ரயிலடி நடைமேடையில் எல்லோரும் வரும் வண்டியை எதிர்பார்த்தும், கூர்ந்து கேட்டுக்கொண்டும் இருந்தனர். ரயிலின் ஊதலொலியைக் கேட்டதாக யாரோ சொன்னார்கள். எல்லோரும் கீழ்த்திசை நோக்கி பார்த்துக் கொண்டும் உற்று கேட்டுக் கொண்டுமிருந்தனர். மரங்களடர்ந்த கிழக்கு கணவாயிலிருந்து, ஓடையும் தண்டவாளங்களும் ஒன்றிணைந்து வருவதைப் போல் காட்சியளித்தன.
ஐந்து பெண்குழந்தைகளும் 25 பையன்களும் மேஜர் மைல்ஸ் நின்றிருந்த இவர்கள் அனைவரும் கீழ்த்திசை நோக்கி காத்துக் கிடந்தனர். உண்மையிலேயே ரயில் ஊதலை ஒலித்ததா?
“அது ரயிலல்ல!” ஒரு பையனின் குரல் விளக்கியது.
“அது ஏதோ ஒரு மாட்டின் குரல்”
“இது ரயில்தான்”
சிறுமிகள் அனைவரும் கண்களில் நீர்வடிய, தொங்கிய தலைகளோடு, கட்டிடத்தின் ஓரமாக குழும, பையன்கள் நடைமேடையின் விளிம்பை நோக்கி ஒருவரையொருவர் தள்ளியபடி நகர்ந்தனர். ஒரு பெரிய பையன் புராதனமான மர நடைமேடையை விட்டிறங்கி தண்டவாளங்களில் கால்களை விரித்த நின்று சத்தம் போட்டான். அவனுக்கு ரயில் வரும் ஒலி கேட்கவில்லை. அவனொரு சந்தேகபிராணி.
“டேய், உன் பெயரென்ன? திரும்பி வாயிங்கே! செத்துப்போக ஆசையா? எல்லோரும் பின்னாலே வாங்க!” என மேஜர் மைல்ஸ் முழங்கினார்.
மேஜர் ஒரு கம்பீரமான சிப்பாயைப் போல் நடைபயின்று கட்டளைகளைப் பிறப்பித்தார். அவர் சலிப்பாகவும், கடுப்பாகவும் இருந்தார்.
காடுகளூடே கால்நடைகளை ஓட்டிச்செல்வதுகூட லேசு, மிருகங்களை கையாள்வது லகுவானதுதான் என நினைத்தார். ஆனால் இருபது முப்பது செவ்விந்திய சிறுசுகளை அவர்களின் ஒளிவிடத்திலிருந்தும் உறவினர்களிடமிருந்தும் பிரித்து ஓரிடத்தில் கூட்டி, பிடித்து வைத்திருந்து, ரயில் வரும்வரை பாதுகாப்பது என்பது சாதாரணமானதல்ல. இப்போது கவலைகள் ஓயும் என்ற கட்டங்கடைசி நேரத்தில் கூட அவர்கள் தங்களை சிதைத்துக் கொள்வார்கள் போல!
மேஜர் மைல்ஸ் ஒரு மனசாட்சியுள்ள மனிதர். அவர் எதைச் செய்தாலும் முழுமூச்சுடன் முனைப்புடன் செய்யக்கூடியவர். உஷ்ணமிக்க கோடைகாலம் முடியப்போகும் இந்த நாளை அவர் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என நினைத்தார். கடுமையாக வியர்த்ததால் தொப்பியை கழற்றி நெற்றி, புருவம் ஆகியவற்றை துடைத்துக்கொண்டே தலைமுடியை கோதியவாரே மனதில் அசைபோட்டார். இந்த சிறியவர்கள் செவ்விந்திய தொகுப்புக் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி புதியவைகளை தொடங்க போகிறார்கள். வாழ்வே மாறப்போகிறது. இது அவர்களுக்கு புரியவேண்டும். எப்படியாவது—
“பசங்களா- பொண்ணுகளா—” ஐந்து சிறுமிகள் உள்ளார்கள் என நினைவுபடுத்திக்கொண்டார்.
