நெமேஷியா

ன் பெரியம்மா மகள் நெமேஷியாவுடன் அவரை வயற் பரப்பில் நான் நின்றுக்கொண்டிருக்கும் என்னுடைய புகைப்படம் ஒன்றிருக்கிறது. அதன் பின்னால் என் அம்மாவின் கையால் ‘நெமேஷியா மற்றும் மரியா, தாஹ்ஜிக்யூ, 1929’ என்று பென்சிலில் எழுதி இருக்கும். நெமேஷியாவிற்கு 13; எனக்கு 6. அவள் தன் முழங்கால் வரை வீழும் மரவிழைப் பட்டாடை ஒன்றை உடுத்தியிருக்கிறாள், கண்ணாடி மணிகளும், நிஜப் பட்டில் நெய்த காலுரைகளும், எல்லாம் கலிஃபோர்னியாவில் இருக்கும் அவள் அம்மாவின் பரிசுகள். அவள் ஹெல்மெட்டைப் போல நெருக்கி அழுத்தும் தொப்பி ஒன்றை அணிந்திருக்கிறாள், அவளின் புன்னகைக்கும் உதடுகள் சுருங்கி ஒட்டி மூடியிருக்கின்றன. என் கைகளை இறுகப் பிடித்திருக்கிறாள். நான் என்னுடைய வெள்ளை ஆடையில் கூட பார்ப்பதற்கு ஒரு பையனைப் போல இருக்கிறேன்; என்னுடைய தலை முடி, நானே வெட்டிக் கொண்டது, சிறியதாய் துண்டு துண்டாய் இருந்தது. நெமேஷியாவின் தலை சாய்ந்திருந்தது; அவள் தன் கண் இமைகளுக்கு அடியிலிருந்து வெளியே எட்டி கேமிராவை பார்க்கிறாள். என் முகபாவம் பாவப்பட்டதாக, குற்றம் இழைத்துவிட்டவளைப் போல் இருந்தது. இது எக்காரணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதோ, நாங்கள் ஏன் புழுதி நிறைந்த வயல் வெளி நடுவில் நன்றாக உடுத்தி நின்றிருந்தோம் என்பதோ எனக்கு நினைவில்லை.  அந்த நாளைப் பற்றி நான் ஞாபகம் வைத்திருப்பதெல்லாம் நெமேஷியாவின் காலணி உயர் குதிகால் கொண்டது என்றும், அது சேற்றில் அமிழ்ந்துவிடாமலிருக்க அவள் முன்னங்காலில் தத்தி தத்தி முன்னேறி நடந்தாள் என்பதும்தான்.

 

நெமேஷியா என் அம்மாவின் அக்காள் மகள். என்னுடைய பெரியம்மா பெணிக்னா தன் மகளை பார்த்துக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதால் அவள் நான் பிறக்கும் முன்னரே என் பெற்றோருடன் வாழ வந்துவிட்டாள். பின்னர், பெரியம்மா பெணிக்னா நலம் மீண்டு லாஸ் ஏஞ்சலீஸ்க்கு இடம் பெயர்ந்தபோது, நெமேஷியா இங்கேயே தங்கிவிடும்படிக்கு நீண்ட காலத்தை எங்களோடே ஏற்கனெவே கழித்து விட்டிருந்தாள். எங்கள் நியூ மெக்ஸிக்கோ நகரத்தில் போர்களுக்கு இடையிலான அவ்வருடங்களில் இது ஒன்றும் புதிதல்ல; யாரேனும் இறந்துவிட்டாலோ, அல்லது கடின காலங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலோ, அல்ல மிக அதிகமான குழந்தைகளை பெற்றிருந்தாலோ கூட, அத்தைகளோ சகோதரிகளோ அல்லது பாட்டிகளோ அவர்கள் வீட்டில் கூடுதலாக ஒரு குழந்தைக்கான இடத்தோடு எப்போதும் காத்திருப்பார்கள்.

நான் பிறந்த மறுநாள் நெமேஷியாவை அழைத்துக் கொண்டு என் பெரிய அத்தை பௌலிட்டா என்னை பார்ப்பதற்காக என் அம்மாவின் படுக்கையறைக்குள் வந்தார். நெமேஷியா ஒரு பீங்கான் குழந்தை பொம்மையை எடுத்து வந்தாள், ஒரு காலத்தில் அது பெரியம்மா பெணிக்னாவிற்கு சொந்தமாக இருந்தது. என்னை பார்க்க வேண்டி என் முகத்திலிருந்து போர்வையை அகற்றியதும், அவள் தன் பொம்மையை தரைப் பலகையில் போட்டு நொறுக்கினாள். அதன் எல்லா துண்டுகளும் பிறகு கிடைத்தது; என் அப்பா அவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒட்டினார், விரிசல்களில் பசை வழிவதை நீக்குவதற்காக அதன் மேற்பரப்பை தன் கைக்குட்டையால் துடைத்தார். பசை காய்ந்து பழுப்பு நிறமானது, அல்ல அது வெள்ளையாகக் காய்ந்து பின் நாட்பட அது பழுப்பு நிறமாய் மாறியிருக்காலாம். அப்பொம்மை எங்கள் படுக்கையறையில் பீரோவின் மேல் அமர்ந்திருந்தது. அதன் வட்ட முகமும் பழுப்பு விரிசல்களின் வலைப்பின்னலுக்கு பின்னால் இருக்கும் அதன் மென்னமைதிப் புன்னகையும், வெள்ளை இழையின் குறுக்கே பாந்தமாக மடங்கியிருக்கும் கைகளுமாக, பழையது புதியதின் திகிலூட்டும் கலவையாக அது இருந்தது.

நெமேஷியா அவளைப் பற்றிய ஒரு துயரச் சூழலை உருவாக்கி வைத்திருந்தாள், அது அவளே வளர்த்தெடுத்தது. மை பென்சிலால் தன் கண்களை கருமையாக்கிக் கொண்டாள். அவளின் செலவுக் காசில் அவள் பத்திரிக்கைகள் வாங்கி அதில் அவரும் ஊமைப் பட நடிகர்களின் புகைப்படங்களை எங்களின் அலங்கார மேஜை மீதிருக்கும் கண்ணாடியைச் சுற்றி குத்தி வைத்துவிடுவாள். அவள் எந்தத் திரைப்படத்தையும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை – குறைந்தபட்சம், எங்களை விட்டுச் சென்றது வரை இல்லை, ஏனென்றால் எங்களுக்கு அருகாமை சினிமா கொட்டகையே வெகு தொலைவில் இருக்கும் ஆல்பற்கர்க்கி நகரில் தான் உள்ளது. மேலும், என் பெற்றோர்கள் எந்த நிலையிலும் சினிமா ஒரு இளம் பெண் பார்க்க ஏற்றது என்று கருதியிருக்க மாட்டார்கள். இருப்பினும், மேரி ஃபிக்போர்டு மற்றும் கிரேட்டா கார்போவின் மேல் நோக்கிய விழிகளும் உதட்டுக் குவியல்களாலும் நெமேஷியா எங்களின் சிறிய படுக்கையறை கண்ணாடியை அலங்கரித்திருந்தாள்.

அப்போதிருந்த நெமேஷியாவை பற்றி நான் நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், அவள் சாப்பிடுவதைப் பற்றித்தான் யோசிப்பேன். என் பெரியம்மா மகள் கொடும் பசி கொண்டவள். அவளுக்கு பொருட்கள் வேண்டும், உணவும் வேண்டும். அவள் சிறு சிறு கடிகளாக எடுத்துக் கொள்வாள், பூனையைப் போல அத்தனையும் சுத்தமாக விழுங்கிவிடுவாள். அவள் எப்போதும் நிறைவடைந்ததேயில்லை, ஆனால் அத்தனை உணவும் அவள் வடிவத்தில் வெளிப்பட்டதும் இல்லை.

அவள் ஒன்றன்பின் ஒன்றாக உணவுகளை தனக்குத் தானே பரிமாறிக் கொண்டேயிருக்கும்போது அவள் ஜோக்குகள் சொல்வாள், அப்போதுதான் அவள் எத்தனை டார்த்தியாக்கள் அல்லது எத்தனை கிண்ணங்கள் பச்சை மிளகாய் குழம்பு சாப்பிட்டாள் என்பதை கவனிக்காது விடுவோம். என்னுடைய அப்பவோ என் தம்பிகளோ மேஜையிலேயே அவளை கிண்டல் செய்தால் அவள் சீற்றம் கொண்டு சிவந்துவிடுவாள். என் அம்மா, அப்பாவை ‘உஷ்’ என்று அடக்கி, வளரும் பெண் அவள் என்று சொல்லுவார்.

இரவில் சரக்கு அறையிலிருந்து தின்பண்டங்களை திருடுவாள், கை நிறைய கொடி முந்திரிகள், பீஃப் ஜெர்கிகள், பன்றியிறைச்சி துண்டுகள். அவளின் இந்த கள்ளத்தனம் அநாவசியமற்றது; என் அம்மா அவள் நிறையும் வரை உவகையோடு அவளுக்கு உணவூட்டியிருப்பாள். ஆனால், காலையில் அனைத்தும் அதனதன் இடத்தில் இருக்கும், ச்சீஸை சுற்றி மெழுகுக் காகிதம் ஒழுங்காக மடிக்கப்பட்டிருக்கும், ஜாடிகள் மீது மூடிகள் அழுந்தி மூடியிருக்கும். அவள் திருட்டுகள் வெளியே தெரிவதில்லை, துண்டுகளாக்குவதிலும் வழித்துயெடுப்பதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவள்.  நான் விழித்து பார்க்கும்போது அவள் என் படுக்கையின் மீது முட்டிக்காலிட்டு அமர்ந்திருப்பாள், தேன் தடவிய டார்த்தியா என் உதடுகளின் மீது இருக்கும். “இந்தா”, அவள் முனுமுனுப்பாள், நானும் இரவுணவுக்குப் பின் வயிறு நிறைந்திருந்தாலும் விழிப்பற்று இருந்தாலும், ஒரு வாய் எடுத்துக் கொள்வேன், அவளின் குற்றத்தில் என் பங்கும் இருக்க வேண்டும் அவளுக்கு.

அவள் சாப்பிடுவதைப் பார்க்கையில் உணவின் மீது வெறுப்பு ஏற்பட்டது எனக்கு. உறுதியான சிறு சிறு கடிகள், அவள் தாடையின் அசைவுகள், உணவு அவள் தொண்டைக்குள் கீழிறங்கிச் செல்லும் முறை – அவள் உடல் அந்த அளவு அனுமதிக்கிறது என்று நினைக்கையில் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அவள் வாய் நிறைய எடுத்துக் கொள்ளும்போது காட்டும் நயமிக்க பாவனைகளும் நாகரீக பெண்ணைப் போன்ற தலை சாய்தலும் எப்படியோ என் எண்ணத்தை உறுதி செய்தது. ஆனால் நான் குறைந்த உணவு உட்கொண்டாளோ அல்ல என் உணவுத் தேவையை நிராகரித்தாளோ, அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. ஏனென்றால், நெமேஷியா என்னுடைய பங்கையும் சாப்பிட்டுவிடுவாள், எதுவும் எப்போதும் வீணாகியதே இல்லை.

நான் நெமேசியா மீது பயம் கொண்டிருந்தேன், காரணம் அவளின் மிகப் பெரிய ரகசியம் எனக்குத் தெரியும்: அவள் ஐந்து வயதாயிருக்கும்போது, அவள் அம்மாவை கோமாவில் தள்ளினாள், எங்கள் தாத்தாவை கொன்றாள்.

இது எனக்கு எப்படி தெரியுமென்றால் நாங்கள் ஒரு ஞாயிறு நிதானமாக விழித்தபடியே படுக்கையில் கிடந்தபோது அவளே சொன்னாள். மொத்த குடும்பமும் எங்கள் வீட்டிலேயே சாப்பிட்டார்கள், ஒவ்வொரு வாரமும் செய்வதைப் போல, பெரியவர்கள் முன்னறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது எனக்கு கேட்டது.

