பயணக்கட்டுப்பாடுகளினால் 2020-இல் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், எங்கும் இல்லாத இடங்களுக்கெல்லாம் பயணசீட்டுகளைப் பல விமான நிறுவனங்கள் விற்கத்தொடங்கின. ஒரு விமானப் பயணச்சீட்டின் விலைக்கும், அந்த விமானம் வெளியிடும் புகையுமிழ்விற்கும் ஈடாக 35,000 அடிகளுக்கு மேலே கோப்பையுடன் சாய்ந்தமர்ந்தபடி பயணிகள் தாங்கள் புறப்பட்ட இடத்திலிருந்து தரையிறங்கும்வரை எல்லாமே இயல்பாக இருப்பதாய் பாசாங்கு செய்துக்கொள்ளவேண்டியது தான்! வரலாற்றைப் புரட்டும்போது, சுற்றுச்சூழல் முறிவின் (environmental breakdown) அளவீட்டைப் புரிந்துக்கொள்ளத்தவறி நாம் தோல்வியுற்றதை வருங்கால சந்ததிகள் முட்டாள்தனமாகக் கருதுவார்கள் என, ‘தி கிரேட் டிரேஞ்மென்ட்’ (The Great Derangement: Climate Change and the Unthinkable) எனும் புத்தகத்தில் புகழ்பெற்ற நாவலாசிரியரான அமிதவ் கோஷ் வாதிடுகிறார். காலநிலை நெருக்கடி மற்றும் பெருந்தொற்று இவையிரண்டிற்கும் இடையே நிலவும் ஒற்றுமைகள், ஒன்றோடுடொன்று இணைந்திருக்கும் உலகத்திற்கான மாற்று எண்ணங்களைப் பற்றியும் நாம் எழுத்தாளரிடம் பேசினோம்.
2020-இல் அதிகம் பயன்படுத்தப்பட்டிருந்த சொல், “முன்நடந்திராதது” (Unprecedented) என்பதுதான். முன்நடந்திராதவைகளுக்குத் தயாராகியிராத நவீன சமூகத்தின் இயலாமை நம்மை பலவீனப்படுத்துகின்றது என நீங்கள் வாதிடுகிறீர்கள். காலநிலை முறிவு மற்றும் சுகாதார நெருக்கடி இடையே நிலவும் இணைகளாக நீங்கள் பார்ப்பவை என்னென்ன?
காரணத் தொடர்புகள் இல்லை என்றாலும்கூட இவை இரண்டிற்கும் இடையே பல தொடர்ச்சிகள் இருக்கின்றன. இவற்றுள் மிகவும் வெளிப்படையான தொடர்பு என்னவென்றால் காலநிலை நெருக்கடியும் பெருந்தொற்றும் உலகின் சீரான வேகவளர்ச்சியால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்பதேயாகும். 1900-களில் தொடங்கி வளர்ந்துவந்த உற்பத்தித்திறன், கொள்திறன், பயணம், நம் வாழ்விடங்களின் அழிவு மற்றும் காடழிப்பு இவையெல்லாம் சீனாவின் சிறிய சந்தையிலிருந்து புறபட்ட ஒரு சின்னஞ்சிறு உயிரி ஒரு கட்டத்தில் உலகையே சட்டென நிறுத்தும்வரை வேகமாக விரைந்துக்கொண்டிருந்தன.
ஒரு வகையில் பார்த்தால், நிச்சயமாகவே அவை முற்றிலும் வெவ்வேறானவை. பெருந்தொற்று, ஒரு நோய். ஆனால் காலநிலை நெருக்கடி என்பது அசாத்தியமான காட்டுத்தீக்கள் முதல் அட்லான்டிக்கில் உருவாகும் பற்பல சூறாவளிகள் வரை ஏற்படும் ஆச்சரியமான வானிலை நிகழ்வுகளால் தங்களை வெளிப்படுத்திக்கொள்பவை. அதிலும், உலகம் இவற்றுக்கு கவனமளித்த விதமும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். பெருந்தொற்றின்போது பெரும்பான்மையான அரசுகளுமே, ஏன் கிட்டத்தட்ட எல்லா அரசுகளுமே துறை வல்லுனர்களிடம் அறிவுரைகளைப் பெறுவதிலும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவதிலும் துரிதமாக இருந்தனர். சீனா, நியூசிலாந்து, வியட்நாம் உட்பட மேலும் சில நாடுகளுக்கு இந்த உத்தி உதவியது.
