முதலில் ஒரு முக்கிய புள்ளிவிவரத்தை பார்ப்போம் , அது நாம் பேசவிருக்கும் விஷயத்தை மனதளவில் கற்பனை செய்து கொள்ள உதவியாக இருக்கும் . இன்று உலகத்தில் அன்றாடம் புழக்கத்தில் இருக்கும் கார்களின மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 140 கோடி .இன்னும் ஒரு 15 வருடங்களில் இது 280 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறார்கள் .இதில் கணிசமான வளர்ச்சி ஆசிய நாடுகளில் தான் நிகழும் என்றும் சொல்கிறார்கள் .
இது புரிந்துகொள்ளக்கூடியதே , “கார் கலாச்சாரம்” என்று சொல்லப்படுகிற அமெரிக்காவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 980 கார்கள் என்னும் விகிதத்தில் புழக்கத்தில் இருக்கின்றன , ஒப்பு நோக்க சீனாவில் அந்த எண்ணிக்கை இப்போதுதான் 165 ஐ எட்டியிருக்கிறது . இந்தியா இன்னுமே கூட குறைவுதான் வெறும் 22 கார்கள் தான் . இவ்விரண்டு நாடுகளுமே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மாபெரும் சந்தைகள் , புதிதாக உற்பத்தியாகவிருக்கும் கார்களில் கணிசமான எண்ணிக்கை இவ்விரண்டு நாடுகளில் தான் இருக்கப் போகிறது.
எந்த நாட்டில் எவ்வளவு கார்கள் இயங்குகின்றன என்பதை விடவும் முக்கியமான தகவல் அவை எந்த அளவுக்கு எரிபொருள் பயனபடுத்துகின்றன என்பது . இந்த வாகனங்களெல்லாம் சேர்த்து நாளொன்றுக்கு ஜந்தரை கோடி பேரல் எரிபொருளை பயன்படுத்துகின்றன . தினப்படி எரிபொருள் உபயோகத்தில் பாதிக்கு மேல் வாகன பயன்பாட்டில் தான் நிகழ்கிறது எனலாம்.அதாவது ஒட்டு மொத்த புவி வெப்பமாக்கும் வாயுக்களில் 30 % போக்குவரத்து பயன்பாட்டில் இருந்தே வெளிப்படுகின்றது .
எரிஎண்ணெய்
எரி எண்ணை பயன்பாடு என்பது ஒரு நூற்றாண்டு காலமாக தொழில் வளர்ச்சியிலும் , மக்களின் நகர்விலும் மாபெரும் பங்காற்றியது என்பதை மறுக்கமுடியாது . நிலக்கரியை எரித்து நீராவி எஞ்சின்களை இயக்கிக்கொண்டிருந்த நமக்கு . Internal Combuston Engine (ICE) என்னும் எரி எண்ணெயை (Petrol & Diesel ) கொண்டு இயங்கு எஞ்சின்கள் மாபெரும் பாய்ச்சல் எனலாம் . இந்த எரிபொருள் தொழில்நுட்பம் மட்டும் இல்லாமல் போயிருந்தால் நம் இரண்டு உலகப்போர்களுமே கூட நடந்திருக்காது . இந்த பாய்ச்சல்களினால் உருவான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஒருபுறம் என்றாலும் இது உருவாக்கிய பின்விளைவுகளும் ஏராளம் . முக்கியமாக கச்சா எண்ணெய் எடுத்தல் , விநியோகம் அதைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் , போர்கள் , சர்வதேச உடன்படிக்கைகள், கெடுபிடிகள் etc .