“நான் அவர்களை கொன்றேன்,” நெமேஷியா இருளுக்குள் சொன்னாள். ஏதோ ஒப்பிப்பதைப் போல சொன்னாள், முதலில் அவள் என்னிடம் தான் சொல்கிறாள் என்பதே எனக்கு தெரியவில்லை. “என் அம்மா செத்து போனாள். என்னால் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் செத்து போனாள். பிறகு திரும்ப வந்தாள், கிறிஸ்துவைப் போல, ஆனால் அதைவிட இது பெரும் அற்புதம். அவள் நீண்ட நாட்களாக செத்து போயிருந்தாள், வெறும் மூன்று நாட்கள் அல்ல.” அவள் குரல் உண்மைச் சம்பவத்தை சொல்வதாயிருந்தது.

“நம்ம தாத்தாவை ஏன் கொன்றாய்?” நான் கிசுகிசுப்பான குரலில் கேட்டேன்.

“எனக்கு ஞாபகம் இல்லை,” அவள் சொன்னாள். “நான் கோபமாக இருந்திருப்பேன்”.

நான் இருளுக்குள் அழுத்தமாக உற்று நோக்கினேன், பின் சிமிட்டினேன். கண்கள் மூடியிருந்தாலும் திறந்திருந்தாலும் இருள் ஒன்று போல இருந்தது. நெமேஷியா மூச்சு விடுவதை என்னால் கேட்க முடியவில்லை, பெரியவர்களின் தூரத்து குரல் மட்டும்தான் கேட்டது. நான் அறையில் தனியாக இருப்பதைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டது.

பிறகு நெமேஷியா பேசினாள், “ஆனாலும் நான் அதை எப்படி செய்தேன் என்று ஞாபகமில்லை”.

“நீ உன் அப்பாவையும் கொன்றாயா?” நான் கேட்டேன். முதல் முறையாக நான் இதுவரை கவனித்திராத என்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருந்தது என்பதை உணர்ந்தேன், ஆனால் அது இப்போது கரைந்துக் கொண்டிருந்தது.

“ஓ…இல்லை” நெமேஷியா என்னிடம் சொன்னாள். அவள் குரல் மீண்டும் தீர்க்கமாக இருந்தது. “நான் செய்ய வேண்டிய அவசியமேயில்லை, அவராகவே ஒடிப் போய்விட்டார்.”

அவளுடைய ஒரே தவறென்று அவள் சொன்னது அந்த அதிசயக் குழந்தையை அவள் கொல்லாமல் விட்டது. அந்த அதிசயக் குழந்தை அவளுடைய தம்பி, என் பெரியம்மா மகன் பேட்ரிக், என்னை விட மூன்று வயது பெரியவன். அவனொரு அதிசயம், ஏனென்றால், என் பெரியம்மா பெணிக்னா நீள் உறக்கத்திலிருந்தபோது கூட, உலகுக்கு பல வாரங்கள் உயிரற்றவளாயிருந்தாள், அவனுடைய உயிரணுக்கள் பெருகி அவனுடைய தோற்றம் உருக்கொண்டது. பெரியம்மாவின் வீணாகும் உடம்பிலும் சர்க்கரைத் தண்ணீரிலும் அவன் வலுப்பெற்றதாக நினைத்துக் கொண்டேன், அவன் உயிர் அவளுள் நிலைபெற்று ஒளிர்ந்தது. அவன் ஆழ்ந்த நீரமைதியில் புரண்டு திரும்பியதாக கற்பனை செய்துக் கொண்டேன்.

“அதைச் செய்யுமளவு நெருங்கிவிட்டேன்” கிட்டத்தட்ட பேரார்வத்துடன் சொன்னாள்.

குழந்தையாக இருக்கும் பேட்ரிக்கின் புகைப்படமொன்று பியானோவின் சட்டகத்தின் மீது நின்றிருக்கும். அவன் நான் இதுவரை நேரில் பார்த்திராத பெரியம்மா பெணிக்னாவிற்கும் அவரின் புதிய கனவருக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருப்பான், எல்லோரும் கலிஃபோர்னியாவில் வாழ்கிறார்கள். புகைப்படத்தில் இருக்கும் பேட்ரிக் கொழுத்த கன்னங்களோடும் புன்னகையற்றும் இருந்தான். 900 மைல்கள் தள்ளி வேரொரு வீட்டில் எங்களோடு அவன் அக்கா வாழ்வது அவன் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. நிச்சயமாக அவளின் இழப்பை உணர்ந்தவனில்லை.

“இதை நீ யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது,” நெமேஷியா சொன்னாள்

“நான் சொல்ல மாட்டேன்”, என்று சொன்னேன். பயமும் விசுவாசமும் என்னுள் பொங்கியெழுந்தது. எங்கள் படுக்கைக்கு இடையிலான இருளிடத்தை கைகளை நீட்டி தொட்டேன்.

அடுத்த நாள் இந்த உலகம் வித்தியாசமாகத் தெரிந்தது; நான் எதிர்கொண்ட அத்தனை பெரியவர்களும் வீழ்த்தப்பட்டுவிட்டார்கள் இப்போது, நெமேஷியாவின் ரகசியத்தால் பலவீனமாக்கப்பட்டு விட்டார்கள்.

அன்று மதியம் நான் கடைக்குச் சென்று பொருட்கள் விற்பனை மேடைக்குப் பின் இருக்கும் கலைந்து கிடந்த மேஜையில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த அம்மாவின் அருகில் சென்று நின்றுக் கொண்டேன். பென்சிலின் ஒரு முனையை தன் மேலுதட்டில் தட்டிக்கொண்டே கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

என் இதயம் படுவேகமாக துடித்தது, என் தொண்டை இறுக்கமானது. “பெரியம்மா பெணிக்னாவிற்கு என்ன ஆச்சு? உங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு?”.

அம்மா என்னை திரும்பிப் பார்த்தார். பென்சிலை கீழே வைத்தார், ஒரு கணம் அசைவற்று இருந்தார், பின்னர் தலையை குலுக்கி அத்தனையையும் தன்னிடமிருந்து தூர விலக்கி வைப்பதுபோல ஒரு பாவனை செய்தார்.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், நமக்கான அற்புதம் நமக்கு கிடைத்தது. அற்புதங்கள். பெணிக்னா உயிருடன் திரும்பி வந்தாள், அந்தக் குழந்தையும் உயிர் பெற்றது.” அவள் குரல் அழுத்தமாயிருந்தது. “ஆண்டவர் குறந்தபட்சம் நமக்கு அதையாவது அருளினார். அதற்காக அவருக்கு நான் என்றும் நன்றி சொல்லுவேன்.” அவர் நன்றியுடையவராக காணப்படவில்லை.

“ஆனால் என்ன நடந்தது?” என் கேள்வியின் வேகம் சற்று குறைந்திருந்தது இப்போது.

என் அம்மா மீண்டும் தலையை குலுக்கினார். “அதை மறந்துவிடுவது நல்லது என் ‘ஹிஜிட்டா’. அதைப் பற்றி யோசிக்க எனக்கு விருப்பமில்லை.”

நெமேஷியா என்னிடம் சொன்னது உண்மையென்று நான் நம்பினேன். என்னை குழம்பச் செய்தது எதுவென்றால், ஒருவரும் நெமேஷியாவை ஒரு கொலைகாரியைப் போல நடத்தவில்லை. மாறாக அவளை தனிச்சிறப்புடன் நன்றாக நடத்தினார்கள். அவள் செய்தது என்னவென்று அவர்களுக்கு தெரிந்திருக்குமா என்றே வியந்தேன். அவர்களை அவள் என்ன செய்துவிடுவாளோ என்று பயப்படுகிறார்களோ என்றும் யோசித்தேன். ஒருவேளை மொத்த நகரமும் அவளை காணும்போதெல்லாம் பேரச்சம் கொள்கிறதோ. நானும் நெமேஷியாவை கவனிக்கிறேன், பள்ளிக்கூட படிகளில், அவள் ஆசிரியரோடு பேசிக்கொண்டு போகையில், இரவுணவுக்கு முன் என் அம்மாவிற்கு உதவிகள் செய்யும்போதெல்லாம். எங்கேயுமே அவள் பிடி நழுவியதில்லை, ஆனாலும் சில சமயங்களில் பெரியவர்களின் முகத்தில் எச்சரிக்கை மினுங்குவதை நான் கண்டுகொண்டிருக்கிறேன், உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

மொத்த நகரமும் என்னை அறியாமையில் வைத்திருக்க ஒப்புக்கொண்டதைப் போல் தெரிந்தது, ஆனால் அவளை எதிர்த்து யாரவது வெளிப்படையாக பேசுவார்கள் என்றால் அது என்னுடைய பெரிய அத்தை பௌலிட்டாவாகத்தான் இருக்க முடியும் என்று நான் நினைத்தேன். அவர் நிச்சயம் கொலைக்கு எதிரானவர் தான். ஒரு நாள் மதியம் அவர் வீட்டில் நாங்கள் டார்த்தியாக்கள் செய்துக் கொண்டிருந்தபோது அவரிடம் கேட்டேன், கவனமாக நெமேஷியாவின் ரகசியத்தை காக்கும் என் சத்தியத்திற்கு துரோகம் இழைக்காதவாறு. “என்னுடைய தாத்தாவுக்கு என்ன ஆச்சு?” மாவை கிள்ளி உருண்டையாக்கி அவரிடம் கொடுத்தேன்.

“அது கற்பனைக்கே எட்டாத ஒன்று” பௌலிட்டா சொன்னார். அவர் மாவை சிறிது சிறிதாக நெக்கி மூர்க்காமாய் அழுத்தி தட்டையாக்கினார். அவர் மேலே சொல்வார் என்று நினைத்தேன், ஆனால் அவர் மீண்டும் “கற்பனைக்கு எட்டாத ஒன்று” என்று மட்டுமே சொன்னார்.

இருக்கலாம், ஆனால் ஒன்றைத் தவிர, நெமேஷியா ஒருவரை கொலை செய்வதை என்னால் கற்பனை செய்ய முடிந்தது. நரகம், பேய்கள், தீ நாக்குகள் – இத்தகைய பயங்கரங்களை என்னால் காட்சிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், நெமேஷியாவின் சீற்றம் – அது முழுமையாக நம்பக் கூடியது.

“ஆனால் என்னதான் ஆச்சு?”

பௌலிட்டா தட்டையாக்கிய மாவை திருப்பிப் போட்டார், மீண்டும் தேய்த்து, அடுப்பின் மேல் இரும்பு தட்டில் அதை அறைந்தார். அது கொப்புளித்து எழுந்தது. உருளை கட்டையை என்னை நோக்கி சுட்டினார். “மரியா, அந்த நாளிற்கு பிறகு நீ பிறந்ததிற்கு அதிர்ஷ்டம் செய்தவள். உன்னை அது தொடவில்லை. நாங்கள் யாரும் அதை எப்போதும் மறக்கப் போவதில்லை, ஆனால் உன்னையும், என் மகளே, இரட்டை தம்பிகளையும் தீண்டவில்லை.” அவர் அடுப்பின் முன் கதவை திறந்து இரும்பு ஊக்கியால் உள்ளிருந்த நெருப்பை தொந்தரவு செய்தார்.

நெமேஷியா ஐந்து வயதாயிருந்தபோது என்ன நடந்தது என்று யாருமே பேச மாட்டார்கள். நானும் சொற்ப காலத்தில் அதைப் பற்றி கேட்பதை நிறுத்திவிட்டேன். தூங்கும் முன் நெமேஷியா அவள் குற்றங்களைப் பற்றி மேலும் ஏதாவது சொல்வாள் என்று காத்திருப்பேன், ஆனால் மீண்டும் அதைக் குறிப்பிட்டு அவள் எதுவும் பேசியதேயில்லை.

இரவுகளில் என்னால் முடிந்தளவு நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருப்பேன், இருளில் எனக்கு பிறகு நெமேஷியா வருவதற்காக காத்துக் கொண்டு.

