ராஜ வீதி

வகைமை: <சிறுகதை>

வார்த்தை எண்ணிக்கை: <5089>

வாசிக்கும் நேரம்: <25> நிமிடங்கள்

1.

அந்த வீதியில் நுழைந்ததுமே ஒரு புராதனத்தை உணர முடிந்தது போல அவனுக்குத் தோன்றியது. அந்த ‘கார்’ அப்போது ‘எல் கெமினோ ரியல்’ சாலையில் போய்க் கொண்டிருந்தது. தங்கும் விடுதியின் முகவரியைத் தேடிக் கொண்டே வேடிக்கை பார்த்தபடி அவன் பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.

‘சேன் ஃப்ரேன்சிஸ்கோ’ சர்வதேச விமான நிலையத்தின் வெளி வாயிலில், பத்து நிமிடங்களுக்கு முன் காத்திருந்த போது, அங்கிருந்த அந்த அமெரிக்கக் காவல்துறை அதிகாரி அவனைப் பார்த்து, “அது தான் உங்கள் ‘டேக்சி’”, என்றார்.

அவன் தன் பயணப் பெட்டிகளுடன் அந்த ஓட்டுநரிடம் சென்றான். அந்த ஓட்டுநர் ஒரு நடுத்தர வயது ‘அமெரிக்கர்’ எனப் பார்த்ததுமே தெரிந்தது. அவர், “எங்கே போக வேண்டும் ‘சர்’” என்றதற்கு, அவன் “‘ரெட்வுட் சிட்டி’”, என்றதுமே, “‘சாரி சர்’, நான் அங்கே இப்போது போகப் போவதில்லை”, என அவர் சொன்னதை, அப்படியே போய் அந்த அதிகாரியிடம் சொன்னான்.

அவர் உடனடியாகக் கோபப்பட்டு, அந்த ஓட்டுநரைப் பார்த்து “நீ எப்போதும் இப்படித் தான் செய்கிறாய். ஒதுக்கப்படும் இடத்திற்குச் செல்ல மறுக்கிறாய். பிறகு எதற்கு விமான நிலையத்திற்குள் வந்து நிற்கிறாய். உன் மனப்பான்மை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இனிமேல் இந்த விமான நிலையத்தில் உன்னை  எங்காவது நான் பார்த்தால் நடப்பதே வேறு. இரு உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்”, எனக் கத்தினார். அந்த ஓட்டுநர் அதற்குப் பயந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பதிலேதும் சொல்லாமல் அப்படியே நின்றார்.

இப்போது அந்த அதிகாரி அவனைப் பார்த்து, “சாரி சர், அந்த டேக்சியை மறந்து விடுங்கள், இதோ இந்த டேக்சியில் ஏறிக் கொள்ளுங்கள், சேன் ஃப்ரேன்சிஸ்கோவிற்குத் தங்கள் வருகை நல்வரவாகுக”, என்றார். அவன் அவருக்கு ‘நன்றி’, சொல்லிவிட்டு அந்தப் புதிய டேக்சியின் ஓட்டுநரிடம் சென்றான். அந்த ஓட்டுநரும் ஒரு நடுத்தர வயது அமெரிக்கர் போலத் தான் தெரிந்தார். அவர் அவனிடம், “‘ஹை சர்’, ‘டேக்சி டேக்சி’ தங்களை வரவேற்கிறது. என் பெயர் ‘ஏண்டர்சன்’, உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா”, என்றதற்கு, “என் பெயர் மோகன்”, என்றான்.

ஓட்டுநர் அவன் பயணப் பெட்டிகளை பின்னால் வைத்துவிட்டு வந்து வண்டியைக் கிளப்பினார். அவன் அந்தக் காரின் பின்புற வலது பக்க இருக்கையில் சாய்ந்து கொண்டு, ‘‘அமெரிக்கா’ என்ற கனவு நிலத்தில் என் காலடி பட்டுவிட்டது. இந்த நிலத்தின் பாதையில் பயணப்படுவதே ஒரு பெருமை தான்’, என நினைத்துக் கொண்டான். “சர், எந்த ‘எக்சிட்’ பாதையை நாம் எடுக்க வேண்டும்”, என்ற ஓட்டுநரின் குரல் மோகனின் சிந்தனையைக் கலைத்தது.

“எனக்கு ரெட்வுட் சிட்டி செல்ல வேண்டும்”.

“அது சரி, ஆனால் எந்த வெளியேறும் பாதையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டேன்”.

‘மறக்காமல் ‘கூகிள்’ வரைபடத்தில் முகவரி தேடி, வழியை அச்சடித்து வைத்துக் கொள். அமெரிக்காவில் இறங்கியதும் உனக்கு ஒரு புதிய ‘சிம்’ அட்டை வாங்க ஞாபகம் இருக்காது அல்லது நேரம் இருக்காது. அப்படியே வாங்கினாலும் அது வேலை செய்ய ஒரு மணி நேரம் மேல் ஆகும். கார் ஓட்டுநரிடம் ‘மொபைல் டேட்டா’ இருக்குமோ என்னமோ தெரியாது,’ என்று ஒரு வாரம் முன்பு அவன் சக ஊழியன் சஞ்சய் இணைய அரட்டையில் சொன்னது அவனுக்கு அப்போது தான் நினைவிற்கு வந்தது.

“எனக்கு இந்த முகவரிக்குச் செல்ல வேண்டும்”, எனக் கூறியவாறே தன் சட்டைப்பையிலிருந்த ஒரு காகிதத் தாளை எடுத்து அந்த முகவரியை வாசித்தான் – “‘எல் டியா இன்ன்’, 2650, எல் கெமினோ ரியல், ரெட்வுட் சிட்டி, ‘சிஏ’ 94061, ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ்’”.

“அடக் கடவுளே, விமான நிலையத்தை விட்டு வெளியேற நாம் எந்த எக்சிட்டை இப்போது எடுப்பது”.

“சாரி, எனக்குத் தெரியாது”.

“ஹ்ம், என் மொபைல் டேட்டா வேறு வேலை செய்ய மாட்டேனென்கிறது”, ஓட்டுநரின் சலிப்பான குரல் வெளிப்பட்டது. விமான நிலையத்திற்குள் இருந்த வாகன நெரிசலால், அந்தக் கார் மெதுவாக ஊர்ந்து தான் சென்று கொண்டிருந்தது.

“நான் உங்கள் செல்பேசியைப் பயன்படுத்திக் கொள்ளலாமா, இங்கிருக்கும் என் நண்பரிடம் விசாரித்துப் பார்க்கிறேன்”, என்றதும் உணர்ச்சியற்ற முகத்துடன் தன் செல்பேசியை அவர் தந்தார். அதை வாங்கி சஞ்சய் உடைய எண்ணை அழைத்தான்.

சஞ்சய் மோகனை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன். இருவரும் ஒரே ‘ப்ராஜெக்டில்’ வேறு வேறு அணிகளிலிருந்து மிகச் சமீப காலமாகத் தான் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சஞ்சய் உடன் மோகனுக்கு இவ்வளவு நெருங்கிப் பழக இப்போது தான் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அவன் நிலையக் கேட்டதுமே சலிப்புடன், “நான் அப்போதே சொன்னேன் அல்லவா, நான் வந்தது ‘சேன் ஹொசே’ விமான நிலையத்திலிருந்து என்பதால் எனக்கு ‘சேன் ஃப்ரேன்சிஸ்கோ’ விமான நிலையத்தின் வெளியேறும் வாயில்கள் குறித்து எதுவும் தெரியாது”, என்றவன் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “இரு, இங்கேயே வாழும் என் நண்பன் ஒருவன் ஒரு பல்பொருள் அங்காடியில் மேலாளராக  இருக்கிறான். அவன் செல்பேசி எண் தருகிறேன். அவனை அழைத்துக் கேள். உதவி கிடைக்கலாம். அவன் பெயர் தீபக்”, என ஒரு எண்ணைச் சொன்னான். அதை ஓட்டுநரிடம் இருந்து பேனா மற்றும் துண்டுக் காகிதம் வாங்கிக் குறித்துக் கொண்டான்.

“சீக்கிரம் சர், நாம் ஏதாவது ஒரு எக்சிட்டை எடுத்தாக வேண்டாம்”, என ஓட்டுநர் சற்று பதற்றத்துடன் சொன்னார்.

அவன் அந்த நண்பரின் நம்பரை அழைத்தான். அழைப்பை யாரும் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தான். ம்ஹூம். பிரயோஜனமில்லை. அதற்குள் ஓட்டுநர், காருக்குள் இருக்கும் பின் பக்கம் பார்க்கும் கண்ணாடியில் அவனைப் பார்த்து வெற்றிக் களிப்பில் முகம் மலர்ந்து புன்னகைத்தபடி, “எனக்குப் புரிந்துவிட்டது, நாம் ‘ஏர்போர்ட் ஏக்சஸ் ரோட்’ வழி ‘யு.எஸ். ரௌட் 101 எஸ்’ உடைய ‘ஹைவே’ எக்சிட் 408 எடுக்க வேண்டும்”, என்று சொன்ன அதே நேரம் அந்த அமெரிக்க வாழ் இந்திய நண்பர் செல்பேசியில் கூப்பிட்டார். சிறு அறிமுகத்திற்குப் பின் வழி சொன்னார். ஆனால் அவர் சொன்னது எக்சிட் 409. 28-04-2007 சனிக்கிழமை மதியம் 12 மணி ‘கலிஃபோர்னியா’ வெய்யில் காரின் ‘ஏ.சி.’-யை மீறி மோகனைத் தீண்டியது.

“என் நண்பர் வேறு எக்சிட் சொன்னாரே”, என்று பரிதாபமாகச் சொன்னான்.

