ரேமாண்ட் கார்வர் கவிதைகள்

1,கீறல்

நான் விழித்தெழுந்தேன்
கண்ணில் துளி இரத்தத்தோடு ,
ஒரு கீறல்
எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது .
ஆனால், இப்போதெல்லாம்
நான் தனியாகவே உறங்குகிறேன் .
எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன்
உறங்கும்போதும் கூட தனக்கெதிராக
தன் கரத்தை உயர்த்தவேண்டும்?
ஜன்னலில் தெரியும் என் முகத்தை ஆராய்ந்தவாறே
இதற்கும் இதுபோன்ற இன்னபிற கேள்விகளுக்கும்
விடை காணவே
இக் காலையில் நான் முயல்கிறேன்.

 

2, மகிழ்ச்சி

இன்னமும் இருள் முழுவதுமாய்
நீங்கியிராத அதிகாலை
கையில் காபியோடு வழக்கமான விடியல் நேர யோசனைகளுடன்
ஜன்னலருகே நின்றிருந்தேன்.
செய்தித்தாள் விநியோகிப்பதற்காக
ஒரு சிறுவனும் அவனுடைய சிநேகிதனும் மேடான சாலையில் ஏறி வந்துகொண்டிருப்பதைக் காண்கிறேன்.
குல்லாயும் கம்பளியும் அணிந்திருந்த அவர்களில் ஒருவன் தோளின் குறுக்காக ஒரு பையை மாட்டியிருந்தான்.
மிகவும் மகிழ்ச்சியாக தென்பட்ட அந்த சிறுவர்கள்
எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வேண்டுமாயின்
தோளோடு தோளாக அவர்கள் அணைத்துக் கொள்ளக்கூடும் என எண்ணினேன்
இந்த வேலையை

Painting by Pashk Pervathi, b.1958

இவ் விடியற்பொழுதில்
அவர்கள்
சேர்ந்தே செய்கிறார்கள்
வானம் வெளிரத் தொடங்கியிருக்க
நிலவோ மங்கலாக இன்னும்
நீரில் நெளிந்துகொண்டிருந்தது
அவர்கள் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தனர்.
அவ்வளவு அழகு அந்நிமிடம்;
மரணமோ, வேட்கையோ ஏன்
நேசமோகூட இதனுள் நுழையவியலாது.
மகிழ்ச்சி அது எதிர்பாராமல் வரும் .
உண்மையில் அது கடந்து போகும் , எந்தக் காலைநேர உரையாடலையும்.

 

3, தேன் சிட்டு

கோடை என்று சொல்ல எண்ணியவன்
‘தேன்சிட்டு’ என்கிற வார்த்தையை எழுதுகிறேன்
அதை ஓர் உறையிலிட்டு
குன்றின் கீழேயிருக்கும்
தபால் பெட்டிக்கு எடுத்து செல்கிறேன்
எனது கடிதத்தை பிரிக்கும்போது
மீளவும்
அந்நாட்களை
நீ
நினைவு கொள்வாய்
எவ்வளவுக்கு எவ்வளவு
நானுன்னை நேசித்தேன் என்பதையும்.

 

4, பிற்பகல்

கடலைப் பாராமல்
அவன் எழுதிக்கொண்டிருக்கையில்
தனது பேனா முனை நடுங்கத் தொடங்குவதை உணர்கிறான்
கூழாங்கற் படுகையைக் குறுக்காகக் கடந்து
அலை வெளியேறுகிறது
ஆனால் இதுவல்ல அது. இல்லவேயில்லை.

River Traffic
Kevin Day

ஏனெனில் அவள் அக்கணத்தில்தான்
ஆடையேதுமின்றி அறைக்குள்
நுழைவதெனத் தீர்மானிக்கிறாள்.
உறக்கக் கலகத்தில், ஒரு கணம் எங்கிருக்கிறாள் என்பது கூட அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
முன்நெற்றியினின்றும் தனது கூந்தலை தவழவிட்டவள், கண்களை மூடியவாறு கழிவறை பீங்கான் மீது அமர்கிறாள்.
தலை கவிழந்திருக்க, கால்களோ விரிந்திருந்தன.
கதவிடைவெளி வழியே அவளை நோக்குகிறான்.
ஒருவேளை அன்று காலையில்
என்ன நிகழ்ந்தது என்பதை அவள் நினைத்துக் கொண்டிருந்திருக்கக் கூடும்
சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தவள்
அவனைப் பார்த்து இனிமையாக சிரிக்கிறாள்.