“திரவ தங்கம்” ( Liquid Gold) எனப்பட்ட இந்த எரி எண்ணெய் வளம் பெரும் பாலை நிலங்களாக இருந்த மத்திய கிழக்கு நாடுகளை ஓரிரவுக்குள் பெரும் பணக்கார நாடுகளாக ஆக்கியது . பின் அந்த எரிபொருளை பெறுவதும் அந்த வளத்தை காப்பதும், விநியோகத்தை கட்டுப்படுத்துவதும் என்று அது குறித்து நகழ்ந்த சண்டைகளும் சச்சரவுகளும் ஏராளம். பல மேலை நாடுகள் எரிஎண்ணெய் இல்லாவிட்டால் முழுமுற்றாக ஸ்தம்பித்துப் போய்விடும் என்னும் அளவுக்கு அந்த எரிபொருளை சார்ந்திருப்பவை . எவ்வளவோ கசப்புகள், பிணக்குகள் இருந்தாலும் எண்ணெயின் பொருட்டு மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்லுறவை பேணும் கட்டாயத்துக்கு உட்பட்டவை .
எண்ணெய் வளம் ஒரு கற்பகதரு மட்டுமல்ல அது ஒரு அரசியல் ஆயுதமும் தான் என்று உணர்ந்த எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் OPEC எனப்படும் அமைப்பை உருவாக்கினர் .அதன் மூலம் எவ்வளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் அதன் விலை என்ன என்று கூடி நிர்ணயித்தனர் . விலை சரியத்தொடங்கினால் உறபத்தியை குறைத்தனர் . கடந்த நூறு ஆண்டுகளில் சர்வதேச அரசியலை நிர்ணயித்ததில் எண்ணெய் வளத்துக்கு பெரும் பங்கு உண்டு.
ஆனால் அதைவிட முக்கியமான பாதிப்பையும் நாம் கடந்த 40 ஆண்டுகளாக நாம் சந்தித்து வருகிறோம் , சமீப காலங்களில் அதன் பாதிப்பு மிக வெளிப்படையாகவே உலகளாவிய அளவில் நிகழந்து வருகிறது . புவி வெப்பமடைதல் அல்லது கால்நிலை மாற்றம் என்பதில் மிக முக்கிய ஒரு காரணியாக எரிஎண்ணெய் பயன்பாடு சுட்டப்படுகிறது . அதீத காலநிலை மாற்றங்கள் , கால நிலை சுழற்சியில் ஏற்படும் தடுமாற்றங்கள் , பனிப்பாறைகள் உருகுதல் , கடல் நீர் வெப்பமாதல் , எதிர்பாராத பெரும்மழை காலங்கள் , காட்டுத்தீ ,சூறாவளிகள் , விவசாய பாதிப்பு என்று வெறும் ஆராய்ச்சி முடிவுகளாக மட்டும் இல்லாமல் நம் கண் முன்னே நம் எல்லோர் வாழ்க்கையையும் நேரடியாக பாதிக்கும் நிகழ்வாக இது மாறி வருகிறது .
எண்ணெய் வளம் என்பது கட்டற்ற வளம் கிடையாது நாளொன்றுக்கு கோடிக்கணக்கான பேரல்கள் உற்பத்தி செய்து கொண்டே போனால் ஏதோ ஒரு தருணத்தில் முற்றிலும் எண்ணெய் இல்லாமல் போகும் அல்லது அதை பிரித்து எடுக்கும் செலவு கட்டுபடியாகாமல் போய்விடும் என்பதை எல்லோருமே உணர்ந்திருந்தனர் . அதன் ஒரு குறியீடாக Peak Oil என்னும் ஒரு தருணத்தை சுட்டுகிறார்கள் , அதாவது எண்ணெய் உற்பத்தி அதன் உச்சகட்டத்தை எட்டி அதன் பின் மெல்ல மெல்ல சரியத்தொடங்கும் தருணம் . இந்த புள்ளியை நாம் ஏற்கனவே ( 2019 ல் ) எட்டிவிட்டதாக (BP , Shell ) பல எரி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன . அதாவது இந்தப்புள்ளியில் இருந்து எரி எண்ணெய் உற்பத்தி மெல்ல இறங்குமுகமாகவே இருக்கும் என்கிறார்கள் ,
மின்னூர்திகள் .
