இன்றைய நுகர்வு கலாச்சாரத்திற்கு மத்தியில், கலையிலக்கியமும் கலாச்சாரமும் என்ன அர்த்தம்
கொள்கிறது? அதன் மதிப்பீடுகள் அடைந்திருக்கும் சரிவுகள் என்ன? அல்லது அவை என்னவாக
பரிணாமம் கொண்டிருக்கின்றன? என்பது போன்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டு
பரசீலித்துக்கொள்வதன் அவசியத்தைக் கருதி இக்கட்டுரை இங்கு மொழியாக்கம்
செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரையிலுள்ள ஐம்பது வாக்கியங்களுக்கும் அப்படித்தானா?
எனக் கேட்டு யோசித்துப் பாருங்களேன்!
(ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?)
- பெரும்பாலான கருத்தாடல் வடிவங்களில் ‘குடிமகன்’ என்கிற வார்த்தையின் இடத்தில் ‘நுகர்வோர்’ என்கிற வார்த்தை மாறியிருக்கிறது.
- மரபார்ந்த கலாச்சாரம் நுகர்வியத்தின் (நுகர்வு பயன்பாட்டின்) எதிரியாகும்.
- மரபார்ந்த நம்பிக்கைகளை அழிப்பதற்கு ஊடக கலாச்சாரம் நுகர்வியத்துடன் கூட்டு சேர்கிறது.
- சராசரியான கல்வியறிவுடைய குடிமகனை குழப்பவும் மிரட்டவும் பின்நவீனத்துவ கோட்பாடு உருவாக்கப்பட்டது.
- காலஞ்சென்ற முதலாளித்துவத்தின் ஒரு தேவையான அம்சம் அவண்ட் கார்டுகள் (Avant-Gardes).
- பிரபுத்துவ சமூக கட்டமைப்பின் கீழ் கவிதை எப்படியிருந்ததோ அதே தொடர்புதான் இப்போது கவிதைக்கும் சமூக வர்க்க கட்டமைப்பிற்கும் இடையில் இருக்கிறது.
7.கதையின் பாலுணர்வுக் கிளர்ச்சி மயக்கமென்பது நூலாசிரியருக்கும் வாசகனுக்கும் இடைப்பட்ட தனிப்பட்ட பரப்பைச் சார்ந்தது, வழக்கமாக அது பிந்தையவரின் மேலான முந்தையவரின் அந்நியோன்யமான மரியாதையை உள்ளடக்கியதாக இருக்கும். கதையல்லாதவற்றின் சிற்றின்பம் இயல்பான உறவுகளை ஒருசேர மறுத்தலில் இருக்கிறது.
- நிச்சயமின்மையை ஒரு நிச்சயமான விஷயமாகத்தான் இந்த மனதினால் பார்க்க முடியும், வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு உருவமாக. ஆனால், ஒரு நிச்சயமின்மையை தெரியப்படுத்தும்போதுதான் உருவங்கள் ஆர்வமூட்டுவனவாக உள்ளன.
- கவிதைகள் முற்றிலும் உண்மை சார்ந்தவை.
- எழுத்தின் முக்கியமான ஒழுங்குமுறைக் கொள்கை பட்டியலிடுதல் அல்லது தொடர்கள் தான்.
11.பெரும்பாலான அவண்ட் கார்ட் எழுத்துகளின் ஒழுங்குமுறைக் கொள்கை வரிசைக் கிரமமற்ற தொடர்கள் தான்.
- கலையில் “புதுமை” என்பது எப்போதும் மற்றொரு கலாச்சாரத்திலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
- முகஸ்துதியின் ஆகச்சிறந்த உண்மை வடிவம் நிர்மூலமாக்கல் தான்.
- ஒன்றிற்கும் ஒரு மில்லியனுக்கும் இடையில் இருப்பதை விட ஒன்றிற்கும் பூஜ்யத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
- கவிதை என்பது உண்மையால் சொல்லப்பட்ட ஒரு வதந்தி ஆகும்.
16.உச்சபட்ச உன்னதநிலையில் இருந்தாலும் கூட, நமது எண்ணங்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட ஓர் உலகைச் சார்ந்துதான் உள்ளன. எனவே, எல்லா உருவகங்களும் அடிப்படையில் நாமிருக்கும் இடம் சார்ந்தவை தான்.
- புகைப்படங்களில் நாம் நிற்கும் விதம் அந்த புகைப்படக் கருவியை எதிர்த்து நிற்கிறது, ஒரு புகைப்படக் கருவியைப் போல.
- புகைப்படங்கள் இயல்பிலேயே தற்காலிகமானவை (அவை நேரத்தின் துண்டுகள்), நாடகத்தன்மையானவை (அவை ஒருங்கமைக்கப்பட்டவை), துக்ககரமானவை (அவை மங்கிப் போகின்றன); இந்த விஷயத்தில் அவை கவிதையை ஒத்திருக்கின்றன.
