வாழ்க்கை விதி

முதியவர் காஸ்கூஷ் பேராவலோடு கவனித்தார். அவருடைய பார்வை மங்கிப்போய் பல காலமானாலும், ஒரு சின்ன சத்தமும் வற்றியுலர்ந்த நெற்றிக்குப் பின்னாலிருக்கும், ஆனால் உலக விவகாரங்களைக் கருத்தூன்றிப் பார்ப்பதிலிருந்து விடுபட்டிருக்கும் பிரகாசமான மதிநுட்பத்தை ஊடுருவிச் செல்லும் அளவுக்குச் செவிப்புலன் இன்னமும் துல்லியமாக இருந்தது. ஓ! அது சிட்-கம்-டு-ஹாவின் குரல். நாய்களைக் கீச்சுக்குரலால் அதட்டியும் அடித்தும் வண்டியில் பூட்டிக்கொண்டிருக்கிறாள். சிட்-கம்-டு-ஹா அவரது மகள் வயிற்றுப் பேத்தி. ஆனாலும் ஆதரவற்று, இந்தப் பனியில் தனிமையும் துயருமாய் அமர்ந்திருக்கும் அவரைப் பற்றி நினைக்கும் நேரத்தைக் கூட வீணடிக்க விரும்பாமல் தன் வேலையில் மும்முரமாய் இருக்கிறாள். முகாம் உடனடியாக இடம் மாற்றப்படவேண்டும்.

குறுகிய நாட்கள் நீடிக்க மறுக்கையில், நெடிய பாதை அங்கே காத்துக்கொண்டிருக்கிறது. வாழ்க்கை அவளை அழைத்தது, வாழ்வின் கடமைகளை நிறைவேற்ற, மரணத்தினுடையதை அல்ல. அவரோ இப்போது கிட்டத்தட்ட மரணத்திற்கு மிக அருகிலிருந்தார். அந்த நினைவே அம்முதியவரை கலக்கம் அடையச்செய்தது. குளிரில் விறைத்துப்போன கைகளுள் ஒன்றை நீட்டி தனக்குப் பின்னால் இருந்த சிறிய விறகுக் குவியலை நடுக்கத்தோடு தடவிப் பார்த்தார். அது அங்கேதான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பழையபடி கையை தன்னுடைய இத்துப்போன ரோம உடுப்புக்குள் திணித்துக்கொண்டு மறுபடியும் கவனிப்பதைத் தொடர்ந்தார்.

பாதி உறைந்திருந்த விலங்குத்தோல்களின் மொடமொடக்கும் சத்தம், முகாமின் தலைவனது மூஸ்[1] தோலாலான கூடாரம் அகற்றப்படுவதையும் திசைகாட்டி எடுத்துவைக்கப்படுவதையும் அவருக்கு அறிவித்தது. முதியவரின் மகன்தான் அந்த முகாமின் தலைவன். அவன் அந்தப் பழங்குடி இனத்தின் தலைவனும் கூட. அவன் வீரமும் வலிமையும் மிகுந்தவனாகவும் திறமை வாய்ந்த வேட்டைக்காரனாகவும் இருந்தான். பெண்கள் முகாமின் பொருட்களைக் கஷ்டப்பட்டு மூட்டை கட்டிக்கொண்டிருக்கையில், மந்த கதியில் இயங்குவதற்காகத் தலைவன் உரத்த குரலில் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தான். முதியவர் காஸ்கூஷ் காதுகளை இன்னும் நன்றாகத் தீட்டிக்கொண்டார். அந்தக் குரலைக் கேட்பது அதுவே கடைசி முறையாக இருக்கப்போகிறது. ஜீஹோவின் குடும்பம் போய்விட்டது. டஸ்கனுடையதும் போய்விட்டது. ஏழு, எட்டு, ஒன்பது… மாந்திரீக வைத்தியருடையது மட்டும்தான் இன்னும் அங்கே இருக்கவேண்டும். அதோ! அதைத்தான் இப்போது அங்கே எடுத்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். பனிச்சறுக்கு வண்டியில் கூடாரத்தை மடித்து எடுத்துவைக்கும் வைத்தியரின் இரைப்புச்சத்தம் அவருக்குக் கேட்டது.

ஒரு குழந்தை விசும்பி அழுவதும் ஒரு பெண்மணி முனகலாய்ப் பாடி அதைத் தேற்றுவதும் கேட்டது. அது அந்த பலஹீனமான குழந்தை கூட்டீ ஆகத்தான் இருக்கவேண்டும் என்று முதியவர் நினைத்துக்கொண்டார். கூடிய விரைவிலேயே அந்தக் குழந்தை இறந்துபோகலாம். அப்படி இறந்துவிட்டால் அவர்கள் துந்திரப் பிரதேசத்தின் உறைபனியிலேயே ஒரு குழியை வெட்டிப் புதைத்துவிட்டு, ஓநாய்களிடமிருந்து உடலைப் பாதுகாக்க அதன்மேல் கற்களைக் குவித்துவைத்துவிட்டுச் செல்வார்கள். சரி, வாழ்வதால் மட்டும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப்போகிறது? ஒரு சில சிறப்பான வருடங்களும் நிறை வயிறுகளுக்கு நிகரான காலி வயிறுகளும்தான். முடிவில் மரணம் ஒன்றுதான் எல்லாவற்றையும் விட மிகுந்த பசியோடு, என்றும் அடங்காப்பசியோடு காத்திருக்கிறது.