‘தி கிரேட் டிரேஞ்சமென்ட்’-இல் மோசமான வானிலை நிகழ்வுகளை விவரிக்க “வினோதம்” (uncanny) என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் ஏனெனில் அந்தச் சொல் ஒருவித அசாதாரணத்தையும் கூடவே கவனத்தையும் படம்பிடிக்கிறது. பெருந்தொற்றும் இது போலவே இருந்திருக்கிறது; பெருங்கொள்ளைநோய்கள், தனிமைப்படுத்துதல்கள் போன்றவற்றின் ஒட்டுமொத்த நினைவுகளை ஞாபகப்படுத்தியபடி அசாதாரணமாகவும் ஆனால் பழக்கப்பட்டதுமாயிருந்தது. நம்மைப் பற்றி நாம் மறந்திருந்த ஏதோ ஒன்றை இந்தப் பெருந்தொற்று அழுத்தமாக நமக்கு ஞாபகப்படுத்துகிறதா?
இந்தப் பெருந்தொற்று பதினெட்டாம் நூற்றாண்டின் லிஸ்பன் நிலநடுக்கத்தின் தாக்கத்தில் கொஞ்சமாவது கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன். 1755-இல் நடந்த இந்த நிலநடுக்கத்திற்கு முன்புவரை ஐரோப்பியர்கள் தாங்கள் இயற்கையில் தேர்ச்சி பெற்றதாகவும் ஏதோ இயற்கை என்பது மனிதர்களால் கைப்பற்றக்கூடியதைப் போலவும் நினைக்க ஆரம்பித்திருந்தனர். இயற்கையில் தேர்ச்சி பெறுவதிலிருந்து வெகுதூரம் விலகினதோடு மட்டுமின்றி, மனித வாழ்விருப்பின் மீது முழுமையான தேர்ச்சியை இயற்கைதான் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் சட்டென உணர்ந்துக்கொண்ட ஞானோதயமான ஒரு தருணம் தான், லிஸ்பன் நிலநடுக்கம்.
இயற்கையைப் பற்றின ஐரோப்பிய கருத்தாக்கப்படி, இயற்கை என்பது சீரானது, தனக்கென்று ஒரு நிலைகொண்டது மற்றும் அதன் எல்லா இயக்கங்களும் கணிக்கக்கூடியவைகளாகவே இருக்கும் என்பதாகும். ஆனால் இப்போது நாம் பார்ப்பது இந்த நிலைமை அல்ல. ‘தி கிரேட் டிரேஞ்சமென்ட்’-ஐ நான் 2015-இல் எழுதினேன். அப்போது இந்தப் பேரழிவுச் சம்பவங்கள் 2020-இல் வெளிக்காட்டியதைப்போல நம் மீது இப்படி திடீரெனப் படரும் என்று நான் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. நான் காலநிலை மாற்றம் மற்றும் அதன் சார்பு இலக்கியம் குறித்து எழுதத் தொடங்கியபோது நண்பர்களும் பதிப்பாளர்களும் ஆச்சரியப்பட்டதோடு, ‘இதில் எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்கும் என்ன இருக்கிறது?’ என்று என்னிடம் கேட்டார்கள். இப்போது அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படுவதில்லை. காலநிலை மாற்றம் நம்மைச் சூழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு நெருக்கடி என்பதை அனைவருமே அறிந்துவைத்திருக்கிறார்கள். 2018-இல் தான் இதன் திருப்புமுனை. இது எதிர்காலத்தைப் பற்றியதல்ல, நிகழ்காலத்தைப் பற்றியது என்பதை மக்கள் உணர்ந்தார்கள்; 2020 தான் அது முழு பலத்துடன் நம்மை தாக்கிய ஆண்டு.
கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் மூலமாக பூமி நமக்கு ஒரு செய்தி அனுப்புகிறது என்று ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவரான இங்கர் ஆண்டர்சன் கூறினார். இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
பூமி நமக்கு செய்தி அனுப்புகிறது என்பதைத் தவிர்த்து இதனை முற்றிலும் ஒப்புக் கொள்கிறேன். அப்படிச் சொல்வதால் வெளியே உள்ள வேறு யாரோ நம்மோடு தொடர்புகொள்வது போல இருக்கிறது. யதார்த்தத்தில் பூமி நம்மை வெகுவாக அலட்சியப்படுத்துகிறது. நாம் வெளியே இருந்தபடி தூண்டிவிட்டவைகளுக்குத் தான் அவை வெறுமே பதிலளித்துக் கொண்டிருக்கின்றன. பூமி நமக்கு அனுப்பும் செய்திகளைப் பற்றி பேசுவதைத் தான் நமது முன்னோர்கள் செய்தார்கள். நமது முன்னோர்கள் பூமியையும் அதன் சுற்றியிருந்த அத்தனையையும் கவனித்து அது என்ன சொல்ல வருகிறது என்பதைப் புரிந்துக்கொள்ள முயற்சித்தார்கள். அதைத்தான் நாம் இப்போது மறந்துவிட்டோம்.