 

5,எனது காகம்

எனது ஜன்னலுக்கு வெளியிலிருந்த மரத்திற்கு பறந்து வந்தது ஒரு காகம்.
அது டெட் ஹுக்ஸின் காகமோ அல்லது கால்வேயின்   காகமோ அல்ல.
அது ஃப்ராஸ்ட்டினுடையதோ பாஸ்டர்நாக்கினுடையதோ
லோர்க்காவினுடையதோ இல்லை.
போருக்கு பின்,  உறைந்த ரத்தத்தை உண்டு கொழுத்த ,
ஹோமரின் காகங்களில் ஒன்றோ அல்ல.
இது தனது வாழ்க்கையில் எந்தவொரு இடத்திலும் பொருந்தியிருந்திராத, குறிப்பிடும்படியான செயல் ஒன்றினையும்  புரிந்திராத சாதாரணமானதொரு காகம்.
அது அங்கே கிளை மீது சில நிமிடங்கள் அமர்ந்திருந்தது.
பிறகு  எழுந்து என் வாழ்க்கையினின்றும் அழகாக பறந்துபோயிற்று.

ரேமாண்ட் கார்வர் கவிதைகள்

தமிழில் – க.மோகனரங்கன்


ரேமாண்ட் கார்வர்:

அமெரிக்காவிலுள்ள ஒரெகான் மாகாணத்திலுள்ள கிலாட்ஸ்கெனி எனும் சிறு நகரத்தில் மே 25 , 1938 பிறந்தவர். அப்பா மரம் அறுக்கும் மில் தொழிலாளி. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தந்தையுடன் வேலைக்கு சென்ற கார்வர், 19 வயதிலேயே திருமணம் செய்துகொண்டு இளம் வயதிலேயே இரு குழந்தைகளுக்கு தந்தையுமாகிறார். குடும்பத்தை பராமரிக்கவேண்டி பல்வேறு சிறு வேலைகளுக்கு செல்கிறார். பிறகு பாரடைஸ் நகருக்கு குடிபெயர்ந்த கார்வர் சிக்காக்கோ மாகாண கல்லூரியில் படைப்பு இலக்கிய வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். வேலை மற்றும் எழுத்துப் பணிகளுக்குகிடையே அதிகமாகக் குடிக்கத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் குடிநோயாளியாகவே மாறிவிடுகிறார். அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அது பற்றிய தகவல்களை அவருடைய கதைகளில் காணலாம் . சிக்கல்கள் அதிகமில்லாத நேரடியான விவரிப்பு மொழியில் அமைந்த அவருடைய கதைகள் தூய்மையற்ற யதார்த்த வாதத்தை முன்னிருத்துவதாகவும் , மினிமலிச பாணியிலான எழுத்து முறையினை கொண்டதாகவும் கருதப்படுகிறது. தனது சிறுகதைகளுக்காக பெரிதும் கவனம் பெற்றவராக ஆனபோதும், அவ்வப்போது கவிதைகள் எழுதுவதையும் கார்வர் கைவிடவில்லை.கார்வரின் எழுத்துகளாக மொத்தம் ஏழு கவிதைத் தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியிருக்கின்றன. 1988 ல் 50 வது வயதில் நுரையீரல் புற்றுநோயால் மரித்துப் போனார். அவருடைய சிறுகதைகளைப் போலவே அவருடைய கவிதைகளும் ஆரவாரமேதுமற்ற மொழியில் மனித மனதை அலைகழிக்கும் உணர்வுகளை துல்லியமாக சித்தரிக்க முனைவதன் வாயிலாக அவர்களை இன்னமும் நெருக்கமாக புரிந்துகொள்ள முயலுகின்றன எனலாம்.

 

Previous articleமின்னற்பொழுது மாயை
Next articleவிதியை நம்புபவன்
க.மோகனரங்கன்
கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக  இலக்கிய ஆளுமையாளராக இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் க.மோகனரங்கன். ஈரோடு மாநகரைச் சார்ந்தவர். மீகாமம், இடம் பெயர்ந்த கடல், சொல் பொருள் மௌனம், அன்பின் ஐந்திணை, மைபொதி விளக்கு மற்றும் குரங்கு வளர்க்கும் பெண் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments