யெஹூதா அமிகாய் நேர்காணல்.

யெஹூதா அமிகாய் 1924இல் ஜெர்மனியின் வட்ஸ்பர்கில் பிறந்தார், பழமைப்பற்றுமிக்க தம் குடும்பத்தாருடன் 1936இல் பாலஸ்தீனத்திற்கு பின்னர் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இராணுவத்தின் பாலஸ்தீனிய படை சார்பாக மத்திய கிழக்கில் அமிகாய் போரிட்டுள்ளார். 1948ஆம் ஆண்டுப்போரின்போது ஹாகனாவின் இரகசியப்பிரிவு அதிரடிப்படை வீரராகவிருந்தார். 1956இலும் 1973இலும் இஸ்ரேல் இராணுவத்துடனும் போரிட்டார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம்கொண்ட அமிகாய், நியூயார்க் பல்கலைகழகத்தில் இலக்கியப்படைப்பு குறித்தும் கற்பித்துள்ளார், எனினும் அவர் தனது பெரும்பான்மை நேரத்தை எழுதுவதற்கே செலவிட்டார். 1937இல் அவர் தனது  மனைவியுடன் ஜெருசலேமிற்கு குடிபெயர்ந்தார், தனது மூன்று பிள்ளைகளுள் இளையோர் இருவருடனும், தன் மனைவியுடனும் யெமின் மோஷே மாவட்டத்தில் வசித்துவந்தார்.

பெரும் புகழ்பெற்று விளங்கும் அமிகாய் இஸ்ரேலின் அதிமுக்கியக் கவிஞராக அறியப்படுகிறார், மேலும் நவீன ஹீப்ரூ இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவராகவும் கருதப்படுகிறார். மூன்று மில்லியன் மக்கள் மட்டுமே ஹீப்ரூ வாசிக்கும் வழக்கம்கொண்ட ஒரு நாட்டில் அவருடைய கவிதைகள் பதினைந்தாயிரம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்க்கின்றன. (இது ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் சிறப்பாய் விற்பனையாகும் நூலிற்கு இணையான தகுதியாகும்) அமிகாயின் இலக்கிய அந்தஸ்து உலகளாவியது, உலகம் முழுவதும் அவர் எழுத்திற்கு வாசகர்கள் உள்ளனர், உலகமொழிகள் பலவற்றிலும் அவர் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1968இல் துவங்கி, Poems (1969), Songs of Jerusalem and Myself (1973), Amen (1977), Love Poems (1980), Great Tranquility (1983), Jerusalem Poems (1988), Selected Poetry of Yehuda Amichai (1986), and Even the Fist Was Once an Open Palm with Fingers (1991)  உள்ளிட்ட அவரது பல கவிதைத்தொகுப்புளும் புனைவுகளுமாக பதினாறு புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதைகள் மூலம்தான் அமிகாய் பெரிதும் அறியப்பட்டுள்ளார் எனும்போதும், அவர் பல நாவல்களும் சிறுகதைகளும் நாடகங்களும் கட்டுரைகளும் மதிப்புரைகளும் கூட எழுதியுள்ளார்.

அமிகாய் அமெரிக்காவிற்கு அடிக்கடி வருகைபுரிபவர் என்பதால் 1989ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் நியூயார்க்கின் பல்வேறு காபிக்கடைகளிலும் வைத்து அவருடனான இந்நேர்காணலை மேற்கொண்டேன். எங்களின் சந்திப்புகள் அனைத்தும் அதிகாலைவேளையிலேயே நிகழ்ந்தன. நாங்கள் ஆங்கிலத்திலேயே உரையாடினோம், ஜெர்மன் மொழியும் ஹீப்ரூவும் கலந்த நடையில் அமிகாய் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினார். 1990இல் எங்களிடையே நிகழ்ந்த கடிதப்போக்குவரத்தின் மூலம் சேகரமான கூடுதல் தகவல்களும், வளைகுடாப் போர்நிறுத்தம் நிகழ்ந்த சிறிது காலத்திற்குள்ளாக 1991ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த எங்களின் கடைசி சந்திப்பின் சாராம்சமும் கூட இந்நேர்காணலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மிகுந்த நட்புணர்வோடு உரையாடிய அமிகாயிடம் நாசூக்கான கேலியும், அங்கதம் மற்றும் நகைச்சுவையின் மெல்லிய கலவையும், மனத்தீவிரமும் இழையோடியதைக் கண்டுகொண்டேன். அவர் முன்னாள் தடகள வீரரும் இராணுவ வீரரருமாதலால் கட்டுக்கோப்பான உடற்கட்டும், கரியவிழிகளும் கொண்ட அழகனாக அமிகாய் தோற்றமளித்தார். அவரது கவிதைகளில் தொடர்ச்சியாக வெளிப்படும் உடற்சார்ந்த பொறியுணர்வு நேரிலும் தெரிந்தது; அமிகாய் தனது உடலாலும் விழியசைவுகளாலும் எவ்விதத் தயக்கமுமின்றி எனது கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார். காபிக்கடைகளுக்கே உரிய ஆரவாரங்களையும் கடந்து அவர் இன்னமைதியோடே பதிலளித்தார், உண்மையில் அந்த சூழலை அவர் மிகவும் விரும்பியதாகவே தோன்றியது.

(ஒவ்வொரு கேள்வி பதில்களின் கீழே யெஹூதா அமிகாய்யின் கவிதை ஒன்று வாசிப்புக்கு தரப்பட்டுள்ளது )

 

பேட்டியாளர்: முதல் உலகப்போர் முடிவடைந்த சமயத்தில் நீங்கள் ஜெர்மனியில் பிறந்துள்ளீர்கள், எனில் நீங்கள் போருக்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் அல்லவா?

அமிகாய்: நான் 1924இல் ஜெர்மனியில் பிறந்தேன். 1926க்கு பிறகு, அதாவது முதல் உலகப் போருக்குப் பிறகு பிறந்தவர்கள் அனைவருமே இருபதாம் நூற்றாண்டின் பாரத்தைச் சுமப்பவர்கள்தான் என தீர்க்கமாக நம்புகிறேன். முதல் உலகப்போரின் பின்விளைவுகளுக்கும், இரண்டாம் உலகப்போரின் முழுமையான உருவாக்கத்திற்கும் எங்கள் தலைமுறை நேரிடை சாட்சியாக இருந்தது. என் வரையில், ஓர் இளைஞனாக நான் இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்றதோடு, கூடுதலாய் மூன்று போர்களிலும் கூட பங்கெடுத்துள்ளேன். இருபதாம் நூற்றாண்டு ஏற்படுத்திய விளைவாகவும், அதன் ஒட்டுமொத்த சாராம்சமாகவும் என்னை நான் உணர்கிறேன்.

 

கோடை துவங்குகிறது:

பழங்கல்லறைத் தோட்டத்தில்

உயர்ந்து வளர்ந்த புற்களெல்லாம் உலர்ந்துவிட்டன,

கல்லறைக்கற்களின் எழுத்துகளை

இப்போது உங்களால் மீண்டும் வாசிக்க முடியும்.

 

கைதேர்ந்த மாலுமிகளைப் போலே

மேற்கத்தியக் காற்று மேற்கிற்கே திரும்பிச் சென்றுவிட்டது.

யூதப் பாலையின் குகைகளில் காத்திருக்கும் எசென் துறவிகளைப் போலே

கிழக்கத்தியக் காற்று தனக்கான தருணத்திற்காய் காத்திருக்கின்றது.

அருங்காட்சியகங்களிலும் பள்ளிகளிலும் கேட்கும் குரல்களைப் போலே

உங்களையும் உங்கள் செய்கைகளையும் விவரித்திடும் குரல்களை

காற்றுகளிடையே நிலவும் மௌனத்தில் மீண்டும் கேட்பீர்கள்.

 

நீங்கள் உரியமுறையில் புரிந்துகொள்ளப்படவில்லை

நீங்கள் உரியமுறையில் புரிந்துகொள்ளவுமில்லை.

இறப்பென்றால் மரணமல்ல,

பிறப்புவீதம் குழந்தைகள் பற்றியதல்ல,

வாழ்வென்பது வாழ்வைக் குறிக்காமலும் போகலாம் –

 

இதயத்திற்காய் கொஞ்சம் ரோஸ்மேரி,

கொஞ்சம் துளசி,

சிறிதளவு நம்பிக்கை,

சிறிதளவு மருக்கொழுந்து,

நாசித்துவாரங்களுக்காய் சிறிது புதினா,

விழிமணிகளுக்காய் களிப்பு,

இவற்றுடன் கொஞ்சம் ஆறுதலும், அன்பும் போதும்.

 

பேட்டியாளர்: உங்கள் குடும்பம் ஜெர்மனியில் நீண்டகாலம் வாழ்ந்துவந்ததா?

அமி: ஆம். என் தாய் தந்தை என இரு குடும்பத்தாரும் ஜெர்மனியில் நீண்டகாலம் வசித்தவர்கள்தாம். என் தந்தை ஜெர்மானிய யூதராவார், மிகுந்த பழமைப்பற்றுமிக்கவர், உறுதிகொண்ட நம்பிக்கையாளர். தெற்கு ஜெர்மனியின் கீபல்ஸ்டாட் எனும் கிராமத்தில் யூதப்பண்ணை வீடொன்றில்தான் அவர் பிறந்தார்; தெற்கில் ஏறத்தாழ இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் வரை அதுபோன்ற யூதப் பண்ணைவீடுகள் அச்சமயம் இருந்தன. என் தந்தையார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். என் தாயாரின் குடும்பத்தினரும் அவ்வாறே. அவர்களும் தெற்கு ஜெர்மனியை சேர்ந்தவர்கள்தாம். கீபல்ஸ்டாட்டில் இருந்து வடக்கே இரண்டுமணி நேரப்பயணத்தில் இப்போது சென்றடைந்து விடக்கூடிய கிராமமொன்றுதான் என் தாயின் பூர்வீகமாக இருந்தது. அக்காலத்தில் அதுவே நீண்ட தூரம்தான். என் பாட்டனார்களும், பூட்டனார்களும் கூட ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவர்கள்தாம், அதனடிப்படையில் பார்த்தால் வரலாற்றின் மத்திம காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் இங்கு குடிகொண்டுள்ளது. ஏழு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் எனது தந்தையார்தான் இளையவர். என் தந்தையின் உடன்பிறந்த சகோதரர்களில் ஒருவர் மட்டும் விவசாயியாகவே நீடித்துவிட, வட்ஸ்பர்க் சிறுநகரத்திற்கு சென்ற என் தந்தையார் அங்கு வணிகராக உருவானார், நானும் அங்குதான் பிறந்தேன். யூத இனமக்கள் வட்ஸ்பர்கில் அதிகளவில் இருந்தனர் – மொத்தமாக நூறாயிரம் மக்கட்தொகை கொண்ட அச்சிறு நகரத்தில் யூதர்கள் ஏறத்தாழ இரண்டாயிரத்து சொச்சம் இருந்தனர், இரண்டாயிரம் என்பதே அப்போதைய யூத இனத்தில் கணிசமான தொகையாகும். அங்கு யூத மருத்துவமனையொன்று இருந்தது, யூதர்கள் கல்விகற்கவென யூதப் பள்ளிக்கூடம் ஒன்றும் இருந்தது. முதல் வகுப்பிலிருந்தே நான் ஹீப்ரூ கற்கத் துவங்கிவிட்டேன், ஜெர்மனோடு ஹீப்ரூவும் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதே பிற்காலத்தில் எனக்கு ஹீப்ரூவில் எவ்விதச் சிக்கலும் எழாததற்கு காரணமாகும்.

 

கடற்கரையில்:

வேதனைப்படுவோரெல்லாம் இறைவனென்பவன் மகிழ்வின் கடவுளெனக் கருதுகின்றனர்,

மகிழ்வோரெல்லாம் இறைவன் வேதனையின் கடவுளெனக் கருதுகின்றனர்,

கடற்கரையோர மக்களெல்லாம் மலைகளில் காதல் இருப்பதாக கருதுகின்றனர்,

மலையகத்தோரெல்லாம் கடற்கரையில் காதல் இருப்பதாக எண்ணி

கடலை நோக்கிச் செல்கின்றனர்.

 

கடலலைகள் நாம் தொலைக்காதவற்றையும் கூட மீண்டும் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன.

வழவழப்பானக் கூழாங்கல்லொன்றைப் பொறுக்கியெடுத்து, அதைப் பார்த்து

“இதை நான் மீண்டும் காணப்போவதேயில்லை,” என்றேன்.

“இனி காணவே மாட்டேன். இனி திரும்பி வரவே மாட்டேன்.”

போன்ற எதிர்மறைக் கூற்றுகளில்தான் நித்தியம் எளிதாக வெளிப்படுகிறது அல்லவா?

 

வெயிற்பட்ட பழுப்புமேனிநிறம் பெற்றுவிடுவதால் என்ன நன்மை?

வசீகரமணமும் அழகுமாய் வறுத்தெடுக்கப்பட்ட துயரத்தைப் போல்தான் காட்சியளிக்கப் போகிறோம்.