இதுபோன்ற மோசமான நெருக்கடிகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கையில், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில், உயரும் கடல்மட்டங்களால் மூழ்கவிருக்கும் பகுதிகளுக்கும், காட்டுத்தீக்களால் அச்சுறுத்தப்படும் பகுதிகளுக்கும், மேலும் மேலும் மனிதர்கள் குடியேறிவருகிறார்கள். அமெரிக்காவிலேயே மிகவும் வெப்பமான பகுதி, அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ்; கொலராடோ ஆறு மட்டும்தான் அதன் ஒரே நீர் வளம். 1940-களில் கண்டுபிடிக்கப்பட்ட காற்றுப்பதனாக்க முறையினால் தான் அங்கே வாழ்வு சாத்தியமானது. ஒட்டுமொத்த அரிசோனாவுமே 1940-களில் ஆரம்பித்து கட்டமைக்கப்பட்டதுதான். ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் வியக்கத்தக்கதொரு வேகத்தில் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. வாழ்வதற்குத் தகுதியே இல்லாதவொரு இடம் இப்படி இடைவிடாமல் விரிவடையும் முரணைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நமது வாழ்நாளிலேயே வாழத் தகுதியற்றதாக மாறவிருக்கும் பகுதிகளுக்கு மக்கள் குடியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஏன் அவர்கள் இதைச் செய்கிறார்கள்? வெளிப்படும் செய்திகளை அவர்கள் கேட்பதில்லை. அதற்கு பதில் அவர்கள் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? மனிதன் எப்படியும் இயற்கையை வென்றிடுவான் என்ற 18-ஆம் நூற்றாண்டின் கருத்து வடிவங்களையே அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிவியலும் அதன் காரணமும் எப்போதும் நிலைத்திருக்கும் என்றும், தொழில்நுட்பம் இவற்றை பார்த்துக் கொள்ளும் என்றும், நமது ஒட்டுமொத்த பூமியும் செயலற்றது போலவும், கைப்பற்றக்கூடியது என்பதுமான கருத்துக்கள் அவை. இந்தத் தருணத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதும் அடிப்படையானதும் வினோதமானதுமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்தப் பதினெட்டாம் நூற்றாண்டின் கருத்துக்கள் எல்லாம் அதாவது இந்தச் சமூகம் ஒரு காரணத்துக்காகதான் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதெல்லாம் நமது கண்களுக்கு முன் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.
காலநிலை நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் ஒரு சாத்தியமானதொரு வழியாக நிரூபிக்கப்படாத தொழில்நுட்பத்தை அறிவியல் வழங்குகிறது. ஆனால் புவி வெப்பமாதலைப் புரிந்துகொள்வதில் காலநிலை அறிவியலும் மிகவும் முக்கியமானது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அறிவியல் என்னமாதிரியான இடத்திலிருந்து நமக்கு உதவிட வேண்டியிருக்கிறது?
அறிவியல் மட்டுமே ஒரே சக்தி எனும் எண்ணவோட்டத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். சமூகத்தோடு காலநிலை விஞ்ஞானிகள் கொண்டிருக்கும் தொடர்பு, தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் கொண்டுள்ள தொடர்பைவிட முற்றிலும் வேறானது. உதாரணமாக, பல காலநிலை விஞ்ஞானிகள் அரசியல் குறித்த தங்களது அணுகுமுறைகளில் மிகவும் மனிதநேயவாதிகளாகவும், காலநிலை நீதி குறித்தும் கவலைப்படுகின்றனர். ஆனாலும், மார்ஷியன் திரைப்படத்தில் வரும் மேட் டேமனைப் போல ‘இதனை நாம் அறிவியலாக்கி ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்’ என்றும் கணிசமான காலநிலை அறிவியலாளர்கள் பதிலளிப்பார்கள். அவர்களது அடிப்படைக்கருத்தே புவிசார் அறிவியல் வழி இதில் தலையிட்டு ஹார்வர்ட், யேல் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் வாயிலாக இதனை இயல்பாக்கிடுவது தான்.
புவிபொறியியல் வடக்கிற்கு (Global North) வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கலாம் ஆனால் தெற்கிற்கு (Global South) இது மிகவும் ஆபத்தானது. இந்த ஒரு காரணத்திற்காகவே காலநிலை நெருக்கடி என்பது ஒரு புவி அரசியல் (geopolitical) பிரச்சினையாகிறது. நான் மிகவும் மதிப்பவரும் முழுமையாக ஆதரிப்பவருமான, கிரெட்டா துன்பெர்க் திரும்பத் திரும்பச் சொல்வது என்னவென்றால் ‘விஞ்ஞானிகளுக்குச் செவிகொடுங்கள்’ என்பதே. என்றாலும், எல்லா விஞ்ஞானிகளையும் ஒரே கட்டத்திற்குள் அடைப்பது தவறானது. அறிவியலால் ஒரு பிரச்சனையைக் கண்டுகொள்ள முடியும், ஆனால் அதற்கு ஒரே ஒரு தீர்வு மட்டுமிருக்காது. தொழில்சார் மற்றும் அறிவியல் ரீதியான தீர்வுகள் காலநிலை நெருக்கடிக்கு ஒன்று போலவே தான் இருக்கும். நோயையே அதற்கான தீர்வாக கொள்வதைப் போன்ற தவறு இது.