“கவலைப்படாதீர்கள் மோகன், எனக்கு ரௌட் புரிந்துவிட்டது. நான் ரெட்வுட் சிட்டி சென்று சற்று காலம் ஆகிறது என்பதால் எனக்குச் சட்டென்று ரௌட் பிடிபடவில்லை.”, என்றபடியே ஏண்டர்சன் காரை திருப்பினார். மோகன், ‘கலவரப்பட வேண்டுமா’, என யோசிக்கத் தொடங்கினான். ஏண்டர்சன், மோகனைப் பார்த்து “உங்கள் நண்பர் சொன்ன எக்சிட் கூட எடுக்கலாம், ஆனால் இது இன்னும் சுலபம் மற்றும் பக்கம், கலவரப்படாதீர்கள்”, என்றதும் “நன்றி ஏண்டர்சன்”, எனப் பெருமூச்சு விட்டபடி ஜன்னல் திரையில் ஓடிக் கொண்டிருந்த அமெரிக்க வரைபடத்தை ரசிக்கத் தொடங்கினான். ஏதோ ராஜபாட்டையில் செல்வது போல அவனுக்குத் தோன்றியது.

“இது தான் உங்கள் முதல் அமெரிக்கப் பயணமா”, எனக் கேட்டார் ஏண்டர்சன்.

“ஆம் இது தான் என் முதல் வெளிநாட்டுப் பயணமும் கூட”.

“இது தான் ‘எல் கெமினோ ரியல்’ என்ற அந்த பிரசித்தி பெற்ற சாலை. யு.எஸ். ரௌட் 101-இன் ஒரு முக்கிய மிக நீண்ட பகுதி இந்த சாலை தான்”.

மதில்கள் எதுவும் இல்லாமல் கட்டப்பட்ட விடுதிகள், கடைகள், வீடுகள் என அந்தச் சாலை தன்னை விரித்துக் கொண்டு சென்றது.

“சேன் ஃப்ரேன்சிஸ்கோவிலிருந்து ‘சேன் டியாகோ’ வரை செல்லும், ஏறக்குறைய ஆயிரம் கிலோமீட்டர் நீளம் உள்ள சாலை இது. எல் கெமினோ ரியல் என்றால் ‘ஸ்பேனிஷ்’ மொழியில் ‘ராஜ வீதி’ எனப் பொருள்.”

ராஜ வீதி! அந்தச் சொற்றொடரே மோகனை மயக்கியது. அந்த ராஜ வீதியில் தான் அவன் தினமும் பயணம் மேற்கொள்ளப் போகிறான். அமெரிக்க மோகம் அவனை நேரடியாகத் தீண்டத் தொடங்கியது.

“இந்த சாலை, 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இயங்கிய கலிஃபோர்னியாவின் 21 ஸ்பேனிஷ் கத்தோலிக்க கிருஸ்துவ சமயத் தூதுக்குழுக்களின் புறக் காவல் நிலைய அரண்களை இணைக்கிறது. அந்த இடங்களில் எல்லாம் ஒரு தேவாலயம் இருக்கிறது. அமெரிக்கப் பழங்குடிகளை மதமாற்றம் செய்வது தான் அந்த மத போதகர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது.”

தன் தலையை இடப் பக்கம் திருப்பி, காருக்குள் இருந்த கண்ணாடியில் ஏண்டர்சனின் முகத்தைப் பார்த்தான் மோகன்.

“கலிஃபோர்னியாவிற்குள் தாங்கள் பாதுகாப்பாகப் பயணப்பட இந்தச் சாலையை அந்த மத போதகர்கள் உபயோகப்படுத்தினர். இந்தச் சாலையில் உள்ள இந்த இருபத்தியோரு தேவாலயங்களையும் ஒரு சுற்றுலா போலப் பார்க்க ஒரு நாளைக்கு மூன்று இடங்கள் வீதம் ஏழு நாட்கள் ஆகும். ஒரு இடத்தில் சுமார் இரண்டு மணி நேரம் செலவாகும். நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வயதான ஜோடியை அழைத்துக் கொண்டு இந்தப் பயணத்தைச் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தேவாலயத்தைச் சுற்றியும் தோட்டங்களும், அருங்காட்சியகங்களும் காணக் கிடைக்கும். சிறுவர்களுக்கு 1 ‘டாலர்’, வயதானவர்களுக்கு 2 டாலர், இளைஞர்களுக்கு 3 டாலர், எனக் கட்டணம்.”

ஏதோ சற்று நவீனமான ஒரு கிராமத்தின் சாலை போலத் தான் அச்சாலை இருந்தது. சாலையின் இரு மருங்கும் இருந்த கட்டிடங்கள் வானுயர்ந்து இல்லை. சில கட்டிடங்கள் மட்டுமே அதிக பட்சம் இரண்டு மாடிகள் கொண்டதாக இருந்தன. மற்றவை எல்லாம் ஒரே தளம் மட்டுமே கொண்டவையாக இருந்தன. இதுவா அமெரிக்கா என்று இருந்தது. இதுவும் தான் அமெரிக்கா என்றும் இருந்தது. ‘இது அமெரிக்க நாட்டுப்புறம்’, என மனதிற்குள் சொல்லிக் கொண்டான் மோகன்.

“இந்தச் சாலை கலிஃபோர்னியாவின் வரலாற்று அடையாளங்களுள் மிக முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்த ஒன்று. அதைக் குறிக்கும் விதமாக இந்தச் சாலையின் இரண்டு இடங்களில், உச்சி வளைந்த கம்பத்தில், தொங்கும் பெரிய ஒற்றை மணி கொண்ட, நினைவுச் சின்னங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று சேன் டியாகோவிலும் மற்றொன்று சேன் ஃப்ரேன்சிஸ்கோவிலும் இருக்கிறது. இந்தக் கம்பங்கள் மேய்ப்பர்கள் பயன்படுத்தும், உச்சியில் கொக்கி போன்று வளைந்த அமைப்பு கொண்ட தடிகளை ஒத்ததாக இருக்கும். அப்படிப்பட்ட அமைப்பு கொண்ட தடிகளைத் தான் அந்த ‘ஃபிரான்சிஸ்கன்’ கிருஸ்துவ மத போதகர்கள் தங்கள் வழி நடைக்குக் கைத்தடியாக அந்தக் காலத்தில் பயன்படுத்தினார்கள்.”

என்ன தான் மோகன் தன்னிடம் எதுவும் உரையாடாமல் வந்தாலும், அவன், தான் சொன்னதை ஆர்வமாகக் கவனிக்கிறான் தான் என்பதை, கண்ணாடியில் அவ்வப்போது பார்த்து, அவன் தலையை ஆட்டிக் கொண்டும், புன்னகைத்துக் கொண்டும் வருவதன் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு, மேலும் ஆர்வமாக அவன் சற்று காலம் வாழப் போகும் அமெரிக்காவின் அந்தப் பகுதி குறித்த தான் அறிந்த தகவல்களை அவனுக்கு உபயோகப்படும் என்ற நினைப்பில் பகிர்ந்து கொண்டே வந்தார் ஏண்டர்சன்.

“இதோ, சேன் டியாகொவில் இருக்கும் இந்தச் சாலையின் அந்த நினைவுச் சின்னத்தின் அருகில் நின்று நான் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் ஒன்று”, என்று தன் செல்பேசியை நீட்டினார் ஏண்டர்சன். மோகன் அதை வாங்கிப் பார்த்துவிட்டு, “அருமை”, எனச் சொல்லி அதைத் திருப்பி அவரிடம் கொடுத்துவிட்டு, “விடுதி சென்று சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ஏண்டர்சன்”, எனக் கேட்டான்.

“இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் போய்விடலாம்”, எனப் பதில் சொல்லிவிட்டு அடுத்த சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் வாகனத்தை ஓட்டினார் ஏண்டர்சன்.

“ஏன் பேசுவதை நிறுத்திவிட்டீர்கள் ஏண்டர்சன்”, எனக் கேட்டான் மோகன்.

“நான் சொல்லும் அமெரிக்கா குறித்த சரித்திரம் மற்றும் பூகோளம் சார்ந்த தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எந்த விதத்தில் உபயோகப்படும் என யோசித்தேன். ஒருவேளை  உபயோகப்படாதோ எனத் தோன்றியதால் பேச்சை நிறுத்தினேன். இந்தச் சாலையில் எங்கே நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன என்று சொல்லவா?”

“உரையாடலுக்குத் தகவல் பரிமாற்றம் தானே அடிப்படை உந்து சக்தி. மொழியின் தரிசனம் தகவல்களிலிருந்து தானே தொடங்குகிறது. அது போக ஒரு தகவல் என்பது வாழ்வின் நிச்சயமின்மையினைத் தீர்க்க முயல்கிறது என்ற பார்வையை நான் நம்புகிறேன். அது எந்தத் தகவலாக இருந்தாலும் சரி. பிறகு எதற்கு நாம் தினமும் செய்தித்தாள்களையும், தொலைக்காட்சியின் செய்தி அலைவரிசைகளையும் அன்றாடம் ஒரு கடமை போலப் படிக்கிறோம், பார்க்கிறோம். எந்தத் தகவல் எப்போது நினைவிற்கு வந்து யாருக்கு எப்படி உபயோகப்படும் என முன்கூட்டியே எல்லா சந்தர்ப்பங்களிலும் தெரிந்துவிடுவதில்லையே. இந்த உலகத்திற்கு நாம் கூட ஒரு தகவல் தானே. ‘நம்மிடம் எவ்வளவு அதிகமாகத் தகவல்கள் இருக்கின்றன ஆனால் நாம் எவ்வளவு குறைவாக அறிந்து வைத்திருக்கிறோம்’, என ‘நோம் ச்சோம்ஸ்கி’ சொல்லியிருக்கிறார்.”

திடீரென்று மோகன் ஆற்றிய சொற்பொழிவு ஏண்டர்சனுக்கு அதிர்ச்சி தந்தது அவர் முகம் சட்டென்று விரிந்ததில் தெரிந்தது. “உங்கள் பேச்சு நன்றாகத் தான் இருக்கிறது. இந்த இடத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி இங்கே சாலையின் இரு மருங்கிலும் ரெட்வுட் மரங்கள் விண்ணைத் தொட்டுவிடும் உயரத்திலும் அகண்ட அமெரிக்கா போன்று விரிந்து அகலமாகவும் இருக்கின்றன பாருங்கள். இந்த மரங்கள் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவன.”

“ஆமாம். அழகாக இருக்கின்றன. இந்தச் சாலையில் உள்ள அந்த இருபத்தியோரு ‘மிஷன்’களுக்கு சுற்றுலா சென்றீர்களே, அது சுவாரஸ்யமான பயண அனுபவமாக இருந்ததா.”