 

கடற்கரையில் இருந்து நகர்ந்தபோது, நீரைக் காண்பதற்கு பதில்

புதிய சாலையின் அருகே பறிக்கப்பட்ட பெரிய பள்ளமொன்றைக் கண்டோம்.

கனத்த கம்பிவடம் சுற்றிய மிகப்பெரிய மரஉருளை அதனருகே கிடந்தது:

எதிர்காலத்தின் அனைத்து உரையாடல்களும்,

அனைத்து மௌனங்களும்

அதனுள்ளே புதைந்து கிடந்தன.

 

பேட்டியாளர்: உங்கள் தந்தையார் முதலாம் உலகப்போரில் பங்கேற்றுப் போரிட்டாரா?

அமி: ஆம், போரிட்டார்தான். என் தாய்மாமன் 1916இன்போது போரில் பங்கேற்று இறந்துபோனார், அவரைப்பற்றிய எனது கவிதையொன்றும் உள்ளது. முதல் உலகப்போரில் பங்கேற்ற பகைநாடுகளிடையே யூதமக்கள் தமக்குள்ளேயே பிரிந்து நின்று பங்கேற்றது விசித்திர நிகழ்வு. ஜெர்மனிக்காகவும் பிரான்சுக்காகவும் பிரிட்டனுக்காகவும் ரஷ்யாவிற்காகவும் யூதர்கள் போரிட்டனர், யூத மதகுருமார்கள் நேசநாடுகளுக்காகவும், துருக்கியர்களுக்காகவும், ஜெர்மானியர்களுக்காகவும், ஆஸ்திரியர்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டனர். இஸ்ரேலுக்காக இஸ்ரேலிய ட்ரூஸ் போரிடும் அதேவேளை இஸ்ரேலை எதிர்த்து சிரிய ட்ரூஸ் சிரியாவிற்காகப் போரிடுவதைப் போலத்தான் அப்போதைய யூதர்கள் மத்திய கிழக்கின் ட்ரூஸ்களைப்போலே நடந்துகொண்டனர்.

 

ஜெருசலேம் உயர் ஆணையர் மனையிலுள்ள ஐநா தலைமைப்பணியகம்.

மத்தியஸ்தம் செய்வோரும், அமைதி உண்டாக்குவோரும், சமரசம் செய்வோரும், ஆறுதல் நல்குவோரும்

வெள்ளை மாளிகையில் வசித்துவந்தனர்

எங்கோ தொலைதூரத்தே இருந்து

சுருள்குழாய்கள் வழியாகவும், இருண்ட நாளங்கள் வழியாகவும்,

கருவிலிருக்கும் குழவியைப் போலே அவர்கள் தமக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை பெற்றுக்கொண்டனர்.

 

அவர்களின் அந்தரங்கக் காரியதரிசிகள் உதட்டுச்சாயமணிந்து சிரித்தனர்,

தொழுவங்களில் காத்திருக்கும் குதிரைகளைப் போலே

வலிய உடல்கொண்ட அவர்தம் ஓட்டுநர்கள் கீழே காத்திருந்தனர்

அவர்களுக்கு நிழல் நல்கும் மரங்களோ சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் வேரூன்றியிருந்தன,

சைக்லமென் மலர்கள் கொய்ய வயல்களுக்குச் சென்ற குழந்தைகள் திரும்பி வருவதில்லை எனும் திரிபுக்கூற்று உலாவுகிறது.

வேவுபார்க்கும் விமானங்கள் போலே, பதட்டமான எண்ணங்களெல்லாம் தலைக்குமேலே சுற்றிவருகின்றன

புகைப்படங்கள் எடுப்பர், திரும்பிவந்து

துயரம் ததும்பும் இருண்ட அறைகளில்

அவற்றை உருத்துலக்கிப் பார்ப்பர்.

அவர்களின் மனையில் கனத்த சரவிளக்குகள் உண்டென அறிவேன்

சிறுவனாகிய நான் அவற்றின் மேல் அமர்ந்து

முன்னும் பின்னும், முன்னும் பின்னுமாக ஊசலாடுவேன்,

முன்னே சென்று பின்னே வரவே முடியாதவரையிலும் ஊசலாடுவேன்.

 

பின்னர் இரவு வரும்,

எமது பழைய வாழ்வின்வழி நாங்கள் கண்டடைந்த துருப்பிடித்த, உறுதிகுலையாத முடிவுகளை அப்போது எட்டுவோம்,

அந்நேரம், உணவுமேஜைமீது கிடக்கும் எஞ்சியப் பருக்கைகளை ஒன்றுசேர்ப்பதைப்போலே,

சிதறிக்கிடந்த சொற்களையெல்லாம் ஒன்றுகூட்டி அனைத்து வீடுகளிலிருந்தும் மெல்லிசைப்பாடல்கள் எழும்,

குழந்தைகள் அனைவரும் உறங்கியபிறகும்கூட,

தொடர்ந்தபடியேயிருக்கும் எம் உரையாடல்கள்.

 

அப்போது,

தீரம்மிக்க கடலோடிகளைப் போலே எனக்குள் வலுநம்பிக்கைகள் எழும்,

கண்டங்களை கண்டடைந்தவர்கள்

தீவொன்றில் ஓரிரண்டு நாட்கள் தங்கி ஓய்வெடுத்ததும்…

மீண்டும் தம் பயணத்தை தொடர்வதைப் போலே,

பின்னர் அவை மறைந்தோடியும்விடும்.

 

பேட்டியாளர்: உங்கள் குடும்பம் பெரியதா?

அமி: என்னோடு பிறந்தவர் ஒரு சகோதரி மட்டுமே, அவர் என்னைவிட ஒரு வயது மூத்தவர். இஸ்ரேலில் வசிக்கிறார். எங்கள் கூட்டுக்குடும்பம் மிகப் பெரியது, கூட்டுக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பழமைப்பற்று கொண்டவர்கள். திருமணம், ‘பார் மிட்ஸ்வா’ போன்ற குடும்ப விழாக்கள் அனைத்திலும் நாங்கள் சந்தித்துக்கொண்டோம், எங்கள் உறவுகள் நெருக்கமாகப் பிணைந்திருந்தன. உறுதியும் நேசமும் மிகுந்த பாதுகாப்புணர்வு எங்களிடையே இருந்தது. என் பெற்றோர்கள் இருவரது சகோதர சகோதரிகளும், அவர்களின் குழந்தைகளும் என குடும்பத்தினர் அனைவருமே 1933 முதல் 1936க்குள் பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களுள் சிலர் நாஜிக்களின் ஆட்சி வரும் முன்னரே பாலஸ்தீனத்தில் குடியமர்ந்துவிட்டனர். அக்காலத்தில் மத்திய ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு இடம்பெயர்ந்த வெகுசில யூதர்களில் என் குடும்பமும் ஒன்று. இதனாலேயே அடுத்து ஜெர்மனியில் நிகழ்ந்த இன அழித்தொழிப்பில் நாங்கள் எவருமே கொல்லப்படவில்லை.

 

இபின் கேபிரோல்:

சிலநேரங்களில் சீழ்,

சிலநேரங்களில் கவிதை-

எப்போதும் ஏதோவொன்று வெளியேறிவிடுகிறது

எப்போதும் வலிதாம்.

தந்தை மரங்கள் நிறைந்த தோப்பில், பசும்பாசியால் மூடிய மரம்தான் என் தந்தை.

 

ஓ, மாமிசத்தின் விதவைகளே, குருதியின் அனாதைகளே,

நான் தப்பித்துச் செல்லவேண்டும்.

 

போத்தல்திறப்பானின் கூர்மைகொண்ட விழிகள்

கனத்த ரகசியங்களை ஊடுருவுகின்றன.

 

ஆனால்,

என் நெஞ்சத்து காயத்தின் வழியே

இறைவன் இப்பிரபஞ்சத்தை நோக்குகிறார்.

 

அவரது குடியிருப்பிற்கு

நானே வாசற்கதவு.

 

பேட்டியாளர்: நீங்கள் சீயோனிசவாதியாக (யூதத் தாயக ஆர்வலர்) வளர்க்கப்பட்டீர்களா?

அமி: ஆம், ஆனால் எனது குடும்பத்தின் சீயோனிசம் அறிவார்த்தமான கொள்கைகளோடு இருக்கவில்லை. மதப் பழமைவாதத்தையும், பாலஸ்தீனத்திற்கு செல்ல வேண்டுமெனும் நோக்கத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சீயோனிசமாக அதுவிருந்தது. பழமைப்பற்றால் உந்தப்பட்டும், தமது சொந்த நாட்டில் குடியேற வேண்டுமெனும் நீண்டநாள் ஏக்கத்தாலும்தான் பாலஸ்தீனத்திற்குச் செல்லவேண்டுமெனும் மகிழ்கற்பனை என் பெற்றோருக்கு ஏற்பட்டிருந்தது. எனது உறவினச் சகோதரர்கள் சிலர் இலட்சியவாத பொதுவுடைமைப் பதத்தில் சீயோனிசத்தை கையாண்டார்கள் எனும்போதும் என் பெற்றோர்கள் அவ்வாறில்லை. ஹிட்லருக்கு முன்னரே இங்கு தீவிர யூத எதிர்ப்பு நிலவியதும் என் குடும்பம் பாலஸ்தீனம் செல்ல விரும்பியதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். 1933 வரை ஜெர்மனியில் யூத எதிர்ப்பு இல்லையென சிலர் எண்ணுகின்றனர். ஹிட்லரின் குற்றத்தை குறைத்து மதிப்பிடுவதற்காக நான் இதைக் கூறவில்லை, ஹிட்லருக்கும் முன்னர் இருந்தே இங்கு நிலவிய யூத எதிர்ப்பிற்கு இடையேதான் நான் வளர்ந்தேன். எங்களை கேலிப்பெயர்களிட்டு அழைத்தனர். எங்கள் மீது கற்கள் விட்டெறிந்தனர். ஆம், இது எங்களுக்கு மிகுந்த வருத்தமளித்ததுதான், எனினும் எங்களால் எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், இசுலாமியர்கள் அனைவரையும் அலி என்றோ மொகம்மது என்றோ பொதுப்பெயர் வைத்து அழைப்பதுபோலே எங்களை ‘ஐசக்’ என ஏளனமாக அழைத்தனர். ‘ஏய் ஐசக், பாலஸ்தீனத்திற்கு திரும்பிப்போ, எங்கள் நாட்டைவிட்டு உன் ஊருக்குப் ஓடிப்போ’ எனக் கத்துவர். ’பாலஸ்தீனத்திற்கு போ’ எனக் கூச்சலிட்டபடியே எங்கள்மீது கல்லெறிவர். பாலஸ்தீனத்திலோ எங்களைப் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறும்படி கூச்சலிட்டனர். இதுபோன்ற முரணான இருவிஷயங்களை அருகருகே வைத்து அழகுபார்ப்பது வரலாற்றில் வாடிக்கையாக நிகழ்வதுதான். ஆனால் 1933இல் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்தபோது யூத எதிர்ப்புக்கு மத அடிப்படைவாதம் கிட்டியதை என்னால் நினைவுகூர முடிகிறது. அதன் பிறகு அந்த அடிப்படைவாதம் அரசியலாகவும் பொருளாதாரமாகவும் உருமாறியது. இதற்கு முன்னர் இவ்விரண்டும் கலந்து செயற்பட்டதில்லை, அதுவொரு கொடூர புறக்கணிப்பாக இருந்தது, எங்களைச் சுற்றி நிகழ்வதை எங்களால் தெளிவாக உணரவும் முடிந்தது. இராணுவ ஊர்வலங்களின்போது ஒலிக்கும் இசையிலும் கண்கவர் அணிவகுப்புகளிலும் கிறங்கிப்போய்  வேடிக்கை பார்த்துக்கொண்டு அங்கு நிற்கவேண்டாமென என் பெற்றோர்கள் எச்சரித்தது இப்போதும் எனக்கு நினைவுள்ளது. வட்ஸ்பர்க் ஒரு கத்தோலிக்க நகரம், சில குறிப்பிட்ட விருந்துநாட்களில் நிகழும் கத்தோலிக்க ஊர்வலங்களில் இருந்து நான் விலகியிருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கப்பட்டிருந்தேன். அதிமுக்கியமாக அனைத்துப் புனிதர் தினத்தன்று. மாணவர்களும், பாதிரிமார்களும், கன்னியாஸ்திரிகளும் பதாகைகளையும் புனித உருவங்களையும் ஏந்திச் செல்லும் அந்த ஊர்வலங்கள் மிகுந்த தீவிரத்தன்மையோடும் ஜெர்மானிய வழமையோடும் இருந்தன. எனக்கு ஒன்பதோ பத்தோ வயதாகியபோது, இதுபோன்றதொரு கத்தோலிக்க ஊர்வலத்தின் வண்ணமயத்தாலும் ஆடம்பரத்தாலும் ஈர்க்கப்பட்டு மெய்மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுவிட்டேன். நான் பழமைப்பற்று கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் தலையில் எங்கள் இனத்துக்கே உரிய கவிகைத்தொப்பியை அணிந்திருந்தேன். நான் எதிர்பாராத நேரத்தில் யாரோ என் முகத்தில் குத்தி, “ஏய் கேடுகெட்ட யூதச் சிறுவனே உன் தொப்பியைக் கழட்டு!” எனக் கத்தினர்.என் உடல் முழுதும் மயிர் அடர்ந்துவிட்டது:

 

என் உடல் முழுதும் மயிர் அடர்ந்துவிட்டது.