எந்த ஒரு புது பொருள் எனக்கு கிடைத்தாலும், அது எவ்வளவு உபயோகமற்ற ஒன்றாக இருந்தாலும், கவனிக்கத்தக்கதாக இல்லாமல் போனலும், நெமேஷியா அதை கெடுத்து வைத்து விடுவாள், மிகச் சிறியதாகவேனும்: பென்சில் கட்டையில் தன் விரல் நகத்தால் ஒரு சுரண்டல், ஆடையின் உள் முனையில் ஒரு கிழிசல், புத்தகத்தின் பக்கங்களை மடித்து கசக்குதல். ஒரு முறை புகார் செய்தேன், காற்றில் எம்பி குதிக்கும் என் புது தவளை பொம்மையை கற்படியில் நெமேஷியா மோதியுடைத்த போது. கீறல் விழுந்த தகர உடம்பை பார்க்க வேண்டி அத்தவளையை அம்மா மீது நெட்டி இடித்து காட்டினேன். என் அம்மா அப்பொம்மையை மீண்டும் என் உள்ளங்கையில் வைத்து மடித்து, தலையசைத்தார் ஏமாற்றத்துடன். “மற்ற குழந்தைகளைப் பற்றி நினைத்துப் பார்,” அவர் சொன்னார். எனக்கு தெரிந்த குழந்தைகளைப் பற்றித்தான் அவர் குறிப்பிடுகிறார், தாஹ்ஜிக்யூவிலிருக்கும் குழந்தைகள். “நிறைய குழந்தைகளிடம் இதைப் போன்ற அழகிய பொருட்கள் இருப்பதில்லை.”

நான் பலமுறை நெமேஷியாவின் பராமரிப்பில் விடப்படுவேன். நெமேஷியாவின் இவ்வுதவியால் என் அம்மா உவகையடைவார்; அவர் தன் கடையிலும் என் மூன்று வயது தம்பிகளாலும் ஓய்வு நேரமின்றி இருப்பார். நெமேஷியா எனக்கு தீங்கு விளைவிக்க விரும்புவாள் என்று என் அம்மா ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். என் அம்மா தன் குழந்தைகளின் பாதுகாப்பின் மீது கழுகுப்பார்வை வைத்திருந்தார் – பின்நாளில், நான் பதினைந்தாகியிருந்தபோது, என்னை நோக்கி விசிலடித்தார் என்பதால் வயதான பக்கத்து பண்ணையாள் ஒருவருக்கு தன் கடையில் பொருள் விற்க மறுத்தார் – ஆனால் நெமேஷியாவை நம்பினார். நெமேஷியா என் அம்மாவின் அக்காள் மகள், கிட்டதட்ட ஒரு அநாதை, என் அம்மாவின் முதல் குழந்தை.

என் பெரியம்மா மகள் தன் அன்பிலும் வெறுப்பிலும் மூர்க்கம் கொண்டவளாயிருந்தாள், சில சமயங்களில் என்னால் வித்தியாசம் கூற முடியாது. என்னை அறியாமலேயே அவளின் கோபத்தை நான் தூண்டுவதாக தோன்றியது. அவளின் உச்சகட்ட கோபத்தில் என் தோல் சிவந்தும் நீலம் பாயும் வரையிலும் என்னை அறைந்தும் கிள்ளியும் தாக்குவாள். சிலசமயம் அவள் கோபம் பல வாரங்களாகியும் நீளும், பின்பு அது நீண்ட மெளனமாக மாறி மறைந்து போகும்.  அவள் என்னை மன்னித்து விட்டாள் என்பதை எனக்கு அவள் கதைகள் சொல்லத் தொடங்கியதும் அறிந்துக்கொள்வேன். வறண்ட ஆறுகளை பீடித்துக் கொண்டு நெருங்கும் மரணமாய் காற்றைப் போல ஓலமிட்டுத் திரியும் ‘லா லோரோனா’ பற்றிய பேய்க் கதைகள், கொள்ளைக்காரர்களைப் பற்றியும் அவர்கள் இளம் பெண்களுக்கு செய்யும் கொடுமைகளைப் பற்றிய கதைகள், அதைவிட மோசம்… எங்கள் குடும்பக் கதைகள். பிறகு அவள் என்னைத் தாங்கி பிடித்து முத்தமிட்டுச் சொல்வாள், அவள் சொன்ன அத்தனையும், ஒவ்வொரு வார்த்தையும், உண்மை என்றாலும் நான் தீயவள்தான். இந்த வாழ்விற்கு தகுதியற்றவள்தான் என்றாலும் என்னை அவள் நேசிக்கிறாள் என்று.

அவளின் எல்லா கதைகளும் என்னை பயமுறுத்தியதில்லை. சிலது அற்புதமானவை – பல வாரங்களுக்கு விரிந்து பரவும் நுட்பமான வீரதிர கதைகள், எங்களைப் போன்ற வீடடை விட்டு வெளியேறிய இளம் பெண்களின் சாகசங்கள். அவளின் அத்தனை கதைகளும் எங்களுக்கு மட்டுமே உரித்தானவை. இரவுகளில் எனக்கு தலை பின்னி விடுவாள், பையன் எவராவது என்னை கிண்டல் செய்தால் திருப்பி கடுகடுப்பாள், நான் உயரமாக தெரியும்படி நடப்பது எப்படி என்று எனக்கு காட்டுவாள். “உன்னை கவனித்துக் கொள்ள நான் இருக்கிறேன் இங்கு ” என்னிடம் அவள் சொன்னாள். “அதற்காகவேதான் நான் இங்கு இருக்கிறேன்.”

அவளின் பதினான்காவது பிறந்த நாளிற்குப் பிறகு, நெமேஷியாவின் தோல், எண்ணெய் பசையுடன் சிவப்பாக மாறியது, சிறு கொப்புளங்களால் வீங்கியிருந்தது. பார்ப்பதற்கு மென்மையாக இருந்தது. என்னுடைய அடர்த்தியான புருவங்களையும் கோணலான பற்களையும் கண்டு சிரிக்கத் தொடங்கினாள், இதெல்லாம் நானே கவனிக்காத விஷயங்கள்.

ஒரு நாள் அவள் எங்கள் படுக்கையறக்குள் வந்து கண்ணாடியில் நீண்ட நேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கிருந்து நகர்ந்ததும் படுக்கையில் நான் அமர்ந்திருந்த இடத்திற்கு குறுக்காக வந்து அவள் நகத்தை என் வலது கன்னத்தை குத்தி அழுத்தினாள். நான் வலியில் குரலெழுப்பி தலையை வெட்டியிழுத்தேன்.  “ஷ்ஷ்…,” அவள் அன்பொழுகச் சொன்னாள். ஒரு கையால் அவள் என் தலைமுடியை சீராக தடவிக் கொடுத்தாள். தன் நகத்தை என் கன்னத்தினுள் இறக்கிக் கொண்டிருக்கையில் நான் மிருதுவாகிவிட்டதைப் போல் உணர்ந்தேன். கொஞ்சம்தான் வலித்தது, ஏழு வயதில் அழகைப் பற்றி நான் என்ன அக்கறை கொண்டிருக்கப் போகிறேன்? நெமேஷியாவின் முழங்கால்களுக்கிடையில் நான் கதகதப்பாக அமர்ந்திருக்க, அவள் கைகளில் என் முகம், அவள் கவனம் என் மீது மெதுவாக வெம்மையாக ஆனால் கடுகடுவென, என் கற்பனையில் அது ஒரு அலையென வீசிச் சென்றது.

ஒவ்வொரு இரவும் அவள் கால்களுக்கிடையில் நான் அமர்ந்திருக்க அவள் என் காயத்தை மீண்டும் மீண்டும் பிரித்து திறந்துவிடுவாள். ஒரு நாள் இதை வைத்து ஒரு விளையாட்டை உருவாக்குவாள், நான் ஒரு கடற்கொள்ளையனைப் போல உள்ளேன் என்பாள். மற்றொரு நாள் நான் பாவம் செய்தவள் என்றும் அதனால் என் மீது இப்படி முத்திரை இடுவது அவளின் கடமை என்றும் சொல்வாள். தினமும் அவளும் என் அம்மாவும் ஒருவருக்கொருவர் எதிராக வேலை பார்த்தனர், என் அம்மா ஒவ்வொரு காலையும் தழும்பின் மீது புண்ணாற்றும் மருந்தை தடவுவார், நெமேஷியா தன் நகங்களால் ஒவ்வொரு இரவும் புண்ணை எளிதாக திறந்து வைப்பாள். “உனக்கு ஏன் இது இன்னும் ஆறவில்லை, என் ‘ஹிஜிட்டா’?”, என் அம்மா எனக்கு பச்சை பூண்டு உண்ணக் கொடுத்துக் கொண்டே ஆச்சரியப்பட்டார். நான் ஏன் அவரிடம் சொல்லவில்லை? எனக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் நான் நெமேஷியாவின் கதைகளுக்குள் இழுக்கப்படவேண்டிய தேவையிருந்தது என்று நினைக்கிறேன்.

இறுதியாக நெமேஷியாவிற்கு ஆர்வம் தொலைந்து என் கன்னம் குணமடைய விட்டபோது, அத்தழும்பு என் மூக்கின் ஒரு பக்கமிருந்து உதடு வரை நீண்டிருந்தது. பார்ப்பதற்கு நான் எதிலோ அதிருப்தியுற்றவள் போலிருந்தேன், குளிர்காலத்தில் அது ஊதா நிறத்திற்கு மாறியது.

நெமேஷியா 16 வயதான போது என்னை தனியாக விட்டுவிட்டாள். இது இயல்புதான், அவள் அதிக நேரத்தை அவளுக்கெனவும் அவள் வயதை ஒத்த பெண்களுக்காவும் செலவிடுவாள் என்று அம்மா சொன்னார். இரவுணவின் போது அவள் என் பெற்றோர்களுடன் வேடிக்கைப் பேச்சுகளை தொடர்ந்தாள், அத்தைகளுடனும் மாமாக்களுடனும் சதா பேசிக் கொண்டே இருந்தாள். ஆனால் அந்த விசித்திரமான ஆத்திரமும் ரகசிய தாக்குதல்களும் – என் மீது குவிந்திருந்த அவளின் அத்தனை கவனமும் – சுத்தமாக நின்றுபோனது. என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டாள், ஆனால் ஆசுவாசம் அடைவதற்கு பதிலாக நான் வெறுமையாக உணர்ந்தேன்.

எங்களின் பழைய நெருக்கத்திற்குள் நெமேஷியாவை மீண்டும் இழுத்து வர முயற்சி செய்தேன். அவளுக்கு கேரமல்கள் வாங்கி வந்தேன், சர்ச்சில் முழங்கையால் அவளை விளையாட்டாக முட்டினேன், ஏதோ நாங்கள் ரகசிய கேலிப் பேச்சு ஒன்றை பகிர்ந்து கொண்டவர்களைப் போல. ஒரு நாள் பள்ளியில் அவள் பெரிய பெண்களுடன் நின்றுக் கொண்டிருந்த இடத்திற்கு ஓடினேன். எல்லா இடங்களிலும் அவளை நான் தேடிக் கொண்டிருந்ததைப் போல “நெமேஷியா!” என்று உரக்கக் கத்தி அவள் கையை பிடித்தேன். அவள் என்னை தூர தள்ளவோ அல்ல நொடித்து விலகவோ இல்லை, வெறுமென யாரோ போல புன்னகைத்து அவள் நண்பர்கள் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

நாங்கள் இப்போது அறையை பகிர்ந்துக் கொண்டோம், ஆனால் அவள் மிகத் தாமதமாக படுக்கைக்கு வருவாள். அவள் எனக்கு கதைகள் சொல்வதில்லை, என் தலைமுடியை கோதி விடுவதில்லை, பள்ளிக்கு என்னுடன் நடந்து வருவதில்லை. நெமேஷியா என்னை பார்ப்பதை நிறுத்தி விட்டாள், அவள் பார்வையின்றி எனக்கு நானே தெளிவற்றவள் ஆனேன். படுக்கையில், என் மேலிருக்கும் போர்வையை நான் உணரத் தவறும் வரை, இருளில் நான் உடலற்று போகும் வரை அசையாமல் அவளுக்காக காத்திருப்பேன். இறுதியில் நெமேஷியா உள்ளே வருவாள், அவள் வந்ததும் நான் பேச முடியாமல் ஆவேன்.

என் தோல் வண்ணமிழந்திருந்தது, என் உடல் அதன் எடையிழந்திருந்தது, மே மாதத்தின் ஒரு நாள் காலை பள்ளியறையின் ஜன்னல் வழியே வயதான மிஸஸ். ரோமெரோ, அவர் போர்வை அவரைச் சுற்றி சிறகுகளைப் போல அசைய தெருவில் நடந்து வருவதை பார்க்கும் அந்நாள் வரையில். என் ஆசிரியர் என் பெயரை அழைத்தபோது, நான் என் உடலுக்குள் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன், திடமாக என் மேஜையில் அமர்ந்துக் கொண்டிருந்தேன். சட்டென முடிவு செய்தேன்: கார்ப்பஸ் கிறிஸ்டி ஊர்வலத்தை நான் தான் முன்னின்று நடத்தப் போகிறேன். நான் சிறகுகளை அணிந்துக் கொள்வேன், அனைவரும் என்னையே பார்ப்பார்கள்.