“ஒரு பயண அனுபவம் சுவாரஸ்யமாக அமைவது என்பது ஒருவரின் பார்வையைப் பொறுத்தது தானே. எனக்குப் பிடித்திருந்தது.”

போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் சிவப்பு விழுந்து மீண்டும் கார் நின்றது.

“ரெட்வுட் சிட்டியில் கணினி மென்பொருள் நிறுவனங்கள் கூட நிறைய இருக்கின்றன”, என்றார் ஏண்டர்சன், எப்படியும் மோகன் கணினித் துறை சார்ந்தவனாகத் தான் இருப்பான் என அவருக்கு அசாத்திய நம்பிக்கை.

“இங்கே தான் எங்கள் நிறுவனமும் இருந்தது. ஒரு வாரம் முன்பு தான் அதை ‘கேம்பஸ் ட்ரைவ்’ வர்த்தகப் பூங்காவிற்கு மாற்றினார்கள். ”

“‘ஓஹ்’.”

“‘கான்வே’ விதி என்று ஒன்று எங்கள் கணினித் துறையில் பிரசித்தம். அதை ‘பிரதிபலிப்புக் கருதுகோள்’ என்று சொல்வார்கள். ‘மெல்வின் இ.கான்வே’ என்ற கணிப்பொறி நிரலர் உருவாகிய விதி அது.  ‘ஒரு மென்பொருள் கட்டமைப்பை வடிவமைக்கும் எந்த நிறுவனமும் உருவாக்கும் வடிவத்தின் அமைப்பு என்பது அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்புக் கட்டமைப்பின் நகலாகவே இருக்கும்,’ என்பது தான் அந்த விதி.”

“ம்ஹ்ம்.”

“ஒரு மென்பொருள் தொகுப்பு உருவாக்க, பலர் ஒருவருக்கொருவர் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, ஒரு கணினி மென்பொருளின் அமைப்பு அதை உருவாக்கிய நிறுவனத்தில் உள்ள தனி மனிதர்கள் மற்றும் அணிகளின் கடினமான தகவல் பரிமாற்ற எல்லைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமைகிறது”, எனச் சொல்லி சில வினாடிகள் இடைவெளி விட்டு, “என் உரையாடல் சலிப்பூட்டுகிறதா”, எனக் கேட்டான் மோகன்.

“இல்லையே”, எனச் சொல்லிவிட்டு ஏண்டர்சன் தொடர்ந்தார், “ரெட்வுட் சிட்டி நகரம், ‘சேன் மெட்டாயோ’ என்ற ‘கௌன்ட்டி’யின் கீழ் வரும். சேன் மெட்டாயோ மாவட்டத்திற்குத் தலைநகரம் ரெட்வுட் சிட்டி தான். இது தான் இந்த மாவட்டத்தின் முதல் நகரமாக உருவானது. சேன் மெட்டாயோ மாவட்டத்தில் பதினைந்து நகரங்கள் இருக்கின்றன. சேன் மெட்டாயோவும் கூட ஒரு நகரம் தான். இவையெல்லாமே ‘சில்லிக்கன் வேலி’ பள்ளத்தாக்கைச் சேர்ந்தவை தான்.”

“ம்ஹ்ம்.”

“ரெட்வுட் சிட்டி, சேன் ஹொசே நகரத்திற்கும் சேன் ஃப்ரேன்சிஸ்கோ நகரத்திற்கும் இடையே இருக்கிறது. இங்கே ‘ஹிஸ்பேனிக்’ மற்றும் ‘லேட்டினோ’ இனங்களைச் சேர்ந்தவர்கள் அதாவது பொதுவாக மெக்சிகர்கள் எனச் சொல்லப் பெறுபவர்கள் சற்று அதிகம் எண்ணிக்கையில் இருப்பார்கள் என்றாலும் வெள்ளையர்களும், கருப்பர்களும் கூட அதே அளவு இருப்பார்கள்” எனச் சொன்ன ஏண்டர்சன் பிறகு சிரித்துவிட்டு, “தகவல்கள், தகவல்கள், தகவல்கள்,” எனச் சொல்லி மீண்டும் சிரித்தார். மோகனும் சிரித்தே எதிர்வினையாற்றினான்.

மோகனுக்கு அவன் ‘ஜெட் லேக்’ தந்த போதை மது தரும் போதை போன்றே இருந்தது. மீண்டும் சிரித்தான். ““தகவல்கள், தகவல்கள், தகவல்கள்”, என ஏண்டர்சன் குரலைப் போன்று பிரதியெடுத்துச் சொன்னான். பின், “இங்குக் கூட ‘டவுன்டௌன்’ என்ற ஒன்று இருக்கும் தானே”, எனக் கேட்டான்.

“ஆம். என்ன தான் டவுன்டௌன் என்பது ஒரு நகரத்தின் வணிக, கலாச்சார, சரித்திர, அரசியல் மற்றும் புவியியல் சார்ந்த மையத்தைக் குறிக்கும் என்றாலும், அமெரிக்க இரவு வாழ்வின் கவர்ச்சியான தரிசனங்கள் அங்கே தான் நிகழும். மதுக் கூடங்கள் மற்றும் ‘ஸ்ட்ரிப் க்ளப்புகள்’ எனும் ஆடை அவிழ்ப்பு நடன நிகழ்வுகளுக்கான சங்கங்கள் என வேறு ஒரு உலகம் அங்கே இயங்கும். எல்லாம் வயது வந்தோருக்கான கேளிக்கைகள் தாண்டவமாடும் இடங்கள். இவ்வகைக் கிளப்புகள் ‘ஜெண்டில்மேன்’ஸ் க்ளப்ஸ்’ என்றும் அழைக்கப்படும். ரெட்வுட் சிட்டியில் ஒரு நல்ல ஜெண்டில்மேன்’ஸ் கிளப் இருக்கிறது. ஆனால் அது ரெட்வுட் சிட்டி டவுன்டௌனில் இல்லை. இதே சாலையில் தான் இருக்கிறது. அங்கே நடனமாடும் ‘ரோசா மரியா’ மற்றும்  ‘க்ளாரா மார்கரெட்’ ஆகியோர் எனக்குத் தெரிந்தவர்கள் தான். இந்தத் தகவலாவது உங்களுக்கு உபயோகப்படுமென நினைக்கிறேன்.”, எனச் சொல்லிவிட்டு ஏண்டர்சன் மீண்டும் சிரித்தார்.

 

மோகனிடமிருந்து பதிலில்லை. ஏண்டர்சன், “மோகன்!”, எனச் சற்று அதிர்ந்து அழைத்ததும், மோகன் திடுக்கிட்டு விழித்து, “விடுதி வந்துவிட்டதா”, எனக் கேட்டான்.

“இல்லை. இந்தச் சாலை, ‘ஃப்ரீவே’ அல்லது ‘ஹைவே’ போன்ற நெடுஞ்சாலை வகைகளுக்குள் முழுக்க அடங்காது. இதில் ஆங்காங்கே சாதா சாலையும் கலந்து ஓடும். எனவே போக்குவரத்து சமிஞ்சைகள் மற்றும் வாகன நெரிசல்கள் இருக்கும். இன்னும் கொஞ்சம் நேரம் தான், கொஞ்சம் தூரம் தான், போய்விடலாம்”.

மோகனுக்குத் தூக்கம் தன் போதை அழைப்பினை விடுத்துக் கொண்டேயிருந்தது. விழித்திருக்கச் சிரமப்பட்டான். கொஞ்சம் நேரத்தில், கொஞ்சம் தூரத்தில், பாதி தூக்கத்திலும், மோகனுக்கு ‘எல் டியா இன்ன்’ என்ற அந்த தங்கும் விடுதியின் பெயர்ப் பலகை கண்ணுக்குத் தெரிந்தது.

“ஏண்டர்சன், ஏண்டர்சன், அதோ விடுதி தெரிகிறது”, என மோகன் கத்தினான்.

“அமைதி, நானும் விடுதியைக் கவனித்துவிட்டேன். கொஞ்சம் முன்னே போய் வண்டியைத் திருப்பிக் கொண்டு வர வேண்டும், பொறுங்கள்”.

விடுதியின் வாசலில் வண்டியை நிறுத்தி, அவன் பெட்டிகளை இறக்கி வைத்துவிட்டு, ‘மீட்டர்’ பார்த்து, “நாற்பது டாலர்கள்”, என்றார் ஏண்டர்சன்.

மோகன், தன் பணப்பையைத் திறந்து இரண்டு இருபது டாலர் நோட்டுகளும் ஒரு ஐந்து டாலர் நோட்டும் ஏண்டர்சன் கையில் கொடுத்துவிட்டு, “நன்றி, எனக்கு ஒரு ரசீது தாருங்கள்”, என்றான்.

ஏண்டர்சன் அவனுக்கு “நன்றி”, எனச் சொல்லிவிட்டு தன் வாகனத்தின் ரசீது புத்தகத்திலிருந்து இரண்டு தாள்களைக் கிழித்து, எதுவும் நிரப்பாமல் அவனிடம் நீட்டி, “இதை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். அறுபது டாலர்கள் வரை இந்தப் பயணத்திற்கு நீங்கள் தொகையை நிரப்பலாம்”, என்றவாறே அவர் தன் சட்டைப் பையிலிருந்து தன் முகவரிச் சீட்டினை எடுத்து மோகனிடம் கொடுத்துவிட்டு, “எங்கே போக வேண்டும் என்றாலும், அழையுங்கள். நான் ‘ஃப்ரீ’யாக இருந்தால் வருகிறேன். இல்லாவிட்டால் வேறு யாரையாவது அனுப்புகிறேன். இந்த ‘டேக்சி டேக்சி’ நிறுவனத்தின் உரிமையாளர் நான் தான்”, என்றார்.

மோகன், அவரிடம் விடை பெற்று, மடிக் கணினி இருந்த தோள் பையை மாட்டிக் கொண்டு, தன் இரண்டு பெட்டிகளையும் தள்ளியபடியே விடுதிக்குள் நடந்து சென்றான்.

2.