நடைமேடையின் ஓரத்திலிருந்து பாதுகாப்பாக அவர்கள் அனைவரையும் கட்டிடத்தின் அருகே வரிசையாக நிறுத்தியிருந்தார். கோடையிறுதி நாட்களாதலாம் காற்றில் உக்கிரமான உஷ்ணம் நிலவியது. சூட்டைப் பற்றி கவலைப்படாமல் சிலவற்றைப் பற்றி பேசவேண்டிய நேரமிது. ஆம், இத்தருணத்தை உண்மையோடு அணுகவேண்டும். ஒரு சிப்பாயின் நிமிர்வோடு விறைத்து நின்றபடி இவற்றைப் பற்றி யோசனை செய்தார்.
“பசங்களா பொண்ணுகளா—
ரயில் தொலைவிலிருந்து தீனமாக ஊதலிட்டது. ஆனாலும் அதைப் பிழையற்று கேட்கமுடிந்தது. பின்பு அருகே வரவர அதனோசை தெளிவாகக் கேட்டது. தண்டவாளங்கள் உயிர்த்து கடகடத்து இசைத்தன.
மேஜரின் பார்வை அப்போது பொடியன் எனியாஸ் மேல் விழுந்தபோது அவரது கணீர் குரல் கம்மியது. அவருக்கு அவனைப் பற்றிய விஷயங்கள் அனைத்தும் தெரியும்.
மற்ற பையன்களும் பெண்களும் பெயரளவில்தான் அவருக்கு தெரியும். அவர்களது பெற்றோர்களோடு தொகுப்பு குடியிருப்பிலும், செவ்விந்திய டெப்பி வீட்டருகிலும் ஓடிவிளையாடுவதை அவர் அங்கு போகும்போது பார்த்துள்ளார்.
ஆனால் பொடியன் எனியாஸை பற்றி அவர் அறிவார். அவரது கண்முன்னே இப்போது நிற்கும் அவனைப் பார்த்தவுடன், பேசாமல் தயங்கினார்.
ஆறு மாதங்களுக்கு முன் ஒரு மாரிக்கால நாளில் எனியாஸைக் கண்டதை துல்லியமாக நினைவுகூர்ந்தார். அவனது தாத்தா மைக்கேல் லாமார்ட்டினைத்தான் பார்க்கச் சென்றிருந்தார். மேஜரின் குழுமத்திற்கு விறகு வெட்டும் ஒப்பந்தத்தை மைக்கேல் போட்டிருந்தும், அதைத் தொடங்காமல் விட்டிருந்ததைக் கேட்கத்தான் போயிருந்தார்.
பின் பிப்ரவரி மாதத்தில் மாரிகாலத்திலேயே அது மிகுந்த குளிரான நாள். ஓடைக்கரையின் கீழ்பகுதியில் பைன் மற்றும் இலவ மரங்களுக்கிடையே மைக்கேலின் மரக்குடிசை அமைந்திருந்தது. மரங்களடர்ந்த அந்தப் பகுதியில் குளிர்காற்று உறையவைத்தது. விறகுவெட்டியாக மைக்கேல் இருந்தாலும் குடிசையினுள் விறகேயில்லை. தட்டையான கனப்பு அடுப்பில் சோகையாகவே நெருப்பு கனன்றது. அதன் காரணம் என்னவென்று மேஜர் பார்த்தபோது, மைக்கேல் எலும்பு தேய்மான நோயால் சுருண்டு படுத்துக்கிடப்பதை கண்டார். அவனது கருத்த கண்கள் மட்டுமே உயிர்ப்போடு இருந்தன. மேஜரை கண்டதும் அவன் கையை முகமனாக அசைக்க முயன்றான்.