எனதிந்த ரோமங்களைக் கண்டு என்னை வேட்டையாடிவிடுவார்களோ என அஞ்சுகிறேன்.

 

எனது பலவண்ணச்சட்டையில் அன்பிற்கான அர்த்தமேதுமில்லை—

இரயில்நிலையமொன்றின் வான்வழிப் புகைப்படம்போலவே அது காட்சியளிக்கிறது.

 

சுட்டுக்கொல்லப்படப்போகிறவனின் கண்கட்டுத்துணியின் உள்ளே விழித்திருக்கும் விழிகள் போலே,

இரவுகளில் போர்வைக்குள்ளே என்னுடல் திறந்துள்ளது, விழித்துள்ளது.

 

அமைதியற்று அலைந்து திரிகிறேன்;

வாழ்வுமீதான பசியோடே இறக்கப்போகிறேன்.

 

இருந்தபோதும்

அனைத்து நகரங்களும் அழிந்தபிறகு மீந்திருக்கும் மணல்மேடுகள்போல் நான் அமைதிகொள்ளவே விரும்புகிறேன்.

நிறைந்துவிட்ட கல்லறைத்தோட்டம் போல்

நான் சாந்தம்கொள்ளவே விரும்புகிறேன்.

 

பேட்டியாளர்: உங்களின் தந்தையார் எவ்வாறு வருமானம் ஈட்டினார்?

அமி: என் தந்தையார் இடைத்தரகராக இருந்தார். அவரும் அவர் சகோதரரும் சேர்ந்து பெரிய விற்பனையகம் ஒன்றை நடத்திவந்தனர், தையல்காரர்களுக்கும் கம்பெனிகளுக்கும் வியாபாரச் சரக்குகளை விற்றனரே தவிர சில்லறை வணிகத்தில் அவர்கள் ஈடுபட்டதில்லை. உங்களுக்குப் புரியுமாறு கூறவேண்டுமெனில், செல்வம் கொழிக்கும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினராக நாங்கள் வாழ்ந்துவந்தோம் எனலாம். என் தந்தையார் பட்டப்படிப்பு பயின்றவரில்லை, ஆனால் அக்கால வழக்கத்தின்படி அவர் வணிகத்தொழில் புரியக் கற்றுக்கொண்டார். அதேசமம் அவர் கல்விகற்றவராகவும் விளங்கினார். நல்ல வாசிப்பனுபவம் கொண்டவர், இசையை மனதார ரசிக்கத் தெரிந்தவர். சிறந்த நகைச்சுவையுணர்வு கொண்டவர். அனைவருக்கும் விருப்பமான மனிதராக விளங்கியதோடு யூதரல்லாத பல நண்பர்களையும் கூட அவர் கொண்டிருந்தார், ஜெர்மனியை விட்டு பாலஸ்தீனத்திற்கு செல்ல வேண்டாமென அவர்கள் எங்களை வற்புறுத்தவும் செய்தனர். என் தாயும் நிறைய வாசிப்பவர்தாம். வாசிப்பின்வழி எங்கள் குடும்பத்தில் ஏராளமான கலாச்சாரங்கள் இருந்தன எனலாம். கூத்தே, ஹாய்னெ, ஷில்லெ ஆகியோரின் கவிதைகளும் இசையும் எங்களுக்கு விருப்பமாயிருந்தன. ஜெர்மானிய இலக்கியத்தில் இருந்து என் தாயும் பாட்டியாரும் பலவற்றை எனக்கு வாசித்துக் காட்டியுள்ளனர்.

 

ஏற்றுக்கொள்ளாதே:

மிகுந்த காலந்தாழ்த்தி வருகைதரும் இந்த மழையை ஏற்றுக்கொள்ளாதே.

அதைவிடவும் அரை உயிராக இருப்பதே மேல்.

உன் வலியை ஒரு பாலைவனம்போல் வடித்துக்கொள். சொல்லவேண்டியவற்றை சொல்லியாகிவிட்டது எனச்சொல்,

மேற்கு நோக்கி உன் பார்வையைத் திருப்பாதே.

சரணடைய மறு. இவ்வருடமும் நீண்ட கோடைக்காலத்தை தனிமையில் கழித்திட முயன்றிடு,

உலர்ந்துகிடக்கும் உன் ரொட்டியை உண்,

கண்ணீரை விலக்கிடு. அனுபவங்களிலிருந்து

எதையும் கற்றுக்கொள்ளாதே. என் இளைஞனே, உதாரணமாக,

இரவுகளில் நேரம்கடந்து நான் வீடு திரும்புவது,

கடந்தகால மழையில்தான் எழுதப்பட்டது.

இப்போதும் எந்த மாற்றமும் உண்டாகிவிடவில்லை.

உன் சம்பவங்களை என் சம்பவங்களாகக் காண்.

அனைத்துமே முன்னர்போல் ஆகிவிடும்:

ஆப்ரகாம் மீண்டும் ஆப்ராம் ஆகிவிடுவான்.

சாரா மீண்டும் சாரை ஆகிவிடுவாள்.

 

பேட்டியாளர்: மதம்சார்ந்ததொரு சூழலில்தான் நீங்கள் வளர்த்தெடுக்கப்பட்டீர்களா?

அமி: பெரும்பாலும் அப்படித்தான் நிகழ்ந்தது எனலாம். நான் யூத சபைக்கு தவறாமல் சென்றேன். விவிலிய வாசிப்புதான் எனது முதல் கல்விகற்றலாக இருந்தது. அதேசமயம் ஜெர்மானிய நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் கேட்டும் வளர்ந்தேன், அவற்றையெல்லாம் விவிலியக் கதைகளாகவே அப்போது கற்பனை செய்திருந்தேன் என்பேன். வரலாறு தொடர்பான எனது அறிவெல்லாம் இந்தக் கதைகளில் இருந்தே துவங்கின, தேவதைக் கதைகளின் ரூபத்தில் வெளிப்பட்ட வரலாற்றை நான் மிகவும் ரசித்தேன். எனினும் நான் வேறுஇனத்தைச் சேர்ந்தவன் என்பதை துவக்கத்திலிருந்தே என்னால் உணர முடிந்தது. அதில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை.  பாயும் நதிகளும், வனங்களும், ஏரிகளும், மலைகளும் கொண்ட அழகுகொஞ்சும் ஜெர்மானிய நிலக்காட்சிகளையே நான் விவிலியக் கதைக்காட்சிகளாகவும் உருவகித்துக் கொண்டேன். என் பள்ளியில் சுற்றுலா சென்றபோது நான் கண்ட வெயில் படர்ந்த பள்ளத்தாக்கை விவிலியத்தில் டேவிட்டும் கோலியாத்தும் சமர் புரிந்த பள்ளத்தாக்காக கற்பனித்துக் கொண்டேன். அப்போதும் யூத எதிர்ப்பு இருந்ததுதான் எனும்போதும் ஜெர்மானிய நிலக்காட்சிகள் எனக்கு ரம்மியமாகவே தோற்றமளித்தன. பாலஸ்தீனக் கனவுகளோடு இந்த ரம்மியமும் கலந்திருந்தது. நான் கனவுலகில் வாழ்ந்திருந்தேன், மகிழ்கற்பனைக் கனவில் இருந்தேன், சிறுபான்மை மக்களாகவும் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களாகவும் நாங்கள் வசித்த நாட்டிலிருந்து விலகி விவிலிய வேர்கள் கொண்ட பாலஸ்தீனத்திற்கு செல்லப்போகும் கனவில் திளைத்திருந்தேன்.  எங்களை பழங்குடியினர்  எனப் பெயரிட்டு அழைப்பது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். நாடோடிகளைப் போலே எங்களுக்கெனப் பிரத்யேக ஆடைகளோ வேறெந்தப் பழங்குடியின வாழ்வுமுறைகளோ இல்லையெனும்போதும் எங்களுக்கென இருந்த உணர்வுகளெல்லாம் எங்களுள்ளே வெகு ஆழத்தில் புதையுண்டிருந்தன. எங்களின் நம்பிக்கைகளில், கனவுகளில், கற்பனைகளில் நாங்கள் வெகு உறுதியாகவிருந்தோம். நாங்கள் வெகுவாய் வேறுபட்டிருந்தபோதும் மற்றவர்களுடன் எங்களால் இயைந்து வாழமுடியுமென உணர்ந்திருந்தோம். நாங்கள் வித்தியாசமான உடையணிய வேண்டியிருக்கவில்லை, எங்களால் அவர்களோடு சேர்ந்து பணியாற்றவும் முடியும், ஏனெனில் எங்கள் உணர்வுகள் எம்முள்ளே உறுதியோடு வேரூன்றியிருந்தன. நான் மிகுந்த மதநம்பிக்கை கொண்ட சிறுவனாகத்தான் வளர்ந்தேன், தினமும் யூத சபைக்கு சென்றேன், சிலநாட்களில் இருமுறை கூடச் செல்வேன். எனது இந்த மதநம்பிக்கையை நான் நல்லவிதமாகவே பார்க்கிறேன் – குழந்தைகளுக்கு மதம் நல்லது என எண்ணுகிறேன், அதிலும் குறிப்பாக படிப்பறிவுகொண்ட குழந்தைகளுக்கு, ஏனெனில் அது அவர்களிடம் கற்பனையை வளர்க்கிறது, நிஜ உலகில் இருந்து முற்றிலும் மாறுபட்டதொரு கற்பனை உலகை அவர்கள் சிருஷ்டித்துக்கொள்ள மதம் உதவுகிறது என எண்ணுகிறேன். மதம் காட்டும் உலகு தர்க்கரீதியான உலகை பிரதிபலிப்பதில்லை; அதனாலேதான் குழந்தைகளுக்கு அது மிகவும் பிடித்துப்போகிறது. குழந்தைகளுக்கான தேவதைக் கதைகள் போலவே புனைகதைகள் கொண்ட உலகாக மதம் விளங்குகிறது.

 

அம்மாவிற்கு:

வானைநோக்கிக் கூச்சலிடப் பழைய காற்றாலையைப்போலே

எப்போதும் இருகைகள் உயர்ந்திருக்க

இருகைகள் அடுக்குரொட்டிகள் செய்ய தாழ்ந்திருக்கும்.

 

அவர் விழிகள் தூய்மையாக மினுங்கும்

பஸ்கா பண்டிகையைப் போலே.

 

இரவுவேளைகளில் அனைத்துக் கடிதங்களையும்

புகைப்படங்களையும் அருகருகே பரப்பிவைப்பார்,

அவற்றோடு சேர்த்து

இறைவனின் விரல் நீளத்தையும்

அளப்பார்.

 

அவரது விசும்பல்களின் இடையே இருக்கும்

ஆழமானப் பள்ளத்தாக்குகளில் நடந்துசெல்ல விரும்புகிறேன்.

 

அவரது அமைதியின் வெப்ப அலைகளில்

காலார நின்றிட விரும்புகிறேன்.

 

அவரது வலிகளின் கரடுமுரடனான மரத்தூர்களின்மீது

சாய்ந்துகொள்ள விரும்புகிறேன்.

 

ஹேகார் இஷ்மாயிலை கிடத்தியதைப்போலே

அவர் என்னையும்

ஏதோவொரு புதரின் கீழே கிடத்துவார்.

 

இதன்மூலம்,

அவர் போரில் என் மரணத்தைக் காணாதிருக்க முடியும்,

ஏதோவொரு புதரின் கீழே,

ஏதோவொரு போரில் நிகழப்போகும் என் மரணத்தை

 

பேட்டியாளர்: ஜெர்மனியில் நீங்கள் வளர்ந்த காலத்தில் அங்கு நிலவிய சமூக, அரசியல் யதார்த்தங்கள் குறித்து அறிந்திருந்தீர்களா?

அமி: இல்லையெனத்தான் சொல்லவேண்டும். தம் குழந்தைகளிடம் அரசியல் பேசாத தலைமுறையைச் சேர்ந்தோர் என் பெற்றோர் – பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக நாட்டில் நடப்பவற்றில் இருந்து அவர்கள் தம் குழந்தைகளை தள்ளியே வைத்திருந்தனர். தமக்குள்ளே மட்டும் அரசியல் பேசிக்கொண்ட ஆண்கள் பெண்களையும் குழந்தைகளையும் அரசியலில் இருந்து விலக்கிவைப்பது தம் கடமையென எண்ணியிருந்தனர். எனது தந்தையின் வியாபாரம் நல்லபடியாக நடைபெற்றதாலும், அச்சமயம் உயிரோடிருந்த என் தாத்தாவும் பாட்டியும் வசித்த பன்ணைக்கு நான் அடிக்கடி சென்றுவிட்டதாலும், ஜெர்மனியில் நிலவிய பொருளாதார மந்தநிலை குறித்து நான் அறியவேயில்லை. அச்சமயம் பெருநகரங்களில் வசித்துவந்த யூதர்கள் கடந்துவந்த பொருளாதாரத் தேக்கப் பின்விளைவுகளை அனுபவித்ததாக எனக்கு நினைவேயில்லை.