விடுதியின் உள்ளே கொஞ்சம் தூரம் மோகன் போனதும், விடுதியின் முதல் தளத்திலிருந்து, “வா, வா”, என ஆங்கிலத்தில் அழைத்தபடியே சஞ்சய் கீழே வந்து ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்கு மோகனை அழைத்துச் சென்றான். இருவரும் ஒன்றாகத் தங்கிக் கொள்வதாக ஏற்கனவே பேசி வைத்திருந்தார்கள். அறை வாடகை ஆளுக்குப் பாதியாகி, தங்கும் செலவு குறைந்து, இருவரும் தங்கள் ‘பெர் டியம்’ தொகை எனும் அமெரிக்கத் தினக் கூலியின் அறுபது டாலர்களில் ஒரு தொகையை மிச்சம் பிடிக்கலாம். அது கூட சஞ்சய் உடைய ஆலோசனை தான்.

 

ஒரு மாதம் அங்கே தங்க இருப்பதால் விடுதி மேலாளரிடம் பேசி, தொகையைப் பெருமளவு குறைத்திருந்தான் சஞ்சய். அவன் இதற்கு முன் அங்கே பல முறை தங்கியிருக்கிறான். ஆனால் சஞ்சய் இன்னும் இரண்டு வாரங்களில் கிளம்பி விடுவான். அதற்குப் பிறகு மோகன் அந்த அறையில் தனியாகத் தான் இருக்க வேண்டும்.

தன் பெட்டிகளை ஓரத்தில் வைத்துவிட்டு, படுக்கையில் கிடந்த புத்தகத்தைப் பார்த்தான் மோகன். ‘ஜோஷுவா ப்ளாக்’ எழுதிய ‘எஃபக்டிவ் ஜாவா’ என்ற புத்தகம் அது.

“ஏதாவது சாப்பிடுகிறாயா, ‘சாப்பிடத் தயாராக உள்ள சாம்பார் சாதம்’ பொட்டலம் இருக்கிறது”, என்றான் சஞ்சய்.

‘அமெரிக்கா வந்து என் முதல் வேளை உணவாகச் சாம்பார் சாதமா உண்ண வேண்டும்’, என யோசித்தபடியே, “இல்லை, பக்கத்தில் இருக்கும் ஏதாவது உணவு விடுதிக்குப் போய் வருகிறேன்”, எனச் சொல்லி விட்டுக் குளியலறைக்குள் நுழைந்தான் மோகன்.

“அறைக்கு ஒரு சாவி தான் இருக்கிறது, நாளை இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம், நான் இங்கே தான் இருப்பேன், சீக்கிரம் வந்துவிடு”, என்றான் சஞ்சய்.

அந்த விடுதியின் உள்ளே ரெட்வுட் மரங்கள் அசுரர்களைப் போன்ற பிரம்மாண்டமான தோற்றத்துடன் நின்றிருந்தன. ஆனால் அந்த பிரம்மாண்டம் காண்பவர் மனதை நிலை குலைக்காமல் அள்ளி அரவணைத்துக் கொள்வதைப் போல் தோன்றியது. மரங்களைச் சுற்றி ரத்தச் சிவப்பில் பிரகாசமாகப் பட்டொளி வீசும் ரோஜாப் பூக்களின் தோட்டம் பளீரென்று கண்களைப் பறித்தது. ஒரு பெரிய நீச்சல் குளம் விடுதிக்கு நடுவே இருந்தது. விடுதி வாயிலில் ‘படுக்கையும் காலை உணவும் ஒரு நாளைக்கு $49’ என்ற அறிவிப்பு இருந்தது. மோகன், அந்த விடுதியை விட்டு வெளியே வந்து அந்த ராஜ வீதியின் இடது ஓரம் இருந்த நடைமேடையில் நடக்கத் தொடங்கினான்.

‘இந்தப் பசியுடன் அதிக தொலைவு நடக்க முடியாது. அருகில் எந்த உணவு விடுதி நன்றாக இருக்கும் என சஞ்சயிடம் கேட்டிருக்கலாம். இந்தச் சாலையில் எங்கே நல்ல உணவகம் இருக்கிறது என ஏண்டர்சன் பேச முனைந்தாரே, அதையாவது கேட்டுக் கொண்டிருந்திருக்கலாம். சரி நாமே தேடிப் பார்ப்போம்’, என முன்னகர்ந்தான். இடதுபுறம் தெரிந்த கட்டிடங்களையே கவனித்துக் கொண்டு போனான். சட்டென்று போக்குவரத்து சமிஞ்சை தென்பட்டதும் நின்றான். வலது புறம் திரும்பிப் பார்த்தால், சாலையின் எதிர்புறம், பெரிய அளவில் ‘டார்கெட்’ பல்பொருள் அங்காடி இருந்தது தெரிந்தது. ‘சாலையைக் கடந்து அந்தப் பக்கம் சென்று திரும்பி நடப்போம் அங்கே ஏதும் உணவு விடுதி தென்படுகிறதா பார்க்கலாம்’, என நினைத்தான்.

ஆனால் வாகனங்கள் சாலையில் சென்றபடியே இருந்தன. போக்குவரத்து சமிஞ்சை மாறுவதாகவே இல்லை. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனைத் தவிர வேறு யாரும் அந்த இடத்தில் ‘சிக்னலுக்குக்’ காத்திருக்கவும் இல்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அங்கேயே நின்றிருப்பான். அப்போது ஒரு பெண்மணி அவன் அருகில் வந்து நின்றார். அவரும் ஏதும் செய்யாமல் அப்படியே அங்கேயே ஒரு முப்பது வினாடிகள் காத்து நின்றார். பிறகு ஒரு முறை அவனைச் சட்டென்று திரும்பிப் பார்த்துப் புதிர் முகத்துடன் புன்னகைத்துவிட்டு, அந்த சமிஞ்சை கம்பத்தில் ஒரு இடத்தில் தன் கட்டைவிரலால் ஒரு அழுத்து அழுத்தினார்.

அப்போது தான் அங்கு இருந்த அந்த பொத்தான் அவன் கண்களுக்குத் தென்பட்டது. கரும்பச்சைக் கம்பத்தில் இருந்த கரிய பொத்தான் அவன் ‘ஜெட் லேக்’ கண்களுக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லை. அது தெரிந்திருந்தாலும் அது எதற்கு என்று யோசித்தபடியே மட்டுமே நின்றிருந்திருப்பான். முப்பது வினாடிகளில் சிக்னல் சிவப்புக்கு மாறியது. பச்சை நிறத்தில் நடப்பான் குறி விழுந்தது. சாலையைக் கடந்து அந்தப் பக்கம் இருந்து ஏதாவது உணவு விடுதி தென்படுகிறதா எனத் தேடியபடியே தன் தங்கும் விடுதியின் திசை நோக்கி நடக்கத் தொடங்கினான். ‘மேரிஸ்கோஸ் எல் கெமினோ’ என்ற அந்த மெக்சிகன் கடல் உணவு விடுதியைக் கண்டதுமே குதூகலமாகி அவன் உள்ளே நுழைந்த போது மணி பிற்பகல் 3:30.

உள்ளே யாரையும் காணவில்லை. எல்லா மேஜைகளும் காலியாக இருந்தன. அவன் ஒரு மேஜையின் இருக்கையில் சென்று அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அப்போது ஒரு பணிப்பெண் அவனை நோக்கி வந்தார். அமெரிக்க இளம்பெண். அங்கே அவன் ஒரு மெக்சிகன் இளம்பெணை எதிர்பார்த்திருந்தான். அந்தப் பெண் அவனிடம் அந்த விடுதியின் உணவுப்பட்டியல் அட்டையைக் கொடுத்துவிட்டு, “ஹாய்,” என்றாள்.

“ஹாய், எனக்கு மிகவும் பசிக்கிறது. நீங்களே ஏதாவது நல்ல உணவினைப் பரிந்துரைக்க முடியுமா?”

“ஹ்ம். முதலில் ஒரு நல்ல ‘சூப்’ குடியுங்களேன்.”

“சரி”

“நீங்கள் ‘சியட்டே மேரிஸ்’ எனும் மெக்சிகன் கடல் உணவுக் கலவை ‘சூப்’ சாப்பிட்டிருக்கிறீர்களா.”

“இல்லை. என்ன அது.”

“சியட்டே என்றால் ஏழு. மேரிஸ் என்றால் கடல், அதாவது ஏழு கடல்கள் என்று அர்த்தம். ‘கால்டோ டி சியட்டே மேரிஸ்’ என்றும் ‘கால்டோ டி மேரிஸ்கோஸ்’ என்றும் கூட இதை அழைப்பார்கள். இதில் இறால், நண்டு, மீன், ‘ஆக்டோபஸ்’, கணவாய் ஆகியவற்றுடன் குடை மிளகாய் மற்றும் ‘கேரட்’ ஆகியவையும் இருக்கும்.”

“இதுவரை நான் ஆக்டோபஸ் உண்டதில்லை. அதையே தாருங்கள்.”

சூப் வந்ததும், “இதில் எது ஆக்டோபஸ்” எனக் கேட்டதற்கு அவள், “தெரியவில்லை. இதில் எங்காவது கலந்து கிடக்கும், குடிங்க”, என்றபடி நகர்ந்துவிட்டாள். சூப் நன்றாக இருந்தது. கொஞ்சம் பசியாறியதும் தெம்பு வந்து உணவுப்பட்டியலைத் தூக்கி வேறு என்ன சாப்பிடலாம் எனப் பார்த்த போது, அவன் குடித்த சூப்பின் விலை தென்பட்டது. 12.99 அமெரிக்க டாலர்கள். 13×41=533 இந்திய ரூபாய்கள். வயிறு நிறைந்துவிட்டது போல இருந்தது. மிச்சம் இருந்த சூப்பை முழுமையாகக் குடித்துவிட்டு, கல்லாவில் இருந்த அந்த பணிப்பெண்ணைக் கை காட்டி அழைத்தான்.

“சூப் உங்களுக்குப் பிடித்ததா.”

“அருமை”.

“நல்லது. அடுத்து என்ன சாப்பிடுகிறீர்கள்.”

“இல்லை. எதுவும் வேண்டாம். வயிறு நிறைந்துவிட்டது. ‘செக்’ கொடுத்து விடுங்கள்”.

