“அந்த மரத்தின் கனிகள் மிகுந்த ருசியாகவும் அபூர்வமான நறுமணம் வீசக்கூடியதாகவும் இருந்ததால் அதில் வசித்த குரங்குகளாகிய நாங்கள் மிகுந்த அக்கறையோடும் எச்சரிக்கையோடும் இருந்தோம். எந்த நிலையிலும் ஒரு பழமும் கீழே விழ அனுமதித்ததில்லை. இருப்பினும் அது நடந்தேறியது. கங்கை ஆற்றின் மீது நீண்டிருந்த கிளையிலிருந்து நன்கு பழுத்த கனியொன்று விழுந்து மீனவனின் வலையில் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டது.
‘இத்தனை மினுமினுப்பும் சுகந்தமும் கூடிய கனியை இதற்குமுன் நான் கண்டதில்லை….’ என்று பனாரஸ் மன்னனிடம் கண்கள் விரிய மீனவன் அதை அர்ப்பணித்தான்.
அதன் சுவையில் ஆச்சரியமடைந்த வேந்தன் படை பரிவாரங்களுடன் இசை வாத்தியங்களும் தாரைத்தப்பட்டையும் முழங்க வேடுவர்படை சூழ ஆசையோடு அம்மரத்தை அடைந்தபோது, கூட்டம் கூட்டமாய் எங்களைக் கண்டதும், கோபத்தில் கொன்று விரட்டும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டான்.
என் ஒட்டுமொத்த வானரக் கூட்டமும் உயிர்பயத்தில் கூக்குரலெழுப்பியபடி குரங்கரசனாகிய என்னிடம் மன்றாடின. ஏனைய வானரங்களை விட ஓங்கிய பெருத்த சரீரம் கொண்டிருந்த நான், நீண்ட உறுதியான மூங்கில் கம்பு ஒன்றை எங்கள் மரத்திற்கும் கங்கையின் மறுகரையில் நிற்கும் பெரிய ஆலமரத்திற்கும் இடையே பாலமாய்க் கட்டினேன். ஆனால் துரதிர்ஷ்டம்! மூங்கிலின் நீளம் போதவில்லை. இன்னொருபுறம் கூரிய அம்புகளுக்கு அடிபடும் என் வானரங்களின் பெருவோலம்!
அந்தநொடியில் தான் முடிவெடுத்தேன்…
மூங்கில் கழியின் ஒருமுனையை எங்கள் மரத்திலும் மறுமுனையை என் கணுக்காலிலும் கட்டிக்கொண்டு அக்கரை மரத்தை எம்பிப்பிடித்து, என்னை நானே பாலமாக்கினேன். என் மீதேறி வானரங்கள் தப்பவும் அம்புகள் என்னைக் குறிவைத்தன. ஆனால் நான் சிறிதும் பிடி நழுவவில்லை. என் கூட்டத்திற்காக உயிரையும் பணயம் வைத்த என்னுடைய செயலைக் கண்டு, மன்னனுக்கு என் மீது பெருமதிப்பும் இரக்கமும் உண்டாயிற்று. பாணங்கள் நின்றன. நான் கீழே விழாமலிருக்க தடித்த அகலமான துணியைக் கையில் விரித்தபடி என்னை இறக்கினர். அதற்குள் என் வானரக்கூட்டம் முழுவதும் மறுகரைக்குத் தப்பியிருந்தது.
அம்புக்காயங்களுடன் மன்னனின் மடியிலே மரிக்கும் முன்பு சொன்னேன், ‘உயிர்த்தியாகத்தை விட ஆகச்சிறந்த உன்னதம் வேறென்ன இருக்க முடியும்?’ “
காய்ந்த மரப்பட்டை நிறத்தில் கற்புத்தர் ஜடைமுடி அசைய உதட்டை விரித்தும் குவித்தும், இப்படிச் சொல்லி முடிக்கவும் எதிரே நின்றிருந்த வழிப்போக்கன் மெல்லிய சிரிப்போடு கேட்டான்…
“சரி! பிறருக்காக உயிர்த்தியாகம் செய்தீர்களே, அப்பிறவியில் போதித்துவம் அடைந்தீர்களா?”
அகண்ட இமைகளை மூடிக்கொண்டு தலையை இடதும் வலதுமாய் அசைத்த புத்தர், “இல்லை! அப்பிறவியில் என்னால் ஞானம் அடையமுடியவில்லை…”
புத்தரின் பெருமூச்சு கானகத்தின் நிறைந்த மௌனத்தைக் குலைத்தது. அத்திமர இலைகள் லேசாய் சலசலத்து அடங்கின. நிலவொளியின் வெள்ளி முலாம் பூசப்பட்ட அத்தி இலைகளை அண்ணாந்து பார்த்தபடியே சொன்னார்…
“என் குரங்குப் பிறவியில் நான் ஞானம் அடையவில்லைதான். ஆனால் அதை நோக்கிய பாதையில் இன்னும் கொஞ்சம் பிரயாணப்பட்டேன் என்று சொல்லலாம்… என்னுடைய மற்ற அவதாரங்களிலும் இதேபோல் நான் செய்த நற்செயல்களின் கூட்டுப்பலனால் தான், இறுதியாக ‘சித்தார்த்தன்’ பிறவியில் என்னால் ஞானம் அடைய முடிந்தது!
