1.
வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. அவன் கழுத்திலும் இறுக்கமாகக் கயிறு சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கயிறு அவன் தலைக்கு உயரே பாலத்தின் மீதிருந்த தடித்த மரக்கட்டைகளில் கட்டப்பட்டு, அதன் மறுமுனை அவன் முழங்கால் அருகே தொங்கிக் கொண்டிருந்தது. தூக்கு தண்டனை பெறுபவனும் அதை நிறைவேற்றுபவர்களும் நிற்க ஏதுவாக தண்டவாளத்தின் இரும்புத் துண்டுகளின் குறுக்காக இருந்த கட்டைகளின் மீது சில உதிரி மரப்பலகைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஃபெடரல் ராணுவத்திலிருந்து வந்திருந்த தனிப்படை வீரர்கள் இருவரும் அவர்களை வழி நடத்தும் சார்ஜண்ட்டும் அங்கு இருந்தனர். மற்றும் அவர்களுக்குச் சில அடி தூரத்தில் அவர்களுக்கிணையான தகுதி வரிசையுடைய ஆயுதமேந்திய ஒரு சீருடை அதிகாரியும் அந்தத் தற்காலிக மர மேடையில் நின்று கொண்டிருந்தார். அவர்களின் கேப்டன் அவர். அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பாலத்தின் இருபக்க முனைகளிலும் நின்றிருந்த காவல் வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளை இடது தோள்புறமாகச் செங்குத்தாகப் பிடித்துக் கொண்டு அழுத்து விசை மார்புக்குக் குறுக்காக இருக்க, உடலை விறைத்துக் கொண்டு நின்றிருந்தனர். நடக்கப்போகும் நிகழ்வைப் பற்றி அறிந்து கொள்வதெல்லாம் அவர்கள் பணியைச் சேர்ந்ததல்ல என்பது போன்ற பாவனையுடன் அவர்கள் இருந்தார்கள். இருமுனைகளின் தொடர்ச்சியாகவுள்ள நடைபாதையில் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அவர்கள் பணி. அந்தக் காவல் வீரர்களுக்கப்பால் ஒருவர் கூடக் கண்ணில் படவில்லை. அந்த ரயில்பாதை சுமார் நூறு அடிகளுக்குக் காட்டுக்குள் ஊடுருவி அதன் பின் வளைந்து செல்வது மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது. சந்தேகத்திற்கிடமின்றி அதற்கப்பால் வெளியேறும் பாதையும் இருக்கும். ஓடையின் மறுகரையில் திறந்த மைதானம் இருந்தது, அங்கு ஒரு மேடான இடத்தில், மரக்கட்டைகள் அடுக்கப்பட்டு இடையிடையே துப்பாக்கிகள் செருகிக் கொள்ளுமளவு சிறிய துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் ஒரு துளையில் பாலத்தை நோக்கியபடி பீரங்கியின் பித்தளைக் குழல் நீட்டிக் கொண்டிருந்தது. பாலத்துக்கும் கோட்டைக்கும் நடுவிலிருந்த அந்த மேட்டில் பார்வையாளர்களாக இருந்தவர்கள் – அணிவகுத்து நின்ற படைவீரர்கள், துப்பாக்கிகளின் பின்பக்கம் தரையிலும் அதன் குழல்கள் வலது தோளுக்குக் கீழேயும் சாய்ந்திருக்க, கைகள் பின்னால் குறுக்காக இருக்கும் நிலையில் அசையாமல் நின்றிருந்த, அணிவகுப்பின் வலதுபுறம் நின்றிருந்த படைவீரன் ஒருவன் கையிலிருந்த வாளின் கூர்முனை நிலத்தில் குத்தியிருக்க அவன் தனது இடதுகையை வலதுதோளின் மீது வைத்திருந்தான். பாலத்தின் மையத்திலிருந்த நான்கு பேரைத் தவிர ஒருவர் கூட அசையவில்லை. பாலத்தையே கற்சிலை போல அசையாமல் வெறித்துக் கொண்டிருந்தது கூட்டம். பாலத்திலிருந்து ஆற்றின் மறுகரையை நோக்கி நின்றிருந்த காவல் வீரர்கள் பாலத்தை அலங்கரிக்க நிறுவப்பட்ட சிலைகள் போல நின்றிருந்தனர். கைகளைக் கட்டியபடி அமைதியாகத் தன் கீழ்மட்ட வீரர்கள் செய்யும் பணியைக் கவனித்தபடி இருந்தார் கேப்டன். ஆனால் சமிங்கை ஏதும் காட்டவில்லை. இறப்பு என்பது மிக உயர்வானது. அதை அறிவித்துக் கொண்டு வருகையில், அது தெரிந்தவர்களாகாகவே இருந்தாலும் அதற்குரிய மரியாதையுடன் பெற்றுக் கொள்வதென்பது கண்ணியம். ராணுவ ஒழுக்க நியதிகளின்படி அசைவின்மையும் அமைதியும் மரியாதை.
தூக்கில் தொங்கவிடப் போகும் நபருக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். அவன் ஒரு சாதாரணக் குடிமகன், அவனுடைய பழக்க வழக்கங்களைப் பார்த்து, அவன் உழவுத் தொழில் செய்பவன் என்பதையும் கணித்து விடலாம். கூர்மையான நீண்ட நாசி, இறுகிய வாய், அகலமான நெற்றியும் அதிலிருந்து பின்னோக்கிப் படிய வாரப்பட்டிருக்கும் கேசம், அது அவன் காதுகளுக்குப் பின்னால் புரண்டு மேலங்கியின் காலர் வரை நீண்டிருந்ததுமாக அவனது தோற்றமும் முக அமைப்பும் இருந்தது. அவனுக்கு மீசையும், தாடியும் இருந்தன. ஆனால் மீசைமுடி நீட்டி முறுக்கி விடப் படவில்லை. அவனது கண்கள் அகலமாகவும் அடர்ந்த சாம்பல் நிறத்திலும் இருந்தன. அதில் தேங்கியிருந்த கருணையைப் பார்க்கையில் இப்படி அவன் கழுத்தில் கயிறு இருப்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இது அவலமான படுகொலை என நன்றாகத் தெரிகிறது. ராணுவத்தின் தாராளவாதம், பல விதமான மக்களைத் தூக்கிலேற்றும் வழிமுறைகளை அளித்திருக்கிறது. அதில் கனவான்கள் விதிவிலக்கல்ல.