“சரி.”

‘அமெரிக்காவில் ஒரு சேவைக்கு மொத்த விலையில் பத்து சதவிகிதம் வெகுமதி தருவது முறை. அங்கே பெரும்பாலும் உணவு விடுதிகளில் பணிவிடை செய்வோர் படிக்கும் இளைய சமுதாயமாக இருப்பார்கள். எனவே தயங்காமல் வெகுமதி தா’, என மோகனுக்குத் தான் தந்த ‘முதல் முறை அமெரிக்கா செல்பவர்களுக்கான பயணக் குறிப்புகள்’ என்ற தன் எழுதப்படாத கையேட்டில் ஒரு குறிப்பாக மோகனின் மேலதிகாரி சொல்லியிருந்தார்.

ஒரு பத்து டாலர் ‘பில்’ மற்றும் ஐந்து ஒரு டாலர் காசுகள் என ரசீதின் மேல் வைத்துவிட்டு அந்தப் பெண்ணிடம் “நன்றி”, எனச் சொல்லிவிட்டு மோகன் வெளியே வந்தான். அங்கிருந்து தன் தங்கும் விடுதிக்குச் செல்ல, சாலையைக் கடப்பது எப்படி என ஒரு வினாடி யோசித்துப் பிறகு ‘எதற்குச் சிக்கல்’ எனத் திரும்பவும் தான் வந்த வழியே சென்று, அதே போக்குவரத்து சமிஞ்சையில் நின்று, கம்பத்திலிருந்த பொத்தானை அழுத்தி, காத்திருந்து, எதிர்ப் பக்கம் இருக்கும் நடைமேடையை அடைந்து, பின் விடுதி நோக்கி நடந்தான்.

அறைக்குத் திரும்பிய போது சஞ்சய் கதவைத் திறந்துவிட்டுக் கலைந்த தூக்கத்தை எடுத்து மீண்டும் போர்த்திக் கொண்டு படுக்கையில் சாயும் முன், “இரவு வரை தூக்கத்தைக் கட்டுப்படுத்து. கஷ்டம் தான் ஆனால் தூங்கி விட வேண்டாம். பிறகு உன் ‘சிர்கேடியன் ரிதம்’ சமன் படாமல் உடலில் உள்ள உயிரியல் கடிகாரம் இயல்பாக மேலும் சில நாட்களாகிச் சிரமமாகி விடும். அறையின் சாவி அங்கே மேஜை மேல் இருக்கிறது. சாம்பார் சாதம் பொட்டலம் அதற்குப் பக்கத்திலேயே இருக்கிறது. ‘மைக்ரோவேவ் ஓவன்’ அதோ அங்கே இருக்கிறது. உனக்கு இந்த இடம் புதிது, எனவே வெளியே அதிக நேரம் அதிக தூரம் போய்விடாதே. பத்திரம்”, என்று கூறிவிட்டுத் தூங்கப் போய்விட்டான்.

ஆனால் மோகனால் தூங்காமல் இருக்க முடியவில்லை. விழிப்பொந்துகளின் கருந்துளைகளின் ஆழங்களுக்குள் மோகன் உறிஞ்சி இழுக்கப்பட்டான். புரண்டு படுத்தபோது சஞ்சய் படித்துக் கொண்டிருந்ததும் மணி மாலை 7:00 என்பதும் மங்கலாகத் தெரிந்தது. அந்த நேரத்திற்கு அந்த வெளிச்சம் அதிகமாக இருந்தது போலத் தெரிந்தது. அதற்கும் மேல் யோசிக்க முடியாமல் உறக்கம் அதன் அதளபாதாளச் சிறையில் அவனைத் தள்ளியது.

3.

விழித்தபோது இருட்டு மோகன் மீது படுத்துக் கொண்டிருந்தது. சஞ்சய் தூங்கிக் கொண்டிருந்தான். மணி இரவு 11:35. மோகனுக்கு மிகவும் பசித்தது. மேஜை மேலிருந்த சாவியை எடுத்து அறையைப் பூட்டி விட்டு வெளியே வந்தான். தெருவின் எல்லா கடைகளும் மூடியிருந்தது போலத் தெரிந்தது. நீண்ட தூர விமானப் பயணம் மற்றும் நேர மண்டல மாற்றம் கொடுத்த களைப்பினால் ஏற்பட்ட தீராத தூக்கக் கலக்கத்துடன் பசி மயக்கமும் சேர்ந்து கொள்ள எல்லாமே சற்று மங்கலாகத் தான் அவனுக்குத் தெரிந்தன. அவன் முதல் அமெரிக்க இரவு.

சற்று தூரம் நடந்ததுமே சாலையின் எதிர்புறம் ஒரு கட்டிடத்தின் முன்பு ஒரு சிறு கூட்டம் இருப்பதைக் கண்டான். மதியம் இந்த வழி வந்த போது அவன் அந்தக் கட்டிடத்தைக் கவனித்து இருக்கவில்லை. இப்போதும் அந்த கட்டிடத்தின் பெயர்ப் பலகையைக் கூட அவன் கவனிக்கவில்லை. ஒரு வேளை அது மதுக்கூடமாக இருக்கலாம். அப்படி இருந்தால் அங்கே நிச்சயம் ஏதாவது சாப்பிடக் கிடைக்கும் என யோசித்துக் கொண்டே, வாகனங்கள் இல்லாத இரவுச் சாலையை எந்த சிக்னலுக்கும் சென்று காத்திருக்காமல் அப்படியே நடந்து கடந்து சாலையை இரண்டாகப் பிரிக்கும் பகுப்பைத் தாண்டி எதிர்ப் பக்கம் சென்றதும் அப்படி சாலையைக் கடந்து வந்தது தவறு என நினைத்துக் கொண்டான். ஏதோ கனவில் நடப்பது போல இருந்தது அவனுக்கு.

அந்த மதுக்கூடத்தின் வாசலில் சிலர் புகைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த ஒருவர் மோகனிடம் வந்து, “நுழைவுக் கட்டணம் ஐந்து டாலர்கள்”, என்றார். அவர் கேட்ட தொகையைக் கொடுத்தான். அந்த ஆள் ஒரு மெக்சிகன் போலத் தெரிந்தார். அவன் இடது கை மணிக்கட்டில் ஒரு பட்டையை அணிவித்து விட்டு, “நீங்கள் உள்ளே செல்லலாம்”, என்றார்.

நுழைவாயில் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் இசை அதிர்ந்தது. “டட்டட டட் டட், டட்டட டட் டட், டட்டட டட் டட்”, என்ற தாளத்தில் அந்தப் பாடல் சொக்க வைத்துச் சுண்டி இழுத்தது. கூட்டமாக இருந்தது. மேஜைகள் எதுவும் தென்படவில்லை எல்லோரும் நின்று கொண்டே குடித்துக் கொண்டிருந்தார்கள். இவன் நேராக மதுபானம் வினியோகிப்பவரின் இடத்திற்குச் சென்றதும் அங்கிருந்த அந்த நடுத்தர வயது மெக்சிகன் பெண்மணி இவனைப் பார்த்து, “‘ஹோலா’”, என்றார். இவன் பதிலுக்கு “ஹை, உணவுப்பட்டியல் கிடைக்குமா”, என்றான். ‘’ஹோலா’ என்றால் ‘ஹலோ’ போல’, என நினைத்துக் கொண்டான்.

அந்தப் பெண் அவனிடம் கொடுத்த பட்டியலில் உணவு என்ற வஸ்துவே இல்லை, எல்லாம் மது வகைகளே. அவன் எண்ணவோட்டத்தை உணர்ந்தது போல அந்தப் பெண் அவனிடம் “சிறு தீனி வகைகள் மட்டுமே இங்கே கிடைக்கும், மற்றபடி மதுவும் மாதுவும் தான் இங்கே. சிறு தீனியிலும் இப்போது வறுத்த கடலை மட்டுமே இருக்கிறது. என்ன மது வேண்டும்”, என்றார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த குரல் கேட்டது, “கனவான்களே, சீமாட்டிகளே இப்போது ஆடிக் கொண்டிருப்பது …”. அந்தக் குரல் சொன்ன பெயர் என்ன என்று கவனிப்பதற்குள் இசை இன்னும் வீரியம் பெற்று “டட்டட டட் டட், டட்டட டட் டட், டட்டட டட் டட்”, என்றது.

மோகனின் பார்வை எதிர்த் திசைக்குத் திரும்பியது. அங்கே இருந்த மேடையின் நடுவிலிருந்த அந்தக் கம்பத்தின் உச்சியிலிருந்து ஒரு பெண் நிர்வாணமாக, நின்ற நிலையில் அப்படியே வழுக்கியபடியே கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். மோகனுக்கு ஒரு கணம் இதயத் துடிப்பு நின்றது போல இருந்து, பின் வேகமாக அடிக்கத் தொடங்கியது –  “டட்டட டட் டட், டட்டட டட் டட், டட்டட டட் டட்”. அப்போது தான் அவன் புத்திக்குத் தான் வந்திருக்கும் இடம் ஒரு ஆடை அவிழ்ப்பு நடன சங்கம் எனப் புரிந்தது.

‘முதல் முறை அமெரிக்கா செல்பவர்களுக்கான பயணக் குறிப்புகள்’ என்ற மோகனின் மேலதிகாரியின் எழுதப்படாத கையேட்டில், ஆண்களுக்கான மறைத்து வைக்கப்பட்ட குறிப்புகளில் ஒன்றாக அந்தக் குறிப்பு இருந்தது அவனுக்கு நினைவிற்கு வந்தது. அந்தக் குறிப்பில் இப்படி இருந்தது – ‘தங்கும் விடுதியின் அருகில் ஒரு ஆடை அவிழ்ப்பு நடன சங்கம் இருக்கிறது. சும்மா ஒரு முறை போய் வேடிக்கை பார்த்துவிட்டு வரலாம். நுழைவுக் கட்டணம் மற்றும் இரண்டு போத்தல் ‘பியர்’ ஆகியவற்றைத் தவிர வேறெதற்கும் பணம் செலவழியக் கூடாது. அப்படிச் செலவழியும் பணமும் இருபது டாலர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. திரும்பி வந்ததும் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் கூடாது’.