உண்மையும் அதுதானே! இப்புவியில் உயிர்த்தியாகம் தானே ஆகச்சிறந்தது…”
“மடத்தனம்…. “ எனச் சத்தமின்றி முணுமுணுத்த வழிப்போக்கன், புத்தனுக்கும் தனக்கும் மத்தியில் தன் கையிலிருக்கும் தீவட்டியை அழுத்தமாய் மண்ணில் ஊன்றினான். தன் பயணப்பொதியை கீழே வைத்துவிட்டு புத்தரின் நேரெதிரே இருக்கும் ஆலமரத்தடியில் அமர்ந்தபோது, அருகிலிருந்த புதருக்குள் சலசலப்பு…
பயந்து போனவன் ஒளிந்துகொள்வதற்குள் தன் அடர்த்தியான வெள்ளை ரோமங்களை உதறியபடி செடிகொடிகளின் மறைவிலிருந்து நீண்ட விடைத்த காதுகளுடன் வெளிப்பட்ட முயலொன்று கண் இமைக்கும் நேரத்தில் குறுக்காக ஓடி இன்னொரு புதருக்குள் மறைந்து போனது.
“ச்ச! பயந்துட்டேன்….” என முகத்தின் வியர்வையை வழிப்போக்கன் துடைத்துக்கொள்ளவும் கௌதமர் மெல்லப் புன்னகைத்தார்.
முழுவட்ட நிலவைக் காட்டி வழிப்போக்கனிடம் கேட்டார் “நிலவில் தெரியும் கரையை உற்றுப்பார்த்தால் எதுபோல் தெரிகிறது??”
மௌனமாய் அண்ணாந்து பார்த்தவன் “இப்போது பார்த்த முயலின் சாயல்…”
“உண்மைதான்…. நிலவில் தெரிவதும் ஒரு முயலின் பிம்பம் தான்…”
“உன்னைப் போன்ற ஆனால் சாந்தமான வழிப்போக்கன் ஒருவன் ( இதைச் சொல்லும்பொழுது புத்தரின் முகத்தில் மெல்லிய புன்னகை…) நடுக்காட்டில் பசியில் வாடுவதைப் பார்த்து, அவன் குளிருக்கு மூட்டிய நெருப்பில் விழுந்து தன்னையே உணவாக அளிக்கத் துணிந்த முயலின் தியாகத்தை மெச்சி, வழிப்போக்கனின் வேடத்தில் வந்திருந்த கடவுள், காலத்திற்கும் அழியாதபடி அந்த முயலின் உருவை முழு நிலவில் கரையாய் வரைந்தது தான் அது…”
“உயிர்த்தியாகம் என்ற கூற்றைவிட உலகில் பெரிய பித்தலாட்டம் வேறெதுவுமில்லை… மரணித்தவனுக்குச் சொல்லும் சப்பைக்கட்டு… ”
வழிப்போக்கனின் தெளிவான சப்தமான வார்த்தைகளைக் கேட்டு பாதி மூடியிருந்த கமலவிழிகள் அகலமாகத் திறந்தன…
“இதில் என்ன பித்தலாட்டம் இருக்கிறது…?”
“அதையும் தாண்டி எளிதில் ஜீரணிக்க முடியாதவை நிறையவே இருக்கின்றன…….” என அழுத்தமாய்ச் சொன்னவன், சில நிமிடம் மௌனமாய் இருந்துவிட்டுப் பின்வருமாறு சொல்லத் தொடங்கினான்…
“நல்ல வருவாய் ஈட்டமுடியாத கணவனுக்கு, தினமும் மது அருந்த மட்டும் எப்படியோ காசு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு இரவு திரும்பும்போது அந்த வீட்டின் ஒற்றை விளக்கு வெளிச்சம் மட்டுமே வீதியின் இருட்டோடு போராடியபடி இருக்கும். தந்தையின் காலடிச்சப்தம் கேட்டதுமே சிறுவன் பதற்றம் கொள்வான். தூங்காவிட்டாலும் கண்களை இறுக மூடியபடி படுத்திருப்பான். அப்படிப் பாசாங்கு செய்வதால், ஏதோவொரு காரணம் கண்டுபிடித்து தன்னை அடித்து இருட்டுக்குள் வெளியே தள்ளும் அப்பாவிடமிருந்து தப்பித்து விடலாம் என்பது அவன் நம்பிக்கை. ஆனால் பெரும்பாலான நம்பிக்கைகளைப் போல் அதுவும் தோல்வியில் தான் முடியும்.
சிறுவனின் தாய் அதற்கு நேரெதிர். நித்திய காருண்ய முகம். இந்த ஊரிலே தன் தாயை விட அழகி யாருமில்லை என்றே நினைத்தான். அவள் உரக்கப்பேசியதும் இல்லை… வறுமையை நொந்துகொண்டதும் இல்லை… கணவன் வரும்வரை உண்ணாமல் உறங்காமல் காத்திருப்பாள். எதற்கு? மிதி வாங்கவும் கேவலமான வசவைக் கேட்கவும்…
‘அந்த மனுசனுக்கு இப்போ நம்மள நல்லா வச்சுக்க முடியலயேன்னு வருத்தம். அதான் குடிக்கறாரு…. பாவம்! வெளிய நாலு இடம் போய்வர ஆம்பள வேறென்ன செய்வான்…’
வெறுப்பின் துளி சிறிதும் இல்லாமல் தன்னை ஆற்றிக்கொள்வதோடு சிறுவனையும் சாந்தப்படுத்துவாள். எப்படி தன் மனைவியால் இத்தனை சகிப்போடும் உண்மையான அன்போடும் எப்போதும் ஒரேமாதிரி தன்னை எதிர்கொள்ள முடிகிறது? என்ற எண்ணம் அழுத்தும்போதெல்லாம் அவன் இன்னும் இரக்கமற்றவனாக நடந்து கொள்வான்.