இந்தப் புள்ளியில் நிகழும் மாற்றத்தின் மிக முக்கியமான ஒரு அடையாளமாக நாம் மின்னூர்திகளை சொல்லலாம் .ஆங்கிலத்தில் Electric Vehicles ( EV ) என்று பொதுவாக சுட்டுகிறார்கள் . அதாவது எரி எண்ணெய்க்கு பதிலாக மின்கலன்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தைக் கொண்டு மின் மோட்டர்களால் இயக்கப்படும் வாகனங்கள் . மின்னூர்திகள் எரிஎண்ணெய் கார்களை விட வடிவமைப்பில் எளிமையானவை .மின் மோட்டர்கள் தற்போதைய எஞ்சின்களை விட சிறியவை , திறம் மிக்கவை , அமைதியாக இயங்குவவை.
மின்னூர்திகளுக்கு கியர் பாக்ஸ் தேவையில்லை , ஆயில் மாற்ற வேண்டியதில்லை , வாகனத்தில் பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளும் , அளவீட்டு கருவிகளும் முற்றிலும் டிஜிடலாக வடிவமைக்கப்பட்டவை , கிட்டத்தட்ட நகரும் ஒரு பெரிய கணிப்பொறி என்று சொல்லலாம். எனவே ஒப்பு நோக்க காரின் பல்வேறு பாகங்களை உற்பத்தி செய்யும் செலவு குறைவு . அதாவது நம் வால்வு ரேடியோவில் இருந்து டிரான்சிஸ்டர் ரேடியோவுக்கு நிகழ்ந்த மாற்றம் போல என்று ஒப்புமை கூறலாம்.
மின்கலன்கள்
மின்னூர்திகளில் செலவு பிடிக்கும் முக்கிய உள்ளீடு என்றால் அது மின்கலன்கள்தான் (Batteries ). இந்த மின்கலன்கள் நம் மரபான வாகனங்களில் இருப்பது போனற எடைமிக்க பெரிய ஆசிட் பாட்டரிகள் அல்ல . அவை ஏறக்குறைய நம் செல்போன்களில் இருக்கும் பேட்டரியின் நுட்பத்துக்கு நிகரானது. மின்னூர்திகளின் செயல்பாட்டுக்கு எடை குறைவாகவும் , அளவில் சிறியதாகவும் அதிக சக்தியுடனும் இயங்கும் பராமரிப்புகள் தேவையில்லாத மின்கலன்கள் அவசியமாகிறது.
ஒரு மரபான வாகனத்தின் விலையில் 20% தான் எரிஎண்ணெய் எஞ்சினின் விலை ஆனால் மின்னூர்தியின் விலையில் 50% மதிப்பு அதன் மின்கலன்களில் இருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் மின்கலன்களின் விலை பாதியாக குறைந்திருக்கிறது . தற்போதைய விலை சராசரியாக ஒரு KWh க்கு $137 டாலர் என்கிறார்கள் , இந்த விலை இன்னும் குறைந்து $100 அல்லது அதற்கும் கீழ் என்னும் போது மின்னூர்திகள் எரிஎண்ணெய் ஊர்திகளின் விலைக்கு சமமாக வரும் என்று கணக்கிடுகின்றனர் .
இது ஒரு முக்கியமான ஒரு அளவீடு , இதை ஒரு tipping point என்று சொல்லலாம் . மின்னூர்திகளும் எரிஎண்ணெய் ஊர்திகளும் ஒரே விலைக்கு கிடைக்குமாயின் வாடிக்கையாளர் எதை விரும்புவார் என்பதை விளக்கத் தேவையில்லை . இதையெல்லாம் ஒன்றும் சேர்த்து நோக்கினால் கார் உற்பத்தியாளர்களிடையே இருக்கும் போட்டியின் மைய விசை , யார் முதலில் இந்த மின்கலங்களில் விலையை நூறு டாலர்களுக்கு கீழே கொண்டு வரப்போகிறார்கள் என்பதில் தான் உள்ளது . டெஸ்லாவின் இலான் மஸ்க் (Elon Musk ) இதை மிக நன்றாக புரிந்துகொண்டிருக்கிறார். எப்படி என்பதை பின்னர் பார்ப்போம்.