 

இவ்வுலகின் ஒருபாதி மக்கள்:

இவ்வுலகின் ஒருபாதி மக்கள்

மறுபாதி மக்களை நேசிக்கின்றனர்,

ஒருபாதி மக்கள்

மறுபாதி மக்களை வெறுக்கின்றனர்.

இந்தப் பாதியாலும் அந்தப் பாதியாலும்

மழையின் சுழற்சிபோலே

நான் அலைந்துகொண்டும், முடிவேயில்லாது மாறிக்கொண்டும்

இருக்கவேண்டுமா?

பாறைகளினிடையே உறங்கி,

ஆலிவ் மரத்தூர்கள் போலே கரடுமுரடாக வளர்ந்து,

நிலவு என்னைநோக்கிக் குரைப்பதைக் கேட்டு,

துயரங்களால் என் காதலை உருமாற்றி,

இரயில் தண்டவாளங்களிடையே அஞ்சிநடுங்கும் புற்களைப் போலே முளைத்து,

துன்னெலிபோல் நிலத்தின் கீழே வாழ்ந்து,

கிளைகளில் அல்லாது வேர்களிலேயே தங்கி,

தேவதைகளின் கன்னத்தோடு என் கன்னத்தை இழைக்காமல்,

முதல் குகைக்குள் காதல்புரிந்து,

பூமியைத் தாங்கிநிற்கும் சூரியக்கதிர்களின் கவிகையின்கீழே

என் மனைவியை மணந்து,

எனது இறுதிமூச்சுவரை, எனது இறுதி வார்த்தைகள்வரை,

எதுவுமே புரியாமல், என் இறப்பை இயற்றிக்காட்டி,

எனது வீட்டின் உச்சியில் கொடிக்கம்பங்களையும்

வீட்டின் கீழே குண்டுகள் தாக்கா புகலிடத்தையும் அமைக்க வேண்டுமா?

திரும்பி வருவதற்காய் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த

சாலைகளில் நடந்து,

அச்சுறுத்தும் அனைத்து இரயில்நிலையங்கள் வழியாகவும் கடந்து –

பூனை, கழி, தீ, நீர், கசாப்புக்கடைககாரன்,

குழந்தைக்கும் இறப்பின் தேவதைக்கும் இடையே வாழவேண்டுமா?

 

ஒருபாதி மக்கள் நேசிக்கின்றனர்,

ஒருபாதி மக்கள் வெறுக்கின்றனர்.

வாகாய் பொருந்திப்போகும் அந்தப்பாதிகளின் இடையே

என் இடம் எது?

அவற்றின் எந்தப் பிளவின் வழியே

எனது வெண்ணிற இல்லங்களின் கனவை,

மணலில் வெற்றுக்கால்களுடன் ஓடுபவர்களை,

அல்லது மணற்மேடுகளின் அருகே

ஒரு பெண்ணின் கைக்குட்டையின் அசைவையேனும் காண்பேன்

 

பேட்டியாளர்: கலைத்திறன் கொண்ட குழந்தையாக விளங்கினீர்களா?

அமி:  இல்லை, நான் என்னைக் கலைத்திறன் கொண்டவனாய் எண்ணியதேயில்லை. படைப்பாற்றலோ நிகழ்த்துகலைத்திறனோ கொண்ட எவருமே எனது குடும்பத்தில் இருந்ததில்லை. நல்ல செழிப்பான அகவுலகம் கொண்ட சாதாரண குழந்தையாக நானிருந்தேன் என வேண்டுமானால் கூறலாம். கால்பந்தாட்டமும் நாட்டுப்புறக் கதைகளும் எனக்கு விருப்பமானவை. எனது அகவுலகிற்கும் புறவுலகிற்கும் இடையே நான் எவ்விதமான பிரிவினையையும் உணர்ந்ததில்லை, இப்போதும் அவ்வாறு உணர்வதில்லை. நிஜக் கவிஞர்கள், புற உலகை அகவுலகாகவும் அக உலகை புறவுலகாகவும் மாற்றும் வல்லமை கொண்டவர்கள் என எண்ணுகிறேன். கவிஞர்கள் எப்போதும் வெளியே, உலகத்தோடு இருத்தல் வேண்டும், ஒரு கவிஞன் தன் கலைக்கூடத்தினுள்ளேயே முடங்கிவிடக்கூடாது. அவனது பணிமனை அவனது மனதினுள்ளே இருக்கிறது, அவன் தனது சொற்கள் எப்படி நிதர்சனங்களோடு பொருந்துகிறது என்பதையறிந்து, தன் சொற்களை நுண்ணுணர்வுடன் கைக்கொள்ள வேண்டும். அதுவொரு மனநிலை என்பேன். ஒரு கவிஞனின் மனநிலை உலகின் மென்மையையும் வன்மையையும் உள்ளது உள்ளவாறே காண முடிந்ததாய், இரட்டை ஒளிப்படர்வுடன் உள்வாங்கிடக் கூடியதாய் இருத்தல் வேண்டும். கவிஞன் மட்டுமல்ல, கணிதவியலாளரோ, மருத்துவரோ, அறிவியலாளரோ, அறிவுத்திறம் கொண்ட எவராக இருப்பினும் அவர்கள் இவ்வுலகை கவித்துவமாய் காணவும், விளக்கவும் கூடியவர்களே.

 

என் நாசிக்குள் பெட்ரோல் மணம்.

என் நாசிக்குள் பெட்ரோல் மணம்,

இளம்பருத்தியாலான கிண்ணத்தில் உள்ள எலுமிச்சையைப்போலே, எழுகின்ற உன் ஆன்மாவை என் உள்ளங்கையில் ஏந்துகிறேன்,

ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் என் தந்தையும் இதையே செய்வார்.

 

ஆலிவ் மரம் வியப்பதை நிறுத்திவிட்டது – அது அறியும்

இங்கு பருவகாலங்கள் உள்ளன, செல்வதற்கான நேரம் வந்துவிட்டது.

உன் முகத்தை துடைத்துக்கொள், என் பெண்ணே, சிறிதுநேரம் என்னருகே நில்,

குடும்பப்புகைப்படத்தில் உள்ளதைப் போலே, புன்னகைசெய்.

 

எனது சட்டையை, எனது மனச்சோர்வை மூட்டைகட்டி வைத்துவிட்டேன்,

என் அறையில் இருக்கும் பெண்ணே, உன்னை நான் மறக்க மாட்டேன்,

சாளரங்களே இல்லாமல், போர் மட்டுமேயுள்ள

பாலைவனத்தையும், உறைந்த குருதியையும் அடையும் முன்னர் இருக்கும் என் கடைசி சாளரமே.

 

முன்பெல்லாம் நீ சிரிப்பாய், இப்போதோ உன் விழிகளில் அமைதிதான் குடிகொண்டுள்ளது,

அன்புக்குரிய நாடு அழவே அழாது,

கசங்கி குலைந்த படுக்கையில் காற்று சலசலத்தோடும் –

நம் தலையோடு தலை இணைத்து இனியெப்போது உறங்குவோம்?

 

இந்த பூமியில், மூலப்பொருட்களெல்லாம் தம் சுவடை விட்டுச்செல்கின்றன,

நம்மைப்போல் அமைதியிலும் இருளிலுமிருந்து அவை பிரித்தெடுக்கப்படுவதில்லை,

நமக்காகவும், இலையுதிர்க்காலத்தில் காதல்கொள்ளும் அனைவருக்குமான அமைதியை ஜெட் விமானம் ஆகாயத்தில் உருவாக்குகிறது.

 

பேட்டியாளர்: ஒரு கட்டத்தில் ஜெர்மனியை விட்டு வெளியேறி பாலஸ்தீனத்திற்கு செல்லும் முடிவை எடுத்துவிட்டீர்கள் அல்லவா?

அமி: ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சி உண்டானதுமே என் தந்தை பாலஸ்தீனத்திற்கு செல்லவேண்டுமென முடிவெடுத்துவிட்டார். என் தந்தை வரலாற்றை நன்கு அறிந்து வைத்திருந்ததோடு, அவரது அனைத்து சகோதர சகோதர்களும் முன்னரே பாலஸ்தீனத்திற்கு சென்றுவிட்டனர் என்பதும் அதற்குக் காரணம். என் தந்தையாரின் குடும்பத்தினர் மற்றும் என் தாயின் குடும்பத்தினர் என எங்களின் மொத்தப் பழங்குடியினமுமே, எங்களை அவ்வாறு அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும், 1934 துவங்கி 1936க்குள் பாலஸ்தீனத்திற்கு வந்து சேர்ந்துவிட்டனர், ஒருவர் கூட ஜெர்மனியில் தங்கவில்லை. இன அழித்தொழிப்பில் இருந்து தப்பித்த வெகுசில ஜெர்மானிய யூதக் குடும்பங்களுள் நாங்களும் ஒரு குடும்பம் எனலாம். எங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது என அச்சமயம் எனக்குப் புரியத் துவங்கியிருக்க, தூர இடிமுழக்கம் மெல்ல மெல்ல அருகே வருவதைப் போன்ற அச்சம் உண்டாகியது, நிஜ ஆபத்தைவிடவும் அது கொடுமையாக இருந்தது. என் தந்தை தான் கண்டவற்றையும் உணர்ந்தவற்றையும் நாங்கள் அறியாவண்ணம் நடந்துகொண்டார், எனினும் அவர் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருந்தார். எனவே 1936இல் நாங்கள் பாலஸ்தீனத்திற்கு சென்றோம், அப்போது நான் பதினொன்றில் இருந்து பனிரெண்டாம் அகவைக்குள் அடிவைத்திருந்தேன். ஒரு வருடம் முன்னரே அங்கு சென்றுவிட்ட எனது சில உறவினச் சகோதரர்கள் கிப்புட்சிம் எனவழைக்கப்படும் கூட்டுப்பண்ணைகளில் குடிபுகுந்தனர்..  டெல் அவீவிற்கு அருகேவிருந்த பெடாவ் டிக்வா எனும் ஓர் அழகிய சிறுகிராமத்திற்கு நாங்கள் குடியேறினோம். கிராமத்தைச் சுற்றிலும் இருந்த ஆரஞ்சுத் தோட்டங்களில் வெறும் கால்களோடு நடைசென்ற அனுபவங்கள் கிளர்ச்சியூட்டுபவை. தொத்திறைச்சி தயாரிக்கும் சிறு தொழிலகமொன்றை என் தந்தையாரும், அவர் சகோதரரும், எனது மூத்த உறவினச் சகோதர் ஒருவரும் சேர்ந்து துவங்கினர், பாலஸ்தீனத்தில் அத்தொழிலை முதன்முதலாகத் துவங்கியவர்கள் அவர்களே. தொழிலகம் என்றால் ஒரு சிறு வீட்டினுள் சில இயந்திரங்கள் வைத்துத் தொழில் புரிந்துவந்தனர். இப்படியாக தொத்திறைச்சி செய்வதைத்தான் நான் முதன்முதலாகக் கற்றுகொண்டேன்! எனது மூத்த உறவினச் சகோதரனும், எனது பெரியப்பாவும் தொத்திறைச்சி தயாரிக்க, என் தந்தையார் வியாபார நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார்; வெறும் மூன்று நபர்கள் சேர்ந்து செய்த எளிய வணிகம் அது…

 

வீடுகளைத் தகர்த்தெறிந்தவர்கள்

வீடுகளைத் தகர்த்தெறிந்தவர்கள்

கைவிடப்பட்டக் கிராமத்தைப்போலே இன்று ஆதரவின்றிக் கிடக்கின்றனர்.

இருந்தபோதும்,

நாடுகள் விரவிக்கிடக்கும் இப்பூமி சுழன்றபடியேதான் இருக்கிறது.

வெறுமையான இவ்வுலகில் மழை தன் கடமையை கனகச்சிதமாக நிறைவேற்றியபடியேதான் இருக்கிறது.

காவலாளிகள் மாறுவதைப் போலே வார்த்தைகளும் இடம்மாறிக்கொள்கின்றன:

அவ்வார்த்தைகள் சில எப்போதும் தம் பணியிடத்தில் உறங்கியபடியேதான் உள்ளன.

கடலில் இருந்து அத்தனை தொலைவுகடந்து வந்துபோகும் காற்று தேம்புகிறது.

 

எனது எண்ணங்கள் பிளந்த ஆப்பிள்துண்டுகள் போலே திறந்துகிடக்கின்றன, கருத்துப்போயுள்ளன.

ஆனால் என்னுடலோ

வானை நோக்கித் திறந்திருக்கும் சிதைந்த வீட்டினைப் போலே

சுதந்திரமாகவும் மகிழ்வாகவும் உள்ளது

 

பேட்டியாளர்: பாலஸ்தீன வாழ்வோடு பொருந்திப்போக சிரமப்பட்டீர்களா?

