முதலாளித்துவம் ஏன் ஞெழியை விரும்புகிறது? — எமி லெதர் உரை

டல்வாழ் உயிரினங்கள் ஞெகிழிப் பைகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடும் சில புகைப்படங்களைப் பார்த்து நமக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். திமிங்கிலங்களின் குடலுக்குள் ஞெகிழி; ஞெகிழிப் பைகளுக்குள் மாட்டிக்கொண்டு இறந்துபோன ஆமைகளின் புகைப்படங்கள்; குஞ்சுகளுக்கு ஞெகிழியை உணவாக ஊட்டும் கடற்பறவையின் புகைப்படம்…

2016-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் கூடிய உலகப் பொருளாதார கூட்டமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. 150 மில்லியன் (1 மில்லியன் = பத்து இலட்சம்) டன் ஞெகிழிக் குப்பைகள் கடலுக்குள் இருக்கின்றன. இதே வேகத்தில் சென்றால் கடலில் மீன்களைவிட ஞெகிழியே அதிகம் காணப்படும்.

ஞெகிழி பல துறைகளின் வளர்ச்சிக்குத் துணை நின்றுள்ளது உண்மைதான்; மருத்துவம், உணவுப் பதப்படுத்துதல், பொருள் உற்பத்தி உள்ளிட்டத் துறைகளின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு அது மிகப்பெரிய தீங்கு விளைவித்திருக்கிறது.

நாம் பயன்படுத்தும் ஞெகிழி (synthetic plastic) புதைபடிவ எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவைகளில் இருந்து தயாரிக்கப்படுவது. இலாப நோக்கமே இதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது. உலக போர்கள், அரசுகளின் ஊக்கம் ஞெகிழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.

நுகர்வுத் தேவையை (consumer demand) காட்டிலும் ஞெகிழி உற்பத்தி புதைபடிவ-சார் எண்ணெய்ப் பொருளாதாரத்தோடு நெருங்கிய தொடர்புள்ளது. எனவே நாம் பிரச்சனையின் வேர்களை நோக்கிச் செல்வதே அவசியம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு வாக்கில் விலங்குகளின் தந்தந்திற்கு மாற்றாக மரத்தாது (cellulose) அறிமுகப்படுத்தப்பட்டது. செடிகளிலிருந்து பெறப்பட்ட செல்லுலோஸ், பாலிமரிலிருந்து தயாரிக்கப்பட்டது. ஆனால் முதல் செயற்கை ஞெகிழியான Bakelite 1907-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அரக்கு (shellac) பயன்பாட்டிற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வளர்ச்சி பேரளவு உற்பத்திக்கு வித்திட்டு 1920, 1930-ஆம் ஆண்டுகளில் உலகளாவிய ஞெகிழிப் பரவலாக்கத்துக்குப் பிரம்மாண்டமான தொடக்கத்தை ஏற்படுத்தியது.

ஐயன் ஆன்கஸ் (Ian Angus) தன்னுடைய Facing the Anthropocene நூலில் கூறுவதாவது: “எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பயன்பாட்டை விரிவாக்க சந்தைகளை உருவாக்கி கொண்டிருந்தபோது, வேதியியல் நிறுவனங்கள் எண்ணெய் சுத்திகரிப்பின் விளைபொருட்களைக்கொண்டு, புதிய வகையிலான பொருட்களை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தனர்.”

ஜான் டி. ராக்கெஃபெல்லர் (John D. Rockefeller) என்னும் தொழிலதிபர் தன்னுடைய எண்ணெய்க் கிடங்கைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது புகைக் குழாயிலிருந்து நெருப்பு மேலெழுவதைப் பார்த்து மேலாளரிடம் அதுகுறித்து விசாரித்தார். எண்ணெய் சுத்திகரிப்பின் விளைபொருளான எத்திலீன் வாயு எரிப்படுவதாக மேலாளர் கூறி முடிப்பதற்குள், ‘எதையும் வீணாக்குவதில் எனக்கு நம்புக்கை இல்லை; அதைப் பயனுள்ளதாக்க எதாவது வழி கண்டுபிடியுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். Plastic: A Toxic Love Story நூலில் Susan Freinkl இதனைப் பதிவுசெய்திருக்கிறார்.

இக்கதை எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நவீன புதைபடிவ எண்ணெய் நிறுவனங்களின் இயக்க அடிப்படையை இது தெரிவிக்கிறது – நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட ஹைட்ரோகார்பனைக் கொண்டு உச்சபட்ச இலாபத்தை ஈட்ட வேண்டும்.

எத்திலீனை எரிப்பதிலுருந்து பெறப்படுவது பாலிஎத்திலீன். இது 1933-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது வழக்கத்திலிருந்த பாலிமர்களைக் காட்டிலும் மாறுபட்டிருந்ததால் அதன் பயன்பாட்டை யாராலும் நிர்ணயிக்க இயலவில்லை. இப்போது அதிகம் பயன்பாட்டில் இருக்கும் பாலிமர், இந்த பாலிஎத்திலீன் தான்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதைபடிவ எண்ணெய் நிறுவனங்களும் வேதியியல் நிறுவனங்களும் கைகோர்த்தன. இன்று மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ள நிறுவனங்களான DowDuPont, ExxonMobil, Shell, Chevron, BP, Sinopec ஆகியவை புதைபடிவ எண்ணெய், ஞெகிழி என இரண்டின் தயாரிப்பிலும் முன்னிலையில் உள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே ஞெகிழி உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்தது; போருக்குப் பின்னரே தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது.