பெருந்தொற்றில் இந்தியாவின் அனுபவம் எவ்வாறு உள்ளது?
பெருந்தோற்று எல்லா இடத்திலும் மோசமாக இருந்தது, அதிலும் இந்தியாவில்தான் அனைத்திலும் மிக மோசமாக இருந்தது. கோவிட் எண்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளன. இதில் ஒரே ஆறுதலான விஷயம் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததுதான். ஆனாலும், இந்தியாவின் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மற்ற எல்லா நாடுகளையும் பின் தள்ளிவிடும். 1918-ஆம் ஆண்டில் ஃப்ளு பெருந்தொற்றின் போதுகூட பாதிக்கப்பட்டவர்களில் கணிசமான சதவீதத்தித்தினர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்தான்.
கோவிட்-19 பெருந்தொற்று, வகுப்பு வரையற்ற ஒரு போராகவே மாறியிருக்கிறது. அரசின் எதிர்செயல், புலம்பெயர் ஏழை தொழிலார்களின் வாழ்வை அழித்துள்ளது. இலட்சக்கணக்கான நிலையற்ற மக்களின் கால்கள் அவர்களின் முன்னரே அறுக்கப்பட்டிருக்கின்றன. வேலை செய்ய வழியின்றி மே மாத வெப்பம் என்றும் பாராமல் நெடுஞ்சாலைவழி அவர்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒப்பீட்டளவில் வசதியான மேற்கிந்தியாவில் இருக்கும் நகர்ப்புற தொழிலாள வர்க்கங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலும் வங்காளம் அல்லது கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான். இந்தப் பகுதிகள் காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே மிகவும் பாதிப்படைந்திருந்தன. அதோடு, உயரும் கடல்மட்டத்தால் இங்கிருந்து பல மக்கள் குடிப்பெயர்க்கப்பட்டிருந்தனர். அந்த மக்கள் தங்கள் வீடுகள் நோக்கி நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில் மிகவும் ஆபத்தான சூறாவளி புயலான ஆம்பன், நிலப்பரப்பைச் சூறையாடுவதற்கு வங்கக்கடலில் உருவாகிக்கொண்டிருந்தது. இதுவே நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்திற்கும் ஒரு சிறந்த உதாரணம் – பற்பல பேரிடர்கள், அழிக்கும் விதங்களில் ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்கின்றன.
கலாச்சாரமும் இலக்கியமும் காலநிலை மாற்றம் மற்றும் சூழலியல் நெருக்கடி குறித்து புரிந்துகொள்ள தவறிவிட்டன என்று ‘தி கிரேட் டிரேட்மெண்ட்’ வாதிடுகிறது. இந்தத் தோல்வியை நீங்கள் எப்படி விவரிக்கிறீர்கள்?
இந்த வாதம் எழுத்தாளர்களைப் பற்றியது மட்டுமே அல்ல; மாறாக இலக்கியம் மற்றும் கலை சார்ந்த சூழலியலைப் பொறுத்தது. எது இன்று தீவிர இலக்கியமாகக் கருதப்படுகிறது? தீவிர இலக்கியம் என்பது எப்போதுமே எதையோ ஒன்றை பற்றின அடையாளமாகவே இருந்திருக்கிறது. வெகு காலமாக அது தான் தீவிர இலக்கியத்தின் நிலை. காலநிலை மற்றும் சுற்றுச்சூழலை பற்றி யார் எழுதினாலும் தானாகவே அவர்கள் வகைமை எழுத்தாளராக பாவிக்கப்படுகிறார்கள். ஆனால் காலநிலை பற்றி எழுதுவது அறிவியல் புனைவு அல்ல; இது எதிர்காலத்தை பற்றியதல்ல; யூகத்தின் அடிப்படையிலோ அல்ல. மாறாக இது இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் யதார்த்ததைப் பற்றியது.