சிறு பிராயத்திலிருந்தே என் அம்மாவின் விருப்பத்திற்குரிய விழா நாளாக இருந்தது கார்பஸ் கிறிஸ்டி, ஒவ்வொரு கோடைக் காலத்திலும் அவர் மற்ற பெண்களுடன் அழுக்கடைந்த தெருக்களில் ரோஜா இதழ்களை தூவியபடி நடந்து போவார். ஒவ்வொரு வருடமும் என் அம்மா எனக்கும் நெமேஷியாவிற்கும் வெள்ளை ஆடை அணிவித்து, எங்கள் பின்னலை ரிப்பன்களால் முடிச்சிட்டு தலையை சுற்றி சிறிய கிரீடத்தை சூட்டுவார்.  நான் எப்போதும் நேசித்த சடங்கு அது; பக்திப்பூர்வமான பவனி, பட்டுக் குஞ்சம் போர்த்திய விதானத்தின் கிழே பாதிரியார் உயரே ஏந்திய தங்கப் பெட்டியில் இருக்கும் புனிதமான திருச்சின்னம், வழி நெடுக ஆல்தாரைகளில் நிகழ்த்தப்படும் பிரார்த்தனைகள். இப்போது அப்பவனியை முன்னின்று வழிநடத்துவது மட்டுமே என் சிந்தனையில் நிலைத்து நின்றது.

என் அம்மாவின் அல்தாரை அவளின் பெருமிதம். ஒவ்வொரு வருடமும் தெருவில் எங்கள் வீட்டின் முன்னே அட்டை மேசை ஒன்றை அமைப்பாள். அதன் மீது பின்னலிடப்பட்ட சரிகைத் துணியின் நடுவே தூய இருதயம் நின்றிருக்கும், பக்கவாட்டில் மெழுகுவர்த்திகளும் கண்ணாடி ஜாடியில் மலர்களும் அதை சூழ்ந்திருக்கும்.

ஊர்வலத்தை தலைமை தாங்கும் பெண் யார் என்பது உறுதி செய்யப்பட வேண்டும், அது அவள் தோத்திரங்கள் ஒப்பிப்பதை வைத்து தேர்வு செய்யப்பபடும். எனக்கு பத்து வயது, நான் தேர்வான முதல் வருடமும் அதுதான். ஒப்புவித்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாட்களில் நான் அப்போட்டியைப் பற்றிய விவரங்களை சேகரித்தேன். நகரின் வெளியே இருக்கும் பண்ணைகளிலிருந்து வரும் பெண்கள் தான் அதிகம்.  அவர்களுக்கு நன்கு படித்த மனப்பாடம் செய்வதற்கு உதவக்கூடிய பெற்றோர்களோ உடன் பிறந்தவளோ இருந்தாலும் கூட அவர்களால் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். என் அத்தை மகள் அந்தோணியா மட்டும் தான் உண்மையான அச்சுறுத்தல்; முந்தைய வருட ஊர்வலத்தை அவள்தான் வழிநடத்தினாள், எப்போதும் போல் மிக அழகாக அதை கையாண்டாள், ஆனால் அவள் சுலபமான தோத்திரங்களையே ஒப்புவிப்பாள். நெமேஷியாவிற்கு வயது அதிகம், எப்படியும் அவள் இதிலெல்லாம் ஆர்வம் காட்டியதேயில்லை.

நான் சங்கீதம்: 37 என்று முடிவு செய்தேன், அதை என் அம்மாவின் ‘மன்னா’வை மூடியிருந்த அட்டைப் பலகையின் மீதிருந்த அதன் கவர்ச்சியான நீண்ட வாக்கிய அமைப்பிற்காகவும் அதிலிருந்த கடினமான வார்த்தைகளுக்காவும் தேர்வு செய்திருந்தேன்.

நான் பேரார்வத்துடன் பயிற்சி செய்தேன், குளியல் தொட்டியில், பள்ளிக்கு நடந்து போகையில், இரவில் படுக்கையில். நான் ஒட்டுமொத்த நகரத்தின் முன்னிலையிலும் என் ஒப்புவித்தலை நிகழ்த்துவேன் என்றவாறு கற்பனை செய்தேன். பாதிரியார் கார்சியா திருப்பலி கூட்டத்தின் இறுதியில், மக்கள் அங்கிருந்து கலைந்து செருமிக்கொண்டும் தங்கள் தொப்பிகளை சேகரித்து அங்கும் இங்கும் நகரும் முன்னர், தன் கைகளை உயர்த்தி சொல்வார், “பொறுங்கள். நீங்கள் கேட்க வேண்டியது மேலும் ஒன்று உள்ளது.” எனக்கு முன்னாள் ஒன்றிரண்டு பெண்கள் செல்வார்கள், தங்கள் சங்கீதங்களை சொல்ல முடியாமல் தடுமாறுவார்கள் (அவை மிகச் சிறியவை, குறிப்பிடத்தக்கவை கூட அல்ல). பிறகு நான் நளினமாக நடந்து வந்து தேவாலயத்தின் முன் நிற்பேன், அங்கே அல்தாரின் முன்னே, சொற்றிரம் மிக்கு பேசுவேன், மக்கள் அதை பிற்பாடு “தெய்வீகம்” என்று வர்ணிப்பார்கள். என் சங்கீதத்தை என் அம்மாவிற்காக அர்ப்பணிப்பேன். திருக்கோயிலின் சூழிருக்கையிலிருந்து என் அம்மா என்னை பார்ப்பதை நான் பார்ப்பேன், அவள் கண்கள் கண்ணீராலும் பெருமிதத்தாலும் நிறைந்திருக்கும்.

ஆனால் என் கற்பனைக்கு மாறாக மனப்பாடப் போட்டி, திருப்பலிக் கூட்டம் தொடங்கும் முன்னால் ஞாயிறு பள்ளியின் போது நடைபெற்றது.  ஒன்றன் பின் ஒருவராக எங்கள் வகுப்பு மாணவர்களின் முன் ஆசிரியை மிஸஸ். ரேயஸ் போலவே நின்றோம், அவர் எங்கள் வார்த்தைகளை பைபிளில் பின்தொடர்ந்தார். சென்ற வருடம் சொன்ன அதே சங்கீதத்தையே அந்தோனியா மீண்டும் ஒப்புவித்தாள். என் முறை வந்தபோது நான் ஒரு வாக்கியத்தில் தடுமாறினேன், “என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப் போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.”  நான் மற்ற பிள்ளைகளுடன் சென்று அமர்ந்தபோது என் கண்களில் கண்ணீர் முட்டியது. இது எதுவும் தேவையில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

விழா ஊர்வலத்திற்கு ஒரு வாரம் முன்னால், என் அம்மா என்னை பள்ளிக்கு வெளியே வந்து சந்தித்தார். பகல் வேளைகளில் மிக அரிதாகத்தான் கடையை விட்டோ என் இளைய தம்பிகளை விட்டோ வெளியே வருவார், அதனாலேயே ஏதோ முக்கியமான விஷயம் என்று எனக்கு புலப்பட்டது.

“மரியா, மிஸஸ். ரேயஸ் இன்று நம் கடைக்கு வந்திருந்தார்.” என்று சொன்னார் அம்மா. அவள் முகத்தை வைத்து செய்தி நல்லதா கெட்டதா அல்ல அது என்னைப் பற்றியதுதானா என்று எதையுமே என்னால் சொல்ல முடியவில்லை. அவர் தன் கையை என் தோள் மீது போட்டு என்னை வீட்டிற்கு நடத்திச் சென்றார்.

அவர் கைகளின் கீழே நான் விரைப்பாய், காத்திருப்பில், என் கண்களை தூசு படிந்த என் காலணியின் பாத முனைகளில் குத்திட்டு நடந்தேன். இறுதியாக, என் அம்மா என் பக்கம் திரும்பி என்னை கட்டியணைத்தார்.  “நீ சாதித்துவிட்டாய், மரியா.”

அன்றிரவு நாங்கள் கொண்டாடினோம். அம்மா கடையிலிருந்து ‘ஜிஞ்சர் அல்’ பாட்டில்களை கொண்டு வந்திருந்தார், அதை அனைவருடனும் மேஜையை சுற்றியனுப்பி பகிர்ந்துக் கொண்டோம். என் அப்பா அவருடைய கோப்பையை உயர்த்தி எனக்காக என்று சொல்லி குடித்தார். நெமேஷியா என் கைகளைப் பற்றி அழுத்தினாள்.

நாங்கள் இரவுணவை முடிக்கும் முன்னரே, அம்மா எழுந்து கூடத்தை சுட்டி அவரை பின்தொடர்ந்து வருமாறு சைகை காட்டினார். அவருடைய படுக்கையறையில் அவர் அலமாரியிலிருந்து பெட்டியை கீழே இறக்கி சிறகுகளை வெளியே எடுத்தார். “இதோ,” அவர் சொன்னார், “இதை உடுத்திப் பார்ப்போம்.” அவர் ரிப்பன்களை என் கட்டம் போட்ட ஆடையின் மீதே வைத்து கைகளை சுற்றி கட்டினார், என் குடும்பம் அமர்ந்திருந்த இடத்திற்கு என்னை மீண்டும் அழைத்துச் சென்றார்.

சிறகுகள் இலகுவாக இருந்தது, வாசற்படியை அவை உரசி தேய்த்தது. நான் நடக்கையில், நிஜ தேவதையின் சிறகுகளை நான் கற்பனை செய்தது போலவே அவை மிக லேசாக அசைந்து நகர்ந்தது.

“திரும்பிக் காட்டு,” என் அப்பா சொன்னார். என் தம்பிகள் அவர்கள் நாற்காலியிலிருந்து நழுவி என் அருகே வந்தனர். என் அம்மா அவர்கள் கைகளை பிடித்துக் கொண்டார். “எண்ணெய் பிசுக்கான உங்கள் கைகளை அச்சிறகுகள் மீது வைத்து விடாதீர்கள்.”  நான் என் குடும்பத்தினருக்காக சுற்றி சுழன்று காண்பித்தேன், என் தம்பிகள் கை தட்டினார்கள். நெமேஷியா புன்னகைத்து அடுத்த சுற்று உணவை அவளே பரிமாறிக் கொண்டாள்.

அன்றிரவு நெமேஷியா நான் படுக்கையறைக்குச் சென்ற அதே நேரம் அவளும் வந்தாள். நாங்கள் இரவு அங்கிக்கு மாறியபோது அவள் சொன்னாள், “அவர்கள் வேறு வழியில்லாமல் உன்னை தேர்ந்தெடுத்தார்கள், தெரியுமா உனக்கு?”

நான் அவள் பக்கம் திரும்பினேன் ஆச்சரியத்துடன். “அது உண்மையில்லை,” என்று சொன்னேன்.

“உண்மைதான்,” அவள் சாதாரணமாக சொன்னாள். “யோசித்துப் பார். சென்ற வருடம் அந்தோனியா, அதற்கு முந்தைய வருடம் கிறிஸ்டினா கார்சியா. எப்போதுமே ஆல்தாரை சமூகத்தின் மகள்களைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.” எனக்கு இதற்கு முன் இப்படி தோன்றவில்லை, அவள் சொன்னது சரிதான். நான் இதை எதிர்த்து வாதிட விரும்பினேன், அனால் அதற்கு பதிலாக அழத் தொடங்கினேன். அவள் முன்னால் அழுததற்காக என்னை நானே வெறுத்தேன், நெமேஷியாவையும் வெறுத்தேன். நான் என் படுக்கையில் ஏறி திரும்பிப் படுத்து தூங்கிப் போனேன்.