அமி: இல்லவே இல்லை. ஹீப்ரூ பேசும் கலாச்சாரத்தினுள்ளும் சமூகத்தினுள்ளும் நான் உடனடியாகப் பொருந்திப்போனேன். ஜெர்மனியிலேயே நான் பள்ளியில் ஹீப்ரூ பயின்றிருந்ததால் பாலஸ்தீனத்தில் ஹீப்ரூ எழுதவும் பேசவும் எனக்கு எந்தச் சிக்கலும் எழவில்லை. வீட்டில் ஜெர்மன் தான் பேசினோம் என்றபோதும் நான் ஹீப்ரூவிலும் சரளமாகவே உரையாடினேன். பள்ளியிலும் நாங்கள் ஹீப்ரூ பேசிப் பயின்றோம். எனது பெற்றோர்களோடு உரையாடும் நேரம் தவிர்த்து மற்றெப்போதும் நான் ஹீப்ரூவே பேசினேன். என் தந்தையாரும் ஹீப்ரூ அறிவார் என்றபோதும் நாங்கள் இருவரும் ஜெர்மானிய மொழியிலேயே பேசிக்கொண்டோம்; அதுவொரு குடும்ப நிகழ்வுபோல நடந்தது. நான் முன்னர் பயின்ற ஜெர்மன்-யூதப்பள்ளி மிகுந்த கண்டிப்பானது, எவராலும் மீறமுடியாத இரும்புக்கவசம் போன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்த அப்பள்ளியிலிருந்து இந்நாட்டின் பள்ளிகள் முற்றிலும் வேறுபட்டிருந்தன. இந்நாட்டுப் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் ஒழுங்குமுறை மிகக்குறைவே, கட்டுப்பாடுகளற்ற பகுதியில் இருப்பதைப் போன்ற உணர்வையே அது தந்தது. உதாரணத்திற்கு, சில மாணவர்கள் காலணிகள் அணியாமல் வெறும் கால்களோடே பள்ளிக்கு வந்தனர். கட்டுப்பாடற்ற இந்நிலை எனக்கு ஆச்சரியமாக இருந்தபோதும் நான் எனது ஒழுங்கை எங்குமே விட்டுத்தரவில்லை, அப்பள்ளி எனக்களித்த சுதந்திரத்தையும் அதன் ஒழுங்கற்ற நிலைப்பாடும் என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

 

எனது காதலிக்காக காத்திருந்தேன், அவளது காலடிகள் அங்கில்லை.

எனது காதலிக்காகக் காத்திருந்தேன், அவளது காலடிகள் அங்கில்லை.

ஆனால் துப்பாக்கிச்சத்தத்தைக் கேட்டேன் –

போர்வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.

போர்வீரர்கள் எப்போதும் ஏதேனுமொரு போருக்கு பயிற்சிசெய்தபடியேதான் இருக்கின்றனர்.

 

பிறகு என் சட்டையின் கழுத்துப்பட்டியை தூக்கிவிட்டேன்,

அதன் முன்மடிப்பின் நுனிகள் இரண்டும் இருவேறு திசைகளை நோக்கியிருந்தன.

அவற்றினிடையே இருந்து எழுந்த என் கழுத்தின் உச்சியில்,

விழிக்கனிகளைத் தாங்கியபடி அமைதி குடிகொண்ட என் தலையிருந்தது.

 

அதன் கீழே,

இளஞ்சூடான என் சட்டைப்பைக்குள் சாவிகள் சிணுங்கின,

பத்திரமாய் பூட்டிவைத்துக்கொள்ள

என்னிடம் இன்னமும் சில பொருட்கள் உள்ளன

எனும் எண்ணமே எனக்கு சிறு பாதுகாப்புணர்வை அளிக்கிறது.

 

எனினும், முடிவுக்காலத்தின் ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டு,

பயங்கர அபாயங்களின் முத்துக்களை தன் கழுத்தில் சூடிக்கொண்டும்,

இப்போதும் என் காதலி தெருக்களில் நடந்துசெல்கிறாள்.

 

பேட்டியாளர்: பாலஸ்தீன அராபியர்களிடம் உங்களுக்கு ஏதேனும் மோதல் உண்டானதா?

அமி: ஆம், முசோலியுடனும் ஹிட்லருடனும் ஜெருசலத்தின் கிராண்ட் முப்தி ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களின் காரணமாக 1936இல் இருந்து அரேபிய மோதல்கள் உருவாகத் தொடங்கின. இரவுவேளைகளில் துப்பாக்கிச்சத்தம் கேட்கும், மிக அதிக அளவில் இல்லையெனும்போதும் நினைவில் நிற்குமளவு அச்சத்தம் இருந்தது. அதனால் என் தந்தை, பெரியப்பா சித்தப்பாக்கள், எனது மூத்த உறவினர் சகோதரர்கள் என எனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பெரியவர்களும் காவல்பணிக்குச் செல்லவேண்டியிருந்தது. அதேசமயம், எங்கள் கிராமத்திலிருந்து நீண்ட தொலைவு செல்லவும் எங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது, ஆபத்து அதிகமென்பதால் ஜாப்பாவிற்கு எங்களால் செல்லமுடியவில்லை. ஆனால் அங்கு நாங்கள் வாழ்ந்த வாழ்விற்கும் எங்கள் உயிர்களுக்கும் இவையெல்லாமே தவிர்க்கமுடியாதது. உண்மையில் நாங்கள் எவருமே அஞ்சவில்லை; நாங்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஒருவரையொருவர் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும் வேண்டியிருந்தது. இவ்வாறாக எங்களைத் தற்காத்துக்கொண்டோம், அவ்வளவே. 1936இல் என் தந்தை ஒரு நகைச்சுவை நிகழ்வை அரங்கேற்றினார். அவர் மிகுந்த தீவிரமான மனநிலையுடையவர் எனும்போதும் மிகுந்த வேடிக்கையும் நகைச்சுவையுணர்வும் கொண்டவரும் கூட. 1936இன் போது அவர் ஜாப்பாவிற்கு சென்று குன்பாஸ் எனப்படும் அரேபிய உடையும் பெரிய கைத்தடியொன்றையும் வாங்கிவந்தார்.  அதை அணிந்துகொண்டு எனது பெரியப்பாவின் கழுதையின் மீதேறி பெடாவ் டிக்வாவிற்குப் பயணமானார். அங்கு எவருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை, அங்கிருந்த அனைவரையுமே பயமுறுத்திவிட்டார். அதே ஆடையோடு எங்கள் வீட்டிற்கும் வந்து அந்த கைத்தடியைக் காட்டி எங்களையும் பயமுறுத்திவிட்டார். இப்போதும் எனக்கு அந்நிகழ்வு நன்றாக நினைவுள்ளது. அத்தனைப் பதட்டமான சூழ்நிலையிலும் என் தந்தையார் கொண்டிருந்த அந்த நகைச்சுவைத்திறன் எனக்கு நினைவிலுள்ளது, அவரிடமிருந்துதான் அவ்வுணர்வை நான் கைக்கொண்டிருக்க வேண்டுமென நம்புகிறேன். என்னைப்போலே மொழியாற்றல் இல்லாததால் அவர் அவ்வுணர்வை செயற்பூர்வமாக நிகழ்த்திக் காட்டினார். நகைச்சுவையுணர்வு, தீவிரத்தன்மையென இருவேறு உணர்வுகளும்  அவரிடமிருந்துதான் என்னுள்ளே வேர்விட்டிருக்கவேண்டுமென எண்ணுகிறேன்.

 

உங்கள் பலவீனத்தை வெளிகாட்டக்கூடாது.

உங்கள் பலவீனத்தை வெளிகாட்டக்கூடாது

வெயிலில் காய்ந்து சருமத்திற்கு பழுப்பு நிறமேற்றிக் கொள்ளவேண்டும்.

எனினும்,

திருமணங்களிலும் யோம் கிப்போர் நாட்களிலும்

மயங்கிவிழும் பெண்களின் முகத்திரைகளைப்போலே

நான் சில சமயங்களில் துவண்டு விடுகிறேன்.

 

உங்கள் பலவீனத்தை வெளிகாட்டக்கூடாது

குழந்தையில்லாத குழந்தை தள்ளுவண்டியில்

உங்களால் எடுத்துச் செல்லமுடியக் கூடியப் பொருட்களின் பட்டியலை

தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

 

இப்போதெல்லாம் இவ்வாறுதான் நிகழ்கின்றது:

நான் ஆசுவாசமாய் குளித்துமுடித்து,

குளியற்தொட்டியின் அடைப்புமூடியைத் திறந்துவிடும்போதெல்லாம்,

ஒட்டுமொத்த ஜெருசலத்தோடு சேர்த்து இம்முழு உலகமும்

ஓடிச்சென்று பேரிருளுக்குள் விழுந்திடுமோவென அஞ்சுகிறேன்.

 

பகற்பொழுதுகளில் என் நினைவுகளுக்கானப் பொறிகளை அமைக்கிறேன்,

இரவுகளிலோ, சாபங்களை வரங்களாய் மாற்றிடும், வரங்களை சாபங்களாய் மாற்றிடும் வேலையை

பலாம் ஆலைகளில் செய்கின்றேன்.

 

எந்நிலையிலும் உங்கள் பலவீனத்தை வெளிக்காட்டாதீர்கள்.

சிலசமயங்களில் எவருமே அறியாது எனக்குள் நானே சுக்குநூறாய் நொறுங்கி விழுகிறேன்.

இரண்டுகால்களில் நடமாடும் மருத்துவ அவசரவுதவி ஊர்திபோல் இருக்கிறேன்,

எனக்குள் இருக்கும் நோயாளியை இறுதி சிகிச்சைக்காக

அலறும் சைரன் ஒலியோடு ஏற்றிச்செல்கிறேன்,

மக்களோ அதை என் வழக்கமானப் பேச்சென கருதிவிடுகின்றனர்

 

பேட்டியாளர்: இறுதியில் நீங்கள் ஜெருசலேமிற்கு குடியேறிவீட்டீர்கள்?

ப: 1937இல் அங்கு சென்றோம், ஜெருசலேமில் மிக நல்ல பள்ளிக்கூடங்கள் இருந்தன, எங்களுக்கு சிறந்த கல்வியளிக்க வேண்டிய காரணத்தாலும் , என் பெற்றோர்கள் அங்கு செல்லும் முடிவை எடுத்திருக்கக்கூடுமென எண்ணுகிறேன். என் தந்தை பெரிய அளவில் நிலம்வாங்க எண்ணினார், அது நடைபெறாததால் ஜெருசலேமிற்கு குடிபெயர முடிவுசெய்தார். அவருக்குப் பூர்வீகமாகவும் பணம் வந்து அப்போது சேர்ந்திருந்ததால், நாங்கள் நல்ல வசதியாகவே வாழ்ந்தோம். இரண்டோ மூன்றோ ஆண்டுகளுக்குப் பிறகு என் தந்தை மேலும் சில தொழில்களைத் துவங்கினார்; எப்படிப்பார்த்தாலும் எங்களுக்கு அப்போது பணப்பற்றாக்குறையே இல்லை. எனவே பள்ளிக்கட்டணம் அதிகமாகவிருந்த சிறந்த பள்ளிகளுக்குப் படிக்கச் சென்றோம். என்னைப் பொறுத்தவரை பீரட்டின் லெபனான் மக்களைப் போலே அப்போது நாங்கள் வாழ்ந்தோம் – எங்கள் இன மக்களோடே வளர்ந்துவந்தோம், அவர்களில் பெரும்பான்மையானோர் ஜெர்மானிய யூதர்களாக இருந்தனர், அச்சமயம் அவர்கள் மூன்றாயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையில் ஜெருசலேமில் வாழ்ந்துவந்தனர். கலவரங்களும் கலகங்களும் நிகழ்ந்தபோதும் அரேபியர்களுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் நேரடித் தொடர்புகளுமில்லை, பாதிப்பிற்குள்ளாகி விடுவோமோ என்ற அச்சமும் எங்களுக்கு அப்போதில்லை. எங்கள் அரசு பிரிட்டிஷ் சட்டதிட்டங்களின்படி செயல் புரிந்தது, அரேபிரயர்களுக்கென பிரத்யேகமாக அவர்களின் சட்டங்கள் இருந்தன.

 

பேட்டியாளர்: அப்படியானால் அச்சமயத்தில் அரசியல் யதார்த்தங்கள் குறித்த எச்சரிக்கையுணர்வு உங்களிடம் தோன்றியதா?