போர் சமயத்தில் பாலிஎத்திலீன், நைலான், அக்ரைலிக், பாலிஸ்டைரீன் என பல வகைப்பட்ட ஞெகிழிகள் பயன்படுத்தப்பட்டன. போரின்போது பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகளை அதிகரிக்க அமெரிக்க அரசு மூன்று பில்லியன் டாலர்களைச் செலவழித்தது.

அரசின் பெட்ரோகெமிக்கல் தயாரிப்புப் தொழிற்சாலைகள் போர் முடிந்தபின் தனியார் எண்ணெய், வேதியியல் நிறுவனங்களால் அடிமட்ட விலைக்கு வாங்கப்பட்டன.

போருக்குப் பின்னர் ஞெகிழி உற்பத்தியின் திறன் அதிகரித்தது. அதிஉற்பத்தியின் விளைவாக நுகர்வு சந்தைகளை ஞெகிழி வந்தடைந்தது.

ஞெகிழியைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உருவாக்க முடியுமென்பதால் தினசரி வாழ்வில் அதைத் தவிர்க்க முடியாமல் செய்வதன் மூலம் இலாபம் ஈட்ட முடியுமென்று அந்நிறுவனங்கள் அறிந்துகொண்டன. அமெரிக்கக் கப்பற்படையில் பயன்படுத்தப்பட்ட பாலியஸ்டர் நம்முடைய தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருப்பதன் சுருக்கமான பிண்ணனி இதுவே.

மெல்ல நம் வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் நம்முடைய உடல்களையும் ஞெகிழி ஆக்கிரமித்தது. ஞெகிழி குறித்த உரையாடலில் அதிநுகர்வையும், தூக்கியெறியும் (throwaway) கலாச்சாரத்தையும் குறைகூறுவது வழக்கமாகிவிட்டது. Throwaway கலாச்சாரம் நுகர்வோரின் தேவையின் அடிப்படையில் தோன்றியதல்ல; மாறாக பெருநிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டது.

நீண்ட நாள் நீடிக்கும் தன்மை, வலிமை ஆகிய காரணங்களால் ஞெகிழி தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அதுவே பெரிய தடையாக இருந்தது. நீண்ட நாள் நீடிப்பதால் ஞெகிழி நுகர்வின் தேவை குறைவானதாகவே இருக்கும். எனவே, ஞெகிழியின் தேவையை அதிகரிக்க புதிய வழிகளைக் கண்டறிய வேண்டிய தேவை இந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இதன் விளைவே ஒருமுறைப் பயன்பாட்டை (one use) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஞெகிழிகள்.

பொருளாதார மந்தம் நிலவியதால் அந்தக் காலகட்டதில் மக்களிடையே ஒருமுறைப் பயன் கலாச்சாரத்தைப் பரவலாக்கக் கடினமாக முயன்ற பெரு நிறுவனங்கள் வெகுசன ஊடகங்களின் உதவியை நாடின. எடுத்துக்காட்டாக Life இதழ் “Throwaway Living” என்ற கட்டுரையைப் பிரசுரித்து இதைக் கொண்டாடியது. அக்கட்டுரையில் இடம்பெற்ற புகைப்படத்தில், ஒரு தம்பதியினர் ஒருமுறைப் பயன்பாட்டு ஞெகிழிப் பொருட்களின் பெருமழைக்கு அடியில் மகிழ்ச்சியாக இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஒருமுறைப் பயனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஞெகிழிப் பைகளுக்கு 1970-களில் பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் பெரிய, பிரபலமான கடைகள் அதைப் பயன்படுத்தத் தொடங்கியபோது அனைத்துக் கடைகளும் அதனைப் பயன்படுத்தத் தொடங்கின. ஞெகிழிப் பைகளின் விலையும் குறைவாக இருப்பதால் அதன் பயன்பாட்டில் நுகர்வோருக்கும் எவ்வித தடையும் ஏற்படவில்லை.

பேனா, டம்ளர், உணவுத் தட்டு என அனைத்துப் பொருட்களும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டன. பாதிக்கும் மேற்பட்ட ஞெகிழிப்பொருட்கள் ஒருமுறைப் பயன்பாட்டு வகையைச் சேர்ந்தவை என்கின்றனர். ஒருமுறைப் பயன்பாட்டு ஞெகிழி, உற்பத்தியில் 26 சதவீதம் பேக்கேஜிங்கிற்காக (packaging) மட்டுமே தயாரிக்கப்படுபவை. இதைக் காட்டிலும் முதலாளித்துவத்தின் இயக்கத்தைச் சரியாக விளக்க முடியாது — நீண்ட காலம் நிலைக்கும் தன்மை கொண்ட ஞெகிழி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு செய்யப்படுகிறது.

இன்று நாம் ஞெகிழியின் மேல் நீந்திக்கொண்டிருக்கிறோம். இருபதாம் நூற்றாண்டிலிருந்து 8.3 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) டன் அளவிலான ஞெகிழி உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக Science Advances பத்திரிக்கை புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகளாவிய ஞெகிழி உற்பத்தி அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. உலக அளவில் ஆண்டுக்கு 400 மில்லயன் டன் ஞெகிழி உற்பத்தி செய்யப்படுகிறது.

உலக மக்கள், சராசரியாக ஆண்டொன்றில் 500 பில்லியன் ஞெகிழிப் பைகளை உபயோகின்றனர். இதில் வெறும் 14 சதவீதம் மட்டுமே மறுபயன்பாட்டிற்காகச் சேகரிக்கப்படுகின்றன; மற்றவை எரிக்கப்படுகின்றன அல்லது நிலத்தில் கொட்டப்படுகின்றன.

மறுபயன்பாட்டிற்கான நடைமுறை வசதிகள் குறைவாக உள்ளதே இதற்குக் காரணம். அகச்சிவப்புக் (Infrared) கதிர்களைக் கொண்டு ஞெகிழிப் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு உரிய முறையில் அவை மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த வசதிகள் பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை.

நம்முடைய (இங்கிலாந்து) ஞெகிழிக் கழிவுகள் மறுசுழற்சிக்கு வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. உண்மையில் அவை எரிக்கப்படுகின்றன. துருக்கி அல்லது மலேசியா கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நிலங்களில் கொட்டப்படுகின்றன. மற்ற நாடுகளின் கழிவுகளை அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா அண்மையில் அறிவித்தது. எனவே வணிகர்கள் மறுசுழற்சிக்கு மற்ற நாடுகளின் உதவியை நாடிகொண்டிருக்கின்றனர்.

மறுசுழற்சி செய்வதைவிடவும் ஞெகிழியைப் புதிதாக உற்பத்தி செய்வதே நடைமுறையில் பெரிய நிறுவனங்களுக்கு லாபம் தரும். இதனால் மறுசுழற்சி செயல்பாடுகள் பெரியளவில் தாக்கம் பெறாமல் போகின்றன. புதைபடிவ எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் உற்பத்தி அளவை மேலும் அதிகபடுத்திக் கொண்டுதான் உள்ளனர்; களிப்பாறை வளிம புரட்சி (Shale revolution) அமெரிக்க ethane ஏற்றுமதியையும் ஞெகிழி உற்பத்தியையும் இப்போது அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? ஞெகிழி உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்களை நாம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். மறுசுழற்சி வசதிகளை ஏற்படுத்தித் தரும் வண்ணம் அரசுகளையும் அந்நிறுவனங்களையும் நெருக்க வேண்டும்.

வெகு மக்களின் குரல் இங்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஒருமுறைப் பயன்பாட்டு ஞெகிழியின் பயன்பாட்டை தடை செய்யவிருக்கிறது. பிரிட்டன் அரசு ஞெகிழிச் சட்டத்தைக் கொண்டுவரப்போகிறது. இதன்படி ஞெகிழி உற்பத்தி நிறுவனங்கள் பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படும் ஞெகிழியை 100 சதவீதம் மறுசுழற்சி, மறுபயன்பாடு செய்யும் வகையில் வடிவமைக்க உத்தரவிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஒருமுறைப் பயன்பாட்டு ஞெகிழி பேக்கேஜிங்கை நீக்கவுள்ளது.

நம்முடைய சுற்றுபுறத்திலும் பணியிடங்களிலும் மறுசுழற்சி வசதிகளைக் கோர வேண்டும். ஆனால், இவையெல்லாம் மிகச்சிறிய விளைவுகளையே ஏற்படுத்த முடியும். மிகப்பெரிய மாற்றமென்பது உற்பத்தி மையங்களை கட்டுப்படுத்துவதில் உள்ளது.

இதைச் சாத்தியாமாக்க அடிப்படைகளை மாற்றியமைக்க வேண்டும். ஞெகிழி நம்மை மூழ்கடிப்பதை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கு உற்பத்தி நிறுவனங்களின் எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இவற்றையெல்லாம்விட நம்முடைய வேண்டுகோள்களையும், இயக்க செயல்பாடுகளையும் முதலாளித்துவத்தின் அடிப்படை இயக்க விசையை மாற்றியமைக்கும் வண்ணம் இருக்கவேண்டும்.


இங்கிலாந்து சோஷலிஸ்ட் உழைப்பாளர்கள் கட்சி (Socialist Workers Party) கூடுகையில் Why does capitalism love plastic? என்ற தலைப்பில் எமி லெதர் ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு; தமிழில் நிஷாந்த்.

 உரைக்கான காணொளி இணைப்பு: https://youtu.be/tygNgU4wg14

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.