எரி எண்ணெய் பயன்பாடு
அமெரிக்கா உலகில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டு மொத்த எரி எண்ணெயில் ஜந்தில் ஒரு பங்கை பயன்படுத்தும் நாடு , அங்கு எரி பொருள் பயன்பாடு குறித்து நிகழும் மாறுதல்கள உலலெங்கிலும் பெரும் பாதிப்பை செலுத்த வல்லது . உலகிலேயே இரண்டாம் பெரிய புவிவெப்பமடையும் வாயுக்களின் உற்பத்தியாளரான அமெரிக்கா ( முதலிடத்தில் சீனா ) Paris Climate Agreement எனப்படும் காலநிலை மாற்ற தடுப்பு ஒப்பந்ததில் இருந்து விலகியது , டிரம்ப் ஆட்சியின் கீழ் .அதுமட்டுமல்லாது நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டு காலநிலை மாற்ற கட்டுப்பாடுகளை டிரம்ப் தளர்த்தினார் .இந்த முடிவுகளினால் காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாட்டில் அமெரிக்கா கிட்டத்தட்ட இருபது வருடங்கள் பின்னோக்கிச் சென்றது எனலாம் .
சமீபத்தில் பதவியேற்ற அமெரிக்க அதிபர் பைடன் , பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே பாரீல் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் உறுதிமொழியில் கையெழுத்திட்டார் . காலநிலை மாற்றம் குறித்த விவகாரங்களுக்கு என்று புதியாக ஒரு காபினெட் ஒத்த அதிகாரம் கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்கினார் . வாகனங்களின் மாசு கட்டுப்பாடு குறித்து சட்டங்களை மீண்டும் கறாராக்கினார் .
அமெரிக்கா , ஜரோப்பிய ஒன்றியம் , சீனா என்று மூன்று நாடுகளையும் கணக்கிட்டால் உலக அளவில் பாதி எண்ணெய் இவர்கள் தான் பயன்படுத்துகிறார்கள் . இவர்கள் மூவருமே எரி எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதில் மிகுந்த தீவிரத்தோடு செயல்படுகிறார்கள் . பல நாடுகள் , குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் 2035 க்குள் முற்றாக எரி எண்ணெயில் இயங்கும் கார்களை தடை செய்யப்போவதாக அறிவித்திருக்கின்றன .
கொள்கை முடிவுகளும் மாற்றங்களும்
ஒருபுறம் வலுவான அரசியல் கொள்கைகள் , மறுபுறம் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் நேரடி அழுத்தங்கள் , டெஸ்லா போன்ற துடிப்பான போட்டியாளர்கள் , வாடிக்கையாளர் வழிப்புணர்வு என்று மின்னூர்திகளுக்கு மாறியே ஆக வேண்டிய ஒரு நிர்பந்தத்தை உருவாக்கியுள்ளன .
உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தியாளரான General Motors ( GM ), 2035 க்குள் மின்னூர்திகளை மட்டுமே உற்பத்தி செய்வதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்திருக்கிறது . இது வாகன உற்பத்தியாளர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது . உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல , எரிஎண்ணெய் துறை சார் நிறுவனங்களும் , உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் என்று அனைவருக்குமே இது ஆட்டத்தை கலைத்து விடும் ஒரு அறிவிப்புதான் . இந்த அறிவிப்பு மற்ற வாகன உற்பத்தியாளர்களையும் இந்த மின்மயமாக்கும் போட்டியில் இழுத்து விட்டிருக்கிறது . அவர்களுக்கு இதற்கு இணையான திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள் .