பட்டவர்த்தனமாய் உலகைப் பார்க்கும் பாங்கைப் பெருமிதமாகக் கொண்டவர்கள் எழுத்தாளர்கள். ஆனால் இன்று நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப அந்தக் குறிப்பிட்ட எழுத்துநடையே வழிகாட்டுகிறது. உருசுலா லே க்வின் (Ursula Le Guin) போன்ற மிகவும் முக்கியமான எழுத்தாளர்கள் சூழலியல் தலைப்புகளைக் குறித்து பேசியிருக்கிறார்கள். இன்றளவும் நம் காலத்திற்கு தொடர்புடையாதாக அவரது புத்தகங்கள் இருக்கின்றன. என்றாலும்கூட உருசுலா லே க்வின் அறிவியல் புனைவு எழுத்தாளர் என்று ஒதுக்கிவைக்கப்பட்டார். அதனால்தான் தீவிர இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளப்படும் பல எழுத்தாளர்களைவிட இன்று அவர் அதிகம் வாசிக்கப்படுகிறார். இருப்பினும் 2018-ஆம் ஆண்டிலிருந்து கணிசமான வகையில் கலையும் இலக்கியமும் மாறியிருக்கின்றன. குறிப்பாக காலநிலை குறித்த எழுத்தும் கலையும் கொட்ட ஆரம்பித்திருக்கின்றன. ஒருவழியாக மக்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் பேராபாத்திற்கு விழித்துக் கொண்டுவிட்டனர்
உங்களது பல நாவல்களில் புயல், வெள்ளம் மற்றும் வேறு சில வானிலை நிகழ்வுகள் மிகப் பெரிய பங்காற்றுகின்றன. உங்களது புனைவுகளில் மாறிவரும் சுற்றுச்சூழலைக் குறிப்பிட்டு நீங்கள் எவ்வாறு நாடினீர்கள்?
இது போன்ற பிரச்சினையைப் புனைவாக எழுதுவது தான் நான் செய்யவிரும்பாத ஒரே விஷயம். முன்னர் இருந்ததைவிட என் எழுத்தை நான் இப்பொழுது வேறுவிதமாகப் பார்க்கிறேன். நாம் அன்றாடம் வாழும் உலகத்தின் நிதர்சனங்களைப் பற்றியே நான் எழுத விரும்புகிறேன். காலநிலையின் தீவிரங்களும் பெருந்தொற்றுகளும் இந்த உலகத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். அவை வேறானவை அல்ல. எனது எழுத்துக்கள் முழுக்க என் வங்காள வேர்களாலேயே பெரிதும் செதுக்கப்பட்டிருக்கிறன. பூமியிலேயே மிகவும் அச்சுறுத்தப்படும் பகுதிகளில் வங்காளமும் ஒன்றாகும். நான் வங்காளத்தைப் பற்றியும் அதிலும் குறிப்பாக டெல்டா மற்றும் அதன் சதுப்புநிலக் காடுகளைப் பற்றியும் எழுதுவதால் அநேகமாக, துருவங்களைத் தவிர்த்து மற்ற எந்த பகுதிகளையும்விட இந்தப் பகுதிகள் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதைக் குறித்த கூரிய விழிப்புணர்வு எனக்கு அதிகமாக உள்ளது.
தற்போது நாம் இருக்கும் சூழலில் மாற்றுச் சிந்தனைகளுக்கு நம்மை வழிநடத்தும் விதமாக கலாச்சாரமும் புனைவும் என்னென்ன பங்களிக்கின்றன?
இதைச் சொல்வது மிகவும் கடினமானது. நான் இலக்கியத்தின் மீது நம்பிக்கையாக பெரிய கூற்றுகளைச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் அக்கோரிக்கைகள் எல்லாம் இப்போது நம்பிக்கை அற்றவையாக மாறிவிட்டன. 1980-களில் நான் எழுதத் தொடங்கியபோது இலக்கியமும் நாவல்களும் கலாச்சாரத்தின் மையமாக இருந்தன. அலுவலகத் தண்ணீர்ப் பந்தல்களைச் சுற்றிக் கூடும் பொழுது மக்கள் புத்தகங்களைப் பற்றிப் பேசினர் ஆனால் இப்போது மக்கள் தொலைக்காட்சியைப் பற்றியும் நெட்பிளிக்ஸ் பற்றியும் பேசுகின்றனர். இலக்கிய உலகம் ஒரு பின்னணிக்குள் சுருங்கிவிட்டது. நமக்குத் தெரிந்த நவீன இலக்கியம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்தது. நவீன இலக்கியம் என்பது ஒருவகையான மேற்கத்திய வழக்கமாக வேரூன்றியிருந்தது. மேற்கத்திய வெள்ளை ஆதிக்கமும் மற்றும் அதனோடு தொடர்புடைய கருத்துக்களே அவை என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். கட்டுப்பட்ட பூமி மற்றும் பூமியெங்கிலும் கட்டுப்பட்ட காலனியாக்கப்பட்ட மனிதர்கள், முதலாளித்துவ கலாச்சாரத்தின் மையமாக அந்தக் கதைகள் இருந்தன. இன்றைய உலகத்தோடு நாம் ஒன்றுப்படுத்திக்கொள்ள வேண்டுமானால், நம்மிடம் சொல்லப்பட்ட கதைகளிலிருந்து மாறுபட்ட ஒன்றை, மனிதர்களைப்பற்றி மட்டுமேயல்லாத, வேறுவிதமான கதைகளை நாம் நமக்குச் சொல்லவேண்டியிருக்கும்.