சிலநேரம் கழித்து இருளில் முழித்துக் கொண்டேன். நெமேஷியா படுக்கையில் என் பக்கத்தில் இருந்தாள், அவளின் சூடான முச்சுக் காற்று என் முகத்தின் மீது பட்டது. அவள் என் தலையை தட்டி கிசுகிசுத்தாள், “என்னை மன்னித்துவிடு, என்னை மன்னித்துவிடு என்னை மன்னித்துவிடு.” அவளின் கை விச்சு கனமாக மாறியது. அவள் மூச்சு சீறலாகவும் சூடாகவும் இருந்தது. “நான்தான் அற்புதக் குழந்தை. அவர்கள் ஒருபோதும் அதை அறிந்துக் கொள்ளவில்லை. நான்தான் அற்புதக் குழந்தை, காரணம் நான் மட்டும்தான் பிழைத்திருக்கிறேன்.”

நான் அசைவற்று படுத்திருந்தேன். அவள் கரங்கள் என் தலையை இருக்கமாகச் சுற்றியிருந்தது, என் முகம் அவள் மார்பெலும்பின் மீது அழுந்தியிருந்தது. அவள் சொன்னதில் சிலவற்றை என்னால் கேட்கமுடியவில்லை, நாள் உள்ளிழுத்த காற்று நெமேஷியாவின் சுவை கொண்டிருந்தது. மெல்லிய மார்பின் வழியே என் மண்டைக்குள் ஊடுருவிய அதிர்வுகளின் மூலமாகத்தான் அவள் அழுதுக் கொண்டிருக்கிறாள் என்று இறுதியாக உணர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் என்னை விடுவித்து என் தலையணையின் மீது என்னை ஒரு பொம்மையை போல பொருத்தினாள். “சரி இப்போது,” என்று சொல்லி, போர்வையின் மீது என் கைகளை ஒழுங்கு செய்தாள். ” தூங்கச் செல்.” என் கண்களை மூடி கீழ்படிய முயன்றேன்.

கார்பஸ் கிறிஸ்ட்டியின் முந்தைய நாள் மதியத்தை என் தம்பிகள் தோட்டத்தில் விளையாடுவதை பார்த்தபடி கழித்தேன், என் அம்மா அவரின் அல்தாரையை தயார் செய்துக் கொண்டிருந்தார். அவர்கள் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். மற்ற நேரமென்றால் நான் அவர்களுக்கு உதவியிருப்பேன், ஆனால் நாளை கார்பஸ் கிறிஸ்ட்டி. பலமான காற்று வீச்சும் வெப்பமாகவும் இருந்தது, என் கண்கள் உலர்ந்து போனது. இரவுக்குள் இக்காற்று நின்றுவிடும் என்று நம்பினேன். என் சிறகுகள் மீது தூசு படிவத்தை நான் விரும்பவில்லை.

நெமேஷியா தாழ்வாரத்திற்குள் நுழைவதைப் பார்த்தேன். அவள் கண்களுக்கு நிழல் தந்து ஒரு நொடி அசையாமல் நின்றாள். தோட்டத்தின் ஒரு மூலையில் நாங்கள் குவிந்து இருப்பதைக் கண்டதும், எங்களை நோக்கி வந்தாள், அவள் காலடிகள் நீண்டு பெரியவர்களைப் போன்று இருந்தது.

“மரியா. நாளை நான் உன்னுடன் ஊர்வலத்தில் நடந்து வரப் போகிறேன். உனக்கு உதவப் போகிறேன்.”

“எனக்கு எந்த உதவியும் தேவையில்லை,” நான் சொன்னேன்.

நெமேஷியா இது அவள் கைகளை மீறியது என்பதைப் போல புன்னகைத்தாள். “நல்லது.” அவள் தோள்களை குலுக்கினாள்.

“ஆனால் நான்தான் வழி நடத்துகிறேன்,” நான் சொன்னேன். “மிஸஸ். ரேயஸ் என்னைத்தான் தேர்ந்தெடுத்தார்.”

“உன் அம்மா நான் உனக்கு உதவ வேண்டுமென்று சொன்னார், ஒருவேளை நான் சிறகுகளை அணிந்துக் கொள்ள வேண்டியிருக்கலாம் என்றும் சொன்னார்.”

நான் எழுந்து நின்றேன். நான் நிற்கையில் கூட அவள் தோள் உயரத்திற்கே வந்தேன். கதவு சடாரென திறப்பதை கேட்டேன், என் அம்மா தாழ்வாரத்தில் இருந்தார். வேகமாக அடியெடுத்து எங்களிடம் வந்தார், முகம் கவலையுற்றிருந்தது.

“அம்மா, எனக்கு உதவி தேவையில்லை. அவளிடம் மிஸஸ். ரேயஸ் என்னைத்தான் தேர்ந்தெடுத்தார் என்று சொல்லுங்கள்.”

“உனக்கு வரும் வருடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று சிந்தித்தேன்.” என் அம்மாவின் குரல் மன்றாடும் தொனியில் இருந்தது. “நெமேஷியா அடுத்த வருடம் இதற்கு தகுதியான வயதை தாண்டியிருப்பாள்.”

“ஆனால் நான் மீண்டும் இதைப்போல சிறப்பாக மணப்பாடம் செய்ய முடியாமல் போகலாம்!” என் குரல் உயர்ந்தது. “இதுதான் என்னுடைய ஒரே வாய்ப்பாக இருக்கவும் கூடும்.”

என் அம்மவின் முகம் சற்று பிரகாசமானது. “மரியா, நிச்சயம் நீ மீண்டும் சிறப்பாக மனனம் செய்வாய். இந்த ஒரு வருடம் மட்டும்தான். நீ மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாய், நான் உறுதியளிக்கிறேன்.”

என்னால் எதுவும் சொல்லமுடியவில்லை. என்ன நடந்திருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது: நெமேஷியா சிறகுகளை அணிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டாள், என் அம்மாவும் அவளை அனுமதிப்பது என்று தீர்மானித்து விட்டார். நெமேஷியா, தன் வெள்ளை உடையில் உயரே நின்று, சிறகுகள் அவளை சுற்றி சட்டகம் அமைக்க, இந்நகரத்திற்கு தலைமை தாங்குவாள். அவளை பிந்தொடர்ந்து ஒடுங்கியும் சீற்றத்துடனும் அருவருக்கத்தக்கவளாகவும் நான் நடந்து வருவேன். நெமேஷியாவிற்கு பிறகாக, அடுத்த வருடம் எனக்கு இது வேண்டாம். எனக்கு வேறு எப்போதுமே இது வேண்டாம்.

நெமேஷியா அவள் கைகளை என் தோளின் மீது போட்டாள். “புனிதமான திருச்சின்னம்தான் இதில் முக்கியம், மரியா. நீ அல்ல.” அவள் மென்மையாகப் பேசினாள். “மேலும், நீதான் இப்பவும் முன்னிற்கப் போகிறாய். நான் வெறுமென உன்னுடன் இருக்கப் போகிறேன். ஒரு உதவியாக.”

“ஹிஜிட்டா, கவனி – “

“எனக்கு உன்னுடைய உதவி வேண்டாம்,” நான் சொன்னேன். நான் ஒரு மிருகத்தைப் போல இருண்டும் கொடுஞ்சீற்றத்துடனும் இருந்தேன்.

“மரியா – “

நெமேஷியா தலையை அசைத்து சோகப் புன்னகை புரிந்தாள். “அதற்காகதான் நான் இங்கே இருக்கிறேன்,” அவள் சொன்னாள். “நான் வாழ்வதே உனக்கு உதவி செய்ய முடியும் என்பதால் தான்.” அவள் முகம் சாந்தமாகவும் ஒருவிதமான புனிதத்தன்மை அதில் உறைந்தும் இருந்தது.

வெறுப்பு என்னுள் பிரவாகமெடுத்தது. “அப்படி இல்லாமல் போயிருக்கலாம் என்று இப்போது விரும்புகிறேன்,” நான் சொன்னேன். “நீ வாழ்ந்திருக்கவே கூடாது என்று விரும்புகிறேன். இது உன்னுடைய வீடு கிடையாது. நீ ஒரு கொலைகாரி.” நான் என் அம்மாவிடம் திரும்பினேன். நான் இப்போது வேகமாக அழத் தொடங்கினேன், என் வார்த்தைகள் சீற்றத்துடனும் தடுமாறியும் வந்தது. “அவள் நம்மை கொலை செய்யப் பார்க்கிறாள். உங்களுக்கு தெரியவில்லையா? அவளைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் இறந்து போகிறார்கள். அவளை ஏன் நீங்கள் தண்டிப்பதேயில்லை?”

என் அம்மாவின் முகம் வெளிறியது, சட்டென நான் பயந்து போனேன். நெமேஷியா ஒரு நொடி அசைவற்று நின்றாள், பிறகு அவள் முகம் இறுகியதும் வீட்டிற்குள் ஓடினாள்.

அதற்குப் பிறகு எல்லாம் வேகமாக நடந்து முடிந்தது. என் அம்மா சத்தம் போடவில்லை, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் அம்மா என் அறைக்குள் ஒரு பயணப் பையுடன் வந்தார் உடல் நலிவுற்ற உறவினரை சந்திக்கப் போய் அவர் வீட்டில் தங்க நேரும் போது அவர் உபயோகப்படுத்தும் பை அது. என் சோகத்தை சற்று அதிகமாக வெளித் தெரியும்படி மொளனமாக முகத்தை வைத்துக் கொண்டேன். அவரின் அமைதி என்னை பயமுறுத்தியது. என் பீரோவின் அலமாரியை திறந்து என் பொருட்களை பைக்குள் அடுக்கினார், மூன்று ஆடைகள், என் அனைத்து கால்சட்டைகளும் உள்ளாடைகளும். அவர் என்னுடய ஞாயிறு காலணிகளையும் கூட போட்டார், என் மயிர்க்குச்சு, படுக்கையில் எனக்கருகில் இருக்கும் புத்தகம் என நீண்ட நாட்களுக்கு நான் போய்விடுவதற்கு தேவையான அத்தனை பொருட்களும் எடுத்துக் கொண்டார்.

என் அப்பா உள்ளே வந்து என் பக்கத்தில் கட்டிலில் அமர்ந்தார். அவர் பணி உடுப்பில் இருந்தார், அவரின் காற்சட்டை நிலத்தின் தூசி நிறைந்திருந்தது.

“நீ சிறிய காலத்திற்கு பொளிட்டாவுடன் தங்கியிருக்கப் போகிறாய்,” என்று சொன்னார்.

நான் சொன்னது பயங்கரமானதுதான் என்று எனக்கு தெரியும், ஆனால் அவர்கள் என்னை இங்கிருந்து அகற்றி விடுவார்கள் என்று நான் ஊகிக்கவில்லை. இருந்தும் நான் அழவில்லை, என் அம்மா நான் பிறந்த நாள் முதல் உபயோகப்படுத்தும் சிறிய கம்பளியை மடித்து பயணப்பையின் மேற்பரப்பில் வைத்து மூடிய போது கூட.  அவர் அத்தனையையும் கொக்கியிட்டு இழுத்து மூடினார்.

என் அம்மாவின் தலை அப்பையின் மீது கவிந்திருந்தது, ஒரு நொடி நான் அவரை அழ வைத்து விட்டேன் என்றே எண்ணினேன், ஆனால் அவர் முகத்தை பார்க்க நான் துணிந்து முயன்ற போது அவர் அழுதார் என்று என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை.

“நீண்ட நாட்களுக்கு அல்ல,” என் அப்பா சொன்னார். “பௌலிட்டா வீட்டிற்குதானே. இதே வீடுதான் என்று சொல்லும்படியாக அவ்வளவு பக்கம்.” அவர் தன் கைகளை நீண்ட நேரத்திற்கு கூர்ந்து பார்த்தார், நானும் அவர் நகங்களுக்கடியில் ஒட்டியிருந்த பிறை வடிவிலான மண் துகல்களை பார்த்துக் கொண்டிருந்தேன். இறுதியாக சொன்னார், “உன் பெரியம்மா மகள் மிகக் கடினமான வாழ்க்கை வாழ்ந்தவள். அதை நீ புரிந்துக் கொள்ள வேண்டும்.”

“வா மரியா,” என் அம்மா கனிவாக அழைத்தார்.