“என்னை பாத்தீங்களா!” என்பதைப் போன்ற சைகை. பின்பு நடுங்கும் குரலில் “நாங்க இங்க ரொம்ப மோசமான நிலையில இருக்கோம், என் மனைவியாலும் ஒன்னும் செய்ய முடியாது “என்றான்.
அவளை பார்த்தபோதே தெரிந்தது அவளால் விறகுவெட்ட ஆகாதென்று. அவள் கனப்படுப்பருகே குட்டையான சாய்வு ஆசனத்திலிருந்து உபசரிப்பான புன்னகையோடு கஷ்டப்பட்டு எழ முயன்றாள். மேஜர் அவளை எழவேண்டாம் என சைகை செய்தார். அவளது சுவாசிப்பு ஆஸ்துமா இளைப்போடு இருந்தது. மரம் வெட்டுவது அவளது நிலையில் சாத்தியமற்றது. செவ்விந்தியப் பெண்கள் உபயோகிக்கும் சிறிய கோடாலியால் அவளால் விறகை வெட்டுவது ஆகக் கூடிய செயலில்லை. ஓங்கி இரண்டு வெட்டு வெட்டுவதற்குள் அவளது பழுதுபட்ட இதயம் நின்றே போய்விடும்.
“நீங்களே பாத்தீங்கள்ளே” லாமார்ட்டினின் கண்கள் ஒளிர்ந்தன.
அந்த குளிர்மிகுந்த குடிசையில் அமர்ந்திருந்தபோது மேஜருக்கு அவர்களது நிலை பற்றி தெளிவாகத் தெரிந்துதானிருந்தது. தானே போவதற்குள் நிமோனியா ஜூரம் வந்து விடாமல் தப்பிக்கவேண்டும் போலுள்ளதே என நினைத்துக் கொண்டார். கொடுங்குளிர் காற்று அவரது பின் கழுத்தை அறைந்தது.
ஆம், ஒன்றும் செய்ய வழியில்லை. இம்மாதிரி பல நிகழ்வுகளை ஒருவர் கண்டு தான் ஆகவேண்டியுள்ளது. இம்மாதிரியான தருணங்களில் ஒருவர் தம்மிடமுள்ளதை பங்கிட்டுக் கொடுக்க நினைத்தால் அதற்கு முடிவே இருக்காது. அரசு வேலையாட்களுக்கு சம்பளமும் சொற்பமே. வசதிகளும் குறைவே. அவர் துக்கத்தோடு தலையை அசைத்த வண்ணம் சோகையான நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை முணுமுணுத்தபடி கிளம்ப தயாரானார்.
அப்போது ஒரு கையால் கதவை திறந்து கொண்டு , சிறிய சலசலப்போடு பொடியன் எனியாஸ் வந்தான். அவன் நிறைய குட்டையாக வெட்டிய பைன் மரதுண்டுகளை, பொதியாக கட்டிக்கொண்டு வந்திருந்தான். அவன் சற்றேறக்குறைய கோடாலியின் உயரமேயிருந்தான். அவன் மூக்கு ஒழுகிக்கொண்டிருந்தது. வரட்டு இருமலும் அவனை தொந்திரவு செய்தது. விறகுப்பொதியை பாட்டியின் அருகிலிருந்த காலிப் பெட்டியில் போட்டுவிட்டு பிறகு நிமிர்ந்தான்.
படுக்கையிலிருந்து மென்மையான சிரிப்பு கேட்டது. லாமார்ட்டின் பெருமை பொங்க “அவன் உன்னதமான பையன், வயதானவர்களை குளிரால் அவதிப்படவைக்காமல் இளஞ்சூடாக அடுப்புமூட்ட உதவுகிறான்”
அந்தப் பையனிடமிருந்த ஏதோ ஒன்று மேஜரை புறப்பட முடியாமல் செய்தது. அது அவனது பேச்சற்ற தன்மையாக இருக்கலாம். புகாரற்ற பேச்சிலித்தன்மை அல்லது தனது மூத்தோரிடம் அவன் காட்டும் விசுவாசம். அவனை பார்த்தபடியே யோசிக்கலானார்.