ஆனால் ஒருவிடியல் பொழுதில் அந்த அதிசயம் நிகழ்ந்தது…
‘இனி மது அருந்தப்போவதில்லை… பக்கத்து ஊரிலேயே புது வேலையொன்று கிடைத்திருக்கிறது. நேரத்திற்கு வீடு திரும்பிவிடுவேன்…’ என்று அவன் சொன்னதை, வசவும் அழுகையும் மட்டுமே கேட்டுப்பழகிய அவ்வீட்டுச் சுவராலும் நம்பமுடியவில்லை.
‘நான் திரும்பி வந்ததும் கடைத்தெருவிற்குத் துணி வாங்கப் போகலாம்…’ என்று சொல்லிவிட்டு அவன் ஆற்றுக்குக் குளிக்கப் போகவும், துள்ளிக் குதித்த சிறுவன் இருப்பதிலேயே நல்ல உடையை அணிந்து தயாரானான். ஈரக்கூந்தலை உலர வைத்தபடி மனைவியும் வாசலில் காத்திருந்தாள். ஆனால் நேரமாகியும் கணவன் வீடு திரும்பவில்லை. செய்தி மட்டும் தான் வந்தது. குளிக்கும்போது ஆற்றுச் சுழலில் சிக்கி இறந்துவிட்டதாக…. ஈரம் காயாத தலைமுடியை விரித்துப்போட்டு முந்தானை வீதியில் புரள அம்மா ஓடும் திசையைப் பார்த்தபடி சிறுவன் நின்றிருந்தான்.
‘யாரோ ஒருத்தன காப்பாத்தப் போய் இவரு சுழியில சிக்கிட்டாரு… பாவம் இனி இந்தக் குடும்பம் என்ன செய்யும்…’
நடுவீட்டில் அப்பாவின் சவத்தைச்சுற்றி கூட்டம் முணுமுணுத்த போது சிறுவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் தன் அம்மாவால் இத்தனை சப்தமாகக் கதறி அழமுடியும் என்று அன்று தான் அவனுக்குத் தெரியும்…”
இந்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டு புத்தனைப் பார்த்துக் கேட்டான்…
“இப்போது சொல்லுங்கள்… உயிர்த்தியாகம் அத்தனை உன்னதமானதா? யாரோ ஒருவனுக்காக அவர் ஏன் தன் உயிரைப் பணயம் வைக்க வேண்டும்? இதனால் அவருக்கு மோட்சம் வாய்க்கப்பெறும் என்றால் அது எத்தனை பெரிய பொய்… இத்தனை நாட்கள் தன் மனைவியையும் மகனையும் வெறுப்போடு நடத்தியதற்கான காலத்தின் பழிவாங்குதலைத் தவிர இது வேறென்ன? பல நாட்களுக்குப் பின் அப்பா அம்மாவோடு சந்தோஷமாக வெளியே போகலாம்…. என்று காத்திருந்த சிறுவனின் ஏமாற்றத்திற்கு நீங்கள் சொல்லும் உயிர்த்தியாகமும் ஞானமும் எப்படிப் பதிலாய் அமையும்?”
வழிப்போக்கனின் பேச்சில் வேகம் கூடியிருந்தது. பலநாட்களாய்த் தேக்கி வைத்த மழையை மொத்தமாய்ப் பொழிந்து தீர்த்த வானத்தின் நிம்மதி அவன் முகத்தில். அதேநேரம் இனம்புரியாத தவிப்பும்….
புத்தர் மிக நிதானமாகச் சொன்னார்…
“மரணம் என்றுமே அத்தனை எளிதில் கடக்கமுடியாத மிகவும் சிக்கலான விஷயம் தான். ஆனால் ஒரு குடிகாரனாய்… சரிவர குடும்பம் நடத்தாதவனாய்… மகனிடமும் மனைவியிடமும் அன்பு வஞ்சிப்பவனாய்… வாழ்நாள் முழுவதும் காரணமற்ற வெறுப்புடனே கழித்தவன், தன் மீதான கரையைப் போக்கிக்கொள்ள கிடைத்த வாய்ப்பை பெருங்கருணையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறான். தன் இறப்பால் அவன் மேன்மை அடைந்தானா இல்லையா என்ற கேள்வியை விட அவனால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதுதானே உன்னதம்!!”
“மரணத்தில் என்ன உன்னதம்? ஒரு தந்தையாய்… கணவராய்… அவர் தோற்றுப்போனவர் தான். ஆனாலும் யாரைப் பற்றியும் யோசிக்காமல் அக்கணத்தில் அவர் எடுத்த முடிவு எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அதோடு அது முடியவில்லை. வாழ்நாள் சாபமாக சிலரைத் துரத்தியது….