GM மின் இந்த அறிவிப்பு வந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தான் பைடன் அமெரிக்க அரசு வாகனங்கள் எல்லாம் இனிமேல் மின்னூர்திகளாகவே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் . மேலும் புதிதாக ஜந்து லட்சம் மின்னேற்றும் (Charging points ) நிலையங்களை அமெரிக்கா முழுதும் உருவாக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார் . அரசு கொள்கைகள் எப்படி ஒரு மாபெரும் மாற்றத்தை முற்றிலும் தனியார் வசம் விட்டுவிடாமல் அதற்கு சாதகமாக சூழலை உருவாக்கி முன்னத்தி ஏராக செயல்படலாம் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு இது . பைடன் வெறும் ஊக்கமும் உதவியும் மட்டுமே செய்யவில்லை இன்னொருபுறம் வாகனங்கள் ஏற்படுத்தும் மாசு ஒரு குறிப்பிட்ட அளவை மீறிவிடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறார் .
இந்த விதமான கொள்கை செயல்பாடுகள் ஏன் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பது ஒரு இருபத்து ஜந்து வருடங்கள் பின்னோக்கிச் சென்றால் புரியும் . நமக்கு இன்று மின்னூர்திகள் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருவது டெஸ்லா (Tesla ) கார்கள் தான் . இன்று உலகளாவிய மின்ஊர்தி உற்பத்தியில் யாரும் தொட்டுவிட முடியாத உயரத்தில் இருப்பது டெஸ்லா தான். ஆனால் மின்னூர்திகளில் டெஸ்லாவுக்கு இருபது வருடங்களுக்கு முன்பே ஒரு முன்னோடி இருந்திருக்கிறது , அந்த நிறுவனம் GM தான் ! . ஆம், மேலே குறிப்பிட்ட அதே நிறுவனம் தான் . அவர்கள் தான் முன்னோடிகள் என்றால் பின் எவ்வாறு அந்த early movers advantage ஐ இழந்தார்கள் ? .
ஜெனரல் மோட்டாரஸ் (GM) :
GM புதிதாக மின்னூர்திகளை (Model:EV1 ) 1995 லேயே பரீட்சித்துப் பார்த்தது , அந்த சோதனையும் நன்றாகவே போனது . ஆனால் அந்த சமயத்தில் மின்னூர்திகளை உருவாக்க போதுமாக தூண்டுதலோ, ஊக்கமோ, அவசியமோ இல்லாமல் இருந்தது மேலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் எரி எண்ணெய் நிறுவனங்களிடம் என்று உள்ளிருந்தே அழுத்தம் வந்தது . அது தங்கள் மரபான வாகனங்களுடன் போட்டி போட்டு தமது சந்தையை தாமே கெடுத்துக்கொள்ளும் சூழல் (Self-Sabotage ) வரும் என்று அச்சுறுத்தினர்
ஒருவேளை அந்த ஊர்திகள் மக்களிடையே பிரபலம் ஆகும் என்றால் அவர்கள் ஏற்கனவே கோடிக்கணக்கான டாலர்களை கொட்டி முதலீடு செய்திருக்கும் எண்ணெய் கிணறுகள் , சுத்திகரிப்பு நிலையங்கள் , தொழிற்சாலைகள் போன்றவைகளுக்கு ஆபத்து வரலாம் என்று. அந்த முன்னெடுப்பு ஒட்டுமொத்தமாக இழுத்து மூடப்பட்டது . GM இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட, நன்றாக இயங்கிக்கொண்டிருந்த கார்களையும் கூட திரும்ப பெற்றுக்கோண்டு அவைகளை அழித்துவிட்டது , அந்த தொழில்நுட்பம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்று .
