சர்வம் செளந்தர்யம் -ரா.செந்தில் குமார்.


திகாலை மூன்று மணிக்கு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து, தோக்கியோ மார்க்கமாக சென்னை விமான நிலையம் வந்து சேரும் விமானம், தரையிறங்கிய அறிவிப்பை கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். அருகில் அமர்ந்திருந்த பெரியவர் ”ப்ளைட் வந்துடுச்சி” என்று தன் பெண்ணிடம் சொன்னார். தூக்க கலக்கத்தில் அமர்ந்திருந்த அந்த ஜீன்ஸ் பெண் பரபரப்படைந்தாள். ஒரு வருடம் முன்பு சென்ற கணவனை காணும் ஆவல், அவள் முகத்தில் தெரிந்தது. அமெரிக்க குடிமகனை பெற்று, கைக்குழந்தையுடன் வரப்போகும் பெண்ணை அழைத்துச்செல்ல, மற்றொரு குடும்பம் காத்திருந்தது. இவர்களை தவிர, விமான நிலையத்தில் கூட்டம் இல்லை. இப்படி அகால வேளையில், அமெரிக்காவிலிருந்து வருபவர்களை வரவேற்க, மிகநெருங்கிய சொந்தங்களை தவிர வேறு யாரும் வருவதில்லை. 

விமான நிலைய பரிசோதனைகள் முடிந்து, கெளதம் வெளியே வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகிவிடும். ஒரு காப்பி குடித்தால் தேவலாமென்று தோன்றியது.  இத்தனை வருடங்களில், அவன் பலமுறை இந்தியா வந்துசென்றபோதெல்லாம் வரவேற்க வந்ததில்லை. இந்த முறை அப்படியல்ல. எல்லாம் முடிந்து ஒரேடியாக வருகிறான். மனது கேட்கவில்லை. 

முக்கால் மணிநேரம் கழித்து, வெளியே வருபவர்களின் தலை தெரிந்ததும், கம்பி தடுப்பு அருகே போய் நின்றேன். பெரிய பெட்டிகள் இரண்டை டிராலியில் வைத்து தள்ளிக்கொண்டு செக்யூரிட்டி செக் முடிந்து வெளியே வந்தான் கெளதம். வெளிர்நீல நிற சட்டையணிந்து, மேலே கரும் நீலத்தில் ப்ளேசர் போட்டு இருந்தான். தங்க நிற ப்ரேம் போட்ட கண்ணாடிக்குள்ளே தீர்க்கமான கண்கள்,  கருப்பும் வெளுப்புமாய் கலந்திருந்த தலைமுடி கவர்ச்சியை கொடுத்தது. கிளம்புபோது சவரம் செய்த முகத்தில், இப்போது பச்சை நிறத்தில் ரோமம் எட்டிபார்த்தது.  வெளியில் நின்ற, என்னை பார்த்து சிரித்தபடி கையாட்டினான். கடைசியாக, கஸ்டமஸ் செக் அருகே வந்து அங்கு நின்றிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்ல, அவள் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு சிரித்தாள். 

களைப்பை மீறி புன்னகைத்தான். ”மச்சி, ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா?” 

சிரித்தபடி அவனது லக்கேஜ் டிராலியைத் தள்ளினேன். ”இருடா,  ஒரு தம்மு போட்டுறேன்”, என்றான். கார் பார்க்கிங் வந்து பெட்டிகளை காரில் வைத்தேன். இருவரும் சிகரெட்டை எடுத்துக்கொண்டு ஓரமாக நடந்தோம். 

கேஸ் செட்டில் ஆயிடுச்சா, கெளதம் ? 

”ஒரு வழியா முடிஞ்சுடுச்சுடா. அவுட் ஆப் த கோர்ட் செட்டில்மெண்ட். எல்லாத்தையும் பிடுங்கிட்டா. மிச்சம் மீதி இருந்ததை, எம்ப்ளையர்ஸ், கிளையண்ட்ஸுக்கு செட்டில் செஞ்சிட்டேன். இப்போ போண்டி” சிரித்தான்.