‘அவரது இறப்புக் காரியங்களில் ஒரு பூச்சியைப் போல் ஒருவர் ஒடுங்கியிருந்தார். உற்றார் உறவினர் வற்றிய பின்னும் அவரது இருப்பு மட்டும் தொடர்ந்தது. எப்போதும் அந்த வீட்டு வாசலிலேயே நின்றிருப்பார். ஜன்னல் வழியே சிறுவன் அவரை எட்டிப்பார்க்கும் போது முதுகில் பளாரென்று அம்மாவின் அறை விழும். பின் ஜன்னல் கதவுகளை வேகமாக அடைத்துவிட்டு அவளும் கேவிகேவி அழுவாள். கண்ணீர் முட்டிய கண்களோடு கன்னங்கள் அதிர மிகச் சத்தமாய்…
கட்டியவனை அற்பமாய்ப் பலிகொடுத்தவள் வாசலிலேயே அதற்கான காரணம் காத்துக்கிடக்க வேறென்ன செய்வாள்? இறந்துபோன கணவரால் காப்பாற்றப்பட்டவர் காலையும் மாலையும் வீட்டுவாசலில் ஒரு யாசகனைப் போல் காத்துக் கிடந்தார். அந்தக் காத்திருப்பு, அவர் தேடும் ஆறுதலைக் கொஞ்சமேனும் கொடுத்திருக்க வேண்டும். அதையே வழக்கமாக்கிக் கொண்டார். தொடர்ந்து தான் நிராகரிக்கப்படுவதையும் சபிக்கப்படுவதையும் அவர் பொருட்படுத்தவில்லை.
வீட்டுச் சாமான்களைத் தானாகவே முன்வந்து வாசலில் வாங்கி வைத்தார். சிறுவனுக்குக் கடைத்தெருவிலிருந்து தினமும் தின்பண்டம் வாங்கிக் கொடுக்கலானார். ஒருகட்டத்தில் ஜன்னல் கதவுகள் சாத்துவது நின்றுபோனது, அதேபோல் அவளது கண்ணீரும்… கணவனை இழந்தவள் ஒரு வருடத்திற்குள் அதற்குக் காரணமானவனையே மறுமணம் முடிப்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, சிறுவனும் தான்… ஆனால் அதில் அவனுக்குப் பெரிதாய் ஆட்சேபனையிருக்கவில்லை. சொல்லப்போனால் ஒருவிதத்தில் நிறைவாகவே உணர்ந்தான். ஏனென்றால் அவன் பயந்ததைப் போல், புது அப்பா பின்னிரவில் மது அருந்திவிட்டு வீடு வருவதில்லை. காரணமின்றி அடிக்கவுமில்லை. கேட்காமலேயே புதுத்துணியும் விளையாட்டுப் பொம்மைகளும் கூட வாங்கித்தருகிறார். இதுபோக கால் வயிறு அரை வயிறு என்று சாப்பிட்டது பழைய கதையாகிவிட்டது. இப்போது விரும்புவது வயிறுமுட்டச் சாப்பிடக் கிடைக்கிறது.
ஒருகட்டத்தில் நல்லவேளை அப்பா இறந்துபோனார் என்று நினைத்தேன்…
இனி அந்தச் சிறுவனை நான் என்றே குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அதுதான் நான் சொல்லப் போவதற்கும் நியாயம் சேர்க்கும்….”
புத்தனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி தலையைத் தாழ்த்திக்கொண்டான். நடுக்காட்டின் மத்தியில் வட்டமாய்ச் சமன் செய்யப்பட்டிருக்கும் அந்த இடம் நிலவொளித் தடாகமாகத் தெரிந்தது. ஒரு கொக்கைப்போல் தலை தாழ்த்திக் கொண்டிருந்தவன் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தான். பௌர்ணமியின் வெளிச்சத்தில் புத்தர் வெள்ளைப் பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்டதைப் போல் தெரிந்தார். கௌதமரின் முகம் சலனமற்று இருப்பதைக் கண்டு சற்று ஆசுவாசமாக உணர்ந்தவன், மீண்டும் பேசலானான்…
“அம்மாவிடம் அவர் சத்தமாய்ப் பேசியோ திட்டியோ கை ஓங்கியோ நான் பார்த்ததில்லை. அம்மாவும் ‘உன்னால் தான் நான் கணவனை இழந்தேன்’ என அவரிடம் முறையிட்டோ அழுது தீர்த்ததோ கிடையாது. என்னிடமும் அதைப்பற்றிப் பேசியதுமில்லை. தனக்குள் அவள் அழுவதும் புலம்புவதும் குறைந்திருந்தது அதேநேரம் அவளது முகம் பொலிவிழந்து இறுக்கம் கூடிவருவது வெளிப்படையாகவே தெரிந்தது. வருடங்கள் உருண்டாலும் எத்தனையோ புதுப்பொருட்களைக் கொண்டு வீட்டை நிறைத்தாலும் நிரம்பாத வெறுமை ஒன்று நித்தியமாக இருந்தது.
‘நீ அவளோட மகன் தான….
புருஷன காவு வாங்குனவனையே கட்டிக்கிட்டவ தான…
என்ன பொம்பள அவ?’
அம்மாவின் மறுமணத்திற்குப் பின் சிறுவயதிலிருந்தே இதேபோன்ற பேச்சுகளுக்கு நான் பழக்கப்பட்டிருந்தாலும் மீசை அரும்பத் தொடங்கியதும் ஊரே என்னைப் பார்த்து உள்ளூர சிரிப்பதாகவும் ஏளனமாய்ப் பார்ப்பதாகவும் தோன்றியது. எல்லாம் அம்மாவால் தான்…. அவளால் மட்டும் தான்… பிறரது பார்வையில் நான் ஒரு புழுவைப் போல் நெளிவதற்கு அவள் ஒருவளே காரணம்!