ஆயத்தங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. இரு தனிப்படை வீரர்களும் விலகி நகர்ந்து தாங்கள் நின்று கொண்டிருந்த பலகையை எடுத்து விட்டனர். இப்போது கேப்டனை நோக்கித் திரும்பிய சார்ஜண்ட் அவருக்கு சல்யூட் அடித்து விட்டு உடனே அவர் பின்னால் சென்று நின்று கொள்ள, கேப்டன் ஓரடி விலகி நகர்ந்தார். இந்த நகர்வுகளால் சார்ஜண்ட்டும், தண்டனை பெறுகிறவரும் ஒரே பலகையின் இரு முனைகளில் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பலகை பாலத்தின் மூன்று குறுக்கு மரக்கட்டைகளின் மீது அமர்ந்திருந்தது. அந்தக் குடிமகன் நின்றிருந்த மறுமுனை குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும் நான்காவது கட்டை வரை நீண்டிருந்தது போலத் தோன்றியது. முன்பு கேப்டன் தன் எடையால் அந்தப் பலகையை அசையாது நிறுத்தி வைத்திருந்தார். இப்போது சார்ஜண்ட் அவர் இடத்தை எடுத்துக் கொண்டான். கேப்டனிடமிருந்து ஒரு சமிஞ்கை கிடைத்தால் போதும், சார்ஜண்ட் விலகி நகர, உடனே பலகை வளைந்து தண்டிக்கப்பட்டவர் இரண்டு கயிறுகளாலும் இறுக்கப்பட்டுக் கீழே தொங்கி விடுவார். இந்தத் தீர்ப்புக்கேற்றவாறு மிகச் சிறப்பான வகையில் எளிமையாகவும் வலுவானதாகவும் இந்த ஏற்பாடு இருந்தது அவனுடைய முகம் மூடப்பட்டோ கண்கள் பட்டியால் மறைக்கப்பட்டோ இருக்கவில்லை. ஒருகணம் நிலையில்லாமல் தத்தளிக்கும் தனது பாதங்களைப் பார்த்தவன், பின் கால்களின் கீழே சுழித்தோடிக் கொண்டிருக்கும் ஓடைநீரின் மீது பார்வையை அலைய விட்டான். நீரின் சுழலோடு மிதந்தோடி வந்த மரத்துண்டு ஒன்று அவன் கவனத்தை ஈர்த்தது. அது எவ்வளவு மெல்ல நகர்கிறது, எவ்வளவு மந்தகதியில் ஓடும் ஓடை இது.
தன் மனைவி மற்றும் குழந்தைகளைத் தன் இறுதி நினைவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு அவன் கண்களை மூடிக் கொண்டான். காலைச் சூரிய ஒளியால் பொன்னாக ஒளிர்ந்த நீர், ஓடைக்குச் சற்றுத் தொலைவிலுள்ள கரையில் சூழ்ந்திருக்கும் முகில் படலங்கள், கோட்டை, படை வீரர்கள், மிதந்து வந்த மரத்துண்டு – யாவும் நினைவைக் கலைத்துப் போட்டன. இப்போது புதிய இடையூறு அவன் மனதை ஆக்கிரமித்தது. அவனுடைய அன்புக்குரியவர்களின் நினைவினுள்ளும் ஊடுருவி ஒலிக்கும் சப்தம், அவனால் புரிந்து கொள்ள முடியாத அதேவேளை ஒதுக்கித் தள்ளவும் முடியாத ஓசை அது. கொல்லனின் உலோகச் சுத்தியல் பழுத்த இரும்புத் துண்டின் மீது படுகையில் கேட்கும் மிகத் துல்லியமான, தெளிவான ஓசை. அதே போன்ற மணியோசை. அது என்னவாக இருக்குமென அவன் யோசித்தான். அளக்கவியலாத நெடுந்தொலைவிலிருந்து கேட்கிறதா அல்லது மிக அருகிலிருந்தா —இரண்டுமே போலத் தோன்றியது. சீரான இடைவெளியில் ஒலித்தது ஆனால் சாவு மணி எவ்வளவு மெலிதாக ஒலிக்குமோ அவ்வளவு மெலிதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அது ஒலிப்பதற்காகப் பொறுமையின்றிக் காத்திருந்தான். ஆனால் அச்சம் மட்டும் ஏனென்று புரியவில்லை. நிசப்தமான இடைவேளைகள் அதிக நீளமாக வளர்ந்து கொண்டே போக அந்தத் தாமதங்கள் தாள முடியாததாக இருந்தது. அது அரிதாக ஒலிக்கையில் அதன் ஓசை மிகவும் வலுவாகவும் கூர்மையாகவும் இருந்தது. காதுகளில் கத்தியைச் செருகுவது போன்ற வலி ஏற்பட்டது; கத்திக் கூச்சலிட்டு விடுவோமென்று அச்சம் கொண்டான். அவனுடைய கைக்கடிகாரத்திலிருந்து எழும் டிக் டிக் ஒலிதான், அவன் காதுகளில் விழுந்தது
கண்களைத் திறந்து கீழே ஓடிக்கொண்டிருந்த நீரை மீண்டும் பார்த்தான். ”என் கைகளை மட்டும் விடுவிக்க முடிந்தால் இந்தத் தூக்குக் கயிறை வீசி எறிந்து விட்டு இந்த நீரோடையில் குதித்திருப்பேன். மேலிருந்து குதித்து துப்பாக்கி ரவைகளுக்குத் தப்பித்தும், ஆவேசமாக நீச்சலடித்துக் கரையை அடைந்து வனத்திற்குள் ஓடி மறைந்து வீட்டை அடைந்து விடுவேன். வீடு! கடவுளுக்கு நன்றி, என் வீடு அவர்களுடைய எல்லைகளுக்கப்பால் உள்ளது, என் மனைவி, என் சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லோரும் இந்தப் படையெடுப்பாளர்கள் முன்னேறி வரும் பிரதேசத்துக்கு அப்பால் உள்ளனர்.”