அது என்ன சத்தம்? ஓ, ஆட்கள் பனிச்சறுக்கு வண்டிகளைப் பிணைத்து கயிற்றால் இறுக்கிக் கட்டுகிறார்கள். இனி எந்த சத்தத்தையும் கேட்க வழியில்லாத அவர், ஊன்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். நாய்களின் மீது சாட்டைகள் சொடுக்கப்பட்டன. அவற்றின் ஊளைச் சத்தத்தைக் கேளுங்கள். அவை தங்கள் வேலையையும் பயணத்தையும் எப்படி வெறுக்கின்றன என்று பாருங்கள். அவை கிளம்பிவிட்டன. ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பிய பனிச்சறுக்கு வண்டிகள் மெல்ல மெல்ல சறுக்கிக்கொண்டு தொலைவில் நிசப்தமாகிப் போயின. அவர்கள் அவருடைய வாழ்க்கையை விட்டு விலகிப் போய்விட்டார்கள். அவர் அவரது வாழ்வின் கசப்பு மிகுந்த கடைசி மணித்துளிகளைத் தனிமையில் எதிர்கொண்டார். இல்லை இல்லை… யாரோ இன்னமும் இருக்கிறார்கள். கடினமான பாதணியின் கீழ் பனி நறநறக்கும் சத்தம் கேட்டது. ஒருவன் அவருக்குப் பின்னால் வந்து நின்று அவருடைய தலைமீது பரிவோடு கை வைத்தான். அவருடைய மகன்தான் இப்படிச் செய்வான். இதற்கு முன்பு இப்படியான சூழல்களில் கொஞ்சமும் தாமதியாமல் குழுவோடு சென்றுவிட்ட பிற பிள்ளைகளின் தந்தைகளை அவர் நினைத்துப் பார்த்தார். ஆனால் அவருடைய மகன் அப்படிப் போகவில்லை. அவர் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தபோது, இளைஞனின் குரல் அவரை சுயநினைவுக்கு மீட்டது.

“உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கிறதா?” அவன் கேட்டான்.

“எல்லாம் சரியாக இருக்கிறது” முதியவர் சொன்னார்.

“உங்களுக்குப் பின்னால் விறகுக்குச்சிகள் இருக்கின்றன. நெருப்பு பிரகாசமாக எரிந்துகொண்டிருக்கிறது. கிழக்கு வெளுக்க ஆரம்பித்துவிட்டது. குளிர் குறையத் தொடங்கிவிட்டது. பனி பெய்யும். இப்போது கூட பனி பெய்துகொண்டிருக்கிறது.”

“ஆம். இப்போது கூட பனி பெய்துகொண்டிருக்கிறது.”

“கூட்டத்தினர் அவசரத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய மூட்டை முடிச்சுகள் கனமாக இருக்கின்றன ஆனால் வயிறுகள் காலியாக இருக்கின்றன. பயணம் நெடியது என்பதால் அவர்கள் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். நான் இப்போது போகிறேன். எல்லாம் சரியாகத்தானே உள்ளது?”

“எல்லாம் சரியாக இருக்கிறது. இன்னமும் கிளையில் ஒட்டிக்கொண்டிருக்கும் போன வருடத்தின் இலை நான். முதல் காற்று வீசும்போது விழுந்துவிடுவேன். என் குரல் ஒரு முதியவளின் குரலைப் போலாகிவிட்டது. என் கால்களை வழிநடத்த என் கண்களால் இயலவில்லை. என் கால்களோ கனத்துக் கிடக்கின்றன. நான் களைத்துப்போய்விட்டேன். எல்லாம் சரியாகவே இருக்கிறது.”