நவீன இலக்கியத்தின் எழுச்சி மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி வைத்துவிட்டது. நவீன இலக்கிய கதைகளின் மையம் மனிதர்களாகவே இருந்தனர். ஆனால் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் அதுபோன்று இல்லை. நவீனத்தின் எழுச்சிக்கு முன்னர் மக்கள் எப்போதும் சொன்ன கதைகளில் மற்றவைகளும் இருந்தன – விலங்குகள், அவ்வளவு ஏன் காலநிலை நிகழ்வுகூட மனிதக் குரலில் கிரேக்க காற்றுக் கடவுளான எயலொசுவின் குரலைப்போன்று பேசின. மற்ற எல்லா வஸ்துகளையும் வைத்து கதை சொல்லும் விதங்கள் வரலாறு எங்கிலும் இருந்திருக்கின்றன. ஆனால் உதாரணத்திற்கு, மனிதமற்ற உயிரியான ஒரு வைரஸிற்கு எப்படி குரல் கொடுப்பது என்பதுதான் அடிப்படையான இலக்கியச் சிக்கலாக இருக்கிறது. நமக்கு இந்த வைரஸ் உயிரோடு இருக்கிறதா என்று தெரியாது, ஆனால் நம் ஒவ்வொரு வாழ்க்கையோடும் அது தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறது அல்லது பேசிக் கொண்டிருப்பது போல இருக்கிறது. நோய்களில் இருந்து புதைபடிவ எரிபொருள் வரை, நமது வாழ்க்கை எப்படி மற்ற எல்லா விஷயங்களோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதைத் தான் இந்த நவீனம் நம்மை மறக்கச் செய்துவிட்டது.
இந்தப் பெருந்தொற்று நாம் எல்லோரும் எப்படி உலகமயமாக்கலில் இணைந்திருக்கிறோம் என்று நமக்கு காண்பித்துவிட்டது. உங்களது ‘ஐபிஸ்’ (Ibis trilogy) முத்தொகுப்பு தொடர் நாவல்களில், ஓபியம் போரினால் பின்னப்பட்ட கதாப்பாத்திரங்களின் நிலை, இந்திய, சீன மற்றும் ஐரோப்பிய மக்களைப் பிணைத்திருக்கும் முரண்கள் என கதைக் களங்கள் தேடித் தடமறிகின்றன. இன்றைய சுற்றுச்சூழலியல் பிரச்சனைகளில் பேரரசின் பங்கு என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
காலநிலை மாற்றத்தைப் பற்றி பேசுகையில் முதலாளித்துவத்தையே எப்போதும் முன்னிலைப்படுத்துவது என்பது, உண்மையான பிரச்சினையைத் தவறாகப் பார்க்க நேரிடும் ஆபத்தை உருவாக்கும். ஐரோப்பிய பேரரசுகளின் முன்னோடியாக முதலாளித்துவம் இருந்தது. பேரரசுகள் முதலாளித்துவத்தைச் சாத்தியமாக்கின. பேரரசு, அடிமைத்தனம், ஒப்பந்தக்கூலியாட்கள், கைப்பற்றப்பட்ட தொழிலாளர்கள் போன்றவை ஒவ்வொரு கட்டத்திலும் முதலாளித்துவத்தைச் சாத்தியப்படுத்தின. கருப்பினத்தவர், ஆதி குடியினர் மற்றும் நிறத்தவர்கள் பெரிதும் ஓரங்கட்டப்பட்டதே இதை நாம் மறந்திருப்பதற்கு ஒரே காரணம். 1980-களில் கறுப்பின தீவிர சிந்தனையாளரான செட்ரிக் ராபின்சன் தீவிர முதலாளித்துவத்தைப் பற்றி இந்தப் புள்ளியை வைத்து வாதிடுகிறார். ஏதோவொரு வகையில் முதலாளித்துவம் ஐரோப்பாவைச் சார்ந்திருக்கிறது என்ற மார்க்சிய கருத்தை மறைக்கும் விதத்தில் அதிகார மைய்யங்களின் யதார்த்தங்களே அவற்றை முதலிடத்தில் சாத்தியப்படுத்தின.