”தலையெழுத்தாடா உனக்கு? நம்ம செட்டிலேயே, உன் அளவுக்கு படிக்கிறவன் எவனுமில்லை. உன் அளவுக்கு மேலே போனவனும் யாருமில்லை. ” 

கைகளை விரித்து, தோளை குலுக்கிக்கொண்டான் கெளதம். காரில் ஏறி, விமான நிலையம் விட்டு வெளியே வந்தோம்.

”ஆர்த்தி, குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க கெளதம்? ”

”ம்ம்.. இங்கே தான் ஆழ்வார்பேட் வீட்டுலே இருக்காங்க. குழந்தைகள் கூட பேசிட்டுதான் இருக்கேன்.”

சென்னை, கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக்கொண்டிருந்தது. சைதாபேட்டை சிக்னல் அருகே டீக்கடை திறந்திருந்தது. ”ஷெரட்டன்லே ரூம் போட்டு இருக்கேன், கெளதம், எத்தனை நாளைக்குன்னு சொல்லலை. நல்லா ரெஸ்ட் எடு” என்றேன். கவனமில்லாமல், சரி என்றான். அடையாறு பார்க் ஷெரெட்டனில் கெளதமை இறக்கிவிட்டு, வீட்டுக்கு காரை திருப்பினேன். மயிலாப்பூர் குளமருகே திரும்பும்போது மனம் வெறுமையாக இருந்தது. ஒரு சின்ன நகரத்திலிருந்து கிளம்பி, கெளதம், முப்பத்தைந்து வயதுக்குள் அடைந்த உயரம் மிகப்பெரிது. நாங்களெல்லாம் சேதாரமில்லாமல் இஞ்சினியரிங் முடிப்பதற்க்கே போராடியபோது, அவனுக்கு யு.எஸ்.-ஸில் எம்.எஸ். செய்வதற்க்கு இடம் கிடைத்தது. சொந்தமாக ஐ.டி நிறுவனம் நிறுவினான். பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான, விநியோக சங்கிலி நிரலை உருவாக்கினான். மிகப்பெரிய பெயர் கிடைத்தது. அமெரிக்காவிலிருந்த சில கல்லூரி நண்பர்களையும் தனது நிறுவனத்தில் இணைத்துக்கொண்டு, அவர்களையும் மேலேற்றினான். கம்பெனி மேலே மேலே சென்றுக்கொண்டிருந்தது.  திடீரென்று, ஒரு நாள் எல்லாம் முடிந்துவிட்டது. 

சித்திரகுளம் தாண்டி ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் அருகே சென்றபோது, நன்கு விடிந்திருந்தது. பெருமாள் கோயில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் பெண், முந்திய நாள் விற்காமல் வாடிபோன மல்லிகைப்பூ மாலைகளை தெருமுனை குப்பைமேட்டில் கொட்டிக்கொண்டிருந்தாள். சட்டென்று, மல்லிகை மாலையுடன் நிற்கும் பெருமாள் உருவம் மனதிலெழுந்தது. அப்புமுதலி தெருவில் நுழைந்து, காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அபார்ட்மெண்ட் உள்ளே நுழைந்தேன். போர்ட் டிரஸ்டில் நைட்ஷிப்ட் பார்த்துவிட்டு சுந்தரமய்யர், வேட்டியை மடித்துக்கட்டி தலையில் பனிக்காக குல்லா அணிந்து உள்ளே நுழைந்தார். என்னை கண்டவுடன் ”குட்மார்னிங்”, என்றார். இரண்டாவது மாடியேறி பெல்லை அழுத்தினேன். இரண்டு பெல்லுக்கு அப்புறம் தூக்க கலக்கத்துடன் ராதிகா வந்து கதவை திறந்தாள். தூக்கம் கலைந்த எரிச்சலுடன், “அவரை போய் அழைக்கணும்ன்னு ரொம்ப முடை” என்றாள்.