பனியை நொறுக்கியபடி செல்லும் பாதணியின் சத்தத்தை இறுதிவரை செவிமடுத்தபடி நிறைவோடு தலையைக் கவிழ்ந்திருந்தார். அழைக்கும் தொலைவுக்கு அப்பால் மகன் சென்றுவிட்டதை அறிந்தார். பின் அவரது கை அவசரமாக சுள்ளிக்குவியலை நோக்கி நீண்டது. இப்போதைக்கு அது மட்டும்தான் அவருக்கும் அவருக்காய்க் காத்திருக்கும் ஊழிப் பெருவெளிக்கும் இடையில் நின்றுகொண்டிருக்கிறது. கடைசியில் அவருடைய வாழ்க்கை கையளவு சுள்ளிகளால் அளக்கப்படுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக அவை தீக்கிரையாகும், அதைப் போலவே படிப்படியாக மரணம் அவரைப் பற்றிக்கொள்ளும். கடைசி சுள்ளியும் தன் வெப்பத்தைக் கொடுத்து முடிக்கும்போது, உறைபனி தன் வீரியத்தைக் கூட்டத் தொடங்கும். முதலில் அவரது பாதங்கள் சரணடையும், பின் அவரது கைகள். மரப்புத்தன்மை உடலின் வெளிபாகங்களிலிருந்து மெல்ல மெல்ல அவர் உடலுக்குள் பரவும். அவருடைய தலை முன்பக்கமாகச் சரிந்து முழங்கால்களின் மேல் விழும். அப்படியே அவர் இறந்துபோவார். அது மிகவும் எளிது. எல்லா மனிதர்களும் ஒரு நாள் மரணித்துதானாக வேண்டும்.

அவர் முறையிடவில்லை. இதுதான் வாழ்க்கை வகுத்துள்ள பாதை. அவ்வளவுதான். உலகத்தை ஒட்டிப் பிறந்தார், உலகத்தை ஒட்டி வாழ்ந்தார். எனவே இந்த விதி ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. இரத்தமும் சதையுமாய் இருக்கும் எல்லாவற்றுக்குமான விதி அது. இரத்தத்துக்கும் சதைக்கும் இயற்கை கருணை காட்டுவதில்லை. தனியொருவர் குறித்து அதற்கு எந்த அக்கறையும் இல்லை. ஒட்டுமொத்த இனத்தைக் குறித்த அக்கறை மட்டுமே அதற்கு உண்டு. இதுதான் முதியவர் காஸ்கூஷின் கரடுமுரடான சிந்தனையில் ஆழப் பதிந்திருந்த கருத்து. ஆனால் அவர் அதை இறுகப் பற்றியிருந்தார். எல்லா வாழ்க்கையிலும் அது மெய்ப்பிக்கப்படுவதை அவர் பார்த்தார். வில்லோ மரத்தின் இளந்தளிர்களின் எழுச்சி, தளிர்களிலிருந்து வெடித்துப் பரவும் பசுமை, பழுத்த இலைகளின் வீழ்ச்சி – இவற்றைக் கொண்டே முழு வாழ்க்கையும் சொல்லப்பட்டுவிடுகிறதே. ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை ஒரு பணியைக் கொடுத்திருக்கிறது. அவன் அதைச் செய்யத்தவறினால் இறந்துபோவான். செய்தாலும் அதேதான், அவன் இறந்துபோவான். இயற்கை அதைப் பொருட்படுத்துவதில்லை. அதன் கட்டளைக்குப் பணிந்தவர்கள் அநேகம் பேர். கட்டளைக்குப் பணிவதுதான் இங்கு காலத்துக்கும் நிற்கிறது, பணிபவர்கள் அல்ல.

முதியவர் காஸ்கூஷின் பழங்குடி இனம் மிகப் பழைமை வாய்ந்தது. அவர் சிறுவனாக இருக்கும்போது அறிந்திருந்த முதியவர்கள், அவர்களுக்கு முன்னால் வாழ்ந்திருந்த முதியவர்களை அறிந்திருந்தார்கள். அந்த இனம் வாழ்கிறது உண்மை. அப்படியென்றால் மரணம் தழுவிய இடங்கள்  நினைவிறுத்தப்படாதஅவ்வினத்தார் அனைவரின் பணிதலையே அது குறிக்கிறது. அவர்கள் முக்கியம் அல்ல. வாழ்க்கைக் கதையில் வந்துபோகும் அத்தியாயங்களே அவர்கள். கோடை வானின் மேகங்களைப் போன்று கடந்துபோனவர்கள். அவரும் கடந்துபோவார். இயற்கை அதைப் பொருட்படுத்தாது. அது ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு கடமையையும் ஒரு விதியையும் பணித்திருக்கிறது. இனம் அழியாமல் தொடர்விப்பது வாழ்க்கைக் கடமை; மரணிப்பது வாழ்க்கை விதி.

எடுப்பான மார்பகங்களும் வலிமையான உடலும் கொண்டு நடையில் துள்ளலும் கண்களில் மின்னலுமாக ஒரு கன்னிப்பெண் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறாள். ஆனாலும் அவளுடைய கடமை இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அவள் கண்கள் கூடுதலாய் பிரகாசிக்கின்றன, அவள் நடையில் துள்ளல் அதிகரிக்கிறது. அவள் சில சமயம் இளைஞர்களிடம் துணிவோடு பழகுகிறாள், சில சமயம் மருண்டு விலகுகிறாள். அவர்களை நிம்மதியின்றி அலைக்கழிக்கிறாள். அவள் மேலும் மேலும் அழகாகிக் கொண்டே போகையில், யாரோ ஒரு வேட்டைக்காரன், அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தனக்காகச் சமைக்கவும், உழைக்கவும், தன் குழந்தைகளுக்குத் தாயாக்கவும் அவளைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுவான். குழந்தைகளைப் பெற்ற பிறகு அவளது வனப்பு அவளை விட்டு நீங்கிவிடும். அவளுடைய கைகால்கள் கோணிக் குறுகும், கண்கள் அவிந்து பார்வை மங்கும். நெருப்புக்கு அருகில் அமர்ந்திருக்கும் கிழவியின் சுருக்கம் விழுந்த முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியைக் குழந்தைகள் மட்டுமே காண்பார்கள். அவளுடைய கடமை நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் பஞ்ச காலத்தின் துவக்கத்திலோ அல்லது முதல் நெடும்பயணத்தின்போதோ, இதோ, இன்று இந்த உறைபனியின் நடுவில் கொஞ்சம் விறகுக்குச்சிகளோடு கைவிடப்பட்டுள்ள இந்த முதியவரைப் போன்று அவளும் கைவிடப்படுவாள். அதுதான் விதி.

அவர் ஒரு குச்சியை எடுத்து மிகுந்த கவனத்தோடு நெருப்பில் இட்டுவிட்டு தன்னுடைய சிந்தனையோட்டத்தைத் தொடர்ந்தார். இந்த வாழ்க்கை விதி எல்லாப் பொருட்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. முதல் பனிமழையின்போது கொசுக்கள் மாயமாகிவிடுகின்றன. மரத்தை விட்டு விலகிப் போகும் சின்னஞ்சிறிய மர அணில் இறந்துபோகிறது. வயதாக வயதாக முயல்களின் உடல் கனத்து, வேகம் குறைந்து எதிரிகளிடமிருந்து தப்பித்து ஓட இயலாமல் போகிறது, பெரிய முரட்டுக் குதிரை கூட, வயதாகி, நடை தளர்ந்து பார்வை இழந்த பின், இறுதிக் காலத்தில் ஊளையிடும் (பனிச்சறுக்கு வண்டி இழுக்கும்) நாய்களால் இழுத்துக்கொண்டு போகப்படுகிறது.

ஒரு குளிர்காலத்தின்போது, க்ளோண்டிக்[2] ஆற்றங்கரையில், தானே தன் அப்பாவை அநாதரவாக விட்டுவந்ததை நினைத்துப் பார்த்தார். பேசும் புத்தகங்களுடனும் மருந்துப்பெட்டிகளுடனும் பாதிரியார் வருவதற்கு முந்தைய குளிர்காலம் அது. அந்த மருந்தை நினைக்குந்தோறும் எச்சில் ஊறி சப்புக்கொட்டும் காஸ்கோஷ்க்கு இப்போது வாய் உலர்ந்து எச்சில் ஊற மறுத்தது. முக்கியமாக அந்த “வலிநிவாரணி” மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அந்தப் பாதிரியார் பெருந்தொல்லையாக இருந்தார். அவர் முகாமுக்கு எந்த இறைச்சியும் வேட்டையாடிக் கொண்டுவரமாட்டார். ஆனால் தாராளமாகச் சாப்பிடுவார். அதைப் பார்க்கும் வேட்டைக்காரர்கள் பொருமுவார்கள். ஆனால் மாயோ[3]வை நெருங்கும்போது அவர் உடல்நலம் குன்றி இறந்துபோனார். அதன்பிறகு நாய்கள், அவரைப் புதைத்த இடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த கற்களைத் தள்ளிவிட்டு அவரது எலும்புகளுக்காக ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டன.

காஸ்கூஷ் மற்றொரு குச்சியை எடுத்து நெருப்பில் இட்டுவிட்டு மறுபடியும் கடந்த கால நினைவுகளில் மூழ்கினார். அது ஒரு பெரும் பஞ்ச காலம். யூகோன்[4] ஆறு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் குளிர்காலங்களில் கரைபுரண்டு ஓடியது. பின் வந்த மூன்று கோடைக்காலங்களில் பனி உறைந்து கிடந்தது. முதியவர்கள் பசியும் பட்டினியுமாக நெருப்புக்கு அருகில் குறுகி அமர்ந்திருந்தனர். காலங்காலமாய்ப் பின்பற்றி வந்த பாரம்பரிய வழக்கப்படி அவர்கள் மெல்ல மரணந்தழுவ விடப்பட்டார்கள். அந்த பஞ்ச காலத்தின்போதுதான் காஸ்கூஷ் தன் தாயையும் இழந்தார். கோடைக்காலங்களில் வழக்கமாய் வரும் சாலமன் மீன்களின் வரத்து தவறிப்போனது. அவர்கள் கரிபூ[5]வின் வருகைக்காகக் குளிர்காலத்தை எதிர்நோக்கியிருந்தார்கள். குளிர்காலம் வந்தது. ஆனால் கரிபூகள் வரவில்லை. இதுபோன்றதொரு பஞ்சத்தை அவர்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே இல்லை. அக்குழுவிலிருந்த முதியவர்கள் கூட தங்கள் வாழ்நாளில் இப்படியொரு பஞ்ச காலத்தைக் கண்டதில்லை. அது ஏழாவது வருடம். அப்போதும் கரிபூகள் வரவே இல்லை. முயல்கள் இனப்பெருக்கம் செய்யவில்லை. நாய்கள் எலும்பும் தோலுமாகிப் போயின. நெடிய அந்தகாரத்தில் குழந்தைகள் அழுதழுது இறந்துபோயினர். பெண்களும் முதியவர்களும் கூட மரணித்தனர். குளிர்காலம் முடிந்து வசந்தகாலத்தில் வெளிப்பட்ட கதிரவனைக் காண பத்தில் ஒருவர் கூட அப்போது உயிரோடில்லை. அது ஒரு பெரும் பஞ்ச காலம்.

