் பெண் அந்தப் பையனிடம்.
அந்தப் பெண்ணும் பையனும் புதிதாக குடித்தனம் அமைக்கவிருப்பவர்கள்.
“அந்தக் கட்டிலுக்கு என்ன விலை சொல்கிறார்கள் என்று பார்ப்போம்,” என்றாள் அந்தப் பெண்.
“தொலைக்காட்சிப் பெட்டிக்கு என்ன விலை சொல்வார்கள் என்று யோசிக்கிறேன்,” அந்தப் பையன் சொன்னான்.
காரை வண்டிப்பாதைக்குள் திருப்பி சமையலறை மேசைக்கு முன்னால் நிறுத்தினான்.
அவர்கள் காரிலிருந்து இறங்கி, பொருட்களை ஆராயத் தொடங்கினார்கள். அந்தப் பெண் மஸ்லின் துணியைத் தொட்டுப் பார்த்தாள். அந்தப் பையன் மிக்ஸிக்கு மின் இணைப்பை செருகி குமிழை ‘மசித்தல்’ முறைக்குத் திருப்பிப் பார்த்தான். அவள் கரி அடுப்புக் கலம் ஒன்றை எடுத்தாள். அவன் டிவியை இயக்கி, எச்சரிக்கையோடு குமிழ்களைத் திருப்பி ஆராய்ந்தான். சோபாவில் உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்த்தான். சிகரெட்டைப் பற்றவைத்து, சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். தீக்குச்சியை கீழே புல்தரையில் போட்டான். அந்தப் பெண் கட்டிலில் அமர்ந்தாள். காலணிகளைக் கழற்றிவிட்டு படுக்கையில் மல்லாந்து படுத்தாள். மாலை நட்சத்திரத்தை அவளால் பார்க்க முடிந்தது.
“ஜேக், இங்கே வா, இந்தக் கட்டில் எப்படி இருக்கிறதென்று பார். அந்தத் தலையணைகளில் ஒன்றை எடுத்துவா,” என்றாள்.
“எப்படி இருக்கிறது?” என்றான்.
“வந்து பார்,” என்றாள்.
அவன் திரும்பிப் பார்த்தான். வீடு இருளில் இருந்தது.
“வேடிக்கையாக இருக்கிறது,” என்றான். “வீட்டில் யாராவது இருந்தால் நல்லது.”
அவள் படுக்கையில் படுத்தபடியே குதித்தாள்.
“முதலில் இங்கே வந்து பார்,” என்றாள்.
அவன் வந்து படுக்கையில் படுத்தான். தலையணையை தலைக்குக் கீழே வைத்துக்கொண்டான்.
“எப்படி இருக்கிறது?” என்றாள் அந்தப் பெண்.
“கெட்டியாக இருக்கிறது,” என்றான்.
அவள் புரண்டு வந்து அவன் கழுத்தை சுற்றி வளைத்துக்கொண்டாள்.
“முத்தம் கொடு,” என்றாள்.
“எழுந்து கொள்வோம்,” என்றான்.
“முத்தம் தா, முத்தம் தா, என் அன்பே,” என்றாள்.
கண்களை மூடிக்கொண்டாள். அவனைப் பிடித்துக் கொண்டாள். அவள் விரல்களை சிரமத்துடன் பிரித்து விலக்கினான்.
எழுந்து உட்கார்ந்து, “யாராவது வீட்டில் இருக்கிறார்களா என்று பார்க்கிறேன்,” என்றான்.
தொலைக்காட்சி இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. தெருவின் இரண்டு புறங்களிலும் வீடுகளில் விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தன. அவன் கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தான்.
“வேடிக்கையாக இருக்காதா, இப்போது…” அந்தப் பெண் முடிக்காமல் சிரித்தாள்.
அவன் உரக்க சிரித்தான். படிக்கும் விளக்கைப் போட்டான்.
அவளைச் சுற்றிவந்த ஒரு கொசுவை விரட்டினாள். அவன் எழுந்து சட்டையை பேன்ட்டுக்குள் செருகிக் கொண்டான்.
