லா மாஞ்சாவின் குதிரை வீரன்-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்


1

மறுமலர்ச்சிக்காலத்தின் முடிவிற்கும் நவீன காலத்தின் துவக்கத்திற்கும் இடையே, பதினேழாம் நூற்றாண்டு ஸ்பெய்னில், லா மாஞ்சா பகுதியைச் சேர்ந்த, இன்னதுதானென்று ஆசிரியரால் பெயர் குறிப்பிடப்படாத கிராமத்திலிருந்து, மேலும் அவரால் உறுதிப்படுத்த முடியாத குவிக்ஸதா அல்லது குவெக்ஸதா அல்லது குவெக்ஸனா எனும் பெயர்களால் அழைக்கப்பட்ட, அலோன்சோ கிஹோனா எனும் ஐம்பது வயது ஒல்லிக் குச்சி மனிதன், சில ஏக்கர் நஞ்சை நிலங்களை விற்று வாங்கிய வீரசாகச (Chivalric) நாவல்களை இரவும் பகலுமாக வாசித்து மூளை குழம்பிப் போய், `உலகின் வேறெந்த பைத்தியக்காரனுக்கும் எழாத ஓர் எண்ணம் எழ`, அந்த நாவல்களில் வானுக்கும் மண்ணுக்கும் இடையே பறக்கும், துயருற்றவர்களைக் காக்கும், பூதங்களைத் தாக்கும், சிறைப்படும், இங்கிலாந்தைச் சேர்ந்த, வசியக்காரர்களால் காக்கையாக மாற்றப்பட்ட ஆர்தர் அரசனின் வழித்தோன்றல்களான வீரத்திருமகன்களில் (Knight) ஒருவனாகத் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பி, பழைய பொருட்களின் மத்தியில் தேடி எடுத்த கவசத்தோடும், ஈட்டியோடும், துண்டுகளைச் சேர்த்து ஒட்டிய தலைக்கவசத்தோடும், எஞ்சியிருக்கும் தனது நிலத்தையும், இரண்டு பணியாட்களையும், சகோதரி மகளையும், நண்பர்களான கிராமத்துப் பாதிரியையும், நாவிதரையும் துறந்து, வெக்கை மிகுந்த ஜூலை மாத வெள்ளிக்கிழமையில், ஒருவரும் அறியாத வகையில் தனது நோஞ்சான் குதிரையில் சாகசங்களைத் தேடி வெளியேறுகிறான். அலெக்ஸாண்டரின் குதிரையான பியுசெபலஸையும், எல் சித்தின் பபெய்காவையும் இணை வைக்க முடியாதெனக் கருதிய அவனது நோஞ்சான் குதிரையின் பெயரை ரோஸினெந்தே என மாற்றுவதற்கு நான்கு நாட்களை எடுத்துக் கொண்டான். எட்டு நாட்கள் யோசித்து தனது பெயரை டான் கிஹோத்தே என மாற்றிக் கொண்டான். தனது புதிய சுயத்திற்குப் பழைய பெயர்கள் பொருந்தாது என்பதோடு, தன்னைச் சார்ந்த அனைத்துமே தனது முடிவால் ஒரு புதிய துவக்கத்திற்குத் தயாராகிவிட்டதாகக் கருதும் கிஹோத்தே, அழியாப் பெருமையையும் நீடித்த புகழையும் தேடி தனது முதல் சாகசத்தை புவர்தோ லபிஸில் அல்லது காற்றாலை சாகசத்திலிருந்து துவங்குகிறான். அவனது வரலாற்றின் ஆரம்பகால ஆசிரியர்கள் அவனது பெயரை, பயண வழியை உறுதிப்படுத்தியிருக்கவில்லை என்கிறார் இந்நாவலின் இரண்டாம் கட்ட ஆசிரியரான, சேக்ஸ்பியர் இறந்த அதே தினத்தில் இறந்ததாகச் சொல்லப்படும் மிகேல் தெ செர்வாண்டிஸ் சவேத்ரா. டான் கிஹோத்தேவின் குதிரை சென்ற தடத்திலேதான் நவீன நாவல்கள் கால் பாவுகின்றன.

அச்சு இயந்திரம் ஒரு புதிய மனித உயிரியை உருவாக்கி, அவனுக்கு வாசகன் எனும் பெயரையும் அளித்து, உழைப்பென்றும் ஓய்வென்றும் சொல்ல முடியாத ஒரு செயலை அவனைச் செய்ய வைத்தது. அவனது கைகளில் தவழும் புத்தகங்கள் அனைத்துமே உண்மையின் அங்கங்களென அல்லது அவையே முழு முற்றான உண்மையெனக் கருதும் அவன், தன்னுடைய வாழ்வை சில புத்தகங்களின் துணையோடு அல்லது ஒரேயொரு புத்தகத்தின் துணையோடு சமாதானம் செய்து கொள்கிறான். மனித வாழ்வே ஒரு பிரதியாக, அவனே அவனுடைய சொந்த வாழ்வின் ஆசிரியனாக மாறிவிடுகிறான். அச்சு இயந்திரத்திற்கு முன்பு அப்படியொரு படிமம் மனித வாழ்விற்கு சாத்தியமற்றிருந்தது. நாவல்கள் பெருந்திரள் வாசிப்பிற்கான வடிவமாக வளர்ந்தது என்றாலும் மிகேல் தெ செர்வாண்டிஸின் காலத்திலேயே அவ்வடிவம் பழையதாகிவிட்டது என்கிறார் ஸ்டிவன் மூர் (நாவல் ஒரு மாற்று வரலாறு).

கறட்டு நாயகனை மையமாகக் கொண்ட பிக்காரிஸ்க் (Picarisque), கிராமப்புற இடையர் வாழ்வை மேன்மைப்படுத்தும் பாஸ்டோரல் (Pastoral), நேர்கோட்டில் எழுதப்படும், மாற்றமேயடையாத நாயக நாயகியரைக் கொண்ட ரொமான்ஸ் (Romance) நாவல்களில் விரவிக் கிடந்த புனைவுகளின் உலகில் அந்தப் புதிய உயிரியான வாசகன் சொற்களின் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தான். இதிகாசங்களிலிருந்து வெகுவாக விலகிவிட்ட தனது வாழ்வின் ஒரு புதிய வெளிப்பாட்டு வடிவமான நாவலில் தனது நாயகனை, நாயகியைத் தேடினான். செர்வாண்டிஸ் நாவல் வாசிப்பில் ஓர் இடையீட்டை நிகழ்த்துகிறார். அவருடைய புதிய நாவல் உண்மையிலேயே புதியது. அதுவரை புனைவெழுத்து கண்டிராத ஒன்று.

ரொமான்ஸ் எனும் சொல் ரோமிலிருந்து கிளைத்தது. இலத்தீன் மொழியின் வழித்தோன்றல்களான மொழிகளில் எழுதப்படும் நீண்ட செய்யுள் அல்லது உரைநடைக்கே ரொமான்ஸ் எனும் பெயர். ஆங்கிலத்தில் ரொமான்ஸ் என்பது வேறுவகைப் பிரதி. பிக்காரிஸ்க் தன்மையிலான வீரசாகச நாவல்களை ஆங்கிலம் ரொமான்ஸ் என அழைக்க, ஸ்பானியர்களோ அவற்றை நாவெலா ( Novela) என அழைக்கின்றனர் (செர்வாண்டிஸின் டான் கிஹோத்தே – ரொபெர்டொ கோன்சலெஸ் எச்சேவர்ரியா). மிகப் பலரைப் போலவே எச்சேவர்ரியா, கிஹோத்தே நாவலை முதல் நவீன நாவல் என அழைக்கிறார். மேலும் நாவல் எனும் வடிவமே இந்நாவல் பிரெஞ்ச் மற்றும் இதர ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதின் வழியே உருவானது என்கிறார். ரொமான்ஸ் மொழிகள் இலக்கியத்தின் இந்த புதிய வடிவத்தை தங்களது வெளிப்பாட்டு வடிவமாக உடனே கைப்பற்றிக் கொள்கின்றன. கிஹோத்தே நாவலை முதல் நவீன நாவல் என அழைப்பதை பொருளற்றது என்று சொல்பவர் நானறிந்த வரையில் விளாதிமிர் நபக்கோவ் மட்டுமே.

மூன்றாம் பிலிப் அரசனின் ஆட்சிக்காலத்தில் 1605 & 1615ஆம் ஆண்டுகளில் இரு பாகங்களாக வெளிவந்த டான் கிஹோத்தேவிற்கு ஒரு போலி இரண்டாம் பாகமும் உண்டு. 1611ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கிஹோத்தே, ஸ்பானிய அல்லது எஸ்பெனால் உச்சரிப்பிலிருந்து மருவி குவிக்ஸாட் எனும் ஆங்கில உச்சரிப்பிற்கு உள்ளாகிறது. இன்று, குவிக்ஸாட் எனும் சொல் ஒரு புனைவுக் கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமேயல்ல, மனித எத்தனத்தின் பொருத்தப்பாட்டை அளக்க உதவும் ஒரு கருவியும் கூட. நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இந்நாவலை ஒவ்வொரு சொல்லாக அலசியிருந்தாலும் இன்றளவும் செர்வாண்டிஸின் மேதமை மிக்க படைப்பு பல்வேறு வகைகளில் பொருள் விளக்கம் கொள்ள வாய்ப்பளிக்கிறது. மேதமை, ஒரு முற்று முடிவான பதில் அல்ல. அது அறியப்பட்டிராத புலத்திற்கான புதிய துவக்கம். எந்த ஒரு புதிய துவக்கமும் குவிக்ஸாட்டிய குணாம்சத்தோடும், எந்தவொரு நாயகனும் துவக்கத்தில் குவிக்ஸாட்டாகவுமே தெரிவான். இந்த ஒற்றைச் சொல்லால் ஒரு குறிப்பிட்ட மனித சிந்தனையை, செயலை ஏற்கவும் புறந்தள்ளவும் முடியும். நாம் பொருளுடையதாக நம்பும் அனைத்திற்கும் எதிரே கிஹோத்தேவை நிறுத்திவிட முடியும். நமது அறிவின் கண்ணாடியில் அவனது மடமை கச்சிதமாகப் பிரதிபலிக்க, அவனது மடமையின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் நமது மடமையின் தோற்றத் திரிபுகளால் நாம் நமது அறிவின் கண்ணாடியின் மீது அவநம்பிக்கை கொள்கிறோம். கிஹோத்தே மனிதகுலத்தின் அன்றாட முட்டாள்தனங்களின் தொகுப்பல்ல. மனித இருப்பின் உள்ளார்ந்த முட்டாள்தனத்தின் அல்லது மனிதனுக்குக் கொஞ்சம் சலுகையளித்துச் சொன்னால் உலகை அறிந்து கொள்ளும் அவனது முயற்சியில் எழும் முட்டாள்தனமான பிழைகளின் தொகுப்பு.

 

2

கிஹோத்தேவின் நோக்கம் என்ன? இது பதிலளிக்க முடியாத ஒரு கேள்வி என்கிறார் ஹெரால்ட் புளூம். Bloomஆனால் நாவலில் அவனுக்கு நோக்கம் இருக்கிறது. நித்திய கீர்த்தியும் நீடித்த புகழுமே அவனுடைய நோக்கங்கள். உலகின் தவறுகளைச் சரிசெய்தல், ஒடுக்குமுறையை நீக்குதல், அநீதியை ஒழித்தல், அபலைப் பெண்களைக் காத்தல் இவையே அவனைப் புகழின் எல்லைகளுக்குள் அழைத்துச் செல்லும் என நம்புகிறான். அவன் வாசித்த வீரசாகச நாவல்களின் நாயகர்களின் புகழுக்கு இவையே காரணம். `கிஹோத்தே ஒரு வாசகன். வாசிப்பை பைத்தியமாக மாற்றுகிறான். வாசிப்பினாலும், பைத்தியத்தாலும் பீடிக்கப்பட்ட அவன் தனது வாசிப்பை இவ்வுலகின் எதார்த்தமாக மாற்ற விரும்புகிறான்` (கார்லோஸ் புயண்டஸ் – இதுவே நான் நம்புவது புத்தகத்தில்). அவன் நம்மைப் போல அமைதியான வாசகனல்ல. வாசிப்பினால் பொறுமையிழப்பவன். அவனுக்கு இனிமேலும் வாசிப்பு தேவைப்படாத தருணத்தில் புத்தகங்களிடமிருந்து தன்னை நிரந்தரமாகத் துண்டித்துக் கொள்கிறான். அவனைப் பொறுத்தவரையில் இனி உலகைத் தனது புத்தகங்களின்படி மாற்றியமைப்பதே முதன்மையானது. இது இரண்டு நம்பிக்கைகளின் அடிப்படையிலானது. முதலாவது தனது புத்தகங்கள் குறிப்பிடும் அனைத்துமே சாத்தியம். இரண்டாவது தனது புத்தகங்கள் குறிப்பிட்டபடியான நிகழ்வுகள் நிகழ்வதற்கு இந்த உலகம் வாய்ப்பளிக்கும் என்பது. இவ்விரண்டு நம்பிக்கைகளில் ஒன்றாவது இல்லாதிருந்தால், நாற்காலியில் அமர்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தில் கண்களைப் புதைத்திருக்கும் வாசகன் ஒருவன், உலகை வென்று விடக் கூடிய ஒரு குதிரையில் ஏறி இதுவரையிலும் சந்தித்திராத ஆபத்துக்களைத் தேடிப் பயணிக்கும் சாகசப் பயணத்தின் தொகுப்பை நாம் வாசித்திருக்க மாட்டோம். வாசிப்பு எனும் அசைவற்ற ஓர் உலகிலிருந்து, செயலாற்றலின் தீராத அசைவுகளின் உலகில் குதித்த முதல் வாசகனின் வரலாறே கிஹோத்தே நாவல்.

நீதிக்கான ஏக்கமே நவீன நாவலின் மையம். கிஹோத்தே நீதியைத் தேடியே பயணிக்கிறான். நீதியை நிலைநாட்டுவதின் மூலமே அழியாப் புகழை எட்ட முடியுமென்றும், பின்னாளில் அவனுடைய வரலாற்றை எழுதப்போகும் ஆசிரியர்கள் அவனைப் பொன்னெழுத்துக்களில் பொறிப்பார்கள் எனவும் உறுதிபட நம்புகிறான். இரண்டாம் பாகத்தில் தனது போலி வரலாற்றை வாசிக்கும் கிஹோத்தே அதனை நிராகரித்தே தனது பயணத்தைத் தொடர்கிறான். அவன் உலகின் வரலாற்றை மட்டுமல்ல தனது சொந்த வரலாற்றின் உலகையும் மாற்றியமைக்க விரும்புகிறான். இந்த இரண்டு வரலாறுகளுக்கும் இடையிலான இடைவெளியை அழித்தொழிக்கும் வாய்ப்பை அவனுடைய பைத்தியம் வழங்குகிறது. பைத்தியம் பிடிக்காமல் இடைவெளிகளைக் கடந்து விட முடியாதென்று செர்வாண்டிஸ் அறிந்திருக்கிறார். உன்மத்தமோ, சித்தபிரமையோ, பைத்தியமோ சாதாரண மனோநிலைகளில் சாத்தியப்படாதவற்றின் பிராந்தியங்களில் நம்மை உந்தித் தள்ளுபவை. பைத்தியம் சமூகக் கட்டமைப்பிற்கே எதிரானது. அதனாலே கூட சமூகம் உருவாக்கியிருக்கும் வன்முறைக்கு மாற்றாகவும் இருக்கிறது. கிஹோத்தேவிற்கும், ராபின் ஹூட்டிற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. திருட்டோ, கொள்ளையோ சமூகத்தின் விளிம்புகளில் நிகழ்வதென்றாலும் பைத்தியம் விளிம்புகளுக்கும் விளிம்பிலே நிகழ்கிறது. ராபின் ஹூட்டிற்கு கண்கூடான நீதியை நிலைநாட்டும் முனைப்பு உள்ளதென்றால் கிஹோத்தேவிற்கு நீதியெனும் கருத்துருவின் சாரம்சத்தை நிலைக்கச் செய்யும் நோக்கம் உள்ளது. நிறுவனங்களுக்கு ராபின் ஹூட்டை எப்படிக் கையாள்வது என்று தெரிந்திருக்க ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த அறிவிற்கே பைத்தியக்காரர்கள் சவாலாக இருக்கிறார்கள்.

கிஹோத்தேவின் நீதி எத்தகையது? ஏமாற்றுக்காரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் வாய்ப்பளிக்கும் நீதியையே அவன் விரும்புகிறான். தனது காலத்தைய நிறுவனங்கள் எதுவுமே அப்படியொரு நீதியை வழங்க முடியாத நிலையில் ஒரு வீரத்திருமகனால் மட்டுமே வழுவாத நீதியை வழங்க முடியும் என்கிறான். சமூகத்தைப் பாதுகாப்பதில் நிறுவனங்களுக்கும் மேலாகத் தனிமனிதனான ஒரு வீரத்திருமகனை நிறுத்துவதின் மூலம் மனிதர்கள் நிறுவனங்களைக் கடந்த ஒரு நீதியான உலகிற்குச் செல்ல முடியும் என மறைமுகமாக வாதிக்கிறான். தண்டனை விதிக்கப்பட்டு கடினமான பணிகளுக்காகக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்படும், கைகளில் சங்கிலி பூட்டிய கைதிகளை எந்த எச்சரிக்கைகளுக்கும் பயப்படாமல் விடுவிக்கிறான். போலீஸ்காரர்களும், சான்சோ பான்சாவுமே அவனை எச்சரிக்கிறார்கள். அவன் அப்போதும் அஞ்சாமல் கைதிகளை விடுவிக்கிறான். கிஹோத்தேவின் `குற்றங்களுக்காக` அவனைத் தேடிவரும் புனித சகோதரத்துவம் (Holy Brotherhood) எனும் ஸ்பெய்ன் நாட்டுப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் கிஹோத்தேவின் பைத்தியம் விவரிக்கப்பட்டு அவர்கள் அவனைக் கைது செய்யாமல் விலகிச் செல்கிறார்கள். ஒரு பைத்தியக்காரனின் நீதிக்கான பயணமே நவீன பிரதிகளின் நீதிக்கான பைத்தியமாக வளர்கிறது.