இவ்வாறு நிகழ கார்ப்பரேட்களின் லாப நோக்கும் , அரசு தரப்பில் இருந்து இது குறித்த சரியான புரிதல்களோ வழிநடத்தும் கொள்கைகளும் இல்லாமல் இருந்தது தான் காரணம் .கார்ப்பரேட்களை சரியாக வழிநடத்த carrot and stick அணுகுமுறை மிகவும் அவசியம் . கார்ப்பரேட்கள் ஓயாது லாபி செய்வார்கள் , வரிகளை குறைக்கவும் , சட்டங்களை தளர்த்தவும் . இல்லையென்றால் வேறெங்காவது போய்விடுவதாக பயமுறுத்துவார்கள் .
கார்ப்பரேட் நிறுவனங்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை அவர்கள் வெளிப்படையாகவே லாபத்தை குறிவைத்து இயங்குபவர்கள் இதில் ரகசியம் ஏதும் இல்லை . ஒவ்வொரு ஆண்டும் லாபத்தை அதிகரிப்பது , பங்குகளில் விலையை அதிகரிப்பது தான் ஒரு CEO வின் தலையாய பணி , அதற்கான அவர் சட்டரீதியாக எதையும் செய்வார் .முடிந்த அளவு அழுத்தங்களை அளித்து சட்டங்களையே மாற்றுவதும் இதில் அடங்கும் . அரசு எவ்வளவோ செய்யலாம் , நல்ல கொள்கைகள் தங்கத்துக்கு சமம். இங்கு தான் அரசின் பணி தக்க சட்டதிட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் உருவாக்குவதில் அடங்கியுள்ளது , நீண்ட கால நோக்கில் நாட்டுக்கு மக்களுக்கும் என்ன நல்லது , தொழில் நுட்ப வளர்ச்சி எந்த திசை நோக்கி நகர்கிறது , அதைக் கொண்டு எப்படி நிலைத்தன்மை கொண்ட முழுமையான வளர்ச்சியை உருவாக்க முடியும் என்று முன்னோக்கி சிந்திக்க வேண்டும் .
இப்போது இந்த மாற்றங்களினால் எரி எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே கூட எண்ணெய் உற்பத்தி என்னும் எதிர்மறை பிம்பத்தில் இருந்து விடுபட நினைக்கின்றன . வாகனங்கள் எல்லாவுமே கூடிய சீக்கிரம் மின்மயம் ஆகுமென்றால் புதிய எண்ணெய் கிணறுகளில் பணத்தை கொட்டுவதில் பயனில்லை . மேலும் அப்படி எண்ணெய் கிட்டத்தட்ட தேவையேயில்லை என்னும் நிலை வரும் வரையில் இந்நிறுவனங்கள் கையை கட்டிக்கொண்டு காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை . இவைகளும் மெல்ல வேறு புதிய தொழில் வாய்ப்புகளை நோக்கி நகர வேண்டிய தேவையை உணர்கின்றன . அந்த நகர்வை நோக்கிய அறிவிப்பாக 2050 க்குள் முற்றாக புவி வெப்பம்டையும் வாயுக்களை உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதாக பல நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன .
தொடர் மாற்றங்கள் :
உலகளாவிய அளவில் இவ்வாறான மாற்றங்கள் நிகழும் போது அவை ஒரு தொடர் விளைவாக பிற மாற்றங்களையும் உருவாக்கும் . மின்கலன் உற்பத்திக்கு தேவையான கச்சாப் பொருட்களின் டிமாண்ட் அதிகரிக்கும் . ஒட்டுமொத்தமாக காற்றில் மாசின் அளவு குறைவது மக்கள் உடல்நிலையிலும் முக்கியமான முன்னேற்றத்தை உருவாக்கும் . காற்றில் இருக்கும் pariculate matter , heavy metals நச்சுப்புகை போன்றவைகளின் அளவு மிகவும் குறையும் . நகரங்களில் இன்று நாம் காணும் மூச்சு விடுதல் தொடர்பான பலவிதமான நோய்கள் குறையும்
மின்கலன் என்பது எரி எண்ணேய் போல ஒரு மாற்று எரிபொருள் அல்ல சக்தியை தேக்கி வைத்து அளிக்கும் ஒரு தொழில் நுட்பம் , அது தீர்ந்து போகும் என்ற கவலை இல்லை ,மூல சகதி எந்த வடிவிலும் இருக்கலாம் , அதை மன்சாரமாக மாற்ற முடிந்த எதுவும் எரிபொருளே . இந்த மாற்றம் வேறு பல துறைகளிலும் பல புதிய பாய்ச்சல்களை நிகழ்த்த போகிறது என்று எண்ணுகிறேன் . உதாரணமாக சூரிய மின்னாற்றலை , காற்றாலை மின்சாரம் போன்ற பரவலான உற்பத்தி செய்ய முடிகிற சக்தி வடிவங்கள , மரபான grid distribution அமைப்யே மாற்றவல்லது . வீட்டு கூரையில் இருக்கும் சோலார் பேனல்களை கொண்டே முன்னூர்திகளை மின்னேற்றம் செய்து கொள்ளக்கூடிய வசதி வரும் .