மோகன் அந்த மதுபானம் வினியோகிக்கும் பெண்மணியிடம் திரும்பி, “இங்கே சற்று வலுவான பியர் எது”, எனக் கேட்டான்.

“‘கொரோனா எக்ஸ்ட்ரா’ – மெக்சிகன் பியர். 330 மில்லியின் விலை 3.99 டாலர்கள்’”.

“கொடுங்கள், அப்படியே கொஞ்சம் வறுத்த கடலையும்”, என்றபடியே ஒரு ஐந்து டாலர் தாளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு, “ஒரு டாலர் உங்களுக்கு”, என்றான்.

‘ஏண்டர்சன் இந்த இடத்தை தான் சொன்னாரோ. அவருக்குத் தெரிந்த பெண்கள் என்று ஏதோ இரண்டு பெயர்களைச் சொன்னாரே. ம்ஹூம். எதுவும் ஞாபகம் வரவில்லை.’

அரை பாட்டில் பியர் வந்தது. அந்த சின்ன பாட்டிலின் கழுத்து நீண்டிருந்தது. மற்ற பியர் பாட்டில்களுடன் ஒப்பிடுகையில் அது ஒல்லியாக இருந்தது. அதன் உடலில் ‘லா செர்வேசா மாஸ் ஃபினா’ என எழுதியிருந்தது. அந்த எழுத்துக்களின் மேல் ‘லோகோ’ போல ஒரு கிரீடம் வரையப்பட்டிருந்தது. மதுபானம் வினியோகிக்கும் பெண்மணியிடம் “இதற்கு என்ன அர்த்தம்”, எனக் கேட்டான். அவர், “சிறந்த பியர்”, என்றார். ‘எனில், ‘செர்வேசா’ என்றால் பியர் என அர்த்தம் போல’, என நினைத்தபடி, அந்த பாட்டிலின் அழகை சில வினாடிகள் ரசித்துவிட்டு, அந்த பியரை அப்படியே சில மடக்குகள் குடித்தான். அது தொண்டையிலிருந்து இதயம், வயிறு என எல்லா இடமும் சென்று சில்லிட வைத்தது. அருமையான சுவையாகத் தெரிந்தது. இரண்டு மூன்று நிமிடங்களில் அந்த பாட்டிலைக் குடித்து முடித்து விட்டு, இன்னொன்று வாங்கிக் கொண்டு அந்த இடத்தை அந்த சுற்றிப் பார்க்கப் போனான்.

ஒரு மூலையில் நின்றிருந்த அந்த ‘டி.ஜே.’ இளைஞனிடம் சென்று, “இது என்ன பாடல்”, என மோகன் கேட்டான். “‘டேடி யேன்க்கி’ உடைய ‘இம்பேக்டோ’”, என்றான் அந்த இளைஞன்.

ஆண்கள், பெண்கள் எனக் கூட்டம் நெரிசலாக இருந்தது. எந்தப் பெண்ணும் தனியாக இல்லை. ஒரு பெண்ணுடன் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ நிச்சயம் இருந்தார்கள். கூடத்தின் பின் பகுதியில் ஆண்கள் சிலர் பியர் குடித்தபடியே ‘பூல் டேபிள்’ விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விளையாடுவது ‘பூல்’, ‘பில்லியர்ட்ஸ், ‘ஸ்னூக்கர்’ – இதில் எது என யோசித்தான். கொஞ்சம் கூர்ந்து பார்த்த போது அது பூல் விளையாட்டு தான் எனப் புரிந்தது.

மீண்டும் அந்த மதுபானம் வினியோகிக்கும் பெண்மணியிடம் திரும்பிச் சென்று இன்னொரு கொரோனா எக்ஸ்ட்ரா வாங்கினான். அங்கேயே அருகிலிருந்த சுழலும் நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டான். இப்போது வேறு ஒரு பெண் ஆட வந்தாள். பாடலுக்கு ஏற்றவாறு அருமையாக நடனம் ஆடினாள். ஏற்கனவே மேலும் கீழும் என இரண்டே உடைகள் தான் அவள் அணிந்திருந்தாள். சற்று நேரத்தில் மேலாடையை மட்டும் மெதுவாக இசையின் லயத்திற்கு ஏற்ப அசைந்து ஆடியபடியே கழற்றிக் கீழே எறிந்துவிட்டுத் தொடர்ந்து ஆடினாள். அவள் தன் இடது முலையின் காம்பினைச் சுற்றி சிவப்பு நிற விரிந்த ரோஜாப் பூ ஒன்றினைப் பச்சை குத்தியிருந்தாள். வலது முலைக் காம்பில் ஒரு வளையம் மாட்டியிருந்தாள்.

அவள் முலைக் காம்புகள் இரண்டும் கூடத்தின் ஏ.சி. குளிருக்கு விறைத்து எழுந்து நின்றிருந்தன. தன் முலைகளை இரு கைகளால் தூக்கி கூட்டத்திற்குக் காட்டினாள். கூட்டம் ஆர்ப்பரித்தது. திரும்பி தன் முதுகைச் சற்று முன்னே வளைத்து இடுப்பைத் தூக்கிக் காட்டி முகத்தைத் திருப்பிக் கூட்டத்தைக் கிறக்கத்துடன் பார்த்தாள். கூட்டம் விசிலடித்தது. அந்தக் கூட்டத்தில் ஆண்களும் இருந்தனர் பெண்களும் இருந்தனர். அவள் முகத்திலிருந்த அழகும் கவர்ச்சியும் அவள் உடலின் வேறு எந்தப் பகுதியையும் விட மோகம் தரக் கூடியதாக இருந்தது. கூட்டத்திலிருந்து எறியப்பட்ட ஒரு டாலர் தாள்கள் அவள் மீது பொழிந்தன. ஆட்டத்தை முடித்துக் கொண்டு அந்த பெண் கிளம்பியபோது வேடிக்கை பார்த்த கூட்டத்தில் முன்வரிசையிலிருந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அவளுக்கு டாலர்களைத் தரையிலிருந்து எடுத்துக் கொடுத்து உதவினார்கள். மோகன் இன்னொரு பியர் வாங்கினான்.

அதைக் குடிக்க ஆரம்பித்ததுமே சிறுநீர் கழிக்க வேண்டும் என அவனுக்குத் தோன்றியது. பியர் பாட்டிலை அந்த மேஜையிலேயே வைத்துவிட்டு எழுந்து ஆண்களின் கழிவறைக்குச் சென்றான். திரும்பி வந்து பார்த்தால் அவன் அமர்ந்திருந்த இருக்கையிலும் அதற்கு அருகிலிருந்த இருக்கையிலும் இரண்டு மெக்சிகர்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒரு மெக்சிகன் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தான். அவன் அருகிலிருந்தவன் தலையாட்டிக் கொண்டே அவனைச் சமாதானம் செய்ய முயன்றான். இருவரும் கொரோனா எக்ஸ்ட்ரா குடித்துக் கொண்டிருந்தார்கள். மோகனின் கால்வாசி குடிக்கப்பட்ட பியர் பாட்டில் அவர்கள் இருவருக்கும் நடுவில் மேஜை மேல் இருந்தது.

அவர்கள் அருகில் சென்று தன் பியர் பாட்டிலை நோக்கிக் கைநீட்டி, “அது என்னுடையது, நான் எடுத்துக் கொள்ளலாமா”, என்றான் மோகன். அந்தக் கோபக்கார மெக்சிகன் இவனைப் பார்த்து, “ஆமாம் அதையும் எடுத்துக் கொள், இதோ இதையும் எடுத்துக் கொள்”, எனக் கோபமாக் கூறி அவன் இரண்டு கைகளையும் அவன் ஆண்குறி இருந்த இடத்தை நோக்கிக் காட்டினான். மோகனுக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் வியப்பாகவும் இருந்தது அப்படியே அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிந்தது. அருகிலிருந்த அவன் நண்பன் அந்த கோபக்கார மெக்சிகனைப் பார்த்து, “ஏய், சும்மா இரு, அவர் விட்டுச் சென்ற அவர் பியர் பாட்டிலைத் தானே கேட்கிறார்”, எனச் சொல்லிவிட்டு, அந்த பாட்டிலை எடுத்து மோகன் கையில் கொடுத்துவிட்டு, “சாரி”, என்றான். மோகன், “நன்றி”, எனச் சொல்லிவிட்டு வேறு பக்கம் நகர்ந்தான். அவனுக்கு வியர்ப்பது போல இருந்தது.

சற்று நேரம் கழித்து இன்னொரு பியர் வாங்கினான். அப்போது அவன் அருகில் ஒரு பெண் வந்து, “ஹாய், எப்படி இருக்கிறீர்கள்”, எனக் கேட்டாள். மெக்சிகன் எனப் பார்த்ததுமே தெரிந்தது. பொன் நிறத்தில் அழகாக இருந்தாள். “ஹாய், நான் நலம் தான்”, என்றான் அவன். “வெறுமனே நலமாக மட்டும் இருந்து என்ன பலன். உங்கள் மடியின் மீது நான் நடனமாடட்டுமா. அதோ அங்கே ஒரு அறை காலியாக இருக்கிறது”, என்றாள். மோகன் அவளைப் பார்த்து, “இல்லை. வேண்டாம்”, என மறுத்துவிட்டு நகரப் பார்த்தான். அந்தப் பெண் அவனை விடுவதாக இல்லை. “சரி, எனக்கு ஒரு பியர் வாங்கிக் கொடுங்கள்”, எனக் கேட்டாள்.

 

ஒரு பியர் தானே என அவளுக்கு ஒரு பியர் வாங்கிக் கொடுத்தான். அவள் அவனை அவ்வப்போது பார்த்துப் புன்னகைத்தபடியே பியரைக் குடித்துவிட்டு  ‘நன்றி’ சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாள். அவன் இன்னொரு பியர் வாங்கினான். இப்போது வேறு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அங்கே ஒலித்த எல்லா பாடல்களின் இசையும் தாளமும் ஒரே  மாதிரித் தான் இருந்தன. அல்லது ஒரே பாடலைத் தான் திரும்பத் திரும்ப ஒலிக்க விடுகிறார்களோ என்னவோ. “டட்டட டட் டட், டட்டட டட் டட், டட்டட டட் டட்”.