தனது நண்பர்களான கிராமத்துப் பாதிரி பெரோ பெரெஸாலும், நாவிதனான நிக்கோலஸாலும் ஏமாற்றப்பட்டு கூண்டில் அடைபட்டிருக்கும் கிஹோத்தே, சான்சோ பான்சாவிடம் இவ்வாறு சொல்கிறான்:

`இந்நாட்களில் மறக்கப்பட்டுவிட்ட வீரசாகச வாழ்க்கை முறைக்குப் புத்துயிரளிப்பதில் முதலிடத்தில் இருக்கும், இந்த உலகின் புதிய வீரத்திருமகனாக நான் இருப்பதால், புதிய வசியங்களும், வசியப்பட்டவர்களுக்கான புதிய போக்குவரத்து முறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.` (ப.406). விலங்கைப் போல கூண்டில் அடைக்கப்பட்டு கிஹோத்தே ஒரு வண்டியில் அவனுடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் போதும் அதனை அவன் வீரசாகச வாழ்வில் பட வேண்டிய அவமானங்களில் ஒன்றாகவே பார்க்கிறான். அவனைப் பொறுத்தவரையில் இந்த உலகின் வசியக்காரர்கள் புதுப்புது வசியப் பொறிகளை அமைத்து அவனைச் சிக்க வைப்பார்கள். பொன்னுலகைக் கற்பனை செய்யும் கிஹோத்தே இந்த உலகை ஓர் இலட்சிய உலகமாக மாற்றும் பொறுப்பை அரசர்களுக்கோ, பிரபுக்களுக்கோ, அவனது காலத்தில் ஏற்படுத்தப்பட்டுவிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளுக்கோ அளிப்பதில்லை. ஒரு வீரத்திருமகனாக அவனே தனது தோளில் ஏற்கிறான். நவீன நாவல்களின் மனிதர்கள் உலகைத் தங்கள் தோளில் தாங்கும் அட்லஸாக உணர்ந்தால், கிஹோத்தே தானே விரும்பி அதைத் தோளில் ஏற்று பின் பாரம் தாங்காமல் இறக்கி வைக்கிறான். முன்னவர்கள் தங்களின் சூழலால் அட்லஸ்களாக மாறி அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிக்கும் வழிகளைச் சிந்திக்க முனைய, கிஹோத்தே தனது சூழலை மாற்றுவதின் மூலமாகவே உலகைத் தாங்கும் பொறுப்பிலிருந்து விடுபட முடியுமென்று நம்புகிறான். அவன் பிறப்போ சொற்களால் நிகழ்ந்தது என்றாலும், அவனுடைய வாழ்வோ செயல்களால் நிறைந்தது. அவன் வாசித்தறிந்த சொற்களின் உலோக எலும்புகளை உருக்கி தனக்கொரு வாள் செய்து கொள்கிறான். அதனைக் கையிலேந்தி உலகை மாற்ற முனைகிறான். சான்சோ பான்சாவிடம், உலகைக் குறித்த தனது கற்பனைகளை இரண்டு இடங்களில் விவாதிக்கிறான். முதல் பாகத்தில், வீரசாகச வாழ்வொழுங்கையும் (Knight Errantry) இரண்டாம் பாகத்தில் ஒரு நகரக் குடியிருப்பிற்கு கவர்னராகப் போகும் சான்சோ பான்சாவிடம் அவன் வழங்கும் அறிவுரையையும் ஒருசேர வாசித்தால் குவிக்ஸாட் எவ்வித உலக அமைப்புக் கற்பனையில் மூழ்கிக் கிடந்தான் என அறியலாம். நபக்கோவ், கிஹோத்தேவின் கற்பனைகள் யாவும் சாதாரண பொதுப்புத்தியிலிருந்து உதித்தவை என்கிறார். ஆனால் வேறு சிலரோ மனிதாபிமான சிந்தனாவாதியான எராஸ்மஸின் கொள்கைகளையே அவ்வாறு எழுதியிருக்கிறார் என்கின்றனர்.

இரும்பின் காலத்தில் வாழும் கிஹோத்தே, பொற்காலத்தைப் பற்றி ஆற்றும் உரை:

`பொற்காலம் என்பது முயற்சி இன்றியே பொன் கிடைக்கப்பெறும் காலமல்ல. மாறாக எனது, உனது எனும் இரு சொற்களை பொற்காலத்தில் வாழ்ந்திருந்தவர்கள் அறிந்திராத ஒரு காலம். உடைமைகள் அனைத்துமே பொதுவாக்கப்பட்டவை. யாரும் உழைத்து உண்ணத் தேவையில்லை. கைகளை நீட்டி கனிகளைப் பறித்து உண்ணலாம் (ஊண் உண்ணுதலை அவன் விவாதிக்கவில்லை). தெளிந்த ஊற்றுகள் நன்னீரை அபரிமிதமாக வழங்கும். பாறைகளின் பிளவில் தேனீக்கள் அவைகளுடைய குடியிருப்பை அமைத்து, யாவருக்கும் தங்களது கடின உழைப்பின் அறுவடையைத் தாராளமாக வழங்கும். மழையிலிருந்து காத்துக் கொள்வதற்கு மட்டுமே கார்க் மரத்தினலான கூரைகள் அமைக்கப்பட்டிருக்கும். அமைதி, நட்பு, ஒத்திசைவின் காலத்திலே ஏரின் கூரான வளைவுகள் பூமித்தாயின் வயிற்றிலே விழுந்திருக்கவில்லை. அவர்களுடைய மானத்தை மறைக்க மட்டுமே போதுமான உடையணிந்த ஆட்டிடைச்சிகள் தளர்ச்சியாகப் பின்னப்பட்ட ஜடையுடன், இக்காலத்தவர்கள் அணிவதைப் போன்ற ஆபரணங்கள் ஏதுமில்லாமல் பள்ளத்தாக்குகளுக்கு இடையே பயணிப்பார்கள். நேர்மையுடன், உண்மையுடன் சூதும் மோசடியும் துர்நோக்கமும் கலந்திருக்கவில்லை. சொந்தக்காலில் தனித்து நின்ற நீதிப்பெண்ணை யாரும் அவதூறு செய்யவோ, குழப்பவோ, கொடுமைப்படுத்தவோ இல்லை. நீதிபதிகளின் சிந்தனையில் நீதிக்கு வெளியே நிலவும் தான்தோன்றித்தனமான கருத்துக்கள் குடியேறியிருக்கவில்லை. யாருக்கும் நீதி வழங்கத் தேவையிருக்கவில்லை, எதையும் நீதிபரிபாலனம் செய்யவும் தேவையிருக்கவில்லை. கன்னிப் பெண்களும், மனைவிமார்களும் அச்சமின்றி நடமாடினர்`.

இந்த உரையை வாசித்தவர்கள், ஒன்று ஏதேன் தோட்டத்தின் சாயலைக் காண்பார்கள் அல்லது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் திருத்தப்படாத ஆரம்பநிலை வடிவத்தை வாசித்ததைப் போல உணர்வார்கள். பாலும் தேனும் ஓடும் ஒரு பொற்காலத்தை நமக்கு அளிப்பதாகச் சொல்லும் அரசியல்வாதிகள் நம்மை ஒரு குவிக்ஸாட்டிய பொன்னுலகத்திற்கு அழைத்துச் செல்லும் நிரந்தரக் கற்பனையில் ஆழ்த்துகிறார்கள். காதலைப் போலவே அரசியலும் வாக்குறுதிகளால் நிரம்பியது.

நாவலின் இரண்டாம் பாகத்தில் சான்சோ பான்சாவிற்கு ஒரு நகரக் குடியிருப்பின் கவர்னராகும் வாய்ப்பு கிடைக்கிறது. நமக்கு நன்றாகவே தெரியும் அவன் நீண்டகாலம் அந்தப் பதவியில் நீடிக்கப் போவதில்லை என. பெயர் குறிப்பிடப்படாத பிரபுவும், சீமாட்டியும் அவனோடு விளையாடவே அவனுக்கு அந்தப் பதவியை அளிக்கிறார்கள் என்பதை நாம் அறிகிறோம். தான் ஒரு சிறந்த கவர்னராக முடியுமென்று எப்போதுமே நம்பும் அவன் (சாலமன் அரசனுக்கு இணையான நீதியை வழங்குகிறான்) அதை விளையாட்டென்றே உணர மறுக்கிறான். நாவலின் இந்தப் பகுதியில் சான்சோ பான்சா கிஹோத்தேவாக மாறிவிட பிரபுவின் மாளிகையில் தனது மனதில் உருவாகிவிட்ட சந்தேகத்தை மதிப்பிட்டுப் பார்க்கத் துவங்கும் கிஹோத்தே பான்சாவின் இடத்தை அடைகிறான். தனிமையின் பயங்கரத்தை பான்சா இல்லாத மாளிகையில் அவன் அனுபவிக்கிறான். தனது தனிமையின் எடையால் சரிந்து விழாமலிருக்க ஒரு சாய்மானம் இல்லாமல் இருக்கிறான். விழித்துக் கொண்டிருக்கும் பான்சா தூங்கும் கிஹோத்தேவை விட மோசம் என்று செர்வாண்டிஸ் குறிப்பிடுகிறார். இதன் பொருள் கிஹோத்தேவாக மாறும் சான்சோ உண்மையில் அவனை விடவும் மோசமான பைத்தியமாகிவிடுவான் என்பதே. அவனுக்கென்று தனித்த இலட்சியங்கள் அற்ற சான்சோவிடம் கவர்னர் பதவிக்கான ஆசையை விதைத்தது கிஹோத்தேதான். சான்சோவின் மனைவி அவனிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறாள். பொருத்தமில்லாத ஒரு பதவியை ஏற்றுக் கொள்வதின் நெருக்கடியைத், தங்களது நிலையில் உண்டாகும் மாற்றத்தை அவள் புறக்கணிக்கிறாள். சாதாரண சான்சோவின் மகளை ஒரு சாதாரணனுக்கே மணமுடிக்க விரும்புகிறாள் அவள். ஒரு சாதாரணன் நாயகனின் உலகினுள் (realm) நுழைந்துவிடக் கூடாதென்று அவள் வாதிடுகிறாள்.

இருப்பினும் அசட்டுத் துணிச்சலோடு சான்சோ கவர்னர் பதவியை ஏற்கிறான். அவனிடம் கிஹோத்தே வழங்கும் அறிவுரைகளின் தொகுப்பு:

`முதலில் கடவுளை அஞ்சு. இரண்டாவது உன்னையே நீ கவனி, இருப்பதிலேயே கடினமானதென்று ஒருவர் கற்பனை செய்யும் அறிவான தன்னை அறிவதற்கு முயற்சி செய். உன்னுடைய பணிவான பாரம்பரியத்தை பெருமை கொள், நீ விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதை ஏளனம் செய்யாதே. மேன்மைமிக்க பாவியாக இருப்பதைக் காட்டிலும் பணிவான பின்புலமுள்ள நல்லறிவு உடையவனாக இருப்பதில் பெருமை கொள். உதிரம் பாரம்பரியமானது நல்லறிவோ ஈட்டப் பெறுவது. உதிரத்திற்கு இல்லாத மதிப்பு நல்லறிவுக்கு உண்டு. வாழ்வின் கணக்குப் பதிவேட்டில் தவிர்த்தவற்றிற்காக மரணத்தில் நான்கு மடங்கு செலுத்த வேண்டியதிருக்கும். நீதிபரிபாலனத்தில் தான்தோன்றித்தனத்திற்கு இடமளிக்காதே. பணக்காரர்களின் வாக்கிலும், அன்பளிப்பிலும் உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதைப் போலவே ஏழைகளின் தேம்பலிலும் நடவடிக்கைகளிலும் முயற்சி செய். நீதித்தணடத்தை நீ வளைக்க வேண்டுமென்றால் அதை அன்பளிப்பின் காரணமாகச் செய்யாதே, மாறாகக் கருணைக்காகவே செய். உன்னுடைய எதிரியை விசாரிக்கும் போது உனது காயங்களை அப்பால் வைத்துவிட்டு, உனது சிந்தனையைக் கேள்வியின் உண்மைத்தன்மையின்பால் செலுத்து. அழகியொருத்தி நீதி கேட்டு வந்தால், உனது கண்களை அவளுடைய கண்ணீரிலிருந்தும், அவளுடைய தேம்பலிடமிருந்து உனது காதுகளையும் திருப்பிக் கொண்டு அவள் கேட்பதிலிருக்கும் சாராம்சத்தை மட்டுமே பொருட்படுத்து. ஒருவனைத் தண்டிக்க வேண்டுமானால் தண்டனை மட்டுமே வழங்கு, சொற்களால் அவனைத் தூற்றாதே. உன்னுடைய நீதிபரிபாலன எல்லைக்குள் வரும் குற்றவாளியை சீரழிந்து போயிருக்கும் இயல்பின் நிலைமைகளுக்கு உட்பட்டு வீழ்ச்சியடைந்தவன் என்றே மதிப்பிடு. வாதிக்கு தீங்கிழைக்காத வகையில் அவனுக்குக் கருணையைக் காட்டு. நமது பார்வையில் கருணையே நீதியை விடவும் புத்திசாலித்தனமானதும், புகழொளி மிக்கதுமாகும்.

உனது நகங்களை வெட்டி சீர்படுத்து. இடைக்கச்சை அணியாமலும், கவனக்குறைவாகவும் உடுத்தாதே, வெங்காயத்தையும், பூண்டையும் உண்ணாதே. மெதுவாக நட, அமைதியாகப் பேசு. உடல் நலம், வயிறு எனும் பட்டறையினால் வளைக்கப்படுவதால் மதியத்தில் நிறைவாகவும் அதைவிடக் குறைவாக இரவிலும் உண். அளவாகக் குடி. வாய்நிறைய மெல்லாதே, அடுத்தவரின் முன் ஏப்பம் விடாதே. குதிரை ஏற்றத்தின் போது உனது முதுகெலும்பை வளைக்காதே. சூரியன் உதிக்கும் முன்னே எழு. இறுதி அறிவுரையாக, ஒருபோதும் ஒருவரின் பாரம்பரியத்தை மற்றொருவரோடு ஒப்பிடாதே. `

மனதிற்கும் உடலுக்குமான அறிவுரையை வழங்கும் கிஹோத்தேவிடம், தான் எப்போதுமே ஒரு கவர்னருக்கு உரிய அறிவோடு இருப்பதாகச் சொல்லும்போது சான்சோ பான்சா அவனுடைய அறிவுரைகளைப் பின்பற்றுவதாகச் சொல்கிறான். ஒரு கவர்னராகப் பரிமளிக்கும் சான்சோ வியப்புக்குரிய வகையில் மிகச்சரியாக நீதிபரிபாலனம் செய்கிறான். சான்சோ கதாபாத்திரத்தின் முந்தைய நிலைக்கு இது முற்றிலும் எதிரானது. சான்சோ பான்சா கல்வியறிவற்ற, பொருத்தமில்லாத பழமொழிகளைப் பயன்படுத்தும் ஒரு நாட்டுப்புற முட்டாள். இரண்டாம் பாகத்தில் பிரபுவின் மாளிகையில் பிரபுவின் மனைவியிடம் ஒரு விதூசகன் நிலைக்கு வீழ்கிறான். ஆனால் அவன் கவர்னராக வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்ந்து தனது பதவி எதைக் கோருகிறதோ அதைத் திறம்படச் செய்கிறான்.

கிஹோத்தேவின் இந்த அறிவுரைகள், மாக்கியவல்லியின் சிந்தனைகளுக்கு எதிரானவை என்கிறார் எடித் கிராஸ்மன் இப்பகுதிக்கான அடிக்குறிப்பில். அது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. உதாரணத்திற்கு, கருணையை உயர்வாகப் பேசும் அவனுக்கு எதிரான இடத்தில் நின்று, கருணை அல்லது அச்சம் இவ்விரண்டில் குடிகள் தன்மீது அச்சம் கொள்வதையே இளவரசன் விரும்ப வேண்டும் என்கிறார் மாக்கியவல்லி. மேலும் ஓர் இளவரசன் பாதி மனிதனாகவும் பாதி மிருகமாகவும் இருப்பது எப்படியென்று கற்றிருக்க வேண்டும் என்கிறார் (இளவரசன் பகுதி 18). பன்னிரெண்டு குற்றவாளிகளை கிஹோத்தே விடுவிக்கும் பகுதியை மாக்கியவல்லியின் பார்வையிலிருந்து எழுதப்படும் பிரதியில் நம்மால் பார்க்க முடியாது. சங்கிலியில் பூட்டி கடினமான கப்பல் பணிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிகளை அவர்கள் குற்றவாளிகள் என்று தெரிந்தே குவிக்ஸாட் விடுவிக்கிறான். இங்கே கவர்னராகப் போகும் பான்சாவிடம் சொல்லும் அறிவுரைகளில் ஒன்றான, குற்றவாளிகளைச் சீரழிந்துவிட்ட இயல்பின் நிலைமைகளால் வீழ்ந்துவிட்டவர்களாகவே பார்க்க வேண்டும் என்பதைப் பல பகுதிகள், ஒரு பாகத்திற்கு முன்பாகவே குவிக்ஸாட் நிகழ்த்திக் காட்டுகிறான். பொங்கும் மறுமலர்ச்சிக்கால அலைக்கும், தணியும் சீர்திருத்தத்திற்கு எதிரான அலைக்கும் இடையே எராஸ்மஸ் எனும் பலகையில் தொங்கிக் கொண்டிருந்தார் செர்வாண்டிஸ் என்கிறார் கார்லோஸ் ஃபுயந்தஸ். நாவல் எனும் வடிவமே சீர்திருத்தக்காலத்தின் உற்பத்திப்பொருள் எனச் சொல்லப்படுவதோடு ஓட்டி இதனைப் புரிந்து கொள்ளலாம்

தனது காலத்தில் கிறிஸ்தவ உலகில் நிகழும் சீர்திருத்தப் போக்கை செர்வாண்டிஸ் நன்கு அறிந்திருந்தார். அவர் எராஸ்மஸின் மனிதாபிமான சிந்தனைக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறார். கிறிஸ்தவ உலகில் நிகழ்ந்த சீர்த்திருத்தப் போக்கு அதற்கு எதிரானவர்களையும் உருவாக்கியிருந்தது. சீர்திருத்தம், எதிர்-சீர்திருத்தம், போப்பினால் உருவாக்கப்பட இன்குவிசிசன் (Inquistion) விசாரணை அமைப்பு என இம்மூன்று நிலைகளும் ஊடாடிக் கொண்டிருந்த கிறிஸ்தவ உலகில் செர்வாண்டிஸ் சீர்திருத்தத்தின்பால் நின்றவர். கிஹோத்தேவின் சரித்திர ஆசிரியராக சையத் ஹமித் பெனெங்காலி என்பவரைத் தனது படைப்பின் முதன்மை ஆசிரியராக உருவாக்கியதே விசாரணை அமைப்பிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் ஓர் உத்தி. அனைத்து பிரதிகளையும் தணிக்கைக்கும், பறிமுதலுக்கும் உட்படுத்தும், ஆசிரியனைத் தண்டிக்கும் அமைப்பாக இன்குவிசிசன் இருந்த காலகட்டத்தில் வெளிப்படையாக சீர்திருத்தத்திற்கு ஆதரவளிப்பதை விரும்பாத செர்வாண்டிஸ், கிஹோத்தே எனும் பாத்திரத்தின் மூலமாக மதச்சார்பற்ற உலகத்திற்குள் இலக்கியத்தை நுழைக்கும் பணியைச் செய்கிறார். இந்நாவலில் இன்குவிசிசன் அமைப்பு குறிப்பிடப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபை 1632ஆம் ஆண்டு ஒருங்கமைத்த புத்தகங்களைப் பட்டியலிடும் நடவடிக்கைக்குப் பின்வந்த கிஹோத்தே நாவலின் பதிப்புகளில் தணிக்கைச் செய்யப்பட்ட பகுதிகள் சில நீக்கப்பட்டன. தனது நூல் தணிக்கைக்கு உட்பட்டு அதன் சில பகுதிகள் நீக்கப்படும் எனபதைச் செர்வாண்டிஸ் ஊகித்திருந்தார்.