ஆனால் செழிப்பான வருடங்களையும் அவர் பார்த்திருக்கிறார். அப்போது கையிருப்பிலிருந்த இறைச்சிகள் அழுகிப்போயின. நாய்கள் மிதமிஞ்சித் தின்று கொழுத்து எதற்கும் லாயக்கில்லாமல் போயின – மான்களும் முயல்களும் வேட்டையாடாமல் விடப்பட்டன. பெண்கள் கருத்தரித்தனர். கூடாரங்கள் எல்லாம் பிறந்த குழந்தைகளின் அழுகைச் சத்தங்களால் நிறைந்திருந்தன. வயிறு நிறைந்த ஆண்கள், பழைய பகைமைகளுக்குப் புத்துயிரூட்டினர். தெற்கெல்லை கடந்து சென்று பெல்லிகளைக்[6] கொன்றார்கள், மேற்கெல்லை கடந்து சென்று டனானாக்களைக்[7] கொன்று எரித்து அத்தீயில் குளிர்காய்ந்தார்கள்.

காஸ்கூஷ் சிறுவனாக இருந்தபோது, இதுபோன்ற வளப்பமான வருடம் ஒன்றில் மூஸ் ஒன்று ஓநாய்களால் இழுத்துச்செல்லப்படுவதைப் பார்த்தார். அப்போது அவரது நண்பன் ஸிங்-ஹாவும் உடன் இருந்தான். ஸிங்-ஹா பின்னாளில் மிகத் தேர்ந்த வேட்டைக்காரன் ஆனான். ஆனால் முடிவில் உறைந்துபோயிருந்த யூகோன் ஆற்றின் காற்றுத் துவாரத்தினுள் விழுந்து காணாமற்போனான். ஒரு மாதம் கழித்து அவனைக் கண்டுபிடித்தபோது, பாதி தூரம் நீந்திவந்திருந்த நிலையில் அப்படியே பனியோடு பனியாக உறைந்துபோயிருந்தான்.

மூஸ் கதைக்கு வருவோம். ஸிங்-ஹாவும் காஸ்கூஷும் அன்று அவர்கள் தந்தைகளைப் போலவே வேட்டை விளையாட்டுக்குச் சென்றிருந்தார்கள். ஓடைக்கரையில் மூஸின் குளம்படித்தடத்தையும் கூடவே ஏராளமான ஓநாய்களின் காலடித்தடத்தையும் பார்த்தார்கள். தடங்களைக் கொண்டு நிகழ்வுகளை அனுமானிப்பதில் வல்லவனான ஸிங்-ஹா சொன்னான், “இது ஒரு கிழட்டு மான். கூட்டத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத இதை, எப்படியோ ஓநாய்கள் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரித்துக் கொண்டுவந்துவிட்டன. இனி அவை அதை விடாது.” அவன் சொன்னது சரிதான். அதுதான் அவற்றின் வழி. பின்புறம் கவ்வ முயல்வதும் முன்புறம் சீறுவதுமாய் அவை அந்த மூஸை இரவும் பகலும் விடாது இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கும்.