அமி: ஆமாம், இச்சமயத்தில் நான் அரசியல் யதார்த்தங்கள் பற்றி நன்றாக அறிந்துகொண்டேன். யூதர்களும், ஜெர்மானியர்களும், ஐரோப்பாவின் பல்வேறு பகுதியிலிருந்தோருமாக மேலும் மேலும் பாலஸ்தீனத்தில் குடியேறிய வண்ணமே இருந்தனர், இரண்டாம் உலகப்போரின் முன்னர் இது நிகழ்ந்தது. இச்சமயத்தில் அரேபிய பாலஸ்தீனியர்களோ அச்சு அணி நாடுகளுடன் நட்புறவு பேணத்துவங்கினர். அழுகைச்சுவர் எனவழைக்கப்படும் மேற்குச் சுவருக்கு வாரத்திற்கொருமுறை நானும் என் தந்தையாரும் செல்வது குறித்து கவிதையொன்று எழுதியுள்ளேன், ஆனால் 1937க்கும் 1939க்கும் இடைபட்டக் காலத்தில் அரேபியக் குடியிருப்புகள் வழியாக மேற்குச் சுவருக்கு செல்ல முடியாத நிலையிருந்தது – ஆர்மீனியக் குடியிருப்பு வழியாகத்தான் அங்கு செல்லவேண்டும் இல்லையெனில் கல்லடிகள்தான் படவேண்டும். அங்கு இன்றும் எறியப்படும் அதே கற்கள். கற்கள் எறிதலொன்றும் அங்கு இன்றோ நேற்றோ நிகழ்வதல்ல. போலாந்தை ஜெர்மனி ஆக்கிரமித்ததைப் பற்றி என் பெற்றோர்கள் 1939இல்  வானொலிச் செய்திகள் மூலம் கேட்டறிந்துகொண்டது இப்போதும் பசுமரத்தாணியாக என் நினைவிலுள்ளது. 1939ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளன்று என் தாயும் தந்தையும் வானொலியை கேட்டுக்கொண்டிருந்தனர், எதையோ முன்னுணர்ந்ததைப் போலே அவர்கள் முகம் வெளிறியதைக் கண்டேன், கண்டிப்பாக அப்போது இன அழித்தொழிப்பை அவர்கள் கற்பனித்திருக்க மாட்டார்களென்றாலும், இப்போர் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை மட்டும் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அப்போது எனக்கு பதினைந்து வயது. ஆனால் என் பெற்றோர்களைப் போன்று நான் எதையும் உணரவில்லை. எனக்கும் அது பயங்கரமாகத் தோன்றியதுதான் எனும்போதும், வெகுமுக்கியமான ஏதோவொன்றும் நிகழப்போகிறது என என் உள்ளுணர்வு கூறியது. போர் என் வாழ்வையே மாற்றியமைக்கப் போவதை உணர்ந்தேன்.

 

பேட்டியாளர்: உங்களினுள்ளே பெருகிவந்த அரசியல் எச்சரிக்கையுணர்வு உங்களின் மதவுணர்வுகளை பாதித்ததா?

அமி: ஆம், வெகுவாய் பாதித்ததுதான். அச்சமயத்தில் கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டேன், என் மதச்சடங்குகளையும் கைவிட்டேன். இதைக்கண்டு என் தந்தையார் மிகுந்த மனவருத்தம் கொண்டார். மதம் என்மீது உண்டாக்கியிருந்த தாக்கங்களெல்லாம் காற்றில் போனது. சீயோனிசத்தை புறந்தள்ளிய சில குறிப்பிட்ட பழமைவாத யூதர்களுக்கு எதிராக சோசலிச இயக்கம் பாலஸ்தீனத்தில் வளர்ந்துவந்த காலமது, என் தந்தையார் அந்தப் பழமைவாத யூதர் கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல. கிப்புட்சிம்மில் இருந்த வந்த முன்னோடி சீயோனிசவாதிகளில் பெரும்பான்மையானோர் மதத்திலிருந்து விலகிச்சென்றனர், எங்களுடையதைப் போன்றே மிகுந்த பழமைவாத நம்பிக்கைகொண்ட குடும்பத்தினர்தான் அவர்களும். யூதப் பாரம்பரிய பழமைவாதத்திற்கு எதிரானப் புரட்சியியக்கம் போலே சீயோனிசம் உருவாகத் துவங்கியது. அதை எதிர்த்துப் போராட இருவழிகள் மட்டுமே இருந்தன, ஒன்று சோவியத் ரஷ்யாவின் போல்ஷ்விக்குகளை போலே கம்யூனிசவாதியாக மாறுவது, இல்லையெனில் சீயோனிசவாதியாக மாறுவது. அச்சமயத்தில் நான் இரண்டாவதைத் தேர்வுசெய்தேன், முறையான திட்டமிடல் ஏதுமில்லாத தன்னிச்சை முடிவாகவே அதுவிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இடதுசாரி இயக்கத்தில் நான் சேரும்வரையில் சோசலிசம் குறித்தோ கம்யூனிசம் குறித்தோ நான் எதையும் பெரிதாக சிந்தித்திருக்கவில்லை.

 

பேட்டியாளர்: அப்படியானால் 1939இல் ஐரோப்பாவில் போர் மூண்டபோது நீங்கள் பதின்பருவத்தில் இருந்தீர்கள் அல்லவா?

அமி: ஆமாம், அப்போது எனக்கு வயது பதினைந்து. 1942ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தேன். ஆனால் அதிசயமாக அக்காலத்தில் ஜெருசலேமின் அரசியல்சூழல் அமைதியாகவிருந்தது. யூதர்களுக்கு எதிரான அரேபியக் கலவரங்கள் 1936இன் போது நிகழ்ந்தவை போன்று இல்லையென்றபோதும் 1939இலும் அவை தொடர்ந்து நடந்தன, பிரிட்டிஷ் அரசாங்கமும் அதை அதுநாள்வரை பொறுத்துக்கொண்டது. ஆனால் அந்தப் போராட்டங்களையெல்லாம் வெறும் ஒரே வாரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நசுக்கியது, இதில் சில அரேபிய கிராமங்கள் அழிந்தன, அங்கிருந்த மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். அத்தோடு அனைத்தும் முடிந்துபோனது. ஏன் திடீரென இப்படியொரு மாறுதல் ஏற்பட்டது? ஏனெனில், அச்சமயம் போர் துவங்கிவிட்டதால் பிரிட்டிஷாருக்கு யூத இராணுவவீரர்கள் தேவைப்பட்டதும் காலனியப் பிரச்சினைகள் ஏதும் இச்சமயத்தில் வேண்டாமென அவர்கள் நினைத்ததும்தான் அதற்குக் காரணம். ஆனால் 1941இல்தான் உண்மையிலேயே எங்களை பீதி சூழத் துவங்கியது, ஏனெனில் ரஷ்யாவின் ஸ்டாலின்கார்ட் நோக்கி ஜெர்மனி முன்னேறி வந்திருக்க, பிரிட்டிஷிற்கு எதிரான, பாசிச சார்புகொண்டதொரு ஆட்சி ஈராக்கில் அதிகாரத்தில் இருந்தது. வெகு பதட்டமான சூழல் நிலவியது. அதேசமயம் வட ஆப்பிரிக்கா வழியாக ஜெர்மானியப்படை முன்னேறி வந்துகொண்டிருந்தது. ஜெர்மானியர்கள் பாலஸ்தீனுள்ளே நுழைந்தால் என்னவாகும் என்பதை நாங்கள் அனைவரும் நன்கு அறிந்திருந்ததால் எங்களைப் பெருங்கவலை பீடித்துகொண்டது. பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் இராணுவப்படையினரும் மிகக்குறைந்த அளவிலேயே இருந்தனர். எனவே அச்சமயத்தில், அதாவது 1941இல், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூத இளைஞர்கள் பலரும் பிரிட்டிஷ் இராணுவப்படையில் தன்னார்வத்துடன் சேர்ந்துகொண்டனர், உண்மையில் இராணுவத்துணைப்படையின் உறுப்பினர்களாகினர் எனலாம். எனது உயர்நிலைப் பள்ளிக்கல்வியை 1942இல் முடித்ததும் நானும் படையில் சேர்ந்துகொண்டேன். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த பாலஸ்தீன துணைப்படையில் நான் இராணுவவீரனானேன். எனது இராணுவச் சீருடையின் தோள்பட்டையில் பாலஸ்தீன்  என எழுதப்பட்டிருந்தது. எனது பெற்றோரின் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இருந்த அச்சவுணர்வு எனக்கப்போது இல்லையென்றபோதும் எனக்குள்ளே ஏதோ ஒருவித பீதி குடிகொண்டிருந்ததுதான், நடப்பவை குறித்த பீதி அது. என்னுள்ளே அது பெரிதாய் ஊடுருவவில்லை. பருவ வயது இளைஞர்களாகிய நாங்கள் எங்கள் வாழ்வில் எடுக்க வேண்டிய பல முடிவுகளை போர் தள்ளிப்போட்டது. அடுத்து என்ன செய்வது, எங்கு பணியாற்றுவது போன்ற முடிவுகளை இப்போது நான் எடுக்கவேண்டியதில்லை என்பதே எனக்குப் பெரிய ஆசுவாசமாக இருந்தது, நான் போர் புரியச் செல்பவன், இது எப்படி முடிவுறும் என யாருக்கும் தெரியாது, இதற்குமேல் யோசிக்க இதில் ஏதுமில்லை என நினைத்துக்கொண்டேன். நான் செய்ய வேண்டியதை சரியாகச் செய்வதையும், சரியெனத் தோன்றுவதை மட்டும் செய்வதையும் என் குறிக்கோளாகக் கொண்டேன், என் பெற்றோரின் அச்சங்களும், என் குடும்பத்தையும் என் மக்களையும் காக்க வேண்டுமெனும் எண்ணமுமே எனதிந்த முடிவுக்குக் காரணம். இந்த எண்ணம் மட்டும்தான் என்னுள் மேலோங்கியிருந்தது. அதேவேளை 1942 என் வாழ்வின் திருப்புமுனை ஆண்டாகவும் அமைந்ததற்கான இன்னொரு முக்கியக்காரணம், அப்போதுதான் எனது முதல் காதல் தோன்றியது. இவ்வாறாக என் முதல் காதலும் முதல் போரும் ஒரே ஆண்டில் நிகழ்ந்தன.

 

பேட்டியாளர்: இவையெல்லாம் நிகழ்ந்த உங்களின் பதினெட்டு வயது வரை ஏதேனும் கவிதை எழுதியிருந்தீர்களா அல்லது கவிதையெழுத வேண்டுமென்றேனும் நினைத்தீர்களா?

அமி: கவிதைகள் எழுத வேண்டுமென்ற எண்ணம் அப்போது எனக்குத் தோன்றவில்லை, அது முறைப்படி நிகழவில்லை என வேண்டுமானால் சொல்லலாம். நாட்குறிப்புப் புத்தகங்களில் சில கவிதைகள் எழுதியிருந்தேன், ஆனால் அவையெல்லாம் தொலைந்துபோய்விட்டன, எனக்கு நிறைய வாசிக்கும் பழக்கமிருந்தது. நான் காதலித்த பெண்ணையெண்ணி அப்போது சில கவிதைகள் புனைந்தேன். அவையெல்லாம் அந்தரங்கமானவை.

 

பேட்டியாளர்: நீங்கள் இரண்டாம் உலகப்போரில் போரிட்டுள்ளீர்கள்.