சுதந்திரத்தை வேறு எதைவிடவும் அதிகமாக நேசிக்கும், அதுவே அடையப்பட வேண்டிய உன்னத இலட்சியமாகவும் கிஹோத்தே கருதுகிறான். அவனுடைய சாகசங்கள், சண்டைகள் அனைத்துமே யாரோ ஒருவரை விடுவித்து அவர்களது முந்தைய சுதந்திரத்தை மீட்டுக் கொடுப்பதற்காகவே நிகழ்கின்றன. அது ஒரு பூதத்தினால் துன்புறும் பெண்ணாக இருந்தாலும், தன்னுடைய எஜமானரை ஏமாற்றும் ஒரு பணியாள் சிறுவனாக இருந்தாலும், திருட்டு, கொள்ளையில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்களே. அப்போதைய ஸ்பெய்னில் ஏற்ப்படுத்தபட்ட நெடுஞ்சாலை, கிராமப்புற போலீஸ் அமைப்பான புனித சகோதரத்துவம் அமைப்பைப் பகுதி பத்தில் முதன்முறையாக குறிப்பிடுவதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு முறையும் பாதிரிகளை, கிறிஸ்தவர்களை கிஹோத்தே தாக்கும்போது சான்சோ பான்சா அவனுக்கு நினைவூட்டுகிறான். மேலும் ஓரிடத்தில் புனித சகோதரத்துவ போலீஸ் ஒருவன் குவிக்ஸாட்டை இரும்பு விளக்கால் தாக்கிக் காயப்படுத்தினாலும் அவன் அந்த அமைப்பைக் கண்டு அஞ்சுவதில்லை. அவனைப் பொறுத்தவரையில் நீதி என்பது தனிமனிதனிடமிருந்துதான் கிடைக்கும் என்று நம்புகிறான். எது குற்றம் என்பதைத் தீர்மானிப்பதில் தனிமனிதனுடைய நீதிக் கொள்கைகளே முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதில் தீர்மானகரமாக இருக்கிறான். ஒரு வீரத்திருமகனைப் பொறுத்தவரையில், அவன் அநீதிக்கு எதிராக நீதியை நிலைநாட்டிடவும், பெண்களின் கற்பைக் காப்பாற்றவும், துன்பப்படுபவர்களை விடுவிக்கவும், தவறை சரி செய்வதற்கும் அவனால் மட்டுமே முடியும் என்ற உறுதியோடு இருக்கிறான். இது நீதி குறித்த மேம்போக்கான ஆனால் அடிப்படையான சிந்தனை. தனது பொன்னுலகம் நீதி உணர்வு மிக்க வீரத்திருமகன்களால் மட்டுமே காக்கப்பட வேண்டும் என்று பான்சாவிடம் தனது கற்பனையை விவரிக்கிறான். அடையப்பட்டிராத தனது பொன்னுலகைச் சுற்றி கோட்டை கட்டும் முதல் வீரத்திருமகனும் அவனே.

இதுவே குவிக்ஸாட்டின் நவீனத்துவம் என்கிறார் மரியோ வர்கோஸ் யோசா, தனது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு நாவல் எனும் கட்டுரையில்:

`உலகை நல்ல நிலைக்கு மாற்றுவதைத் தனது சொந்தப் பொறுப்பாக ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தவறிழைக்கும், பல்வேறு தடைகளைக் கடக்கும், அடிக்கப்பட்டும், மோசமாக நடத்தப்பட்டும், பரிகாசத்திற்கு உள்ளாகும் நீதிக்கான அதன் கதாபாத்திரத்தின் புரட்சிகர வேட்கையில், டான் கிஹோத்தேவின் நவீனத்துவத்தைக் காண முடியும்.

`கவர்னர் பதவியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடிவரும் சான்சோ பான்சா தனது பழைய சுதந்திரத்தை அடைந்து விட்டதாகச் சொல்கிறான். நாவலின் முதல் பாகத்தில் வரும் கிறிஸ்தவத்தின் பால் ஈடுபாடுடைய ஒரு மூர் பெண்ணான ஜோரய்தாவோடு ஸ்பெய்னுக்குத் திரும்பும் ருய் பெரெஸ், சுதந்திரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு சொல்கிறான்.

`இழந்த சுதந்திரத்தை ஒருவன் திரும்பப் பெறும்போது அடையும் ஆனந்தம் அளப்பரியது` (பக் 365). தனது தந்தையால் அவரவர் விருப்பப்படி ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமுடைய ருய் பெரெஸ் ஒரு சிப்பாய் ஆகிறான். அவன் மூர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஜோரய்தாவின் உதவியோடு சிறையிலிருந்து தப்பிக்கிறான். வசியத்திலிருந்து விடுவித்தல், தண்டனையிலிருந்து விடுவித்தல், தாங்கமுடியாத அழுத்தமுடைய கவர்னர் பதவியிலிருந்து விடுபடுதல் என சுதந்திரத்திற்கான வேட்கை கிஹோத்தேவின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது. அதற்காகத் தனது அறிவையுமே கூட பலியிடுகிறான். அவனைப் பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது அசைக்க முடியாத குருட்டு நம்பிக்கை.

சுதந்திரம் மதச்சார்பற்ற உலகின் தலையாய விருப்பம். ஓரிடத்தில் அவன், பான்சோவிடம் சொல்கிறான்:

`சுதந்திரம், சான்சோ, சொர்க்கம் மனிதனுக்கு வழங்கிய ஆக அரிதான அன்பளிப்பு, பூமி புதைத்து வைத்திருக்கும், கடல் மறைத்து வைத்திருக்கும் எந்த ஒரு புதையலையும் அதனோடு ஒப்பிட முடியாது. சுதந்திரத்திற்காகவும், மரியாதைக்காகவும் மனிதர்கள் வாழ்வைப் பணையம் வைக்க வேண்டும். இதற்கு மாறாக, கட்டுண்டிருத்தல் மனிதர்கள் மீது விழும் ஆகமோசமான தீமை.

`குறைந்தது ஒன்பது நூற்றாண்டுகள் மூர்கள் எனும் வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த இஸ்லாமியர்களால் ஆளப்பட்டதும், வரி செலுத்தும், நிதியை நிர்வாகிக்கும் யூதர்கள் நிரம்பி வழிந்ததுமான ஸ்பெய்னில் இஸ்லாமியர்கள் விரட்டப்பட்டு (1492), இறுதியாக யூதர்களும் வெளியேற்றப்பட்ட காலத்தில், அந்நாடு கிறிஸ்தவ மீட்டெழுச்சியின்பால் உறுதியோடிருந்த நாட்களில் செர்வாண்டிஸ், கேலியின் பின்னால் ஒளிந்துகொண்டு கிறிஸ்தவ மதத்தையும், அன்று நிலவிய அமைப்பையும் இந்நாவலின் வழி விமர்சிக்கிறார் எனவும் இந்நாவலை வாசிக்கலாம் என கார்லோஸ் ஃபுயந்தஸ் சொல்கிறார். நாவலின் இரண்டாம் பாகத்தில் தனது காதலியைத் தேடிப் போகும் கிஹோத்தேவும், சான்சோ பான்சாவும் வழியில் தேவாலயத்தை அடைகிறார்கள். `நாம் தேவாலயத்திற்கு வந்து விட்டோம்` என குவிக்ஸாட் சொல்லும் ஒரு வரி இப்படியொரு வாசிப்பின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அவனும், சான்சோ பான்சோவும் எங்கும் செல்கிறார்கள், தேவாலயத்தைத் தவிர. அவர்களுக்கு நிச்சயமாக கடவுளின் துணைத் தேவைப்படவில்லை என்பதைப் போலவே `நல்ல கிறிஸ்தவர்கள்` என அடிக்கடி சொன்னாலும், ஒருபோதும் நல்ல கிறிஸ்தவர்களுக்குரிய சடங்குகளை ஆற்றாதவர்களும் கூட. இன்னொரு பார்வையும் இங்கே முன்வைக்கலாம். வீட்டை விட்டு இருவரும் வெளியேறினாலும் அவர்கள் இருவருமே துறவிகள் அல்ல. குறைந்தது சான்சோ பான்சோ நிச்சயமாக ஒரு துறவியல்ல. சுயநலமியான அவனுக்கு நேர் எதிராக கிஹோத்தே துறவின் பல துன்பங்களுக்கு நிகரான துன்பங்களை அனுபவிக்கிறான். அவனைப் பொறுத்தவரை வீரசாகச வாழ்வே அவனது மதம். அந்த மதத்தில் நீதியும், சுதந்திரமுமே தலையாயவை. இந்த இரண்டு இலட்சியங்களுக்காகவே ஒரு வீரத்திருமகனாக அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு தனது முடிவில்லாத பயணத்தைத் தொடர்கிறான். நவீன இலக்கிய மனதின் ஆதாரமான உணர்வுகளான நீதி, சுதந்திரத்திற்கான ஏக்கத்தினால் அலைக்கழிக்கப்படுகிறது கிஹோத்தேவின் வாழ்க்கை.

கவர்னர் பதவியிலிருந்து பிய்த்துக் கொண்டு ஓடிவரும் பான்சோ சொல்கிறான், `வழிவிடுங்கள் கனவான்களே, என்னுடைய பழைய சுதந்திரத்திற்குத் திரும்பிப் போக விடுங்கள். எனது கடந்தகால வாழ்க்கையைத் தேட விடுவதால் இந்த நிகழ்கால மரணத்திலிருந்து என்னால் உயிர்த்தெழமுடியும்`. மொத்த நாவலிலும் சான்சோ பான்சோ பேசும் நவீன நாவல்களின் வாக்கியங்களுக்கு ஒப்பான சொற்கள் இவை. ஒர்டெகா ஒய் கசட், கிஹோத்தேவை நவீனத்தின் வேதனையால் கிழிக்கப்பட்ட, வேடிக்கையான ஒரு கொதிக் (Goethic) கிறிஸ்து என்று அழைப்பதோடு ஒருவகையில் அவனைப் பேரமைதியும், தெய்வீகமும் மிக்க கிறிஸ்துவின் துயரமான அங்கதம் என்கிறார். நபக்கோவ் கிஹோத்தே அடையும் ஏளனத்தை, தண்ணீர் கேட்க வினிகர் கொடுக்கப்படும் கிறிஸ்துவின் இறுதி ஊர்வலத்தோடு ஒப்பிடுகிறார். ஆனால் அதே சமயம் இந்நாவலை, செய்ண்ட்-புவே சொல்வதைப் போல `மானுடத்தின் விவிலியம்` என்பதையும் மறுக்கிறார்.

 

3
நவீன உலகமென்று அழைக்கப்படும் ஒன்று உருப்பெறத் துவங்கிய ஆரம்ப நாட்களில் நித்திய ஊசலாட்டத்தினால் அலைக்கழிக்கப்படும் அதன் நிலைக்கு எதிராக அனைத்தையுமே உறுதி செய்து வைத்திருக்கும் பழைய உலகின் ஒரு பிரதிநிதியாக நிற்கும் கிஹோத்தே எனும் கதாபாத்திரத்தின் வழியாக புதிய உலகை நாடி பிடித்துப் பார்த்திருக்கும், ஒரு போரில் தனது இடது கையை இழந்தவரான செர்வாண்டிஸ் இவ்விரண்டு உலகங்களுக்குமான அடிப்படை வேறுபாட்டை நான்கு நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து விவாதிக்கப்படும், கொண்டாடப்படும் ஓர் இலக்கியப் பிரதியாக அளித்து நமது வாசிப்பின் சாகசப் பயணத்தில் ஒரு முக்கியத்துவமிக்க சேரிடமாக இருக்கிறார்.

கிஹோத்தேவின் சாகசங்கள் பலவும் நம்மைச் சிரிக்க வைப்பவை. எனினும் அவை உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் நாடகங்களுக்கும் மேலானவை அல்ல. ஆனால் நிச்சயம் ஒருமுறையாவது சிரிக்காமல் இந்நாவலை ஒருவர் வாசித்து முடித்துவிட முடியாது. காற்றாலையைப் பூதமெனப் பார்த்து அதனோடு சண்டையிடக் கிளம்பும்முன் சான்சோ பான்சாவின் எச்சரிக்கைக்கு அவன் சொல்லும் பதில், கழுதைகளை வழங்கச் சொல்லி கிஹோத்தே எழுதும் கடிதத்தை வாங்காமல் வந்துவிடும் பான்சாவின் புலம்பல், ஒயின் பீப்பாய்களை உடைத்த பின் விடுதிக்காப்பாளர் இருவரையும் நடத்தும் விதம், வலிநிவாராணத் தைலத்தை இருவரும் குடித்தபின் படும் பாடு, ஒரு போர்வையில் பான்சாவைத் தூக்கிப் போட்டு விளையாடுதல், டுல்சீனியாவிடம் கடிதம் கொடுக்கும் போது அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் எனக் கேட்கும் பான்சா சொல்லும் பதில், கூண்டில் அடைபட்டிருக்கும் கிஹோத்தே வீரசாகச வாழ்வின் பெருமைகளைப் பேசுதல் என நம்மால் எளிதில் மறந்துவிட முடியாத நகைச்சுவைக் காட்சிகளைக் கடந்தும் நாம் இந்நாவலை ஒரு துன்பியல் படைப்பாக அணுகத் தலைப்படுவோம். இறுதிப் பகுதியில் மரணப்படுக்கையில் கிஹோத்தே கிடந்திருக்கும் வரை கூட நாம் போக வேண்டாம், அதற்கு முன்பே பலமுறை குறிப்பாக சான்சோ பான்சாவாலும் கூட அவன் ஏமாற்றப்படும் வரை வாசித்தாலே போதுமானது. ஒரு படகில் செல்கையில் இனிமேலும் தன் மீது விழும் தாக்குதல்களை, இந்த உலகின் வசியங்களைத் தாங்க முடியாது என்கிறான். இங்கேயே அவனது பைத்தியம் தெளியத் துவங்குகிறது. நாவலின் இரண்டாம் பாகம் முழுக்கவே அவனுக்கு நேரும் அவமானங்கள், துன்பங்கள் நம்மை அவன்பால் இரக்கம் கொள்ளச் செய்கின்றன. முதல் பாகத்தில் அவனுடைய முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கும் நாம் இரண்டாம் பாகத்தில் அவனுடைய முட்டாள்தனத்தை எண்ணிக் கவலையுறுகிறோம். சட்டென மரணப்படுக்கையில் வீழும் அவன் அனைத்து மயக்கங்களிலிருந்தும் தெளிகிறான். ஒரு துன்பியல் படைப்பாக நாவல் அங்கே தனது உச்சத்தைத் தொடுகிறது. வெகுஜன திரைப்படங்களின் கட்டமைப்பிற்குப் பழகிப் போனவர்கள் இந்த நாவலின் முதல் வாசிப்பில் இப்படியொரு மயக்கத்திற்கு ஆளாகக் கூடும். நமது திரைப்படங்களில் துன்பியல் படங்கள் உச்சகட்டத்தை நெருங்கும் வேளையில் அடையும் நிற மாற்றத்தை, இந்நாவல் இரண்டாம் பாகத்தில் அடையத் துவங்கி, உச்சகட்டத்தில், நமக்கு நன்கு பரிச்சயமான, தொடர் ஏமாற்றங்களுக்கு உள்ளாகும் ஒரு நாயகனின் மரணத்தை கிஹோத்தே அடைகிறான். பிக்காரிஸ்க் நாவல்களோ, வெகுஜன திரைப்படங்களோ இதிகாசங்களை மலிவாகப் பிரதியெடுப்பவை. இந்நாவல் இதிகாசங்களின் மலிவான பிரதியாக இல்லாமல் இருக்கக் காரணமும் அதன் மையக் கதாபாத்திரம்தான். செர்வாண்டிஸ் வீரசாகச நாவல்களைக் கேலி செய்யவே இந்நாவலை எழுதுவதாகச் சொல்லியிருந்தாலும், பிற்காலத்திய வாசிப்புகள் எதுவுமே அவரது ஒற்றை நோக்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இதிகாசமும் நாவலும் இரண்டு துருவங்கள் தொலைவு உள்ளவை எனும் ஹொஸே ஒர்டெகா கசட் இதிகாசங்களின் கடந்தகாலத்தை நமது வரலாற்றுக் கடந்தகாலத்தினால் அடைந்து விட முடியாது என்கிறார். அதைப் போலவே இதிகாசங்களின் கடந்தகாலத்தை நாவல்களின் கடந்தகாலத்தினால் அடைய முடியாது என்றாலும், கிஹோத்தே அற்ப நாவல்களின் காலத்தில் தானொரு இதிகாச காலத்தை அடைய விழையும் ஒருவன் என்பதை அறிந்திருக்கிறான். அவனைப் போலவே செர்வாண்டிஸும் இதிகாச காலங்களுக்கு இந்த உலகு இனி திரும்பவே முடியாதென்பதால், வீரசாகச நாவல்களைக் கேலி செய்ய எழுத முனைந்து அல்லது அப்படியொரு சாக்காட்டின் வழியாக ஒரு புதிய இலக்கிய வகைமை உருவாகவும் காரணமாகிவிட்டார்.

ஒர்டெகா கசட், இந்நாவலைக் குறித்துப் பேசும் போது, `ஏதோ ஒரு வகையில் மனிதனே கலையின் அடிப்படை நோக்கம்…..ஒவ்வொரு காலகட்டமும் மனிதனைக் குறித்த (புதிய) விளக்கங்களைக் கொண்டு வருகிறது… இதன் காரணமாகவே ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு (இலக்கிய) வகைமையை விரும்புகிறது` என்கிறார் (டான் கிஹோத்தே மீதான தியானங்கள், ப.113)

துன்பியல் படைப்பை ஒரு நாயகனில்லாமல் படைக்க முடியாது. ஓர் இலட்சிய உலகக் கனவில் மிதக்கும் நாயகன் பல்வேறு நாயக சாகசங்களைப் புரிய வேண்டும் (அதில் முக்கியமானது தானே அழிவது). அவன் தன்னுடைய விருப்புறுதியிலிருந்து (Will) செயல்படுகிறான். வெளிப்புற எதார்த்தத்தின் எந்தக் குரலுக்கும் அவன் செவிமடுப்பதில்லை. நிலவும் எதார்த்தத்தை தன்னால் மாற்றியமைத்துத் தனது விருப்புறுதியின்படியான ஒன்றை உருவாக்க முடியுமென்று நம்புகிறான். அதற்காக அவன் எத்தனை எதிர்ப்புகள், சரிவுகள், துன்பங்கள் வந்தாலும் தொடர்ந்து செயல்படுகிறான். அவனுடைய வார்த்தைகளில் எந்நாளும் மாற்றங்கள் இல்லை. ஆனால் நம்மைப் போன்ற சாதாரணர்களின் வார்த்தைகள் நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வண்ணம் மாற்றமடைபவை. நம்மிடம் ஒரு தொடர்ச்சி இல்லை. நாம் நமது விருப்புறுதியின் படி செயலாற்ற விரும்புவதில்லை. ஆகவே நாம் நமது சாதாரணத்தன்மையை எளிதில் ஏற்றுக் கொண்டு அதன் மரணக் கிணற்றில் வட்டமடிப்பதையே இந்த உலகின் மாபெரும் சாகசமாகக் கருதுகிறோம். இந்நிலையை நாம் அறிந்திருப்பதினாலேதான், நமது தோல்வியுற்று ஒடுங்கியிருக்கும் மனத்திலிருந்து ஒரு நாயகனை உருவாக்குகிறோம். யாரெல்லாம் தங்களது விருப்புறுதியின்படி செயலாற்றுகிறார்களோ அவர்களே நாயகர்கள். அவர்களது செயல்கள் அனைத்தும் எதிர்வினையல்ல. அவர்களே வினையின் துவக்கம். ஆனால் ஒரு நாயகனின் மரணத்தினாலன்றி ஒரு துன்பியல் படைப்பு முழுமையடையாது. அதிலும் எதார்த்தத்தின் அத்தனை வாள்களும் அவன் உடலில் பாய்ந்து அவன் வீழாமல் நாம் நமது வரலாற்றின் அரங்கில் எழுந்து நின்று எந்த நாயகனின் மரணத்திற்கும் கைதட்டுவதில்லை. நமது எதார்த்தத்தைக் கைவிட்டு விட முடியாத நாமே நாயகனின் மரணத்திற்குக் காரணமானவர்கள். விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நாம், நாயகனின் மரணத்திற்குப் பார்வையாளர்களாகவும், அவர்களுக்கு சிலை வடிப்பவர்களாகவும் இருக்கிறோம்.