தனது பாட்டியிடம் விறகுச் சுள்ளிகளை எடுத்துக் கொடுக்க, அதை அவள் அடுப்பில் வைத்து ஏவினாள். சுள்ளிகளை அடுப்பில் வைத்து நிறைத்த போது, அவன் கொண்டு வந்த பொதியில் பாதிக்கு மேல் தீர்ந்து போனது. அவன் தன் மூத்தோரை கதகதப்பான சூட்டில் வைத்திருக்க மேலும் மேலும் விறகு வெட்டி கொண்டு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.
தன்னையறியாமலே மேஜர் திடீரென சொன்னார், “பையா, எங்கே உன் விறகுக் குவியலை காட்டு, நாம் இந்த முதியவர்களுக்கு நிறைய விறகை வெட்டி கொடுக்கலாம்”
விவரிக்கமுடியாத வண்ணம் அது அப்படித்தான் நடந்தது. பல நாட்களுக்கு ஆகும் விறகை வெட்டிக் கொடுத்த பிறகு அவர் தனது கோட்பாடுகளை மீறி அலுவலகக் காரில் சிறுவனை ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஊருக்கு கூட்டிப்போய் ஒரு வாரத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொடுத்து மீண்டும் கொண்டுபோய் விட்டுவந்தார்.
“உனது உடல்நலமற்ற தாத்தாவால் ஒருவாரத்திற்கு வெளியே போய் வரமுடியாது, அவர் நலமடைந்த பின் என்னை வந்து பார்க்கச் சொல்” என சிறுவனிடம் சொல்லிச் சென்றார்.
இதிலிருந்து தான் எனியாஸின் மேல் மேஜருக்கு ஒரு நல்அபிப்ராயம் ஏற்பட்டது. அவனுக்கு எவ்வகையிலாவது உதவ எண்ணினார். நல்குணம் வாய்ந்த இந்த பையனுக்கு உதவவில்லையெனில் தமது கடமையிலிருந்து தவறியவராக கருதினார். எப்படி உதவுவது என்பதுதான் கேள்வி.
சில வாரங்களுக்குப் பிறகு அவர் எனியாஸை மறுபடியும் சந்தித்த போது, இப்பிரச்சனையை எப்படி அணுகுவது என்பதைத் தெளிவாக கண்டுகொண்டார்.
“எனியாஸ், நான் உனக்கு உதவப்போகிறேன். உன் தாத்தா பாட்டிக்கு ஏற்பாடுகளை செய்யப்போகிறேன். அதனால் அவர்களைப் பற்றிய கவலை உனக்கு வேண்டாம். அனேகமாக அடுத்தவருடம் உன் தாத்தாவுக்கு எலும்பு தேய்மான நோய் இருக்காதென நினைக்கிறேன். அப்படியே வந்தாலும் அவர்களை வேறு ஒரு குடும்பத்தாரோடு சேர்த்து தங்க வைக்கிறேன். நீ உன்னை பற்றி மட்டும் நினை, நான் உனக்கு என்ன செய்யப்போகிறேன் என்பதைப் பற்றி மட்டும் யோசி, பள்ளிக் கால பருவம் வந்ததும் உன்னை அங்கு அனுப்பப்போகிறேன், என்ன சரிதானா?” என்றபடியே தனது மகிழ்வான கருத்தை நினைத்து புன்னகைத்தார் மேஜர்.
அவன் அமைதியாக நின்றான். வெட்கப்புன்னகையோ, நன்றியான பார்வையோ ஏதுமற்ற மௌனம். அவனுக்கு புரிந்திருக்காது போல.