“யாராவது வீட்டில் இருக்கிறார்களா என்று பார்க்கிறேன்,” என்றான்.
“அவர்கள் என்ன விலை சொன்னாலும் நீ பத்து டாலர் குறைவாகக் கேள்,” என்றாள். “அவர்கள் ஏதோ நெருக்கடியில் அல்லது பணமுடையில் இருக்கக்கூடும்.”
அவள் படுக்கையில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினாள்.
“இதன் ஒலியைக் கொஞ்சம் அதிகப்படுத்தேன்,” என்று சிரித்தாள்.
“இந்த டி.வி. மிகவும் நன்றாக இருக்கிறது,” என்றான்.
“என்ன விலையென்று கேள்,” என்றாள்.
மேக்ஸ் நடைபாதையில் வந்துகொண்டிருந்தான். அங்காடியில் வாங்கியவை ஒரு பெரிய பையில் இருந்தன. ஸாண்ட்விச்சுகள், பியர், விஸ்கி. பிற்பகல் முழுக்க குடித்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் சென்ற இடத்தில் போதை முற்றிலும் இறங்கிவிட்டதைப் போலிருந்தது. ஆனால் தொடர்ந்து இல்லாமல் இடைவெளிகள் இருந்தன. அங்காடிக்குப் பக்கத்திலிருந்த பாரில் நுழைந்தான். ஜூக் பாக்ஸில் ஒரு பாடலைக் கேட்டான். எப்படியென்று தெரியாமல் இருட்டிவிட்டிருந்தது. முற்றத்தில் போட்டுவைத்திருந்த பொருட்கள் நினைவுக்கு வர, கிளம்பினான்.
வண்டிப்பாதையில் நின்றிருந்த காரையும் கட்டிலில் இருந்த பெண்ணையும் பார்த்தான். தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. வீட்டின் முகப்பில் அந்தப் பையன் நின்றிருப்பதைப் பார்த்தான். முற்றத்தில் நுழைந்தான்.
அந்தப் பெண்ணைப் பார்த்து, “ஹலோ,” என்றான். “கட்டில் பிடித்திருக்கிறது போல. நல்லது.”
“ஹலோ,” என்றபடி அந்தப் பெண் எழுந்தாள். “எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்த்தேன்.” அவள் படுக்கையைத் தட்டினாள். “மிகவும் நன்றாக இருக்கிறது.”
“இது ரொம்பவும் நல்ல கட்டில்தான்,” என்றான் மேக்ஸ். “வேறு என்ன சொல்வது?”
அடுத்து ஏதாவது சொல்லியாக வேண்டுமென்று அவனுக்குத் தெரியும். கையிலிருந்த மூட்டையை கீழே வைத்துவிட்டு அதிலிருந்து பியரையும் விஸ்கியையும் எடுத்தான்.
“இங்கே யாருமே இல்லையோ என்று நினைத்தோம்,” என்றான் அந்தப் பையன். “இந்தக் கட்டில் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. அப்புறம் இந்த தொலைக்காட்சிப் பெட்டி. இந்த மேசையும். இந்தக் கட்டிலுக்கு எவ்வளவு தரவேண்டும்?”
“கட்டிலுக்கு ஐம்பது டாலர் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்,” என்றான் மேக்ஸ்.
“நாற்பதுக்கு ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்டாள் அந்தப் பெண்.
“சரி, நாற்பதுக்குத் தருகிறேன்,” மேக்ஸ் சொன்னான்.
அட்டைப்பெட்டியிலிருந்து ஒரு கிளாஸை எடுத்தான். சுற்றப்பட்டிருந்த செய்தித்தாளை எடுத்துவிட்டு, விஸ்கி பாட்டிலின் சீலை உடைத்தான்.
“டி.வி.க்கு எவ்வளவு சொல்வீர்கள்?” என்று கேட்டான் அந்தப் பையன்
“இருபத்தைந்து.”
“இருபது தருகிறோம்,” என்றாள் அந்தப் பெண்.