அமி: ஆம், 1942இலும் 1943இலும் நாங்கள் பாலஸ்தீனக் கடற்கரையோரம் முகாமிட்டிருந்தோம், 1942இன் போதும் பாலஸ்தீனம் மீது ஜெர்மன் படையெடுப்பின் ஆபத்து இருந்ததை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் நாங்கள் கடற்கரையிலேயே முகாமிட்டு காவல்புரிந்தோம். முதலில் நான் காலாட்படை வீரனாகத்தான் இருந்தேன், பின்னர் அரசுப் பொறியாளர்களுக்கு வரைபடங்கள் தயாரிக்கும் பணிக்கு இடம்மாறினேன். 1943இல் நாங்கள் எகிப்திற்கு சென்றோம். எகிப்தில் இருவருடங்கள் இருந்தோம். எகிப்து முழுவதும் அப்போது சுற்றித்திரிந்தோம். பள்ளியில் நான் அரபுமொழி படித்தேன் என்றாலும் இப்போது மேலும் நன்றாகக் கற்றுக்கொண்டேன். எகிப்தின் நிலக்காட்சிகள் மீது, அதன் வண்ணங்கள் மீது பெரும் விருப்பம் கொண்டேன். எகிப்திய தொல்பொருட்களை நன்கறிந்த நண்பனொருவன் எங்கள் படைப்பிரிவில் இருந்தான், எகிப்தினுள் வெகு தொலைவில், எவரும் கண்டிராத, எவராலும் குலையாமலுமிருந்த பல பகுதிகளை அச்சமயம் நாங்கள் சென்றுகண்டோம், இப்போது எல்லாமே சுற்றுலாத்தலங்கள் ஆகிவிட்டன. இராணுவ நடவடிக்கைகள் எதையும் நாங்கள் அங்கு காணவில்லை, பல எகிப்தியர்களை சந்தித்தேன், எனக்கு அங்கு பல நண்பர்கள் கிட்டினர், முக்கியமாக கெய்ரோவில். எனினும் பணிகள் பல காத்திருந்ததால் நான் பெரும்பாலும் எம் ஆட்களுடனேயே சுற்றித்திரிய வேண்டியிருந்தது. 1944க்கும் 1946க்கும் இடையே நாங்கள் பல இரகசியக் காரியங்கள் புரிந்தோம், அப்போதைய பாலஸ்தீனத்திற்கு போர் ஆயுதங்களையும் யூத அகதிகளையும் கடத்திவரும் வேலையும் இதிலடங்கும். யூத நாட்டிற்காக நாங்கள் சிறிய அளவில் பணியாற்றத் துவங்கினோம், நாங்கள் ஈடுபட்டிருந்த போர் பலவீனமடையத் துவங்கியதால் நாங்கள் புதிய போர் ஒன்றுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம் எனலாம். அப்போது எகிப்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என் வாழ்வில் மிகமுக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1944ஆம் ஆண்டு என நினைவு, அப்போது நாங்கள் ஏதோவொரு எகிப்திய பாலைவனத்தில் இருந்தோம். பிரிட்டிஷ் தமது நாட்டு வீரர்களுக்கென நடமாடும் நூலகங்களை அமைத்திருந்தது, ஆனால் பெரும்பான்மையான பிரிட்டிஷ் வீரர்கள் மிக வறுமையான நிலையிலிருந்து வந்திருந்தமையால் அவர்களுக்குப் படிப்பறிவில்லை, எனவே அவர்கள் அந்த நூலகங்களை உபயோகிக்கவில்லை. பாலஸ்தீனியர்களான நாங்கள்தான் அவற்றை உபயோகித்தோம், பாருங்கள், ஆங்கில நூல்களை ஆங்கிலேயர்கள் வாசிக்கவில்லை ஆனால் யூதர்களாகிய நாங்கள் வாசித்தோம். அதுபோன்ற நடமாடும் நூலகமொன்று பாலைப்புயலில் சிக்கி மணலில் புதைந்திருந்தது, அதிலிருந்த புத்தகங்கள் பலவும் கிழிந்து நாசமாகியிருந்தன. மணலைத் தோண்டி புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் 1930களின் பிற்பகுதியில் வெளியான நவீன ஆங்கிலக் கவிதைத்தொகுப்பொன்றைக் கண்டெடுத்தேன். முதலில் ஹாப்கின்ஸின் கவிதைகளும், இறுதியில் டைலன் தாமசின் கவிதைகளும் இருந்தன. நவீன பிரிட்டிஷ் கவிதைகளை நான் வாசிப்பது அதுவே முதன்முறை, ஆங்கிலத்தின் அதிமுக்கியக் கவிஞர்களாக நான் கருதும் எலியட்டையும் ஆடனையும் அப்புத்தகத்தில்தான் முதன்முதலாக தரிசித்தேன். எகிப்திய பாலைவனமொன்றில் சிதைந்து கிடந்த புத்தகமொன்றில்தான் நான் அவர்களை கண்டெடுத்தேன். இந்தப் புத்தகம் என்மீது பெரும் தாக்கத்தை உண்டாக்கியது, அப்போதிருந்துதான் கவிதைகள் எழுதுவது குறித்து நான் தீவிரமாக சிந்திக்கத் துவங்கினேன் என எண்ணுகிறேன்.

 

பேட்டியாளர்:போருக்குப் பிறகு என்ன செய்தீர்கள்?

அமி: 1946ஆம் ஆண்டு இராணுவப் பணியிலிருந்து நான் விடுவிக்கப்பட்டபோது என் வயது இருபத்துஇரண்டு. ஜெருசலேமிற்குத் திரும்பிச் சென்றேன், பணம் ஈட்ட ஏதேனும் வழி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. யூத நிழல் அரசாங்கம் சில பாடப்பிரிவுகளை கொண்டுவந்திருந்தது, அவை பிரிட்டிஷ் இராணுவ முன்னாள் வீரர்களின் பொருளாதார உதவியுடன் நடந்துவந்தன. எனவே சிறுவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்ற உதவும் பிரத்யேகப் பாடப்பிரிவை அடுத்த ஒரு வருடம் படித்துமுடித்தேன். அந்த காலம் நன்றாகவிருந்தது. அப்போதும் நான் அரசியலில் வெகு முனைப்புடன் இயங்கிக்கொண்டிருந்தேன், பிரிட்டிஷ் அரசிடம் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கென தனிநாடு கோரிய யூதர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இயங்கிய ஹகானா, இடதுசாரி, சோசியலிச சீயோனிச இயக்கத்தில் பங்காற்றினேன். அச்சமயம் இதுவே பிரதானமாக இருந்தது. வலதுசாரியிலும் இரு குழுக்கள் இருந்தன, அதிலொன்றுக்கு பெகின் தலைவராக இருந்தார். அப்போது பெகின் வெளியாளாகத்தான் கருதப்பட்டார், நான் தற்போதும் அவரை வெளியாளாகவே கருதுகின்றேன். பாலஸ்தீனிய கம்யூனிசக் கட்சியொன்றும் இருந்தது, ஆனால் அது பயங்கரமானது. ஹகானாதான் பிரதானமாக இருந்தது. சரியானதை மட்டுமே செய்யவேண்டுமெனும் உணர்வு மீண்டும் எழுந்தது. ஒருபோதும் பதிலடி கொடுப்பதோ பழிவாங்குவதோ கூடாது என்பதே எங்கள் இயக்கத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது, நாங்கள் வெற்றிபெற இதுவே உதவியது எனக் கருதுகிறேன் – ”பின்வாங்குதல்” முக்கியக் கொள்கையாக இருந்தது.1947இல் நான் ஆசிரியரானேன், ஆனால் இரு மாதங்கள் சென்றதும் ஹகானா அதிரடிப்படைப்பிரிவில் தன்னார்வலராக இணைந்துகொண்டேன். ஆசிரியர்கள் எவரும் தன்னார்வு தொண்டு செய்யவேண்டாமென நிழல் அரசாங்க அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் படையில் ஆசிரியர்களே இல்லை. இருந்தபோதும் பால்மா எனவழைக்கப்பட்ட அதிரடிப்படைப்பிரிவில் நான் இணைந்தேன், பால்மா என்றால் ‘வெடிப்புப் படைப்பிரிவு’ என அர்த்தமாகும். நாங்கள் போர் புரிந்தோம். பாலைவனம் மிகுந்த தெற்குப் பாலஸ்தீனத்தில் எங்கள் படை போரிட்டது. அச்சமயத்தில் அங்கு பனிரெண்டு யூதக் குடியேற்றப்பகுதிகள் அங்கிருந்தன, அவற்றை ஒட்டுமொத்த எகிப்திய இராணுவத்திடமிருந்தும் நாங்கள் காக்க வேண்டியிருந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அப்போர் வெகு அயர்ச்சியளித்தபோதும், எங்களை வலுவிழக்கச் செய்தபோதும், அதுவொரு நல்ல அனுபவமாகவே இருந்தது. சோசலிசவாத, சீயோனிச இளைஞர்களாக இருந்த நாங்கள் புத்தம்புதிய, சிறப்பான உலகத்தை உருவாக்கமுடியுமென நம்பினோம். நாங்கள் கெரில்லாக்களைப் போலவிருந்தோம், எங்களிடம் சிறிய ஆயுதங்களே இருந்தபோதும் ஆயுதமேந்திய பெரும்துருப்புகளை எதிர்த்து நின்றோம். ’வெடிப்பு’ சிறிய காலாட்படைப்பிரிவில் என் கீழே பத்து வீரர்கள் இருந்தனர். மறுபக்கமிருந்த இருபதாயிரம் எகிப்தியர்களை எதிர்த்துப் போரிட, இந்தப்பக்கம் நாங்கள் இரண்டாயிரம் வீரர்களோடு சேர்த்து பக்கத்து கிபுட்சிம்மில் இருந்த சில நூறு மக்கள் மட்டுமே இருந்தோம். ஒவ்வொரு நாளிரவும் சிறுசிறு குழுக்களாக வெளியே சென்று எங்களுக்குள்ளேயே சிறு மோதல்களை உருவாக்கிக்கொண்டோம், மறுபக்கமிருந்த எகிப்தியர்கள் நாங்கள் ஏதோ பெரிய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக எண்ணி ஏமாந்துபோவர். உண்மையில் நாங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் எகிப்தியப் படையும் எங்களை எதிர்த்து செயலூக்கத்தோடு போரிட்டதாகவும் தோன்றவில்லை, ஏனெனில் அவர்கள் தமதற்ற நாடொன்றில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர், தமக்குத் தெரியாத பகுதிகளில் சுற்றித்திரிந்தால் அது அவர்களுக்கு எத்தனைப்பெரிய ஆபத்தை விளைவிக்குமென அறிந்து அச்சம் கொண்டிருந்தனர். அதேபோல் எகிப்திய இராணுவ அதிகாரிகள் அனைவருமே முழுக்க பிரிட்டிஷ் படையினரிடம்தான் போர்ப்பயிற்சி பெற்றிருந்ததால், ‘பீரங்கித் தடுப்பணை ஏற்படுத்திவிட்டுத் தாக்குதல் புரிவவேண்டும், பீரங்கித் தடுப்பணை ஏற்படுத்திவிட்டுத் தாக்குதல் புரியவேண்டும்’ எனும் பிரிட்டிஷாரின் இராணுவக் கொள்கைகளையே இவர்களும் கடைபிடித்தனர். பீரங்கித் தடுப்பணைகளால் சில கிபுட்சிம் கூட்டுப்பண்ணை நிலங்கள் சமனாகின. அதன்பிறகு ஏதும் நடக்காது எனத் தலைமை எண்ணியது. ஆனால் நாங்கள் பதுங்குகுழிகளில் கெரில்லாக்களைப் போல மறைந்திருந்தோம், எப்போதெல்லாம் அவர்கள் அத்துமீறி நுழைகிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரும்விலை கொடுக்கவேண்டியிருந்தது, கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். போரின் இறுதிநாட்களின்போது, எங்கள் படை எகிப்தியப் படையை சினாய் தீபகற்பத்தில் பின்வாங்க வைத்தபோது நிகழ்ந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது. மன்னர் பரூக், எகிப்திய முற்போக்காளர்களையும் சோசலிசவாதிகளையும் கம்யூனிசவாதிகளையும்  சிறைவைத்திருந்த எகிப்திய தடுப்புக்காவல் முகாமொன்றைக் கண்டோம். அவர்களை நாங்கள் விடுவித்ததும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டோம், ஏகாதிபத்தியமும் முடியாட்சியும் முடிவுற்று, புத்தம்புது உலகின் அங்கத்தினராக நாங்கள் இருப்பதாக அப்போது தோன்றியது. அனைவருமே உணர்ச்சிவயப்பட்டிருந்தோம். என்னால் அந்நாளை மறக்கவே முடியாது. 1948இல் நிகழ்ந்த மிகப்பெரிய சண்டையில் எகிப்தியர்களே பெரும்பான்மை ஈடுபட்டிருந்ததால், எங்களுடன் சமாதானம் பேச எகிப்தியர்கள் முதலில் இறங்கிவந்ததில் ஆச்சரியமேதுமில்லை. சிரியர்களும் ஈராக்கியர்களும் கூடத் தம் படையை அனுப்பிவைத்தனர், எனினும் அவர்களுக்கு அப்போரில் உறுதியான நம்பிக்கையேதுமில்லை. ஜோர்டானியர்கள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை தம் மாநிலமாகப் பெறப் படையெடுத்தனர், ஆனால் உண்மையில் அப்பகுதி பாலஸ்தீனிய அரசுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியாகும். நிலத்தையோ அதிகாரத்தையோ பெறுவதற்காய் எகிப்தியர்கள் போரிட்டார்கள் என நான் நினைக்கவில்லை – அவர்கள் உறுதியுடன் போரிட்டனர். பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த எகிப்திய இராணுவத்தில் இளம் அதிகாரிகளாக இருந்த நாசர், நாகுயிப் ஆகியோர்தான் மன்னரை பதவியிலிருந்து தூக்கியேறிந்தவர்கள் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

 

பேட்டியாளர்: நீங்கள் எப்போதிருந்து கவிதையெழுதுவதில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினீர்கள்?

அமி: 1949ஆம் ஆண்டின் இறுதிவரை நான் இராணுவத்தில் இருந்தேன். பின்னர் ஜெருசலேமிற்கு சென்று மீண்டும் என் ஆசிரியப்பணியைத் தொடர்ந்தேன். ஹீப்ரூ பல்கலைகழகத்தில் சேர்ந்து விவிலியமும் இலக்கியமும் கூடப் பயின்றேன். அந்த சமயத்தில்தான் கவிதையெழுதத் துவங்கினேன். எழுதுவதை ஒரு தொழிலாகச் செய்யமுடியுமென அதுநாள்வரை நான் அறியவில்லை ஏனெனில் வாழ்வில் அடுத்து என்ன செய்வது என நான் அப்போது முடிவுசெய்திருக்கவில்லை. நான் இராணுவத்தில் இருந்தேன். எனது தனிப்பட்ட எண்ணங்களைப் பதிவு செய்வதற்காகவே கவிதைகள் எழுதத்துவங்கினேன். போர்களின்போது நான் கவிதையெழுதுவதில்லை, ஆனால் சிலவேளைகளில் போர்களின்போது குட்டி குட்டி மரண சாசனங்கள், சிறு மரபுரிமைச் செல்வக்குறிப்புகள், இறுதி உயில்கள் ஆகியவற்றை எழுதி எனக்கு விருப்பமானப் பொருட்களுடன் அவற்றையும் சுமந்து சென்றேன். அப்போது நான் எழுதியது மற்றவர்களுக்கானதல்ல. நான் நினைப்பதையும், உணர்வதையும் மற்ற எழுத்தாளர்களால் கச்சிதமாக வெளிப்படுத்திவிட முடிகிறபோது நானும் ஏன் சிரமப்பட்டு அதைச் செய்யவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் நாற்பதுகளின் இறுதியில், ஏன் நானே அதைச் செய்யக்கூடாது எனும் எண்ணம் என்னுள் எழுந்தது. என்னுடைய தேவைகளையோ, நான் கண்டவற்றையோ, நான் உணர்ந்ததையோ நான் வாசித்தவை வெளிப்படுத்தவில்லை. அப்போது எனக்கு இருபத்தைந்து வயது. ஐம்பதுகளின் துவக்கத்தில் கவிதைகள் எழுதத் துவங்கினேன். அப்போது நான் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பயின்றுகொண்டிருந்தேன். போரின் காரணமாக எனது தலைமுறையைச் சேர்ந்த அனைவருமே தம் இருபதுகளின் மத்திமத்தில்தான் பல்கலைக்கழகப் படிப்பை துவங்கமுடிந்தது. பள்ளிக்குழந்தைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றியபடியே நான் எனது பட்டப்படிப்பை மேற்கொண்டேன்.