அப்போது ஒரு ஆண் அவனை நோக்கிப் புன்னகைத்தபடியே வந்தான். அவன் இந்தியன் என்பது பார்த்ததுமே தெரிந்தது. வந்தவன் இவனைப் பார்த்து, “ஹாய். நீங்கள் தானே மோகன். நான் உங்கள் நண்பர் சஞ்சய் அவர்களின் நண்பன். இங்கே தான் ஒரு பல்பொருள் அங்காடியில் மேலாளராக இருக்கிறேன். என் பெயர் தீபக். மதியம் நீங்கள் என்னிடம் தான் வழி கேட்டீர்கள். நீங்கள் இங்கே வந்து நிறைய நேரம் ஆகிறது போல”, என்றான்.

“ஹாய், ஓஹ், அப்படியா, இப்போது மணி என்ன”.

“நள்ளிரவு ஒன்றரைக்கு மேல் ஆகிறது. சீக்கிரம் கிளம்பி விடுங்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.”

“என்னை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்.”

“இங்கே இப்போது நாம் இருவர் மட்டுமே இந்தியர்கள். சஞ்சய், அறையில் உங்களைக் காணவில்லை என்றதும் பதற்றத்துடன் என்னைத் தொலைபேசியில் அழைத்து உங்களைத் தேடச் சொன்னான். அவனைத் தான் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டீர்களே”, எனப் புன்னகைத்தான்.

‘அடக் கடவுளே’.

“மீண்டும் சந்திப்போம்”, எனச் சொல்லியபடியே தன் கையிலிருந்த பியரைப் பருகிவிட்டு நகர்ந்தான் அவன்.

‘இங்கே வந்து இரண்டு மனி நேரம் ஆகிறதா.’ கணக்கு பார்த்ததில் ஏறக்குறைய அறுபது டாலர்கள் செலவழித்திருப்பான் போலத் தெரிந்தது. அவன் ஒரு நாள் அமெரிக்கக் கூலி காலி. அடுத்த சில நிமிடங்களில் அவன் அந்த இடத்தை விட்டு வெளியேறி, தன் விடுதிக்குத் திரும்பி, சப்தம் செய்யாமல் கதவைத் திறந்து, இரவு விளக்கின் ஒளியிலேயே உடை மாற்றிக் கொண்டு, போர்த்திக் கொண்டு படுத்தான். சஞ்சய் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். படுத்ததுமே தூங்கி விட்டான் மோகன்.

 

4.

 

அடுத்த நாள் காலை மோகன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்ததுமே சஞ்சய் அவனை முறைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. ‘தூங்குபவனை அவன் தூங்கி எழும் வரை முறைத்துக் கொண்டு காத்திருப்பதற்கு எவ்வளவு கோபம் இருக்க வேண்டும்’, என மோகன் நினைத்தான்.

“காலை வணக்கம் சஞ்சய்”.

“உனக்கு அறிவு என்று ஒன்று உன் உடலில் எங்காவது இருக்கிறதா.”

மோகன் திகைத்துப் போனான். சஞ்சய் தன் தாக்குதலைத் தொடர்ந்தான்.

“ஒரு அந்நிய நிலத்தில் வந்து, முதல் நாள் இரவே இப்படித் தான் திரிவாயா. அது பாதுகாப்பானதா என்று கூட யோசிக்கமாட்டாயா. இங்கே ‘விர்ஜினியா’ பல்கலைக்கழகத்தில் இரண்டு வாரங்கள் முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி நீ கேள்விப்படவில்லையா. அதில் ஒரு மாணவன் சக மாணவர்கள் 32 பேரை இரண்டு தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்று 17 பேரைக் காயப்படுத்தி இறுதியாகத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு செத்தான். இதில் ஜன்னலை உடைத்து வெளியேறித் தப்பிக்க முயன்ற மேலும் 6 பேரும் காயமுற்றார்கள். அவ்வளவு தூரம் போவானேன், இதோ இங்கே இதே சாலையில் நேற்று முன் தினம் நம் விடுதிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் துப்பாக்கியுடன் திரிந்த ஒரு இளைஞனைக் காவல்துறையினர் கைது  செய்தனர்.”

‘தெரியாமல் ஒரு ஆடை அவிழ்ப்புச் சங்கத்திற்குள் போய் இரவுப் பசிக்குக் குடித்துவிட்டு மட்டும் வந்தேன்’, என ஒரு ஆண் சொன்னால் அதை இன்னொரு ஆண் நம்புவானா என்ன. யார் தான் நம்புவார்கள்.

“நீ அமெரிக்கா வந்த நோக்கமும், நான் அமெரிக்கா வந்த நோக்கமும், வேறு வேறாகத் தெரிகிறது. இந்த ப்ராஜெக்டில் எங்கள் அணிக்கான தேவை அதாவது குறிப்பாக என் தேவை இந்த மாதத்துடன் முடிகிறது. எனக்கு இப்போதைக்கு வேறு ப்ராஜெக்ட் இல்லை. மேஜையை வெறுமனே அமர்ந்து தேய்க்க என்னால் முடியாது. அது ஆபத்தானதும் கூட. வேறு ஒரு நிறுவனத்திலோ ஏன் இதே நிறுவனத்திலோ கூட வேறு வேலை தேட வேண்டுமெனில் நான் எந்த கவனச் சிதறல்களும் இல்லாமல் படிக்க வேண்டும். இப்போதே நீ வேறு அறைக்கு மாறிச் சென்று விடு”.

மோகன் எதுவும் பதில் சொல்லாமல் எழுந்து போய் தன் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கீழே சென்று விடுதியின் வரவேற்பறைக்கு அருகில் வைக்கப்பட்ட இலவசக் காலை உணவில் மிச்சமிருந்த சற்றே புளிப்பான ‘ஆரஞ்சு’ பழச்சாறு மற்றும் இனிப்பு ‘டோனட்’ ஆகியவற்றைச் சாப்பிட்டு முடித்த போது காலை 11:30 மணி ஆகியிருந்தது. சீக்கிரம் வந்திருந்தால் என்னவெல்லாம் கிடைத்திருக்கும் என அறிய அந்த உணவு பரிமாறப்படும் மேஜையை நோட்டம் விட்டான். அவர்கள் வைத்திருந்தது ‘காண்டினென்டல்’ வகை காலை உணவுகள் – ‘சீரியல்’, ‘க்ரனோலா’, பழங்கள், பால், ரொட்டி, வெண்ணெய், ‘காஃபி’, தேநீர், முட்டை, ‘சீஸ்’, மாமிசம், கஞ்சி என. ஆனால் இப்போது அவை எல்லாம் தீர்ந்து போய் பெயர்ப் பலகைகள் மட்டும் மிச்சமிருந்தன.

அப்போது சஞ்சய் அங்கே வந்தான். மோகன் அவனை வெறித்துப் பார்த்தான். சஞ்சய், வரவேற்பறை மேஜையில் இருந்த மணியை அழுத்தினான். அந்த ஓசை கேட்டதும் ஒரு இந்தியர் வெளியே வந்து எட்டிப் பார்த்தார். “‘ஹாய், இவர் தான் நான் சொன்ன என் நண்பர். பெயர் மோகன். மோகன், இவர் தான் இந்த விடுதியின் மேலாளர். பெயர் அபிஜீத்.” அபிஜீத், சட்டெனக் கவனத்தைப் பெறும் தன் வழுக்கையான முன் மண்டை மற்றும் தொப்பையுடன், முன்பகுதி மடித்து விடப்பட்டிருந்த முழுக்கைச் சட்டையிலிருந்த தன் கைகளை நீட்டி, “வருக,” என்றார். பின் தன் இடக்கையை மட்டும் மடக்கி உள்ளிழுத்துக் கொண்டு வலக்கையை அப்படியே நீட்டியபடியே இருந்தார். மோகனும் அபிஜீத்தும் ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டார்கள். அபிஜீத் தன் மேல் சட்டையைக் கீழ் சட்டைக்குள் விட்டிருக்கவில்லை. அவரைப் பார்த்தால் ஒரு விடுதியின் மேலாளார் போலவே தோன்றவில்லை.

“ஏற்கனவே உங்களிடம் பேசியபடி நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் தங்கிக் கொள்வதாக இருந்தோம். ஆனால் இப்போது எங்கள் முடிவை மாற்றித் தனித்தனியாகத் தங்கிக் கொள்வதாக இருக்கிறோம். ஏற்கனவே பேசிய விலையை அதிகப்படுத்திவிட வேண்டாம்”.

“சரி. உங்கள் நண்பருக்கு முதல் தளத்திலேயே உங்கள் அறையை விட்டு இரண்டு அறைகள் தள்ளி ஒரு அறை தயாராக, காலியாக, இருக்கிறது. அவர் அதையே எடுத்துக் கொள்ளலாம்.”

தன் ‘பாஸ்போர்ட்டைக்’ கொணர்ந்து அவரிடம் காட்டி ஒரு படிவத்தில் கையெழுத்திட்டு, தன் புதிய அறையின் சாவியை வாங்கிக் கொண்டு, அதனுடன் மறக்காமல் ‘வைஃபை’ கடவுச்சொல்லையும் வாங்கிக் கொண்டு தன் பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு போனான் மோகன். கதவு தட்டும் ஓசை கேட்டுப் போய் பார்த்தால் சஞ்சய் நின்று கொண்டிருந்தான்.

“தீபக்கின் அங்காடிக்குச் செல்கிறேன். வருகிறாயா. மதிய உணவு வரை ‘கிரிக்கெட்’ விளையாடலாம்”, என்றான் சஞ்சய்.

“இல்லை.”

‘அமெரிக்கா வந்து கிரிக்கெட் விளையாடப் போகிறானா. இங்கே எங்கே போய் விளையாடுவான் இவன்?’.

“அட சும்மா கிளம்பி வா. அங்கே உனக்குக் குடிநீர், பால் என ஏதாவது தேவை என்றாலும் வாங்கிக் கொள்ளலாம்”.