“இருபதா? சரி, இருபது” என்றான் மேக்ஸ்.
அந்தப் பெண் அந்தப் பையனைப் பார்த்தாள்.
“சரி பசங்களா, உங்களுக்கு குடிக்க விருப்பமா?” மேக்ஸ் கேட்டான். “அந்தப் பெட்டியில் கிளாஸ்கள் இருக்கின்றன. நான் உட்காரப் போகிறேன். சோபாவில் உட்கார்ந்து கொள்கிறேன்.”
அவன் சோபாவில் உட்கார்ந்து, நன்றாக சாய்ந்துகொண்டான். அவர்களை உற்றுப் பார்த்தான்.
அந்தப் பையன் இரண்டு கிளாஸ்களை எடுத்து விஸ்கியை ஊற்றினான்.
“உனக்கு எவ்வளவு வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் அந்தப் பையன் கேட்டான். அவர்களுக்கு இருபது வயதுதான். ஓரிரு மாதங்கள்தான் வித்தியாசம்.
“இவ்வளவே போதும்,” என்றாள். “எனக்கு இதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.”
ஒரு நாற்காலியை இழுத்துக்கொண்டு வந்து சமையலறை மேசையில் அமர்ந்தாள்.
“அங்கே இருக்கும் குழாயில் தண்ணீர் வரும். எடுத்துக் கொள்,” என்றான் மேக்ஸ்.
அந்தப் பையன் அவர்கள் இருவருடைய கிளாஸ்களிலும் தண்ணீர் சேர்த்துக் கொண்டான். தொண்டையைக் கனைத்துக்கொண்டு அவனும் சமையலறை மேசையில் அமர்ந்தான். புன்னகைத்தான். தலைக்கு மேலே பறவைகள் புழுக்களுக்காக மின்னலாக குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.
மேக்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சியில் கவனமாக இருந்தான். அவனுடைய கோப்பையை காலி செய்தான். எழுந்து நிலை விளக்கை ஏற்றும்போது கையிலிருந்து சிகரெட் நழுவி மெத்தைகளுக்கிடையில் விழுந்தது. அந்தப் பெண் எழுந்துவந்து அதைத் தேடியெடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“உனக்கு வேறு ஏதாவது தேவைப்படுமா, அன்பே?” என்று அந்தப் பையன் கேட்டான்.
“ஓ, எனக்கு அந்த மேசை வேண்டும். அந்த எழுதுமேசை என்ன விலை?”
மேக்ஸ் அந்த அபத்தமான கேள்வியை கையை வீசி ஒதுக்கினான்.
“நீங்களே ஒரு விலையைச் சொல்லுங்கள்.”
அவர்கள் மேசையில் அமர்ந்ததும் அவன் இருவரையும் உற்று நோக்கினான். நிலைவிளக்கின் ஒளியில் அவரகள் முகங்களில் தெரிந்த பாவம் வேறுவிதமாக இருந்தது. ஒரு கணம் அந்த முகபாவம் சதித்தன்மை கொண்டதாகத் தெரிந்தது. அடுத்த கணம் மென்மையானதாக – அதற்கு வேறு எந்தச் சொல்லும் பொருத்தமானதாக இல்லை – மாறியது. அந்தப் பையன் அவன் கையைத் தொட்டான்.
“நான் டிவியை நிறுத்திவிட்டு இசைத்தட்டைப் போடப்போகிறேன்,” என்று மேக்ஸ் அறிவித்தான். “இந்த ரிகார்ட் பிளேயரும் நல்ல நிலையில் இருக்கிறது. மலிவுதான். ஒரு விலையைச் சொல்லுங்கள்.”
அவன் மேலும் விஸ்கியை ஊற்றிக்கொண்டு, ஒரு பியர் பாட்டிலைத் திறந்தான்.
“எல்லாமே விற்பனைக்காகத்தான்.”
அந்தப் பெண் கிளாஸை நீட்ட, மேக்ஸ் விஸ்கியை ஊற்றினான்.
“நன்றி,” என்றாள்.