“உனக்கு புரியலையா எனியாஸ்? உன் மூத்தோரை நல்லபடி பார்த்துக்கொள்ளலாம். நீ போய் படித்து அறிந்து கொள்வாய். நீ ரயிலில் போகலாம்.”
பையன் இங்கும் அங்குமாய் பார்த்தபடியே காலால் தரையை அளைந்தான்.
“நான் ஏன் வெளியூர் போகணும்?”
“யாரும் உன்னை வற்புறுத்தல எனியாஸ், விருப்பமில்லேன்னா வேணாம், நான் நினைச்சேன், உனக்கு விருப்பமாயிருக்குமுன்னு, நான் நினைச்சேன்—-“எனக் குழம்பினார் மேஜர்.
கண்களில் கண்ணீர் தளும்பி விளிம்பு கட்ட, “என்னை போக வைச்சுற மாட்டீங்க இல்ல” என பயந்தபடியே கேட்டான்.
“இல்லை எனியாஸ், உனக்கு விருப்பமில்லேன்னா வேணாம். நான் நினைச்சேன்—-”
மேஜர் அப்போதைக்கு அதை விட்டுவிட்டு அந்த வசந்த மற்றும் கோடைக் காலத்தில் பையனை பார்க்காமலேயே தன் வேலையில் இருந்தார். ஆனாலும் அவனை பற்றிய நினைவுகள் நிழலாடியபடியே இருந்தன. அவனை முதல் நாளில் பார்த்த காட்சிப் படிமம் அவரால் மறக்க முடியாமலிருந்தது. அவனுக்கு எது நல்லது என்பது அவனுக்குப் புரியாவிட்டாலும் அவனுக்கு உதவி அவனை நல்வழிப் படுத்தவேண்டும் என உறுதி பூண்டார். இதனால்தான் சிறுவர் பள்ளிக்கு அனுப்ப ஒரேகான் நகர வாய்ப்பு வந்தபோது அந்த பட்டியலில் எனியாஸ் லாமார்ட்டினின் பெயரையும் இணைத்தார். இதைப்பற்றி அவனோடு அவர் விவாதிக்கவில்லை. ஆனால் செயல்படுத்தினார். மற்ற பையன்களோடு அவனும் செல்வான். காலம் வரும்போது அவன் புரிந்துகொள்வான். அப்போது நன்றியுடையவனாகக் கூட ஆகலாம்.
தொகுப்பில் 30 பேர் தேர்ந்ததில், எனியாஸ் ஒருவனை பற்றி மட்டும்தான் மேஜருக்கு விபரங்கள் தெரிந்தும், தனிப்பட்ட அக்கறையும் இருந்தது. மற்ற ஒவ்வொருவரிடத்திலும் அவருக்கு தொந்திரவுகள் இருந்தது உண்மைதான். அவர்கள் அனைவருக்குமே போகப்பிடிக்கவில்லை
“வீட்டில் இருக்கவே பிடிக்கிறது”
“பயமாயிருக்கு”
“ஒடம்பு சரியில்லே”
வேறு பிரதேசத்தில் எப்படி இருக்குமோ எனும் அச்சம். அவர்களது பெற்றோர்களும் பயந்ததால் உதவவில்லை. இந்த வேலை இதனால் சலிப்பூட்டுவதாகவும் கடினமானதாகவும் இருந்தது. ஆனாலும் மேஜருக்கு, தான் என்ன செய்யவேண்டும் என தெரிந்ததால் தடுமாறவேயில்லை. மற்ற அனைவரின் விஷயத்திலும் வந்த பிரச்சனைகள் சாதாரணமானதுதான். அதனால் அதை அணுகி மேஜர் கடந்தார். ஆனால் எனியாஸ் விஷயத்தில் மட்டும் அவர் குழம்பினார். அவனுக்கு வெளியேறிச் செல்லுதல் என்பதன் பொருளை தெளிவாக தெரியப்படுத்த விரும்பினார். பயத்திலிருந்து, சந்தேகத்திலிருந்து, அறியாமையிலிருந்து, வெளிச்செல்லுதல். புதிய பாதையை தொடங்குதலைக் குறித்து வைத்துகொள்ளவும் மறக்கக்கூடாது.