அந்த எண்ணம் என்னை முழுதாய் ஆட்கொள்ளவும் அம்மாவின் ஒவ்வொரு செயலையும் எடைபோடத் தொடங்கினேன். அதேநேரம் அவளோடு நான் பேசுவதும் குறைந்திருந்தது.
சிறு பொறியைப் பெரிதாக்கி ‘ நீ எப்படி எனக்கு அப்பாவாக முடியும்? நீ ஒரு கொலைகாரன்!‘ என வேண்டுமென்றே கத்தினேன். ஆனால் அவர் எந்த எதிர்வினையும் காட்டாதது என்னை இன்னும் மூர்க்கப்படுத்தியது.
என்னுள் நிகழும் மாற்றங்களை அம்மாவும் கவனிக்காமல் இல்லை. இருந்தும் மௌனமாகவே இருந்தாள். அந்த அமைதி என்னை மேலும் கோபப்படுத்த ஒருநாள் நேரடியாகவே கேட்டுவிட்டேன்…
‘எப்படி அப்பா சாவுக்கு காரணமானவன் கூட உன்னால ஒண்ணா குடும்பம் நடத்த முடியுது? அப்பாவே எதிர்பாராம இறந்தாரா இல்ல நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து திட்டம் போட்டு கொன்னுட்டீங்களா…? என்ன பொம்பளடீ நீ… உனக்கு உடம்பு கூசல…’
அம்மா பதிலேதும் சொல்லவில்லை. சூன்யமான பார்வை மட்டுமே. ‘நீ இதைக் கேட்கத் தகுதியானவனா…?’ என்று வினவும் ஏளனம் ததும்பும் பார்வை. அவளிடமிருந்து நான் முற்றிலுமாக விலக அதுவே போதுமானதாக இருந்தது.
‘நடிக்காதே! சிறுவயதில் நீ எப்போதும் வெறுத்த அப்பா! அதுவும் அவர் இறந்து இத்தனை வருடங்களான பின் இப்போதென்ன திடீர் பாசம்?’ என்ற கேள்விகளால் என்னை நானே வீட்டைவிட்டு விரட்டினேன். வெளியூரில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்து அங்கேயே வேலை தேடிக்கொண்டேன். வீட்டுக்குச் செல்வதும் அறவே நின்றுபோனது. ஒருவிதத்தில் அம்மா மீதான என் கோபமும் வெறுப்பும் அவளுக்கு நான் கொடுக்கும் தண்டனை என என்னை நானே ஆற்றிக்கொண்டாலும், உண்மையில் அவளின் இறுக்கமான மௌனத்தை எதிர்கொள்ள முடியாமல் தான் விலகி ஓடினேன்.
மரணப் படுக்கையில் பின்னாளில் அம்மாவைப் பார்த்தபோது முகம் உலர்ந்து இறுக்கம் தளர்ந்திருந்தது. சுவாசம் முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது. பல நாட்களுக்குப் பிறகு என்னைப் பார்த்தவள் தன் கட்டில் பக்கம் அமரச்சொல்லி என் முகத்தை மெல்ல வருடினாள். எங்கள் இருவரைத் தவிர அறையில் கனத்த இறுக்கம் மட்டுமே சூழ்ந்திருந்தது.
‘உன் அப்பாவின் மரணத்திற்குக் காரணமானவரையே நான் மறுமணம் செய்துகொண்டதற்கு, நீ நினைப்பதைப் போல் ஏழ்மையோ உடல் தேவையோ காரணமல்ல…’ என்றவள் அந்தக் கோர உண்மையை அப்போதுதான் என் காதில் மெல்ல கிசுகிசுத்தாள்…
பேசிக்கொண்டிருந்த வழிப்போக்கனின் குரல் உடைந்து அமைதியானான். இரவு காற்றின் குளிர்ச்சியும், கானகத்தின் அமைதியும், புத்தனின் கனிவும், அவனது தயக்கத்தின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
அவனது மௌனத்தைப் பார்த்து புத்தர் புருவத்தை உயர்த்திக் கேட்டார்… “அப்படி என்ன சொன்னாள்?”
வழிப்போக்கன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு உள்ளங்கைகளைச் சூடேறத் தேய்த்தான். கீழே கிடக்கும் பயணப்பொதியை மடியில் எடுத்து வைத்துக் கொண்டான். சொல்ல வேண்டியதை உதடு மட்டும் தனியாக ஒத்திகை பார்த்துக்கொண்டது. கண்களை அனிச்சையாக மூடிக்கொண்டான். இதையெல்லாம் ஏன் செய்தான் என்று யோசிக்கத் தொடங்கியதுமே மீண்டும் பேசலானான்….