வார்த்தைகளாக வடிவெடுக்க வேண்டிய இந்த எண்ணங்களெல்லாம் அந்தப் பரிதாபமான மனிதனின் மூளையிலிருந்து தெளிவு பெற்று வெளிவருவதற்குப் பதிலாக மின்னற்சிதறல்களாகத் தோன்றி மறைகையில் சார்ஜண்ட்டை நோக்கி கேப்டன் தலையசைக்க அவன் மரப் பலகையிலிருந்து இறங்கி நின்றான்.
2.
பீட்டன் ஃபர்க்வார், அலபாமா பகுதியின் மிக மரியாதைக்குரிய பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி. அடிமைகள் வைத்திருக்கும் உரிமையாளரான அவர் மற்ற அடிமை உரிமையாளர்களைப் போலவே அரசியல்வாதியாகவும், தெற்குப் பகுதியின் கொள்கைகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவராகவும் அசல் பிரிவினைவாதியாகவும் இருந்தார். இந்த வேளையில் இதைக் குறிப்பிடுவது தேவையற்றதுதான். அவருடைய அதிகார மனப்பான்மையும், மிகவும் மோசமான முறையில் போரிட்டு கோரிந்த்* பகுதியின் வீழ்ச்சிக்குக் காரணமாக ராணுவம் இருந்ததும் போர்ப்படையில் அவர் இணைவதைத் தடுத்து விட்டது. அவமானகரமான அடக்குமுறையின் கீழ் சிதைந்து போன அவரின் ஆற்றலை எப்படியாவது வெளிக்கொணர வேண்டுமென்ற ஏக்கத்துடனும், ஒரு போர்வீரனின் அசலான வீர வாழ்வுக்கான துடிப்புடனுடனும், தான் தனித்துத் தெரிய வேண்டுமென்ற வாய்ப்புக்கான காத்திருப்புடனும் இருந்தார். போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் எல்லோருக்கும் கிடைப்பது போலத் தனக்கும் அந்த வாய்ப்புக் கிட்டுமென நினைத்தார். அந்த வேளையில் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார். அவரைப் பொருத்தவரை தெற்குப் பகுதி வீரர்களுக்குச் சாதகமாக இருக்கும் எந்த உதவியும் சிறியதல்ல மற்றும் இதயத்தில் தன்னை ஒரு போர்வீரனாகவே என்றும் நினைத்துக் கொள்ளும் குடிமகனுக்கு எந்த சாகசச் செயலும் ஆபத்தானதல்ல. ’காதலிலும் போரிலும் எல்லாமே நியாயமானது’ என்னும் வெளிப்படையான எதிர்மறைக் கூற்றை, அறிவு கொண்டு யோசிக்காமல் கண்களை மூடிக் கொண்டு நம்பியதும் அவரது செய்கைக்குக் காரணம்.
ஒரு நாள் மாலை ஃபர்க்குவாரும் அவரது மனைவியும் வாசல் முன்பிருந்த மைதானத்தில் போடப்பட்டிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து கொண்டிருந்த போது, சாம்பல் வண்ணச் சீருடை அணிந்த படை வீரன் ஒருவன் அங்கு வந்து அருந்துவதற்கு தண்ணீர் கேட்டான். தன்னுடைய வெண்ணிறக் கைகளினால் மனமுவந்துதான் அவள் அவனுக்கு நீர் கொடுத்தாள். அவள் நீர் எடுத்து வரச் சென்றிருந்த போது அவள் கணவன் அந்த அழுக்கான குதிரை வீரனிடம் சென்று போர் முகாமில் என்ன நடக்கிறதென்று ஆர்வமுடன் விசாரித்தான்.
”அமெரிக்கன்கள் ரயில்பாதையை பழுது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” அதைச் சொன்னவன், “அடுத்த முன்னகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் கூறினான். அவர்கள் Owl Creek Bridgeஐ அடைந்து விட்டார்கள். வடக்குக் கரையில் படைகளின் முகாம் அமைப்பதற்காகப் பாலத்தைச் சரி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தண்டவாளம், பாலம், சுரங்கம், ரயில்கள் போன்ற விஷயத்தில் யாராவது தலையீடு செய்தால் அவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் என்று படைத்தலைமை அதிகாரி கட்டளையிட்டிருக்கிறார். அந்தக் குறிப்பு எல்லாச் சுவர்களிலும் ஒட்டப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டளையை நானும் பார்த்தேன்.
”இங்கிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது அந்தப் பாலம்?” ஃபர்க்வார் கேட்டார்.
”முப்பது மைல்கள் இருக்கும்.”
“ஓடைக்கு இந்தப் பக்கம் படைகள் ஏதும் இருக்கிறதா?”
“அரை மைல் தொலைவில் ரயில்பாதையில் மரத்தாலான ஒரு தடுப்பு வேலியும் பாலத்தின் முடிவில் ஒரே ஒரு காவல்படை வீரன் இருக்கிறான்.”
“ஏதோ ஒரு சாதாரணக் குடிமகனோ அல்லது சுற்றிக் கொண்டிருக்கும் மாணவன் யாராவதோ, இந்தத் தடுப்பு வேலியிலிருந்து தப்பித்துப் போய் அந்தக் காவல் வீரனை ஏதாவது செய்யலாம், அதற்கு மேல் அவனால் என்ன சாதிக்க முடியும்?” சிரித்துக் கொண்டே கேட்டான் ஃபர்க்வார்.
அதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்த வீரன் கூறினான் ’நான் ஒரு மாதத்திற்கு முன் அங்கு சென்றிருந்தேன், கடந்த குளிர்காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் அதிக எண்ணிக்கையிலான மரத்துண்டுகளை பாலத்தின் முடிவிலிருக்கும் கரையோரமாக ஒதுக்கியிருந்தது. அவையெல்லாம் இப்போது காய்ந்திருப்பதால் சருகுகள் போலத் தீப்பற்றிக் கொள்ளும்”
இப்போது அந்தப் பெண் நீரை எடுத்து வர அந்த வீரன் வாங்கி அருந்தினான். மிகவும் சம்பிரதாயங்களுடன் அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு கணவன் முன் குனிந்து வணங்கிவிட்டுச் சென்றான். ஒருமணி நேரம் கழித்து, இரவு கவிந்தபின், அதே பண்ணையை மீண்டும் கடந்துதான் வந்த வழியான வடக்குப் புறமாகச் சென்றான். அவன் ஃபெடரல் படையைச் சேர்ந்த சாரண வீரன்.
3.
பாலத்தின் இடுக்குகள் வழியாக நேராகக் கீழே விழுகையில், பீட்டன் ஃபர்க்வார் தன்னிலை இழந்து ஏற்கெனவே இறந்து விட்டவன் போலத்தான் இருந்தான். அந்த நிலையிலிருந்து, பல யுகங்கள் கழித்துக் கண் விழித்தது போல அவனுக்குத் தோன்றியது. தொண்டையை அழுத்திய கூரிய வலியாலும் அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் அவனுக்குச் சுயநினைவு திரும்பியது. துடித்தெழும் வேதனை கழுத்திலிருந்து தொடங்கிக் கீழிறங்கி அவனுடைய உடல் மற்றும் மூட்டுகளின் ஒவ்வொரு இழையிலும் ஊடுருவியது. அந்த வலி சீரான கோடுகளில் கிளை பிரிந்து நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அதிவேகமாகத் தாக்கியது. தளதளக்கும் நெருப்பாறு தாளமுடியாத சூட்டுக்கு அவனை வாட்டுவது போல அது இருந்தது. உடல் கனமாகி ஊதிப் போனவனாகவும் நெஞ்சடைத்துப் போனதைப் போலவும் உணர்ந்ததைத் தவிர வேறு எதுவும் அவன் நினைவில் இல்லை. இந்த உணர்ச்சிகள் அனைத்துமே சிந்தனையுடன் இணையவில்லை. அவனுடைய சிந்திக்கும் திறன், அவனை விட்டு ஏற்கெனவே வெளியேறி உணரும் சக்தி மட்டுமே மீதமிருந்தது. உணர்ந்ததெல்லாம் வேதனை, வேதனை மட்டுமே!. தான் அப்படியே நகர்ந்து கொண்டிருப்பதை அவனால் அறிந்து கொள்ள முடிந்தது. எங்கும் ஒளிவீசும் மேகங்கள் சூழ்ந்திருக்க, அதில் பருப்பொருளற்று, உருவமற்றுத் துடிக்கும் இதயமாக மட்டும் கற்பனைக்கெட்டாததொரு வளையத்தில் பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டிருந்தான். அதன்பின் சட்டென்று அதி தீவிரவேகத்துடன் கூடிய நீர்த்தெறிப்பின் பேரோசை அவனைச் சூழ்ந்திருந்த ஒளி மீது பரவியது. அவன் காதுகளில் அச்சமூட்டும் கர்ஜனை நிரம்ப, எங்கும் குளிர்ச்சியும் இருட்டும் சூழ்ந்தது. அந்தக் கணத்தில் அவனது சிந்திக்கும் சக்தி மீண்டது. கயிறு துண்டிக்கப்பட்டு அவன் நீரோடையில் விழுந்ததை அறிந்து கொண்டான். வேறெந்த அழுத்தமும் இல்லை. கழுத்திலிருந்த சுருக்குக் கயிறு ஏற்கெனவே மூச்சைத் திணறடித்து நுரையீரல்களில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தது. நதியாழத்தில் சுருக்குக் கயிறால் இறுக்கப்பட்டு உயிரிழப்பது, அந்த எண்ணம் நகைப்புக்குரியதாக இருந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து மேலே பார்த்த போது ஒரு ஒளிக்கீற்று தெரிந்தது. ஆனால் எவ்வளவு தொலைவு, அடைய முடியாத அளவு எவ்வளவு தூரம். அவன் மூழ்கிக் கொண்டிருந்தான், அந்த ஒளி கரைந்து வெறும் பளபளப்பாக மாறும் வரை மங்கலாகத் தெரிந்து கொண்டே இருந்தது. பின் மீண்டும் அது பிரகாசமாகத் தொடங்கிய போதுதான் நீரின் மேற்பரப்புக்கு உயர்கிறோமென்று அவனுக்குத் தெரிந்தது. தயக்கத்துடன் அதை உணர்ந்தான். “தூக்கிலிடப்பட்டும் மூழ்கியும் இறப்பதா? அது அவ்வளவு ஒன்றும் மோசமில்லை; ஆனால் நான் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கக் கூடாது. இல்லை, நான் சுட்டுக் கொல்லப் பட மாட்டேன்! அது நியாயமில்லை.