இன்பியல் படைப்பு சாதாரணர்களின் எதார்த்தத்தைக் கொண்டாடுவது. ஒரு நாயகனின் முன்னே நிற்கும் உலகின் பிரதிநிதிகளை அவனோடு சண்டையிடச் செய்வது. ஒரு நாயகன் சாதாரணர்களின் எண்ணற்ற தடைகளைக் கடக்க வேண்டும். கிரேக்க துன்பியல் நாடகங்களுக்கு எதிராக எழுதப்பட்டவையே இன்பியல் நாடகங்கள். இதிகாசங்கள் துன்பியல் பாதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அவற்றின் நோக்கம் உயர்வான ஒன்றை உருவாக்குவது. அவை சமூக இலட்சியங்களின் மாதிரிகளை உருவாக்க முனைபவை. மனிதனை ஒரு தீவிர விசாரணைக்கு உட்படுத்துபவை. இன்பியல் தீவிர விசாரணையின் மறு எல்லையில் நின்று தனித்துவமற்ற அன்றாடத்தைப் பேசுவது. இன்பியல் அடிப்படையில் நோக்கமற்றது என்பதோடு எதிர்காலத்தையும் மறுப்பது. ஓர் இன்பியல் படைப்பிலிருந்து சமூகம் தனது இலட்சியங்களை உருவாக்கிக் கொள்ள முடியாது. சான்சோ பான்சா எவ்வித இலட்சிய உணர்வும் இல்லாத சாதாரணன். ஆனால் அதே சமயம் தராசில் இன்னொரு தட்டில் கிஹோத்தேவிற்கு நிகராக அமர்ந்திருப்பவன். எண்ணற்ற சாதாரணர்கள் சேர்ந்தே ஒரு நாயகனை உருவாக்குகிறார்கள். அவனோடு தங்களைப் பிணைத்தாலும் அவனது விதியை தங்களது கூட்டு விதி செல்லும் பாதையில் முன்னே அனுப்பிப் பரீட்சித்துப் பார்ப்பவர்கள். ஒரு கருத்தியலோ இலட்சியமோ தோல்வியுற்றால், சாதாரணர்கள் ஒருகணம் திகைத்துக் கலைந்துபோன தங்களை ஒருங்கிணைத்துக் கொள்கிறார்கள். மீண்டும் அவர்கள் ஆலைகளுக்குத் திரும்பி புதிய மருந்துகளை உற்பத்தி செய்யத் துவங்குகிறார்கள்.

செர்வாண்டிஸ் இந்த இரண்டு படைப்பு வகைமைகளையும் அருகருகே நிறுத்திப் பார்க்கிறார். குவிக்ஸாட்டைப் பொறுத்தவரையில் நாயகன் அடையும் அதே அளவு துன்பத்தை இலட்சிய மயக்கங்கள் அற்ற சான்சாவும் அடைகிறான். நாயகர்களோடு நாமும் துன்புறுகிறோம். நாயகர்கள் இல்லையென்றால் நம்முடைய துன்பங்களுக்கு வடிகாலும் இல்லை. நம்முடைய சாதாரணத்தன்மையின் சலிப்பிலிருந்து தப்பிக்கவே நாயகர்களை உருவாக்குகிறோம். கிஹோத்தே எனும் நாயகன் தனது சாதாரணத்தன்மையை உணர்ந்து ஒரு நாயகனாகவே உருவகித்துக் கொண்டு சாதாரண உலகிலிருந்து அசாதாரண உலகிற்குள் நுழைகிறான். அவன் குதிக்க முனையும் அசாதாரண உலகு இதிகாச காலங்களின் உலகு. அகத்திற்கும் புறத்திற்கும் வேறுபாடில்லாத உலகு.

இதிகாச காலங்களின் உலகை, கியார்க் லூகாஸ் இவ்வாறு வரையறுக்கிறார்.
`அகவயமென்ற (interiority) ஒன்றே உருவாகியிருக்கவில்லை, அவ்வாறே புறவயமும், ஆன்மாவின் மற்றொன்மையும் (otherness). சாகசங்களைத் தேடி வெளியேறும், சாகசங்களின் வழியாகவே வாழும், தேடுதலின் இயல்பான துன்பத்தையும், கண்டடைதலின் உண்மையான அபாயத்தையும் அறியாத ஓர் ஆன்மா தன்னைப் பணையம் வைப்பதுமில்லை, தன்னையே இழந்துவிட முடியுமென்று அறிந்திருக்கவுமில்லை, தன்னையே தேட வேண்டுமென்று ஒருபோதும் நினைத்திருக்கவுமில்லை. இதிகாசங்களின் காலம் அப்படிப்பட்டதொரு காலம். (நாவல் கோட்பாடு, பக் 30).

கிஹோத்தே, தனது அகவயம் வேறு ஒன்றாகவும், புறவயம் முற்றிலும் சீர்திருத்தப்பட வேண்டியதென்றும் நினைக்கிறான். இங்கே இரு வெளிகளுக்கும் வேறுபாடில்லாத காலத்தில் அவன் வாழ்வதில்லை. இவ்விரு வெளிகளையும் தனித்தனியாகப் பிரித்துவிட்ட ஓர் உலகம் (நவீன காலம்) உருவாகிக் கொண்டிருப்பதையும், இவ்வாறு பிளவுண்ட உலகில் ஆன்மா தன்னையே தேடும் அகவய சாகசப் பயணமே இலக்கியப் படைப்பாக (அதாவது நாவலாக) எழுதப்பெறும் என்று முன்னறியும் அவன், மனித குலத்தையே இதிகாச காலங்களுக்கு பின்னிழுத்துச் செல்லும் ஓர் இறுதி முயற்சியாக அளவில்லாத துன்பங்களைச் சந்திக்கப் போகும் ஒரு சாகசப் பயணத்தை எவ்வித திட்டமும் இன்றி துவங்குகிறான். அவன் குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அந்தப் பொறுப்பைத் தனது குதிரையிடம் விட்டு விடுகிறான். உறுதியான ஒன்றைப் பின்பற்றி நகர்வதில் சாகசம் என்பதேயில்லை. சாகசம் எதிர்பாராமல் நிகழ வேண்டியது. முன்னேற்பாடும் சாகசமும் வேறானவை. தனது உயிரை, உடலை, சுருக்கமாகத் தனது வாழ்வை அவன் எதேச்சைகளின் திசையில் செலுத்துகிறான். அவனுடைய குறைந்தபட்ச உறுதிப்பாடு ஒன்றே ஒன்றுதான், இந்த உலகில் அநீதிகளுக்குக் குறைவேயிருக்காது என்பதுவே.

இதிகாச காலத்திற்கான ஏக்கத்தையும், பிக்காரிஸ்க், பாஸ்டோரல் நாவல்களின் காலத்தைய வீழ்ச்சியையும் செர்வாண்டிஸ் இணைக்கிறார். மறுமலர்ச்சிக்கால ஆன்மா ஒரு மீனைப் போல் துள்ளுகிறது. அதனால் நீரிலும் இருக்க முடியாமல், வெளியிலும் தொங்கிக் கொண்டிருக்க முடியாமல் மேற்பரப்பில் துள்ளித் துள்ளி எழுகிறது. கிஹோத்தே, செர்வாண்டஸின் குளத்தில் துள்ளும் ஒரு மீனணைய ஆன்மா. மாற்றமேயில்லாத நம்பிக்கைகளின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்ப முனையும் நவீன இலக்கியத்தின் முதல் ஆதாம்.

எனினும் இதற்கு முற்றிலும் எதிரான ஓரிடத்திலிருந்து, நபக்கோவ், இந்நாவலை முதல் நவீன நாவல் என்று அழைப்பதைப் பொருளற்றது என்கிறார். நாவலில் சொல்லப்படுவதைப் பார்த்தால் ஸ்பெய்ன் நாடே வீரசாகச அபத்தக் குப்பை நாவல்களை வாசித்து மூழ்கிக் கிடப்பதாகத் தோன்ற, விளாதிமிர் நபக்கோவ் இந்நாவல் எழுதப்பட்ட காலத்தில் வீரசாகச நாவல்கள் பரண்களில் குடியேறிவிட்டன என்கிறார். மேற்சொன்ன அபத்தக் குப்பைகளைத் தாக்குவதற்காக செர்வாண்டிஸ் ஆயிரம் பக்க நாவலை எழுதத் தேவையிருந்திருக்கவில்லை எனும் நபக்கோவ், செர்வாண்டிஸே வீரசாகச நாவல் மரபை நவீன இலக்கியத்திற்குக் கடத்தியிருக்கிறார் என்கிறார். டான் கிஹோத்தே நாவலின் மீதான தனது ஹார்வார்ட் பல்கலைக்கழக உரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

`செர்வாண்டிஸ் எதையுமே அழித்திருக்கவில்லை, உண்மையில் இன்று, நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த அதேயளவு வேட்கையோடு நமது பல்ப் இலக்கியத்திலும், திரைப்படங்களிலும் கன்னிப் பெண்கள் காப்பாற்றப்பட்டும், பூதங்கள் வெட்டி வீழ்த்தப்படவும் செய்கின்றன. துவந்தங்களாலும், அசட்டு வேட்புகளாலும், அடல்ட்டரியாலும் நிரம்பியிருக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காண்டினெண்டல் நாவல்கள் வீரசாகசப் புத்தகங்களின் நேரடி வழித்தோன்றல்களாகவே இருக்கின்றன`. (டான் குவிக்ஸாட் மீதான உரைகள், பக்40)

நபக்கோவ் சொல்வதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், செர்வாண்டிஸ் கடந்த காலத்தின் ஒரு பொருளைத் தனது நாவலின் நோக்கமாக வரித்திருக்கிறார். ஆனால் செர்வாண்டிஸ் எழுப்ப நினைக்கும் கடந்த காலமென்பது இதிகாசங்களின் கடந்த காலம் அல்ல என்கிற அளவில், நாம் செர்வாண்டிஸின் நோக்கம் ஓர் இதிகாசத்தைப் படைப்பதல்ல என அறியலாம். அதற்கு எதிர் துருவத்தில் நின்று அவர் ஒரு நாவலை எழுத முனைந்திருக்கிறார், நாவல் எனும் இலக்கிய வகைமையின் கட்டமைப்பை அறியாமலே. அவரோடு சேர்த்து நான்கு நூற்றாண்டுகால இலக்கியப் பெரும்பிரதிகள் தோன்றவும் வழியமைத்திருக்கிறார்.

4

கலை, பகுத்தறிவினுடைய எல்லைகளின் அனுபவ வரம்பை மீறும் வழிமுறையை உடையது என்கிறார் நபக்கோவ். செர்வாண்டிஸிற்கு இந்த நம்பிக்கை எராஸ்மஸின் உலகப் பார்வையின் வழியாக வந்திருக்க வேண்டும்.
கிஹோத்தேவை அவ்வப்போது பைத்தியமாகிவிடும் கனவான் என்று மதிப்பிடுவதா அல்லது அவ்வப்போது தெளிந்துவிடும் பைத்தியக்காரன் என்று மதிப்பிடுவதா என்றொரு குழப்பமும் நாவலின் ஏனைய கதாபாத்திரங்களைப் போலவே நமக்கும் எழக் கூடும். அவர்களோடு சேர்ந்து நாமும் அவனோடு பயணிக்கிறோம், அவனைக் கேலி செய்கிறோம், அவனுடைய பேருரைகளைச் செவி மடுப்பவர்களாக நடிக்கிறோம். அவன் எத்தனை முறைதான் வீரசாகச வாழ்வின் பெருமைகளைப் பேசினாலும் நாம் ஒருமுறை கூட அதைத் தீவிரமாகக் கருதாததின் காரணம் ஏனைய கதாபாத்திரங்களைப் போலவே அதற்கான காலம் கடந்திருப்பதை அறிந்திருப்பதனால்தான். ஆனால் அவன் மற்றவர்களின் அறியாமையைக் கேள்வி கேட்பதில்லை. மற்றவர்களின் அறியாமையைத் தான் ஏற்றுக் கொள்வதைப் போலவே மற்றவர்களும் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வெளிப்படையாக இறைஞ்சுகிறான். சில சமயங்களில் மிரட்டலாகவும்.

பார்த்தேயிராத பெண்ணின் மீது வைத்திருக்கும் பிறழாக் காதல், சிங்கத்திற்கு எதிரே நின்றாலும் கைவிட்டிராத இலட்சியம் எனும் இரட்டைப் பைத்தியங்களின் கைதியாக இருக்கும் கிஹோத்தே தனது நம்பிக்கைகளின்பால் சிற்றளவும் சந்தேகமில்லாத ஒரு நேர்மறையாளன். அவனைப் பொறுத்தவரையில் புத்தகமும் உண்மையும் ஒன்றே. ஆனால் அவனது நோஞ்சான் குதிரையான ரோஸினெந்தே, நாவல் முகப்பில் உள்ள ஈரேழ்வரிப்பா ஒன்றில். `தொட்டிலில் இருந்து கல்லறை வரையிலும்` அவன் ஒரு கழுதையே (முட்டாள்) என்கிறது மற்றொரு குதிரையிடம். வீரசாகசங்களின் பால் அவன் கொண்டிருக்கும் ஈடுபாடும், டுல்சீனியாவின் மீது கொண்டிருக்கும் காதலையும் தவிர உலகின் எதைப்பற்றிப் பேசினாலும் ஒரு `தெளிந்த` மனிதனாக இருக்கும் குவிக்ஸாட் தனது பொருத்தமில்லாத அல்லது காலத்திற்கு ஒவ்வாத இலட்சியத்தையும், ஏளனத்திற்குரிய தனது காதலையும் யாராவது குறைத்து மதிப்பிட்டால், கேலி செய்தால் நீண்ட விளக்கங்களை அளிப்பதோடு, சிலசமயம் கோபப்படவும் செய்கிறான். இவை இரண்டுமே (இலட்சியமும், காதலும்) அவனது மனதிலே உதித்தவை அல்ல. மேலும் அவனுடைய இரண்டு பைத்தியங்களும், எதார்த்தத்திலிருந்து அவனுடைய மனதில் குடியேறியவையும் அல்ல. இந்த உலகின் பலநூறு சலனங்களும் அவனுக்குப் பைத்தியத்தை உண்டாக்கவில்லை. அவனுடைய சற்றும் தணிந்திராத இரண்டு பைத்தியங்களும் புத்தகங்களால் உருவானவை. அவனுடைய காதலியான டுல்சீனியாவும், வீரசாகச வாழ்வின் மீதான பிடிப்பும் புறவய எதார்த்தத்தின் விளைவுகள் அல்ல. அவை அகத்திலிருந்து எழுந்தவை. அவனுடைய அகமோ வீரசாகசப் புத்தகங்களின் சக்கரத்தில் வடித்தெடுக்கப்பட்ட கலம். கிஹோத்தேவே ஒரு புத்தகம்தான். புனைவின் உண்மைகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள அவனுக்கு, `இந்த உலகின் ஒரு வரலாறும் (தான் வாசித்த புனைவுகளை விட) உண்மையானதல்ல`. வரலாற்றை உண்மையை ஆவணப்படுத்தும் முயற்சி என்று நாம் கருதினால் வசியமும், சண்டைகளும், துவந்தங்களும், காயங்களும், காதலும் இல்லாத வரலாறு இவையெல்லாம் நிரம்பிய புனைவுகளின் அளவிற்கு உண்மையை ஆவணப்படுத்தியிருக்கவில்லை. எதார்த்தம் ஓரிடத்திலும் கூட அவனுடைய மனப்போக்கில் குறுக்கிடுவதில்லை. புனைவோ வாழ்வை வரம்பற்று இடையீடு செய்கிறது.

பூதங்களும், வசியக்காரர்களும் இல்லாத வரலாற்று உண்மைகளை அவன் புறந்தள்ளுகிறான். ஒரு பூதத்தோடு சண்டையிடும் வாய்ப்பை அவனுக்கு வழங்காத உலகம் அவனைப் பொறுத்தவரையில் நேர் செய்யப் பட வேண்டிய ஒன்று. அடிக்கடி அவன் வரலாற்றையும், தொன்மங்களையும், கட்டுக்கதைகளையும் சேர்த்துக் குழப்பிக் கொள்கிறான். அவனைப் பொறுத்தவரையில் விசயங்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றோடு நீக்கமறக் கலந்திருக்கின்றன. நம்மைப் போல அவன் எவற்றையும் பிரித்துப் பார்ப்பதில்லை. புனைவும் வரலாறும் தொன்மங்களும் அபத்தங்களும் நாட்டார் கதைகளும் கலந்து உருவாகும் ஒரு பெரும் எதார்தத்த்தைக் கட்டமைக்க விரும்புகிறான். அங்கே எதார்த்தம் புனைவைப் புறந்தள்ளுவதில்லை.

அவனுடைய பகுத்தறிவின் மீது நாம் சந்தேகமுறக் காரணமும் அவனது இந்த நம்பிக்கையே. உலகின் உண்மைகளும், புனைவின் உண்மைகளும் வேறு வேறானவை என ஒரு தெளிவான மனம் பிரித்துப் பார்க்க, கிஹோத்தேவின் மனதோ புனைவின் உண்மைகளின் படி உலகைப் பார்க்கிறது. நமது கண்களுக்கு ஆடுகளாகத் தெரிபவை அவனுக்கு படைநடத்தும் சிப்பாய்களாகத் தெரிகின்றன. இதனாலேதான் நாம் அவனைப் பைத்தியக்காரன் என்கிறோம். ஆனால் அவனோ தான் காண்பவை அனைத்துமே உண்மையென்றும், அவை வேறொன்றாகத் தெரிந்தால் அது அவனைத் தொடர்ந்து வரும் வசியக்காரர்களின் வேலையே எனச் சொல்லி, மாயாவாதத்தை நெருங்குகிறான். பகுத்தறிவின் எல்லையையும், நம்பிக்கையின் உறுதியையும் ஒருசேர விவாதிக்கிறான். நாம் காண்பவை அனைத்துமே பிறழ்தோற்றம் கொண்டவை என்பதே இதன் பொருள். இதில் நமக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம். ஆனால் அவனுக்கு சிற்றளவும் சந்தேகமில்லாமல் இருப்பதன் காரணம், அவனால் தான் காண்பவற்றின் பிறழ் தோற்றங்களுக்கு அப்பால் தனது பார்வையை நிறுத்த முடிவதே. புலனாகும் தோற்றங்களுக்கு அப்பாற்பட்டு தான் நம்பும் ஒரு தோற்றத்தைப் பொருட்களுக்கு வழங்கும் கிஹோத்தே மனித இருப்பின் கயிற்றரவு நிலையை காலாகாலத்திற்கும் விவாதத்திற்கு உட்படுத்துகிறான். காரணகாரியங்களின் வழியாக அல்லது முழுதும் தற்செயல்களின் வழியாக உலக இயக்கம் நிகழ்வதாக நாம் விளக்கங்கள் அளிக்க முனைந்தாலும், நம்மால் இவற்றில் எது ஒன்றையும் எளிதாக மறுத்துவிட முடியாது. பழைய உலகின் வழி வந்தவர்களால் காரணகாரியத்தின் பக்கமும், அறிவெழுச்சிக்காலத்தின் பின்வந்தவர்களால் தற்செயல் விளக்கத்தின் பக்கமே நிற்க முடியும். செர்வாண்டிஸ் இந்தப் பிரிவினை மனித வரலாற்றில் மேலெழுந்த காலத்தில் கிஹோத்தேவைப் படைத்து இரண்டு தரப்பினரையும் உரையாட வைக்கிறார்.

`மனித வாழ்வின் அடிப்படை இயல்பையும், மனிதனது மாபெரும் மீபொருண்மைச் சிக்கலான எதார்த்தத்தையும் மாயையும் விவாதிக்கும் ஒரு நாவலாக டான் குவிக்ஸாட் மாறிவிடுகிறது` (சாமுவேல் புட்னம், 1953ஆம் ஆண்டில் பதிப்பித்த மொழிபெயர்ப்பின் முன்னுரையில்). கிட்டத்தட்ட ஆயிரம் பக்க நாவலொன்றில் அதன் முதன்மைக் கதாபாத்திரம் எதார்த்தம், மாயை ஆகியவற்றைப் பற்றி விவாதிப்பதில்லை. இவற்றின் இடையே நின்று தனித்தனியாக ஒரு பொருளின் இரண்டு தோற்றங்களைப் பிரித்துப் பேசுபவனாக அவன் இல்லை. ஒரு நவீன நாவலில் பாத்திரங்கள் அவ்வாறுதான் படைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு பகுத்துப் பேசுபவனாக அதாவது பகுத்தறிவினால் உலகை அளக்க முற்படுகின்றவனாக அவன் வெளிப்படுவதில்லை. அவனைப் பொறுத்தவரையில் எதார்த்தமென்றும் மாயை என்றும் ஒரு பிரிவினையே எழுவதில்லை.

எதார்த்தத்திற்கும் மாயைக்கும் இடையே நின்று, நவீன நாவல்களின் கதாபாத்திரங்களைப் போல அவன் கேள்விகள் எழுப்புவதில்லை. அவன் பக்கச்சார்பற்று இரண்டிலுமே தன்னைக் கரைத்துக் கொள்கிறான். அவனுடைய எதார்த்தம் என்பது நம்முடைய மாயை. நம்முடைய மாயை எதுவென்று அவன் ஒருபோதும் விவாதிப்பதில்லை. எதார்த்தமென்றும் மாயையென்றும் ஒரு பிரிவினையே இல்லாததால் அவனிடம் இரட்டைத்தன்மையும், குழப்பமும், சந்தேகமும் இல்லை. விசயங்கள் இவ்வாறுதான் நிகழ்கின்றன என அவனால் அறுதியிட்டுக் கூற முடிகிறது.

`உனக்கு நாவிதனின் பாத்திரமாகத் தெரிவது எனக்கு மாம்பிரினோவின் தலைக்கவசமாகத் தெரிய, வேறு ஒருவருக்கோ வேறொன்றாகத் தெரியும்` (ப.195).

கிஹோத்தே சான்சோ பான்சாவிடம் சொல்லும் இவ்வாக்கியமே நம்முடைய மற்றும் அவனுடைய எதார்த்தங்களுக்கு இடையேயான வேறுபாட்டை உணர்த்துகிறது.  அவனுடைய எதார்த்தத்தில் பூதங்களும், வசியக்காரர்களும் தொடர்ந்து குறுக்கிடுகின்றனர். ஆதலால் அவன் பூதங்களின், வசியக்காரர்களின் எதார்த்தத்தில் குறுக்கிட விழைகிறான். குறுக்கீடுகளையும், வன்முறையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவன் முன்பே அறிந்திருக்கிறான். அவனுடைய புத்தகங்கள் அவற்றை அங்கீகரித்திருக்கின்றன என்பதோடு வன்முறையை பொருள் மிக்கதாகவும் மாற்றியிருக்கின்றன. அவனுடைய உலகைப் பொறுத்தவரையில் வன்முறை, ஒரு புத்தகத்தின் உண்மையை நிறுவத் தேவையானது. வன்முறையின் இரண்டு விளைவுகளான வெற்றியும், தோல்வியும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை. வலியையும், வேதனையும், காதல் பிரிவையும், பசியையும், சோர்வையும் ஏற்றுக் கொள்வதில் அவன் ஒருபோதும் மனமுடைவதில்லை (ஆனால் அவனுடைய நிலையை இரண்டாம் பாகத்தின் ஆரம்பப் பகுதிகளிலேயே உணரத் துவங்கிவிடும் அறிகுறிகளை நாம் பார்க்கலாம்). வீரத்திருமகன்கள் உணவு கிடைக்கவில்லை என்றால் இலைதழைகளைத் தின்று உயிர்வாழ்வார்கள் என்று அவன் வாசித்திருக்கிறான். வீரத்திருமகன்களுக்கு பட்டு மஞ்சங்கள் எதுவுமே தேவையில்லை என்பதால், அவனால் கட்டாந்தரையிலும் உறங்க முடியும். அவ்வாறு துன்பங்களை ஏற்பதே வீரத்திருமகனின் இலக்கணம். கிஹோத்தே, புத்தகங்கள் உருவாக்கியிருக்கும் இலக்கணங்களின் படி உருவானவன். அவனால் எதையும் சந்தேகமுற முடியாது. புனைவின் உண்மைகளுக்குப் பொருந்தாத உலகின் உண்மைகள் அவனால் மாற்றப்பட வேண்டியவை. ஆனால் ஒர்டெகா ஒய் கசட் சொல்வதைப் போல ‘the will is real but what is willed is not real’. கிஹோத்தே இந்த உலகை அவனுடைய புத்தகங்களின் புளூபிரிண்டில் உள்ளபடியே கட்டியமைக்க விரும்பும் நோக்கம் எதார்த்தமானது (நம்மைப் போலவே). ஆனால் உலகை எந்த ஒரு புத்தகத்தின் படியேயும் கட்டியெழுப்ப முடியுமா?

ஒவ்வொருவரின் இலட்சியார்த்த எண்ணமும் பெளதீக வெற்றியாக மாறாதவரை அவை குவிக்ஸாட்டிய எண்ணமாகவே இருக்கின்றன. தர்க்கப் பொறுத்தப்பாட்டின் துணையில்லாவிட்டால் மனித வாழ்வின் பல எத்தனங்கள் பைத்தியக்காரத்தனத்தில் சேர்ந்துவிடும். நமது நம்பிக்கைகளின் செலாவணியைச் சரிபார்த்துக் கொள்ள நமக்குத் தர்க்கம் எனும் ஒரு கருவி இருக்கிறதென்றால் கிஹோத்தேவிற்கும் தர்க்கம் துணை புரிகிறது. தர்க்கப்பூர்வமான உலகின் எல்லைகளைக் கடந்த எளிதில் விவரித்துவிட முடியாதவையும் உண்டு எனும் கருத்தின் புனைவு மனித வடிவமே அவன். என்றாலும் அவனது தோல்விகள் அனைத்திற்கும் பின்னணியில் வசியக்காரர்கள் இருக்கிறார்கள் எனும் `பகுத்தறிவிற்கு` ஒவ்வாத தர்க்கத்தைப் பயன்படுத்துகிறான். நாம் ஒரு காற்றாலையில் மோதினால் மண்டை உடைந்து விடும் என்கிற எதார்த்தத்தின்பால் நின்றால், அவனோ அதைப் பூதமாகவே கருதி அதனை நோக்கித் தனது குதிரையை விரட்டுவான். இதனால் அவனுக்கு உண்டாகும் வலியும், வேதனையும் அவன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவையே அல்லாமல் பொருட்படுத்தத் தேவையில்லாதவை. அவன் வாசித்த புத்தகங்கள் அவனை இந்நிலைக்குத் தயார் செய்திருக்கின்றன. அவன் அடையும் வெற்றிகளையும், தோல்விகளையும் கூட அவன் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் அவனை மோசமாகத் தாக்கியவர் யாரென்று கூட அவன் அறிந்துகொள்ள முயல்வதில்லை. தானாகவே ஒரு முடிவிற்கு வந்து விடுகிறான். வசியக்காரர்களின் வேலையே அது என்றும் ஒரு வீரநாயகனாக இவற்றை எல்லாம் எதிர்கொண்டும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டுமென்கிற தனது புத்தகங்களின் உண்மைகளிடம் உடனே தஞ்சமடைகிறான். வேறொரு வார்த்தையில் சொன்னால், தனது துன்பங்களுக்கும், வலிகளுக்கும் எதார்த்த உலகில் காரணம் தேடாமல் தனது புத்தகங்களினால் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட பதிலால் சமதானமடைகிறான்.

செர்வாண்டிஸின் இக்கதாபாத்திரம் அவர் அறிந்தோ அறியாமலோ நம்பிக்கையின் பால் நிற்பதாகப் படைக்கப்பட்டிருப்பதாக நாம் கருதினால், கார்லோஸ் ஃபுயந்தஸ் அவ்வாறு ஒருபக்கத்தில் டான் கிஹோத்தேவை அவர் நிறுத்தவில்லை என்கிறார்.

எதார்த்தத்தை அதன் பாரிய அளவில் அறிய முயலும் மனிதன் தன்னியல்பைக் கடக்க வேண்டும். கருத்துக்களாலும், அனுபவங்களாலும் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் ஒரு மனதால் எதார்த்தத்தை ஒருபோதும் அடைந்துவிட முடியாது. ஏனெனில் எதார்த்தம் ஒழுங்கற்றது, எளிதில் பிடிபடாதது. அதிபுனைவு வெளியை எளிதில் அடைந்துவிட முடிவதைப் போல நம்மால் எதார்த்தத்தை அடைய முடியாது. பல கைகள் உடைய போரிடும் ஒரு பெண் தெய்வத்தைப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் நம் அருகிலே வசிக்கும், வாய்ச்சண்டையிடும், இரண்டு கைகளை உடைய ஒரு பெண்ணில் தெய்வீகத்தைக் காண்பது கடினமானது. ஆகவே நாம் வேறொன்றாக மாறும் வரை, நாம் அறிந்தவற்றைக் கைவிடத் தயாராகும் வரை நமக்கு எதார்த்தம் எனும் யானையின் வடிவம் அதன் ஒரு கால் மட்டுமே. கிஹோத்தே ஒரு பைத்தியக்காரனாக மாறினால் அன்றி அவன் ஏற்கனவே பழகியிருக்கும் எதார்த்தத்திலிருந்து விடுபட முடியாது. செர்வாண்டிஸ் ஆரம்பித்து வைத்த ஒரு தொடரின் மிகக் கச்சிதமான புள்ளியாக காஃப்காவின் கிரிகோர் சோம்சா இருக்கிறான். கிஹோத்தே பைத்தியக்காரனாக மாற அவனுடைய மகள் (சீமாட்டி பெளவரி) வழிப் பேரனான கிரிகோர் சோம்சா ஒரு பூச்சியாக மாறுகிறான். எதார்த்தத்தை அதனுடைய அணுக்களில் நுழைந்து பார்ப்பதற்கு அவர்கள் இருவரும் தாங்களே வேறொன்றாக மாற வேண்டியிருந்தது.

டோபியாஸ் ஸ்மால்லெட்டினால் 1755ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட குவிக்ஸாட்டின் 2001ஆம் ஆண்டு பதிப்பிற்கு முன்னுரையாகப் பயன்படுத்தப்பட்ட 1975ஆம் ஆண்டு ஹெக்கெட் நினைவு உரையில், கார்லோஸ் ஃபுயந்தஸ் குறிப்பிடுகிறார்:

`அனைத்துமே சாத்தியம். அனைத்துமே சந்தேகத்திற்குரியவை. காஸ்டிலின் மையப் பீடபூமியிலிருக்கும், லா மாஞ்சாவின் உலர்ந்த சமவெளியிலிருந்து வரும் வயதான ஹிடால்கோ (Hidalgo) ஒருவன் மட்டுமே, உறுதிப்பாட்டின் விதிமுறைகளைப் பின்பற்ற முடியும். அவனைப் பொறுத்தவரையில், எதுவுமே சந்தேகத்திற்கு உரியவையல்ல, அனைத்துமே சாத்தியம்.`

5
கிஹோத்தேவின் வயது, அவனது பெயர், செல்லும் வழித்தடம், ஊர் என எதுவுமே உறுதிபடத் தெரியாது. நாவலின் முதல்நிலை ஆசிரியரான சைத் ஹமீத் பெனங்காலி ஒரு மூர். சந்தையில் உலவும் ஒரு மூர் சிறுவனிடமிருந்தே `காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட எதையுமே` வாசித்துவிடும் செர்வாண்டிஸ், கிஹோத்தேவின் பிரதியை மொழிபெயர்த்து வாங்குகிறார். கிஹோத்தேவின் வரலாறே ஒரு மொரிஸ்கோவின் (morisco – கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய மூர்) மொழிபெயர்ப்பின் வழியாகவும், அரபிப் பிரதியில் அச்சிடப்பட்டிருக்கும் அவனுடைய படத்தின் வழியாக அவனது உருவமும் செர்வாண்டிஸிற்குத் தெரிய வருகிறது. இது வழக்கமான வீரசாகச நாவல்கள் எழுதப்படும் உத்திகளில் ஒன்றாகவும், செர்வாண்டிஸ் அவருடைய காலத்திய மத நிறுவனங்களின் தணிக்கைக்குப் பயந்து தன்னை ஒளித்துக் கொள்ளப் பயன்படுத்திய ஒரு மாறுவேடமாகவும் முன்வைப்பவர்கள் உண்டு. இதிலும் நம்மால் உறுதியான ஒரு கருத்தை எட்டிவிட முடியாது. கிஹோத்தேவிற்கு ஏதேனும் அவப்பெயர் எழுமானால் அது நம்ப முடியாதவர்களாகக் கருதப்படும் மூர் எழுத்தாளர் ஒருவரால் தவறாக அல்லது வேண்டுமென்றே அவனுடைய வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் செர்வாண்டிஸ். முதலில் கிஹோத்தேவின் வரலாற்றைப் பல்வேறு மூலகங்களில் வழியாகச் சேகரிக்கும் செர்வாண்டிஸ், தானே நாவலில் உருவாக்கிய கிஹோத்தேவின் முதல்நிலை ஆசிரியனான நம்பகத்தன்மை இல்லாத ஓர் இஸ்லாமிய எழுத்தாளனின் பிரதியை பிற்பாடு தனது வரலாற்றின் மையப்பிரதியாகக் கொள்கிறார். இது இரண்டு சாத்தியங்களை அளிக்கிறது. ஒன்று, கிஹோத்தே உண்மையில் ஒயின் பீப்பாய்களைப் பூதங்களாகக் கருதுபவனாக இல்லாமலிருக்கவும் வாய்ப்புள்ளது, இரண்டாவது ஒரு தூய, பழைய கிறிஸ்தவனான கிஹோத்தேவை தேவாலயம் நோக்கிச் செலுத்தாமலிருப்பதற்கு ஒரு மூர் அவனுடைய வரலாற்றை எழுதியதே காரணம் என முன்வைக்கும் மற்றொரு வாய்ப்பு.

செர்வாண்டிஸ் எதையும் உறுதியாகச் சொல்வதினின்று தப்பித்துக் கொள்கிறார். அதையே தனது நாவலின் பலமாகவும் மாற்றுகிறார். அவர் வாழ்நாட்களில் ஸ்பெய்ன் ஒரு நவீன தேசமாக வளர்ந்திருந்தது. இந்த நவீன தேசம் இரண்டு விதத்தில் கட்டியெழுப்பப்பட்டது. ஒன்பது நூற்றாண்டுகள் ஸ்பானிய மண்ணை ஆண்ட இஸ்லாமியர்களும், ஸ்பானிய நகரங்களில் வங்கியாளர்களாக, வரி வசூலிப்பவர்களாக, கடன் கொடுப்பவர்களாக, வியாபாரிகளாக, அரசு அலுவலர்களாக நிலைபெற்றிருந்த யூதர்களின் வெளியேற்றமும், தனது எல்லைகளுக்குள்ளாக அரகான், காஸ்டில், காடலோனியன், பாஸ்க், ஆஸ்தூரியர்கள், காலிசியன்கள் எனப் பல பிராந்தியங்களாகப் பிரபுக்களின், குறுநில மன்னர்களின் கீழேயிருந்த பகுதிகள் இணைக்கப்பட்டு ஒரே தேசமாக உருவானது. ஒரே சமயத்தில் இஸ்லாமியர்களை, யூதர்களை, கன்வர்சோஸ் என அழைக்கப்படும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய யூதர்களையும் (நாவலில் அடிக்கடி குறிப்பிடப்படும் பழைய கிறிஸ்தவர் எனும் பதத்தை நினைவுகொள்க) கூட வெளியேற்றுவது, தனது எல்லைக்குள்ளாக பல்வேறு பிராந்தியங்களாக, மொழிகளாக, நிர்வாக அமைப்புகளாகப் பிரிந்து கிடந்த கிறிஸ்தவர்களை ஒரு மைய அரசின் கீழே ஒன்றிணைப்பது எனும் இவ்விரு நடவடிக்கைகளும் எதிராக உள்ளூர சுதந்திரத்தையும், மனிதாபிமானத்தையும் விரும்பிய எராஸ்மஸின் கொள்கைகளின் பால் நம்பிக்கையுள்ள செர்வாண்டிஸ் தனது நாவலில் அதன் மையக் கதைக்கு வெளியே வைத்து விவாதிக்கும் மூர்களின், துருக்கியர்களின், கதைகளின் வழியாக மத முரண்களின் வரலாற்றையும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஜனநாயகத்திற்காகவும் பேசுகிறார். கிஹோத்தே ஒரு தூய்மைவாதியல்ல. ஆனால் அதே சமயம் ஒரு கச்சிதவாதி. அவனைப் பொறுத்தவரையில் அவனது காஸ்டில் ஸ்பானிய மொழி கறைபடுத்தப்படக் கூடாதது. சான்சோ பான்சாவாகட்டும், ஆட்டிடையர்களாகட்டும் சொற்களைத் தவறாக உச்சரித்தால் உடனே கிஹோத்தே அதைத் திருத்துகிறான். கிஹோத்தே மொழியைச் செம்மைப்படுத்துவதென்பது ஸ்பானிய ஒற்றுமை உணர்வுக்குத் துணைபோவதைப் போலத் தோன்றினாலும், ஒருமை என்ற பெயரில் மொழிப்பன்மை அழிக்கப்படுவதற்கு எதிரானதாகவும் இருக்கிறது.

ஒரு மருத்துவரின் மகனான செர்வாண்டிஸ், மூர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் அல்ஜீயர் சிறையில் கழித்தவர். பின்பு பிணையத்தொகை கொடுக்கப்பட்டு மீட்கப்பட்டவர். துருக்கியர்களுக்கு எதிரான கடற்போரில் தனது இடது கையை இழக்கிறார். வரி வசூலிப்பவராக இருந்து தப்புக் கணக்கிற்காக இரண்டு முறை சிறை வைக்கப்படுகிறார். தோல்வியடைந்த மருத்துவரான தனது தந்தையின் வாழ்வைப் போலவே ஒரு நாடக ஆசிரியனாக, நாவல் ஆசிரியனாக, போர் வீரனாக, வரி வசூலிப்பவனாக என அனைத்திலுமே தோல்வி காணும் செர்வாண்டிஸ், கிஹோத்தே நாவலின் முதல் பாகம் வெற்றியடைந்த போதிலும் சொற்ப ராயல்டியே அவருக்குக் கிடைத்தது. இப்படியொரு நாவலை அவர் தன்னுடைய சிறை நாட்களில்தான் கற்பனை செய்கிறார். கிஹோத்தேவின் சுதந்திர உணர்வின் ஆதார மூலகம் செர்வாண்டிஸின் சுதந்திரத்திற்கான வேட்கையே. இங்கே செர்வாண்டிஸிற்கும் அவர் உருவாக்கிய கதாபாத்திரத்திற்குமான வேறுபாடே மறைகிறது.

தனது பின்புலத்தினாலும், பல நூல்களை வாசித்துக் கற்றறிந்த செர்வாண்டிஸ் தனது நாவலின் நிச்சயமற்ற தன்மைக்குள் தம்மை ஒளித்துக் கொண்டு அவர் காலத்தில் நிறுவப்பெற்ற நிர்வாக அமைப்புகளை விமர்சிக்கிறார் எனவும் நம்மால் இந்நாவலை வாசிக்க முடியும். இன்றளவும் டான் கிஹோத்தேவை பல்வேறு வகைகளில் வியாக்கியானிப்பதற்கு செர்வாண்டிஸின் எதையுமே நிறுவாத, முரண்பாடுகளை வெளிப்படையாகத் திறந்து வைத்திருக்கும் அவரது பிரதியே காரணம்.

நாவல் கட்டமைப்பிலும் ஒரு நிச்சயமற்ற வடிவத்தைக் கையாள்கிறார். கார்லோஸ் ஃபுயந்தஸ் நாவலின் வடிவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

`வகைமைகளின் (genres) வகைமையான நாவலில் அவை அனைத்துமே இடம்பெறுவதற்காக ஒவ்வொரு வகைமையையும் உடைப்பதின் வழியாக செர்வாண்டிஸ் நவீன நாவலைத் துவக்கி வைக்கிறார். கிஹோத்தேவின் இதிகாசக் கதை, சான்சோ பான்சாவின் பிக்கரிஸ்க் கதையோடு கைகோர்த்திருக்கிறது. ஆனால் செர்வாண்டிஸ், மோரிஸ்கோ கதைக்காகவும், ரொமாண்டிக் நாவலுக்காகவும், பைசாண்டிய கதையாடலுக்காகவும், நகைச்சுவை, நாடகம், தத்துவம், கொண்டாட்டம், நாவலுக்குள்ளே நாவலுக்காகவும் குரல் கொடுக்கிறார். ` (இதை நான் நம்புகிறேன் பக் 210).

ஆனால் நபக்கோவ் நிச்சயம் இதை ஒப்புக்கொள்ள மாட்டார். நாவலின் முதல் வாக்கியமான, லா மாஞ்சாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத கிராமம் என்பதே வீரசாகச நாவல்களின் வழமையான துவக்கம் எனவும், நாவலில் ஓயாது பயன்படுத்தப்படும் நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், பழமொழிகள் ஆகியவையும் பிக்காரிஸ்க் நாவல்களின் வடிவத்திற்கேற்பவே எழுதப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகிறார்.

`டான் கிஹோத்தே ரொம்ப ஆரம்பகட்ட, நாவலின் ரொம்பவே ஆதியான வடிவத்தைச் சேர்ந்தது. பிக்காரிஸ்க் நாவல்களோடு நெருக்கமாகச் சேரக் கூடியது. (டான் கிஹோத்தே மீதான உரைகள் – பக் 11)`.

ஃபுயந்தஸ் நபக்கோவை மறுப்பார். தூய்மை, ஷேக்ஸ்பியரைப் போலவே செர்வாண்டிஸின் நோக்கமில்லை எனவும், அவர்களுடைய அக்கறை எல்லாம் விரிவான வடிவ சாத்தியமுள்ள கவித்துவ சுதந்திரமே என்கிறார். அவர் குறிப்பிடுவதைப் போல கவித்துவ சுதந்திரமே செர்வாண்டிஸை பல்வேறு வகைமைகளின் கதையாடல்களையும் கலக்க விட்டு ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் அவைகளின் ஓசையிலிருந்து ஒரு புதிய வடிவமான நாவல் பிறப்பதற்கு வழி செய்கிறார். நிச்சயமாக செர்வாண்டிஸிற்கு தானொரு புதிய வடிவத்தைப் பிறப்பிக்கிறோம் என்கிற உணர்வு இருந்திருக்காது. அவருடைய நோக்கம் பல வகைமைகளைக் கலந்து பார்ப்பது மட்டுமே.

ஒரு வகைமைத் `தூய்மையற்ற` பிரதி தோன்றுவதற்கு அப்போதைய ஸ்பானிய அரசியல் நிலைமைகளும் பின்புலமாகச் செயல்பட்டிருக்க வேண்டுமென நம்மால் ஊகிக்க முடிகிறது. தூய்மையற்ற ஒரு பிரதியை உருவாக்குவதென்பதே ஓர் அரசியல் செயல்பாடாக வாசிக்கப்படக் கூடிய சாத்தியத்தையும் செர்வாண்டிஸ் தருகிறார். இந்த ஒரு நாவலிலிருந்தே பல்வேறு நாவல் கோட்பாடுகளும் எழுகின்றன. பக்தின், லூகாக்ஸ், ஒர்டெகா, மிகுவேல் உனாமுனோ, ஃபூக்கோ, நபக்கோவ் துவங்கி ராபர்ட் ஸ்மிட், இயான் வாட் வரையில் பலரும் டான் கிஹோத்தே நாவலைக் கணக்கற்ற முறைகள் விவாதிக்கிறார்கள். செர்வாண்டிஸ் தன்னோடு சேர்த்து தனது வழித்தோன்றல்களான நாவலாசிரியர்களை மட்டுமல்ல, நாவல் கோட்பாட்டாளர்களையும் உருவாக்கியிருக்கிறார். செர்வாண்டிஸின் பத்தொன்பதாம் நூற்றாண்டு மாணவரான குஸ்தவ் ஃபிளாபர்ட் தனது பதின்பருவத்திலேயே கிஹோத்தேவை வாசித்து உண்டான ஈர்ப்பின் காரணமாகவே கிஹோத்தேவின் `எதார்த்த` உலகைச் சேர்ந்த பெண்பால் நகலான சீமாட்டி பெளவரியைப் படைக்கிறார். சார்லெட் லெனக்ஸ் எழுதிய பெண்பால் கிஹோத்தே அல்லது அரபெல்லாவின் சாகசங்கள் எனும் நாவல் செர்வாண்டிஸின் கிஹோத்தேவிற்கு பொருத்தமான பெண்பால் வடிவத்தை வழங்குகிறதோ இல்லையோ, புத்தக வாசிப்பில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு தனது ஏக்கங்களையும், சலிப்பையும் மறைத்துக் கொள்ளும் சீமாட்டி பெளவரிக்கு ஒரு மூதாதையை வழங்குகிறது.

நாவலில் ஓயாது குறிப்பிடப்படும் வீரத்திருமகன்களான கோலைச் சேர்ந்த அமதிஸ், இங்கிலாந்தின் பல்மெரின், பீபஸின் வீரத்திருமகன், டான் கலோர், பெர்ணார்டோ டெல் கார்பியோ, ஆர்லாண்டோ என ஆங்கிலேயர்கள் அழைக்கப்படும் ரோலண்ட், ரெய்னால்டோ தெ மொன்டல்பன் ஆகியோரை விடவும் தனது பெயர் வரலாற்றின் மாடங்களிலிருந்து உச்ச டெசிபல்களில் ஒலிக்கும் என்று கிஹோத்தே நம்புவதைப் போலவே இலக்கிய வரலாற்றில் டான் கிஹோத்தே நாவலின் தோல்வியடைந்த ஒரு வீரத்திருமகனின் பெயர் இன்றளவும் உரத்து ஒலிக்கிறது. தனது எதிர்கால வரலாற்றை மட்டுமல்ல தான் எழுதப்பெறும் நாவலின் எதிர்கால வரலாற்றையும் முன்னுணர்ந்த ஒரே கதாபாத்திரம் கிஹோத்தே மட்டுமே. செர்வாண்டிஸின் மேதமை அவருடைய முடிவும் துவக்கமும் அற்ற பிரதியின் வழியாக வெளிப்படுகிறது. மல்லார்மே குறிப்பிடும், `துவக்கமற்ற, முடிவற்ற ஆனால் அவ்வாறு பாசாங்கு செய்யும்` ஒரு புத்தகத்தை அவருக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பே செர்வாண்டிஸ் பின்னாளைய வியாக்கியானங்களின் கற்பனை விதைகளைக் கூடக் கண்டிராத நாட்களில் எழுதினார். நபக்கோவ் சொல்வது இங்கே ஒத்துப் போகிறது. நாம் இன்றளவும் வாசிக்கும் ஒரே வீரசாகசக் கதையும், வீரத்திருமகனும் டான் கிஹோத்தே மட்டுமே. அவர் சொல்வதைப் போலவே வீரசாகச நாவல்களை நம் காலத்திற்கும் செர்வாண்டிஸ் கடத்தியிருக்கிறார்.

கிஹோத்தே, இருபது வயதில் வீரத்திருமகனாக மாற விரும்பியிருந்தால் நாம் அவனை வேறுவிதமாக வாசித்திருப்போம். பதினாறாம் நூற்றாண்டில் பரவலாக விரவியிருந்த பிக்காரிஸ்க் நாவல்களில் ஒன்றாக இந்நாவலும் காலமறதியின் இரவு படர்ந்து தொலைந்து போயிருக்கும். கிஹோத்தே வீரசாகச நாவல்களை வாசித்ததின் மயக்கத்தில் தன்னையே ஒரு நாயகனாகக் கருதி வீட்டை விட்டு வெளியேறியதில் முதல் பொருத்தமின்மை அவனுடைய வயது. ஐம்பது வயதில் அவன் வீட்டிற்குத் திரும்பியிருக்க வேண்டும். அதன் பின்பே அவனுடைய வேட்டைநாயின் துணையோடு வேட்டைக்குச் செல்லவும், ஞாயிற்றுக்கிழமை விருந்தாக இளம் புறாக் கறியையும் சுவைத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு முற்றிலும் எதிராக மேற்சொன்ன, வாழ்வின் எளிய மகிழ்ச்சிகளைத் துறந்து, புத்தகங்களின் வழியாகத் தான் அறிந்திருக்கும் அத்தனை இடர்களையும், துன்பங்களையும், வலிகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வீட்டினின்று வெளியேறும் அவனுடைய துவக்கமே நமக்கு மீதி நாவலைச் சொல்லி விடுகிறது. ஒரு புத்தகம் சொல்லும் விசயங்களைப் பரீட்சித்துப் பார்க்க ஐம்பது வயது ஏற்புடையதல்ல.

ஒரு வரலாறாக எழுதப்படுவதற்குப் பொருத்தமான வாழ்வை வாழ விரும்பி தனது எதார்த்தத்தை முற்றிலும் புறந்தள்ளி, வயதிற்குப் பொருத்தமில்லாத ஒரு பயணத்தைத் துவங்கும் கிஹோத்தே தான் சார்ந்த அனைத்துமே புகழ் பெறும் என்பதையும் அறிந்திருக்கிறான். அதன் காரணமாகவே சாதாரணமான பெயரோடு டான் எனும் முன்னொட்டைச் சேர்க்கிறான். தனது பாத வெடிப்புகளை விடவும் அதிகமான வெடிப்புகளைக் குளம்புகளில் கொண்ட தனது குதிரைக்கு இணையே இல்லை என்று அவனுக்குத் தோன்றுகிறது. இது அனைத்துமே அவனது பைத்தியக்கார வாசிப்பிற்குப் பிறகு அவனுக்குத் தோன்றுபவை. ஒரு சாதாரண குதிரையை சரித்திரப் புகழ் பெறப் போகும் ஒன்றாக, ஒரு சாதாரண கிராமத்தவனின் வாழ்க்கை உலகளாவிய நீதிக்கான தேட்டமாகக் குறிக்கப்படுமென்றும், கணக்கற்ற முறை அவனால் குறிப்பிடப்படும் வீரத்திருமகன்களான, ஒரே சமயத்தில் புனைவு, கற்பனை, இதிகாச, வரலாற்று மனிதர்களைக் காட்டிலும் ஓர் உயரத்தைத் தன்னால் தொட முடியுமென்பதில் அவனிடம் கொஞ்சமும் சந்தேகமில்லை.

`பெர்சியாவின் மேஜைக்கள், இந்தியாவின் பிராமணர்கள், எத்தியோப்பியாவின் ஜிம்னோசோபிஸ்ட்களின் முட்டுக்கட்டையைக் கடந்து, நித்தியத்துவத்தின் கோயிலில் அவனது பெயர் பொறிக்கப்படும்` – பக் 409.
நித்தியத்துவம் இதிகாசக் காலங்களின் உள்ளார்ந்த கூறு. ஆகவேதான் கிஹோத்தே மிகுந்த நம்பிக்கையுடன் தனது காலத்தை இதிகாச காலங்களுக்குத் திருப்புவதின் வழியாக அதன் உள்ளார்ந்த கூறுகளில் ஒன்றான நித்தியத்துவத்தை எட்டி அதன் கையில் அமர்ந்து காலத்திற்கும் அதன் மார்புச் சூட்டில் தலை சாய்த்துக் கிடக்கும் ஒரு கோதிக் குழந்தை ஏசுவின் படிமத்தை எட்ட விழைகிறான். மதச்சார்பற்ற உலகில் தனது அடையாளத்தை உறுதியாகச் செதுக்கிக் கொள்வதின் வழியாகவே நித்தியத்துவத்தை அடைய முடியும். அடையாளத்திற்கான ஏக்கம் ஒருவகையில் நித்தியத்துவத்திற்கான ஏக்கமே.

6

செர்வாண்டிஸால், கிஹோத்தேவின் அபத்த சாகசங்களை ஆயிரம் பக்கங்களுக்கு விவரிக்க முடியாதென்பதால், அவ்வாறு விவரிக்க முனைந்தால் கிஹோத்தேவே அதன் சலிப்பில் எரிச்சலடைந்து பைத்தியம் தெளிந்து விடுவான் என்பதால் அடிக்கடி நாவலின் கட்டமைப்பிற்கு வெளியே சென்று விடுகிறார். முதல் பாகத்தில் இந்த விபத்து அடிக்கடி நேர்கிறது. இதனோடு ஒப்பிடுகையில் நாவலின் இரண்டாம் பாகம் ஓரளவிற்குக் கச்சிதமானது. நாவலில் புனைவுகளைப் பற்றிப் பேசுமிடத்தில் (எந்தப் படைப்பின்) இரண்டாம் பாகங்கள் சிறந்தவையாக இருந்ததில்லை எனக் குறிப்பிடப்படுகிறது (பக்.481). செர்வாண்டிஸ், இந்த நாவலில் புனைவு, நாடகம், கவிதை ஆகியவற்றின் இலட்சணங்களை பல்வேறு கதாபாத்திரங்களின் வழியாக விவாதிக்கிறார். அவர் விவாதிக்காமல் விட்ட இலக்கிய வடிவம் சிறுகதை மட்டுமே. அவர் காலத்தில் சிறுகதை தோன்றியிருக்கவில்லை.

கிட்டத்தட்ட இருநூறு பக்கங்களுக்கும் மேலாக விரியும், பெயர் குறிப்பிடப்படாத (இங்கே செர்வாண்டிஸ் ஆச்சரியமூட்டுகிறார்) கோமகனும், கோமகளும் செர்வாண்டிஸை பல்வேறு தந்திரங்களுக்கு உள்ளாக்கும் நாவலின் நெடிய பகுதி மற்றெந்த பகுதிகளைக் காட்டிலும் அதிக சுவாரசியமானது மட்டுமல்ல அதிகக் குரூரமானதும் கூட. இதனாலேதான் நபக்கோவ், நாவலின் இரண்டு பாகங்களும் குரூரத்தின் மெய்ப்படியான வாழ்வியற்களஞ்சியம் எனவும், இது எக்காலத்திலும் எழுதப்பட்ட புத்தகங்களிலே அதிகப்படியான கசப்பும், காட்டுமிராண்டித்தனமுமான ஒன்று எனவும் குறிப்பிடுகிறார்.

முதல் பாகத்தில் உடல்ரீதியாகத் தொடர்ந்து தாக்கப்பட்டும், இரண்டாம் பாகத்தில் மனரீதியாகத் துன்புறுத்தவும்படும் கிஹோத்தேவைக் கண்டு சிரிப்பதற்குப் பதிலாக நாம் அவனுடைய பைத்தியம் விரைவாகத் தெளிவதே நல்லதென்ற முடிவை எட்டி விடுகிறோம். இரண்டாம் பாகம் முழுக்க அவனைச் சோதனைக்கு உள்ளாக்கும் வழிமுறைகளை இம்முறை அவனது பைத்தியத்தின் சூறாவளியில் பயணிக்கும் வசியக்காரர்கள் உருவாக்குவதில்லை, மாறாகப் பெயரற்ற கோமகனும், கோமகளும் அவர்களுடைய வேலைக்காரர்களும் திட்டமிட்டு உருவாக்கியவை. கழுத்தில் மணிகட்டிய பூனைகளை இருட்டில் ஏவி விடுவதும், ஒரு மரக்குதிரையில் கிஹோத்தேவையும், பான்சோவையும் ஏற்றி இலங்கைக்குப் பயணம் செய்ய வைப்பதும், மரண முகமூடியணிந்த வசியக்காரர்களைப் போல வேலைக்காரர்களை அனுப்பி இருவரையும் குலைநடுங்க வைப்பதும் (இந்தப் பகுதியில் செர்வாண்டிஸ் ஒன்றுக்கொன்று இணைக்கும் ஒலிகளின் கலவை உண்மையில் தெளிவான மனதுடையவர்களையே நடுங்கச் செய்வது. வாசிக்க பக் 688-689), சான்சோ பான்சாவை கவர்னர் பதவி கொடுத்து அவனை கிஹோத்தேவிடமிருந்து பிரித்து முதன்முறையாக கிஹோத்தேவை தனிமையை உணர வைப்பதென அவர்களுடைய திட்டங்கள் அனைத்துமே குரூரத்தின் வாழ்வியற் களஞ்சியத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள். சோதனைச்சாலை எலிகளாக இருவரையும் மாற்றிவிடும் கோமானும் கோமகளும் மற்றவர்களைப் போலல்ல, டான் கிஹோத்தேவின் வரலாற்றை வாசித்தவர்கள் (கிஹோத்தே பார்சிலோனாவின் அச்சகத்தின் தனது போலி வரலாற்றையும் வாசிக்கிறான். உலகளவில் தனது போலி வரலாற்றை வாசித்த முதல் நாவல் கதாபாத்திரம் அவனே). அதுவே அவர்களை குரூர பரிசோதனைகளைச் செய்யத் தூண்டுகிறது. டுல்சீனியாவை வசியத்திலிருந்து விடுவிக்க சான்சோ பான்சா மூவாயிரம் சவுக்கடிகள் வாங்க வேண்டுமென்று சொல்வதும், கிஹோத்தே அதை ஒப்புக் கொள்வதும், ஒரு கட்டத்தில் சான்சோ பான்சா தன் மீது விழும் சவுக்கடிகளை மரங்களின் மீது படும் வகையில் கிஹோத்தேவை ஏமாற்றுவதும் வசியக்காரர்களின் குரூரத்தால் நேர்வதல்ல, குரூரமானவர்களின் வசியத்தால் நேர்வது.