“அம்மா என் உள்ளங்கைகளை இறுகப் பற்றியபடியே சொன்னாள்…
‘நம்மோடு இருக்கும் ஒவ்வொரு பொழுதும் குற்றவுணர்வு ஒரு கரையானைப் போல் அவர் மனதை அரித்துக் கொண்டேயிருக்கும்… அதிலிருந்து காலத்துக்கும் அவரால் விடுபடவே முடியாது… என் முகத்தை நெருக்கத்தில் பார்க்கும்போதெல்லாம் தனக்குள் அவர் பொசுங்குவதை என்னால் உணரமுடியும்… அந்த நிரந்தர அவஸ்தைதான் அவருக்கான தண்டனை! எனக்கான மனநிறைவு!! அதற்காகத்தான் அவரையே மறுமணம் செய்துகொண்டேன்…. என் காலத்துக்குப் பின்னும் அவருக்கு நிம்மதி இருக்காது. என் நினைப்பும் ஒரு எடைக்கல் தான். நீயும் கூட….’
இதைக் கேட்டதும் என் கையை அவளின் பிடியிலிருந்து விலக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. அவளது கரங்களும் அவளின் சொற்களைப் போல் உறைந்திருந்தது. இறக்கும் தறுவாயில் அவள் முகத்தில் பேரமைதி… அந்த அமைதியில் ஒளிந்திருக்கும் பகைமையும் குரோதமும் எத்தனை குரூரமானது… முதல்முறை என் அம்மாவின் முகத்தைப் பார்க்கவும் அஞ்சினேன்…” என்றுவிட்டு வழிப்போக்கன் காற்றின் இசைவுக்கு இழுபடும் தீவட்டியின் நெருப்புப் பொறிகளைப் பார்த்தபடி இருக்க, புத்தரே பேசத் தொடங்கினார்…
“நீ என்ன நினைக்கிறாய்…? மறுமணம் செய்துகொண்டு உன் அம்மா தான் ஆசைதீர அவரைப் பழிதீர்த்துக்கொண்டாள் என்றா? ஒருவிதத்தில் இது உண்மையாகவே இருந்தாலும், தனக்காக உயிர் துறந்தவனின் மனைவியைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்த போதே, அது வாழ்நாள் முழுவதும் தனக்கு ஏற்படுத்தப் போகும் ரணத்தை நிச்சயம் அவன் அறிந்தேயிருக்கிறான். அவனாகவே ஏற்றுக்கொண்ட தண்டனை தான் அது. உன் அம்மாவின் மனச் சாந்திக்காக… சொல்லப்போனால் நானும் இதேபோன்ற வருடங்கள் கடந்த வெறுப்பை எதிர்கொண்டிருக்கிறேன்…”
நீண்டதொரு பெருமூச்சிற்குப் பின் பேச்சைத் தொடர்ந்தார்…
“அப்பிறவியில் நான் ‘சதந்தா’ இன யானையாக ஜனித்திருந்திருந்தேன். அது என் முந்தைய பிறவியின் நற்பயன்தான் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் மற்ற யானைகளைவிட ‘சதந்தா’ இன யானைகள் உருவத்தில் நான்கு மடங்கு பெரியது. மாபெரும் ஆகிருதியோடு வெண்ணிற மேனியும் ஆறு தந்தங்களும் கொண்டவை. மத்தகமும் பாத நகக்கண்களும் செந்நிறம்… அத்தனை சிறப்புமிக்க அரிய ‘சதந்தா’ யானைகளின் அரசனாகிய நானும் என் இரு மனைவியரும் ஒருநாள் ஹிமாலயத்தில் ஊற்றெடுத்தோடும் ஏரியில் நீராடிவிட்டு உடல் ஈரம் உலர பேசியபடியே கானகத்தில் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தோம்…
என் ஆறு தந்தங்களில் நடுப்புறத் தந்தங்கள் இரண்டும் மிகப்பெரியவை. நீண்டு வளைந்திருக்கும்! அனிச்சையாக மத்தகத்தை நான் சிலிர்ப்பியபோது எதிர்பாராமல் என் நடுத்தந்தம் ‘சால்’ மரத்தின் மீது மோதிவிடவும், காய்ந்த இலைகளும் மரப்பட்டைகளும் அதில் ஊறும் சிவப்பு எறும்புகளும் என் மனைவி ‘சுல்லசுபத்தா’ மீது சிதறி விழுந்தது. பிரச்சனையே என் இன்னொரு மனைவியான ‘மஹாசுபத்தா’ மீது இளஞ்சிவப்பு சால்மரப் பூக்கள் மட்டுமே உதிர்ந்து விழுந்ததுதான். நான் வேண்டுமென்றே அவளை மட்டும் அவமானப்படுத்தி விட்டதாக நினைத்த சுல்லசுபத்தா, கோபத்தில் என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள். திரும்பவேயில்லை.
‘சுல்லசுபத்தா’ இறந்துவிட்ட செய்தியும் மறுபிறவியில் வாரணாசியின் ராணியாக அவள் பிறந்திருப்பதும் பலவருடங்களுக்குப் பின் நான் அறிய நேர்ந்தபோது அவளுக்காக ஒருவிதத்தில் நான் சந்தோஷம் அடையத்தான் செய்தேன். ஆனால் மறுபிறவியிலும் என் மீதான கோபமும் வெறுப்பும் அவள் மனதில் துளியும் வற்றவில்லை என்பது எனக்குத் தெரியாது. என்னைப் பழிவாங்கும் பொருட்டு மன்னனிடம் என் தந்தங்கள் வேண்டுமென்று கட்டாயப்படுத்தவும், அரசன் ‘சோனுத்தரா’ என்ற திறமை வாய்ந்த வேடுவன் தலைமையில் ஒரு குழுவைக் காட்டிற்கு அனுப்பி வைத்தான்.