 

இந்த நூற்றாண்டின் மத்திமத்தில்

நாம் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டோம்

முகத்தின் ஒருபாதியும், ஒருபக்க விழிகளும் முழுதாய் தெரியும்படி

ஒரு புராதன எகிப்திய ஓவியத்தைப்போல சிறிதுநேரம் சந்தித்துக்கொண்டோம்

 

உன் பயணத்தின் எதிர்திசையில் எழுந்த

உன் கேசத்தை வருடினேன்,

எவரும் தம் பயணத்தின்போது நிற்காத சிறுநகரங்களின் பெயர்களை

கூவியழைப்பதைப்போலே

ஒருவரையொருவர் கூவியழைத்துக்கொண்டோம்.

 

தீமைக்காய் விரைந்து விழித்துக்கொள்ளும் உலகம் ரம்மியமானது

பாபத்திலும் பரிதாபத்திலும் உறக்கம்கொள்ளும் உலகம் ரம்மியமானது,

நீயும் நானும் கூடும் உலகம் ரம்மியமானது.

 

மனிதர்களையும் அவர்தம் காதல்களையும்

வைன்போல் பருகி மறக்கமுயல்கிறது இப்பூமி.

அதனால் முடிவதில்லை.

ஜுடியான் மலைகளின் எல்லைக்கோடுகள் போலே,

நம்மால் அமைதியை அடையவே முடியாது.

 

இந்த நூற்றாண்டின் மத்திமத்தில் நாம் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டோம்,

எனக்காகக் காத்திருந்து, கருநிழல் படர்ந்தோடியிருந்த உன் உடலைக் கண்டேன்,

அப்போது நீண்டபயணத்திற்கான தோல்பட்டைகள்

என் நெஞ்சின் குறுக்கே இறுகிக்கொண்டிருந்தன.

அழியக்கூடிய உன் இடையை நான் பாராட்டிப் பேசினேன்,

முதுமையெய்தும் என் முகத்தை நீ பாராட்டிப் பேசினாய்,

உன் பயணத்தின் திசையிலேயே உன் கேசத்தை வருடினேன்,

உன் முடிவைத் தெரிவிக்கும் தீர்க்கதரிசியான உன் சதையைத் தொடுகிறேன்,

உறங்கியேயிராத உன் கையைத் தொடுகிறேன்,

இன்னும் பாடல்கள் பாடக்கூடிய உன் வாயைத் தொடுகிறேன்.

 

நாம் உணவருந்தாத மேஜைமீது

பாலைவனத்தின் புழுதி படிகிறது,

என் விரல்களால்

அதில் உன் பெயரை எழுதுகிறேன்.

 

பேட்டியாளர்: மற்ற எழுத்தாளர்களுடன் தொடர்பில் இருந்தீர்களா?

அமி: 1951இல், அப்போது எனக்கு இருபத்தேழு வயது, எனது இலக்கிய ஆசிரியர்களுள் ஒருவரான பேராசிரியர் ஹல்கின் அவர்களிடம்  எனது கவிதைகளைக் காட்டினேன். அதிலொன்றை அவர் பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார், அக்கவிதை அதில் வெளியானது. சுமார் ரக எழுத்துகளை பிரசுரித்துக்கொண்டிருந்த மாதாந்திர மாணவர் பத்திரிகையொன்று போட்டியொன்றை அறிவித்திருந்தது. நான் அதற்கு என் கவிதையை அனுப்பிவைத்ததில் அதற்கு முதல் பரிசு கிடைத்தது. வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுள் நானும் ஒருவனாக இருந்தேன், ஆனால் எங்களில் பெரும்பாலானோர் டெல் அவீவை சேர்ந்தவர்களாகவே இருந்தோம். இப்போதைப் போலவே ஜெருசலேம் அப்போதும் முனைப்பும் அறிவார்த்தமும் மிக்க இலக்கியப் பரிச்சயமில்லாமலேயே இருந்தது – பதிப்பகத்தார்கள், காப்பிக்கடைகள், திரையரங்குகள், எழுத்தாளர்கள் குழாம் எனப் புத்துணர்வளிக்கும் அனைத்துமே டெல் அவீவில் தான் இருந்தன, இருக்கின்றன. டெல் அவீவை சேர்ந்த சில கவிஞர்கள் நான்கைந்து பேர்கள் கொண்ட குழுவாக உருவாகித் தம் கவிதைகளைத் தொகுப்பாகவும் வெளியிட்டனர். அக்குழுவைச் சேர்ந்த பெஞ்சமின் அர்ஷாவ் இப்போது யேல் பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். டேவிட் அவிடான், நாதன் சாக் ஆகியோர் கொண்ட அக்குழுவில் டாலியா ரவிகோவிச்சும் பின்னர் இணைந்துகொண்டார். என் வயதையொத்த மற்ற கவிஞர்கள் அனைவரும் என்னைவிடவும் வெகுகாலத்திற்கு முன்னரிருந்தே தீவிர எழுத்துப்பணியில் இருந்தனர். எங்கள் குழுவில் இருந்தவர்களை விடவும் நான் வயதில் மூத்தவனாக இருந்தேன், மற்றவர்கள் அனைவரும் பதின்பருவத்திலோ அல்லது தமது இருபதுகளின் துவக்கத்திலோ இருந்தனர். எங்கள் படைப்புகளை வெளியிட பதிப்பகத்தார் எவரும் தயாராயில்லை, எனவே நாங்களே சிறு பத்திரிகையொன்றைத் துவங்கி எங்கள் கவிதைகளை அதில் பிரசுரித்துக்கொண்டோம். 1955இல் வெளியாகிய என் முதல் கவிதைத் தொகுப்பும் இந்த சிறுபத்திரிகை வாயிலாகத்தான் வெளிவந்தது, அதாவது என் சொந்தப் பணத்தில்தான் என் முதல் புத்தகம் வெளியானது. நவீன ஹீப்ரூ இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களாகிய பியாலிக், செர்னிகோவ்ஸ்கி படைப்புகளையும், ஆல்டர்மன், ஷ்லோன்ஸ்கி, க்ரீன்பெர்க் போன்ற புகழ்பெற்ற கவிஞர்களின் புத்தகங்களையும் மட்டும்தான் அப்போதைய பதிப்பகங்கள் அச்சிட்டு வெளியிட்டன – இவர்கள் அனைவருமே ரஷ்யா, ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கவிதைகளின் தாக்கத்துடனேயே எழுதியவர்கள் என்பேன்.

 

பேட்டியாளர்: உங்கள் மொழியை செறிவாக வடிவமைத்ததில் உங்களின் தலைமுறை மிகமுக்கியப் பங்காற்றியிருக்கிறது. நவீன ஹீப்ரூவால் என்ன செய்ய முடியுமென்பதைக் குறித்துப் பேச்சு எழுந்ததா?

அமி: ஆம் இருந்ததுதான் ஆனால் எனது சொந்த விருப்பங்களுக்காகவே நான் எழுதிவந்ததால் அதில் நான் பெரிதாய் பங்கேற்கவில்லை. எனது பேச்சுமொழியோடு எனது பழமைப்பற்றுமிக்க பின்புலமாகிய பைபிளையும் பிரார்த்தனைகளையும் கலந்து ஒரு மொழியை உருவாக்கி அதை ஏன் என் கவிதைகளில் பயன்படுத்தக்கூடாதென எனக்குள் ஓர் சிந்தனை எழுந்தது. இதுதான் எனது கவிதைமொழி என நான் கண்டுகொண்டேன். மிகுந்த பழமைவாதக் குடும்பத்தில் இருந்து வந்ததாலும், பிரார்த்தனைகளும் பைபிளும் எனது மொழியில் இயல்பாகவே கலந்திருந்ததாலும் இது நிகழ்ந்திருக்கலாம் என எண்ணுகிறேன். முற்றிலும் வேறுபாடான நவீன ஹீப்ரூ மொழியையும் நான் கண்டுபிடித்த மொழியையும் என் கவிகளில் உபயோகித்தேன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பிரார்த்தனைகளிலும் யூத சபைகளிலும் வழக்கத்திலிருந்த ஒரு மொழி திடீரெனப் பேச்சுவழக்கினுள் நுழைந்ததைப் போலே இது காட்சியளித்தது. என்னால் இதை வெகு இயல்பாக நிகழ்த்தவும் முடிந்தது, இதற்கென எவ்வகை வரையறையையும் நான் கைக்கொள்ளவில்லை. மொழியின் கற்பனைத்திறனோ உணர்திறனோ இவ்விதக் கலவையில் வெளிப்படுவதை என் கவிதைகளில் இயல்பாக நிகழ்த்தினேன்.

 

பேட்டியாளர்: உங்கள் எழுத்தில் ஐரோப்பிய, அமெரிக்கத் தாக்கங்கள் இருந்தனவா?

அமி: ஆம், ஆடன், எலியட், எல்ஸ் லஸ்கர்-ஷூலர் போன்ற ஆங்கிலேய, ஜெர்மானிய நவீனத்துவவாதிகள் மட்டுமல்லாது, ஒரு கட்டத்தில் ரில்கேவும் என்மீது தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களால் தம் மொழி வாயிலாக அடைய முடிந்ததை என்னாலும் ஹூப்ரூ மூலமாக அடைய முடியுமென நம்பினேன். என் குழுவினரைப் போலவே நானும் ஆல்டர்மேன், க்ரீன்பெர்க், ஷ்லோன்ஸ்கி ஆகிய எழுத்தாளர்களின் அழகியலை மறுதலித்தேன், இவர்கள் எழுதிய உணர்வுத்தூண்டல் மிகுந்த கவிதைகள் யாவும் மாயாகோவ்ஸ்கி, ப்லோக் மற்றும் சில பிரெஞ்சு கவிஞர்களின் தாக்கங்களால் உருவானவையே. அதேபோல் அச்சமயத்தில் புகழ்பெற்று விளங்கிய சோஷலிசமும் கம்யூனிசமும் தயாரித்த சோகரசக் கவிதைகளையும் நான் மறுதலித்து விலக்கிவைத்தேன், அவையாவும் எல்யோர்ட் போன்ற கவிஞர்களின் தாக்கத்தால் எழுதப்பட்டவையே எனக் கருதினேன். சாமானிய மனிதன், எளிய விவசாயி முஷ்டியை உயர்த்திக்காட்டும் “ரொட்டியும் வைனும்” கொண்ட படங்கள், சொல்லாட்சிகள், இசை எனக் கம்யூனிசம் பரப்பிய அனைத்திலும் ஒரு நிச்சயமான போலித்தனத்தை நான் உணர்ந்தேன், அவற்றிலெல்லாம் போலியான உணர்வுத்தூண்டலையே நான் கண்டேன். ஹீப்ரூ கவிதைக்கு நீண்டகாலப் பாரம்பரியம் உண்டு, ஆனால் யூத நாடு உருவாகத்தொடங்கிய அதே காலத்தில்தான் நாங்கள் நவீனத்துவத்துள் தலைகுப்புற விழுந்துகொண்டிருந்தோம். ஹீப்ரூ மொழி வரலாற்றில் இதுவொரு திருப்புமுனை மட்டுமல்ல தீவிர மாற்றமும் உண்டான காலமிது. விவிலியத்திலும் பிரார்த்தனைப்பாடல்களிலும் இருந்த மொழியோடு மத்திமக் காலத்தைச் சேர்ந்த ஹீப்ரூ கவிதைகளின் வடிவத்தையும் மொழியையும் படித்தறிந்து  என் கவிதைகளில் உபயோகித்துக் கொண்டேன். யூதக் கலாச்சாரமும் அரபுக் கலாச்சாரமும் கலந்து ஒளிர்ந்த “பொற்காலத்தில்” ஹீப்ரூ கவிஞர்களுக்கு அரேபியக் கவிதைகள் மீது பெரும் விருப்பம் ஏற்பட்டதால் அவர்களின் கவிதைகளில் அரேபியத் தாக்கம் உருவாகியது.


Sasikala Babu

[email protected]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.