நெமேஷியா வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்தாள், அவள் கைகள் மடிந்து அவள் மடியின் மீது அசையாமல் இருந்தது. அவள் கண்களை சுருக்கியோ அல்ல தன் நாக்கை வெளியே நீட்டியோ காட்டுவாள் என்று விரும்பினேன், ஆனால் நான் கடந்து போவதை பார்க்க மட்டும் செய்தாள். என் அம்மா கதவைத் திறந்து பிடித்திருந்தார், நாங்கள் வெளியேறியதும் எங்களுக்கு பின்னால் அதை அடைத்தார். அவர் என் கைகளை பிடித்துக் கொண்டார், நாங்கள் இருவரும் ஒன்றாக தெருவில் இறங்கி தூசி நிறைந்த கொத்துச் செடிகளின் தோட்டம் இருந்த பொளிட்டாவின் வீட்டிற்கு நடந்தோம்.

என் அம்மா கதைவை தட்டினார், பிறகு உள்ளே நுழைந்து என்னை சமையலறைக்குள் ஓடிப் போகச் சொன்னார்.  அவள் கிசுகிசுப்பதை கேட்டேன். பெளலிட்டா ஒரு கணம் உள்ளே வந்து எனக்கு பால் ஊற்றி வைத்து சில குக்கீகளையும் தந்துவிட்டு மீண்டும் வெளியே சென்றார்.

நான் சாப்பிடவில்லை. நான் கவனிக்க முயன்றேன், ஆனால் என்னால் எந்த வார்த்தையையும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பெளலிட்டா உச்சு கொட்டுவதைக் கேட்டேன். எவராவது வருந்தத்தக்க வகையில் ஏதேனும் செய்தால் அவர் இப்படித்தான் ஒலி எழுப்புவார், சார்லி பாடில்லா தன் பாட்டியிடமிருந்து திருடிவிட்டாள் என்று கண்டுபிடித்தபோது செய்ததைப் போல.

என் அம்மா சமையலறைக்குள் வந்தார். என் மணிக்கட்டை தட்டினார். “இது கொஞ்ச நாட்களுக்குத்தான், மரியா.” என் தலை மீது முத்தமிட்டார்.

பெளலிட்டா முன் கதவை அடைத்து சாத்துவது முதலில் கேட்டது, பிறகு சமையலறையை நோக்கி அவர் நிதானமாக எடுத்து வைத்த காலடிச் சத்தம் கேட்டது. எனக்கு எதிரே அவர் அமர்ந்து ஒரு குக்கியை எடுத்தார்.

“நீ இங்கு வந்ததும் நல்லதுக்குதான். உன்னை அவ்வளவாக பார்க்க முடிவதேயில்லை.”

அடுத்த நாள் நான் திருப்பலிக் கூட்டத்திற்கு செல்லவில்லை. எனக்கு உடல் நலமில்லை என்று சொன்னேன், என் நெற்றியை பெளலிட்டாவும் தொட்டுப் பார்த்தார் ஆனால் என்னுடன் முரண்படவில்லை. நான் கட்டிலிலேயே படுத்து கிடந்தேன், கண்கள் வறண்டிருந்தது, மூடிக்கொண்டேன். நகர் பவனி வெளியே வீட்டை கடந்து செல்கையில் எனக்கு மணிச் சத்தமும் இசை ஓதும் சத்தமும் கேட்டது. அந்தோணியாதான் ஊர்வலத்தை முன்னின்று வழிநடத்தினாள், நெமேஷியா பெரியவர்களுடன் நடந்தாள்; சில நாட்கள் கழித்து பெளலிட்டாவிடம் கேட்டுதான் இதை அறிந்துக் கொண்டேன். நெமேஷியாவே முன்னிற்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டாளா இல்லை அவள் அனுமதிக்கப்படவில்லையா என்று தெரியாமல் வியந்தேன், ஆனால் என்னால் அதை கேட்டறியும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள முடியவில்லை.

நான் பெளலிட்டாவுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அவர் என்னை செல்லம் கொடுத்து கெடுத்தார், இனிப்புகள் உண்ணக் கொடுப்பார், இரவில் வெகு நேரம் அவருடன் விழித்திருக்க வைப்பார். ஒவ்வொரு இரவும் அவர் தன் பாதங்களை வீங்கிவிடாமல் தடுப்பதற்காக தூக்கி சாய்வு நாற்காலியின் கையிறுத்தியின் மீது வைத்து, நிறைந்த விஸ்கி குடுவையை தன் வயிற்றின் மீது அசையாமல் நிறுத்தி, அவர் முகவாயிலிருக்கும் விறைப்பான நரைத்த சிறு மயிர்களை தடவியபடியே எனக்கு கதைகளை சொல்வார்: அவர் சிறுமியாக இருந்தபோது தாஹ்ஜிக்யூ பற்றியும், தூங்காமல் திருட்டுத்தனமாக வெளியேறி இரவுக் கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்ட நாட்களை பற்றியும்.  நான் பெளலிட்டாவை நேசித்தேன், என் மீதான அவரின் கவனத்தை மகிழ்வுடன் அனுபவித்தேன், ஆனால் நான் சிரித்துக் கொண்டிருக்கையில் கூட என் பெற்றோர் மீதான கோபம் எனக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

என் அம்மா அவ்வப்போது வந்தார், என்னிடம் பேச முயற்சித்தார் ஆனால் அவர் அங்கிருக்கும் போதெல்லாம் பெளலிட்டா வீட்டின் இயல்பான சூழல் தேங்கி நின்றுவிடும். திரும்பத் திரும்ப என்னை அவருடைய கடைக்கு வந்து அவரை சந்திக்க வேண்டுமென வற்புறுத்தினார், நான் ஒருமுறை செல்லவும் செய்தேன். ஆனால் அமைதியாகவே இருந்தேன், அவரின் அத்தனை சமாதானங்களையும் அலட்சியப்படுத்தி அங்கிருந்து வெளியேறவே விரும்பினேன்.

“ஹிஜிட்டா,” அவர் சொன்னார், மிட்டாய் ஒன்றை விற்பனை மேடை மீது வைத்து என் பக்கமாகத் தள்ளினார்.

அவர் என்னைத் தழுவிய போது விறைத்து நின்றேன், மிட்டாயை அங்கேயே விட்டுச் சென்றேன். என் அம்மா என்னை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டாள் அதை தடுப்பதற்கு என் அப்பா எதுவும் செய்யவில்லை. அவர்களை நெமேஷியாவை தெரிவு செய்தார்கள்…. சொந்த மகளை விடுத்து நெமேஷியாவை தெரிவு செய்தார்கள்.

நெமேஷியாவும் நானும் பள்ளியில் ஒருவரையொருவர் பார்த்தோம் ஆனால் பேசிக் கொள்ளவில்லை. வீட்டில் நிகழ்ந்த மாற்றங்களெல்லாம் எங்கள் ஆசிரியைக்குத் தெரிந்தே இருந்தது போலும், எங்களை பிரித்தே வைத்திருந்தார். இந்தக் காலங்களில் அனைவரும் என்னுடன் கனிவுடனே நடந்துக் கொண்டார்கள், ஒரு விசித்திரமான, பரிதாபம் நிறைந்த கனிவு. நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்று அவர்களுக்கு தெரியுமென்று நினைத்தேன், எனக்கு வேறு கதியில்லை என்றும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். சாலையில் என்னை நானே சந்தித்துக் கொண்டால் நான் கூட என்னிடம் கனிவாகவே நடந்துக் கொண்டிருப்பேன் என்றும் நினைத்தேன்.

ஞாயிறுகளில் குடும்பத்தினர் அனைவரும் வழக்கம் போல் என் அம்மாவின் வீட்டில் இரவுணவின் போது கூடினர். அம் மாதங்களில் அப்படித்தான் நான் யோசிக்கத் தொடங்கினேன்: என் அம்மாவின் வீடு. என் அம்மா என்னை அனைத்துக் கொண்டார், அப்பா என்னை முத்தமிட்டார், நான் என்னுடைய பழைய இருக்கையிலேயே அமர்வேன், ஆனால் முடிவில் பெளலிட்டாவுடன் அனுப்பப்படுவேன். நெமேஷியா முன்பை விட தற்போது இதை தன் வீடென உணர்வதாகப் பட்டது. அவள் சிரித்தாள், கதைகள் சொன்னாள், ஒரு வாய் உணவை முழுங்கிய பின்னரே அடுத்ததை நேர்த்தியாக எடுத்தாள். அவள் கொஞ்சம் வயதேறியவள் போல் காணப்பட்டாள், அதிக வசீகரமாகவும். அவள் என்னிடம் பேசவும் இல்லை என்னை பார்க்கவும் இல்லை. எல்லோரும் பேசினார்கள் சிரித்தார்கள் ஆனால் நான் மட்டுமே ஒரு கொலையாளியுடன் அமர்ந்து உணவருந்துகிறோம் என்பதை நினைவு கொண்டவளாகத் தெரிந்தேன்.

“நெமேஷியா நன்றாக இருக்கிறாள்,” நாங்கள் வீட்டிற்கு ஒரு நாள் திரும்பி நடக்கையில் பெளலிட்டா சொன்னார்.

நான் பதில் சொல்லவில்லை, அவரும் நாங்கள் உள்ளே சென்று கதவை அடைத்து சாத்தியது வரை எதுவும் பேசவில்லை.

“ஒரு நாள் நீங்கள் மீண்டும் நண்பர்களாக இருப்பீர்கள், மரியா. நீங்கள் இருவரும் சகோதரிகள்.” விளக்கை ஏற்றும்போது அவர் கைகள் லேசாக நடுங்கியது.

என்னால் இதை இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது. “இல்லை,” நான் சொன்னேன். “நாங்கள் எப்போதும் இனி நண்பர்களாக இருக்கவே முடியாது. நாங்கள் சகோதரிகள் இல்லை. அவள் தான் கொலைகாரி. ஆனால் வெளியே துரத்தப்பட்டவளோ நான். உங்கள் சகோதரரை கொலை செய்தது யாரென்றாவது உங்களுக்கு தெரியுமா?” நான் எதிர்த்து கேட்டேன். “நெமேஷியா. அவள் தன்னுடைய அம்மாவை கூட கொன்றுவிட முயன்றாள். ஏன் இது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை?”

“உட்கார்,” கண்டிப்பான குரலில் பெளலிட்டா என்னிடம் சொன்னார். இதற்கு முன் என்னிடம் அவர் இத்தொனியில் பேசியதில்லை. “முதலில், நீ வெளியே துரத்தப்படவில்லை. நீ இங்கிருந்து உன் அம்மாவை உரக்கச் சத்தம் போட்டே அழைக்கலாம். அப்புறம், கடவுளே…, நெமேஷியா கொலைகாரி அல்ல. இந்தப் பொய்யை எங்கிருந்து நீ பிடித்துக் கொண்டாய் என்று தெரியவில்லை.

அவர் நாற்காலிக்குள் தாழ்ந்து தளர்ந்து அமர்ந்துக் கொண்டார்.  மீண்டும் பேசத் தொடங்கியபோது, அவர் குரல் சமநிலையில் இருந்தது, அவரின் முதிய கண்கள் வெளிறிய பழுப்பு நிறத்திலும், நிர்க்கசிந்தும் இருந்தது. “உன்னுடைய தாத்தா உன் அம்மாவிற்கும் பெனிக்னாவிற்கும் ஆளுக்கு 50 ஏக்கர் நிலம் கொடுக்க முடிவு செய்தார். பெளலிட்டா நெற்றியின் மீது கைவைத்து மெதுவாக மூச்சு விட்டார். “கடவுளே, வெகு காலத்திற்கு முன் நடந்தது இது. ஒரு நாள் காலையில் உன்னுடைய தாத்தா பத்திரங்களைப் பற்றி பெனிக்னாவுடன் பேசுவதற்காக வந்தார். அவர் தெருவில்தான் வந்துக் கொண்டிருந்தார், கதவருகில் கூட இல்லை, அவருக்கே அப்போது கூச்சல் சத்தம் கேட்டது. பெனிக்னாவின் அழுகை அவ்வளவு சத்தமாக இருந்தது. அவளுடைய கணவன் அவளை அடித்துக் கொண்டிருந்தான். பெளலிட்டா அமைதியானார். மேஜையின் மீது அவர் விரல் பட்டைகளை அழுத்தினார்.

சதையின் மீது ஓங்கி குத்தியத்தைப் போன்ற சத்தத்தை கற்பனை செய்தேன். கிட்டத்தட்ட அதை என்னால் கேட்கவும் முடிந்தது. விளக்குச் சுடர் அலைந்தலைந்து அதன் ஒளி பெளலிட்டாவின் சமையற் தரையின் வழவழப்பான அகண்ட பலகைகளின் மேலாக நிலையின்றி தள்ளாடிக் கொண்டிருந்தது.