சிறுவர்கள் இருவருக்கும் எப்படி அப்படி ஒரு இரத்த வேட்கை எடுத்தது என்று தெரியவில்லை. அந்த முடிவுக்காட்சி எந்தக் காலத்திலும் மறக்க முடியாதது. அவர்கள் சத்தமெழுப்பாமல் நுனிக்கால்களால் நடந்து அந்தத் தடத்தைப் பின்தொடர்ந்தனர். தடங்களைக் கணித்தறிந்து பின்தொடர்வதில் சிறுவன் காஸ்கூஷ்க்கு பெரிய அளவில் தேர்ச்சி இல்லை என்பதால் குருட்டாம்போக்கில்தான் தொடர்ந்திருக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு தடத்திலும் நிகழ்வின் கொடுமையைக் கண்டனர். இப்போது அவர்கள் வந்திருக்கும் இடம் மூஸ் நின்று, ஓநாய்களை எதிர்கொண்ட இடம். ஒரு மனிதனின் கிடைமட்ட நீளத்தைப் போன்று மூன்று மடங்கு தூரம் வரை எல்லாப் பக்கங்களிலும் பனி விசிறியடிக்கப்பட்டிருந்தது. நட்ட நடுவில் மூஸின் அழுத்தமான குளம்புத்தடமும் நாலா பக்கமும் ஓநாய்களின் மெல்லிய கால்தடங்களும் காணப்பட்டன. சகோதரர்கள் வேட்டையில் ஈடுபட்டிருக்கும்போது, மற்ற ஓநாய்கள் வேட்டைக்கான தங்கள் முறை வரும்வரை சற்றுத் தொலைவில் படுத்து ஓய்வெடுத்திருந்தன. அச்சுப் பதித்தாற்போல, பனியில் காட்சியளித்த அவற்றின் உடல் தடங்கள் சற்றுமுன்புதான் அவை எழுந்துபோயிருப்பதை உறுதி செய்தன. வெறிகொண்ட மானை, ஓநாய்கள் வட்டமிட்டு வளைக்க முயலும்போது ஏற்பட்ட களேபரத்தில் ஒரு ஓநாய் மானிடம் மிதிவாங்கி இறந்துவிட்டிருந்தது. சாட்சியாக மிச்சம் மீதி இருந்த அதன் எலும்புகள் அதைப் பறைசாற்றின.

சிறுவர்கள் சத்தமெழுப்பாமல் மேலும் தொடர்ந்தபோது இரண்டாவது தாக்குதல் நடந்த இடத்தைக் கண்டார்கள். இந்த முறை மூஸ் நம்பிக்கை இல்லாமல்தான் போராடியிருக்கிறது. இரண்டு முறை இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதை பனிச்சுவடுகள் உறுதிப்படுத்தின. இரண்டு முறையும் அது தன் எதிரிகளை உதறித் தள்ளிவிட்டு துணிச்சலோடு எழுந்து நின்றிருக்கிறது. அது தன் கடமையை என்றைக்கோ முடித்துவிட்டது என்றாலும் வாழும் ஆசை இன்னும் அதை விட்டுப்போகவில்லை. “ஓநாய்களிடம் சிக்கிவிட்ட பிறகும் ஒரு மூஸ் இப்படி தப்பித்துச் சென்றிருப்பது மிகவும் ஆச்சரியகரமான ஒன்று” என்றான் ஸிங்-ஹா. ஆனால் அந்த மூஸ் உறுதியாகத் தப்பிவிட்டிருந்தது. (பின்னாளில் மாந்திரீக வைத்தியரிடம் சிறுவர்கள் அந்த நிகழ்வை விவரித்தபோது, அவருக்கு அதில் ஏதோ அறிகுறிகள் தென்படுவதாகச் சொன்னார்.)

சிறுவர்கள் மறுபடியும் தடங்களைத் தொடர்ந்தனர். இறுதியாக மான் காட்டுக்குள் போகத் தயாராக ஓடைக்கரையிலேறிவிட்டது. ஆனால் அதன் எதிரிகள் பின்னாலிருந்து பாய்ந்து தாக்க, மான் பின்புறமாகத் துள்ளி விழுந்தது. மானின் எடை தாங்காமல் கூட்டத்திலிருந்த ஓநாய்களுள் இரண்டு உறைபனியின் கீழே நசுங்கிப்போயின. ஓநாய்கள் சற்றுமுன்புதான் கொல்லப்பட்டிருக்கின்றன என்பது தெள்ளந்தெளிவாகவே தெரிந்தது. காரணம் அவற்றின் சகோதர ஓநாய்கள் அவற்றைத் தின்னாமல் அப்படியே விட்டுப் போயிருந்தன. மேலும் இரண்டு தாக்குதல்கள், அடுத்தடுத்து நடந்திருந்தன. பாதை முழுக்க இரத்தம் சிந்தி சிவப்பாகக் காணப்பட்டது. மானின் குளம்படிகளின் இடைவெளி குறைந்தும் ஒழுங்கற்றும் போய்க்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர்கள், சண்டை நடைபெறும் இடத்திலிருந்து எழுந்த சத்தத்தை முதன்முறையாகக் கேட்டார்கள். அது துரத்தும் ஓநாய்க்கூட்டத்தின் எக்காளமாக இருக்கவில்லை. ஆனால் மிகுந்த நெருக்கத்தில் இரையைக் கண்டதும் எழும் சின்ன சின்ன குரைப்புகளாக இருந்தன. உறைபனியில் அரவமின்றி மெல்ல ஊர்ந்து முன்னேறிச் சென்றான் ஸிங்-ஹா. கூடவே தானும் ஊர்ந்து சென்றான், பிற்காலத்தில் அந்தக் கூட்டத்தின் தலைவனாகவிருந்த சிறுவன் காஸ்கூஷ். இருவருமாகச் சேர்ந்து பக்கத்திலிருந்த இளம் ஊசியிலை மரத்தின் தாழ்ந்த கிளையில் ஏறி அங்கே என்ன நடக்கிறதென்று பார்த்தனர். அவர்கள் பார்த்ததுதான் இறுதிக்காட்சி.