எந்தவிதமான முயற்சியும் செய்ததாக நினைவில்லை, ஆனால் மணிக்கட்டில் எழுந்த சுரீரென்ற வலியால் கைகளை விடுவிக்கத் தன்னிச்சையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என அவனால் கணிக்க முடிந்தது. கேளிக்கைக்காரனின் வித்தையை வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா இருப்பவன் போல விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தனது உடல் மேற்கொள்ளும் போராட்டத்தை வெறுமனே கவனித்துக் கொண்டிருந்தான். “என்னவொரு அருமையான முயற்சி! – அற்புதமான, இயற்கைக்கு மீறிய சக்தி! ஓ, அது ஒரு நேர்த்தியான செயல்! ஆஹா!” கயிறு அவிழ்ந்து விழுந்தது. கைகளிரண்டும் விடுதலையாகிப் பிரிந்து உயரே மிதந்தன. பெருகிக் கொண்டிருக்கும் ஒளியில் அவை ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டன. இப்போது அந்தக் கைகளிரண்டும் அவன் கழுத்தைச் சுற்றியிருந்த கயிறின் மீது பாய்வதைப் புதிய உற்சாகத்துடன் நோக்கினான். அவை கயிறை உருவி ஆவேசத்துடன் பக்கவாட்டில் எறிந்தன. அந்த நெளிவு சுழிவுகள் யாவும் நீர்ப்பாம்பின் செயல்பாட்டை ஒத்திருந்தன. ”மறுபடியும் கழுத்திலேயே போட்டு விடு, போட்டு விடு” எனத் தன் கைகளுக்குத் தான் ஆணையிடுவது போல நினைத்தான். ஏனென்றால் கழுத்தை இறுக்கிய கயிறை அவிழ்க்கும் செயல் அவன் இதுவரை அனுபவித்திராத வாதையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. கழுத்திலும் கடும் வலி ஏற்பட்டது. மூளை கொதித்தது ; மெதுவாகத் துடித்துக் கொண்டிருந்த இதயம் குதித்து வாய் வழியே வர முயற்சி செய்தது. மொத்த உடலும் வலியிலும் வேதனையிலும் ஒத்துழைக்காமல் முறுக்கிக் கொண்டிருந்தது. ஆனால் கீழ்ப்படியாத கைகள் மட்டும் எந்தக் கட்டளைகளுக்கும் செவி மடுக்கவில்லை. அவை தண்ணீரை வலுவாகக் கீழ்நோக்கி அடித்துத் தள்ளிக் கொண்டு நீர்ப்பரப்புக்கு மேலே அவனை வலுக்கட்டாயமாக வரவழைத்தன. தலை உயர்வதை உணர்ந்தான். சூரிய வெளிச்சத்தில் கண்கள் கூசின. அவனுடைய மார்பு வலிப்பு வந்தது போல விரிவடைந்து, சுவாசப்பை அதுவரை இல்லாத உச்ச வலியோடு குளிர்காற்றால் நிரப்பப்பட உடனே ஓங்கிய குரலில் கிறீச்சிட்டு அதை வெளியேற்றினான்.
இப்போது உடலின் இயக்கங்கள் பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தான். இயல்புக்கு மாறான எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் புலன்கள் இருந்தன. அவனுடைய உடலின் இயற்கையான ஒழுங்கமைவைத் தொல்லை செய்த மிக மோசமான நிலையில் ஏதோ ஒன்று அதை சீரமைத்தும் மேம்படுத்தியும் இதுவரை செய்யாதவற்றையெல்லாம் செய்ய வைத்தது. முகத்தின் மீது நீரலைகளையும் அவை மோதும் போது ஏற்படும் வித விதமான ஒலிகளையும் கேட்டான். நீரோடையின் கரையில் அமைந்துள்ள காட்டையும், அதன் ஒவ்வொரு மரத்தையும், இலைகளையும் அவற்றில் ஓடும் நரம்புகளையும், அதன் மீது அமர்ந்திருக்கும் பூச்சிகளையும் கூடக் கண்டான்: வெட்டுக்கிளி, அழகிய வண்டுகள், இலையிலிருந்து மற்றொரு இலைக்கு வலை பின்னிக் கொண்டிருக்கும் சாம்பல் வண்ண எட்டுக்கால் பூச்சிகள். லட்சக்கணக்கான புல்லிதழ்களின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் பனித்துளிகளில் சிதறும் வானவில் வண்ண ஒளிக்கீற்றுகளைப் பார்த்தான். ஓடையின் நீர்ச்சுழிகளுக்கு மேலே பறக்கும் கொசுக்களின் ரீங்காரம், தட்டான்கள் சிறகடிக்கும் சப்தம், துடுப்புகள் படகைச் செலுத்துவது போல அசையும் நீர் வண்டுகளின் கால்கள்—அனைத்தும் சங்கீதமாக ஒலித்தன. அவன் கண்களுக்குக் கீழே வழுக்கிச் செல்லும் மீனின் உடல் நீரை வகிடெடுத்து ஓடும் ஓசையைக் கூடக் கேட்டான்..
நீரோடையின் மேற்பரப்புக்கு வந்து விட்டான். ஒருக கணத்தில் கண்ணில் தெரியும் உலகம் தன்னை மையப்புள்ளியாக வைத்து வட்டமாகச் சுழல்வது போலத் தோன்றியது. பாலம், கோட்டை, பாலத்தின் மீது நிற்கும் படை வீரர்கள், கேப்டன், சார்ஜண்ட், இரு தனிப் படை வீரர்கள் எனத் தன்னைத் தூக்கிலிடுபவர்கள் அனைவரையும் அவனால் பார்க்க முடிந்தது. நீலவானத்தின் கீழ் நிழலுருவம் போல அவர்கள் நின்றிருந்தார்கள். அவனைச் சுட்டிக் காட்டிச் சைகைகள் செய்தும் கூக்குரலிட்டுக் கொண்டும் இருந்தார்கள். தனது கைத்துப்பாக்கியை எடுத்தார் கேப்டன் ஆனால் சுடவில்லை. மற்றவர்களிடம் ஆயுதங்கள் இல்லை. அவர்களுடைய அசைவுகள் கோரமாகவும் பயங்கரமாகவும் உருவங்கள் பூதாகரமாகவும் இருந்தன.
சட்டென்று கூர்மையான வெடிச்சத்தம் காதில் விழுந்த போது, அவனுடைய தலைக்குச் சில அங்குல தூரத்தில் நீரினுள் ஏதோ துல்லியமாகப் பாய்ந்து, முகத்தில் நீரை வாரித் தெளித்தது. அதே சத்தம் இரண்டாம் முறையும் கேட்டது. அப்போது தோளில் துப்பாக்கியுடனிருந்த காவல் வீரனைப் பார்த்த போது அந்தத் துப்பாக்கிக் குழலிலிருந்து மெல்லிய நீல நிறப் புகைமேகம் எழுந்தது. பாலத்தின் மேலே நின்றபடி துப்பாக்கியின் வழியாகத் தன் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நபரை நீருக்குள்ளிருந்து ஃபர்க்வார் பார்த்தான். அந்தக் கண்கள் சாம்பல் நிறத்திலிருப்பதையும், சாம்பல் வண்ணக் கண்களை உடையவர்கள் கூர்மையான பார்வை கொண்டவர்களெனவும், குறி பார்த்துச் சுடும் வல்லமையுடைய பலர் அவ்வகைக் கண்களைக் கொண்டவர்கள் எனப் படித்ததையும் நினைவு கூர்ந்தான். இருப்பினும் அவன் இலக்கைத் தவற விட்டு விட்டான்.