சான்சோ பான்சாவை கிஹோத்தே எங்கேயுமே காப்பாற்றுவதில்லை. ஆனால் ஒரு பணியாளின் விசுவாசத்துடன் பான்சா கிஹோத்தேவிற்காக அடிகளை வாங்குகிறான், அவனை எச்சரிக்கிறான், காப்பாற்றவும் முயற்சிக்கிறான். போர்வையின் மையத்திலிருந்து அந்தரத்திற்குத் தூக்கி எறியப்படும் பான்சாவைக் காப்பாற்றாமல் கிஹோத்தே மதிலுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்கிறான். அதே சமயம் அவன் துன்பத்திலிருக்கும் மற்ற சிலரை விடுவிப்பதற்காக எல்லாத் தாக்குதல்களையும் ஏற்கிறான். இது நாவலின் சீரற்ற தன்மை என்றே மதிப்பிட வேண்டியிருக்கிறது.

பாதிரி பெரோ பெரெஸ் சொல்கிறான், `நாம் கவனமாக இருந்து, வீரத்திருமகனின், அவனுடைய வீரத்திருநம்பியின் (Squire என்பதற்குத் தமிழ் லெக்சிகன் வழங்கும் அற்புதமான மொழிபெயர்ப்பு) முட்டாள்தனம் அவர்களை எங்கே வழிநடத்திச் செல்லும் எனப் பார்ப்போம். ஏனெனில் இவர்கள் இருவருமே ஒரே அச்சில் வார்க்கப்பட்டதைப் போலிருக்கிறார்கள். மேலும் எஜமானின் பைத்தியம் வேலையாளின் சாதரணத்துவம் இல்லையென்றால் மதிப்பற்றதாகிவிடும்.` (பக். 470)

பல் உடைக்கப்பட்டு, இரத்தம் வழியும் வாயுடன், விலா எலும்புகளும் உடைந்து, பைத்தியத்தால் தன் நிலைக்கு ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் பிதற்றும் கிஹோத்தேவுடன், அவனது வாக்குறுதியை நம்பி தனது வாழ்வைப் பணையம் வைக்கும் சான்சோ பான்சா கிஹோத்தேவைக் காட்டிலும் எந்த விதத்திலும் பைத்தியத்தில் குறைந்தவனல்ல. ஆனால் அவனுடைய பைத்தியம் இலட்சியத்தின் கொதிகலன்களால் காய்ச்சி ஊற்றப்பட்டதல்ல, வாக்குறுதிகளை நம்பும் சாதாரணமான முட்டாள்தனத்தின் கிண்ணத்தில் கொதிக்க வைக்கப்பட்டது.

முதல் பாகத்தில் திரும்பவரும் சான்சோ பான்சாவைக் கண்டதும், அவனைப் பற்றி விசாரிப்பதற்குப் பதிலாகக் காணாமல் போன அவனுடைய கழுதையைப் பற்றி விசாரிக்கும் அவனுடைய மனைவியுடனான சான்சோ பான்சாவின் உரையாடல்கள், குடும்ப வாழ்வில் ஆண்களின் அன்றாட முட்டாள்தனங்களைப் பரிகாசிப்பவை மட்டுமல்ல, நகைப்பிற்குரியவையும் கூட.

இந்த இரட்டையர்கள் பல்வேறு நாவல்களில் வெவ்வேறு வயது, அறிவின் அளவில் தொடர்கிறார்கள். உம்பர்த்தோ எக்கோவின் ரோஜாவின் பெயரின் கதாபாத்திரங்களான பாஸ்கர்வில்லின் வில்லியமும், மெல்க்கின் அட்டோவும், கானன் டொய்லின் ஷெர்லாக் ஹோம்சும், டாக்டர், ஜான் வாட்சனும் உடனடியாக நினைவுக்கு வரும் தொடர்ச்சிகள்.

நாம் எஜமானரின் பைத்தியக்காரத்தனமான செயல்களுக்குப் பணியாளின் முட்டாள்தனமான நம்பிக்கைகளும், பேச்சும் ஒப்புதலை வழங்குகின்றன. கிஹோத்தேவின் முட்டாள்தனமான சாகசங்களால் தான் ஒருபோதும் கவர்னராக முடியாதென்று தனது நம்பிக்கையை இழந்துவிடும் சான்சோ பான்சா பலமுறை அவனிடம் வீட்டிற்குத் திரும்ப அழைக்கிறான். ஒவ்வொரு முறையும் கிஹோத்தே வீரசாகச வாழ்வின் இலக்கணங்களைச் சொல்லி வீரத்திருநம்பியின் பங்களிப்பையும் பொறுமையையும் நினைவூட்டுகிறான். நாவலின் துவக்கப் பகுதிகளில் பான்சாவின் துணையின்றி பயணம் செய்யும் கிஹோத்தே அவ்வண்ணமே தொடர்ந்திருந்தால் நாம் இந்த இலக்கியப் பிரதியின் பால் எழும் ஈடுபாட்டைச் சற்றே குறைத்திருப்போம். அடித்து வீழ்த்தப்படும் தனது எஜமானனைத் தூக்கி விடுவதற்கு மட்டுமல்ல, அவனது பேருரைகளைக் கேட்பதற்கும் ஒரு வழித்துணை கிஹோத்தேவிற்கு மட்டுமல்ல நமக்கும் தேவைப்படுகிறது.

தனது உடல் முழுக்க அணிவிக்கப்படும் கவசங்களின் எடை தாங்காமல் கீழே விழும் பான்சா விட்டால் போதுமென்று கவர்னர் பதவியிலிருந்து தனது பழைய சுதந்திரத்திற்காக, கிஹோத்தேவுடன் திரும்பவும் சாலையை எட்டுவதற்காக விரைகிறான்.

`பான்சாவைப் பற்றிய உண்மை` எனும் குறுங்கதையில் காஃப்கா பான்சாவை ஒரு சுதந்திர மனிதன் என எழுதுகிறார். பின்னாட்களில் டான் கிஹோத்தே என அவன் அழைத்த பூதத்திடமிருந்து மடைமாற்றிக் கொள்வதற்காக இரவு பகலாக வீரசாகச நாவல்களை வாசித்ததோடு, யாருக்கும் பாதிப்பில்லாத சாகசங்களை எண்ணி அவனது வாழ்நாள் முடிவது வரை களித்திருந்தான் என்கிறார்.

கிஹோத்தே மற்றும் பான்சாவின் சுதந்திரம் என்பது சாலையில் இருக்கிறது. அவர்களால் ஒருபோதும் ஓரிடத்தில், அது நெடுஞ்சாலை விடுதியோ, கோமகனின் மாளிகையோ, பார்சிலோனாவின் தெருக்களோ தங்கிவிட முடியாது.

அவர்களில் இருவருமே சாலையும், பயணமும் அளிக்கும் விடுதலையுணர்வின் சுவையை தங்களது நினைவின் நாவில் சுமப்பவர்கள். கோமகனின் மாளிகையில் நல்ல கவனிப்போடு நீண்ட நாட்கள் தங்கிவிட்டதை உணரும் கிஹோத்தே குற்றவுணர்வுக்கு ஆளாகிறான். அவன் ஏற்றிருக்கும் வீரசாகச வாழ்வு ஒருபோதும் தலைக்கு மேல் கூரையை அனுமதிப்பதில்லை. நட்சத்திரங்களின் ஒளியில் தனது உடலின் காயங்களை ஆற்றவே அனுமதிக்கப்பட்டிருக்கும் வீரத்திருமகன் எந்த இடத்திலும் அடுத்த ஒருநாளும் தங்கக் கூடாது. இரவில் ஒரு விடுதியைத் தேடிக் கொள்ளலாம். விடுதியின் மட்டமான அறைகளின் மரச்சுவர்களில் தங்களது காதலியின் முகத்தை வாளின் முனையால் செதுக்கலாம்.

வீரத்திருமகனும், வீரத்திருநம்பியும் சாலைக்குச் சொந்தமானவர்கள். வெளியின் அங்கமாகவே அவர்கள் பயணிக்கிறார்கள். எந்தவொரு தடுப்பும் அவர்களை வெளியிலிருந்து பிரித்துவிட முடியாது.

சான்சோ பான்சா கோமகளிடம் சொல்கிறான், `எங்கே இசை இருக்கிறதோ அங்கே கவலைப்பட ஏதுமில்லை.` எஜமானனும், பணியாளும் எந்தவிதத் துயரத்தை அனுபவித்தாலும் அவர்கள் சாலைக்குத் திரும்பவே உள்ளூர விரும்புகிறார்கள். இருபக்கங்களிலும் துணையாக வரும் மரங்களின் இலைச் சலசலப்பைக் கேட்ட வண்ணமே, எதிர்பாராதவற்றின் சவாலை ஏற்கும் ஆயத்தத்தோடு சாலைப் புழுதியில் தடம்பதிக்கும் ரோசினெந்தேவின், பழுப்புக் கழுதையின் கால்கள் எங்கு செல்கின்றனவோ அந்தச் சாலைகளில் தங்கள் கண்களைப் பதிக்கும் ஒரு பைத்தியக்காரனும், முட்டாளும் சாலையின் அழைப்பில் ஒளிந்திருக்கும் சுதந்திரத்திற்கான பாடலின் சொற்களால் தங்களது பாடலுக்கான இசையைக் கோர்த்துப் பயணிக்கிறார்கள்.

சாலை சர்வ சுதந்திரத்தின் வீடு. சுதந்திரம் முன்னூகிக்க முடியாதவற்றையே கொண்டு வரும். அவற்றை எதிர்கொள்ளத் துணிந்தவர்களே சாலையின் குழந்தைகள்.

7

கிஹோத்தேவின் இரண்டாவது பைத்தியம் அவனது காதல். டுல்சீனியா யார்? அவள் ஒரு கிராமத்து அவுசாரி (மன்னிக்கவும். இவ்வாறுதான் நாவலில் ஓரிடத்தில் குறிப்பிடப்படுகிறது). ஆனால் கிஹோத்தே அவளை அழகான இளவரசியென்றே அழைக்கிறான். டுல்சீனியாவை ஓரிடத்தில் மட்டுமே அவன் நேரில் பார்க்கிறான். அப்போது அவன் வசியக்காரர்களால் மிகச்சாதாரண உடையணிந்தவளாகத் தெரிகிறாள். இரண்டாம் பகுதியில் ஒரு குகைக்குள் தென்படும் அவள், தனது கிழிந்த பாவாடையைத் தைப்பதற்காக கிஹோத்தேவிடம் பணம் கேட்கிறாள். அப்போதும் கிஹோத்தே அவளை வசியத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளானவளாகவே கருதுகிறான்.

ஒரு விடுதியில் சிம்மீஸ் அணிந்துவரும் அசிங்கமான விடுதிப் பணியாளைத் தழுவும் வாய்ப்பை டுல்சீனியாவின் மீதுள்ள காதலாலே தவிர்க்க விழைகிறான். கோமகனின் மாளிகையில் அவன் மீது போலி காதல் கொள்ளும் பெண்ணையும் அவள் பொருட்டே தவிர்க்கிறான். டுல்சீனியாவின் மீதான காதலில் பிறழ்வது அவனைப் பொறுத்தவரையில் அடிப்படை இலக்கணத்திலேயே நேரும் பிழை. வீரத்திருமகன் ஒருபோதும் வேறொரு பெண்ணைத் தொடக் கூடாது, மனதாலும் நினைக்கக் கூடாது. ஒவ்வொரு சாகசத்தின் முன்பும் தனது காதலியின் பெயரை அறைகூவியே தனது ஈட்டியை உயர்த்த வேண்டும். வன்முறையும், காமமும் இரண்டு எரோடிக் அனுபவங்கள். சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் வன்முறைக்குப் பிறகு அவன் காதலியிடம் மற்றுமொரு எரோடிக் அனுபவத்தை அடைய விழைகிறான். வன்முறையும், காமமும் இருப்பதிலேயே ஆக எரோடிக் அனுபவமான மரணத்திற்கு (ழார் பத்தாய் அவ்வாறுதான் சொல்கிறார்) அருகேயிருப்பவை. உள்ளம் கிளர்ந்த நிலையிலேயே வாழும் அசாதாரணர்களின் வாழ்வே சலிப்பற்றது. சலிப்பற்ற வாழ்வை வாழ விரும்பும் கிஹோத்தேவின் காதல், சலிப்படைந்துவிடக் கூடிய காதலின் எதார்த்த நிலையிலிருந்து அதனை விடுவித்து உன்னத நிலையில் வைக்கிறது.

முதல் பயணத்தின் இறுதியில் வீடு திரும்பும் கிஹோத்தே, வழியில் எதிர்ப்படும் வியாபாரிகளிடம் டுல்சீனியாவை உலகின் அழகிய பெண்ணென்று ஏற்கச் சொல்கிறான். வாளின் முனையில் அவர்களை மிரட்டுகிறான். அவளுடைய படத்தையாவது காட்டச் சொல்லும் பரிதாபத்திற்குரிய அந்த வியாபாரிகளிடம் டுல்சீனியா ஓர் அழகியென்பது பிரபஞ்ச உண்மை என்கிறான். ஒரு பிரபஞ்ச உண்மைக்கு எந்த விதமான சாட்சியமும் தேவையில்லை. கிஹோத்தேவிற்கு அவன் நம்பும் அனைத்துமே பிரபஞ்ச உண்மைகளின் பட்டியலில் சேர்பவை. டுல்சீனியா ஓர் அழகிய இளவரசி என்பதும், ஒரு வீரத்திருமகன் காதலிக்கத் தகுதியானவள் என்பதும் நிக்கோலஸ் கோபர்னிகஸின் உண்மைக்குக் கொஞ்சமும் குறைந்தவையல்ல.

காதலின் குணங்களை, காதலுற்ற மனம் கொள்ளும் பிறழ்வுகளை, மீறல்களைத் தனது பயணத்திற்கு இடையே ஊடுகதைகளின் வழியாக விவாதிக்கும் நாவல், கிஹொத்தேவின் பயண சாகசங்களை மட்டுமே ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிவிட முடியாதென்பதால் பக்க நிரப்பிகளாகவும் காதல் கதைகளைப் பயன்படுத்தியிருக்கலாமென்ற ஒரு பார்வையை முன்வைக்கலாம். இந்தச் சரடுதான் (நாவலில் பல சரடுகள் உண்டென்று நபக்கோவும் ஒப்புக் கொள்கிறார்) நவீன நாவலின் உள்ளார்ந்த ஏக்கங்களில் ஒன்றான (உலகளாவிய) அன்பிற்கும், காதலுக்கும் ஒரு நூலேணியை அமைத்துத் தருகிறது.

இரு பாகங்களிலும் காதல் உறவின் சிக்கல்களைப் பின்வரும் வடிவங்களில் விவாதிக்கிறார்.

வடிவம் 1:

 

கமிலா

அன்சல்மோ லோடாரியோ

வடிவம் 2:

டான் ஃபெர்ணாண்டோ டோரடீ

லூசிண்டா கார்டீனியோ

வடிவம் 3:

லியாண்ட்ரா

யூஜினியோ அன்செல்மோ

வடிவம் 4:

குவேடிரியா

கமாச்சோ பாஸிலியா

கிஹோத்தேவின் காதல் புலம்பல்களோடு மேற்சொன்ன காதல் கதைகளையும் சேர்த்தால் 200 பக்கங்களுக்கும் குறையாமல் வரும். அவனது காதல் எத்தகையது?.

ஐம்பது வயதான கிஹோத்தே பார்ப்பதற்கு அசிங்கமான ஒரு பெண்ணைக் காதலியாக அறிவித்துக் கொள்கிறான். அந்தப் பெண்ணை நேரிலே ஒரு முறை மட்டுமே பார்க்கிறான். அவள் சாதாரண உடையணிந்திருக்கிறாள். அவள் அவ்வாறு உடையணிந்திருப்பதே வசியக்காரர்களின் வேலை என்கிறான் கிஹோத்தே. பான்சா, அவனை ஏமாற்றத் துவங்கும் இடம் இதுதான். பைத்தியக்காரத்தனமான காதலின் பெயரால் கிஹோத்தேவை ஏமாற்றிவிட முடியுமென்று நம்பும் பான்சா, டுல்சீனியாவைத் தேடும் கடினமான பணியை விடுத்து அவனை ஏமாற்றும் எளிய மார்கத்தைத் தேர்ந்தெடுக்கிறான். இங்கே நாம் கிஹோத்தேவின் விதியை நினைத்து நொந்து கொள்கிறோம். ஏமாற்றம் என்பதே நம்பிக்கையின் எதிர்முனை. நமது கைகளைப் பற்றியிருப்பவர்களால் மட்டுமே நாம் ஏமாற்றமும் அடைவோம். ஆனால் கிஹோத்தே தான் ஏமாற்றப்படுவதை அறியாத பைத்தியக்காரனென்பதால் அவனால் பான்சா ஏமாற்றுவதை அறிய முடியவில்லை.

காதல் சாதாரணமானவற்றை அதியுன்னதமாக்குகிறது. எளிதில் அடைந்துவிடக் கூடியவற்றைத் தொலைதூரத்தில் வைத்து அவற்றின் மதிப்பை அதிகரிக்கிறது. காதல் நம்மைப் பொருட்களோடும், உணர்வுகளோடும் மற்ற மனிதர்களோடும் பிணைக்கிறது. தனிமையை விரும்பும் காதலுற்றவர்களைச் சுற்றி வலைபின்னும் ஒரு தங்கச் சிலந்தியே காதல். ஒளிமிகும் கண்களுடைய காதலர்களைப் பாருங்கள், இறக்கைகளாகத் துடிக்கும் கால்கள் தரையிலிருந்து எம்பி எம்பித் தடுமாறுவதையும். காதல் அனைத்துக் குற்றங்களுக்கும் ஒரு சாக்காக இருக்கிறதென்கிறான் கிஹோத்தே. மேலும் காதலின் தவறுகளுக்காக யாரும் பழிவாங்கப் புறப்படக் கூடாதென்கிறான்.

நாம் எதன்மீது காதல் கொண்டிருக்கிறோமோ அது நமக்கு இன்றியமையாததாக ஆகி விடுகிறது. வாழ்வின் மீதான பிடிப்பே இன்றியமையாதவற்றின் மொத்தத் தொகுப்பும், அதனை இயக்கும் ஆற்றலும். கிஹோத்தேவை இயக்கும் இரண்டு ஆற்றல்களில் ஒன்று காதல். அவன் டுல்சினியாவைக் கண்டு காதலை அடையவில்லை. தனது காதலின் வழியாகவே டுல்சீனியாவைக் கண்டு கொள்கிறேன். அவளைச் சந்திப்பது அவனுக்கு ஒரு நெருக்கடியாக மாறுவதில்லை. அவளைத் தொலைதூரத்தில் நிறுத்தி, அவளை அடைய முடியாத உயரத்தில் இருத்தி, அவள் மீதான காதலின் மதிப்பை அளவிட முடியாததாக உயர்த்துகிறான். அவனது கிராமத்தை அடுத்து வசிப்பவளான டுல்சீனியாவை சந்திக்க மறுத்து தனது சாகசங்களின் இடைவெளிகள் தோறும் அவளை நினைத்துப் புலம்பும் கிஹோத்தே, தனது காதலை ஒரு காவியமாக்க முனைகிறான். அவளை அறிந்தவன் பான்சா மட்டுமே. அவனால் கிஹோத்தேவின் இரட்டைப் பைத்தியங்களையும் இறுதிவரை புரிந்து கொள்ள முடிவதில்லை. வீரசாகச வாழ்வொழுங்கையும், டுல்சீனியாவின் மீதான காதலையும் அவன் விவரிக்கும் தோறும் பான்சா அவனது பைத்தியம் முடிவற்றதென்கிற முடிவை எட்டிவிடுகிறான். பான்சாவாலும் கூட காதலிக்கப்பட முடியாதவளான டுல்சீனியாவை, வீரத்திருமகனான தனது எஜமானன் காதலிப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இரண்டாம் பாகத்தில் டுல்சீனியாவை வசியத்திலிருந்து விடுவிக்க பான்சா மூவாயிரம் கசையடிகளைத் தனக்குத்தானே வழங்கிக் கொள்ள வேண்டுமென அவனை நெருக்கும் கிஹோத்தே, அவ்வாறு வீரத்திருநம்பிகள் தியாகம் செய்யவும் வேண்டுமென்கிறான். கோமகளின் விளையாட்டு இதுவென்று அறியாத கிஹோத்தே தன்னோடு சேர்த்து தனது வீரத்திருநம்பியும் தனது காதலின் பொருட்டு வலியை அனுபவிக்கும் இடத்திற்கு அவனைச் சேர்ப்பிக்கிறான்.