“அப்படி நடப்பது அது முதன் முறையல்ல ஆனால் அதனிடையில் உன்னுடைய தாத்தா நுழைவது அதுவே முதல் முறை. ஆகவே அவர் பெனிக்னாவின் கணவனை கொல்லத் தயாராக ஆவேசத்துடன் கதவை தள்ளி திறந்தார். அங்கே ஒரு சண்டை நடந்திருக்கக் கூடும், ஆனால் பெனிக்னாவின் கணவன் குடி போதையிலிருந்தான், உன் தாத்தாவிற்கும் சண்டையிடும் வாலிபம் இல்லை. பெனிக்னாவின் கணவன் அடுப்பிற்கு அருகில் இருந்திருக்க வேண்டும், பக்கத்தில் இரும்புத் தீக்கோலும். அவர்களை கண்டபோது – ” பெளலிட்டாவின் குரல் தட்டையானது. ” அவர்களை கண்டபோது, உன்னுடைய தாத்தா இறந்து கிடந்தார். பெனிக்னா சுய நினைவின்றி தரையில் கிடந்தாள். ஒரு மரப்பெட்டிக்குப் பின்னால் நெமேஷியாவை கண்டெடுத்தார்கள். அத்தனையையும் அவள் நேரில் பார்த்திருக்கிறாள். அவளுக்கு ஐந்து வயது.

அந்தக் கொடூரக் களத்தினுள் நுழைந்து இம்மிருகச் செயலை முதலில் பார்த்தது யாராக இருக்கும் என்று யோசித்தேன்.  நிச்சயமாக எனக்கு தெரிந்த யாரோ ஒருவர்தான், சர்ச்சிலோ அல்ல தபால் நிலையத்தின் வெளியிலோ நான் கடந்து வந்த யாரோ ஒருவர்தான். என் குடும்பத்தினரில் யாரோ ஒருவராகக் கூட இருக்கலாம். பெளலிட்டாவாகவும் இருக்கலாம். “நெமேஷியாவின் அப்பா?”

“அவர் அங்கே மண்டியிட்டு பெனிக்னாவின்விடம் அழுதுக் கொண்டிருந்தான். “ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஐ லவ் யூ” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.

எப்படி எனக்கு இது தோன்றவேயில்லை, ஐந்து வயதில், ஒரு வளர்ந்த ஆணையும் பெண்ணையும் ஒரே நேரத்தில் தாக்குவதற்கு இயலாத மிகச் சிறுமியாகவல்லவா இருந்திருப்பாள் நெமேஷியா என்று. நான் எப்படி இவ்வளவு முட்டாளாக இருந்தேன்.

பெளலிட்டா என்னிடம் சொன்னதின் அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா என்று பள்ளியில் கூர்ந்து நோக்கினேன், ஆனால் நெமேஷியா அப்படியேதான் இருந்தாள்: வசீகரத்துடனும், எங்கிருந்தோ எழும் உரத்த சிரிப்புடனும்.  நான் அவளை நம்பியதற்காக அவமானமடைந்தேன், என் அனுதாபத்தினால் அவள் ஈடேற்றிக் கொண்ட காரியங்களுக்காக வன்மம் கொண்டேன். வெறுப்பும் குற்றவுணர்ச்சியும் பரிதாபமும் என்னை நெருக்கி திணறடித்தது. முன்பை விட நான் அவளை இப்போது மேலும் வெறுத்தேன், ஒரு காலத்தில் அச்சமுற்ற குழந்தையாக இருந்தவள் அவள், வேறு எவருக்கும் நேர்ந்திராத சோகம் தன்னுடையது என்றும் சொல்லிக்கொள்பவள். எதுவாக இருந்தாலும் அவற்றில் சிறந்ததை மட்டுமே தனதாகக் கொள்பவள் நெமேஷியா.

கார்பஸ் கிறிஸ்ட்டி முடிந்த மூன்றாவது மாதத்தில் நெமேஷியா கலிஃபோர்னியாவிற்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.  லாஸ் ஏஞ்சலீஸில் என்னுடைய பெரியம்மா பழைய சாமான்களை வாங்கி வைத்து ஒரு சிறு தையலறையை படுக்கையறையாக மாற்றியிருந்தார். அவர் நெமேஷியாவை தன் கணவருக்கும் அந்த அற்புதக் குழந்தைக்கும் அறிமுகம் செய்து வைத்தார். வீட்டின் முன் முற்றத்தில் ஒரு பனை மரம் இருந்தது, இளஞ் சிவப்பு சாயம் பூசிய சரளைக் கற்களாலான நடைபாதையிருந்தது. இது எல்லாம் என் அம்மாவிற்கு அவள் அனுப்பிய கடிதத்திலிருந்து தெரிந்துக் கொண்டேன், அதில் பகட்டாக “நோர்மா”என்று கையொப்பமிட்டிருந்தாள்.

நான் என்னுடைய அம்மாவின் வீட்டிற்கு, எனக்கே எனக்கான அறைக்கும் திரும்பினேன். நான் பையை அவிழ்த்து என் பொருட்களை தற்போது காலியாக இருக்கும் அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கையில் அம்மா நடுவறையில் நின்றுக் கொண்டிருந்தார். தொலைந்து போனவராக காணப்பட்டார்.

“நீ இல்லாத குறை கொண்டிருந்தோம்.”  ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி சொன்னார். அதற்குப் பிறகு, “பெற்றோரை விட்டு பிள்ளை விலகி இருப்பது சரியல்ல. நீ எங்களை விட்டு விலகியிருந்தது சரியானதல்ல.”

நான் எதுவும் சொல்லவில்லை, இங்கிருந்து நான் இழுத்துக் கொண்டு செல்லப்பட்டு பெளலிட்டாவின் கதவருகில் தள்ளப்பட்டேன் என்று அவரிடம் சொல்ல நினைத்தேன். “இங்கே கவனி.” பிறகு நிறுத்தி தலையை அசைத்தார். “ஆஹ் சரி விடு” மூச்சை உள்ளிழுத்து சொன்னார். என் உள்ளாடைகளை அலமாரியில் ஒன்றன் மீது ஒன்றாக வைத்தேன். நான் என் அம்மாவை பார்க்கவில்லை. ஒரு சமரசப் பேச்சு, கண்ணீர், தழுவல்கள் என் நான் கற்பனை செய்த எதுவும் அவரிடமிருந்து வரவில்லை, அதனால் நான் அவருக்கு எதிராக கடினமாக நடந்துக் கொண்டேன்.

நெமேஷியா விட்டுச் சென்ற வெற்றிடத்தை எங்கள் குடும்பம் சீக்கிரமே கடந்து நகர்ந்துச் சென்றது. இவ்வளவு சீக்கிரம் என்பதால் அவள் எங்களுக்கு எவ்வகையிலாவது முக்கியமானவளாக இருந்தாளா என்றே சந்தேகிக்கத் தொடங்கினேன்.

நெமேஷியாவின் வாழ்க்கை என் மனதில் வெகு கவர்ச்சியான – அழகும் சோகமும் நிறைந்த ஒரு அநாதையின் கதை. அதை எனக்கான என் வாழ்க்கையாகவே கற்பனை செய்துக் கொண்டேன். இரவிரவாக அக்கதையை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்: நான் ஒயிலானவள், கலிஃபோர்னியாவிற்கு அடித்துச் செல்லப்பட்டேன், அங்கே என்னை கண்டடையும் ஒரு ஆண்மகன், என் துயரங்களிலிருந்து என்னை விடுவிப்பான். இந்நகரம், ரகசியம் பேசும் பரந்த புற்களின் நடுவே உறங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஓநாய்களின் அழைப்பு, நெமேஷியாவின் கதை என் உடலை உணர்வுப் பெருக்கில் தகிக்கச் செய்தது.

நெமேஷியாவின் திருமணத்திற்குச் சென்றோம், என் குடும்பமும் நானும்.  நாங்கள் நியூ மெக்சிகோவையும் அரிஸோனாவையும் கடந்து லாஸ் ஏஞ்சலீஸுக்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டோம், பின்னிருக்கையில் நான் இரண்டு தம்பிகளுக்கு நடுவில். பல வருடங்களாக நான் நெமேஷியாவை என் மனத்திரையில் இப்படியாக படம்பிடித்திருந்தேன் – ஒரு பத்திரிக்கைக்கான படப்பிடிப்பில் அவள் கடற்கரையோரமாக ஓடிக்கொண்டிருக்கிறாள், சலனமற்ற நீல நீச்சல் குளத்தருகே நீண்ட சாய்விருக்கையில் உடல் நீட்டி படுத்திருக்கிறாள்.  என்னுள்ளே உறைந்துவிட்ட கனவுரு இவை. ஆனால் மொஹாவே பாலைவனத்தை கடந்ததும் நான் நடுங்கத் தொடங்கினேன் – நான் அவளை அடையாளங் காணமாட்டேன் என்றும் அவள் என்னை மறந்துவிட்டிருப்பாள் என்றும். நான் கற்பனை செய்ததைப் போல அவள் வாழ்க்கை அவ்வளவு அழகானதில்லையென்றும் இறுதியாக அவள் தண்டிக்கப்பட்டாள் என்றும் நம்பத் தொடங்கியிருப்பதை உணர்ந்தேன்.

நாங்கள் அச்சிறிய வீடு வரை ஒட்டிச் சென்று நிறுத்தியதும், வெற்றுக் கால்களால் நெமேஷியா ஓடி வந்து காரிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் ஒவ்வொருவரையும் கட்டியணைத்தாள்.

“மரியா!” அவள் சத்தமாக அழைத்தாள், புன்னகையோடு, என் இரு கன்னங்களையும் முத்தமிட்டாள். அந்த வாரம் முழுதும் கலைந்துவிடாத வெட்கத்தில் நான் வீழ்ந்தேன்.

“நெமேஷியா, ‘கேரின்யோ’,” என் அம்மா சொன்னார். பின்னால் ஒரு அடி நகர்ந்து சந்தோஷத்துடன் அவளைப் பார்த்தார்.

“நார்மா,” அவள் சொன்னாள். “என் பெயர் நார்மா.”

அவள் எப்படி மொத்தமாக மாறியிருந்தாள் என்பது அசாதாரணமானது. அவள் தலை முடி பொன்னிறத்திலிருந்தது, அவள் தோல் பதமான கருநிறத்தில் சமமாக இருந்தது.

என் அம்மா மெதுவாக தலையசைத்து திரும்பிச் சொன்னார், “நார்மா”

நான் பார்த்ததிலேயே மிக அழகான விஷயம் அந்தத் திருமணம், நான் பொறாமையில் உழன்றேன், எனக்கும் திருமணம் நடக்குமென்ற புரிதல் எனக்கு இருந்திருக்காது அப்போது. மற்ற அனைத்தையும் போலவே லாஸ் ஏஞ்ஜலீஸில் சர்ச்சும் மிகப் பெரியது, நவீனமானது. மர இருக்கைகள் மங்கிய நிறத்தில் மென்மையாக இருந்தது, சிலுவை உள்ளூர ஒளிர்ந்தது. நெமேஷியாவிற்கு இங்கிருக்கும் பாதிரியாரை தெரியாது என்று ஒப்புக் கொண்டாள், மிக அரிதாகத்தான் அவள் இப்போதெல்லாம் சர்ச்சுக்கே போகிறாள், பின்னாட்களில் நானும் கூட சர்ச்சுக்கு செல்வதை நிறுத்திக் கொள்வேன் என்றாலும், அப்போது இதை அவள் சொல்லக் கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

என் பெரியம்மாவின் வீட்டில் அவர்கள் ஸ்பானிஷ் பேசுவதில்லை. என் அம்மாவோ அப்பாவோ ஸ்பானிஷில் ஏதேனும் கேட்டால், என் பெரியம்மாவும் அவர் பிள்ளைகளும் ஆங்கிலத்திலேயே தயக்கமின்றி பதில் சொன்னார்கள். அந்த வாரம் என் பெற்றோர்களால் நான் சங்கடத்திற்குள்ளானேன், அவர்கள் கொச்சையாக ஆங்கிலம் பேசிய விதம் அவர்களை குழம்பியவர்களாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் காட்டியது.