இப்போது மற்றுமொரு எதிர்ச் சுழல் ஃபர்க்வாரை சுழற்றி அரை வட்டமடித்தது. அவன் மீண்டும் கரையில் கோட்டைக்கு எதிரே இருந்த காடுகளைப் பார்த்தான். இப்போது தெளிவான, உரத்த, சலிப்பான நெட்டுருப் போடும் குரல்கள் அவனுக்குப் பின்னால் ஒலித்தன. மற்ற ஓசைகளனைத்தையும் துளைத்து நீரைக் கடந்து, அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த சிற்றலைகளின் எதிரொலியை விடத் துல்லியமாகக் குரல்கள் காதில் விழுந்தது. அவன் ராணுவ வீரனாக இல்லாத போதும் அச்சம் தரக்கூடிய வகையில் வேண்டுமென்றே மூச்சைப் பிடித்து, இழுத்துச் சொல்லும் அந்த கோஷத்தை அடையாளம் கண்டு கொள்ளுமளவு அவர்கள் முகாமிற்குச் சென்றிருக்கிறான். கரையிலிருந்த ராணுவத்தினர் காலை அணிவகுப்பில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு இறுக்கமான, இரக்கமற்ற, ஆனால் ஒரே மாதிரியான ஏற்ற இறக்கங்களுடன், மனிதர்களிடம் அமைதியை நிறுவும், சீரான இடைவெளியில் வந்து விழும் கொடுஞ்சொற்கள்.
“Attention, Company!.. shoulder arms!… Ready!… Aim!… Fire!”
ஃபர்க்வார் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழமாக மீண்டும் நீருக்குள் சென்றான். அவன் காதுகளில் நயாகரா நீர் வீழ்ச்சியைப் போலச் செவிகளில் நீரின் கர்ஜனை நிரம்பியிருந்த போதும் தோட்டாக்கள் வெடித்துச் சிதறி மீண்டும் நீர்பரப்புக்கு மேலெழும் மெல்லிய ஓசை கேட்டது. மேலே வந்த போது பளபளக்கும் சில உலோகத்துண்டுகள் மெதுவாக கீழ்நோக்கி அமிழ்ந்து கொண்டிருந்தன. அவற்றில் சில அவன் கழுத்து மற்றும் கைகள் மீது பட்டுச் சரிந்து நீருக்குள் இறங்கிச் சென்றன. அவனுடைய கழுத்துக்கும் காலருக்கும் இடையே ஒன்று சிக்கிக் கொண்டது; அது அசௌகரியமான வெம்மையுடன் இருந்தது. அவன் அதைப் பிடுங்கி எறிந்தான்.
நீர்பரப்புக்கு மேலே வந்து மூச்சு விடத் திணறிய போதுதான் நீண்ட நேரம் நீருக்குள் அமிழ்ந்திருந்தோமென்று அவனுக்குப் புரிந்தது. பாதுகாப்பான இடத்துக்கு நெருக்கமாக இருக்கிறோமென்று புலப்பட்டது. தோட்டாக்களை மீண்டும் நிரப்பும் வேலையை ஏறக்குறைய முடித்து விட்டனர் போர் வீரர்கள். பீரங்கியில் மருந்தை நிரப்பும் உலோகச் செறிகோல்கள். அதிலிருந்து உருவப் பட்டவுடன் சூரிய ஒளியில் மின்னின. பின், அதற்குரிய இணைப்புப் பெட்டியில் செருகி வைக்கப்பட்டன. இரண்டு காவல் வீரர்களும் மீண்டும் சுடத் தொடங்கினார்கள். தன்னிச்சையாகவும், அசிரத்தையாகவும் இருந்தது, அவர்கள் செயல்.
ஃபர்க்வார் அங்கு நடக்கும் அனைத்தையும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அதன்பின் நீரின் சுழலுடன் இணைந்து வேகமாக நீந்திக் கொண்டேயிருந்தான். அவனது கை, கால்களைப் போலவே மூளையும் சுறுசுறுப்பாக இருந்தது. மின்னலுக்கு ஒப்பான வேகத்துடன் சிந்தித்தான்.
அந்த அதிகாரி இப்போது விதிகளுக்குட்பட்டே சுட வேண்டும் என்று கட்டளையிடும் தவறை இரண்டாம் முறை செய்யமாட்டார் எனச் சொல்லிக் கொண்டான். ஒரே ஒரு தாக்குதலுக்குத் தப்பிப்பது போலவே சரமாரியாகச் சுடுவதற்குத் தப்பித்தலும் சுலபமானது. ஏற்கெனவே தங்கள் மனம் போனபடி சுடுவதற்கு அவர் கட்டளை பிறப்பித்திருக்க வேண்டும். “கடவுளே காப்பாற்று, எல்லா குண்டுகளிடமிருந்தும் தப்பிச் செல்ல முடியாது.”
அவனிடமிருந்து இரண்டு மீட்டர் தொலைவில் சடாரென்று நீர் தெறித்தது. அதைத் தொடர்ந்து எழுந்த தொடர் பேரோசைகள் நீருக்கடியில் அதிர்வுகளை ஏற்படுத்தி, உச்சமடைந்து, பின் படிப்படியாகக் குறைந்து காற்றில் பயணித்துக் கோட்டையை அடைந்து ஆற்றையே குழியாக்கிய அதே வெடிச்சப்தத்தில் மடிந்து போயின.