அங்கேயும் பான்சா அவனை ஏமாற்றுகிறான். மரத்துண்டுகளைச் சாட்டையால் அடித்து தனது உடலின் மீதிருந்து சப்தமெழுவதாக நடிக்கிறான். ஒவ்வொரு சாட்டையடியிலும் தனது காதலியின் வசியம் விலகிவிடுமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறான். நமது நாவலோ அற்ப ரொமான்ஸ் நாவல்களின் இடத்திலேயே நிற்கிறது. கிஹோத்தேவிற்காக இல்லாமல் நம்மால் இந்தக் காதல் புலம்பல்களைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அவன் மீதான பரிதாபமே அவனது காதலின் மீதான பரிதாபம். பாவம் அவன் ஒரு பைத்தியக்காரன், அதோடு காதலிக்கவும் செய்கிறான். தனது ஒவ்வொரு உரையாலும், வெகு சாதாரணமான, காதலிக்கப்பட எந்தத் தகுதிகளும் இல்லாத, அசிங்கமான, கூடை முடையும், பன்றி மேய்க்கும் ஒருத்தியான டுல்சினியாவை ஓர் இதிகாச நாயகியின் இடத்திற்குக் காதலின் சக்தியால் தனது தளர்ந்த தோளின் மீது ஏற்றிச் செல்கிறான். அவன் நம்புவதைப் போல டுல்சினியா ஓர் அழகிய இளவரசியாக இருந்து விட்டாள் என்ன செய்வது?

Everything has within it an indicatoin of its possible plenitude எனும் ஒர்டெகா ஒய் கெசட், ஒவ்வொரு வெளிப்படையான, உன்னதமான ஆன்மாவும் ஒவ்வொன்றும் முழுமையடைய உதவி செய்வதாக, அதனைக் கச்சிதமாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் என்கிறார். இதையே காதல் என அழைக்கிறார், `காதலிக்கப்படும் பொருளின் முழுமைக்கான காதல்`. கிஹோத்தே தன்னால் காதலிக்கப்படுவதாலேயே டுல்சீனியா முழுமையை எட்டி விட்டாள் என நம்பும் அசடன். அவனது இலக்கணங்கள் முழுமையை அன்றி எதனையும் ஏற்காதவை. அவனது நோஞ்சான் குதிரையே உலகின் அற்புதமான குதிரையாகிறது, தனது அசிங்கமான காதலியே உலகின் அழகிய இளவரசியாகிறாள் (வெறும் பெண் அல்ல). உயர் குறிக்கோள்கள் ஒவ்வொன்றும் தன்னையும், தனது சுற்றுப் புறத்தையும், அவற்றின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் கச்சிதத்தையும், முழுமையையும் நோக்கி உயர்த்தும். ஒரு கீழான சூழலிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்பவனல்ல, தனது சூழலையே கீழ்மையிலிருந்து விடுவிப்பவனே நாயகன். பிளாட்டோ சொல்வதாக ஒர்டெகா கெசட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: `காதல், உலகிற்கு இறங்கி வந்த ஒரு தெய்வீகக் கட்டுமானம். அதனாலேதான் அண்டத்தில் அனைத்துமே ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன`. கிஹோத்தேவின் காதல் அண்டத்தில் ஒளி வீசும் வால் நட்சத்திரத்தின் நிலையை அடைவதற்குப் பொருத்தமானவளாக டுல்சீனியாவன்றி யார் இருப்பார்? புறக்கணிக்கப்படுவதற்கான எல்லாத் தகுதிகளையும் உடைய அவள்தான் கிஹோத்தாவின் கைகள் பட்டு வடக்கு நட்சத்திரத்தின் நிலையை அடைய முடியும். அது கிஹோத்தேவினால் சாத்தியமாவதல்ல, காதலால் சாத்தியமாவது.

7

பைத்தியம் ஒரு தொற்றுநோயா?. நிச்சயமாக இல்லை. ஆனால் கிஹோத்தேவின் பைத்தியம் தொற்றிவிடக் கூடியது. தனது முதுகின் பின்னே எழுதி ஒட்டப்பட்டிருப்பதை வாசிக்கும் பார்சிலோனா நகர வாசிகள் அவனது ஏளனத்தைத் தெருவெங்கும் கேலிச் சிரிப்பாக்குகிறார்கள். கிஹோத்தே பார்சிலோனாவின் நடன அரங்கொன்றில் நடனமாடித் தடுமாறுகிறான். அவன் அந்நகரை அடையும் வரை அவனது பைத்தியம் அடைபட்ட இடங்களுக்குள்ளும், காடுகளிலுமாக இருக்க, பார்சிலோனாவிலோ அவன் தெருவில் திரியும் பைத்தியக்காரன். ஒரு காஸ்டிலன் இவ்வாறு சொல்கிறான்:

`லா மாஞ்சாவின் டான் கிஹோத்தேவை பேய் கொண்டுபோக! நீ வாங்கிய அவ்வளவு அடிகளுக்குப் பிறகும் சாகாமல் இவ்வளவு தூரம் எப்படி வந்தாய்? நீ ஒரு பைத்தியக்காரன். உன்னுடைய பைத்தியத்தின் கதவுகளுக்குப் பின்னேயிருக்கும் ஒரு தனிப்பட்ட பைத்தியக்காரனாக இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக இருந்திருக்காது. ஆனால் நீயோ, உன்னோடு பேசும், உன்னோடு பங்காற்றும் யாரையும் பைத்தியக்காரர்களாக, முட்டாள்களாக மாற்றும் இயல்புடையவன். என்னை நம்பவில்லையென்றால் உன்னைப் பின் தொடரும் இந்தக் கனவான்களைப் பார். உனது வீட்டிற்குத் திரும்பிப் போ முட்டாளே, உனது நிலத்தை, மனைவியை, குழந்தைகளைக் கவனி. உனது மூளையை அழுகச் செய்யும், உனது மனதைச் சீரழிக்கும் இந்த முட்டாள்தனத்தை நிறுத்து`.

நாவலின் முதல் பகுதியிலேயே டான் அண்டோனியோ சொல்லி விடுகிறான், மீட்க முடியுமென்ற நம்பிக்கையளிக்காத பைத்தியக்காரனே கிஹோதே என. அவன் யார் சொல்வதையும் ஏற்பதில்லை. ஏளனத்தையும், அவமானத்தையும் பொறுத்துக் கொண்டு தனது புத்தகங்கள் உருவாக்கிய இலட்சிய உலகின் திறந்து கொள்ளாத கதவுகள் ஒவ்வொன்றையும் தன் மீது விழும் அடிகளின் சாவிகளால் திறக்க முனையும், தனது நூலகம் எரிக்கப்பட்டதையே அறிந்திராத கிஹோத்தே மற்றொரு வீரத்திருமகனாக வேடமிட்டு அவனோடு சண்டையிட்டுத் தோற்ற பேச்சலர் சான்சன் கராஸ்கோ திரும்பவும் அவனை ஒருமுறை சண்டைக்கு அழைக்கிறான். இம்முறை சண்டையில் தோற்றால் அவன் அனைத்தையும் கைவிட்டு வீடு திரும்ப வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கிறான். சண்டையில் கிஹோத்தே தோற்கிறான். பேசியபடி அவன் சான்சன் கராஸ்கோவோடும், பன்சாவோடும் வீடு திரும்புகிறான். இம்முறை அவனது எண்ணம் மாறிவிடுகிறது. இதற்கு மேலும் அவனால் வீரசாகச வாழ்வை வாழ முடியாது. அதற்குப் பதிலாக பாஸ்டோரல் உலகத்திற்குள் நுழைந்து ஓர் ஆட்டியடையனாகப் பயணத்தைத் தொடரலாம் என்கிறான் பான்சாவிடம். அவனோ கிஹோத்தேவிற்கு மற்றொரு பைத்தியம் தொற்றுகிறதே என அஞ்சுகிறான். கிஹோத்தேவால், லா மாஞ்சாவின் ஒரு கிராமத்தில் வசிக்கும் அலோன்சோ குவிக்ஸோனாவாக ஒருபோதும் இருந்து விட முடியாது. அவன் நாவல்களின் வசியத்தால் நிரந்தரமாகக் கட்டுண்டவன். வீரசாகச நாவல்களின் இலட்சியத்தில் தோல்வியுற்றால் பாஸ்டோரல் நாவல்களின் உலகில் நுழைந்து விடத் துடிக்கும் ஒரு வாசகனே அவன். திருத்தித் திருத்தி தானே எழுத நினைக்கும் தனது வாழ்வெனும் நாவலின் நாயகனான அவனுக்கு இம்முறை தனது நாவலின் கட்டமைப்பை இடம் மாற்ற வேண்டியிருக்கிறது. ஆட்டிடையர்களுக்கு மத்தியில் பார்சினோவென்றும், பட்ரோன் எனவும் பெயரிடப்பட்ட இரண்டு நாய்களோடு தனது பட்டியை மேய்ச்சலுக்குச் செலுத்தும் ஓர் அறிவெழுச்சி பெற்ற, தனது சுற்றுப்புறத்தை இலட்சிய வடிவத்திற்குச் சீர்திருத்தும் ஒரு மேய்ப்பனாக கிஹோத்தே மாறுவான். அவர்களது பெயர், மேய்ப்பன் குவிக்சோடிஸ், மேய்ப்பன் பான்சினோவாக அழைக்கப்படும்.

ஆனால் நமக்கு மற்றொரு வாய்ப்பை வழங்காமல் அலோன்சோ குவிக்ஸோனா இறந்து போகிறான். சட்டென அவனது பைத்தியம் தெளிந்து விடுகிறது. அவனால் இப்போது எரிக்கப்பட்டுவிட்ட தனது நூலக அறையிலிருந்து வெளியேறும் எரியுண்ட காகிதங்களின் கருந்துண்டுகளைப் பார்க்க முடிகிறது. நோயுற்று வீழ்ந்திருக்கும் தனது கட்டிலைச் சுற்றிலும் எரியுண்ட தாள்கள் கருவண்டுகளாகத் திரிவதையும், புகையும் நூலக அறையின் சாம்பல் வாசனையினால் மூச்சடைப்பதையும் உணர முடிகிறது. அவனால் இனியொருபோதும் புத்தகங்களுக்குத் திரும்ப முடியாது. ஆன்மாவிற்கு ஒளியேற்றும் நல்ல நூல்களை வாசிக்க காலம் கடந்துவிட்டது. பாதிரியாலும், நாவித நண்பனாலும் இருக்கட்டுமென்று விடப்பட்ட சில புத்தகங்களும் பயனற்றவை. ஒரு வாசகன் புத்தகங்களைப் பயனற்றதாகக் கருதத் துவங்கினால் புத்தகங்களின் வாழ்வும், வாசகனெனும் உயிரினமுமே மரணமடைந்துவிடும். கிஹோத்தேவிற்க்கு புத்தகங்களின் உலகில் நுழைந்துவிட முடியாதிருப்பதே மரணம்தான்.

தனது சொத்துக்களை மருமகளான அண்டோனியா குவிக்சானாவிற்கு உயில் எழுதும், டான் கிஹோத்தேவென்று பரவலாக அழைக்கப்படும் அலோன்சோ குவிக்ஸானா தனது வாழ்வை ஒரு போலி இரண்டாம் பாகத்தில் எழுதிய பெயர் தெரியாத ஆசிரியனையும் மன்னிக்கிறான். தனது மருமகள் மணக்க விரும்பும் ஆடவன் வீரசாகச நாவல்களையே அறிந்திராதவனாக இருக்க வேண்டுமென்றும், அதையும் மீறி அவள் அப்படியொரு ஆடவனை மணக்க விரும்பினால் தனது சொத்துக்களை இழப்பாள் எனவும் உயிலில் பதிகிறான். சான்சோ பான்சாவிற்கு நினைவுகள் மாத்திரமே உரியவை. அவற்றையே காஃப்கா குறிப்பிட்டபடி இரகசியமாக வாசித்துத் திளைத்திருப்பான் அவன்.

கிரீஸின் ஏழு நகரங்களும் ஹோமரைச் சொந்தம் கொண்டாடுவதைப் போலவே, லா மாஞ்சாவின் அனைத்துக் கிராமங்களும் டான் கிஹோத்தே தங்கள் ஊரைச் சேர்ந்தவனென்று சொந்தம் கொண்டாட வேண்டுமென்றே இவ்வரலாற்றின் முதன்மை ஆசிரியனான சைத் ஹமித் பெனங்காலி அவனது கிராமத்தின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்கிறார் செர்வாண்டிஸ். ஸ்பானிய உலகிற்கு அவன் ஓர் உன்னதப் படைப்பின் நாயகன் என்றால், ஆங்கிலத்தின் வழி அவன் ஒரு காமிகல் நாயகனாகவும் ஆக்கப்பட்டிருக்கிறான். எவ்வாறாயினும் உலகோ நானூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அவனைச் சொந்தம் கொண்டாடுகிறது.

8

வாசிப்பே அரிதானதாக மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஆயிரம் பக்க நாவலைப் பொறுமையாக வாசிக்கும் வாசகர் ஒவ்வொருவரும் கடைசிப் பக்கத்தையும் வாசித்து புத்தகத்தை மூடி வைக்கும் தருணத்தில் வெற்றியடைந்த சாகசப் பயணமொன்றை முடித்துவிட்ட உணர்வை அடைவார்களாக…..ஒவ்வொரு வாசகருமே உலகின் பல மூலைகளிலிருந்து வாசிப்பின் சாலைக்கு ஏகும் கிஹோத்தே எனப் பெயரிடப்படாத வீரத்திருமகன்களே.
மேலும் அவர் மார்டின் அமிஸ் சொல்வதைப் போல, புத்தகத்தை மூடி வைத்ததும் (தன்னையே எண்ணி) ஆனந்தக் கண்ணீர் வடிப்பார். ஆம், அந்த வாசகர் டான் கிஹோத்தே நாவலின் இரண்டு பாகங்களையும் வாசித்து முடித்துவிட்டார்.

பின்குறிப்பு:

ஒன்று: Quixote எனும் பெயர் பல விதங்களில் உச்சரிக்கப்படுகிறது. குவிக்ஸாட் என்பது ஆங்கில வடிவம். கிஹோத்தே, கேயாக் என்றும் உச்சரிக்கப்படுகிறது. இருப்பினும் எச்செவர்ரியா குறிப்பிடும் கிஹோத்தே எனும் உச்சரிப்பே எடுத்தாளப் பட்டிருக்கிறது.

இரண்டு: பலவேறு மொழிபெயர்ப்புகள் புழக்கத்தில் இருக்கின்றன. டோபியாஸ் ஸ்மாலெட்டினால் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இன்னும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவருகின்றன. டோபியாஸ் ஸ்மாலெட், சாமுவெல் புட்னத்தின் மொழிபெயர்ப்புகள் அங்கங்கே ஒப்பு நோக்கப்பட்டன. எனினும், எடித் கிராஸ்மனின் மொழிபெயர்ப்பே எளிதானதாக இருந்தது.

மூன்று: இக்கட்டுரை ஸ்பார்க் நோட்ஸ் தளத்தின் உதவியாலோ, இணையத்தின் ஏதோவொரு மூலையிலிருந்து தரவிறக்கப்பட்டதோ இல்லை. கடும் உழைப்பைச் செலுத்தி வெளிவரும் எந்தவொரு படைப்பையும் வெறும் காப்பி என்று புறந்தள்ளும் சோம்பேறிகள் நிரம்பியிருக்கிறார்கள் என்பதாலேயே இந்த அறிவிப்பு.

நான்கு: சமூக ஊடகங்களின் காலத்தில் அந்தக் கிளர்ச்சியினின்று விலகி ஆயிரம் பக்க நாவலை அதுவும் அரைகுறை ஆங்கில அறிவோடு வாசிப்பதென்பது ஒரு `பைத்தியக்காரத்தனம்தான்`. ஆயினும் அதுவே ஒரு சாகசம். மாதங்களை உணவாகத் தின்னும் விலங்குகளே கிளாசிக்குகள். நமது கைப்பொருளான காலத்தை இரையாக வழங்காமல் கிளாசிக்குகளை முழுமையாக வாசித்தறிய முடியாது

ஐந்து: இந்நாவல் நிச்சயமாக வாசிக்கப்பட்டே ஆகவேண்டுமென்று பரிந்துரைக்கத் தக்கதல்ல. காரணம் இதன் நீளம் மட்டுமேயல்ல. இதன் பழமையும் கூட. ஆயினும் இலக்கியத்தின் மாணவர்களென்று தங்களைக் கருதிக் கொள்பவர்கள் முறைப்படியாக வாசிப்பவர்கள் நிச்சயம் இந்நாவலையும், இதனை ஒட்டி எழுதப்பட்ட விமர்சன/வியாக்கியானங்களையும் வாசிப்பது நல்லது. குறிப்பாக நபக்கோவின், ஒர்டெகா ஒய் கெசட்டின் புத்தகங்களை.

ஆறு: வாசிப்பவர்களே ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451 நாவலின் காட்டிற்குள் வசிப்பவர்களாக இருக்கிறார்கள். வாசிப்பு இந்நூற்றாண்டின் வழக்கங்களில் ஒன்றல்ல. டான் கிஹோத்தே நாவலை வாசித்து முடித்தால் நீங்களே ஒரு டான் கிஹோத்தேதான். நீங்கள் உங்களைக் கண்ணாடியில் காணும்போது ஓர் உடைந்த தலைக்கவசம் உங்கள் தலையில் ஏறியிருப்பதைப் பார்க்கவும், உங்கள் கதவுகளுக்குப் பின்னே ஒரு குதிரை கனைப்பதைக் கேட்கவும் முடியும்.

ஏழு: நமது கலாச்சாரத்தில் நாவல் கதாபாத்திரங்கள் எதுவுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. கிஹோத்தே நாவல் தமிழ்ச் சமூகம் அவசியமென்று கருதும் ஒன்றாக இல்லை. எனினும் அது உலகின் பெரும் படைப்புகளில் ஒன்றே.

ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 411 நாவலின் புத்தக எரிப்பாளர்கள் வேறு யாருமல்ல கிஹோத்தேவில் புத்தகத்தை எரித்தவர்களே. காட்டில் புத்தகமாகவே திரியும் ஒவ்வொருவருமே கிஹொத்தேக்கள்தான்.


  • பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.