எனியாஸின் மேல் அவரது பார்வை தேங்கியது. சந்தித்த முதல் நாள் போலவே மூக்கொழுக தளர்ந்து நின்று கொண்டிருந்தான். அவனது காலுறைகள் கீழே தொங்க பொத்தான்கள் அற்ற மேலங்கி தொளதொளத்தது. ஆனாலும் இந்த அவலட்சணத்திற்கு உள்ளே ஒரு உண்மையான தரம் இலங்குவது மேஜருக்கு தெரியும்.சரியான முறையில் கிடைக்கும் உதவிமூலம் உறுதியான இளைஞனாக மலர்வான். ஆனால் அவன் மனக்காயத்தோடும் குற்றமுள்ள நினைப்போடும் போகக்கூடாது என்பதுதான் முக்கியம்.
மேஜர் தனது எண்ண ஓட்டங்களுக்கு கடிவாளமிட்டுவிட்டு தனது தொண்டையைச் செறுமியபடியே இந்தத் தருணம் முக்கியமானது என நினைத்தார்.
“பையன்களா, பொண்ணுகளா—”
ரயில் அருகே நெருங்கியது. கணவாயைத் தாண்டி ரயிலின் முன்பாகம் கருப்பாகவும் பூதகாரமாகவும் பாய்ந்து வந்தது. வெண்நிற புகைப்படலம் மேல்நோக்கி பறந்தது – ஊஊ… ஊஊ…
மேஜருக்கு தான் காலம் கடந்து பொறுத்திருந்து விட்டது உறைத்தது. துல்லியமான தருணம் வந்தபோது அதை நழுவ விட்டுவிட்டார். உருண்டு வரும் இரும்பு உருளைகளின் சத்தம் காதை அறைந்தது.
எனியாஸை நோக்கிய வண்ணம் அவசரமாக தன் குரலை உயர்த்திக் கூவினார்.
“பையன்களா பொண்ணுகளா — நல்லபடியா —-”
அது மட்டும்தான் கேட்டது.
டி‘ ஆர்சி மெக்நிக்கெல்
தமிழில்:விஜயராகவன்
டி’ ஆர்சி மெக்நிக்கெல் :இனவரைவியல் மானுடவியலாளர் டி’ ஆர்சி மெக்நிக்கெல் அவர்களின் செவ்விந்திய மூதாதையர்கள் சாலிஷ்-கூட்டினாய் மற்றும் க்ரீ இனவம்சத்தை சேர்ந்தவர்களாவர். இவர் 1904-ம் ஆண்டு மோன்டெனா மாகாணத்தின் பிளாட்ஹெட் செவ்விந்தியப் பகுதியில் பிறந்தார்.
ஐக்கிய அமெரிக்க நாட்டின் செவ்விந்திய விவகார கழகத்தின் ஆணையரான ஜான் கோலியரின் கீழ் அலுவலராக வேலை புரிந்து, பின் சிகாகோவில் உள்ள அமெரிக்க செவ்விந்திய சரித்திர நூலக மையத்திற்கு பணியமர்த்தப்பட்டார். 1960-ல் இவர், ரெஜினாவில் இருக்கும் சாஸ்கெட்சிவான் சர்வகலாசாலையின் மானுடவியல் பிரிவின் தலைமைப் பொறுப்பை நிர்வகித்தார். இவர் எழுதிய தீர்க்கமும் ஆழமும் கூடிய சிறுகதைகள் செக்காவ் மற்றும் ஹெம்மிங்வே போன்றோரின் ஆக்கங்களை ஊன்றி படித்ததால் உருவானதாகும். மெக்நிக்கல் 1977-ல் மறைந்தார்.