ஒன்றும்பேசக்கூடாது என்று மனதில் நினைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து வேட்டியெடுத்து கட்டினேன். ”கட்டின பொண்டாட்டியே அவன் கூட வாழமுடியாம வந்துட்டா.  பொல்லாத ப்ரெண்ட் வரான்னு நைட் வுழுந்து ஓடுறே. ” என்றாள் மீண்டும். 

வாயை மூடு”, என்றேன் என்னை மீறி. 

”வேலை பாக்குறே செக்ரட்டரிக்கிட்டே வாலாட்டினா, அமெரிக்காவுலே சும்மா வுடுவாளா? உள்ளே புடிச்சி போடாம எப்படி தப்பிச்சாரோ” என்றாள் செய்தி தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன்.

உன் தம்பி திவாவுக்கு வேலை போட்டுக்கொடுக்கும்போது மட்டும் அவன் பொறுக்கின்னு தெரியாதா? சின்ன வயசுலே இருந்து அவன் எனக்கு ப்ரெண்ட். அவங்க அப்பா உதவலன்னா, நான் காலேஜ் பீஸ் கூட கட்டியிருக்க முடியாது. அவனும் எத்தனையோ பேருக்கு உதவியிருக்கான். யார் என்ன சொன்னாலும், அவனுக்கு நான் போகதான் செய்வேன். 

”திவா, எல்லா கம்பெனியிலேயும் வேலைக்கு தேடுன மாதிரிதான் அவரு கம்பெனிலேயும் தேடினான். இதோ இப்போ மைக்ரோசாப்ட்லே சேர்ந்துட்டான். உன் ப்ரெண்ட் மாதிரி பொம்பளைகிட்டே விளையாடி போலிசுலே மாட்டலை” என்றாள் சீற்றத்துடன்.

இனி, இது முடியாது என்று தோன்றியது. எது இவளை இவ்வளவு தூரம் கெளதமை வெறுக்க வைக்கிறது? உண்மையில் இது அவன் மீதான வெறுப்பு மட்டும்தானா? போய் கட்டிலில் விழுந்தேன். 

மாலை ஓட்டல் போனபோது, குளித்து முடித்து இரவு பார்த்ததை விட இளமையாக தெரிந்தான், கெளதம். இருவரும் ஹோட்டலிருந்த வெஸ்ட்மினிஸ்டர் பாருக்கு சென்றோம். மெனு கார்டை வாங்கி, ”இரண்டு ப்ளு லேபிள்” என்று சொன்னான் கெளதம். பாரில் அதிக கூட்டமில்லை. மூன்று இளைஞர்களுடன் வந்திருந்த இளம்பெண், ப்ளடிமேரி அருந்திக்கொண்டிருந்தாள். தலையில் ப்ரவுன் நிறமேற்றியிருந்த இளைஞன், மற்ற இருவரை விட நெருக்கமாக அந்த பெண்ணிடம் அமர்ந்திருந்தான். 

இரண்டு ரவுண்ட் போனதும், ”என்னதான் ஆச்சுடா ?” என்று கேட்டேன். 

எல்லாம் ம்யூச்சுவலா நடந்ததுதான் மச்சி. திடீர்ன்னு எல்லாம் நடக்கலை. மூணு வருசமா எங்களுக்குள்ளே காண்டெக்ட் உண்டு. கரோலினாவும் நல்ல பொண்ணுதான். ஆனா,  இதைப் பணமா மாத்தலாம்ன்னு யோசிச்சிட்டா. அதுக்கு தோதா என்னோட மெசெஜ்ஸ், ஹோட்டல் ரெசிப்ட்ஸ் இப்படி எவிடென்ஸ் கலெக்ட் செஞ்சு, கேஸ் போட்டுட்டா. ஃபைட் செஞ்சோம். ஆனா ஒரு கட்டத்துலே,  அவுட் ஆப் த கோர்ட் செட்டில் செய்றத தவிர வேற வழியில்லாம போயிடுச்சு.  நியூஸ் பிளாஷ் ஆனாதால, வரவேண்டிய சில ஆர்டர்ஸ், கேன்சல் ஆச்சு. எம்ப்ளையர்ஸ் சிலர், இந்த மாதிரி பாஸ்கிட்டே வேலைபார்க்க பிடிக்கலைன்னு ரிசைன் செஞ்சுட்டாங்க. கசப்பாக சிரித்தான் கெளதம். 