மின்னூர்திகள் மின்சார மோட்டரில் இயங்குவதால் அதை ஒரு கணிப்பொறி போல மென்பொருள் கொண்டே இயக்க முடியும் . பெரும்பாலான மின்னூர்திகள் தற்போது Fully Assisted driving என்னும் தானியங்கி நுட்பத்தோடு வருகின்றன .
ஓட்டுநர் உரிமம் , வாகன காப்பீடு , வாடகை கார்கள் , உடல் ஊனமுற்றோருக்கான வசதிகள் என்று இதன் அடுத்த கட்ட மாற்றங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்
மேலும் உணவு , எரிபொருள் , தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளில் அந்தந்த நாடுகள் எவ்வளவு தற்சார்பாக இயங்குகின்றனவோ அந்த அளவு உலகில் அமைதி நிலவும். மின்னூர்திகள் இந்த நோக்கில் எரிபொருள் சார் அதிகாரத்தை ஓரளவு வலுவிழக்கச்செய்யும் எனலாம் .
இந்தியா
இந்தியாவில் 2017 வரை காற்றாலை மின்சார உற்பத்தி மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தது , அதன் பின்னான வருடங்களில் அரசு மேற்கொண்ட குழப்பமான கொள்கை நிலைப்பாட்டால் ஊக்கத்தொகை அளிப்பதும் , திரும்பபெறுவதுமாக இருந்தது . இதனால் வரவேண்டிய முதலீடு வேறு இடங்களுக்கு போய்விட்டது . இன்று காற்றாலை மின்சாரம் இந்திய மொத்த மின்சார உற்பத்தியில் 10% அளிக்கிறது , ஆனால் அதன் untapped potential இன்னும் 6 அல்லது 7 மடங்கு இருக்கும் என்கிறார்கள் .
முன்னரே சுட்டியது போல , கார்களுக்கான மிகப்பெரும் சந்தை இன்று இந்தியா தான் . அமெரிக்கா அளவு நாம் கார்களை பரவலாக பயன்படுத்தாவிட்டாலும் இன்று சீனாவின் penetration அளவாவது இந்தியர்களும் கார்களை பயன்படுத்துவார்கள் என்று ஊகிக்கிறேன் . அந்த எண்ணிக்கைய நாம் அடைவோம் என்றாலே கூட இன்றிருப்பதை விட 10 மடங்கு கார்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஊகிக்கலாம் . அந்த புள்ளியை நோக்கி நகர அரசின் சார்பில் இருந்து முழுமையாகவும் நீண்ட கால நோக்கிலும் ஒரு ஒருங்கினைந்த கொள்கை முடிவு உருவாக வேண்டியது அவசியமாகிறது .சொல்லப்போனால் 2017 ல் இருந்தே எண்ணெய் எஞ்சின் கார்கள் எண்ணிக்கை சரியத்தொடங்கிவிட்டது . ஒப்பு நோக்க மின்சார கார்கள் தான் வேகமாக விற்பனை ஆகின்றன .