இத்தனை வருடங்களாகியும், பார்வை மங்கிப்போன இந்த சமயத்திலும் கூட, துல்லியமாக மீண்டும் நினைவில் கொண்டுவந்து காணக்கூடிய அளவுக்கு எல்லா சிறுவயது நினைவுகளைப் போன்று, இந்த இறுதிக் காட்சியும் காஸ்கூஷின் மனதில் என்றென்றைக்குமாக மிக ஆழமாகப் பதிந்திருந்தது. காஸ்கூஷ்க்கு இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அந்த இனத்தின் தலைவனாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, அவரது பெயரைக் கேட்டாலே எதிரிகளான பெல்லிகள் சாபம் விடும் அளவுக்கு ஏராளமான வீரதீர சாதனைகளைப் புரிந்திருக்கிறார். புதியதொரு வெள்ளை மனிதனோடு ஒற்றைக்கு ஒற்றையாக எதிர்கொண்ட கத்திச்சண்டையில் அவனைக் கொன்றிருக்கிறார்.

வெகுநேரமாக அவர் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தபோது, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணையத் தொடங்கிக் குளிர் கூடுதலாய் ஊடுருவியது. அவருடைய வாழ்க்கைக் காலத்தை நிர்ணயித்துக் கொண்டிருந்த மீதிக் குச்சிகளிலிருந்து இந்த தடவை இரண்டு குச்சிகளை எடுத்து தீயிலிட்டுத் தூண்டினார். பேத்தி சிட்-கம்-டு-ஹாவுக்கு, தன் தாத்தாவின் நினைவு இருந்து, அவளும் தன் பங்குக்கு கை நிறைய விறகுக்குச்சிகளை சேகரித்துக் கொண்டுவந்து வைத்திருந்தால் அவருடைய கடைசி மணித்துளிகள் இன்னும் சற்று நீடித்திருக்கும். அது இன்னும் வசதியாக இருந்திருக்கும். ஆனால் அவள் எப்போதுமே யாரைப் பற்றியும் கவலைப்படாதவளாகவே இருந்திருக்கிறாள். ஸிங்-ஹாவின் மகன் வயிற்றுப் பேரன் பீவரின் பார்வை அவள் மேல் விழுந்த நாளிலிருந்து மூத்தவர்களை மதிப்பதுமில்லை. சரி, அதனாலென்ன இப்போது? அவருடைய இளமைப்பருவத்தில் அவர் இவ்வாறு இருந்ததில்லையா என்ன?

அவர், சூழ்ந்திருந்த அமைதியை ஊன்றிக் கவனித்தார். ஒருவேளை அவர் மகன் மனம் இளகி, தன் முதிய தந்தையை அழைத்துச் செல்வதற்காக, நாய்களோடு வரக்கூடும். கொழுத்த கரிபூகள் திரியும் இடத்துக்கு இனத்தாரோடு இவரையும் அழைத்துச் செல்லக்கூடும். அவர் காதுகளைத் தீட்டிக்கொண்டார். அலைபாய்ந்துகொண்டிருந்த மனம் ஒரு கணம் நின்றது. துளி அரவமில்லை. ஒன்றுமே இல்லை. அந்தப் பேரமைதியின் நடுவில் அவர் மட்டுமே மூச்சுவிட்டுக்கொண்டிருந்தார். ஏகாந்தம் அவரைச் சூழ்ந்திருந்தது.

ஆஹ்! இது என்ன? சட்டென்று அவர் உடலில் சில்லிப்பு பரவியது. அவருக்கு மிகப் பரிச்சயமான ஊளைச்சத்தம், அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு, அதுவும் அவருக்கு மிக அருகில் கேட்டது. அவருடைய மங்கிய விழிகளுக்குள், கடித்துக் குதறப்பட்ட விலாப்பக்க சதைகளும், பிடுங்கியெறியப்பட்ட பிடரி மயிரும், கிளைவிட்ட பெரும் கொம்புகளுமாய் இரத்தவிளாற்றில் துடிதுடித்துக் கிடந்த கிழட்டு மானின் இறுதிக்காட்சி திரையிட்டது. கூடவே அதைச் சுற்றிச் சூழ்ந்திருந்த ஓநாய்களின் ஒளிரும் கண்களையும், எச்சில் சொட்டத் தொங்கும் நாக்குகளையும் கூரிய கோரைப்பற்களையும் அவர் பார்த்தார். தடுத்து நிறுத்த முடியாத அந்த சூழ்வட்டம், விசிறியடிக்கப்பட்ட பனியின் மையத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கரும்புள்ளியாவதையும் அவர் பார்த்தார்.