இதெல்லாம் ஏற்கனவே ஆர்த்திக்கு தெரியுமா? அதுனாலதான் டைவர்ஸா? இல்லை. அது வேற. அஞ்சு வருசம் முன்னாடி ஆர்த்தியோட க்ளோஸ் ப்ரெண்ட் ரீனா கூட, எனக்கிருந்த காண்டெக்ட் வெளியே தெரிஞ்சுடுச்சு. மத்த விஷயங்களை விட,  இந்த ரீனா மேட்டர், ஆர்த்தியை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சுடுச்சி. ரீனாவோட புருசன் ராகுல், ஒரு பார்ட்டிலே என்னை தனியே கூட்டிபோய் செருப்பால அடிச்சிட்டான். அது ப்ரெண்ட்ஸ் மத்திலே பரவி அவளுக்கு அசிங்கமாயிடுச்சி.

என்னடா இது?” என்றேன், என்னையும் மீறி. 

ஒரு டைம்லே எனக்கு ஆறு பெண்களோட தொடர்பு இருந்துச்சுடா. இத எப்புடி நான் சொன்னாலும் சரியா சொல்லமுடியாதுன்னுதான் நெனைக்குறேன். நான் திட்டம்போட்டு எதையும் செய்யலை. எந்த பொண்ணையும் என்னால ரெசிஸ்ட் செய்யமுடியலை. என்னை மீறி, நான் அவங்ககிட்டே நான் விழுந்துறேன். காலேஜ் டேஸ்லேருந்து, இதுதான் நடக்குது. என்னை இதெல்லாம் கீழ இழுக்குதுன்னு தெரியுது.  குடும்பத்தை, குழந்தைகளை லூஸ் பண்ணிட்டேன். இப்படி ஒரு உமனைசரை அப்பான்னு சொல்லிக்க, இனிமே நிவி விரும்பபோறதில்லை. ஆனா, இப்போ இதோ, இங்கே உட்கார்ந்து இருக்குற அந்த பொண்ணோட டிரஸ்ஸிங் சென்ஸ் அவ்வளோ நல்லா இருக்கு. அவளோட தெத்துபல் சிரிப்பு மனசை இழுக்குது. இதையெல்லாம் கொண்டாட தோணுது. மனுசனுக்கு இதெல்லாம் இல்லாம வேற என்னதான் இருக்கு இந்த உலகத்துலே? இப்படியில்லாம, வேறு எப்படியும் என்னால இருக்கமுடியும்ன்னு தோணலைடா.” என்றான் கெளதம். கண்கள் கலங்கியிருந்தது. கைகள் நடுங்கியது. 

விடுடா. மனசை குழப்பிக்காதே“, என்றேன். 

அடுத்த நாள் காலை போன் செய்தான் கெளதம். ”இந்த வாரம் சனி, ஞாயிறு ஊருக்கு போய்ட்டு வரலாம்ன்னு இருக்கேன். அப்பா போனப்புறம், வீட்டை போய் பார்க்கலை. நீயும் வர்றியா?” என்றான்.

சனியன்று காலை, என்னுடைய காரிலேயே மன்னார்குடிக்கு பயணமானோம். 

கெளதமின் வீடு தெற்கு வீதியிலிருந்தது. பழைய மெட்ராஸ் ஒட்டு கட்டிடம். சிறிய வயதில் அங்கு விளையாடிய நினைவுகள் எழுந்தது. ஒரே பையன் என்பதால் கெளதம் அமெரிக்கா சென்றபின் பராமரிக்க ஆளில்லாது வீடு சிதிலமடைந்திருந்தது. முன்பே, கெளதம் போனில் தகவல் சொல்லியிருந்ததால், வயல்களை பார்த்துக்கொள்ளும் கணக்குபிள்ளை சீனிவாசன் ஆட்களை வைத்து முடிந்தவரை சுத்தம் செய்திருந்தார். இருப்பினும் வௌவ்வால் வீச்சம் அடித்தது. லாட்ஜில் தங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டான், கெளதம். சீனிவாசனும் கூட வந்து அறையில் பெட்டிகளை இறக்கினார். 