“இது நேராக மண்டைக்குள் ஏறிவிடுகிறது,” என்றான் அந்தப் பையன். “தலை கிறுகிறுக்கிறது.”
அவன் தனது கிளாஸை காலி செய்துவிட்டு சில நொடிகள் காத்திருந்தான். பின் இன்னொரு முறை நிரப்பிக்கொண்டான். மேக்ஸ் இசைத்தட்டுகளைத் தேடியெடுத்துக் கொண்டிருக்க, அந்தப் பையன் காசோலையை நிரப்பிக் கொண்டிருந்தான்.
மேக்ஸ் அந்த இசைத்தட்டுகளை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் நீட்டி, “உனக்குப் பிடித்தமானவற்றை எடுத்துக்கொள்,” என்றான்.
அந்தப் பையன் தொடர்ந்து காசோலையில் எழுதிக் கொண்டிருந்தான்.
“இதெல்லாம் வேண்டும்,” என்று சிலவற்றை சுட்டிக் காட்டினாள். அந்த இசைத்தட்டுகளில் இருந்த பெயர்கள் அவள் அறியாதவை. இருந்தாலும் பரவாயில்லை. ஒரு சாகச முயற்சியாகத் தேர்ந்தெடுத்திருந்தாள். மேசையிலிருந்து எழுந்தாள். மீண்டும் உட்கார்ந்தாள். அவளால் ஒரு இடத்தில் நிலையாகக் கொஞ்சநேரம் கூட உட்கார முடிவதில்லை.
அந்தப் பையன் எழுதிக் கொண்டே, “இந்த காசோலைகளுக்கான தொகையை உடனே வங்கியில் செலுத்திவிடுகிறேன். நீங்கள் காசாக்கிக் கொள்ளலாம்,” என்றான்.
“நல்லது,” என்றான் மேக்ஸ். விஸ்கியை காலி செய்துவிட்டு, கொஞ்சம் பியரையும் ஊற்றிக்கொண்டான். மீண்டும் சோபாவுக்கு வந்து, கால் மேல் காலைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
அவர்கள் குடிக்கத் தொடங்கினார்கள். இசைத்தட்டு முடியும் வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன்பின் மேக்ஸ் இன்னொரு இசைத்தட்டை எடுத்துச் சுழலவிட்டான்.
“பசங்களா, நீங்கள் இருவரும் ஏன் நடனமாடக்கூடாது?” என்று கேட்டான் மேக்ஸ். “நன்றாக இருக்குமே. நீங்கள் ஏன் நடனமாடக்கூடாது?”
“வேண்டாம். எதற்கு?” என்றான் அந்தப் பையன். “உனக்கு நடனமாட விருப்பமா கார்லா?”
“ஆடுங்கள், இது என் தாழ்வாரம். நீங்கள் நடனமாடலாம்.”
கைகளைப் பிணைத்துக்கொண்டு, உடல்கள் ஒன்றோடொன்று ஒட்டியபடி, அந்தப் பையனும் பெண்ணும் வண்டிப்பாதையில் முன்னும் பின்னுமாக நகர்ந்தனர். அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.
இசைத்தட்டு முடிந்ததும், அந்தப் பெண் மேக்ஸை நடனமாட அழைத்தாள். அவள் இன்னமும் காலணிகளை அணிந்துகொள்ளாமல்தான் இருந்தாள்.
“நான் குடித்திருக்கிறேன்,” என்றான்.
“நீங்கள் ஒன்றும் போதையில் இல்லை,” என்றாள் அந்தப் பெண்.
“நான் போதையில்தான் இருக்கிறேன்,” என்றான் அந்தப் பையன்.
மேக்ஸ் இசைத்தட்டை திருப்பி வைத்தான். அந்தப் பெண் அவனிடம் வந்தாள். அவர்கள் நடனமாடத் தொடங்கினார்கள்.
வீட்டுக்கு வெளியே தெருவில் சிலர் கூடிநின்று, தூணிடைச் சாளரம் வழியே இவர்களை வேடிக்கை பார்ப்பதை அந்தப் பெண் கவனித்தாள்.