முதன் முறையாக இந்த வருடம் மின்கலன்களின் விலை ஒரு KWh $100 என்ற விலைய தொட்டிருக்கிறது . இதை price parity என்கின்றனர் . அதாவது மரபான எண்ணெய் எஞ்ஜின்களுக்கு இணையான விலையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதாக . இதைகூட 2023 க்குள் $58 டாலருக்கு கொண்டுவந்து விட முடியும் என்றிருக்கிறார் இலான் மஸ்க்.
எரி எண்ணெயின் மூலம் அரசுக்கு தற்சமயம் கிடைக்கும் வருமானம் கணிசமானது ஆனால் அந்த வருமானத்தை நம்பியே எதிர்கால திட்டங்களை வகுக்க முடியாது . அதில் ஒரு பகுதியை மின்கலன் உற்பத்தி தொடர்பான விஷயங்களில் முதலீடு செய்து மேலே சுட்டிய விலைப்புள்ளியில் மின்கலன்களை நாம் உற்பத்தி செய்ய முடியுமானால் ( அல்லது வாங்க முடிந்தாலும் ) நம் நாட்டில் வாகனங்கள் பயன்பாட்டிலும் , மாசு கட்டுப்பாட்டிலும் இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் .
சமீப காலங்களாக நாம் small government என்னும் வார்த்தைய அடிக்கடி கேட்கிறோம் அதாவது அரசு அரசாங்கம் நடத்துவதை மட்டும் கவனித்துக்கொண்டு மற்ற அத்தனை விஷயங்களையும் தனியாரிடமும் சந்தையின் போக்குக்கும் விட்டு விடுவது . இது எப்படி பிழையான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும் என்று GM நிறுவன உதாரணத்தில் பார்த்தோம் .
நம் இன்றையே தேவை smart government , புத்திசாலித்தனமான அரசு. தொழில் நட்பம் , வளர்ச்சி , திட்டமிடுதல் , மக்கள் நலம் , தொழில் அபிவிருத்தி ,வேலைவாய்ப்பு , சுற்றுற்சூழல் பேணுதல் என்று அனைத்தையும் உள்ளடக்கிய பார்வை கொண்ட கொள்கைகளை உருவாக்கும் அரசு . பல்வேறு விசைகளை அவைகளுக்குரிய தக்க முன்னுரிமை அளித்து ஒரு சமநிலை புள்ளியை முன்வைக்கும் அரசு . முக்கியமாக எல்லோரையும் விட ஒரு அடி முன்னே பார்க்கக்கூடிய தீர்க்க தரிசன பார்வை கொண்ட அரசு.
கார்த்திக் வேலு
நன்றாக எழுதப்பட்ட கட்டுரை. மின் ஊர்திகள் பொது பிராயணத்திற்கு மட்டுமன்றி, சரக்குகள் இடம் பெயர, ஆன்லைனின் கடைசி தூர செயல்பாடுகள் இவற்றில் பாய்ச்சல்கள் உண்டாக தயாராக உள்ளது. ஃப்யூயல் இன்ஜெக்ஷன் என்ஜின் மின் மோட்டார் ஆகிறது. இது அந்த தொழில்நுட்ப பொருளாதாரத்தை திருப்பி போட போகிறது..
தவிர நீண்ட நோக்கில் விண்வெளி பயணம் மூலம் வேற்று கிரக விண்கல் பிராயாணங்கள் கை கூடும் போது.. அங்கே நகர உதவ கூடியது மின் ஊர்திகள் மட்டுமே..
பாரம்பரிய மோட்டாரிலிருந்து 40% குறைந்த எடை 300% கூடுதல் பராமரிப்பு.. மின் ஊர்திகளை மிக கவர்ச்சிகரமான தேர்வு ஆக ஆக்குகிறது
கட்டுரைக்கு வாழ்த்துகள்