ஏற்கனவே அவருக்கு டைவர்ஸ் விவரம் தெரிந்திருந்தது. ”ஒருவாரம் தங்கி எல்லா கோயிலுக்கும் போயிட்டு வந்துடுவோம் தம்பி, இதெல்லாம் தெய்வகுத்தம்தான்..” என்றார். அதெல்லாம் வேணாங்க”, என்றான் கெளதம். ”சரி, இங்கே மூவாநல்லூர் ரோட்டிலே புதுசா ஒரு சித்தர் அம்மா வந்துருக்காங்க. அவங்களை பார்க்கலாமா?”, என்றார் சீனிவாசன். 

புதுசாவா? எங்கேயிருந்து வந்துருக்காங்க? ” என்று கேட்டேன்.

யாருக்கு தெரியும் தம்பி? சித்தன்போக்கு சிவன் போக்கு. மணச்சநல்லூர் பக்கமிருந்து, லாரிலே கொண்டு வந்து இங்க இறக்கிவுட்டுட்டு போனதா சொல்லுறாங்க. கொஞ்ச நாள் பஸ்ஸ்டாண்டு பக்கம் அலைஞ்சுட்டு இருந்தாங்க. சாரங்கன் ஸ்டோர்ஸ் நல்லகண்ணு, என்னமோ பட்டு, ஒரு கொட்டாயை போட்டு, அதிலே இருத்திபுட்டாரு. அதிலே இருந்து அங்கே தான் இருக்காங்க. இப்போ விவரம் தெரிஞ்சு கூட்டம் வந்து கும்பிட்டு போவுது” என்றார், சீனிவாசன்.

தெப்பகுளம் வடக்கு கரையைத் தாண்டி, கும்பகோணம் செல்லும் சாலையில் சென்று உடனே இடது பக்கம் மூவாநல்லூர் செல்லும் வழியில் இறங்கியது, கார். சுடுகாடு முதலில் வந்தது. அதையும் தாண்டி இரண்டு கிலோமீட்டர் சென்றவுடன், அந்த குடிசை தெரிந்தது. நடுவில் மண்சுவர் மேலே கீற்று கொட்டகை இருந்தது. வெளியில் மூங்கில் படல் அமைத்து தடுத்திருந்தார்கள். சிறிய தோட்டம் போல் இருந்தது. படலுக்கு வெளியில் ஒரு கார் நின்றது. ஒரு இளம்தம்பதியினர் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தனர். சீனிவாசன் எங்களுக்கு முன்பு சென்றார். கதவருகே நின்றிருந்த இளைஞனிடம் எங்களை காட்டி ஏதோ சொன்னார். உருத்திராட்ச மாலையணிந்திருந்த அந்த இளைஞன் எங்களை வெளியில் காத்திருக்க சொல்வது தெரிந்தது. சீனிவாசன் எங்களிடம் வந்து நாம வந்தது எப்படியும் அம்மாவுக்கு தெரிஞ்சுடும். நமக்கு கொடுப்பினை இருந்தா, கூப்பிடுவாங்கன்னு சொல்றாரு என்றார். 

அந்த தம்பதியினரை காட்டி, “இவங்க மூணு நாளா அலையுறாங்களாம். கூப்பிடவே இல்லை.” என்றார் சீனிவாசன். 

வெளியில் கிடந்த பெஞ்சில் மூவரும் அமர்ந்தோம். பெஞ்சு ஒருபக்கமாக நொடித்தது. கெளதம் அசெளகரியமாக புன்னகைத்தான். “இதெல்லாம் நம்ம திருப்திக்குதானே?” என்றான். 