“அங்கே அவர்களைப் பாருங்கள். வேடிக்கை பார்க்கிறார்கள்,” என்றாள். “பரவாயில்லையா?”
“அதனாலென்ன? இது என் வீட்டு வண்டிப்பாதை. நாம் நடனமாடலாம். அவர்கள் இங்கே நடந்த எல்லாவற்றையும் பார்த்திருப்பதாக நினைத்திருப்பார்கள். ஆனால் இதை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்” என்றான்.
ஒரு நிமிடம் கழித்து அவளுடைய சூடான மூச்சுக் காற்றை அவன் கழுத்தில் உணர்ந்தான். “இந்தக் கட்டில் உனக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்,” என்றான்.
“ஆம்,” என்றாள்.
“உங்கள் இருவருக்குமே பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றான் மேக்ஸ்.
“ஜேக்!” என்று அந்தப் பெண் கூப்பிட்டாள். “எழுந்திரு!”
ஜேக் தலையை உயர்த்தி, தூக்கக் கலக்கத்துடன் அவர்களைப் பார்த்தான்.
“ஜேக்,” என்றாள்.
அவள் கண்களை மூடித் திறந்தாள். மேக்ஸின் தோளில் முகத்தைப் புதைத்தாள். அவனை இன்னும் நெருக்கமாக சேர்த்துக் கொண்டாள்.
“ஜேக்,” அந்தப் பெண் முணுமுணுத்தாள்.
அவள் அந்தக் கட்டிலைப் பார்த்தாள். முற்றத்தில் அது எதற்காகக் கிடக்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை. மேக்ஸின் தோளுக்கு மேலிருந்து வானத்தைப் பார்த்தாள். மேக்ஸோடு தன்னை இன்னும் ஒட்டிக்கொண்டாள். தாங்கமுடியாத அளவுக்கு ஒரு சந்தோஷம் அவளுக்குள் நிரம்பியது.
அந்தப் பெண் பிறகு சொன்னாள்: “அந்த ஆளுக்கு நடுத்தர வயதுதான் இருக்கும். அவருடைய வீட்டுச் சாமான்கள் எல்லாமே முற்றத்தில் கொட்டிக்கிடந்தன. விளையாடவில்லை, உண்மையைத்தான் சொல்கிறேன்.
நாங்கள் குடித்துவிட்டு நடனமாடினோம். வண்டிப்பாதையில். ஓ, கடவுளே, சிரிக்காதீர்கள். அவர் இசைத்தட்டுகளைப் போட்டார். இந்த ஃபோனோகிராஃபைப் பாருங்கள். இதை எங்களுக்குக் கொடுத்தார். இந்தப் பழைய இசைத்தட்டுகளையும் கொடுத்தார். நானும் ஜேக்கும் அவருடைய கட்டிலிலேயே படுத்துத் தூங்கிவிட்டோம். காலையில் ஜேக்கிற்கு ஹேங்க் ஓவர் விலகாமல் ஒரு பாரவண்டியை அழைத்தான். அந்த ஆளுடைய பொருட்களையெல்லாம் எடுத்துச் செல்வதற்காக. தூக்கத்தில் எனக்கு ஒருமுறை விழிப்பு வந்தது. இந்த ஆள் எங்கள் மீது ஒரு கம்பளிப் போர்வையை போர்த்திக் கொண்டிருந்தார். அந்த ஆள்தான். இதுதான் அந்தக் கம்பளிப் போர்வை இதுதான். எப்படி இருக்கிறதென்று தொட்டுப் பாருங்கள்.”
அவள் பேசிக்கொண்டேயிருந்தாள். எல்லோரிடமும் சொன்னாள். இன்னும் சொல்வதற்கு நிறைய உண்டு, அவளுக்குத் தெரியும். ஆனால் அவற்றையெல்லாம் வார்த்தைகளாக அவளால் மாற்ற முடியவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து இதையெல்லாம் சொல்வதையும் நிறுத்திவிட்டாள்.
____________________
Excellent