இன்றைய உலகில், புதைப்படிவ எரிப்பொருள்களின் புவிசார் அரசியல் மேற்கத்திய அதிகாரத்திற்கு அடிப்படையாகிறது. எரிபொருள் டாலரோ அல்லது இந்தியப் பெருங்கடலின் ஆதிக்க உத்தியோ, காலநிலை கேள்வி என்பது திண்ணமாக புவிசார் அரசியலைப் பற்றியது, பேரரசுகளைப் பற்றியது. பெருநிறுவனச் சட்டங்களில் சில திருத்தங்களாலோ முதலாளித்துவத்தின் விலை வடிவத்தாலோ அதைத் தீர்க்க முடியாது.
1945-க்குப் பின் நிகழ்ந்த வேகவளர்ச்சி காலனிய அகற்றலோடு ஒத்துப்போனது. சுதந்திர இந்தியாவும், கம்யூனிச சீனாவும் மேற்கத்தியத்தைப் போல் அதே வளர்ச்சி மாதிரியைப் பின்தொடர்ந்தன. சுற்றுசூழல் முறிவின் வேர் பேரரசாக இருந்தாலும், இந்தப் பாதையிலிருந்து உலகம் எப்படி விலகிச் செல்லும் என்பதைத் தீர்மானிக்க கடினமாக உள்ளது.
ஆதிகுடிகள் மற்றும் காடுகள் பற்றிய இந்திய அரசின் சூழலியல் கொள்கைகளைப் பார்க்கும்போது, வினோதமான ஒரு வகையில் இந்தியா, சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் காலனித்துவ குடியேற்றக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா 1930-கள் மற்றும் 1960-களிலிருந்து குறிப்பாக 1990-களில் நடந்த ‘வாஷிங்டன் ஒப்புதலுக்கு’ப் பிறகு தனது திட்ட மாதிரியை உலகிய சூழலுக்குத் தகுந்தாற் போல மாற்றியது. இந்த மாற்றம் சரியாக 1990-களில் இந்தியா, சீனா, மற்றும் இந்தோனேசியாவில் காலநிலை நெருக்கடி வேகமாக வளரத் தொடங்கிய பத்தாண்டுகளின்போது நிகழ்ந்த மாற்றமாகும்.
மேற்கத்திய சொற்பொழிவுகள், நாம் எப்படி இந்தப் பிரச்சனையைச் சரிசெய்வது என்று கேட்கின்றன. ஆனால் இதில் நாம் என்பது யார்? இதற்கான தீர்வு இனிமேலும் மேற்கில் இல்லை! இதன் தீர்வு இந்தியப் பெருங்கடலின் பசிபிக் பகுதியில் அதாவது இன்றைய உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவைவிடவும் ஐரோப்பாவைவிடவும் மிகப்பெரிய ஒன்றான பசிபிக் பகுதியில் இருக்கிறது. அட்லாண்டிக் உலகின், 19-ஆம் நூற்றாண்டின் அட்லாண்டிக் உலகின் மேலாதிக்கம் ஒரு வரலாற்று முரண். உலகின் பெரும்பான்மையான பொருளாதாரச் செயல்பாடுகள் நடக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு ஒட்டுமொத்த உலகமும் திரும்பிக் கொண்டிருக்கிறது.
காலநிலை நெருக்கடியால் பெரும்பாலும் தெற்கத்திய உலகு (Global South) மோசமாக பாதிக்கப்படும் என்றே காலநிலை இயக்கம் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. இந்தப் பெருந்தொற்று, தொழில்சார் மையங்களான வுஹான், வடக்கு இத்தாலி மற்றும் நியூயார்க்-ஐ முதலில் தாக்கியது, மேலும் காட்டுத்தீ அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை நாசமாக்கியுள்ளது. பெருகிவரும் காலநிலை தாக்கங்களின் உலகளாவிய இலக்குகள் வரவிருக்கும் ஆண்டுகளில் வேண்டிய நடவடிக்கை எடுக்க பெரியதொரு தூண்டுதலை உருவாக்குமா?
தெற்கத்திய உலகிலும் இந்தியாவிலும் நாம் வாழ பழக்கப்படுத்திக் கொண்ட அதே பேரழிவு வகைகள் தான் இன்று தங்களை மற்ற பகுதிகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனக்கு நினைவிருக்கிறது 1970-கள் மற்றும் 1980-களில் நாம் எப்போதெல்லாம் பேரழிவுகளால் வெள்ளங்களால், வெப்பக் காற்றால் பாதிக்கப்பட்டோமா அப்போதெல்லாம் மேற்கத்திய நண்பர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். ஆனால் இப்போது நடப்பது தலைகீழாக உள்ளது. பிரிட்டனை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது அசாதாரணமான வானிலைகளால் வடக்கு இத்தாலியும் ஜெர்மனியும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு இதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத ஒரு அரிய விஷயமாக இருந்திருக்கும். நமக்குப் பழக்கப்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் அரசியல் பேரழிவுகள் பலவும் இன்று மிகவும் நிலைபெற்ற ஜனநாயக நாடுகளில் சர்வசாதாரணமாக அதிகரித்திருக்கின்றன.