ஒரு போர்வை போல வளைந்து சுருண்டெழுந்த நீர் அவனைச் சுற்றி வளைத்து, அவன் மீது விழுந்து, அவனைக் குருடாக்கிக் கழுத்தை நெரித்தது. பீரங்கி தன் வேலையைக் காட்டியது. தாக்குதலுக்குள்ளான நீரின் பரபரப்பிலிருந்து தலையை உலுக்கி விடுபட்ட பின் குறி தப்பிய அந்தத் தாக்குதல் காற்றில் ரீங்காரமிட்டுக் கடந்து சென்று அப்பால் உள்ள காட்டு மரங்களின் கிளைகளில் விரிசலை ஏற்படுத்தியது.
“அவர்கள் மீண்டும் அப்படிச் செய்ய மாட்டார்கள்” என்று நினைத்தான். “அடுத்த முறை கொத்தாகக் குண்டுகளைப் பொழிவார்கள், துப்பாக்கியின் மீதே என் கண் இருக்க வேண்டும்; அதிலிருந்து வெளிப்படும் புகை முதலிலேயே தெரிவித்து விடும். சப்தம் தாமதமாகத்தான் கேட்கும். அது ஏவும்கணையின் பின்னேதான் இருக்கும். அதுதான் அருமையான துப்பாக்கி.”
சட்டென பம்பரம் போலச் சுழல்வதாக உணர்ந்தான். தண்ணீர், கரைகள், காடுகள், இப்போது தூரத்தில் தெரியும் பாலம், கோட்டை, மனிதர்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து மங்கித் தெரிந்தன. பொருட்கள் அதன் வண்ணத்தை மட்டுமே பிரதிபலித்தன. நீள் வட்ட வண்ணப் பட்டைகள் – இவை மட்டுமே அவன் கண்களுக்குப் புலப்பட்டன. அவன் ஒரு நீர்ச்சுழியில் சிக்கியிருந்தான். அதன் சுழற்சியோடும் வேகத்தோடும் சுற்றுவது மயக்கத்தையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தியது. அடுத்த சில கணங்களில் நீரோடையின் இடது கரையின் சரளைக் கற்களின் மீது வீசப்பட்டான். தெற்குக் கரை, எதிரிகளிடமிருந்து அவனை மறைத்து வைக்கும் இடம். சட்டென நின்று போன ஓட்டம், சரளைக் கற்களினால் கையில் ஏற்பட்ட சிராய்ப்பு போன்றவை அவனைச் சுயநினைவுக்கு மீட்டெடுக்க, ஆனந்த மிகுதியில் அவன் அழுதான். மணலைத் தன் விரல்களாலேயே தோண்டி அதில் கைப்பிடியளவு எடுத்து அந்தக் குழியில் வீசி சத்தமாக ஆசீர்வாதம் அளித்தான். அது வைரங்கள், மாணிக்கங்கள், மரகதங்கள், அதற்கீடாக அழகான பொருட்களைத் தவிர வேறு எதையும் அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. கரையிலிருந்தவை எல்லாம் மிகப் பெரிய மரங்கள். அதன் வரிசைகளில் ஒரு ஒழுங்கு இருந்ததைக் கவனித்தவன், அதன் மலர்களின் நறுமணத்தை சுவாசமெங்கும் நிரப்பினான். மரத் தண்டுகளிடையே இருந்த இடங்களில் விநோதமான இளஞ்சிவப்பு ஒளி ஊடுருவிப் படர்ந்திருக்க, காற்று அதன் கிளைகளில் குழலோசையென இசைத்தது. மீண்டும் பிடிபடும் வரை அங்கிருந்து தப்பிக்க எந்த வழிமுறையையும் விரும்பாமல், மனது மயக்குறும் அவ்விடத்தில் இருப்பதிலேயே நிறைவு கொண்டான்.
தலைக்கு மேலே இருந்த கிளைகளில் கூட்டாகச் சுடப்படும் தாக்குதல் ஏற்படுத்தும், கடகடவென்ற சப்தமும் காற்றிலெழுந்த விஸ்ஸென்ற ஒலியும் கேட்டது. குழப்பமடைந்திருந்த பீரங்கிக்காரன் ஏதோவொரு இலக்கற்ற இறுதித் தாக்குதலை நிகழ்த்தினான். அவன் துள்ளியெழுந்து கரையின் சரிவில் இறங்கி காட்டுக்குள் மறைந்தான்.
நாள் முழுவதும் சூரியனைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்தான். காடு முடிவற்று நீண்டு கொண்டிருந்தது போல இருந்தது. அதில் சிறிய இடைவெளி கூட இல்லை, மரம் வெட்ட வருபவர்களின் பாதையும் தென்படவில்லை. தான் இதுவரை இது போன்ற வனப் பகுதியில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பது கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த அறிதலில் கூட விசித்திரமாக இருந்தது.
இரவு கவிழ்கையில் அவன் களைத்து, கால்களெல்லாம் புண்ணாகி, கடும்பசியிலிருந்தான். மனைவியின், குழந்தைகளின் நினைவு அவனைத் தூண்டியது. இறுதியாக சரியான பாதையாக இருக்கக் கூடும் என்று அவன் நினைக்குமிடத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு சாலையைக் கண்டடைந்தான். அது நகரச் சாலைகள் போல அகலமாகவும் நேராகவும் இருந்த போதிலும் யாரும் பயணம் மேற்கொள்ளாதது போலத் தோன்றியது. எந்த வயல்வெளிகளும் அதன் ஓரத்தில் இல்லை மற்றும் மனிதர்கள் யாரும் அங்கு வசிப்பதாகவே தெரியவில்லை. மனிதர்கள் இருக்கக் கூடும் என்னும் குறிப்புத் தரும்படி நாயின் குரைப்பொலி கூடக் கேட்கவில்லை. மரங்களின் கறுப்பு வண்ண உடல்கள் இருபுறங்களிலும் தொலை நோக்குப் பாடத்தின் வரைபடம் போல தொடுவானத்தை நோக்கிய சுவர்களாக நின்றிருந்தன. வனத்தின் பிளவுகளுக்கிடையே தலைக்கு மேலே தெரிந்த வானத்தில் மின்னிய நட்சத்திரங்கள் அவனுக்குப் பரிச்சயமில்லாதவையாகவும் விநோதமான விண்மீன் தொகுப்பைச் சேர்ந்தவையாகவும் தோன்றின. அவை ஒரு ரகசியத் தீமையின் முக்கியத்துவத்தைக் கொண்ட ஏதோ ஒரு வரிசையில் அடுக்கப் பட்டிருந்தவை போலக் காணப்பட்டன. இருபுறத்திலுமிருந்த மரங்களின் ஒருமித்த ஓசை எங்கும் நிரம்பியிருந்தது. அதில் ஒருமுறை, இருமுறை, மீண்டும் மீண்டும் புரியாத மொழியின் முணுமுணுப்பைத் தெளிவாகக் கேட்டான்.