திருமணத்திற்கு முந்தைய நாள், நெமேஷியா என்னை அவள் தோழியுடன் கடற்கரைக்கு அழைத்தாள். என்னால் வர முடியாது என்று சொன்னேன் – எனக்கு அப்போது 15 வயது, அவர்களைவிட இளையவள், என்னிடம் நீச்சல் உடையும் இல்லை.

“நிச்சயமாக நீ வர வேண்டும். நீ என்னுடைய தங்கை.” நெமேஷியா கலைந்திருந்த அவளுடைய அலமாரியை திறந்து ஒரு சிடுக்கலான நீல உடையை என்னிடம் சுண்டியெறிந்தாள். நான் அவள் படுக்கையறையிலேயே மாற்றிக் கொண்டு, அவளின் பளபளப்பான இளஞ் சிவப்பு படுக்கையின் எதிரே நீண்டிருக்கும் ஒரு முழு உயர கண்ணாடியின் பக்கம் திரும்பி கவர்ச்சிப் படம் போல போஸ் கொடுத்தது என் நினைவில் இருக்கிறது. நான் வயதேறியவளாகவும் இச்சை தூண்டும் உடல் கொண்டவளாகவும் உணர்ந்தேன். அங்கே, நெமேஷியாவின் படுக்கையறையில், நீச்சல் உடையில் என் உருவம் எனக்கே பிடித்திருந்தது. ஆனால் கடற்கரையில் என்னுடைய தைரியம் என்னை விட்டு போனது. யாரோ எங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தார்கள், வெயிலேறிய உடம்புடன் புன்னகைக்கும் ஒரு மனிதனுடன் நாங்கள் நிற்கும் படம். அது இன்னும் என்னிடம் இருக்கிறது. நெமேஷியாவும் அவள் தோழியும் மிக இயல்பாக தெரிந்தார்கள் அவ்வுடையில், கைகளை அம்மனிதனின் கழுத்தைச் சுற்றி போட்டிருந்தார்கள்.  அந்த மனிதன் – யார் அது? எப்படி எங்கள் புகைப்படத்திற்குள் அவர் வந்தார்? – அவருடைய கரம் நெமேஷியாவின் சிறிய இடுப்பை வளைத்திருந்தது.  நான் அவளுக்குப் பக்கத்தில், என் கைகள் அவள் தோலின் மீது, ஆனால் ஏதோ அவளை தொடுவதற்கு பயந்தவள் போல நின்றுக்கொண்டிருந்தேன். அவள் என்னிடமிருந்து விலகி அம்மனிதனின் பக்கமாக சாய்கிறாள், வெள்ளையாகவும் பெரிதாகவும் ஒரு புன்னகையுடன். என்னுடைய தழும்பு என் கன்னத்தில் சாம்பல் ஒட்டியிருப்பதைப் போல இருந்தது. உதடுகள் மூடி நான் புன்னகைத்தேன், என் மற்றொரு கரம் என் மார்பின் முன் மடிந்திருந்தது.

என் அம்மா இறக்கும் வரை, நெமேஷியாவின் திருமணப் படத்தை தன் படுக்கைக்கு அருகே வைத்திருந்தார்: நெமேஷியாவும் அவள் கணவரும் புகைப்படக்காரருக்கு முன்னால் மரங்களடர்ந்த பின்னணியில் கைகளை பிணைத்து, ஒருவருக்கொருவர் முகம் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தனர். நெமேஷியா என்னிடம் கொடுத்த புகைப்படம், அது காற்று அலையாத கூடத்தில் எடுத்த தரத்திலிருந்தது, அதில் நெமேஷியா மட்டும், ஏதோ படிகளில் அவளின் நீண்ட அங்கியை அவளைச் சுற்றி அமைத்து நின்றிருந்தாள். அவள் பாதி திரும்பி, புன்னகையின்றி, என்னால் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பாவத்தை முகத்தில் அணிந்திருந்தாள். சிந்தனையுற்றவளாகவும் இல்லை, கல்லாகி உறையவும் இல்லை, பெருமை காட்டவும் இல்லை. அவள் பாவணை மகிழ்ச்சியற்று இல்லை, ஆனால் முழு முற்றாக அல்லாத ஒரு வெறுமை.

அவள் லாஸ் ஏஞ்சலீஸிற்கு சென்றபோது, நெமேஷியா எங்கள் நிலைப் பேழையின் மீதிருந்த பொம்மையை எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் ஆல்பகர்க்கிக்கு மாறிய போது அதுவும் எங்களுடனேயே வந்தது; நாங்கள் அதை நெமேஷியாவின் குழந்தைகளுக்காக பாதுகாத்தோம் என்று நினைக்கிறேன், ஆனால் அதை நாங்கள் வெளியில் சத்தமாக சொன்னதில்லை. பின்னால், என் அம்மா 1981ல் மறைந்த போது, நான் அதை அவர் வீட்டிலிருந்து கொண்டு வந்தேன், அங்கே பல வருடங்களாக நிலைப் பேழையின் மீது என் அம்மா வைத்திருந்தார். ஐந்து நாட்களுக்கு எங்கள் அடுக்ககத்தில் மேஜையின் மீதுதான் அது இருந்தது, நான் நெமேஷியாவை அழைத்து அவள் அதை திரும்பவும் எடுத்துக் கொள்ளவிரும்புகிறாளா என்று கேட்டதற்கு முன்பு வரை.

“நீ எதை பற்றி பேசுகிறாய் என்று தெரியவில்லை.” அவள் சொன்னாள். “நான் பொம்மையே வைத்துக் கொண்டது கிடையாது.”

“உடைந்துபோன ஒன்று, நியாபகமிருக்கிறதா?” என் குரல் நம்ப முடியாமல் மேலெழுந்தது. அவள் அதை மறப்பதற்கு சாத்தியமே இல்லையென்று பட்டது எனக்கு. வருடக்கணக்காக ஒவ்வொரு இரவும் நாங்கள் தூக்கத்தில் ஆழ்வதற்கு முன்னால் படுக்கையில் எங்களைப் பார்த்தபடி எங்கள் அறையிலேயே அது அமர்ந்திருந்தது, கோபம் கொழுந்துவிட்டு கிளர்ந்தது – அவள் பொய் சொல்கிறாள், அது பொய்யாகத்தான் இருக்க முடியும் – பிறகு, அணைந்தது.

நான் அப்பொம்மையின் மஞ்சள் ஆடை விளிம்பை தொட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நெமேஷியா அவளும் அவர் கணவரும் பனாமா கால்வாய் வழியாக மேற்கொள்ளப் போகும் கப்பல் பயணத்தை பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். “பத்து நாட்கள்,” அவள் சொன்னாள், “அதற்குப் பிறகு நாங்கள் புவர்ட்டோ ரிக்கோ வில் மூன்று நாட்கள் தங்கப் போகிறோம். இது ஒரு புதுக் கப்பல், சூதாடுமிடமும், நீச்சல் குளங்களும், நடன அரங்கங்களும் கொண்டது. விருந்தினர்களுக்கு ராஜ உபசாரம் செய்வார்கள் என்று கேள்விப்பட்டேன்.” அவள் பேசிக் கொண்டிருக்கையில், என் விரல்களை அப்பொம்மையின் தலையிலிருந்த விரிசல்களின் முகட்டில் ஓட்டிக் கொண்டிருந்தேன். அவள் குரலின் ஓசையை வைத்து, அவளுக்கு வயது ஏறவேயில்லை என்று என்னால் கற்பனை செய்துக் கொள்ள முடிந்தது, நானும் என் மொத்த வாழ்க்கையையும் நெமேஷியாவின் கதைகளை கேட்டே கழித்ததைப் போலத் தெரிந்தது.

“சரி பொம்மையை பற்றி என்ன சொல்கிறாய்?” அழைப்பை துண்டிக்கும் நேரம் நெருங்கியதும் நான் கேட்டேன். “நான் அதை உனக்கு அனுப்பி வைக்க விரும்புகிறாயா?”

“என்னால் அது எப்படி இருக்குமென்று கற்பனை செய்யக் கூட முடியவில்லை,” அவள் சொல்லி சிரித்தாள். “உனக்கு என்ன விருப்பமோ அதையே செய். என் வீட்டைச் சுற்றி பழைய பொருட்கள் கிடப்பதை நான் விரும்பவில்லை.”

நான் அதை என்னை புண்படுத்தச் சொன்னதாகவே எடுத்துக் கொள்ள விழைந்தேன், அவள் என்னை மறுக்கிறாள், நாங்கள் பகிர்ந்துக் கொண்ட தாஹ்ஜிக்யூவின் எங்களின் சென்ற காலங்களை மறுக்கிறாள் என்றே நினைக்க ஆசைப்பட்டேன். அவள் கதைகளை நான் ஞாபகம் வைத்திருக்குமாறு என்னை விட்டுவிட்டு எவ்வளவு எளிதாக நெமேஷியா அத்தனை வருடங்களையும் அவளிலிருந்து விலகி விழுந்துவிட அனுமதித்துவிட்டாள் என்பதற்காகவே நான் மீண்டும் என்னுடைய பழைய பொறாமைக்குள் நழுவிச் சென்றுவிட எத்தனித்ததேன். ஆனால் அவள் என்னைப் பற்றி எதுவுமே சிந்திப்பதில்லை என்று தெரிந்துக் கொள்ளும் வயதை அப்போது அடைந்திருந்தேன்.

நெமேஷியா தன வாழ்வின் மிச்ச காலத்தை லாஸ் ஏஞ்ஜலீஸில் கழித்தாள். நான் சேமித்து வைத்திருந்த விடுமுறைக்கு காலங்கள் ஒன்றில் போகைன்வில்லா சூழ்ந்திருந்த ஒரு தாழ்ந்த வீட்டில் அவளை சந்தித்தேன். அவள் உலகின் அத்தனை பொம்மைகளையும் வாட்டர் ஃபோர்டில் தயாராகும் பளிங்குப் பொருட்களையும் சேமித்து வைத்திருந்தாள், அவற்றை அவள் ஒரு கண்ணாடி பெட்டியில் காட்சிக்கு வைத்திருந்தாள். அவள் என்னை உணவு மேஜையில் அமர வைத்து ஒவ்வொரு பொம்மைகளாக வெளியே எடுத்தாள். “ஹாலந்து ” என்று சொல்லி எனக்கு முன்னால் வைத்தாள். “இத்தாலி. கிரேக்கம்”. அவள் சிறுமியாக இருந்தபோது நேரில் காண நேர்ந்தவற்றின் அறிகுறிகள் ஏதாவது அவள் முகத்தில் தென்படுகிறதா என்று பார்க்க முயன்றேன், ஆனால் அதில் ஒன்றுமேயில்லை.

நெமேஷியா ஒரு மதுக் கோப்பையை ஜன்னல் பக்கமாக தூக்கிப் பிடித்தாள். “பார், எவ்வளவு தெளிவு?” ஒளி துகல்கள் அவள் முகத்தின் மீது படர்ந்து சென்றது.

கீற்ஸ்ட்டின் வால்டேஸ் குவேட்

தமிழில் : நரேன்


கீற்ஸ்ட்டின்வால்டேஸ் குவேட் மெக்ஸிகோவை தனது பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க எழுத்தாளர். 2009 லிருந்து எழுதத் தொடங்கிய இவர் இதுவரை ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். நெமேஷியா என்ற இந்தச் சிறுகதைக்காக 2013ம் ஆண்டின் ‘நர்ரேட்டிவ்’ சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்றார். தன்னுடைய சிறுகதைகளில் தற்போது அமெரிக்கக் குடியரசின் ஒரு அங்கமான ‘நியூ மெக்சிகோ’ நிலத்தின் வரலாறை தொட்டு பேசுகிறார். பண்டைய ஸ்பானிய பண்பாட்டின் சரடுகள் நவீனக் கலாச்சாரத்தின் ஊடாக நெளிவதை தன் கதாபாத்திரங்களின் சிதைவுற்ற மனங்களின் வழியே தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தக் கதைகளை சரியாகச் சொல்வோம்
(சமகால புலம்பெயரிகளின் சிறுகதைகள்)

தொகுப்பு மற்றும் மொழியாக்கம்

நரேன்.

இந்தத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு சிறுகதை.

நன்றி : யாவரும் பதிப்பகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.