ஏழு வருடங்கள் ஏழு மாதங்கள் ஏழு நாட்கள் பயணம் செய்து நான் இருக்கும் இடத்தை ‘சோனுத்தரா’ அடைந்திருந்தான். ஏரியின் பக்கமாக ஆழமான குழியொன்றைத் தோண்டி இலை தழைகளை இறைத்து மூடிமறைத்து மரங்களின் பின்னால் ஒளிந்திருந்தான். எதிர்பாராத நான் குழிக்குள் தவறிவிழவும் மறைவிலிருந்து விஷ அம்புகள் பாய்ந்தன. மூர்க்கம் தலைக்கேறியது. செம்மணலை வாரியிறைத்து கானகத்தையே உலுக்கும்படி பிளிறினேன்… கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்தோடு குழிக்குள்ளிருந்து வெளிப்பட்டு அம்புகள் வரும் திசையை நோக்கி இடர்ப்படும் மரங்களை வேரோடு பெயர்த்து வீசியபடி நெருங்கியபோது, ஒரு துறவியின் வேடத்தில் வேடுவன் ‘சோனுத்தரா’ ஒளிந்திருப்பது தெரிந்ததும், அவனைத் தாக்க மனம் வரவில்லை. அவனும் தன் வில் அம்புகளை வீசி எறிந்துவிட்டு என் பேருரு முன் சரணாகதி அடைந்துவிட்டான். அவனுக்குத் தெரியும், அவனால் என்றுமே என்னைக் கொன்று வீழ்த்த முடியாதென்று.
‘உங்கள் தந்தங்களை நான் கொண்டுவரா விட்டால் எனக்கு மரணதண்டனை…’ என்பது ராணி ‘சுல்லசுபத்தா’ வின் கட்டளை என்று உடல் நடுங்கச் சொன்னான்.
ஆனால் என் தந்தங்களை நானாகவே முன்வந்து அர்ப்பணிக்காத வரை யாராலும் அதை அபகரிக்க முடியாது… அதுவும் நான் உயிரோடிருக்கும் பட்சத்தில்….
‘சுல்லசுபத்தா! நீ இதைத்தான் விரும்புகிறாயா??’
நான் அறுத்துக் கொடுத்த என் தந்தங்களை ‘சோனுத்தரா’ சுல்லசுபத்தாவிடம் சமர்ப்பித்தான்! இது நானாகவே சுல்லசுபத்தாவின் மனநிறைவுக்காக விரும்பி ஏற்றுக்கொண்ட தண்டனை… விளைவுகளின் தீவிரம் அறிந்தும் உன் அம்மாவை அவராக முன்வந்து மறுமணம் செய்துகொண்டது போல.
என்னதான் வெறுப்பும் பகைமையும் மனதில் மண்டிக்கிடந்தாலும் தூய அர்ப்பணிப்பை எதிர்கொள்ளும் வலு அதற்கு என்றுமே இருந்ததில்லை. உன் அம்மாவும் இதைத் தன் கடைசி நிமிடங்களில் உணர்ந்தே இருப்பாள்
என் அறுபட்ட தந்தங்களைப் பார்த்த மாத்திரத்தில் ‘சுல்லசுபத்தா’ உயிர் துறந்தாள்…”
புத்தனின் பதிலில் திருப்தியில்லாமல் வழிப்போக்கன் உச்சுக்கொட்டினான். தலையை இருபக்கமும் மாறிமாறி அசைத்தபடி இருந்தான். மௌனம் ஒரு கொடூர விலங்கைப் போல் இரத்தமும் சதையுமாய் அவனை விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட புத்தர்,
“எது உன்னை அலைக்கழிக்கிறது? தான் இறக்கும்வரை வன்மம் மாறாமல் பழிதீர்த்துக்கொண்ட உன் அம்மாவின் வெறுப்பா? இல்லை அதன் சூட்டில் ஒரு விட்டில்பூச்சி போல் நித்தம் பொசுங்கிக் கருகியவரின் தவிப்பா?? எதை எதிர்கொள்ள அஞ்சுகிறாய்?”
“உண்மையைச் சொல்லப்போனால் நான் என்னைப் பார்த்துத்தான் அஞ்சுகிறேன்…
இளைஞனாய் ஊரைவிட்டுச் சென்ற நான், அம்மாவின் இறப்புக்குப் பிறகு மீண்டும் அதே வீட்டில் தங்கியிருந்த போது, ஒரு நாள் என்னைத் தனியாக அழைத்தார். அம்மாவுடனான மறுமணத்திற்குப் பின் அவர் என்னிடம் இப்படித் தனிமையில் பேசியது கிடையாது. என்னை அமரச்சொன்னவர் கட்டுப்படுத்த முடியாத ஒரு குழந்தையைப் போல் அழத் தொடங்கினார்.