அவனுடைய கழுத்து மிக வலித்தது. அது மிக மோசமாக வீங்கியிருந்ததைக் கையால் தொட்டுணர்ந்தான். சுற்றியிருந்த கயிறு உராய்ந்து காயமாகியிருந்த இடத்தில் கறுப்பு வளையம் போன்ற ரணத்தின் வடு இருந்தது. கண்கள் கனமாக இருந்த காரணத்தால் அவற்றை மூட முடியவில்லை. தாகத்தால் நாக்கு தடித்து விட்டது. பற்களுக்கிடையே நாக்கை நீட்டி குளிர்காற்றுக்கு அதைக் காண்பித்து வெம்மையைத் தணித்துக் கொண்டான். பயணங்கள் மேற்கொள்ளாத நிழற்பாதையைப் புல்வெளிகள் கம்பளம் போல மென்மையாகப் போர்த்தியிருந்தன. கால்களுக்கடியில் சாலையை அவன் உணரவே இல்லை.
சந்தேகமே இல்லை, அவ்வளவு கடினநிலையிலும் நடக்கும் போது அவன் தூங்கி விட்டான். ஏனென்றால் இப்போது அவன் கண்களில் முன்னே தெரிந்தது வேறொரு காட்சி. ஒருவேளை, மனப்பிறழ்விலிருந்து அவன் வெளி வந்திருக்கிறானோ என்பது போல இருந்தது. அவன் விட்டுச் சென்ற அனைத்தும் அதே போலவே காலைச் சூரிய ஒளியில் அழகாகவும் பிரகாசமாகவும் இருந்தன. அவன் இரவு முழுக்க பயணித்திருக்கக் கூடும்… வாசல் கேட்டைத் திறந்து அகலமான வெண்ணிறக் கற்பாதையைக் கடந்து நடக்கையில் பெண்ணின் ஆடைகள் சிறகடிப்பதைக் கண்டான்; அவனுடைய அழகான, அமைதியான, இனிய மனைவி, புத்துணர்வுடன் முன்கூடத்திலிருந்து அவனைச் சந்திக்கப் படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். விவரிக்க இயலாத மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டு, ஒப்புமையில்லாத கண்ணியத்துடனும் கருணையுடனும் கூடிய தோற்றத்தில் மிளிர்ந்த அவள் கடைசிப் படிக்கருகில் அவனுக்காகக் காத்து நின்றாள். அஹ், எவ்வளவு அழகாக இருக்கிறாள்! கைகளை நீட்டியபடி அவளை நோக்கி ஓடினான். அவளைத் தழுவப் போகும் அந்த நொடியில் கழுத்துக்குப் பின்பக்கமாக ஓங்கி அடித்தது போல உணர்ந்தான். பீரங்கியின் அதிர்வு போன்ற ஒலியுடன் கண்களைக் குருடாக்கும் வெண்ணிற ஒளி அவனைச் சுற்றிலும் பாய்ந்தது. அதன்பின் எங்கும் நிசப்தமும் இருளும்!
பீட்டன் ஃபர்க்வார் மரணமடைந்து விட்டான்; கழுத்து உடைந்து அவனுடைய உடல், பாலத்தின் மரச்சட்டங்களுக்குக் கீழே இங்குமங்குமாக மெல்ல ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
An Occurrence at Owl Creek Bridge
Ambrose Bierce.
மின்னற்பொழுது மாயை,
தமிழாக்கம்: லதா அருணாச்சலம்.
—————————————————————————
Ambrose Bierce , அம்புரோஸ் பியர்ஸ் (1842-1914)
அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளர், ஊடகவியலாளர் மற்றும் சிவில் யுத்த வீரர். இவரது An Occurrence at Owl Creek Bridge என்னும் இந்தச் சிறுகதை அமெரிக்க இலக்கியத்தின் மிகப் பேசப்பட்டதும் பல தொகுப்புகளில் இடம் பெற்ற, சிறப்பான சிறுகதைகளுள் ஒன்றாகவும் இடம் பெற்றுள்ளது. போரில் எந்த ஒரு விஷயமும் போற்றுதலுக்குரியதில்லை. உண்மையில் யாரும் வெற்றியடைந்து தம் மனைவி மக்களுடன் சேர்ந்து புதிய வாழ்வைத் தொடங்குவதில்லை. அவை யாவும் மாயை, எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது எனவும், போரில் உயிர்கள் எவ்வளவு மலிவாகி விடுகின்றன என்பதைப் பற்றித் தனது கதைகளில் கூறுகிறார். கண்ணியமான இறப்பு என்னும் கருத்து போரில் மாண்டவர்களின் வலியை எவ்விதத்திலும் தணிக்காது என்பதும், உளவியல் தப்பித்தல் என்பதே மரணத்திற்கு முன்னான இறுதி நொடியில் மனதைத் திசை திருப்பக் கூடியது என்னும் மையக் கருத்தில் இந்தக் கதை பயணிக்கிறது.
இச்சிறுகதை, பல முறை ஆவணப்படமாகவும் குறும்படமாகவும் படமாக்கப் பட்டிருக்கிறது பல திரைப்படக் கதாபாத்திரங்கள் இந்தக் கதை மாந்தனின் மனநிலையை அடிப்படையாக வைத்துப் படமாக்கப்பட்டுள்ளன.