மேற்கில் இருக்கும் காலநிலை ஆர்வலர்கள் சொல்வது போன்று உலகில் ஏழ்மையான பகுதிகள்தான் முதலில் தாக்கப்படும் என்பதை நான் நம்பியதே இல்லை. சொல்லப்போனால் ஏழ்மையான பகுதிகள் பாதிப்படையும். உதாரணமாக (Sahel) சகேல்-ஐச் சொல்லலாம். ஆனால் பெருந்தொற்றைப் போலவே காலநிலை மாற்றத்தால் பாதிப்படைதலுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தித்திறனுக்கும் தொடர்பு கிடையாது. நாம் எதிர்பார்க்காத வகைகளில் காலநிலை நெருக்கடி நடந்தேறும். தனிநபர் வருமானத்தில் மிகவும் குறைந்த நாடான வியட்நாமில் மிகச் சிறந்த கோவிட் முடிவுகள் வெளிவந்திருக்ககின்றன இதில் சிறப்பாகச் செயல்படும் நாடுகள் சில ஆப்பிரிக்காவில் உள்ளன. பெருந்தொற்றின் தொடக்கத்தில் அமெரிக்க கொடையாளர்கள், மெலிண்டா கேட்ஸ் போன்றவர்கள் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டு ‘ஆப்பிரிக்கா கவலைக்கிடமாகப் போகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் சோமாலியாவில் இருந்து மருத்துவர்கள் இத்தாலிக்கு அனுப்பப்பட்டனர். மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனும் காலநிலை நெருக்கடியைக் கணிப்பதற்கு உகந்ததல்ல. நாம் இன்னும் எதிர்மறையான ஒன்றைக் காண்கிறோம். சுற்றுச்சூழல் தலையீடுகள் மிகவும் தீவிரமாக இருந்த உலகின் பகுதிகளில் குறிப்பாக ஐரோப்பியத்தைப் போன்று காட்சியளிக்க வேண்டி சூழலியல்களையே மறுபொறி (re-engineer) செய்த கலிபோர்னியா, கிழக்கு ஆஸ்திரேலியா பகுதிகளைக் காலநிலை நெருக்கடி அதிகமாக தாக்கியுள்ளது. காலநிலை இயக்கம் உலகின் ஏழ்மையானவர்களைக் கடுமையாக தாக்கும் என்ற கருத்தை முன்வைப்பதில் தவறு செய்தது. ஒரு தார்மீக பதிலை உருவாக்குவதற்குப் பதிலாக, மேற்கத்தியத்தினர், “அப்படியென்றால் சரி, நமக்குப் பாதகமில்லை” என்று சிந்திக்க வைத்தது.
சமீப காலமாக இளைஞர்களின் காலநிலை மற்றும் பேரழிவு புரட்சி குழுக்கள் எழுவதைக் காண முடிகிறது. இந்தப் புதிய காலநிலை இயக்கம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கிரெட்டா துன்பெர்க், Extinction Rebellion மற்றும் Sunrise Movement மூலம் நடந்தவை மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளன. மாற்று அரசியலைக் கையாள்வதால் இந்த இயக்கங்கள் பொது கவனத்தை ஈர்த்துள்ளன. சூழல்சார் விழிப்புணர்வு என்பதைத் தாண்டிய மிகவும் உட்புயசார் (visceral) விஷயங்களுக்காக முறையிடும் அரசியல் அது. இறுதியாக, பூமி எனும் ஜீவனுள்ள ஒன்றின் மீதான நமது உணர்வுகளை நோக்கி முறையிடும் அரசியல் அது. கதைசொல்லல் இந்த இயக்கங்களுக்கு மிகவும் அடிப்படையானது. அதனால் தான் அவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கதைசொல்லிகளோடு கைகோர்த்துக்கொண்டுள்ளனர்.
Green European Journal இதழுக்காக அதன் ஆசிரியர் ஜேமி கென்ட்ரிக் எடுத்த நேர்காணல்.
தமிழில் ப்ரீத்தி வசந்த் – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வானொலித் தொகுப்பாளினி; பல்வேறு இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதியுள்ளார். குழந்தைகள் இணைய இதழான பூஞ்சிட்டு-வில் பங்களித்துவரும் இவர், குழந்தைகளுக்கான ஒலிப் புத்தகங்களுக்குக் குரல் கொடுக்கிறார்.