‘உன் அப்பா என்னால் தான் இறந்தார்…. நான் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் மரணபயம் என்னை எதுவும் செய்யவிடவில்லை. அவன் கண்கள் என்னை வெறித்தபடியே இருந்தன… கூக்குரல் எழுப்பவும் கதறவும் மட்டுமே என்னால் முடிந்தது. உன் அப்பா பரிதாபமாக இறந்துபோக நான்தான் காரணம்… நான் தண்டிக்கப்பட வேண்டியவன்… நான் அவனைக் காப்பாற்றியிருக்கலாம்…. உன் அப்பா என்னால் தான் இறந்தார்…”
அதையே திரும்பத்திரும்ப சொல்லி உடல் குலுங்க அழுதார். வருடங்கள் கடந்திருந்தாலும் ஒருபக்கம் அவர்மீது ஆத்திரமும், அதேநேரம் இருபது வருடங்கள் முன் நடந்த நிகழ்வுக்குத் தன்னை முழு காரணமாக்கி உடைந்து அழும் அவரைப் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்தது. அவர் என்னிடம் கோரியதெல்லாம் ஒன்றே ஒன்று… மன்னிப்பு!! அவரை என்றென்றைக்கும் பீடித்திருக்கும் குற்றவுணர்விலிருந்து விடுவிக்க அதுபோதும்.
ஆனால் மனித மனதின் ஆழத்தில் நீங்கள் அறிந்திராத வன்மம் ஒன்று உண்டு. தன்னிடம் கண்ணீர் மல்க ஒருவன் கையேந்தி நிற்கும்போது அவன் தன்னை கடவுளுக்கு நிகரானவனாய் நினைத்துக் கொள்கிறான். கண்களில் ஏளனப்பார்வை வந்துவிடும். தன் தயவுக்குக் காத்திருப்பவனின் தவிப்பைப் பார்த்து உள்ளூர பூரிப்படைவான்.
‘அப்பா அம்மாவின் காலம் முடிந்து விட்டது. நானும் இதையெல்லாம் கடந்துவிட்டேன்… பழசை மறந்துவிடுங்கள்’ என்று நான் சொல்ல நினைத்தும் மௌனமாகவே இருந்தேன். அவரது தவிப்பு நித்தம் தொடர்ந்தபோதும் நான் பொருட்படுத்தவில்லை. என் முகத்தை நேருக்குநேர் பார்க்க விரும்பாமல் அவர் ஒடுங்கிக்கொள்வதை நானும் விரும்பத் தொடங்கியிருந்தேன். ஒருவேளை நானும் அம்மாவைப் போல் அவரைப் பழிவாங்குகிறேனா?
‘என்னுடைய காலத்திற்குப் பின்னும் அவருக்கு நிம்மதி இருக்காது’ என என் முகத்தை வருடியபடி அம்மா சொன்ன கடைசி வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன். முதல்முறை என்னைக் கண்ணாடியில் பார்ப்பவனைப் போல் அணு அணுவாய் என் முகத்தை உற்று நோக்கினேன். கூம்பு வடிவ முகம்… தடித்த நாசி… அடர்த்தியான மீசை… இரு கன்னங்களும் மறையும்படி கருகருவென தாடி… சிறுவயதில் நான் பார்க்க அஞ்சிய என் அப்பாவின் முகம்!
இப்போது அவரது தவிப்புக்கான காரணம் புரிந்துபோனது. என் முகம் தான் அவரின் வாழ்நாள் சாபம். அதை எதிர்கொள்ளும் போதெல்லாம் நினைவுகள் காட்சிகளாய் விரிந்து அவரை அச்சுறுத்தும். இப்போது என் முன் இரண்டு வாய்ப்புகளே இருக்கின்றன…
‘பாவம்! அவர் தன் இறுதி நாட்களிலாவது நிம்மதியாய் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்…’ என நான் அவரைவிட்டு விலகிச் செல்வது இல்லை நான் பழிதீர்க்க நினைத்த… என் முகத்தைப் பார்க்கவும் தயங்கும்… ஒருவரின் தவிப்பை சதா கூடவே இருந்து உள்ளூர ரசிப்பது…”
வார்த்தைகள் உள்வாங்கின. பழுத்த ஆலிவ் மர இலைகள் உதிர்வதைப் பார்த்தபடியே இருந்தான். மெலிதினும் மெலிதான புன்னகை புத்தனின் முகத்தில்… அந்தப் புன்னகையின் தொடர்ச்சியாய் புத்தர் சாந்தமாகப் பேசத் தொடங்கவும் வழிப்போக்கன் மீண்டும் இடைமறித்தான்.
“ஒருவேளை என்னுடைய இந்தச் சூழலில் நீங்கள் இருந்திருந்தால்…? சகலமும் துறந்த புத்தனாக இல்லாமல் சதா துயரங்களில் உழலும் சாதாரண மனிதனாகச் சொல்லுங்கள், நீங்கள் இவ்விரண்டில் எதை மனதாரச் செய்திருப்பீர்கள்?”
புத்தர் ஒருகணம் திகைத்துப்போய் உற்றுப் பார்த்தார். வழிப்போக்கனின் முகம் இப்போது பாரமற்று இருந்தது. தன்னை நோக்கும் வழிப்போக்கனின் சலனமற்ற விழிகளிலிருந்து தன் பார்வையை விலக்கிக்கொண்டவர், காட்டுயானைக் கூட்டம் போல் தூரத்தெரியும் இருண்ட மலைத்தொடர்களை வெறித்தபடியிருந்தார். ஏதோ சொல்ல நினைத்து பின் மௌனித்துப் போன புத்தரின் கமலமுகத்தில் தீவட்டியின் செந்நிற ஜுவாலை நிழலாடியபடி இருந்தது. அடர்ந்த கானகத்தின் கனத்த நிசப்தம்.
-விஜய ராவணன்