அவனுடன் எங்கேயும் செல்ல மோகனுக்கு விருப்பமில்லை. சற்று வெறுப்பாகக் கூட இருந்தது. ‘அடுத்த சில நாட்கள் இவன் தான் எனக்கு அலுவலகமாகட்டும் தங்கும் இடமாகட்டும் வழித்துணையாக இருக்கப் போகிறான். அமெரிக்காவில் இவனை விட்டால் வேறு யாரையும் இப்போதைக்கு எனக்குத் தெரியாது’, என யோசித்த போதே மோகனுக்கு அவன் சித்தப்பா ‘என் தோழி ஒருவர் ‘சேன்ட்டா க்ளாரா’-வில் வசிக்கிறார். ஒரு நெருக்கடி நிலை என்றால் அவரை அழைத்துப் பேசு. அமெரிக்கா சென்றவுடன் முதலில் அவரிடம் தொலைபேசியில் அழைத்து உன்னை அறிமுகப்படுத்திக் கொள். இதோ, அவர் தொடர்பு எண்ணை வைத்துக் கொள்’, எனச் சொன்னது நினைவிற்கு வந்தது.

“சரி, வருகிறேன்”, என மோகன் கிளம்பினான். எல் கெமினோ ரியல் பாதையில் நேற்று அவன் சென்ற திசைக்கு எதிர்த் திசையில் சற்று தூரம் நடந்து சாலையின் எதிர்ப் பக்கம் போனதும், அங்கே இருந்த ‘ரெட்வுட் மினி மார்க்கெட்’ என்ற கட்டடம், காலியான வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்குப் பின்னே சற்று உள்வாங்கி ஒற்றை தரை தளத்தில் இருந்தது.

உள்ளே தீபக் மட்டும் தான் இருந்தான். இருவரையும் வரவேற்றான். மோகனைப் பார்த்து “நேற்றிரவு, எப்படிக் கழிந்தது”, எனக் கேட்டான்.

மோகனுக்கு அந்தக் கேள்வி எரிச்சலாக இருந்தது. அவன் அதற்கு பதில் சொல்லாமல் தனக்கு ஒரு சிம் அட்டை மற்றும் குடிநீர் வேண்டும் எனக் கேட்டான்.

“கிரிக்கெட் விளையாடிய பிறகு மறக்காமல் தருகிறேன்”, என்றபடியே தன் கையில் ஒரு கிரிக்கெட் மட்டையையும் பந்தையும் எடுத்துக் கொண்டு கடைக்கு முன் இருந்த காலியான வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குப் போனான் தீபக்.

அவர்களுடன் விருப்பமில்லாமல் ஒரு மணி நேரம் கிரிக்கெட் விளையாடினான் மோகன். ‘எப்போது ஆட்டத்தை முடித்துக் கொண்டு மதிய உணவிற்குப் போகலாம்’ என அவன் யோசிக்கத் தொடங்கிய போதே, சஞ்சய், “சரி கிளம்பலாம்”, என்றதும் சிம் அட்டை மற்றும் ‘க்ரிஸ்டல் ஸ்ப்ரிங்ஸ்’ என்ற நிறுவனத்தின் ஊற்று நீர் வாங்கிக் கொண்டு மோகன் புறப்பட்டான். விடுதி வந்ததும், சிறிது நேரத்தில் தன் சித்தப்பாவின் அமெரிக்கத் தோழியைச் செல்பேசியில் அழைத்தான்.

பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு அவர், “ரெட்வுட் சிட்டியிலா இருக்கிறீர்கள்? அப்படியெனில் உங்கள் ஊருக்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காதே. ஏதோ வளர்ந்த ஒரு கிராமத்தில் இருப்பதைப் போலத் தான் இருக்கும், இல்லையா”, என்றார். மோகன் சிரித்துச் சமாளித்தான். “ரெட்வுட் சிட்டியில் இருந்து சேன்ட்டா க்ளாரா வர முப்பது மைல் தொலைவு தான், அரை மணி நேரப் பயணம் தான். ஒரு நாள் இங்கே வாருங்கள்”, என்றார் அவர்.

மதிய உணவு சாப்பிடப் போகலாம் என அவன் வெளியே வந்தபோது, சஞ்சய் தன் அறையைப் பூட்டியபடி இருந்தான். மோகனைப் பார்த்து, “மதிய உணவிற்குப் போகலாமா”, என்றான்.

‘எங்கே வேண்டுமென்றாலும் நீ தனியாகப் போ, உன்னுடன் வர எனக்கு விருப்பமில்லை’, என்று தான் மோகனுக்குச் சொல்லத் தோன்றியது. ஆனால் “ஏன், சாம்பார் சாதம் தீர்ந்துவிட்டதா”, எனக் கேட்டான். அவன் மேலதிகாரி அவனிடம், ‘இந்த உடனடி உணவுப் பொட்டலங்கள் எதையும் வாங்காதே. முதல் முறை அமெரிக்கா சென்ற போது நான் அப்படி வாங்கிக் கொண்டு போய் அதை அப்படியே தூக்கி எறிந்துவிட்டு வந்தேன். அமெரிக்கா சென்று அமெரிக்க உணவுகளைத் தின்று இன்னும் கொஞ்சம் கொழுத்துவிட்டு வா’, எனச் சொல்லியது அவனுக்கு  நினைவிற்கு வந்தது.

“மதியம் மட்டும் நான் வெளியே ஏதாவது விடுதியில் தான் உணவு அருந்துவேன். நானே வந்து உன்னை அழைக்கலாம் என்று தான் இருந்தேன். அதற்குள் நீயே வந்துவிட்டாய்”.

“இல்லை சஞ்சய் நீ போ. நான் வேறு பக்கம் போகிறேன்.”

சஞ்சய் “சரி”, என்றான்.

இருவரும் ஒன்றாக அந்த விடுதியின் முதல் தளத்திலிருந்து கீழிறங்கினார்கள்.

விடுதி வாயிலில், சஞ்சய், அவர்கள் இன்று சென்று வந்த அதே பாதையில் திரும்பி நடந்தான். மோகன் அவன் நேற்று சென்ற அதே பாதையில் சஞ்சய் சென்ற பாதைக்கு எதிர்த் திசையில் நடந்தான். மோகனின் மனதில் சஞ்சய் மேல் இருந்த கோபம் விலகுவதாக இல்லை. அந்த உணர்வு கொடுத்த வீரியத்திலேயே நடந்தான். ஆனால் அவன் உள்மனம் வேறு மாதிரி சிந்திக்கத் தொடங்கியது.

‘ஒரு நிலத்தின் மீது மோகம் கொண்டோருக்கு அது தன்னுடன் நலம் வாழ்வதற்கு வகுத்துக் கொடுக்கும் ஒவ்வொரு வழியும் ஒரு ராஜ வீதி தான். என் கனவு என் தேவை என்பது போல சஞ்சய்க்கு அவன் கனவு அவன் தேவை. எந்த ஒரு நிலமும் எல்லோருக்கும் ஒரு தகவலைத் தன்னிடம் வைத்திருக்கிறது. அது நல்ல செய்தியா இல்லை கெட்ட செய்தியா என்பது அவரவர் பார்வை, அவரவர் அனுபவம். எனக்கு இப்போது சுற்றுலாவும் கேளிக்கையும் பிரதானம் என்பது போல சஞ்ய்க்கு வேலை தேடுவது தான் இப்போது பிரதானம்’, எனச் சிந்தித்தபடியே நடந்த மோகன் சட்டென்று நின்று அப்படியே திரும்பி எதிர்த் திசையில், சஞ்சய் சென்ற தடத்தில் நடந்தான்.

சற்று தொலைவில் சஞ்சய் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. மோகன் அவன் பின்னே சென்றான். சஞ்சய் நிதானமாக நடந்து போய் ஒரு மெக்சிகன் உணவு விடுதிக்குள் நுழைந்து ஒரு மேஜைக்குப் போய் அமர்ந்தான். ‘ஓஹ் இந்தப் பக்கமும் ஒரு மெக்சிகன் உணவு விடுதி இருக்கிறதா’, என யோசித்தபடியே அடுத்த சில நிமிடங்களில் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்த மோகன், சஞ்சய் இருந்த மேஜைக்குச் சென்று அவன் எதிரில் அமர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“வேறு பக்கம் சென்றாயே”.

“உன் பக்கம் வரலாம் என்று தோன்றியது”.

“ம்ஹ்ம். மெக்சிகன் உணவுகள் இந்திய உணவுகளை ஒத்து இருக்கும். இவர்களுக்கும் அரிசி தான் பிரதான உணவு. ‘ரோட்டியை’, ‘டார்ட்டிய்யா’ எனக் கோதுமை அல்லாமல் சோளத்தில் செய்வார்கள். சட்னி இங்கே ‘சல்சா’. அப்பளம் இங்கே ‘டோட்டோபோ’. மசாலா அப்பளம் இங்கே ‘டோஸ்டடோஸ்’. ‘ரஜ்மா’ இங்கே வேக வைத்த ‘கிட்னி பீன்ஸ்’. சைவம் கிடைக்கும். வேறு என்ன வேண்டும். அருகே ஒரு மெக்சிகன் பல்பொருள் அங்காடி இருக்கிறது. இங்கிருக்கும் இந்தியர்கள் எல்லோரும் அங்கே தான் சமையல் பொருட்கள் வாங்குவார்கள்”.

விடுதியின் பணிப்பெண் வந்ததும், “எனக்கு ஒரு கோக்”, என்றான் சஞ்சய்.

‘எனக்கும் ஒரு கோக்’, எனச் சொல்ல வந்த மோகன் வாயிலிருந்து, “எனக்கு ஒரு கொரோனா எக்ஸ்ட்ரா”, என வந்தது.

 

-நந்தாகுமாரன்.

Previous article“பத்து அமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள்”
Next articleநான் மீட்டுத் தருவேன்
Avatar
கோவையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர் பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி ‘மைனஸ் ஒன்’, உயிர்மை வெளியீடாக டிசம்பர் 2012-இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபிப்ரவரி 2019-இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020-இல் வெளியானது. இவர் தற்போது, 'ரோம் செல்லும் சாலை' எனும் பயணப் புனைவுப் புதினம் ஒன்றினை எழுதி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.