மிருகத்தின் குளிர்ந்த மூக்கு அவர் கன்னங்களை உரசியதும், அவரது ஆன்மா, கடந்த கால நினைவிலிருந்து துள்ளிக்கொண்டு நிகழ்காலத்துக்கு வந்தது. சட்டென்று நெருப்பில் கைவிட்டு எரியும் விறகுக் குச்சியை வெளியிலெடுத்தார். காலங்காலமாய் மனித குலத்துக்குப் பயந்த அந்தக் கொடிய மிருகம், சற்றே பின்வாங்கி, நீண்ட ஊளையிட்டு தன் சகோதரர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஆர்வத்தோடு அவையும் பதில் இறுத்தன. சற்றுநேரத்தில் எச்சில் வழியும் நாக்குகளுடன் பதுங்கிப் பதுங்கி அவரை சுற்றி வளைத்துக் கொண்டன. வட்டம் குறுகிக்கொண்டே வருவதை அவர் அறிந்தார். அவர் கையில் வைத்திருந்த எரியும் குச்சியை வேகமாக ஆட்டினார். இரைப்புகள் குரைப்புகளாக மாறியதே தவிர, எந்த மிருகமும் பயந்தோடவில்லை. இப்போது ஒன்று துணிவுடன் முன்னால் வந்து அவரது புட்டத்தைக் கவ்வியது. இப்போது இரண்டாவது, இப்போது மூன்றாவது; எந்த ஒன்றும் பின்வாங்கவில்லை. அவர் ஏன் இன்னும் வாழ்க்கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்? தன்னைத்தானே கேட்டுக்கொண்ட அவர் எரியும் விறகுக் குச்சியைக் கீழே போட்டார். பனியில் விழுந்த அது, சத்தத்தோடு அணைந்துபோனது. சூழ்ந்திருந்த வட்டம் மிரண்டு உறுமியது. ஆனால் இடத்தை விட்டு அசையவில்லை. முதியவர் காஸ்கூஷ் மறுபடியும் மனக்கண்ணில் கிழட்டு மானின் இறுதிக்காட்சியைப் பார்த்தார். விரக்தியோடு தலையை முழங்கால்களுக்குள் புதைத்துக்கொண்டார். அதனால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? இதுதான் வாழ்க்கையின் விதி, அல்லவா?

ஜேக் லண்டன்

தமிழில் : கீதா மதிவாணன்.


ஜேக் லண்டன்

[Jack London (1876 – 1916)]

அமெரிக்காவின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான ஜேக் லண்டன் பத்திரிகை, அரசியல், சமூகம், இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல களங்களிலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார். உழைப்பாளிகளின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய அவர் அவை தொடர்பாக எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார். தன் குறுகிய வாழ்நாளுக்குள் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 20-க்கும் மேற்பட்ட புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சில சுய வரலாற்றுப் புனைவுகளையும் எழுதியுள்ளார். உலகளவில் பெரும் இலக்கியவாதியாகச் சிறப்பிக்கப்படும் இவர், அறிவியல் புனைகதைகளின் முன்னோடி என்றும் பெருமையோடு குறிப்பிடப்படுகிறார். ஜேக் லண்டனை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்காவில் பல இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க சாதனையாளர்கள் வரிசையில் 1986-ல் ஜேக் லண்டனின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலை அமெரிக்க ஐக்கிய அரசால் வெளியிடப்பட்டது.

 

 

 

[1] மூஸ் (Moose) – வடதுருவப் பகுதிகளில் வாழும் ஒருவகை காட்டுமான். உலகிலுள்ள மான் இனங்களிலேயே மிகப்பெரியது இதுவே.

[2] க்ளோண்டிக் (Klondike) – கனடாவில் யூகோன் பிரதேசத்தில் பாயும் யூகோன் ஆற்றின் கிளை நதி.  சுமார் 160 கி.மீ. நீளமுள்ளது.

[3] மாயோ (Mayo) – கனடாவின் யூகோன் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமம்

[4] யூகோன் ஆறு Yukon river) – வட அமெரிக்காவின் மிகப் பெரிய நீராதாரம். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உற்பத்தியாகி, யூகோன் பிரதேசம் வழியாகப் பாய்ந்து அலாஸ்கா வழியாக பெரிங் கடலில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 3,190 கி.மீ. கனடாவில் இது பாயும் பிரதேசம் இதன் பெயராலேயே யூகோன் பிரதேசம் எனப்படுகிறது.

[5] கரிபூ (Caribou) – வட துருவப் பகுதிகளில் வாழும் ஒருவகை காட்டுமான்கள். இவையே கிறிஸ்துமஸ் தாத்தாவின் (Santa clause) பனிச்சறுக்கு வண்டியை இழுத்துப்போவதாக நம்பப்படுகின்றன.

[6] பெல்லிகள் – கனடாவின் பெல்லி நதிக்கரையோரம் வாழ்ந்த பழங்குடி இனத்தோர்.

[7] டனானாக்கள் – அலாஸ்காவிலுள்ள டனானா என்ற ஊரில் வசித்த பழங்குடி இனத்தோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.