அப்படியில்லை தம்பி. உங்க தாத்தா காலத்துலே இருந்து எனக்கு வெவரம் தெரியும். கோயில்குளம்ன்னு உங்க குடும்பம் செஞ்சது கொஞ்சம் நஞ்சமில்லை. உங்கய்யாவுக்கு ரண்டு தாரம். மொத தாரம் ஆறுமாசத்துலேயே இறந்துபோக, அவங்க தங்கச்சியை கட்டிகிட்டாரு.  உங்கம்மாவும் சின்ன வயசுலேயே போய் சேர்ந்துட்டாங்க. என்னமோ பெண் சாபம் மாதிரி, உங்க வீட்டுலே பொண்ணுங்க தங்கலை, தம்பி.” என்றார் சீனிவாசன். 

கெளதமின் அம்மாவை, அவனது வீட்டில் கறுப்பு வெள்ளை புகைப்படமாக பார்த்திருக்கிறேன். அவர் இரண்டாம் தாரம் என்பது சீனிவாசன் சொல்லிதான் தெரிந்தது. கெளதம் அக்கறையில்லாமல் அவர் பேசுவதை பார்த்தான். சீனிவாசன் தொடர்ந்தார்.

உங்க வகையறாவே சென்னை, ஃபாரின்னு போய் செட்டிலாகிட்டீங்க. குடும்பவீட்டை விட்டுட்டீங்க. குலதெய்வம் இருக்குற வீடில்லையா? வருசம் ஒருக்காவாச்சும் பூசை போடணுமில்லே. என்னவாச்சும் பரிகாரம் சொல்லுவாங்க இந்தம்மா”

அந்த இளம் தம்பதியினருக்கு, என்ன பிரச்சினை இருக்ககூடுமென்று தோன்றியது. அந்த கணவன் ஜீன்ஸ் டிசர்ட் அணிந்திருந்தான். கையில் கலர்கலராக கயிறுகள் கட்டியிருந்தான். அவன் மனைவி தலைகுளித்து முடிந்திருந்தாள். கன்னங்கரலேன்ற சுருள் முடியில் நுனியில் நீர் சொட்டியது. பெரிய அழகான கண்களில் ஏதோ தவிப்பு. இன்னைகாச்சும் கூப்பிடுவாங்களா?”, என்று வேட்டிமீது சிவப்பு துண்டு கட்டியிருந்த அந்த இளைஞனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் அவர்களை பார்ப்பதை சீனிவாசனும் பார்த்தார். காரு சென்னை நம்பரு கவனிச்சீங்களா? இந்தம்மா இங்கே வந்து ஆறு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ளே வெளியூர்லே இருந்தெல்லாம் வராங்க. உள்ளூர் பயலுக நக்கல் நையாண்டி செய்வாங்கே”, என்றார். 

கெளதம், அந்த பெண்ணை பார்த்துக்கொண்டிருந்தான். என்னை அறியாமல் புன்னகைத்தேன். அரை மணி நேரம் கழிந்ததும் சலிப்பு தோன்றியது. எதற்கு இவனை கூப்பிட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறோமென்று கேள்வி வந்தது. கெளதம் நான் யோசிப்பதை புரிந்துக்கொண்டு, வெளியேபோய் ஒரு தம் போடலாமா?”, என்றான். சிறிது நேரம் கழித்து, திடீரென்று ஒரு வயதான பெண் குரல் கணீரென்று எழுந்தது. 

அந்த வல்லாரஓழியை உள்ள வர சொல்லு”, என்றது. 