- படைப்பாற்றல் ஓர் உணர்ச்சிவயமான கோட்பாடு.
- திரை எழுத்து தான் முதன்மையான இலக்கிய வகை.
- ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்: 1) விசயங்களை விட விசயங்களின் பெயர்களுக்கு சக்தி அதிகம் இருக்கிறது. 2) மொழியை விட விசயங்களின் உண்மைத்தன்மையே அதிக வெளிப்பாடுடையது. 3) ஆரஞ்சுகளைப் போன்ற விசயங்கள் பிரம்மாண்டமான இருப்பை உடையவை, ஆனால் அவற்றின் பெயர்களின்றி அவை கண்ணுக்குத் தெரிவதில்லை.
- நடிகர்களைப் போல எழுத்தாளர்களுக்கும் ஆளுமை தேவையிருக்கிறது.
- “புதுமை” எப்போதும் விசித்திரமான வகையில் பழக்கப்பட்டது தான்.
- முன்மொழிவுகளில் முதலில் தோன்றுவது மொழியின் அரசியல் தான்.
- சார்பியல்வாதமும் பன்மைவாதமும் முழுமைவாதத்தின் வடிவங்கள் ஆகும்.
26.உண்மை சார்ந்த நேரடி கூற்றுகளை விட முரண் தான் உண்மைக்கு நெருக்கமானது.
- இராணுவங்கள் போன்ற எளிய விசயங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
28.பின்நவீனத்துவ சிதறல் என்பது முரணின் ஒரு வகை, பல்வகைப்பாட்டுத்தன்மையை பயன்படுத்தி ஒரு “புதிய யதார்த்தவாதத்திற்கு” வந்து சேர்தல். ஆனால், அது முரண் குறைபாடுள்ள முரணின் ஒரு வடிவம் ஆகும்.
- மொழிக் கவிதை என்பது ஒரு சைகையாளனால்(Seme) பாடப்பட்ட ஒரு சைகை ஆகும்.
30.எழுத்தாளர்கள் வலியை உணர்கிறார்களா? அல்லது அவர்கள் மிகவும் நேர்மையற்றவர்களா?
- மீறலின் அதி உண்மையான வடிவம் புகழ் தான்.
32.எண்ணம் பால் வேறுபாடற்றது, ஆனால் அதனுடைய பேசு பொருள் பால்வகைப்படுத்தப்படுகிறது.
- கலை சமூகக் கட்டுப்பாட்டின் ஒரு வடிவம் ஆகும்.
- கருத்தியல் என்பது ஒரே ஒரு கதாபாத்திரத்தையுடைய புனைவு.
- அழித்தலே அதன் வெகுமதி.
36.ஒரு கலையின் எதிர்காலத்தை அறிந்துகொள்ள அதன் தற்போதைய நடைமுறையின் அதிகமாக ஏளனம் செய்யப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட வடிவத்தை பரிட்சித்துப் பாருங்கள்.
- ஒரு வாக்கியம் ஒருபோதும் குற்றமற்றதாக இருப்பதில்லை.
- நடிகர்களுக்கு மட்டுமே ஆன்மா இருக்கிறது.
- வரம்பு மீறுதல் பின்நவீனத்துவ வழிபாட்டின் ஒரு வடிவம்.
- கடந்தகாலம் இன்னும் கட்டுமானத்தில் தான் இருக்கிறது.
- முடிவாக, எல்லா இலக்கியமும் கதை தான்.
- எல்லா கதைகளும் துரத்தல் காட்சியைத் தான் நாடிச் செல்கின்றன.
- கவிதை மாத்திரமே உண்மையின் வேகத்தை நெருங்குகிறது.
- மெய்ம்மையின் வேகம் கவனித்தலின் வேகத்தை விட அதிகமானது.
- நூலாசிரியர்கள் விடுகிற இடைவெளியை இயற்கை நிரப்புகிறது.
- கௌரவம் ஒரு வேதனை வரலாற்றைக் கோருகிறது.
- அவண்ட் கார்ட் கவிதை பாரம்பரியத்திற்கான ஏக்கம் ஆகும்.
- நவீனத்துவம் அதன் பணியை இன்னும் முடிக்கவேண்டியிருக்கிறது.
- பின்நவீனத்துவம் எதிர்காலத்தைப் பற்றி உணர்ச்சிவயப்படுகிறது.
- நம்பிக்கை என்பது இல்லாததால் புத்தாயிரமாண்டு சார்ந்து எந்த உற்சாகமும் இல்லை.
ஆசிரியரைக் குறித்து:
பால் ஹூவர் (1946- )
அமெரிக்க கவிஞர். நியூ யார்க் கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவர். பின்நவீனத்துவ அமெரிக்க
கவிதைகளின் திரட்டொன்றைக் தயாரித்துள்ளார். Totem and Shadow என்ற தலைப்பில்
இவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகள் நூலாக வெளிவந்துள்ளது. மேலே மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ள கட்டுரை Fables of Representation எனும் தொகுப்பில் இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டது.