யாரை சொல்கிறார் என்று தெரியாமல் இளைஞன் வெளியில் வந்து முழித்தான். திரும்பவும் கணீரென்று கூறுகெட்டவனை உள்ள வரசொல்லுடா”, என்றது. இப்போது அவன் தயக்கமில்லாமல் எங்களை பார்த்தான். நானும், கெளதமும் அவசரமாக எழுந்து கதவில் தொங்கிக்கொண்டிருந்த துணியை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். நுழைந்தவுடன், சாணி போட்டு மொழுகியிருந்த தரையின் ஓரத்தில் அந்தம்மா அமர்ந்திருந்தாள். பார்த்தவுடன் ஏமாற்றமாக இருந்தது, சாயமிழந்து கந்தலாகி போன ஒரு புடவையை கட்டியிருந்தாள். தலையெல்லாம் பரட்டையாகி சிக்கெடுத்து கிடந்தது. உள்ளே புகைந்துக்கொண்டிருந்த மட்டரகமான ஒரு ஊதுபத்தியை தவிர ஆன்மிகத்துக்கான எந்த விஷயமும் அந்த கூடத்தில் இல்லை. ஒரு பிச்சியை சாமியாரக்கிவிட்டனரோ என்ற கேள்வியுடன் உள்ளே நின்றிருந்தோம். அந்தம்மா உட்காரும்படி கையை காட்டினார். இருவரும் மெளனமாக அவரெதிரே அமர்ந்தோம். சீனிவாசன் உள்ளே வரவில்லை. இளைஞன் உள்ளேவிடவில்லை. அவன் வெளியில்போய் நின்றுக்கொண்டிருந்தான். வலதுபக்க சுவரில் அரைபாகத்துக்கு தட்டிவைத்து அடைத்திருந்தனர். அதன் வழியே வெயில் உள்ளே வந்தது. கும்பிடுவதா வேண்டாமா என்ற தயக்கத்துடன் கெளதம் கைகளை கோர்த்திருந்தான். 

அந்தம்மா கண்களை மூடி ஒருபக்கமாக சிரித்தார். திடீரென்று கண்களை திறந்து கெளதமை உற்றுப்பார்த்தாள். அந்த பார்வையில் கெளதம் உறைந்திருந்தான். இருகைகளாலும் புடவையை தூக்கி காட்டினாள் அந்தம்மா. மயிரடர்ந்து வறண்டிருந்த தன்னுடைய யோனியை காட்டி, “நல்லா பார்த்துக்குடா கண்டாரோழி, இதானே உன்னை இப்படி நாயாக்கிடுச்சு” என்றாள். கெளதம் கண்களில் கண்ணீர் வழிய, கைகளை எடுத்து கும்பிட்டுக்கொண்டிருந்தான். “பார்த்துட்டியா, போ, போய் பிழைப்பை பாரு”, என்றாள்.


ரா.செந்தில்குமார்

2 COMMENTS

 1. தர்க்க மனம் தர்க்கித்து ஸ்தம்பித்து நிற்கும் புள்ளி கதைக்கரு.
  விசிறி சாமிகளையும் கன்யாகுமரி மாயம்மாவையும் கொடுமுடி ஆயம்மாவையும் ஞாபகப்படுத்தும் சித்தரம்மா படைப்பு.
  அவர் கொடுக்கும்ட்ரீட்மெண்ட் அதிர்ச்சி வைத்யம்.

  இதுக்குத்தான் இவ்வளவு அலைச்சலா? இந்தா பெற்றுக்கோ என அருணகிரிக்கு அவரது தமக்கை கொடுத்த ட்ரீட்மெண்ட்.

  கதையில் கௌதமின் குணவார்ப்பை Fleeting ஆக சொல்லி சென்றவிதம் சிறப்பு.

  சித்தரம்மாவின் குடில் முன் மனஉபாதைகளோடு காத்திருக்கும்போதுகூட கௌதம் அங்கு வந்திருந்த பெண்ணை பார்க்கும் பார்வையை கண்டு சலித்து புன்னகைக்கும் கதைசொல்லி…

  சௌந்தர்யத்தில் ஆழ்ந்து மூழ்குபவனை லஹரி சொல்லி மீட்கும் அபாரமான சிறுகதை.

 2. சர்வம் சௌந்தர்யம் சிறுகதையில் கௌதம் போல கதைமாந்தர்களுக்கான சரியான சவுக்கடி.. அருமையான முடிவு.

  -தஞ்சிகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.